Showing posts with label படித்ததில் பிடித்தது. Show all posts
Showing posts with label படித்ததில் பிடித்தது. Show all posts

Thursday, February 4, 2021

இளமை எழுத்தாளர் சுஜாதா

 

படித்ததில் பிடித்தது

ஸ்ரீரங்கம் to சிவாஜி - சுஜாதாவின் கதை.

ரஞ்சன் குமுதம் பு(து)த்தகம் வெளியீடு -விலை: 130.00


 


 

காமிக்ஸ் எனும் படக்கதையில் ஆரம்பித்த என்னுடைய வாசிப்பு வரலாறு , பின்னர் வாண்டுமாமா , ஆலந்தூர் கோ. மோகனரங்கன் , தமிழ்வாணன் என்று தொடர்ந்து இளமை எழுத்தாளர் சுஜாதாவில் நிலைத்தது. அதன்பின் லா.சாரா, சா.கந்தசாமி, சுந்தர ராமசாமி, சாரு நிவேதிதா, ஜெயமோகன் என்று வாசிக்கும் தளம் விரிவடைந்தாலும் சுஜாதாவை என்றும் படிக்கலாம். அதில் கொப்பளிக்கும் இளமையும் புதுமையும் என்றும் எவரையும் கவருபவை. இந்தப் புத்தகத்தை எழுதிய ரஞ்சன் என்ற குமுதத்தின் துணையாசிரியர் சுஜாதாவின் கடைசி காலகட்டங்களில் அவரோடு நெருங்கியிருந்தவர். சுஜாதாவின் வாழ்க்கையைத் தொகுத்து குமுதத்தில் எழுதிய தொடர்தான் புத்தகமாக வெளிவந்திருக்கிறது.  சமீபத்தில் சென்னைக்குச் செல்லும்போது ஒரு பழைய புத்தகக்கடையில் இதனைக் கண்டெடுத்தேன். இது கூட சுஜாதா சொல்லிக் கொடுத்ததுதான். இனி நான் இந்தப்புத்தகம் மூலம் அறிந்து கொண்ட சில சுஜாதாவின் தகவல்களை கீழே தருகிறேன்.

 

1)    சுஜாதா பிறந்தது 1935-ஆம் வருடம் மே 3 ஆம் தேதி பிறந்த இடம் திருவில்லிக்கேணி, அவரது இயற்பெயர் ரங்கராஜன்.

2)    தந்தை பெயர் சீனிவாசராகவன் தாயார் கண்ணம்மாள் ஒரு அண்ணன் ஒரு தம்பி. அப்பா PWD சீஃப் எஞ்சினியர், அண்ணன் Dr.கிருஷ்ணமாச்சாரி தம்பி ராஜகோபாலன் மத்திய அரசின் MTNL சேர்மன்.

3)    இவர் சிறுவயதில் திருவல்லிக்கேணியில் இருந்தபோது தூக்கி வளர்த்தவர் கணித மேதை ராமானுஜரின் மனைவி ஜானகி.

4)    1965ல் குமுதத்தில் இவருடைய 'சசி காத்திருக்கின்றாள்” என்ற சிறுகதை வெளிவந்து பாராட்டுப் பெற்றது. அவருக்கு அனுப்பிய செக் படிவத்தில் அன்றைய குமுதம் ஆசிரியர் எஸ்.ஏ.பி. "அடிக்கடி எழுதுங்கள்"  என்ற வாக்கியம் சுஜாதாவிற்கு பெரும் டானிக்காக அமைந்தது. அதில் ஆரம்பித்த குமுதம் உறவு சுஜாதாவிற்கு கடைசி வரை இருந்தது.

 

5)    ஸ்ரீரங்கத்தில் பாட்டி வீட்டில் வளர்ந்த போது அம்மாவும் பாட்டியும் கதைகளை அறிமுகப்படுத்த, கவிதைகளை அறிமுகப்படுத்தியவர் அண்ணன்.

6)    ழு வயது முதல் கல்லூரி முடிக்கும் வரை ஸ்ரீரங்கத்தில் இரு பாட்டிகள் வீட்டில் வளர்ந்தார்.

7)    அவர்கள் அப்போது நடத்திய தென்றல் என்ற கையெழுத்துப் பிரதியில் எழுதிய 'கள்வர் தலைவன்’ என்ற கதைக்கு படங்கள் வரைந்தவர் பின்னர் கவிஞராய் பிரபலமடைந்த வாலி.

8)    ஒரு முறை திருச்சி ரேடியோவில் பள்ளி மாணவர்களுடன் கலந்து கொண்டு, இவர் பேசியது ஒரே வார்த்தை. அதற்கு பரிசாக ஒரு கதர்த்துண்டு கிடைத்தது. இதுதான் சுஜாதா பள்ளியில் வாங்கிய ஒரே பரிசு.  

9)    சுஜாதாவின் கல்லூரிப்படிப்பு St. ஜோசப் கல்லூரி, திருச்சி. அவருடைய வகுப்புத்தோழர் அப்துல் கலாம். அதன்பின்னர் மேற்படிப்பை MIT யில் படித்த போது அங்கும் கூடப்படித்தவர் அப்துல்கலாம். அங்கு நடந்த அறிவியல் கட்டுரைப் போட்டியில் இருவருமே பங்கு கொள்ள முதல் பரிசைப் பெற்றவர் அப்துல் கலாம்.

10) அந்தக் காலத்துக் கனவுக்கன்னிகளாக, டி.ஆர். ராஜகுமாரி, எம்.வி.ராஜம்மா, அஞ்சலிதேவி, மாதுரி தேவி ஆகியோரைக் குறிப்பிட்டு இதில் முதல்வராக இருந்தவர் வைஜெயந்தி மாலா என்கிறார்.

