Monday, March 30, 2015

உப்பும், உறைப்பும், கடுப்பும், வெறுப்பும் !!!!!!!!!!

ஆஸ்டின் ,டெக்சஸ் பயணம் -பகுதி-4
     பாஸ்டர் ஜான்சன் அவர்கள் பிறந்த போது அமெரிக்க அதிபராய் லிண்டன் ஜான்சன் இருந்ததனால், அவருடைய அப்பா அந்தப் பெயரை வைத்தாராம். ஆனால் அவர் ஜான்சன் அமெரிக்காவில் வந்து செட்டிலாகி, இங்கு ஜான்சன் மியூசியத்தைப் பார்வையிடுவார் என்று கனவு கூடக் கண்டிருக்க மாட்டார். அதனை நேரில்  பார்த்து மகிழவும் முடியாத வண்ணம் சிறுவயதிலேயே இறைவனடி சேர்ந்து விட்டார்.
நகருக்குள் நுழைவதற்கு முன் இதோ உங்களுக்காக
  1. Austin in the night
ஆஸ்டின் டெக்சஸ் ஒரு சில தகவல்கள்.
1.    ஆஸ்டின், டெக்சஸ் மாநிலத்தின் தலைநகரம் .
2.    கொலராடோ ஆற்றங்கரையில் அமைந்துள்ளது இப்பெரு நகரம்.
3.    மொத்த அமெரிக்காவின் மக்கள் தொகையில் 12-ஆவது பெரிய நகரம், டெக்சஸின் 4-ஆவது பெரிய நகரம்.
Tonkawa Comanche
4.    1835 முதல் ஐரோப்பிய குடியேற்றம் நிகழ்ந்தது. ஆனால் அதற்கு முன்னால் Tonkawa Comanche, & Lipan Apache என்ற சிவப்பிந்தியக் குழுவினர் இங்கு வாழ்ந்து வந்தனர்.
5.    வழக்கம்போல் இவர்கள் இங்கிருந்த சிவப்பிந்தியக்குழுவினரை  துரத்தியடித்தனர் அல்லது கொன்று குவித்தனர்.
6.    1835-36ல் டெக்சஸ் மக்கள் மெக்சிகோவுடன் போரிட்டு சுதந்திரம் பெற்றனர். அதன் பின்னர்  தனிப்பட்ட குடியரசானது. இதற்கென்று தனியாக பிரசிடன்ட்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
7.    1861ல் நடந்த உள்நாட்டு யுத்தத்திற்குப் பின்னர் டெக்சஸ் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் இணைந்து ஒரு மாநிலமானது.
8.    Fortune 500 என்று சொல்லக்கூடிய கம்பெனிகளின் தலைமை அலுவலகங்கள் அல்லது கிளை அலுவலகங்கள் இங்கே இருக்கின்றன. AMD, Apple Inc, Ebay, Google, IBM, Intel, Texas Instruments, 3M, Oracle, Dell ஆகியவை அவற்றுள் சில.


