Thursday, May 25, 2017

நளினி முருகனின் கதை !!!!!!

ராஜீவ் காந்தியின் கொலை பகுதி 2 

படித்ததில் பிடித்தது.
ராஜீவ் கொலை மறைக்கப்பட்ட உண்மைகளும்,
பிரியா நளினி சந்திப்பும் - நளினி முருகன்.
யாழ் பதிப்பகம் - எழுத்தாக்கம். தொகுப்பு - பா.ஏகலைவன்


இதற்கு முந்திய பகுதியைப்படிக்க  இங்கே சொடுக்கவும்.

http://paradesiatnewyork.blogspot.com/2017/05/blog-post_18.html


Image result for nalini murugan family
Nalini
          நளினி ஒரு பாரம்பரிய காங்கிரஸ் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்று சொன்னால் உங்களால் நம்பமுடியுமா ? . ஆனால் அதுதான் உண்மை.  அவருடைய தாத்தா ஒரு விடுதலைப் போராட்ட தியாகி, காங்கிரஸின் பெரும் தலைவர்களிடம் நெருக்கமாக இருந்தவர். உதாரணத்திற்கு நளினியின் அம்மாவுக்கு பத்மாவதி என்று பெயர் வைத்தது மகாத்மா காந்தி என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். பத்மாவதி அவர்கள் கல்யாணி நர்சிங் ஹோமில் நர்ஸ். அங்கு போலீஸ் கேசுக்காக அடிக்கடி வரும் ஒரு சப் இன்ஸ்பெக்டரிடம் மனதைப் பறிகொடுத்து அவருடன் திருமணம் நடந்தது. இதில் துயரம் என்னவென்றால் அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகியிருந்தது. பத்மாவதிக்கு பிறந்த இரண்டு பிள்ளைகளில் நளினி மூத்தவர் இரண்டாவதாக பிறந்த தம்பியின் பெயர் பாக்யநாதன். போலீஸ்கார அப்பா தன்  கோபத்தையும் அதிகாரத்தையும் மனைவி மேல் அடிக்கடி காட்ட, பத்மாவதி தன் குழந்தைகளுடன் அவரைப் பிரிந்து  தனியாக வாழ்ந்தார். தனக்கு போதுமான வருமானம் இருந்ததால் மூத்த பெண் நளினியை நன்றாக படிக்க வைத்தார். நளினியும் நல்ல பள்ளிகளில் படித்து பட்டப்படிப்பை முடித்து நல்ல ஆங்கில அறிவும் பெற்றதால் ஒரு நல்ல வேலையிலும் அமர்ந்தார்.
Image result for nalini murugan marriage          பாக்யநாதன் அவ்வளவாக படிக்காமல் ஒரு பிரின்டிங் பிரஸ்ஸில் வேலை செய்து வந்தான். தாயின் அதீத கண்டிப்பைப் பொறுத்துக் கொள்ளாமல் நளினி தாயிடம் கோபித்துக் கொண்டு தனியே ஒரு ரூம் எடுத்து தங்கியிருந்தார். தம்பி பாக்யநாதன் மட்டும் அக்காவை வந்து அடிக்கடி பார்த்துச் செல்லுவான் . பத்மாவதியின் வீட்டில் அவருடைய பிள்ளைகள் தவிரஅவருடைய மனவளர்ச்சி குன்றிய சகோதரரும் அவருக்கு உதவியாக இருந்த ஒரு வேலைகாரப் பெண்ணும் கூட தங்கியிருந்தனர்.
          பாக்யநாதன் பிரிண்டிங் பிரஸ்ஸில் வேலை பார்த்ததால் அங்கு அடிக்கடி வரும் இலங்கைத் தமிழர்களுடன் நல்ல பழக்கம். அவர்களுடைய சோகக் கதைகளை அடிக்கடி கேட்டு அவன்  போராளிகளின் மேல் அனுதாபம் கொண்டவராய் இருந்தான். அந்தக் காலகட்டத்தில் தமிழகம் முழுவதுமே போராளிகளுக்கு ஆதரவு அளித்தும், அனுதாபம் கொண்டிருந்தும் இருந்தது என்பதை நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
 அதனால் அந்த நண்பர்களை அடிக்கடி வீட்டுக்கும் அழைத்து வருவான். அப்படி அறிமுகமானவர்களில் பேரறிவாளன், ஹரிபாபு, முத்துராஜ் ஆகியோரும் அடங்கும்.
          இலங்கையிலிருந்து புதிதாக வந்த தாஸ் என்பவர் தங்குமிடமின்றி தவித்த போது பாக்யநாதன் அவரை அழைத்துக் கொண்டு வந்து தன்னுடைய வீட்டிலே தங்க வைத்தான்.
                    இந்த தாஸின் அண்ணன் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் கட்டாயமாக இழுக்கப்பட்டு 1987ல் நடந்த போரில் இறந்து போய்விடுகிறார். தாஸின் வீட்டில் அவருடைய அண்ணன் தவிர, ஒரு அக்கா, 3 தங்கை, 3 தம்பிகள் மற்றும் பெற்றோர் என்று பெரிய குடும்பத்தின் பொறுப்பு தாஸின் மேல் விழுந்தது. தாஸின் அம்மா மார்க்கட்டில் காய்கறிக்கடை வைத்திருந்தார். அதன் மூலம் வந்த சொற்ப வருமானத்தில் தான் பத்துப்பேரும் சாப்பிட வேண்டும்.
          அதனால் தாஸ் வெளிநாடு சென்று சம்பாதித்து தன் குடும்பத்தை கரையேற்றலாம் என்று நினைத்தார். அதோடு அண்ணன் மாவீரனதால் இலங்கை ராணுவத்திலிருந்து முழுக்குடும்பமும் தொல்லையை  அனுபவித்துக் கொண்டிருந்தது. அதுதவிர விடுதலைப்புலிகள் இயக்கத்திலிருந்து தாஸை வந்து சேர்வதற்கும் வற்புறுத்தல் தொடர்ந்தபடி இருந்தது. இதிலிருந்தெல்லாம் தப்பிக்கவும் தன் குடும்பத்தைக் காப்பாற்றவும் முடிவெடுத்து கள்ளத் தோணி ஏறித்தப்பித்து வேதாரண்யம் வந்து அங்கிருந்து சென்னை வந்து சேர்கிறார்.
          தன்னுடைய ஊர்க் காரர் ஒருவர் வெளிநாட்டுக்கு அகதிகளாக ஆட்கள் அனுப்பும் ஏஜெண்டாக இருப்பதால் அவரைத் தேடித்தான் சென்னை வந்து சேருகிறார் தாஸ். அந்த ஏஜென்ட்டின் பெயர் சிவராசன். இப்பொழுது உங்களுக்கு கொஞ்சம் விளங்கியிருக்கும்.  