11) St. ஜோசப் கல்லூரியில் படிக்கும்போது ஆங்கில இலக்கியத்தை அறிமுகம் செய்து விருப்பத்தை வளர்த்தவர் ஜோசப் சின்னப்பர் என்பவர். அப்போதிருந்த பிரின்சி பாலாயிருந்த ஜெர்மனியைச் சேர்ந்த ஃபாதர் எர்ஹார்ட்  ஆங்கிலத் திரைப்படங்களை அறிமுகப்படுத்தினார்.

12) அதன்பின்னர் டெல்லியில் சிலநாள் வேலை செய்து, பெங்களூர் பெல் நிறுவனத்தில் சேர்ந்தார். பெல் நிறுவனப்பள்ளியில் கமிட்டியில் இருந்ததால் தொழிலாளர் மட்டுமே படிக்கும் அந்தப்பள்ளியில் தன்னுடைய பிள்ளைகளையும் சேர்த்தார் அதன் பின் பல அதிகாரிகள் தங்களுடைய பிள்ளைகளையும் அங்கே சேர்த்தார்களாம்.

13) இங்கு வேலை செய்யும் போதுதான் மின்னணு இயந்திரத்தைக் கண்டுபிடித்தார்.

14) 1985ல் டெக்சாஸ் தமிழ்ச்சங்க விழாவுக்கு வந்தபோது சுஜாதாவுக்கு திரு.பால்பாண்டியன் அவர்கள் ஒரு கம்ப்யூட்டரை  பரிசாகக் கொடுத்தார். அதனை உள்ளே கொண்டுவர கஸ்டம்ஸ் அதிகாரி வட்டி கட்டச் சொல்ல, அது கம்யூட்டரின் விலையை விட அதிகமாக இருக்க கம்யூட்டரே எனக்கு வேண்டாம் என்று  கிளம்பியிருக்கிறார். லஞ்சமும் கொடுக்க மனதில்லை. அங்கிருந்த இன்னொரு மேலதிகாரி இவரைப்பற்றிக் கேள்விப்பட்டு டூட்டி இல்லாமலேயே கம்யூட்டரை ரிலீஸ் பண்ணிக்கொடுத்திருக்கிறார். அதில் பாரதி ஃபாண்ட் என்ற தமிழ் ஃபாண்ட்டில் முதலில் எழுதியவர் சுஜாதா.

15) சுஜாதாவின் நிறைவேறாத ஆசை பட்ட மேற்படிப்பும் சினிமா இயக்குநர் ஆவதுமாம்.

16) திரைப்படமாக தயாரிக்கப்பட்ட அவர் கதைகள், காயத்ரி, கரையெல்லாம் செண்பகப்பூ,ப்ரியா, காகிதச் சங்கிலிகள் ஆகியவை.

17) திரையுலகில் அவருக்கு நெருங்கிய நண்பர்கள் கமல், மணிரத்னம், ஷங்கர், ராஜீவ் மேனன், ஆகியோர். இவருள் ராஜீவ் மேனன் மிகவும் நெருக்கம்.

18) 2008 பிப்ரவரி 27ஆம் தேதி தன்னுடைய 73 ஆவது வயதில் மறைந்தார்.

 

இத்தகைய பல தெரியாத தகவல்களை இணைத்து எழுதியுள்ளார் ஆசிரியர் ரஞ்சன். அரிய புகைப்படங்களுடன் அருமையாக தொகுத்த இந்தப்புத்தகம் சுஜாதாவின் ரசிகர்கள் படிக்க வேண்டிய ஒன்று.

- முற்றும்.   

அறிவிப்பு :

காதல் மாதமான பிப்ரவரி மாதத்தில் ,  நியூயார்க் தமிழ்ச்சங்கத்தின் இலக்கியக்குழு வழங்கும் இலக்கிய உலாவில்  வெள்ளியன்று ( பிப்ரவரி 5 ,2021)அன்று நடக்கும்  நிகழ்வின் தகவல்களை கீழே கொடுத்துள்ளேன்.நபர்கள் அனைவரும் வந்து பங்கு கொள்ள அழைக்கிறேன்.

  


Monday, May 11, 2020

மரண தேசம் மெக்ஸிகோ !


படித்ததில் பிடித்தது.
டெக்ஸ் வில்லரின் தீபாவளி ஸ்பெஷல்
மரண தேசம் மெக்ஸிகோ
சன்ஷைன் வைப்ரரி - சிவகாசி.

