Thursday, August 27, 2015

மருத்துவம் யூதருக்கு மட்டுமா சொந்தம் ? !!!!!!!!!!!!!!

தி ஃபிசிசியன் (The Physician)
The Physician
நெட்ஃபிலிக்சில் புதிதாக சேர்க்கப்பட்ட இந்தப் படத்தைப் பார்க்கும் வாய்ப்பு போன வாரம் கிடைத்தது.
பென் கிங்ஸ்லி நடித்தது என்று தெரிந்ததும் ஆர்வம் அதிகமானது. Ben Kingsley ஞாபகமிருக்கிறதா? காந்தி படத்தில் காந்தியாக நடித்தவர்.
இதே பெயரில் 'நோவா கோர்டன்' (Noah Gordon) என்பவர் எழுதிய நாவலைத் தழுவி உருவான திரைப்படம் இது.
கதைக்கரு:
இப்படத்தின் கதை 11-ஆம் நூற்றாண்டு இங்கிலாந்தில் ஆரம்பிக்கிறது.
ராபர்ட் கோல் என்ற சிறுவனின் அம்மா அப்பெண்டிசிடிஸ்- ஆல்  இறந்து போக, அவனின் தங்கை பாதிரியாரால் வேறொரு குடும்பத்துக்கு அனுப்பப்படுகிறாள். சிறுவனான இவனை எவரும் ஏற்றுக்கொள்ளாத நிலையில், அவனுடைய ஊருக்கு வந்து, அவனுடைய அம்மாவைக் காப்பாற்ற முயலும் நாடோடி நாவிதனிடம் (Barber) அடைக்கலம் புகுகிறான். அக்காலத்தில் பார்பர்கள்தான் வைத்தியமும் பார்ப்பார்கள். ராபர்ட் கோல் அந்த பார்பரிடமிருந்து சில அடிப்படை வைத்தியத்தை கற்றுக் கொள்கிறான். சில வருடங்கள் இப்படியே கழிகின்றது.
இதற்கிடையில் நாவிதனுக்கு கேட்டராக்ட் வந்துவிட ராபர்ட் ,மற்றொரு ஊரிலுள்ள யூத மருத்துவரிடம் அழைத்துச் சென்று சுகப்படுத்துகிறான். அப்போதுதான் பெர்சியாவிலுள்ள  இபின்  சினா (பென் கிங்ஸ்லி) வைப்பற்றியும் அவருடைய மருத்துவப் பல்கலைக் கழகத்தையும் பற்றி கேள்விப்படுகிறான்.

அங்கு யூதர்களும் முஸ்லிம்களும் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்பதால் ராபர்ட் தனக்குத்தானே சுன்னத் செய்து கொண்டு யூத வேடத்தில் உலகத்தின் மறுகோடியில் உள்ள 'ஷா' மன்னன் அரசாளும் பெர்சியாவுக்குச் செல்கிறான்.
யூதரை ஆதரிக்கும் இபின் சினாவுக்கு பெர்ஷியாவில் உள்ளூர் முஸ்லீம்களிடம் பெரும் எதிர்ப்பு இருந்தது. எனவே நாடோடித்துருக்கிய மன்னனிடம் அந்த முஸ்லீம் இமாம், பெர்ஷியாவைக் கைப்பற்றச் சொல்கிறான்.
ராபர்ட் கோல் இபின் சினாவிடம் சென்றானா, மருத்துவம் படித்தானா? அவன் யூதனல்ல கிறித்தவன் என்பது வெளிப்பட்டதா? பெர்ஷியாவின் ஷாவுக்கும் செல்ஜிய துருக்கிய நாடோடி மன்னனுக்கும் நடந்த போர் என்னவாயிற்று? இபின் சினா என்னவானார்? என்பதையெல்லாம் முழுப்படத்தையும்  பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
இயக்கம்:

இது ஜெர்மன் தயாரிப்பில் வந்த ஆங்கிலப்படம். ஜெர்மன் மொழியில் டப்பிங் செய்யப்பட்டதா அல்லது சப்டைடில் போடப்பட்டதா அல்லது இருமொழித் தயாரிப்பா என்று தெரியவில்லை. படத்தை இயக்கியவர் ஃபிலிப் ஸ்டோல் (Philip Stolzl) மிகத்திறமையாக இயக்கிய பிரமாண்டப்படம். தயாரித்தவர்கள் உல்ஃப் பார் (Wolf Baur) மற்றும் நிகோ ஹோஃப்மன் (Nico Hofmann). யுனிவர்சல் பிக்சர்ஸ் விநியோகம் செய்த இந்தப்படம் 2013 டிசம்பர் 25, கிறிஸ்மஸ் தினத்தில் வெளியிடப்பட்டது.
150 நிமிடங்கள் ஓடும் இந்தப் படம் 32 மில்லியன் யு.எஸ் டாலர் செலவில் தயாரிக்கப்பட்டு சுமார் 58 மில்லியன் ஈட்டியது.
நடிப்பு:
Tom Payne
ராபர்ட் கோலாக நடித்தவர் டாம் பய்ன் (Tom Payne), இபின் சினாவாக நடித்தவர் பென் கிங்ஸ்லி, ஷாவாக நடித்தவர் ஒலிவியர் மார்ட்டினஸ் (Olivier Martinaz). இவர்கள் நடிப்பு சிறப்பாக அமைவதற்குக் காரணம் இவர்கள் யாரும் நடிப்பதில்லை என்பதால்தான், குறிப்பாக பென் கிங்ஸ்லியைப் பார்க்கும்போது, பென் கிங்ஸ்லியும் தெரியவில்லை காந்தியும் தெரியவில்லை, இபின் சினாதான் தெரிந்தார். 
Olivier Martinaz
நமது தமிழ்ப் படங்களில் நமக்கு எப்போதும் இப்படித் தெரிவதில்லை. எவ்வளவு மேக்கப் போட்டு மாற்றினாலும் கேரக்டர் தெரிவதில்லை. ரஜினியும், கமலும், விஜயும், அஜித்தும் தான் தெரிகின்றனர். அது அவர்களின் தவறா அல்லது ரசிகர்களின் பார்வையில் தவறா   என்றும் தெரியவில்லை.  
விருதுகள்:
ஜெர்மன் தியேட்டர்களில் வெளியிட்டவுடன் உடனடியாக பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட்டாகி, தயாரிப்பாளர்களுக்கு போகி (Bogey Award) விருது கிடைத்தது. அதாவது வெளியிட்ட முதல் வாரத்தில் எல்லாத் தியேட்டர்களிளும் 1000 பேருக்கும் மேல் பார்த்தனர். 10 நாட்களுக்குள் 1மில்லியன் மக்கள் பார்த்தனர். ஜெர்மனின் TV-யிலும் இரண்டு பகுதிகள் கொண்ட மினி சீரிஸ்-ஆக இது வெளியிடப்பட்டது.


வரலாற்று ஆர்வலர்கள், பீரியட் படங்கள் விரும்புவர்கள் மற்றும் பென் கிங்ஸ்லி ரசிகர்கள் இப்படத்தை பார்த்து மகிழலாம்.

Tuesday, August 25, 2015

வசந்த முல்லை போலே வந்து !!!!!!!!!!!!!!!!!!!


'டேய் முருகா அழுவாதரா' என்று நான் சொல்லி எவ்வளவு தேத்தியும் முருகன் அழுவறத நிறுத்தல. தேம்பி தேம்பி விசும்பி விசும்பி ரொம்ப அழுதுட்டான். பக்கத்துல இருந்த மகேந்திரனும் சொல்லிப் பார்த்தான். ம்ஹீம் முருகன் அழுவறத நிறுத்தவேயில்லை.
ஆனா அவன் பக்கமிருந்து யோசிச்சா, அவன் அழுவறதுல ஒரு நியாயம் இருக்குன்னுதான் சொல்வேன். தன் சொந்த அப்பா வேற ஒரு பெண்ணைக் கட்டிப்பிடிச்சா எந்த மகனுக்குத்தான் கோபம் வராது ?. சின்ன வயசுப் பசங்களான எங்களுக்கு கோபம் வந்தா அழறதத்தவிர வேறென்ன செய்ய முடியும். கொஞ்சம் இருங்க என்ன நடந்ததுன்னு சொல்றேன். முப்பது வருஷம் முன்னால நடந்ததுன்னாலும்,இப்ப நினைச்சாலும் அப்படியே ஞாபகத்தில் இருக்குது.

