Showing posts with label ஞாபகம் வருதே. Show all posts
Showing posts with label ஞாபகம் வருதே. Show all posts

Monday, January 11, 2021

லஞ்ச் காசும் லஞ்சக் காசும் !

பரதேசியின் வாகனங்கள் பகுதி -2

இதன் முந்தைய பதிவைப்படிக்க இங்கே சுட்டவும்

https://paradesiatnewyork.blogspot.com/2021/01/1.html

 



இதுவரை நான் வளர்ந்த ஊரான தேவதானப்பட்டியில் ஒரு நாள் கூட ஓட்டாத என் சைக்கிள் வாகனத்தை, பக்கத்து ஊரான பெரியகுளம், படித்த ஊரான மதுரை,(ஆனால் படித்து முடித்த பின்தான்) முதல் வேலை கிடைத்த சாட்சியாபுரம், சிவகாசி, 2-ஆவது வேலை செய்த வேப்பனப்பள்ளி, கிருஷ்ணகிரி, அதன் பின் சென்னையில் செய்த இரு வேலைகள் என சைக்கிள் வாகனம் கைகொடுத்தது, மன்னிக்க கால் கொடுத்தது. என் வாழ்க்கை உருண்டோட சக்கரம் கொடுத்தது என்றும் சொல்லலாம்.

சென்னையில் முதல் வேலை மாமாவின் கன்ஸ்ட்ரக்சன்  கம்பெனியில் சூப்பர்வைசர். இரண்டாவது வேலை அரசினர் மருத்துவ மனையோடு இணைந்திருந்த சைக்கியாட்ரிக் டிபார்ட்மென்ட்டல் நடந்த ICMR (Indian Council of Medical  Research) நடத்திய பிராஜெக்ட்டில் டேட்டா கலெக்ஷன் வேலை. இது WHO  என்ற வேர்ல்ட் ஹெல்த் ஆர்கனைசேஷன் நிதியில் நடந்தது. கீழ்ப்பாக் கார்டனில் என் மாமா வீட்டில் தங்கியிருந்த போது தான் இந்த இரண்டு வேலை, செய்தேன். பின்னர் மனிதவளமேம்பாட்டு வேலைகளில் இருந்த ஆர்வம் காரணமாக அதனைவிட்டுவிட்டு இன்ட்டர் கிராப்ட்டில் சேர்ந்தேன். மாமா வீட்டிலிருந்து  சைக்கிளில் வந்து ஆற்காடு  சாலையில் நிறுத்தி வைத்துவிட்டு, அங்கிருந்து நேராக ஒரு பஸ்ஸில் பாரிமுனை சென்று, என் அலுவலகத்திற்கு நடந்து சென்றுவிடுவேன். என்னுடைய அலுவலகம் ஆர்மேனியின் தெருவிலும் இன்னொரு யூனிட் பிராட்வே அருகில் இருந்த டேவிட்சன் தெருவில் மினர்வா தியேட்டர் அருகிலும் இருந்தது.  இந்த இரண்டு அலுவலகங்கிலும் எனக்கு  இருக்கைகள்  உண்டு . இங்கு  வேலை செய்த ஆண்டு 1988 முதல் 1992 வரை .

பேச்சிலர் வாழ்க்கை தொடர்ந்த போது என் அம்மா, "தம்பி உனக்கு ஒரு ஸ்கூட்டர் வாங்கிக்கோயேன்" என்று சொன்னார்கள். "ஸ்கூட்டரா அது வேண்டாம்மா, அது எனக்குப் பிடிக்காது" என்றேன். "அப்ப உனக்குப்பிடித்த ஏதாவது ஒன்றை வாங்கிக்கொள் ,நான் பணம் தருகிறேன்." என்று சொன்னார்கள்.

