Thursday, October 30, 2014

பன்னீர் விட்ட கண்ணீர்!!!!!!!!!!!!!!

 ஒரு கற்பனை உரையாடல்

செயலாளர்: ஐயா உங்களைப் பார்க்க யாரோ வந்திருக்கிறார்.
பன்னீர்: நான்தான் யாரையும் பார்க்க விரும்பலன்னு சொன்னேன்ல.
செயலாளர்: இல்லை ஐயா உங்க ஊர்னு சொல்றாரு.
பன்னீர்: ஓ அம்மூரா, அத முதல்ல சொல்லக்கூடாதா? சரி வரச்சொல்.
பரதேசி: முதல் அமைச்சர் அவர்களுக்கு வணக்கம்.
பன்னீர்: யோவ் யாருய்யா இங்க முதலமைச்சர்? வாயை மூடு .கொஞ்ச நாள் இருக்கலாம்னு பாத்தா கெடுத்துருவாய்ங்க போலிருக்கு. ஆமா உன்னை நான் இதுவரைக்கும் பார்த்ததில்லையே. எந்தூரு நீ?
பரதேசி: நம்மூர்தான் பன்னீர், பெரியகுளம் பக்கத்தில தேவதானப்பட்டி. ஆனா இப்ப அமெரிக்காவில் இருக்கேன்.
பன்னீர்: ஓ அப்படியா நம்ம பய அமெரிக்காவில் இருப்பது ரொம்ப சந்தோஷம். ஆமா உன் பேரென்ன?
பரதேசி: பரதேசி.
பன்னீர்: கலவரப்பட்டு, ஏய் யாரப்பா அங்ஙன. பக்கி,பரதேசியை யெல்லாம் பார்க்கமுடியாது. இவனை வெளியே தள்ளி கடையை  அடை.
பரதேசி: என்ன பன்னீர் ஒங்க டீக்கடை ஞாபகம் வந்துருச்சா, கடையை அடைன்னு சொல்றீங்க ?

பன்னீர்: நீ யாருப்பா, விவகாரம் புடிச்சவனா இருக்க. ஆமா ஒனக்கு என்ன வேணும்?
பரதேசி: அம்மா அனுப்பினாக.
பன்னீர்: பதறி எழுந்து, குனிந்து ஒரு கும்பிடு போட்டு, ஏம்ப்பா இத முதல்லயே சொல்லக்கூடாது? சரி சின்னம்மாவா? பெரியம்மாவா, இளவம்மாவா?
பரதேசி: எந்த அம்மாவும் அனுப்பல, சும்மா சொல்லிப்பாத்தேன். அது சரி யாரு இந்த இளவம்மா? 

பன்னீர்: இளவரசியைத்தான் இளவம்மான்னு சொன்னேன்.
பரதேசி: ஓ அவர்களும் அம்மா வரிசையில் சேந்தாச்சா?
பன்னீர்: ரொம்ப குசும்பு ஒனக்கு. ஆனா எதுக்கு வந்திருக்க?. நான் எதுவும் உதவி செய்யமுடியாத நிலையிலிருக்கிறேன்.
பரதேசி: அது எல்லோருக்கும் தெரியும் பன்னீர், உங்களுக்கு உதவி செய்யத்தான் நான் வந்திருக்கிறேன்.
பன்னீர்: எனக்கு உதவியா? என்ன உதவி?
பரதேசி: யாரைப்பாத்தாலும் எதைப் பார்த்தாலும் பயம்மா இருக்கா?
பன்னீர்: ஆமா, அதான் எல்லாத்துக்கும் தெரியுமே?
பரதேசி: யாரையும் நம்பமுடியல, எதையும் பேசமுடியல?
பன்னீர்: அட ஆமா.
பரதேசி: இப்படி உள்ளுக்குள்ளயே எல்லாத்தையும் அடக்கி வச்சிருந்தா மாரடைப்பு வந்துரும்.
பன்னீர்: ஐயையோ என்னப்பா பயமுறுத்துற?
பரதேசி: அதனால யார்ட்டயாவது மனசுவிட்டுப் பேசினா இந்தப் பாரமெல்லாம் குறைஞ்சுரும்.
பன்னீர்: சரி யார்ட்ட  அப்படி பேச முடியும்?
பரதேசி: அதுக்குத்தானே நான் வந்துருக்கேன். என்ட்ட நீங்க மனந்திறந்து பேசலாம்.
பன்னீர்: உன்னை எப்படி நம்பறது?
பரதேசி: நான் நம்மூர்க்காரன், அதோட அமெரிக்காவில இருக்கிறவன். இங்க இருக்கப்போவதில்லை. எதையும் ரெக்கார்டு பண்ணல, இந்த ரூம்ல பேசினதை இங்கயே மறந்துரலாம்.
பன்னீர்: சரிப்பா நான் ரெடி (எழுந்து சென்று கதவுகளையும் ஜன்னல்களையும் அடைக்கிறார்)
பரதேசி: உங்களுக்கு கிடைத்த முதலமைச்சர் பதவியைப்பத்தி என்ன நினைக்கிறீங்க?
பன்னீர்: மாண்புமிகு இதயதெய்வம், தங்கத்தாரகை, புரட்சித்தலைவி அம்மா>>>>>>>.
பரதேசி: போதும் நிறுத்துங்க பன்னீர். நான்தான் சொன்னேன்ல. மனந்திறந்து பேசுங்கன்னு.
 பன்னீர்: ஹிஹி சரிவிடு பழக்க தோசம். முதலமைச்சர் பதவி எப்படியிருக்குன்னா (பாடுகிறார்) "உள்ளுக்குள்ள சக்ரவர்த்தி ஆனா உண்மையில மெழுகுவர்த்தி".