Lion-Muthu Comics: மாற்றமே - உன் விலை என்ன ?
என்னுடைய சிறுவயது கதா நாயகர்களான, இரும்புக்கை மாயாவி, லாரன்ஸ் & டேவிட், ஜானி - நீரோ வரிசையில் அடுத்து வருபவர் டெக்ஸ் வில்லர். ஏனோ அன்று முதல் இன்று வரை, வேறு எந்தச் சினிமா கதாநாயகர்களும் என்னை அவ்வளவாக ஈர்க்கவில்லை.
வைல்ட்  வெஸ்ட் என்று சொல்லக்கூடிய அமெரிக்காவின் மேற்குப்பகுதியில் வாழ்ந்த செவ்விந்தியர்கள், கெளபாய் ஆகியோர் உலவிய பகுதியின் அடிப்படையில் அந்தக்கால கட்டத்திலேயே வாழ்ந்த விதத்தில் கற்பனையாக அமைக்கப்பட்ட ஒரு கதா நாயகன்தான் டெக்ஸ் வில்லர். நவஜோ (ஆங்கிலத்தில் நவஹோ-Navajo) என்று அழைக்கப்பட்ட செவ்விந்தியர்களின் தலைவரான 'இரவுக்கழுகார்' என்று சொல்லப்படும் திறமை வாய்ந்த டெக்சஸ் ரேஞ்சர்தான் டெக்ஸ் வில்லர். இவரது கூட்டாளி சற்றே வயதான கிட் கார்சன். இவர்களுடைய சாகசங்கள் அன்று தொடங்கி இன்று வரை ஐரோப்பாவின் புகழ்பெற்ற காமிக்ஸ் கதைகள்.
Lion-Muthu Comics: பார்வையின் மறு பக்கம் !
டெக்ஸ் வில்லர்” 
'டெக்ஸ் வில்லர்” என்ற கதாபாத்திரத்தைப் படைத்தவர் இத்தாலியின் 'மிலன் ' நகரில் 1908ல் பிறந்தவரான ஜியோவனி லுயிஜி பானெலி ( Giovanni Luigi Bonelli) என்பவர். 1937ல் காமிக்ஸ் தொடர்களை ஆரம்பித்த இவர் 1948ல் கெளபாய் சார்ந்த காமிக்ஸ் கதைகளை படைக்க எண்ணிய சமயத்தில் உருவானதுதான் டெக்ஸ் வில்லர் பாத்திரம். இவர் 2001ல் இறந்து போனாலும்  இவரைத் தொடர்ந்து வந்த பல எழுத்தாளர் அதன் உயிர்ப்பை இன்றுவரை சுவாரஷ்யமாக வைத்திருக்கிறார்கள். டெக்ஸ் வில்லர் உருவானவுடனே இது மற்ற கதாநாயகர்களை பின்னுக்குத்தள்ளி முதலிடம் பெற்றது.

Westerns...All'Italiana!: Who Are Those Guys? - Gian Luigi Bonelli
Giovanni Luigi Bonelli
பானெலியின் கதைகளுக்கு ஓவியராக அமைந்தவர் 1917ல் பிறந்த அரேலியோ காலெப்பினி. டெக்ஸ் வில்லரின் இதழ் 1 முதல் 400 வரை அனைத்து அட்டைப் படங்களையும் இவர் தான் வரைந்ததாகவும் 1994ல் இவர் மரணமடையும் வரை இவரே டெக்ஸ் வில்லருக்கு ஓவியராக இருந்திருக்கிறார். இன்றும் இத்தாலியில் பானெலி குழுமத்தின் மூலமாக நம்பர் 1 ஆகத் திகழ்ந்து சுமார் 2 லட்சம் பிரதிகள் விற்கின்றன என்று சொல்கிறார் பானெலி நிறுவனத்தின் தற்போதைய உரிமையாளர் டேவிட். இவர் நிறுவனரின் பேரன். இதுதவிர ஃபின்லாந்த், நார்வே, பிரேசில், ஸ்பெயின், துருக்கி, பிரான்ஸ், அமெரிக்கா, ஜெர்மனி, ரஷ்யா, ஹாலந்து ஆகிய பல நாடுகளில் அவரவர் மொழிகளில் இது வெளிப்படுகிறது.  (தகவல்கள் S. விஜயன் -லயன் காமிக்ஸ்)
இந்த வெளிநாட்டுக் கதா நாயகர்களுக்கு தமிழ் வடிவம் கொடுத்து மொழிபெயர்ப்பில் புதுமை படைத்து தமிழகத்தில் வெளியிட்டவர்கள் முத்து காமிக்ஸ், லயன் காமிக்ஸ் குழுமத்தின் தந்தையின் வழியில் வந்த தனயனான விஜயன் அவர்கள். தன்னுடைய தனிப்பட்ட காமிக்ஸ் ஆர்வத்தினால் இந்தக்குழுமத்தை தொடர்ந்து நடத்தி வருகிறார். உலகின் தலை சிறந்த காமிக்ஸ்களை தமிழில் அறிமுகபடுத்தி எங்களையெல்லாம் லண்டனுக்கும் பாரிசுக்கும் நியூயார்க்குக்கும் அழைத்து சென்றது இந்த நிறுவனம்தான். அந்தக் கதைகளில் ஈர்க்கப்பட்டுத்தான் நான் உலகப் பயணம் செய்கிறேன்.  நியூயார்க்கில் வந்து  வாழ்கிறேன். நியூயார்க்கிலிருந்து மதுரை சென்ற போது சிலமுறை முத்து காமிக்ஸ் நிறுவனத்திற்குச் சென்று வந்திருக்கிறேன். ஒரு முறை விஜயனைப் பார்க்கவும் எனக்கு வாய்ப்புக்கிட்டியது .
இந்தத் தீபாவளி மலர் எந்தத் தீபாவளிக்கு வந்தது என்று எனக்கு ஞாபகமில்லை. ஆனால் இப்போதுதான் படிக்க சந்தர்ப்பம் கிடைத்தது. இரண்டு நெடுங்கதைகள் இதில் உள்ளன. ஒன்று மரணதேசம் மெக்சிகோ, இரண்டாவது நீதியின் நிழலில்.

