Showing posts with label மெய்ன் பயணம். Show all posts
Showing posts with label மெய்ன் பயணம். Show all posts

Monday, October 14, 2013

மெய்ன் பயணம் Part 5 : நடுக்கும் நீரும், இருட்டுக்குகையும் !!!!!!!!

             

போர்ட்லேண்ட் துறைமுகம் தாண்டி, அட்லாண்டிக் பெருங்கடலுக்குள் சென்று வேகமெடுத்தது படகு. தண்ணீரைக் கிழித்துக் கொண்டு படகு சென்றபோது, 
பல பெரும் கப்பல்கள், சிறு சிறு தீவுகள், ஒரு பழைய கோட்டை இருந்த பெருந்தீவு, பெரிய, சிறிய கலங்கரை விளக்கங்கள் ஆகியவை சூழ்ந்து இருந்தன.
 பெரும் பணக்காரர்களுக்குச் சொந்தமான படோடோப தனித்தீவுகளையும், அவர்களுக்குச் சொந்தமான யாட் (Yacht) என்று அழைக்கப்படும் சொகுசுப் படகுகளையும் பார்த்து வியந்த வண்ணம் சென்றோம்.

 அப்போது மெதுவாக சூரியன் மறையத் தொடங்கியது. சூரியன் மறைந்தும் மறையாமலும், நீரிலும் வானிலும்  நிகழ்த்திய ரசவாத வர்ண ஜாலங்கள் கண்களுக்கு அருங்காட்சியாக இருந்து. முடிந்தளவுக்கு படங்களை க்ளிக்கினேன்.
        மெதுவாக கொஞ்சம் கொஞ்சமாக இருட்டத் தொடங்க, எங்கள் படகு மாலை 9 மணிக்கு கரைக்குத்திரும்பியது. ஏன் மாலைன்னு  சொன்னேன்னா, 9 மணிக்கும் நல்ல வெளிச்சமிருந்தது. 


பார்க்கிங்கிலிருந்து கார்களை எடுத்துக் கொண்டு, மீண்டும் அகஸ்டாவுக்குத்திரும்பினோம். குக்கரில் 'வார்ம்' மோடில் பொன்னி அரிசி சூடாக இருந்தது. மனைவி செய்து கொண்டு வந்திருந்த கத்தரிக்காய் புளிக்குழம்பை சூடு பண்ணி, சூடாக மணிமணியாக இருந்த பொன்னி சாதத்தில் ஊற்றி, அதன் அரோமாவை அனுபவித்தபடி கையில் பிசைந்து, ஒரு கவளத்தை வாயில் இட்டேன். கொஞ்சம்  கெட்டில் குக்குடு  உருளை சிப்சை  ஓரத்தில் கொண்டு வந்து வைத்தாள் என் மகள். ஆஹா ஆஹா அந்தக்கத்தரிக்காய் என் தோட்டத்தில் விளைந்தது. "நித்தம் நித்தம் நெல்லுச்சோறு நெய் மணக்கும் கத்திரிக்காய்" என்று முனுமுனுத்துக்கொண்டே படுக்கைக்கு  சென்றேன்.
        அடுத்தநாள் சனிக்கிழமை சிறிது விரைவாகக்கிளம்பினோம். அக்கேடியா நேஷனல் பார்க்,( Acadia national Park) அங்கிருந்து நான்கு மணி நேரம் பயணம். அக்கேடியாவா அக்கோடியாவா என்று நினைக்கும்   அளவுக்கு  தூரமாய்  இருந்தது.  நல்ல அடர்ந்த   காட்டுக்குள் பாம்பு போல வழுக்கிச் சென்றது நெடுஞ்சாலை.
        எல்லோரும் முறைத்தாலும் பரவாயில்லை என்று நடுவில் ரோட்டோர ஃபிளி மார்க்கெட்டில் (Flea Market) கொஞ்சம் மேய்ந்துவிட்டு தொடர்ந்தோம். நடுவில் ஒரு “பிட்சரியா” வில் சாப்பிட்டுவிட்டு மூன்று மணிக்குத்தான் சென்று சேர்ந்தோம். அக்காடியா நேஷனல் பார்க் மலையில் இருந்தது. முதல் ஸ்டாப் “சாண்ட் பீச்” (Sand Beach). பெரியவர்களுக்குத் துணையாக(?) நான் மேலேயே  தங்கிவிட, மற்ற அனைவரும் உடை மாற்றிக்கொண்டு, கீழே பாதாளத்தில் இருந்த பீச்சுக்கு இறங்கினர். பாதிப்பேர் போன வேகத்தில், எறிந்த பந்து போல் திரும்பி வந்தனர். “A”  காட்சிகளை பார்த்து அதிர்ந்து விட்டனரா? என்று நினைத்தேன். 
  பிறகுதான் அங்கே உள்ள தகவல் பலகையில் படிக்கும் போது தெரிந்தது. அந்த பீச் தண்ணீர், நல்ல   கோடை காலத்தில் வெளியே 100 டிகிரி இருக்கும்போது கூட, 50 டிகிரி தான் இருக்குமாம்.ஏனென்றால் பக்கத்தில் இருந்த துருவப்பகுதியின் பனிக்கட்டிகள் தொடர்ந்து உருகி, கடல் நீர்   சூடாவதைத்தடுக்கிறதாம். நல்லவேளை நான்   போகலை. அப்ப குளிர் காலத்தில்? என்று யோசித்த போது, இந்த இடம் கோடைகாலத்தில் மட்டும்தான் திறந்திருக்கும் என்று சொன்னார்கள்.
        நம் மீதி ஆட்கள் குளிர்நீரில் என்ன செய்கிறார்கள் என்று பார்த்தபோது, பெஞ்சி பின்னி மட்டும் உள்ளே சென்று நடுங்கிக் கொண்டே நீந்தினர். மற்ற அனைவரும் கரையில் நின்று வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்தது.
அடுத்து தண்டர்ஹோல்( Thunder Hole)  என்ற பகுதிக்குச் சென்றோம். மலையிலிருந்து கீழிறங்கி கடல் மட்டத்தில் பார்த்தபோது. ஓயாது  அடித்த அலைகளால், பாறையில் நீண்ட பிளவு பட்டு, ஒரு பெரிய இருட்டு குகை இருக்கிறது. பெரிய அலைகள் வரும்போதெல்லாம், பிளவில் விரைவாக செல்லும் நீர், வேகமாக அந்த ஓட்டையில் மோதித்திரும்பும்போது, இடி இடித்ததுபோல் ஒரு சத்தம் கேட்கிறது. 
Thunder hole
அதை எவனோ கண்டுபிடித்து "தண்டர் ஹோல்" என்று பெயரும் வைத்துவிட்டான். பொருத்தமான பெயர்தான்.

http://www.youtube.com/watch?v=lph_sbPXO7M

        அதனை முடித்துவிட்டு “ஜோர்டன் பாண்ட்” (Jordan Pond) என்ற பெரிய குளக்கரையில் அமைந்த ஒரு ரெஸ்டாரண்டுக்கு போனோம். 

