Showing posts with label ராக்கஃபெல்லர் மாளிகை. Show all posts
Showing posts with label ராக்கஃபெல்லர் மாளிகை. Show all posts

Tuesday, September 3, 2013

ராக்கஃபெல்லர் மாளிகை Part 4 : பணம் பத்தும் செய்யும் $$$$$$$

     


    வெளியே தோட்டப்பகுதிக்கு வந்தோம். எங்கு பார்த்தாலும் பெரிய பெரிய நீருற்றுகள், இரும்புச்சிற்பங்கள், கான்கிரீட் மற்றும் டெரக்கோட்டா சிற்பங்கள் என ஒவ்வொன்றும் உலகின் பெரிய கலை நிபுணர்களால் வடிவமைக்கப்பட்டு, அழகாக இருந்தன.

 ரோமன் கார்டன், ஜப்பானிய கார்டன் என்று அமைக்கப்பட்ட அனைத்தும் நன்கு பராமரிக்கப்பட்டு இருந்தன. வீடு இருக்கும் இடம் ஒரு குன்றின் மேல் இருப்பதால், தோட்டங்கள் அடுக்கடுக்காக அமைக்கப்பட்டிருந்தது.

ஒரு ரோஜாத்தோட்டத்தின் சரிவில் அழகான ஒரு நீச்சல் குளம் இருந்தது.

 பழைய ஸ்டைலில் கற்களால் வடிவமைக்கப்பட்டு, சுற்றிலும் சிற்பங்களால் சூழப்பட்டிருந்தது. இங்குதான் ராக்கஃபெல்லரின் பிள்ளைகள் நீச்சல் கற்றுக் கொண்டனராம்.

           வீட்டின் கிழக்குப்பகுதியில்  ஒழுங்காக வடிவமைக்கப்பட்ட கால்ஃப் மைதானம் இருந்தது. பறந்து விரிந்த அந்த மைதானத்தை இன்றும் அவர்கள் குடும்பம், ஆண்டிற்கு ஒரு மில்லியன் டாலர் செலவில் பராமரித்து வருகிறார்கள். குடும்பத்தின் உறுப்பினர்கள் ஒரு பத்து பேர் ஆண்டுக்கொரு முறை, கோடைகாலத்தில் ஒரு பத்து நாள் இங்கு தங்கியிருந்து விளையாடுவார்களாம். பணம் பத்தும் செய்யும் என்பது இதுதானோ? வேறு பொதுமக்கள் இங்கு வந்து விளையாட  அனுமதியில்லை.

              அடுத்து, வீட்டிற்குப்பின்புறம்  ஒரு சுரங்கப்பாதை இருந்தது. வீட்டிற்கு பலபொருட்களை சப்ளை செய்யும் வேன்களும், லாரிகளும் வந்து வந்து போவதும், அவைகள் ஏற்படுத்தும் சத்தமும் ,ராக்கஃபெல்லருக்கு எரிச்சலை மூட்டியதால் சத்தம் வராமல் அவைகள் வந்து செல்ல மலையில் சுரங்கம் ஏற்படுத்தப்பட்டதாம். வாகனங்கள் சுரங்க வழியில் அன்டர் கிரவுண்ட் வழியாக நேராக வீட்டின் பேஸ்மண்ட்டில் பொருள்களை இறக்கிவிட்டு திரும்பிவிடுமாம். ம் பெருமூச்சுதான் வந்தது. நம் வீட்டில் என்ன சத்தம்?  என்றால் சத்தம் உடனே அதிகம் ஆகிவிடுகிறது. பேசாமல் காதில் பஞ்சை வைத்துக் கொள்வதுதான்  உத்தமம்.