மரணதேசம் மெக்சிகோ :
இந்த டெக்ஸ் வில்லர் கதையை எழுதியவர் கிளாடியோ நிஸ்ஸி 1938ல் அல்ஜீரியாவில் 1981 முதல் பானெலி குழுமத்தில் இணைந்த இவர் 1983 முதல் 225 டெக்ஸ் கதைகளை எழுதியிருக்கிறார். CID ராபினை உருவாக்கியவரும் இவரே.  (தகவல் S .விஜயன் )
Paradesi with Vijayan

இந்தக் கதையின் ஓவியர் மேன்ஃபிரட் சமர். 1933-ல் ஸ்பெயினில் பிறந்த இவர் ஐரோப்பாவின் பல முன்னணி நிறுவனங்களில் பணியாற்றியிருக்கிறார். டெக்ஸ் கதைகளுக்கு இவர் முதன் முதலில் வரைந்தது இந்தக் கதைக்குத்தான்.  
மெக்சிகோ பார்டரில் கடத்தப்பட்ட குழந்தைகளை டெக்ஸ் வில்லரும் கிட் கார்சனும் எப்படிக் கண்டுபிடித்து மீட்கின்றனர் என்பதுதான் கதை. கடினமான குதிரைப் பயணம், சாவின் விளிம்பில் எப்போதும் இருப்பது, திட்டமிட்ட சாகசங்கள், மிகப்பெரிய கொடூரமான நிறுவனத்தை இருவராய் நின்று  வீழ்த்துவது என்று பரபரப்புக்கு பஞ்சமில்லாத கதை. ஆரம்ப முதல் இறுதிவரை விறுவிறுப்பு சற்றுக்கூட குறையவில்லை.
நீதியின் நிழலில்:
இதனை எழுதியவர் டி.ஆன்டோனியோ வரைந்தவர் ஃபிவிப்புச்சி. தான் சின்னவயதில் இருக்கும்போது தங்கள் கிராமத்தில் நுழைந்த அமெரிக்கப்படை தங்கள் அன்னை, தம்பி உட்பட  மொத்த கிராமத்தினரையும் கொன்று குவித்து விடுகிறார்கள். அந்த முழு தாக்குதலையும் வழிநடத்தியவன் லாபார்ஜ் என்ற ஸ்கெனட் ஒருவன். இவன் நாய்களைப் பழக்கி மனிதர்களை குறிப்பாக செவ்விந்தியர்களை வேட்டையாடுபவன். அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பிய ஒரு செவ்விந்தியன் தான் வளர்ந்த பிறகும் தன் கிராமத்தலைவன் இட்ட கட்டளையை நிறைவேற்றி தேடியலைந்து  தன் நண்பனுடன் லாபார்ஜைக் கொல்ல விளைகிறான். அவன் கண்டுபிடித்தானா? பழி வாங்கினானா, இதில் வில்லர் எங்கே வருகிறார்? அடிபட்ட கார்சன் உயிர்பிழைப்பாரா? என்று சென்றும் கெளபாய் திரில்லர் இது.
வாங்கித்தான் படித்துப் பாருங்களேன். காமிக்ஸ் பிரியர்களுக்கு இது களிப்பான விருந்து. மற்றவர்கள் ஒருமுறை படித்தால்  டெக்ஸ் வில்லருக்கு வாசகராய் விடுவீர்கள்.
பானெலி குழுமம் வாழ்க, முத்து / லயன் காமிக்ஸ் குழுமம் வாழ்க, உங்கள் பணி தொடரட்டும், சிறக்கட்டும்.
-முற்றும்.
 


Tuesday, December 17, 2019

ராஜீவ் படுகொலை - சிவராசன் டாப் சீக்ரட்


ராஜீவ் படுகொலை - சிவராசன் டாப் சீக்ரட்
படித்ததில் பிடித்தது
சிறைவாசி இரா. பொ. இரவிச்சந்திரன்.
தொகுப்பாசிரியர்: பா. ஏகலைவன்.
ஜனவரி 2018 யாழ் பதிப்பகம் - சென்னை விலை: 500.00 ரூபாய்.

      உலகத்தில் நடந்த பல படுகொலைகளுக்கான உண்மைக் காரணங்களும், உண்மைக் குற்றவாளிகளும் இன்னும் மர்மமாகவே இருக்கின்றன. மகாத்மா காந்தியடிகள், ஜான். F. கென்னடி போன்ற சில கொலைகள் ஞாபகம் வந்தாலும், நம் மண்ணிலே நடந்த ராஜீவ் காந்தி படுகொலையை நினைத்து வருந்திய தமிழர்கள் என்னையும் சேர்த்து ஏராளமானவர். குற்றம் சாட்டப்பட்டு தண்டனை பெற்ற ஏழுபேர் கடந்த 28 ஆண்டுகளாக இன்னும் சிறைவாசம் அனுபவிக்கிறார்கள். அவர்களில் ஒருவரான தமிழகத்தைச் சேர்ந்த இரவிச்சந்திரன் எழுதிய புத்தகம்தான் இது.

பழ. நெடுமாறன் முன்னுரை எழுத, தொல் திருமாவளவன், நீதியரசர் து அரிபரந்தாமன், சீமான், திருச்சி வேலுச்சாமி, KS. ராதா கிருஷ்ணன், தியாகு,  புகழேந்தி, தங்கராஜ், சுப. உதய குமரான், தனியரசு, தமிமுன் அன்சாரி மற்றும் ஜி.தியாகராஜன் ஆகியோர் அணிந்துரை வழங்கியிருக்கிறார்கள். இவ்வளவு பேர் அணிந்துரை எழுதிய புத்தகம் எனக்குத் தெரிந்து இதுதான் முதல் முறை. இனி நான் படித்து, அயர்ந்து போன, ஆச்சரியப்பட்ட, திகிலடைந்த, சினமுற்ற, சந்தேகப்பட்ட, துயரமடைந்த விடயங்களை வழக்கம்போல் கீழ் வரும் புல்லட் பாயிண்ட்டுகளில் (அய்யய்யோ இங்கேயும் புல்லட்டா?) தருகிறேன்.

