Tuesday, November 8, 2016

சீனாவில் பிறந்த புத்தாண்டு !!!!!!!


சீனாவில் பரதேசி -28

இதற்கு முந்திய பகுதியைப்படிக்க  இங்கே சொடுக்கவும்.
http://paradesiatnewyork.blogspot.com/2016/10/blog-post_31.html


நீ மிகவும் அதிர்ஷ்டசாலி,
நானா, எப்படி?:
இன்று என்ன நாள்?”
 ஐயோ கடல் கடந்து வந்த அந்நிய நாட்டில் தேதி கிழமைகள் எல்லாம் மறந்துபோய் சீன வரலாற்றில் மூழ்கி விட்டேனே.
இன்று டிசம்பர் 31 2015,ஆண்டின் கடைசி நாள்
ஆம் அதனால் நீ அதிர்ஷ்டசாலி.  
புரியவில்லை ஆண்டின் இறுதிநாளுக்கும் என்னுடைய அதிர்ஷ்டத்திற்கும் என்ன சம்பந்தம் ?.
இன்றைய நாள் புத்தாண்டின் முந்திய இரவு (New year Eve) என்பதால் டியான்மெனன்  சதுக்கம் மற்றும் சுற்றியுள்ள அனைத்து முக்கிய கட்டடங்களும் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஒளிரும். பார்க்க கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.  
தினமும் விளக்குகள் இருக்காதா?”
தினம் இருக்கும் விளக்குகள் வேறு. இன்றைய தினம் சீரியல் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு பூலோக சொர்க்கம் போல் ஜொலிக்கும். நீ பார்க்கத்தானே போகிறாய்?”
நியூ இயர் ஈவில் மட்டும்தான் இப்படியா?”
இல்லை, சீனக்கம்யூனிஸ்டின் நிறுவனநாள், மாவோவின் பிறந்த நாள் போன்ற வெகுசில முக்கிய நாட்களில் மட்டும்தான் விளக்கு அலங்காரம் இருக்கும். அதோடு இன்றைய நாளில் இன்னொரு சிறப்பு உள்ளது.
இன்னொரு சிறப்பா அது என்ன?”
டியன் மெனன் ஸ்கொயரில் இன்று இரவு 12 மணிக்கு புத்தாண்டு பிறக்கும்போது, வாண வேடிக்கைகளும் (Fireworks)நடக்கும்.
எனவே இதனைப் பார்ப்பதற்கென்று நாட்டின் பல பகுதியிலிருந்தும் வெளிநாட்டினரும் வந்து குவிவார்கள். சீனா பட்டாசுத்தொழிலில் உலகத்தின் முதலிடம் வகிப்பதால் இங்குநடக்கும் வாண வேடிக்கை மிகவும் சிறப்பு வாய்ந்தது.
பரவாயில்லை, நியூயார்க்கை இன்றிரவு நீ மிஸ் பண்ணமாட்டாய்? எப்படிச் சொல்கிறாய்?”
இல்லை, நியூயார்க்கில் இருந்தால் டைம் ஸ்கொயரில் இருந்திருப்பாய், புத்தாண்டை வரவேற்க. இங்கு டியன்மெனன்  ஸ்கொயரில் இருக்கிறாய். அவ்வளவுதான் வித்தியாசம்.
நான் டைம்ஸ் கோயருக்கு புத்தாண்டு இரவில் ஒருமுறை கூட போனதேயில்லை.