சிறு வயதில் புல்லட் எனக்குப் பிடித்திருந்தாலும் அதனை ஓட்டும் அளவுக்கு மனதில் தைரியமில்லை, உடலில் வலுவுமில்லை என நினைத்து முதலில் TVS போன்ற மொபெட் வாங்கலாம் என முடிவு செய்தேன். ஷோ ரூமுக்குச் சென்றபோது TVS 50 ஐ விட புதிதாக வந்திருந்த TVS சேம்ப் பார்க்க நன்றாக இருந்தது. அப்போது பாரிமுனையில்    இருந்த "இன்ட்டர்கிராப்ஃட் செளத் எக்ஸ்போர்ட்ஸ்" என்ற கம்பெனியில் மனிதவளத்துறையில் "பெர்சனல் (Personnel) ஆஃபிசராக சேர்ந்த சமயம்.   

என் மகன் ஒரு ஆஃபிசரா(?) ஆயிட்டான்ற ஒரு சந்தோஷத்தில் எங்கம்மா எனக்கு ஒரு வண்டி வாங்கிக் கொடுக்க ஆசைப்பட்டாங்க. 

.




டி.வி. எஸ் சேம்ப் ஒரு நல்ல வண்டி. குறைந்த செலவு, பார்க்கவும் நன்றாகத்தான் இருக்கும். டி.வி.எஸ் சேம்ப் வாங்கியவுடன் வீட்டிலிருந்தே வண்டியை ஓட்டிக் கொண்டு பூந்தமல்லி சாலை வழியாக நேராகச் சென்று, சென்ட்ரல் ஸ்டேஷன் தாண்டிச் சென்று அப்படியே பாரிமுனை செல்வது என் வழக்கம். மிக மெதுவாகத்தான் செல்வேன். அதாவது மிகமிக மெதுவாகத்தான் செல்வேன். இடதுபுற ஓரம்தான் செல்வேன். ஆரம்பத்தில் சில சைக்கிள்காரர்கள் என்னை முந்திச் சென்றிருக்கிறார்கள். ஏன்  சில சமயம் நடந்து போகிறவர்கள் கூட கடந்து போயிருக்கிறார்கள். அதனைப்பற்றி யெல்லாம் கவலைப்படாமல் நான் பாட்டுக்கு தேமேன்னு ஓட்டிச் சென்ற முதல் நாள் சென்ட்ரல் ஸ்டேஷனைத் தாண்டும் போதுஒரு டிராஃபிக் போலீஸ் வழிமறித்தார். லைசென்ஸ், RC புக் எல்லாம் செக் செய்தபின், "எவ்வளவு பணம் வச்சிருக்க?" என்றார்.

“எதுக்கு சார்?”

“ஃபைன் கட்டறதுக்கு?”

“எதுக்கு  ஃபைன் சார்?”

"எப்பா ஸ்பீடா வந்துட்டு எதுக்கு ஃபைன்னு கேக்கிற"

"என்னாது ஸ்பீடா வந்தேனா? நடக்கிறவன் கூட என்னை முந்திப் போனான், என்ன சார் சொல்றீங்க?"

"சரி சரி வளவளன்னு பேசாதே, சார்ஜன்ட்ட போனா நூறு ரூபாய்க்கு மேல ஆகும்".

"என்ன சார் நான் ஸ்பீடா போகவேயில்லியே"

"சரி, இருக்கறத கொடுத்துட்டு போ"

பாக்கெட்டில் கையில் விட்டால் லஞ்ச்சுக்கு வச்சிருந்த 10 ரூபாய் பணம் இருந்தது, லேசாக வெளியே தெரிந்தவுடன் அதனைப்பறித்துக் கொண்டு "போ தம்பி, பாத்துப்போ" என்று சொன்னார், அந்தத் திறமையான, நியாயமான, நேர்மையான போலீஸ்காரர். இது என் முதல் நாள் அனுபவம். வழிப்பறிக் கொள்ளை என்பது இதுதானோ? நானும் நொந்து கொண்டே சிறிது தூரம் உருட்டிக் கொண்டு போய், அப்புறம் மெதுவாக ஏறி ஓட்டிக் கொண்டு ஒரு மணி நேரம்  தாமதமாய்ப் போய்ச் சேர்ந்தேன். அன்னைக்கு சனிக்கிழமை.

