Monday, February 26, 2018

அக்ராஹாரத்தில் வாழ்ந்த பரதேசி


வேர்களைத்தேடி பகுதி: 7
இதற்கு முந்திய பகுதியைப்படிக்க  இங்கே சொடுக்கவும்.
http://paradesiatnewyork.blogspot.com/search?updated-max=2018-02-22T08:00:00-08:00&max-results=7
In front of my old house 

            புது வெள்ளம் போல புரண்டு வந்த நினைவுகளில் நீந்திய வண்ணம் தெருவுக்குள் நடந்தேன். அப்படியே நாட்டாமை வீடு, முத்துக் கழுவன்  வீடு, கருத்தையா தேவர், பூசாரி வீடு ஆகியவற்றைக் கடந்து நடந்தேன். நான் வளர்ந்த ஆடி ஓடித்திரிந்த தெருக்கள் இப்போது மிகமிகச் சிறியதாக இருந்தன. அந்த சந்தில் நுழைந்து நடந்ததும் அதன் மூலையில் என் வீடு வந்தது. என் வீடு என்று இப்போது சொல்லக் கூடாது. அதைத்தான் விற்றுவிட்டு சென்னை வந்து அங்கிருந்து நியூயார்க் வந்து வெகு தூரம் வந்துவிட்டோமே. வீட்டின் முன்னால் உள்ள கிரில்லை தட்டி "வீட்டிலே யாருங்க" என்றேன்.
          அந்த வீட்டின் முன்னால் நிற்கையில் அலை அலையாக என் நினைவுகள் வந்து மோதி கண்கள் குளமாகின. என்னுடைய அப்பா சிறிது சிறிதாக சேமித்து, தான் குடியிருந்த வாடகை வீட்டையே விலைக்கு வாங்கி, அதில் பலவித மாற்றங்கள் செய்து பலவருடங்கள் வாழ்ந்த வீடு. தன்னுடன் வேலை பார்த்த தலைமை ஆசிரியர் புலவர் ப.தேவகுரு அவர்களுக்குத்தான் அதனை விற்றார். அவர் தன்னுடைய மூத்த மகனான ராஜேந்திரனுக்காக அதை வாங்கினார். சிறிதாக வீட்டின் முன்னால் 'சுசிதியாகு' என்று எழுதியிருந்ததைக் காணோம். என் அம்மா பெயரான சுசிலா, அப்பா பெயரான தியாகராஜன் என்பதின் சுருக்கம்தான் அது. சென்னையில் வீடுகட்டின போதும் அதே பெயரைத்தான் என் வீட்டிற்கு வைத்தேன். என்னுடைய நூல்நிலையத்திண்ணையை இப்போது காணோம்.