உண்மையாகவா? உலகம் முழுதும் மக்கள் இதற்காகவே வந்து கூடுவார்கள். நீ உள்ளூர்க்காரன் ஏன் ஒரு முறைகூட போகவில்லை?”.
ஒருமுறை கூட புத்தாண்டு தினத்தை அங்கு தொடங்கியதில்லை. ஏனென்றால் ஒவ்வொரு புத்தாண்டையும் நான் ஆலயத்தில் தான் துவங்கியிருக்கிறேன்
எத்தனை ஆண்டுகள் அங்கே இருக்கிறாய்?”
நான் நியூயார்க் வந்து 16 வருடங்கள் ஆகிவிட்டது.
ஒரு புத்தாண்டு இரவு கூட வெளியில் இருந்ததில்லையா?”
இல்லை பிறந்ததிலிருந்து ஒருமுறை கூட நான் வெளியில் இருந்ததில்லை. ஆலயத்தில் இருந்துதான் புத்தாண்டு பிறந்திருக்கிறது.
அப்படியென்றால் முதன்முறையாக சீனாவில் தான் வெளியே இருக்கப் போகிறாய்.
இல்லை இங்கேயும் அந்த நேரத்தில் ஆலயத்துக்குப்போக விருப்பம்.
பைத்தியமா உனக்கு, இங்கெல்லாம் அப்படி ஒன்றும் இருக்காது. இங்கிருந்து உலகத்தின் சிறந்த வாண வேடிக்கைகளை பார்த்துவிட்டு உன் ஹோட்டலுக்கு நடந்தே சென்றுவிடலாம்.
ஐயையோ அப்ப இத்தனை வருடங்களாக நான் கடைப் பிடித்தது வீணாகிவிடுமே
ஒன்றும் கவலைப்படாதே, நாளைய தினம் புத்தாண்டு தினத்தில் உன்னை ஆலயத்திற்கு கூப்பிட்டுப் போகிறேன்.
நன்றி லீ, அப்படி என்றால் நீயும் என் கூட இருப்பாயா?”
இல்லை ஆல்ஃபி நேற்று போலவே ஒரு ஏழு மணிவரை உன் கூட இருந்து விட்டு வீட்டுக்குப் போய் நாளைக்கு வருகிறேன். உனக்கு எப்போது மறுபடியும் பயணம்? “
ஜனவரி 1ஆம் தேதி இரவு அதாவது நாளை நள்ளிரவில் இலங்கை செல்கிறேன். இலங்கையில் உள்ள கொழும்பில் ஐந்து நாள் அதன்பின் இந்தியா செல்கிறேன்.
உன்கூட இலங்கை வருவதற்கு ஆசையாயிருக்கிறது. ஆனாலும் என் குடும்பச் சூழலில் இப்போது வரமுடியாது. சரி ஆல்ஃபி  நான் கிளம்புகிறேன். ஜாக்கிரதை பத்திரமாய் இரு. ஆனால் இங்கு ஒன்றும் பயமில்லை.
லீ கிளம்பிவிட நான் மீண்டும் வெளியே வந்தேன். குளிர் லேசாக இருந்தது. ஜாக்கெட்டை முற்றிலும் மாட்டிக் கொண்டு, காதடைப் பானையும், கையுறை களையும் அணிந்துகொண்டு அப்படியே நடந்தேன்.
அப்படியே சதுக்கத்தில் சில நிமிடங்கள் உட்கார்ந்து மக்களை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தேன். கொஞ்சம் கொஞ்சமாக ஏராளமான மக்கள் வரத்துவங்கினார்கள்.
Image result for new years eve 2015 light decoration in beijing

அப்படியே இருட்டாகத்துவங்கியது. இப்பொது பின்னல் இருந்த மாவோ மசூலியம், முழுக்கட்டிட உருவத்துக்கு இருந்த சீரியல் விளக்குகளால் ஜொலித்தது. அப்படியே ஒவ்வொன்றாக டியன்மெனன் சதுக்கத்தைச் சுற்றியுள்ள ஒவ்வொரு கட்டடமும் ஒளி பெறத்துவங்கியது.
எழுந்து நின்று ஒரு சுற்றுச் சுற்றிப் பார்த்தேன். தலை கிறுகிறுத்துப் போனது. அந்த இடமே ஒளி வெள்ளத்தில் மிதந்தது. சதுக்கத்தில் இருந்த நினைவுத்தூண், என்முன்னால் சிறிது தூரத்தில் இருந்த விலக்கப்பட்ட நகரின் நுழைவாயில், என் வலதுபுறம் இருந்த பிரம்மாண்ட மியூசியம், அதன் அருகில் இருந்த அரசு அலுவலகம், மாவோ மசூலியத்தின் பின் உள்ள ஜியான்மெங்கின்  சின்ன வாயில், இடதுபுறம் இருந்த சீனக் கம்யூனிஸ்ட் அலுவலகம், பார்லிமென்ட் கட்டிடம் என்று அற்புதமாக காட்சியளித்தது. அப்படியே ஒரு சுற்று சுற்றி வரலாம் என கிளம்பினேன். பல மைல்கள் இருக்கும் பிரமாண்டமான சுற்றில் நடந்து வந்தேன்.
Courtesy : The Beijing Rerpoter 
லீ  சொன்னது உண்மைதான். இந்த மின்விளக்கு அலங்காரம் கண் கொள்ளாக் காட்சி. சில நாட்களில் மட்டும் என்றால் நான் அதிர்ஷ்ட சாலிதான். சீனாவின் பெருமை, உயர்வு, முன்னேற்றம் ஆகியவை அந்த விளக்குகளில் ஒளிந்திருந்தன.
சாரி சாரியாகச் சென்ற மக்கள் நீண்ட வரிசையில் பார்லிமென்ட் கட்டிடத்தில் நுழைந்து கொண்டிருந்தனர். என்னவென்று கேட்டபொழுது, அங்கு அன்று இரவு மிகப்பெரிய ஓபரா சிறப்பு இசை நிகழ்ச்சி நடைபெறுவதாகச் சொன்னார்கள். டிக்கட்டுகள் விற்றுவிட்டதாகச் சொன்னார்கள். ஆனால் ஒருவன் மிக அருகில் வந்து டிக்கட் வேணுமா என்று சீன மொழியில் கேட்டது எனக்கு நன்றாக விளங்கியது. கையில் சில டிக்கட்டுகளை வைத்திருந்தான்.

