Tuesday, February 26, 2013

மெக்சிகோ பயணம்-3’ ’பேஸிக்கலாவே நாங்கள்லாம் ரொம்ப டீஸண்டு பாஸு.’


அருகில் வந்து அமர்ந்த சுஜாதாவை பார்த்து ஆச்சரிய அதிர்ச்சியில்,சார் வணக்கம் ,நான் உங்களுடைய பரம ரசிகன் .உங்கள் "கொலையுதிர் காலம் "மட்டும் பலமுறை படித்திருக்கிறேன் சார்,என்றேன் .கையில் அவர் புத்தகம் இல்லையே என்று நினைத்து மிக வருத்தப்பட்டேன் .ஆனால் "நான் கிருஷ்ணதேவராயன்" புத்தகத்தில் அவர் எழுதிய முன்னுரை நல்லவேளை ஞாபகம்  வர ,பாருங்கள் சார் இப்போது கூட நீங்கள் எழுதியதைத்தான் படித்துக் கொண்டிருக்கிறேன் என்று நான் சொன்னது எனக்கே அபத்தமாய் இருந்தது .எல்லாத்துக்கும் ஒரு சிறு புன்னகை மட்டுமே பதிலாய் கிடைத்தது .சார் இப்போது கூட உங்க ஜோக்கை கண்டுபிடிக்கத்தான் மெக்ஸிகோ செல்கிறேன் என்று சொல்லி ,சார் தயவு செய்து எனக்கு மட்டும் சொல்லுங்கள் என்று கெஞ்சினேன் .உரக்கச்சிரித்துவிட்டு திருவாய் திறந்தார் , 21ஆம் நூற்றாண்டின் மிகச்சிறந்த கதை சொல்லி ."அதுவா, அது மெக்ஸிகோ நாட்டில் ஒரு சலவைக்காரி துணி துவைத்துகொண்டிருந்தாள். அப்போது அந்தப்பக்கம் சில வாலிபர்கள் வந்தார்கள்" .
திடீரென்று உடம்பெல்லாம் ஆட ,ஐயோ பிளைட்டுக்கு என்னாச்சு என்று எழுந்தால் ,சீட் பெல்ட் போடச்சொல்லி நம்ம ஏர் ஹோஸ்டஸ் உலுக்கினாள் .நல்ல நேரத்தில் கெடுத்தியே பரட்டை என்று நினைத்தால் ,விமானம் இறங்குவதாய் அறிவுப்பு .அட அவ்வளவும் கனவு ,
சரியாய் 7 மணிக்கு, [நியூயார்க் நேரம் 8 மணி] விமானம் தரையிறங்கபோவதை அறிவித்தனர். எட்டிப்பார்த்ததில், மெக்சிகோ நகரம் வைரங்களாய் கொட்டிக்கிடந்தது.
விமானம் தரையிறங்க வைரங்கள் பெரிதாகி, விளக்குகளும் கட்டிடங்களுமாய் மாறின,.சற்று தள்ளி பார்வையை செலுத்தியதில் சாலையில் வாகனங்கள் நிரம்பி வழிந்து ஊர்ந்தன,.என் விமானம் தரையைத்தொட்டு, அதிர்ந்து ஊர்ந்து தத்தித்தள்ளாடி நின்றது.
எல்லா புலன்களும் ஒரே சமயத்தில் விழித்துக்கொள்ள ஷ்பானிஷ் அறிவிப்புக்கு கன்ஃபியூஸ் ஆகி, அடுத்த கணமே தொடர்ந்த ஆங்கில அறிவிப்புக்கு புன்சிரித்து, கைப்பையைக் கைப்பற்றிக்கொண்டு இறங்கலானேன்,.
ஏற்கனவே பூர்த்தி செய்த இமிகிரேஷன் படிவம், பாஸ்போர்ட் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு அந்நிய நாட்டவர்கள்வரிசையில் நின்றேன்.என் வரிசையில் மெக்சிகன் பெண் அதிகாரியிடம் எனக்குத்தெரிந்த ஒரே மெக்சிகன் வார்த்தையான ஒலா’ [ஹலோ] என்றேன். அவர் பதிலுக்கு படபடவென்று வார்த்தைகளைக் கொட்ட அட நீ பாட்டாவே பாடிட்டியா?’ என்று மனசுக்குள் நினைத்தபடிதட்டுத்தடுமாறி சுற்றுலா வந்திருக்கும் விசயத்தை சுற்றிவளைத்துச் சொல்ல, அவரும் எத்தனை நாள்?’ என்ற ஒரே கேள்வியோடு, ‘வெல்கம்  டு மெக்ஸிகோ ,ஆல் த பெஸ்ட்என்று சொல்லி, பாஸ்போர்ட்டில் நான்கைந்து இடங்களில் முத்தங்கள் பதித்து அனுப்பி வைத்தார்.
 