பரதேசி: ஆமா என்னது தாடி வளர்த்து கண்ணீர் விட்டு பெரிய உலக நடிப்பா இருக்கே? எல்லோரும் உங்களை கண்ணீர் செல்வம்ல கூப்பிடுறாங்க.
பன்னீர்: நீ வேற என்னவிட பெரிய நடிகருங்க இருக்காய்ங்க.
பரதேசி: அம்மாவுக்கு இதெல்லாம் விளங்காதா?  
பன்னீர்: அவுங்களும் ஒரு நடிகைதானே. அதனால எல்லாவகை நடிப்பும் அவுங்களுக்குப் பிடிக்கும் (பாடுகிறார்) உலகமெனும் நாடக மேடையில் நானொரு நடிகன்.
பரதேசி: கண்டுபிடிச்சிர மாட்டாங்களா?
பன்னீர்: பக்கத்திலே இருக்கிற சசிகலா, இளவரசி நடிப்பையே கண்டுபிடிக்க முடியலயே. ஆனாலும் எனக்கு நடிப்புன்னா ரொம்பப் பிடிக்கும். எம்ஜியார் நடிப்பைப் பார்த்து வளர்ந்தவேன்ல.  
பரதேசி: அதெப்படி உங்களால அவ்வளவு குனிய முடியுது.சாஷ்டாங்கமா விழ முடியுது, இந்த வயசிலும்.

பன்னீர்: அதெல்லாம் யோகாவில் வேற வேற ஆசனம். நீதான் பாக்குறியே மந்திரி சபையில் எனக்கு மட்டும்தான் தொப்பை கம்மி.


