Thursday, September 28, 2017

கமல்ஹாசன் அரசியலுக்கு வரலாமா?


கமல்ஹாசனுக்கு அரசியலுக்கு வர உள்ள தகுதிகள்.

Image result for kamal haasan

1.   அண்ணா, கருணாநிதி, எம்ஜியார், ஜெயலலிதா போலவே திரைத்துறையைச் சேர்ந்தவர். (இது மிக முக்கியம் !)
2.   எம்ஜியார், ஜெயலலிதா வரிசையில் இன்னுமொரு நடிகர். 229க்கும் மேல் படங்கள் நடித்தவர்.
3.   ஜெயலலிதா மறைவுக்குப்பின் முதலமைச்சர் ஆசையில் இருக்கும் ஆயிரத்தில் ஒருவர்.
4.   காமராசர், கருணாநிதி, எம்ஜியார், வரிசையில் பள்ளிப்படிப்பு கூட முடிக்காதவர் .
5.   கருணாநிதி, எம்ஜியார் போலவே பல திருமணங்கள் செய்தவர்.
6.   கருணாநிதி, எம்ஜியார் போலவே நாத்திகர்.
7.   எம்ஜியார், ஜெயலலிதா போல சிவப்பு நிறமாக இருப்பது.
8.    எம்ஜியார், ஜெயலலிதா போல ரசிகர் மன்றங்களை  கட்டுக்கோப்பாக நடத்தி வருவது.
9.   ஜெயலலிதா போல கொள்கை என்று ஒன்று இல்லாமல் இருப்பது.
10.                காதல் இளவரசன் , உலக நாயகன் போன்ற பட்டங்கள் பெற்றவர் (அதென்னங்க உலக நாயகன் ?)
11.                முத்தக் காட்சிகள் உட்பட எதையும் வெளிப்படையாகச் செய்பவர்.
12.                ரஜியினின் நீண்டநாள் நண்பர் (இது ஒரு நல்ல தகுதி!)
13.                ஆண் வாரிசு இல்லாதவர். (இது மிக மிக அவசியம்)
14.                இத்தனை சினிமாவில் கிடைக்காது பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் கிடைத்திருக்கும் மக்களுடன் உள்ள நெருக்கம்.
15.                சமூக எதிர்பார்ப்புகளுக்கோ, கட்டுக்கோப்புகளுக்கோ, சம்பிரதாயங்களுக்கோ அடங்காதவர்.

Image result for kamal haasan


கமல்ஹாசனுக்கு அரசியலுக்கு வர தடையாக இருக்கும் தகுதிகள்:
1.   தமிழை நன்றாக உச்சரித்துப் பேசுவது.
2.   நேர்மையாக நடக்க முயல்வது.
3.   எதையும் வெளிப்படையாகப் பேசுவது.
4.   உள்ளூர்க்காரர் மற்றும் பச்சைத் தமிழன்.
5.   மத்திய அரசின் கொள்கைகளை எதிர்ப்பவர். (என்றுதான் நினைக்கிறேன்)
6.   திராவிட இயக்க ஈடுபாடு உள்ளபவர்.
7.   எல்லா மதத்தினரையும் சகோதரராய் நினைப்பது.
8.   ரஜினியின் நண்பராய் இருப்பது.
9.   தன்மானத் தமிழனாய் இருப்பது.
10.                சாதி சார்ந்த இயங்காத தன்மை.
11.                பிராமண குலத்தில் பிறந்தும் அப்படி கொஞ்சம் கூட காட்டிக் கொள்ளாத தன்மை.
12.                கம்யூனிஸ்ட்களிடம் இருக்கும் நெருக்கம்.
13.                நல்ல ஆரோக்கியமான உடல் நலம்.
14.                பெரிதாக குடும்பச்சிக்கல் இல்லாமல் இன்னும் சிங்கிளாகவே இருப்பது.
15.                பெரிதாக எந்தக் குற்றச் சாட்டும் இல்லாதவர்.
16.                மக்களுக்கு உண்மையிலேயே நன்மை செய்ய வேண்டும் என்ற ஆசை.

வெளியே பார்ப்பதற்கு இதெல்லாம் இப்படியாக தெரிந்தாலும் , ஏதாவது உள்குத்து ( Hidden Agenda) இருக்குமோ என்ற சந்தேகமும் அவ்வப்போது தோன்றுகிறது.பொறுத்திருந்து பார்ப்போம்.

Image result for kamal haasan
Add caption


Monday, September 25, 2017

நியூயார்க்கில் ஒரு பரத நாட்டிய விழா !!!!!!