எங்கூர் தேவதானப்பட்டி, கிருஷ்ணஜெயந்தி திருவிழாவுக்கு களை கட்டியிருந்துச்சு. ஏழு நாளுக்கு முன்னால பந்தல் கால் நட்டதிலிருந்து நாங்க அதுக்கு ரெடியாக ஆரம்பிச்சுடுவோம். எங்க பள்ளிக்கூடத்துக்கு  அந்த திருவிழா நடக்குற மூணு நாள் லீவு விட்டுருவாங்க. சனி ஞாயிறு சேர்த்து மொத்தம் அஞ்சு நாள் லீவு வந்துரும். மத்த பள்ளிக்கூடம்லாம் லீவு கிடையாது. எங்களுக்கு மட்டும்தான் லீவு. ஏன்னா எங்க பள்ளிக்கூட முகப்புதான் கோவில் ஆயிரும். கிருஷ்ணருக்கு தனியா கோவில் எதுவுமில்லை. எங்க இந்து நடுநிலைப்பள்ளி, போடி ஜமீந்தார்  மாளிகையிலதான் நடந்து வந்துச்சு. போடி ஜமீந்தார் மாளிகை, எங்க ஊர் பிள்ளைமார் சங்கப் பொறுப்பில இருந்துச்சு. ஒவ்வொரு வருஷமும் பிள்ளைமார் சங்கம்தான் கிருஷ்ணஜெயந்தி விழாவை நடத்துவாங்க.

பள்ளிக்கூட முன்னாடி உள்ள மைதானத்துல முழுசா பந்தல் போட்டு ஒரு திடீர் கோவில் உருவாகும். பள்ளிக்கூடம் உள்ளே இருக்கிற ஒரு இருட்டு ரூம்ல ஒரு பெரிய தகர டிரம்மில் நிறைய எண்ணெயை ஊத்தி, அதுக்குள்ள கிருஷ்ணரோட ஐம்பொன் விக்கிரகத்தை வச்சிருப்பாங்க. முன்னாடி கோவில் மண்டபம் ரெடியானவுடன், நல்ல நேரம் பார்த்து விக்கிரகத்தை எடுத்து நகையலங்காரம் செஞ்சு, பிரதிஸ்டை பண்ணவாங்க கிருஷ்ணன் அலங்காரத்தில் கொள்ளை அழகா இருப்பாரு. அவரு உதட்டோரத்துல ஒரு சின்ன குறும்புப் புன்னகை இருக்கும் பாருங்க அதை எப்படித்தான் வடித்தார்களோன்னு பிரமிப்பா இருக்கும்.
முத நாள் திருவிழாவில தன்னோட மயில் வாகனத்துல உலா வருவாரு. 2வது நாளும் அப்படியே. மூனாவது நாள் டெய்லர் சங்கம் ஜோடிக்கும் பூப்பல்லக்கில் வருவாரு. இதுல அதிசயம் என்னன்னா இந்த டெய்லர் சங்கத்தில நிறைய முஸ்லீம் சகோதரர்களும் இருந்தாங்க. அவங்கள்லாம் வந்து உதிரி செவ்வந்திப் பூவை கிழங்கு மாவில் பசை கிண்டி பல்லக்கு முழுசும் ஒட்டுவாங்க. வெளியே வரும்போது ராத்திரி பெட்ரோமாக்ஸ் வெளிச்சத்தில தங்கப்பல்லக்கு மாறி ஜொலிக்கும். அதைக்கா கண்கோடி வேணும். கிருஷ்ணருக்கு மூலவரும் உற்சவரும் ஒரே விக்ரகம்தான்.  