பரதேசி: ஓஹோ அதான் விஷயமா? அதுசரி முதலமைச்சர் ஆயும் ஏன் அந்த அறையில உட்காரல? அவ்வளவு மரியாதையா?
பன்னீர்: நீ வேற அந்த ராசியில்லாத ரூமில போய் நான் உட்காருவேனா? ஏற்கனவே ஒரு தடவ உட்கார்ந்து ரொம்ப கொஞ்சக் காலத்தில பதவி போயிருச்சு.
பரதேசி: ஓ அப்படியா? ஆனா சமீபத்தில கார்டனில அம்மாவைப் பார்த்து கண்ணீர் விட்டீங்களே.
பன்னீர்: அது சோகக் கண்ணீர்தான். அதுக்குள்ள வெளியே வந்துட்டாங்களேன்னு.
பரதேசி: அடப்பாவி, அப்ப உள்ளே போன போது அழுதது.
பன்னீர்: அது ஆனந்தக் கண்ணீரப்பா. இனி நான்தேன் முதல்வர்னு நெனச்சு வந்தது. பரதேசி: ஓ இவ்வளவு விஷயம் இருக்கா. ஆமா எந்தத்துறை யெல்லாம் உங்க கீழே வருகிறது.?
பன்னீர்: அதெல்லாம் ஒன்னும் கிடையாது. எல்லாம் அம்மா துறை தான். அதான் IAS  அதிகாரிங்க இருக்காங்கல்ல. அம்மாகிட்டே நேரடியா ரிப்போர்ட் செய்றாய்ங்க.
பரதேசி: அப்ப உங்கள் யாருகிட்டயும் ஒரு அதிகாரமும் இல்லையா?
பன்னீர்: யாருக்கு வேணும் அதிகாரம்? பதவியை தக்கவைக்கிறதே பகீரதப் பிரயத்யனமா இருக்கு.
பரதேசி: அதான் OPS, OP அடிக்கிறாருன்னு சொல்றாங்களா? ஆமா அரசியல்ல உங்களுக்கு என்ன அனுபவம்?
பன்னீர்: என்ன இப்படி கேட்டுட்ட? என்னோட டீக்கடையில தினத்தந்தியும் மாலைமுரசும் தவறாம வாங்கிருவேன். வர்றவங்க படிச்சிட்டு பேசிக்கிட்டு இருப்பாய்ங்க. அதுலயிருந்து நிறைய கத்துக்கிட்டேன். எங்கடையில டீ ஆறினாலும் அரசியல் ஆறாதுல்ல.
பரதேசி: அப்ப பேப்பர் கூட நீங்க படிக்க மாட்டீங்க. சரி அண்ணா தி.மு.க -வில் எப்படி சேந்தீங்க?
பன்னீர்: ஓ அதுவா எனக்கு எம்ஜியார் படம்னா உசுரு. எங்கூரில்   ஜெயா டாக்கீஸ் அல்லது ரஹீம் தியேட்டர்னு எதில போட்டாலும் டெய்லி செகண்ட் ஷோ போயிருவேன். எங்கடையில எப்பவும் எம்ஜியார் பாட்டுதான் போடுவேன். அப்புறம் என்ன அதிமுகவில சேர்ந்திட்டேன்.
பரதேசி: அப்படின்னா திராவிட இயக்கம், பகுத்தறிவுக் கொள்கைகள் எல்லாம்?
 பன்னீர்: என்னப்பா என்னென்னவோ கேக்குற, அம்மாவுக்கே அதெல்லாம் தெரியாது.
பரதேசி: அப்ப நீங்க சேரும்போது உங்க கொள்கைகள் என்னவா இருந்துச்சு?.
பன்னீர்: அதான் சொன்னேன்ல, எம்ஜியார் படத்தை டெய்லி பாக்குறது. எம்ஜியார் பாட்டு மட்டும்தான் கேட்குறது. எம்ஜியார் படம் ரிலீசாகும்போது போஸ்டர் ஒட்டி, மாலை போட்டு தீபம் காண்பிக்கிறது.
பரதேசி: டீ கடைக்காரரெல்லாம் முதலமைச்சர் ஆயிட்டாருன்னு  சொல்றாங்களே?
பன்னீர்: என்னா அப்படி சொல்ற? டீக்கடை வச்சவர் நாட்டுக்கே பிரதமர் ஆகும்போது நான் ஆகக் கூடாதா. யாரு கண்டா நானும் ஒரு நாள் பிரதமர் ஆனாலும் ஆயிருவேன்.
பரதேசி: என்ன இப்படி பால் விலையை அநிநாயமா  ஏத்தீட்டீங்க ?
பன்னீர்: என்னாது பால் விலையை ஏத்தீட்டாய்ங்களா? அப்ப டீ விலையை ஏத்தச்சொல்லனும்.

பரதேசி: உங்க நீண்ட கால ஆசை எது?
பன்னீர் :ஒரு தடவையாவது ஹெலிகாப்டரல போயிரனும்.
பரதேசி: உங்க எதிர்கால திட்டம் என்ன?
பன்னீர்: அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல. இன்னிக்கி நான்தான் முதலமைச்சர். அம்புட்டுத்தான்.

 பரதேசி: அப்ப பதவி போயிருச்சுன்னா ?
 பன்னீர்: இருக்கவே இருக்கு டீக்கடை.


Monday, October 27, 2014

இளையராஜா கிறிஸ்தவரா?

எழுபதுகளில் இளையராஜா பாட்டு 6 - தேவன் திருச்சபை மலர்களே.

படத்தில் இருப்பவர்கள் பாடகி இந்திரா @பூரணி

1976-ல் வெளிவந்த “அவர் எனக்கே சொந்தம்” படத்தில் வந்த அருமையான பாடல் இது.பாடலைக்கேளுங்கள்.