                    ஐந்தாவது அல்லது ஆறாவது படிக்கும்போது அங்கு குடி பெயர்ந்தோம் என நினைக்கிறேன். அதன்பின் தேவதானப்பட்டியில் பத்தாவது வரை படித்தேன். மேல் நிலைக்கல்விக்கு காந்திகிராமம் போனபின் அந்த வீடு எனக்கு விடுமுறைக் கால வீடாகிவிட்டது. அமெரிக்கன் கல்லூரி 3 வருடம், முதுகலை சமூகப்பணி -2 வருடம் முடித்து அப்படியே வேலைக்காக ஒரு வருடம் சிவகாசி, ஒரு வருடம் கிருஷ்ணகிரி முடித்து சென்னைக்கு 1988ல் வந்து 2000-த்தில் நியூயார்க் வந்தாகி விட்டது.
          இது ஒரு அக்ரஹாரம் போன்ற வீடு முன்னால்  இருபுறமும் திண்ணைகள், உள்ளே ஒரு ஹால் அதன் பின் ஒரு சிறிய என்னுடைய படிப்பு  அறை , அதன்பின் ரேடியோ அறை என்று நாங்கள் அழைக்கும் என் அப்பா அம்மா படுக்கும் அறை அதன்பின் ஒரு திறந்தவெளி முற்றம். அதை ஒட்டி ஒரு குளியலறை மற்றும் தனியாக கழிவறை, ஒரு நடை  அதன் ஒரு பகுதியில் புழக்கடைக்குச் செல்லும் கதவு அதன் பின்னால் சமையலறை என்று ஒரே நெட்டாக இருக்கும். யாரோ ஐயருக்காக கட்டியிருப்பார்கள் போல இருக்கிறது .அதில் இந்த  பரதேசி வாழ்ந்து வளர்ந்தது ஒரு ஆச்சரியம்தான். முஸ்லீம் வீட்டில் வளர்ந்து அதன்பின் அக்ரஹார வீடு. வெளிவாசலில் இருந்து எட்டிப்பார்த்தால் சமையலறை தெரியும். அதன்பின் என் இன்ஜினியர் மாமா சொல்லி வாசல் புறத்தை மாற்றி கதவை ஒரு ஓரத்தில் வைத்தார்கள். இவை தவிர வெட்டவெளி முற்றத்தில் இருக்கும் ஏணியில் ஏறினால் ஒரு மொட்டைமாடி . மாடியின் பின்புறம் இன்னொரு பெரிய ரூம், அதன்பின் பால்கனி. இந்த ரூமை அப்பாதான் கட்டினார். நான் என் மனைவி பிள்ளைகள் போகும்போது அந்த ரூமைத்தான் பயன்படுத்துவோம்.
          மொட்டை மாடி அல்லது பால்கனியிலிருந்து பார்த்தால் சுற்றிலும் மலைகள் சூழ்ந்து, சீதளத்  தென்றல் வீசும் ரம்மியமான இடம். கொடைக்கானல் மலையினருகில் இருப்பதால் மாலை நேரம் மிகவும் அருமையாக இருக்கும்.
          "யார் வேணும் உங்களுக்கு?" என்றான்  வெளியே வந்த ஒரு பையன். நினைவுகளில் மூழ்கி நின்று கொண்டிருந்த என்னை உலுக்கினான் மினி சாம்.
          "ராஜேந்திரன் இருக்காரா"
          "அப்பா இல்லை, நீங்கள் யார்?"
          "என் பெயர் சேகர், தியாகு வாத்தியாரின் மூத்த பையன். எங்களிடமிருந்துதான் தேவகுரு வாத்தியார் இந்த வீட்டை வாங்கினார்"
          தெரியும் தெரியும் வாருங்கள், உள்ளே, அம்மா அம்மா,தியாகு வாத்தியார் பையன் வந்திருக்கிறார்”.
          வாங்க வணக்கம். எப்படி இருக்கீங்க?”
          நல்லா இருக்கேன், நீங்க எல்லாம் எப்படி இருக்கீங்க,        ராஜேந்திரன் நல்லா இருக்காரா?”
          எல்லோரும் நல்லா இருக்கோம். நீங்க சென்னையிலிருந்து வருகிறீர்களா?”
          இல்லை நான் இப்ப நியூயார்க்கில் வசிக்கிறேன்”.
          அப்படியா அங்கு எப்ப போனீங்க?”.
          நான் 2000-த்திலேயே அங்கு போயிட்டேன். பழைய ஞாபகத்தில் வீட்டைப்பார்க்க வந்தேன்”.
          தாராளமாக, உள்ளே வாங்க”.
          ஒரு சில மாற்றங்கள் தவிர வீட்டில் பெரிய வித்தியாசம் இல்லை. ஆனாலும் முற்றிலுமாக வேறுமாதிரி தெரிந்தது. ஷூவைக்  கழற்றி விட்டு சமையலறை வரை சென்று பார்த்தேன். ஒவ்வொரு பகுதியிலும் என்னுடைய நினைவுகளும் நிகழ்வுகளும் ஒளிந்திருந்தன. வாழ்க்கை என்பதுதான் எப்படியெல்லாம் மாறிப்போகிறது. இன்னும் கொஞ்ச வருடம் போனால் இந்த ஊரில் தெரிந்தவர் என்று ஒருவரும் இருக்க மாட்டார்கள்.
