Monday, June 29, 2015

இளையராஜாவின் மீனவப்பாடல் !!!!!!!!!!!!!

எழுபதுகளில் இளையராஜா பாடல் எண் 23

ஓடம் ஒன்று காற்றில் போன வழி

Ilayaraja & arrangements
      1978-ல் வெளிவந்த திரிபுரசுந்தரி என்ற படத்தில் இளையராஜா அவர்களால் இசையமைக்கப்பட்டு வெளிவந்த பாடல் இது. பாடலைக் கேட்டுவிடலாமா?


பாடலின் சூழல்:-
திரைப்படப் பாடல்களில் வெ ளிவந்த மீனவர் துயரம் சொல்லும் பாடல்களில் இதுவும் உண்டு. ஓடத்தை ஓட்டிச்செல்லும் மீனவன் ஒருவர் தம் சோகத்தைச் சொல்லிப் பாடும் விதத்தில் பாடல் அமைந்துள்ளது.
பாடலின் இசை:
புல்லாங்குழல், சாரங்கி போன்ற கருவிகளைப் பயன்படுத்தி உன்னத இசையை கொடுத்திருக்கிறார் இளையராஜா. பாடலின் ராகத்திலும் கருவிகளின் பயன்படுத்தலிலும் மனதைப் பிழியும் சோகத்தை தந்திருக்கிறார். பாடலின் எளிய மெலடி, எளிய இசையமைப்பில் நீண்ட நாள் நிலைத்திருக்கிறது இந்தப்பாடல்.  
பாடலின் குரல்:


பாடியுள்ளவர்
 இளையராஜா. அவர் இந்தக் காலகட்டத்தில் பாடிய பிற பாடல்களை ஒப்பிட்டுப் பார்க்கும் போது, இதில் அவர் குரல் வளம் நன்றாக மெருகேறியிருப்பது தெளிவாக தெரிகிறது. குறிப்பாக உச்சஸ்தாயில்  MSV யின் ஆரம்ப காலக்குரலை  ஞாபகப்படுத்துவது ஆச்சரியமளிக்கிறது. பாடலின் சூழலுக்கு ஏற்ற மீனவனின் குரலுக்கு இளையராஜாவின் குரல் சிறப்பாகவே பொருந்துகிறது.
பாடலின் வரிகள் :

ஓடம் ஒன்று காற்றில் போனவழி
நாமும்   போகின்றோம் 
ஏதோ ஒன்று நாளை என்று இன்னும் வாழ்கின்றோம்

பாதை என்று ஏதும் இல்லை
காலம் எல்லாம் நாங்கள் போகின்றோம்.
தாகம் வந்தால் நீரும் இல்லை
நீரில் இங்கே நாளும் வாழ்கின்றோம் - இந்த
நீரில் சென்றே கானல் நீரானோம்               - ஓடம்

தூண்டில் இட்டோம் மீன்கள் இல்லை
நாங்கள் இங்கே தூண்டில் மீனானோம்
ஓடம் விட்டோம் தீபம் இல்லை
நாங்கள் இங்கே ஓடம் போலானோம், எந்த
நேரம் எங்கே போவோம் என்றானோம்       - ஓடம்

மேகம் என்றால் மின்னல் உண்டு
தோன்றும் மின்னல் தானே மாறாதா?
வாழ்க்கை என்றால் இன்னல் உண்டு
காணும் இன்னல் தானே தீராதா நல்ல
காலம் ஒன்று நாளை வாராதா?          - ஓடம்

பாடல் வரிகள் :
புலவர் புலமைப்பித்தன்
      
      பாடலின் வரிகளை எழுதியவர்  புலவர்  புலமைப்பித்தன் அவர்கள். ஆரம்ப காலங்களில் இளையராஜாவுக்கு சில பாடல்களைஎழுதியுள்ளார். மீனவர் பற்றிய பாடல்களில், வாலி எழுதிய படகோட்டி படத்தில் வரும்  "தரைமேல் பிறக்க வைத்தான்' என்ற பாடலை மிஞ்சும் பாடல் எதுவுமில்லையென்றாலும், சிலவரிகளில் பொறி இருக்கிறது. "நீரில் சென்றே கானல் நீரானோம்" என்ற வரியும், இரண்டாவது சரணத்தில்  வரும் " தூண்டில் இட்டோம் மீன்கள் இல்லை, நாங்கள் இங்கே தூண்டில் மீனானோம்". ஆகிய வரிகள் சிறப்பாக அமைந்துள்ளன. மற்றபடி மற்றவரிகள் இன்னும் கூட சிறப்பாக அமைந்திருக்கலாம் என்பது என் ஆதங்கம்.

