Monday, November 23, 2015

மோடியுடன் அத்வானி (அட கற்பனை உரையாடல் தாங்க)


அத்வானி: அரே ராம், எங்கடா போன?
ராம்: (அரைமணிநேரம் கழித்து) ம் சொல்லுங்க.
அத்வானி: கூப்பிட்டு எவ்வளவு நேரம் ஆச்சு ?.
ராம்: மனதிற்குள் (ஆமா சம்பளம் கொடுத்து மூணு மாசமாச்சு இதில கூப்பிட்டவுடனே வரணுமாம்) சரி சரி சொல்லுங்க.
அத்வானி: சரிசரி கோவிச்சுக்காத, செக்ரட்டரியைக் கூப்பிடு.
ராம்: எந்த செக்ரட்டரிய?
அத்வானி: அட என்னோட செக்ரட்டரியைக் கூப்பிடுப்பா
ராம்: (கிழவருக்கு ரொம்ப ஞாபக மறதியாப்போச்சு) ஐயா அவர் போய் ரொம்ப நாளாச்சு, மறந்திட்டீங்களா ?. சம்பளம் இல்லாம வேலை செய்ய என்னைப் போல அவன் கேனயனா?
அத்வானி: எப்படி இருந்தேன், எத்தனை பேர் காத்திட்டு இருப்பாங்க. எத்தனை IAS அதிகாரிங்க, போலீஸ், தொண்டர்படை, குண்டர் படை, எல்லாம் போயிட்டாங்களே. அட்லீஸ்ட் மோடிக்கு அப்புறமாவது நான் பிரதமர் ஆகலாம்னு நெனைச்சிருந்தேன் அதுல இந்த அமித்ஷா மண்ணைப் போடறானே.

ராம்: வயசானா, வாயை வெச்சுட்டு சும்மா இருக்கணும். பீகார்ல யார் ஜெயிச்சா, என்ன, தோத்தா என்ன பேசாம இருந்தா பிரச்சனை இல்லல்ல, மோடிஜிட்ட சொல்லி பென்ஷனாலும் வாங்கலாம். இல்லை அட்லீஸ்ட்  கவர்னர் பதவினாலும் வாங்கலாம்.
அத்வானி: சரிசரி மோடிக்கு போன் போடு.
ராம்: யாருக்கு?
அத்வானி: அதாண்டா நரேந்திர மோடிக்கு போனைப் போடு.
ராம்: ஐயா உங்களுக்குப் பைத்தியம் பிடிச்சிருச்சா, மோடிட்ட உங்களால பேசமுடியுமா?
அத்வானி: என்ன இருந்தாலும் என்னோட சிஷ்யப்பிள்ளைதானே கூப்பிடு கூப்பிடு.
ராம்: அதெல்லாம் சிஷ்யன் குருவை மிஞ்சி எவ்வளவோ நாளாயிருச்சு. அதோட நம்மகிட்ட இப்ப ஃபோன் இல்ல.
அத்வானி: என்னது ஃபோன் இல்லையா? ஏன் என்னாச்சு.
ராம்: யாருக்குப் பேசினாலும் ஒட்டுக் கேக்கிறாங்கன்னு நீங்கதான போட்டு உடைச்சீங்க.
அத்வானி: ஆமா ராம், ஆமா என் செல்போனை எங்க?
ராம்: அதத்தான் நீங்க  யூஸ் பண்ண முடியலயே, கை நடுக்கத்தில யாருக்குப் போட்டாலும் ராங் நம்பரா போகுதுன்னு சொன்னீங்கல்ல.
அத்வானி: அதில்லைப்பா, நான் யாருக்குப் போட்டாலும் அவங்களே எடுத்து ராங் நம்பர்னு சொல்லிட்டு வச்சிர்ராங்க. 
ராம்: அதான் தெரியுதில்ல, வாஜ்பாய் மாதிரி கம்முனு இருக்க வேண்டியதுதானே. அப்ப என்ன செய்றது?
அத்வானி: ராம் பையா (Bhaiya) உன் செல்போன்ல கூப்பிடுப்பா?
ராம்: என் செல்போன்ல, மோடியை, ம் விளங்கிரும்.
அத்வானி: இல்லப்பா இந்த ஒருவாட்டி உதவி செய்ப்பா.
ராம்: சரிசரி மோடிஜிட்ட பேசி என் சம்பளத்திற்கு ஏதாவது ஏற்பாடு செய்ங்க. இல்லைனா எதிர்க்கட்சில சேர்ந்து  எல்லா ரகசியத்தையும் சொல்லிடுவேன்.
அத்வானி: எதிர்க்கட்சினா காங்கிரசா?
ராம்: இல்லை அமித்ஷா கட்சி.
அத்வானி: ஐயையோ நெலமையைப் பாரு உங்கட்சியிலேயே எதிர்க்கட்சி ஆயிப்போச்சே நான்கூட காங்கிரஸ்க்குப் போயிடுவியோன்னு நெனச்சேன்.
ராம்: ஏன் நான் காங்கிரசுக்குப் போகணுமா?
அத்வானி: இல்லை இதைவிட அங்க கொஞ்சம் பெட்டரா இருக்கு. அடுத்த பிரதமர் பதவி கொடுத்தா, போலாம்ல.
ராம்: மனதுக்குள் (கிழவருக்கு இந்த பிரதமர் ஆசை இன்னும் போகலை)
(ஒரு நாள் முழுதும் டிரை பண்ணி, பத்து நாடுகளுக்குப் போன் செய்து, பத்து செக்ரட்டரிகளைக் கடந்து, மோடியின் PA -வை லண்டனில் பிடித்தார்கள்).
மோடியின் PA : யாரு அத்வானி பேசணுமா? எந்த அத்வானி?
ராம்: (அடப்பாவிகளா, அத்வானியையே மறந்துட்டீங்களா? அத்வானி இல்லேன்னா BJP யே இல்லைடா. அது சரி காந்தியவே மறந்தவங்கதான நீங்க) ஆமய்யா, லால் கிருஷ்ணசந்த் அத்வானிதான் மோடிட்ட பேசனும்.
மோடியின் PA: மோடி பிஸியா இருக்கார். இப்ப அவரை யாரும் டிஸ்டர்ப் பண்ண முடியாது.
(மோடி, ராணி எலிசபெத்தை பார்ப்பதற்காக எப்படி நடக்க வேண்டும், எப்படி குனிய வேண்டும், எப்படி வணக்கம் போட வேண்டும் என்ற டிரஸ் ரிகர்சலில் இருந்தார்.
ராம்: அத்வானி அவர் குருன்னு சொல்லுங்க. 
மோடியின் PA: ஐயா, அத்வானி லைனில்  இருக்காரு.
மோடி: எந்த அத்வானி?
ராம்: (காதில் விழ) இது நான் எதிர்பார்த்தது தான்.
மோடியின் PA: ரொம்ப அவரசமாம், தலைபோற விஷயம்னு சொல்றாரு.
மோடி: எதுவா இருந்தாலும் அமித்ஷாட்ட பேசச் சொல்லு.
மோடியின் PA: இல்ல அதுதான் பிரச்சனைன்னு சொல்றாங்க. மிகமிக மிக அவசரம்.
மோடி: தொப்பையைத் தடவிக் கொண்டே, பல நாட்டு  விருந்தைச் சாப்பிட்டு தொப்பை பெருகிப் போச்சு. இந்த யோகாவை செய்ய குனியவே முடியல. சரிசரி லைனைக் கொடு.
லைனில் அத்வானி வர.

