Thursday, November 29, 2018

ஈராக் போர் பற்றிய திரைப்படம் மணல் கோட்டை


பார்த்ததில் பிடித்தது
சேன்ட் கேஸில்
Sand Castle 2017 poster.jpg
"மனக்கோட்டை கட்டாதே" என்று சொற்றொடரை பலமுறை கேட்டிருக்கின்றேன். "மணல் கோட்டை நிற்காது" என்று சொல்வதையும் கவனித்திருக்கிறோம். Sand Castle அதாவது "மணற் கோட்டை" என்ற பெயர் கொண்ட இந்தத்திரைப்படம் என் ஆர்வத்தைத் தூண்டியதால் நெட்பிலிக்சில் இதனை சமீபத்தில் பார்த்தேன்.
எனக்குப் பிடித்த திரைப்படங்கள்  மற்றும் புதினங்களில் முதலிடம் பிடித்திருப்பது வரலாறு, மற்றும் வரலாற்றைத் தழுவிய நவீனங்கள். இரண்டாவது இடம் பீரியட் படங்கள் மற்றும் வார் மூவீஸ் என்றழைக்கப்படும் போர் சார்ந்து எடுக்கப்பட்டவை. மூன்றாவது வகையில் திரில்லர் என்று சொல்லப்படும் திகில் கதைகள் (பேய்ப்படங்களைத் தவிர்த்து). இதுதவிர, காதல், சென்டடிமென்ட் என்று வேறு எதையும் எனக்குப் பிடிப்பதில்லை. ஏலேய் (பரதேசி உனக்கு வயசாகிப் போச்சுடோய்) அதனால்தானோ என்னவோ எந்தத் தமிழ்ப் படத்தையும் என்னால் முழுதாகப்பார்க்க முடியாமல் 5-10 நிமிடங்களில் “தூக்கமும் கண்களைத் தழுவட்டுமே" என்ற நிலைக்குப் போய் விடுகிறேன். ஒன்றிரண்டு படங்கள் விதிவிலக்கு.
அப்படிப் பார்த்த ஒரு படம் தான் Sand Castle. ஈராக்கில் நடந்த யுத்தத்தைப் பற்றி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பார்வையும் கருத்து வேறுபாடுகளும் உண்டு. அமெரிக்காவுக்கு இது தேவையில்லாத வேலை என்று பலர் சொல்லலாம். நான் அதற்குள் போக விரும்பவில்லை. ஆனால் ஈராக்கில் அமைதி திரும்புவதற்காக பல அமெரிக்க வீரர்கள் தங்கள் இன்னுயிர்களைத் தியாகம் செய்திருக்கிறார்கள். அந்த நிகழ்வை எடுத்துக்காட்டுவதே இந்தப்படம்.
தன்னுடைய படிப்புக்குப் பணம் தேவைப்படுவதால் ஆர்மி ரிசர்வில் சேர்ந்த மேட் என்ற ஒருவனை மையப்புள்ளியாக வைத்து திரைப்படம் ஆரம்பிக்கிறது. இவனுக்கு ஒரு வருமானம் தேவைப்பட்டது. ஆனால் போர்முனைக்குச் செல்வதில் விருப்பமில்லை ஏனென்றால் உயிர் மீது பயம். தலையில் தானே காயத்தை ஏற்படுத்திக் கொண்டும், கையில் கட்டுப் போட்டுக் கொண்டு நடித்து போர் முனைக்குப்  போவதில் இருந்து விலக்குப் பெற முயன்றும் ஒன்றும் உதவவில்லை. அவன் எங்கே போக மிகவும் பயந்தானோ அங்கேயே அதாவது ஈராக்கின் தலைநகர் பாக்தாத்துக்கு  அனுப்பப்பட்டான். வந்து இறங்கியவுடனே யுத்தத்தின் நடுவில் மாட்டிக் கொண்டு ஆனால் தப்பித்துவிடுகிறான்.
சில நாட்கள் கழித்து பாக்குபா என்ற ஊருக்கு இவனுடைய குழு அனுப்பப்படுகிறது. அங்கே சமீபத்தில் நடந்த போரில்  ஊரின் தண்ணீர் டேங்க் உடைந்துவிட அந்தப் பாலைவன ஊர் நீரில்லாமல் தவித்து வந்தது. பொதுமக்களிடம் நற்பெயரைப் பெற, அமெரிக்க ராணுவ அதிகாரிகள் ஒரு குழுவை அங்கே அனுப்பினார்கள். அங்கே இயங்கிய ஒரு இஞ்சினியர் குழுவோடு வேலை செய்வதும் அவர்களுக்கு பாதுகாப்பளிப்பதும் இவர்களின் வேலை. அதோடு அங்கிருந்த நீரை லாரி டேங்க்களில் நிரப்பி பக்கத்து ஊருக்கு குடிநீரும் வழங்க வேண்டும்.
இவர்கள் முயற்சியை தடுக்க நினைத்த உள்ளூர் தீவிரவாதிகளின் தொல்லை ஒருபுறம். ஊரிலிருந்து இவர்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டியவர்களை அவர்கள் கொல்ல இந்தப்பணி மேலும் கடினமாகிறது.
பின்னர் இதையெல்லாம் எப்படி சமாளித்தாள், நீர் டேங்கை சரி பண்ண முடிந்ததா? எவ்வளவு உயிர்பலி நடந்தது? கதாநாயகன் தப்பித்தானா போன்ற கேள்விகளுக்கான விடைகளை வெள்ளித்திரையில் அல்லது சின்னத்திரையில் காண்க.
Image result for chris roessner
Chris Roessner
ஏப்ரல் 2017-ல் நெட்பிலிக்சில்  வெளிவந்த இந்தப் படத்தை இயக்கியவர் ஃபெர்னான்டோ   கொய்ம்பரா (Fernando Coimbra). எழுதியவர் கிறிஸ் ரோஸ்னர் (Chris Roessner) ,அருமையான இசையைக் கொடுத்தவர் ஆடம் பீட்டர்ஸ். 
A young, Caucasian man with short, dark hair and facial stubble wearing a black shirt speaks into a microphone against a grey and blue background.
Nicholas  Hoult
அப்பாவி சோல்ஜராக நிக்கலஸ் ஹொல்ட் சிறந்த நடிப்பைக் கொடுத்திருக்கிறார். அவருடைய சார்ஜன்ட்டாக கிளன் பாவல் நடித்திருக்கிறார்.. இது தவிர லோகன் மார்ஷல் கிரீன் மற்றும் ஹென்ரி காவில்  முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
இதில் முக்கியமாகத் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் இதை எழுதிய கிரிஸ் ராஸ்னர் அவர்களின் சொந்த அனுபவம் இது. ஆமாம் அவர் ஈராக் போரின் போது அங்கிருந்த ஒரு கிராமத்திற்கு நீர் கொடுக்கும் விதத்தில் ஈடுபட்ட நடந்த நிகழ்வுகளை எழுத அந்த தனிப்பட்ட அனுபவம் தான் இந்தப் படத்தின் கருவாக அமைந்தது.
பெரிதாக பாராட்டப்படவில்லை யென்றாலும்  இதுபோல் போர் சம்பந்தப்பட்ட (War movie)  திரைப்படங்களில் ஆர்வமுள்ளவர்களும், போரின் போது ஈராக்கில் நடந்த உண்மை நிகழ்வுகளைத் தெரிந்து கொள்ள விரும்புபவர்களும் இதனைப் பார்க்கலாம்.
முற்றும்