1)   பழ. நெடுமாறன் எழுதிய முன்னுரையில் குற்றம் சாட்டப்பட்ட 26 பேர்களில் 13 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். 13 பேர் இலங்கைத் தமிழர் என்ற சரிசமமான கணக்கிலேயே உள்நோக்கம் இருப்பதை சுட்டிக் காட்டுகிறார்.
2)   இரவிச்சந்திரன் தமிழகத்தில் அருப்புக் கோட்டையைச் சேர்ந்தவர். 10 ஆம் வகுப்பு படித்த பின் விடுதலைப்புலிகளின் போராட்டத்தில் ஆர்வம் கொண்டு இலங்கை சென்று இயக்கத்தில் சேர்ந்தவர்.
3)   அதன்பின் திரும்ப தமிழகம் வந்து "தமிழ் தேசிய மீட்பு முன்னணி" என்ற அரசியல் அமைப்பை உருவாக்கினார்.
4)   குற்றம் சுமத்தப்பட்ட 26 தமிழர்களும் அரசியல் சதுரங்கத்தில் பலியிடப்பட்ட வெட்டுக்காய்கள் என்று குறிப்பிடுகிறார்.
5)   நக்கீரன், ஜுவி, தராசு, நெற்றிக்கண், இந்தியா டுடே, சண்டே,
ஃபிரன்ட்லைன், வீக், இல்லஸ்ட்டிரேட் வீக்லி, ஆகியவை CBI விசாரணையைக் கேள்விக்குள்ளாக்கின. கேள்விகளை எழுப்பிய இராஜீந்தர் குமார் ஜெயின் என்ற பத்திரிக்கையாளர் கொல்லப்பட்டார்.
6)   கார்த்திகேயன் உண்மைகளை மறைத்து குற்றவாளிகளைத்தப்பவிட்டார்.
7)   சிவராசன் பொட்டம்மனுக்கு அனுப்பிய வயர்லஸ் செய்தி, சிவராசன், தணு மற்றும் சுபா தவிர வேறு யாருக்கும் தெரியாது.
8)   புலிகள் இயக்கத்தில் சேர விரும்பிய ரவிச்சந்திரன் மண்டபம் வந்து, இலங்கைத் தமிழன் சிவபாலனின் நட்பைப் பெற்று அவரின் உதவியுடன் PLOT அமைப்பின் படகில் ஏறி மன்னார் வளைகுடா செல்கிறார்.
9)   அங்கிருந்து பாவற்குளம், வவலியாவின் புறநகர் வழியாக யாழ்குடா சென்று சேர்கிறார்.
10)               அந்தச்சமயத்தில் பிளாட் இயக்கத்தில் 10000 பேரும் ஈரோஸ் மற்றும் TELO-ல் தலா 1000 பேரும் இருந்தனர்.
11)               எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் தங்களுடைய அதிரடி நடவடிக்கைகளால் புலிகள் இயக்கம் மக்களிடம் மரியாதையும் மதிப்பும் பெறத்துவங்கியிருந்தது.
12)               விடுதலைப்புலிகள் முகாம் சென்றடைந்தும் சுமார் 1 1/2 மாதம் வெறும் நேர்காணலே நீடித்தது. அதன் பின்னர் யாழ்குடாவில் ஆரம்பித்த பயிற்சியின் தலைவராக பாரதி மாஸ்டர் இருந்தார். அவர் கீழ் 200 பேர் பயிற்சி பெற்றனர்.
13)               பெரும் வெற்றிகளைக்குறித்து, இலங்கையையும் ஆண்ட, இராசேந்திர சோழரின் புலிச்சின்னம், விடுதலைப்புலிகளின் சின்னமானது. மேலும் புலி போன்று வேகம், விசை, பாய்ச்சல், உறுதி, உருமறைவு, இலக்கு மற்றும் மூர்க்கம், ஆகியவற்றுக்கு பயிற்சியளிக்கப்பட்டது.
14)               யாழ் குடா நாடு என்பது, வலிகாமம், தென்மராட்சிப் பிரதேசம் என்ற சாவகச்சேரி, வடமராட்சிப் பிரதேசம் சார்ந்த வல் வெட்டித்துறை பகுதியில் புலிகள் கேலோச்சினர் இதில் வல்வெட்டித்துரை பிரபாகரன் சொந்த ஊர்.
15)               ரவிச்சந்திரனின் முதல் சமரில் RPG ஒன்றை மீட்டு வந்ததை நினைவு கூறுகிறார்.
16)               1989ல் வந்த .பி.கே.எல்.எஃப்  ஆகஸ்ட் 2,3,4 வல்வெட்டித்துறையில் நடத்திய தாக்குதலில், 63பேர் கொல்லப்பட்டனர், 2000பேர் படுகாயம், 150 வீடுகள் எரிந்து போயின, பல பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டனர்.
17)               தான் பெற்ற புலிப்படைப் பயிற்சியை முழுவதுமாக விளக்குகிறார் ரவி. பொலிகண்டி என்ற கடற்கரை கிராமத்தில் இருந்த இரண்டாவது பட்டாலியன் தலைமைப்பயிற்சிக்கு பொறுப்பேற்றிருந்த செல்வராஜ் மாஸ்டர் தளபதி சூசை (கடற்படைத்தளபதி கர்னல் சூசை) பாரதி மாஸ்டர் ஆகியோரைப் பற்றிச் சொல்லுகிறார்.
18)               ஜ.பி.கே. எல். எஃப்  -ன் படுகொலைத் தாக்குதலுக்குப் பின், தாயகத்தின் ஆதரவைப் பெறுவதற்காக தமிழ்நாடு திரும்பி தனியாக அரசியல் இயக்கம் ஒன்றை ஆரம்பிக்க முயற்சி செய்கிறார்.
