Showing posts with label நகைச்சுவை. Show all posts
Showing posts with label நகைச்சுவை. Show all posts

Monday, January 11, 2021

லஞ்ச் காசும் லஞ்சக் காசும் !

பரதேசியின் வாகனங்கள் பகுதி -2

இதன் முந்தைய பதிவைப்படிக்க இங்கே சுட்டவும்

https://paradesiatnewyork.blogspot.com/2021/01/1.html

 



இதுவரை நான் வளர்ந்த ஊரான தேவதானப்பட்டியில் ஒரு நாள் கூட ஓட்டாத என் சைக்கிள் வாகனத்தை, பக்கத்து ஊரான பெரியகுளம், படித்த ஊரான மதுரை,(ஆனால் படித்து முடித்த பின்தான்) முதல் வேலை கிடைத்த சாட்சியாபுரம், சிவகாசி, 2-ஆவது வேலை செய்த வேப்பனப்பள்ளி, கிருஷ்ணகிரி, அதன் பின் சென்னையில் செய்த இரு வேலைகள் என சைக்கிள் வாகனம் கைகொடுத்தது, மன்னிக்க கால் கொடுத்தது. என் வாழ்க்கை உருண்டோட சக்கரம் கொடுத்தது என்றும் சொல்லலாம்.

சென்னையில் முதல் வேலை மாமாவின் கன்ஸ்ட்ரக்சன்  கம்பெனியில் சூப்பர்வைசர். இரண்டாவது வேலை அரசினர் மருத்துவ மனையோடு இணைந்திருந்த சைக்கியாட்ரிக் டிபார்ட்மென்ட்டல் நடந்த ICMR (Indian Council of Medical  Research) நடத்திய பிராஜெக்ட்டில் டேட்டா கலெக்ஷன் வேலை. இது WHO  என்ற வேர்ல்ட் ஹெல்த் ஆர்கனைசேஷன் நிதியில் நடந்தது. கீழ்ப்பாக் கார்டனில் என் மாமா வீட்டில் தங்கியிருந்த போது தான் இந்த இரண்டு வேலை, செய்தேன். பின்னர் மனிதவளமேம்பாட்டு வேலைகளில் இருந்த ஆர்வம் காரணமாக அதனைவிட்டுவிட்டு இன்ட்டர் கிராப்ட்டில் சேர்ந்தேன். மாமா வீட்டிலிருந்து  சைக்கிளில் வந்து ஆற்காடு  சாலையில் நிறுத்தி வைத்துவிட்டு, அங்கிருந்து நேராக ஒரு பஸ்ஸில் பாரிமுனை சென்று, என் அலுவலகத்திற்கு நடந்து சென்றுவிடுவேன். என்னுடைய அலுவலகம் ஆர்மேனியின் தெருவிலும் இன்னொரு யூனிட் பிராட்வே அருகில் இருந்த டேவிட்சன் தெருவில் மினர்வா தியேட்டர் அருகிலும் இருந்தது.  இந்த இரண்டு அலுவலகங்கிலும் எனக்கு  இருக்கைகள்  உண்டு . இங்கு  வேலை செய்த ஆண்டு 1988 முதல் 1992 வரை .

பேச்சிலர் வாழ்க்கை தொடர்ந்த போது என் அம்மா, "தம்பி உனக்கு ஒரு ஸ்கூட்டர் வாங்கிக்கோயேன்" என்று சொன்னார்கள். "ஸ்கூட்டரா அது வேண்டாம்மா, அது எனக்குப் பிடிக்காது" என்றேன். "அப்ப உனக்குப்பிடித்த ஏதாவது ஒன்றை வாங்கிக்கொள் ,நான் பணம் தருகிறேன்." என்று சொன்னார்கள்.

சிறு வயதில் புல்லட் எனக்குப் பிடித்திருந்தாலும் அதனை ஓட்டும் அளவுக்கு மனதில் தைரியமில்லை, உடலில் வலுவுமில்லை என நினைத்து முதலில் TVS போன்ற மொபெட் வாங்கலாம் என முடிவு செய்தேன். ஷோ ரூமுக்குச் சென்றபோது TVS 50 ஐ விட புதிதாக வந்திருந்த TVS சேம்ப் பார்க்க நன்றாக இருந்தது. அப்போது பாரிமுனையில்    இருந்த "இன்ட்டர்கிராப்ஃட் செளத் எக்ஸ்போர்ட்ஸ்" என்ற கம்பெனியில் மனிதவளத்துறையில் "பெர்சனல் (Personnel) ஆஃபிசராக சேர்ந்த சமயம்.   

என் மகன் ஒரு ஆஃபிசரா(?) ஆயிட்டான்ற ஒரு சந்தோஷத்தில் எங்கம்மா எனக்கு ஒரு வண்டி வாங்கிக் கொடுக்க ஆசைப்பட்டாங்க. 

.




டி.வி. எஸ் சேம்ப் ஒரு நல்ல வண்டி. குறைந்த செலவு, பார்க்கவும் நன்றாகத்தான் இருக்கும். டி.வி.எஸ் சேம்ப் வாங்கியவுடன் வீட்டிலிருந்தே வண்டியை ஓட்டிக் கொண்டு பூந்தமல்லி சாலை வழியாக நேராகச் சென்று, சென்ட்ரல் ஸ்டேஷன் தாண்டிச் சென்று அப்படியே பாரிமுனை செல்வது என் வழக்கம். மிக மெதுவாகத்தான் செல்வேன். அதாவது மிகமிக மெதுவாகத்தான் செல்வேன். இடதுபுற ஓரம்தான் செல்வேன். ஆரம்பத்தில் சில சைக்கிள்காரர்கள் என்னை முந்திச் சென்றிருக்கிறார்கள். ஏன்  சில சமயம் நடந்து போகிறவர்கள் கூட கடந்து போயிருக்கிறார்கள். அதனைப்பற்றி யெல்லாம் கவலைப்படாமல் நான் பாட்டுக்கு தேமேன்னு ஓட்டிச் சென்ற முதல் நாள் சென்ட்ரல் ஸ்டேஷனைத் தாண்டும் போதுஒரு டிராஃபிக் போலீஸ் வழிமறித்தார். லைசென்ஸ், RC புக் எல்லாம் செக் செய்தபின், "எவ்வளவு பணம் வச்சிருக்க?" என்றார்.

“எதுக்கு சார்?”

“ஃபைன் கட்டறதுக்கு?”

“எதுக்கு  ஃபைன் சார்?”

"எப்பா ஸ்பீடா வந்துட்டு எதுக்கு ஃபைன்னு கேக்கிற"

"என்னாது ஸ்பீடா வந்தேனா? நடக்கிறவன் கூட என்னை முந்திப் போனான், என்ன சார் சொல்றீங்க?"

"சரி சரி வளவளன்னு பேசாதே, சார்ஜன்ட்ட போனா நூறு ரூபாய்க்கு மேல ஆகும்".

"என்ன சார் நான் ஸ்பீடா போகவேயில்லியே"

"சரி, இருக்கறத கொடுத்துட்டு போ"

பாக்கெட்டில் கையில் விட்டால் லஞ்ச்சுக்கு வச்சிருந்த 10 ரூபாய் பணம் இருந்தது, லேசாக வெளியே தெரிந்தவுடன் அதனைப்பறித்துக் கொண்டு "போ தம்பி, பாத்துப்போ" என்று சொன்னார், அந்தத் திறமையான, நியாயமான, நேர்மையான போலீஸ்காரர். இது என் முதல் நாள் அனுபவம். வழிப்பறிக் கொள்ளை என்பது இதுதானோ? நானும் நொந்து கொண்டே சிறிது தூரம் உருட்டிக் கொண்டு போய், அப்புறம் மெதுவாக ஏறி ஓட்டிக் கொண்டு ஒரு மணி நேரம்  தாமதமாய்ப் போய்ச் சேர்ந்தேன். அன்னைக்கு சனிக்கிழமை.

