Showing posts with label சிவகங்கை பயணம். Show all posts
Showing posts with label சிவகங்கை பயணம். Show all posts

Monday, March 24, 2014

சிவகங்கை பயணம் பகுதி 3: சிவாலயமும் தேவாலயமும்!!!!!!


சிவகங்கைக்கு கிழக்கே சுமார் 16 கி,மீ தொலைவில் உள்ளது காளையார்
 கோவில். பாடல் பெற்ற தலமாகிய இந்தக் கோவிலின் மூலவர் பெயர் காளீஸ்வரர். 9ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சுந்தரமூர்த்தி நாயனார், இவரை "காளை" என்று குறிப்பிட்டதால், இவர் காளையார் என்று அழைக்கப்பட, இந்தக் கோவில் "காளையார் கோவில்" என்று வழங்கப்படுகிறது.

முன்னால், கம்பீரமாக நிற்கும் ராஜகோபுரம் சுமார் 150 அடி உயரம் கொண்டது. கலை அழகுடன் மிக அழகாக இருந்தது. நடுவில் மண்டபம் கொண்ட ஒரு அழகான தெப்பக்குளம் இருக்கிறது. இதன் பெயர் "ஆனைமடு" என்பது. இந்திரனின் வெள்ளை யானையாகிய "ஐராவதம்" வந்து இந்தத் தெப்பக்குளத்தை உருவாக்கியது என்ற ஐதீகத்தால் இந்தப்பெயர். 

இங்குள்ள மூன்று சந்நிதிகள்  இறைவனின் காத்தல், பாதுகாத்தல் மற்றும் முடித்தல் என்ற மூன்று செயல்களைக்குறிக்கும் விதத்தில் அமைந்துள்ளன. எனவே மூலவருக்கு காளீஸ்வரர், சோமேஸ்வரர் மற்றும் சுந்தரேஸ்வரர் என்ற மூன்று பெயர்களும் சக்திக்கு ஸ்வர்ணாம்பிகை, செளந்தர நாயகி மற்றும் மீனாட்சி என்ற மூன்று பெயர்களும் வழங்கப்படுகின்றன.

தமிழ் நாட்டுக் கோவில் அமைப்பும் கோபுர அமைப்பும் உலகில் எங்கும் காண முடியாது. வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இந்த இடம் ஒரு முக்கிய கோட்டையாகும். ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்டு இங்குதான் ராஜா முத்து வடுக நாதத் தேவர் உயிரிழந்தார். அதன்பின் மருதுபாண்டியர், ராணி வேலு நாச்சியாருடன்  தப்பி ஓட, ஆங்கிலேயப் படைகள் இந்தக் கோவிலைக் கொள்ளையிட்டு 5000 பகோடாக்கள் (தங்கக்காசுகள் )மதிப்புள்ள கோவில் நகைகளைக் கவர்ந்து கொண்டனர். எனவே இந்தக் கோவில் சிலகாலம் மூடப்பட்டுக் கிடந்தது.

இது, பின்னர் தேவகோட்டை ஜமீன்தார் அவர்களால் பெரும் செலவில் புதுப்பிக்கப்பட்டு திறக்கப்பட்டது. அப்போதிருந்த தேவகோட்டை ஜமீந்தார் AL.AR.RM அருணாச்சலம் செட்டியார் சந்நியாசம் வாங்கி காளையார்கோவில் வேதாந்த மடத்திலேயே தங்கிவிட்டார். பின்னர் அவர் "ஸ்ரீலஸ்ரீ ஜமின்தார் அருணாச்சல ஞான தேசிக ஸ்வாமிகள்" என்றழைக்கப்பட்டார். அவருடைய சமாதி அந்த மண்டபத்தின் முன்  இருக்கிறது. ஸ்ரீ என்றால் திருமிகு என்று அர்த்தம் ஸ்ரீலஸ்ரீ என்றால் ஆயிரம் திருவுக்குச்சமானம்.

இது சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்தாயினும் அவர்களுடைய அனுமதியின்படி, “தேவகோட்டை ஜமீந்தார் கட்டளை" என்று ஆரம்பிக்கப்பட்டு அன்று முதல் இன்று வரை தொடர்ந்து சிறப்புப் பூஜைகள் நடத்தப்படுகின்றன. இதனை பரம்பரை பரம்பரையாக தேவகோட்டை ஜமீந்தார்கள் நடத்தி வருகின்றனர். தற்போதைய ஜமீந்தார் AL.AR.RM சின்னவீரப்பன் செட்டியார் இந்தக் கட்டளையை கவனித்துவருகிறார்.