           இதுபோல ரான் சொன்ன இன்னொரு  சம்பவமும்  ஆச்சரியத்தைக் கொடுத்தது.முதன்முதலாக வீடு கட்டும்போது, அவர்களுடைய பகுதிகளின் குறுக்கே ஒரு ரயில் பாதை இருந்ததாம். அடிக்கடி அந்த வழியாக ரயில்கள் போவதின் சத்தம் தலைவருக்கு இடைஞ்சலாக இருக்க, மிகுந்த பொருட்செலவில் அந்த ரயில் பாதையை அவருடைய எஸ்டேட்டைவிட்டு தள்ளி அமைக்க ஏற்பாடு செய்தாராம். இப்படி நடக்க முடியாத பல காரியங்களை செய்தார் ராக்கஃபெல்லர்.அவருடைய செல்வாக்கையும், பணபலத்தையும் நினைத்தால், அம்மாடியோய்.
              பஸ் எங்களை ஏற்றிச்சென்று  அடுத்த பகுதியில் இறக்கிச் சென்றது. அது அவர்களின் குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் பிளே ஹவுஸ். மிகப்பிரமாண்டமாக வடிவமைக்கப்பட்ட அந்த உள் அரங்கில், சிறியவர் முதல் பெரியவர் வரை விளையாடக்கூடிய அனைத்து விளையாட்டுகளுக்கும் தனித்தனியே இடம் அமைக்கப்பட்டிருந்தது. உறை பனிக்காலத்திலும் குளிர்காலத்திலும் விளையாடக்கூடிய முறையில் அது இருந்தது. செஸ் போன்ற, சிறிய விளையாட்டு துவங்கி, டென்னிஸ், ஷட்டில் காக் போன்ற பல விளையாட்டு அரங்கங்கள் உள்ளே இருந்தன. வெளியாட்களுக்கு அனுமதி இல்லை.


                 அடுத்த ஸ்டாப் "கிரீன் ஹவுஸ்". பிரமாண்டமாக வடிவமைக்கப்பட்ட கண்ணாடி மாளிகையில், உலகின் பல வித தாவரங்கள், கொடி  வகைகள், பூச்செடிகள், மூலிகைகள் ஒட்டுச் செடிகள், போன்சேக்கள் ஆகியவை வளர்த்து பராமரிக்கப்பட்டன.
with my Daughter Anisha at the Coach house

            கடைசி   ஸ்டாப் "கோச் ஹவுஸ்".மூன்றடுக்கில் உயரமான ஒரு கோட்டை போன்ற கல் கட்டடம். நுழைந்தால் ஒரு பகுதி முழுவதும், குடும்பத்தினர் பயன்படுத்திய சிறிய, பெரிய கோச் வண்டிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அதனை யார் யார் பயன்படுத்தினார்கள் என்பதின் சான்றாக, ஒவ்வொரு வண்டியின் முன்னால், அவர்கள் அதே கோச் வண்டியில் உட்கார்ந்து சவாரி செய்யும் புகைப்படங்கள் இருந்தன. வண்டிகள் பளபளவென்று இன்றும், அழகாக மெயின்டெயின்  செய்யப்பட்டு இருந்தன. அதன் அடுத்த பகுதியில் பிரமாண்டமான ஓபன் லிஃப்ட் இருந்தது. ஒரு வேளை கோச்கள் ரிப்பேர் ஆனால், அந்த ஓபன் லிஃப்ட் மூலம் அப்படியே மூன்றாவது தளத்தில் உள்ள பணிமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு ரிப்பேர் செய்யப்படுமாம். அந்தப்பகுதியின் இறுதிப்பகுதியில், குதிரை லாடங்கள் இருந்தன. பல குதிரைகள் நின்று ஓய்வெடுக்க தனித்தனியாக தடுக்கப்பட்டு பல அறைகள் இருந்ததன. அதன் பக்கத்தில் அவற்றுக்கான மருத்துவமனையும் இருந்தது. ஆனால் இன்று ஒரு குதிரை கூட இல்லை. அவை தேவையுமில்லை.

         கட்டடத்தின் மறுபகுதியில் ராக்கஃபெல்லர் குடும்பத்தினர் பயன்படுத்திய வித விதமான மோட்டார் வாகனங்கள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. உலகில் கண்டுபிடிக்கப்பட்ட முதல் மாடலிலிருந்து கார்கள் இருந்தன. 

