"என்னங்க அத்தை இது
இப்படி இருக்கு", இது அப்பா. 'சும்மா இருங்கய்யா, இத வளர்க்கிறேன் பாருங்க எட்டூருக்கு",
என்றார் என் ஆயா. அதாங்க என் அம்மத்தா, கறுத்துச்
சிறுத்து என் ஆயாவின் உள்ளங்கையில் அடங்கியிருந்த எனக்கு இது எதுவுமே ஞாபகமில்லை.
இது நடந்தது திண்டுக்கல்லில் வருஷம், அட அதாங்க நான்
பிறந்த வருஷம்.( அஸ்கு புஸ்கு)
ஆனா 'எட்டூர்' என்று என் ஆயா சொன்னது அப்படியே பலித்தது. பிறந்தது
திண்டுக்கல், வளர்ந்தது தேவதானப்பட்டி படித்தது
காந்திகிராமம் அப்புறம் மதுரை, முதல் வேலை சிவகாசி,
இரண்டாம் வேலை கிருஷ்ணகிரி மூன்றாம் வேலை சென்னை, இப்ப இருப்பது நியூயார்க். என்னாங்க எட்டூரு கணக்கு
வருதா ? இது நம்ம குமாரசாமி கணக்கு இல்லைங்க .நல்லா நாலு வாட்டி எண்ணிப்பாத்துக்கங்க. சொன்னது சொன்னபடியே வளர்த்து ஆளாக்கினது என் ஆயாதான்.
இப்படி சவலைப் பிள்ளையா பிறந்த நான்
கொஞ்சம் தவளைப் பிள்ளையா தாவி தெருவுக்கு வந்தபோது டிராக் ஈவெண்ட்ஸ்,
கிரவுண்ட் ஈவிண்ட்ஸ்னு எல்லா ஸ்போட்சிலும் சும்மா பூந்து
வெளையாடினேன். என்னன்னு கேக்கறீங்களா? அதாங்க, கோலிக் குண்டு, கிட்டிப்புள்ளு, பம்பரம், நொண்டி, கிளித்தட்டு,
கண்ணாமூச்சி இப்படி பல விளையாட்டை சொல்லிக்கிட்டே போகலாம் எனக்கு
என்ன ஒரே குறைன்னா இதுகள்ள ஒண்ணாச்சையும்
ஒலிம்பிக்கிள்ள சேத்திருந்தாய்கண்ணா, ஏதோ நானும் நம்ம
நாட்டுக்கு பெருமை சேத்திருப்பேன்.
நான் ஆறாவது படிக்கும்போது, கால்
எட்டாத பயபுள்ளைக எல்லாம் சைக்கிள்ல ஊடுகால் போட்டு ஓட்டறத பாத்து எனக்கும் ஆசையா
இருந்துச்சு. நானும் முயற்சி பண்ணேன். ஒருவிசை கூட முடியல. ஒரு நாள் மகேந்திரனும்
நானும் அவருடைய அண்ணன் சைக்கிளை தள்ளிட்டுப் போய் காந்தி மைதானத்துல ஒட்டிப்
பார்த்தோம். மகேந்திரன் நல்லா வளர்ந்த பய, ஈஸியா ஓட்டினான். நான் ஏறி ஊடுகால்
போடும்போது, கண்ணுக்குட்டி ஒண்ணு
குறுக்கே துள்ளிவந்து மோத என் ஊடுகால் மாடுகால்ல மோதி விழுந்ததுல மொத்தக்காலும்
ரத்தக்காலா ஆகி, வெற்றிகரமான 33-ஆவது
விழுப்புண்ணைக் கொடுத்துச்சு. (ஆஹா விழுப்புண்ணுல நானு ராஜேந்திர சோழனையும்
மிஞ்ச்சிட்டேன்ல)
எங்கம்மாவுக்கு வந்த வேகாளத்துல
புண்ணை மட்டும் விட்டுட்டு அடிச்ச அடியில் மத்த எல்லா இடத்திலயும் பன்னு மாதிரி
வீங்கிப் போச்சு. எனக்கே என்னை அடையாளம்
தெரியல. அன்னிக்கு வந்தது சைக்கிளுக்கு ஆப்பு. 'பெரியவனா ஆனாப் பாத்துக்கலாம், ஓங்கப்பாவுக்கே
ஓட்டத்தெரியாதுன்னு' எங்கம்மா சொன்னாங்க அது நெசமான்னு
அவர்ட்ட கேக்கிறதுக்கு கடைசி வரைக்கும் எனக்கு தைரியம் வரல. எங்க வீட்டில
சைக்கிளும் இருந்தில்ல, அவர் ஓட்டியும் நான் பாத்ததில்ல.