முக்கிய அறிவுப்பு :

கீர்த்தனை பாடும்  நிகழ்ச்சிக்காக மூன்று நாள் பயணமாக கனடா செல்கிறேன் .கனடா நண்பர்கள் வாருங்களேன் சந்திக்கலாம் .
Monday, November 26, 2018

ஆவிகள் நடமாடும் அதிசயப்பாறை !


வேர்களைத்தேடி பகுதி 33
இதற்கு முந்திய பகுதியைப்படிக்க  இங்கே சொடுக்கவும். 

ஸ்லூஸ் என்பது என்னவென்றால் நீண்ட வாய்க்காலில் நீர் செல்லும்போது சாலை ஏதாவது குறிக்கிட்டால் அதனைத்தாண்டி நீர் செல்வதற்கு பாதாள வாய்க்கால் அமைத்திருப்பார்கள். ஒருபுறம் நீர் திடீரென்று வேகம் கூடி சுழன்று கீழிறிங்கி மறுபுறம் சுழன்று கொப்பளித்து வந்து வாய்க்காலில் தொடர்ந்து செல்லும். இதில் வெளியே வரும் பகுதியில் சிறிது ஆழம் இருக்குமென்பதால் அதில் மேலிருந்து கீழே குதித்து விளையாடுவார்கள். வேகமாக உள்ளே குதித்தாலும் நீர் வேகமாக சுழன்று மேலே வருவதால் குதித்தவர்களை அப்படியே மேலே கொண்டுவந்து தள்ளிவிடும். எனவே இது உற்சாகம் கொடுக்கும் விளையாட்டு. ஆனாலும் நீச்சல் தெரிய வேண்டும். மூச்சடக்கவும் வேண்டும். அதே சமயம் நீர் உள்ளே போகும் வழியில் குதித்தால் உயிருக்கே ஆபத்தாக முடியும். பாதாளத்தில் உள்ள அடர்ந்த பாசிகளில்  போய் செருகிவிடும். உயிர் போகவும் அதிகபட்ச வாய்ப்பு உண்டு.
நானெல்லாம் இவற்றை ஆர்வத்தோடு வேடிக்கை பார்ப்பதோடு சரி.  எனக்குத்தான் தண்ணீர் இருந்தால் நீச்சலடிக்கத் தெரியாதே(?)  அதோடு வாய்க்காலுக்கோ ஆற்றுக்கோ குளிக்கப்போனாலும் கையில் ஒரு மக்கை (Mug) எடுத்துப் போகும் ஆள் நான்.

Image result for டம்டம் பாறை

சரி டாம்டாம் பாறை அல்லது டம்டம் பாறை வரும்போது அதனைப் பற்றித் தெரிந்த டிரைவர்கள் அங்கு இறங்கி அங்கிருக்கும் பாறையையும் மரத்தையும் கும்பிட்டுவிட்டு திருநீறு குங்குமம் வைத்துவிட்டுத்தான் நகர்வார்கள். ஏனென்றால் அந்த இடம் ஒரு ஹேர்பின் பெண்ட் என்பதனால் கட்டுப்பாட்டை இழந்த எத்தனையோ வண்டிகள் அங்கிருந்து கீழ்நோக்கிப் பாய்ந்து விபத்து ஏற்பட்டிருக்கிறது. அதனால் அந்த இடத்தில் சுற்றுச்சுவர் எழுப்பட்டு இருக்கிறது. இருந்தாலும் சுற்றுச்சுவரை இடித்துக்கொண்டு எத்தனையோ வாகனங்கள் கீழே விழுந்து உயிர்ச்சேதம் ஆகியிருக்கின்றன. அதனால் அங்கு பல ஆவிகள் குடியிருக்கிறதாகவும், அவைகளைக் கும்பிட்டுக் கடக்கவில்லையென்றால், திரும்பி வரும்போது தள்ளிவிட்டுவிடும் என்று ஒரு பயம் அங்கு நிலவுகிறது. அதோடு அந்தப்பாறையில் பழங்காலத்தில் உயிரைப்பலி கொடுப்பார்கள் அல்லது நிறைய தண்டனைகள், கொலைகள் அங்கே நடந்திருக்கின்றன என்றும் சொல்லுகிறார்கள்.
Related image