கிடார் ஸ்ட்ரம்மிங்கில் கார்டுகள் (D Major) மாற்றி மாற்றி ஒலிக்க "தேவன் திருச்சபை மலர்களே வேதம் ஒலிக்கின்ற மணிகளே" என்று பாடல் ஆரம்பிக்கிறது. அடுத்த வரி C Major கார்டில் இறங்க, குரல் பேசில் (Bass) இறங்கி மனதைத் தொடுகிறது. “வேதம் ஒலிக்கின்ற மணிகளே”, என்ற வரியில் ஆலய மணி ஒலிக்க ஒரு தேவாலயச் சூழ்நிலை பிறக்கிறது.
முதல் BGM-ல் வயலின்கள் ஒலிக்க பேங்கோஸ் சேர்ந்து கொள்கிறது. பின்னர் புல்லாங்குழல் இணைகிறது. முதல் சரணத்தில் தொடர்ந்து பேங்கோஸ் ஒலிக்க பாடல் வேகமெடுக்கிறது, "விண்மீனை உன் கண்களில் பார்க்கிறேன்”. சரணத்தின் முடிவில் மறுபடியும் பல்லவிக்கு முன்னால் வந்த Prelude, கிடார் ஸ்ட்ரம்மிங் வர "தேவன் திருச்சபை மலர்களே" பல்லவி மீண்டும் ஒலிக்கிறது.
இரண்டாவது BGM-ல் பிரைட்டாக அக்கார்டியன் இசை சேர்ந்து கொள்ள கொஞ்சமும் பிசிறில்லாத விசில் சத்தம் இனிமையாக வருகிறது. சுருதி சுத்தமாக விசிலடித்த மகானுபாவன் யாரென்று தெரியவில்லை.
இரண்டாவது சரணம் அதே ராகத்தில் "கண்ணே மணியே" என்று ஆரம்பிக்கிறது. கிடாரின் ஸ்ட்ரம்மிங்கோடு பல்லவி மீண்டும் வந்து முடிய, எழுச்சியுடன் எழுந்த வயலின்கள் 'தேவன் திருச்சபை மலர்களே' என்று வாத்ய இசையினை வாசிக்க, திரும்பவும் அதே இசை மூன்று முறை அடுத்தடுத்த உச்ச சுதியில் ஏறி மீண்டும் இறங்கி, அலையாய் பரவி, மெதுவாகி நிறைவு பெறுகிறது. ஒரு தடவை கேட்டுவிட்டால் அந்தநாள் முழுவதும் நினைவில் தங்கி முணுமுணுக்க வைக்கும் மெலடி.
பாடல் வரிகள்:-

தேவன் திருச்சபை மலர்களே...
லல்லாலல லலலல
வேதம் ஒலிக்கின்ற மணிகளே ....
லல்லாலல லலலல
போடுங்கள் ஓர்....புன்னகைக்கோலம்...
பாடுங்கள் ஓர்...மெல்லிசை  ராகம் ..!

விண்மீனை உன் கண்களில் பார்க்கிறேன்
பொன்மானை உன் நடையினில் காண்கிறேன்
எங்கள் அன்னை மேரியின்
பொங்கும் கருணை மழையிலே
என் செல்வமே என் தெய்வமே
பல்லாயிரம் ஆண்டுகள் வாழ்கவே


கண்ணே மணியே பொன்னெழில் மலர்களே
அன்பே அமுதே அருந்தவப் பயன்களே
கொஞ்சூம் மழலை மொழியிலே
உள்ளம் மயங்க மயங்கவே
பொன்வண்டு போல் சில்வண்டு போல்
கவிபாடுங்கள் உலகம் மகிழவே

பாடலை எழுதியவர் கவிஞர் கண்ணதாசன். அற்புதமான வரிகள் என்று சொல்லமுடியாது. ஆனால் ஆங்காங்கே ஓரிரு வார்த்தைகளில் அவரின் முத்திரை இருக்கிறது. குறிப்பாக விண்மீனைப் போல் கண், அருந்தவப்பயன் என்ற வார்த்தைகளில்.
குரல்:-
பாடலைப்பாடியது இந்திரா மற்றும் பூரணி . சிறுகுழந்தையின் மழலை மொழியை பூரணியும் முக்கிய பாடலை இந்திராவும் பாடியிருக்கிறார்கள்.
இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன் கண் விடல்.
என்ற வள்ளுவனின் வாக்குப்போல எந்தப் பாடலுக்கு யார் குரல் சரியாக இருக்கும் என்பது மாத்திரமல்ல, படத்தின் சூழ்நிலை, கதாபாத்திரத்துக்கும் நடிக நடிகையருக்கும் எந்தக்குரல் பொருத்தமாக இருக்கும் என்பதனையும் முடிவு செய்து பாட வைப்பதில் ராஜா, ராஜா தான். இந்தப் பாடலுக்குத் தேவையான ஒரு கிறிஸ்தவப் பெண்ணின் குரலாக இந்திராவின் குரல் அழகாக இழைகிறது. பாடலின் குதூகல மனநிலை குரலில் அற்புதமாக இருக்கிறது. வரிகளின் உச்சரிப்பும் மிகப்பிரமாதம்.
Ilayaraja with Poorani