NVS  பட்டணம்பொடி கடைக்காரரும் TAS ரத்தினம் பட்டணம்பொடி கடைக்காரரும் போட்டி போட்டுக் கொண்டு அலங்காரம் செய்வாங்க. ரெண்டுபேரும் பிள்ளைமார் சமூகம்தான். அதுல திருவிழாவுக்கு ரெண்டு நாள் முன்னால TAS கடைக்காரர் ஒரு பெரிய பொம்மையைக் கொண்டுவந்துருவாரு. ஒரு பெரிய உரலில் பொடியை அரைப்பது போன்ற பெரிய மீசை வச்ச பொம்மை. இதில அதிசயம் என்னன்னா, பொம்மை மின்சாரத்துல இயங்கும். தலையை ஆட்டும், கண்களை உருட்டும் கைகளால் உலக்கையை வைத்து ஆட்டும். அந்தக் காலத்தில அது எங்களுக்கெல்லாம் பெரிய அதிசயமாயிருக்கும்.
மண்டபம் மட்டுமில்லாம, தெருவெல்லாம் கொட்டகை போட்டு குழல்விளக்கு சீரியல் செட் போட்டு சூப்பரா இருக்கும். காலைல 6 மணியிலிருந்து ராத்திரி 11 வரை குழாய்கள் மூலை மூலைக்கு கட்டப்பட்டு பாட்டுகள் அதிரடியாக இருக்கும். சாஸ்திரத்துக்கு ரெண்டு மூணு சாமி பாட்டு போட்டுட்டு அப்புறம் முச்சூடும் சினிமாப் பாட்டுத்தான்.
2ஆவது நாள் திருவிழாவில நாடகம் நடக்கும். 3ஆவது நாள் வழுக்கு மரம் உரியடியோட திருவிழா முடிஞ்சிடும். ஆரம்பத்துல மதுரையிலிருந்து நாடகக்கம்பெனிகள் வந்து வள்ளிதிருமணம் போன்ற நாடகங்கள் நடக்கும். பள்ளிக்கூடத்து முன்னால ஒரு பெரிய பள்ளம் தோண்டி அந்த மண்ணை வச்சே பெரிய மேடை போட்டுருவாங்க.
எங்க பள்ளிக்கூடத்துல எங்க தமிழ் வாத்தியார் பேரு புலவர் தேவகுரு. எனக்கு தமிழ்ல நல்ல ஆர்வம் வந்ததுக்கு அவர் ஒரு முக்கிய காரணம். 'மானங்காத்த மன்னர்கள்னு' அவர் எழுதிய புத்தகம் ஒண்ணு ரொம்ப சூப்பரா இருக்கும். ஓரங்க நாடகங்களின் தொகுப்பு.
அதுக்கப்புறம் பிள்ளைமார் சங்கத்திலிருந்து ஒரு ஐடியா பண்ணி, தேவகுரு ஐயாட்ட சொன்னாங்க, நீங்களே நாடகம் எழுதினா என்னன்னு?. அப்புறம் வருஷாவருஷம் அவர்தான் சமூக நாடகங்கள் எழுதுவாரு. ஊரில நடிப்பு ஆசையோட  இருந்த நிறையபேர் அதுல நடிப்பாங்க. பெண் கதாபாத்திரங்களை மட்டும் மதுரையிலிருந்து வரவழைப்பாங்க. ஒரு மாச முன்னால பயிற்சி ஆரம்பிச்சுரும். ஆனா கதாநாயகி மற்றும் சில பெண் கதாபாத்திரங்கள் மட்டும் ஒரு நாள் முன்னாடி வந்து பயிற்சி பண்ணிட்டு திறமையா நடிப்பாங்க. நாடகத்து சீன் செட்டிங்குகள், லைட்டுகள் இசைக்கருவி வாசிப்பவங்க எல்லாம் ஒரு நாள் முன்னாடி வந்து ஸ்கூல்ல தங்கி பயிற்சி செய்வாங்க. நாங்கெல்லாம் வாத்தியார் புள்ளைங்கனால எப்படியாவது உள்ளே போயிருவோம் . கதாநாயகிகளைப்பாக்க ஜன்னல் பூரா மூஞ்சியாய் தெரியும்.
நாடம் ராத்திரி 10 மணிக்கு ஆரம்பிச்சுச்சு.
முதல்ல கோமாளி வந்து பாட்டுப் பாடுனான்.  

