Thursday, February 4, 2021

இளமை எழுத்தாளர் சுஜாதா

 

படித்ததில் பிடித்தது

ஸ்ரீரங்கம் to சிவாஜி - சுஜாதாவின் கதை.

ரஞ்சன் குமுதம் பு(து)த்தகம் வெளியீடு -விலை: 130.00


 


 

காமிக்ஸ் எனும் படக்கதையில் ஆரம்பித்த என்னுடைய வாசிப்பு வரலாறு , பின்னர் வாண்டுமாமா , ஆலந்தூர் கோ. மோகனரங்கன் , தமிழ்வாணன் என்று தொடர்ந்து இளமை எழுத்தாளர் சுஜாதாவில் நிலைத்தது. அதன்பின் லா.சாரா, சா.கந்தசாமி, சுந்தர ராமசாமி, சாரு நிவேதிதா, ஜெயமோகன் என்று வாசிக்கும் தளம் விரிவடைந்தாலும் சுஜாதாவை என்றும் படிக்கலாம். அதில் கொப்பளிக்கும் இளமையும் புதுமையும் என்றும் எவரையும் கவருபவை. இந்தப் புத்தகத்தை எழுதிய ரஞ்சன் என்ற குமுதத்தின் துணையாசிரியர் சுஜாதாவின் கடைசி காலகட்டங்களில் அவரோடு நெருங்கியிருந்தவர். சுஜாதாவின் வாழ்க்கையைத் தொகுத்து குமுதத்தில் எழுதிய தொடர்தான் புத்தகமாக வெளிவந்திருக்கிறது.  சமீபத்தில் சென்னைக்குச் செல்லும்போது ஒரு பழைய புத்தகக்கடையில் இதனைக் கண்டெடுத்தேன். இது கூட சுஜாதா சொல்லிக் கொடுத்ததுதான். இனி நான் இந்தப்புத்தகம் மூலம் அறிந்து கொண்ட சில சுஜாதாவின் தகவல்களை கீழே தருகிறேன்.

 

1)    சுஜாதா பிறந்தது 1935-ஆம் வருடம் மே 3 ஆம் தேதி பிறந்த இடம் திருவில்லிக்கேணி, அவரது இயற்பெயர் ரங்கராஜன்.

2)    தந்தை பெயர் சீனிவாசராகவன் தாயார் கண்ணம்மாள் ஒரு அண்ணன் ஒரு தம்பி. அப்பா PWD சீஃப் எஞ்சினியர், அண்ணன் Dr.கிருஷ்ணமாச்சாரி தம்பி ராஜகோபாலன் மத்திய அரசின் MTNL சேர்மன்.

3)    இவர் சிறுவயதில் திருவல்லிக்கேணியில் இருந்தபோது தூக்கி வளர்த்தவர் கணித மேதை ராமானுஜரின் மனைவி ஜானகி.

4)    1965ல் குமுதத்தில் இவருடைய 'சசி காத்திருக்கின்றாள்” என்ற சிறுகதை வெளிவந்து பாராட்டுப் பெற்றது. அவருக்கு அனுப்பிய செக் படிவத்தில் அன்றைய குமுதம் ஆசிரியர் எஸ்.ஏ.பி. "அடிக்கடி எழுதுங்கள்"  என்ற வாக்கியம் சுஜாதாவிற்கு பெரும் டானிக்காக அமைந்தது. அதில் ஆரம்பித்த குமுதம் உறவு சுஜாதாவிற்கு கடைசி வரை இருந்தது.

 

5)    ஸ்ரீரங்கத்தில் பாட்டி வீட்டில் வளர்ந்த போது அம்மாவும் பாட்டியும் கதைகளை அறிமுகப்படுத்த, கவிதைகளை அறிமுகப்படுத்தியவர் அண்ணன்.

6)    ழு வயது முதல் கல்லூரி முடிக்கும் வரை ஸ்ரீரங்கத்தில் இரு பாட்டிகள் வீட்டில் வளர்ந்தார்.

7)    அவர்கள் அப்போது நடத்திய தென்றல் என்ற கையெழுத்துப் பிரதியில் எழுதிய 'கள்வர் தலைவன்’ என்ற கதைக்கு படங்கள் வரைந்தவர் பின்னர் கவிஞராய் பிரபலமடைந்த வாலி.

8)    ஒரு முறை திருச்சி ரேடியோவில் பள்ளி மாணவர்களுடன் கலந்து கொண்டு, இவர் பேசியது ஒரே வார்த்தை. அதற்கு பரிசாக ஒரு கதர்த்துண்டு கிடைத்தது. இதுதான் சுஜாதா பள்ளியில் வாங்கிய ஒரே பரிசு.  

9)    சுஜாதாவின் கல்லூரிப்படிப்பு St. ஜோசப் கல்லூரி, திருச்சி. அவருடைய வகுப்புத்தோழர் அப்துல் கலாம். அதன்பின்னர் மேற்படிப்பை MIT யில் படித்த போது அங்கும் கூடப்படித்தவர் அப்துல்கலாம். அங்கு நடந்த அறிவியல் கட்டுரைப் போட்டியில் இருவருமே பங்கு கொள்ள முதல் பரிசைப் பெற்றவர் அப்துல் கலாம்.

