Thursday, September 27, 2018

போக்ரானில் நிரூபிக்கப்பட்ட இந்தியாவின் வலிமை !

Related image


பார்த்ததில் பிடித்தது
பர்மனு
“எனக்கும் இந்தநிகழ்வுகளுக்கும் எந்த சம்பந்தமுமில்லை. நான் பாயும்புலி பண்டாரக வன்னியன் படிக்கும்போது கலைஞர் இறந்துபோனார்”.
“அந்த பண்டாரத்துக்கும் கலைஞருக்கும் என்னடா சம்பந்தம்?”
“பண்டாரக வன்னியன் இலங்கையின் முல்லைத்தீவை ஆண்ட மன்னன். ஆங்கிலேயருக்கு எதிராக எழுந்த விடுதலைக்குரல்களில் அவனுடையதும் ஒன்று”
“சரி அதுக்கும் கலைஞருக்கும் என்ன சம்பந்தம் “
“அடேய் முட்டாள் மகேந்திரா, அது அவர் எழுதிய புத்தகம்”
“ஓ இப்ப புரியுதுரா”.
“அதே மாதிரி எனக்கும்  போக்ரானுக்கும் எந்த சம்பந்தமுமில்லை”
“என்னடே சொல்ற, உனக்கும் போக்ரானுக்கும் தொடர்பிருந்தது என்று யாரோ சொன்ன மாதிரி பேசுற?”
"அடேய் மகேந்திரா அதைச் சொல்லலடா"
“நெட்பிலிக்சில் 'பர்மனு' என்ற திரைப்படத்தைப்  பார்த்தேன். அதே நாளில் வாஜ்பாய் இறந்து போனார்”.
“என்னடா சொல்ற பர்மனு படத்தை வாஜ்பாயா டைரக்ட் செஞ்சார்”.
“அடேய் நீ திரும்பத்திரும்ப முட்டாள்னு நீரூபிச்சிக்கிட்டே இருக்கியே” .  
“ஆமடே முட்டாளோடு நண்பன் பின்ன வேறெப்படி இருக்கமுடியும்?அதுசரி சொல்றா இந்தப்படத்துக்கும் வாஜ் பாய்க்கும் என்ன சம்பந்தம்?
"பர்மனு என்ற படம் போக்ரான் அணுகுண்டு எப்படி நிகழ்த்தப்பட்டது என்பதை விளக்கும் படம்”.
Related image

“ஓ அப்படியா அப்படித் தெளிவாச் சொல்லு. சரிசரி மேலே சொல்லு”.
1995 வரை சீனா 43 தடவை அணு ஆயுத சோதனை நடத்தி  முடித்திருக்க, இந்தியா 1974ல் ஒரே ஒரு முறை அதுவும் சமாதானத்தின் அடிப்படையில் சோதனை செய்வதாக வெடித்திருந்தது. அதனால் மேலை  நாடுகள் மற்றும் பாகிஸ்தான் சீனாவிடமிருந்து மிகுந்த அழுத்தம் கொடுக்கப்பட்டது. அந்தச் சமயத்தில் வாஜ்பாய் அரசு பதவியேற்றபின் இதனை எப்படியாவது சாதித்து விட வேண்டும் என்று திட்டமிட்டு முயற்சி செய்யும் போது இதே போக் ரானில் தோல்வியைச் சந்தித்தது. ஆனால் இரண்டாம் முறை முயன்று  அது முற்றிலும் வெற்றி பெற்றது. அந்த முயற்சியினை இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னர் திரைப்படமாக எடுத்திருக்கிறார்கள்.  
உலக நாடுகளுக்குத் தெரியக் கூடாது. ரகசியமாக நடத்தப்பட வேண்டும். உள்ளூரிலும் எதிர்க்கட்சி போன்ற யாருக்கும் தெரியக் கூடாது. ஏன் பாரதிய ஜனதா கட்சியின் உள்ளேயும் பலருக்குத் தெரியாத ஒரு பெரும் நிகழ்வு  இது.
முதல் முயற்சி தோல்வியில் முடிந்தாலும் உலக நாடுகளின் கண்கள் குறிப்பாக அமெரிக்காவின் ரேடார் கண்கள் இந்தியாவின் மேல் அதிலும் பொக்ரானின் மேல் கண்காணித்துக் கொண்டிருக்கும்போது அதன் கண்களில் மண்ணைத்தூவி விட்டு செய்யவேண்டிய வேலை இது.
Image result for Parmanu
இந்தியாவில் இருக்கும் வெளிநாட்டு உளவாளிகள், உள்ளூர் துரோகிகளுக்கு மறைத்து இதனைச்  செய்ய வேண்டும். ஏராளமான ஆட்களும், பொருட்களும் தளவாடங்களும் தேவை என்ற நிலையில் பொக்ரான் என்பது எத்தனை பெரிய சாதனை என்பதை இந்தப்படத்தின் மூலம் விளங்க வைத்திருக்கிறார்கள். இதனைப் போன்ற சாதனைகளை செய்வதற்கு மனஉறுதி கொண்ட வாஜ்பாயைப் போன்ற தலைவரும் நாட்டின் முன்னேற்றமே தலையானது என்று நினைத்துச் செயல்பட்ட அப்துல் கலாம் அவர்களின் முயற்சியும் போற்றத்தக்கவை. உலக அரங்கில் இந்திய நாட்டை தலை நிமிர்ந்து நிற்கச் செய்ததோடு யாருக்கும் நாங்கள் இளைத்தவர்களோ சளைத்தவர்களோ என்று நிரூபித்த நிகழ்வு இது. பார்த்து ரசியுங்கள்.
வரலாற்று நிகழ்வு என்றாலும் வாஜ்பாய்  போன்ற தலைவர்கள் தவிர  மற்ற எல்லாக் கதாபாத்திரங்களுக்கும் பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. ஏனென்று தெரியவில்லை. அப்துல் கலாம் முதற்கொண்டு பெரும் ஆளுமைகளை இதில் காண்பிக்க முயற்சி செய்யவில்லை.
Image result for abhishek sharma director
John Abraham with Abishek Sharma

இந்தப்படத்தை அபிஷேக் சர்மா அவர்கள் இயக்கியிருக்க, ஜி  ஸ்டூடியோஸ், ஜே.ஏ.எண்டர்டைன்மெண்ட் போன்ற பல கம்பெனிகள் இணைந்து தயாரித்துள்ளன. இயக்குனரோடு இணைந்து சைவான் குவாட்ரஸ் மற்றும்    சம்யுக்தா சாவ்லா ஷேக் என்பவர்கள் வசனம் எழுதியுள்ளனர். பாட்டுகளுக்கு இசையாக  சச்சின் ஜிகர், ஜீட் கங்குலி இசையமைக்க அருமையான பின்னணி இசையைக் கொடுத்தவர் சந்திப் செளட்பி
முக்கிய கதாபாத்திரத்தில் ஜான் ஆப்ரகாமும் டயனா பென்ட்டியும்  திறமையான நடிப்பைத் தந்திருக்கிறார்கள்.
Related image
Diana Penty
மே, 2018ல் வெளிவந்தது இந்தப்படம். 44 கோடி செலவில் தயாரிக்கப்பட்ட இந்தப்படம் 91.36 கோடி வரை சம்பாதித்தது.
இந்தப்படம் விருதுகள் வாங்குமா என்பதை பொறுத்துதான் பார்க்க வேண்டும்.
-      முற்றும்.
மகேந்திரன்: “அது சரிடா இனிமே நீ எந்தப் புத்தகத்தை படிப்பதாக இருந்தாலோ அல்லது எந்தப் படத்தையும் பார்ப்பதாக இருந்தாலோ கொஞ்சம் சொல்லிவிட்டுச் செய்.