Image result for nalini murugan family

          நளினியின் வீட்டில் தங்கும் தாஸ், உறவினர் போல் நன்கு பழகி, நளினியின் அம்மா பத்மாவதியிடம் மிகவும் நெருங்கி விடுகிறார். வீட்டில் எல்லா உதவிகளையும் செய்வது, சமையலுக்கு காய்கறிகள் வெட்டித்தருவது, கடைக்குப் போவது என்று வேலை வெட்டி இல்லாததால் இந்த வெட்டி வேலையைச் செய்து நெருங்கிவிட்டார். அதிகப்பேர் உள்ள வீட்டில் வளர்ந்ததால் அவருடைய குணம் இவ்வாறாக இருந்தது. அதோடு உண்மையிலேயே மிகுந்த நட்போடும் பாசத்தோடும் பழகினார். ஆதரவில்லாமல் வந்த தனக்கு வீட்டில் இடம் கொடுத்ததோடு அன்பாக உபசரிப்பதையும் பார்த்து மனது நெகிழ்ந்து நன்றியுடன் அவரும் அப்படிப் பழகினார்.          தனியாக வாழும் அக்காவை ஒரு நாள் பார்க்கவரும் போது தாஸையும் அழைத்துக் கொண்டு வருகிறான் பாக்கியநாதன் ,
          அப்போதுதான் முதன் முதலாக நளினியைப் பார்க்கிறார். நளினியுடனும் குடும்ப உறுப்பினர் போல பழக ஆரம்பிக்கிறார். மேலும் ஏன் தனியாக வந்தாய் என்று பழைய மனஸ்தாபங்களை கேட்டு அறிந்து. "எவ்வளவு மனத்தாங்கல் கசப்பு இருந்தாலும் எப்படி சொந்த அம்மாவை விட்டுவிட்டு வரலாம்”, என்று சொல்லி அறிவுரையும் கூறுகிறார். அத்தோடு நிறுத்திவிடாமல் மகளுக்கும் தாய்க்கும் பாலமாக இருந்து இருவரையும் சேர்க்க முயற்சி செய்து வெற்றியும் பெறுகிறார்.
          அதன்பின் நளினியும் தன் தாய் வீட்டுக்கு அடிக்கடி வரப்போக ஆரம்பிக்கிறார். அப்படி நெருங்கிப் பழகும் போது யாரோ ஒரு அந்நியன் தன் குடும்பத்தில் இப்படி உரிமையுடன் எல்லாக் காரியங்களையும் எடுத்துச் செய்கிறார், பாசத்துடன் பழகுகிறார் என்று நினைக்கிறார் நளினி. அவருடைய அமைதியான குணம், ஆர்ப்பாட்டமில்லாத செயல்பாடு, அன்பு பாசத்தைப் பொழிதல் ஆகியவற்றைக் கண்டு நளினிக்கு தாஸின் மேல் காதல் பிறக்கிறது.
           ஒருநாள் நளினி தன் காதலை தாஸிடம் சொல்ல, தாஸ் கலவரப்பட்டு மறுக்கிறார். அது உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்வது போல் இருக்கும் என்று பலமுறை மறுத்தும் நளினி தன் பிடிவாத குணத்தால் தாஸை மிகவும் நெருக்கி சம்மதிக்க வைக்கிறார். தாஸுக்கும் உள்ளார நளினியை மிகவும் பிடித்துப் போனதால் அவருடன் இறுதியில் சம்மதம் தெரிவிக்கிறார். நளினி தாஸின் இடையில் நெருக்கம் அதிகமாகி நளினியை வேலைக்கு அழைத்துச் செல்வது, திரும்ப வீட்டிற்கு கூப்பிட்டு வருவது நேரம் அதிகமானால் அங்கேயே தங்குவது என நெருக்கம் அதிகமானது.
          வீட்டில் சொன்னால் ஒத்துக் கொள்ளமாட்டார்கள் என்று நினைத்து நளினி ஒரு நாள் அவருடைய வீட்டில் யாருக்கும் தெரியாமல் தாஸை திருப்பதி அழைத்துச் சென்று திருமணம் செய்து கொள்கிறார். நளினி தாஸைத் திருமணம் செய்து கொண்டார் என்றால் முருகன் என்பது யார்?

-தொடரும்.

Monday, May 22, 2017

பரதேசி வாங்கின நவரத்தின மோதிரம் !!!!!!

இலங்கையில் பரதேசி-13


இதற்கு முந்திய பகுதியைப்படிக்க  இங்கே சொடுக்கவும்.
http://paradesiatnewyork.blogspot.com/2017/05/blog-post_8.html

