Thursday, April 28, 2016

பரதேசியின் அடுத்த பயணம் எங்கே?

flight travel

“ஹலோ, பரதேசியா பேசுறது?”
“என்னடா மகேந்திரா, என்ன ரொம்ப நாளாச்சு?”
“நீயோ ஒரு பரதேசி உன்னை எந்த ஊர்ல பிடிக்கிறது?”
“டேய் நீ என்னை பாராட்டுறியா, இல்லை கலாய்க்கிறயா?”
“உன் வசதிப்படி வச்சுக்கடா?”
“உன்ட்ட பேசக்கூடாதுன்னு நெனச்சேன்?”
“ஏண்டா நான் என்ன செஞ்சேன் ?”
“என்ன செய்யலன்னு கேளு? “
“டேய் என்னடா புதிர்போடுற?”
“ஏன்டா, இவ்வளவு தூரம் மதுரை வரைக்கும் வந்திருக்க, திண்டுக்கல் வேற போயிருக்க, தேவதானப்பட்டிக்கு ஏன்டா வரல ?, பெரிய டவுன்காரரு ஆயிட்டயோ, பட்டி தொட்டிக்கெல்லாம் வரமாட்டியோ? “.
“அப்படியில்லடா, தேவதானப்பட்டிக்கு கண்டிப்பா வரணும்னு  நெனச்சப்ப, அங்க பசங்கெல்லாம் அரைப் பரீட்சை எழுதறாங்கன்னு சொன்னாங்க, அதான் வரல”.
“ஏண்டா அப்ப நானுமா அரைப்பரீட்சை எழுதிட்டு இருந்தேன்?”.
“நீ எங்க அரைப்பரீட்சை எழுதறது, அதான் கால் பரீட்சையிலயே கோட்டைவிட்டுட்டு ...?”
“டேய் வேணாம் பழசை கிளறாதே?”
“அதோட நான் எந்த  நாட்டுக்கும், ஊருக்கும் போகணும்னு நெனச்சாலும் அந்த நாட்டுக்கு ஏதாவது பிரச்சனை வந்துறுது. அப்படி நான் தேவதானப்பட்டிக்கு வந்து ஏதாவது உனக்கு பிரச்சனை ஆயிருச்சுன்னா என்ன செய்யறதுன்னு நினைச்சுதாண்டா  வரல”.
“அட என்னடா கதைவிடுற?”
“ஆமாடா மாப்ள நான் சொல்றதக் கேளு”
“ சரி சொல்றா  சொல்றா”.
 “சென்னைக்கு நான் நவம்பர்லயே வரவேண்டியது. ஆனா பேயாத மழை ஓயாது பேஞ்சி, செம்பரம்பாக்கம் கீழ்ப்பாக்கம் வரை பாஞ்சி, ஒரே வெள்ளக்காடா ஆயிப்போச்சி, அதனாலதான்  டிக்கட்டை மாத்திப்போட்டேன்.”
People walk through a flooded street in Chennai, India, Thursday, December 3, 2015. Heaviest rainfalls in more than 100 years have devastated swathes of the southern Indian state of Tamil Nadu, with thousands forced to leave their submerged homes and schools, offices.
Flooding in Chennai
“ஐயையோ அவனா நீ?”
அவனேதான். சரி போற வழியில பாரீசுக்கு போகலாம்னு நெனச்சிருந்தேன். அதுக்குள்ள ஐசிஸ் ஆளுங்க, குண்டைப்போட்டு ஒரே ரணகளமாயிப்போச்சு”.
Vigil in Paris for attack victims
Paris Bomb blast
“அட அப்புறம்?”
செளத் அமெரிக்கால இன்னும் பாக்காத நாடு பல இருக்கு, எதுக்காவது போகலாம்னு நெனெச்சா, சிகா வைரஸ் இருக்கு, சிக்கா ஆயிருவீங்கன்னு சொல்லிட்டாய்ங்கே”.