இருப்பதிலேயே பழைய கார், (Ford) சிறிய டிராக்டர் போல ஓபனாக இருந்தது வேடிக்கையாக இருந்தது. நெல்சன், நியூயார்க்கின் கவர்னராக இருந்தபோது பயன்படுத்திய 'NY-1' என்ற பிளேட் பொருத்திய, இரு படகுக்கார்களும் இருந்தன.

 பழைய ஜெர்மானிய, இங்கிலாந்து மற்றும் அமெரிக்க கார்களும் அங்கிருந்தன. அதன் மேற்பகுதியில் வேலைக்காரர், பணியாளர்களின் தங்குமிடங்கள் இருந்தன. நூற்றுக்கணக்கானோர் இருந்திருப்பார்கள்.

       டூர் முடித்து  பஸ் இறக்கத்தில் செல்லும்போது நானும் என் மனைவியும் சோர்ந்து இருந்தோம். அவள் ஏறி, இறங்கி சுற்றியதாலும், எனக்கு நான் பார்த்த படோடப வாழ்க்கை கொடுத்த மலைப்பினாலும்.

       கைக்கும் வாய்க்கும்  (Hand to Mouth) இருக்கும் என் வாழ்க்கையை நினைத்தபோது "பிறந்தால் பணக்காரனாய் பிறக்க வேண்டும், இல்லையெனில் அட்லீஸ்ட் பணக்கார பெண்ணை திருமணம் செய்ய வேண்டும்" என்றேன். என்ன? என்று கேட்டுத்திரும்பினாள்  என் மனைவி. அய்யையோ கொஞ்சம் சத்தமாய்ச்சொல்லிவிட்டேன் போலிருக்கு. இருக்கும் வாழ்க்கையின் சமாதானத்தை கெடுக்க இஷ்டமில்லாத நான் அவளைப் பார்த்து சற்று வழிந்து பரிதாபமாய் சிரிக்க முயன்றேன்.

"உனக்கும் கீழே உள்ளவர் கோடி,

நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு"

என்று நான் பலமுறை அவளுக்குப் பாடிய,கண்ணதாசனின் வரிகளை அவள் மெலிதாக பாடினாள். கொஞ்சம் சுதி தப்பினாலும், அது எவ்வளவு பெரிய உண்மை.

முற்றியது.

அடுத்த  வாரம் முதல் " மெயின் பயணம்"





Monday, August 26, 2013

ராக்கஃபெல்லர் மாளிகை Part 3 : மில்லியன் டாலர் எல்லாம் அவர்களுக்கு சும்மா ஜுஜிபி $$$$$$$$$$

John D Rockefeller .

நுழைவதற்கு முன் ராக்கஃபெல்லர் குறித்த சில அதிசயமான உண்மைகளை கீழே புல்லட் பாயிண்ட்டில் தருகிறேன்.
1) ஜான் டேவிசன் ராக்கஃபெல்லர் ஜூலை 8, 1839ல் ரிச்ஃபோர்டு, நியூயார்க் என்ற டத்தில் பிறந்தார்.
Eliza Davison Rockefeller


2) அப்பா பெயர் வில்லியம் ஏலி ராக்கஃபெல்லர், ஒரு சாதாரண சேல்ஸ் ரெப் . அதனை சாக்காக வைத்து குடும்பத்தினரைக் கவனிக்காது, பல நாட்கள் பல பெண்களுடன் வெளியூர் சென்றுவிட்டதால், குடும்பப்பொறுப்பு மற்றும் ஆறு பிள்ளைகளையும் கஷ்டப்பட்டு வளர்த்தது அம்மா எலிசா.

3) இரண்டாவதாக  பிறந்த, ஜான் டி ராக்கஃபெல்லர் தன் அம்மாவுக்குத் துணையாக வான்கோழி வளர்த்தும், உருளைக்கிழங்குகள் மற்றும் தின்பண்டங்கள் விற்றும் உதவினார்.

4) சிறு வயதிலேயே ஒழுக்கத்தையும் கீழ்ப்படிதலையும் கடைப்பற்றிய ராக்கபெல்லர் ஓகாயோவில் பள்ளிப்படிப்பு முடித்து, அதன்பின் புக் கீப்பிங் முடித்தார்.

