Thursday, April 30, 2015

பரதேசி, தொழில் அதிபர் ஆன கதை: பகுதி 2


அது ஆறாவது வகுப்புப்பசங்க தங்கியிருந்த ரூம். "தம்பிகளா முருக்கு கடலைமிட்டாய் வேணுமா",ன்னு கேட்டான், “ஆமா வேணும் வேணும்”ட்டு எல்லாப் பசங்களும் வந்து சூழ்ந்திட்டாய்ங்க.
அப்புறம் பாத்தா ஓசின்னு நெனச்சுட்டாய்ங்க. “ஓசி இல்லடா காசுன்னு”, சொன்னதும் எல்லாப்பயலுகளும் போய்ட்டாய்ங்க. எனக்கு ரொம்ப அழுகை வந்துரிச்சு. "என்னடா கருப்பையா இப்படி ஆயிருச்சு, இப்ப என்ன செய்றதுன்னு", கேட்டேன்.
"கொஞ்சம் சும்மா இருடா, அதுக்குள்ள மனசை விட்டுட்ட, தொழிலதிபர்னா கொஞ்சம் தைரியம் வேணும்டான்னு" சொன்னான்.
Curious George Tin Keepsake Box

அதுக்கு அடுத்த ரூமில் 10 பைசாவுக்கு வியாபாரம் ஆச்சு. என்னடா விலை அதிகமாக இருக்குன்னு பலர் கேட்டதற்கு, "கடையில வாங்கி ரூம் சப்ளை செய்றம்ல எங்களுக்கு லாபம் வேணாமான்னு” கேட்டு கருப்பையா அதை நல்லாவே சமாளிச்சிட்டான். சில பசங்க கடன் கேட்டாய்ங்க, அதெல்லாம் முடியாது, 'கடன் அன்பை முறிக்கும்' னு கருப்பையா சொல்லிட்டான்.
மூணாவது ரூம் எட்டாவது பசங்க தங்கியிருந்த இடம். அதுல மடமடன்னு வித்து 5 ரூபாய்க்கு வித்துருச்சு. 9-ஆவது ரூமுல மிச்சம் எல்லாமே வித்துப் போச்சு. எனக்கு ஆச்சரியமாப் போச்சு. இந்தக்கருப்பையா கில்லாடிதான்னு நினைச்சேன். அப்புறம் கருப்பையா ரூமுக்கு போய் காசை எண்ணிப் பார்த்தோம்.
மொத்தம் 14.50 காசு இருந்துச்சு. முதல் போட்டது 10.50 அப்ப 4 ரூபாய் லாபம். ஆஹா நமக்கு 2 ரூபா கிடைக்கும்னு காஞ்சு போயிருந்த நான் கணக்குப் போட்டேன்.
 "சர்ரா லாபத்தில என் பங்கக் கொடு”,ன்னேன். “போடா கூறுகெட்டவனே, பாத்தியில்ல நம்ம சரக்குக்கு எவ்வளவு டிமாண்டுன்னு, இப்பவே லாபத்தை பிரிக்கக்கூடாது. சனிக்கிழமை போய் இந்த மொத்த ரூபாய்க்கும் சரக்கு வாங்கனும்”,னு சொன்னான். எனக்கு அது ஞாயமாய் பட்டதால விட்டுட்டேன். அதுக்குள்ள கருப்பையாவைத் தேடி சில பெரிய பசங்க வந்து பண்டம் கேட்டாங்க.
கருப்பையா சொன்னான், "திரும்ப சரக்கு கொள்முதல் பண்ணனும்னு". தம்பித்தோட்டம் பக்கத்துல கடையே கிடையாது, ஒன்னு காந்திகிராமம் கூட்டு ரோட்டுக்கு போகனும் இல்லேன்னா சின்னாபட்டி போகனும். ஒரு சோன் பப்டிகாரன் ஞாயிற்றுக் கிழமை மதியம் வருவான் அம்புட்டுதேன்.
 என் ரூமுக்குப் போய் ஆறுமுகத்துட்ட இந்த விஷயமெல்லாம் சொன்னேன். அதுக்குள்ள கருப்பையா பெட்டிக்கடை பத்தி எல்லாத்துக்கும் தெரிஞ்சு போச்சு. ஆனா நான்தான் அதுல பார்ட்னருன்னு ஒருத்தருக்கும் தெரியாது. அவனும் சொல்லல. அப்பதான் ஆறுமுகம் கேட்டான்.
"யார் முதல் போட்டது"
"நான் தான் போட்டேன்"
“ஓ அதான் காசில்லாம என்ட்ட  5 பைசா கடன் கேட்டயா?அதுசரி கருப்பையா எவ்வளவு போட்டான்?"
அவன் கேட்டவுடனேதான் கருப்பையா ஒன்னும் முதலே போடலேன்னு எனக்கு புரிஞ்சது.
நான் உடனே கருப்பையா ரூமுக்குப்போய் கேட்டேன். “என்னடா ஆல்ஃபி நீ காசு போட்ட, நான் பொருள் போட்டேன்ல”ன்னு ,சொல்லிட்டான்.
“என்ன பொருள்னு கேட்டதுக்கு, “டேய் பெட்டி நான்தானே போட்டேன்”,னு சொன்னான். அது கூட சரிதான்னு விட்டுட்டேன்.
இப்படியே வியாபாரம் சூடுபிடிச்சு, லாபம் மட்டும் எழுபது ரூபா வரைக்கும் போயிருச்சு.நான் ரொம்ப நச்சரிச்சதால நான் கொடுத்த முதல் ரூ.10.50 எனக்குத் திரும்ப கொடுத்துட்டான். ஆஹா போட்ட முதலும்  வந்துரிச்சு .கொள்ள லாபம் வரப்போறதை   நினைச்சு எனக்கு ராத்திரியெல்லாம் தூக்கம் வரல.அப்டியே அசந்து தூங்கினாலும் கலர் கலரா கனவு வந்துச்சு . சொளையா நூறு ரூவாவுக்கு மேல்  வரப்போவுதே அதை எப்படியெல்லாம் செலவளிக்கலாம்னு திட்டம் போட்டுக்கொண்டிருந்தேன்
