Tuesday, May 26, 2020

பஞ்சு அருணாசலத்தின் மஞ்சள் நிற மோகம் !எழுபதுகளில் இளையராஜா பாடல் எண்: 44
வா பொன் மயிலே

இதற்கு முந்திய பகுதியைப்படிக்க  இங்கே சொடுக்கவும்


RAJA CHINNA RAJA POONTHALIRE INBAKANIYE - Lyrics and Music by ...
Add caption
1979ல் வெளிவந்த பூந்தளிர் என்ற படத்தில் இளையராஜா இசையமைத்து புகழ் பெற்ற பாடல் இது.  இது பாடலைக் கேளுங்கள்.


பாடலின் பின்னனி:

காதல் கொண்ட இளைஞன் காதலின் மயக்கத்திலும், ஏக்கத்திலும் காதலியை வர்ணித்துப்பாடும் பாடல் இது. சினிமாப்பாடல்களில் அந்தக்காலக்கட்டத்தில் இதைத் தவிர்க்கமுடியுமா ?

இசையமைப்பு:

எழுபதுகளில் வந்த இளையராஜாவின் இசையமைப்பில் உதித்த மெல்லிசை மெலடி பாடல் இது என்று சொல்லலாம். பெல்ஸ், டிரம்ஸ், புல்லாங்குழல் ஆகியவை ஒரு வெஸ்டர்ன் அமைப்பில் ஒலிக்க, டிரம்ஸில் கெட்டிலில் பிரஸ் வைத்து ஒரு ஜாஸ் இசை போல ஆரம்பித்து முடிய, பாடல் ஆண்குரலில் "வா பொன்மயிலே" என்று ஆரம்பிக்கிறது. அப்போது தபேலா சேர்ந்து கொள்ளும் போதுதான் ஆஹா இது இளையராஜா என்று பொறி தட்டுகிறது. பல்லவி இரண்டாம் முறை ஒலிக்கும் போதுதான் கிராண்ட் வயலின் குழுமம் சேர்ந்து கொண்டு வரிகளுக்குப் பதில் சொல்வது போல் ஒவ்வொரு வரிக்கும் பின்னால் ஒலித்து பாடலை ரிச் ஆக்குகிறது. முதல் பிஜிஎம்மில் வயலின் குழுமம், புல்லாங்குழல், டிரம்ஸ் ஆகியவை ஒலித்து முடிய சரணத்தில் தபேலே சேர்ந்து கொள்கிறது. 2ஆவது பிஜிஎம்மில் கீபோர்டு வயலின் பெல்ஸ் ஒலித்து முடிக்க 2-ஆவது சரணத்திலும் தபேலா வந்து வேறுபடுத்திக் காண்பிப்பது இளையராஜாவின் பிரதான ஸ்டைல். இதுவே MSV காலத்திலும் இருந்தது.
பாடலின் வரிகள்:
வா பொன்மயிலே நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது
என்றும் நீயின்றி நானில்லை நானின்றி நீயில்லை கண்மணி
வா பொன்மயிலே நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது
காதலின் ஜாடையெல்லாம் கண்ணழகிலே
கோவிலின் தேரழகோ முன்னழகிலே
கனியே மனம் மயங்க மயங்க வருவாய் சுவை பெருக பெருக
இளமையின் நளினமே இனிமையின் உருவம் மலர
வா பொன்மயிலே நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது
என்றும் நீயின்றி நானில்லை நானின்றி நீயில்லை கண்மணி
வா பொன்மயிலே நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது
மேனியின் மஞ்சள் நிறம் வான் அளந்ததோ
பூமியின் நீல நிறம் கண் அளந்ததோ
அழகே சுகம் வளர வளர நினைவே தினம் பழக பழக
உரிமையில் அழைக்கிறேன் உயிரிலே கலந்து மகிழ
வா பொன்மயிலே நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது
என்றும் நீயின்றி நானில்லை நானின்றி நீயில்லை கண்மணி
வா பொன்மயிலே நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது

Panchu Arunachalam with Ilayaraja
பாடலை எழுதியவர் மறைந்த பஞ்சு அருணாசலம் அவர்கள். பாடலை எழுதும்போது அவருக்கு என்ன வயது என்று தெரியவில்லை. ஆனால் உணர்வுகளுக்கும் கற்பனைக்கும், கவிதைக்கும்,காதலுக்கும் வயது ஒரு தடையில்லை   அல்லவா. அட அடா நம் கவிஞர்கள் தான் பெண்களை மானென்றும் மயிலென்றும் எத்தனை முறை சொல்லியிருக்கிறார்கள். இந்தக் காரியத்தில் இவர்களுக்கு தயக்கமுமில்லை, அலுப்புமில்லை, எப்போதும் ஒருவித மயக்கம்தான். இங்கு வெறும் மயில் கூட இல்லை. பொன் மயில் என்று கூறுகிறார். நிறத்தைச் சொல்கிறார். நம் ஆண்களுக்குத்தான் சிவப்பு அல்லது பொன்னிறம் என்றால் பெரும் கிரக்கமயிற்றே. அதனாலல்லவா சிவப்பாக்கும் கீரிம்கள் இந்தியாவில் பெரும் வியாபாரமாக இருக்கிறது. இந்த மாயையிலிருந்து எப்போதுதான் நாம் மீளுவோமோ ?. அதற்கடுத்த வரிகளில், கண்ணழகு, முன்னழகு தேர், கனி, இளமையின் நளினமே, இனிமையின் உருவமே என்று வர்ணித்துத் தள்ளி விடுகிறார். “இளமையின் நளினமே " என்ற வரி சிந்திக்க வைத்து கற்பனைக்குதிரைகளைத் தட்டிவிட்டது. அடுத்த சரணத்திலும் மேனியின் மஞ்சள் நிறத்தை சிலாகித்து ஆரம்பிக்கிறார். "உரிமையில் அழைக்கிறேன் உயிரிலே கலந்து மகிழ" என்ற வரிகள் சிலிர்க்க  வைக்கின்றன. எளிமையான வரிகளுக்குச் சொந்தக்காரர் பஞ்சு அருணாச்சலம்.
பாடலின் குரல்:

Add caption
எஸ்.பி.பியின் இளமைக்கால குரல் சொக்க வைக்கிறது. இளைஞனின் மனதை இளமைக்குரலில் வெளிப்படுத்தும்போது, இளமையுடன் இனிமையும் சேர இனிக்கிறது பாடல். எனக்கு ஒரு சந்தேகம். இந்த மாதிரிப் பாடல்களின் டியூனை யாரை நினைத்து இளையராஜாவும், யாரை நினைத்துக் கொண்டு பஞ்சுவும்,   யாரை மனதில் கொண்டு எஸ்.பி.பியும் பாடியிருப்பார்கள்?. இப்படி உருகித்தள்ளியிருக்கிறார்கள்.
இளையராஜாவின் டிரேட் மார்க் மெலடியில் உதித்த இந்தப் பாடல் கேட்கும் போதெல்லாம் நம் மனதை வருடுகிறது, வருடும். மீண்டும் கேட்டுப் பார்த்தால் உண்மை இதனை உணர்த்தும்.
- தொடரும்
Monday, May 18, 2020

கொரோனாவின் பழிவாங்கல்கள் !

Coronavirus NYC: 1 in 5 New York City residents tested for ...
New York City people 

பழிவாங்கல் 1
பொது மக்கள் : இந்த சீனாக்காரன் பாம்பையும் தேளையும் தின்னதால  பாரு இப்ப  கொரோனா வைரஸ் வந்து கஷ்டப்படுறான் .நல்ல வேளைப்பா நாம தப்பிச்சோம்  ( ஜனவரி 2020).
கொரோனா: ஓ  நீ அப்படி நினைக்கிறயா , இதோ வந்துட்டேன் .
செய்தி : மொத்தம் 202 நாடுகளை  கொரோனா தொற்று பாதித்திருக்கிறது .

பழிவாங்கல் 2
பொது மக்கள் : கொரோனா வளர்ந்த நாடுகளில் அதிகம் பரவாது .
கொரோனா: அட முட்டாளே , இப்ப பாரு .
செய்தி : அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து உட்பட்ட ஐரோப்பிய நாடுகளில் கொரோனா மிக வேகமாக பரவுகிறது .( மார்ச் 2020)

பழிவாங்கல் 3
பொது மக்கள் : அமெரிக்காவில் அதிக பாதிப்பு ஏற்படாது  .
கொரோனா: ஹா ஹா ஹா , ஐயோ பாவம்
செய்தி : கொரோனா பாதிப்பில் அமெரிக்கா உலகத்திலேயே முதலிடம் பிடித்தது ( ஏப்ரல்  2020).