இந்தக் கோவிலில் தைப்பூச விழாவில் நடக்கும் தேர்த்திருவிழா மிகவும் விசேஷமானதென்று சொன்னார்கள். ரதத்தையும் பார்த்தபோதுதான், பள்ளியில் "காளையார் கோவில் ரதம்" என்ற கோவிமணி சேகரன் எழுதிய சிறுகதையைப் படித்தது எனக்கு ஞாபகம்  வந்தது. வைகாசியில் நடக்கும் தெப்பத் திருவிழாவும் புகழ் பெற்றது. காரைக்குடியில் கோவில் பார்க்காத குறையும் நீங்கியது.

வனராஜூக்கு நன்றி சொல்லி, கோவிலின் முன் விற்ற இளநீரை சாப்பிட்டு விட்டுக் கிளம்பினோம். "என்ன வனா, மதுரைக்குத் திரும்புகிறோமா", என்று கேட்டேன். "போகும் வழியில் இன்னுமொரு இடம் இருக்கிறது. அதனைப் பார்த்துவிடலாம் என்றார். அது எந்த இடம் என்று கேட்டபோது, 19ஆவது நூற்றாண்டின் இறுதியில் கட்டப்பட்ட பேராலயம் இருக்கும் "இடைக்காட்டூர்" என்றார். வேண்டாம் என்றா சொல்லப்போகிறேன்.

காரை நிறுத்திவிட்டு, சிறிது தூரம் நடந்தால், வருகிறது இடைக்காட்டூர் "புனித இருதய நாதர் ஆலயம்". உலகமெங்கிலும் பல கத்தோலிக்க ஆலயங்களைப் பார்த்திருந்தாலும், இந்த கத்தீட்ரல் மிக வித்தியாசமான வடிவமைப்பில் உருவாக்கப்பட்டிருந்தது. இது பிரெஞ்சு தேசத்திலிருந்து வந்த பாதிரியார் ஃபெர்டினாண்ட் செலி S.J.(Father Ferdinand Celle.S.J) அவர்களால் 1894-ல் கட்டப்பட்டது. இது காதிக் (Gothic) கட்டடக்கலையில் கட்டப்பட்ட பிரெஞ்சு நாட்டிலுள்ள ரெய்ம்ஸ் பேராலயத்தின் (Reims Cathedral) அதே வடிவத்தில் கட்டப்பட்டதாகும். இது தேவதைகளால் கட்டப்பட்டது என்ற நம்பிக்கையின் அடிப்படையில் பாதிரியார் 153 ஏஞ்சல் வடிவங்களை இங்கு அமைத்திருக்கிறாராம்.

இதில் 200 வகையான செங்கல்கள், ஓடுகள், டைல்கள் பயன்படுத்தப் பட்டிருக்கின்றன. ஸ்டெயின் கிளாஸ் என்று சொல்லப்படுகிற வண்ணக்கண்ணாடிகளால் அமைந்த பெரும் ஜன்னல்களும், அவற்றில் வரையப்பட்டிருந்த வெவ்வேறு பைபிள் நிகழ்வுகளும் பிரமிப்பை ஊட்டின. முக்கியமாக அதன் கண்கவர் வண்ணங்கள், சூரிய  ஒளியில் தகதகத்தன. உள்ளே ஸ்டக்கோ (stucco) வால் செய்யப்பட்ட புனிதர்கள் மற்றும் ஏஞ்சல்கள் வண்ணமயமாக இருந்தன. குறிப்பாக இயேசு நாதரின் புனித இருதயத்தை சூழ்ந்திருக்கும் அவரின் தந்தை ஜோசப், தாய் மரியாள் சூழ்ந்த இந்தப் புனித குடும்பத்தின் உருவங்கள் தங்க நிற கில்ட்டால் வண்னம் தீட்டப்பட்டு, ஃபிரென்ச் நாட்டின் கலை நுணுக்கத்திற்கு சாட்சி பகர்ந்தன.