          ராஜேந்திரன் பையனிடம் கேட்டேன், "தேவகுரு வாத்தியார் எப்படி இருக்கிறார்?".
          ஓ தாத்தா நல்லா இருக்கார். ஆனால் பாட்டி இறந்ததுல இருந்து தனியா இருக்கிறதால கொஞ்சம் ஞாபக மறதியா இருக்கிறார். அதோட சித்தப்பா இளங்கோவன் இறந்துபோனதால அந்தக் கவலை வேற”.
          இளங்கோவன் இறந்துவிட்டாரா அடடா  ஐயம் சாரி, ஐயாவைப் பார்க்க முடியுமா?”
          தாராளமாக வாங்க போகலாம்”.
இந்த வீட்டின் நினைவுகளை சொல்வதற்குமுன் தமிழ் ஐயாவைப் பார்த்து விட்டு வந்து விடலாம்  .
          அவனுடைய அம்மாவிடம் விடைபெற்று வெளியே வந்தோம்.      மினி சாமையும் அழைத்துக் கொண்டு தெருவில் நடந்தேன்.
          அதனை தெரு என்று சொல்லமுடியாது, குறுகிய சந்து என்று சொல்லலாம். ஆனால் இப்போது மிகக்குறுகியதாய் தெரிந்தது. முழுதும் சிமிண்ட் போட்டு பூசப்பட்டிருந்தது. அப்படியே நுழைந்து சின்னக்குப்பண்ணன், பெரிய குப்பண்ணன் வீட்டைத் தாண்டி செக்காச் செட்டியார் தெருவுக்குள் நுழைந்தோம். அங்கே தெருவின் இறுதியில் ஒரு மிகப்பெரிய செக்கு ஒன்று இருக்கும்.
          கடலை எண்ணெய் நல்ல எண்ணெய் ஆட்டுவார்கள். முந்தியெல்லாம் போனால் சுடச்சுட புண்ணாக்கு தருவார்கள். எண்ணெய் எடுத்து முடிந்த சக்கைதான் புண்ணாக்கு, மாடுகள் ஆடுகளுக்கு மிகவும் பிடிக்கும் உணவு. சூடாக சாப்பிட்டால் நன்றாக இருக்கும் குறிப்பாக எள்ளுப்புண்ணாக்கும் அச்சு வெல்லமும்  இணைந்தால் அற்புதமாக இருக்கும்.
          புலவர் தேவகுரு ஆசிரியர் பிலிட் தமிழ் இலக்கியத்தில் புலவர் பட்டம் பெற்றவர். என்னுடைய அப்பாவுடன் இணைந்து பலவருடங்கள் இந்து நடுநிலைப்பள்ளியில் பணியாற்றியவர். இறுதியில் தலைமை ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர். தமிழ் மேல் ஆர்வம் எனக்கு ஏற்கனவே இருந்தாலும் தமிழின் புதிய பரிமாணத்தை எனக்குக் கற்றுத்தந்தவர். ஏழாம் வகுப்பினை அவரிடம்தான் பயின்றேன். கணக்கு பாடத்திற்கு மட்டும் என்னுடைய தந்தை வருவார்.
          புலவர் தேவகுரு நான் படிக்கும்போதே "மானங்காத்த மன்னர்கள்" என்ற ஓரங்க நாடகங்கள்  புத்தகத்தை வெளியிட்டிருந்தார். அது மாணவர்களால் பலமுறை மேடையில் அரங்கேற்றம் செய்யப்பட்டது. அது போல அவர் எழுதிய பல சமூக நாடகங்கள் ஊரில் நடக்கும் திருவிழாக்கள் சமயத்தில் அரங்கேறியிருக்கின்றன.
          வடுகப்பட்டியில் நடந்த சிறுவர் தினவிழாவில் அவருடைய நாடகத்தை நாங்கள் நடித்தோம். அது மிகவும் பாராட்டப்பட்டது. குறிப்பாக நண்பர்கள் கண்ணனும் சிராஜுதீன்  மிகச்சிறப்பாக நடித்து பரிசு பெற்றார்கள். நானும் நடித்தேன். சிறப்பாக என்று சொல்ல முடியாவிட்டாலும் சொதப்பவில்லை என்று நினைக்கிறேன். இப்போது நினைத்தால் அதனை இன்னும் கொஞ்சம் சிறப்பாக செய்திருக்கலாம் என்று நினைக்கிறேன். இப்போது நினைத்து என்ன செய்வது .நாம் வாழ்க்கையில் பல விஷயங்களை இன்னும்  சிறப்பாக செய்திருக்கலாம் என்றுதான்   எப்போதும் தோன்றுகிறது .நடந்து போனவைகளை மாற்ற முடியுமா என்ன ?
          வீட்டில் உள்ளே நுழைந்தோம்.