அந்த இடத்திலிருந்து கீழே விழுந்தால் உயிர் தப்புவது அரிதுதான். ஆண்டிற்கு ஓரிறு முறை விபத்து நடந்ததென கேள்விப்படுவோம். இப்போது எப்படி என்று தெரிவில்லை.
எத்தனையோ சமயங்களில் பஸ்கள் அங்கிருந்து உருண்டு விழுந்து நேரே மஞ்சாறு அணையில் விழுந்திருக்கின்றன. பக்கத்தில் இருக்கும் மஞ்சளாறு ஊரில்   வசிப்பவர்கள் வந்து பலபேரைக் காப்பாற்றியிருக்கிறார்களாம். அதோடு ஒரு சிலர் இறந்தவர்களின் அல்லது காயம்பட்டவர்களை காப்பாற்றுகிறேன் பேர்வழி என்று அவர்களின் ஆபரணங்கள் பொருட்கள் ஆகியவற்றை கவர்ந்து சென்றதாகவும் கதைகள் இருக்கின்றன.
Related image
Thanks to Dinakaran
மஞ்சளாறின் மேலே உள்ள மலைப்பகுதிகளில் அதிகமாக தேக்கு மரங்கள் இருப்பதால் இது வனத்துறையால் பாதுகாக்கப்பட்ட பகுதி. எனக்குத் தெரிந்து சந்தன மரங்கள் இங்கு அதிகமில்லை. தேக்கு மரங்கள் தவிர தைல மரங்கள் என்று சொல்லக்கூடிய யூக்கலிப்டஸ் மரங்கள் அதிகம் உண்டு. அந்தப்பக்கம் வாகனங்கள் செல்லும்போது தைல வாசனை மூக்கைத்துளைக்கும்.
இந்த மலையில் குரங்குகள், நரி, காட்டுப்பன்றி, மான்கள் காட்டெருமை, கழுதைப்புலி மற்றும் சிறுத்தைகள் இருக்கின்றன. அவைகள் நீர் அருந்துவதற்கு அணைப்பக்கம் வரும். பெரும்பாலும் இரவு வேளைகளில் வரும். கொடைக்கானல் மலையில் ஏறும்போதே அங்கே சுவர்களில் பலகுரங்குகள் அமர்ந்திருப்பதைப் பார்க்கலாம்.
இந்த மலையில் விளையும் தேக்கு மரங்கள் அதிகமாக கடததப்படுகின்றன. அதனை தடுத்து நிறுத்துவதற்கு வனத்துறையே நான் சிறுவனாக இருந்தபோது புலிக்குட்டிகள் அல்லது சிறுத்தைக்குட்டிகளைவிட்டு ஊரில் தண்டோரா போட்டது ஞாபகமிருக்கிறது.
                 மஞ்சளாறு அணை ஒரு சிறிய ஆனால் அழகான அணை. அதனைச்சுற்றி ஒரு அழகிய பூங்காவும் அமைத்திருந்தார்கள். ஆனால் அப்போதே (1970களில்) போதிய பராமரிப்பு இல்லாமல் பொம்மைகள் கைகளையும் கால்களையும் இழந்து காணப்படும். இப்போது எப்படியென்று தெரியவில்லை. ஆனால் அணியின் மேலேறி நடந்தால் மிக ரம்மியமாக இருக்கும். ஒருபுறம் பரந்த வெளி. மறுபுறம் மாபெரும் நீர்த்தேக்கம். அதன் மறுபுறம் பசுமை சூழ்ந்த ஆற்றில் மலைகள். கொஞ்சம் உற்றுப்பார்த்தால் மலைச்சாலை தெரியும். இன்னும் கொஞ்சம் உற்றுப்பார்த்தால் அந்தச் சாலையில் எறும்பு ஊர்வது போல வாகனங்கள் செல்வது தெரியும். பின்புறம் தொலைவில் தலையாறும் தெரியும். தேவதானப்பட்டி வழியாக பெரியகுளம் செல்லும் டவுன்பஸ்கள் மஞ்சளாரில் இருந்து கிளம்புகின்றன. குறிப்பிட்ட இடைவெளியில் வந்து செல்லும். சாலை அப்போதெல்லாம் படுமோசமாக இருக்கும். நாங்கள் நடந்தும் சென்றிருக்கிறோம். அப்படிச்  செல்லும்போது சுவையான கோவைப்பழங்கள் கிடைக்கும். சாப்பிட்டால் வாயெல்லாம் சிவப்பாகிவிடும். முள்குத்தாமல் கவனமாக எடுக்க வேண்டும். முள்ளை கவனிக்கத் தவறினாலும் வாய் சிவப்பாகிவிடும் ரத்தத்தால் .கத்தாழைப்பழங்கள்( Cactus fruit) கேட்பாரின்றி இருக்கும்.
மஞ்சளாறில், பொதுப்பணித்துறையில் வேலைபார்க்கும் இன்ஜினியர்கள் அலுவலர்களின் பிள்ளைகள் அங்கிருந்து காலை கிளம்பும் டவுன்பஸ்ஸில் தேவதானப்பட்டிக்கு பள்ளிக்கு வருவார்கள். அவர்களுக்கு அங்கே குவார்ட்டர்ஸ் உண்டு.
அதுமட்டுமல்லாமல் இலங்கையிலிருந்து வந்த அகதிகளுக்கும் அங்கே அரசு குடியிருப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. அங்கேயும் குடியிருந்து கொண்டு பல ஆண்டுகளாக இலங்கைத்தமிழர் வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் தங்கள் ஊரில் எப்படியெல்லாம் வாழ்ந்தார்களோ ,இங்கு வந்து கஷ்டப்படுகிறார்கள்.
இந்தியா தமிழகம் தவிர பிறநாடுகளான அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி, ஃபிரான்சு, கனடா, இங்கிலாந்து,  ஸ்விட்சர் லாந்து ஆகிய பல நாடுகளில் புலம்பெயர்ந்த இலங்கைத்தமிழர்கள் பெரும் வசதி வாய்ப்புகளோடு சிறப்பாக வாழ்கிறார்கள். தமிழ்ச்சங்கங்கள் போல அவர்களுக்கென தனி அமைப்புகளும் செயல்படுகின்றன.
வனத்திலிருந்து தப்பி தேவதானப்பட்டி ஊருக்குள் வந்து வாழ்ந்து சாமியாகிப்போன ஒரு குரங்கைப் பற்றி அடுத்த பகுதியில் சொல்கிறேன்.
- தொடரும்.