மதிய உணவு அருந்த ஒரு ஜெர்மன் ரெஸ்டாரண்டுக்கு அழைத்துப் போனார் டாக்டர் ஜெரால்ட். ஜெர்மன் குசின் ஓக்கேதானே என்றதற்கு "முகமதுவும் ஜான்சனும் தலையாட்ட, நான் தான் மறுபடியும் 'ஙே' என்று முழித்தேன். ம்ஹீம் மறுபடியும் பட்டினிதான் என்று நினைத்துக் கொண்டேன்.
ஹலால் சாப்பிடும் முகமதுவுக்கு மீன் விலக்கில்லை.அதனால் மீனுக்கு தாவிவிடுவார். ஜான்சனுக்கு எதுவும் விலக்கில்லை. நான்தான் பாவம். ஆனாலும் மெனுவில் இருந்த அரிசி சாதத்தைப் பார்த்ததும் துள்ளிக் குதித்து ஆர்டர் செய்துவிட்டு, கூட வெண்டைக்காய் (okra) பண்டம் ஒன்றையும் ஆர்டர் செய்தேன்.  
உப்போ உறைப்போ எதுவும் இல்லாத வெற்று சாதத்தை, கடுப்போ வெறுப்போ இல்லாமல் எப்படி சாப்பிடுவது?. ஆனால் வெண்டைக்காய் பஜ்ஜி நன்றாக இருந்தது. ஏதோ மாவில் தோய்த்து அப்படியே பொரித்திருந்தார்கள். கரகர மொருமொருவென்று சுவையாகவே இருந்தது.
உண்டு முடித்து கேபிடல் பில்டிங் பார்க்கப் போனோம்.
Texas Capital
Texas Capitol Building 
உள்ளே நுழைவதற்கு முன் அதனைக்குறித்த சிறு குறிப்பு:
1.    முதன்முதலாக 1853ல் கட்டி முடிக்கப்பட்ட 140 அடி உயர கேபிடல் கட்டிடம் 1881ல் தீக்கிரையானதால் இந்தப் புதிய கட்டிடம் கட்டப்பட்டது.
2.    கிபி 1882ல் ஆரம்பிக்கப்பட்டு அஸ்திவாரம் அமைத்து முடித்து டெக்சஸ் சுதந்திர தினமான மார்ச் 2, 1885ல் 12010 பவுன்ட் எடையுள்ள மூலைக்கல் பதிக்கப்பட்டது. பாருங்கள் பேஸ்மெண்ட் எழுப்புவதற்கே மூன்று வருடங்கள் முழுதாய் ஆயிருக்கிறது.
3.    1886ல் இரண்டாவது மாடி முடிக்கப்பட்டு 1887ல் காப்பர்(Copper) தகடுகளால் கூரை அமைக்கப்பட்டது .
4.    1888ல் தாமிரத்தினால் (zinc) வடிவமைக்கபட்ட சுதந்திர தேவி சிலை கூரையின் மேல் நிறுவப்பட்டது.
5.    1888ல் மே மாதத்தில் திறக்கப்பட்ட இதன் மொத்த உயரம் 566 அடி, அகலம் 288 அடி மற்றும் கட்டி முடிக்க ஆன மொத்த செலவு $3.7 மில்லியன் டாலர், அப்பவே மில்லியன் என்றால் இன்றைய ரேட்டுக்கு எங்கேயோ போய்விடும்.
6.    முழுதும் சிவப்பு கிரானைட் கற்களால்  கட்டப்பட்ட இந்தக் கட்டிடத்தில் தான் டெக்சஸ் மாநில சட்டசபை கூடுகிறது. அரசாங்கம் செயல்படுகிறது.
Johnson,Gerard,Mohamed and me 

வாருங்கள் உள்ளே போவோம், கிரவுண்ட் ஃப்ளோரில்  படிக்கட்டுகளில் ஏறி உள்ளே நுழைந்தவுடன், ரோட்டன்டா என்று சொல்லப்படுகிற ஹாலுக்கு முன்னால் காவல் தூதுவர்கள் போல ஸ்டீபன் F ஆஸ்டின் (Stephen F Austin) மற்றும் சாம் ஹீயூஸ்டன் (Sam Houston) அவர்களின் முழு அளவு சிலைகள் இருபுறமும் நின்றன. எலிசபெத் நேய் (Elisabet Ney) என்ற சிற்பியினால் வடிவமைக்கப்பட்டு 1903ல் நிறுவப்பட்டவை இவை. இவர்கள் இருவர் பெயரில் தான் டெக்சஸின் இருபெரு நகரங்களான ஆஸ்டின் மற்றும் ஹீயூஸ்டன் நகரங்கள் பெயரிடப்பட்டன. இதே சிலைகளின் மாதிரிகள் வாஷிங்டன் டிசியிலும் இருக்கின்றனவாம்.
Stephen F. Austin Statue, State Capitol Building, Austin, Texas by Elizabet Ney
Stephen Austin
அதன் இருபுறத்திலும் இரு மிகப்பெரிய சித்திரங்கள் இருந்தன. (Oil Painting On Canvas). டெக்சஸில் நடந்த இருபெரும் போர்களைச்சித்தரித்த அந்தப் படங்கள் டெக்சஸின் மிகச் சிறந்த ஓவியரான வில்லியம் ஹென்ரி ஹடில் (William Henry Huddle 1847-1892)அவர்களால் வரையப்பட்டது.