          தாத்தா தாத்தா யார் வந்திருக்கார்னு பாருங்க”.
முன்ஹாலில் இருந்த கட்டிலில் முடங்கிப் படுத்திருந்தார்.அடையாளமே தெரியவில்லை.
          “ஐயா  நான் சேகர் வந்திருக்கேன்”
கொஞ்சம் சத்தமாகப்பேசுங்கள்” சொன்னது ராஜேந்திரனின் பையன்
“ஐயா  நான் சேகர் வந்திருக்கேன்”
 “எந்த சேகர்ப்பா எனக்குத் தெரியவில்லை”.
“தியாகு வாத்தியார் மகன் சேகர்”. 
என் அப்பாவின் பெயரைக் அப்படியே பொலபொலவென்று அழ ஆரம்பித்தார்.
தொடரும்

Thursday, February 22, 2018

தமிழ்ப் புத்தாண்டு எது? தையா? சித்திரையாதமிழர்கள் வரலாற்றில் தமிழ்ப் புத்தாண்டு எது? தையா? சித்திரையா


Related image


தமிழர்கள் யாவரும் தமிழ்ப் புத்தாண்டைப் பற்றிய தெளிவின்மையோடு, எதை நம்புவது எதைப் புறக்கணிப்பது என்ற குழப்பத்தில்  சிக்கியுள்ளார்கள். தமிழக மக்கள் இந்த விசயத்தில் எக்காரணம் கொண்டும் தெளிவுபெற்றுவிடக் கூடாது என்பதில் இப்போது ஆட்சியில் இருப்போரும், அவர்க்கு அறிவுரை வழங்கி வரும் கூட்டமும்  மிகத்  தெளிவாய் இருக்கிறது. அதன்படி தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாய்  கலைஞர் அறிவித்ததை மாற்றி மீண்டும் சித்திரை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக  அறிவித்துள்ளது தற்போதைய தமிழக அரசு. இந்நிலையில் எதற்காக தமிழர்கள் தை முதல் நாளை புத்தாண்டாகக்  கொண்டாட வேண்டும் என்பது குறித்து விளக்கவே இந்தக் கட்டுரை. தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு ஏன் எதற்கு என்பதைப் பற்றியெல்லாம் ஆராயும் முன், நாம் ஒன்றைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். சித்திரை முதல் நாளில் ஆரம்பிக்கும் ஆண்டுகளின் கணக்கு சுழற்சி முறையில் இருக்கும்.