Monday, November 19, 2018

மஞ்சளாறு ஆறும் அணையும் மஞ்சளாறு அணை அழகை ரசிக்கும் பயணிகள்
மஞ்சளாறு  அணை ( Thanks Dinamalar)

வேர்களைத்தேடி பகுதி 32
இதற்கு முந்திய பகுதியைப்படிக்க  இங்கே சொடுக்கவும். 
https://paradesiatnewyork.blogspot.com/2018/11/blog-post.html

போனவாரம் காமாட்சியம்மன் கோவிலைப் பற்றிச் சொல்லும்போது மஞ்சளாற்றைப் பற்றிக்குறிப்பிட்டிருந்தேன். கோடை மலையில் உற்பத்தியாகும் தலையாற்றிலிருந்து பிரிந்து  கீழே வருகின்ற ஆறுதான் மஞ்சளாறு.
கொடைக்கானல் செல்லும்போது போகிற வழியில் டம்டம் பாறைக்கருகில் இறங்கி இயற்கை அழகை ரசித்து மலைப்புறத்தில் பார்த்தீர்கள் என்றால் உருக்கிய வெள்ளியைக் கொட்டுவது போல் தூரத்தில் ஒரு பிரமாண்டமான நீர்வீழ்ச்சி தெரியும். அதன் பெயர்தான் தலையாற்று அருவி. அதனைப்பற்றிச் சொல்வதற்கு முன்னால் இந்த டம்டம் பாறையென்றால் என்ன என்று சொல்லிவிடுகிறேன்.
File:Rattail falls.jpg
தலையாற்று அருவி.


மதுரையின் கலெக்டர் மற்றும் வெள்ளைக்கார உயர் அதிகாரிகள் தங்கள் கோடைக்காலத்தை தாங்க முடியாமல் கண்டுபிடித்த கோடை வாசஸ்தலம்தான் கொடைக்கானல். கோடைக்கானல் தான் கொடைக்கானல் என்றும் ஆங்கிலத்தில் கொடைக்கனால்  என்றும் அழைக்கப்படுகிறது. இவர்கள் கண்டுபிடித்தார்கள் என்று சொல்ல முடியாது .ஏற்கனவே மலைவாழ் மக்களும் நம் மலையைச் சார்ந்து வாழும் தமிழ் மக்களும் சிறிய அளவாக இருந்தார்கள். வெள்ளைக்காரன் இந்த இடத்தைப் பார்த்து அசந்துபோய் இங்கே விடுதிகள் பங்களாக்களை உருவாக்கி கோடைக்காலத்தில் இங்கு. வந்து தங்க ஆரம்பித்தார்கள் .அதன்பின் இதன் எதிர்காலத்தை உணர்ந்து கொண்ட ஜெயராஜ் நாடார் அவர்கள் இங்கு பல இடங்களை வாங்கிப்போட்டு பல பெரும் தங்குமிடங்களை கட்டினார். இன்னும் கொடைக்கானலில் ஜெயராஜ் நாடாரும் அவருடைய குடும்பத்தாரும் அமைத்த பல விடுதிகளைப் பார்க்கலாம். இதன்மூலம் நல்ல பொருளீட்டினார்கள்.

