Thursday, December 21, 2017

வைகோ என்ன செய்யவேண்டும்?

Image result for Vaiko

          வைகோ எனக்கு மிகவும் பிடித்த தலைவர் என்று இருந்து அதன்பின் பிடிக்காத தலைவர்களுள் ஒருவர் என்று ஆகி சில வருடங்கள் ஆகிறது.
          பேச்சுத்திறமை, எழுத்துத்திறமை, தலைமை ஆளுமை, தமிழ் மட்டுமின்றி ஆங்கிலத்திலும் நல்ல புலமை, தமிழ்நாடு மட்டுமல்லாது இந்திய நாடு ஏன் இலங்கை மலேசியா போன்ற உலகின் சில பகுதிகளிலும் மதிக்கப்பட்ட தலைவர்.
          கலைஞர் கருணாநிதி அவருக்கு பலமுறை MP பதவி கொடுத்து அழகு பார்த்தார். வைகோவுக்கும் கலைஞர் மேல் அதீத பாசம் இருந்தது. ஆனால் ஸ்டாலினுக்கும் இவருக்கும் ஒத்துப்போகவில்லை .ஒரு கட்டத்தில் தன் மகன் ஸ்டாலினுக்கு  மேல் போய்விடுவாரோ என்பதால் சிறிதே ஓரம் கட்டப்பட்டு இறுதியில் ஒதுக்கப்பட்ட வைகோ வெளியே சென்று வேறு கட்சி ஆரம்பிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார். இலங்கை சென்று பிரபாகரைப்பார்த்தது என்ற காரணம் ஒரு சாக்குதான்  .
Image result for Vaiko with karunanidhi

          ஆனால் திமுகவில் இருந்த பலருக்கும் வைகோவின் மேல் பற்று இருந்தாலும்  கருணாநிதியை விட்டுவிட்டு அவரை ஆதரிக்கும் அளவுக்கு இல்லை என்பதால் வைகோ வளர முடியவில்லை.
          தேர்தல்களிலும் தனித்து நிற்குமளவுக்கு பலமில்லை என்பதால் அதிமுக மட்டுமல்ல, வெட்கத்தை விட்டு மனஸ்தாபத்தில் பிரிந்து வந்த திமுக கூடவும் மாறி மாறி கூட்டணி வைக்க வேண்டிய நிலை.
          ஆனாலும் திமுகவை விட அதிமுகவில் அதிக மூக்குடைப்புகள் நடந்தன. அதுவும் போன தேர்தலில் நடந்தது மிக அநியாயம். தோற்கும் பக்கம் நின்று விஜய்காந்தைப் பிடித்துக் கொண்டு வீரவசனம் பேசி அசிங்கப்பட்டதோடு, தான் ஜெயிப்பதல்ல திமுகவை தோற்கடிப்பதே என் இலட்சிய திட்டம் என்று சொல்லி தரம்  தாழ்ந்தார்.
Related image

வைகோ செய்த தவறுகள்:
1.   என்னதான் மனஸ்தாபம் இருந்தாலும் தன்னை வளர்த்த தலைவரை அனுசரிக்காமல் வெளியே வந்தது. இவருக்கு இணையான ஒருவர் திமுகவில் இப்போது இல்லை .
2.   தமிழகப் பிரச்சனைகளை அதிகமாக முன்னெடுக்காமல், நீண்ட நெடிய காலமாக இலங்கைப் பிரச்னையையே பேசி தமிழக மக்களிடமிருந்து அந்நியப்பட்டது. வளர்த்து விட்ட தலைவரான கருணாநிதியை பலசமயம் மிகவும் கீழத்தரமாக திட்டியது.
3.   கொள்கைப் பிடிப்பின்றி மாறி மாறி கூட்டணிகள் அமைத்து ஏன் பிஜேபி கூடவும் கூட்டணி சேர்ந்தது.
4.   கூட்டணி சேர்ந்தும் ஜெயிக்க முடியாமல் சட்டசபையில் பங்கெடுக்க முடியாமலே போனது.
5.   தனிப்பட்ட செல்வாக்கால் ஒருமுறை கூட ஜெயிக்க முடியாதது.
6.   உணர்ச்சி வசப்பட்டு எடுத்த கடைசி நேர முடிவுகளால் சுயமரியாதையை இழந்து போனது.
7.   தன் கூட இருந்த இரண்டாம் கட்ட தலைவர்களை வளர்க்க முடியாமல் போனதால் இழந்து போனது.
8.   கடைசி நேர குளறு படிகளால் காசு வாங்கி விட்டார் என்ற கெட்ட பெயரும் வந்தது
         இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