ராமநாதபுர வரலாற்றில் இந்த ஆலயம் முக்கிய பங்கு வகிக்கிறது. கிழவன் சேதுபதியின் மருமகனான, நமக்கு ஏற்கனவே அறிமுகமான கட்டையத்தேவனை, பாதிரியார் ஜான் டி பிரிட்டோ (St. John de Britto) கிறிஸ்துவ மதத்திற்கு மாற்ற, கிழவன் சேதுபதி பாதிரியாருக்கு மரணதண்டனை விதிக்கிறான். இந்த நிகழ்ச்சி ஸ்டெயின் கண்ணாடியில் சித்திரமாக வரையப்பட்டிருக்கிறது.


பின்னர் போப் ஆண்டவர் அவர்களால் உயிர்த்தியாகம் செய்த பாதிரியார் ஜான் பிரிட்டோவுக்கு புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது.

இந்த ஆலயத்தில் பலிபீடம் (Altar) மிக அழகாக வடிவமைக்கப்பட்டு,கிறிஸ்துவத்தின் மையக் கருப்பொருளான தந்தையாகிய இறைவன், மைந்தனாகிய இறைவன், தூய ஆவியானவரான இறைவன் ஆகிய மூவரும் ஒருவரே என்பதை விளக்கும் வகையில் அமைக்கப்பட்டிருக்கின்றன. பளிச்சிடும் தங்க வண்ணத்தில் சுற்றிலும் ஏஞ்சல்கள் தகதகத்தன.

இப்படி ஒரு மூலையில் இப்படி ஒரு பேராலயம் கட்டப்பட்டிருப்பதை நினைத்து ஆச்சரியப்பட்டேன். தமிழ்நாடு தன்னுடைய உயர்வான செறிவான நீண்ட வரலாற்றில் எத்தனை எத்தனை நுணுக்கங்களையும், ரகசியங்களையும், அதிசயங்களையும் புதைத்து வைத்திருக்கிறது என்பதை நினைத்து அசந்து போனேன்.

புன்சிரிப்பு மாறாத வனராஜிக்கு நன்றி சொல்லி, மதுரை வந்து சேர்ந்தோம். இந்ததடவை என் மதுரைப் பயணம் மறக்க முடியாத நிகழ்வுகளையும், நினைவுகளையும் கொடுத்தது.

சிவகங்கை பயணம் முற்றியது .

விரைவில் எதிர்பாருங்கள் "துருக்கி பயணம்".

பின்குறிப்பு: குறுகிய காலத்தில்  பெருகிய மனதோடு 50,000 ஹிட்கள் பெற உதவி செய்த நண்பர்கள்  அனைவருக்கும் என் உள்ளங்கனிந்த நன்றிகள்.


Monday, March 17, 2014

சிவகங்கை பயணம் பகுதி 2: சிவகங்கைச் சீமை


சிவகங்கைச்சீமையை ஆண்ட மருது சகோதரர்கள் கதையை முன்னரே பார்த்தோம். ஆனால் சிவகங்கை சமஸ்தானம் உருவானது ஒரு சுவாரஸ்யமான வரலாறு இதோ உங்களுக்காக.

சேதுநாடு அல்லது ராமநாதபுரம் சமஸ்தானம், ரகுநாத சேதுபதி என்ற கிழவன் சேதுபதியின் நீண்ட ஆட்சிக் காலத்தில் (1674-1710) பரந்து விரிந்த நாடாக இருந்தது. ராமநாதபுரத்தின் ஏழாவது ராஜாவான இவர் காலத்தில் ராமநாதபுரம், சிவகங்கை மற்றும் புதுக்கோட்டைப் பகுதிகள் ஒரே நாடாக இருந்தன. சேதுபதி எப்படி புதுக்கோட்டைப் பகுதியை தொண்டைமானுக்கு தாரை வார்த்தாரோ, அதேபோல் சேதுபதிதான் சிவகங்கையையும் கொடுத்தது. 