Monday, September 24, 2018

தவளை இனப்பெருக்கம் செய்வது எப்படி ?

Related image


வேர்களைத்தேடி பகுதி 26
இதற்கு முந்திய பகுதியைப்படிக்க  இங்கே சொடுக்கவும்.
http://paradesiatnewyork.blogspot.com/2018/09/blog-post_17.html

அறிவியல் முனியாண்டி வாத்தியார் ஒரு கார்ட்டூன் போல இருப்பார். எப்போதும் மொட்டைத்தலை, மொட்டையென்றால் வழுக்கை அல்ல முடியை ஒட்ட வெட்டியிருப்பார். ஒட்டிய சட்டையும் அதைவிட தோலோடு ஒட்டிய பேன்ட்டும் அணிந்திருப்பார். அந்த பேண்ட்டும் கணுக்கால் வரைதான் இருக்கும். எப்போதும் ஒரு மந்தகாசமான புன்னகையுடன் இருப்பார். கோபம் வந்து பிரம்பால் அடிக்கும்போது கூட அந்தப்புன்னகை மாறாமல் இருக்கும். எனவே அவர் எப்போது கோபமாக இருப்பார். எப்போது மகிழ்ச்சியாக இருக்கிறார் என்று சொல்லவே முடியாது. பெரும்பாலும் மதிய நேரங்களில் அவர் வகுப்பு வரும். ஒன்பதாவது வகுப்பென நினைக்கிறேன். வெயிலால் தகதகக்கிற ஓட்டுக் கூரையின் கீழே சூடாக இருக்கும் டெஸ்க்குகளில் அதைவிட சூடான அறிவியலைச் சொல்லித்தரும் போது  எங்களுடைய மண்டையும் சூடாகித் தலை சுற்றும். அதனால்தான் அறிவியலை எனக்குப் பிடிக்காமலேயே போய்விட்டது போலிருக்கிறது.
அன்று அரையாண்டு பரீட்சைப் பேப்பரைக் கொண்டு வந்திருந்தார். எல்லோருக்கும் மண்டையும் உடலும் மேலும் சூடானது. சிலர் ஒற்றை இலக்க மதிப்பெண்கள், சிலர் பூஜ்யம் என சிலருக்கு  மைனஸ் மார்க்கும் போட்டுவிடுவார். நான் சரா சரியாக 50 லிருந்து 60 வரை வாங்குவேன். சில சமயங்களில் குறைந்தாலும் 40க்கு கீழ் குறைந்ததில்லை. மற்றவற்றில் எல்லாம் 70-80 என்று வாங்கும் நான் அறிவியலில் என்றுமே குறைந்த மதிப்பெண் தான். எனவே இவன் டாக்டராக ஆக முடியாதென எப்போதும் என் அப்பா சொல்லிக்கொண்டிருப்பார். “ஐயா ஆளை விடு சாமி”,ன்னு மனசுக்குள் சொல்லிக்கொள்வேன். இந்த மனசுக்குள் சொல்லிக் கொள்வது அன்றிலிருந்து இன்றுவரை தொடர்கிறது. வேலையில் பாஸிடம், வீட்டில் பாஸிடம், ஆலயத்தில் பாஸிடம் என்று நிற்காமல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
அவ்வப்போது வாட்ஸாப்பில்,மாணவர்களின் வித்தியாசமான பதிலை, வெறும் வினாக்களை பத்தி பத்தியாக எழுதும் மாணவர்கள், சொந்தக்கதைகளை எழுதும் மாணவர்கள், ஆசிரியர்களை கெஞ்சியும், மிரட்டியும் எழுதும் மாணவர்கள் என்று பலபேரைப் பார்த்திருப்பீர்கள்.
இப்படி வித்தியாசமாக எழுதும் விடைகளை எல்லார் முன்னாலும் வாசித்துவிடுவார் முனியாண்டி. அதனால் தான்  எல்லோரும் மண்டை காய்ந்து உட்கார்ந்திருந்தோம் . பெண் மாணவிகளும் அங்கு இருப்பர் என்பதால் எங்களுக்கு மிகவும் அவமானமாய்ப் போய்விடும்.
என்முறை வந்தபோது என்னைக் கூப்பிட்டு கையை நீட்டச்சொல்லி ஒரு அடி அடித்தார். ஐயையோ ஊத்திக்குச்சு  போல என்று நினைத்துக் கொண்டே அடியை வாங்கிவிட்டு பேப்பரைப்பார்த்தேன் . பார்த்தவுடன், “சார் 55 மார்க் சார்” என்றேன் ஏன் அடித்தார் என்பது புரியாமல்.
“கரெக்ட்டாத்தேன் அடிச்சிருக்கேன். வாத்தியார் மகனுக்கு இதெல்லாம் பத்தாது", என்கிறார். என்னத்தைச் சொல்றது வாத்தியார் மகனாப் பிறந்தது என் குத்தமா சொல்லுங்க. மார்க் ஓரளவுக்கு பரவாயில்லை என்பதால் எனக்கு அவ்வளவாய் அவமானமாய் இருக்கவில்லை. ஆனாலும் உள்ளங்கை பழுத்தது ,வலித்தது .
அதன்பின்தான் அந்த சம்பவம் நடந்தது. “எழுவனம்பட்டி முத்துக்கருப்பன்”, என்று ஆசிரியர் சொன்ன போது, அவன் எழுந்து நின்று இரண்டு கைகளிலும் எச்சிலைத்துப்பி தேய்த்துவிட்டுக்கொண்டான். அடி வாங்க ரெடியாகிட்டான் போலத் தெரிஞ்சுது.
அவனுடைய வினாத்தாளை முன்னும் பின்னும் பார்த்துவிட்டு பகபகவென்று சிரித்தார். நாங்கள் எல்லாம் ஒன்றும் புரியாமல் முழித்தோம். முத்துக்கருப்பன் கலவரமாக நின்று கொண்டிருந்தான். அவர் விடைத்தாளின் ஒரு பக்கத்தை எடுத்துப் படிக்க ஆரம்பித்தார். “டேய் எல்லோரும் கேளுங்கடா, தவளை இனப்பெருக்கம் செய்வதை விவரிக்க என்பது கேள்வி. அதுக்கு நம்ம முத்துக்கருப்பன் எழுதியிருக்கிறான் கேளுங்கடா”.
"ஒரு நல்ல நாளில் ஒரு ஆண் தவளையும் பெண்தவளையும் தனியாகப் போய்க் கொஞ்சநேரம் விளையாடும். அதன்பின் கொஞ்சம் இருட்டத் துவங்கியதும் ஆண் தவளை, பெண் தவளையின் முதுகின் மீது ஏறி சிறிது நேரம் உட்கார்ந்திருக்கும். அதன்பின் பெண்தவளையின் வயிறு வீங்கும். சுமார் 10 மாதம் கழித்து பெண் தவளை குட்டிகள் போடும்", என்பதை அவர் சத்தமாய்ப் படிக்கும்போது எங்களுக்கெல்லாம் சிரிப்புத்தாங்க முடியாமல் போனது. பெண்களுக்கெல்லாம் முகமெல்லாம் சிவந்து குனிந்து கொண்டனர்.
Related image