இந்திரா ஏன் அதிகமாய் சோபிக்கவில்லை என்று தெரியவில்லை.  குழந்தையாய் பாடிய பூரணி பின்னர் கோரஸ் பாடகி ஆனதோடு, கங்கை அமரன் இசைக் குழுவில் பாடி உலகம் முழுவதும் சென்றார். பூரணி பாடிய இன்னொரு பாடல்இதோ இதோ என் நெஞ்சிலே”.  
இளையராஜா கிறிஸ்தவரா?
தேனிக்கு அருகில் உள்ள பண்ணைப்புரத்தில் கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய ஒரு குடும்பத்தில் பிறந்தவர்தான் இளையராஜா. “ஞான தேசிகன்” என்பது இயற்பெயர். “ராசையா”, என்று செல்லமாக அழைக்கப்பட்டார். சிறு வயதில் கிறிஸ்தவ தேவாலயத்திற்கு  போயிருக்கலாம். ஆனால் வளர்ந்த போது அதிகமாக அண்ணன் பாவலர் வரதராஜன் அவர்களுடன் சுற்றித்திரிந்தார். அவர் நாத்திகம் பேசும் கம்யூனிசவாதி. ஆனால் இளையராஜா தன்னை ஒரு தீவிர இந்துவாகவே அடையாளப் படுத்திக் கொண்டார். அவர் இசையமைத்துப் பாடிய 'ஜனனி ஜனனி' மற்றும் "எனக்கொரு அன்னை வளர்த்தவள் என்னை" என்ற பாடல்களில் பக்திரசம் சொட்டும்.
ஆனால் ஒரு கலைஞனை ஒரு குறிப்பிட்ட சாதி அல்லது மத அமைப்பு என்னும்  குறுகிய வட்டத்திற்குள் சுருக்கிப் பார்க்கத் தேவையில்லை. கலைஞனை  கலைஞனாக மட்டுமே பார்க்க வேண்டும் என்பது என் அபிப்ராயம். எனவே இளையராஜா கிறிஸ்தவரா? இந்துவா? என்பது முக்கியமில்லை. எல்லாரும் போற்றும் அதி அற்புத பாடல்களை கொடுத்திருக்கிறார் என்பதே முக்கியம். அதுதான் நம் எல்லோருக்கும் தெரியுமே.

பாடலை மீண்டும் ஒருமுறை கேளுங்களேன்.


அடுத்த வாரம் “விழியிலே மலர்ந்தது உறவிலே கலந்தது”

Thursday, October 23, 2014

நியூயார்க்கில் தீபாவளி !!!!!!!!!!!!!!