வாங்க இருங்க உட்காருங்க
வந்த காலில நிக்காதீங்க
வம்பு வழக்கு பேசாதீங்க - இப்படிப்போகும் அந்தப் பாடல்.
 நானு, மகேந்திரன், முருகன், சிராஜ்னு எங்க கூட்டாளிக எல்லாரும் முன்னாடி உட்கார்ந்திருந்தோம். அப்புறம் கதாநாயகி அறிமுகத்தில "சிட்டுக்குருவிக்கென்ன கட்டுப்பாடு, தென்றலே உனக்கென்ன சொந்த வீடு" - அப்படின்னு பாட்டுக்கு வாயசைச்சு ஆடிக்கிட்டு வந்த கதாநாயகி ஒல்லியா சிவப்பா ரொம்ப அழகா இருந்துச்சு. பாட்டும் இசையும் நடனமும் சூப்பர்.
அதுல கதாநாயகன் யாருன்னா நம்ம இந்திரன் வாத்தியார்தான். மேக்கப் போட்டு மேடையில வந்தாரு அடையாளமே தெரியல, சும்மா கைதட்டும் விசிலும் பறந்துச்சு. முருகனோட அப்பாதான் அவர். இந்திரன் வாத்தியார் எங்க ஸ்கூல்ல ரொம்ப ஃபேமசு. சிவப்பா, உயரமா பார்க்க ஒரு ஹீரோ மாதிரி இருப்பார். அவர்தான் எங்க ஸ்கூலுக்கு ஸ்கவுட் மாஸ்டர் வேற. அந்த யூனிஃபார்ம்  போட்டு அவர் டிரில் பண்ணும் போது கண்கொள்ளாக் காட்சியா இருக்கும்.
முருகனுக்கு ஒரே சிரிப்பு சிரிப்பா வந்துச்சு. அவனுக்கு பெருமை தாங்கல. அப்புறம் கதை சுவாரஸ்யமா போச்சு. கதாநாயகனுக்கும் கதாநாயகிக்கும் முதலில் வழக்கம் போல் சண்டை வந்து அப்புறம் காதல் வந்துச்சு.  இந்திர வாத்தியார் உள்ளே வந்து கதாநாயகியைக் கையைப்பிடித்து இழுக்க, கதாநாயகி வெட்கப்பட பாட்டு ஆரம்பிச்சுச்சு. "வசந்த முல்லை போலே வந்து அசைந்து ஆடும் வெண்புறாவே, மாயமெல்லாம் நான் அறிவேனே, வா வா ஓடிவா", இருவரும் ஓடிப்பிடித்து பாடி ஆட, முருகன் லைட்டாய் அழ ஆரம்பித்தான். எங்களுக்கும் கொஞ்சம் திக்குன்னு இருந்துச்சு. வேகம் கூட கூட, ஒரு கட்டத்துல ந்திர வாத்தியார் கதாநாயகியை அலேக்கா தூக்கிவிட, எங்க முருகனுக்கும் வேகம் கூடி ஓன்னு அழுதான். எங்களுக்கு என்ன செய்யறதுன்னே தெரியல, சார் உங்க மகன் அழுறான்னு இந்திரன் சாரைக் கூப்பிடலாம்னு ஆயிருச்சு. அப்புறம் அவனைக் கொண்டுபோய் வீட்டுல விட்டுட்டு நாங்களும் வீட்டுக்குப் போனோம். ஏன்னா   எங்களுக்கும் ரொம்ப கோபம் வந்துரிச்சு. வாத்தியார் அப்படி செஞ்சது தப்புன்னு நினைச்சோம்.

 அதெல்லாம் வெறும் நடிப்புனு அப்ப எங்களுக்குத் தெரியாத வயசு. இப்ப நினைச்சா சிரிப்புதான் வருது . ஆனா இந்திரன் வாத்தியார் மட்டும் சினிமாவில் நடிக்க வந்திருந்தார்னா எல்லாரையும் தூக்கி சாப்பிட்டுருப்பாரு.