சும்மா சொல்லக்கூடாது இந்தகருப்பையா பேருதான் கருப்பு மனசு வெள்ளைதான்னு நினைச்சு சந்தோஷப்பட்டேன் .
என் பார்ட்னர் ஆனதால, அவனை திண்டுக்கல் மாமா வீட்டுக்கு கூப்பிட்டுப் போய் அத்தை கையால மட்டன் குழம்பு செஞ்சு கொடுத்தேன். நல்லா உறிஞ்சி  உறிஞ்சி   சாப்பிட்டான். எங்க பிரின்சஸ் அத்தை வைக்கிற மட்டன் குழம்பு சாப்பிட்டா, கை மணம் இரண்டு மூனு நாளைக்கு இருக்கும்.
பெட்டிக்கடையைப் பத்தி கேள்விப்பட்ட வார்டன், ஒரு நாள் சாயங்கால பிரேயர் வச்சு கருப்பையாவை ரொம்ப பாராட்டினார். ஆனா நான்தான்  முதல் போட்ட பார்ட்னருன்னு அவன் சொல்வேயில்லை.
ஒரு நாள் எனக்கு ஸ்பெஷல் கிளாஸ் இருந்ததால, சரக்கு வாங்க அவனே போனான். அப்ப பசங்க கேட்டாங்கன்னு கத்தரியும் தொப்பி போலிஸ் சிகரட்டும் வாங்கிட்டு வந்துட்டான். தற்செயலாய் அதைப் பார்த்த நான், "டேய் இது தப்புறான்னு”, சொன்னேன். “பேசாமா இரு சிகரெட்டு வித்தா பாதிக்குப்பாதி லாபம்னு",சொன்னான். அதிலிருந்து என்னக் கூப்பிடுறதேயில்லை கணக்கும் காண்பிக்கிறதில்ல. லாபம் கொழிச்சது. வியாபாரத்துக்கும் என்னைக் கூப்பிட்டு போறதில்ல.
ஒரு நாள் சாயந்திரம் பிரேயர் முடிஞ்சவுடன் ஸ்டடி டைம்ல வார்டன் என்னைக் கூப்பிட்டனுப்பினார்.அவர் ரூமுக்குள்ள கருப்பையாவும் கைகட்டி நின்னுக்கிட்டிருந்தான்.
"நீதான் இவனுக்கு பார்ட்னராமே", என்றார் வார்டன் சவரிமுத்து. எனக்கு ஏதோ சிக்கல் ஆயிருச்சுன்னு தெரிஞ்சு போயி  பேசாமலிருந்தேன்.
"சிகரெட் விக்குமளவிற்கு நீங்கள்லாம் பெரிய ஆளா ஆயிட்டிங்களோ" ன்னு வார்டன் என்னைப் பார்த்துக் கத்த, நான் கருப்பையாவை முறைத்தேன்.
“யாராவது சிகரெட் குடிச்சா, ஹாஸ்டலைவிட்டு டிஸ்மிஸ் பண்ணிடுவோம்னு தெரியும்ல. இங்கே உள்ளேயே வந்து நீங்களே சிகரெட் வித்து மாணவர்களை கெடுப்பதற்கு உங்களுக்கு என்ன தண்டணை தர்றதுன்னு" ,சொன்னவுடன். நான் பயந்து போய் வார்டனிடம் மன்னிப்புக்கேட்டேன். ஆனா கருப்பையா தெனாவட்டா நின்னுக்கிட்டிருந்தான். அந்த சூழ்நிலையிலும் அவன்தான் சிகரெட் விக்கிற ஐடியா சொன்னான்னு நான் காட்டிக் கொடுக்கல.
“சரிசரி இதான் கடைசி வார்னிங்னு”, சொல்லி பெட்டியில் இருந்த சிகரெட்டு பாக்கெட்டுகளை எடுத்து குப்பையில் போட்டார். “பெட்டியில் இருந்த மத்த பொருட்களை சீக்கிரம் வித்துட்டு இதோட இந்த வேலையை ஓறங்கட்டுங்க”ன்னு சொன்னார்.
கருப்பையா கோவமா வெளியே போயிட்டன். நானும் வெளியே வந்து அவனைச் சத்தம் போட, ரெண்டு பேருக்கும் ஒரே சண்டையாய்ப் போச்சு. பேச்சு வார்த்தையும் நின்னு போச்சு.
ஒரு வாரம் கழிச்சு ஆறுமுகத்துட்ட சொல்லி லாபத்துல என்னோட பங்கைக் கேட்டனுப்பினேன். “அதுதான் ஏற்கனவே அவன் போட்ட முதல திரும்பிக் கொடுத்தேட்டேன்ல, மத்தது எல்லாம் நஷ்டமாப் போச்சு”ன்னு சொல்லி அனுப்பிட்டான். என் பங்குக்கு குறைஞ்ச பச்சம் நூறு ரூபாயாவது வந்திருக்க வேண்டியது. கருப்பையா ஏமாத்திட்டான்.
“கையில இருந்து எந்தக்காசும் போடாம ஒன் காசை வைச்சே லாபம் பாத்து சம்பாதிச்சுட்டான். நீதாண்டா ஏமாந்த சோணகிரி”ன்னு சொன்னான் ஆறுமுகம். அவன் சொல்லவும் தான் நான் ஏமாந்துபோனது முழுசா விளங்குச்சு. அவ்வளவு தெறமை இருந்தா நான் ஏன் இன்னும் பரதேசியாய் இருக்கேன்.சரி விர்ரா  நாம எப்படியாவது அவனை பழி வாங்கிருவோம்னு”, சொன்னார்கள்  ஆறுமுகமும்  ஜோசப்பும் .வேணாம்னு   சொன்னேன் .
அதுக்கு அடுத்த மாசம் ஹாஸ்டல் டேக்கு மொட்ட மாடி மேல ஏறி தோரணம் கட்டிக்கிட்டிருந்த போது, மூனாவது மாடியிலிருந்து விழுந்து கருப்பையாவுக்கு கை ஒடிஞ்சு போயிருச்சு. 