கடைக்காரர் சொன்ன விடயங்களோடு நான் கூகுள் செய்து தெரிந்து கொண்டவற்றையும் இணைத்து கீழே கொடுக்கிறேன்.
இந்த நவரத்தினங்கள் எப்போதிலிருந்து வந்தது என்று யாரும் சொல்லமுடியவில்லையாம். ஆனால் 'நவரத்தினா' என்ற சமஸ்கிருத வார்த்தை, இந்தி, கன்னடா, பர்மா, இந்தோனேசியா, நேப்பாலி ஆகிய மொழிகளில் அப்படியே பயன்படுத்தப்படுகிறது. தமிழிலும் மலையாளத்திலும் நவரத்தினம் என்றும் தெலுங்கில் நவரத்னலு என்றும் அழைக்கப்படுகிறது. அதுதான் நமக்குத் தெரியுமே தமிழின் இறுதியில் ஒரு 'லு' சேர்த்தால் அது தெலுங்கு. அதோடு பல நாடுகளில் மன்னர்களும் ராஜ குடும்பத்தினரும் இதனைப் பயன்படுத்தியுள்ளனர். இதில் இந்தியா, நேபாள், இலங்கை, சிங்கப்பூர், மியான்மர் அல்லது பர்மா, கம்போடியா, வியட்னாம், இந்தோனேசியா, தாய்லாந்து  மற்றும் மலேசியா நாடுகளில் மத, கலாச்சார வித்தியாசங்களை மீறி பலகாலமாக பயன்படுத்தி வருகின்றனர் என்பது ஆச்சரியமளிக்கிறது. இதிலே தாய்லாந்து நாட்டில் நவரத்தினம் என்பது தேசியச் சின்னமாக மட்டுமின்றி மன்னரின் ராஜ சின்னமாகவும் விளங்குகிறது. மன்னர் மக்களுக்கு அழிக்கும் உயர்ந்த விருதின் பெயர் "நொவரட் ரச்சாவரபோன்" (Noppharat Ratchawaraphon). அந்தப் பதக்கத்தில்  நவரத்தினங்கள் பதிக்கப்பட்டிருக்கும்.
“இந்து மத அல்லது இந்திய ஜோதிட நம்பிக்கையின்படி பூமியில் உள்ள ஜீவன்களை நவக்கிரகம் என்று சொல்லக்கூடிய ஒன்பது கிரகங்கள்  பாதிக்கின்றன. ஒரு மனிதனின் முழு வாழ்க்கையிலும் இவை தொடர்பு கொண்டிருக்கின்றன. எனவே இந்த ஒன்பது ரத்தினங்களை அணிவதின் மூலம் அவற்றிலிருந்து விலக்கும் பாதுகாப்பும் கிடைக்கிறது", என்றார் கடைக்காரர். “ஐயா அதிலெல்லாம் எனக்கு நம்பிக்கையில்லை. ஆனால் எனக்கு இறைவன் மேல் நம்பிக்கை உள்ளது. இறைவன் ஒருவன்தான் படைத்து, காத்து அழிப்பவன். இறைவனுக்கு மேலான அதிகாரம் ஒன்றுமில்லை. எனவே இறைவனை நம்பி வாழுபவர்கள் இந்த மாதிரி இடைப்பட்ட காரியங்களில் நம்பிக்கை வைக்காது, இறைவனை மட்டுமே சார்ந்து வாழவேண்டும்”, என்றேன். அவர் என்னை விநோதமாகப் பார்த்தார்.
"சரிசரி இவை ஒன்பதும் என்ன கற்கள் என்பதைச் சொல்லுங்கள்", மறுபடியும் விளக்க ஆரம்பித்தார்.
1)   மாணிக்கம் - (Ruby) என்பது சூரியனுக்கு (Sun)
2)   முத்து (Pearl) என்பது சந்திரனுக்கு (Moon)
3)   பவளம் (Red coral) என்பது செவ்வாய்க்கு (Mars)
4)   மரகதம் (Emerald) என்பது புதன் (Mercury)
5)   புஷ்பராகம் (Yellow Sapphire) என்பது வியாழன் (Jupiter)
6)   வைரம் (Diamond) என்பது வெள்ளி (Venus)
7)   நீலம் (Blue Sapphire) என்பது சனிக்கு (Saturn)
8)   கோமேதகம் (Hessonite) என்பது ராகுவுக்கு
9)   வைடூரியம் (Cat's Eye) என்பது கேதுவுக்கு.
Image result for Nopparat Ratchawaraphon)
Add caption
"ஆனால் இவைகளை அணியும் போது இவையெல்லாம் குறையில்லாத நல்ல தரமான கற்களாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் துரதிர்ஷ்டத்தை கொண்டு வந்துவிடும்" என்றும் சொல்லி பயமுறுத்தினார். நானும் கேட்டுக் கொண்டேன்.
“அது சரி இந்த பாம்பு கக்கும் ரத்தினம் எது ?”
“அது சும்மா கதை ,பாம்பு விஷம்தான் கக்கும்” .
“அய்யய்யோ ஆளை விடுங்க சாமி”
"அதோடு விவரம் தெரியாதவர்களிடம் வாங்கிவிடக் கூடாது"
“ஏன்?”
Image result for navaratna ring

"ஒன்பது கற்களுக்கு ஒரு அமைப்பு இருக்கிறது. மாணிக்கம் சூரியனைக் குறிப்பதால் அது நடுவில் இருக்க வேண்டும். அதனைச் சுற்றிலும் கடிகாரச்சுற்றுவாக்கில் (clockwise)வைரம், முத்து, பவளம் , கோமேதகம், நீலம், வைடூரியம் புஷ்பராகம் மற்றும் மரகதம் என்று அமைய வேண்டும். நவக்கிரக எந்திரத்திலும் இதே அமைப்புதான் இருக்கிறது"
தாய்லாந்து அரசிகள் வழிவழியாக இப்படி ஒரு அமைப்புள்ள சங்கிலிகளைத்தான் அணிகிறார்களாம்.
இன்னும் பலவிஷயங்களைச் சொல்லத்துவங்கினார். நான் தான் நடுவில் தடுத்து நிறுத்தி ஆளைவிடச் சொன்னேன். ஒரு நவரத்தின மோதிரத்தையும் வாங்கிக் கொண்டேன்.
என்னவோ கண்ணை மூடிச் சொல்லிவிட்டு, கண்களில் ஒற்றிவிட்டு இரு கைகளாலும் கொடுத்தார். நானும் இரு கைகளை நீட்டி வாங்கிக் கொண்டு உடனே அணிந்து கொண்டேன். எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
நான் ஏற்கனவே அதுமாதிரி மோதிரங்களை அணிந்திருந்த பலரைப் பார்த்திருக்கிறேன். அந்த மோதிரங்களில் உள்ள கற்கள் மிகவும் சிறியதாக இருக்கும். ஆனால் நான் வாங்கிய மோதிரத்தில் கற்கள் பெரியதாகவும், ஒளி நிறைந்ததாகவும் இருந்தது.