5) கடைசி வரை மது அருந்துதல் மற்றும் புகை பிடித்தல் போன்ற கெட்ட பழக்கங்கள் அவரை அண்டவே இல்லை. அவர் மகனும் அப்படித்தான்.

6) 1855-ல் தனது 16-ஆவது வயதில் உதவிக்கணக்காளராக, தனது முதல் வேலையை ஆரம்பித்து நாள் முழுவதும் உழைத்தார். முதல் சம்பளம் ஒரு நாளைக்கு 50 சென்ட்ஸ் மட்டுமே.

7) 1859-ல் சிறிது சிறிதாக தொழில் செய்ய ஆரம்பித்தார். பின்னர் 1866-ல் தன் சகோதரர் வில்லியம் ராக்கஃபெல்லரோடு இணைந்து, 
கிளீவ்லண்டில் ஒரு எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை  உருவாக்கினார்.

8) ஜூன் மாதம் 1870-ல் ஸ்டாண்டர்டு ஆயில் கம்பெனி என்ற நிறுவனத்தை ஆரம்பித்தார். சில வருடங்களில் அது அமெரிக்காவின் மிகப்பெரிய நிறுவனமாக வளர, பணம் கொட்டோ கொட்டென்று கொட்டியது.

9) போட்டி நிறுவனங்கள் அனைத்தையும் வாங்கி, தன்  நிறுவனத்தோடு சேர்த்ததால், இது தனிப்பெரும் (Monopoly) நிறுவனமாக உயர்ந்தது.

10) ஆலயத்திற்கு தன்  வருமானத்தில் 10 சதவீதத்தை கொடுத்ததோடு, பல சமூக சேவைப்பணிகளில் ஈடுபட்டு வாரிக்கொடுத்த வள்ளல் இவர்.


அவர் ஆரம்பித்த பொது நிறுவனங்கள்:

v  சிகாகோ பல்கலைக்கழகம்
v  ராக்கஃபெல்லர் பல்கலைக்கழகம்
v  சென்ட்ரல் பிலிப்பைன்ஸ் பல்கலைக்கழகம்
v  ஜெனரல் எடுகேஷன் போர்டு
v  ராக்கஃபெல்லர் ஃபெளண்டேஷன்

11) ராக்கஃபெல்லர் குடும்பத்தின் மொத்த மதிப்பு $663.4 பில்லியன் டாலர்கள் (2007 மதிப்பின்படி) பில் கேட்ஸின் மதிப்பு $46 பில்லியன் மட்டுமே (2007 டாலர் மதிப்பின்படி)உலகின் முதல் பணக்காரரை விட இவர்கள் சொத்து ,எத்தனை மடங்கு அதிகம் பாருங்க

12) 1937ல் தன்னுடைய 97-வது வயதில் ராக்கஃபெல்லர் மரித்தார்.

13) ராக்கஃபெல்லர் குடும்பம் சமுதாயப்பணிக்காக வருடத்திற்கு 50 மில்லியனும் அவர்கள் ஃபெளண்டேஷன் மூலமாக வருடத்திற்கு சுமார் 170 மில்லியனும் செலவழிக்கிறார்கள்.

மில்லியன் டாலர் எல்லாம் அவர்களுக்கு சும்மா ஜுஜிபி .

இன்னும் வரும் !!!!!!!!!!!!

Monday, August 19, 2013

ராக்கஃபெல்லர் மாளிகை Part 2 : கலை மாளிகையா? கனவு மாளிகையா ?