அடுத்த வாரம் திங்கட் கிழமை இன்னும் கொஞ்சம் சீக்கிரமாய்க் கிளம்பினேன். சென்ட்ரல் நெருங்கியவுடன் சிறிது பதற்றமாக இருந்தது. மூளையில் உதித்த பதற்றம் முதலில் என் கண்களுக்கு டிரான்ஸ்பர் ஆக, பிறகு அங்கிருந்து வந்து அதன் மூலம் நான் பிடித்திருந்த ஹேண்டில் பாருக்கு வந்து, அங்கிருந்து சக்கரங்களுக்கு வந்து, அதன் பின் வண்டி, நான் இரண்டும் இலேசாக நடுங்க ஆரம்பித்தோம். ஓட்டிக் கொண்டு சென்றாலும் உருட்டிக் கொண்டு செல்வதைப் போல்தான் தெரிந்தது.

மீண்டும் அதே இடம். ஆனால் வேறொரு போலீஸ்காரர் நிறுத்தினார். உடனே வண்டியின் சாவியை எடுத்துக்  கொண்டார்.

"லைசென்ஸ் RC புக் எடுப்பா" மறுபடியுமா? என்று நினைத்துக் கொண்டு எடுத்துக் கொடுத்தேன்.

"புது லைசன்ஸா"

"ஆமா சார்"

"பார்த்து வரணும்"

"சரி சார்"

"எவ்வளவு வச்சிருக்க?"

"எதுக்கு சார்?"

"இல்ல சார்ஜன்ட்ட போனா ஃபைன் எகிறும்".

"எதுக்கு சார் ஃபைன்?"

"என்னப்பா தம்பி தெரியாதமாதிரி கேக்குற, ரெட் லைட்ல வந்தியே"

"இல்லியே சார் நான் கிரீன்லதான் வந்தேன், அதுவும் ரொம்ப   மெதுவா வந்தேன்"

"சரி சரி ஒரு அம்பது ரூபாவைக் கொடுத்துட்டு நகரு"

"சார் நேத்தே கொடுத்திட்டேன்?

 என்னப்பா கதை விட்ர, யார்ட்ட கொடுத்த    எதுக்கு கொடுத்த  ?"

"நான் 10 கிலோ மீட்டர் ஸ்பீட்ல வந்ததை ஓவர்ஸ்பீட்ன்னு ஒரு போலீஸ்காரர் சொல்லி என்னோட லஞ்ச் காசைப் லஞ்ச காசாய்ப்  புடிங்கிட்டார். நேத்து கடன் வாங்கி லஞ்ச் சாப்பிட்டேன்".

"யாருப்பா அவர்? சரி அத விடு, காலைவெயில் கடுமையாய் இருக்கு, பக்கத்து கடையில ஒரு கூல் டிரிங்ஸ் வாங்கிக் கொடுத்துட்டு போ", நான் நடக்கத்தொடங்க, “தம்பி கொஞ்சம் நில்லு எத்தனைன்னு கேட்காமயே போற”தலைகளை எண்ணிவிட்டு “மொத்தம் ஏழு வாங்கிட்டு வா”.

எனக்குத்தூக்கி வாரிப்போட்டது

"சார் என்ட்ட அவ்வளவு காசில்ல"

"சரி எவ்வளவு இருக்கு?”

எல்லாப் பாக்கெட்லயும் செக் செஞ்சு, "சார் இவ்வளவுதான் இருக்கு”, என்று ஒரு 2 ரூபாய் நோட்டை எடுத்துக் காட்டினேன்.

"பரவாயில்லை”, என்று சொல்லிவிட்டு ஆனால் அந்த 2 ரூபாயையம் புடுங்கிவிட்டுத்தான் சாவியைக் கொடுத்தார்.

அடுத்த நாள் என்ன நடந்ததுன்னு, அடுத்த பகுதியில் சொல்கிறேன்.

- தொடரும்.

 

 


Thursday, January 7, 2021

ஒல்லிக்கால்களும் ஓட்டிய வண்டிகளும் !

 

எல்லோருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள் .ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த பரதேசி  மீண்டும் வருகிறான் ,ஆதரிப்பீர்கள் என்ற நம்பிக்கையில் . 

பரதேசியின் வாகனங்கள் - பகுதி 1



நம்முடைய இந்திய நாட்டில் குறிப்பாக தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கடவுள்களுக்கு பிரத்யேகமாக (டேய் இது வடமொழிச்சொல்) அல்லது தனிப்பட்ட முறையில் ஒவ்வொருவருக்கும் ஒரு வாகனம் உண்டு. முருகனுக்கு மயில், விநாயகருக்கு எலி(?) (பாவம் அந்த எலி) அய்யப்பனுக்கு புலி, கிருஷ்ணருக்கு பருந்து, சிவனுக்கு காளை, எமனுக்கு எருமை என்று சொல்லிக்கொண்டே போகலாம். "இயேசு கிறிஸ்துவுக்கு பெரும்பாலும் நடைப்பயணம் என்றாலும், தான் கொல்லப்படுவதற்கு முன்பதாக எருசலேம் நகருக்குள் நுழையும் போது கோவேறு கழுதையில் வந்தார் என்று விவிலியம் சொல்லுகிறது. மேலும் 2-ஆவது முறை அவர் வரும் போது, மேகங்கள் மீது வருவார் என்றும் சொல்லுகிறது.

இப்படி கடவுள்களுக்கே வாகனம் தேவைப்பட்ட போது, பரதேசிக்கும் வாகனம் தேவைப்படுமல்லவா? அவை களைப்பற்றியதுதான் இந்தத்தொடர் .

அந்தக் காலத்தில் இப்போதுள்ளது போல் தள்ளுவண்டி ( stroller)  இல்லை. தவழாத மற்றும் தவழும் காலத்தில் என் அம்மாவின் இடுப்பும், என் அப்பாவின் தோளும் தான் என் வாகனங்கள். இவை போன்ற சுகமான, பாதுகாப்பான வாகனங்கள் என்றும் கிடைக்காது.

அம்மாவின் இடுப்பில் உட்கார்ந்து உலகத்தைப் பார்ப்பது எவ்வளவு பெருமையாக இருக்கும் என்பதை அனுபவித்துப் பார்த்தவருக்குத்தான் தெரியும். உலகமே உன் கால்களின் கீழே இருப்பது போலவே தெரியும். என்னுடைய பக்கத்து வீட்டு நண்பர்களையெல்லாம் விட உயரமாக இருப்பது மிகுந்த மகிழ்ச்சியைத்தரும். அதோடு மிகுந்த தன்னம்பிக்கையைத்தரும். மற்ற சிறுவர் சிறுமிகளை துச்சமாக மதிக்குமளவிற்கு கொஞ்சம் ஓவராகவே தோன்றும். இப்போது ஒரு பாட்டு ஞாபகம் வருகிறது. "பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது, கருடா, சவுக்கியமா? யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சவுக்கியமே, கருடன் சொன்னது, அதில் அர்த்தம் உள்ளது".