அதன்பின் ராஜீவ் காந்தி கொலையின் சந்தேகத்தின் அடிப்படையில் ரவி கைது செய்யப்படுகிறார்.  பின்னர் விடுதலைப்புலிகளுக்கும் ராஜீவ் கொலைக்கும் எந்த சம்பந்தமுமில்லை என்பதற்கு பல வித ஆதாரங்களை அடுக்குகிறார்.
1)   பெல்ட் பாம் ஒரு இந்தியத்தயாரிப்பு.
2)   அமெரிக்காவுக்கும் நேரு குடும்பத்திற்கும் இருந்த பிரச்சனை, இதில் CIA உளவாளியாக சுப்ரமணிய சுவாமியின் செயல்பாடுகள்.
3)   1990 ஈராக் அமெரிக்கப்போரை, சீனா ரஷ்யாவோடு சேர்ந்து ராஜீவ் எதிர்த்ததால் அமெரிக்காவுக்கும், இஸ்ரேலுக்கும் வந்த கோபம்.
4)   அமெரிக்க போர்விமானங்கள் இந்தியாவில் எரிபொருள் நிரப்ப, அப்போதைய பிரதமர் சந்திரசேகர் அனுமதியளிக்க அதனை ராஜீவ் எதிர்த்து ஆட்சியைக் கவிழ்த்தது.
5)   1993ல் நாடாளுமன்றத்தில் SB  சவான். ராஜீவ் கொலையில்  உள்நாட்டு/வெளிநாட்டு சதி இருக்கிறது என்று சொன்னதோடு விடுதலைப்புலிகள் ஓர் அம்புதான் என்றும் CIA  மேல் சந்தேகம் இருப்பதாகவும் சொன்னது.
6)   பிரிட்டனில் இருந்த பஞ்சாப் காலிஸ்தான் தீவிரவாதத் தலைவர் ஜக்ஜித்சிங் செளகான், "ராஜீவ் காந்தியை ஒழித்தால் மட்டுமே காலிஸ்தான் பிரச்சனை தீரும். சந்திராசாமி அதற்கு நிதியுதவி செய்வார்" என்று சொன்னது.
7)   சந்திராசாமிக்கும்  சி.ஐ.எவுக்கும் இருந்த நெருங்கிய தொடர்பு, சிவராசனுக்கு இருந்த இன்டர்நேசனல் வங்கிக் கணக்கு.
8)   கார்த்திகேயன் மூடி மறைத்ததை ஜெயின் கமிஷன் கண்டித்தது.
9)   கொலைக்கு முன் TN சேஷன், திருச்சி வேலுச்சாமி ஆகியோர் எச்சரித்தது.
10)               சுப்பிரமணியசாமி, சந்திரசேகர், சந்திராசாமி, நரசிம்மராவ் போன்ற பார்ப்பனர் வட்டத்தின் கூட்டு.
11)               மத்திய உளவுத்துறை, ராஜீவ் உயிருக்கு ஆபத்து என்று சந்திரசேகர் அரசிடம் சொன்னது.
12)               1995ல் சோனியா உண்மையான சாதியாளர்களை நரசிம்மராவ் பிடிக்க மாட்டார் என்று சொல்லி, கொஞ்சம் கொஞ்சமாக அவரை ஓரங்கட்டியது.
13)               வர்மா கமிஷனில் இருந்த வக்கீல் கோபால் சுப்பிரமணியம் விலகுவது.
14)               சுப்பிரமணியசுவாமியின் 56 மணிநேர தலை மறைவு, ராஜீவ் காந்தி ஆவணங்கள் தொலைந்து போதல்.
15)               டி.ஐ.ஜி. ஸ்ரீகுமார், லண்டன், ஐரோப்பா என்ற சேகரித்த வெளிநாட்டு ஆவணங்கள் லண்டன் ஏர்போர்ட்டில் தொலைந்து போனது .
16)               ரா தலைவர் இது விடுதலைப்புலிகள் செய்ததல்ல என்று சொன்னது.
17)               நரசிம்மராவ், சுப்ரமணியசாமி , சந்திராசாமி, மரகதம் சந்திரசேகர், லதா, பிரியகுமார், வாழப்பாடி ராமமூர்த்தி, மார்கரெட் ஆல்வா, எம்.கே.நாராயணன் ஆகியோரை உள்ளடக்கிய கறுப்பு ரகசியங்கள்.
18)               ராஜீவ் விமானம் 6 மணிக்கு வந்து சேரவேண்டியது, 6 மணிக்குத்தான் விசாக பட்டிணத்தில் கிளம்பியது. தாமதத்தின் காரணம் என்ன? அந்தத்தாமதம் சிவராசனுக்கு எப்படி முன்னரே தெரிந்தது?
19)               மரகதம் சந்திரசேகரின் மகன் லலித் சந்திரசேகர் ஒரு சிங்களப் பெண்ணை மணந்தவர்.
20)               பாதுகாப்புக்குறைபாடுகளை விசாரித்த ஜெயின் கமிஷனுக்கு சிறப்பு புலனாய்வுக்குழு முழு ஒத்துழைப்பைத் தரவில்லை.
21)               1991 முதல் சி.பி.ஐ வர்மாகமிஷன்,ஜெயின்கமிஷன் என்று ஆயிரம் கோடிக்கு மேல் செலவாயிருக்கிறது.
22)               1987ல் ராஜீவ்வைத் தாக்கிக் கொல்ல முயன்ற விஜே முனி ரோகன டி சில்வா என்ற இலங்கை கடற்படை வீரர் மனநிலை சரியில்லாதவர் என்று 1989ல் பிரேமதாசாவால் விடுதலை செய்யப்படுகிறார். அனால் அடுத்த நடந்த தேர்தலில் தென்மண்டல சபை உறுப்பினராகத்  தேர்வு செய்யப்படுகிறார்.
ரவி இவ்வாறு எழுப்பும் சந்தேகங்களைப் படித்தால் தலை சுற்றுவதோடு, குழப்பம் மேலும் அதிகரிக்கிறது. எது எப்படியோ நீண்ட நாள் சிறைத்தண்டனை அனுபவித்துவிட்டு தங்களது தண்டனைக்காலத்திற்கு  மேல் சிறையில் வாடும் இந்த ஏழுபேரும் விடுதலை செய்யப்படுவதுதான் எந்த ஒரு மனிதாபிமானமுள்ள  தமிழரும் நினைப்பது.
முற்றும்

