Showing posts with label தூத்துக்குடி. Show all posts
Showing posts with label தூத்துக்குடி. Show all posts

Monday, June 4, 2018

ஸ்டெர்லைட் என்ன செய்கிறது?


பல உயிர் பலிகளை தொடர்ந்து வாங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலை இப்போது மூடப்பட்டு இருக்கிறது .அதன் பின்னணி பற்றிய நான் படித்த தகவல்களை  உங்களுக்கு கீழே கொடுத்துள்ளேன்.  
ஸ்டெர்லைட் என்ன செய்கிறது?
லண்டனில் செயல்பட்டுவரும் வேதாந்தா ரிசோர்சஸ் நிறுவனத் தலைவர் அனில் அகர்வாலுக்குச் சொந்தமானதே ஸ்டெர்லைட் நிறுவனம். அந்நிறுவனத்தின் தாமிர ஆலைக்கு குஜராத், கோவா, மகாராஷ்டிரா என்று பல மாநிலங்களிலும் அனுமதி மறுக்கப்பட்டு, கடைசியாகத்தான் தூத்துக்குடிக்கு வந்தது. 1994-ல் அதிமுக ஆட்சியில் அடித்தளம் அமைக்கப்பட்டது. 1996-ல் திமுக ஆட்சியில் செயல்படத் தொடங்கியது.
வேதாந்தா ரிசோர்சஸ்க்கு உலகின் பல நாடுகளிலும் தாமிரத் தாதுவை வெட்டியெடுக்கும் சுரங்கங்கள் உள்ளன. இந்தச் சுரங்கங்களிலிருந்து வெட்டியெடுக்கும் தாமிரத் தாது, உருக்கப்பட்டு தாமிர கேத்தோடு கம்பிகளாக மாற்றப்படுகின்றன.
1996-ல் முதன்முதலாக தூத்துக்குடி துறைமுகம் வழியே, ஆலைத் தேவைக்கு தாதுப்பொருட்கள் வந்தன. அப்போதே, ஆலைக் கழிவுகளால் மீன்வளம் பாதிக்கப்படும் எனப் படகுகளின் மூலம் கடல்வழியே துறைமுக முற்றுகைப் போராட்டம் நடத்தினர் மீனவர்கள். தேசியப் பூங்காவாக அறிவிக்கப்பட்ட மன்னார் வளைகுடாவின் அருகிலுள்ள பகுதிகளில் தொழிற்சாலைகளை நிறுவக் கூடாது. ஆனால், அந்த விதிமுறையை ஸ்டெர்லைட் மீறியதாகவும் குற்றச்சாட்டு உண்டு. ஆலையிலிருந்து கடல்வரைக்கும் அமைக்கப்பட்டிருந்த குழாய்கள் தொடர்பாகவும் சர்ச்சை எழுந்தது.
1997 ஜூலை 5-ம் தேதியை அத்தனை எளிதில் கடந்துசெல்ல இயலாது. ஆலையிலிருந்து நச்சுப்புகை வெளியேறி, 150-க்கும் அதிகமானோர் மயங்கினர். சில கர்ப்பிணிகளுக்குக் கருச்சிதைவும் நிகழ்ந்ததாகச் சொல்கின்றனர். அப்போது அதிகாரிகள் ஆய்வுசெய்து ஆலையை மூடினார்கள். 38 நாட்களில் மீண்டும் ஆலை திறக்கப்பட்டது. அதற்கு சில வாரங்களுக்குப் பின்பு செம்புக் கலவை உலை வெடித்து இரண்டு தொழிலாளர்கள் பலியானார்கள். மீண்டும் சம்பிரதாய மூடல், அதன்பின் திறப்பு. 1999-ல் நச்சுப்புகை வெளியேறி, அருகிலிருந்த அகில இந்திய வானொலி நிலைய ஊழியர்கள் மயங்கிவிழுந்தனர்.
சர்ச்சைகள், வழக்குகள்
தாமிரத்தை உருக்கித் தகடுகளாக்கும்போது, அதன் உபபொருட்களாகக் கிடைக்கும் தங்கம், பிளாட்டினம், பாஸ்பாரிக் அமிலம், சல்பியூரிக் அமிலம் உள்ளிட்டவையும் நல்ல விலை போகும். அதுகுறித்து அரசுக்கு சரியான தகவல்கள் கொடுப்பதில்லை என்பதும் ஒரு குற்றச்சாட்டு. இதே காரணத்துக்காக இந்நிறுவனத்தின் துணைத் தலைவர் வரதராஜன் 2010-ல் கைதுசெய்யப்பட்டார். அப்போது கலால் துறை, ஸ்டெர்லைட் நிறுவனம் 750 கோடிக்கு வரிஏய்ப்பு செய்திருந்ததாகத் தெரிவித்திருந்தது. கழிவுகளை வெளிநாட்டுக்கு அனுப்புவதாகச் சொல்லி, கட்டி வடிவில் விலையுயர்ந்த உலோகங்களை வரிகட்டாமல் அனுப்பிவைத்ததும் சர்ச்சையானது.
1996 நவம்பர் 7-ல் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கத்தின் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. ஆலைக்குத் தடைவிதிக்க வேண்டும் எனக் கேட்டிருந்தார் மனுதாரரும், வழக்கறிஞருமான பிரகாஷ். இவ்வழக்கில் தன்னையும் சேர்க்கக் கோரி வைகோ மனுபோட, அவரையும் சேர்த்துக்கொண்டது உயர் நீதிமன்றம். வழக்கில், தானே ஆஜராகி வாதாடினார் வைகோ. உயர் நீதிமன்றமோ, தேசிய சுற்றுச்சூழலுக்கான பொறியியல் ஆராய்ச்சி மையம் என்னும் ‘நீரி’யிடம் ஆலையை ஆய்வுசெய்து அறிக்கை கேட்டது.
Image result for sterlite problem in thoothukudi