அப்பாவின் தோளில் ஏறுவது  பெரும்பாலும் உடம்பு சரியில்லாத சமயத்தில்தான்  அதற்கும் முன்னால் நடந்தது ஞாபகமில்லை. ஆனால்  என் அப்பா அடிக்கடி இதைச் சொல்வார். எனக்கு ஐந்து வயது அப்போது என் இரண்டாவது தம்பி ராஜமனோகர்  பிறந்த சமயம் திண்டுக்கல்லில் உள்ள மருத்துவமனையில் அவனைப் பார்ப்பதற்காக என் அப்பா என்னைத் தோளில் தூக்கிச் செல்லும்போது, அப்பா அதான் இப்ப தம்பி பிறந்துட்டான்ல, இனிமே  என்னைத் தூக்க வேணாம், தம்பியைத்தூக்கணும்ல , என்னை இறக்கி விடுங்கள்" என்று சொன்னேனாம். அந்த வயதில் கூட அப்படித் தோன்றியது ஆச்சரியம்தான்.

 


அதன்பின்னர் கொஞ்சம் தட்டுத்தடுமாறி நான் நடக்க  ஆரம்பித்த போது, எங்கப்பா ஒரு மூன்று சக்கர (Three Wheeler) வாகனம் வாங்கிக் கொடுத்தார். ஒன்றும் ஆச்சரியப்பட வேண்டாம். நடை வண்டியைத்தான் சொல்லுகிறேன். அது கொடுத்த தைரியத்தில் வீடெங்கிலும் அதனை வைத்து நடை பழகினேன். அப்படி நான் நடந்ததில் என்னை விட பெருமை கொண்டது என்  அம்மா . கொஞ்சம் தடுமாறினால்  கூட பதறி  விடுவார்கள். வெளியே தனியாகச் செல்ல அனுமதி இல்லை. அந்த வண்டி எனக்குப் பின் என் தம்பிகள் இருவருக்கும் உதவிப் பின் யாருக்கோ கொடுக்கப்பட்டது.  

          அதன்பின் வந்த முதல் வாகனம் என்னுடைய கால்கள். குச்சிக்கால்கள் என்றாலும் துடுக்கானவை, வேகமானவை. ஆனால் விவேகமானவை என்று சொல்லமுடியாது, ஏனென்றால் ஆங்காங்கே விழுந்து வாரியதில் சுமார் 32 விழுப்புங்களின் தழும்பு முட்டியில் இருக்கிறது. இது பழுவேட்டரையரின் தழும்புகளை விட குறைவா அல்லது அதிகமா என்று யாராவது சொல்லுங்களேன்.



         அப்புறம் வந்தது குதிரை சவாரி. நான் ஒன்றும் இளவரசன் இல்லை, குதிரையேற்றம், யானையேற்றம் பழக. எல்லாம் வாயில்தான் .ஆனால் சிறிது குதித்து குதித்து கால்களை மாற்றிப்போட்டு ஒரு இரண்டு கால் குதிரை எப்படி ஓடுமோ அப்படி ஓடுவேன் .கைகளில் கடிவாளம் இருப்பது போல வைத்துக்கொள்வேன் .சும்மா  சொ ல்லக்கூடாது என் குதிரை சும்மா பஞ்சகல்யாணி போல பறக்கும் ,  ஓடும் நடக்கும் ,மிதக்கும். வாயின் ஓசை அதற்கேற்றாற்போல மாறும் . சில சமயம் குதிரையாகவும் சில சமயம் குதிரையை ஓட்டுபவனாகவும்  மல்ட்டை  டாஸ்கிங் செய்யும் .ஆஹா ஆஹா அது ஒரு சுகானுபவம் .

கொஞ்சம் வெளியே வர ஆரம்பித்து ஓடியாடி  நடக்கும்போது கிடைத்த அடுத்த வாகனம் டயர் வண்டி. பங்க்சர் ஆகி பலவித ஒட்டுப்போட்டு மேலும் ஒட்டுப்போட முடியாத சூழலில் முற்றிலும் கைவிடப்பட்டு, தூக்கியெறியப்படும் நிலை வரும்போது அதற்கு இரண்டு பயன்கள், ஒன்று மார்கழி மாதத்தில் குளிர்காய கொளுத்தப்படுவதற்கு, அல்லது போகிப்பண்டிகை அன்றைக்கு அதிகாலையில் எரிக்கப்படுவதற்கு. இந்த இரண்டும் இல்லையென்றால் என்னைப்போன்ற உற்சாக சிறுவர்களுக்கு அவை வண்டியாய் மாறும். பெட்ரோல் தேவையில்லை, டீசல் தேவையில்லை. நம் உடலில் உள்ள எனர்ஜி கையின் வழியாக குச்சிக்கும், குச்சியின் வழியாக டயருக்கும் சென்று நம் கால்களின் வேகத்திற்குப் போட்டி போட்டுக் கொண்டு பறக்கும். இடது புறம் திரும்ப வேண்டுமென்றால் டயரின் வலதுபுறத்தில் லேசாக தொட்டால் போதும்.  அதேபோல் வலது புறம் தொட்டால் இடதுபுறம் திரும்பும். அதை கொஞ்சம் நாசூக்காகச் செய்யவேண்டும் .அதற்கெல்லாம் கொஞ்சம் அனுபவம் வேண்டும் .இல்லா விட்டால் சாக்கடைக்கு பறிகொடுக்க வேண்டியதிருக்கும் .

அந்தக் காலகட்டத்தில் அம்மா கடைக்குப் போகச் சொன்னால் தட்டாமல் கிளம்பிவிடுவேன். அதுதான் வாகனம் இருக்கிறதே. நடந்து வருபவர்கள், சைக்கிளில் வருபவர்கள் மேலெல்லாம் முட்டாமல் டயர் வண்டியை ஓட்டிச் செல்வது ஒரு திறமைதான்.

கற்பனையில் காலை உதைத்து வண்டியை ஸ்டார்ட் செய்தவுடன் வாயில் என்ஜின் உதர ஆரம்பிக்கும். இரு கைகளிலும் ஹேண்டில்களை பிடித்தால் கியர் போடாமலேயே வண்டி பறக்கும். இஞ்சின் ஒலியோடு ஹார்ன் ஒலியும் வாயிலேயே வரும். பிறகு வண்டியை நிறுத்தி ஸ்டாண்ட் போட்டு வண்டியை ஒரு ஓரத்தில் பார்க் செய்தாலும், எஞ்சினின் துடிப்பு உதடுகளில் சிலநேரம் தங்கியிருக்கும்.



ரொம்ப நாளாக இப்படித்தான்  சைக்கிள்தான் ஓட்டிக் கொண்டிருந்தேன். மகேந்திரன் தான் சொன்னான், “ஏண்டா ஓட்டுறது ஓட்டுற  ஒரு மோட்டார் பைக் ஓட்டக்கூடாதான்னு”, அதன் பின் மோட்டார் பைக் ஓட ஆரம்பித்தது. ரொம்ப நாளைக்கப்புறம் தான் கண்டுபிடிச்சேன் அது புல்லட்னு.  என்னவோ அப்போதிருந்து இப்போது வரை ஸ்கூட்டர் ஓட்டறது எனக்குப் பிடிக்க வேயில்லை. மேன்லியாவும்  தெரியல, பாய்லியாகவும் தெரியல. ஸ்கூட்டார் ஓட்றவங்க தப்பா எடுத்துக்காதீங்க, எனக்கு அப்படித்தோணுச்சு.