என் கூடப் படிச்ச எல்லா நாதாரிகளும் சைக்கிள் ஓட்டிப்பழகிவிட
என்னோட பள்ளிப்படிப்பு ஏக்கத்துலயே ஓடிமுடிஞ்சிருச்சு.
+1, +2க்கு காந்திகிராமம்
ஹாஸ்டல்ல போய் சேர்ந்தேன். சைக்கிள் வச்சுக்க அனுமதியில்லை. பழகிக் கொடுக்க பசங்க
இருந்தாலும் சைக்கிள் இல்லாதனால அந்த இரண்டு வருஷமும் அப்படியே ஓடிப்போச்சு.
அடுத்து அமெரிக்கன் கல்லூரில சேந்தேன்.
நல்ல வலுவான தீவிரவாதிகள் NCC -ல சேர மிதவாதிகள் எல்லாம் NSS -ல சேர்ந்தோம்.
ஐயோ அதுக்கு நாம் பட்ட பாடு எனக்குத்தேன் தெரியும். NSS சென்ட்டர்கள்
எல்லாம் வெளியிலதான் இருக்கும். சாயந்தரம் வகுப்பு முடிஞ்சு அங்கே ரெண்டு மணி
நேரம் போகனும். பசங்க எல்லாம் அவய்ங்க அவய்ங்க சைக்கிளை
எடுத்துட்டு கிளம்பிடுவாய்ங்க. நான் வாசல்ல நின்னு தொண்ணாந்துட்டு நிப்பேன்.
எங்கம்மா மேல கோவம் கோவமா வரும்.
எத்தனை பொய் சொல்லிருப்பேன் தெரியுமா? அதுல கொஞ்சத்தை கீழே தர்றேன்.
“அண்ணே உங்க கூட வர்றேன். உங்கள்ட்ட
சில சந்தேகம் கேக்கனும்”.
“டேய் மச்சான் காலுல சுளுக்குடா,
கொஞ்சம் ஒன்கூட வரவா?”
“மச்சி யார்ட்டயும் சொல்லாதரா என்
ஒரு காலு ரொம்ப வீக்கு, டாக்டரு
சைக்கிள் ஓட்டக் கூடாதுன்னு சொல்லியிருக்காரு.”
“அண்ணே வலது கால் பிசகிப்போச்சு,
கொஞ்சம் பின்னாடி ஏறிக்கவா?”
-யார்ட்டயும் சொல்லக்
கூச்சப்பட்டு, வெக்கப்பட்டு, பழகாமலே
மூணு வருஷமும் முடிஞ்சு போச்சு.
Madurai Institute of Social Sciences
அப்புறம் மதுரை சமூகப்பணிக்கல்லூரில
MA
படிக்கப் போனா, அங்க கோஎஜிகேசன்னு நிறைய
பொண்ணுங்க சைக்கிள்ளதான் காலேஜீக்கு வரும். எனக்கு சைக்கிள் ஓட்டத் தெரியாதுங்கற
டாப் சீக்ரட்டை மெயிண்டைன் பண்றதுக்குள்ள தாவு தீந்துபோச்சு.
"ஆல்ஃபி வெளியவா போற,
இந்தா சைக்கிள் எடுத்துட்டு போ"
“வேணாம் ரேகா,
நான் லேடீஸ் சைக்கிள்லாம் ஓட்ட மாட்டேன்”.
-இப்படியெல்லாம் சமாளிச்சு
அந்த ரெண்டு வருஷமும் முடிஞ்சு போச்சு. இந்தக் கவலைல ரொம்ப நாள் தூங்காம
இருந்திருக்கேன். என் வாழ்க்கையே சைக்கிள் கத்துக்காமயே முடிஞ்சிறுமோன்னு
நெனச்சேன். சைக்கிள் தெரியாட்டி டூவீலர் ஓட்ட முடியாதுன்னு தெரிஞ்சு என் ஓர மனசு
ஒடைச்சு போச்சு. சரி அப்ப ஸ்டிரைட்டா காரை வாங்கி ஓட்ட வேண்டியதுதான்னு என் ஈர
மனசு ஒரு பக்கம் சொல்லிப் பாத்தும் என்னைத் தேத்த முடியல.
முதுகலை முடிச்சும் சைக்கிள் கலை
கைவசம் வரல. லீவுக்கு ஊருக்குப் போகும் போதும் கூச்சத்துல வெளியே போய் கத்துக்க
முடியல. மீசை வளர்த்த ஆம்பளை சைக்கிளை எப்படி கத்துக்கிறது.
1986 மே மாத முதல் வாரத்தில்
உன்னை அப்பா கூப்பிடுறார்னு சொன்னான் ஜேம்ஸ். பிஷப் போத்திராஜீலு நம்மள எதுக்குக்
கூப்பிடுறார்னு நெனச்சிக்கிட்டே கீழவாசல்ல இருக்கிற பிஷப் பங்களாவுக்குப் போனேன்.