இளையராஜாவின் சிறப்பான மெலடிகளுக்கு இந்தப்பாடல் ஒரு நல்ல உதாரணம்.

இன்னும் வரும் >>>>>>>>>>>>>>>>>>>>>>>

Thursday, June 25, 2015

லாரன்ஸ் & டேவிட் !!!!!!!!!

படித்ததில் பிடித்தது
லாரன்ஸ் & டேவிட் துப்பறியும் “வான் வெளிக்கொள்ளையர்”

         அப்போதெல்லாம் என் வீட்டில் டிவி கிடையாது. ரேடியோவில், காலையில் ஒலிக்கும் திரைப்படப் பாடல்கள் (உபயம் : இலங்கை ஒலிபரப்புக் கூட்டுஸ்தாபனம்), திருச்சி வானொலி நிலையத்தில் வெள்ளிக்கிழமை இரவு ஒலிக்கும் முத்துச்சரம், புதன் இரவு தொடர் நாடகம், ஞாயிற்றுக்கிழமை வரும் ஒலிச்சித்திரம், இது தவிர தினத்தந்தியில் சிந்து பாத் (இப்போதும் வருகிறதாமே? முதுகில் இருந்து இறங்கி விட்டானா ?), கோகுலத்தில் “பலே பாலு”, அம்புலிமாமாவில் விக்ரமாதித்யன் (தன் முயற்சியில் சற்றும் தளராத) இவைகள்தான் உச்சபச்ச பொழுதுபோக்கு வீட்டுக்குள். வெளியே தேவதானப்பட்டி சிவராம் டாக்கீசில், அழுது வடியும் சிவாஜி படங்கள், ஆர்ப்பாட்டமான எம்ஜியார் படங்கள் (என் அப்பாவால் தணிக்கை செய்யப்பட்டவை மட்டும்) இல்லையென்றால் புராணப்படங்கள்.  
இதையெல்லாம் மீறி உன்னதமான பொழுதுபோக்காக இருந்தவை 'முத்து காமிக்ஸ்' கதைகள். இதில் வந்த சூப்பர் ஹீரோக்களின் சாகசங்கள் மனதைக்கவர்ந்தவை மட்டுமல்ல, நம்மையும் சாதிக்கத் தூண்டுபவை. இவர்களுள் எனக்கு மிகவும் பிடித்த ஜோடிகளில் ஒன்று லாரன்ஸ் & டேவிட். இவர்களின் சாகசங்கள் அடங்கிய "வான் வெளிக்கொள்ளையர்"--ன் மறுபதிப்பை சமீபத்தில் வாசித்தேன்.
இந்தக் கதைகள் எல்லாம் எத்தனை கனவுகளை எனக்குள் புதைத்தன, எவ்வளவு அறிவாற்றலை விதைத்தன என்பதை நினைத்துப் பார்க்கும் போது மிகவும் ஆச்சரியமாயிருக்கிறது.
1960-களில் அறிவியலில் முன்னேற்றமடைந்த நாட்டிலிருந்து வெளிவந்த இந்த காமிக்ஸ்கள் 1970-களில்தான்  நமக்கு தமிழில் கிடைத்தாலும், எவ்வளவு புதுமைகளை எனக்குள் சொல்லியிருக்கிறது என்பதைத்தான் உங்களோடு பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.
வெளி நாட்டின் முக்கிய இடங்கள்:
'வான்வெளிக் கொள்ளையர்' காமிக்ஸில், லாஸ் ஏஞ்சலஸில் ஆரம்பித்து, ஹீயூஸ்டன், டெக்சஸ், அரிஜோனா மாநிலம், நியூயார்க் மற்றும் லண்டன் ஆகிய இடங்கள் வருகின்றன.  
யோசித்துப்பாருங்கள், எட்டு வயதிலிருந்து 10 வயதுக்குள் இந்த இடங்களெல்லாம் எனக்கு அறிமுகமாகிவிட்டன. இப்போது மேலே குறிப்பிட்ட அனைத்து இடங்களையும் நேரில் பார்த்துவிட்டதோடு, நியூயார்க்கில்தான் வாழ்கிறேன் என்று நினைத்தால் அது ஆச்சரியம் இல்லையா.
படிப்பதோடு இந்த இடங்களையெல்லாம் நேரில்பார்க்கத்தூண்டியது இந்த காமிக்ஸ்கள்தான் என்றால் நம்புவீர்களா?.
'மஞ்சள் பூ மர்மம்' தான் லண்டனின் தேம்ஸ் நதியைப் பார்க்கத்தூண்டியது.