அப்புறம் காந்தி கிராமத்தில் +2 படிக்கும்போதும் அமெரிக்கன் கல்லூரியில் BA சமூகப்பணிக்கல்லூரியில் MSW என்று படிக்கும் போது எனக்கு வாகனமா இருந்தது சைக்கிள் கேரியர் என்ன புரியலயா? சைக்கிளில் பின்னாலுள்ள கேரியல்தான் உட்கார்ந்து போவேன்.  இன்னும் புரியலயா? யாராவது  சைக்கிளில்    போகும்போது பின்னாடி உட்கார்ந்து போவேன். அட இன்னுமா புரியல? எனக்கு அப்பல்லாம் சைக்கிள் ஓட்டத்தெரியாதுங்க. முதுகலை முடித்தவுடன் தான் சைக்கிள் கலை கைவந்தது. இது நிறையப் பேருக்குத் தெரியாது. இத எப்படி சமாளிச்சேன், அப்புறம் எப்படிக்கத்துக்கிட்டேன்றது ஏற்கனவே ஒரு பதிவில் சொல்லியிருக்கிறேன். அதைப்படிக்க இங்க சுட்டவும்.  http://paradesiatnewyork.blogspot.com/2015/05/blog-post_26.html

பழகியபின் சைக்கிள்தான் என் வாகனமாக பல வருடங்கள் இருந்தது. சாட்சியாபுரம் சமுகப்பணியாளர் வேலை, கிருஷ்ணகிரியில் திட்டமேலாளர் வேலை,  அப்புறம் சென்னைக்கு வந்து என் மாமாவிடம் சூப்ரவைசர் வேலை எல்லாத்துக்கும் சைக்கிள் தெரியலன்னா, அந்த வேலையெல்லாம் செய்திருக்கவே முடியாது. அதுக்கப்பறம் தான் எங்கம்மா எனக்கு TVS சேம்ப் வாங்கிக்கொடுத்தாங்க.

அதைப்பத்தி அடுத்த பகுதியில் சொல்றேன்.

 

-தொடரும்.

 

Monday, May 4, 2020

கொரானா வைரஸ் லாக் டவுன் சமாளிப்புகள்

பரதேசியின் கொரானா வைரஸ்  லாக் டவுன் சமாளிப்புகள்


காலை 8 மணி
ரூ: லேசா தலை வலிக்குது , கொஞ்சம் டீ  போட முடியுமா ?
ப: உனக்குத்தெரியாதா , எனக்கு பாலைப்பார்த்தாலே கொமட்டிட்டு வரும், இல்லைனா போட்டுத் தரமாட்டேனா ?
ரூ: (இந்த மனுசனால ஒரு பிரயோஜனமும் இல்லை)

காலை  11 மணி
ரூ: ஏங்க  சும்மாதான இருக்கீங்க , கொஞ்சம் காய்  வெட்டித்தறீங்களா ?
 ப :என்ன ரூத் , மறந்திட்டியா ?
ரூ: என்ன சொல்றீங்க ?
ப அப்பவே காய்கறியெல்லாம் மொத்தமா வாங்கி வெட்டி ஃபிரீஸ் பண்ணிட்டேன்னு  நீதானே சொன்ன ?
ரூ: (ஆமா இல்லைனாலும்.)

மதியம் 1 மணி
ப : என்ன ரூத் இன்னைக்கி  என்ன சமையல் ?
ரூ : கத்திரிக்காய் சாம்பாரும் ரசமும்
ப: (சாப்பிட்டுவிட்டு ), சாம்பார்ல கொஞ்சம் பெருங்காயம் தூக்கலா இருந்துச்சு , ரசத்தில் கொஞ்சம் கடுகு கருகிருச்சு ?
ரூ: குறை  சொல்லாட்டி உங்களுக்குத் தூக்கம் வராதே  ?
ப: மத்தபடி அப்பளம் , ஊறுகாயெல்லாம் நல்லாத்தான் இருந்துச்சு , என்ன ப்ராண்ட் ?
ரூ : பால் ,தயிர் , வெண்ணை சாப்பிடாமலே உங்களுக்கு இவ்வளவு கொழுப்பு எப்படி வந்துச்சு ?
ப: எனக்கு கொழுப்பெல்லாம் இல்லை, கொஞ்சூண்டு சுகர் மட்டும்தான் .



மதியம் 2 மணி
ரூ : என்னங்க , பாத்திரம் எவ்வளவு சேர்ந்து போச்சு பாருங்க ? வீட்டிலே இருக்கீங்க கொஞ்சம்  கழுவித்தரக்கூடாதா ?
ப : என்னது பாத்திரம் கழுவனுமா ? ஏன் மார்ச் முதல் வாரம்தான் டிஷ் வாஷர் போட்டமே ? அதுல போட்டிரு
மகேந்திரன் : பரதேசி நீ ஒரு தீர்க்கதரிசிடா
ரூ: ஆமா அத எப்படி போடுறதுன்னு தெரியலையே ?நீங்க கொஞ்சம் வந்து பாருங்க ?
ப: அனிஷா , இங்க வந்து அம்மாவுக்கு டிஷ் வாஷர் போடச் சொல்லிக்கொடு
ரூ: (உட்கார்ந்த இடத்தை விட்டு நகர  மாட்டியே)

2 முதல் 5 மணி வரை தூக்கம் (மனைவிக்குத்தான்)  அப்பாடா எனக்கு கொஞ்சம் ஃபிரீ டைம்

மாலை 5 மணி
ரூ : காலையிலிருந்து இப்படியே பொழுதை போக்கிட்டு இருக்கீங்களே ?கொஞ்சம் வாக்யூம் போடுறீங்களா ?
ப : லொக் லொக் லொக்
ரூ: என்னங்க என்னாச்சு ? (கொரனோ வந்துருச்சோ)
ப: இந்த டஸ்ட் அலர்ஜி திரும்ப வந்துரிச்சுனு நினைக்கிறே ன்
ரூ: (எப்பவும் எதையாவது சொல்லி சமாளிக்கிறானே ?)

மாலை 9 மணி

ரூத் :ஏங்க ஒரு வேளை என்னைப்பிடிக்காமலே கல்யாணம் பண்ணிக்கிட்டீங்களோ ?
ப: 27 வருஷம் வாழ்ந்து ரெண்டு பிள்ளை பெத்து , பேரன் பேத்தி எடுக்கிற வயசில கேக்கிற கேள்வியா இது ?
ரூ : பின்ன ஏன் என்னப் பார்த்தா  விலகி விலகி போறீங்க?

ப : நான் நம்ம தலைவர்கள் சொல்றத கடைப் பிடிக்கிறேன்
ரூ : அது  என்னாது  ?
ப : சோசியல் டிஸ்டன்சிங்தான்
ரூத் : ( மைண்ட்  வாய்ஸ்) இவனுக்கெல்லாம் கல்யாணம் தேவையா ?
ப : ( மைண்ட்  வாய்ஸ்) ஸ் அப்பாடா ஒரு நாளைக்கடத்திட்டேன் , நாளைக்கு எப்படியோ கடவுளே ?