கிழவன் சேதுபதி மன்னராக இருக்கும்போது, நாலுகோட்டை பெரிய உடையாத்தேவரின் வீரதீர சாகசங்களைப் பற்றிக் கேள்விப்பட்டுப் பாராட்டி ஆயிரம் போர்வீரர்களுக்குத் தலைவன் ஆக்கினார். அவர்களைப் பராமரிக்க சில ஊர்களையும் தானமாகக் கொடுத்தார். போர் நடக்கும் சமயங்களில் அவர்கள் வந்து உதவ வேண்டும். அதன் பின்னர் கிழவன் சேதுபதி இறந்துவிட, அவர் மகன் விஜய ரகுநாத சேதுபதி 1710-ல் 8-ஆவது அரசராக முடிசூட்டிக் கொண்டார். அதோடு அவரின் மகளான அகிலாண்டேஸ்வரி நாச்சியாரை பெரிய உடையத்தேவரின் மகனான சசிவர்ணத் தேவருக்கு மணமுடித்துக் கொடுத்தார். அவரையும் ஆயிரம் போர்வீரர்களுக்கு தளபதியாக நியமித்ததோடு பிரான்மலை, திருப்பத்தூர், சோழபுரம் மற்றும் திருப்புவனம் ஆகிய கோட்டைகளையும் தொண்டி துறைமுகத்தையும் பாதுகாக்க உத்தரவிட்டார்.
அவனுக்குப்பின் அவன் மகன் சுந்தரேஸ்வர ரகுநாத சேதுபதி 9ஆவது மன்னராக முடிசூட்டிக்கொண்டான். ஆனால் கிழவன் சேதுபதியின் இரண்டாவது மகன் பவானி சங்கரன், ராம நாதபுரத்தின் மேல் படையெடுத்து வந்து சுந்தரேஸ்வர ரகுநாத சேதுபதியை சிறைப்பிடித்து அடைத்துவிட்டு, ராமநாதபுரத்தின் 10ஆவது மன்னனாக முடிசூட்டிக் கொண்டான் (1726-1729). சுந்தரேஸ்வரின் தம்பி கட்டையத்தேவன் தப்பித்து ஓடி தஞ்சாவூரின் மராட்டிய மன்னர் துலாஜியிடம் அடைக்கலம் புகுந்தான்.  

இதனை சசிவர்னதேவர் எதிர்த்ததால் அவரையும் விரட்டியடித்தான். சசிவர்ண தேவர் தஞ்சாவூர் சென்று தஞ்சைமன்னன், போர்வீரர்களின் வீரத்தைச் சோதிக்க அரண்மனையில் வைத்திருந்த புலியினைக் கொன்று, தன் வீரத்தை நிரூபிக்கிறான். காட்டில் அலையும்போது ஒரு ஞானி அவனுக்கு இதனைப்பற்றி உபதேசம் செய்ததாகக் கேள்வி.

அங்கு ஏற்கனவே அடைக்கலம் புகுந்த கட்டையத்தேவனுடன் நெருக்கமானான். பின்னர் தஞ்சை மராட்டிய மன்னனின் உதவியுடன், பெரும் படையுடன் சென்று 1730-ல் உரையூரில் நடந்த உக்கிரமான போரில் ராமநாதபுரத்தைக் கைப்பற்றி அதன் 11ஆவது மன்னனாக முடிசூட்டிக் கொள்கிறான்.
அதன்பின் கட்டையத்தேவர் ராமநாதபுரம் சமஸ்தானத்தை ஐந்து பகுதிகளாகப் பிரித்து, மூன்று பகுதிகளைத்தனக்கும், 2 பகுதிகளை நாலு கோட்டை சசிவர்ணத் தேவருக்கும் பிரித்துக் கொடுத்தான். அதோடு சிவகங்கையைத் தலைநகராக்கிசசிவர்ணத்தேவருக்கு "ராஜா முத்து விஜய ரகுநாத பெரிய உடைத்தேவர்" என்ற பட்டம் கொடுத்து சுயமாக ஆட்சி செய்யும்படி செய்தான். அப்போது பிறந்ததுதான் சிவகங்கைச் சீமை. இவருடைய மகன்தான் முத்துவடுநாத தேவர் என்ற பெயரில் இரண்டாவது ராஜாவாக முடிசூட்டி 1750 முதல் 1772 வரை அரசாண்டார். இவரது மனைவிதான் ராணி வேலு நாச்சியார். அதன்பின் நடத்தவற்றை ஏற்கனவே சொல்லியிருக்கிறேன்.
பிரிட்டிஷ் காலத்தில் ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை இரண்டுமே ஜமீனாக சுருக்கப்பட்டது. D சண்முகராஜா இதன் பரம்பரை பொறுப்பாளராக இருந்து இதனைச் சேர்ந்த 108 கோயில்கள், 22 கட்டணைகள் மற்றும் 20 சத்திரங்களை நிர்வகித்து வந்தார். இவருக்குப்பின் இவர் மகன் D.S.கார்த்திகேய வெங்கடாசலபதி  ராஜா பொறுப்போற்றார். இவர் 1986-ல் இறந்து போகும் போது அவர் மகளான திருமதி.மதுராந்தகி நாச்சியாரை வாரிசாக நியமித்து, இப்போது இவர்தான் நிர்வகித்து வருகிறார்.