முற்றும்

Monday, August 17, 2015

பொண்ணு முன்னால அழுதா அசிங்கம்!!!!!!!!!!!!

தோள் போராட்டமும் ஆள் மாறாட்டமும்  பகுதி 3

இதன்  முதல் பகுதியை படிக்க இங்கே சுட்டவும்
இதன்  2-ஆம்  பகுதியை படிக்க இங்கே சுட்டவும்

“இந்த சைக்கிள் அமெரிக்க வாழ்க்கைத் தத்துவத்தை விளக்குது
     “அமெரிக்கத்தத்துவமா? அது என்ன?”
எவ்வளவுதான் முயன்று முயன்று பார்த்தாலும், அதே இடத்தில் தான் இருக்கிறேன். வாழ்க்கையில் சேமிப்பு என்பது  சுத்தமாக இல்லை”.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@Rod பயிற்சி செய்யும் போது,
“என்ன அதற்குள் முடிச்சாச்சா?”
“ஆம் பத்து எண்ணம் கொண்ட 5 செட்டும் முடித்துவிட்டேன்”.
 “சீட்டிங் செய்வது போல் தெரிகிறதே”.
பெண்கள்தான் ஆண்களை ஏமாற்றுவார்கள். ஆண்கள் பெண்களை ஏமாற்றுவதில்லை”.
“அப்படியா?”
ஆம் எங்கள் தமிழ் நாட்டில் ஏமாந்துபோன ஆண்கள்தான் அதிகம்”.
நீயும் அப்படித்தானா ?
“சேச்சே , நான் ஏமாற மாட்டேன் ( அய்யய்யோ எப்படி இவளுக்கு   தெரியும் ? ஒரு வேளை மூஞ்சி காட்டிக்கொடுக்குதோ ?)

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

உடற்பயிற்சி அறையில் இருந்த ஒரு படத்தில் ஆணின் படத்தில் பலவித நரம்பு மண்டலங்களைக் குறித்து  விளக்கியிருந்தது. அதனைப் பார்த்துவிட்டுச் சொன்னேன். "எனக்குத் தெரிந்து பெண்களுக்குத்தான் 'Nerves' அதிகம். ஏன் இங்கே ஆண்கள் படமாகவே இருக்கிறது?”. கிம் ஒரு முறை முறைத்தாள்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

ஒரு முறை தெரப்பியின்   போது:
“அம்மா கிம் போதும் நிறுத்து ரொம்ப வலிக்குது, ஒரு பொண்ணு முன்னால நான் அழுதா அசிங்கமா இருக்கும்”.
“அது என்ன நீ எப்பவும் பொண்னு ஆணன்னு பிரிச்சே பேசற. யாருக்கு வலித்தாலும் அழுதால் என்ன தப்பு”.
“சரிம்மா அதுக்காக ரொம்பப்போட்டு முறுக்காத, நான் புதன்கிழமை அழமாட்டேன்”, என்று சொன்ன போது சிரித்துவிட்டாள்.  

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

எனக்கு கிடைத்த அறையில் AC தரையை ஒட்டி இருக்கும். மற்றொரு அறையில் கூரையை ஒட்டி இருக்கும் ஒரு சமயம் ,பயிற்சி செய்யும்போது AC உதவாமல் வேர்த்துக் கொட்டியது. அப்போது உள்ளே வந்த கிம்மிடம், "ஏம்மா AC ஆட்களுக்கு போடமாட்டீங்களா? 'ரூஃபுக்கு போடுறீங்க இல்லை தரைக்கு போடுறீங்க' என்றேன்.  

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

ஒரு முறை கைக்கு உறை போடாமல் வந்து மொபிலைசேஷன் பண்ணாள். கை ஜில்லிட்டு இருந்தது.
“என்ன கை ஜில்லுனு இருக்கு”.
“சாரி”
 "ஒரு வேளை உள்ளே இருப்பது கோல்ட் பிளட்டா”.
“கோல்ட் பிளட்டா?”
ஆமா பின்ன இந்த முறுக்கு முறுக்கிறயே”.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