அது 1870-ல் வருடம் ஜோர்டன் குடும்பத்தால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஆரம்பித்த புதிதில் அவரால் கண்டுபிடிக்கப்பட்டு, அறிமுகம் செய்யப்பட்ட ஒரு பண்டம் “பாப்பாவெர்” ( Popover) என்பது.
 வேறு எங்கும் கிடைக்காத ஒன்று என்று ஓவராக பில்டப் வேறு கொடுத்தார்கள். ஆர்டர் செய்து சிலநிமிடங்களில் வந்தது. சாப்பிட்டுப் பார்த்தால் இது நம்மூர் சுசியப்பம். அதே டேஸ்டில் இருந்தது. என்ன தொட்டுச்சாப்பிட சிரப்பொன்று கொடுத்தார்கள். அம்புடுத்தேன்.
        அதன் பின்னர் திரும்பவும் லாங் டிரைவ் என்பதால் உடனே கிளம்பி 10 மணிவாக்கில் ரூமுக்குத்திரும்பி ஓய்வெடுத்தோம்.
        அடுத்தநாள் ஞாயிறன்று காலை கிளம்பி சரியான வழியைப்பிடித்து டிரைவ் செய்தோம். நடுவில் “ஸ்ருஷ்ச்பர்ரி” என்ற இடத்தில் இருந்த “பாலிவுட் கிரில்” என்ற உணவகத்தில் லஞ்சை முடித்தோம்.
 அதன்  பின் கடுமையான டிராஃபிக்கில் மாட்டியதால், மதியம் 2 மணிக்கு வந்து சேர  வேண்டியது,  இரவு  எட்டு மணிக்குத்தான் வந்து சேர்ந்தோம். சும்மாவா கனெக்டிக்கட், மாசசூசட்ஸ், நியூஹாம்ஷயர் என்ற  மூன்று மாநிலங்கள் தாண்டியல்லவா மெயின் சென்று வந்தோம். காடுமலை சுற்றியலைந்தாலும், நம் வீட்டிற்கு வந்து சேரும்போது ஒரு சுகமான நிம்மதி  வருமே  Home Sweet  Home.

மெய்ன்  பயணம் முற்றியது

விரைவில் வருகிறது போர்ட்டரிக்கோ  பயணம்.

Monday, October 7, 2013

மெய்ன் பயணம் Part 4 : அந்த ஏசியை போடுங்கப்பா !!!!!!!!!!

                
மெயினில் உள்ள அழகிய துறைமுக நகரம் போர்ட்லன்ட். முதல் ஸ்டாப்,"விக்டோரியா மேன்ன்".
 ஹோட்டல் பிஸினெசில் கொடிகட்டிப் பறந்த, ரகில்ஸ் சில்வெஸ்டர் மோர்ஸ் (Ruggles Sylvester Morse 1814-1893) அவர்கள் இந்த வீட்டை தன்னுடைய கோடைகால வீடாக பயன்படுத்தினாராம். இதனை 1858ல் கட்ட ஆரம்பித்து 1860ல் பூர்த்தி செய்திருக்கிறார்.
        இத்தாலிய வில்லா ஸ்டைலில் கட்டப்பட்ட, இந்த மாளிகையின் ஆர்க்கிடெக்ட், கனெக்டிக்கட் மாநிலத்தைச்  சார்ந்த "ஹென்ரி ஆஸ்டின்" என்பவர். பேரரசி விக்டோரியா காலத்தில் கட்டப்பட்டதால் "விக்டோரியா மேன்சன்" என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. 
விக்டோரியா காலத்து கட்டடக்கலையில் கட்டப்பட்டதாலும் அந்தப்பெயர்.
        இந்த வீட்டின் இண்டீரியர் மற்றும் ஃபர்னிச்சர்களை அன்றைய காலகட்டத்தில் மிகவும் பாப்புலராக இருந்த "குஸ்தாவே ஹெர்டர்" (Gustave Herter) என்பவர் செய்திருக்கிறார். நான்கு மாடிகள் கொண்ட இந்த வீட்டின் ஒவ்வொரு ரூமும் கலைநுணுக்கத்துடன் ஒவ்வொரு தீம் மற்றும் வெவ்வேறு வண்ணங்களால் வடிவமைக்கப்பட்டதோடு, கலைப்பொருட்களால் நிறைந்தும் இருந்தது. 
ஜன்னல்கள் எல்லாம் உயர்ந்த ஐரோப்பிய ஸ்டெயின் கிளாஸ்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. அடா அடா, இந்த அமெரிக்க கோடீஸ்வரர்கள் எப்படியெல்லாம் தம் வாழ்க்கையை ரசித்து ருசித்து, அனுபவித்து வாழ்ந்திருக்கிறார்கள் என்பதை நேரில் பார்த்தபோது ஒரு பெருமூச்சைத்தவிர வேறென்ன நாம்விடமுடியும்.
        நேரம் 12 மணி ஆனதால் சாப்பிடக்கிளம்பினோம். மெயினில் "லாப்ஸ்டர்" சாப்பிடாமல் வந்துவிடாதீர்கள் என்று நண்பர்கள் சொன்னதால், டவுன் டவுனில் இருந்த "ஓல்ட் டேவர்ன்" என்ற ரெஸ்டாரன்டுக்குச் சென்றோம். என்னைவிட ஒல்லியாக இருந்த வெயிட்டர் மிதந்து வந்து, எத்தனைபேர் என்று கேட்டதும் 11 என்றேன். "எத்தனைபேர் ?", என்று திருப்பிக் கேட்டான். இலவன் என்று அழுத்திச் சொன்னதும் கலவரமடைந்து விட்டான்.
இவன் புதுசா, இல்லை இவ்வளவு பேரை மொத்தமாக பார்த்ததில்லையா? என்று வியந்தபடி உள்ளே எட்டிப்பார்த்தேன். அங்கே உள்ள பல மேசைகளில் இரண்டு அல்லது மூன்று பேராக உட்கார்ந்திருந்தனர்.
        எங்களுக்கு டேபிள் போடுவதற்கு அதிக நேரம் எடுத்துக்கொண்டான். சும்மா சொல்லக் கூடாது, உள்ளே இண்டீரியர் ஒரு டேவர்ன் (Tavern) போலவே இருந்தது. அதோடு அங்கிருந்த இரண்டு மிகப்பெரிய மீன்தொட்டிகள் மற்றும் அதிலிருந்த உயிரோடு இருந்த கோரல்கள் சொல்லவே வார்த்தை இல்லை.
        என்ன சாப்பிடுவது என்று நாங்கள் முடிவு செய்ய கன்ஃபியூசன் ஆகி, ஏற்கனவே டென்சனில் இருந்த வெயிட்டரை மேலும் குழப்பியடித்தோம். இந்தப்புழு பூச்சி, ஊர்வன, நீந்துவனவெல்லாம் நமக்கு ஒத்துவராது என்பதால் நான் சேஃபாக ஒரு வெஜ் பர்கரை ஆர்டர் பண்ணினேன். என்னை ஒரு ஜந்துவைபோல் பார்த்தான் வெயிட்டர். மதுரை முனியாண்டி விலாசில் இலை  போட்ட கையோடு, பெரிய தட்டில் கறி வகைகளை பரப்பி வைத்துகொண்டு வரும் அழுக்கு   வெயிட்டரிடம் வேணாம்  என்று பலதடவை நான் சொன்னபோது  அவன் பார்த்த அதே பார்வை .  நடப்பனவற்றில் வெள்ளாடும், பறப்பனவற்றில் கோழியும் தவிர அதுவும் வீட்டில் அல்லது தென்னிந்திய உணவகங்களில் மட்டும்தான் சாப்பிடுவேன். என் மனைவி கடல் உணவை விரும்பி சாப்பிடுவாள். எனவே எல்லோருடனும் சேர்ந்து லாப்ஸ்டரை ஆர்டர் செய்தாள்.