Thailand's flawless "Queen Sirikit Navaratna" Necklace.
முதன்முதலில் நான் ஏமாறாமல் வாங்கிய இந்த நவரத்தின மோதிரம் நன்றாகவே இருந்தது எனக்கு மகிழ்ச்சியளித்தது.
"சார் நல்லாப் பேரம் பேசி வாங்குறீங்களே", என்றான் அம்ரி.
நான் ஏமாந்த கதைகளைச் சொல்லி என்னை நானே குறைத்துக் கொள்ள விரும்பாமல் ஒரு புன்னகையை உதிரவிட்டுவிட்டு கீழிறங்கி நடந்தோம்.
ஆற்றங்கரையிலிருந்து மெயின் ரோட்டுக்கு வந்த சாலையில் இருபுறமும் சுவினியர் கடைகள் இருந்தன. அதனை வேடிக்கை பார்த்துக் கொண்டே வந்தேன். திடீரென ஞாபகம் வர, "அம்ரி இங்கு யானைத் தந்தம் கிடைக்குமா?"
"சார் கிடைக்கும் ஆனால் கிடைக்காது"
“நீயும் அந்தப் படத்தைப் பாத்திட்டியா? சரி விளங்குறாப்ல சொல்லு”.
“சார் கள்ள மார்க்கெட்டில் கிடைக்கும். ஆனால் ஆனால் என்ன? நீங்கள் கள்ளத் தோணியில் தான் போக முடியும்”.
 “ஐயையோ ஏன்?”.
“தந்தம் ஒரு தடை செய்யப்பட்ட பொருள், ஏற்றுமதி செய்யமுடியாது, வெளிநாடுகளுக்கு எடுத்துச் செல்ல முடியாது.
“அட இங்கேயுமா?”
 எத்தனை யானைகள் இங்கு இருக்கு ஆஹா. யானைகளும் இருக்கு தந்தமும் இருக்கு ஆனால் எடுத்துச் செல்ல முடியாது?
“சரி அம்ரி கிளம்பலாமா? அடுத்து எங்கே?”
“அடுத்து கண்டிதான்”


“அடுத்து கண்டி? அப்ப எடு வண்டி ?”
“போகிற வழியில் ஒரு அழகிய தோட்டம் இருக்கிறது”
“ தோட்டமா அதெல்லாம் வேண்டாம்”
“ இல்லைசார் இது கண்டி ராஜா அமைத்த ராயல் பொட்டானிக்கல் கார்டன்”
“ அப்படியா அப்ப அவசியம் போகலாம்”
கார் கிளம்பி வேகமெடுத்தது .
-தொடரும்.

Thursday, May 18, 2017

ராஜீவ் காந்தியைக் கொன்றது நளினி முருகன் தானா?

Image result for ராஜீவ் கொலை மறைக்கப்பட்ட உண்மைகளும், பிரியா நளினி சந்திப்பும்

படித்ததில் பிடித்தது
ராஜீவ் கொலை மறைக்கப்பட்ட உண்மைகளும்,
பிரியா நளினி சந்திப்பும் - நளினி முருகன்.
யாழ் பதிப்பகம் - எழுத்தாக்கம். தொகுப்பு - பா.ஏகலைவன்.
Image result for rajeev gandhi


1991-ல் நடந்த ராஜீவ் காந்தி படுகொலை அதுவும் தமிழ் நாட்டில், அதுவும் தலைநகர் சென்னைக்கு அருகே உள்ள ஸ்ரீபெரும் புதூரில் நடந்தது ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கிவிட்டது. கட்சிக்காரர்களோ இல்லையோ, அவரைப்பிடிக்குமோ பிடிக்காதோ அந்தக் கொலைக்காக கவலைப்படாதவர்களோ, துக்கம் கடைப் பிடிக்காதவர்களோ மிகவும் குறைவு என்று சொல்லலாம். இப்படி ஒரு கொலையை விடுதலைப்புலிகள் செய்திருப்பார்கள் என்ற கூற்று வரும் போது அதனைச் சந்தேகிக்கும் மனநிலையில் யாரும் இல்லை. ஆனால் அதுவரை சுலபமாக நடமாடிக் கொண்டும் இலங்கையிலிருந்து வந்து போய்க் கொண்டிருந்தும் இருந்த நிலை போராளிகளுக்கு மாறிப்போய், எல்லோருக்கும் அவர்கள் மேல் வெறுப்பு வந்தது. தமிழகத்தின் ஒட்டு மொத்த ஆதரவையும் விடுதலைப்புலிகள் இயக்கம் இழந்து போனது என்பது அவர்களுக்குக் கிடைத்த முதல் பெரும் இழப்பு.
ஆனால் இப்படி ஒரு பேரிழப்பு ஏற்படும் என்பதை அவர்கள் அறியாமல் இப்படி ஒரு முட்டாள் தனமான காரியத்தை செய்திருப்பார்களா என்பது ஒரு பெரும் கேள்வி. ஆனால் அமிர்தலிங்கம் உள்ளிட்ட பல சொந்த நாட்டின் தலைவர்களை உயிர்பலி கொடுத்தவர்கள் தானே என்று நினைத்துப் பார்த்தால் அதுதான் உண்மையோ என்றும் தோணுகிறது.

Image result for Nalini murugan

ஆனால் மற்ற குண்டுவெடிப்பு, உயிர்ப்பலி ஆகியவற்றுக்கு பொறுப்பேற்றுக் கொண்ட விடுதலைப்புலிகள் இயக்கம் ,ராஜீவ் கொலைக்கு இன்று வரை பொறுப்பேற்றுக் கொள்ளவில்லை, மறுத்தே வருகிறது.
ராஜீவ் காந்தியால் ஐ.பி.கே.ஏ.ஃப் (Indian Peace Keeping Force)  என்று அழைக்கப்பட்ட இந்திய அமைதிப்படை இலங்கையில் அமைதியை ஏற்படுத்தச் சென்று, அதற்கு மாறாக போராளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க ஆரம்பித்தனர். இதில் கற்பழிப்பு, கொன்று குவித்தல் போன்ற பல அழிவுகள் நடைபெற்றிருக்க இதற்கு காரணமான ராஜீவ் காந்தியைக் கொல்வதற்கு அவர்களுக்கு உறுதியான காரணம் இருந்ததையும் மறுக்கமுடியாது.