அப்ப பக்கத்தில நானும்தான் இருந்தேன். ஆனா சத்தியமா சொல்றேன், அதுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமில்ல.

இதன்  முதல் பகுதியைப் படிக்க இங்கே சுட்டவும் http://paradesiatnewyork.blogspot.com/2015/04/1.html


முற்றும்

பின்குறிப்பு ;

சிறிது சிறிதாக நலம் அடைந்து வருகிறேன் .இப்பவும் வீட்டில்தான் இருக்கிறேன் .ஒற்றைக்கைதான்.நேரிலும் அலைபேசியிலும் வந்து நலம் விசாரித்த அணைத்து நண்பர்களுக்கும் ஏன் மனமார்ந்த நன்றிகள்.

Tuesday, April 28, 2015

பரதேசி, தொழில் அதிபர் ஆன கதை: பகுதி 1

Thambithottam Higher secondary School
Thambithottam School, Gandhigram
 "டேய் ஆல்ஃபி நீதாண்டா என் பார்ட்னர்" என்றான் கருப்பையா. எதில் பார்ட்னர் கறதைச் சொல்வதற்கு முன்னே கருப்பையாவைப் பத்தி கொஞ்சம் சொல்லிர்றேன்.  கருப்பையா எங்கூட தம்பித்தோட்டம் ஹாஸ்டல்ல தங்கியிருந்தவன். காரைக்குடி அவன் சொந்த ஊரு. தம்பித்தோட்டத்தைப்பற்றி ஏற்கனவே சொல்லியிருக்கேன். மறந்து போனவங்களுக்கு சொல்றேன் அது காந்தி கிராமம் தம்பித்தோட்டம் மேல்நிலைப்பள்ளியோட மாணவர் தங்கும் ஹாஸ்டல். அங்குதான் நான் +1 மற்றும் +2 படித்தேன். கருப்பையா, செட்டியார்தானேன்னு நீங்க கேக்கறது காதுல விழுகுது. கரெக்டு அவன் செட்டியார்தான். அத அவனே பலதடவை சொல்லியிருக்கான். பயபுள்ளைக்கு பெரிய தொழிலதிபராக வரணும்னு ரொம்ப ஆசை. அதனாலதான் அவன் காமெர்ஸ் குரூப் எடுத்திருந்தான். நான் மேத்ஸ் குரூப். வேறு வேறு குரூப் மட்டுமல்ல ஹாஸ்டலில் வேற வேற ரூம். அப்புறம் எப்படி நண்பனானான் அதுவும் பார்ட்னராகன்னு நீங்க நினைக்கறீங்க. அட நினைச்சாலும் நினைக்காட்டியும், சொல்றது என் கடமையில்ல. அவன் பார்ட்னருக்கு ஆள் சேர்க்க பல பேர் கூட பழகியிருக்கான். என்னோட பால்வடியுற (?) அப்பாவி முகத்தைப் பாத்து, இவன்தான் லாயக்குன்னு என்ட்ட வந்தான். எதுக்குடா பார்ட்னருன்னு கேட்டேன்.
“டேய் என் கூட சேர்ந்து தொழிலதிபர் ஆக ஒனக்கு விருப்பமா? நான் உன்னை ஆக்கிக் காண்பிக்கிறேன். செட்டியார்ங்கறதால என் ரத்தத்திலே அது ஊறியிருக்கு".
"சர்ரா நல்லா ஆகு, யாரு வேணும்ணா, ஆனா அதுக்கு படிச்சு முடிக்கணுமேண்டா".
“அட நீ வேற, தொழிலுக்கு படிப்பெல்லாம் அவசியமில்லை திறமை இருந்தா போதும். அட பணம் எண்ணத்தெரிஞ்ச்சா போதும்டா. அதோட என்ட்ட ஒரு நல்ல திட்டம் இருக்கு”          “சரி சொல்லு”
“ஒரு பெட்டிக்கடை ஆரம்பிக்கலாம். நீயும் நானும் கூட்டாளிகள் ஆளுக்குப்பாதி முதல் போடலாம்.”
“பொட்டிக்கடையா? என்ன விளையாடுரியா, அதுக்கு நிறைய பணம் வேணும்ல”.
“அதெல்லாம் தேவையில்ல? உன்ட்ட எவ்வளவு பணம் இருக்கு? “
“நீவேற எங்கப்பா மாசத்துக்கு 20 ரூபாய்தான் தருவாரு.”
“அப்படியா? அதில பத்து ரூபா மட்டும் நீ போடு”,
“பத்து ரூபாவா? பாக்கெட் மணியில் பாதியாச்சேடா அதுக்கு நிறைய தியாகம் பண்ணனுமே?.”
“என்ன தியாகம்?”
மீதம் 10 ரூபாய்ல சின்னாப்பட்டி 2 படம் பார்க்கத்தான் சரியா இருக்கும் .முருக்கு, சோன்பப்டி, மாங்காய், கடலைமிட்டாய்னு எதுவுமே வாங்க முடியாதே”.
“டே முதல் போடாம எந்தத் தொழிலும் செய்ய முடியாது. 10 ரூபா போட்டா உனக்கு 15 ரூபாய் கிடைக்கும்ரா. கிடைக்கிற லாபத்துல ஆளுக்குப் பாதி”.
“அது சரி பத்து ரூபாய்க்கு எப்படிரா பொட்டிக் கடை வைக்கிறது, அதோட நம்ம இப்ப ஹாஸ்டல்ல இல்ல தங்கி இருக்கோம்”.
“பொட்டி என்ட்ட இருக்குன்னு” சொல்லிட்டு ப்ரீப்கேஸ் சைஸீல இருக்குமே ஒரு சின்ன தகரப்பெட்டி, அத தூக்கிட்டு வந்து காண்பிச்சான்.  இதாண்டா பொட்டிக் கடைன்னு சொன்னான்.