Subiksha 
நண்பர் செந்தமிழ்ச்செல்வன், பரிமளா தம்பதியினரின் மூத்த மகள் சுபிக் ஷாவின் பரதநாட்டிய அரங்கேற்றத்திற்கு அழைப்பிதழ் மூன்று மாதம் முன்னேரே எனக்கு வந்துவிட்டது.  வந்தவுடனே கண்டிப்பாகச் செல்ல முடிவெடுத்து நாளைக் குறித்து வைத்துக் கொண்டேன். அது கடந்த சனிக்கிழமை (09.16.2017) அன்று ஃபிளஷிங்கில் உள்ள ஹிண்டு டெம்பில் கலையரங்கத்தில் இனிதே நடந்தேறியது. மாலை 4:30  மணியளவில் ஆரம்பித்து 9:00 மணியளவில் முடிந்து பின்னர் இரவு உணவுடன் நிறைவு பெற்றது.
Image result for Subisha arangetram
Add caption
மாலை  4:00 மணிக்கெல்லாம் பரதேசி அங்கு ஆஜர். நண்பர்கள் தமிழ்ச் சங்கத் தலைவர்கள் சிவபாலன் தம்பதியினர், ரங்கநாதன் தம்பதியினர், விஜயகுமார் தம்பதியினர் பாலா தம்பதியினர் ஆகியோர் ஏற்கனவே வந்து வரவேற்க அவர்கள் அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டேன். தலைவர்கள் பக்கத்தில் அமர்ந்ததாலோ அல்லது என் புகழ் (?) பெருகியதாலோ என்னவோ, பலர் வந்து எங்களை போட்டோ எடுத்தனர். இது சாப்பிடுவது வரை தொடர்ந்தது.

இந்த அரங்கேற்றத்திற்கு எப்படியெல்லாம் திட்டமிட்டார்கள் என்பதைக் கண்டு வியப்பில் ஆழ்ந்தேன். முதலாவதாக இதற்கென ஒரு வெப்சைட் இணையதளம் (http://subhiksha.net) உருவாக்கப்பட்டது. பிறகு நண்பர்களுக்கு ஒரு எலக்ரானிக் அழைப்பிதழ் அனுப்பப்பட்டது. அதுவும் மூன்று மாதங்களுக்கு முன்னரே. அதன்பின்னர் இரண்டு மாதம் முன் அழகிய அழைப்பிதழ் வந்து சேர்ந்தது. அழைப்பிதழுக்கென்று தனிப்பட்ட ஃபோட்டோ ஷூட் செய்யப்பட்டது, அதனைப் பார்க்கும் போதே தெரிந்தது. பல வண்ண ஆஃப்செட்டில் சுபிக்ஷா பலவித உடைகளில் நடன முத்திரைகள் பிடித்து நின்றிருந்தாள். அவ்வப்போது மறந்துவிடக் கூடாது  என்றெண்ணி ஈமெயில் ரிமைன்டர்கள் வந்து கொண்டேயிருந்தன.
With Guru Sathya Pradeep 
அரங்கின் முன் ஆங்காங்கே சுபிக்ஷாவின் சிறிய அளவு கட் அவுட்கள் வைக்கப்பட்டிருந்தன. எல்லா போட்டோக்களிலும் சுபிக்ஷா புன்னகைத்துக் கொண்டிருந்தாள். அந்தப் புன்னகை ஆடும்போது துவங்கி முடியும் வரை நிலைத்திருந்தது ஆச்சரியம்தான்.
Image result for Dr. Aparna Sharma, singer and dancer
Dr.Aparna Sharma
மேடையின் திரைகள் உயர்ந்ததும், இடது புறத்தில் சுபிக்ஷாவின் குரு சத்யா  பிரதீப் பெருமையுடன் நடுநாயகமாக அமர்ந்திருக்க அவர் அருகில் பாடகர் டாக்டர் அபர்னா ஷர்மா, வலது புறம் மிருதங்க வித்வான் B.V.கணேஷ், மறுபுறம் புல்லாங்குழல் C.K.பதஞ்சலி மற்றும் வயலின் வித்வான் C.K.விஜயராகவன் இருந்தனர். குரு தவிர மற்ற எல்லோரும் இந்தியாவிலிருந்து வந்தவர்கள். அவரவர் துறைகளில் விற்பன்னர்கள் என்று அறிமுகப் படுத்தியதோடு மட்டுமல்ல வாசிக்கும் போதும் தெரிந்தது. குரு சத்யா  பிரதீப், (www.satyapradeep.com)  லாங் ஐலண்டில் “நிருத்ய சாகரம் டான்ஸ் அக்கெடெமி” என்று நடனப் பள்ளியை ஆரம்பித்து நடத்தி வருகிறார். பல நாட்டிய நிகழ்ச்சிகளை நடத்தியவர். எனக்கு ஏற்கனவே அறிமுகம் ஆனவர் .