        சிவப்புக்கலரில் லாப்ஸ்டரும் வந்து சேர்ந்தது. நண்டை விட பலமடங்கு பெரியது ஓட்டை உடைத்து உள்ளிருக்கும் சதையை உறிஞ்சி அவர்கள் சாப்பிட்டது “உவ்வே” ரகம். என் மனைவியும் கொஞ்சம் சாப்பிட்டு விட்டு, நடுவில் பாத்ரூம் சென்றாள். போய் ரொம்ப நேரமாயிற்றே என்று நானும் எழுந்து சென்று பார்த்தால், கண்களில் நீர் நிரம்பி, டயர்டாக வெளியே வந்தாள். லாப்ஸ்டர் பிடிக்கவில்லையாம். பச்சையாக இருந்ததாம். எல்லாவற்றையும் வாந்தி எடுத்துவிட்டு, "யாரிடமும் சொல்லாதே" என்றாள். ஆனாலும் ஊகித்துவிட்ட பின்னி, கிண்டல் செய்ய ஆரம்பித்தான். என்னவென்றால் மற்ற இருவரும் கர்ப்பவதிகள், அவர்கள் ஏதோ மாத்திரை உட்கொண்டு வாந்தியைத் தவிர்த்து விட்டனர். ஆனால் ரூத் வாந்தியெடுத்ததால் சிரித்தனர். 15 வருடங்களுக்கு முன்பே முதலிரண்டு பெண் குழந்தைகளுக்குப்பின், ஐயையோ விட்டால் பெண் பிள்ளைகளாய் பெற்றுத்தள்ளிவிடுவாள் என்பதால் அப்போதே "கத்தம் கத்தம் ஹோகயா".
        எங்களது அடுத்த புரோகிராம் "கேஸ்கோ பே  சன்செட் குரூஸ்” மாலை 6 மணிக்குத்தான் என்பதால் உண்ட மயக்கத்தில் இருந்த அனைவரையும் ஒரு பெரிய பார்க்கில் தள்ளினேன். ரெடியாக கொண்டுவந்திருந்த விரிப்புகளை விரித்து, "சாய்ந்து சாய்ந்து மிக ஓய்ந்து ஓய்ந்து அடடா" என்று மட்டையாக, நான் என்னுடைய 'ஆண்டிக் ' வேட்டையைத் துவங்கினேன். என்ன வாங்கினேன், எது வாங்கினேன் என்று நான் சொல்லப் போவதில்லை. தெரிந்து கொள்ள ஆசைப்படுபவர்கள் ஈமெயில் அனுப்பவும் படங்களை அனுப்புகிறேன். அல்லது வீட்டுக்கு வாருங்கள் காண்பிக்கிறேன். சில அரிய பொருட்கள் இருக்கிறது.
        மாலை 6 மணிக்கு பகல் 3 மணி வெயில் போல கொளுத்தியது. எனவே குரூஸ் கிளம்ப இன்னும் நேரமாகும் என்று சொன்னார்கள். ஒருவழியாக 6.45 க்கு ஆட்களை நுழையவிட்டு 7 மணிக்கு போட் கிளம்பியது. படகு என்றாலும் ஒரு 200 பேர்  உட்காரக்கூடிய அளவு பெரியதாய் 3 நிலைகள் கொண்டது.  வழக்கம்போல் காப்டன் வந்து "சேப்ஃடி  இன்ஸ்ரக்ஷன்" கொடுத்து, முடிந்த அளவுக்கு பயமுறுத்தினார். நாங்கள் மேல் டெக்கில் திறந்தவெளியில் உட்கார்ந்திருந்தோம். க்ரூ மெம்பர்களில் ஒரு பெண் வந்து விளக்க ஆரம்பித்தாள். கடலின் உள்ளே சிறிது சிறிதாக படகு நகர, உச்சி வெயில் மண்டையைப்பிளக்க கீழே சென்றுவிடலாம் என நினைக்கும்போது மரியா (அதான் பாஸ் அந்த டூர் கைடு), "கேப்டன் சொல்லிட்டார், இதோ ஏசியை ஆன் செய்கிறேன்" என்று சொல்லி காற்றில் கையை வீசினாள். ஒன்றும் புரியவில்லை. ஆனால் சில நொடிகளில் எங்கிருந்தோ வந்த குளிர்ந்த காற்று சிலுசிலுவென்று எங்கள் முகத்தை தழுவ சூப்பராக இருந்தது. ஓஹோ இதைத்தான் மரியா சொன்னாளோ என்று அப்போதுதான் விளங்கியது.