பழிவாங்கல் 4
மருத்துவ ஆராய்ச்சியாளர்: சுகவீனமாக உள்ளவர்கள் மட்டும் மாஸ்க் போட்டால் போதும்
கொரோனா: ஏண்டா திருந்தவே மாட்டீர்களா ?
செய்தி : வெளியில் செல்லும் எல்லோரும் மாஸ்க் போடவேண்டும்  ( ஏப்ரல்  2020)

பழிவாங்கல் 5
மருத் துவ ஆராய்ச்சியாளர்:உடலில் ஏற்கனவே ஏதாவது பாதிப்புகள் உள்ளவர்களை மட்டும்தான் தாக்கும்
கொரோனா: என்னை புரிஞ்சிக்கவே  மாட்டிங்களா ?
செய்தி : கொரோனா ஆரோக்கியமாக இருப்பவர்களையும் தாக்குகிறது ( ஏப்ரல் 2020).

பழிவாங்கல் 6
மருத்துவ ஆராய்ச்சியாளர்: கொரோனா முதியவர்களை மட்டுமே பாதிக்கும்
கொரோனா: இளைஞர்களையும் எனக்குப்பிடிக்குமே
செய்தி : கொரோனாவால் அதிகமாக இளைஞர்களும்   பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் ( ஏப்ரல் 2020).

பழிவாங்கல் 7
மருத்துவ ஆராய்ச்சியாளர்: கொரோனா சிறு குழந்தைககளை த்தாக்காது
கொரோனா: நான் அப்படியெல்லாம்  பிரிச்சு பார்ப்பதேயில்லை
செய்தி : கொரோனாவால் சிறு குழந்தைகள் உலகமெங்கிலும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் ( மே 2020).

பழிவாங்கல் 8
பொது மக்கள் : அதிக வெப்பமுள்ள பகுதிகளில் கொரோனாவின் தாக்கம் இருக்காது
கொரோனா: பச்சைப்பிள்ளையாய் இருக்கியேடா
செய்தி : இந்தியாவில் சித்திரை வெய்யிலிலும் நித்திரை தொலைக்க வைத்தது கொரோனா:  ( மே 2020)

பழிவாங்கல் 9
பொது மக்கள் : தமிழர்களுக்கு தடுப்பு சக்தி அதிகம்
கொரோனா: எம்மொழியும் எமக்கு சம்மதமே ?
செய்தி : இந்தியாவில் கொரோனா: பாதிப்பில் தமிழகம் இரண்டாம் இடத்தைப்பிடித்தது .  ( மே 2020)

பழிவாங்கல் 10
பொது மக்கள் : இப்ப உள்ள நிலைமையை சாமிதான் காப்பாத்தணும்
கொரோனா: அப்படியா? பார்க்கலாமா ?
செய்தி : உலகமெங்கிலும் ஆலயங்கள், கோவில்கள் மற்றும் அனைத்து வழிபாட்டுத்தலங்களும் மூடப்பட்டன .(  மார்ச் 2020)


பழிவாங்கல் 11
மருத்துவ ஆராய்ச்சியாளர்: கொரோனா வந்தவர்களுக்கு இருமல், காய்ச்சல் , தொண்டை வலி போன்றவை இருக்கும்
கொரோனா: ம்ம்ம் இப்ப பாருங்க
செய்தி  : எந்த அறிகுறியும் இல்லாதவர்களுக்கும் கொரோனா தொற்று  கண்டுபிடி க்கப்பட்டுள்ளது (மே 2020)

பழிவாங்கல் 12
மருத்துவ ஆராய்ச்சியாளர் :கொரோனா ஒருவருக்கு ஒரு முறை வந்தால் மறுமுறை வராது
கொரோனா: எங்க திரும்பச் சொல்லு ?
பரதேசி : முட்டாள் ஜனமே கொஞ்சம் சும்மா இருக்கீங்களா ?

Monday, May 11, 2020

மரண தேசம் மெக்ஸிகோ !


படித்ததில் பிடித்தது.
டெக்ஸ் வில்லரின் தீபாவளி ஸ்பெஷல்
மரண தேசம் மெக்ஸிகோ
சன்ஷைன் வைப்ரரி - சிவகாசி.