இந்தக் குடும்பம்தான் SGJ  என்ற பஸ் நிறுவனங்கள் மூலம்  கொடைக்கானலுக்கு பல பேருந்துகளை ஆரம்ப காலத்தில் இயக்க ஆரம்பித்து இன்றுவரை இயக்கிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு நூற்றுக்கணக்கான பஸ்கள் மற்றும் பணிமனைகள் இருக்கின்றன. இவை பெரியகுளம், மதுரை, தேனீ, திண்டுக்கல் என்று பல பகுதிகளை இணைக்கின்றன. பெரியகுளத்தில் இருந்த ஜெயா தியேட்டர், மதுரையில் இருந்த ஜெயராஜ் தியேட்டர், பெரியகுளத்தில் இயங்கும் ஜெயராஜ் அன்னபாக்கியம் மகளிர்  கல்லூரி போன்ற பல நிறுவனங்கள் இவர்களுக்குச் சொந்தமானது.
எங்கேயோ ஆரம்பித்து எங்கேயோ சென்றுவிட்டேன்.
ஆம் அப்படி அங்கு தங்கியிருந்த வெள்ளை அதிகாரிகள் மலையிலிருந்து கீழிறங்கும்போது அதனை முன்கூட்டி அறிவிக்கும் வண்ணம் அங்கு ஒரு பெரிய முரசைக் கொட்டுவார்களாம். அந்த முரசுக்குத்தான் வெள்ளைக்காரர் வைத்த பெயர் டாம் டாம் (TomTom). அந்தப் பெரிய முரசு அந்த இடத்தில் இருந்த பாறையின் மேல் நிறுவப்பட்டதால் அங்கே இருந்த பாறைக்குப் பெயர் டம்டம் பாறை என்றாயிற்று. நம் மக்கள் அதனை “தம்பட்டாம் பாறை” என்றே அழைக்கிறார்கள்.
Image result for மஞ்சளாறு அணை
மஞ்சளாறு  அணை 
அங்கேயிருந்து புறப்படும் காட்டாறு , தலையாறு என்றழைக்கப்பட்டு, நீர்வீழ்ச்சியாக கீழிறங்கி வரும் ஆறே மஞ்சளாறு என்பது.
கொடைக்கானல் மலையில் ஏறும் இடத்தில் காட்ரோடு தாண்டிப் போகும்போது கீழே பார்த்தால் மஞ்சளாறு ஓடுவது தெரியும். அதோடு அதனை தடுத்து நிறுத்தியுள்ள அணையும் நன்கு தெரியும். இதுவரை இந்த அழகான காட்சியான அணையைப் பார்க்காதவர்கள் அடுத்த முறை கொடைக்கானல் மலையில் ஏறும்போது உங்களின் இடதுபுறம் தெரியும் காட்சியினை காணத்தவறாதீர்கள். முடிந்தால் பஸ்ஸில் போனால் இடதுபுறத்தில் உட்கார்ந்து கொள்ளுங்கள். காரில்போனால் அந்த இடத்தில் நிறுத்தி அங்கிருந்து கீழே பார்க்கலாம். அதே மாதிரி டம்டம் பாறையினருகில் நின்று தலையாற்றுக் காட்சிகளைப் பார்த்துச் செல்லலாம்.
Related image

அணையின் அருகில் கும்பலாகத் தெரியும் வீடுகள் தான் தேவதானப்பட்டி.
இந்த அணை பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் முதலமைச்சராக இருந்த போது கட்டப்பட்டது. மஞ்சளாறு என்பது திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் ஓடி வைகை ஆற்றில் கலக்கும் ஒரு துணையாறாகும். இந்த ஆறு மொத்தம் 470 சதுர கிலோ மீட்டர் ஆற்றுப்படுகையும் 21 சதுர கிலோமீட்டர் நீர்த்தேக்கப் பகுதியையும்  கொண்டுள்ளது .
மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 57 அடியாகும். மூலாறு, வறட்டாரு, தலையாறு ஆகிய பகுதிகளில் பெய்யும் மழைநீர் மஞ்சளாறு அணைக்கு வந்து சேர்கிறது. அணையில் தேங்கும் நீர் மூலம், திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் உள்ள 10-க்கு மேலுள்ள கண்மாய்களில் நீர் தேக்கப்பட்டு 5 ஆயிரத்து 200 ஏக்கர் நிலங்கள் பாசன வசதியைப் பெறுகின்றன.
தேவதானப்பட்டி, செங்குளத்துப்பட்டி, கெங்குவார்பட்டி, தும்மலப்பட்டி, கணவாய்ப்பட்டி, வத்தலக் குண்டு, கட்டக்காமன்பட்டி, கரட்டுப்பட்டி, குன்னுவாரன் கோட்டை ஆகிய பல பகுதிகள் இந்த அணையால் பாசன வசதி பெறுகின்றன.
அணையில் தண்ணீர் திறந்துவிடும் காட்சியும் மடைகளில் நுரைபொங்க நீர் வெளியேறும் பாய்வதும் கண்கொள்ளாக் காட்சிகள்.
மஞ்சளாறு அணை தேவதானப்பட்டி அருகே இருந்தும் ஊருக்கு உள்ளே பாய்வதில்லை. அருகிலுள்ள மூங்கிலணை காமாட்சியம்மன் கோவிலை ஒட்டிப் பாய்ந்து அப்படியே ஒதுக்குப்புறமாகவே சென்று வத்தலக்குண்டு வழியாக ஓடிப் பின்னர் வைகையில் கலக்கிறது.
ஆனால் மஞ்சளாறு அணையிலிருந்து வெட்டப்பட்ட வாய்க்கால் வழியே நீர் திறந்து விடும்போது, தேவதானப்பட்டி பெரிய பாலம் வழியே கடந்து, சந்தைப்பேட்டையைச் சுற்றிக் கொண்டு எங்கள் உயிர்நிலைப் பள்ளியைச் சுற்றி அகழிபோல் கடந்து அப்படியே வாடிப்பட்டி, சில்வார்பட்டி ஆகிய ஊர்களுக்குச் செல்லும்.
அந்த வாய்க்காலில் தண்ணீர் ஓடும்போது ஊர் மேலும் செழிப்பாக இருக்கும். வாய்க்காலின் அருகே உள்ள குளங்கள், கண்மாய்கள் பெருகிவிடும். அது மட்டுமல்ல போகுமிடங்களிலுள்ள கிணறுகள் கையால் எட்டித் தொட்டுவிடுமளவிற்கு நிரம்பி விடும்.
வாய்க்காலில் குதிப்பது, குளிப்பது போன்ற பல சாகச நிகழ்சசிகள் நடைபெறும். என்னுடைய பக்கத்துவீட்டுப் பெண்களுடன் சேர்ந்து என் அம்மா அழுக்குத்துணிகளை எடுத்துக் கொண்டு வாய்க்காலில் துவைத்து எடுத்துக் கொண்டு வருவார்கள். நானும் பலமுறை துணைக்குச் சென்று வந்திருக்கிறேன். அங்கே தண்ணீரில் விளையாடி மகிழ்ந்திருக்கிறேன். வாய்க்காலின் குறுக்கே உள்ள சாலையைக்கடக்க வாய்க்கால் பாதாள ஸ்லூஸ் மூலமாக அடுத்த பகுதிக்கு   செல்லும். இதில் நீர் சுழன்று செல்லும். இதில் விழுந்து செத்துப் போனவர்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். தண்ணீர் இங்கே அதி வேகத்துடன் சுழன்று செல்வதால் அதில் மாட்டுபவர்களை இழுத்துச்சென்று உள்ளே போய்ச் செருகிவிடும்.
டாம்டாம் பாறை வழியே செல்லும் டிரைவர்கள் அங்கு நிறுத்தி பழம், பூ வைத்து கும்பிட்டுச் செல்வார்கள் ஏனென்றால் அதற்கு ஒரு திகில் கதை இருக்கின்றது.
தொடரும்Thursday, November 15, 2018