தலைகேட்ட தங்கப்புதையல்தான் - மெக்சிகோவை பார்க்கத்தூண்டியது.
அது மட்டுமல்ல இந்த இடங்களுக்கெல்லாம் நேரில் சென்ற போது புதிதாகப் பார்ப்பது போலவே எனக்குத் தெரியவில்லை. இன்னும் பார்க்க வேண்டிய இடங்கள் லிஸ்ட்டில் இருக்கின்றது.
விமானங்கள்:
விமானங்களை பக்கத்தில் பார்ப்பதற்கு எனக்கு வெகுகாலம் பிடித்தது. எங்கள் ஊரின் மேலே தொலைதூரத்தில் ஜெட் விமானம், வானத்தில் வெள்ளைக்கோடைப் போட்டுக் கொண்டு போகும் போது, நாங்கள் வெளியே வந்து விமானம் மறையும் வரை பார்ப்போம். ஆனால் காமிக்ஸ் மூலம் நான் விமானத்தில் பயணித்தேன், விமானங்களைப் பற்றி அறிந்துகொண்டேன். குறிப்பாக 'வான்வெளிக்கொள்ளையர்' காமிக்ஸ் மூலம் நான் அறிந்து கொண்ட பலவற்றுள் சில கீழே.
·         விமானத்தில் தானே செலுத்தும் கருவி.
·         சுவாசக்கவசம்
·         ஹெலிகாப்டர்
·         பாராச்சூட்
·         பெரிய விமானம் சின்ன விமானத்தை விழுங்குதல்.
·         ரடார்
·         சூப்பர்சானிக் போர் விமானங்கள்.
யோசித்துப்பாருங்கள் அந்த வயதில் எத்தனை புதிய விஷயங்கள்.
அதிநவீன விஞ்ஞானம்:
அதுமட்டுமல்ல, அலாரம் பொருத்தப்பட்ட அடையாள வில்லை, பென்சில் ரேடியோ, டிரான்ஸ்மிட்டர்கள், அணு ஆராய்ச்சி நிலையம், மேலும் கம்ப்யூட்டர் பிரிவு. நான் ஐந்தாவது படிக்கும் போதே கம்ப்யூட்டர்களைப்பற்றி தெரிந்து கொண்டது காமிக்ஸ் மூலம் தான். ஆனால் உபயோகப்படுத்த ஆரம்பித்தது முதுகலை முடித்து மூன்றாவது வேலையில் தான்.  
ஜூடோ டேவிட்:
சிலம்பம், மல்யுத்தம், குத்துச்சண்டை, என்பவை பற்றித்தான் தெரியும். கராத்தே பற்றி அரசல் புரசலாக கேள்விப்பட்டிருந்தேன். ஆனால் ஜூடோ பற்றி அறிந்து கொண்டது காமிக்ஸ் மூலம் தான். காமிக்ஸ்களை படித்துவிட்டு என் அப்பாவிடம் ஏராளமான கேள்விகளைக் கேட்டு அவரைத் திணறடித்தது ஞாபகம் வருகிறது.
அகொதீக:
லாரன்ஸ் & டேவிட் கதைகள் மட்டுமல்லாமல் இரும்புக்கை மாயாவியின் கதைகளிலும் இந்த கிரைம் குரூப் வரும். அழிவு, கொள்ளை, தீமை கழகம் என்பது அதன் விரிவாக்கம். சில்லறைத் திருட்டுகளைப்பற்றி மட்டும் அறிந்த என் போன்றோர் 'ஆர்கனைஸ்டு கிரைம்' பற்றித் தெரிந்து கொண்டது காமிக்ஸ் மூலம்தான். அவ்வளவு உயர்ரக ஆயுதங்களைப் பயன்படுத்தும் ராணுவம் போன்ற கட்டுப்பாடுள்ள அகொதீக வைப் பற்றி படித்துவிட்டு ஜெய்சங்கர் படங்களில் வரும் கொள்ளைக் கூட்டத்தையும், கூட்ட பாஸையும் பார்க்கும் போது சிரிப்புதான் வரும்.
தி.மு.க, அ.தி.மு.க, ம.தி.மு.க, அகொதீக என்று ரைமிங்காக வரும் கழகம் என்ற கடைச் சொல்லைப் பயன்படுத்திய அப்போதைய ஆசிரியர் தைரியம் உடையவர்  மட்டுமல்ல கிண்டலும் பிடித்தவர்தான்.  
விச்சு & கிச்சு:

காமிக்சின் முழுக்கதையின் பின் இணைப்பாக தலைகாட்டும் விச்சு & கிச்சு வைப்படித்துவிட்டு வாய்விட்டுச் சிரித்திருக்கிறேன். லாரல் & ஹார்டியை நினைவுபடுத்தும் விச்சு & கிச்சு, மன்னிக்க லாரல் & ஹார்டியைப் பின்னர் பார்க்கும் போது விச்சு & கிச்சு தான் ஞாபகம் வருகிறது.ஒவ்வொரு தடவையும் மேதாவி போல் முடிவு எடுத்து மூக்குடையும் விச்சு கேரக்டரையும், விச்சுவின் முயற்சி எதிர்மறையாக ஆகும் போது, சிரிக்காமல் கமெண்ட் அடிக்கும் கிச்சுவையும் எப்போதும் ரசிக்கலாம்.
என் வாழ்க்கையிலும் விச்சு போன்ற எத்தனை கேரக்டர்களைப் பார்த்திருக்கிறேன்.
மொத்தத்தில் எப்போது படித்தாலும், காமிக்ஸ்கள் சுவையாகவே இருக்கின்றன. புதியவற்றை  கற்றுக் கொள்ள துணையாகவே இருக்கின்றன. அதோடு காமிக்ஸ் கிளாசிக்ஸ் படிக்கும் போது பழைய நினைவுகளைத் தூண்டி 'நாஸ்டால்ஜிக்' உணர்ச்சிகள் துள்ளி வருகிறது. புதுவடிவில் வருவதை நன்றி சொல்லி வரவேற்கிறேன், கலரில் கொடுத்தால் இன்னும் மகிழ்ச்சியடைவேன்.  
லாரன்ஸ் & டேவிட்  வரும் எனக்குப்பிடித்த காமிக்ஸ்கள்:
1.    திசைமாறிய கப்பல்கள்
2.    மஞ்சள் பூ மர்மம்
3.    பிளைட் 731
4.    காற்றில் கரைந்த கப்பல்கள்
5.    ஃபார்முலா X13
6.    சிறைப்பறவைகள்
7.    பனிக்கடலில் பயங்கர எரிமலை
8.    ஃபார்முலா திருடர்கள்
முற்றும்


Monday, June 22, 2015

அல்மா மேட்டர் !!!!!!!!!!!!!

Columbia-University-engineering-programs
Columbia University
வாரம் மூன்று முறை அதிகாலை கிளம்பி ரெடியாகி, ஃபிசிக்கல் தெரப்பிக்காக செல்கிறேன். இந்த இடம் மேன்ஹாட்டனில் அப் டவுனில், ஆம்ஸ்டர்டாம் அவென்யூவில் இருக்கும் மெளன்ட் சினாய் ஆஸ்பத்திரியின் ஒரு பகுதி.