Thursday, December 12, 2019

நான் தான் அவன், அவன்தான் நான்! சம்பவம் இரண்டு



                              இதற்கு முந்தின பகுதியைப்படிக்க இங்கே சுட்டவும்  
                    https://paradesiatnewyork.blogspot.com/2019/12/blog-post.html
  
ஒரு ஞாயிறு மாலை வீட்டில் ஓய்வாக இருக்கும்போது, அப்போது மேலே குடியிருந்த என் மனைவியின் தம்பி தன் வீட்டுக்கு வரும் விருந்தினரை மரியாதை நிமித்தமாகவோ, அல்லது எங்கள் வீட்டில் சாப்பிடவோ அல்லது நான் சேகரித்து வைத்திருக்கும் கலைப் பொருட்களைப் பார்க்கவோ அழைத்து வருவதுண்டு.
          அன்றைய நாளில் வந்தவரிடம் நடந்த உரையாடலை கீழே தருகிறேன்.
பரதேசி : வாங்க உட்காருங்க
சென்னை : நன்றி சார்
பரதேசி : சென்னையில் என்ன செய்கிறீர்கள்?
சென்னை : லேடி ஆண்டாள் பள்ளியில் உடற்பயிற்சி ஆசிரியராக இருக்கிறேன் சார்.
பரதேசி : மகிழ்ச்சி, நியூயார்க்கிற்கு என்ன விஷயமாக வந்திருக்கிறீர்கள்.
சென்னை: எங்கள் மாணவரோடு கல்விச் சுற்றுலா வந்திருக்கிறோம். அவர்களெல்லாம் ஹோட்டலில் தங்கியிருக்கிறார்கள். நான் மட்டும் நண்பரைப் பார்க்க வந்தேன்.
மைத்துனர் : (என்னைக்காட்டி) இவர் தமிழ்ச்சங்கத்தில் பொறுப்பில் இருக்கிறார். நிறைய எழுதுவார், பட்டி மன்றம் பேசுவார் .
சென்னை: அப்படியா எனக்குக்கூட ஒரு எழுத்தாளரைத் தெரியும்?
பரதேசி : அவர் எங்கே இருக்கிறார்?
சென்னை : இங்குதான் நியூயார்க்கில் இருக்கிறார். நியூயார்க்கில் நடக்கும் சில நிகழ்வுகளை சுவையாக எழுதுவார்.
பரதேசி : அப்படியா? அவர் பெயர் என்ன?
சென்னை : இருங்கள் சட்டென ஞாபகம் வரமாட்டேங்குது.  சமீபத்தில் கூட ஆனந்த விகடனில் அவர் எழுதிய கட்டுரை வந்திருந்தது.
என்று சொல்லிவிட்டு தன கைத்தொலைபேசியில் தேடித்தேடி ஆனந்த விகடனில் வெளிவந்த என்னுடைய ஆர்ட்டிகளை எடுத்துக் காண்பித்தார்.
பரதேசி : அவரை உங்களுக்குத் தெரியுமா?
சென்னை: நெருங்கிய பழக்கமில்லை. ஆனால் ஓரளவுக்குத் தெரியும். அவருடைய பிளாக்கை நான் தொடர்ந்து படித்து வருகிறேன்.
பரதேசி : எனக்கும் அவரை ஓரளவுக்குத் தெரியும்.
சென்னை : அவர் பெயர் கூட, இருங்கள் பார்த்துச் சொல்கிறேன். ஆம் அவர் பெயர் பரதேசி.
          அப்போது என் மனைவி சமையலறையிலிருந்து வந்து, அந்தப் பரதேசி இவர்தான் என்று சொல்ல எல்லோரும் சிரித்தனர். சென்னைக்காரருக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.
முற்றும்.


  

Monday, December 9, 2019

நான் தான் அவன், அவன்தான் நான்! சம்பவம் - ஒன்று.

Image result for confused man cartoon free


இதுபோல ஒருமுறை நடந்தாலே அது ஆச்சரியம்தான். ஆனால் இருமுறை இதுபோல நடந்ததை நினைத்தால் எனக்கே நம்ப முடியவில்லை. அந்த இரண்டு சம்பவங்களையும் சொல்கிறேன், நீங்களே சொல்லுங்கள்.
சம்பவம் - ஒன்று.
          2000 ஆம் ஆண்டு சென்னையிலிருந்து நியூயார்க் வந்த புதுசு. கிறித்தவத் தமிழ்க் கோவில் செல்ல ஆரம்பித்த சமயம். அந்தக்கோவிலின் உறுப்பினர் வீட்டில் பிறந்த நாள் விருந்துக்காக என்னை அழைத்திருந்தார்கள். அங்கே அவர்களுக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் சென்னையிலிருந்து வந்திருந்தார்.
          சென்னையில் நன் இருந்த போது குட்வில்  மனிதவள மேம்பாட்டு (Goodwill HRD Consultants  Pvt  Ltd) என்ற நிறுவனத்தை நிறுவி நடத்திவந்தேன். அதன் மூலம் கிடைத்த வாய்ப்பில்தான் நியூயார்க் வந்திருந்தேன். என்னை அந்த சென்னை நண்பருக்கு அறிமுகம் செய்தார்கள். அப்போது நடந்த உரையாடலை இங்கு தருகிறேன்.
பரதேசி : வெல்கம் டு நியூயார்க்
சென்னைக்காரர் : தேங்க்யூ, நீங்க இங்க என்ன பண்ணுறீங்க?
பரதேசி : ஒரு ஐ.டி. கம்பெனியில் இருக்கிறேன்.
சென்னை: எல்லாரும் பெரும்பாலும்  ஐடி தானே இங்க, எப்ப வந்தீங்க
பரதேசி: நான் வந்து ஒரு ஆறு மாசம் ஆச்சு
சென்னை : அப்படியா இங்க எப்படிப் போகுது?
பரதேசி : பரவாயில்லை.
சென்னை: உங்கள் குடும்பம் எங்கு இருக்கிறாங்க?
பரதேசி : ஊரில்தான் இருக்கிறாங்க, ஹெச் 1 B விசா கிடைச்சதும், அவங்களை வரவழைக்கணும்.
  சென்னை: மேரீட் பேச்சிலர்ன்னு சொல்லுங்க.
பரதேசி : ஹாஹா அப்படியும் வைத்துக் கொள்ளலாம்.
சென்னை: இந்தியாவில எந்த ஊர்?
பரதேசி : சொந்த ஊர் மதுரைப்பக்கம், ஆனா சென்னையில செட்டிலாகி கொஞ்ச ஆண்டுகள் ஆயிருச்சு.
சென்னை : சென்னையில் எங்க?
பரதேசி : மணப்பாக்கம், போரூர் போகும் வழியில் ராமாபுரம் எதிரில் இருக்கு.
சென்னை: சென்னையில் என்ன பண்ணீங்க?
பரதேசி: ஹெச் ஆர்  தான் சில கம்பெனிகள்ல இருந்தேன்.
சென்னை: ஓ ஹெச் ஆரா உங்களுக்கு சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள குட்வில் தெரியுமா?
பரதேசி: தெரியும்
சென்னை: குட்வில் ஹெச் ஆர்.டி கன்சல்ட்டன்டஸ்?
பரதேசி : நன்றாகத் தெரியும்.
சென்னை : அதன் சி. இ.ஒ. எனக்கு நெருங்கிய நண்பர்.
பரதேசி : அப்படியா?
சென்னை: அவர் சென்னையில் பெரிய ஆள்
பரதேசி : அப்படியா?
சென்னை : பல கம்பெனிகளுக்கு டிரைனிங், ஹெச் ஆர் மற்றும் ரெக்ரூட்மென்ட் செய் கிறார்கள்.
பரதேசி : ம்ம்
சென்னை : என் குளோஸ் ஃபிரெண்டுதான்,  உங்களுக்கு ஏதாவது வேண்டுமென்றால் சொல்லுங்கள், அவரிடம்  சொல்கிறேன்.
பரதேசி : அவரை நேரில் பாத்திருக்கீங்களா?
சென்னை: என்ன அப்படிச் சொல்லீட்டிங்க, எனக்கு அவரை நல்லாவே தெரியும்.
பரதேசி : அவர் பெயர்.
சென்னை : அவர் பெயர் ஆல்ஃபிரட் ராஜசேகரன். பக்கத்தில் இருந்த எல்லோரும் சிரிக்க நான் சொன்னேன். அந்த ஆல்ஃபிரட் ராஜசேகரன் தான் நான்.
- சென்னைக்காரருக்கு என்ன சொல்வதென்றே தெரியாமல் திகைத்துப்போனார்.