10) அந்தக் காலத்துக் கனவுக்கன்னிகளாக, டி.ஆர். ராஜகுமாரி, எம்.வி.ராஜம்மா, அஞ்சலிதேவி, மாதுரி தேவி ஆகியோரைக் குறிப்பிட்டு இதில் முதல்வராக இருந்தவர் வைஜெயந்தி மாலா என்கிறார்.

11) St. ஜோசப் கல்லூரியில் படிக்கும்போது ஆங்கில இலக்கியத்தை அறிமுகம் செய்து விருப்பத்தை வளர்த்தவர் ஜோசப் சின்னப்பர் என்பவர். அப்போதிருந்த பிரின்சி பாலாயிருந்த ஜெர்மனியைச் சேர்ந்த ஃபாதர் எர்ஹார்ட்  ஆங்கிலத் திரைப்படங்களை அறிமுகப்படுத்தினார்.

12) அதன்பின்னர் டெல்லியில் சிலநாள் வேலை செய்து, பெங்களூர் பெல் நிறுவனத்தில் சேர்ந்தார். பெல் நிறுவனப்பள்ளியில் கமிட்டியில் இருந்ததால் தொழிலாளர் மட்டுமே படிக்கும் அந்தப்பள்ளியில் தன்னுடைய பிள்ளைகளையும் சேர்த்தார் அதன் பின் பல அதிகாரிகள் தங்களுடைய பிள்ளைகளையும் அங்கே சேர்த்தார்களாம்.

13) இங்கு வேலை செய்யும் போதுதான் மின்னணு இயந்திரத்தைக் கண்டுபிடித்தார்.

14) 1985ல் டெக்சாஸ் தமிழ்ச்சங்க விழாவுக்கு வந்தபோது சுஜாதாவுக்கு திரு.பால்பாண்டியன் அவர்கள் ஒரு கம்ப்யூட்டரை  பரிசாகக் கொடுத்தார். அதனை உள்ளே கொண்டுவர கஸ்டம்ஸ் அதிகாரி வட்டி கட்டச் சொல்ல, அது கம்யூட்டரின் விலையை விட அதிகமாக இருக்க கம்யூட்டரே எனக்கு வேண்டாம் என்று  கிளம்பியிருக்கிறார். லஞ்சமும் கொடுக்க மனதில்லை. அங்கிருந்த இன்னொரு மேலதிகாரி இவரைப்பற்றிக் கேள்விப்பட்டு டூட்டி இல்லாமலேயே கம்யூட்டரை ரிலீஸ் பண்ணிக்கொடுத்திருக்கிறார். அதில் பாரதி ஃபாண்ட் என்ற தமிழ் ஃபாண்ட்டில் முதலில் எழுதியவர் சுஜாதா.

15) சுஜாதாவின் நிறைவேறாத ஆசை பட்ட மேற்படிப்பும் சினிமா இயக்குநர் ஆவதுமாம்.

16) திரைப்படமாக தயாரிக்கப்பட்ட அவர் கதைகள், காயத்ரி, கரையெல்லாம் செண்பகப்பூ,ப்ரியா, காகிதச் சங்கிலிகள் ஆகியவை.

17) திரையுலகில் அவருக்கு நெருங்கிய நண்பர்கள் கமல், மணிரத்னம், ஷங்கர், ராஜீவ் மேனன், ஆகியோர். இவருள் ராஜீவ் மேனன் மிகவும் நெருக்கம்.

18) 2008 பிப்ரவரி 27ஆம் தேதி தன்னுடைய 73 ஆவது வயதில் மறைந்தார்.

 

இத்தகைய பல தெரியாத தகவல்களை இணைத்து எழுதியுள்ளார் ஆசிரியர் ரஞ்சன். அரிய புகைப்படங்களுடன் அருமையாக தொகுத்த இந்தப்புத்தகம் சுஜாதாவின் ரசிகர்கள் படிக்க வேண்டிய ஒன்று.

- முற்றும்.   

அறிவிப்பு :

காதல் மாதமான பிப்ரவரி மாதத்தில் ,  நியூயார்க் தமிழ்ச்சங்கத்தின் இலக்கியக்குழு வழங்கும் இலக்கிய உலாவில்  வெள்ளியன்று ( பிப்ரவரி 5 ,2021)அன்று நடக்கும்  நிகழ்வின் தகவல்களை கீழே கொடுத்துள்ளேன்.நபர்கள் அனைவரும் வந்து பங்கு கொள்ள அழைக்கிறேன்.

  


4 comments:

 1. ஏற்கெனவே அறிந்த தகவல்கள் ஆயினும் மறுபடி படிக்க சுவாரஸ்யம்.  இவரது அனிதா இளம் மனைவி எனும் கதை இது எப்படி இருக்கு என்றும், ஜன்னல் மலர் எனும் கதை யாருக்கு யார் காவல் என்றும், ப்ரியா ப்ரியாவாகவேயும் படமானது.  இன்னும் ஓரிரு கதைகள் கூட உண்டு.  சட்டென நினைவுக்குவ வரவில்லை.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி ஸ்ரீராம்

   Delete
 2. Replies
  1. வருகைக்கு நன்றி திண்டுக்கல் தனபாலன்.

   Delete