அதனைத் தாண்டி ஹாலில் நுழைந்தால் அது பல மாடங்களைக் கொண்டு வட்டவடிவில் அமைக்கப்பட்டிருந்தது. அதில் ஒரே கூட்டமாக இருந்தது. என்னவென்று எட்டிப்பார்த்தால், அங்கே அழகான சீருடை அணிந்த இளம் சிறுவர்களும் சிறுமிகளும் நின்று கிறிஸ்மஸ் கேரல் பாடல்களை பாடிக்கொண்டிருந்தனர். 


முழுவதும் வெள்ளைப் பிள்ளைகள் இருந்த இடத்தை உற்று நோக்கினால் ஓரிரு கறுப்புப் பிள்ளைகள் இருந்தன. அட மேலும் பார்த்தால் நம் இந்தியப் பிள்ளைகளும் அதில் இருந்தனர் அவர்களை நோக்கி கையை அசைத்தேன். கண்கொள்ளாக் காட்சியா அது காதுகளையும் இனிய இசையால் நிறைத்தது. சிறிது நேரம் அங்கிருந்து அப்பாடல்களைக் கேட்டோம். அந்த ஹாலின் மார்பிள் தரையில் பெரிய சீலும் (The Great Seal) அதனைச் சுற்றி டெக்சஸ் மாநிலத்தின் ஆறு சீல்களும் வரையப்பட்டிருந்தன.    


வலதுபுறம் திரும்பி கார்டனில் நடந்தால் அங்குதான் செக்ரட்டரி ஆஃப் ஸ்டேட் (Secretary of State) அவர்களின் அலுவலகம் இருப்பதாகக் கூறினார்கள். அன்றைய நாளில் அவர்கள் இல்லை. ஆனால் கிட்டப் போய்ப் பார்த்தால் என்ன ஆச்சரியம். அவர் ஒரு பெண், அதுவும் இந்தியர்.
தொடரும் (அடுத்த பதிவில்   முடியும்)
Thursday, March 26, 2015

ஆட்டுக்குட்டி முட்டையிட்டு !!!!!!!!!!!!