முத்துக் கருப்பனுக்கு மட்டும் ஒன்றும் புரியவில்லை. சரியாகத்தானே எழுதியிருக்கிறோம் என்று அவன் பல நாள் நினைத்துக் கொண்டிருந்தான். ஆனால் அன்றிலிருந்து ஆசிரியர் முதற்கொண்டு எல்லோரும் அவனை முத்துக்கருப்பன் என்பதை விட்டுவிட்டு தவளைக்கருப்பன் என்று கூப்பிட ஆரம்பித்தோம்.
அதனை இன்று நினைத்தால் முத்துக்கருப்பனின் இன்னெசென்ஸ்  என்ற வெகுளி அல்லது அப்பாவித்தனம் தான் என்று தெரிகிறது. அவன் எழுதியது மட்டுமல்ல. அப்படித்தானே நடந்திருக்க முடியும் என்று அவன் நம்பினான். ஆசிரியர் பெயர் உண்மையான பெயர் என்றாலும் மாணவன் பெயரை மாற்றியே குறிப்பிட்டிருக்கிறேன். யாருக்குத் தெரியும் அவனே பெரிய அறிவியல் அறிஞனாக  இல்லை அறிவியல் ஆசிரியராக ஆயிருக்கலாம் இல்லையா?
இந்த மாதிரி பல மாணவர்கள் இருந்தார்கள் மிகுந்த விவரமுள்ள சிலர், ஒன்றும் தெரியாத பலர், நடுவில் இருந்த என்னைப்போல் சிலர் என்று தவளைக்கருப்பனின் விடையை நினைக்கும் போது எனக்கு இப்போதும் புன்னகை வருகிறது. குறிப்பாக "ஒரு நல்ல நாளில்" என்று அவன் எழுதியதை நினைத்தால் அவன் எவ்வளவு அப்பாவியாக இருந்தான் என்பதை நினைத்து எனக்கு மிகுந்த ஆச்சரியமாக  இருந்தது.
Indian village kids, Indian village children, Rajasthan village

அப்புறம் அந்த விடைத்தாளை  நான் வாங்கிப் பார்த்தேன். பல கேள்விகளுக்கு சொந்தமான விடைகளை எழுதிஇருந்தான். அதில் ஆச்சரியம் தரும் இன்னொரு தகவல் என்னவென்றால் முனியாண்டி ஆசிரியர் அந்த விடைக்கு 1/2 மதிப்பெண்கள் கொடுத்திருந்தார்.
பள்ளியில் நான் விளையாடிய  விளையாட்டுக்கள் பற்றி அடுத்த பதிவில் சொல்கிறேன். விளையாட்டு என்றால் வெறும் விளையாட்டுதான். நீங்க நினைக்கிற எந்த விளையாட்டும் நான் விளையாடல, அதற்கு விவரமும் பத்தாது. சாமர்த்தியமும் இல்லை.
- தொடரும்.

Thursday, September 20, 2018

கண்ணதாசனை ஏமாற்றிய அண்ணாதுரை ?

Image result for கவியரசு கண்ணதாசனின் பாடல் பிறந்த கதை


படித்ததில் பிடித்தது
கவியரசு கண்ணதாசனின் பாடல் பிறந்த கதை
தேடல் எஸ். முருகன்.
கண்ணதாசன் பதிப்பகம்
இது அரிய தகவல்கள் பலவற்றை உள்ளடக்கிய ஒரு சிறிய புத்தகம். இதனைத்தொகுத்து எழுதிய தேடல் எஸ் முருகனின் பெயரிலேயே இவர் தேடுவதில் சிறந்தவர் என்று தெரிகிறதே. அதனை இந்தப் புத்தகத்தில் நிரூபித்தும் காட்டியிருக்கிறார். இந்தப் புத்தகத்திற்கு மேலும் சிறப்பூட்டுவது போல அமைந்திருக்கிறது ,எம்ஜியார் அவர்களின் முன்னுரை. என்னதான் பல கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் கண்ணதாசனை அரசவைக் கவிஞர் ஆக்கி அழகு பார்த்தவர் அல்லவா. அதுதவிர கண்ணதாசன் அவர்களின் சொந்த விமர்சனமும் இதில் இடம்பெற்றிருக்கிறது. தான் எட்டாவது வரை மட்டுமே படித்தது போன்ற சில தகவல்களை வெளிப்படையாகவே சொல்லிச்செல்கிறார். கண்ணதாசன் ஒரு திறந்த புத்தகம் என்றுதான் நம் எல்லோருக்கும் தெரியுமே.
இவை தவிர எஸ்.பி.முத்துராமன், முக்தா சீனிவாசன், இயக்குனர் ஸ்ரீதர் ஆகியோர் கண்ணதாசனைப்பற்றி எழுதும் நினைவுகளும் இந்தப்புத்தகத்தில் இடம்பெற்றிருக்கின்றன.
ஒரு கவிஞனை மற்ற கவிஞர்கள் பாராட்டுவது மிகவும் சிறந்த விஷயமல்லவா? கவிஞர்கள் மு.மேத்தா, பாஸ்கரதாசன், ஆரூர்தாஸ், வைரமுத்து, சௌந்தரா கைலாசன், இரா. வேலுச்சாமி, கல்பனாதாசன், வாலி, பாபு என்று பலர் எழுதிய கவிதைகளும் இப்புத்தகத்தில் படிக்கக் கிடைக்கின்றன.
இந்தப் புத்தகத்தில் கண்ணதாசன் எழுதிய பல பாடல்களின் சூழல், எந்த நிலையில் அதை எழுதினார், அதன் பின்னணி என்ன என்று சொல்லப்பட்டிருக்கிறது .
நான் பிடித்து ரசித்த சில பின்னணித் தகவல்களை இங்கே கொடுக்கிறேன். இவை இந்தப் புத்தகத்தை வாங்கிப் படிக்கத் தூண்டும் என நம்புகிறேன்.
1.   படிக்காத மேதை படத்தில் வரும் பாடலான "ஒரே ஒரு ஊரிலே" என்ற பாடலை வங்கிக்குப்போகும் அவசரத்தில் எழுதியிருக்கிறார்.
2.   'எலந்தைப்பழம்' என்ற பாடலை மிகுந்த பசியோடு இருக்கும் போது எழுதினாராம்.
Related image