Lion-Muthu Comics: மாற்றமே - உன் விலை என்ன ?
என்னுடைய சிறுவயது கதா நாயகர்களான, இரும்புக்கை மாயாவி, லாரன்ஸ் & டேவிட், ஜானி - நீரோ வரிசையில் அடுத்து வருபவர் டெக்ஸ் வில்லர். ஏனோ அன்று முதல் இன்று வரை, வேறு எந்தச் சினிமா கதாநாயகர்களும் என்னை அவ்வளவாக ஈர்க்கவில்லை.
வைல்ட்  வெஸ்ட் என்று சொல்லக்கூடிய அமெரிக்காவின் மேற்குப்பகுதியில் வாழ்ந்த செவ்விந்தியர்கள், கெளபாய் ஆகியோர் உலவிய பகுதியின் அடிப்படையில் அந்தக்கால கட்டத்திலேயே வாழ்ந்த விதத்தில் கற்பனையாக அமைக்கப்பட்ட ஒரு கதா நாயகன்தான் டெக்ஸ் வில்லர். நவஜோ (ஆங்கிலத்தில் நவஹோ-Navajo) என்று அழைக்கப்பட்ட செவ்விந்தியர்களின் தலைவரான 'இரவுக்கழுகார்' என்று சொல்லப்படும் திறமை வாய்ந்த டெக்சஸ் ரேஞ்சர்தான் டெக்ஸ் வில்லர். இவரது கூட்டாளி சற்றே வயதான கிட் கார்சன். இவர்களுடைய சாகசங்கள் அன்று தொடங்கி இன்று வரை ஐரோப்பாவின் புகழ்பெற்ற காமிக்ஸ் கதைகள்.
Lion-Muthu Comics: பார்வையின் மறு பக்கம் !
டெக்ஸ் வில்லர்” 
'டெக்ஸ் வில்லர்” என்ற கதாபாத்திரத்தைப் படைத்தவர் இத்தாலியின் 'மிலன் ' நகரில் 1908ல் பிறந்தவரான ஜியோவனி லுயிஜி பானெலி ( Giovanni Luigi Bonelli) என்பவர். 1937ல் காமிக்ஸ் தொடர்களை ஆரம்பித்த இவர் 1948ல் கெளபாய் சார்ந்த காமிக்ஸ் கதைகளை படைக்க எண்ணிய சமயத்தில் உருவானதுதான் டெக்ஸ் வில்லர் பாத்திரம். இவர் 2001ல் இறந்து போனாலும்  இவரைத் தொடர்ந்து வந்த பல எழுத்தாளர் அதன் உயிர்ப்பை இன்றுவரை சுவாரஷ்யமாக வைத்திருக்கிறார்கள். டெக்ஸ் வில்லர் உருவானவுடனே இது மற்ற கதாநாயகர்களை பின்னுக்குத்தள்ளி முதலிடம் பெற்றது.

Westerns...All'Italiana!: Who Are Those Guys? - Gian Luigi Bonelli
Giovanni Luigi Bonelli
பானெலியின் கதைகளுக்கு ஓவியராக அமைந்தவர் 1917ல் பிறந்த அரேலியோ காலெப்பினி. டெக்ஸ் வில்லரின் இதழ் 1 முதல் 400 வரை அனைத்து அட்டைப் படங்களையும் இவர் தான் வரைந்ததாகவும் 1994ல் இவர் மரணமடையும் வரை இவரே டெக்ஸ் வில்லருக்கு ஓவியராக இருந்திருக்கிறார். இன்றும் இத்தாலியில் பானெலி குழுமத்தின் மூலமாக நம்பர் 1 ஆகத் திகழ்ந்து சுமார் 2 லட்சம் பிரதிகள் விற்கின்றன என்று சொல்கிறார் பானெலி நிறுவனத்தின் தற்போதைய உரிமையாளர் டேவிட். இவர் நிறுவனரின் பேரன். இதுதவிர ஃபின்லாந்த், நார்வே, பிரேசில், ஸ்பெயின், துருக்கி, பிரான்ஸ், அமெரிக்கா, ஜெர்மனி, ரஷ்யா, ஹாலந்து ஆகிய பல நாடுகளில் அவரவர் மொழிகளில் இது வெளிப்படுகிறது.  (தகவல்கள் S. விஜயன் -லயன் காமிக்ஸ்)
இந்த வெளிநாட்டுக் கதா நாயகர்களுக்கு தமிழ் வடிவம் கொடுத்து மொழிபெயர்ப்பில் புதுமை படைத்து தமிழகத்தில் வெளியிட்டவர்கள் முத்து காமிக்ஸ், லயன் காமிக்ஸ் குழுமத்தின் தந்தையின் வழியில் வந்த தனயனான விஜயன் அவர்கள். தன்னுடைய தனிப்பட்ட காமிக்ஸ் ஆர்வத்தினால் இந்தக்குழுமத்தை தொடர்ந்து நடத்தி வருகிறார். உலகின் தலை சிறந்த காமிக்ஸ்களை தமிழில் அறிமுகபடுத்தி எங்களையெல்லாம் லண்டனுக்கும் பாரிசுக்கும் நியூயார்க்குக்கும் அழைத்து சென்றது இந்த நிறுவனம்தான். அந்தக் கதைகளில் ஈர்க்கப்பட்டுத்தான் நான் உலகப் பயணம் செய்கிறேன்.  நியூயார்க்கில் வந்து  வாழ்கிறேன். நியூயார்க்கிலிருந்து மதுரை சென்ற போது சிலமுறை முத்து காமிக்ஸ் நிறுவனத்திற்குச் சென்று வந்திருக்கிறேன். ஒரு முறை விஜயனைப் பார்க்கவும் எனக்கு வாய்ப்புக்கிட்டியது .
இந்தத் தீபாவளி மலர் எந்தத் தீபாவளிக்கு வந்தது என்று எனக்கு ஞாபகமில்லை. ஆனால் இப்போதுதான் படிக்க சந்தர்ப்பம் கிடைத்தது. இரண்டு நெடுங்கதைகள் இதில் உள்ளன. ஒன்று மரணதேசம் மெக்சிகோ, இரண்டாவது நீதியின் நிழலில்.