வைகோவின் தற்போதைய நிலை:
1.   தான் கூட்டுச் சேர்ந்த மக்கள் கூட்டணி இப்போது ஒன்றுமில்லாமல் போனது. குறிப்பாக விஜய் காந்தின் கட்சி.
2.   தனித்து நிற்கும் பலம் இப்போது மதிமுக, தேதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், இரு கம்யூனிஸ்ட்டு காட்சிகள், பாமகா, சீமான் என்று யாருக்கும் கிடையாது.
3.   ஜெயலலிதாவுக்குப் பின்னைய அதிமுக என்பது அழியும் திராவிட முன்னேற்றக் கழகமாக ஆகிப்போனது.
4.   ஊழலில் ஊறிய, குண்டர்கள் மற்றும் கோமாளிகள் கூட்டமான அதிமுகவுக்கு அவரால் இனி ஆதரவு அளிக்க முடியாது.
5.   சசிகலா, தினகரன், கும்பலிடமும் போகமுடியாது. கொள்கையை விட்டு வெறும் பணத்திற்காக நாஞ்சில் சம்பத் அங்குதான் இருக்கிறார்.
6.   எந்த ஒரு நபருக்காக திமுகவை விட்டு வெளியேறினாரோ அதே நபரான மு.க.ஸ்டாலினிடம் போக வேண்டிய நிலை.
7.   அவருக்குப்பின் கட்சியை வழி நடத்தும் வலிமை யாரிடமுமில்லை.
வைகோ என்ன செய்ய வேண்டும்?:
Image result for Vaiko with stalin

1.   மு.க. ஸ்டாலினிடம் முழுவதாக ஒப்புரவாகி, தன் கட்சியை திரும்பவும் தாய்க் கட்சியான திமுகவுடன் இணைக்க வேண்டும். ஏனென்றால் அவருக்குப் பின் இதுதான் நடக்கும் என்பதால் இப்போதே செய்ய வேண்டியது அவசியம். எம்ஜியாரே இதைச் செய்ய நினைத்தபோது வைகோ ஏன் செய்யக்கூடாது? ஏனென்றால் அவருக்குப்பின் நிச்சயமாக மதிமுக சுவடில்லாமல் அழிந்துவிடும்.
2.   முடிந்தால் அன்பழகனுக்கு ஓய்வு கொடுத்து பொதுச் செயலாளர் பதவியைக் கோரிப் பெறலாம்.
3.   முதலமைச்சர் பதவி ஸ்டாலினுக்குத்தான் என்றும் எக்காலத்திலும் அதற்கு முயற்சி பண்ண மாட்டேன் என்றும் வாக்குக் கொடுத்துவிட வேண்டும். வீண் பிரச்சனைகளை இது தவிர்க்கும்.
4.   மீண்டும் பாராளுமன்றம் புகலாம். இல்லையென்றால் ஏதாவது தமிழ்ப்பணி எடுத்துக் கொண்டு வாக்கு அரசியலிலிருந்து முற்றிலுமாக ஒதுங்கிக் கொள்ளலாம்.
5.   திமுகவின் உள்கட்ட பல்கலைக்கழகம் ஒன்றை ஆரம்பித்து அதற்கு துணை வேந்தர் ஆகலாம்.
6.  உலகமெங்கும் சுற்றி தமிழ்ப்பணி செய்யலாம், இதற்கு அரசியலிலிருந்து ஓய்வு பெற வேண்டியது அவசியம். இல்லையென்றால் அவரது திறமைகளும் உழைப்பும் யாருக்கும் பயன்படாமலே போய்விடும்.
Merry Christmas SMS in Tamil நன்பர்கள்  அனைவருக்கும் என் இனிய கிறிஸ்துமஸ் தின வாழ்த்துக்கள்.இறைமகன் இயேசு உங்களுக்கு மகிழ்ச்சியையும் நிறைவான மன அமைதியையும் தருவாராக.

Monday, December 18, 2017

இந்த விஷயத்தில் இந்தியாவை விட இலங்கை பரவாயில்லை !!!!!!!


இலங்கையில் பரதேசி -31

இதற்கு முந்திய பகுதியைப்படிக்க  இங்கே சொடுக்கவும்.
http://paradesiatnewyork.blogspot.com/2017/12/blog-post_12.html

Fried Ice cream shop in Colombo

            இருக்கும் சுகரை நினைத்து என் ஃபிகர் உதறினாலும், அதனால் டிஸ்ஃபிகர் ஆனால் அதனைப் பின்னால் கான்ஃபிகர் பண்ணிக்கொள்ளலாம் என்றெண்ணிக் கொண்டு "சரி சாப்பிட்டுத்தான் பார்ப்போமே என்றேன்.
கொழும்பின் மறுபுறம் போனோம் இங்கு அதிகமாக தமிழ் முஸ்லிம்கள் வாழ்வதாகச் சொல்லிவிட்டு அங்கிருந்த ஒரு ஐஸ்கிரீம் கடைக்கு முன்னால் காரை நிறுத்தினான் பொறித்த ஐஸ்கிரீம் என்றால் சூடாக இருக்குமே என்று நினைத்த எனக்கு அதெப்படி ஐஸ்கிரீம் சூடாக இருக்க முடியும் என்று வியப்பாக இருந்தது.