       வீட்டுக்குள் ஒரு அமானுஷ்ய அமைதி இருந்தது. உலகெங்கிலும் இருந்து, பலவிதமான கலைப்பொருள்களை கண்ணை மூடிக்கொண்டு , கரன்சிகளைக்கொட்டி வாங்கி ,வீட்டின் பல இடங்களில் வைத்திருந்ததனர். அவற்றில் குறிப்பாக சீனாவின் "டங் டைனாஸ்டி" (13 ம் நூற்றாண்டு ) யைச் சேர்ந்த கலைப்பொருட்கள். உலகின் தலை சிறந்த ஓவியர்கள் வரைந்த ஓவியங்கள் ,சிலைகள் ,சிற்பங்கள், 2000 வருட பழைய கலைப்பொருட்கள்அழகாக வைக்கப்பட்டிருந்தன . 
Rockefeller Junior

வீட்டைக்கட்டுவதற்கே ஜான் டி ராக்கஃபெல்லர் கொஞ்சமே செலவு செய்திருந்தாலும், அவர் மகன், வீட்டை அழகுபடுத்துவதற்கு அதைவிட பலமடங்கு அதிகம் செலவு செய்தாராம் .
       அவர்கள் குடும்பத்தினர் பயன்படுத்திய வெள்ளி, பீங்கான் தட்டுகள் அழகாக காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. பீங்கான் பாத்திரங்கள், இங்கிலாந்திலிருந்தும், மேற்கு ஜெர்மனியில் இருந்தும் பிரத்யேக ஆர்டராக செய்யப்பட்டு அவற்றில் JDR என்ற இனிஷியல்கள் பொறிக்கப்பட்டு இருந்தன .
       ராக்கஃபெல்லரின் அழகான அலுவலக அறையைப் பார்த்தோம் . அவர் ஓய்வு பெற்ற பிறகு, சுமார் 40 வருடங்கள் பல்வேறு சாரிட்டிகளுக்கு உதவுவதில் நேரத்தை செலவிட்டிருக்கிறார். அலங்காரமான கூடத்தில் ஒரு மிகப்பெரிய பிக்காசோ ஓவியம் இருந்தது .வீட்டுக்குள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லாததால் ஒன்றையும் படம் எடுக்க முடியவில்லை. தரையை மெத்து மெத்தென்ற பெர்சியன் கார்ப்பட்டுகள் அலங்கரித்தன. அதற்குப் பக்கத்தில் ஒரு சிறிய அறைஇருந்தது ."என்ன கிச்சன் இவ்வளவு சிறிதாக இருக்கிறதே "என்று நினைத்த போது, நினைவை அறிந்தவர் போல ரான் சொன்னார், “இது கிச்சன்  இல்லை, இது பட்லர்களின் ஓய்வு அறை”, என்று.வேலையில்லாத சமயத்தில் அங்குமிங்கும் நடமாட அனுமதியில்லை என்பதால், இந்த காத்திருப்பு அறையில் இருப்பார்களாம். அங்கே ஒரு சிறிய கேபினட்டில் பல எண்கள் இருந்தன .ஒவ்வொரு எண்ணும் வீட்டின் பல பகுதிகளை மற்றும் ரூம்களைக்குறிக்கும். அதில் லைட் எரியும் போது, உதவி தேவைப்படுவதை அறிந்து பட்லர்கள் அங்கு செல்லவேண்டும். அந்த அறையில் ஏகப்பட்ட கப் சாஸர்களும் தொங்கவிடப்பட்டிருந்தன.  பெரிய விருந்துகள் நடக்கும்போது பயன்படுத்தப்படுமாம். அதோடு நிறைய அவன்கள் இருந்தன. உணவுப்பண்டங்கள் சிறிய லிப்ட் மூலம், டைனிங் ஹாலுக்கு அனுப்பி வைக்கப்படுமாம். குடும்ப டைனிங் ஹாலை கடந்து வந்தால் ,

 பின்புறமுள்ள பகுதி, கூரை முதற்கொண்டு கண்ணாடியில் செய்யப்பட்டு லெளஞ் போல இருந்தது . அதன் பின்னால் மாபெரும் ஹட்சன் ஆறு ஓடிக்கொண்டிருந்தது, கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது .
Nelson Rockefeller