With our Project Manager Shankar in  Saravana Bhavan

நியூயார்க்கில் காலை வழக்கம்போல் விடிந்தது. இன்று தீபாவளி அல்லவா? வெளியே ஆழ்ந்த நிசப்தம் .வழக்கமாக பள்ளி எழுச்சி பாடும் பறவைகளையும் காணோம் .இந்தியாவில் தீபாவளியின் அதிகாலை எவ்வளவு அமர்க்களமாக இருக்கும். ஹூம்  தீபாவளிதான் எவ்வளவு மகிழ்ச்சியான பண்டிகை. நான் சிறுவயதில் இருக்கும்போது கொண்டாடித் திளைத்த அனுபவங்கள் கண்முன் வந்து போயின. அட அப்துல் காதருக்கும் அமாவாசைக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிறீர்களா? இருங்க இருங்க அவசரப்படாதீங்க. நான் கொண்டாடின விதத்தைச் சொல்றேன்.
அதிகாலையில் பட்டாசு சத்தம் கேட்டு எழுந்து விடுவேன். அன்றைய நாள் மட்டும் அம்மா அல்லது ஆயா எழுப்பாமல், விடுமுறை தினம் என்றும் பார்க்காமல் நானே எழுந்து விடுவேன். ஆனாலும் எனக்கு முன்னே எழுந்திருந்த என் அம்மா பாத்திரங்களை விளக்கி வைத்துக் கொண்டிருப்பார்கள். வேகவேகமாக பல்விளக்கி, ஆயா தரும் சுடு தண்ணீரை விளாவி, தலைமுழுகிவிட்டு (கங்காஸ்நானம்?) அப்பா, போஜ ராஜா கடையில் எடுத்து முத்து டெய்லரிடம் தைத்த பாலியெஸ்டர் துணிகளை அணிந்து வந்தால், அங்கே சூடாக இட்லி இருக்கும். தேங்காய் சட்னியில் தோய்த்து ஒரு மூன்று இட்லிகளைச் சாப்பிட்டுவிட்டு (ஒவ்வொன்றும் மூன்று கடை இட்லிகளுக்குச் சமம்) அவரச அவசரமாகக் கிளம்புவேன். என் தம்பி மனோ அப்பதான் எழுந்து பெட்ஷீட்டில் தன்னை முழுவதுமாக சுற்றி சமையலறையில் உட்கார்ந்துவிடுவான். அவன் இரு காதிலும் அம்மா பஞ்சை வைத்துவிடுவார்கள். ஒரு ரெண்டு நாளைக்கு அதுதான் அவன் இருப்பிடம்.
முந்தின நாள் மரக்கடை நாடார் கடையில், பொட்டு கேப், ரோல் கேப் வெடி, சீனி வெடி, பிஜ்லி வெடி, கம்பி மத்தாப்பு, பூந்தொட்டி, தரைச்சக்கரம், சாட்டை, கலர் மத்தாப்பு, பாம்பு மாத்திரை ஆகியவற்றில் வகைக்கு குறைந்தது 5 பெட்டி அப்பா வாங்கித்தருவார்.  
பரணில் இருக்கும் முந்தின வருஷம் வாங்கிய துப்பாக்கியை பத்து நாள் முன்பே வேலை செய்கிறதா? என்று செக் செய்து விடுவேன்.சுருள் கேப் வெடியை துப்பாக்கியில்  லாவகமாக செருகி இழுத்து, ரெண்டு தடவை டிரிக்கரை இழுத்து சுருள் கேப் மருந்து துப்பாக்கியின் நாக்கின் கீழ் வரும்படி ரெடி செய்து கொள்வேன். அப்படி தயார் பண்ணும் போது ஓரிருமுறை வெடித்துவிடும். தம்பி மனோகர் அழ ஆரம்பிப்பான்.
"டேய் சேகர் வெளியே போய் வெடி தம்பி பயப்படுறான் , "அம்மா சொல்ல, அப்படியே வெளியே வருவேன்.

வாசல் சுத்தமாக பெருக்கப்பட்டு சாணித் தண்ணீர் தெளித்து அம்மாவுக்குத் தெரிந்த ஒரே கோலமான நாலு புள்ளி நாலு வரிசை  மின்னும். எப்ப எழுந்து போட்டாங்களோ  தெரியாது. அதன் பின்னர் நான் என் தோழிகளிடம் கற்றுக் கொண்டு பண்டிகை நாட்களில் மட்டும் அஞ்சு புள்ளி அஞ்சு வரிசை கோலம் போடுவேன்.
அப்போதுதான் விடியத்துவங்கும்.கையில் துப்பாக்கியோடு தெருவில் நடக்கும்போது அந்தக் கால ஜேம்ஸ்பாண்ட் ஜெய் சங்கர் போல என்னை நினைத்துக்கொண்டு, புன்சிரிப்புடன் வெடிக்கத் துவங்குவேன். பட் பட் பட்டென்று தொடர்ந்து வெடிக்க உற்சாகமாக தெருவில் நடை போடுவேன்.
முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் அந்தத் தெருவில், 'யாரு அது வெடிச் சத்தம் காலங்காத்தால' என்று யாரோ கேட்க, "நம்ம வாத்தியார் மகன் சேகர்தான்", என்று யாரோ பதில் கூறுவார்கள். ரோல் கேப்பில் ஒன்றொன்று வெடிக்காவிட்டாலும், தொடர்ந்து வெடிக்கும். இப்படியே தெருமுழுதும் ரெண்டு மூணு ரவுண்ட் அடித்து முடிவதற்குள் நன்றாக விடிந்துவிட தெருவில் நடமாட்டம் ஆரம்பிக்கும். அப்போது மீண்டும் தெருவில் இறங்கி நடக்க, பெரியவர் அல்லது பெண்கள் சிறுவர், சிறுமியர் பக்கத்தில் வரும் போது திடீரென்று சுடுவேன். அவர்கள் பயப்படுவதைப் பார்க்க ஆனந்தமாய் இருக்கும் (என்ன ஒரு அல்பத்தனம்?). இப்படியே ஒரு ரெண்டு ரவுண்ட் முடித்துவிட்டு வீட்டுக்குள் வந்தால், வரிசையாக பிற வீடுகளிலிருந்து பலகாரங்கள் வர ஆரம்பிக்கும். பலகாரங்களை விட கொண்டு வரும் பக்கத்துக்கு வீட்டுப்பெண்கள்   அதிக ஆர்வத்தை தூண்டுவார்கள் .பட்டுப்பாவாடையில் நகைகள்  அணிந்து  சும்மா தகதகன்னு  ஜொலிப்பார்கள்.