அந்த இரண்டாவது சம்பவத்தை அடுத்த முறை சொல்கிறேன் .

தொடரும்

Thursday, December 14, 2017

சைட் எ∴பக்ட்டும் மெயின் எ∴பக்ட்டும் !!!!!!!!!!

Image result for Doctor and patient

கடந்த வாரமொரு நாள் வேலை முடித்து வீடு திரும்பி, வழக்கம் போல் என்னுடைய தபால்களை எடுத்துப் பார்த்தேன். இப்போது என் வீட்டில் ஒரு ஆன்ட்டிக் மாடல் மெயில் பாக்ஸ் உள்ளது. போன கோடைகாலத்தில் தான் பொருத்தினேன். அதில் மேல் புறத்தில் வலது பக்கத்தில் ஒரு சிவப்பு நிற மெட்டல் கொடி ஒன்று இருக்கும். அந்தக் கொடியை பறப்பதுபோல் உயர்த்தி வைப்போம். தபால்காரர் அந்தப் பெட்டியில் தபாலைப் போட்டவுடன் உயர்த்தி இருந்த கொடியை கீழ்நோக்கி சாய்த்துவிடுவார். கொடி சாய்ந்திருந்தால் உள்ளே தபால் இருக்கிறதென்று அர்த்தம். நாம் தபாலை எடுத்தவுடன் கொடியை உயர்த்தி வைத்துவிட வேண்டும். இது பழங்கால சிஸ்டம் ஆனாலும் இப்போதும் உதவுகிறது. என்னுடைய வீட்டில் மூன்று குடித்தனக் காரர்கள் இருப்பதோடு எனக்கும் அனுதினம் ஏதாவது தபால் வருமென்பதால், இந்த தபால்களை பிரித்து வைப்பது என்னுடைய அனுதின வேலை.

My Mail Box

அந்தப்படியே பிரித்துப் பார்க்கும் போது அதில் ஒரு பழுப்பு நிற போஸ்ட் கார்டு இருந்தது. அதைப் பார்த்தவுடன் அது என்னவென்று தெரிந்துவிட்டது. ரிஜிஸ்டர்டு பார்சல் அல்லது கடிதம் அல்லது செர்ட்டி∴பைட் தபால் ஏதாவது வந்து அதை வாங்குவதற்கு வீட்டில் யாருமில்லை என்றால் இந்த ஸ்லிப்பை தபால்காரர் விட்டுச்செல்வார் . தகுந்த ஐடியுடன் நாம் அடுத்த நாள் அல்லது குறிப்பிட்ட சில நாள்களுக்குள் தபால் அலுவலகம் சென்று வாங்கிக் கொள்ள வேண்டும். யாரிடமிருந்து தபால் என்று ஸ்லிப்பில்  பார்த்தால் தெரியும். அது என்னுடைய டாக்டர் அலுவலகத்திலிருந்து வந்திருந்தது.
அடுத்த நாள் அலுவலகத்திற்கு சிறிது தாமதமாக வருவேன் என்று சொல்லிவிட்டு என்னுடைய VW ரூட்டான் மினிவேனை எடுத்துக் கொண்டு தபால் ஆபிஸ் சென்று வாங்கி வந்தேன். காரில் உட்கார்ந்து உடனே பிரித்துப் பார்த்தேன். ரத்தப்பரிசோதனையின் ரிசல்ட்டில் கோளாறு இருப்பதாகவும் உடனே டாக்டரை வந்து சந்திக்கும் படியும் எழுதியிருந்தது. என்னடாது பரதேசிக்கு வந்த சோதனை என்று சிறிது கவலையாக இருந்தது.
போன் செய்தால் ரீக்கால் கடிதம் என்பதால் அடுத்த நாள் காலையே வரச் சொன்னார்கள். இல்லாவிட்டால் என்னுடைய டாக்டரிடம் அப்பாய்ன்ட் மென்ட் கிடைக்க குறைந்த பட்சம் ஒரு மாதமாவது வெயிட் பண்ண வேண்டும்.
Image result for Jamaica Medisys

இன்சுயூரன்ஸ், டிஸ்கிளைமர் போன்ற சம்பிரதாயங்களை முடித்துக் காத்திருந்தேன். முதலில் நர்ஸ் கூப்பிட்டு எடை, BP, டெம்பரேச்சர் ஆகியவற்றைப் பார்த்துவிட்டு ஒரு ரூமில் உட்கார வைத்தார். அதுபோல பல எக்ஸாமினேஷன் ரூம் இருக்கும். டாக்டருக்கென்று ஒரு ரூம் கிடையாது. பல எக்ஸாம் ரூமில் காத்திருக்கும் நோயாளிகளிடம் ஒவ்வொருவராக முடித்துவிட்டு வருவார். எல்லா ரூமிலும் இருக்கும் கம்ப்யூட்டரில் லாகின் பண்ணி அவர்களால் நம்முடைய வரலாற்றை அலச முடியும். டாக்டரின் பெயர் பியாலி ரெய்சென் எனக்கு 15வருடமாக இவர்தான் டாக்டர் கல்கத்தாவைச் சேர்ந்தவர். பெங்காலி என்பதால் எனக்குப் பங்காளி.
 பல கிளையன்ட்ஸ் காத்திருந்தாலும், ஒவ்வொரு வரையும் சிரித்த முகத்தோடு பொறுமையாகப் பார்ப்பார். அதனாலேயே அவரைத் தேடிவருபவர் அநேகம். ஏராளமான கிளையன்ட்ஸ் இருப்பதால் இப்போது புதிதாக அவர் யாரையும் சேர்த்துக் கொள்வதில்லை. ஜமைக்கா ஹாஸ்பிட்டல் என்ற பெரிய   மருத்துவமனையின் ஒரு அங்கம் இது, ஜமைக்கா மெடிசிஸ் என்று சொல்வார்கள். அவர்கள் ரெபர் பண்ணுகிற டாக்டர்களும் அதே குழுமத்தில் இருப்பதால் எல்லா ரிசல்ட்களும் பகிரப்பட்டு நம்முடைய அக்கவுன்ட்டில் இருக்கும். அதனை நாம் போகும் மற்ற ஸ்பெஷலிஸ்ட்டுகளும் பார்க்க முடியும். டாக்டர் உள்ளே நுழைந்தார். எனக்கு திக் திக் கென்று பல்சு எகிறியது.