3.   கண்ணதாசனுக்கு காமராஜர் மேல் பெரிய பற்று இருந்தது. தி.முக.வில் மனக்கசப்புடன் இருந்த போது காங்கிரசுக்குப் போகும் எண்ணத்தில் காமராஜரை நேரில் சந்திக்கத் தயக்கப்பட்டு இருக்கும்போது எழுதிய பாடல்தான், "அந்த சிவகாமி மகனிடம்  சேதி சொல்லடி" என்ற பாடல். இந்தப்பாடல் மூலம் அந்தச் செய்தியை காமராஜரும் புரிந்து கொண்டு அதற்குப் பதில் சொன்னது ஒரு ஆச்சரிய நிகழ்வுதான். அதோடு "எதற்கும் ஒரு காலம் உண்டு, பொறுத்திரு மகனே", “உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது" மற்றும் "ஒளி மயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது" போன்ற பாடல்கள் காமராஜரை மனதில் வைத்து அவருக்காக எழுதப்பட்ட பாடல்கள் என்று சொல்கிறார் புத்தக ஆசிரியர்.
4.   கண்ணதாசன் எழுதிய முதல் பாடல் “கன்னியின் காதலி” என்னும் படத்தில் வந்த கலங்காதிரு மனமே"  அதைத்தனக்குத் தானே எழுதிக் கொண்டாராம். S.M. சுப்பையா நாயுடு இசையில் வந்த இந்தப் படத்தின் இயக்குநர் கோவையைச் சேர்ந்த ராம்நாத். 
5.   கண்ணதாசன் ஒரு மிக்சர் பொட்டலத்தில் அண்ணாதுரை எழுதிய "கல்லைத்தான் மண்ணைத்தான், காய்ச்சித்தான் குடிக்கத்தான்" என்ற உரையை படிக்க நேர்ந்த உடன்  எழுதிய பாடல்தான் "அத்தான் என் அத்தான்" என்ற பாடல். பாடல் முழுவதும் "தான் தான்" இரு வரும்படியாக இந்தப் பாடலை கவிஞர் எழுதியிருப்பார்.
Image result for anna with karunanidhi

6.   சென்னை மாநகரத் தேர்தலில் கண்ணதாசன் தன் சொந்தப் பணத்தையும் நேரத்தையும் அதிகமாக செலவழித்து கடுமையாக உழைத்தாராம். ஆனால் வெற்றி கிட்டியதும் அண்ணா, கருணாநிதிக்கு கணையாழி அணிவித்துப் பாராட்ட  நொந்துபோன நிலையில் கண்ணதாசன் எழுதிய பாடல்தான் "யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்".
7.   கண்ணதாசன் தயாரித்து 'கவலையில்லாத மனிதன்” படம் தோல்வியடைந்தபின்  எழுதிய பாடல் "சிலர் சிரிப்பார், சிலர் அழுவார் நான் சிரித்துக் கொண்டே அழுகின்றேன்".
8.   கவிஞர் ஒரு வேலை விஷயமாக ஒரு கிராமத்தில் போய் தங்கியிருக்கும் போது, காலையில் கேட்ட கோயில் மணியின் நினைவாக எழுதியதுதான் "ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்".
9.   தோல்வி மேல் தோல்வியைச் சந்தித்து துவண்டு கவலைப்பட்ட நேரத்தில் எழுதிய பாடல் "கலைமகள் கைப்பொருளே, உன்னைக் கவனிக்க ஆள் இல்லையோ"
10.                தன் முதல் காதலியின் ஞாபகமாக எழுதியது தான் "பாவாடை தாவணியில் பார்த்த உருவமா" என்ற பாடல்.
11.                சிவாஜி பட வெற்றி விழாவில் கலந்து கொண்ட அண்ணா அப்போது வேறு கட்சியில் இருந்த கண்ணதாசனைப் பார்த்து “எங்கிருந்தாலும் வாழ்க” என்று சொன்னாராம். அதன் நினைவாக எழுதப்பட்ட பாடல்தான் "எங்கிருந்தாலும் வாழ்க  உன் இதயமும் அமைதியில் வாழ்க" ,என்ற பாடல்.
12.                ஒரு விழாவில் மேடையில் இருக்கும் போது தன் முன்னால் காதலி தன்னை உற்று நோக்கிக் கொண்டிருந்ததின் ஞாபகமாக "என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்" என்ற பாடலை எழுதியிருக்கிறார்.
13.                தன் மனைவி பொன்னம்மா, ஞாபகமாக, "தாழையாம் பூ முடித்து தடம் பார்த்து நடை நடந்து வாழை இலை போல வந்த பொன்னம்மா" என்ற பாடல் பிறந்திருக்கிறது.
14.                Sleep Dwell upon thine Eyes என்ற சேக்ஷ்பியரின் வரிகளை ஒட்டி "தூக்கமும் கண்களைத்தழுவட்டுமே" என்று எழுதியிருக்கிறார்.
15.                தன் முதல் காதலி நினைவாக "காலங்களில் அவள் வசந்தம்" ,என்று பாடினாராம்.
Image result for kannadasan with Anna


16.                M.S. விஸ்வநாதன், பிரிந்துபோன ராம மூர்த்தியை நினைத்து வருத்தப்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில் எழுதிய பாடல்தான் "நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா?".
17.                நெஞ்சில் ஓர் ஆலயம் படத்திற்காக பெங்களூரில் ரூம் போட்டு தங்கியிருந்த சமயத்தில் ஒரு வாரமாகியும் பாட்டெழுதாமல் இருந்த கண்ணதாசனை எம்.எஸ்.வி கடிந்து கொண்டாராம். அப்போது உடனே எழுதிய பாடல்தான் "சொன்னது நீதானா, சொல் சொல் சொல்".
கண்ணதாசன் மற்றும் திரைப்படப் பாடல்களின் ரசிகர்கள் இந்தப் புத்தகத்தில் புதையல் எடுக்கலாம்.  
முற்றும்.

Monday, September 17, 2018

ரங்கராட்டினத்தில் மயங்கிய பரதேசி !!!!