எனக்கு சிரிப்பு வந்துருச்சு. பொட்டிக் கடைக்கு ஒரு சின்ன பெட்டியை தூக்கிட்டு வருவான்னு நான் எதிர்பார்க்கவே இல்லை.
“இதுல எப்படிரா? கடை வைக்கிறது? சும்மா கிண்டல் பண்ணாதே”. 
“அவசரப்படாதரா, ன் பத்து ரூபாயைக் கொடு, சனிக்கிழமை 'ஃப்ரீ டைம்' விடுவாங்கள்ல அப்ப வெளியே போய் 'கொள்முதல்' பண்ணிட்டு வந்துரலாம்.
"கொள்முதலா என்னடா பெரிய வார்த்தையெல்லாம் சொல்ற, ஆமா என்ன பொருள் வாங்கப்போற".
“ எங்கயும் போடத்தேவையில்ல, சாயந்திரம் ஸ்கூல் முடிஞ்சவுடனே, ஹாஸ்டல்ல பெட்டியை ஒவ்வொரு ரூமா தூக்கிட்டு போய் விக்கலாம்”.
இதைக் கேட்டதும் எனக்கு ஒரே ஆச்சரியமா போயிருச்சு. செட்டியார் மூளை எப்படியெல்லாம் யோசிக்குதுன்னு நெனைச்சு பிரமிப்பா இருந்துச்சு.
“என்னடா யோசிக்கிற, வியாபாரத்துக்கு நான் பொறுப்பு .சும்மா நீ கூட வந்தா போதும்”.
“சர்ரா வர்ற சனிக்கிழமை போலாம்”னு சொன்னேன். சொன்னபடியே ரெண்டு பேரும் சனிக்கிழமை மதியம் 2-6 எங்களுக்கு விடும் ஃப்ரீ டைமில், சின்னாபட்டி வந்து  வாங்கினோம். ஸாரி, கருப்பையா பாஷையில 'கொள்முதல்' பண்ணோம். மொத்தம் 10 ரூபாய் 50 பைசா ஆச்சு. அந்த 50 காசையும் என்னிடமே வாங்குனான்.
“சர்ரா எப்படா ரூமு ரூமா போறதுன்னேன்
"இன்னக்கி வேணாம், இன்னைக்கி எல்லாரும் வெளியில போயிட்டு வருவாய்ங்கல்ல. ஒரு நாள் விட்டு திங்கக்கிழமை சாயந்திரம் போலாம்னு," சொன்னான்.
ஞாயித்துக்கிழமை சர்ச்சுல காணிக்கை போடக்கூட காசில்ல, எல்லாத்தையும் பயபுள்ள கருப்பையா வாங்கிட்டான். சும்மாங்காச்சுக்கும் வெறும் கையை காணிக்கைப் பையில்விட்டு எடுத்தேன். கர்த்தர் மன்னிப்பாராக.
ஹாஸ்டலுக்கு வந்தபிறகு அவனைப் பாத்து, "டே ஒரு கடுக்கு மிட்டாய் கொடுன்னேன்."
“போடா அதெல்லாம் கொடுக்க முடியாது. வியாபாரம் ஆரம்பிக்கும் முன்னால நாமே தொடக்கூடாது". என்றான்.
“அட என் லாபத்துல கழிச்சுக்கடான்னு” சொல்லியும் அவன் கேட்கல. அப்புறம் ஆறுமுகம்கிட்ட 5 பைசா கடன் வாங்கி, கருப்பையாவிடம் கடுக்கு மிட்டாய் வாங்கினேன்.
திங்கள் கிழமை சாயந்திரம் ஸ்கூல் விட்டு வந்து யூனிபார்மை கழட்டிபோட்டு முகம் கைகால் கழுவிட்டு கருப்பையா ரூமுக்குப் போனேன். மனசெல்லாம் படபடன்னு இருந்துச்சு. நானும் தொழிலதிபர்தான்னு நெனைக்கும்போது ரொம்பப் பெருமையா இருந்துச்சு.
கருப்பையா வெள்ளை வேட்டி வெள்ளைச் சட்டை போட்டு நெத்தியில திருநீரு போட்டு அம்சமாக இருந்தான். அவனைப் பார்த்தா அச்சு அசல் வியாபாரி மாதிரியே இருந்தான். அதைப் பார்க்கும் போது அடடா என்னைப் பார்த்தா தொழிலதிபர்னு சத்தியம் செஞ்சாலும் நம்ப மாட்டாய்ங்களேன்னு  தோனுச்சு. அவனோட சின்ன தகரப்பெட்டியை திறந்து காண்பிச்சான். சும்மா சொல்லக் கூடாது அழகா அடுக்கி வச்சிருந்தான். பெட்டியை மூடும்போது பார்த்தேன். பெட்டி மேல் "கருப்பையா பல்பொருள் அங்காடி"-ன்னு  எழுதி ஒட்டி, கலர் பென்சில்ல சுத்திலும் கோடு போட்டு பூவெல்லாம் வரைஞ்சு வச்சிருந்தான்.
"என்னடா ஒன்பேர் மட்டும் எழுதியிருக்கன்னு”, கேட்டதுக்கு, "பெட்டி என்னதுதானன்னு " சொன்னான். நானும் பரவாயில்லன்னு விட்டுட்டேன்.
அப்புறம் பெட்டியைத் தூக்கிட்டு முத ரூமுக்குப் போனோம்.