Thursday, August 15, 2019

இத்தாலியை விட அழகான சென்னை ( ஒரு காலத்தில் ! )

இந்திய பயணக் கடிதங்கள்


படித்ததில் பிடித்தது
இந்தியப் பயணக் கடிதங்கள்.
எலிஸா ஃபே, சந்தியா பதிப்பகம்
தமிழில் அக்களூர் ரவி.
இந்திய நாடு ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்டுக் கிடந்தபோது, கிரேட் பிரிட்டன் என்றழைக்கப்பட்ட இங்கிலாந்து நாட்டிலிருந்து, ஆளும் தரப்பின் அதிகாரிகளாகவும், அலுவலர்களாகவும், இராணுவ வீரர்களாகவும், வியாபாரம் செய்பவர்களாவும்  இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு வந்தவர்கள் ஏராளமானவர்கள்.
இங்கிலாந்திலிருந்து மட்டுமல்ல, ஃபிரான்சு, ஜெர்மனி, ஹாலன்ட் போன்ற பல நாட்டவர் நாடு பிடிக்க இங்கு வந்தனர். வணிகம் செய்ய  வந்தவர்களைச் சொன்னால் கணக்கிலிடங்காது.
Eliza Fay
இப்படி உலகின் பல பகுதிகளிலிருப்பவர்களையும் ஈர்த்திழுக்கும் வகையில் செல்வ வளமிகுந்த நாடாக இருந்தது இந்தியத் திருநாடு.
இங்கிலாந்தின் முதல் நுழைவாயிலாக இருந்தது, கல்கத்தா என்பதால் அதிகளவில் அங்கு ஆங்கிலேயர் வரத்துவங்கினர். அதன்பின் சென்னையில் புனித ஜார்ஜ் கோட்டை அமைந்தபின் சென்னை ஆங்கிலேயர் ஆட்சிக்கும் வர்த்தகத்திற்கும்  மையமானது.  
இங்கிலாந்தின் கிழக்கிந்தியக் கம்பெனியின் மையமாக கல்கத்தா விளங்கியபோது அங்கு பிழைப்புத்தேடி வந்த ஒரு வழக்கறிஞர் புதிதாக திருமணமான தன் மனைவியையும் தன்னோடு அழைத்துவந்தார். அந்த மனைவியின் பெயர்தான் எலிஸா ஃ பே (Elissa Fay) விமான வசதிகள் இல்லாத அந்தக் காலத்தில் வெளிநாட்டுப் பயணத்திற்கு ஒரே வழி கப்பற்பயணம் தான்.
எலிஸா ஃபே அவர்கள் இங்கிலாந்திலிருந்து இந்தியா வந்த பயணத்தின் போது ஊரிலிருந்த உறவினர்களுக்கு அவருடைய பயண அனுபவங்களை அப்படியே அவ்வப்போது கடிதங்களாக எழுதினார்.  அந்தக் கடிதங்களில் தன்னுடைய பயணத்தில் நடந்த சுவையான நிகழ்வுகளையும், இக்கட்டுகளையும் பற்றி விரிவாக எழுதியுள்ளார். அதன் தொகுப்புதான் இந்தப்புத்தகம், ஆங்கிலத்தில் எழுதப்பட்ட மூலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்தவர் அக்களூர் ரவி அவர்கள். சில இடங்களில் சில ஆங்கிலப்பதங்களை  (slang) அப்படியே மொழி பெயர்த்திருந்தது பொருந்தவில்லை, ஆனால் பெரும்பாலும் நன்றாகவே மொழிபெயர்த்திருக்கிறார்.
Front Cover

1779ல் லண்டனிலிருந்து கிளம்பி காலே வரை வந்த பயணத்தில் அந்தக் காலக்கட்ட வரலாற்று சமூக சூழல்கள் வெளிப்படுகின்றன. அது படிப்பதற்கு ஒரு நாவல் போலச் சுவையாக இருக்கின்றன. அதில் சில  தகவல்களை மட்டும் கீழே தருகிறேன். முழுவதுமாக அறிந்து கொள்ள புத்தகத்தை வாங்கிப்படியுங்கள்.