“ஹாய் ஆல்∴பி”
“குட்மார்னிங் டாக்டர்”.
“குட்மார்னிங் ஹவ் ஆர் யூ ?”
“அத நீங்கதான் சொல்லனும், லெட்டர் போட்டிருந்தீங்க?” 
“அதவிடு ஜெர்மனி எப்படி இருந்துச்சு?”
“ஜெர்மனி சூப்பரா இருந்துச்சு டாக்டர், அந்த லெட்டர்?”
“ஜெர்மனியில் எங்கெல்லாம் போனாய்?”
“போறவழியில் போர்ச்சுக்கலில் லிஸ்பன் அப்புறம் ஜெர்மனியில் பெர்லின், லைப்சிக், வார்ட் பர்க், விட்டன்பர்க், எர்∴பர்ட், டிரஸ்டன் போன்ற இடங்களுக்குப் போனேன்”.
“ஓ நான் போனது ∴பிராங்∴பர்ட் மற்றும் மியூனிக் பகுதி, ஆல்ப்ஸ் மலையை அங்கிருந்தும் பார்க்க முடியும்”.
“வெரிகுட் டாக்டர், உங்கள் லெட்டர் கிடைத்தது”.
“ஜெர்மனியில் கிளைமேட் எப்படி?”
“கொஞ்சம் குளிர்தான் டாக்டர், அவசரமா வரச் சொல்லிருந்தீர்கள்”
ஆல்∴பி சொல்ல மறந்துட்டேன், நீ கொடுத்த மதுரை சுங்கிடி சேலையை போனவாரம் ஒரு பார்ட்டிக்கு கட்டினேன். எல்லாரும் என்னை வந்து சூழ்ந்திட்டாங்க”.
“சந்தோஷம் டாக்டர், என்ன பிரச்சனை டாக்டர் எனக்கு?”
“ஓ நீ கொடுத்த ஜேட் மாலையையும் போட்டிருந்தேன். அந்தச் சேலையின் பச்சைக் கலருக்கு மிகவும் பொருத்தமாக இருந்தது”.
“டாக்டர் என் ஹெல்த்தைப் பத்திப் பேசலாமா?”
“ம் சொல்லு, ஆமா இப்ப என்ன புத்தகம் படிக்கிற?”  
“டாக்டர் முதல்ல இதப்பாருங்க” (லெட்டரைக் காட்டினேன்)
“ஓ இதுவா இது ஒரு புதிய ∴பார்மாலிட்டி ரத்தப் பரிசோதனை முடிஞ்சதும் போடுவாங்க, தேதியைப் பாரு அக்டோபர் 5 ஆம் தேதி. இப்ப டிசம்பர் ஆயிருச்சே”
“அப்ப ஒண்ணும் பிரச்சனை இல்லையா? “
“வழக்கம் போல கொஞ்சம் சுகர்தான் அதிகமாயிருக்கு”
“அதான் தெரியுமே டாக்டர், சுகர் கூடிப்போய் ∴பிகர் டிஸ்∴பிகர் ஆகி அது ஏன்னு கான் ∴பிகர் பண்ணிட்டு இருக்கேன்.
வாய்விட்டு சிரித்தார். இது மாதிரி நானும் வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும்னு சொல்றாங்க. எங்க சிரிக்க முடியுது. இப்ப சினிமால கூட வர ஜோக்குக் கெல்லாம் சிரிப்பா வருது எரிச்சல்தான் வருது.
“சரி சரி மாத்திரை டோசை கொஞ்சம் கூட்ட வேண்டியதுதான்”
“டாக்டர் மறுபடியுமா? இப்பவே சாப்பிடும்போது கூட்டு பொரியல் மாதிரி ஏராளமான மாத்திரைகளை முழுங்கறேன்”.
“அதுக்கு என்ன செய்யறது?”
“அது சரி டாக்டர் இங்கிலீஸ் மருந்துக்கு சைட்  எ∴பக்ட் நிறைய இருக்கும்னு சொல்றாங்களே ?”    
“என்ன செய்யறது சைட்  எ∴பக்ட் இருக்கும்தான், ஆனால் அதப் பாத்தா மெயின் எ∴பக்ட் வந்துருமே”.
“மெயின் எ∴பக்ட்டா அது என்ன டாக்டர்?”
“வேற என்ன ஹார்ட் அட்டாக்தான்”
வாயை மூடிக்கொண்டு வீடு வந்து சேர்ந்தேன்.
முற்றும்
 


Thursday, November 16, 2017

பரதேசியும் கொரியப்பெண்ணும்!!!!!!

Related image
Not this girl
"செசமே பேகல் டோஸ்ட் வித் பட்டர்?" என்று அந்தப் கொரியப் பெண் கேட்டு என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தினாள்.
          2000-ஆவது ஆண்டு நான் நியூயார்க்குக்கு வந்த புதிது. கம்ப்யூட்டக் கம்ப்யூட்டர்ஸ் என்ற கம்பெனியில் மனித வளத்துறையில் வேலை. நான் அப்போது தனியாகத்தான் இருந்தேன். என் குடும்பம் என்னுடன் இணைந்து கொண்டது 2001-ஆவது ஆண்டு செப்டம்பர் முதல் வாரத்தில் தான். அதுவரை திருமணமான பேச்சுலர் வாழ்க்கை. கம்ப்யூட்டக் 5-ஆவது அவென்யூவில் எம்ப்பயர் ஸ்டேட் பில்டிங் அருகில் இருந்தது. 32 மற்றும் 31ஆவது தெருவுக்கு நடுவில் உள்ள கட்டிடத்தின் ஐந்தாவது மாடி. சப்வேயில்  இறங்கி 32 -ஆவது தெரு வழி நடந்து 5-ஆவது அவென்யூவில் வலது புறம்  திரும்பினால் அந்தக்கட்டிடம் வரும்.
Related image