பிராட்வேயில் உள்ள சப்வேயில், கொலம்பியா பல்கலைக்கழக ஸ்டாப்பில் இறங்கி கீழே வந்தால் பல்கலைக்கழகம் கம்பீரமாய் நிற்கிறது. ஆம்ஸ்டர்டாம் அவென்யூ எங்கே என்று கேட்டால் கொலம்பியாவின் உள்ளே நுழைந்து குறுக்கே சென்றால் வரும் என்றார்கள்.
உள்ளே நுழைந்தேன், இடது புறம் பிரம்மாண்டமாக எழுந்த நூலகக்கட்டமும் அதன் முன்னால் காவல் தேவதை போல எழுந்தருளி, அருள் பாலிக்கும் "அல்மா மேட்டர்" அம்மனும் தெரிந்தார்கள். அது தவிர பல உப தேவதைகளும் அங்குமிங்கும் மிதந்து கொண்டிருந்தது கண்கொள்ளாக்காட்சியாக இருந்தது. அங்கு படிக்கும்போது  நடந்த  நிகழ்வுகள்  மனக்கண்  முன் வந்து போயின.


 பல பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் நான் படித்திருந்தாலும் 'அல்மா மேட்டர்' என்றால் இரண்டு கல்லூரிகளை மட்டும்தான் சொல்லலாம். ஒன்று மதுரை அமெரிக்கன் கல்லூரி, இரண்டாவது கொலம்பியா பல்கலைக்கழகம்.இந்த இரண்டையும் இணைக்கும் ஒரு நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தது. சொல்கிறேன் கேளுங்கள்.
Columbia Library
கடந்த மார்ச் மாதத்தில் ஒரு நாள் அமெரிக்கன் கல்லூரி முதல்வரிடமிருந்து ஒரு ஈமெயில் வந்தது. அமெரிக்கன் கல்லூரியின் பல முதல்வர்களான, P.T.செல்லப்பா, B.குணராஜ், பீட்டர் ஜெயபாண்டியன், சுதானந்தா, சின்னராஜ் ஜோசப் போன்ற பலரிடம் எனக்கு நேரடித் தொடர்பும் பழக்கமும் இருந்தது. ஆனால் தற்போதைய முதல்வரிடம் எனக்கு அறிமுகமோ பழக்கமோ இல்லை. எங்கிருந்து இவருக்கு என் ஈமெயில் கிடைத்திருக்குமென ஆச்சரியமாய் இருந்தது.
ஈமெயிலின் சாராம்சம் என்னவென்றால், அவரும் கல்லூரியின் பர்சார், ஹெலன் மோனிக்காவும் அமெரிக்க வருவதாகவும், நியூயார்க்கில் சில வேலைகளுக்கு இடையில் ஒரு அலம்னை மீட்டிங் வைக்க விரும்புவதாகவும் ஈமெயில் தெரிவித்தது.
மகிழ்ச்சியுடன் நான் வருவதாக ரிப்ளை அனுப்பினேன். இடம் எங்கே என்றால் கொலம்பியா பல்கலைக்கழகம் அருகில் உள்ள ரிவர்சைட் டிரைவில் உள்ள இன்டர்சர்ச்  கட்டிடம்.
அந்த நாளும் வந்தது. ஏப்ரல் மாதமாய் இருந்தாலும், குளிர் கடுமையாகவே இருந்தது. அங்கே முதல்வர் தவமணி கிறிஸ்டோபர், பர்சார் ஹெலன் மோனிக்கா மற்றும் நியூயார்க்கில் வாழும் அமெரிக்கன் கல்லூரியின் டிரஸ்டிகளில் ஒருவரான ஜான், பல கல்வி நிறுவனங்களுக்கு உதவி வரும் யுனைட்டட் போர்டின் நிர்வாகிகள் ஆகிய பலபேரைச் சந்திக்க வாய்ப்புக் கிடைத்தது.