உள்ளே போய், “அம்ரி முழுதாக என்னால் சாப்பிடமுடியாது. அப்படியே சாப்பிட்டால் உன்பாடு திண்டாட்டமாகி விடும் எனவே "நீ பாதி நான் பாதி கண்ணே” என்று பாடினேன். அம்ரி கலவராகி என்ன சார் என்றான். “இல்லப்பா பாட்டு அதிரடியா வந்துருச்சு”, என்று ஜகா வாங்க, அம்ரி ஆர்டர் செய்தான்.
அதன் ஓனரும் தமிழ் முஸ்லீம்தான் பல தலைமுறைகளாக அங்கிருப்பதாகச் சொன்னார். கொஞ்ச நேரத்தில் ஆவி பறக்க (?) ஐஸ்கிரீம் வந்தது. வெளியே சிறிதே சூடாக ஆனால் உள்ளே கூலாக மிகவும் வித்தியாசமாகவும் கிரிஸ்ப்பாக மொறுமொறுவென்று இருந்தது. சுவையாகவே இருந்தது. கொழும்பு சென்றால் நீங்களும் சாப்பிட்டுப் பாருங்கள்.
“சார் டின்னருக்கு எங்கே போகலாம்?”
"இல்லப்பா ஐஸ்கிரீமே போதும். ரூமில் கொஞ்சம் பழங்கள் இருகின்றன".
ரூமில் போய் இறங்கும் போது இரவு மணி 10. அன்று பார்த்த அனைத்தையும் அலசிக் கொண்டே அப்படியே உறங்கிப் போனேன்.
அடுத்த நாள்தான் சுற்றிப்பார்க்கும் கடைசி நாள் என்பதால் காலையிலேயே ரெடியாகி உட்கார அம்ரி வந்தான். நல்ல பையன் கிடைத்தான் எனக்கு.
“அம்ரி கடைசி நாள் என்பதால் எல்லாவற்றையும் பார்த்துவிட வேண்டும்”
 “சரி சார் வாங்க போகலாம்?”
“முதலில் எங்கே?
மியூசியத்துக்குப் போகனும்னு சொல்லிங்கல்ல, முதலில் அங்கே போவோம்.”
“வெரிகுட், அதன் பெயர் என்ன?”
"நேஷனல் மியூசியம் ஆஃப் கொழும்பு" .
பேசிக் கொண்டே மியூசியமும் வந்து சேர்ந்தது. பார்ப்பதற்கு ஏதோ ஒரு ஐரோப்பிய அரண்மனை போல் தோற்றம் தந்தது. அதனைப் பற்றி கொஞ்சம் தெரிந்து கொண்டு உள்ளே போகலாம் என்று நினைக்கிறேன்.
Image result for national museum of colombo
National Museum 
புல்லட் பாயிண்ட்களில் சுருக்கமாகத் தந்து விடுகிறேன். என்ன மக்கா?
1.   கொழும்பில் உள்ள இரண்டு மியூசியங்களில் இது மிகவும் பெரிது. கொழும்பில் மட்டுமல்ல, இலங்கையிலேயே மிகப்பெரிய மியூசியமும் இதுதான்.
2.   இலங்கையில் மத்திய அரசின் தேசிய மியூசியங்களின் துறையால் (Department of National Museum of Central Government) இது நிர்வகிக்கப்பட்டு வருகிறது.
3.   சர். வில்லியம் ஹென்ரி கிரிகரி என்பவர் இலங்கையின் பிரிட்டிஷ் கவர்னராக இருந்தபோது, ஜனவரி 2ஆம் தேதி 1877-ஆம் வருடத்தில் இது நிறுவப்பட்டது.
4.   இத்தாலிய வடிவமைப்பில் உருவாக்கப்பட்ட இந்தக் கட்டிடத்தின் ஆர்க்கிடெக்ட் J.G.ஸ்மிதர் என்பவர்.
Related image