     ஜுனியரின் மகன் நெல்சன் ராக்கஃபெல்லர், மூன்றாவது பிள்ளையாக இருந்தாலும், மிகுந்த சூட்டிகையாக இருந்ததால், அப்பாவுக்கும் தாத்தாவுக்கும் செல்லப்பிள்ளையாக இருந்தார். அவர் பல பேரின் கோரிக்கைக்கு இணங்க அரசியலில் இறங்கி, மாபெரும் நியூயார்க் மாநிலத்தின் கவர்னராக இருமுறையும், அமெரிக்க நாட்டின் துணை அதிபர் (Vice President) ஆக ஒருமுறையும் இருந்தபடியால், இந்த வீடு அவருக்கு தன்னுடைய சகோதர சகோதரிகளால் ஒருமனதாக அளிக்கப்பட்டது. அவர் தன்  பங்குக்கு, தன் அம்மா போல் மாடர்ன் ஆர்ட் ஓவியங்களில் கவரப்பட்டு, வீட்டின் கீழ்ப்பகுதி முழுவதுமாக, ஓவியங்களாலும் பிகாசோ டேப்பஸ்டிரியாலும் அலங்காரம் பண்ணியுள்ளார்.
 அவருடைய அம்மாவைப்பற்றிச்சொல்ல வேண்டும், அவர் பெயர் ஆபி ஆல்ட்ரிச் ராக்கஃபெல்லர். 

ஜுனியரின் மனைவியான இவர் அவரைத் திருமணம் செய்யும் போது, அப்போதிருந்த ஒரு செனட்டராக இருந்த தந்தையின் ஒரே வாரிசாக இருந்ததால், ஜுனியரைக் காட்டிலும் அதிகமான சொத்தோடு, இக்குடும்பத்துக்கு வந்து சேர்ந்தார். இனம், இனத்தோடும், பணம் பணத்தோடும் தான் சேரும் என்பது எவ்வளவு உண்மை. ஜுனியர், பழம் கலைப்பொருட்களை (Antiques) சேகரித்துக் கொண்டிருக்கும்போது, அவரது மனைவி  ஆபி, மாடர்ன் ஆர்ட்டில் மிகுந்த ஆர்வமுள்ளவராக இருந்தார். நியூயார்க்கில் உள்ள MOMA என்று அழைக்கப்படுகிற (Museum of Modern Art) மிகப்பெரிய மியூசியத்தை நிறுவி தன்னுடைய விலையுயர்ந்த, மிகப்பிரபலமான ஓவியர்கள் வரைந்த பல ஓவியங்களை நன்கொடையாகவும் அளித்தார். தாயின் வழியில் தனயன் நெல்சனும் மாடர்ன் ஆர்ட்டில் ஆர்வமுள்ளவராக இருந்தார்.
    மேலே உள்ள பகுதிகளுக்கு அனுமதி இல்லாததால். கீழ்ப்பகுதியின் ஓவியங்களை பார்த்து முடித்து வெளியே தோட்டப்பகுதிக்கு வந்தோம். தோட்டமா அது?

தொடரும்>>>>>>>>>>>>>>


Monday, July 29, 2013

ராக்கஃபெல்லர் மாளிகை Part 1 :பணக்காரர் வீட்டில் பரதேசி !!!!!!!!!!



ஒரு மிகப்பெரிய தொழிலதிபரும் அவர் மகனும் ஒரு வியாபார கருத்தரங்கத்திற்கு, வந்திருக்கும்போது, அப்பா ஒரு சிறிய ஹோட்டலிலும், மகன் இருப்பதிலேயே பெரிய ஹோட்டலில் இருந்த லக்சரி சூட்டிலும் தங்கியிருந்தாராம். பத்திரிக்கைக்காரர்கள் அப்பாவிடம் இதனைப்பற்றி வினவிய போது, " என்னுடைய அப்பா அவ்வளவு வசதியானவர் இல்லை. ஆனால் அவனுடைய அப்பா பணக்காரர் அல்லவா?" என்று சொன்னாராம்.
அவர்தான்,இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற தொழிலதிபரும், கொடைவள்ளலும் உலகின் முதல் பணக்காரருமான ஜான் டி ராக்கஃபெல்லர். ராக்கஃபெல்லர் நிறுவனம் இன்றும் மிகப்பெரிய நிறுவனம் ஆகும். சப்வேயில் செல்லும் போது வரும் 47-50 தெரு ஸ்டாப்பின் பெயர் ராக்கஃபெல்லர் சென்ட்டர். இறங்கிப்பார்த்தால், விண்ணைத்தொடும் அந்தக்கட்டிடம் ஒன்று போதுமே அவர்கள் குழுமம் எவ்வளவு பெரியதென்று அறிய.