ஆலைக்குள் பாதுகாப்பற்ற முறையில் கழிவுகளைக் குவிந்து வைத்துள்ளனர், ஆலை உள்ள சுற்றுவட்டாரக் கிராமங்களில் நிலத்தடி நீரில் தாதுப் பொருட்கள் அதிகளவில் உள்ளன என்று நீரி அறிக்கை கொடுக்க, ஆலையை மூட உத்தரவிட்டது உயர் நீதிமன்றம். ஆனால், அறிக்கையில் உள்ள குறைகளைக் களைந்துவிட்டதாக மனுசெய்து, சிறிய இடைவெளிக்குப் பின்பு மீண்டும் இயங்கத் தொடங்கியது ஸ்டெர்லைட். நீரியை மீளாய்வு செய்யக் கேட்டது உயர் நீதிமன்றம். மீளாய்வு அறிக்கை ஸ்டெர்லைட்டுக்குச் சாதகமாக இருந்தது. இந்நிலையில், 1996-ல் தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு 2010-ல் வந்தது. அதில் நீதிபதி எலிப்பி தர்மாராவ், ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு உத்தரவிட்டார்.
உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்த ஸ்டெர்லைட், உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு இடைக்காலத் தடை பெற்றது. உச்ச நீதிமன்றத்தில் இவ்வழக்கின் தீர்ப்புநாள் நெருங்கிவந்த நிலையில், 2013-ல் ஆலையிலிருந்து கந்தக-டை-ஆக்ஸைடு கசிந்தது. பலரும் மயங்கினர். தமிழக அரசே ஆலையை மூட உத்தரவிட்டது. ஆனால், அடுத்த சில நாட்களிலேயே ஆலை தொடர்ந்து இயங்க உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம். உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுசெய்தார் வைகோ. ஆனால், தேசிய பசுமைத் தீர்ப்பாயம், சீராய்வு மனு என அத்தனையிலும் ஸ்டெர்லைட்டே வெற்றிபெற்றது.
இத்தனைக்கும் நடுவில் ஸ்டெர்லைட்டை எதிர்த்து தொடர்ந்து போராட்டங்கள் நடந்துகொண்டிருந்தன. மதிமுக, இடதுசாரிக் கட்சிகள் எனப் பலரும் போராடினர். 2013-க்குப் பின்பு அது வெகுமக்கள் போராட்டமாக மாறியது.
ஸ்டெர்லைட் தரும் விளக்கம்
Related image
ஸ்டெர்லைட்டின் தற்போதைய ஆண்டு உற்பத்தித் திறன் 4 லட்சம் டன். உற்பத்தியை அதிகரிப்பதற்காக ஆலையை விரிவாக்கம் செய்ய முயல, மீண்டும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.
இதுகுறித்து ஸ்டெர்லைட் நிர்வாகம் அளித்துள்ள விளக்கத்தில், ‘விரிவாக்கத்துக்கு முறையான அனுமதி பெறப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட்டில் கழிவுகள் வெளியேற்றுவது பூஜ்ஜியம் அளவுதான். கழிவுகளையும் சூழல் மாசு ஏற்படுத்தாதவகையில் பயன்படுத்துகிறோம். கடல்நீரை, நன்னீராக மாற்றியே பயன்படுத்த உள்ளோம். மாசு வெளியேற்றத்தையும் மிகக் கவனமாகக் கண்காணிக்கிறோம்.
ஸ்டெர்லைட் விரிவாக்கத்தின் மூலம் மேலும் பலருக்கு வேலை கிடைக்கும். ஸ்டெர்லைட் முன்பைவிட நான்கு மடங்கு உற்பத்தியை பெருக்கப்போகிறது என்பதெல்லாம் வதந்தி. ஒரு மடங்குதான் அதிகரிக்கப்போகிறோம்’ என்பதாக நீள்கிறது அறிக்கை.
Related image
இப்போது மூடினாலும் இது நிரந்தரம் இல்லை மீண்டும் விரைவில் திறக்கப்படும் என்று சொல்லுகிறார்கள்.அதோடு இப்போது இதில் வேலை  செய்த 4000 பேர்கள் தங்கள் வேலையை இழந்திருக்கிறார்கள் .அரசு அவர்களுக்கும் நஷ்ட ஈடு பெற்றுத்தருவதோடு , மாற்று வேலையையும் செய்து தரவேண்டும்.

நன்றி தி ஹிந்து - என்.சுவாமிநாதன்,