5.   1872ல் கட்டிட வேலை ஆரம்பிக்கப்பட்டு 1876ல் கட்டிமுடிக்கப்பட்டது.
6.   இதன் கட்டிடப்பணியை மேற்கொண்டவர் அரசி மரிக்கார் வாப்ச்சி மரிக்கார் என்பவர். இவர்கள் குடும்பம் 9ஆம் நூற்ராண்டில் இடம் பெயர்ந்த ஷேக்  ஃபரீத் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவர் தான் கொழும்பிலுள்ள மிகவும் முக்கியமான   கட்டிடங்களான ஜெனரல் போஸ்ட் ஆபிஸ், கொழும்பு கஸ்டம்ஸ், பழைய டவுன் ஹால், காலே ஃபேஸ் ஹோட்டல், விக்டோரியா ஆர்க்கேட், கிளாக் டவர், போன்ற இன்னும் இருக்கும் பல கட்டிடங்களைக் கட்டியவர்.
Related image
Crown of Kandy king
7.   இது தேசிய மியூசியம் ஆனபிறகுதான் இதன் கிளை மியூசியங்களாக யாழ்ப்பாணம், கண்டி,ரத்னபுரி ஆகிய இடங்களில் (1942ல்) ஆரம்பிக்கப்பட்டன. அதன்பிறகு ஒன்பது புதிய கிளைகளும் திறக்கப்பட்டதோடு ஒரு மொபைல் மியூசியமும் உருவாக்கப்பட்டது.
Kandy Kings throne
8.   1885ல் உருவாக்கப்பட்ட ஒரு அரிய நூலகமும் இங்கு இருக்கிறது. 1 கோடியே 20 லட்சம் புத்தகங்கள் பல தலைப்புகளில் இங்கு இருக்கின்றன.
9.   இங்கு பல ஓலைச்சுவடிகளும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அவை சிங்கள, பாலி, சமஸ்கிருதம், பர்மா, தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் அமைந்தவை. இவை புத்தமதம், சிங்கள இலக்கியம், வரலாறு, மருத்துவம், ஜோதிடம், கால்நடை மருத்துவம், வரைவுக்கலை, கட்டிடக்கலை போன்றவையும் அடங்கும்.
உள்ளே இருந்தவற்றுடன் என்னைப் பெரிதும் கவர்ந்தவை கண்டி அரசர்களின் சிம்மாசனம் மற்றும் கண்டி அரச குடும்பங்கள் பயன்படுத்திய தங்க, வைர, முத்து ரத்தின ஆபரணங்கள்.
இவைகளைக் கவர்ந்து பிரிட்டிஷ்காரர்கள் லண்டன் கொண்டு சென்று அங்கே அரச வமிசத்தினரிடம் ஒப்படைத்தனர். ஆனால் இலங்கை அரசு இதனைக் கேட்டுப் பெற்று இந்த மியூசியத்தில் வைத்திருக்கிறார்கள்.
பாருங்கள் சுண்டைக்காய் நாடான இலங்கை, இங்கிலாந்துடன் பேசி இவற்றை வாங்கியுள்ளது. நாமும் தான் இருக்கிறோம். நம்முடைய விலைமதிப்பற்ற கோஹிநூர்  வைரம் இன்னும் பிரிட்டிஷ் வசம் இருப்பது வெட்கக்கேடு. இந்த விஷயத்தில் இந்தியாவை விட இலங்கை பரவாயில்லை. அது தவிர மாலத்திவிலிருந்து கொண்டு வந்த வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த புத்தர் சிலை மற்றும் ஒரு பட்டத்து யானையின் எலும்புக் கூடும் அப்படியே இருந்தது. கொழும்பு செல்லும் மக்கள் அவசியம் பார்க்க வேண்டிய மியூசியம் இது.
-தொடரும்.
 பின் குறிப்பு : அடுத்த வாரம் "இலங்கையில் பரதேசி முடியும்"..அதன்பின் "வேர்களைத்தேடி" என்ற புதிய தொடர் ஆரம்பிக்கிறது .இது நான் வளர்ந்த ஊருக்கு சென்று வந்த மலரும் நினைவுகள்.இதற்கும் உங்களின் ஆதரவைக்கோரி  நிற்கிறேன்.
அன்புள்ள

பரதேசி

Thursday, December 14, 2017

சைட் எ∴பக்ட்டும் மெயின் எ∴பக்ட்டும் !!!!!!!!!!

Image result for Doctor and patient

கடந்த வாரமொரு நாள் வேலை முடித்து வீடு திரும்பி, வழக்கம் போல் என்னுடைய தபால்களை எடுத்துப் பார்த்தேன். இப்போது என் வீட்டில் ஒரு ஆன்ட்டிக் மாடல் மெயில் பாக்ஸ் உள்ளது. போன கோடைகாலத்தில் தான் பொருத்தினேன். அதில் மேல் புறத்தில் வலது பக்கத்தில் ஒரு சிவப்பு நிற மெட்டல் கொடி ஒன்று இருக்கும். அந்தக் கொடியை பறப்பதுபோல் உயர்த்தி வைப்போம். தபால்காரர் அந்தப் பெட்டியில் தபாலைப் போட்டவுடன் உயர்த்தி இருந்த கொடியை கீழ்நோக்கி சாய்த்துவிடுவார். கொடி சாய்ந்திருந்தால் உள்ளே தபால் இருக்கிறதென்று அர்த்தம். நாம் தபாலை எடுத்தவுடன் கொடியை உயர்த்தி வைத்துவிட வேண்டும். இது பழங்கால சிஸ்டம் ஆனாலும் இப்போதும் உதவுகிறது. என்னுடைய வீட்டில் மூன்று குடித்தனக் காரர்கள் இருப்பதோடு எனக்கும் அனுதினம் ஏதாவது தபால் வருமென்பதால், இந்த தபால்களை பிரித்து வைப்பது என்னுடைய அனுதின வேலை.