சிறப்பு விருந்தினர்களாக பிரபல நடன ஆசிரியர் கலைமாமணி ஜெயந்தி சுப்ரமணியமும் பேரூர் ஆதீனம் தவத்திரு மருதாச்சல அடிகளாரும் இந்தியாவிலிருந்து வந்திருந்தார்கள்.      
ஜெயந்தி சுப்ரமணியம் ஆங்கிலத்தில் ஒரு அற்புத உரையாற்றினார். சுபிக்ஷாவின் நடனத்தின் சிறப்புகளை எடுத்துக் காட்டியதோடு பரதக் கலையின் பெருமைகளையும் விளக்கினார்.
பேரூர் மருதாசல அடிகளார் தமிழில் தொடங்கி ஆங்கிலத்திற்குத் தாவினார். அவரின் உரையின் சாராம்சத்தை தமிழிலேயே சொல்லியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.
மேடையின் மறுபுறம் கலையரசன் தில்லையம்பல நடராஜனின் நடன விக்கிரகம் அமைக்கப்பட்டு அலங்கரிக்கப் பட்டிருந்தது.
நிகழ்ச்சி பரதக்கலை பிறந்த தஞ்சை வழுவூரில் இருக்கும் ஸ்தல விக்கிரகங்களுக்கு ஜெபப் பாடலுடன் துவங்கியது. அடுத்து நாட்டை ராகத்தில் மிஸ்ரஜம்ப தாளத்தில் ஜம்ப் செய்து சுபிக்ஷா உள்ளே வந்து பஞ்சமூர்த்தி அஞ்சலியில் தெய்வங்களுக்கும்,  குருவுக்கும், இசைக்குழுவுக்கும் வந்திருந்த அனைவருக்கும் வணங்கி வரவேற்ற விதத்தில் நிகழ்ச்சி சூடுபிடிக்க ஆரம்பித்தது.
அதற்கு அடுத்து வந்த “அலரிப்பு, ஜதீஸ்வரம், வர்ணம், பதம், திருப்புகழ், தில்லானா ஆகிய அரங்கேற்ற வரிசைகளைத் தொடர்ந்து ஆடி பிறகு மங்களம் பாடி முடிந்தது. ஒவ்வொரு நடனத்திற்கும் ஒவ்வொரு உடையில் மொத்தம் ஏழு உடைகளில் சுபிக்ஷா ஆடியபோது சில சமயங்களில் நியூயார்க்கில் இருக்கிறோமா? இல்லை ஏதோ இந்திரலோகத்தில் இருக்கிறோமா என்ற சந்தேகம் எழுந்தது.
குறிப்பாக நடனத்தின் சிறப்பு அம்சமாக 40 நிமிடம் ஆடிய வர்ணத்தில் தசாவதாரத்தின் பத்து அவதாரங்களை சுபிக்ஷா  தன் முத்திரைகள், முக உணர்ச்சிகள் மூலம் வெளிப்படுத்திய விதம் பிரமிக்க வைத்தது. கூர்மத்தில் ஆரம்பித்து கல்கிவரை பார்த்த எல்லோராலும் எளிதாக விளங்கிக் கொள்ளும் வகையில் அமைந்திருந்தது மிகவும் பாராட்டத்தக்கது.
அதோடு பாடப்பட்ட பாடல்கள் எல்லாமே தமிழ்ப்பாடல்களாக ஒலித்தது மிகவும் பாராட்டப்படக் கூடிய ஒன்று. தமிழகத்தில் அதுவும் தஞ்சைத் தரணியில் தோன்றிய கலையை ஆட,  ஏன் புரியாத தெலுங்கு கீர்த்தனைகளைப் பயன்படுத்த வேண்டும். இதனை செந்தமிழ்ச் செல்வன் செய்யாமல் வேறு யார் செய்யமுடியும்? . குறிப்பாக பதத்திற்கு பாடிய பாபநாசம் சிவன் பாடலான “தேவி நீயே துணை”. பிரபல கர்நாடகப் பாடகி அருணா சாய்ராம் பாடிப்புகழ் பெற்ற “மாடு மேய்க்கும் கண்ணே” ஆகிய பாடல்கள். அதோடு TMS-ன்  கம்பீரமான   குரலில் ஒலித்த “முத்தைத்திரு” என்ற அருணகிரிநாதரின் பாடல் அபர்ணா ஷர்மாவின் அருமையான குரலில் ஒலிக்க சுபிக்ஷா அபிநயம் பிடித்தது நடன நிகழ்ச்சியின் ஹைலைட் என்று சொல்லலாம். தொடர்ந்து வந்த காவடி ஆட்டமும் மிகச்சிறப்பாக அமைந்தது.
குரு சத்யா ப்பிரதீப்பின் கைத்தாளமும். சுபிக்ஷாவின் கால் சலங்கையும் ஏதோ ரிமோட் கன்ட்ரோல் போல ஒருமுறை  கூட  அச்சுப்பிரளாமல் ஒன்றாக ஒலித்தது. சத்யா ப்பிரதீப்பின் கொன்னக் கோலும் பி.வி. கணேஷின் மிருதங்கமும் அச்சரம் கூட மாறாமல் இருந்தது. அதே மாதிரி அபர்ணா ஷர்மாவின் பாடலும் விஜயராகவனின் வயலினும் ஒன்றோடு ஒன்று இழைந்து  உறவாடி, குரல் எது வயலின் ஓசை என்று  தெரியாத வண்ணம் இனிமையாக ஒலித்தது.
சுபிக்ஷா வைப்பற்றிய குறும்படம் (?) பிக்பாஸ் குறும்படம் போலன்றி மிகவும் சுவாரஷ்யமாக இருந்தது நல்ல ஒரு தொகுப்பு. மற்ற பெற்றோர்களும் இதனைப் பின்பற்றலாம்
பரத நாட்டியம் ஒன்றுக்கே நேரம் பத்தாது என்று நினைத்தால் சுபிக்ஷா பியானோ மற்றும் வயலின் வாசிப்பதிலும் அதோடு கர்நாடக சங்கீதத்தைப் பாடுவதிலும் சிறந்தவள் என்று கேள்விப்பட்டேன். அப்ப படிப்பு எப்படி? என்று கேட்டால் அவுட்ஸ்டான்டிங் அவார்டு, கோல்டன் ஸ்டுடன்ட் அவார்டு  வாங்கிய சுபிக்ஷா விளையாட்டையும் விட்டு வைக்க வில்லை .அவள் பள்ளியின் டென்னிஸ் பிளேயராம்.
சுபிக்ஷா நிச்சயமாக  கடவுளின் ஆசிர்வதிக்கப்பட்ட குழந்தை என்பது மட்டுமல்லாமல் அவளை ஒன்றில் சிறக்க மற்றொன்றை விடவேண்டியதில்லை என்று மற்ற மாணவர்களுக்கு உணர்த்தும் உதாரண மாணவியாகவே பார்க்கிறேன். செந்தமிழ்ச் செல்வனும் பரிமளாவும் கொடுத்து வைத்தவர்கள் தான்.
With the Proud Family