தொடரும்.

ஒரு முக்கிய அறிவிப்பு  :
குடும்பத்தில் நடக்கும் திருமண விழாவிற்காக நான் நவம்பரில் சென்னை வருகிறேன்.நவம்பர் 13 முதல் 25 வரை சென்னையில் இருப்பேன் .இடையில் நவம்பர் 20 முதல் 22 வரை மூன்று நாட்கள் மதுரையில் இருப்பேன். சந்திக்க விரும்பும் நண்பர்கள் ஈமெயில்( Alfred_rajsek@yahoo.com) அல்லது whatsupல் ( 12123630524) தொடர்பு கொள்ளவும் . அந்த நாட்களில் பதிவுகள் வெளி வராது என்றும் தெரிவித்துக்கொள்கிறேன் .ஆனால் பல புதிய பதிவுகளுடன் உங்களை டிசம்பரில் சந்திப்பேன் .நன்றி.


Friday, November 4, 2016

எம்ஜியாரின் காதல்கள்!!!!!!!
படித்ததில் பிடித்தது:- நான் ஏன் பிறந்தேன் பகுதி 2


இதற்கு முந்திய பகுதியைப்படிக்க  இங்கே சொடுக்கவும்.

http://paradesiatnewyork.blogspot.com/2016/10/blog-post_27.html

Image result for mgr with his wife


எம்ஜியார் வாழ்க்கையில் நடந்த பல சம்பவங்களை இந்தப்புத்தகத்தில் ஒளிவு மறைவு இல்லாமல் குறிப்பிடுகிறார். எதையும் மறைக்க வேண்டும் என்ற எண்ணம் துளிக்கூட இருந்ததாகத் தெரியவில்லை. ஒரு திறந்த புத்தகமாக என் வாழ்க்கை இருக்க வேண்டுமென்றுதான் அவர் நினைத்திருக்கிறார்.

அதில் அவருடைய காதல் மற்றும் கல்யாணங்கள் குறித்த காரியங்கள் ஆச்சரியமூட்டின.

Image result for MGR with his wife
MGR with Janaki


காதல் நம்பர்-1


எம்ஜியாருக்கு 15 வயதான போது வந்த முதல் காதலை இந்தப்புத்தகத்தில் குறிப்பிடுகிறார். ஒன்றாகக்குடித்தனம் இருந்த வேளையில் அவருடைய வீட்டின் இன்னொரு பகுதியில் வாழ்ந்த குடும்பத்தில் ஒரு 12 வயதுப் பெண் இருந்தாள். அவள் மீதுதான் அவருக்கு காதல் ஏற்பட்டது. அப்போது அவள் வயதுக்குக் கூட வரவில்லை என்பதையும் குறிப்பிடுகிறார்.

 அவளைப் பார்க்கும்போதெல்லாம் ஏற்படும் மனக் கிளர்ச்சியையும் உடலுணர்ச்சிகளையும் குறிப்பிட்டு பல நேரங்களில் தூக்கம் வராமல் தவித்ததை எழுதுகிறார். அந்தப் பெண்ணோடு பேச முயன்ற பல நேரங்களையும், ஓரிரு வார்த்தைகள் கூடப் பேச முடியாத சூழ்நிலையையையும் அப்போதிருந்த கட்டுப்பாடுகளையும் நினைக்கும்போது ஆச்சரிய மூட்டுகிறது.ஆனால் அவள் அவரை பலசமயங்களில் ஏறெடுத்தும் பார்க்கவில்லையாம்.