My Mail Box

அந்தப்படியே பிரித்துப் பார்க்கும் போது அதில் ஒரு பழுப்பு நிற போஸ்ட் கார்டு இருந்தது. அதைப் பார்த்தவுடன் அது என்னவென்று தெரிந்துவிட்டது. ரிஜிஸ்டர்டு பார்சல் அல்லது கடிதம் அல்லது செர்ட்டி∴பைட் தபால் ஏதாவது வந்து அதை வாங்குவதற்கு வீட்டில் யாருமில்லை என்றால் இந்த ஸ்லிப்பை தபால்காரர் விட்டுச்செல்வார் . தகுந்த ஐடியுடன் நாம் அடுத்த நாள் அல்லது குறிப்பிட்ட சில நாள்களுக்குள் தபால் அலுவலகம் சென்று வாங்கிக் கொள்ள வேண்டும். யாரிடமிருந்து தபால் என்று ஸ்லிப்பில்  பார்த்தால் தெரியும். அது என்னுடைய டாக்டர் அலுவலகத்திலிருந்து வந்திருந்தது.
அடுத்த நாள் அலுவலகத்திற்கு சிறிது தாமதமாக வருவேன் என்று சொல்லிவிட்டு என்னுடைய VW ரூட்டான் மினிவேனை எடுத்துக் கொண்டு தபால் ஆபிஸ் சென்று வாங்கி வந்தேன். காரில் உட்கார்ந்து உடனே பிரித்துப் பார்த்தேன். ரத்தப்பரிசோதனையின் ரிசல்ட்டில் கோளாறு இருப்பதாகவும் உடனே டாக்டரை வந்து சந்திக்கும் படியும் எழுதியிருந்தது. என்னடாது பரதேசிக்கு வந்த சோதனை என்று சிறிது கவலையாக இருந்தது.
போன் செய்தால் ரீக்கால் கடிதம் என்பதால் அடுத்த நாள் காலையே வரச் சொன்னார்கள். இல்லாவிட்டால் என்னுடைய டாக்டரிடம் அப்பாய்ன்ட் மென்ட் கிடைக்க குறைந்த பட்சம் ஒரு மாதமாவது வெயிட் பண்ண வேண்டும்.
Image result for Jamaica Medisys

இன்சுயூரன்ஸ், டிஸ்கிளைமர் போன்ற சம்பிரதாயங்களை முடித்துக் காத்திருந்தேன். முதலில் நர்ஸ் கூப்பிட்டு எடை, BP, டெம்பரேச்சர் ஆகியவற்றைப் பார்த்துவிட்டு ஒரு ரூமில் உட்கார வைத்தார். அதுபோல பல எக்ஸாமினேஷன் ரூம் இருக்கும். டாக்டருக்கென்று ஒரு ரூம் கிடையாது. பல எக்ஸாம் ரூமில் காத்திருக்கும் நோயாளிகளிடம் ஒவ்வொருவராக முடித்துவிட்டு வருவார். எல்லா ரூமிலும் இருக்கும் கம்ப்யூட்டரில் லாகின் பண்ணி அவர்களால் நம்முடைய வரலாற்றை அலச முடியும். டாக்டரின் பெயர் பியாலி ரெய்சென் எனக்கு 15வருடமாக இவர்தான் டாக்டர் கல்கத்தாவைச் சேர்ந்தவர். பெங்காலி என்பதால் எனக்குப் பங்காளி.
 பல கிளையன்ட்ஸ் காத்திருந்தாலும், ஒவ்வொரு வரையும் சிரித்த முகத்தோடு பொறுமையாகப் பார்ப்பார். அதனாலேயே அவரைத் தேடிவருபவர் அநேகம். ஏராளமான கிளையன்ட்ஸ் இருப்பதால் இப்போது புதிதாக அவர் யாரையும் சேர்த்துக் கொள்வதில்லை. ஜமைக்கா ஹாஸ்பிட்டல் என்ற பெரிய   மருத்துவமனையின் ஒரு அங்கம் இது, ஜமைக்கா மெடிசிஸ் என்று சொல்வார்கள். அவர்கள் ரெபர் பண்ணுகிற டாக்டர்களும் அதே குழுமத்தில் இருப்பதால் எல்லா ரிசல்ட்களும் பகிரப்பட்டு நம்முடைய அக்கவுன்ட்டில் இருக்கும். அதனை நாம் போகும் மற்ற ஸ்பெஷலிஸ்ட்டுகளும் பார்க்க முடியும். டாக்டர் உள்ளே நுழைந்தார். எனக்கு திக் திக் கென்று பல்சு எகிறியது.