அடுத்த வாரம் திங்கட் கிழமை இன்னும் கொஞ்சம் சீக்கிரமாய்க் கிளம்பினேன். சென்ட்ரல் நெருங்கியவுடன் சிறிது பதற்றமாக இருந்தது. மூளையில் உதித்த பதற்றம் முதலில் என் கண்களுக்கு டிரான்ஸ்பர் ஆக, பிறகு அங்கிருந்து வந்து அதன் மூலம் நான் பிடித்திருந்த ஹேண்டில் பாருக்கு வந்து, அங்கிருந்து சக்கரங்களுக்கு வந்து, அதன் பின் வண்டி, நான் இரண்டும் இலேசாக நடுங்க ஆரம்பித்தோம். ஓட்டிக் கொண்டு சென்றாலும் உருட்டிக் கொண்டு செல்வதைப் போல்தான் தெரிந்தது.

மீண்டும் அதே இடம். ஆனால் வேறொரு போலீஸ்காரர் நிறுத்தினார். உடனே வண்டியின் சாவியை எடுத்துக்  கொண்டார்.

"லைசென்ஸ் RC புக் எடுப்பா" மறுபடியுமா? என்று நினைத்துக் கொண்டு எடுத்துக் கொடுத்தேன்.

"புது லைசன்ஸா"

"ஆமா சார்"

"பார்த்து வரணும்"

"சரி சார்"

"எவ்வளவு வச்சிருக்க?"

"எதுக்கு சார்?"

"இல்ல சார்ஜன்ட்ட போனா ஃபைன் எகிறும்".

"எதுக்கு சார் ஃபைன்?"

"என்னப்பா தம்பி தெரியாதமாதிரி கேக்குற, ரெட் லைட்ல வந்தியே"

"இல்லியே சார் நான் கிரீன்லதான் வந்தேன், அதுவும் ரொம்ப   மெதுவா வந்தேன்"

"சரி சரி ஒரு அம்பது ரூபாவைக் கொடுத்துட்டு நகரு"

"சார் நேத்தே கொடுத்திட்டேன்?

 என்னப்பா கதை விட்ர, யார்ட்ட கொடுத்த    எதுக்கு கொடுத்த  ?"

"நான் 10 கிலோ மீட்டர் ஸ்பீட்ல வந்ததை ஓவர்ஸ்பீட்ன்னு ஒரு போலீஸ்காரர் சொல்லி என்னோட லஞ்ச் காசைப் லஞ்ச காசாய்ப்  புடிங்கிட்டார். நேத்து கடன் வாங்கி லஞ்ச் சாப்பிட்டேன்".

"யாருப்பா அவர்? சரி அத விடு, காலைவெயில் கடுமையாய் இருக்கு, பக்கத்து கடையில ஒரு கூல் டிரிங்ஸ் வாங்கிக் கொடுத்துட்டு போ", நான் நடக்கத்தொடங்க, “தம்பி கொஞ்சம் நில்லு எத்தனைன்னு கேட்காமயே போற”தலைகளை எண்ணிவிட்டு “மொத்தம் ஏழு வாங்கிட்டு வா”.

எனக்குத்தூக்கி வாரிப்போட்டது

"சார் என்ட்ட அவ்வளவு காசில்ல"

"சரி எவ்வளவு இருக்கு?”

எல்லாப் பாக்கெட்லயும் செக் செஞ்சு, "சார் இவ்வளவுதான் இருக்கு”, என்று ஒரு 2 ரூபாய் நோட்டை எடுத்துக் காட்டினேன்.

"பரவாயில்லை”, என்று சொல்லிவிட்டு ஆனால் அந்த 2 ரூபாயையம் புடுங்கிவிட்டுத்தான் சாவியைக் கொடுத்தார்.

அடுத்த நாள் என்ன நடந்ததுன்னு, அடுத்த பகுதியில் சொல்கிறேன்.

- தொடரும்.