ஒரு சமயம் காதல் கடிதமொன்றை எழுதி வைத்து அதனைக் கொடுக்க பல முறை முயன்று பின்னர் ஒருநாள் கொடுத்தே விட்டார். அது பெரிய குழப்பத்தை ஏற்படுத்தி அதன்பின்னர் அவர்கள் வேறு இடம் சென்றுவிட நேர்ந்தது. அதன் பின்னும் பல நாட்கள் அந்தப் பெண்ணின் நினைவில் இருந்ததை குறிப்பிடுகிறார்.

காதல் நம்பர் 2


தன் வீட்டருகில் இருந்த ஒரு இளம் விதவைப் பெண் மேல் காதல் கொண்டு அவருக்கு  வாழ்வுகொடுக்க வேண்டும் என்று முயற்சிக்க, அவருடைய அம்மா அதற்கு பலமான தடைபோட்டு அந்தக் குடும்பத்தை அங்கிருந்து துரத்தி விட்டார்.


காதல் நம்பர் 3

தன் முதல் மனைவி தங்கமணி மேல் மிகுந்த அன்பும் காதலும் கொண்டிருந்தார். வேண்டா வெறுப்பாக பெண் பார்க்கச் சென்று, பார்த்தவுடன் பிடித்துவிட மிகவும் மகிழ்ச்சியோடு திருமணம் செய்து கொண்டார். இருவரும் இணைபிரியாத ஜோடிகளாய் அந்த சிறு வீட்டிலும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்தனர்.  ஏதோ ஒரு காரணமாக தங்கமணி சொந்த ஊரான கேரளாவுக்குச் சென்று  அங்கு திடிரென்று ஏற்பட்ட மாரடைப்பால் இறந்துபோனார். அந்த சோகத்தை எம்ஜியாரினால் தாங்கவே முடியவில்லை. இறுதிச் சடங்கில் கலந்து கொண்டு தனியாகவே இருந்து தற்கொலைக்கு முயற்சி செய்தார். அவருடைய அண்ணனால் அவரைப்பின் தொடர்ந்து அனுப்பப்பட்ட நபரால் காப்பாற்றப்பட்டார். சென்னைக்கு வந்தபின்னும் மற்றொரு  முறை ரயிலில் விழுந்துசாக முயற்சிக்கும் போது பின் தொடர்ந்து வந்த அண்ணன் சக்ரபாணியால் காப்பாற்றப்பட்டார். மனைவியின் ஞாபகம்  அவரை முழுவதும் ஆக்கிரமிக்க மீண்டும் திருமணம் செய்வதில் எந்த ஆர்வமும் இல்லாமல் இருந்தார்.

ஒரு முறைஇறந்துபோன மனைவியின் ஆவியோடு பேசுவதற்கு ஒரு இடத்திற்குப் போய் பின்னர் அது  ஏமாற்று வேலை  என்று கண்டு கொண்டு திரும்பினார்.

அவருடைய தாயும், அண்ணனும் அண்ணியும் பலமுறை எடுத்துச் சொல்லியும் மறு திருமணத்திற்கு மறுத்துவிட்டார். அவ்வளவு தூரம் மனைவி மேல் காதல் கொண்டிருந்தார்.


காதல் 4

கேரளாவில் சொந்த ஊருக்குச் சென்றிருந்த அம்மாவுக்கு சீரியஸ் என்று தந்தி வர, அலறியடித்து  எம்ஜியார் கிளம்பினார். அவருடைய தாய் மாமா வீட்டிற்குச்  சென்றபின்தான் தெரிந்தது அம்மா நலமாகத்தான் இருக்கிறார். தனக்குப் பெண் பார்த்து திருமணம் முடிக்கத்தான் அப்படி நாடகமாடினார் என்று. எனவே மிகுந்த கோபம் கொண்டு யாருடனும் பேசாமல் ரூமுக்குள்ளேயே முடங்கிக் கிடந்தார். பெண்பார்க்க எவ்வளவு வற்புறுத்தியும் போகவேயில்லை. ஆனாலும் மாமா, அம்மா, அண்ணன் ஆகியோரின் வற்புறுத்தலின் பேரில் சதாநந்தவதியைத் திருமணம் செய்தார். திருமண மேடையில்தான் முதன்முதலில் பெண்ணைப் பார்த்தார். தன் மனைவி மீது கொண்ட காதலால் அவரை அம்முக்குட்டி என்று செல்லமாக அழைத்தார்.

மற்றுமொரு குடித்தனம் ஆரம்பித்து  நன்றாகச் சென்று கொண்டிருந்த வேளையில், சதாநந்தவதியை காச நோய் தாக்க, அவர் படுக்கையில் விழுந்தார். அந்த சமயங்களில் தான்பட்ட அவஸ்தைகளை வெளிப்படையாக விவரிக்கிறார். மனைவி இருந்தும் பிரம்மச்சாரியாக உடலுறவு இல்லாமல் தவித்த காலத்தை சோகத்துடன் விவரிக்கிறார்.