மோடி: குருப்பிரம்மா, குருவிஷ்ணு குருதேவோ நமஹ பிரணம் அத்வானி ஜி.
அத்வானி: (ஆஹா என்ன நடிப்பு?) மோடி, நேரா  விஷயத்துக்கு வர்றேன். நான் சொன்னேன்ல அமித்ஷாவை நம்பாதேன்னு.
மோடி: யாரு அமித்ஷாவா, நோநோ, அவன் நான் வளத்தவன், என்னால முன்னுக்கு வந்தவன், என்னோட தளபதி. எனக்கு எதிரா ஒரு துரும்பைக் கூட கிள்ளி போடமாட்டான்.
அத்வானி: உன்னையும் நான் அப்படித்தான நெனைச்சு ஏமாந்தேன்.
மோடி: சரிசரி பழசை விடுங்க, என்ன  நடந்தது ?.
அத்வானி: என்ன நடந்ததா? உனக்குத்தான் நாட்டு நடப்பு ஒண்ணுமே தெரியலயே, உள்ளூர்ல இருந்தாத்தான. பேருக்குத்தான் பிரதம மந்திரி ஆனா செய்யறது வெளிவிவகார மந்திரி, இங்க உள் விவகாரம் பெரிசாப் போச்சு.
மோடி: ரொம்ப பேசினீங்கன்னா அமித்ஷாட்ட சொல்லி கட்சியை விட்டு எடுத்துடுவேன்.
அத்வானி: (இப்ப மட்டும் என்னா வாழுது?) முதல்ல அமித்ஷாட்ட இருந்து உன்னைக் காப்பாத்திக்க.
மோடி: அப்படி என்னதான் நடந்தது?
அத்வானி: அறுபது வயசுக்கு மேல அரசியல்வியாதிகள் எல்லாம் ரிட்டயர் ஆகணுமாம்.
மோடி: ஹாஹா 60 வயசுக்கு மேல தான, அது உங்களுக்கு, முரளி மனோகர் ஜோஸி, யஸ்வந்த் சின்கா ஆகியோருக்கு.
அத்வானி: அமித்ஷா வயசு என்ன?  
மோடி: 54, அவனுக்கு நீண்ட எதிர்காலம் இருக்கு.
அத்வானி: அப்ப உன் வயசு?
மோடி: 64
அத்வானி: இப்ப புரியுதா அவன் ஒனக்குத்தான் உலை வைக்கிறான்.