 

 


Monday, August 12, 2019

டங்டங் டிகடிக டங்டங்



டங்டங் டிகடிக டங்டங் (  மீள் பதிவு 

வேர்களைத்தேடி பகுதி 47
இதற்கு முந்திய பகுதியைப்படிக்க  இங்கே சொடுக்கவும்

             திடுக்கிட்டு எழுந்தேன். டக் டக்,டக் டக் என்று ஒரே சீரான ஒலி வீட்
மேற்புறத்தில் கேட்க, எனது எல்லாப் புலன்களும் விழித்துக் கொண்டன. டிங் டங் டிங் டங் என்ற சத்தம் கேட்க,அதிர்ந்து திரும்பிப்பார்த்தேன். எங்கள் வீட்டுப் பழைய பெண்டுலம் கடிகாரம் 2 தடவை அடித்து ஓய்ந்தது. ஓ இரவு 2மணி ஆகி விட்டது.
டக்டக் டக்டக் என்று மறுபடியும் அதே ஒலி. நான் முன்ஹாலில் மரக்கட்டிலில் படுத்திருக்க, என் தம்பிகள் மனோவும், பாசுவும் கீழே படுத்திருக்க, என் அம்மா மறுபுறம்படுத்திருந்தார். உள்ளிருந்த ரேடியோ ரூமில் இருந்த இரும்புக் கட்டிலில், என் அப்பா படுத்திருந்தார். அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர்.
          உன்னிப்பாக கவனித்த போது, வீட்டின் மேல்புறத்தில் மொட்டை மாடியையும், எங்கள் வீட்டையும் இணைக்கும் கதவில்தான் சத்தம் கேட்டது. ஒரு வேளை பேயாக இருக்குமோ? என்ற பயம் வர, இருக்காது இது திருடன்தான் என்று பட்சி சொன்னது. அப்பொழுது நான் ஒன்பதாவது படித்துக்கொண்டிருந்தேன். வீட்டிற்கு நான்தான் பெரியவன். சாகசங்கள் செய்யத்தூண்டும் டீனேஜ் பருவம். என்ன செய்தாலும் அதுவரை அப்பாவின் கோபத்துக்கும் எரிச்சலுக்கும் தான் ஆளாகினேன் தவிர பாராட்டு, ம்ஹீம் மருந்துக்கூட கிடைக்கவில்லை.
          முந்தின நாள் படித்த முத்து காமிக்சின் "மஞ்சள் பூ மர்மத்தில்" சாகசங்கள் செய்யும் லாரன்ஸ் & ஜூடோ டேவிட் கண்முன் தோன்றி உற்சாகப்படுத்தினர்.
          ஒரு முறை என்னைக் கிள்ளிப் பார்த்து, அது கனவல்ல என்று உறுதி செய்து கொண்டேன்.
          மறுபடியும் சத்தம் கேட்டது. நிச்சயமாய் யாரோ திருடன் மொட்டைமாடியின் கதவைத் திறக்க முயற்சி செய்கிறான். நிசப்தமான இரவில் அந்தச் சத்தம் பெரிதாகவே கேட்டு என்னுடைய இதயத்துடிப்பை அதிகரித்தது.
          அப்பாவை எழுப்பலாமா? என்று ஒரு நினைவு தோன்ற, என்னுள் இருந்த சாகச வீரன், வேண்டாம் என்று தடுத்து சொந்தமாய் ஏதாவது முயற்சி செய்யத்தூண்டினான்.
          நான் மெதுவாகக் கட்டிலிலிருந்து இறங்கி துப்பறியும் சங்கர்லால் எப்படி தன் "ரப்பர் நடையணிகள்" மூலம் சத்தம் செய்யாமல் நடப்பாரோ, அப்படியே முன்னங்கால்களால் நடந்தேன். படுத்திருந்த அம்மாவின் பக்கத்திலிருந்த சாய்வு நாற்காலியிலிருந்த (Easy chair) கம்பை உருவினேன். எவ்வளவு முயன்றும் சத்தம் கேட்காமல் எடுக்கமுடியவில்லை.