Related image
ரங்கராட்டினம்

வேர்களைத்தேடி பகுதி 25
இதற்கு முந்திய பகுதியைப்படிக்க  இங்கே சொடுக்கவும்.
http://paradesiatnewyork.blogspot.com/2018/09/blog-post_10.html
எப்போதாவது திருவிழா, தேர்தல் சமயங்களில் ராட்டினக்காரர்கள் வருவார்கள், சந்தை நடக்கும் புதன் கிழமைகளிலும் சில சமயங்களிலும் வருவார்கள். குடைராட்டினம் அல்லது ரங்கராட்டினம் மற்றும் சிலசமயம் இருவரும் வந்துவிடுவார்கள். இதில் முந்தி வந்தது யார். யார் இருக்க வேண்டும் யார் போக வேண்டும் என்று சண்டைகளும் வந்துவிடும். ஏனென்றால் ஒரு ராட்டினம் வரும்போது 50 ரூபாய்க்கு வியாபாரம் ஆகுமென்றால் 2 ராட்டினம் வரும் போது அது பாதியாகக் குறைந்துபோகுமென்பதால் தான் சண்டை. ராட்டினமென்றால் பிரமாண்டமாக இருப்பது இல்லை. சிறியதாக மிஞ்சிப்போனால் ஒரு பெரியாள் உயரம்தான் இருக்கும். குடை ராட்டினத்தில், குதிரை, புலி சிங்கம் ஆகிய உருவங்களில் இருக்கும் பொம்மைகளின் முதுகில் ஏறிக் கொள்ளலாம். மாறி மாறி சில தொட்டிப் பெஞ்ச்சுகளும் இருக்கும். அதிலும் உட்கார்ந்து கொள்ளலாம். அதன்பின்னர் ராட்டினத்தை சுற்றி விடுவார்கள். வேகம் பிடித்து சுற்றிவிட்டு இறங்கும்  பிள்ளைகள் கீழிறங்கி தள்ளாடி கீழே விழுவதும் உண்டு.  பத்துமுதல் 20 சுற்றுகளுக்கு 5 பைசாதான். கூட்டத்துக்கு தகுந்தாற்போல் சுற்றுகள் கூடும் அல்லது குறையும்.
Image result for ராட்டினம்
குடைராட்டினம்
ரங்கராட்டினம் முற்றிலும் வேறுவகை இதில் உள் தொட்டிகளில் உட்கார்ந்தால் அது மேலும் கீழும் போய் வரும். இதனையும் கையில்தான்  சுற்றுவார்கள். ஒவ்வொரு பெட்டியாக கீழே வரும்போது ஏறி உட்கார அது ஊஞ்சல் போல் ஆடிக்கொண்டே மேலும் கீழும் போய் வரும்.  
அந்த நாளில் சந்தையில் ரங்கராட்டினம் வந்திருந்தது. கையில் அம்மா கொடுத்திருந்த பத்து பைசாவும் இருந்தது. "தம்பி ராட்டினம் கீட்டினம்னு போயிறாத, ஏதாவது வாங்கிச் சாப்பிடு" என்று   அம்மா சொன்னது , என் மனதைப்படித்துவிட்டது போலத்தெரிந்தது .நம் மனதைப்படிப்பதில்  அம்மாக்கள் எப்போதும் கில்லாடிகள்தானே. அம்மாவின் வேண்டுகோள் அல்லது ஆணை, ராட்டினம் ஏறுவதற்கு மேலும் தூண்டியது. ஆணை மீறல் எப்போதும் ஒரு திரில்லை தருகிறது தானே. ஆனால் தனியாகப்போகத் தயக்கமாக இருந்ததால் இடிந்த சுவர் வழியாக இருந்த பள்ளிக்குக் குறுக்கு வழியில்  விரைந்து சென்று தேடினேன். வெங்கடேசன் இருந்தான்.
மூச்சு வாங்க, "வெங்கடேசா ராட்டினம் சுத்தலாமா" என்றேன்.
"காசு இல்லடா"
 "காசு என்ட்ட இருக்குடா" என்று சொல்லி உள்ளங் கையில் வேர்வையுடன் இருந்த இரும்புப் பத்துப் பைசாவை  எடுத்துக் காட்டினேன். சரிடா என்று சொல்லிய வெங்கடேசை கையைப் பிடித்துக் கொண்டு கீழிறங்கி ஓடினேன். மதிய உணவு இடைவேளை முடிய இன்னும் கால் மணிநேரம் மட்டுமே இருந்தது. ஓடி வந்து மேல் மூச்சு கீழ் மூச்சு  வாங்க 10 காசைக் கொடுத்துவிட்டு ஒரே தொட்டிலில் இருவரும் ஏறினோம்.
இன்னும் ஒரு பெட்டியில் ஆட்கள் இல்லாவிட்டாலும் நாங்கள்  அவரசப்படுத்தியதால் ராட்டினம் சுற்ற ஆரம்பித்தது. முண்டாசு கட்டிய ராட்டினக்காரர் எக்கி எக்கி மேலிருந்து வந்த தொட்டியை கீழ்நோக்கி உந்தித்தள்ள ராட்டினம் வேகம் பிடித்தது. முதலில் ஆகாயத்தில் பறப்பது போல் இருந்தது. ஆனால் வேகம் கூடக்கூட ஏற்கனவே மூச்சு வாங்கிக் கொண்டிருந்த எனக்கு மேலும் மூச்சு முட்ட, தலை கிறுகிறுத்தது. "வெங்கடேசா நான் சாகப் போறேன்டா”  என்று கத்திவிட்டு வெட்கத்தை விட்டு அவன் மடியில் சாய்ந்தேன். நாக்கு வறண்டு போக வயிற்றில் பூச்சிகள் பறந்தது. நெஞ்சு வாய்வழியே வந்துவிடும் போல் இருந்தது. ரொம்பவும் பயந்து போய் ராட்டினத்தை நிறுத்தச் சொல்லி கத்தினேன். ஒரு கட்டத்தில் “டேய் நிறுத்துடா நீசப்பயலே” (என் அம்மாவிடம் கற்றுக் கொண்ட ஒரே கெட்ட வார்த்தை அல்லது நல்ல வார்த்தை) என்று அலற வெங்கடேசன், “சும்மா இருடா”, என்று என் வாயைப் பொத்தினான்.
ராட்டினமும் ஒரு வழியாக நின்றது. மடியில் கிடந்த என்னை வெங்கடேசன் கைத்தாங்கலாக வெளியே இழுக்க, எனக்கோ, அரை மயக்கத்தில் அண்ட சராசரமும்   சுற்றியது. குமட்டிக் கொண்டு வர, புளிய மரத்தின் கீழே அவசரமாய்ச் சென்று ஓங்கரித்து வாந்தியெடுத்திட்டேன். மதியம் சாப்பிட்ட கறிக்குழம்பு சோறு முழுவதுமாக வெளியே வந்த பிறகுதான் முடித்தேன். யாரோ ஓடிவந்து சொம்பில் தண்ணீர் குடிக்க அப்படியே கொப்பளித்து முகம் கழுவி ஒரு ஓரமாய் தரையில் உட்கார்ந்தேன்.
பள்ளிக்கூடத்திற்கு நேரமாகி விட ,வெங்கடேசன் என்னை தரதரவென்று இழுத்துக் கொண்டு பள்ளி சென்றான். அன்று மதியம் முதல் பீரியட் ஆங்கில ஆசிரியர் எஸ்பால் கிராம்மர் வகுப்பு. ஆங்கில கிராம்மர் எனக்கொன்றும் அவ்வளவு பிடித்தமான வகுப்பு இல்லை. பிடிக்காத வெறுக்கும் வகுப்பும் இல்லை. ஆனால் மதிய வகுப்புகள் என்றாலே சற்று கடினம்தானே. அதோடு எஸ் பால் வாத்தியார் கொஞ்சம் கண்டிப்பானவர் என்று ஏற்கனவே உங்களுக்குத் தெரியும். பரீட்சையில் நடந்த சம்பவத்திற்குப்பின் என்மேல் அவருக்கு ஒரு கண். என்றாவது ஒருநாள் அன்று நடந்த தவறுக்கு நான்  பொறுப்பல்ல என்று சொல்லிவிட நினைத்தேன். அதற்கான சந்தர்ப்பமும் தைரியமும் எனக்கு எப்போதும் அமையவேயில்லை. எஸ்பால் ஆசிரியர் எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை. தெரிந்தால் அவரிடம் போய் சார் நான் காப்பி அடிக்கவில்லை என்று தெள்ளத் தெளிவாக சொல்ல வேண்டும்.
என்மேல் இருந்த கெட்ட பெயரை மாற்ற இன்னும் முயற்சி எடுத்து படிக்க ஆரம்பித்து வகுப்பில் நன்கு படிக்கும் மாணவன் என்று பெயரெடுத்தேன்.
ஆனால் அன்றைய தினம் தலைசுற்றிக் கொண்டு, லேசாக குமட்டிக் கொண்டும் இருந்தது. வகுப்பில் எப்போதும் முன் வரிசையில் உட்காரும் நான் அன்று பின் வரிசையில் உட்கார்ந்திருந்தேன். கொஞ்சம் தூங்கி எழுந்தால் நன்றாக இருக்கும் போலத் தெரிந்தது.
எஸ் பால் ஆசிரியரிடம் படித்த  மாணவர்களுக்கும் நன்றாகவே தெரியும். அவருக்கு கொட்டாவி விட்டால் பிடிக்காது. யாராவது மாணவன் கொட்டாவி விட்டால் அவருக்கு கெட்டாவி வந்து காதைத் திருகியே கொன்றுவிடுவார். ஆனால் பெண்கள் கொட்டாவி விட்டால் வெறும் திட்டுவதோடு நிறுத்தி விடுவார். அன்றைய தினம் தூங்காமல் இருக்கவும், தலை கிறுகிறுப்பைத் தாங்காமலும் நான்பட்ட அவஸ்தை இன்று நினைத்தாலும் சுற்றுகிறது. அன்றைய தினம்  முடிவெடுத்தேன். இனிமேல் ரங்க ராட்டினமோ தங்க ராட்டினமோ குடை ராட்டினமோ வடை ராட்டினமோ எந்த ராட்டினமும் ஏறக்கூடாது என்று. அதனை இன்று வரை கடைப்பிடிக்கிறேன். அதுமட்டுமல்ல ராட்டினத்தை தூரத்தில் இருந்து பார்த்தாலே எனக்கு தலைசுற்ற ஆரம்பித்துவிடுகிறது. இதுபோல அறிவியல் முனியாண்டி ஆசிரியர் வகுப்பில் நடந்த சுவையான சம்பவத்தை அடுத்த பகுதியில் சொல்கிறேன்.
-தொடரும்.