மோடி: அட ஆமா, ஐயையோ, PA உடனே இந்தியாவுக்குக் கிளம்புப்பா.
முற்றும் 

Thursday, November 19, 2015

என் மனைவியின் நாய்க்குட்டி - பகுதி 2

man brushing puppy

அன்று மாலை அலுவலகம் முடித்து வீட்டினுள்ளே நுழைந்தவுடன் நான் கேட்ட முதல் கேள்வி, "ஜீனோ எங்கே ?”. என் மனைவி என்னைக்கடுப்புடன் முறைத்தாள். பின்ன இருக்காதா காலையில் 8 மணிக்கு வீட்டைவிட்டு கிளம்பி, மாலையில் 7 மணிக்கு திரும்ப வரும்போது,  எனக்கு என்ன பிடிக்குமென்று பார்த்துப் பார்த்து சமையல் செய்து முடித்துவிட்டு வீட்டில் போரடித்துக் கொண்டு வெகுநேரம் காத்திருந்து கணவன் வந்தவுடன் நாய்க்குட்டியைக் கேட்டால் மனைவிக்கு எப்படி இருக்கும்.
வீட்டில் பொழுது போக்க டிவி கூட இல்லை. வீட்டில் போனும் இல்லை, செல்போனும் இல்லை நடுவில் பேசக்கூட முடியாது.
ஜீனோவை அங்குமிங்கும் தேடினேன். எங்கும் இல்லை. மறுபடியும் வந்து என் மனைவியைப் பார்த்துக் கேட்டேன் "ஜீனோ எங்கே, பக்கத்தில் வீட்டில் இருக்கிறதா?”. அவள் ஒன்னும் பதில் சொல்லவில்லை.
ஜீனோ எங்கே போயிருக்கும்? சொல்லப்போனால் என் மனைவி அதை எடுத்துக்கொண்டு வந்தாலும், அது என்னிடம் அதிகமாக ஒட்டிக் கொண்டது. அலுவலகம் முடித்து வீட்டுக்கு வந்தால் மேலும் கீழும் தவ்வி காலில் முட்டி மோதி நக்கும். படுக்கும்போது கூட இப்போதெல்லாம் கால்மாட்டில் படுத்தாலும், சிறிது நேரம் கழித்து எனக்கும் என் மனைவிக்கும் நடுவில் வந்து படுத்துவிடும். சில நாள் தயங்கினாலும், இப்போது நானும் அதைக் கையில் எடுத்துக் கொஞ்ச ஆரம்பித்துவிட்டேன்.
வீடே வெறிச்சென்றிருந்தது.  பக்கத்து வீட்டு அக்காவிடம் விசாரித்தேன். அவர்கள் சொன்னார்கள். "ரூத் உங்கள்ட்ட சொல்லலியா, அந்த நாயைக் கொண்டு போய் பக்கத்து பார்க்கில விட்டுட்டு வந்துருச்சு" எனக்குக் கோபம் வர, வீட்டுக்கு வந்து, "ஏன்  குழந்தையைக் கொண்டுபோய் தெருவில விட்ட ?" என்று கேட்டேன்.

"ஆமா பொல்லாக் குழ்ந்தை, நாயைப்போய் குழந்தைன்னு சொல்லிட்டு"
"நான் வேணான்னுதான்னே சொன்னேன் நீதானே எடுத்துட்டு வந்த"
"ஆமா நாந்தான் எடுத்துட்டு வந்தேன். அதனால நானே கொண்டுபோய் விட்டுட்டு வந்துட்டேன்".
" ஏன் என்ட்ட ஒரு வார்த்தை சொல்லலை ?"
"என்ன இது கொடுமையா இருக்கு, தெரு நாய்தானே அதான் தெருவில விட்டுட்டு வந்துட்டேன்"
"அதான் ஏன்னு கேக்கிறேன்"?
"அது அங்கங்க உச்சா போவுது, பேண்டு வைக்குது அதெல்லாம் யார் சுத்தம் செய்றது, நீங்க காலைல போனா சாயந்திரம்தா வர்றீங்க".
அவ சொல்றது உண்மைதான், அதைக் கொஞ்சம் பழக்கனும்.   ஆஃபிசில கூட இதைப்பத்தி மேடம்கிட்ட பேசினேன். அதைப்பழக்கறதுக்கு ஆள் இருக்கிறதைப் பத்தியும், புளுகிராஸ் அமைப்பு உதவி பண்ணுவதையும் பற்றி நிறைய தகவல்கள் சொன்னாங்க. அவங்க கிட்ட ஒரு டாபர்மேன் இருக்குது.
"அத வாக்கிங் கூப்பிட்டுப்போய் பழகனும்"
"அதெல்லாம் என்னால முடியாது"
"அப்ப எடுத்த இடத்திலேயே கொண்டுபோய் விட்டுருக்கலாம்ல"
பேசிக் கொண்டு இருக்கும்போது, கதவருகில் லேசாக முனகல் சத்தம் கேட்டது. ஓடிப்போய் திறந்தால் ஜீனோ. என்னைப்பார்த்ததும் காலில் விழுந்து குட்டிகரணம் போட்டு ஏற முயற்சி செய்தது. என் மனைவியைக் கண்டு கொள்ளவில்லை. என் மனைவி அதீத வெறுப்புடன் பெட்ரூமுக்குள் புகுந்து கொண்டாள். என் பேண்ட் எல்லாம் சேறு ஆகிவிட்டதைக் கூட கண்டு கொள்ளாமல், அதனை எடுத்துக் கொண்டு பாத்ரூமில் போய் குளிப்பாட்டினேன். ஒரு நாயைக் குளிப்பாட்டியது அதுவே எனக்கு முதல் முறையும் கடைசி முறையாகவும் இருந்தது.
பசியால் துடித்துக் கொண்டிருந்த ஜீனோக்கு பாலை ஊட்டிவிட்டேன். என்ன இது, எப்படி இவள் கொஞ்சங் கூட இரக்கமில்லாமல் ஒரு சிறு குட்டியைத் தெருவில் கொண்டுபோய் விடுவாள். அவளைப்பற்றிச் சரியாகத் தெரியாமல் அவசரப்பட்டு விட்டோமோ என்று நினைத்தேன்.
என் மனைவி பெட்ரூமை விட்டு வரவில்லை. நானும் கண்டுகொள்ளாமல் ஹாலில் சோஃபாவில் உட்கார்ந்து ஒரு புத்தகத்தை எடுத்துப் படித்துக் கொண்டிருந்தேன். 9 மணிக்கு பசியெடுத்து, என் மனைவியை ஓரிரு முறை கூப்பிட்டுப் பார்த்தேன். ம்ஹீம் வருவதாகத் தெரியவில்லை. பேசாமல் நானே சாப்பாட்டை எடுத்து, வைத்து சாப்பிட்டுவிட்டு மறுபடியும் சோஃபாவில் உட்கார்ந்தேன். எனக்குப்பிடித்த வெஜிடபிள் புலாவும், குருமாவும், முட்டைப் பொரியலும் இருந்தது. அதுதவிர வெள்ளை சாதமும், அவளுடைய சிக்நேச்சர் ரசமும் இருந்தன. நல்ல பசியில் ஒரு பிடிபிடித்து விட்டேன். பாவம் எனக்காக பார்த்துப் பார்த்து செய்திருக்கிறாள்.
ஜீனோ ஒரு பந்தை உருட்டி விளையாடுவதும் பின்னர் என் மேல் வந்து உரசுவதுமாக உற்சாகமாக விளையாடிக் கொண்டிருந்தது.
மணி பத்தானது என் மனைவி வெளியே வருவது போல் தெரியவில்லை.
நான் உள்ளே போய் எழுப்பினேன். அவள் தூங்கியிருக்கவில்லை. ஆனால் லேசாக விசும்பிக் கொண்டு இருந்தாள். நான் கொஞ்சம் பயந்துவிட்டேன்.
அப்புறம் அவளை சமாதானப்படுத்தி சாப்பிட வைப்பதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது. என்னை நம்பி வந்த சின்னப் பெண், எப்படி பட்டினியாய் விடமுடியும்.
பேசாமல் சாப்பிட்டுவிட்டு படுத்துத் தூங்கிவிட்டாள். எனக்கு வெகுநேரம் தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தேன். காலடியில் ஜீனோ. கடைசியாக ஒரு முடிவெடுத்த பின் நல்ல தூக்கம் வந்தது.
காலையில் நான் எழுந்தபோது, சமையலறையில் சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது. என் மனைவி எனக்கு முன் எழுந்து அரைத்துக்  கொண்டிருக்கும் வெங்காய சட்னி  மணம் காற்றில் வந்தது.
நான் மடமடவென்று ரெடியாகி, ஜீனோவை எடுத்துக் கொண்டு பைக்கில் சென்று அந்தப் பெட்டிக் கடைப் பெண்ணிடம் மன்னிப்புக் கேட்டுவிட்டு  விட்டு வந்தேன். ஒரு வாரம் மனதை ஏதோ நெருடிக்கொண்டே இருந்தது .அதன் பின் ஜீனோவைப் பார்க்கவேயில்லை. அதன்பின் எனக்கு ரெண்டு பெண்குழந்தைகள் பிறந்தும் என் மனைவி முன்னால் அவர்களை அதிகம் கொஞ்சுவதில்லை.
முற்றும்