“அட சிகாவுக்கு காரணமான சகா நீதானா?”
“சரி வேணாம்னு விட்டுட்டுத்தான் சீனா வழி இந்தியாவுக்கு வரலாம்னு டிக்கட்டைப் போட்டேன். கிறிஸ்மஸ்சை  70 டிகிரி வெயில்ல சூப்பராக் கொண்டாடிட்டு, சீனா போனா அங்க 20 டிகிரில குளிர் வாட்டி எடுத்துருச்சு. அதோட காத்தும்  கெட்டுப்போய், (Pollution) நான் போன இடத்துக்கெல்லாம் முகமூடி போட்டுட்டு போற  மாதிரி ஆயிப்போச்சு. நல்ல வேளை ஒண்ணும் ஆகல”.
Paradesi in China

“சரி இலங்கைக்குப்போனியே அங்க எதும் ஆச்சா?”
“என்னடா ரொம்ப ஆர்வமாக் கேக்குற. எதாவது ஆனாத்தான் உனக்கு நல்லா இருக்குமோ, இலங்கையில ஏற்கனவே ஆனதெல்லாம் பத்தாதா?, இப்பத்தான் அங்கேயே கொஞ்சம் அமைதி வந்துருக்கு. ஆனாலும்  நான் இருந்த சமயம்தான் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் வந்திருந்தார் .என்ன நடக்குமோ தெரியலை ?”.
19
Nawaz in Srilanka
“சரி அதைவிடு சென்னையிலயும் மதுரையிலையும் ஒண்ணும் கலைல?”
சென்னையில ரெண்டு நாள்தான் இருந்தேன். மதுரைக்கு என்னைப் பார்க்க வரவேண்டிய என் கிளாஸ்மேட்டு ஜெய்ராமுக்கு ஆக்சிடன்ட் ஆயி கால்ல கட்டுப் போட்டுட்டு உட்கார்ந்துட்டான்”.
“ஐயையோ, ஆமா மைசூருக்கு வேற போனயே?
ஆமாடா மைசூருக்குப்போய் அங்கிருந்து கூடலூருக்கு போனேன். அதுக்கு முந்தின நாள் தான் அங்க மதயானை உள்ளே புகுந்து ஒருத்தனே கொண்டே போடுச்சு”. “மதயானையா? எந்த மதம்?”
டேய் உனக்கு என்ன லந்தாப் போச்சா?”.


“ஆமா ஏப்ரல் வந்தா ஏதாவது வெளிநாட்டுக்குப் போவியே எந்த நாட்டுக்குப் போகப்போற?”
“எகிப்துக்குப் போலாம்னு நெனச்சேன், அதுக்குள்ள  அங்கு ஒரு விமானத்தைக் கடத்திட்டாய்ங்க. பெல்ஜியத்திற்கு ஒரு நண்பர் கூப்பிட்டார்”.
“அட அங்கதான் விமான நிலையத்துல ஐசிஸ் தாக்கி நூறுபேருக்கு மேல செத்துட்டாய்ங்களே”.
“பார்ரா, உனக்கே உலக விஷயம் தெரியுது”.
“சரி சிரியா போக வேண்டியதுதானே உனக்கு சரியா இருக்கும்”.
“ஏலே மகேந்திரா வயசானாலும் உன் குறும்பு போலடா?”
“அப்ப என்னதாண்டா செய்யப்போற?”
“பேசாம வீட்டுலயே உட்காரவேண்டியதுதான்”.
“சரிடா கூப்பிட்டதை மறந்துட்டேன். பிறந்த நாள் வாழ்த்துக்கள்டா”.
“ஆமாடா ஏப்ரல் 1ஆம் தேதி பிறந்தனால யாரும் மறக்கமாட்டாய்ங்கறாங்க. ரொம்ப தேங்க்ஸ்ரா”.
“நான்ல உனக்கு தேங்க்ஸ் சொல்லணும். ரொம்ப ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்ரா”.
“என்னடா தேங்க்ஸ் ரொம்ப நீளமா இருக்கு.எதுக்குரா இவ்வளவு நீள தேங்க்ஸ்? “
“அது ஒண்ணுமில்ல, நீ தேவதானப்பட்டிக்கு வராததுக்குத்தான்”.
“அடப்பாவி மகேந்திரா”.