கடைசிப்பகுதி  அடுத்த  வாரம்  திங்கள்கிழமை.

பின் குறிப்பு :
நண்பர்களே வரும் அக்டோபர் 20, 2013 அன்று நியூ ஜெர்சியில் நடக்கும் பட்டிமன்றத்தில் அடியேன் பேசுகிறேன் .பேராசிரியர் சாலமன் பாப்பையா தலைமையில் நடக்கும்  இந்த "கல்யாணமாலை" பட்டிமன்றத்தில் ராஜா மற்றும் பாரதி பாஸ்கர் அணித்தலைவர்களாக பங்கு கொள்கிறரர்கள்.இந்த நிகழ்ச்சி பின்னர் சன் டிவி-யில் ஒளிபரப்பப்படும் . அருகில் வசிப்பவர்கள் வாங்க பழகலாம் . விவரங்களுக்கு சொடுக்கவும்   www.njtamilsangam.net .


Monday, September 30, 2013

மெய்ன் பயணம் Part 3 : வஷிஸ்டர் வாயால் ப்ரும்ம ரிஷி பட்டம் !!.

        

     எப்படித்தான் பார்த்தாளோ? குதிரை வண்டியில் போனால் முன்னால் பார்த்து போக வேண்டியதுதானே என்று நினைத்த வண்ணம், அவசர அவசரமாக ஐபாடின் இயர் பிளக்கை காதில் சொருகினேன். இவெள்ட்ட பாட்டு வாங்கும்போது, என் பாட்டுக்கு  நான் போடுறுது, நம்ம இளையராஜா பாட்டுதேன். இளையராஜா "அந்தியில் பூத்த செவ்வந்திப்பூவைத்தேடத்துவங்கினார்". என்றுமே வாடாத பூ அல்லவா இந்த பூ .கஷ்டத்திலும், நஷ்டத்திலும், இஷ்டத்திலும் இளையராஜாதானே நமக்குத்துணை. கொஞ்சம் கொஞ்சமாக கூட்டம் சேர்ந்துவிட்டது. எல்லாருமே வெள்ளைக்காரர்கள், நாங்கள் மட்டுமே இந்தியர். கறுப்பர்களையும் காணோம்.
        ஆற்றுக்கு அக்கறையில், ஒரு பெரிய மிதவையில இரண்டு ஆட்கள் வந்து வெடிகளை ஒழுங்கு செய்தனர். சிறிது நேரத்தில் இருட்டிவிட,  வாணவேடிக்கை ஆரம்பித்தது. விண்ணில் சீறிப்பாய்ந்து, வெடித்து, பூமழையையும், நட்சத்திர மழையையும் தூவியது, கண்கொள்ளாக் காட்சியாகும். நியூயார்க் மேசிஸ் ஃபயர் வொர்க்ஸ், கோனி ஐலன்ட், வாஷிங்டன் டிசி, நியூஜெர்சி, பென்சில்வேனியா என்று பல இடங்களில் பார்த்திருந்தாலும் இது சலிக்கவே சலிக்காது.
       
   
ஒரே ஒரு வித்தியாசம், மற்ற எல்லா இடங்களிலும் கம்ப்யூட்டர் மூலம் இயக்குவார்கள். இங்கு அந்த இரண்டு ஆட்களும் ஓடி ஓடிக்கொளுத்தியது சிறிது வேடிக்கையாக இருந்தது. ஆனால் கொஞ்சம் கூட இடைவெளியில்லாமல் ஒரு அரை மணி நேரத்திற்கு அற்புதமாய் இருந்தது.கூடியிருந்த மக்கள் வித்தியாசமான வாணத்தைப் பார்க்கும் போதெல்லாம், ஆரவாரித்து கைதட்டி மகிழ்ந்தனர். 