குடும்ப வாழ்க்கையின் மகிழ்ச்சிக்கு பெரிதும் உறுதுணையாய் இருப்பவர்கள் ஆண்களா , பெண்களா ?

Image result for sun TV aadhavan
Athavan
கடந்த நவம்பர் மாதம் மூன்றாம் தேதி மாலை நியூயார்க்  தமிழ்ச்சங்கம் சார்பில் நடைபெற்ற தீபாவளித்திருநாள் கொண்டாட்டத்தில் சன் டிவி, காமடி ஜங்ஷன் மற்றும் கொஞ்சம் நடிங்க பாஸ் புகழ் ஆதவன் மற்றும் சந்தியா கலந்துகொண்டார்கள் .அப்போது நடந்த பட்டிமன்றத்தில் அவர்களோடு அடியேன் கலந்து கொண்டு பேசினேன் .
அதன் காணொளிக்காட்சியை  இங்கு கீழே கொடுத்துள்ளேன் .இது சிரித்து மகிழ நடத்தப்பட்ட பட்டிமன்றமோ ஒழிய ஏதேனும் கருத்துக்களை எதிர்பார்த்து ஏமாற வேண்டாம்.
Monday, November 12, 2018

ஜமீன்தார் தலையை காவு வாங்கிய காமாட்சி அம்மன் !!!!


Image result for காமக்காள் அரண்மனை
வேர்களைத்தேடி பகுதி 31
இதற்கு முந்திய பகுதியைப்படிக்க  இங்கே சொடுக்கவும்.  
http://paradesiatnewyork.blogspot.com/2018/10/blog-post_29.html
காமக்காள் திவசம் ( நன்றி தினமலர்)
               பூசாரி நாயக்கர் பரம்பரையில் வந்த கடைசி ஜமீந்தார் மனைவி காமக்காள் என்பவர் தனது ஒரே மகனான பொம்முலிங்கசாமி என்ற மகனுடன் கோயிலுக்குள் இருக்கும் காமக்காள் அரண்மனை எனும் கட்டிடத்தில் வசித்து வந்தார். காமக்காள் தன் பக்தியின் வலிமையால் அம்மனுடன் நேரடியாகப் பேசும் பேறு பெற்றாள். இரவில் தன் தாயார் தனியாகச் சென்று வருவதில் சந்தேகமடைந்த மகன் தாயைக் கோபித்துக் கொண்டார். அவன் அம்மா உண்மையைக் கூறிய நிலையிலும் நம்பாமல் தானும் அம்மனைக் காண வேண்டுமென்று பிடிவாதம் செய்தான். அன்றிரவு காமக்காள் மகனை அழைத்துக் கொண்டு சென்றார். காமாட்சியம்மனை நேரில் கண்ட அவன் மண்டை வெடித்துச் சிதறி இறந்தான்.
Image result for காமக்காள் அரண்மனை