முற்றும்.

பின்குறிப்பு:
உங்கள் யார் ஊருக்காவது  நான் வரணுமுன்னு நெனச்சா, கடுதாசி போடவும்.  

Monday, April 25, 2016

பேரரசரின் நுழைவாயிலில் மாட்டிக்கொண்ட பரதேசி !!!!!!!

சீனாவில் பரதேசி -8

மிகப்பெரிய மைதானத்தை தாண்டினால் ஐந்து பெரிய வாயில்கள் இருந்தன. மாபெரும் சுவர்களைக் கொண்டு மிக உயரமாக இருந்தன. கண்மூடித்திறப்பதற்குள் சம்மர்’, அதாங்க அந்த வழிகாட்டிப் பெண்ணின் பெயர், எந்த வழியில் நுழைந்தாள் என்று கண்டுபிடிக்க வில்லையாரைப் பார்த்தாலும் ஒரே மாதிரி இருந்தார்கள். இவ்வளவு பெரிய கூட்டத்தில் அவளை எப்படிக் கண்டுபிடிப்பது ?. 400 யுவான் அவ்வளவுதான் ஸ்வாஹா என்று நினைத்துக் கொண்டே, நடுவில் இருந்த  வாயில் மூலமாக நுழைந்தேன். எங்கிருந்தோ வந்த சீன ராணுவ வீரன் ஒருவன் வந்து என்னைத்  தடுத்தான். அவன் கையில் இருந்த ஸ்டென் கன் எண்ணெய் போட்டுத்துடைத்ததால் பளபள வென்று மின்னியது.” அவன் எதோ கோபமாகச் சொன்னான். ஏதுடா வம்பாப்போச்சு? ஒரு மண்ணும் புரியவில்லை .நல்லவேளை என்னுடைய நுழைவுச்சீட்டு என் கையில் இருந்தது. எடுத்துக் காண்பித்து,” உள்ளே போக வேண்டும்”, என்றேன்.
அதற்குள் சம்மர் ஓடி வந்து அவனிடம் ஏதோ சொல்லி விட்டு என் கையைப் பிடித்து இழுத்து வெளியே வந்து வலது ஓரம் இருந்த மற்றொரு வாயிலின் மூலம் அழைத்துக் கொண்டு உள்ளே வந்தாள்.  
"எங்கே போனாய் என்னைவிட்டுவிட்டு”,
”நீ பின்னால் வருகிறாய் என்று நினைத்துத்தான் உள்ளே போனேன்”
“என்னாச்சு, ன் என்னை உள்ளே விடமாட்டேன்கிறார்கள் ?.
 "யாராவது இந்த வாயிலில் நுழைகிறார்களா   ?.
 அப்போதுதான் கவனித்தேன். வரும் டூரிஸ்ட் எல்லோரும் நடுவாயிலை விட்டுவிட்டு வலது அல்லது இடது புறம் மட்டும்தான் அனுமதிக்கப்பட்டார்கள். அங்கெல்லாம் கூட்டம் அதிகமாய் இருந்ததால் நான் நடுவில் நுழைந்தேன்.  
அவள் பின்னர் சொன்னாள், “இந்த நடுவில் உள்ள வாயிலின் பெயர் "Emperor Gate" சக்ரவர்த்தி அரண்மனையை விட்டு வெளியே செல்லும்போதும், உள்ளே வரும்போதும் இந்த வழியில் தான் போவார். அவர் கூட வரும் சில உயர் அதிகாரிகளுக்கு மட்டும் அதுவும் அவரோடு வரும்போது மட்டுமே அந்த வாயிலைப் பயன்படுத்த முடியும். தப்பித்தவறி வேறு யாராவது அந்த வாயிலில் நுழைந்தால் கழுவிலேற்றி விடுவார்கள்", என்றாள்.நான் என் கழுத்தைத் தடவிக் கொண்டே, “அந்தக் காலம் தான் முடிந்துவிட்டதே”, என்றேன். “இல்லை இப்போது சீன அதிபர் அமைச்சர்கள் மற்றும் உயர் ராணுவ தளபதிகள் மட்டுமே அதில் நுழையமுடியும்",என்றாள்.  
அதே போல் எந்த எந்த வாயிலில் யார் யார் நுழையமுடியும் என்று தனிச் சட்டங்கள் இருந்ததையும் கூறினாள்.
உள்ளே நுழைந்ததும் இன்னொரு பெரிய மைதானம் வந்தது. அதன் முடிவில் ஒரு பிரம்மாண்டமான கட்டடம் இருந்தது. எனக்கு Last Emperor சீன் ஞாபகத்திற்கு வந்தது. அவளிடம் கேட்டவுடன், சிரித்துக் கொண்டே "நீ சொல்வது சரிதான். இதுதான் தர்பார் மண்டபம். சக்ரவர்த்தி தன்னுடைய படைவீரர்களின் அணிவகுப்பை இங்கிருந்துதான் பார்வையிடுவார். வெளிநாட்டுத் தூதுவர்களை இங்குதான் சந்திப்பார். மேலும் பொது விழாக்கள் இங்குதான் நடைபெறும்", என்று சொன்னாள். குறைந்தபட்சம் 1 லட்சம் படைவீரர்கள் அணிவகுப்புச் செய்யும் அளவுக்கு அந்த மைதானம் பெரியது. அந்த பிரம்மாண்டமான அத்தாணி மண்டபத்திற்கு ஏறிச் செல்ல படிக்கட்டுகள் இருந்தன.
Paradesi with Male Lion or Two male Lions