மற்ற எல்லா ஏற்பாடுகளையும் சிறப்பாகச் செய்திருந்தார்கள் குறிப்பாக இரவு உணவு. அலங்கரிக்கப்பட்ட வட்ட மேஜைகளில் உட்கார்ந்து சாப்பிட அறுசுவை விருந்து இருந்தது. எங்கெங்கு எதுவெல்லாம் நன்றாகச் செய்வார்கள் என்று ஆய்ந்து கோதாவரி, தோசா ஹட் போன்ற பல உணவகங்களிலிருந்து பதார்த்தங்கள் வரவழைக்கப்பப்படிருந்தன. நன்றிப் பரிசாக மாட விளக்கையும் தேடித்தேடி ஒவ்வொரு குடும்பத்திற்கும் கொடுத்தனர்.
ஒரு திருமண விழாவுக்கும் மேலாக இந்த அரங்கேற்றம் நடைபெற்றது.
செந்தமிழ்ச் செல்வனின் மொத்த சேமிப்பையும் தன் மகள் சுபிக்ஷாவின் அரங்கேற்றத்திற்கே செலவழித்து விட்டாரோ என்று எண்ணத்தோன்றியது.
சத்யா  பிரதீப்பின் மகள் மாஸ்டர் ஆஃப் செரிமணி பண்ணியதும் சிறப்பாக இருந்தது.
புலம் பெயர்ந்த தமிழ்மக்கள் தம் மொழி, கலை, இலக்கியம் ஆகியவற்றை மறந்தும் துறந்தும் விடாமல் தங்கள் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதற்கு இந்த நாட்டிய அரங்கேற்றம் ஒரு சிறந்த உதாரணம்.

-முற்றும்.

  

Thursday, September 21, 2017

அற்புத எழுத்தாளர் அசோகமித்திரன்!


FETNA  2017 இதழில் வெளிவந்த எனது கட்டுரை

அசோகமித்திரன்
            தமிழ் கூறும் நல்லுலகம் கொடுத்த சிறந்த படைப்பாளர்களுள் அசோகமித்திரன் குறிப்பிடத்தகுந்தவர். இவரது இயற்பெயர் ஜெகதீஷ் தியாகராஜன். 1931-ல் செகந்திராபாத்தில் பிறந்த அவர் தன் 20 வயது வரையில் அங்குதான் இருந்தார். 1952ல் தந்தை இறந்தவுடன் என்ன செய்வது என்று திகைத்த போது, தந்தையின் நண்பரான பிரபல இயக்குனரும் பத்திரிகையாளருமான S.S.வாசன் அவர்களிடமிருந்து  சென்னையில் இருந்த அவருடைய ஜெமினி ஸ்டூடியோவில் வேலை செய்ய அழைப்பு வந்தது. இதுவே படைப்புலகில் அவருக்கு நிகழ்ந்த திருப்புமுனை. அங்கு இருந்த 10 வருடங்களில் அவருடைய எழுத்துத் திறமை பீறிட்டுக்கிளம்பியது. 
Image result for MY years with boss