அறுபது ஆண்டுகள் மீண்டும் மீண்டும் வந்தபடியே இருக்கும். இந்த அறுபது ஆண்டுகளுக்கும் 'பிரபவ' முதல் 'அட்சய' என்று அறுபது பெயர்கள் இருக்கின்றன. இந்த அறுபது பெயர்களில் ஒன்று கூட தமிழ்ப் பெயர் கிடையாது. அனைத்துமே வடமொழிப் பெயர்கள். தமிழ் வருடங்கள் எனச் சொல்லப்படுகிற வருடங்களின் பெயர்கள் வடமொழியில் இருப்பதன் ரகசியம் என்ன? அப்படி இருக்கலாமா? அப்படி இருத்தல் உலகத்தின் மூத்தகுடியான தமிழுக்கும் தமிழர்க்கும் மரியாதையாய்  இருக்குமா? இந்த அறுபது ஆண்டு சுழற்சி முறையைக் குறித்து முதலில் கவனிப்போம். இந்த முறை வடநாட்டு மன்னனான சாலிவாகனன் என்பவனால் கிறித்துவுக்குப் பின் 78ஆம் ஆண்டில் வடநாட்டில் ஏற்படுத்தப்பட்டது. கனிஷ்கன் என்ற வடநாட்டு அரசனால் இது ஏற்படுத்தப்பட்டது என்று கூறுவோரும் உண்டு. பின்னர் தென்னாட்டில் ஆரியர்களின் ஊடுருவலால், ஆட்சியால் இந்த ஆண்டு முறை படிப்படியாகப் பரப்பப்பட்டு நிலைநிறுத்தப்பட்டது. எந்த ஓர் இனத்தவரின் ஆட்சி ஒரு நாட்டில் நிலைநிறுத்தப்படுகின்றதோ அந்த இனத்தவரின் பழக்க வழக்கங்கள், பண்பாடுகள், கலைகள் போன்றவை அந்த நாட்டின் பூர்வகுடி (தமிழ்) மக்களின்  பழக்க வழக்கங்களோடு கலந்து விடுவது இயல்பு. அந்த வகையில் இந்த சாலிவாகன முறை பின்னர் மெல்ல மெல்ல தமிழகத்தில் நடைமுறைப் பழக்கத்திற்கு வந்துவிட்டது. அறுபது ஆண்டு சுழற்சி முறை காரணமாக ஆரியர்களிடையே அறுபது வயது நிரம்பியவர்கள் 'சஷ்டியப்த பூர்த்தி' என்ற அறுபதாண்டு விழாவைக் கொண்டாடும் வழக்கம் இருப்பதைக் கவனியுங்கள். அதாவது ஆரியர்கள் உருவாக்கிய 60 ஆண்டுகளைக் கடந்து வாழ்கிறார் என்பதை இது குறிக்கிறது. ஒரு சுற்று வந்து விட்டார் என்பது இதன் கரு.

தமிழர்கள் காலத்தை வகுத்த விதம் பிரம்மிப்பானது. தமிழர்கள் இயற்கையை ஆதாரமாகக் கொண்டு காலத்தைப் பிரித்தார்கள். ஒரு நாளைக்கூட ஆறு சிறு பொழுதுகளாக பிரித்து வைத்திருந்தார்கள்வைகறை, காலை, நண்பகல், எற்பாடு, மாலை, யாமம் என்று அவற்றை அழைத்தார்கள். அது மட்டுமல்ல, அந்த ஆறு சிறு பொழுதுகளின் தொகுப்பையும் அறுபது நாழிகைகளாகப் பகுத்துக் கணக்கிட்டார்கள். அதாவது ஒரு நாளில் ஆறு சிறுபொழுதுகள் உள்ளன. அந்த ஆறு சிறு பொழுதுகள் கழிவதற்கு அறுபது நாழிகைகள் எடுக்கின்றன என்று தமிழர்கள் பண்டைக் காலத்தில் கணக்கிட்டார்கள். ஒரு நாழிகை என்பது தற்போதைய 24 நிமிடங்களைக் கொண்டதாகும்.

அதாவது பண்டைக் காலத் தமிழர்களது ஒரு நாட் பொழுதின் அறுபது நாழிகைகள் என்பன தற்போதைய கணக்கீடான 1440 நிமிடங்களோடு, அதாவது 24 மணிநேரத்தோடு அச்சாகப் பொருந்துகின்றன. தமிழர்கள் ஒரு நாள் பொழுதை, தற்போதைய நவீன காலத்தையும் விட, அன்றே மிக நுட்பமாகக் கணித்து வைத்திருந்தார்கள் என்பதே உண்மையுமாகும்.

பின்னாளில் வந்த ஆரியர்கள் ஓர் ஆண்டை நான்கு பருவங்களாக மட்டும்தான் வகுத்தார்கள். ஆனால் பண்டைக்காலத் தமிழர்களோ, தமக்குரிய ஆண்டை, அந்த ஆண்டுக்குரிய தமது வாழ்வை, ஆறு பருவங்களாக வகுத்திருந்தார்கள்.