அதன் இருபுறமும் இரு சிங்கங்கள் இருந்தன. அதில் எது ஆண், எது பெண் ? என்று சொல்லி கண்டு பிடிக்கச் சொன்னாள். உற்று உற்றுப் பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. அவளிடமே கேட்டேன். அவள் விளக்கிச் சொன்னாள் எனக்கு வலதுபுறம் இருப்பது ஆண் என்றும் இடதுபுறம் இருப்பது பெண் சிங்கம் என்று சொன்னாள். “எப்படிக்கண்டுபிடிப்பது”, என்றேன். “ஒரு  உருண்டையான பந்தின் மேல் கால் வைத்து இருப்பது ஆண் என்றும் , ஒரு குட்டியின் மேல் கை வைத்திருப்பது பெண் சிங்கம்”, என்றும் சொன்னாள்.
Female Lion

 அந்தப்பந்து உலகத்தைக்  குறிக்கும் என்றும் ஆண் சிங்கம் சக்தியையும் அதிகாரத்தையும் குறிக்கும் என்றாள்.அவள் சொன்னபின்தான் விளங்கியது.  அதோடு சீன புராணங்களில் சிங்கத்திற்கு முக்கிய இடம் உண்டு என்றும் , இவை எங்களின் காவல் தெய்வங்கள் என்றும் சொன்னாள் .