ஆனாலும் அவரைக் கண்ணும் கருத்தாக பல மருத்துவர்களை வைத்து தனது சக்திக்கு மேற்பட்ட ராஜ வைத்தியம் செய்தார்.


காதல் நம்பர் 5

Image result for MGR with his wife


தன்னுடன் நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்யப்பட ஜானகியைப் பார்த்ததும் எம்ஜியாருக்கு ஏதோஒரு துடிப்பு, காதலில் விழுந்தார். ஆனால் அதில் மூன்று சிக்கல்கள்.

1.     ஜானகி ஒரு ஒப்பந்தம் மூலம் எளிதில் மீள முடியாமல் இருந்தார்.

2.    எம்ஜியாரின் மனைவி சதாநந்தவதி உயிரோடு இருந்தார்.இருதார மணச்சட்டம் விரைவில் வரவிருந்தது.

3.    ஜானகிக்கு இளவயதில் மணமாகி ஒரு பையனும் இருந்தான். அவர்தான் சுரேந்திரன். இதனை எம்ஜியார் குறிப்பிடவில்லை.

ஜானகிக்கு எம்ஜியாரைவிட அதிக படங்கள் கையிலிருந்தது அதோடு எம்ஜியாரை விட பலமடங்கு அதிக சம்பளமும் கிடைத்தது. என்றாலும் எம்ஜியாரின் காதலை அவர் ஏற்றுக்கொண்டதை சிலாகிக்கிறார்.

ஜானகியின் சிக்கல்களை ஒவ்வொன்றாக உடைத்து ஆனந்தவிகடன் அதிபர் SS. வாசனின் உதவியோடு கோர்ட்கேசை ஜெயித்து இருதார மச்சட்டம் வருவதன் முன் ஜானகியை கரம்பிடித்தார் .ஒரு கட்டத்தில்  ஜானகியைக் கடத்தி தன் நண்பர் வீட்டில் சிலகாலம் பாதுகாத்தார். ஜானகி அதன்பின் நடிப்பதையும் விட்டு விட்டார்.
Image result for MGR with his wife
MGR with Janaki


முதலில் சதானந்தவதி எதிர்த்தாலும் பின்னர் ஏற்றுக் கொண்டார். படப்பிடிப்பில் நடந்த விபத்தில் கால் முறிந்து எம்ஜியார் படுக்கையில் இருந்தபோது இரண்டு பேரும் சேர்ந்தே அவரைக் கவனித்துக் கொண்டனர்.

பின்னர் சதானந்தவதி  இறந்துபோக ஜானகி எம்ஜியாரின் மனைவியாக அவரின் இறுதிக்காலம் வரை கூட இருந்தார்.

ஜானகி  சில காலம் முதலமைச்சராக இருந்ததும்  அரசியல் விநோதம் 1972லேயே இந்த கட்டுரைகள் நின்றுபோயின. ஒரு வேளை தொடர்ந்து எழுதியிருந்தாலோ வேறு காதல்கள்  இருந்திருந்தாலோ அதையும் நிச்சயமாக எழுதியிருப்பார். ஆனால் அதன்பின் அவர் அதிமுகவை ஆரம்பித்து அரசியல் உச்சம் எய்தி தன் மரணம் வரை முடிசூடா மன்னராக இருந்தார் என்பதுதான் நமக்கெல்லாம் தெரியுமே.


- தொடரும்.


ஒரு முக்கிய அறிவுப்பு :குடும்பத்தில் நடக்கும் திருமண விழாவிற்காக நான் நவம்பரில் சென்னை வருகிறேன்.நவம்பர் 13 முதல் 25 வரை சென்னையில் இருப்பேன் .இடையில் நவம்பர் 20 முதல் 22 வரை மூன்று நாட்கள் மதுரையில் இருப்பேன். சந்திக்க விரும்பும் நண்பர்கள் ஈமெயில்( Alfred_rajsek@yahoo.com) அல்லது whatsupல் ( 12123630524) தொடர்பு கொள்ளவும் . அந்த நாட்களில் பதிவுகள் வெளி வராது என்றும் தெரிவித்துக்கொள்கிறேன் .ஆனால் பல புதிய பதிவுகளுடன் உங்களை டிசம்பரில் சந்திப்பேன் .நன்றி.