Thursday, September 13, 2018

டி.எம்.எஸ்ஸுக்கும்; இளையராஜாவுக்கும் என்ன தகராறு ?


Image result for நல்லதொரு குடும்பம்
எழுபதுகளில் இளையராஜா பாடல் எண்: 39
சிந்து நதிக்கரை ஓரம்.
இதற்கு முந்திய பகுதியைப்படிக்க  இங்கே சொடுக்கவும்.
http://paradesiatnewyork.blogspot.com/2018/03/blog-post.html

இளையராஜா இசையமைத்து 1979-ல் வெளிவந்த “நல்லதொரு குடும்பம்” என்ற திரைப்படத்தில் அமைந்த இனிமையான பாடல் இது.முதலில் பாடலைக்கேட்போமா ?
பாடலின் சூழல்:
திரைப்படங்களில் காதல், சோகம், அன்பு, வீரம், வெற்றி, தோல்வி என்ற பல சூழ்நிலைகளுக்கேற்ப பல பாடல்கள் இயற்றப்பட்டு இசையமைக்கப்பட்டிருக்கின்றன. இதில் காதலுக்காக இசையமைக்கப்பட்ட பாடல்கள் தான் அதிகம் என நினைக்கிறேன். ஒரு பாடல் அல்லது இசையின் மூலம் காதல் உணர்வுகளை சொல்வது வசனங்களின் மூலம் சொல்வதை விட சுலபம். ஏனென்றால் காதல் மட்டுமல்ல காமத்தையும் பாடல் மூலம் சொல்வது எளிதென்று நினைக்கிறேன். அப்படி காதலை வெளிப்படுத்தும் இன்னொரு பாடல்தான் இது.
இசையமைப்பு:
அருமையாக அமைந்த இந்த மெல்லிசைப் பாடலில்  அதற்கேற்ப இசையமைத்ததோடு இசைக்கருவிகளையும் இதமாக பதமாக பயன்படுத்தியிருக்கிறார் இளையராஜா. பாடலுக்கு முன் மகிழ்ச்சியான நெகிழ்ச்சியான ஒரு மனநிலையைக் காண்பிக்கும் விதத்தில் வீணை, வயலின்கள், புல்லாங்குழல் மற்றும் கீபோர்டு இசைக்க "சிந்து நதிக்கரை ஓரம்" என்று பெண்குரலில் பாடல் ஆரம்பிக்கிறது. இனிய குரலுக்கு இசை கூட்ட தபேலா சேர்ந்து கொள்கிறது. அதற்குப் பதில் சொல்ல ஆண்குரல் ஒலிக்ககிறது. தேவனும் தேவியும் பாடிமுடிக்க முதல் BGM ஆரம்பிக்கிறது. ஏற்கனவே முன்னிசையில்  (Prelude) பயன்படுத்தப்பட்ட வீணையை சும்மா இருக்க விடுவானேன் என்று இன்டெர்லுடிலேயும்  பயன்படுத்தியிருக்கிறார். வயலின்கள், வீணை, புல்லாங்குழல் மற்றும் பேஸ் கோரஸ் ஒலித்து முடிக்க "மஞ்சள் மலர் பஞ்சனைகள்" என்று பெண் குரலில் சரணம் ஆரம்பிக்கிறது. 2ஆவது BGM எங்கெங்கோ ஊர்வலம் போய் சம்பந்தமில்லாதது போல் ஒலித்து மீண்டும் வந்து பாடலில் இணைய 2-ஆவது சரணம் "தெள்ளுதமிழ் சிலம்புகளை" என்று ஆண் குரலில் வருகிறது. 2-வது சரணத்தில் தபேலாவின் நடை மாறி உருட்டி உருட்டி ஒலிக்கிறது.
          பின் இரு குரலிலும் சிந்து நதி தவழ்ந்து சலசலத்து பாடல் நிறைவு பெறுகிறது.
பாடலின் வரிகள்:   
சிந்து நதிக்கரை ஓரம் அந்தி நேரம்
எந்தன் தேவன் பாடினான்
தமிழ் கீதம் பாடினான்
எனை பூவை போல சூடினான்

சிந்து நதிக்கரை ஓரம் அந்தி நேரம்
எந்தன் தேவி ஆடினாள்
தமிழ் கீதம் பாடினாள்
எனை பூவை போல சூடினாள்

மஞ்சள் மலர் பஞ்சனைகள்
மன்மதனின் மந்திரங்கள்
கொஞ்சும் குயில் மெல்லிசைகள்
கோவை எந்தன் சீர் வரிசை
சொல்லி கொடுத்தேன் அதை அதை
அள்ளி கொடுத்தாய் அதை அதை
காதல் கண்ணம்மா

தெள்ளு தமிழ் சிலம்புகளை
அள்ளி அவள் அணிந்துக்கொண்டாள்
கள்ளிருக்கும் கூந்தலுக்கு
முல்லை மலர் நான் கொடுத்தேன்
வானவெளியில் நிதம் நிதம்
சோலைவெளியில் சுகம் சுகம்
காதல் மன்னவா..
        பாடலை எழுதியவர் கவிஞர் கண்ணதாசன் அவர்கள். பாடல் எழுதியவுடன் சிந்துநதியில் ஷுட்டிங் எடுத்தார்களோ. இல்லை ஏற்கனவே அங்கு படப்பிடிப்பை திட்டமிட்டதால் சிந்துநதிக்கரை என்று எழுதினாரோ தெரியவில்லை. அல்லது பாரதி போலவே கண்ணதாசனுக்கும் சிந்துநதிமேல்  ஒரு ஈர்ப்பு இருந்திருக்கலாம். திராவிட நாகரிகம் பிறந்த இடமல்லவா. பல்லவியில் "பூவைப்போல  சூடினான்" என்ற வரி நன்றாக இருந்தது. பாவை பூவைச்சூடுவது இயல்பு. அந்தப் பாவையையே ஒருவன் பூவைப்போல் சூடிக் கொள்வது என்பது கண்ணதாசனின் அழகிய கற்பனை. முதல் சரணத்தில் அதிக ரகசியங்களை மேலோட்டமாக சாதாரண வரிகளில் சொல்லிச் செல்கிறார் .
அதுபோலவே இரண்டாம் சரணத்தில் குளித்து முடித்து ஈரத்துடன் இருக்கும் கூந்தல் மயக்கம் தருவதாக நினைத்து “கள்ளிருக்கும் கூந்தலுக்கு முல்லை மலர் நான்  கொடுத்தேன்" என்பது அவருக்கே உரிய போதையுள்ள கற்பனை. பாடல் முழுவதும் கண்ணதாசனின் வரிகள்  இசைக்கு இசைவாக உட்காருகின்றன.
பாடலின் குரல்:
Image result for Ilayaraja with TMS