தன் ஒரே மகன் தலை வெடித்து இறந்ததைக் கண்ட காமக்காள் அம்மனிடம், “ எனக்கு இருந்த ஒரு மகனையும் எடுத்துக் கொண்டாயே. இனி நான் இறந்த பிறகு எனக்குச் செய்ய வேண்டிய திவசக் காரியங்களை  யார் செய்வார்?” என வருந்திக் கேட்டாள். உடனே அம்மன், “ வருத்தமடையாதே, நீ இறந்த பின் நாயக்கர் சமுதாயத்தவரைக் கொண்டே உனக்கு திவசமிடச் செய்கிறேன்” என்று வாக்களித்தாள். காமக்காள் தை மாதம் இரத சப்தமியில் மரணமடைந்தாள்.
       அம்மனின் வாக்குப்படி ராஜகம்பளம் நாயக்கர்கள் திவசமிட்டனர். காமக்காள் மற்றும் அவள் மகன் சமாதிகள் இங்கிருந்து அரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ளன.
மகா சிவராத்திரி விழா
ஒவ்வொரு ஆண்டும் தை மாத இரத சப்தமியில் கோயிலில் காமக்காள் திவசம் கொடுக்கப்படுகிறது. திவசம் முடிந்த அன்றே கோயிலின் ஆண்டுத் திருவிழாவிற்கு முகூர்த்தக்கால் நடப்படுகிறது. மகா சிவராத்திரியை முதல் தினமாகக் கொண்டு எட்டு நாட்கள் திருவிழா மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தத் திருவிழா தேனி மாவட்டத்திலுள்ள கோயில்களில் கொண்டாடப்படும் திருவிழாக்களில் முக்கியமான ஒன்றாக இருக்கிறது. இத்திருவிழாக் காலமான எட்டு நாட்களும் கோயிலுக்கு தனிப் பேருந்து வசதிகள் செய்யப்படுகின்றன.
ஆடிப்பள்ளயம் திருவிழா
ஒவ்வொரு ஆண்டும் ஆடித்திங்களில் முதல் மூன்று நாட்கள் ஆடிப்பள்ளயத் திருவிழா நடைபெறுகிறது. இவ்விழாவில் ராஜகம்பளம் நாயக்கர் சமுதாயத்தின் “தேவராட்டம்” நிகழ்வு சிறப்பாக இருக்கும். இது தவிர சித்திரை வருடப் பிறப்பு, விஜயதசமி, கார்த்திகைத் திருநாள், தைப்பொங்கல் போன்ற பிற விழாக்காலங்களிலும் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. பிற நாட்களில் இந்தக் கோயிலில் தினசரி பூசைகள் நடைபெற்று வருகின்றன.
சிறப்புகள்
·         கோயிலில் அடைத்த கதவிற்கு முன்பாகவே பூசை செய்யப்படுகிறது.
·         கோயிலின் குச்சுவீடு கலசம் (கர்ப்பகிருக கலசம்) தரிசனம் சிறப்பான ஒன்றாக உள்ளது.
·         அம்மனுக்கு நைவேத்தியம் செய்யப்படும் தேங்காய் உடைக்கப்படுவதில்லை. பழம் உரிக்கப்படுவதில்லை.
·         அன்ன நைவேத்தியம் செய்யப்படுவதில்லை.
·         கோயிலில் நெய்விளக்கு தீபம் மட்டுமே ஏற்றப்படுகிறது.
·         கோயிலில் விளக்குக்காகப் பக்தர்களிடம் காணிக்கையாகப் பெறப்படும் நெய் இங்குள்ள மண்பானைகளில் ஊற்றி வைக்கப்படுகின்றன. இந்த நெய்யிற்கு எறும்பு, ஈ, வண்டு என்று எதுவும் வருவதுமில்லை, மொய்ப்பதும் இல்லை.
·         திருவிழாக் காலத்தில் கோயிலில் அம்மனுக்குக் காணிக்கையாகச் செலுத்தப்படும் நெய் சேகரிப்புக்காக சுமார் ஐம்பது மண்பானைகள் வைக்கப்படுகின்றன. இவையனைத்தும் எட்டு நாட்கள் திருவிழாவில் நிரம்பி விடுகின்றன.
·         தேவதானப்பட்டியைச் சுற்றிலுமுள்ள சில கோயில்களுக்கு இங்கிருந்து நெய் மற்றும் நைவேத்தியப் பொருட்கள் தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகின்றன.
·         வருடத்திற்கு ஒருமுறை கோயிலின் குச்சு வீடு கலசத்திற்குக் கூரை வேயப்படும் போது ராஜகம்பளம் சாதியினர் தங்கள் கண்களைத் துணியால் கட்டிக் கொண்டுதான் காமாட்சிப் புல்லால் கூரை வேய்கின்றனர்.
·         காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயில் போன்றே இங்கும் பூசை மண்டபத்தின் முன்பு கௌளி சின்னம் (பல்லியின் சின்னம்) பொறிக்கப்பட்டுள்ளது. இங்கும் கௌளி குறி கேட்டல் முக்கியமான ஒன்றாக உள்ளது.
இத்தோடு காமாட்சியம்மன் புராணம் முடிகிறது .அடுத்த பகுதியில் மஞ்சளாற்றைக்குறித்துப் பார்ப்போம்.
தொடரும்
Thursday, November 1, 2018