மரணதேசம் மெக்சிகோ :
இந்த டெக்ஸ் வில்லர் கதையை எழுதியவர் கிளாடியோ நிஸ்ஸி 1938ல் அல்ஜீரியாவில் 1981 முதல் பானெலி குழுமத்தில் இணைந்த இவர் 1983 முதல் 225 டெக்ஸ் கதைகளை எழுதியிருக்கிறார். CID ராபினை உருவாக்கியவரும் இவரே.  (தகவல் S .விஜயன் )
Paradesi with Vijayan

இந்தக் கதையின் ஓவியர் மேன்ஃபிரட் சமர். 1933-ல் ஸ்பெயினில் பிறந்த இவர் ஐரோப்பாவின் பல முன்னணி நிறுவனங்களில் பணியாற்றியிருக்கிறார். டெக்ஸ் கதைகளுக்கு இவர் முதன் முதலில் வரைந்தது இந்தக் கதைக்குத்தான்.  
மெக்சிகோ பார்டரில் கடத்தப்பட்ட குழந்தைகளை டெக்ஸ் வில்லரும் கிட் கார்சனும் எப்படிக் கண்டுபிடித்து மீட்கின்றனர் என்பதுதான் கதை. கடினமான குதிரைப் பயணம், சாவின் விளிம்பில் எப்போதும் இருப்பது, திட்டமிட்ட சாகசங்கள், மிகப்பெரிய கொடூரமான நிறுவனத்தை இருவராய் நின்று  வீழ்த்துவது என்று பரபரப்புக்கு பஞ்சமில்லாத கதை. ஆரம்ப முதல் இறுதிவரை விறுவிறுப்பு சற்றுக்கூட குறையவில்லை.
நீதியின் நிழலில்:
இதனை எழுதியவர் டி.ஆன்டோனியோ வரைந்தவர் ஃபிவிப்புச்சி. தான் சின்னவயதில் இருக்கும்போது தங்கள் கிராமத்தில் நுழைந்த அமெரிக்கப்படை தங்கள் அன்னை, தம்பி உட்பட  மொத்த கிராமத்தினரையும் கொன்று குவித்து விடுகிறார்கள். அந்த முழு தாக்குதலையும் வழிநடத்தியவன் லாபார்ஜ் என்ற ஸ்கெனட் ஒருவன். இவன் நாய்களைப் பழக்கி மனிதர்களை குறிப்பாக செவ்விந்தியர்களை வேட்டையாடுபவன். அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பிய ஒரு செவ்விந்தியன் தான் வளர்ந்த பிறகும் தன் கிராமத்தலைவன் இட்ட கட்டளையை நிறைவேற்றி தேடியலைந்து  தன் நண்பனுடன் லாபார்ஜைக் கொல்ல விளைகிறான். அவன் கண்டுபிடித்தானா? பழி வாங்கினானா, இதில் வில்லர் எங்கே வருகிறார்? அடிபட்ட கார்சன் உயிர்பிழைப்பாரா? என்று சென்றும் கெளபாய் திரில்லர் இது.
வாங்கித்தான் படித்துப் பாருங்களேன். காமிக்ஸ் பிரியர்களுக்கு இது களிப்பான விருந்து. மற்றவர்கள் ஒருமுறை படித்தால்  டெக்ஸ் வில்லருக்கு வாசகராய் விடுவீர்கள்.
பானெலி குழுமம் வாழ்க, முத்து / லயன் காமிக்ஸ் குழுமம் வாழ்க, உங்கள் பணி தொடரட்டும், சிறக்கட்டும்.
-முற்றும்.
 