அந்தக்கட்டடத்தின் இருபுறமும் மிகப் பிரம்மாண்டமான தாமிர அண்டாக்கள்   இருந்தன? ஆனால் காலியாக இருந்தன. "இது எதற்கு என்று யூகிக்க முடிகிறதா?" என்று கேட்டாள். "நான் படைவீரர்களுக்கு கஞ்சி ஊத்துவதற்கு இருக்கும்,"  என்றேன். அவள் என்னை புதிராகப் பார்த்துவிட்டு, “இல்லை பெரும்பாலான கட்டிடங்கள் மரத்தால் கட்டுப்பட்டு இருப்பதால், இலகுவாய் தீப்பற்றிக் கொள்ளும். அப்படி திடீரென்று வரும் தீயை அணைப்பதற்காக இந்த அண்டாக்களின் தண்ணீர் நிரப்பி வைத்திருப்பார்கள். இங்குள்ள எல்லாக் கட்டடங்களிலும் இருபுறமும் அதனைக் காணலாம்", என்று சொன்னாள். கட்டடத்தின் முகப்பின் மேலே வெல்வெட்டில் சீன மொழியில் கட்டடத்தின் பெயர் எழுதப்பட்டிருந்தது. படிகளின் மேலே ஏறிச் செல்லும்போது கட்டடத்தின் இருபுறமும் விதானத்தின் ஓரத்தில் புறா, குரங்கு, ஓணான் என்று பல உருவங்கள் செதுக்கப்பட்டிருந்தன, அவள் சொன்னாள், ஒவ்வொரு கட்டடத்திலும் வாழும் மனிதர்களின் அந்தஸ்த்துக்கு ஏற்றவாறு நிறைய வடிவங்கள் இருக்கும். ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு அர்த்தம் உண்டு. உதாரணமாக குரங்கு உருவத்திற்கு நீண்ட வாழ் நாள் என்று அர்த்தம் என்றாள்.

மண்டபத்தின் உள்ளே பார்த்தால் மிகப்பெரிய உயரமான சிம்மாசனம் இருந்தது. பல படிகளில் ஏறித்தான் அதில் உட்கார முடியும். தகதகவென்று ஜொலித்தது. தர்பார் மண்டபத்தில் பேரரசர் மட்டுமே அமர முடியும். மற்ற எல்லோரும் நின்று கொண்டுதான் இருக்க முடியும். சிம்மாசனத்தின் இருபுறமும் மரவேலைப் பாடுடன் நறுமணம்  எழுப்ப புகைபோடும் சாதனங்கள் இருந்தன.
லாஸ்ட் எம்ப்பரர் படத்தில் அந்தச் சிறுபையன் படிகளில் விரைவாக ஏறி மேலே உட்காரும் காட்சி என் கண்முன் வந்தது.
அந்த அறை முழுவதும் சுவர்களிலும், கூரைகளிலும், தூண்களிலும் வண்ணமிகு கலவைகளில் வேலைப்பாடு செய்யப்பட்டிருந்தன. சிம்மாசனத்தைப் பார்த்து வியந்து படம் எடுத்து விட்டுத் திரும்பினால் சம்மரைக் கானோம், ஐயையோ மறுபடியுமா?

தொடரும்

Thursday, April 21, 2016

நியூயார்க்கில் தமிழ்ப் பள்ளியின் ஆண்டுவிழா !!!!!!!!!

Children at New York Tamil Academy , Long Island
  கடந்த வாரம், ஏப்ரல் 16ஆம் தேதி  சனிக்கிழமை மாலை,ஸ்டோனி புரூக், லாங் ஐலண்டில் நடந்த, நண்பர் முனைவர் பாலா சுவாமிநாதன் நடத்தும்  “நியூயார்க் தமிழ்  கல்விக்கழகத்தின்”  (www.nytamilacademy.org)மூன்றாம் ஆண்டுவிழாவில்  அடியேன் பங்கு கொண்டு வழங்கிய கவிதை அல்லது கவிதை முயற்சி .


வணக்கம்
மூச்சுக்கொடுத்த இறைவனுக்கும்
பேச்சுக் கொடுத்த என் அன்னைக்கும்
வாய்ப்புக் கொடுத்த அவைக்கும்
வணக்கங்கள் பலப்பல.

புத்தாண்டு வாழ்த்துக்கள்
துன்முகி ஆண்டு
நன்முகியாய் அமையட்டும்
பன்முகியாய் இருந்தாலும் அவ்வை
ஷன்முகியாய் மட்டும் ஆகாமலிருக்கட்டும்
புத்தாண்டு வாழ்த்துக்கள்

பாலா
வாழ்த்துக்கவிதையொன்று
வாசிக்கிறேன் - இது நான்
யோசிக்கிறேன் - இது பாலா
யாசிக்கிறேன் - இது பாலா
சரிசரி குழுவிடம்  
பேசிக்கிறேன் - இது பாலா
அதனால் நான் இன்று உங்கள் முன்பு
வாசிக்கிறேன் !