        ஒளி வெள்ளத்தில் சலசலத்து ஓடிய கென்னபெக் ஆறு தங்கப்பாளமாய் மின்னியது பேரழகாய் இருந்தது. முடிந்தவுடன் மக்கள் ஒரு 5 நிமிடம் விடாது கைதட்டி தம் மகிழ்ச்சியைத் தெரிவித்தனர்.
        எவ்வளவு கூட்டம் இருந்தாலும், யாரும் முண்டியடிக்காமல் ஒருவரை ஒருவர் இடிக்காமலும், முந்தாமலும் கலைந்தனர். ரூமுக்கு திரும்பியதும், சில நிமிடங்களில் சூடான இட்லியும், மிளகாய்ப்பொடியும் கொடுத்தாள் ரூத். அட எப்ப செய்து எடுத்து வந்தாள் என ஆச்சரியப்பட்டுப் பாராட்டினேன். ஒரு பேக் பொன்னி அரிசி, குக்கர் மற்றும் காரக்குழம்பு, ருச்சி தக்காளி மிக்ஸ், புளியோதரை மிக்ஸ், வத்தக்குழம்பு மிக்ஸ் என பல வகைகள் இருப்பதால் ஒவ்வொரு இரவும் பிரச்சனையில்லை.
        மற்றவர்கள் எல்லாம் சாதத்தில் கத்தரிக்காய் காரக்குழம்பை குழப்பி அடித்தனர். “பின்னி” என் மனைவியை நோக்கி வழக்கம் போல், "அம்மாவும் நீயே அப்பாவும் நீயே" என்று பாடிக்கொண்டே ஒரு பிடி பிடித்தான். அவன் மனைவி கிப்ஃடாவுக்கும் சமையலுக்கும் எந்த சம்பந்தமுமில்லையாதலால், என் மனைவிதான் அவனுக்கு அன்னலட்சுமி.
        அந்த நாளில் நடந்தவற்றை அசைபோட்டபடி படுக்கைக்குச்சென்றோம்.  ஃபோம் தலையணையில் தலையை நுழைத்து, ஸ்பிரிங் மெத்தையில் குப்புறப்படுத்து, ஆஹா ஆஹா, உழைத்து, களைத்த இந்த இளைத்த உடம்பை, ஃபோமில் இழைத்த மெத்தையில் கிடத்தி தலையை பஞ்சுப்பொதி தலையணையில் நுழைத்த போது ஆஹா ஆஹா.
****************************************************************************************************
          மறுநாள் சனிக்கிழமை (July 5, 2013) காலையில் எழுந்து, யோகா, மெடிட்டேஷன், ஓட்டப்பயிற்சி ஆகியவற்றையெல்லாம் வழக்கம் போல் !!!!!!!!!!, இருங்க அவசரப்படாதீங்க, ஏன் டென்ஷன் ஆகிறீங்க, வழக்கம் போலவே, செய்யாமல், ரெடியாகி, இவர்களையும் கிளப்பினேன். (டேய் சேகர், ஸ்கூலில் நீ மாவட்ட அளவில் விளையாடிய பெரிய ஸ்போர்ட்ஸ்மென் அல்லவா? / ஒன்னோட லந்துக்கு ஒரு அளவில்லையா மகேந்திரா?) நானும் இதை அமெரிக்கன் காலேஜில் பெருமையாக சொன்னபோது, எல்லோரும் சிரித்தார்கள். ஏனென்று எனக்கு விளங்கவேயில்லை. அது என்ன கேமுன்னு நீங்க யோசிச்சு வைய்ங்க. நான் அப்புறம் சொல்றேன்.
        ஒரு வழியாக 11 பேரும் ரெடியாகி (ஐயையோ எனக்கு தான் தாவு தீர்ந்துபோச்சு) அங்கு இலவசமாக கொடுத்த காண்டினெண்டல் பிரேக்ஃபஸ்ட்டை ஒரு வெட்டு வெட்டினோம். நான் ஓட்மீலை எடுத்தபோது, என் மனைவி திட்டி, "இங்கேயும் இத விடமாட்டீங்களா? வேற ஏதாவது சாப்பிடுங்கன்னு” சொன்னா. அப்புறம் நானே வாஃபில் (Waffle) செய்தேன். நல்லவேளை தரையெல்லாம் கொட்டியதை என் மனைவி பார்க்கவில்லை. சட்டென்று குனிந்து துடைத்துவிட்டேன். துடைத்து எழுந்த போது, என்னைப் பார்த்து முறைத்த என் மனைவியைப் பார்த்ததால், வழிந்த அசடையும் சேர்த்து துடைத்துவிட்டு எழுந்தேன். அவர் சிரித்தாளா முறைத்தாளா என்ற சந்தேகம் எழுந்தது. அதற்குள் வாஃபில் மெஷின் கூவ, அதனை லாவகமாக எடுத்து தட்டில்போட்டு, என் மனைவியிடம் கொடுக்கப் போனேன். "ஒரு வேலை ஒரு வேலை உருப்படியா செய்றீங்களா, ஒன்னும் தெரியாது" என்று சொன்னவள், என் கையில் இருந்த வாஃபிலைப்பார்த்துவிட்டாள். நிறம், மணம், குணம் நிறைந்த, அந்த வாஃபிலைப் பார்த்து ஆச்சரியப்பட்டு, "பரவாயில்லையே சூப்பர்", என்று பாராட்டினாள். வஷிஸ்டர் வாயால ப்ரும்ம ரிஷி பட்டம் போல இருந்தது.

        பெருமிதத்தேடு கொஞ்சம் “மேப்பில் சிரப்”பை அதில் ஊற்றிக்கொடுத்தேன். வாஃபில் நன்றாகவே இருந்தது. அது ஒன்னும் பிரமாதமில்லிங்க. ஏற்கனவே கலந்து வைத்திருக்கும் மாவை, அதெற்கென வைக்கப்பட்டிருக்கும் கப்பில் சரியான அளவில் நிரப்பி, வாஃபில் மெஷினில் ஊற்றி விட்டு மெஷினை மறுபுறம் திருப்ப வேண்டும். உடனே டிஜிட்டலில் 3 நிமிட கவுன்ட் டவுன் ஆரம்பிக்கும். நேரம் முடிந்தவுடன் அதுவே “பீப்” பிட்டுக் கூப்பிடும். திறந்து எடுத்தால் சூடான வாஃபில் ரெடி. இதில் தவறாகப் போவதற்கோ கருகுவதற்கோ வாய்ப்பே இல்லை.
       இருந்த பல வகை ஜுஸ்களில் எனக்குப் பிடித்த கிரேன்பெர்ரி ஜூஸைக்கொஞ்சம் குடித்துவிட்டு வெளியே கிளம்பினோம். ஒன்றரை மணி நேரப்பயணத்தில் 'போர்ட்லேண்ட்" வந்து சேர்ந்தோம்.
    
பயணம் தொடரும் >>>>>>>>>>>
    
பின் குறிப்பு : சொல்ல மறந்திட்டேன்.நான் டிஸ்ட்ரிக்ட் லெவெலில் விளையாடியது “டென்னிக்காய்ட்”. அமெரிக்கன் கல்லூரி நண்பர்கள் சிரித்த காரணம், அது அதிகமாய் பெண்கள் விளையாடும் கேம்  என்பதால்.


Monday, September 23, 2013

மெய்ன் பயணம் Part 2 : என் வழி!!!!!!!!!! தனி வழி !!!!!!!!