எச்சரிக்கை: சைவ உணவு சாப்பிடுபவர்கள் இதைப் படிக்க வேண்டாம்.
  1. Goat
"தம்பி சேகப்பா, போடா சீக்கிரம் போய் மட்டன் வாங்கிட்டு வந்துரு", என்றார் அப்பா ஒரு சனிக்கிழமை காலை வேளையில். நான் ஆறாவது படிக்கும் சமயம் அது. கடைக்குத் தனியாகச் சென்று மட்டன் வாங்கும் அளவுக்கு என்னைப் பெரிய பையனாக மதிக்கிறார் என் அப்பா என்று சிறிது மகிழ்ச்சியாக இருந்தாலும், காலையில் எழுப்பி விடுகிறார்களே என்ற சிறிது எரிச்சலும் வந்தது.
கீழத்தெருவுக்கு போகும் வழியில் கறிக்கடைகள் இருந்தன. அதில் முதல்கடை ரஹீம் கடை. எப்போதும் என் அப்பா அங்குதான் வாங்குவார். தேவதானப்பட்டி முழுவதற்கும் அது ஒன்றுதான் கறிக்கடைகள் இருக்கும் இடம். ஒரு நாலைந்து கடைகள் தான் இருக்கும். அப்போதெல்லாம் கோழிக்கறி கடைகள் கிடையாது. வீட்டுக்கு வீடு கோழி வளர்க்கும் போது, யாரு கடையில் போய் வாங்குவார்கள். முழுக் கோழியை வாங்கி அதனை அடித்து என் அம்மாவுக்கு சமைக்கத் தெரியாது. எங்கள் வீட்டில் 'லெகான்' கோழிக்கறி வாங்குவதென்றால், பக்கத்து டவுணான பெரியகுளத்திற்குத் தான் போக வேண்டும்.  எனவே எங்கள் வீட்டில் வாரமிருமுறை,  சமயங்களில் மூன்று முறை (புதன்,சனி,ஞாயிறு) எப்போதும் ஆட்டுக்கறிதான்.  
மாட்டுக்கறி, மூச், அது தெற்குத் தெருவில்தான் விற்கும் என்பதாலோ அல்லது வேறு காரணங்களாலோ, அதைச் சாப்பிட்டும் பழக்கமில்லை. அது இன்றுவரை தொடர்கிறது.
ஒரு மஞ்சள் பையையும் பணத்தையும் வாங்கிக் கொண்டு  கிளம்பும் போது, "சேகப்பா பார்த்து வெள்ளாடுதான் வாங்கனும், வாலை இழுத்துப்பார்", என்றார். சரிப்பா என்று சொல்லிவிட்டு வெளியே சென்றேன்.
என் அப்பாவும் அம்மாவும் பாசமாக கூப்பிடும் போது 'சேகப்பா' என்பார்கள். ராஜசேகர் என்னும் என் பெயரை (மாறிப்போன என் பெயரின் கதையைப் படிக்க இங்கே சுட்டவும் http://paradesiatnewyork.blogspot.com/2013/05/blog-post_17.html ) சுருக்கமாக 'சேகர் என்பதோடு 'அப்பன்' என்று விகுதி சேர்வதுதான் 'சேகப்பன்'. கோவம் வந்தால் என் அப்பா 'படவா ராஸ்கல்' என்றும் என் அம்மா "நீசப்பய", என்றும் செல்லமாகவும் (?) கூப்பிடுவார்கள். அய்யய்யோ கதை டிராக்  மாறுது.
நான் ரஹீம் கடைக்குச் சென்றபோது, அப்போது தான் 'அஜரத்' வந்து பிஸ்மில்லா சொல்லி, ட்டை கழுத்தில் அறுத்து, ஒரு அலுமினியக் கோப்பையில் அதன் ரத்தத்தை பிடித்துக் கொண்டிருந்தனர். ரத்தப் பொரியல் இருமலுக்கு நல்லது என்று என் ஆயா எப்போதாவது செய்வார்கள். இட்லியில் தொட்டுச் சாப்பிடுவோம். அப்ப சாப்பிட்டதோடு   சரி . அதன் பிறகு சாப்பிடவே இல்லை.
        ஏற்கனவே அறுக்கப்பட்டு, தோலுரிக்கப்பட்டு, தொங்கிக் கொண்டிருந்த சற்றே பெரிய சைஸ் ஆட்டில், ஒரு சிறுவன் கறுப்புக் கலர் வாலை வைத்து தைத்துக் கொண்டிருந்தான். இதைத்தான் சொல்லி, எங்கப்பா எச்சரித்திருந்தார்.
என்னைப்பார்த்துவிட்டு ரஹீம் பாய், "வாங்க தம்பி, வாத்தியாரு இன்னிக்கு வரலியா என்றார்". "இல்லை பாய், அதான் நான் வந்திருக்கேன்ல," என்றேன். “ ஒரு அஞ்சு நிமிஷம் பொறு இதோ ஆயிருச்சு”, என்று சொல்லி, ஆட்டைத் தொங்க விட்டு, கை முஷ்டியால் தோலை அப்படியே உரித்தெடுத்தார். ஆட்டை இரண்டாக வகுந்து, “சார் வீட்டுக்கு தொடைக்கறிதான் தரனும்”, என்று தனக்குள் சொல்லிக் கொண்டார்.  
  1. Sheep
“பாய், வெள்ளைதானே”, என்றேன். வெள்ளை என்றால் வெள்ளாடு. "என்ன தம்பி உன் கண் முன்னாலதான வெட்டினேன்”, என்றார். தோலை உரித்தபின் வெள்ளாட்டுக்கும், செம்மறியாட்டுக்கும் என்ன வித்தியாசம் இருக்கப்போகிறது. ஆனால் சாப்பிடும் போது எனக்கு இன்னும் வித்தியாசம் தெரிந்துவிடும். வெள்ளாட்டைவிட செம்மறியாடு சற்றே விலை குறைவு.  பெரும்பாலானோர் வெள்ளாடுதான் கேட்பார்கள் என்பதால் தான், இந்த வாலை வெட்டி தைக்கும் வேலை.   
வெட்டிய கறியை வாங்கிக் கொண்டு, வீடு திரும்பினேன் . எதற்காக வெள்ளாடுதான் (Goat) தான் சாப்பிடனும்னு சொல்றார்னு யோசித்துக் கொண்டே நின்ற போது, அப்பா  தம்பிகளுக்கும் கோமனம் கட்டிவிட்டு, மணப்பலகையில் உட்கார வைத்து, நல்லெண்ணெயை தலையிலும் உடம்பிலும் நல்ல அரக்கப் பறக்க தேய்த்துவிட்டார். 'நல்லெண்ணெய்' கண்ணில் வழிந்து எரிச்சலைக் கூட்டி 'கெட்டெண்ணெய்' ஆனது. தலைக்குப் போடப்போகும் சீயக்காய் பொடியை (எங்கம்மா அரைத்தது) நினைத்தால் பகீரென்றது. கண்கள் விஜயகாந்த் போல ஆகிவிடும்.
ஒரு வழியாகக் குளித்து முடித்து, பள்ளிக்குக் கிளம்பும் முன் (அப்போதெல்லாம் சனிக்கிழமையும் பள்ளி இருக்கும்) கொஞ்சம் தயக்கமாய் இருந்தாலும் என் அப்பாவிடம் கேட்டேன், "அப்பா எதுக்கு வெள்ளாடுதான் சாப்பிடனும் ? ", எனக்கேட்டபோது, அருமையாக விளக்கினார் ஆசிரியர் அல்லவா.
"சேகர், வெள்ளாடு என்பது மிகவும் புத்திசாலியான மிருகம், காட்டில் எவ்வளவு தூரம் சென்றாலும், தனியாகவே வீடு வந்து சேர்ந்துடும். அதோடு எதை சாப்பிடனும் எதை சாப்பிடக் கூடாதுன்னு அதுக்கு நல்லாவே தெரியும். அதனால கண்டதைச் சாப்பிட்டு Sick  ஆவாது. ஆனா செம்மறியாடு (Sheep) அப்படியில்லை. அதுக்கு அவ்வளவு அறிவில்லை. தனியாப்போனா அவ்வளவுதான், காணாமப்போயிடும். தனியா வீட்டுக்கு வரவும் தெரியாது. அதுமட்டுமில்லை, எதை சாப்பிடனும் எதை சாப்பிடக்கூடாதுன்னும் தெரியாது. கண்டதைச் சாப்பிட்டு, உடம்பும், வயிறும் சரியில்லாமப்போய் செத்துப் போயிறும். Sheepக்குத் தான் Shepherd தேவை.  Goatherd ன்னு சொல்றதிலையே", என்று சொன்னார்.  ஐந்து அறிவுக்குள்ள இத்தனை வித்யாசம் இருக்கான்னு நினைச்சேன். அது சரி ஆறு அறிவுக்குள்ளும் எத்தனை வித்யாசம் பார்க்கிறோம் .
அடிக்கடி காணாப் போற நம்மள மாதிரி ஆட்கள்  இருக்கிறதாலதான், இயேசுநாதர் எப்பவும் ஒரு Lamb -ஐ துக்கி வச்சிருக்கார்னு நெனைக்கிறேன்.