இதுதான் அரண்மனை வாசல் என்றார் வனராஜ். எங்கே எங்கே என்று பார்த்தால் ஒன்றும் தெரியவில்லை. ஒரே கடைகளும் விளம்பரப் பலகைகளும்தான் இருந்தன. வீரமங்கை வேலு நாச்சியார் அவர்களின் சிலை மட்டும் முன்னால் இருந்தது. அதில் சிவகங்கையின் வீர வரலாறு சுருக்கமாக இருந்தது. அரண்மனையின் முன்பகுதி வாசலின் இருபுறங்களும் கடைகள் சூழ்ந்து முகப்பின் அழகை மறைத்தன. வனாவின் நண்பர் ஒருவரின் உதவியால் திட்டிவாசலைத் திறந்து பார்த்தேன். உள்ளே சிறிது தொலைவில் பழைய கட்டடம் ஒன்று இருந்தது. வாரிசுகள் இன்னும் அங்கே வசித்து வருவதாகச் சொன்னார்கள். வரலாற்று முக்கிய இடங்களை நாம் பராமரிப்பதும் இல்லை, பாதுகாப்பதும் இல்லை. வனாவின் நண்பர் சொன்னார், "நீங்க முதலிலேயே வருவது தெரிந்திருந்தால் உள்ளே போக அனுமதி வாங்கி வைத்திருப்பேன்" என்று.  “பரவாயில்லை திடீரென்று தான் கிளம்பி வந்தோம்”, என்றேன்.

சற்றுத் தொலைவில் மியூசியம் ஒன்று இருப்பதாகச் சொன்னார்கள். வழி கேட்டுப்போய்ச் சேர்ந்தோம். பலருக்கும் தெரியவில்லை. சென்று பார்த்தால் எந்தப் பராமரிப்பும் இல்லாமல் பழுதுபட்ட ஒரு கட்டடத்தில் அந்த மியூசியம் இயங்கி வருகிறது. ஒரே ஒரு சிறிய கூடம், அவ்வளவுதான். கட்டணம் ரூ.5 என்று நினைக்கிறேன். செலுத்தி உள்ளே சென்றால் ஒரே தூசியும் குப்பையுமாக இருந்தது. அதிலே சிவகங்கை அரசவாரிசுகள் பயன்படுத்திய பல பொருட்கள் இருந்தன. ஒன்றும்  சரியில்லை, வெளியே வந்துவிட்டோம்.


"ஆல்ஃபி அடுத்து காளையர்கோவில் போகலாம்" என்றார், வனா. காளையர்கோவில் ரதம் என்று கோவி.மணிசேகரன் எழுதிய சிறுகதை ஒன்றை சின்ன வயதில் படித்ததிலிருந்து, அதனைப்பார்க்க வேண்டும் என்று வெகு நாள் ஆசை. இதோ சில நிமிடங்களில் அந்தக் கனவு நிறைவேறவிருக்கிறது.

தொடரும் >>>>>>>>>>>>>>

Monday, March 10, 2014

சிவகங்கை பயணம் பகுதி 1: விக்கு விநாயக்ராமின் விக்கு !!!!!!!!!!