வேலை நாளாய் இருந்ததாலோ என்னவோ, பழைய மாணவர்கள் திரண்டுவரவில்லை. நியூயார்க், நியூஜெர்சி பகுதியில் வாழும் அ.க-யின் பழைய மாணவர்களை திரட்டி ஒருங்கிணைக்கும் பொறுப்பை முதல்வர் எனக்குக் கொடுத்தார். யுனைட்டட் போர்டு கொடுத்த மதிய உணவுடன் கலைந்தோம்.
களிமண்ணாய் நுழைந்த என்னை அமெரிக்கன் கல்லூரி எப்படி ஒரு உருவமாய் மாற்றியது என்ற என் அனுபவத்தை பகிர்ந்து கொள்ள வாய்ப்புக் கிடைத்தது. அந்த 'ஹோலிஸ்டிக் அப்ரோச்' வேறெங்கிலும் கிடைத்திருக்குமா என்பது சந்தேகம்தான்.
அமெரிக்கன் கல்லூரியில் படிக்கும் போது அமெரிக்கா வருவேன் என்றும் கனவில் நினைத்ததில்லை. எல்லாம் யாரோ ஒருவர் திட்டமிட்டது போலவே தெரிகிறது.
ஒரு அல்மா மேட்டரின் அலம்னை என் இன்னொரு அல்மா மேட்டர் அருகில் நடந்ததும் ஒரு அதிசயம்தானே.
கொலம்பியாவில் ஒபாமா படித்தது உங்களில் சிலருக்கு தெரிந்திருக்கலாம், இங்குதான் சட்டம் படித்தார். இங்கு சட்டம் படித்த இன்னொரு இந்தியப்பிரபலம் தெரியுமா? இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை வடிவமைத்த அம்பேத்கார்தான் அவர்.
Dr.B.R Ambedkar
இந்த என் இரு அல்மா மேட்டர் பற்றி சில முக்கிய மேட்டர்களை கீழே தருகிறேன் .
அமெரிக்கன் கல்லூரி:
American college, Main Hall 
1.    1881ல் அமெரிக்கன் மிஷனரிகளால் ஆரம்பிக்கப்பட்டது.
2.    1931ல் தனியுரிமை பெற்றது.
3.    முதலில் சென்னைப் பல்கலைக்கழகத்தின் கீழும் தற்போது மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் கீழும் இருக்கிறது.
4.    1977-78ல் UGC மூலம் இந்தியா முழுவதிலும் தன்னாட்சி பெற்ற ஏழு கல்லூரிகளில் இதுவும் ஒன்று.
5.    கல்லூரி ஆரம்பித்து 134 வருடங்கள் ஆகிறது.
கொலம்பியா பல்கலைக்கழகம்:
1.    இது 1754-ல் கிரேட் பிரிட்டனின் அரசரான இரண்டாம் ஜார்ஜ் மன்னரால் ஆரம்பிக்கப்பட்டது. அப்போது அதன் பெயர் 'கிங்ஸ் காலேஜ்'.
2.    அமெரிக்க விடுதலைப்போருக்குப் பின்னர் 1784ல் கொலம்பியா கல்லூரி என்று முதலிலும் பின்னர் 1896 முதல் 'கொலம்பியா பல்கலைக்கழகம்' என்றும் அழைக்கப்படுகிறது.
3.    இது ஒரு ‘Privy league’  - ஆராய்ச்சிப் பல்கலைக்கழகம் ஆகும். அமெரிக்காவின் நம்பர் 1 ஸ்டேட்டஸ் இதற்கு இருக்கிறது.
4.    இதனடியில் 20 கல்லூரிகளும் பல நிறுவனங்களும் இருக்கின்றன.
5.    இதில் 3800 ஆசிரியர்களும் 30000 மாணவர்களும் உள்ளனர்.
6.    நோபல் பரிசு பெற்ற நூற்றுக்கும் மேலானோர் இதில் ஆசிரியராகவோ, மாணவராகவோ இருக்கின்றனர்.
7.    அமெரிக்காவின் ஐந்து தேச நிறுவனத்தந்தைகள் (Founding Fathers), 9 சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், 43 நோபல் பரிசு பெற்றவர்கள், 20 வாழும் பில்லியனர்கள், 29 ஆஸ்கார் பரிசு பெற்றவர்கள், 29 நாட்டின் தலைவர்கள், 3 மூன்று அதிபர்கள் இதுவரை இங்கிருந்து பயின்று வந்திருக்கிறார்கள்.
8.    இவர்களுள் அதிபர் தியோடர் ரூஸ்வெல்ட், அதிபர் ஃபிராங்ளின் ரூஸ்வெல்ட், அதிபர் பராக் ஒபாமா, பில்லியனர் வாரன் பஃபட் மற்றும் சல்லியனர் பரதேசியும் (?) அடங்குவர்.
“அதெல்லாம் விடு சேகரு இந்த அல்மா யாரு, அந்த கில்மா மேட்டர் என்னான்னு கடைசி வரை சொல்லவே இல்லையே”
அடப்பாவி இந்த மகேந்திரன் கொசுத் தொல்லை தாங்க முடியலப்பா.

முற்றும்