          32-ஆவது தெரு பிரட்வேயில் இருந்து 5-ஆவது அவென்யூ வரை உள்ள பகுதி 'கொரியன் வழி' (korean way) என்றழைக்கப்படுவதை நான் முன்னமே உங்களுக்கு சொல்லியிருக்கிறேன். அதில் ஒரு கட்டிடத்தின் உள்ளே எலிவேட்டருக்குப்  போகும் வழியில் ஒரு கடை. பேகல், சாண்ட்விச், காஃபி, டி மற்றும் குளிர்பானங்கள் விற்கும் மிகச்சிறிய கடை, ஒரு 50 சதுர  அடி  இருக்கும். அங்கே எப்போதும் புன்னகை மற்றும் சுறுசுறுப்புடன் ஓனராக கொரியப்பெண் ஒருவள், பேகல் சாண்ட்விச் செய்து கொடுக்க ஓரத்தில் ஒரு ஸ்பானிய பையன், உள்ளே போனால் மக்களுக்கு வழிவிட்டு எதிர் சுவரோரம் நிற்கும் வாடிக்கையாளர்கள். அந்தச்சிறிய இடத்தில்  வியாபாரம் காலை வேளைகளில் மிகவும் சுறுசுறுப்பாக நடக்கும்.
Related image
Sesame Bagel
          அங்கே பேகல் வகைகள் ஒரு கண்ணாடிப் பெட்டியில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். பிளைன், எவ்ரிதிங், ரெய்சின், செசமே  என்று பலவகைகள் இருக்கும். முதன் முதலில் என்ன பேகல் வேண்டும் என்று கேட்கும் போது திக்குமுக்காடி எனக்குத் தெரிந்த மாதிரி இருந்த செசமே அதாவது எள் தூவிய பேகலை கை காண்பிக்க, "டோஸ்ட்? என்று கேட்கும் போது ஆமாம் என்று சொல்லி, கிரீம் சீஸ், ஜெல்லி அல்லது பட்டரா? என்று கேட்கும் போது எனக்குத் தெரிந்த பெயரான 'பட்டர்' என்று சொல்லி ஆர்டர் செய்தேன்.  
          என் முறை வந்து அந்த ஸ்பானிய பையன் என்னைப் பார்த்து முறுவலித்துவிட்டு உறை போட்ட கையில் செசமே பேகலை எடுத்து இரண்டு ஓரங்களை வெட்டிவிட்டு நீளமான பிரட் கத்தியால் இரண்டாக வெட்டிப் பிளந்து அங்கேயிருந்த சிறிய கிரில்லில் வைத்தான். சிறிது நேரம் கழித்து வெளியே எடுத்த பேகலில் லாவகமாக பட்டரை இருபுறம் தடவி, இரண்டு அரை வட்டங்களையும் இணைத்து ஒரு பட்டர் பேப்பரில் வைத்து மீண்டும் மேலிருந்து 2-ஆக வெட்டி கொரியப்பெண்ணிடம் கொடுக்க அதனை ஒரு சிறிய பழுப்பு நிற கவரில் போட்டு கூட 2-3 நாப்கின்களை வைத்து காஃபி டீ? என்று கேட்க, இல்லை இது போதும் என நான் சொல்ல, 75 சென்ட்ஸ் என்றாள்.
Related image
Add caption
          ஆஹா 75 சென்ட்டில் ஒரு காலை உணவா? என்று ஆச்சர்யப்பட்டு அதனை வாங்கிக் கொண்டு அலுவலகத்தில் சென்று கம்ப்யூட்டரை ஆன் பண்ணி உட்கார்ந்து சிறிது எடுத்துக் கடித்துப் பார்த்தேன். உருகிய பட்டரில் சிறிதே கருகிய அந்த பேகல் மொறுகிய நிலையில் நாவில் பட்டு இளகியது. சுவை அபாரமாக இருந்தது. ஒன்று சாப்பிட்டால் மதியம் 3 மணி வரைக்கும் பசி உம்ஹிம். அதன்பின் அதே பழக்கம் தினமும் தொடர்ந்தது. அதே செசமே பேகல் டோஸ்ட் வித் பட்டர். சில சமயங்களில் மற்றவற்றை முயற்சி செய்து பிடிக்கவில்லை. எனவே என்னைப் பார்த்ததும் அந்தக் கொரியப் பெண் என்னைப் கேட்காமலே "செசமே பேகல் டோஸ்ட் வித் பட்டர்" என்று சொல்லிவிடுவாள்.
          இது கிட்டத்தட்ட ஒரு வருடம் தொடர்ந்தது.
(“டேய் சேகர் , எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் , நீ ஒரு வருடம் அந்தக்கடைக்கு திரும்ப திரும்ப போனது பேகளின் ருசிக்காகவா  இல்லை  அந்த கொரியப்பெண்ணைப்பார்க்கும் குஷிக்காகவா தங்கச்சி  வேற    அப்போது  உன்கூட இல்லை” .)
இந்த மகேந்திரன் தொல்லை தாங்க  முடியலை சாமி, அவனை கண்டுக்காதீங்க மக்களே.
அதன்பின் என் மனைவி மக்கள் வந்தபின் அந்தப்பழக்கம் மாறிப்போய் காலையில் இட்லி, தோசை, உப்புமா, பொங்கல் என்று ஆகிப்போனது. சில வருடங்கள் தொடர்ந்த இந்தப்பழக்கம் பின்னர் உடலில் இனிமை கூடிப் போனபோது கைவிடப்பட்டு தினமும் ஓட்மீல் என்று பரிணாம(?) வளர்ச்சியடைந்து கடந்த மூன்று நான்கு  வருடங்களாக இது தொடர்கிறது.
          என் மனைவியை எழுப்பாமல் நானே எழுந்து ரெடியாகி ஓட்மீல் பாக்கெட்டைப் பிரித்து ஒரு சிறிய பாத்திரத்தில் நீர் ஊற்றி வைத்து மைக்ரோ ஓவனில் ஒன்றரை நிமிடம் வைத்தால் என் காலை உணவு ரெடி.
          கடந்த திங்கள்கிழமை காலை எழுந்து பார்த்தால்  மைக்ரோவேவ் ஓவன் வேலை செய்யவில்லை. கடந்த ஆண்டுதான் கிச்சனை ரெனவேட் செய்யும்போது கேபினட்டில் பொருந்தும்படி குக்கிங் ரேஞ் மேல் GE  ஓவன் ஒன்று பொருத்தினோம். சரியாக ஒரு வருட வாரன்டி முடிந்தவுடன் தன் கடமை முடிந்துவிட்டது போல் அது வேலை செய்ய மறுத்துவிட்டது. அதனை ரிப்பேர் செய்யும் செலவுக்கு புதிதாக ஒன்று வாங்கிவிடலாம் என்று முடிவு செய்தோம்.
ஆனால் அது வரை காலை உணவுக்கு வழி? பழைய பேகல் ஞாபகம்வர இப்போது வேலை செய்யும் இடத்திற்கும் பக்கம் என்பதால் அவசரமாகக் கிளம்பி மேன்ஹாட்டன் வந்து சேர்ந்தேன். அந்தச் சிறிய கடை இருக்கிறதோ இல்லையோ என்று நினைத்துக் கொண்டு அங்கே போனால், அந்தக் கடை அங்கேயே இருந்தது. அளவில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் ஸ்பானிய பையனுக்குப் பதிலாக அந்தக் கொரியப் பெண்ணே சாண்ட்விச் பகுதியில் நிற்க, அவளுடைய தங்கை போன்ற ஒரு பெண் கல்லாவில் நின்றிருந்தாள்.
அந்தக் கொரியப் பெண் 17 வருடத்திற்குப் பின்னரும் எந்த மாற்றமும் இல்லாமல் அதே புன்னகையுடன் அப்படியே இருந்தது இன்னுமொரு ஆச்சரியம். இந்த உலகில் தோற்றம் மாறிப்போனது நான் மட்டும்தானா?
“இல்லடா சேகர் நான்தான் போனதடவை நீ வரும்போது பார்த்தேனே நீயும் அப்படியே தாண்டா இருக்கிறாய்”.
(மறுபடியும் மகேந்திரன் போலத் தெரியுது. ஹலோ நண்பர்களே நான் தலைக்கு ஏன் மீசைக்கும் சேர்த்து கறுப்புச் சாயம் அடிப்பதை அவனிடம் சொல்லிராதீங்க ஓக்கே?)
அதைவிட ஆச்சர்யம் என்னவென்றால், “என்னைப் பார்த்தும் “செசமே பேகல் டோஸ்ட் வித் பட்டர்” என்று சொன்னதுதான். என்னவொரு ஞாபக சக்தி இத்தனை வருடங்கழித்தும் மறக்க வில்லையே.
“ஆமாம் என்று சொல்லி “அன்யஹாசியோ” என்றேன். இப்போது அவளுக்கு ஆச்சரியம் வந்தது. கொரிய பாஷையில் முகமன் கூறும் வார்த்தை அது. பேகல் 75 சென்ட்டிலிருந்து 1.25 ஆகியிருந்தது. 17 வருடத்தில் அப்படி ஒன்றும் கூடிவிடவில்லை. வாங்கி விட்டு “கம்சாமிடா” என்றேன். நன்றி என்று அர்த்தம். அவள் ஆச்சர்யத்தில் வாய் பிளக்க நான் புன்னகையுடன் வெளியே வந்தேன். அலுவலகம் சென்று சூடான பேகலை அப்படியே வாயில் வைக்க, உருகிய பட்டரில் சற்றே கருகிய பேகல் மொறுகிய நிலையில் வாயில் இளகியது.

(பின் குறிப்பு 2 மணி நேரம் கழித்து சட்டென ஞாபகம் வந்து சுகர் டெஸ்ட் செய்தால் அளவு எகிறி கூடிப்போய் கும்மாளமிட்டது  )

.