1. இளவேனில் - (தை---மாசி மாதங்களுக்குரியது)

2.    முதுவேனில் - (பங்குனி - சித்திரை மாதங்களுக்குரியது)

3.    கார் - (வைகாசி - ஆனி மாதங்களுக்குரியது)

4.    கூதிர் - (ஆடி - ஆவணி மாதங்களுக்குரியது.)

5.    முன்பனி (புரட்டாசி - அய்ப்பசி மாதங்களுக்குரியது)

6.    பின்பனி (கார்த்திகை - மார்கழி மாதங்களுக்குரியது)

மேற்கண்ட மாதக்கணக்கில் இளவேனில் என்பது சித்திரைவைகாசி மாதங்களுக்கு உரிய காலம் என சிலர் வாதிடுகிறார்கள். ஆனால் அது முற்றிலும் தவறுசித்திரை மாதத்தில் (வேனில்) வெயில் தன் அதிகபட்ச உக்கிரத்தை அடைவதால் அதை முதுவேனில் என்றும் தைமாதத்தில் தொடங்கும் வெயிலை 'இளவேனில்' எனவும் பண்டைத் தமிழர்கள் அழகாகப் பகுத்திருந்தார்கள்காலத்தை, அறுபது நாழிகைகளாகவும், ஆறு சிறு பொழுதுகளாகவும், ஆறு (மீணீஷீஸீ) பருவங்களாகவும் பகுத்த பண்டைத் தமிழன் தன்னுடைய புத்தாண்டு வாழ்வை இளவேனிற் காலத்தில்தான் (தை) தொடங்குகின்றான்இங்கே ஒரு மிக முக்கியமான விசயத்தை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்! பண்பாட்டுப் பெருமை கொண்ட மற்றைய பல இனத்தவர்களும், தங்களுடைய புத்தாண்டு வாழ்வை, தங்களுடைய இளவேனிற் காலங்களில்தான் ஆரம்பிக்கின்றார்கள். தமிழர்கள் மட்டுமல்ல, சீனர்களும், ஜப்பானியர்களும், கொரியர்களும், மஞ்சூரியர்களும் என, பல கோடி இன மக்கள் - தொன்மையான பண்பாட்டு வாழ்வினைக் கொண்ட பெருமை வாய்ந்த மக்கள்- தங்களுடைய இளவேனிற் காலத்தையே தமது புத்தாண்டாகக் கொண்டாடி வருகின்றார்கள்.

தமிழர்கள்  நாம் மட்டும் ஆரியப் பழக்கத்துக்கு மாறிவிட்டோம்! இடையில் வந்த இடைச்செருகலால் வந்த வினை இது. நம் இளவேனில் காலம் தை மாதம் தான். அதனால்தான் தை முதல் நாளைத் தமிழ்ப் புத்தாண்டு என்கிறோம். தமிழர்க்கு எதிரான சக்திகளின் சூழ்ச்சிக்குப் பலியாகாமல், தமிழின், தமிழரின் பெருமையைப் பாதுகாக்கும் பொருட்டு தமிழர் யாவரும் தை முதல் நாளையே தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடி மகிழ்வோம். இதுகுறித்து  பாவேந்தர் பாரதிதாசன் நமக்குத் தரும் அறிவுரையைக் கேளுங்கள்,

Image result for தமிழர்கள் வரலாற்றில் தமிழ்ப் புத்தாண்டு எது? தையா? சித்திரையா


நித்திரையில் இருக்கும் தமிழா!
சித்திரை இல்லை உனக்குப் புத்தாண்டு
அண்டிப்பிழைக்க வந்த ஆரியக்கூட்டம்   கற்பித்ததே
அறிவுக்கொவ்வா அறுபது ஆண்டுகள்
தரணி ஆண்ட தமிழனுக்கு
தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு!

             − உண்மை  திங்களிதழ்

Forwarded by Arasu Elilan