- தொடரும்.

Thursday, April 16, 2015

இசை முரசு நாகூர் ஹனிபா !!!!!!!

nagoor-hanifa
Nagoor hanifa
"டேய் சேகர் எந்திரிப்பா மணி 5 ஆயிருச்சு", என்றார் அம்மா. "பரீட்சைக்குப் படிக்கனும் காலையில எழுப்பி விட்டுறுங்கம்மா", என்று இரவு சொல்லும்போது இருக்கும் உற்சாகம் காலையில் அம்மா எழுப்பிவிடும்போது இருப்பதில்லை. மிகுந்த பிரயத்தனமுடன் எழுந்து வாய் கொப்பளித்து, முகம் கழுவி, புத்தகத்தை திறந்தேன்.
தூரத்தில் கரகரவென்று ஒலிபெருக்கியின் சப்தம் கேட்க, கூர்ந்து கவனித்தேன்.
"அதிகாலை நேரம் சுபுஹூக்குப் பின்னே, அண்ணல் நபி வரும் வேளை, இன்னல் செய்தாள் ஒரு மாது", என்று கம்பீரக் குரலில் நாகூர் ஹனிஃபாவின் பாடல் காற்றில் மிதந்து வந்து காதில் ஒலித்தது. அந்த நிர்மலமான அதிகாலை நேரத்தில், எனக்கே எனக்காக போட்டது போல் ஒலித்த பாடலைத் தவிர்த்துவிட்டு பாடத்தை என்னால் படிக்க முடியவில்லை. என்ன ஒரு ஆகர்ஷம்  அந்தக்குரலில். ஓங்கி ஒலித்த குரலிலும் என்ன ஒரு உணர்ச்சிப் பிரவாகம். அதனைத் தொடர்ந்து வந்த பாடல்களில் புரியாத வரிகளாய் இருந்தாலும் எளிய இசையிலும்,  குரலிலும் அசந்து போய் இருந்த நான் எங்கு படிப்பது?. பக்கத்துத் தெருவில் இருந்த பட்டாணியரின் (பத்தான்கள் என்பதுதான் இப்படி  மருவிவிட்டது) குடியிருப்பில் சந்தனக்கூடு திருவிழாவுக்காகத்தான் அந்த பாடல்கள் இசைத்தட்டு​களிலிருந்து போடப்பட்டன.   