அவர் எவ்வாறு வாழ்ந்திருப்பார் என்று 
அறிந்து கொள்ள எனக்கு ஒரு ஆசை பிறந்தது. கூகுளில் தேடியபோது, upstate ல் உள்ள ஹட்சன் வேலியில் அவரது வீடு, இன்று ஒரு பிரைவேட் மியூசியம் ஆக, 'ஓபன் டு  பப்ளிக்' என்று அறிந்ததும் என் மனம் துள்ளிக்குதித்தது.
'மெமோரியல் டே' விடுமுறையும் வர (May 27,2013) எங்கேயாவது போகவேண்டுமென ஆசைப்பட்ட முழுக்குடும்பத்தையும் கன்வின்ஸ் செய்து, இரண்டு காரில் கிளம்பினோம். அதிகத்தூரமில்லை, காலையில் 9 மணிக்கு கிளம்பி பத்து மணிக்கெல்லாம் 'ஹட்சன் வேலி' டூரிஸ்ட் இன்ஃபர்மேஷன் சென்டருக்கு சென்றுவிட்டோம். எங்கள் வீட்டிலிருந்து, "வேன்விக் எக்ஸ்பிரஸ் வே" எடுத்து "ஒயிட்ஸ்டோன் பிரிட்ஜை" தாண்டி ஹட்ச்சின்சன் பார்க்வே எடுத்தால், அழகான ஹட்சன் வேலி வருகிறது. அதில் உள்ள "ஸ்லீப்பி ஹாலோ" என்ற கிராமத்திற்கு ஒரு ஹலோ சொல்லி, ஒரு ஆழமான இறக்கத்தில் இறங்கித்திரும்ப, "இன்ஃபர்மேஷன் சென்டர்" வந்தது. ஆன்லைனில் 10.45 டூருக்கு புக் செய்திருந்ததை உறுதி செய்துகொண்டு ரிலாக்ஸ் ஆனோம்.
அந்த சென்டருக்கு அருகில் வாத்துகளும்,நீர்க்கோழிகளும் நீந்தியும் மேய்ந்தும் ஆட்சி செலுத்திய ஒரு அழகிய குளம் இருந்தது. அதன் மேட்டுக்கரையில் பல பிக்னிக் மேஜைகள் இருந்தன. "உட்கார்ந்து சாப்பிடுவதற்கு சரியான "இடம்" என்றாள் என் மனைவி. அவள் கவலை அவளுக்கு.

தமிழ்ப்பாரம்பரியத்தை பாதுகாக்கும் பொருட்டு, அவள் அதிகாலையில் எழுந்து கணவரின் கால்களைத் தொட்டு வணங்கிவிட்டு- (ச்ச்சும்மா ஒரு கற்பனை) தக்காளி சாதம், தயிர் சாதம், உருளைக்கிழங்கு மசியல் மற்றும் பீஃப் சுக்கா வருவல் ஆகியவற்றைச் செய்து ஹாட் பேக்கில் அடைத்துக் கொண்டு வந்திருந்தாள்.நல்லவேளை இதையெல்லாம் பார்த்து வருத்தப்பட ராக்கஃபெல்லர் உயிரோடு இல்லை,.