          
       உள்ளே ரிசப்ஷனில் உக்கிரமாய் சண்டை நடந்து கொண்டிருந்தது. நான் உள்ளே சென்று சண்டை போடுவதில்  பயனில்லை என்று விளக்கி , ஐபாடை எடுத்து தட்டினேன். பிறகு போனில் திரும்ப ப்ரைஸ் லைனை பிடித்து ஒரு மணிநேரம் போராடியபின், அதிர்ஷ்டவசமாக பக்கத்திலேயே இருந்த "கம்ஃபர்ட் இன்"னில் இடம் கிடைத்தது. மூன்று ரூமில் இரண்டு ரூம் இன்டர் கனெக்டட்.ரூம்கள் சுத்தமாகவும் அருமையாகவும் இருந்தது, ஒரு திருப்தியைத்தந்தது. இரண்டு குயின் சைஸ் பெட் இருந்ததால் நான்கு பேர் தாராளமாகப்படுக்கலாம்.
     வந்ததும் வராததுமாக ,எல்லோரும் ஸ்விம்  சூட்டும், ஷார்ட்ஸும் மாட்டிக்கொண்டு நாலு  வயசு ஜெருஷா முதற்கொண்டு ,இண்டோர் நீச்சல் குளத்திற்கு சென்று இறங்கினர். என் மனைவி என்னையும் கூப்பிட்டாள். "வெள்ளிக்கிழமையெல்லாம் நான் நீந்துவதில்லை" என்றேன். " நீங்கள் அந்த குழந்தைகள் பகுதியில் இறங்கலாமே? என்று மனைவி சொன்னதும் கற்றுக்கொடுக்காத என் அம்மா அப்பா மேல் கோவம் கோவமாய் வந்தது.
      கொஞ்சம் ஆசுவாசப்படுத்திவிட்டு, ஜூலை 4 வாணவேடிக்கையைப்பார்க்க கிளம்பினோம். சுதந்திர தினமான, அன்று எல்லா பெரிய நகரங்களிலும் இருட்டியபின் வாணவேடிக்கை நடக்கும்.  இன்னும் நேரம் இருந்தது. அந்த நேரம் பார்த்து சோவென்று சத்தத்துடன் "தண்டர் ஸ்டார்ம்" ஆரம்பித்தது. கோடையில் இது சகஜம்தான். ஆனாலும் ரம்மியமான மாலை நேரத்தையும், வாணவேடிக்கையையும் கெடுத்து  விடுமோ என்று அஞ்சினோம். ஒரு அரைமணி நேரம் மழை கொட்டோ கொட்டென  கொட்டி ஒய்ந்தது. அதுவும் ஒருவகைக்கு நல்லதுதான். நாள் முழுவதும் கொளுத்திய 90 டிகிரி வெயிலை சாந்தப்படுத்தி, நல்ல ஒரு குளிர்ந்த சூழ்நிலை வந்தது.
            வாணவேடிக்கை நடக்குமுன், பல நிகழ்ச்சிகள் இருந்தன. எல்லோரும் கிளம்பி அந்த இடத்திற்கு சென்றோம். பார்க்கிங் அருகில் ஒரு சிறிய கோட்டை இருந்ததைப் பார்த்தவுடன் துள்ளிக்குதித்தேன். ஆஹா அஜென்டாவில் இதைப்பற்றி சொல்லவே இல்லையே என்று நினைத்த வண்ணம், “இங்கு போகவேண்டுமென” சொன்னேன்,. "ஐயா ஆளைவிடு, எங்களை இறக்கிவிட்டுவிட்டு எங்கே வேணாலும் போ" என்றால் என் மனைவி. அவளுக்குத்தான் "ஹிஸ்டரி அலர்ஜி" ஆச்சே. ஆனாலும் 11 பேரில் ஒருவர் கூட என் கூட வரவில்லையாதலால் நான் தனியாகவே சென்றேன். என்ன செய்வது என்னுடைய இண்டரஸ்ட் வேற யாருக்கும் இல்லை. என் வழி!!!!!!! தனி வழி!!!!!!!! என்று சொல்லிவிட்டு கோட்டைக்குப்போனேன்.
            என் மனைவி போலவே ஹிஸ்டரி அலர்ஜி உள்ளவர்கள் ஒரு பத்தி மட்டும் தள்ளிப்படிக்கவும்.
            ஓல்ட் ஃபோர்ட் வெஸ்டர்ன் (Old Fort Western) என்று அழைக்கப்படும் இது ஒரு தேசிய நினைவுச்சின்னம். கென்னபெக் ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் இது கிபி 1754-ல் கட்டப்பட்டது. வெறும் மரத்தால் கட்டப்பட்ட இந்தக் கோட்டை, இதுமாதிரி கட்டப்பட்டவைகளுள் மிகவும் பழமையானது. நியூ இங்லான்டின் காலனிக் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் இந்தக்கோட்டையில் நேரடியாக எந்தச் சண்டையும் நடந்ததில்லை. ஆனால் அமெரிக்க சிவில் வார் நடக்கும்போது, பெனடிக்ட் அர்னால்டு என்பவர், கியூபெக் பகுதியைத்தாக்குவதற்கு இதனைத்தான் பாசறையாக பயன்படுத்தினாராம்.
         கோட்டையைப் பார்த்து முடித்து, வண்டியை ஆற்றங்கரையில் உள்ள தெருவில் பார்க் செய்யலாம் என்று செல்லும்போது, பெரிய குதிரை வண்டி (Horse Carriage) அந்தப்பக்கம் வந்தது. வண்டியில் இருந்தவர்கள் தெரிந்த மூஞ்சிகளாய் இருந்தது. உற்றுப்பார்த்தால் அட நம்ம ஆட்கள்தான். குதூகலமாய் கைகளை ஆட்டிக்கொண்டு சென்றனர். அந்த 20 பேர் உட்காரக்கூடிய பெரிய வண்டியை இரண்டு குதிரைகள் அநாயசமாக இழுத்துச் சென்றன. குதிரைகளா அவை ஒவ்வொன்றும் குட்டியானை சைசில் இருந்தன. என்னத்தைப் போட்டு வளர்ப்பாய்ங்க்களோ? போகிறபோக்கில் தும்பிக்கை போன்ற வாலைத்தூக்கி போட்டது பாருங்க சாணியை அம்மம்மா எவ்வளவு சாப்பிட்டிருந்தால் இவ்வளவு????.