    படவுலகின் அனுபவங்களை “இல்லஸ்ட்டிரேட்டட் வீக்லி ஆஃப் இந்தியா”, என்ற பத்திரிகையில் பத்திகளாக எழுத ஆரம்பித்து பின்னர் அது புத்தகமாக வெளிவந்தது. அதன் பெயர் "மை இயர்ஸ் வித் பாஸ்"( My years with Boss). S.S.வாசனைத்தான் அப்படிக் குறிப்பிட்டார் என்று சொல்லத்தேவையில்லை. அதன்பின்னர் அவருடைய படைப்புகள் மளமளவென்று வெளிவந்தன. இருநூறுக்கு மேற்பட்ட  சிறுகதைகளையும் பன்னிரண்டு நாவல்களையும் எழுதியிருக்கிறார். சிறந்த கட்டுரைகளையும், விமர்சனங்களையும் எழுதுவதிலும் வல்லவரான இவர் "கணையாழி" என்ற சிறப்பான இலக்கிய இதழின் ஆசிரியராக பலகாலம் பணியாற்றினார். தன் சொந்த அனுபவத்துடன் கற்பனை கலந்து நகைச்சுவையுடன் எழுதுவது அவரது தனிக்கலை. அதோடு எளிய நடையில் எவரும் புரிந்து கொள்ளும் வகையில் எழுதுவதும் அவரது சிறப்பம்சம். விரைவிலேயே அவருடைய படைப்புகள், இந்தி, மலையாளம் மற்றும் தெலுங்கில் மொழிபெயர்க்கப்பட்டன. 
Add caption
     என்னை மிகவும் கவர்ந்த அவர் எழுதிய "18-ஆவது அட்சக்கோடு" ஆங்கிலத்திலும் மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது. அதனைப்பற்றிய என்னுடைய பதிவைப் படிக்க  இங்கே சொடுக்கவும் (http://paradesiatnewyork.blogspot.com/2017/04/blog-post_11.html) தன்னுடைய படைப்புகளுக்காக பல விருதுகளைப்  பெற்ற இவர்,  "அப்பாவின் சிநேகிதர்" என்ற சிறுகதைத் தொகுப்புக்காக இந்திய நாட்டின் உயரிய விருதான 'சாகித்ய அக்காடெமி' விருது வென்றார். கடந்த மார்ச் 2017ல் தனது 85-ஆவது வயதில் அவர் இந்த உலகைவிட்டு மறைந்து போனாலும் தமிழ் உள்ளவரை அவரின் நினைவும் புகழும் நிலைத்திருக்கும் என்பது உறுதி.

தி.ஆல்ஃ பிரட் தியாகராஜன், நியூயார்க்.  

(www.paradesiatnewyork.blogspot.com)

Monday, September 18, 2017

இலங்கைக்கு இந்தியா கொடுத்த புத்தர் சிலை !!!!!!

  இலங்கையில் பரதேசி -23
இதற்கு முந்திய பகுதியைப்படிக்க  இங்கே சொடுக்கவும்.

http://paradesiatnewyork.blogspot.com/2017/09/blog-post_11.html
Related image
Ulpenge Queen's Bathing place
காவல்காரன் என்ற போலீஸ்காரன் என்ற செக்யூரிட்டி, கிட்ட வந்து அங்கிருந்த போர்டைக் காண்பித்தான். (No trespassing) நோ டிரெஸ்பாஸிங், பாதுகாக்கப்பட்ட பகுதி என்று எழுதியிருந்தது. மராமத்து வேலைகள் நடப்பதால் உள்ளே செல்ல அனுமதியில்லை என்று சொன்னான்.
அதனைப்பற்றி மேலும் தெரிய வந்த விஷயமானது, இந்த வளாகத்தை ஆக்ரமித்த பிரிட்டிஷ்காரர்கள் இந்தப்பகுதியையும் எடுத்துக் கொண்டு அதனை நூலகமாக மாற்றிவிட்டார்களாம். ரசனை கெட்டவர்கள். சுதந்திரம் வாங்கியபின் இந்தப்பகுதி இந்தக் கோவிலின் போலீஸ் அவுட் போஸ்ட்டாக செயல்பட்டதாம். ஆனால் இப்போது சிறிது சிதிலமடைந்து மராமத்துப் பணிகளுக்காக மூடப்பட்டுள்ளது. இதனை அமைத்த விக்ரமராஜசிங்கே நல்ல ரசனைக்காரன்தான். இயற்கையையும் செயற்கையையும் இணைத்து பொதுவான ஏரியில் மறைவான குளிக்குமிடத்தை அமைத்த அவனை உளமாற பாராட்டினேன். சில சமயங்களில் ராணிகளுடன் ராஜாக்களும் ஜலக்கிரீடைக்காக வருவார்களோ என்றும் நினைக்கத் தோன்றியது.

Under Repair

மறுபடியும் சளசளவென்று அதே சத்தம் கேட்க, காவல்காரனையும் மீறி ஆர்வத்துடன் எட்டிப் பார்த்தேன். அங்கே தெள்ளத் தெளிவான ஏரி நீரில் சிறிதும் பெரிதுமாய் ஒரு மீன் கூட்டம்  தண்ணீரைக் களைந்து கொண்டும் துள்ளிக் கொண்டும் சளக்புளக் என்று நீந்திக்கொண்டிருந்தன. அது என்ன மீன் என்று காவலனைக் கேட்க அவன் முறைத்துப் பார்த்துவிட்டு நகர்ந்து விட்டான்.

மீன் கூட்டம்

உடனே விரிந்த என் கற்பனைகள் ராணியும் தோழிகள் புடை சூழ மீன்களுக்குப் போட்டியென நீந்தி விளையாடி நீராடி மகிழ்ந்த காட்சிகள். அப்படியே மறுபுறம் போனால் கலோனியல் பில்டிங் என்பதை பார்த்தவுடனே தெரிந்தது. ஒரு மாபெரும் சிலை ஒன்று இருந்தது. அது ஒரு புத்த பிட்சுவின் சிலை. அவர் பெயர்  அமோகவஜ்ர தேரோ  . 