Tuesday, November 17, 2015

என் மனைவியின் நாய்க்குட்டி - பகுதி 1.

Add caption
"நிறுத்துங்க நிறுத்துங்க", என்று சொல்லிக்கொண்டே பைக்கில் இருந்து குதித்துவிட்டாள் என் மனைவி ரூத். நான் கிட்டத்தட்ட விழுந்துவிட்டேன். ஆனாலும் சமாளித்து பிரேக் போட்டு நிறுத்தி திரும்பிப்பார்த்தால், என் மனைவி கையில் ஒரு அழகான நாய்க்குட்டி.
அப்போதுதான் எங்களுக்கு திருமணம் ஆகியிருந்தது. திருவான்மியூரில் தனிக்குடித்தனம். பழைய மகாபலிபுர ரோட்டில் உள்ள சோழிங்க நல்லூரில் இருக்கின்ற MTL என்ற எலக்ட்ரானிக் இன்ஸ்ட்ருமென்ட்ஸ் கம்பெனியில் பெர்சனல் ஆஃபிசர் வேலை (Personnel officer). அடையாருக்கு அடிக்கடி வருவோம். சில நேரத்தில் மாலை வேளைகளில் அடையாறு பேக்கரிக்கு வந்து கேக், தின்பண்டங்களை வாங்கிச்செல்வோம். அங்கு சமோசாபஃப் போன்றவை கூட மிக நன்றாக இருக்கும். அப்படி வந்துவிட்டு திரும்பிச் செல்லும்போதுதான் இது நிகழ்ந்தது.
அந்த நாய்க்குட்டி குறுகுறுவென்று பார்த்துக் கொண்டு முனகிக் கொண்டிருந்தது. வெள்ளை நிறத்தில் கொழு கொழுவென்று இருந்த உடம்பில் ஒரு சில இடங்களில் சாம்பல் நிற தீற்றுக்கள். பிறந்து சில தினங்களே ஆகியிருக்கும் போல் தெரிந்தது. சாதாரண மாங்கிரல் (Mongrel) தான் ஆனால் அழகாய் இருந்தது.
பேக்கரியிலிருந்து வெளிவந்து பைக்கை எடுத்து ஸ்டார்ட் செய்து சில அடிகள் போவதற்குள் இந்த குட்டி நாய் இருபுறமும் அசைந்து அசைந்து தன்னுடம்பைத் தூக்க முடியாமல் சிற்றோட்டம் ஓடி குறுக்கே வந்ததை லாவகமாக தவிர்த்து, பைக்கைத்திருப்பும்போது அதனைப் பார்த்துவிட்ட என் மனைவி, தவ்விக்குதித்து அதனைக் கையில் எடுத்துவிட்டாள். என்னுடைய கவாசாக்கி பஜாஜ் பைக்கை ஓரத்தில் நிறுத்திவிட்டுப் பார்த்தேன்.
"ஏங்க இதை நாம வீட்டுக்கு எடுத்துப்போலாமா", என்று கேட்டாள்.
Add caption
ஆனால் அப்படி எடுத்துப்போக முடியுமா? யாருடைய நாயோ இது, திருடிச்செல்வதைப் போல் எப்படி எடுப்பது? தயங்கி நின்று கொண்டிருக்கும்போது, பக்கத்தில் இருந்த பெட்டிக்கடையில் இருந்த பெண், "இந்த நாய்க்குட்டி வேணுமா?" என்று கேட்டாள், "ஆமாம்" என்று என் மனைவி சொன்னதும் "தாராளமாக எடுத்துச் செல்லுங்கள்", என்றாள். அதோடு அந்தக் குட்டியின் தாய், அந்தப் பெட்டிக்கடையின் பின்னால்தான் 2 பெண்குட்டி 3 ஆண்குட்டிகள் என ஐந்து குட்டிகள் போட்டதாகவும் சொன்னாள். அந்த தாய் நாய் அடுத்த நாளே வண்டியில் அடிபட்டு செத்துப் போனதாகச் சொன்னாள். "அப்புறம் நான்தான் எல்லாத்துக்கும் பால் ஊத்தி வளர்த்தேன். ஆண் நாய்க்குட்டிகளை போட்டிபோட்டுட்டு எடுத்துப் போயிட்டாங்க ஆனா பெண்குட்டிகளை எடுக்க யாருமில்லை. அந்த ரெண்டு பெண்குட்டிகளில் ஒண்ணுதான் இது", என்றாள்.
"அப்ப இன்னொன்று எங்கன்னு" கேட்டேன் ஆவலை அடக்க முடியாமல். "அது என்ட்ட இருக்கு”,ன்னு சொல்லி கவிதான்னு கூப்பிட்டாள். பின்னாலிருந்து ஒரு ஐந்து வயதுப் பெண், இன்னொரு நாய்க்குட்டியைக் கையில் தூக்கிக் கொண்டு வந்தாள். அந்த இரண்டும் ஒரே அச்சில் வார்த்தது போல் ஒரே மாதிரி இருந்தன.