Related image
Nalini 
இந்தச் சூழ்நிலையில் பல வருடங்களுக்குப் பின், நெடுமாறன், வைகோ, ராமதாஸ், சீமான் போன்ற பல தலைவர்கள் தொடர்ந்து இலங்கைத் தமிழர்களுக்காக குரல் எழுப்பி வருகின்றனர். குறிப்பாக சிறையில் உள்ள நளினியையும், முருகன் பேரரறிவாளன் ஆகியோரை விடுதலை செய்ய வேண்டும் என்றும் குரல் எழுப்பி வருகிறார்கள். அதற்கு ஜெயலலிதாவோ, கருணாநிதியோ எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. ஆனால் ஆதரவு தெரிவித்தாலும் அதற்கான தீவிர முயற்சியில் ஈடுபடவில்லை.  
ஆனால் காங்கிரஸ் அரசோ அல்லது அதன்பின் வந்த பி.ஜே.பி. அரசோ ஏன் உச்ச நீதிமன்றமோ ,இதில் எந்த ஆர்வமும் இல்லாததோடு விடுதலைக்கு எதிராகவும் இருக்கிறார்கள். குறிப்பாக காங்கிரஸுக்கு எல்லாவற்றிலும் எதிராகச் செயல்படும் பிஜேபி அரசு இதில் மட்டும் ஒத்துப்போவது மிகப்பெரிய ஆச்சரியம்.

Image result for nalini murugan marriage
Murugan
இந்தச் சூழ்நிலையில் கடந்த நவம்பரில் நான் சென்னை சென்றிருந்த சமயம் நளினி முருகன் எழுதிய இந்தப்புத்தகம் வெளியானது. வைகோ தலைமையில் நடந்த வெளியீட்டு விழாவிற்கு நான் செல்ல முடியாவிட்டாலும், நியூயார்க் வருவதற்குமுன் அந்தப் புத்தகத்தை வாங்கி வந்தேன்.
இந்தப் புத்தகத்தைப் படித்தவுடன் என் மனதில் ஆச்சரியமும் அதிர்ச்சியும் மாறி மாறி வந்து சுனாமி அலைகளாய் தாக்கின. படித்து முடித்தவுடன் என மனநிலை எப்படி இருந்தது என்பதைத் தெரிவிக்கும் முன்பு எனக்கு எழுந்த சில கேள்விகளுக்கு இந்தப் புத்தகத்தில் விடையிருக்குமா? என்று தேடலாம்.
1)   ராஜீவ் காந்தியைக் கொலை செய்தது யார்?
2)   விடுதலைப்புலிகள்தானா, அப்படியென்றால் ஏன் அவர்கள் அதற்கு பொறுப்பேற்கவில்லை? அவர்கள் பலமுறை பெரிய தலைவர்களின் படுகொலைக்கு பொறுப் பேற்றிருக்கிறார்களே ?.
3)   விடுதலைப் புலிகள் இல்லையென்றால் வேறு யார் அப்படி பண்ணியிருக்க முடியும்?
4)   விடுதலைப் புலிகளோ அல்லது வேறு யாரோ? ராஜீவ் காந்தியைக் கொல்லுமளவிற்கு என்ன விரோதம் அல்லது ஆதாயம்?
5)   இந்தியாவிலும் தமிழகத்திலும் அதற்கு உதவியில்லாவிட்டால் இது நிச்சயம் நடந்திருக்க வாய்ப்பில்லை. அப்படியானால் அதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள்? அவர்களுக்கு அதனால் என்ன ஆதாயம்?
6)   முருகன் என்பது யார்? அவருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் என்ன சம்பந்தம்?
7)   சிவராசன் என்பவன் விடுதலைப்புலிகளுக்காக வேலை செய்தானா? இல்லை வேறு யாருக்கா?
8)   தனு, சுபா என்பவர்கள் வெறும் பலியாடுகளா?  இல்லை தெரிந்தே செய்தார்களா?
9)   நளினிக்கு இதில் என்ன பங்கு? அப்பாவியா இல்லை போராளியா?
10)               CBI க்கு இதில் என்ன பங்கு? ஏன் அவர்கள் திணறுகிறார்கள் அவர்களுக்கு என்ன நிர்பந்தம்? யார் மூலம் ?, காரணம் என்ன?
11)               ராஜீவ் காந்தி கொலையென்பது வெளிநாட்டு சதியா? இல்லை உள்நாட்டுச் சதியா?.
12)               பேரறிவாளன், சாந்தன் என்ற மற்றவர்கள் குற்றவாளிகளா? அப்பாவிகளா?
இப்படிப்பல கேள்விகள் பிறந்த சமயத்தில் இந்தப் புத்தகம் அதற்கு விடை கொடுக்குமா? இந்தப் புத்தகத்தின் சாராம்சங்களைப் பார்ப்பதற்கு முன், இந்தப் புலன் விசாரணையின் தலைவர் கார்த்திகேயன். ஐ.பி.எஸ். அவர்கள் எழுதிய புத்தகத்தில் படித்த விஷயங்களும் நியாபகம் வருகின்றன. நூறு குற்றவாளிகள் தப்பித்தாலும் ஒரு நிரபராதி தண்டிக்கப்படக்கூடாது  இல்லையா ?


-தொடரும்.

Monday, May 8, 2017

இலங்கையில் கொட்டிக்கிடக்கும் ரத்தினங்கள் !!!!!!!!!