அமோகவஜ்ர தேரோ

இலங்கை பிரிட்டிஷ்  ஆட்சிக்கு உட்படுத்தப்பட்டபோது இங்குதான் அதன் கவர்னர் தங்கியிருந்தாராம். கண்டியின் சீதோஷ்ணம் மலையக குளிரிச்சியினைக் கொண்டதால் வெள்ளைக் காரர்களுக்கு இது மிகவும் பிடித்த இடம். இந்த பில்டிங்  சர்.ஜேம்ஸ் லாங்டன்  என்பவரால் 1880-ல்  ஆண்டு கட்டப்பட்டது. பல கவர்னர்கள் இங்கே தங்கியிருந்தனர். அந்த இடம் இப்போதும் பளபளவென்று இருந்தது. ஒரு புறம் அலுவலகம் இருந்ததால் அனுமதியில்லை. மறுபுறம் ஒரு சிறிய மியூசியமும் விற்பனை இடமும் இருந்தன.


அங்கிருந்து கீழே   படிகளில் இறங்கினால் அங்கு ஒரு மாபெரும் புத்தர்சிலை ஒன்று இருந்தது. கிட்டப்போய்ப் பார்த்தால் அது இந்தியாவிலிருந்து பரிசாக வழங்கப்பட்ட ஒன்று என்பது தெரிந்தது. கீழே இந்திய மூவர்ணக்கொடி பொறிக்கப்பட்டு இருந்தது.

அதனைக் கடந்து மறுபுறம் சிறிது கூட்டமாய் இருந்தது. அது என்னவென்று கிட்டப்போய்ப் பார்த்தால் ஒரு பெரிய யானையை பாடம் செய்து வைத்திருந்தார்கள். 

அது எல்லோருக்கும் பிரியமான கோயில் யானையாம் . அதன் பெயர் மற்றும் வரலாறையும் அங்கே எழுதி வைத்திருந்தார்கள்.
British Governor's palace 

கோவிலின் மறுபுறம் கண்டி பிராவின்சின் கவர்னர் மாளிகை இருக்கிறது. உள்ளே செல்ல அனுமதியில்லை. மறுபுறம் கோவில் வளாகத்தை ஒட்டி ஒரு பழைய பிரிட்டிஷ் கால கிறிஸ்தவ ஆலயம் ஒன்றும் இருந்தது. இப்படி பல அதிசய அற்புதங்களைக் கொண்ட 'தலதா மாளிகை' பலவேறு வரலாறையும், கால மாற்றங்களையும் எடுத்துக் காட்டுவதாக இருந்தது.

Kandy Governor's Residense

ஒவ்வொரு வருடமும் ஜூலை ஆகஸ்ட்டில் பெரிய திருவிழா ஒன்று நடக்குமாம். அதன் பெயர் "கண்டி ஈசலா பிரஹரா (The Kandy Esala Perahera). இந்த விழாவின் சிறப்பாக ஒரு பெரிய ஊர்வலம் நடக்குமாம். பிரஹரா என்றால் ஊர்வலம் என்று அர்த்தம். இது புனிதப்பல்லுக்கு  மரியாதை செய்யும் விதமாக நடத்தப்படுகிறது. இந்த ஊர்வலத்தில் இலங்கையின் பாரம்பரிய நடனங்களான தீ நாட்டியம், சாட்டை நாட்டியம் போன்ற பல்வேறு கலாச்சார நடனங்கள் நடத்தப்படும். இவ்வூர்வலத்தில் யானைகள் அழகான உடைகளால் அலங்கரிக்கப்பட்டு மகாவெளி ஆற்றங்கரை வரை போகுமாம்.