பாடலைப் பாடியவர்கள் டி.எம் செளந்திரராஜன் P.சுசிலா ஆகிய மறக்கமுடியாத ஜோடிக்குரல்கள். மிகவும் உச்சஸ்தாயி பாடுகிற டி.எம். எஸ்க்கு இந்தப்பாடலில் கீழ் ஸ்தாயி கொடுத்திருக்கிறார் இளையராஜா. இருவருக்கும் அதுவும் நன்றாகவே பொருந்தி யிருக்கிறது. இளையராஜாவுக்கும் டி.எம்.எஸ்ஸுக்கு  தகராறு வந்ததால்தான் அதிக பாடல்கள் அவருக்குக் கொடுக்கவில்லை என்று சொல்கிறார்கள். பாடல் வெற்றி பெறுவதற்கு என் குரல்தான் அவரின் இசையை விட காரணம் என்று சொன்னதாகக் கேள்வி. அதற்கு ஆதாரம் இல்லை. ஆனால் தன் முதற்படத்திலேயே டி.எம்.எஸ்ஸுக்கு பாடல் கொடுத்தவர் இளையராஜா. ஆனால் டி.எம்.எஸ் சிவாஜி, இளையராஜா, காம்பினேஷனில் வெளிவந்த பாடல்கள் அனைத்தும் நினைவில் என்றும் நிற்பவை.
Image result for Ilayaraja with TMS

சில பாடல்களைக் கீழே கொடுக்கிறேன்.
1.   அன்னக்கிளி உன்னைத்தேடுதே - அன்னக்கிளி
2.   நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு - தியாகம்
3.   அந்தப்புரத்தில் ஒரு மகாராணி - தீபம்
4.   நேரமிது நேரமிது - ரிஷி மூலம்.
5.   ஐம்பதிலும் ஆசை வரும் - ரிஷிமூலம்
6.   பேசாதே, வாயுள்ள ஊமை - தீபம்
7.   தேன் மல்லிப்பூவே - தியாகம்
8.   உலகம் அது இருட்டு
9.   ராஜா யுவராஜா - தீபம்.
10.                பட்டதெல்லாம் போதுமா? நல்ல தோர் குடும்பம்.
        எனக்குத் தெரிந்து சிவாஜியின் படங்கள் குறைந்ததாலும் எம்ஜியார் நடிப்பதை நிறுத்தியதாலும்தான் டி.எம்.எஸ்ஸுக்கு வாய்ப்புகள்  குறைந்தன. அதோடு வயதும் ஆனதால் குரலில் ஒருவித தழுதழுப்பும் வந்தது என்பதால்தான் மலேசிய வாசுதேவன் சிவாஜிக்குப் பாட ஆரம்பித்தார் என நினைக்கிறேன்.
 யாரிடம்தான் இளையராஜா சண்டை போடவில்லை. ஆனால் நமக்கு தேவை அதுவல்ல, இன்று கேட்டாலும் என்று கேட்டாலும்  ரசிக்க முடிகிற இந்த மாதிரிப் பாடல்களை கேட்டு மகிழ்வது மட்டும்தான் ரசிகர்களான நமக்குத் தேவை.
-தொடரும்.

Monday, September 10, 2018

பாம்பிடம் மாட்டிக்கொண்ட பரதேசி!!!!!!


Related image
வேர்களைத்தேடி பகுதி 24


இதற்கு முந்திய பகுதியைப்படிக்க  இங்கே சொடுக்கவும்.

http://paradesiatnewyork.blogspot.com/2018/09/blog-post.html
காய்ந்து கொண்டிருக்கும் வெயிலில் ஜில்லென ஐஸ்  சாப்பிட்டால், அதுவும் இலவசமாக யாருக்கு ஆசை பிறக்காது.  ஆசையின் உந்துதலில் சரளைக் கற்களில் சத்தம் எழுப்பி தீயாய்ச் சுட்ட மொட்டைப்பாறைகளை தொட்டும் தொடாமல் மேலேறிச் சென்றேன். அந்தப் பெரும் இரட்டைப் பாறையின் கீழே சற்றே நிழல் விழுந்த புதரில் கையை கிட்டத்தட்ட அருகில் கொண்டு போய்விட்டேன். அப்போது தான் படமெடுத்து நின்ற அந்த நல்ல பாம்பைப் பார்த்தேன். பெரியது என்றும் சொல்லமுடியாது. சிறியதும் இல்லை. நடுத்தர வடிவில் பளபளவென்று படம் எடுத்தவாறு ஆடாமல் இருந்தது. பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன் ஆனால் பாம்பு என்றால் தொடையும் நடுங்கும் என்று அன்றுதான் தெரிந்துகொண்டேன். புதையலைக் காக்கும் நாக தேவதை போல் அங்கே இருந்த பாம்பைப் பார்த்து திகைத்துவிட்டேன். விட்டிருந்தால் பாம்பின் படம் என் கையில் பட்டு, பாம்பின் பல் என் மெய்யில்  பட்டு, விஷம் உடலில் பட்டு, என் உடல் தரையில் பட்டு, என் உயிர் மேகத்தில் பட்டிருக்கும்.
ஆடாது அசையாது இருந்த பாம்பின் முன்னால் நானும் ஆடாது அசையாது  சற்றே நடுங்கியவாறே நின்றேன். என் பேஸ்மென்ட் எவ்வளவு வீக்கென்று அன்றுதான் முழுவதுமாகத் தெரிந்தது. என்ன செய்வது என்று திகைத்து நின்றேன். காசை எடுக்க வழியில்லை. திரும்பினால் கொத்திவிடுமோ என்று பயம். அப்படியே சில நிமிடங்கள் கழிந்தது.
Image result for Eagle flying with snake