அந்த "இன்பர்மேஷன் சென்டர்" தான் பக்கத்திலுள்ள பல சுற்றுலாத்தலங்களுக்கு டிக்கட் வாங்கும் ஒரே மையம். பிலிப்ஸ்பர்க் மேனர், டச் சர்ச், மாண்ட்கோமரி, யூனியன் சர்ச், லிண்ட் ஹர்ஸ்ட்  என்று பல சுற்றுலா இடங்கள் அங்கு இருந்தன. மூன்று நான்கு நாட்கள் தங்கினால், எல்லாவற்றையும் கவர் செய்யலாம். ஆனால் நாங்கள்தான் சுற்றுலா வரவில்லையே, இது வெறும் சிற்றுலாதானே.
ராக்கஃபெல்லர்  எஸ்டேட் டூருக்கு பெயர் "கைகட்" (Kyekuit). இது முற்றிலும் ஒரு கைடட் டூர். எஸ்டேட்டுக்கு வேறு தனியார் வாகனங்கள் வர அனுமதியில்லையாததால், இந்த சென்டரிலிருந்து எங்களை அழைத்துப்போக ஒரு மினிபஸ் வந்தது. அதோடு ஒரு கைடும் இருந்தார். நாங்கள் புக் பண்ணியது "கிளாஸிக் டூர்". இதுபோல ராக்கஃபெல்லர் எஸ்டேட்டுக்கு பலவித டூர்கள் இருக்கின்றன. ஒரு குறிப்பிட்ட நேரத்தில் புக் செய்யப்பட்ட பல சிறு குழுக்களை சரியான நேரத்தில் அழைத்துச் சென்று, நேர்த்தியாக நடத்துகிறார்கள்.

பி.ஏ சிஸ்டத்தில் அறிவிப்பு வர, யாரும் சொல்லாமலேயே எல்லோரும் லைனில் நிற்க, டிக்கட் ஸ்டிக்கரை சட்டையில் ஒட்டியவர்களை சரிபார்த்து, அனுப்பினார் சுதேசி ரான். (உள்ளூர்க்காரர் என்பதால்)
அறிமுகப்படலம் முடித்து ராக்கஃபெல்லர் குடும்பத்தைப் பற்றி வரலாற்றுப்பாடம் எடுத்தார். “ஸ் அப்பாடா, இப்பவே கண்ணக்கட்டுதே”, என்றாள் மனைவி. பஸ் மலையில் ஏறத் துவங்கியது."உலகம் முழுவதும் சொத்துக்கள் இருக்கும் ராக்கஃபெல்லரின் எஸ்டேட்களில் ஹட்சன் வேலியில் உள்ளதுதான் பெரியது" என்றார் ரான். சுமார்  4000 ஏக்கராம். அம்மாடியோவ் என்று பெருமூச்சுவிட, "ஆனால் வீடு இருக்கும் பகுதி சிறியது தான்" என்று நிறுத்தி வெறும் 300 ஏக்கர்" என்றார். என்னது 300 ஏக்கர் சிறியதா, ஒரு ஆளுக்கு இது கொஞ்சம் ஓவர் என்று நினைத்தேன்.
சுற்றிலும் கோட்டைச்சுவர் போலிருக்க, ஒரு பெரிய அலங்கார இரும்பு நுழைவாயிலின் வழியாக பஸ் உள்ளே நுழைந்தது. எங்கு பார்த்தாலும், மரங்களும், புல்வெளிகளும், நீரூற்றுகளும் சூழ்நிலையை ரம்மியமாக்கின. சரேலென்ற ஒரு ஏற்றத்தில் பஸ் ஏறி நிற்க, கம்பீரமான வீடு தெரிந்தது. வீடா இது. மாபெரும் மாளிகை, ஏன்  அரண்மனை என்றும் சொல்லலாம். எப்படித்தான் பராமரிக்கிறார்களோ?
அவ்வளவு பெரிய வீட்டுக்கு, படிகள் நேராக, இல்லாமல் பக்கவாட்டில் இருந்தன. ஏனென்றால் கோச் வண்டிகள் வந்து நிற்க தோதாகவும், வீட்டிலிருந்து வருபவர்கள், வண்டிக்குள் நேராக நுழையும் வண்ணமாகவும் வாயில் அமைந்திருந்தது.ஏற்கனவே சொன்னதுபோல ராக்கஃபெல்லர் எளிமையான வாழ்வு வாழவே விரும்பினார். ஆனால் அவர் மகன் ராக்கஃபெல்லர் ஜூனியர்தான் மிகுந்த ஆடம்பரமாக வாழ்ந்திருக்கிறார்.


என்ன மக்கா , உள்ளே  போலாமா ?