கி.மு.மூன்றாம் நூற்றாண்டில் ஆரம்பிக்கப்பட்ட (நன்றாக கவனிக்கவும் கி.பி. அல்ல கி.மு) முதலில் மழை வரம் வேண்டி நடத்தப்பட்டது. ஆனால் கி.பி. நான்காம் நூற்றாண்டில் இந்தியாவிலிருந்து புனிதப்பல் இலங்கைக்கு வந்த போது இதே  ஊர்வலம் புனிதப்பல் ஊர்வலமாக மாறிவிட்டதாம்.இப்போது நடக்கும் ஊர்வலத்தை 1747 முதல் 1781 வரை அரசாண்ட கண்டியின் அரசன் கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்கே ஆரம்பித்து வைத்திருக்கிறான். 1815ல் பிரிட்டிஷாரின் பிடிக்கு வந்த பின், அவர்கள் புனிதப்பல்லையும், விழாவையும் புத்த மகா சங்கத்திடம் ஒப்படைத்து விட்டனர். இந்த ஊர்வலத்தில் கோயில் யானையின் அம்பாரியில் புனிதப்பல் ஊர்வலமாக எடுத்து வரப்படும்.
போதும் போதுமென பார்த்து முடித்து, வெளியே வந்து அம்ரியைத் தேடிக் கண்டுபிடித்தேன். “சார் இவ்வளவு நேரமா என்ன செய்தீங்க உள்ளே”, என்று கேட்டான். ஹிஹி என்று சிரித்துவிட்டு "கொழுப்பிற்குத் திரும்பலாம்' என்றேன்.
மலைப்பயணத்தை இனிதே முடித்து கீழிறங்கினோம். சீரான வேகத்தில் காரை செலுத்தச் சொன்னேன். போகிற வழியில் ஒரு ஊரில் அங்கேயே விளைந்த முந்திரிப்பருப்புகள் கிடைத்தன. சென்னைக்கும் மதுரைக்கும் செல்லப் போவதால் சில பாக்கெட்டுகளை வாங்கி வைத்துவிட்டு ஒன்றைப்பிரித்து சாப்பிட்டோம். நல்ல விளைந்த பெரிய சைசில் இருந்த  முந்திரிப் பருப்புகள் பதமாக வறுக்கப்பட்டு சிறிதே உப்புத்தூவி இருந்தது. அந்த மாதிரி ஒரு மொறுமொறுப்பான முந்திரிப் பருப்புகளை நான் அதற்கு முன்பு சாப்பிட்டதே இல்லை.
ஒரு மூன்று மணி நேரப்பயணத்தில் கொழும்பு வந்து சேர்ந்தோம். மணி பத்தாகியிருந்தது. நாளை எங்கே என்றேன். நாளை காலேவுக்குப் போகிறோம் என்றான்.
அங்கே என்ன இருக்கிறது?
அங்குதான் டச்சுக்காரர்களின் கோட்டை இருக்கிறது. அது தவிர கடலில் சென்று கோரல்களைப் பார்க்கலாம் என்றான். அதனைப்பற்றி நினைத்துக் கொண்டு அப்படியே தூங்கிப்போனேன்.

தொடரும்

Thursday, September 14, 2017

சர்ச்சிலைக்கொல்ல நடந்த சதி !!!!!

Image result for கழுகு தரை இறங்கிவிட்டது.
படித்ததில் பிடித்தது
கழுகு தரை இறங்கிவிட்டது.
ஜேக் ஹிக்கென்ஸ் - தமிழில் கொரட்டூர் கே.என் ஸ்ரீனிவாஸ் - கண்ணதாசன் பதிப்பகம்.
வரலாற்று நவீனம் (Historical Fiction), அதுவும் உலகப்போர் சமயம் நடந்தது அதுவும் தமிழில் என்பதால் இந்தப் புத்தகத்தை உடனே வாங்கினேன்.
Image result for winston churchill
Winston Churchil
கண்ணதாசன் பதிப்பகத்தில் இப்படி சில முயற்சிகள் செய்திருக்கிறார்கள். எந்த அளவுக்கு வெற்றியடைந்திருக்கிறது? எவ்வளவு பிரதிகள் விற்றது என்று தெரியவில்லை. ஆங்கிலத்தில் எழுதும் நவீனங்கள், இங்கிலாந்திலோ அமெரிக்காவிலோ ஹிட் ஆகிவிட்டால் அதனை எழுதிய எழுத்தாளர்கள் மிகப் பிரபலமடைவார்கள். அதோடு பெரும் பணக்காரர்கள் ஆகிவிடுவார்கள் . அவர்களின் நாவல் கண்டிப்பாக சினிமாவாகவும் வந்துவிடும். உதாரணத்திற்கு டேன் பிரவுனைச் சொல்லலாம்.  
ஆனால் இந்தியாவில் சங்க காலத்திலிருந்து இதனைப் படிக்கும் உங்க காலம் வரைக்கும் இப்படி ஒருவரைக் கூட சொல்லமுடியாது. ஓரளவுக்கு புகழ் கிடைக்கலாம். ஆனால் நட்சத்திர எழுத்தாளர்களுக்கு கூட பெரும் பணம் கிடைக்க வாய்ப்பேயில்லை. ஆங்கிலத்தில் நான்கு புத்தகங்கள் எழுதி சம்பாதிப்பதை இங்கு நாநூறு புத்தகங்கள் எழுதினாலும் அதில் ஒரு சிறு சதவீதம் கூட அவர்கள் சம்பாதிக்க முடியாது. முழு நேர எழுத்தாளர் என்பது இப்போதெல்லாம் சுத்தப் பைத்தியக்காரத்தனம்.  ஏனென்றால் சுஜாதா போன்ற நட்சத்திர எழுத்தாளனின் புத்தகங்கள் கூட 2000 பிரதிகளுக்கு மேல் விற்காதாம்.
Related image
Jack Higgins
இங்கு ஒரு சில நாவல்கள் எழுதிப் உலகப்புகழ்பெற்ற ஜேக் ஹிக்கின்ஸ் (Jack Higgins) எழுதிய "தி ஈகிள் ஹேஸ் லேன்டட்" (The Eagle has landed) என்ற புத்தகத்தை வெகுகாலத்திற்குப்பின் கண்ணதாசன் பதிப்பகம் தமிழில் கொண்டுவந்திருக்கிறார்கள். புகழ் பெற்ற புத்தகங்களை மொழியாக்கம் செய்து வெளியிட பதிப்புரிமைக்கு மிகவும் செலவாகும். இது மிகவும் பழையது என்பதால் ஒருவேளை சல்லிசாக கிடைத்திருக்கும் என நினைக்கிறேன்.
Image result for Hitler
Hitler
இரண்டாம் உலகப்போர் மும்முரமாக நடந்து கொண்டிருந்த சமயம். ஜெர்மனின் ஆதிக்கம் கொஞ்சம் கொஞ்சமாக தகர்ந்து கொண்டிருந்தது. ஹிட்லர், ஹிம்லர், கோயபல்ஸ், கனாரிஸ் ஆகியோர் காரசாரமாக விவாதம் செய்கிறார்கள். ஏதாவது செய்து தோல்வியைத் தவிர்க்க வேண்டும் என்ற அழுத்தம். ஹிட்லர் எல்லோர் மேலும் எரிந்து விழ ஹிம்லர் ஒரு விபரீத முடிவை எடுக்கிறார்.
Image result for himmler
Himmler
அதுதான் இங்கிலாந்துக்கு ஒரு தற்கொலைபாராசூட் படையை அனுப்பி வின்ஸ்டன் சர்ச்சிலைக் கொலை செய்வது அல்லது கடத்திக் கொண்டு வருவது என்பது. ஏற்கனவே இந்த அதிரடிப் பாராசூட் படை இத்தாலியின் சர்வாதிகாரியான முசோலினியைக் கடத்திவந்திருந்தது.
இதற்கு மாஸ்டர் மைண்டாக மேக்ஸ் ரேடில் என்ற ஜெர்மானிய மேஜர் ஒருவர் செயல்பட்டு திட்டம் வகுக்கிறார். இதற்கிடையில் ஸ்டட்லி கான்ஸ்டபிள் என்ற பகுதிக்கு ஒரு சிறு ஓய்வுக்கு ரகசியமாக சர்ச்சில் வருகிறார் என்ற செய்தி ஒரு பெண் உளவாளி மூலமாகக் கிடைக்கிறது.