 “அதோடு செம்மறியாடு அடிக்கடி செத்துப் போயிரதால சிலசமயம் கறிக்கடைக் காரர்கள் அதை யாருக்கும் தெரியாமல் விற்பதுமுண்டு, அது நோயால் செத்திருக்கும் என்பதால்  பிரச்சனை வரும்", என்றும் சொன்னார்.  
ஓ இதில இவ்வளவு பிரச்சனை இருக்கா என்று நினைத்துக் கொண்டு அன்றிலிருந்து இன்று வரை வெள்ளாட்டுக்கறிதான் சாப்பிடுவது. ஆனால் மட்டன் (Mutton) என்பது  பொதுவான பெயர். செம்மறி ஆட்டோட இளம் குட்டிக்கு Lamb என்று பெயர். Goat ஓட இளம் குட்டிக்கு Baby Goat -ன்னு  பேர் . அதிலும் பெண் ஆட்டைவிட ஆண் ஆடுதான் நல்லா இருக்கும் - கெடாக்குட்டினு சொல்வாங்க. மாட்டோட இளம் குட்டிக்கு veal என்று பெயர். ஆனால் வீலென்று கத்திக் கொண்டு நான் விலகி விடுவேன்...
ஆமா எனக்கு ஒரு சந்தேகம் செம்மறியாடு தான் வெள்ளையாக இருக்கும். வெள்ளாடு  பெரும்பாலும் கறுப்பாகத்தான் இருக்கும். கறுப்பாக இருக்கும் ஆடை எதுக்கு வெள்ளாடுன்னு சொல்றாங்கன்னு புரியலயே, தலையே  சுத்துது.


முற்றும்