“ஹாய் ஆல்∴பி”
“குட்மார்னிங் டாக்டர்”.
“குட்மார்னிங் ஹவ் ஆர் யூ ?”
“அத நீங்கதான் சொல்லனும், லெட்டர் போட்டிருந்தீங்க?” 
“அதவிடு ஜெர்மனி எப்படி இருந்துச்சு?”
“ஜெர்மனி சூப்பரா இருந்துச்சு டாக்டர், அந்த லெட்டர்?”
“ஜெர்மனியில் எங்கெல்லாம் போனாய்?”
“போறவழியில் போர்ச்சுக்கலில் லிஸ்பன் அப்புறம் ஜெர்மனியில் பெர்லின், லைப்சிக், வார்ட் பர்க், விட்டன்பர்க், எர்∴பர்ட், டிரஸ்டன் போன்ற இடங்களுக்குப் போனேன்”.
“ஓ நான் போனது ∴பிராங்∴பர்ட் மற்றும் மியூனிக் பகுதி, ஆல்ப்ஸ் மலையை அங்கிருந்தும் பார்க்க முடியும்”.
“வெரிகுட் டாக்டர், உங்கள் லெட்டர் கிடைத்தது”.
“ஜெர்மனியில் கிளைமேட் எப்படி?”
“கொஞ்சம் குளிர்தான் டாக்டர், அவசரமா வரச் சொல்லிருந்தீர்கள்”
ஆல்∴பி சொல்ல மறந்துட்டேன், நீ கொடுத்த மதுரை சுங்கிடி சேலையை போனவாரம் ஒரு பார்ட்டிக்கு கட்டினேன். எல்லாரும் என்னை வந்து சூழ்ந்திட்டாங்க”.
“சந்தோஷம் டாக்டர், என்ன பிரச்சனை டாக்டர் எனக்கு?”
“ஓ நீ கொடுத்த ஜேட் மாலையையும் போட்டிருந்தேன். அந்தச் சேலையின் பச்சைக் கலருக்கு மிகவும் பொருத்தமாக இருந்தது”.
“டாக்டர் என் ஹெல்த்தைப் பத்திப் பேசலாமா?”
“ம் சொல்லு, ஆமா இப்ப என்ன புத்தகம் படிக்கிற?”  
“டாக்டர் முதல்ல இதப்பாருங்க” (லெட்டரைக் காட்டினேன்)
“ஓ இதுவா இது ஒரு புதிய ∴பார்மாலிட்டி ரத்தப் பரிசோதனை முடிஞ்சதும் போடுவாங்க, தேதியைப் பாரு அக்டோபர் 5 ஆம் தேதி. இப்ப டிசம்பர் ஆயிருச்சே”
“அப்ப ஒண்ணும் பிரச்சனை இல்லையா? “
“வழக்கம் போல கொஞ்சம் சுகர்தான் அதிகமாயிருக்கு”
“அதான் தெரியுமே டாக்டர், சுகர் கூடிப்போய் ∴பிகர் டிஸ்∴பிகர் ஆகி அது ஏன்னு கான் ∴பிகர் பண்ணிட்டு இருக்கேன்.
வாய்விட்டு சிரித்தார். இது மாதிரி நானும் வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும்னு சொல்றாங்க. எங்க சிரிக்க முடியுது. இப்ப சினிமால கூட வர ஜோக்குக் கெல்லாம் சிரிப்பா வருது எரிச்சல்தான் வருது.
“சரி சரி மாத்திரை டோசை கொஞ்சம் கூட்ட வேண்டியதுதான்”
“டாக்டர் மறுபடியுமா? இப்பவே சாப்பிடும்போது கூட்டு பொரியல் மாதிரி ஏராளமான மாத்திரைகளை முழுங்கறேன்”.
“அதுக்கு என்ன செய்யறது?”
“அது சரி டாக்டர் இங்கிலீஸ் மருந்துக்கு சைட்  எ∴பக்ட் நிறைய இருக்கும்னு சொல்றாங்களே ?”    
“என்ன செய்யறது சைட்  எ∴பக்ட் இருக்கும்தான், ஆனால் அதப் பாத்தா மெயின் எ∴பக்ட் வந்துருமே”.
“மெயின் எ∴பக்ட்டா அது என்ன டாக்டர்?”
“வேற என்ன ஹார்ட் அட்டாக்தான்”
வாயை மூடிக்கொண்டு வீடு வந்து சேர்ந்தேன்.
முற்றும்
 


Tuesday, December 12, 2017

கடற்கன்னியும் வண்ண மீன்களும் !!!!!!!!!!!