அடுத்த நாள், கிராம போனில் (அப்ப டவுன் போன்னு தனியா இருக்குமோ ?) LP ரெக்கார்டில் ஊசி நெருடும் ஓசை கேட்டவுடனே, அம்மா எழுப்பாமலேயே எழுந்துவிட்டேன். மீண்டும் மீண்டும் கேட்க கேட்க, அந்தக் குரலுக்கு அப்படியே மயங்கி ரசிகனாகிவிட்டேன்.
காலை நேரத்தில் 7 மணிக்கு திருச்சி வானொலி நிலையத்தில் பக்திப் பாடல்கள் வரிசையில், LR ஈஸ்வரி, சாராள் நெளரோஜி பாடல்களுக்குப் பிறகு ஹனிஃபாவின் பாடல் ஒலிக்கும். அதனைக் கேட்டுவிட்டுத்தான் காலைக்கடனுக்கு போவேன். மற்ற மதப்பாடல்களுக்குப் பலபேர் இருந்தாலும் இஸ்லாத்துக்கென்று இருந்த ஒரே பாடகர் நாகூர் ஹனிபா மட்டும் தான்.
1975ல் என்று நினைக்கிறேன். தேவதானப்பட்டிகீழத்தெருவில் உள்ள பெரிய பள்ளிவாசலை புதிப்பித்து, கட்டி முடித்து ரம்ஜான் அன்று திறப்புவிழா செய்தனர். நாகூர் ஹனிபா கச்சேரி என்று கேள்விப்பட்டு, அம்மாவிடம் கேட்டேன், அப்பாவிடம் கேட்கச்  சொன்னார்கள். வேறொரு நிகழ்ச்சி என்றால் அவரிடம் கேட்டிருக்கவே மாட்டேன். நாகூர் ஹனிபா என்பதால் பயத்தையும் தயக்கத்தையும் விட்டுக் கேட்டேன். ஆச்சரியமாக உடனே சரியென்று சொல்லிவிட்டார் என் அப்பா. என் முஸ்லிம் நண்பர்கள் என்னை வரவேற்று நல்ல இடத்தில் (மண் தரையில்தான்) முன்னால் உட்கார வைத்தார்கள். 

 “திக்குத்திகந்தமும் கொண்டாடியே தீன் கூறி நிற்பர் கோடி” என்ற கணீர்க் குரலில் கச்சேரி ஆரம்பிக்க கூட்டம் முழுவதும் கப்சிப். சுமார் 10 மணிக்கு ஆரம்பித்த கச்சேரி 1 மணிக்குத்தான் முடிந்தது. கொஞ்சம் கூட போர் அடிக்காத மூன்று மணி நேர இசை மழை என்னை பரவசத்தின் உச்சத்திற்கே அழைத்துச் சென்றது நன்றாக ஞாபகமிருக்கிறது. ஒரு ஹார்மோனியம், புல்புல்தாரா ஒன்று, ஒரு புல்லாங்குழல் அவரே ஷெனாயும்  வாசித்தார். ஒரு தப்பு, பேங்கோஸ் மற்றும் effects ஒரு தபலா. கொஞ்சம் கூட இசைவெளியில்லாத இசை.
தியேட்டரில் 2 ஆவது ஷோவுக்குக் கூட விடாத என் அப்பா இதற்கு அனுமதித்தது ஆச்சரியம்தான். ஒருவேளை அவரும் ரசிகராக இருந்திருப்பாரோ. என் வீட்டுச் சூழ்நிலையில், இது இந்துப்பாடல் இது முஸ்லிம் பாடல் என்ற வித்தியாசமும் பாராட்டாமல், நான் வளர்ந்தது எனக்கே ஆசசரியமாகத்தான் இருக்கிறது. இசைக்கு, மொழி, மதம், என்றெல்லாம் இருக்கிறதா என்ன?
அவர் வெறும் பாடகர் மட்டுமல்ல, அவர் பாடிய பெரும்பாலான பாடல்களுக்கு இசையமைத்ததும் அவரே.
இசைமுரசின் ஓயாத இசையொலி 90-ஆவது வயதில் நிரந்தர ஓய்வு எடுத்துக் கொண்டது, இஸ்லாத்துக்கு மட்டுமல்ல இசையுலகிற்கே பெரும் இழப்புதான்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜூவூன்.
அவர் பாடிய எனக்குப் பிடித்த பாடல்கள்:
1.    மக்கத்து மலரே மாணிக்கச்சுடரே யாரசூலல்லா
2.    உம்மை ஒருபோதும் நான் மறவேன் மீரான்
3.    ஹஸ்பி ரஸ்பி ஜல்லல்லா
4.    பாத்திமா வாழ்ந்த கதை
5.     லாயில்லா ஹா இல்லல்லா ஹூ
6.    இறைவனிடம் கையேந்துங்கள்.
7.    தக்குப்பீர் முழக்கம்
8.    தீன்குலப்பெண்ணு எங்கள் திருமறைக் கண்ணு.
9.    அருள் மழை பொழிவாய் ரஹுமானே  .
10. கண்கள் குளம் ஆகுதம்மா கர்பலாவை நினைக்கையிலே
என்று சொல்லிக்கொண்டே போகலாம்
நாகூர் ஹனிபா பற்றிய சிறுகுறிப்பு:
1.    1925-ல் பிறந்தார்.
2.    கலைஞரின் பால்ய நண்பர். அண்ணா காலத்திலிருந்து கடைசிவரை திமுகவில் இருந்தவர்.
3.    1955-ல் இவர் பாடிய “அழைக்கிறார் அண்ணா”, என்ற HMV மூலம் வெளியிட்ட பாடல் அதிகம் விற்று விற்பனையில் சாதனை படைத்தது.
4.    கலைஞர், அன்பழகன் ஆகியோரை பெயர் சொல்லி அழைக்குமளவுக்கு நெருக்கமானவர்.
5.    திராவிட இயக்க மாநாடுகள் இவருடைய இசைக்கச்சேரியுடன் தான் ஆரம்பிக்குமாம்.
6.    MGR க்கும் நெருங்கிய நண்பர் எனினும், MGR திமுகவிலிருந்து பிரிந்தபோது, கூப்பிட்டுவிட்டு, தன்னோடு வரச்சொல்லி அழைக்கும்போது மறுத்து, எனக்கு ஒரே இறைவன், ஒரே கட்சி என்று சொன்னவர்.
7.    நாகூர், வாணியம்பாடி தொகுதிகளில் MLA க்கு நின்று தோற்றாலும், கலைஞர் இவருக்கு MLC பதவி மற்றும் வக்ஃப் போர்டு தலைவர் ஆகிய பதவிகளைக் கொடுத்து அழகு பார்த்தார்.
8.    1600 கோடி மதிப்புள்ள வக்ஃப் வாரியத் தலைவராய் இருந்தாலும் இறுதிவரை நேர்மையாக இருந்தார்.