Thursday, May 7, 2020

கொரோனாவால் விளைந்த நன்மைகள்


கொரோனா பாதிப்பால்  பல தீமைகள் நடந்திருந்தாலும் எனக்கு  சில  நன்மைகளும்  கிடைத்தன .

எச்சரிக்கை :  தயவு செய்து என் மனைவியிடம் சொல்லிவிடாதீர்கள் (ரகசியம் பரம ரகசியம் ).
இந்தக்கணக்கு ஒரு மாதக்கணக்கு .
ஒரு  ஐடியாவுக்காக இந்திய மதிப்பையும்  பக்கத்தில் கொடுக்கிறேன் .

1) முதலில் கட்  ஆனது மெட்ரோ கார்ட்  செலவு       : $ 128.00  -   ரூபாய் 9728.00
2) கார் பெட்ரோல் செலவு                                                   : $ 100.00   -   ரூபாய் 7600.00
3)  ஈஸி   பாஸ் ( டோல்)                                                          : $ 100.00   -   ரூபாய் 7600.00
4) இன்சூரன்ஸ்  டிஸ்கவுன்ட் ( கார் ஓட்டாதனால்     : $ 100.00   -   ரூபாய் 7600.00
5) கார் வாஷ் செலவு ( டிப்ஸ் உட்பட )                             : $   35.00     - ரூபாய் 2660.00
6)  வெளியில் சாப்பிடும் செலவு                                        : $ 200.00   -   ரூபாய் 15200.00
7) ட்ரை கிளீனிங் ( வீட்டில் வேலை செய்வதால்)        : $  60.00    -   ரூபாய் 4560.00
8) ஷு பாலிஷ்  ( டிப்ஸ் உட்பட )                                          : $    6.00     -  ரூபாய்  456.00
9) மாலை நொறுக்குத்தீனி                                                    :  $   60.00    - ரூபாய் 4560.00
10) முடி வெட்டி சாயம் போட ( டிப்ஸ் உட்பட )              :  $    35.00     - ரூபாய் 2660.00
11) பலசரக்கு (பாதிக்கு மேல் மிச்சம் )                              :  $ 200.00   -   ரூபாய் 15200.00
12) வீடு கிளீனிங் (வெளியில் இருந்து வருவார்கள்):    $ 200.00    -   ரூபாய் 15200.00
13) பெடிகுயூர் (மாதம்  ஒரு முறை- டிப்ஸ் உட்பட)       :  $ 25.00   -      ரூபாய் 1900.00
14) பாத மசாஜ் ( மாதமிருமுறை-டிப்ஸ் உட்பட )           : $ 70.00    -     ரூபாய் 5320.00
15) பாடி மசாஜ் (மாதம்  ஒரு முறை- டிப்ஸ் உட்பட)       $  60.00   -      ரூபாய் 4560.00
16)ஷேவிங் ( வாரம் ஒரு முறையாக குறைந்ததால் : $   20.00   -      ரூபாய் 1520.00
17) ஷேரிங் கேப் ( 5X 4X 4)                                                         $80.00     -       ரூபாய் 6080.00

இன்னும் யோசித்தால் அதிகமாய்தான் வரும் .
ஆகமொத்தம்  மிச்சமானது :  $ 824      ரூபாய் 62624.00     அம்மாடியோய் நானே இவ்வளவு வருமென்று எதிர்பார்க்கவில்லை.
இது தவிர வெளி நாடுகள் பயணம் ஒன்றும்   இல்லை .இனிமேல் எப்போது போகமுடியும் என்றும் சந்தேகமாக இருக்கிறது .கடைசியாய் போனது , செப்டம்பரில் 2019 பிரான்ஸ் , இத்தாலி ( ரோம் , பீசா , வெனிஸ் ,பிளாரென்ஸ் -ஜஸ்ட் மிஸ்டு  கொரோனா  ) நவம்பர் மற்றும் ஜனவரியில் இந்தியா .
அட பரதேசி இப்படி சேமித்த பணத்தை    என்ன செய்கிறாய்?  என்று மகேந்திரன் கேட்பது காதில் விழுகிறது .
கீழ்க் கண்ட நல்ல காரியங்களுக்காக செலவு செய்தேன்  .   இன்னும்  செய்யலாம்  .
1) கூடலூரில்  இருக்கும் என்   சமூகப்பணிக்கு ( www.goodwillcdp.org )
2) மதுரையில் ஊரடங்கால் வாடும் ஏழை மக்களுக்கு சு.வெங்கடேசன் MP. மூலம் உதவி.
3) மதுரையில் அகால மரணமடைந்த என் வகுப்புத்தோழன் குடும்பத்திற்கு ஒரு சிறிய உதவி .