நன்றி சொல்லி நகர்கையில், அவ்வளவு நேரமும் பார்வையில் அகப்படாத எரிக்கா, எதிர்வரிசையில போய்க்கொண்டே டாட்டா காட்டி, அவசரமாய்  போய்க்கொண்டிருந்தார். [போகுதே,.. போகுதே,..]
கரோசல் எண் 4-ல் நின்று என் பேக்கேஜுக்காக காத்திருந்தேன். கரோசல் சுற்றச்சுற்ற தலையும் சுற்ற ஆரம்பித்துவிட்டது.ஒருவழியாக அது நான் எதிர்பார்த்த்தைவிட சீக்கிரம் வரவே தலைவலியிருந்து தப்பி,பேக்கை எடுத்துக்கொண்டு கஸ்டம்ஸ் கிளியரன்ஸுக்கு விரைந்தேன். அங்கே முக்கியமாக விதைகள், செடிகள் எடுத்துச்செல்ல அனுமதியில்லை. [நாமளே ஒரு விருட்ச விதைங்குறது அவிங்களுக்கு எப்பிடித்தெரியும்?] பரிசோதனை முடிந்ததும் டாக்ஸி பிடிக்க விரைந்தேன்.
எச்சரிக்கை நம்பர் 2’ தெரியாத டாக்ஸியில் ஏறவேண்டாம் ஞாபகத்துக்கு வரவே, என்னைத்தேடி வந்த டாக்ஸி ராசாக்களை தவிர்த்துவிட்டு, ப்ரீ-பெய்டு டாக்ஸி செண்டரைத்தேடினேன். அங்கு பார்க் பண்ணப்பட்டிருந்த நாலைந்து டாக்ஸிகளில் எது அரசு, தனியார் என்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆங்கிலத்தில் கேட்டால் அல்கொய்தா தீவிரவாதி மாதிரி பார்த்தார்கள். ஷ்பானிஷ் தெரியாமல் இங்கே சில தினங்களுக்கு எப்படித்தான் ஜீவனம் செய்யப்போகிறோமோ என்கிற கவலை அப்போதே தொற்றிக்கொண்டது.
நபர்கள் அதிகம் நிற்கும் கியூ நல்ல டாக்ஸியில் கொண்டுபோய்விடும் என்ற மூடநம்பிக்கையுடன் ஒரு கியூவில் நின்று என் முறை வந்தபோது,’ஹோட்டல் ப்ரிம்என்றேன். விசிட்டிங் கார்டையும் காட்டினேன். டிரைவர் உடனே கணினியில் பரிசோதித்து,’185 pesos’ என்றார். [கிட்டத்தட்ட 15 யூ.எஸ்.டாலர்கள்] ஒரு டாலருக்கு 12 பிசோ. இதற்கும் டாலருக்கான குறியீட்டையே பயன்படுத்துகிறார்கள். [அதனால் ஏற்பட்ட பெருங்குழப்பத்தை பின்னொருமுறை சொல்கிறேன்]
நெடுங்கியூவில் நின்று என் முறை வந்தபோது, எனக்கு வாய்த்தது ஒரு மீடியம் சைஸ் செவர்லெட் கார். என்னுடைய லக்கேஜை பின் பகுதியில் ட்ரங்கில் போட்டு, கைப்பையுடன் காரில் அமர்ந்தேன். யூ.எஸ்.சில் டிக்கி என்றால் கவுண்டமணிசெந்தில் விளையாடிய அந்த டிக்கிலோனா டிக்கியைக் குறிக்கும் என்பதால் அந்த சொல்லை நாங்கள் பயன்படுத்துவதில்லை. பேஸிக்கலாவே நாங்கள்லாம் ரொம்ப டீஸண்டு பாஸு.
வண்டி கிளம்பியது,. நேர்த்தியான சாலைகளில் வழுக்கிக்கொண்டு ஓடும் வண்டிகள். காரில் ஆட்டோ கியர் இல்லை .ஆனால் அனைத்து பெரிய ப்ராண்ட்களும் ரோட்டில் பார்த்தேன் .சாலைகளின் இருபுறமும் மரங்கள்,.. ஹார்ன் சத்தம் அறவே இல்லை,..நிறைய பாலங்கள் இருந்தன,.மாற்றுப்பாதைகளும் ஏராளம் என்ற அளவில், துவக்கத்திலேயே மெக்சிகோஜோருங்கோஎன்று மனதை அள்ளியது. டிரைவரிடம் மெல்ல பேச்சுக்கொடுக்க முனைந்ததில்நோ இன்கிலீஜ்என்று பரிதாபமான ஒரு பதில் வந்தது.
காரின் எஃப்.எம். ரேடியோவில், சுத்தமாக எதுவும் புரியாமல், இருவர் சத்தமாக விவாதித்துக்கொண்டிருக்க,ஒரு பாலம் இறங்கும் நேரத்தில், மீண்டும் டிரைவரிடம் பேச்சுக்கொடுத்து இங்கு பெட்ரோல் விலை அதிகமோ?’ என்று கேட்க, அவர் மடேர்மடேர் என்று தலையில் அடித்துக்கொண்டார்.