தீடீரென்று ஒரு பெரும் நிழல் என் மேல் படர மேலே பார்த்தால் ஒரு மிகப்பெரிய கழுகு. சற்றே நான் தலையைச் சாய்க்க. மின்னல் வேகத்தில் அது கீழிறங்கி பாம்பைத் தன் கைகளால் பற்றிக் கொண்டு பறந்து மறைந்தது.
கோழிக்குஞ்சுகளை, ஏன் கோழிகளையே தூக்கிச் செல்லும் பருந்துகளை நான் சிலமுறை பார்த்திருக்கிறேன். ஆனால் இந்தக் காட்சி, எம்மாடி இப்போது நினைத்தாலும் பகீரென்று இருக்கிறது. அன்றுதான் குலோசப்பில் பருந்தின் இறக்கைகள் எவ்வளவு அகலம் என்று தெரிந்தது. கிட்டத்தட்ட என்னை முழுவதும் மறைக்கும் படியான நிழல் என்மேல் விழுந்தது பாம்பும் அதனைக் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. சட்டென கீழிறங்கி அந்தப் பாம்பை லாவகமாக தன் கால்களில் பற்றிக் கொண்டு மேலே வேகம் எடுத்தது. பாம்பு வளைந்தும் நெளிந்தும் உதறியும் ம்ஹீம் ஒன்றுமே செய்ய முடியவில்லை. பருந்தும் பறந்து மறைந்தது. எனக்கு அப்படியே ஆடிப்போனது. காப்பாற்றின பருந்துக்கு நன்றி சொன்னாலும், பாம்பு இல்லா விட்டால் என்னையே தூக்கிச் சென்றிருக்கும் அளவுக்கு மிகப்பெரியது.  தேடிப்பார்த்தால் அங்கு எந்த நாகமாணிக்கமும் தென்படவில்லை.  ஒரு பெரு மூச்சு விட்டுவிட்டு புதரை நோண்டி காசை எடுத்துவிட்டு (வெறும் 4 நாலனா  என்று சொல்லக்கூடிய 25 பைசா) மீண்டும் காரை ஸ்டார்ட் செய்து கீழிறங்கினேன். கார் தலைகீழாக வேகமாகப் புறப்பட்டது. கீழிறங்கி 2 ஐஸ் ஃப்ரூட் வாங்கிச் சாப்பிட்டபின் தான் என்ஜின் சற்று குளிர்ந்தது. அதற்கப்புறம் எக்காரணத்தாலும் நான் தனியாக கரட்டுக்குப் போவதை முற்றிலுமாக கைவிட்டுவிட்டேன். கீழே வந்து நான் சொன்னதை யாரும் நம்பவேயில்லை. நீங்களாவது  நம்புங்க.
Image result for தேவதானப்பட்டி சந்தை

 என் வீட்டிலிருந்து உயர்நிலைப்பள்ளிக்கு போவதற்கு, தேவதானப்பட்டி மெயின்ரோடு, போலீஸ் நிலையம், பூங்கா ஆகியவற்றைக் கடக்கும் வழியில் தான் சந்தைப்பேட்டை இருக்கிறது. அதற்குள் பெரிய புளியந்தோப்பு உண்டு. அதில்தான் புதன் கிழமை தோறும் வாரச் சந்தை நடக்கும். விவசாயிகள் தங்கள் வயல்களில் விளைந்த காய்கறி, கனிகளை அங்கு கொண்டு வந்துவிற்பார்கள். மொத்த விலை மற்றும் சில்லைரைக்கும் கிடைக்கும். கத்தரி, வெண்டை, முருங்கை, உருளை, சேனை, கேரட், பீட்ருட், தக்காளி போன்ற பலவகைக் காய்கறிகள் இங்கு கிடைக்கும், வடுக பட்டியிலிருந்து நாடார் பலசரக்குக் கடையும், கருவாடு, தேங்காய்க் கடைகளும் இருக்கும். ஆடு மாடுகள் கூட விற்பனையாகும். இது தவிர பலகாரங்கள் மற்றும் விளையாட்டுப் பொருட்களும் கிடைக்கும். புதன் கிழமை மதிய இடைவேளையில் வீட்டுக்கு வந்து சாப்பிட்டுவிட்டு பள்ளிக்குப் போகும் போது சந்தைக்குப்போகும் அம்மாவுடன் நானும் இணைந்து செல்லுவேன். எனக்குத்தேவை பத்துப் பைசா. அவர்கள் சில்லறை மாற்றிக் கையில் கொடுத்தவுடன் பள்ளிக்கு அங்கிருந்து குறுக்கு வழியில் ஓடி விடுவேன். என்ன, கீழே பார்த்துப் போக வேண்டும். அங்கே  ஓரமாக வாய்க்கால் ஓடுவதால் கீழே கோரமாக இருக்கும். பன்றிகளும் ஆங்காங்கு மேயும் . சில சமயங்களில் ஆத்திர அவசரத்திற்கு அங்கே போய்  உட்கார்ந்தால் பன்றிகளும் ஆத்திர அவசரத்தில் பின்னால் வந்து முட்டும்.
Related image
சீரணி
சின்ன வயதாக நான் இருக்கும் போது சந்தைக்குப் போகும் என் ஆயா தவறாது வாங்கி வருவது சீரணியும், சர்க்கரைச்சேவும் , இனிப்பும் காரமும் ஒன்றிணைந்து சுவையாக இருக்கும். சீரணி போன்ற ஒன்றை பலநாட்கள் கழித்து பங்களாதேஷ் கடையில் பார்த்தேன். வாங்கிச் சாப்பிட தைரியமில்லை. ஒரு நாள் வாங்கிச் சாப்பிட்டுப் பார்க்க வேண்டும். சொல்லிவிட்டால் மண் குதிரை, மண்ணால் செய்த சிறு விளையாட்டுச் சாமான்கள் அடுப்பு, சட்டி, பானை ஆகியவை வாங்கி வருவார்கள்.   இதில் தண்ணீர் ஊற்றி அரிசி போட்டு சோறு கூட செய்திருக்கிறேன். ஆனால் உயர்நிலைப் பள்ளி  வந்த போது அந்த விளையாட்டுக்கள் மாறிப்போனது.
Image result for தேவதானப்பட்டி சந்தை

புதன்கிழமை சந்தையில் தவறாமல் வாங்குவது மரவள்ளி, ஆழி வள்ளி, குச்சிக்கிழங்கு என்று பல பெயர்களால் அழைக்கப்படும் கப்பக்கிழங்கு வீட்டில் வேறு யாரும் அதனைச் சாப்பிட மாட்டார்கள். நானும் அம்மாவும் மட்டும்தான். மாலை வந்து நானே அதனை செம்மண் போக கழுவி, துண்டு துண்டாக நறுக்கி தோலையும் எடுத்து வைப்பேன். அதில் ஒரு துண்டை எடுத்து பச்சையாகச் சாப்பிடுவது எனக்கு மிகவும் பிடிக்கும். வெள்ளைப்பால் ஒழுக அது மிக ருசியாக இருக்கும். வேக வைத்தாலும் நன்கு விளைந்த காயாக இருந்தால் வெகு சீக்கிரத்தில் வெந்து விரிந்து மகிழ்ந்து விடும். அப்படியே சுடச்சுட சாப்பிட்டால் மிக சுவையாக இருக்கும்.
Image result for மரவள்ளி
மரவள்ளி
அந்த வாரச் சந்தை இன்னும் கூடுகிறதா என்று தெரியவில்லை. பக்கத்தில் உள்ள எல்லா ஊர்களுக்கும் அதுவே சந்தை. சந்தை நடக்கும் போது சில சமயங்களில் ரங்க ராட்டினம் வரும். எப்போதாவது குடை ராட்டினம் வரும். ரங்க ராட்டினம் சிறியதாக இருந்தாலும் அந்தப்பெட்டி மேலே போகும்போது மிகவும் பயமாக இருக்கும். ஒரு முறை வெங்கடேசுடன் நான் ஏறி அவஸ்தைப் பட்டதை நினைத்தால் இன்றைக்கும் நெஞ்சைப்  புரட்டுகிறது. அந்தக் கதையை அடுத்த வாரம் சொல்லுகிறேன்.
- தொடரும்.