 முறுக்கு, அதிரசம், தேன்குழல், சீடை, நெய்யுருண்டை, ரவாலட்டு, சோமாஸ் என்று பல ஐட்டங்கள் வர, எங்கம்மா ஒரு பெரிய தூக்கில் போட்டு எறும்பு வராமல்  இருக்க மேலே கம்பியில் தொங்கவிடுவார்கள். அந்த பலகாரங்கள் ஒரு ரெண்டு மூணு வாரத்துக்கு வரும். பின்னர்தான் தெரிந்தது, அது எங்களுக்கு எட்டாத வண்ணம் இருக்க மேலே தொங்கவிடுவார்கள் என்று.

அப்போது “சேகர் சேகர்”, என்று சில நண்பர்கள் தேடிவர, திண்ணையில் உட்கார்ந்து கொண்டு, விளக்கு மாற்றுக் குச்சியில் பிஜ்லி அல்லது ஓலை வெடியைக் கோர்த்து, மெழுகு வர்த்தியில் காட்டிக்காட்டி வெடிப்போம். அதேபோல் சீனி வெடியையும் வெடிப்போம்.  சரஸ்வதி வெடி, லட்சுமி வெடி, அணுகுண்டு ஆகியவை பக்கம் போவதில்லை. அதெல்லாம் எனக்கு பயம். மதியம் நன்கு பசி  எடுக்க, ஆயா செய்து வச்சிருக்கும் முருங்கை காய் போட்ட மட்டன் குழம்பை ஊத்தி ஒரு கட்டு கட்டிவிட்டு திண்ணைக்கு மீண்டும் வருவேன்.
வெடிக்காத சில வெடிகளின் மருந்தைப் பிரித்துப் போட்டு ஒரு தாளில் வைத்து புஸ் வாணம் விடுவோம். ஒரு தடவை  கையில் பற்றி, கை சாம்பல் கலராகி ஒரு வாரம் ஆயிற்று ஆறுவதற்கு. மாலை வந்ததும், என் வீட்டு வாசலில் கூட்டம் கூடிவிடும்.

 கம்பி மத்தாப்பு, தரைச்சக்கரம், பூந்தொட்டி, சாட்டை ஆகியவற்றை மாற்றி மாற்றி கொளுத்தி, உற்சாகத்தில் எழும் கூக்குரலை மிகவும் ரசிப்பேன் . பெருமையாகவும் இருக்கும். குறைஞ்சது  ஒரு மணி நேரம் கொளுத்துவோம். மூன்று நான்கு நாட்கள் தொடர்ந்து மாலையில் கொளுத்துவேன்.'டேய் கொஞ்சம் கிறிஸ்மஸீக்கு எடுத்து வைடா" என்று அம்மா சொன்னாலும் கேட்க மாட்டேன்.
இப்படியெல்லாம் கொண்டாடிய தீபாவளி ஞாபகம் வர, இங்கே ஒன்னுமேயில்லையே  என்று நினைத்துக் கொண்டே படுத்திருந்தேன்.
"ஏங்க ஆபிசுக்குப் போகலயா, இன்னிக்கு லீவா ?," என்றாள் மனைவி. ஆபிஸில் ஏற்கனவே ஃபிக்ஸ் பண்ண ரெண்டு மீட்டிங் ஞாபகம் வர, நொந்து கொண்டே சாப்பிட்டுவிட்டு வெளியே வந்தால் ஒரே மழை. ஆஹா இதுவாவது நம்மூர் தீபாவளி டைமில் வருவது போல் வந்திருக்குது என்று நினைத்தவண்ணம் சப்வே எடுத்து ஆபிஸ் வந்தேன். 