நாய்களில் கூட ஏன் பெட்டைக்குட்டிகளை வேணான்னு சொல்கிறார்கள் என்று தெரியவில்லை .காரணம்   தெரியாமலேயே நானும் “பெட்டை நாய் வேணாம்”னு என் மனைவிட்ட சொன்னேன். சொல்லிவிட்டு வண்டி பக்கத்தில் நகர, என் மனைவியும் நாய்க்குட்டியை ஏக்கத்தோடு கீழே இறக்கிவிட்டுவிட்டு வந்தாள். என்ன ஆச்சரியம் அந்த நாய்க்குட்டி என் மனைவி கூடவே பின்னால் ஓடிவந்துவிட்டது.
அவள் என்னைக் கெஞ்சும் முகத்தோடு பார்க்க, நான் நாயைப்பார்க்க, நாய் எங்கள் இருவரையும் பார்த்து முனகி, செல்லக்குரைப்பு குரைத்தது. புதுமனைவி சொல்வதைத் தட்டமுடியுமா? (இப்போது பழைய மனைவி ஆனாலும் தட்டமுடியவில்லை என்பது வேறு கதை !!!!!) சரியென்றதும், அவள் முகம் அபரிமிதமாக மலர்ந்தது இப்போதும் ஞாபகம் இருக்கிறது.
பெட்டிக்கடைப் பெண்ணும் "எடுத்துட்டுப் போங்க, அழகான நாய்"  என்று சொல்ல, எடுத்துக் கொண்டு வீடுவந்து சேர்ந்தோம். அப்புறம்தான் அதை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று தெரியவில்லை.
பால் ஊற்றி வைத்தாள், குடிக்கவில்லை. சாதம் வைத்தாள் சாப்பிடவில்லை. எங்கள் இருவருக்குமே எந்த முன் அனுபவமும் இல்லை. அதன்பின் என் மனைவி பக்கத்து வீட்டு அக்காவைக் கூப்பிட்டுக் கொண்டு வந்தாள்.
பிறகு, அந்த அக்கா, என்னன்னவோ பண்ணிப் பார்த்துவிட்டு ம்ஹீம் தெரியல, என்று சொல்லிவிட்டுப் போய்விட்டாள். நான் உடனே கடை வீதிக்குச் சென்று அலைந்து திரிந்து, நாய் பிஸ்கட் வாங்கி வந்து கொடுத்தேன். ம்ஹீம் அதையும் சாப்பிடவில்லை. அதன்பின்னர் நாங்கள் இருவரும் முடிவு செய்து, நாய்க்குட்டியை திரும்பவும் எடுத்துக்கொண்டு அந்தப் பெட்டிக்கடைப் பெண்ணிடமே சென்றோம்.
அந்தப்பெண் சொன்னாள், “தாய் நாய் செத்துப்போனதால் இந்த குட்டி நாயை நாங்கள் செல்லமாக வளர்த்துவிட்டோம். அது ஃபீடிங் பாட்டிலில்தான் பால்குடிக்கும்”, என்றாள்.
நானும் என் மனைவியும் வரும் வழியில் ஃபீடிங் பாட்டில் வாங்கிக் கொண்டுவந்து பாலை புகட்டினால், கால் லிட்டர் பாலை உறிஞ்சி தள்ளிவிட்டது. பாவம் பசி போலிருக்கு.
சுஜாதாவின் ஒரு நாவலில் வரும் கேரக்டரை அதற்கு பெயராக வைத்து ஜீனோ என்று கூப்பிட்டேன். ஜீனோ மிகவும் சுட்டியாக இருந்தது, எங்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. வீட்டில் தனியாக இருக்கும் என் மனைவிக்கு ஜீனோ துணையாக இருப்பதை எண்ணி நான் மகிழ்ந்தேன்.
நான் அலுவலகம் முடிந்து வந்தவுடன் என் காலைச்சுற்றி வந்து கால்வழியே ஏற முயற்சிக்கும். எனக்கு நாய்களைக் கொஞ்சிப் பழக்கமில்லை  என்பதால் தூக்கமாட்டேன்.
என் மனைவி அதற்கு கொஞ்சம் கொஞ்சமாக சாப்பாடும் பழக்கிவிட்டாள்.
ஜீனோ வந்து ஒரு வாரமாகிவிட்டது. அதுவும் நன்கு பழகிவிட்டது. ஜீனோ என்று கூப்பிட்டால் எங்கிருந்தாலும் குடுகுடுவென்று ஓடிவரும். படுக்கையில் கூட எங்கள் அருகில் காலடியில் படுத்துக் கொள்ளும். குறிப்பாக என்னோடு ரொம்பவும் ஒட்டிக்கொண்டது.
நன்றாக கொழு கொழுவென்று வளர்ந்து வந்தது. ஒரு நாள் மாலை வீட்டிற்கு வந்தால் ஜீனோவைக் காணோம்.