நீளத்தீவில்  ஒரு (அதாங்க லாங் ஐலன்ட்)
கோலத்திருவிழா
அட்லான்டிக்  கடலருகில், தமிழ்              
அன்னைக்கு ஒரு விழா
 


சந்தப்பாட்டு :

இத்தரை மீதினில்
முத்திரை பதிக்கும்
சித்திரைத் திருவிழா - இது
முத்தமிழ்ப் பெருவிழா                                          

பத்தரை மாற்றுத் தங்கங்களாய் பல
பட்டுகள் உலவும் விழா, அந்த
பட்டுகள் பெற்று எடுத்த சிறு சிறு
சிட்டுகள் குலவும் விழா.

பட்டுகளைப் பார்ப்பதா - சிறு
சிட்டுகளைப் பார்ப்பதா என்று
பரிதவித்துவிட்டான் இந்தப்                   
பரதேசி

ஆனால் 
அந்தப்பட்டுகளை
காதோரக்கண்ணால்
களிப்புடன் பார்ப்பது யார்?
ஆஹா என் பிள்ளைகள் மட்டுமல்ல
பெற்றெடுத்த முல்லைகளும் அழகுதான் என்று

அந்தப்பட்டுகளை
காதோரக் கண்ணால்
களிப்புடன் பார்ப்பது யார்?
வேறு யார்
பட்டுகளை மணந்த
பதிகள் தான்
சதியே ஒரு சதி (சதி என்றால் மனைவி)
சதியே என் கதி
கதியே என் விதி
என்றிருக்கும் உலகில் –( நான் என்னைச் சொல்லவில்லை)
சதிபதி மற்றுமல்ல
மதிசுதியும்
மொழியால் இணைந்திருப்பதை
விழியால் பார்த்து வியந்தேன் !

சதிபதிக்கும்
மதிசுதிக்கும்
அதிபதி பாலா அல்லவா?

மயக்கம் மாலைதனை
வியக்கும் வகையில்
இயக்கம் பாலாவே
நீ எனக்கு  எதிரி !.


ஆம் பாலா எனக்கு எதிரி
பட்டிமன்றத்தில்
பங்குகொள்கையில்
அவர் எனக்கு எதிரி, ஆனால்                   
அவரின் தமிழ்ப்பணி முன்
நான் ஒரு உதிரி !.

பள்ளி கொண்ட  பெருமாள் சுவாமி
பாருக்கே தெரியும்
பள்ளி கண்ட பெருமான் சுவாமி
யாருக்குத் தெரியும்? அது நம்ம
பாலா சுவாமிதான்
அவர் பள்ளி கொண்டது பாற்கடலில்
இவர் பள்ளி கண்டது அட்லான்டிக் கடலில்
பள்ளி கண்ட பாலா
நீதான் எனக்கு எப்போதும் தோழா !

தமிழ்ச் சங்கம் கண்டவன் பாண்டியன்
தமிழ்ப் பள்ளி கண்ட பாலாவும் பாண்டியன் அதைப்
பாட்டில் சொன்ன பரதேசியும் பாண்டியன் தான்
நானும் மருதைக்காரன் தாங்கோய்

ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும்
ஆதவன் மறைவதில்லை (அரசியலுக்காக சொல்லவில்லை)
ஆயிரம் மைல்கள் கடந்து வந்தாலும், நம்மில்
அன்னைத்தமிழ் குறைவதில்லை

தமிழால் இணைவோம்
தமிழாய் முனைவோம்
தமிழாய் வாழ்வோம்.

வாழிய செந்தமிழ்
வாழ்க நற்றமிழர்
வாழிய பாரத மணித்திருநாடு 
நன்றி வணக்கம்.


Ranga on my right and Bala Swaminathan on my left.