இன்னொரு முறை வலியால் துடித்துக் கொண்டே சொன்னேன்,
“ நீ ஒரு painkiller என்று நினைத்தேன் ஆனால் நீ ஒரு Pain giver.அதோடு நீ ஒரு சேடிஸ்ட்”.
“ சேடிஸ்டா எப்படி?” .
“நான் ஒவ்வொரு முறை தேங்க்ஸ் சொல்லும்போதும்,  Its my pleasure -னு சொல்றயே. என்னோட pain தான் உனக்கு Pleasure, எங்க கடைவாயைக் காட்டு?”
“எதற்கு?”
ஏதாவது ​​​​​​​வேம்ப்பயர் பல் தெரியுதான்னு பார்க்கத்தான்”.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

பயிற்சிக்கு முன் சொன்னேன்.
 "இடது கையில் எக்சர்சைஸ்  செய்து செய்து போரடித்துவிட்டது, இன்றைக்கு வலதுகையில் செய்யவா?.
(ஏதோ ஞாபகத்தில்)  “சரி ஓகே” 
“என்னது வலது கையிலா”,  சிரித்துக் கொண்டே அடிக்க வந்துவிட்டாள்  ஏனென்றால் இடது கையில்தான் எனக்கு சர்ஜரி நடந்தது, அந்தக் கைக்குத்தான் தெரப்பி தேவைப்படுகிறது.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

“ஏன் என்னை ரொம்ப டார்ச்சர் பண்றன்னு கண்டுபிடிச்சிட்டேன்”
“ ஏன்?”
உன்னோட ஐரோப்பிய ரத்தம்தான், என்னைப் போல அப்பாவிகளை டார்ச்சர் பண்ணத்தூண்டுது. உனக்குள்ளே இன்னும் ரேசிசம் இருக்குன்னு நினைக்கிறேன்”.
அவள் ஆச்சரியமாய்ப் பார்த்தாள்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

பந்தில் ஒரு பயிற்சி உண்டு. சுவற்றில் வைத்து, உள்ளங்கையால் மேலும் கீழும் பின்னர் பக்கவாட்டில் இருபுறமும், அதன்பின் வட்டமாக. அதனைச் சொல்லிக் கொடுத்துவிட்டு சென்றுவிட்டாள். நான் செய்ய ஆரம்பித்தேன். திரும்ப ஒரு ஐந்து நிமிடம் கழித்துவந்து கேட்டாள்.
“ இஸ் எவ்ரிதிங் ஆல்ரைட்?”
 நான் சொன்னேன் பக்கத்தில் உள்ள மிகப்பெரிய இன்னொரு பந்தைப் பார்த்து, “நல்லவேளை நீ இந்தப் பெரிய பந்தை பார்க்கவில்லை”, என்றேன்.
எவ்வளவு முயற்சி செய்தும் இந்த சர்க்கிள் மூவ்மென்ட்ஸ் வரவில்லை, ந்து விழுந்து கொண்டே இருந்தது. பார்த்துக் கொண்டிருந்த அவளிடம் கத்தினேன்.
“கெட் மி சம் கிரேஸி குளு (Crazy Glue)”.
 அவள் சத்தமாகச் சிரித்துவிட்டு, “யு ஆர் கிரேஸி”, என்று சொல்லிவிட்டுப்போய்விட்டாள்.  