Bishop Pothirajulu |
"ஆல்ஃபி, சாட்சியாபுரத்துல நம்ம CSI ஸ்கூல்ல “சோசியல் வொர்க்கர்'
போஸ்ட் ஒண்ணு இருக்கு, போறியான்னு
கேட்டார். ஆஹா இன்னும் ரிசல்ட்டே வரல வேலை வந்துருச்சேன்னு பிஷப் ஐயாவுக்கு நன்றி
சொல்லிட்டு, அவர் கொடுத்த லெட்டரை எடுத்துக்கிட்டு
சிவகாசிக்கு பஸ் ஏறிட்டேன்.
சிவகாசிக்குப் பக்கத்தில் உள்ள
சாட்சியாபுரம். "எல்வின் சென்ட்டர்"
எங்க இருக்கு என்று கேட்கும் போது, வழி சொன்னார்கள். நடந்து நடந்து நடந்து போனால், கடந்த பிரிட்டிஷ் கால
கட்டடமான "எல்வின் சென்ட்டர்” ஒரு வழியாக வந்தது,
ஒரு 1 1/2 கிலோ மீட்டர் இருக்கும். மே வெயிலில் நடந்து காய்ந்த கருவாடாக வேர்த்து
விறுவிறுத்து வந்தேன். CSI School
& Home for the Deaf & Mentally
Retarded ல் கொஞ்சகாலமாக Social Worker Cum Rehabilitation Officer போஸ்ட் காலியாக இருந்தது.
பிஷப் லெட்டரை மரியாதையுடன்
வாங்கிப் படித்த ஹெட்மாஸ்டர், "எப்ப
ஜாய்ன் பண்ணுகிறீர்கள்?" என்று கேட்டார். வேர்த்து
வடிந்து என்னைப் பார்த்து, "நடந்தா வந்தீர்கள்,
ஒரு வாடகை சைக்கிளை எடுத்துக்கிட்டு வந்திருக்கலாமே ?",
என்றார் ஹெட்மாஸ்டர் தயாளன். வச்சிக்கிட்டா வஞ்சகம் பண்ணுறேன், தெரிஞ்சிக்கிட்டா தேவுடு காக்கிறேன். வெட்கத்திலும்
துக்கத்திலும் எனக்கு குமுறி குமுறிக்கொண்டு வந்தது. அடக்கிய
அந்த நேரத்தில் ஒரு முடிவு எடுத்தேன். சைக்கிள் பழகாமல் இங்கு
வந்து சேரக் கூடாது என்று. ஆனால் எப்படி ?
என்ற பெரிய கேள்வி பூதாகரமாக என்முன்னால் ஊசலாடியது.
-தொடரும்.
பின்குறிப்பு
: இதன் அடுத்த பகுதி வரும் வியாழனன்று வெளி வரும். நன்றி.
இந்த பிரச்சனை எனக்கு கார் ஓட்டும் போது வந்தது அண்ணே. அவனவன் காரை ஓட்டும் போது எனக்கு ஓட்ட தெரியாதுன்னு சொல்ல வெக்கமா இருந்தது. ஒருமுறை வேற வழியில்லாமல் நான் கண்டிப்பாக ஒட்டவேண்டும் என்ற நிர்பந்தம் வந்தது. அதனை நாள் பக்கத்தில் இருந்தவங்க ஓட்டினதை கூர்ந்து கவனித்து வந்ததால்... முதல் முறையே நேர எடுத்து ஒட்டினு போய்டேன் ...
ReplyDeleteதம்பி நான் எங்களைப்போன்ற சைக்கிள் கூட பழகமுடியாத ஏழைகளைப்பற்றி
Deleteசொல்லியுள்ளேன் .காரெல்லாம் கனவில் கூட முடியாத விஷயங்கள் .
ஒட்டுனது அடுத்தவன் கார்.. இதில் ஏழை பணக்காரன் எங்கே இருந்து வந்தது...?
Deleteஅருமையான நினைவுகள். உங்கள் எட்டூர் புராணம் தொடரட்டும்.
ReplyDeleteநன்றி ராஜாவே.
Deleteஎன்னவொரு சோகம்...!
ReplyDelete(உங்களின் இந்த முறை (June 6) சந்திக்க முடியுமா...?)
இன்னும் கையில் கட்டுடன் இருப்பதால் இந்த தடவை வரமுடியாமல் போவது எனக்கு மிகுந்த வருத்தம் .
Deleteநல்லா சமாளிச்சீங்க... அப்ப எப்பதான் கத்துக்கிட்டீங்கன்னு தெரிஞ்சிக்க ஆவல்..
ReplyDeleteஅவரு கத்துக்குனாருன்னு யாரு சொன்னாங்க..?
Deleteவரும் விசாலக்கிழமை சொல்லிர்றேன் .
Delete