அவர் பாடிய வெகுசில திரைப்படப் பாடல்கள்:
1.    எல்லோரும் கொண்டாடுவோம் - பாவ மன்னிப்பு
2.    நட்ட நடு கடல் மீதில் - செம்பருத்தி
3.    உன்மதமா என் மதமா?- ராமன் அப்துல்லா


பின்குறிப்பு :நண்பர்களே , எனக்கு நாளை ஒரு சிறிய சர்ஜெரி இருப்பதால் ,வருகின்ற வாரத்தில் பரதேசியின் பதிவுகள் வராது .உங்கள் தொடரும் ஆதரவுக்கு என் மனமார்ந்த நன்றிகள் .

Tuesday, April 14, 2015

சோழனுக்கு பாண்டியன் குறைந்தா போனான் ?

ஆஸ்டின் ,டெக்சஸ் பயணம் -பகுதி-5

        அவர் பெயர் நந்திதா பெரி (Nandita Berry). 2014 ஜனவரி முதல், கவர்னர் ரிக்பெரி (Rick Perry) அவர்களால் தனிப்பட்ட முறையில் அப்பாய்ண்ட் செய்யப்பட்டவர் நந்திதா. ரிக் பெரி, நந்திதா பெரியை நியமித்ததில் ஏதோ உள்குத்து இருக்கிறது என நினைக்க வேண்டாம். நன்றாக ஸ்பெல்லிங்கைப் பாருங்கள் Rick Perry வேறு & Nandita Berry  வேறு.
        இந்த நந்திதா ஹைதராபாத்தில் பிறந்து வளர்ந்து, சட்டம் படித்து தனது 21ஆவது வயதில் சட்ட மேற்படிப்புக்காக அமெரிக்கா வந்தார். படித்து முடித்து லாயராக பிராக்டிஸ் செய்து மைக்கேல் பெரி( Michael Berry) என்ற அமெரிக்கரைத் திருமணம் முடித்து, Rick Perry யிடம் பதவியில் அமர்ந்துள்ளார் என்பது இவரது சுருக் வரலாறு.
Tasha Willis
Nandita Berry
         டெக்சஸ் மாநிலத்தின் 109-ஆவது உள்துறை மந்திரி (Secretary of State) பொறுப்பேற்ற - நந்திதா அமெரிக்க மாநிலங்கள் முழுவதிலும் இந்தப் பதவியில் உட்காரும் முதல் பெண் மற்றும் முதல் இந்தியர் என்ற பெருமை பெறுகிறார். Secretary of State என்பது மிகவும் பெரிய பதவி.
அவரின் பதவியில் அவருக்குள்ள பொறுப்புகள் சில:
1.         மாநிலத்தின் தலைமை தேர்தல் அலுவலர் (Chief Election Officer)
2.         மெக்சிகோ நாட்டினுடன் உள்ள எல்லாத்தாவாக்களை தீர்க்கும் லயசன் அலுவலர்.
3.         டெக்சஸ் மாநிலத்தின் Chief Protocol Officer.
4.         ஸ்டேட் சீலின் பொறுப்பு இவரிடம்தான்.
5.         அரசு ஆவணங்களின் பொறுப்பு.
6.         அரசின் கொள்கை முடிவுகளை வெளியில்  பத்திரிக்கைகளுக்கு அறிவித்தல்.
 வெறும் 200 டாலர்களுடன் 21 வயதில் அமெரிக்கா வந்த இவர் இவ்வளவு உயரத்திற்கு முன்னேறியது நிச்சயமாக மாபெரும் சாதனைதான். அதுமட்டுமல்லாமல் பல நிறுவனங்களின் நிர்வாகத்துறையின் டைரக்டராகவும் பொறுப்பில் இருக்கிறார்.
அவற்றுள் சில கீழே:
1.         Houston Zoo
2.         South Asian Chamber of Commerce
3.         Houston Area Women's Center
4.         Community Family Center of Houston
இவர் இந்தியர் என்பதில் நமக்குப் பெருமைதானே.
      அதன் பின்னர் எலிவேட்டரில் ஏறி 2ஆம் மாடியை அடைந்தோம். அங்கிருந்து கீழே பார்க்கும் வியூ மிகவும் அழகாக இருந்தது. பள்ளிக்கொயர் பாடும் பாடல்கள் அப்படியே மிதந்து மேலே வந்தன.