நானொரு குமாஸ்தா நான் பாடுவேன் தமாஷா- பகுதி -2


Image result for Nassau county clerk
இதற்கு முந்திய பகுதியைப்படிக்க  இங்கே சொடுக்கவும்.  
https://paradesiatnewyork.blogspot.com/2018/10/part-1.html
அந்த மாபெரும் கட்டிடத்தில் உள்ளே நுழைய முயன்றேன். செக்யூரிட்டி கெடுபிடிகள் இருந்தன. வழக்கம்போல் வாட்ச், வாலட், சாவி என்று எல்லாவற்றையும் கொடுத்துவிட்டு மெட்டல் டிடக்டர் மூலம் உள்ளே நுழைந்து நீண்ட வரிசையில் நின்றேன். என் முறை வந்த போது "என்ன உங்களுக்கு வேண்டும்?" என்று கேட்டதற்கு, "கிளர்க்கை பார்க்க வேண்டும்", என்று சொன்னேன். "அப்பாயின்ட்மென்ட் இருக்கிறதா? என்ன வேலையாக பார்க்க வேண்டும்?" என்று கேட்டார்கள். அதன் பின் வேறு ஒரு டிபார்ட்மென்டுக்கு அனுப்பி வைத்தார்கள்.
அதில் உள்ள பல டிபார்ட் மென்ட்கள் பல்வேறு மாடிகளில் செயல்படுகின்றன. இதற்கெல்லாம் தலைவர் அந்த கிளர்க்தானாம். பல நூறுபேர் அங்கே வேலை செய்கிறார்கள். அந்த முழு பில்டிங்கும் ஒரு கிளர்க்கின் அலுவலகம் என்பது எனக்கு மிகுந்த ஆச்சரியத்தைக் கொடுத்தது.
அப்படி என்னவெல்லாம் அவருக்குக் கீழ் செயல்படுகின்றன என்று ஒரு போர்டு வைத்திருந்தார்கள். அதில் கண்டவற்றை கீழே கொடுக்கிறேன்.
1)   கோர்ட் ரெக்கார்டிங்
2)   ஜட்ஜ்மென்ட்கள்
3)   லைசென்ஸ் சர்வீஸ்
4)   நோட்டரி சர்வீஸஸ்
5)   தொழில் நிறுவனங்களின் ரிஜிஸ்ட்ரார்
6)   பாஸ்போர்ட் பிரிவு
7)   நில ரிஜிஸ்ட்ரார்
8)   மேப் ஃபைலிங்குகள்
9)   கோர்ட் டாக்குமென்ட் அலுவலம்.
10)               லேண்ட் ரெக்கார்ட்ஸ்
11)               மேப் ரூம்
இன்னும் பல  
யாருப்பா அது  இவ்வளவையும் மேற்பார்வை செய்யும் கிளர்க் என்று விசாரித்தேன்.
Related image
Maureen O'connell
தற்சமயம் இருப்பவர் மரின் ஓகானல் (Maureen O'connell) என்பவர். அவரைப் பற்றிய குறிப்புகளைக் கீழே தருகிறேன்.
1)   ஒரு ரிஜிஸ்டர்டு நர்ஸ் (RN) ஆக தன்னுடைய வேலையை ஆரம்பித்த இவர்கள், கேன்சர் வந்த நோயாளிகளுக்கு வீட்டில் வைத்து எப்படி மருத்துவம் பார்க்க முடியும் என்பதைச் செயல்படுத்த H.O.M.E பைலட் புரோகிராமை ஆரம்பித்தவர்கள்.
2)   ஹாஸ்பைஸ் கேர் (Hospice Care) என்ற ஒரு தலைப்பில் பல கட்டுரைகளை பலருடன் சேர்ந்து எழுதியிருக்கிறார்.
3)   ஃபிளஷிங் ஹாஸ்பிட்டல்  மெடிக்கல் சென்ட்டர் ஸ்கூல் ஆஃ ப் நர்சிங்கில் நர்ஸ் படிப்பை முடித்துப் பின்னர்  ஹெல்த்கேர்  அட்மினிஸ்ட்டிரேசனில் பட்டப்படிப்பை முடித்திருக்கிறார். அதன்பின் செயின்ட் ஜான்ஸ் யுனிவர்சிட்டி  ஸ்கூல் ஆஃப் லாவில் "ஜூரிஸ் டாக்டர்' படிப்பை முடித்து இன்ஸ்யூரன்ஸ் லாவில் சிறப்பு அவார்ட் வாங்கியிருக்கிறார்.
4)   ஈஸ்ட் வில்லிஸ்டன் என்ற ஊருக்கு துணைமேயராக 1991 முதல் 1998 வரை பணியாற்றியிருக்கிறார்.
5)   நாசா கெளன்டி பார்  அசோசியேசன் மெம்பரான இவர் பல அமைப்புகளில் போர்டு மெம்பர் ஆக இருக்கிறார்.
6)   1998-ல் 17ஆவது மாவட்டத்தின் பிரதிநிதியாக, நியூயார்க் ஸ்டேட் அசெம்பிளிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். (நம்மூர் MLA போல) அப்போது பல மக்கள் பணிகளில் சிறந்து விளக்கியிருக்கிறார். அப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்பெண் இவரே.
7)   லாங் ஐலன்ட் பிஸினெஸ் நியூசில் 50 சிறந்த செல்வாக்குள்ள பெண்மணிகளின் ஒருவராக சொல்லப்படுகிறார்.
Image result for Nassau county clerk's office
Clerk'ss office 
இவையெல்லாவற்றுக்கும் மேலாக எனக்கு ஆச்சரியம் தந்த ஒன்று என்றால் நாசா கெளண்ட்டி கிளர்க் என்பது தேர்தல் நடத்தி தேர்ந்தெடுக்கப்படும் ஒரு பதவி, 2005ல் முதன்முதலில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் பின்னர் 2009 மற்றும் 2013  லிலும் தொடர்ந்து தேர்ந்த்தெடுக்கப்பட்டார் . அவர் பதவிக்கு வந்த பின்  தேங்கிக்கிடந்து பத்து லட்சத்துக்கு மேலான பெண்டிங் கேஸ்களை முடிவுக்குக் கொண்டு வந்தாராம். இந்த ஃபைல்களை எல்லாம் கம்யூட்டரைஸ் செய்து ஈபைலிங் முறையைக் கொண்டுவந்த வரும் இவரே.
அம்மாடி நான் ஏதோ கிளர்க் தானே என்று குறைவாக மதிப்பிட்டுவிட்டேன்.
கிளர்க்கை பார்க்க அப்பாயிண்ட்மென்ட்டா என ஏளனமாக நினைத்த நான் இவரைப் பார்ப்பது முன்பதிவு இல்லாமல் சுலபமல்ல என்று தெரிந்து கொண்டேன்.
அமெரிக்காவில் ஒரு கிளர்க் வேலை கூடக் கிடைக்காதா என்று நான் நினைத்த நாட்கள் உண்டு. ஆனால் அது எவ்வளவு பெரிய பதவி என்பதை நினைத்தால் தலை கிறுகிறுக்கிறது.
 முற்றும்
முக்கிய அறிவிப்பு :
அன்பு நண்பர்களே நியூயார்க் தமிழ்ச்சங்கம் நடத்தும் தீபாவளி விழா வருகின்ற சனிக்கிழமையன்று மதியம் நடைபெறுகிறது .பல நல்ல நிகழ்ச்சிகள் உள்ளன .வாருங்கள்  மகிழ்ச்சியுடன் கொண்டாடலாம் .மேலும் விவரங்களை கீழே உள்ள போஸ்டரில் பார்க்கலாம்