              காரைக்குடி பயணத்தை நல்ல படியாக முடித்த மகிழ்ச்சியோடு, நேராக மதுரை கோணார் கடைக்குச் சென்று, மட்டன் தோசையை ஒரு பிடி பிடித்துவிட்டு வீட்டுக்குத் திரும்பினோம். அன்று முழுவதும் திகட்டத்திகட்ட பல இடங்களை பார்த்த திருப்தியோடு, படுக்கைக்குச் சென்றேன்.     மருதுபாண்டியும், தொண்டைமானும், சேதுபதியும் மாறி மாறி நினைவில் வந்து போக, நாட்டைக் கொடுக்குமளவுக்கு இந்தக் "கதலி  நாச்சியார்" எவ்வளவு அழகாக இருந்திருப்பார்கள் என நினைத்துக்கொண்டே உறங்கிப்போனேன்.
          அடுத்த நாள் காலையில் எட்டுமணிக்கு டான் என்று வந்து சேர்ந்தார் வனராஜ். நான் அமெரிக்கன் கல்லூரி “வாஷ்பர்ன் ஹாலில்" தங்கியிருக்கும்போது, வனா "வேலஸ் ஹாலின்" ஜெனரல் செக்ரட்டரி. எங்களுடைய கல்லூரி இசைக்குழுவில் SPB குரலில் பாடுபவர். இப்போது "மனிதம்" என்ற தன்னார்வ நிறுவனத்தை நடத்தி வருகிறார். அதன் மூலம் சிறந்த சமூக சேவை செய்வதோடு, ஃபோர்டு நிறுவனத்தின் விருதைப்பெற்று, அசால்ட்டாக அடிக்கடி அமெரிக்கா வந்து செல்பவர். நியூயார்க் வந்தால் நேரம் கிடைக்கும்போதெல்லாம் என் வீட்டில் வந்து தங்குவார்.
vanaraj in Columbia University, New York
          அவருடைய மாருதி ஜென்னில், அவர் மனைவி முன்னால் அமர்ந்து கொள்ள, நானும் வனாவும் பின்னால் உட்கார்ந்து கொண்டோம். "ஓ அக்காவும் நம்மோடு வருகிறார்களா", என்று கேட்டபோது வனராஜ் சொன்னார்.
          “ஆல்ஃபி, உனக்குத்தான் தெரியுமே, இவள் மானாமதுரையில்தான் இன்னும் வேலை செய்கிறாள். டெய்லி பஸ்ஸில் போய்விடுவாள். நாம் அந்தப்பக்கம் போவதால் வந்து ஒட்டிக்கொண்டாள்", என்றார்.
          அப்போதுதான் ஞாபகம் வந்தது, வனராஜ் மானாமதுரை சி.எஸ்.ஐ பள்ளியின் ஹாஸ்டலில் வார்டனாக இருக்கும்போது, அதே பள்ளியில் உடற்பயிற்சி ஆசிரியையாக இருந்த அக்காவை கடினமான மனப்பயிற்சி செய்து காதல் கடிமணம் செய்து கொண்டார்.
வனராஜ் எப்போதும் மிகவும் கலகலப்பாக இருப்பவர். பல பழைய காரியங்களை பேசிச்சிரித்துக் கொண்டே வந்ததில் நேரம் போனதே தெரியவில்லை. வண்டி மானாமதுரை சென்றடைந்தது. டிரைவர் நடுத்தர வயதில் அமைதியானவர். அக்காவை பள்ளியில் இறக்கிவிட்டுவிட்டு, கிளம்பினோம்.
          மானமதுரையின் மண்பாண்டங்கள் மிகவும் புகழ் வாய்ந்தது என்றார் வனா. மாடமாளிகைகள் கூடகோபுரங்கள் மற்றும்  அரண்மனைகளைப் பார்க்க வந்த எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. மண்பானை சட்டிகளைப் பார்க்கவா இவ்வளவு தூரம் வந்தேன் என்று மனதில் நினைத்தாலும், ஒன்றும் பேசாமல் அவருடன் சென்றேன்.

          அவர் அழைத்துச்சென்றது, செம்மண் பொருட்களை செய்துவிற்கும் கூட்டுறவுச் சங்கத்திற்கு. அங்கு போனபின்தான் தெரிந்தது, அது எவ்வளவு பாப்புலர் இடமென்று. சற்று நேரத்தில் ஒரு வெள்ளைக்காரக் கும்பல் வந்தது. பின் வடநாட்டார்.  
          அங்கு செய்யப்படும் டெரக்கோட்டா வகை அலங்கார சிற்பங்கள் உலகமெங்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. சிறியவை முதல் பெரியவை வரை திடமாக இருந்தன. குறிப்பாக குதிரைகள் மிக அழகாக இருந்தன, வாங்கிக்கொண்டேன். அது தவிர பூச்செடிகள் வைக்கப்பயன்படும் சட்டிகள் வெவ்வேறு சைசில் இருந்தன.