          அப்படியே பக்கத்தில் நுழைந்தால் செனட் சேம்பர் இருந்தது. டெக்சஸ் மாநில 31 செனட்டர்களும் (நம்மூர் MLA  மாதிரி) இங்குதான் கூடி சட்டமியற்றுவார்கள். ஸ்டீபன் ஆஸ்டின் அவர்களின் மிகப்பெரிய பெயின்ட்டிங் அங்கிருந்தது. அதுதவிர நுழைவாயிலின் இருபுறமும் ஹென்ரி ஆர்தர் மெக்கர்டில் (Henry Arthur MCARDLE 1836-1908) அவர்களால் வரையப்பட்ட இருபெரும் ஓவியங்கள் இருந்தன.
Governor's Lounge 

           அதனை தாண்டிச் சென்றால் டெக்சஸ் மாநில ஆளுநரின் வரவேற்பரை இருந்தது. காலங்காலமாக கவர்னர்கள் பயன்படுத்திய கண்ணாடி, ஷேண்டலியர் ,  மார்பிள் மேஜை சோஃபா ஆகியவை அங்கு இருந்தன. 

Pastor Johnson

பாஸ்டர் ஜான்சன் அங்கு சென்று கவர்னர் இருக்கையில் அமர்ந்து போஸ் கொடுத்தார். கம்பீரமாகத்தான் இருந்தார். சோழரத்தம் அல்லவா? பாண்டியன் என்ன சோழனுக்கு குறைந்தா போனான் என்று விரைந்து சென்று நானும் போய் உட்கார்ந்தேன். இன்னும் ஒருவர் பக்கத்தில் உட்காரும் அளவுக்கு இடமிருந்தது. ஹ்ம்ம் பாண்டியன் குறைந்துதான் போனான்.

      மறுபுறம் இன்னும் பெரிய மன்றம்  வந்தது.இங்குதான் டெக்சஸின் 150 House Of Representatives உட்கார்ந்து மாநில அலுவல் நடத்துவார்களாம். மேஜைகளும் சேர்களும் கீழே கார்ப்பெட்டுகளும் மிக நேர்த்தியாக இருந்தன. இதுதான் இந்த பில்டிங்கிலேயே மிகப்பெரிய அறை என்றும் சொன்னார்கள். 1836ல் நடந்த போரில் பயன்படுத்தியிருந்த  டெக்சஸ் கொடி காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. அதன் பக்கத்தில் பெரிய நூலகம் ஒன்றிருந்தது. “Legislative Reference Library” என்று சொன்னார்கள்.

Senate Chamber

           அங்கிருந்து  செல்லும் அலங்காரமான கிரானைட் படிகளில் மேலே சென்றோம். அங்கு மிகப்பெரிய மற்றொரு மன்றம் இருந்தது. அதுதான் சுப்ரீம் கோர்ட் என்று சொன்னார்கள். இடவசதி பத்தாமல் போனதால் 1959-ல் தனிக்கட்டடத்திற்கு மாற்றப்பட்டதாம். ஆனால் 1888 முதல் 1959 வரை இங்குதான் செயல்பட்டதாம். இப்போதும் இது சில முக்கிய மீட்டிங்குகள் நடப்பதற்கு பயன் படுத்தப்படுகிறது. முதன்முதலாக இங்கு நீதிபதிகளாக இருந்த Abner Lipscomb, John Hemphil & Royal Wheeler ஆகியோரின் ஓவியங்களும் காணப்பட்டன.
Supreme Court

         நல்ல வரலாற்றுச் சிறப்பு மிகுந்த கேப்பிடல் பில்டிங்கை பார்த்த திருப்தியுடன் கீழிறங்கினோம். அங்கிருந்து நேராக ஓட்டலுக்குத் திரும்பி பெட்டிகளை எடுத்துக் கொண்டு ஆஸ்டினுக்கு ஒரு குட்பை சொல்லிவிட்டு ஏர்போர்ட் வந்து சேர்ந்தோம்.  

         ஏர்போட்டில் நாங்கள் மூவரும் செக்யூரிட்டி செக்கிங் முடித்து உள்ளே நுழைந்தோம். பாஸ்டர் ஜான்சன் சில நிமிடங்களில் வந்துவிடுவதாகச் சொல்லிச் சென்றார். நானும் சதக்கும் உள்ளே போய் விமானத்தில் உட்கார்ந்தோம்.
     சில நிமிடங்களில் “லாஸ்ட் கால் ஃபார் ரேட் ஹினா சமி”, என்ற அறிவிப்பு தொடர்ந்து வந்தது. சதக்தான் மறுபடியும் கண்டுபிடித்தார், “ஆல்ஃபி உங்க ஆளைத்தான் கூப்பிடுறாங்க”, என்று.  அய்யய்யோ மறுபடியும் முதல்ல இருந்தா ? 
அந்த முதல் கதையைப்  படிக்க இங்கே சுட்டவும் 
http://paradesiatnewyork.blogspot.com/2015/03/blog-post_9.html

முற்றும்.