         பார்க் செய்த இடத்திற்கு முன்னால் ஒரு ஆன்டிக் கடை (Antique) இருந்தது. நல்லவேளை வண்டியில் என் மனைவி போய்விட்டாள். ஏற்கனவே வீட்டில் இடங்கொள்ளாமட்டும் கலைப்பொருட்கள் நிறைந்து இருந்தன. வைப்பதற்கு இடமேயில்லை. சுவர்களிலும் ஒரு இடம் விடாது மாட்டி வைத்தாயிற்று. ஆனாலும் என் கலை ஆசை விடாததால், உள்ளே நுழைந்தேன். ராஜ மரியாதை கொடுத்து, கணவன் மனைவி என்னை வரவேற்றதால் உச்சி குளிர்ந்து, பலவற்றை வாங்கிவிட்டேன். நல்ல பொருட்கள் தாம், விலையும்  பரவாயில்லை. நன்கு பேக் செய்து, ஒரு பிளாஸ்டிக் பின்னில்  போட்டுக் கொடுத்தார்கள். தூக்கிக்கொண்டு வந்து காரிலும் வைத்தார்கள். மகிழ்ச்சியோடு ஆற்றங்கரைப்பக்கம் நடையைக் கட்டினேன். 
Kennebec River
நம் ஆட்கள் கரையில் பெட்ஷீட்டை விரித்து உட்கார்ந்து செட்டில் ஆகி, பிட்சாவை சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். மணி எட்டரை ஆகியும் சூரியன் அஸ்தமனம் ஆகாமல் நல்ல வெளிச்சம் இருந்தது. இருட்டிய பின்னர்தான் ஃபயர் வொர்க்ஸ் போடுவார்கள். என்னைப் பார்த்தவுடன் "என்ன வாங்கினாய்?", என்று மனைவி கேட்டது" என்ன வாங்கி  நாய்", என்று ஒலித்தது. "ஒன்னுமில்லையே", என்று நான்  அப்பாவியாய் சொன்னதும், "ஏய் கதைவிடாதே, நீதான் அந்தக்கடையில் நுழைஞ்சதைப் பார்த்தேனே " என்றாள். 