இலங்கையில் பரதேசி -30


இதற்கு முந்திய பகுதியைப்படிக்க  இங்கே சொடுக்கவும்.
http://paradesiatnewyork.blogspot.com/2017/12/blog-post.html

கீழே வந்தது என்னவென்று பார்ப்பதற்கு முன் இந்த பவளப்பாறைகள், பாசிகளைப்பற்றி சிறிது பார்க்கலாம். இலங்கையின் பெரும்பாலான கடற்கரைகளில் இந்த அதிசயப் பவளப்பாறைகள் பாசிகள் இருக்கின்றன. காலே கடற்கரை அவற்றுள் சிறப்பு வாய்ந்த ஒன்று. கிட்டத்தட்ட 180 வகைகள் இருக்கின்றனவாம்.நான் எங்கு சென்றாலும் அதன் சிறப்பு கூடுகிறது(?). இந்த ஆழ்கடலில் வீழ் உடலாக உள்ளே சென்றால் அவற்றை அருகில் பார்க்கலாம்.
“சார் நீச்சல் கற்றுக் கொள்ளுங்கள், மெலிதான உடல் உள்ள உங்களைப் போன்றவர்களுக்கு நீச்சல்  செய்வது மிகவும் ஈஸி. நீச்சல் உங்களுக்குப் புத்துணர்ச்சி  ஆரோக்கியத்தைக் கூட்டும். அதுதவிர உங்கள் மூளை அதிவிரைவில் சிந்திக்கவும் தூண்டும்”.
“அம்ரி நீச்சலைக் குறித்த உன் விரிவுரை நன்றாக  இருக்கிறது. ஆனால் நடைமுறையில் அது எனக்கு ஒத்துவருமா என்று தெரியவில்லை. அதோடு தண்ணீரில் எனக்கு முண்டம் சாரி தண்டம் சாரி சாரி கண்டம் இருக்கிறது. பார்த்தாயா கண்டம் இருக்கிறது என்று சொல்வதற்கே எவ்வளவு தடுமாறுகிறது பார்”.
“என்ன கண்டம் சார்?”
“அதாவது எனக்கு சனி உச்சியில் இருக்கும்போது உக்கிரதிசை வழியில் செல்லும்போது, சுக்கில பட்சத்தில்  ராகுவும் கேதுவும் உறவாடும்போது நீரில் கண்டம் என்று குருஜி சொல்லியிருக்கிறார்”.   அம்ரிக்கு இதைப்பற்றி எதுவும் தெரியாதலால் கொஞ்சம் அள்ளிவிட்டேன்.
“யார் சார் அந்த குருஜி?”.
"அவரா அவர் பெயர் ஸ்ரீலஸ்ரீ மகா உபாத்யாய குருபீட குருப்பிரம்ம, குரு  விஷ்ணு குருதேவோ குருஆச்சாரிய".
“சரி பரவாயில்லை சார் விடுங்க. ஏதோ  இளையராஜா பாட்டில வர மாறி இருக்கு .
“ஏன் மீன் சாப்பிடமாட்டீங்கறீங்கன்னு கேட்டியே இதுதான் காரணம். கடல் பண்டம் எதுவும் சாப்பிடக் கூடாது. கடல் பண்டத்திலும் உடல் கண்டம் எனக்கு இருக்கிறது. (ஆஹா மீன் சாப்பிடாததற்கு ஒரு மீன் (mean) காரணம் கண்டுபிடித்தாகிவிட்டது)
“சரிசார் விடுங்க, விடுங்க”.
ஆழ்கடலில் ஸ்நார்க்லிங் செய்பவர்களுக்கு  பலவித வண்ணங்களில் இருக்கும் கோரல்களைப் பார்ப்பதும், ஆய்வதும் மிகுந்த ஆச்சர்யங்களை அளிக்க வல்லது. அதோடு பலவித ரகமான வண்ணமய மீன்களும் கூட்டம் கூட்டமாக அலைந்து வண்ணத்துக்கு வண்ணம் சேர்க்கிறது.


கோரல்கள் விதவிதமான அளவுகளில், வண்ணங்களில் வடிவங்களில் இருந்தது. இதில் ஆச்சரியம் என்னவென்றால் சில இடங்களில் அவ்வளவு ஆளமில்லை. தொட்டுவிடும் தூரத்தில் நிறைய இருந்தன.  ஆனால் கண்ணாடி தடுத்தது. அப்படியே கை எட்டினாலும் எடுக்க முடியாது. இதெல்லாம் இலங்கை அரசாங்கத்தால் பாதுகாக்கப்பட்ட இடங்கள். ஆண்டவனின் அதிசய படைப்புகள் தான் எத்தனை எத்தனை, அனைத்தையும் பார்த்து மகிழ ஒரு ஜென்மம் போதாது .
அப்போதுதான் கீழே அந்தப்பெரிய  மீன் தெரிந்தது . அது மீன் என்று உற்றுப்பார்த்தால் இல்லை இல்லை ஓ அது மெர்மைட் என்று சொல்லப்படும் கடற்கன்னி போலத்தெரிந்தது. அம்ரியும் குனிந்து சுவாரஸ்யமாகப் பார்த்து கையாட்ட அது கண்டுக்காமல் போனது.
“என்ன அம்ரி கடற்கன்னியா ?”      
"கன்னியா என்று தெரியவில்லை, சார் சும்மா விளையாடாதீங்க அது ஏதோ வெள்ளைக்காரப் பெண் ஸ்நார்க்லிங் செய்து கொண்டு இருக்கிறது".