- தொடரும்

Thursday, November 12, 2015

கிளாஸ்மேட்டை லவ் பண்ணாதீங்க !!!!!!!!!!!!!!!

பள்ளியில் வரும் காதல் :
1.    முதல்ல காதல்னா என்னான்னு தெரியுமா? சும்மா நானும் காதலிக்கிறேன்னு பண்ணக்கூடாது.
2.    இந்த வயசுல வர்றது காதலே இல்லை, சும்மா ஒரு இனக் கவர்ச்சி (Infatuation) அது சீக்கிரம் போயிரும்.
3.    உங்களால படிக்க முடியாது, வேற எதலயும் கவனம் செலுத்த முடியாது, உங்க வாழ்க்கையில முக்கியமான கட்டத்துல எல்லாத்தையும் இழந்து, திசை திரும்பிப் போயிரும்.
4.    நீ அவள்ட்ட  பேசக்கூட முடியாது, இதுல எங்க போய் காதலிக்கிறது.
5.    +2 முடிஞ்சவுடன், நீ எங்க போவியோ, அவ எங்க போவாளோ, இதெல்லாம் நடக்க முடியாது.
6.    இந்தக் காதல் பெரும்பாலும் கல்யாணத்துல முடியாது, ஏன்னா அதுக்கு இன்னும் எவ்வளவோ காலம் இருக்கு. அதுக்கு நடுவுல என்ன வேணாலும் நடக்கும்.

7.    நீயே பெற்றோர் காசில சாப்பிட்டுட்டு இருக்க, ஒருவேளை உன்னை நம்பி ஒருத்தி வந்தா, நீ அவளைப் பாதுகாக்க முடியுமா? சாப்பாடு கொடுக்க முடியுமா?
8.    எந்தப் பெண்ணும் உனக்காக நீண்ட நாள் வெயிட் பண்ண முடியாது புரிஞ்சிக்க.

கல்லூரிக்காதல்:
1.    இந்தச் சமயத்தில் ஒரு முதிர்ச்சி இருக்கும்னு நீ நினைக்கலாம். ஆனா முதிர்ச்சி இல்லைனு பின்னால தெரியும்போது அதிர்ச்சியா இருக்கும்.  
2.    ஒரே வயசுல இருக்கறவங்களை காதலிச்சா பெருங்கஷ்டம். ஏன்னா ஆண்களுக்கு 28-30 வயசுலதான் கல்யாணம் பண்ண முடியும். ஆனா பொண்ணுங்களுக்கு 25-26 வயசுக்குள்ள பெரும்பாலும் ஆயிரும்.
3.    நீ படிச்சு முடிச்சு, நல்ல ஒரு வேலைக்குப்போனாத்தான் பொண்ணே கிடைக்கும். ஆனா அந்தப் பொண்ணுக்கு அப்படியில்லை உடனே மாப்பிள்ளை கிடைச்சுரும்.
4.    காதல் தோல்வினா அது ஆண்களுக்கு மட்டும்தான் தெரிஞ்சிக்க. பெண்கள் ஈஸியா மறந்துட்டு வேறொருவனை கல்யாணம் பண்ணி பிள்ளை குட்டி பெத்துருவாள்க.
5.    அதோட பொண்ணுங்க ரொம்ப நெருங்கிப்  பழகுவாங்க, ஆனா காதலிக்கிறேன்னு சொல்லமாட்டங்க, ஏன்னா ஒரு நாள், வேற நல்ல ஆள் கிடைச்சா, நான் ஒரு நட்பாத்தேன் பழகினேன்னு சொல்லி தப்பிச்சிரலாம்ல.
6.    பொண்ணுங்கல்லாம் ரொம்ப உஷாரு, நல்ல மாப்பிள்ளை வந்தா டக்குனு OK சொல்லிருவாங்க. அப்புறம் உம்பாடு திண்டாட்டம் தான்.
7.    முக்கியமா அவதான் பேரழகின்னு நெனைப்பே, அப்புறம் அப்படியெல்லாம் இல்லைன்னுகொஞ்ச நாள்ள தெரிஞ்சிறும், அதனால கொஞ்சம் அவசரப்படாதே.
8.    அதோட பொண்ணுங்களோட நல்லகுணம் மட்டும்தான் உனக்கு அப்போ தெரியும், அப்புறம் பெரிய டார்ச்சராயிரும்.
9.    அப்படியே தப்பித்தவறி கல்யாணம் நடந்தாலும் பெரும்பாலும் தோல்வியில் முடியும் அதுக்கு காரணங்களை கீழே தர்றேன்.
a)    உன் குடும்பத்தை அண்டவிடமாட்டா. உன்னை ரொம்ப கண்ட்ரோல் பண்ணி, அடிமையா நடத்துவா.
b)    அவளோட எல்லா விஷயங்களும் விவகாரங்களும் அப்புறம்தான் உனக்கு தெரியவரும்.
c)    ஐயையோ அவ அழகே இல்லைனு தெரிஞ்சிரும், ஏன்னா கொஞ்சம் கொஞ்சமாக அகத்தின் அழகு முகத்தில் தெரிய ஆரம்பிச்சிரும்.
d)    அதைவிட அழகான, அம்சமான, அறிவான பொண்ணுகளை பின்னால பார்க்கும்போது, அவசரப்பட்டுட்டோமோன்னு தோணும்.
இதையெல்லாம் யோசிச்சுப்பாத்து கிளாஸ்மேட்டை லவ் பண்ணாதீங்கன்னு சொல்றேன். அதோட காதல்னு சொல்றது சும்மா ஒரு மாயைதான். எல்லாமே உடல்ல சுரக்கிற எஸ்ட்ரோஜன் செய்யற வேலை, காமத்தின் வெளிப்பாடுதான். அது சீக்கிரமே உங்களுக்குப் புரிஞ்சிரும்.
மகேந்திரன் : யார்ரா இவன், பரதேசி, என்னடாது லூசு மாதிரி உளர்ற, எந்தக்காலத்தில இருக்க, நீ அமெரிக்கா போனதும் இங்கெல்லாம் எப்பவோ மாறிப்போச்சு. காதலாவது கத்திரிக்காவாவது, இப்பெல்லாம் தேவைப்பட்டா ஸ்டிரைட்டா...
பரதேசி : நல்ல வேளைப்பா, நான் இப்படி எதுலயும் மாட்டாம ஒரு பெண்ணை கல்யாணம் பண்ணி ரெண்டு ராசாத்திகளைப் பெத்து ஒரு ராசா மாதிரியே வாழறேன்.