இலங்கையில் பரதேசி -12
இதற்கு முந்திய பகுதியைப்படிக்க  இங்கே சொடுக்கவும்.
http://paradesiatnewyork.blogspot.com/2017/05/blog-post.html

Image result for sri lanka ratnapura
ரத்தினபுரியில் இரத்தின அறுவடை 
"அம்ரி அதுக்கு ரத்னபுரி போலாம்னு சொன்னியே".
 கொழும்பினருகில் ரத்னபுரி என்ற இடம் இருக்கிறது. அங்கு வைரம், வைடூரியம், மரகதம், போன்ற நவரத்தினங்கள் தாராளமாகக் கிடைப்பதால் உலகமெங்கிலிருந்து அங்கு வந்து இந்தச் சிறப்பான ரத்தினங்களை வாங்கிச் செல்கின்றனர் என்று கேள்விப் பட்டிருந்தேன்.
Related image
Hope Diamond
அதுமட்டுமல்லாமல் இங்கே வாஷிங்டன் டி.சிக்கு செல்லும் போதெல்லாம் நான் தவறாது பார்ப்பதும் பிறரைக் கூட்டிபோவதும் “நேச்சுரல் ஹிஸ்டரி  மியூசியம்” என்ற பிரம்மாண்டமான மியூசியத்திற்கு. அதில் ‘ஹோப் டைமண்ட்’ என்று மிகப்பெரிய வைரம் உள்ளது. அது எங்கு கிடைத்தது என்றால் வேறெங்கு   இந்தியாவில் தான். அதோடு அந்த மியூசியத்தில் அந்தக் கால மன்னர்கள் பயன்படுத்திய தங்க, வைர, ரத்தின ஆபரணங்கள் பல காட்சிக்கு வைக்கப் பட்டிருக்கின்றன. உலகத்தின் எந்த மன்னர் அணிந்திருந்தாலும் அவை இந்தியா அல்லது  இலங்கையிலிருந்து வந்தவைதான் என்பதை அங்கே எழுதி வைத்துள்ளனர்.

உலகத்தின் மிகப் பெரிய மிக விலைமதிப்புள்ள வைரமான "கோஹினூர்" வைரமும் இந்தியாவைச் சேர்ந்ததுதானே. ஹைதராபாத் பக்கத்திலுள்ள கோல் கொண்டாவில் வைரங்கள் கொட்டிக் கிடந்தன. ஆனால் அதனை வெட்டி முடித்துவிட்டனர். நான் லண்டன் சென்றிருந்த போது அங்கே இருந்த டவர் என்று அழைக்கப்படும் பிரிட்டிஷ் அரசர்களின் கோட்டையில் "கோஹினூர் இன்னும் அரசியின் கிரீடத்தில் ஜொலிக்கிறது. காட்சிப் பொருளாக வைத்திருந்த அதனைப் பார்த்த எனக்கு ஆத்திரமும் தாங்கவில்லை என்ன செய்யமுடியும். நம்முடைய சொத்துக்களெல்லாம் இப்படி கொள்ளையடிக்கப்பட்டு பலநாடுகளுக்கு போய்ச் சேர்ந்திருக்கின்றன. அந்த வைரத்தைப்பற்றிய என்னுடைய பழைய பதிவைப்படிக்க இங்கே சொடுக்கவும்.
http://paradesiatnewyork.blogspot.com/2015/03/blog-post_5.html

ஆப்பிரிக்கா பெல்ஜியம் ஆகிய இடங்களிலிருந்து வைரங்கள் வந்தது சமீப காலங்களில்தான்.  இப்படி பிரசித்தி பெற்ற இலங்கை இரத்தினபுரிக்கு போக எனக்கு ஆசை. அதைத்தான் வந்த போது அம்ரியிடம் சொல்லியிருந்தேன்.
Image result for Kohinoor diamond in washington dc
Kohinoor Diamond
"சார் ரத்னபுரி போகமுடியுமான்னு தெரியல இன்னும் நீங்கள் பார்க்க வேண்டிய முக்கிய இடங்கள் நிறைய இருக்கின்றன. ரத்னபுரியின் வைரங்கள் நவரத்தினங்கள் இங்கேயே நம்பிக்கையான இடத்தில் கிடைக்கும். வாருங்கள் பார்க்கலாம்".

வெள்ளைக்காரத் தம்பதியினரிடத்தில் விடைபெற்றுக் கொண்டு நான் அம்ரியுடன் கிளம்பினேன்.

திரும்பவும்  ஆற்றங்கரையிலிருந்து திரும்பும் வழியில் பலவித பரிசுப் பொருட்கள் விற்கும் கடைகள் இருபுறமும் இருந்தன . நாங்கள் போன கண்ணாடி ரெஸ்டாரண்ட் அருகிலேயே ஒரு சிறிய நகைக் கடை இருந்தது. அதனுள் நுழைந்தோம். சிறிய கடையாக இருந்தாலும் ரத்தின நகைகள் கண்ணைப்பறித்தன.  சிறிய கண்ணாடிப் பெட்டியில் அவைகள் மேலிருந்து வந்த ஃபோகஸ் லைட்டின் ஒளியால் ஜொலி ஜொலி என ஜொலித்தன. எல்லாவற்றையும் ஒதுக்கிவிட்டு நவரத்ன மோதிரம் வேண்டும் என்று கேட்டேன். கடைக்காரர் கேள்விகளை கேட்க ஆரம்பித்தார்.