என்னுடைய ஆபிஸ் இருக்கும் ஏழாவது மாடியில் தரையில் அட்டைகளை வைத்து ஒட்டியிருந்தனர். ஈரமாகிவிடும் என்று போட்டிருக்கிறார்களோ என்று யோசித்துவிட்டு உள்ளே  அமர்ந்து தீபாவளி மெசேஜ்களை பார்த்துக் கொண்டிருந்தேன். பக்கத்தில்  வெடிச்சத்தம் ஆரம்பித்தது. ஆஹா தீபாவளி ஆரம்பித்துவிட்டதே என்று யோசிக்கையில், "முட்டாளே நீயிருப்பது நியூயார்க்கில்", என்று என் மூளை ஞாபகப்படுத்தியது. ஆஹா இங்க வெடிச்சத்தம் என்றால் வேறு விவகாரமல்லவா என்று பயந்து வெளியே ஓடி வந்தேன். என் ஃபிளோரில் காலியாக இருந்த ஒரு சூட்டில் ( Suite) புதிதாக யாரோ வருவிருக்கிறார்கள் போலிருக்கிறது. உள்ளே கன்ஸ்ட்ரக்ஷன் சத்தம்தான் வெடிபோல் கேட்டது. மற்ற நேர மென்றால் தலைவலி வந்திருக்கும். ஆனால் இன்று தீபாவளியல்லவா, OK OK என்று நினைத்துவிட்டு உள்ளே வந்து உட்கார்ந்தால், வெளியே பயங்கர  வெடிச்சத்தம். ஜன்னல் வழி பார்த்தேன். அது வெடியல்ல இடி. இடியுடன் கூடிய நல்ல மழை பெய்து கொண்டிருந்தது. Blind-ஐ மூடிவிட்டு வந்து உட்கார்ந்தால், என் பக்கத்து கேபினில் ஒரே வெடிச்சத்தம். 'என்னடா நீல் என்னாச்சு ? ' என்று ஓடிப்போய் பார்த்தேன். கனடா பார்லிமென்ட்டில் டெரரிஸ்ட் அட்டாக்காம்.
                                Canadian parliament attacked
 நியூஸை சத்தமாக வைத்துவிட்டு உட்கார்ந்திருந்தான். எனக்கு 

கெட்ட  கோபம் வந்தது. "ஹெட்போனை மாட்டிக்கொள்" என்று சொல்ல கிட்டப்போனால், "ஆல்ஃபி இன்றைக்கு தீபாவளி லஞ்சுக்கு சரவணபவன் போகிறோம்" என்றான். கோபம் மாறிவிட 'ஹேப்பி தீபாவளி' என்று சொல்லிவிட்டு வந்தேன்.
லெக்சிங்டனில் உள்ள சரவணபவனுக்கு சென்றோம் .வழக்கம் போல் இருக்கும் கூட்டம் இல்லை. ஒரு சவுத் இந்தியன் தாலி  ஆர்டர் பண்ணிவிட்டு காத்திருக்கும்போது தீபாவளி சிறப்பு ஸ்வீட்டாக, வந்த எல்லோருக்கும் கல்கண்டு சாதம் கொஞ்சம் கொடுத்தார்கள் .அமிர்தமாக இருந்தது .உண்டு முடித்து ஆபீஸ் வந்தோம்.


ஆச்சரியமாக பிரதமர் மோடியிடமிருந்தும், HRD மினிஸ்டர் ஸ்மிர்த்தி ராணியிடமிருந்தும் தீபாவளி வாழ்த்து ஈமெயில் வந்திருந்தது மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்தது .

மாலையில் சீக்கிரம் வீட்டுக்கு வந்தால்,என் மனைவியின் தம்பி வீட்டிலிருந்து மட்டன் பிரியாணி வந்திருந்தது. பரவாயில்லை நியூயார்க்கில் தீபாவளி நாள் நல்லபடியாகவே கழிந்தது .தீபாவளி கொண்டாடிய ஒரு திருப்தியும் இருந்தது.

முற்றும்