          அதுமுடித்து இன்னொரு இடத்திற்குக் கூட்டிச் சென்றார். அங்குதான் கடம் செய்கிறார்கள். மானாமதுரை கடம் என்பது உலகத்திலேயே நம்பர் ஒன்னாம். ஆர்டர்கள் வந்தவண்ணம் இருக்கிறது. நம்ம விக்கு விநாயக்ராம்  கடம் வாசித்துத்தான் உலகப்புகழ் அடைந்தார். 
விக்கு விநாயக்ராம்
கிராம்மி  அவார்ட் கூட வாங்கியிருக்கிறார்.அவர் தலையைப்பார்த்தா விக்கு வைக்கிற மாதிரி தெரியலயே ன் அவர் பெயர் “விக்கு விநாயக்ராம் ” என்று வந்ததுன்னு கலிபோர்னியா விசு கேட்டால் அதற்கு என்னிடம் பதிலில்லை. அவரும் அவர் மகன்களும் அங்குதான் கடம் வாங்குகிறார்களாம். மானாமதுரையின் செம்மண்ணுக்கு இப்படி ஒரு பெருஞ்சிறப்பு இருப்பது எனக்கு ஏற்கனவே தெரியாது. மண்பானையில் எப்படி இப்படி கிண்கிணி நாதம் எழுகிறது என்று ஆச்சரியப் பட்டிருக்கிறேன். அவர்களைக் கேட்டவுடன் தான் விஷயமே புரிந்தது. நல்ல ஜாதி களிமண்ணில்  (இதுலயும் ஜாதியா?) சிறிது வெங்கலம் அல்லது தாமிரம் (Copper) மற்றும் சிறிதளவு இரும்பும் கலந்து தயார் பண்ணுகிறார்கள். மற்ற சில இடங்களிலும் இது தயாரிக்கப் பட்டாலும் உலகத்திலேயே சிறந்த நாதம் வருவது மானாமதுரை கடத்தில் தானாம். அதிகப்பேர் பயன்படுத்தாதலால் இதனை தயாரிக்கும் குடும்பங்களின் வாரிசுகள் வேறு வேறுவேலைக்குச் சென்றுவிடுவதால், இன்னும் சில ஆண்டுகளில் இந்தத் தொழில் அப்படியே அழிந்து போக வாய்ப்பு இருக்கிறது.
          அடுத்து சிவகங்கைதான், ஆனா சாப்பிட்டுவிட்டுப் போகலாம் என்றார் வனா. திரும்பவும் சி.எஸ்.ஐ வளாகத்தின் உள்ளே சென்று வனாவின் மனைவியின் சகோதரி வீட்டிற்குச் சென்றோம். (இந்த அக்காக்கள் தொல்லை தாங்க முடியலப்பா) அவர்களும் அதே பள்ளியில் டீச்சராக வேலை பார்க்கிறார்கள்.
          "பள்ளி நாளில் அவர்களை எதற்கு தொந்தரவு செய்தீர்கள்," என்று வனாவைக் கேட்டேன்.
                      அவர் வீட்டில் சாப்பாடு சுவை நன்றாகவே இருந்தது. ஆட்டுக்கறியை மிகவும்  சின்ன சின்னதாக நறுக்கி, முருங்கை மற்றும் கத்தரிக்காய் போட்டு குருமா வைத்திருந்தார்கள். மணமாக நன்றாக இருந்ததால் ஒரு பிடி பிடித்துவிட்டு, நன்றி சொல்லிக் கிளம்பினோம்.
          போகும் வழியில் வனாவின் மனிதம் அலுவலகத்திற்குச் சென்று அங்கு வேலை செய்யும் சமூகப் பணியாளர்களுடன் சிறிது கலந்துரையாடல் செய்து சமூகப் பணியில் என்னுடைய அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டேன். வனராஜ் ஒரு சில வேலைகளை முடித்துக் கொண்டு வந்தார்.
          கார் நேராக சிவகங்கை செல்லும் சாலையில் விரைந்தது. சிவகங்கை மறவர் சீமைக்குச்  செல்வதை நினைத்து என் தேகம் சிலிர்த்தது.

தொடரும்