Image result for sri lanka ratnapura
“உங்கள் விரல் சைஸ் என்ன?”
“ஐயையோ தெரியாது”.
“பிரச்சனையில்லை அளந்து கொள்ளலாம்”.
(அளந்து பார்த்து) “உங்கள் மோதிரவிரல் சைஸ் 7 ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்”, என்று சொல்லிச் சிரித்தார்.
“எதுக்கு சிரிக்கிறீங்க?”
"இல்ல ரொம்ப சின்னதா இருக்கு, இது கிட்டத்தட்ட பெண்கள் சைஸ்"
எனக்கு உடனே வெட்கமும் துக்கமும் சேர்ந்தே வந்துச்சு என்னடாது பல மேடைகள்ள பேச குரல் கொடுத்த ஆண்டவன் இப்படி விரல் 'ல' சோதிச்சிட்டானே.
“நல்லதுதானேங்க எடை குறைவா மோதிரம் வாங்குனா போதும்”. என்று சமாளித்தேன்.
“நல்லது உங்களுக்கு ஆனா எங்களுக்கு சரி விடுங்க வைரமோதிரமா? இல்ல ரத்தின மோதிரமா? “
“ரத்தினம் அதிலும் இலங்கை பேர் சொல்ற மாதிரி  நவ ரத்தினம் வேணும்”.
“வெரிகுட், தங்கமா வெள்ளியா?”
“தங்கத்திலேயே கொடுங்க”
 “14ஆ, 18ஆ”
“ஓ கேரட்டை சொல்றீங்களா இரண்டும் வேணாம், 22தான் வேணும்”.
கேட்டுவிட்டு மாறாத புன்னகையுடன் 22 கேரட்டில் (ஆமா இந்த கேரட்டுன்னா என்னான்னு யாராவது சொன்னீங்கன்னா நல்லா இருக்கும். எனக்குத் தெரிஞ்சதெல்லாம் நம்ம சாப்பிடுற கேரட் தான்)
ஜொலிக்கும் தங்க மோதிரங்கள் ஒரு சிவப்பு ஜரிகை போட்ட டிரேயில் வைத்துக் காண்பித்தார்.
“சைஸைப் பத்தி கவலைப் படாதீங்க, மாடல் பிடிச்சிருந்ததுன்னா சைஸை சரிபண்ணித் தந்துரலாம்”.
நான் இதுவரை பார்த்த எல்லாரும் ஒரு சதுரவடிவமான மோதிரத்தில் ஒன்பது கல்கள் பதித்து போட்டிருப்பதைத்தான் பாத்திருக்கிறேன் என்பதால் கொஞ்சம் வித்தியாசமாக வட்டவடிவில் இந்த மோதிரத்தை எடுத்துக் காண்பித்தேன். சைசும் சரியாக இருந்தது.
“குட் சாய்ஸ்” என்றார்.
இதைத்தான் எல்லாரிடமும் சொல்வாங்கன்னு  தெரிந்தும், ஒரு திருப்தி வந்தது. ஒரு பவுனில் 22 கேரட் நவரத்ன மோதிரம் அது என்பதாலும் நன்றாகவே இருந்தது.  இதிலுள்ள நவரத்னங்கள் என்னென்ன என்று கேட்டேன்.
நவரத்ன மோதிரம் ரொம்ப நல்லது என்று பல காரணங்களை அடுக்கினார். ஒவ்வொரு ரத்தினமும் ஒவ்வொரு கிரகம்னு சொன்னார்.

“ஐயா எனக்கு அதிலெல்லாம் நம்பிக்கை இல்லை. சும்மா இவ்வளவு தூரம் வந்ததுக்கு ஒன்று வாங்கலாம்னுதான்”, என்றேன். யோசித்துப் பார்த்தால் எனக்கென்று நானே முதலில் வாங்கும் நகை இதுதான் என்ற நினைவு வந்தது.

நான் போட்டிருக்கும் சங்கிலி எங்கம்மா 30 வருஷத்து முன்னால் கொடுத்தது, அதில் இருக்கிற சிலுவை டாலர் என் மனைவி வாங்கிக் கொடுத்தது. மாமனார் வீட்டில் போட்ட மோதிரம் தொலைஞ்சு போனதால , என் மனைவி ஒரு வைர மோதிரம் வாங்கிக் கொடுத்தா. அதுதான் இப்ப கல்யாண மோதிரமே.

யோசித்துப் பார்த்தா நீங்க நம்புவீங்களா இல்லயோ, என் மனைவிக்கு நகையா நான் இதுவரை வாங்கிக் கொடுத்ததே இல்லை. சரி அதவிடுங்க, “அந்த ஒன்பது ரத்தினங்கள் ஒன்பது கிரங்களையும் குறிக்கும். இது இந்து மதம் மட்டுமல்ல, புத்த, சைண, சீக்கிய சமயங்களிலும் மதிக்கப்படும் விசேஷம் கொண்டது”, என்று சொல்லிவிட்டு அவைகளை விளக்க ஆரம்பித்தார்.


- தொடரும்.

Thursday, May 4, 2017

S.P. ஷைலஜாவின் பதின்பருவப்பாடல் !!!!

எழுபதுகளில் இளையராஜா பாடல் எண்: 34

Image result for kalyanaraman movie images
இதற்கு முந்திய பகுதியைப்படிக்க  இங்கே சொடுக்கவும்.
http://paradesiatnewyork.blogspot.com/2017/02/blog-post_16.html
            79-ல் வெளிவந்த கல்யாண ராமன் படத்திற்காக இளையராஜா இசையமைத்து வெளிவந்த பாடல் இது. பாடலின் உள்ளே நுழையுமுன் பாடலைக் கேட்போம்.

இசையமைப்பு:
          ஒரு இளம்பெண்ணின் கொண்டாட்ட மனநிலையை வெளிப்படுத்தும் பாடல் இது. குதூகலமாய் இருக்கிறது கேட்பதற்கு. கிடார் , கீபோர்டு, வயலின்கள் ஆகியவற்றின் சுதி நாதத்தின் மேல் புல்லாங்குழல் நடமாட, கடசிங்காரியின் ரிதம் இசை பேங்கோஸ் அல்லது காங்கோசுடன் இணைந்து சேர்கிறது. அதன் பின் இவையெல்லாவற்றையும் அடக்கும் விதத்தில் வயலின் குழுமம் எழுந்து சஸ்டெயின் செய்ய, கனீரென்ற குரலில் "மலர்களில் ஆடும் இளமை புதுமையே", என்று பாடல் ஆரம்பிக்கிறது. குரலோடு துள்ளல் நடையில் தபேலா சேர்ந்து கொள்ள பாடல் வேகமெடுக்கிறது. முதல் இடையிசையில் (BGM) சிறிது நடைமாறி, வேகம் மாறி கீபோர்டு, வயலின் இசைக்க, கிளிகளும் குயில்களும் பாடுவது போல் இசையொலிக்க புல்லாங்குழல் அதனை முடித்து வைக்க, சரணம் "பூமரத்தின் வாசம் வந்தால்" என்று ஆரம்பிக்கிறது. இரண்டாவது BGM-ல் கடசிங்காரி ஆரம்பித்து, எலக்ட்ரிக் கிடார் எதிர்பாராத நேரத்தில் ஒலிக்க அதனுடன் டேப் சேர்ந்து அழகான தாளத்துடன் நடைபோட, "நான் இன்று கேட்பதெல்லாம்" என்று 2-ஆவது சரணம் ஆரம்பிக்கிறது. இறுதியில் "அஆஆ" என்று குரல் கடசிங்காரியுடன் இணைந்து அப்படியே குறைந்து குழைந்து  பாடல் இனிதே முடிவடைகிறது.