1)   முதலில் அவர் இந்தியப்பயணத்தை பெரும்பாலும் சாலைவழியாக ஏன் மேற்கொள்ள வேண்டுமென தெரியவில்லை. அதுவும் ஐரோப்பா வழியாக வந்ததாகக் குறிப்பிடுகிறார்.
2)   ஐரோப்பாவில் தெருவில் கரடி, முள்ளம்பன்றி போன்றவற்றை வைத்து வித்தைகள் நடந்து கொண்டு இருந்ததையும், கழைக்கூத்தாடிகள் நம் இந்தியாவைப்போல் அங்கு இருந்ததையும் குறிப்பிடுவது ஆச்சரியமாக இருக்கிறது.
3)   சாலைப்பயணத்தில் ஒரு சமயம் எட்டுக்குதிரைகள் பூட்டிய அஞ்சல் வண்டியில் இடம் கேட்டு சென்றதாகக் குறிப்பிடுகிறார்.
4)   செயின்ட் டென்னிஸ் என்ற கத்தோலிக்க ஆலயத்தில் புனிதர் தாமஸின் கண், மேரியின் பால் என்று வினோத பொருட்கள் இருப்பதை எழுதி கேலி செய்கிறார்.
5)   பாரிசின் வழியாக பயணம் செய்யும்போது பிரெஞ்சு பேரரசி மேரி அன்டைனட்டைப் பார்த்ததாகவும். அந்தப் பேரரசி  மிகவும் நல்லவள் என்றும் சொல்லுகிறார்.
6)   யூதர்கள் கொல்லப்படுவது சீன் நதியில் தள்ளப்படுவது என்பதையெல்லாம் எழுதி கண்டிக்கிறார்.
7)   பாரிசு நகரில் நுழையும் போது, அது பெரிய ஒரு குப்பைத் தொட்டி போல இருந்தது என்று சொல்கிறார். அங்கு தங்கிய விடுதியை மிகவும் மோசம் என்று குறிப்பிடுகிறார். ஆனால் இப்போது பாரிசு எந்தளவுக்கு முன்னேறியுள்ளது என்பதைப் பார்க்கும்போது நம்நாடும் மிகவும் விரைவில் முன்னேற வேண்டுமெனத் தோன்றுகிறது.
8)   தேயிலை தயாரிக்க அங்கு மண்பாண்டங்கள் பயன்படுத்தப் பட்டன என்கிறார்.
9)   பாரிசில் சலோன் சர் சாவோன் என்ற இடத்தில் பார்த்த லெகான் கோழிகளைப் பற்றி எழுதுகிறார்.
10)               கப்பல் பயணம் செய்யும்போது ஜோடியைப் பிரிந்த புறா தற்கொலை செய்ததைப்பார்க்க நேரிட்டதை உருக்கமாக விவரிக்கிறார்.
11)               அலெக்சாண்டிரியாவில் குதிரைகளை முஸ்லீம்கள் மட்டும்தான் பயன்படுத்த வேண்டும் என்றும் மற்றவர்களுக்கு கழுதைதான் என்பதைச் சாடுகிறார்.
12)               அங்கு செயின்ட் ஏதோனேசியஸ் என்ற பாரம்பரிய கிறிஸ்துவ ஆலயம் மசூதியாக மாற்றப்பட்டது, கிறிஸ்துவர்களுக்கு தனி வரி ஆகியவைச் சொல்லிச் செல்கிறார்.
13)               சிதைந்துபோயிருந்த கிளியோபாட்ராவின் அரண்மணையைப் பார்வையிட்டதை விளக்குகிறார்.
14)               கெய்ரோவில் உள்ள நைல் நதி, அங்கு நடந்த பைபிளில் சொல்லப்பட்டிருக்கும் ஜோசப்பின் கதையை நினைவு கூர்வதோடு, அங்குள்ள பிரமிடுகளை கட்டியது அடிமையாக இருந்த யூதர்கள் என்று சொல்லுகிறார்.
15)               பெரிய நகரமாக இருந்தாலும் அழகு, மேன்மை மற்றும் ஒழுங்கில்லாமல் இருந்ததைச் சுட்டிக் காட்டுகிறார்.
16)               கிறிஸ்தவர்களை அங்கு Frank என்று அழைக்கிறார்கள் என்று குறிப்பிட்டிருக்கிறார்.
17)               மோச்சா பாலை நிலப்பயணத்தில் கொள்ளையரிடம் சிக்கி உயிர் தப்பித்து பின்னர் கடற்பயணத்தின் மூலம் மலபார் கள்ளிக்கோட்டைக்கு (calicut) வந்திறங்கியிருக்கிறார். அப்போது அது ஹைதர் அலி வசம் இருந்திருக்கிறது. ஹைதர் அலியின் கேப்டன் அய்ரேஸ் அவர்களை சிறைப்பிடித்து 15 வாரம் அடைத்து வைத்து விட்டிருக்கிறார். அங்கு தேளும் பூரானும் நிறைந்திருந்தனவாம்.
18)               அங்கிருந்து கொச்சி வழியாக இலங்கையின் காலே சென்று பின்னர் சென்னை சென்றடைகிறார்கள்.
19)               சென்னை இத்தாலிய நகரம்   போன்ற மிக அழகிய நகரம் என்றும், மக்கள் விரும்பும் எந்த மதத்தையும் சுதந்திரமாக  அங்கு பின்பற்றலாம் என்று எழுதியிருப்பது பெருமையாக இருந்தது.
20)               சென்னையில் செயின்ட் தாமஸ் மவுண்ட் சாலை மரங்கள் சூழ்ந்து அழகாக இருந்தது. அடையாறு ஆலமரம் சென்றது என்று விவரிக்கிறார்.
21)               அதன்பின் கல்கத்தா வந்து சேருகிறார். பூரி ஜெகன்னாதர் உற்சவத்தில் தேரடியில் விழுந்து உயிர்விடும் மக்கள் நேரடியாக சொர்க்கம் செல்வார்கள் என்று பின்பற்றப்பட்ட மூடநம்பிக்கையைச் சாடுகிறார்.
22)               ஹுக்ளி நதி தேம்ஸை விட அழகானது  அகலமானது என்று சொல்லுகிறார்.
23)               வில்லியம் கோட்டையில் வாரன் ஹேஸ்டிங்சை சந்தித்தது, அவருடைய மனைவி ஆன் மரியாவுடன் நட்பு பாராட்டியது என்று விளக்குகிறார்.
24)               கல்கத்தாவில் வக்கீல்களின் கட்டணம் இங்கிலாந்தை விட அதிகம் என்று சொல்கிறார்.
25)               சதி, வியாதியஸ்தரை களிமண் பூசிக்கொல்தல் போன்ற கொடிய பழக்கங்களைச் சாடுகிறார்.
          இப்படி இப்புத்தகத்தைப்  படித்தால் அந்தக் கால கட்ட பல சமூக வரலாற்று சூழ்நிலைகளை பற்றி தெரிந்துகொள்ளலாம்.

முற்றும்

Image result for சுதந்திர நாள் வாழ்த்துக்கள்