Monday, September 16, 2013

மெய்ன் பயணம் பகுதி 1 : ஜிபிஎஸ்-ஆல் போன மானம்


            ஜூலை 4 - அமெரிக்க சுதந்திர தினம்.இம்முறை வியாழக்கிழமை வந்தது. வெள்ளி லீவ் போட்டால் நான்கு நாட்கள் சுளையாகக்கிடைக்குமென்பதால், எங்கேயாவது டிரைவ் செய்யலாம் என்று முடிவு செய்தோம். பக்கத்து மாநிலங்கள் எல்லாவற்றையும் பார்த்து முடித்துவிட்டதால், கொஞ்சம் தூரமான மாநிலங்கள் இன்னும் மூன்று பாக்கி இருந்தன. அவை வெர்மான்ட், ஒகாயோ மற்றும் மெயின். மூன்றுமே சாலை வழியாக ஒரு ஐந்து முதல் ஆறு  மணி நேரத்தில் செல்லலாம். 65- 70 மைல்  வேகத்தில் (100, 120கி.மீ வேகம்) சென்றால், டிராபிக்கில் மாட்டாமல் இருந்தால் இது சாத்தியம்தான். மற்றவை யெல்லாம் விமானப்பயணம் மூலம்தான் செல்லமுடியும்
            வெர்மான்ட் கோடைக்காலத்தை விட இலையுதிர் காலத்தில் நன்றாக இருக்கும் என்பதால், மெயின் போகலாம் (Maine) என்று முடிவு செய்தேன். நான் முடிவு செய்தவுடன், பெஞ்சியின் மனைவி திவ்யா, அவளும் வருவதாகச் சொன்னாள். என் மாமனாரும், மாமியாரும் இந்தியாவிலிருந்து வந்திருந்தனர். கீழ்போர்ஷனில் குடியிருக்கும் பின்னியும் கிஃப்டாவும் சேர்ந்து கொள்ள மொத்தம் 11 பேர் ஆனது. சரியென்று சொன்னதற்கு தண்டனையாக என் வேனையே கேட்டனர். வோக்ஸ் வேகன் ரூட்டன் ( Volks Wagon Routan) - 8 பேர் உட்காரலாம். அதோடு, என் மகளின் பிஎம்டபுள்யூ- X1 ஐ நான் எடுக்க திவ்யா, கிஃப்டா வயிற்றில் உள்ளதைச்சேர்க்காமல் 11 பேர்.
            வியாழன் அதிகாலையில்  கிளம்பி, ஞாயிறு மாலை திரும்புவதாக திட்டம் போட்டு, இம்முறை ஒரு மாற்றாக ஹோட்டல் புக்கிங், பார்க்குமிடங்கள் ஆகியவற்றை திவ்யா, கிஃப்டா கையில் கொடுத்தேன்.
            வியாழன் காலை நான் 5 மணிக்கெல்லாம் எழுந்து கிளம்பி, மனைவி பிள்ளைகளை எழுப்பிக்கிளப்பி 6 மணிக்கெல்லாம் ரெடியாகி, காருக்கு வர, மேலே ஒரு சத்தத்தையும் காணோம். கடுப்பாகி “நாம் சிறிது முன்னால் கிளம்பலாம்”, என்றேன். என் மனைவியின் அப்ஜெக்சனையும் ஓவர்ரூல் பண்ணி, ஜிபிஎஸ்-ல் அட்ரசை போட்டேன். 740 மைல்  என்றும் இரவில் தான் போய்ச்சேருவோம் என்றும் போட்டிருந்தது. ஆனால் மெயின் 360 மைல்தான். ஏற்கனவே கடுப்பில் இருந்த நான், யோசிக்காமல், டக்கென்று வண்டியை எடுத்தேன். வண்டி டிரைபோரோ பிரிட்ஜ் தாண்டி I-80-  ல் ஆல்பெனி நோக்கிச் சென்றது.
            கிட்டத்தட்ட இரண்டு மணிநேரம் டிரைவ் செய்தபின் என் மனைவிக்கு ஒரு சந்தேகம் வந்தது. "ஏங்க  சரியான வழியில்தான் போகிறோமா?" என்றாள். “பேசாம இரு உனக்குத் தெரியாது”,என்று அதட்டினாலும், எனக்கும் சந்தேகம் வந்தது. பிள்ளைகளிடத்தில் சொல்லி, ஐபோனில் செக் செய்யலாம் என்றால், அவர்களிருவரும் விட்ட தூக்கத்தை  கண்டினியூ பண்ணிக்கொண்டிருந்தார்கள்.
            அப்போழுது திவ்யா போன் வந்தது. “எங்கேயிருக்கிறீர்கள்” என்று கேட்டபோது “கனெக்டிக்கட்” தாண்டுகிறோம் என்றார்கள். என்ன கனெக்டிக்கட்டா, நாங்கள் ஆல்பெனி வழியில்ல போய்க் கொண்டிருக்கிறோம் என்று நினைத்தவுடன் பகீரென்றது. வேனை ஓரங்கட்டி, ஆராய்ந்ததில், இந்த முட்டாள் BMW GPS எங்களை தப்பாக வழிகாட்டியிருக்கிறது. 2 மணி நேரம் தவறான வழியில் போனதால், எங்களுக்குப் பின்னர் கிளம்பியவர்கள் இப்போது எங்களுக்கு ஒரு மணி நேரம் முன்னால் போய்க் கொண்டிருக்கிறார்கள். முன்னால் கிளம்பிய எனக்கு அவமானமாய் இருக்க என் மனைவி நல்லவேளை ஏளனமாய் சிரிக்கவில்லை. அந்தக்காரில் உள்ளவர்கள் நிச்சயமாய் சிரித்திருப்பார்கள். என் பெண்ணை எழுப்பி ஐபோனில் டைரக்ன் போட்டோம். மறுபடியும் திரும்பி, கனெக்டிக்கட் மாநிலம்   வந்து, மசாசுசெட்ஸ் மாநிலம்     தாண்டி, நியூஹாம்ஷையரில் மதிய உணவுக்காக நிறுத்தினோம். அப்படியே கேசும் (பெட்ரோல்) போட்டுவிடலாம் என ஒரு எக்சிட்டில் வெளியே வந்தோம். இங்கே பெரும்பாலான கேஸ் ஸ்டேனில், டெலி (Deli) என்று சொல்லப்படுகிற கன்வீனியன்ட் ஸ்டோரும் இருக்கும். அதில் பேகல், பிரட்ஜெல்  மற்றும் சான்விட்ச்சுகளும் கிடைக்குமென்பதால் அங்கே நிறுத்தினோம். BMW என்பதால் பிரிமியம் கேஸ்தான் போட வேண்டும். அது கேலனுக்கு ரெகுலர் கேஸை விட குறைந்தது ஒரு 50 Cents அதிகம். இங்கே பெட்ரோலில் நான்கு வகைகள் உண்டு.
            டெலியினுள் நுழைந்து, சேஃபாக ஒரு வெஜ்ஜி சான்ட்விச்சை ஆர்டர் செய்தேன். என் மனைவி பிள்ளைகள் வேண்டாம் என்று சொல்லி விட நான் மட்டும் சாப்பிட வேண்டியதிருந்தது. டோஸ்ட் செய்த ஹீரோவில் (ஒரு வகை ரொட்டி) ஒரு அமெரிக்கன் சீஸ், லேட்டூஸ், தக்காளி, ஆலிவ், கேப்சிகம் மற்றும் உப்புத்தண்ணீரில் ஊற வைத்த வெள்ளரி ஆகியவை போட்டு நன்றாகவே இருந்தது. மேயனீஸ் வேண்டாமென்று சொல்லிவிட்டேன்.
            டெலியினுள் இருந்த ஆள் சிவப்பாகஉயரமாக வாட்ட சாட்டமாக இருந்தான் பாகிஸ்தானி அல்லது பஞ்சாபியாக இருக்கவேண்டும் என நினைத்து கேட்கலாமா வேண்டாமா? என்று யோசித்தேன். சரி கேட்டுவிடுவோம் என்று நினைத்து, பாகிஸ்தானா? என்று கேட்டேன். “இல்லை ஹைதராபாத்”, என்றான். ஆச்சரியமாக இருந்தது. எங்கோ ஒரு மூலையில் இருக்கும் Gas station, பெரிய கன்வீனியன்ஸ் ஸ்டோர், மற்றும் அந்த உணவகத்தையும் சேர்த்து ஒரே ஆள்  பார்த்துக் கொண்டிருந்தான். ஆட்கள் பற்றாக்குறையால் இங்கே எல்லா இடத்திலும் இப்படித்தான். மல்டை  டாஸ்கிங் (Multitasking). 
            என் மனைவி, பெஞ்சிக்கு போன் செய்தபோது அவர்களும் பக்கத்தில்தான் இருந்தனர் என்று தெரிந்தது. ஒரு அரை மணி நேரத்தில் அவர்களை 'வெண்டி' (Wendy) உணவகத்தில் பிடித்தோம். என் கார் உள்ளே நுழையும் போது, பார்க்கிங்கில் அவர்கள் எதையோ சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். "ஏன்  ரெஸ்டாரண்ட் உள்ளே  உட்கார்ந்து சாப்பிட வேண்டியதானே ?", என்று என் மனைவியிடம் சொல்லிக்கொண்டே காரை பக்கத்தில் நிறுத்தினால், இவர்கள் வெண்டி பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு தயிர்சாதம் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். இந்த தென் இந்தியர்கள் குறிப்பாக தமிழர்கள் இந்தக் கட்டுச்சோறு பழக்கத்தை அமெரிக்கா வந்தாலும் விடுவதில்லை என நினைத்து தலையில் அடித்துக்கொண்டேன்.
            சாண்ட்விச்சுக்கு  விரதம் இருந்த என் மனைவி, தயிர்சாதம் என்றதும் ஆவலாக ஒரு பிளேட் வாங்கி பசியாறினாள். என் பிள்ளைகள்"வேண்டாம், வி ஆர் குட்" என்று சொல்லிவிட்டனர்.
            மீண்டும் அங்கிருந்து ஒன்றாகவேகிளம்பி “அகஸ்டா”  என்ற சிறிய நகரத்தில் நான்கு மணியளவில் நுழைந்தோம். அங்கிருந்த  "பெஸ்ட் வெஸ்டர்ன்" ஹோட்டலில் மூன்று ரூம்கள் புக் செய்திருந்தாள் திவ்யா.
            பெட்டிகளை இறக்கி வைத்துவிட்டுநான் காரில் இருக்க, உள்ளே  சென்ற திவ்யா கலவரமாக வெளியே வந்தாள். என்னவென்றால் பிரைஸ்லைன் மூலமாக புக் செய்த எதுவும் இங்கு வந்து சேரவில்லை. ரூம் எதுவும் காலியாக ,இல்லை என்று அடித்துச் சொல்லிவிட்டார்கள்.ஜூலை 4 வீக்கெண்ட், கோடைகாலத்தின் முதல் விடுமுறை. எனவே அநேகமாக எல்லோருமே வெளியே போய்விடுவார்கள். அதனால் முன்னால் புக்கிங் செய்யாவிட்டால் ரூம்கள் கிடைப்பது அரிது.

   ஐயையோ இப்ப என்ன செய்வது, எங்கு தங்குவது என நினைத்து கலக்கமாக இருந்தது.

தொடரும்