பாடல் வரிகள்:

மலர்களில் ஆடும் இளமை புதுமையே
மனதுக்குள் ஓடும் நினைவு இனிமையே ஹோய்
மலர்களில் ஆடும் இளமை புதுமையே
மனதுக்குள் ஓடும் நினைவு இனிமையே
பருவம் சுகமே பூங்காற்றே நீ பாடு
மலர்களில் ஆடும் இளமை புதுமையே
மனதுக்குள் ஓடும் நினைவு இனிமையே ஹோய்
பூமரத்தின் வாசம் வந்தால் ஏதேதோ ஆசை
நெஞ்சுக்குள் தானாடும்
பால் வடியும் பசுங்கிளிகள் பேசாமல் பேசும்
பொன்வண்ண தேரோடும்
சொர்க்கத்தின் பக்கத்தை இங்கும் நான் காண
என்றென்றும் உன்னோடும் நாளும் நானாட
வந்தேனே தோழி நீயம்மா
மலர்களில் ஆடும் இளமை புதுமையே
மனதுக்குள் ஓடும் நினைவு இனிமையே ஹோய்
நான் இன்று கேட்பதெல்லாம் கல்யாண ராகம்
எண்ணங்கள் போராடும்
நான் இன்று காண்பதெல்லாம் பொன்னான நேரம்
எங்கெங்கும் தேனோடும்
இன்பத்தின் வண்ணங்கள் என்னை சீராட்ட
பொன்வண்டின் ரீங்காரம் கொஞ்சம் தாலாட்ட
பெண்மானே நாளும் ஏனம்மா
மலர்களில் ஆடும் இளமை புதுமையே
மனதுக்குள் ஓடும் நினைவு இனிமையே ஹோய்
பருவம் சுகமே பூங்காற்றே நீ பாடு
மலர்களில் ஆடும் இளமை புதுமையே
மனதுக்குள் ஓடும் நினைவு இனிமையே ஹோய்

Image result for ilayaraja with panchu arunachalam          பாடல் வரிகளை எழுதியவர் பஞ்சு அருணாச்சலம். ஒரு திருமணமாகாத கன்னிப் பெண்ணின் மகிழ்ச்சியான மனதை ,வீட்டிற்கு வெளியேயுள்ள வசந்தகால இயற்கையுடன் ஒன்றி வெளிப்படுத்தும் விதத்தில் அமைந்த மெட்டுக்கு வரிகள் பொருந்தியே வருகின்றன. மலர்களில் இளமையைக் காண்பது புதுமையான கற்பனைதான். ரம்மியமான இயற்கை சூழ்நிலையை வர்ணித்துவிட்டு இதுவே சொர்க்கத்துக்கு இணை என்று முதல் சரணத்தில் சொல்லியிருப்பது பொருத்தமே. ஆனால் கன்னிப்பெண் பாடும் பாட்டென்றால் அது கல்யாண ஆசை, தம்பத்திய சுகத்தை நினைத்து ஏங்குதல் ஆகியவைதான் பொதுவாக அந்தக் காலத்தில் எழுதியுள்ளதை நினைத்து சிரிப்புத்தான் வருகிறது. இதைத்தவிர வேறு நினைப்புகளே இருக்காது என்று பதின்பருவப்பெண்களை ஒரு சிறிய வட்டத்திற்குள் சிறை வைப்பது ஏற்புடையதல்ல என்பது என் கருத்து. நான் பார்த்த வரைக்கும் பல பெண்கள் படிப்பு, வேலை வருமானம், சுயசார்பு, என்ற விடயங்களில்தான் அதிகம் கனவுகளை, வைத்திருக்கிறார்கள். பஞ்சுவின் மென்மையான மனதில் பாடலின் சுழலுக்குத்தானே  எழுத முடியும். பஞ்சுவைக் குறை சொல்லமுடியாது.

பாடலின் குரல்:
Image result for ilayaraja with SP Sailaja
Sp Sailaja with Ilayaraja
           பாடியவர் SPB யின் தங்கையான SP ஷைலஜா. நாட்டியம் நடிப்பு என்று பலதுறைகளில் திறமை பெற்ற இவர் பின்னர் பாடலுக்கென்று மட்டுமே தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். இவருக்கு நல்ல கணீரென்ற குரல். நல்ல உச்சஸ்தாயியில் பாட முடியும் குரல். இவருடைய உச்சரிப்பும் தனிரகம். ஆனால் பிழையில்லை. இந்த  மாதிரிப் பாடல்களுக்கு இவரின் குரல் மிகவும் பொருத்தம். குரலிலேயே ஒரு உற்சாகம், துடிப்பு, மகிழ்ச்சி மறைந்து உறைந்திருக்கிறது.  இவர் "பொண்ணு ஊருக்குப் புதுசு என்ற படத்தில் பாடிய" சோலைக்குயிலே காலைக்கதிரே" என்ற பாட்டு தான் இவர் பாடிய முதல் பாடல் என்று நினைக்கிறேன். இளையராஜா இவருக்கு பல பாடல்களைக் கொடுத்தார். SPB யுடன் இணைந்து பாடிவருகிறார். டூயட் பாடல்களை அண்ணணும் தங்கையும் இணைந்து பாடுவதைத்தான் என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
          இந்த துள்ளல் பாடலைக் கேட்டால் உங்கள் மனதும் துள்ளும் என்பதில் ஐயமில்லை.


-தொடரும்.