Image result for snorkeling in galle

“எனக்கும் தெரியும் நீதான் உத்து உத்துப்பாத்தியே, அதனால் கேட்டேன்”.
அந்தப் பெண்ணை போட்டோ எடுத்துக் காண்பித்தால் கடற்கன்னி சொன்னால் யாரும் நம்பிவிடுவார்கள். 2 பீஸ் உடை இரு கால்களிலும் மீன் வாலைப் போன்ற ஒரு அமைப்பை மாட்டியிருந்தாள். கண்களில் ஒரு காகில்ஸ் முகமூடி. முதுகில் ஆக்சிஜன் சிலிண்டர். அவள் நீந்துவது மீன் கூட போட்டிபோடுவது போல் தெரிந்தது. இவ்வளவும் நடப்பது ஆழ்கடலில் நாங்கள் படகில் மேலே, அதற்குள் கடற்கண்ணன் வந்துவிட  முத்தமிட்டுக்கொண்டே இருவரும் நீந்திக்  கடந்தனர்.ஒரு சிங்கிள் கூட இல்லை இங்கே மிங்கிள் ஆக. எல்லோரும் ஜோடிதான் ஹீம் கடலின் ஆழத்திலும் சரி, கடற்கரையிலும் சரி, வான ஊர்தியிலும் சரி, நகர்ப்புறத்தில் சரி. தனியாக இருந்தது நான் மட்டும்தான் நல்லவேளை அம்ரியாவது இருக்கிறானே துணைக்கு.


படகு நகர்ந்து அடுத்த புறம் செல்ல அடியில் ஆயிரக்கணக்கில் ஒரு வண்ணமய மீன் கூட்டம் கடந்து சென்றது. சிறிது நேரம் சென்று இன்னொரு வண்ண மீன் கூட்டம் சென்றது,கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.
Related image
Glass bottom 
இதென்ன இங்கு மீன் வளர்க்கிறார்களா? என்று  கேட்டால், படகுக்காரர் சொன்னார் எல்லாம் இங்கே இயற்கையாக வளர்வது என்று. என் மனைவி இப்போது மட்டும் இருந்திருந்தால் துள்ளிக் குதித்திருப்பாள். எங்கள் வீட்டில் வண்ணமீன்கள் தொட்டி வைத்து சில மீன்களை வளர்த்து வருகிறாள். ஒவ்வொன்றும்  நல்ல விலை. அதே சமயத்தில் மீன் உணவு என்றால் அவளுக்கு கொள்ளைப்பிரியம். அதெப்படி ஒரே சமயத்தில் ஒருபுறம் மீனைச் சாப்பிட்டுக் கொண்டு மறுபுறம் மீனையும் வளர்க்கவும் முடியும் என்பது எனக்கு எப்பவுமே ஆச்சரியம்தான். அதோடு எனக்கு மீன் என்றால் ஆகாது. அவளுக்கு மீன் என்றால் உயிர். இந்தக் கடவுள் எப்படியெல்லாம் கோர்த்துவிட்டு வேடிக்கை பார்க்கிறார் பாருங்கள்.
Image result for Glass boat in Galle

படகுக்காரர் எங்கெல்லாம் கோரல் இருக்கிறதோ  அங்கு சிலநிமிடம் நிறுத்துவார். அதே மாதிரி மீன் கூட்டம் வந்தாலும் நிறுத்துவார். இப்படி ஒரு வாய்ப்பு இதுவரை  எனக்கு கிடைத்ததில்லை. வண்ணமீன்களில் விதவித டிசைன்களைப் பார்க்கும்போது சொர்க்கத்தில் கடவுள் இதற்கென தனி டிபார்ட்மென்ட் வைத்து சில ஆர்ட்டிஸ்ட்டுகளை வேலைக்கு வைத்து வரைந்து, பெயிண்ட் செய்து, அனுப்புவார் போலத் தெரிந்தது.
 காலே பயணம் இனிமையாகக்கழிய, நானும் அம்ரியும் கிளம்பி கொழும்பு வந்து சேர்ந்தோம். அப்போது அம்ரி கேட்டான், “உங்களுக்கு பிரைட் ஐஸ்கிரீம் வேணுமா? வேணும் என்றேன். அதென்ன பொறித்த ஐஸ்கிரீம் என்று வியப்பாக இருந்தது.

தொடரும்>>>>>>>>