என்னடா கதை விடற, அப்ப அந்த அஞ்சாவது படிக்கும்போது காதலிச்ச கதிஜா, எட்டாவது படிக்கும்போது காதலிச்ச பொன்னுத்தாயி, பத்தாவது படிக்கும்போது ராதிகா, +2-வில  சரோஜா, காலேஜ் படிக்கும்போது காதலிச்ச ரேகா, இதெல்லாம் காதல் இல்லையா.
டே மகேந்திரா, என்னோட உண்மையான காதல், கல்யாணம் பண்ணி இரண்டு பொண்ணுங்களைப் பெத்து அவர்களுக்கும்  20 வயசானப்புறந்தாண்டா வந்துச்சு.
ஐயையோ இதென்னடா புதுக்கதை, யார்ரா அவ, என்ட்ட கூட சொல்லலியே. சீனிகம் கதைமாறி இருக்கு.
அடச்சீ நீ வேற, அவள் வேற யாருமில்லை .என்னோட ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணுன்னு இருக்கிற என்னோட பாரியாள்தான்டா.


முற்றும்

Monday, November 9, 2015

பரதேசியும் பழம்விற்கும் பையனும் !!!!!!!!!!!!!!!!

எச்சரிக்கை: அடைப்புக்குறிப்புக்குள் இருப்பவை என் மனைவி சொன்னவை, அதை தயவு செய்து கண்டு கொள்ள வேண்டாம், படிக்கவும் வேண்டாம்.
My Office

அவன் ஏன் அப்படி என்னைக் கூப்பிட்டான்னு எனக்கு கொஞ்சம் கூட விளங்கல.
கிட்டத்தட்ட 20 வருஷத்துக்கு மேல நான் ஒரே வெயிட்தான். 125-முதல் 130 பவுண்டுக்குள் மட்டும் (ஆமா அங்க ஏறுனாத்தானே ?) இந்த ஒல்லி உடம்பை கில்லி மாதிரி வச்சிருக்க படாதபாடு படறேன். (ஆமா சும்மா கதை விடுறாரு ஒண்ணுமே பண்றதில்லை)
எடை ஏறாமல் இருப்பதற்கு என்னுடைய டாக்டர்களும் பாராட்டுத் தெரிவிப்பார்கள் (ஆமா இவர்  குடும்பத்துல எல்லாரும் அப்படித்தான் ன்னா சாப்பிட்டாலும் ஏறாது, அதுக்கு நான் என்னா செய்றது )
உடம்பை சிலிம்மா வச்சிருக்கிறது ஒரு கலை (ஆமாமா சொன்னாங்க அவ்வளவும் வினைன்னு நினைக்கிறேன்). என் இடுப்பு  சைஸ் இப்போது 32 லிருந்து 30  ஆகிவிட்டது(உயரமும் குறைஞ்சு போச்சே அதச்சொல்லல). நன்றாக நடப்பதற்கு, சுறுசுறுப்பாக இருப்பதற்கு இது ரொம்ப உதவுது (இந்த சுகர்னால தான் ஃபிகர் போச்சுன்னு சொல்ல மாட்டாரே)
முகம்கூட போடெக்ஸ் செய்யாமலேயே சுருக்கம் கிடையாது. (புதுசா சில கறுப்புப்புள்ளிகள் தெரியுதே அது என்னவாம்). பவுடரோ கிரீம்களோ உபயோகப்படுத்துவது கிடையாது (ஆமா இட்லி மாவுல கருப்பட்டி விழுந்தாப்ல இந்த முகத்துக்கு பவுடர் போட முடியுமா?) .
உடம்பை இளமையாக வச்சிருக்க எனக்கு ரொம்பப் பிடிக்கும் (இளமையா, என்ன கொடுமை). பாட்டுக்கேக்கறது கூட "இளமை இதோ இதோ", “இளமை என்னும் பூங்காற்று”, போன்ற பாடல்களைத்தான் கேட்பேன். (இதிலிருந்து தெரியல இவர் எவ்வளவு முதுமைன்னு).
தலையில மட்டும் கொஞ்சம் இள நரை விழுந்ததால கொஞ்சம் டை போடுவேன். (இள நரையா? அது சரி, ஆனா மீசைக்கும் டை அடிக்கறத சொல்லல). அதனால இயற்கையாவே கொஞ்சம் இளமையாத்தான் தெரிவேன் (டை அடிக்கிறது இயற்கையா ?).