நண்பர்களே, நிச்சயமாய் நீங்களும் இப்படி சேமித்த பணத்தை ஏதாவது நல்ல செயல்களுக்கு பயன்படுத்தலாமே .

  இன்றைய கொரோனா நிலவரம்  May 7th, 2020)
 USA :                                                 New York
Total cases: 1266785.00                    333491
Total deaths: 74962                           25956

Monday, May 4, 2020

கொரானா வைரஸ் லாக் டவுன் சமாளிப்புகள்

பரதேசியின் கொரானா வைரஸ்  லாக் டவுன் சமாளிப்புகள்


காலை 8 மணி
ரூ: லேசா தலை வலிக்குது , கொஞ்சம் டீ  போட முடியுமா ?
ப: உனக்குத்தெரியாதா , எனக்கு பாலைப்பார்த்தாலே கொமட்டிட்டு வரும், இல்லைனா போட்டுத் தரமாட்டேனா ?
ரூ: (இந்த மனுசனால ஒரு பிரயோஜனமும் இல்லை)

காலை  11 மணி
ரூ: ஏங்க  சும்மாதான இருக்கீங்க , கொஞ்சம் காய்  வெட்டித்தறீங்களா ?
 ப :என்ன ரூத் , மறந்திட்டியா ?
ரூ: என்ன சொல்றீங்க ?
ப அப்பவே காய்கறியெல்லாம் மொத்தமா வாங்கி வெட்டி ஃபிரீஸ் பண்ணிட்டேன்னு  நீதானே சொன்ன ?
ரூ: (ஆமா இல்லைனாலும்.)

மதியம் 1 மணி
ப : என்ன ரூத் இன்னைக்கி  என்ன சமையல் ?
ரூ : கத்திரிக்காய் சாம்பாரும் ரசமும்
ப: (சாப்பிட்டுவிட்டு ), சாம்பார்ல கொஞ்சம் பெருங்காயம் தூக்கலா இருந்துச்சு , ரசத்தில் கொஞ்சம் கடுகு கருகிருச்சு ?
ரூ: குறை  சொல்லாட்டி உங்களுக்குத் தூக்கம் வராதே  ?
ப: மத்தபடி அப்பளம் , ஊறுகாயெல்லாம் நல்லாத்தான் இருந்துச்சு , என்ன ப்ராண்ட் ?
ரூ : பால் ,தயிர் , வெண்ணை சாப்பிடாமலே உங்களுக்கு இவ்வளவு கொழுப்பு எப்படி வந்துச்சு ?
ப: எனக்கு கொழுப்பெல்லாம் இல்லை, கொஞ்சூண்டு சுகர் மட்டும்தான் .மதியம் 2 மணி
ரூ : என்னங்க , பாத்திரம் எவ்வளவு சேர்ந்து போச்சு பாருங்க ? வீட்டிலே இருக்கீங்க கொஞ்சம்  கழுவித்தரக்கூடாதா ?
ப : என்னது பாத்திரம் கழுவனுமா ? ஏன் மார்ச் முதல் வாரம்தான் டிஷ் வாஷர் போட்டமே ? அதுல போட்டிரு
மகேந்திரன் : பரதேசி நீ ஒரு தீர்க்கதரிசிடா
ரூ: ஆமா அத எப்படி போடுறதுன்னு தெரியலையே ?நீங்க கொஞ்சம் வந்து பாருங்க ?
ப: அனிஷா , இங்க வந்து அம்மாவுக்கு டிஷ் வாஷர் போடச் சொல்லிக்கொடு
ரூ: (உட்கார்ந்த இடத்தை விட்டு நகர  மாட்டியே)

2 முதல் 5 மணி வரை தூக்கம் (மனைவிக்குத்தான்)  அப்பாடா எனக்கு கொஞ்சம் ஃபிரீ டைம்

மாலை 5 மணி
ரூ : காலையிலிருந்து இப்படியே பொழுதை போக்கிட்டு இருக்கீங்களே ?கொஞ்சம் வாக்யூம் போடுறீங்களா ?
ப : லொக் லொக் லொக்
ரூ: என்னங்க என்னாச்சு ? (கொரனோ வந்துருச்சோ)
ப: இந்த டஸ்ட் அலர்ஜி திரும்ப வந்துரிச்சுனு நினைக்கிறே ன்
ரூ: (எப்பவும் எதையாவது சொல்லி சமாளிக்கிறானே ?)