@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

கையின் ரேஞ்ச் வருவதற்காக ஒரு பயிற்சி உண்டு. சுவற்றில் ஒரு சிறு மரப்பலகையில் சிறுசிறு படிகளாக வெட்டி வைத்திருப்பார்கள். அதில் இடது கையால் சிறிது சிறிதாக ஏறி முடிந்த அளவுக்கு மேலே செல்ல வேண்டும்.
அதில் பயிற்சி செய்யும்போது வந்து கேட்டாள்,
 "எப்படி போயிட்டிருக்குது”.
 "ஐ ஆம் டூ ஷார்ட்"
 சிரித்துக் கொண்டே “ஏன்?”  
“ஆம் எவ்வளவு முயன்றாலும் மேலே எட்டவில்லை”.
 சிரித்துக் கொண்டே போய்விட்டாள். அடுத்த தடவை வரும்போது எக்கிக் கொண்டிருந்தேன், அவள் பார்த்தவுடன் சொன்னேன்,
 "ஒரு ஸ்டூல் கொண்டு வா உடனே," என்றேன்.
முதுகில் ஒரு அடி கொடுத்துவிட்டுச் சென்றாள்.
மறுநாள் அதே பயிற்சி செய்யும்போது அவள் வருகையில் நான் சொன்னேன்.
 "ஐ ஆம் டூ ஷார்ட் " என்றேன்.
“அந்த ஜோக்கை அன்றே சொல்லிவிட்டாய்”.
“நோ நோ அதில்லை, ஐ ஆம் two  ஷார்ட்”.
புரியவில்லை”.
நான் வலது கையால் பண்ணும் அளவு எண்ணிக்கைக்கு, இடது கையில் 2படிதான் கம்மி என்று விளக்கியதும்
“யு ஆர் டூ ஷார்ட் பட் டூ ஸ்மார்ட்” என்று சொல்லிவிட்டு நகர்ந்துவிட்டாள்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

ஒரு நாள் கையில் மோஷன் ரேஞ்ச்சுக்காக மொபிலைஸ் பண்ணும்போது வலி அதிகமாய்விட்டது. தாங்க முடியவில்லை.
“போதும் போதும்”,  என்று கத்தினேன்.  
“மோஷன் வரவேண்டுமே”
நான் உடனே சொன்னேன். “அதுதான் என் பயமும் மோஷன் வந்துவிடப்போகிறது”, என்று. அவள் வாய் விட்டு சிரித்துக் கொண்டே ஓடியே போய்விட்டாள்.
இன்னொரு முறை சொன்னேன், "மோஷன் முக்கியம்தான் ஆனால் முதலில் என் இம்மோஷனைப் பார் வலி தாங்க முடியல" என்று சொன்னேன்.
சாகர் வருவதற்கு முதல் நாள், அவள் சொன்னாள்.
“ நான் உன் ஜோக்குகளை மிஸ் பண்ணுவேன்”. என்று. அடுத்த நாள் சாகர் வந்து டேக் ஓவர் செய்ய, தற்செயலாய் அந்தப்பக்கம் வந்தவளிடம் சொன்னேன்.
"ஓம் ரீம் கிரீம், ஜிம் ரிம் கிம் (அவள் பெயர்) அப்ரா கடப்ரா".
“என்னாச்சு உனக்கு, மந்திரம் ஓதுற”.
“ இல்லை உன் கிம் மேஜிக் இன்னிக்கு மிஸ் ஆகிறது”. என்றேன்.
அதற்கு அடுத்த வாரம், சாகர் கடைசி நேரத்தில் வரமுடியாமல் போக, கிம்தான் வந்தாள்.
“ஆஹா போனஸ்”
“ உனக்கா?” என்றாள்.
“இல்லை உனக்குத்தான்”
“எதற்கு”
   "இன்னொரு முறை என்னை டார்ச்சர் செய்யலாம்ல".
இப்படி முழு தெரப்பி நாட்களையும் திருவள்ளுவர் சொன்னதை பின்பற்றி முடித்தேன்.
“என்னடா சேகரு கதைவிடுற திருவள்ளுவர் சொன்னதை பின்பற்றினயா ?”
ஆமடா மக்கு மகேந்திரா, இடுக்கண் வருங்கால் நகுகன்னு அவர்தான சொன்னாரு. நான் ஒரு படி மேல போய், மற்றவர்களையும் நகைக்க வச்சேன் “.
“நீ ஒரு சரியான காமடிரா”.
“ஆமடா என்னோட டிராஜடிய காமடியா மாத்திட்டேன்”.

- முற்றும்.

ஓர் அறிவிப்பு :

நண்பர்களே , அலுவலக வேலையாக மெக்ஸிகோவில் உள்ள ஹ்வாடலஹாரா என்ற நகரத்திற்கு நாளை செல்கிறேன்.வரும் ஞாயிரன்றுதான் திரும்பி வருவேன் .எனவே என் அடுத்த பதிவு அடுத்த வாரம்தாம் வரும்..உங்கள் தொடர்ந்த ஆதரவுக்கு நன்றி