இங்கிலாந்தின் மேல் கோபங் கொண்ட டெவ்லின் என்ற ஒரு ஐரிஸ்காரர் முன்னே சென்று ஆயத்தங்கள் செய்யும் வேளையில் டாலி என்ற  ஆங்கிலப் பெண்ணிடம் காதலில் விழுகிறார். கர்னல் ஸ்டைனர் என்றவரின் தலைமையில் பாராசூட் படை அந்த ஊரில் ரகசியமாக இங்கிலாந்தின் நட்பு நாடான போலந்து ராணுவத்தின் யூனிபார்மில் வந்து இறங்குகிறார்கள். 
Image result for The Eagle has landed

அவர்கள் என்னமாதிரி திட்டமிட்டார்கள்? சரியான திட்டம்தானா? அவர்களின் முயற்சி எந்தளவுக்குப் பலித்தது என்பதை புத்தகம் படித்து தெரிந்து கொள்ளவும் அல்லது திரைப்படத்தையும் கண்டுபிடித்து பார்க்கலாம். இதே பெயரில் திரைப்படமும் வந்து கலக்கியது. 1977ல் இந்தப்படம் வந்தது. மைக்கல் கெய்ன் ஸ்டைனராகவும், டோனால்ட் சதர் லேண்ட் டெவ்லினாகவும், ராபர்ட் குவாலி ரேடிலாகவும், டோனால்ட் பிளசன்ஸ் ஹெய்ன்ரிச் ஹிம்லராகவும் நடித்துள்ளார்கள். நெட்பிலிக்சில் இது இல்லை. நூலகம் போய்த் தேட வேண்டும்.
இந்தப் புத்தகத்தை மொழி பெயர்த்த முனைவர் கொரட்டூர்  கே.என். ஸ்ரீனிவாஸ்  முடிந்தளவிற்கு முயன்றிருக்கிறார். ஆனாலும் சில அமெரிக்க அல்லது ஆங்கில லோக்கல் ஸ்லாங்களை  அவர் சரியாக மொழிபெயர்க்கவில்லை. சில உரையாடல்களை அப்படியே (Literal) மொழி பெயர்க்கக் கூடாது. அதனை தமிழில் பேசினால் எப்படியிருக்கும் எனக்கற்பனை செய்து தமிழாக்கம் செய்வது அவசியம். ஆனால் கதையின் சுவாரசியம் உங்களை ஆட்கொண்டு மற்ற சிறு தவறுகளை மறக்கடிக்கிறது.
கண்ணதாசன் பதிப்பகத்தின் முயற்சிகளையும் பாராட்ட வேண்டும். இது போன்ற கிளாசிக் நாவல்கள் தமிழில் மொழி பெயர்க்கப் படவேண்டியது அவசியம். ஒவ்வொரு நாவலை எழுதுவதற்கும் அமெரிக்கரோ, ஆங்கிலேயரோ, எவ்வளவு முயல்கிறார்கள் என்பதையும் நாம் அறிந்து கொள்ளலாம்.
இரண்டாவது உலகப்போரில் நடந்த மறைக்கப்பட்ட சம்பவத்தின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்த நாவலை வரலாற்று ஆர்வலர்கள் படித்து மகிழலாம்.

முற்றும் .