மாலை 9 மணி

ரூத் :ஏங்க ஒரு வேளை என்னைப்பிடிக்காமலே கல்யாணம் பண்ணிக்கிட்டீங்களோ ?
ப: 27 வருஷம் வாழ்ந்து ரெண்டு பிள்ளை பெத்து , பேரன் பேத்தி எடுக்கிற வயசில கேக்கிற கேள்வியா இது ?
ரூ : பின்ன ஏன் என்னப் பார்த்தா  விலகி விலகி போறீங்க?

ப : நான் நம்ம தலைவர்கள் சொல்றத கடைப் பிடிக்கிறேன்
ரூ : அது  என்னாது  ?
ப : சோசியல் டிஸ்டன்சிங்தான்
ரூத் : ( மைண்ட்  வாய்ஸ்) இவனுக்கெல்லாம் கல்யாணம் தேவையா ?
ப : ( மைண்ட்  வாய்ஸ்) ஸ் அப்பாடா ஒரு நாளைக்கடத்திட்டேன் , நாளைக்கு எப்படியோ கடவுளே ?Thursday, April 30, 2020

நியூயார்க்கில் வ(க)சந்தகாலம் :

நியூயார்க்கில் வ(க)சந்தகாலம் :


வீட்டுச்சிறையில்
வெகுகாலம் இருந்த நான் இன்று சற்றே
வெளியில் எட்டிப்பார்த்தேன்.

மண்ணில் புதைத்த கிழங்குகள்
மகிழ்ந்தே முகிழ்த்திருந்தன  !
அவற்றுக்குத்  தெரியும்
இது வசந்த காலம்  என்று

வீட்டின் முன்
காவல் தூண்கள் போல்
காத்து நின்ற என்னிரு அசோக மரங்கள்
கரும்பச்சையில் களிப்பாய்
காற்றில் அசைந்தன !
அவற்றுக்குத்  தெரியும்
இது வசந்த காலம்  என்று

இலை உதிர்த்து , சில கிளை உளுத்து
உச்சி வரை குச்சியாய் நின்றிருந்த
சாலை மரங்கள்
பச்சையை வெளித்தள்ளி
பரவசமாய்  இசைந்தன !

உருமாறி
பழுப்பேறிய  புற்கள்
 இளம்பச்சையில்
நிறம் மாறி
பச்சைப் போர்வையை
பதவிசாய்  விரித்திருந்தன !

புல்தரையில் மேல்
ஆங்காங்கே
நீல பாணட்டுகள்
ஒளிந்து பார்த்துக்கண்சிமிட்டி
ஒளிர்ந்தன

பட்டுப்போன
என் மனைவியின் ரோஜாச்செடிகள்
பட படவென உயிர்த்தெழுந்து
பசுமையாடை உடுத்தி
மொட்டுக்கள் வருவதற்கு
மெட்டுக்கள் பாடின !

மறந்துபோன ,
இசைபாடும்
இச்சைக்குருவிகள்
பறந்து வந்து மறுபடியும்'
படுக்கையறை ஜன்னலில்
பூமி எழுமுன்
பூபாளம் இசைத்தன!

இவற்றுக்கெல்லாம்  தெரியும்
இது வசந்த காலம்  என்று

ஆனால்
கொரானாவுக்கு தெரியவில்லையே .
இது  வசந்த காலம் என்று?

செய்தி வாசிப்பவள்
புன்னகை மாறாமல் சொன்னாள்
இன்றும் நியூயார்க்கில்
புது நோயாளிகள் நான்காயிரம்
புது இறப்புகள் நானூறு என்று !

இதற்கு  ஒரு
சாவு காலம் வந்தால் தான்
நமக்கு இனி எந்த காலமும்
இல்லையென்றால் இந்த
வசந்த காலமும் நமக்கு
கசந்த காலம்தான் !

வெளியே
வசந்த காலமென்றாலும் உள்ளுக்குள்
அசந்த காலமாய் நீளும் இந்நிலை
எப்போது மீளும்?

என்று தணியும் இந்த சுதந்திர தாகம்
என்று முடியும் எங்கள் அடிமையின் நேரம் !

பரதேசி ஆல்ஃபி
ஏப்ரல்  30,  2020