கல்யாணம் ஆகி என் மனைவிக்கு 22 வருஷம் ஆயிருச்சு. எனக்கு அத்தனை வருஷம் அகல (அடப்பாவி ரெண்டு பேருக்கும் ஒண்ணாதானே கல்யாணம் ஆச்சு)
வேகமாக நடப்பது, ஓடுவது என்ற பல உடற்பயிற்சிகளை அடிக்கடி செய்வேன் (ஒரு வாட்டி ஒரு கறுப்பன் துரத்தும்போது ஓடினதச்சொல்றாரு போல)
அப்படி இருந்தும் அவன் ஏன் என்னை அப்படிக்கூப்பிட்டான்னு தெரியல. என்னைப்பாத்தா  அப்படியா தெரியுது. (எவன் எப்படிக் கூப்பிட்டான்? ஒண்ணும் புரியலயே)
என் உடம்புல ஒரு பார்ட் மட்டும்தான் எனக்குப் புடிக்காது. வயிறு மட்டும் லேசா பூசுனாப்புல இருக்கும் (தொப்பைனு பளிச்சுனு சொல்ல வேண்டியதுதானே). ஆமா அத இளந்தொந்தின்னும் சொல்லலாம் (என்ன இளந்தொந்தியா?)
முகத்தில புன்சிரிப்பும் எப்போதும் இருந்தால், வயசு தெரியாதுன்னு சொல்வாங்க (உனக்குதான் இருகின முஞ்சி ஆச்சே) அதோட மத்தவங்களையும் சிரிக்க வைக்கும்போது நமக்கு ஆயுசு கூடும்னு பெரியவங்க சொல்வாங்க (எந்தப் பெரியவங்க, நான் அப்படி ஏதும் கேள்விப்பட்டதில்லையே.)
இவ்வளவு இருந்தும் அவன் ஏன் அப்படிக்கூப்பிட்டான்.
Fruit vendor in 31st street, New York

பொதுவா நம்மூர்லதான், அண்ணன், அக்கா, சிஸ்டர், தம்பின்னு தெரியாதவங்களையும் உறவைச்சொல்லி அழைப்போம். இந்த ஊர்ல அதெல்லாம் கிடையாது. எல்லாரையும் பேர் சொல்லித்தான் கூப்பிடுவாங்க.
அந்த விதத்தில், அவன் என்னைக் கூப்பிட்டது மரியாதையாத்தான் இருந்தது. ஆனாலும் அது எனக்குப்பிடிக்கல. (யார் அவன்னு சொல்லித் தொலைங்க சீக்கிரம்)
Rafiqi food vendor
சப்வேயில் 34ஆம் தெரு ஸ்டேஷனில் இறங்கி, 32 ஆம் தெரு, அதாங்க கொரியன் அவென்யூ வழியே வெளியே இறங்கி, பிராட்வேயில் என்னோட ஆஃபிஸ் போற வழியில் ரெண்டு மூணு கையேந்தி பவன் இருக்கு. இந்தியன் நடத்தும் ஒரு பெட்டிக்கடை, பாக்கிஸ்தானி ஒருவன் நடத்தும் பழக்கடை, பேகல், சாண்ட்விச் கடை ஒண்ணு, ரஃபீக்கி  நடத்தும் சாப்பாட்டுக்கடை.இங்க சிக்கன் ஓவர் ரைஸ்ஸீம், ஃபலாஃபல்லும் (Falafil) சூப்பரா இருக்கும். மதிய நேரத்தில் கூட்டம் அலை மோதும். பிளாட்ஃபார்ம் கடைன்னாலும் குவாலிடி நல்லா இருக்கும். அதோட இங்கெல்லாம் எந்தக்கடையும் லைசென்ஸ் இல்லாம நடத்த முடியாது. அப்புறம் ஒரு ஜூஸ் கடை (இது வின்டரில் இருக்காது) தாண்டி இன்னொரு பழக்கடை இருக்கு. ஒரு ஆப்கானிய பெரியவர் ரொம்ப வருஷமா நடத்தினார்.  இப்ப கொஞ்ச நாளா அவர் மகன் பொறுப்பேற்று, கொஞ்சம்  விரிவுபடுத்தி சிறப்பா நடத்துறான்.
அந்தப் பையன் நல்ல சிவப்பா வாட்டசாட்டமா இருப்பான். அவன்ட்டதான் நான் இப்பல்லாம் பழம் வாங்கறது. ஒவ்வொரு சீஷனுக்குத் தகுந்தாப்ல பழம் விப்பான். சில பழங்கள் எல்லா சீஷனிலும் கிடைக்கும்.
அவனுக்கு இன்னைக்கெல்லாம் இருந்தா ஒரு 25-26  வயசுக்குள்ளதான் இருக்கும். கிட்டத்தட்ட, ஏறக்குறைய சற்றுக் கூடக்குறைய, சுமாரா குத்துமதிப்பா, கொஞ்சம் மேலே கீழே, என் வயசுக்கிட்டதான் இருக்கும் (அடப்பாவி மனுஷா, இப்படி எத்தனை பேர்கிட்ட சொல்லி வச்சிருக்க) அவன்தான் என்னை அப்படி கூப்பிடுறான். (அட எப்படித்தான் கூப்பிடுறான் ?)
என்னை அங்கிள்ஜி  அங்கிள்ஜின்னு கூப்பிடுறான். (அதுல என்னை தப்பைக் கண்டுபிடிச்சிட்டே) இல்ல, எனக்கு என்ன அவ்வளவு வயசா ஆயிருச்சு ?. ஒரு அண்ணன், பிரதர்னு கூட கூப்பிட்டா நா என்ன தப்பாவா தப்பா எடுத்துக்க போறேன். (அட தாத்தாஜினு  கூப்பிடாம விட்டானே, சந்தோஷப்படு)
ஹலோ, யாராவது அவனைப் பார்த்தா சொல்றிங்களா, இனிமே என்னை அங்கிள்ஜினு கூப்பிடக்கூடாதுன்னு.  எனக்கு சுத்தமாப் பிடிக்கல.

முற்றும்
இனிய தீபத்திருவிழா நல்வாழ்த்துக்கள்...
 இந்த நன்னாளில் இருளை நீக்கும் ஒளியாக இறைவன், உங்கள் இல்லத்திலும் உள்ளத்திலும் பிறக்கட்டும்.