          கொஞ்சம் நேரமாக, மேலிருந்து சத்தம் கேட்கவில்லை. நான் கம்பை எடுக்க எழுப்பிய சத்தத்தில் ஒருவேளை திருடன் உஷாராகி விட்டானோ? என்ற சந்தேகம் எழுந்தது.
          சிறிது நேரம் அப்படியே அசையாமல் நின்று கொண்டிருக்க, டொக் டொக் டொக் டொக் என்று சத்தம் மறுபடியும் தெளிவாகக் கேட்டது.கம்பை இறுக்கப்பிடித்துக் கொண்டு உஷாராக நின்றேன். இறங்கி வந்தால் ஒரே போடு. அதோடு மேலிருந்து வைக்கோல் கொத்து கொஞ்சம் கீழே விழுந்தது. "சுசி, நம்ம சேகர் ஜான் பிள்ளையானாலும் ஆண்பிள்ளைடி", என்று என் அப்பா பெருமையாக என் அம்மாவிடம் சொல்வது போல் வந்த கற்பனை மகிழ்ச்சியையும் புன்முறுவலையும் வரவழைத்தது.
          "சேகர் உனக்கு என்னடா பரிசு வேணும்னு”, எங்கப்பா கேட்டால், “இந்த கோகுலம் பத்திரிகைக்கு சந்தாதாரர் ஆக்கிவிடுங்கள்," என்று கேட்க முடிவு செய்தேன். ஆமாம் ஒவ்வொரு தடவையும் முத்துரெங்கனிடம் ஓசி வாங்க வெட்கமாக இருக்கிறது.
          அதோடு தேவதானப்பட்டி போலிஸ் சப் இன்ஸ்பெக்டர், என் முதுகில் தட்டிக் கொடுத்து பாராட்டுவது, ஊர் மக்கள் என் அப்பாவைப் புகழ்வது என்று வித விதமான கற்பனைகள்வந்து போயின. அது என்ன ஒரு திருக்குறள் வருமே,அவசரத்துக்கு ஞாபகம் வரமாட்டேங்குது. இவன் தந்தை என்னோற்றான் என்று, சரி அத விடு.
          மீண்டும் டக் டக் என்று ஒலி கேட்க, நான் சற்றே மாடிப்படிகள் ஓரத்தில் நகர்ந்து வாகாக நிற்க முயன்றேன். கைகளில் வேர்த்து ஈரமாகி ஈஸிசேர் கம்பில் பிசுபிசுவென ஒட்டியது.
          அப்போது பட்டென ஏதோ உடைந்ததுபோல் ஒரு சத்தம். என் தம்பிகள் இருவரும் சிலிர்த்து அலறி எழுந்தனர், கையில் ஓங்கிய கம்புடன் என்னைப் பார்த்து அவர்கள் மேலும் அலற,எங்கம்மா எழுந்து ,"ஏசுவே ஏசுவே என்னாச்சு" என்று கத்த, "என்னடாது சத்தம்”, என்று உறுமிக் கொண்டு வந்தார் "எம்டன்" அப்பா. அவர்  வந்து லைட்டைப் போட்ட பின்தான் தெரிந்தது,படியருகில் குடிக்க வைத்திருந்த மண்பானைத்தண்ணீரை நான் தெரியாமல் தட்டி விட்டிருக்கிறேன் என்று. அந்த ஜில் தண்ணி உருண்டோடி என் தம்பிகளின் தலையணையையும் பாயையும் நனைத்ததால் அவர்கள் எழுந்துவிட்டிருந்தனர்.
          கம்பும் கையுமாக நின்ற என்னைப் பார்த்து என் அப்பா ஒன்றும் புரியாமல், "என்னாச்சுரா?”, என்று கேட்டார்".
          "உஷ் சத்தம் போடாதீங்க என்று லைட்டை ஆஃப் செய்தேன். என் தம்பிகள் அம்மாவிடம் ஒண்ட, என் அப்பாவிடம் குசுகுசுன்னு மேலே திருடன் இருப்பதைச் சொன்னேன். அவர் மெதுவாக உள்ளே சென்று பீரோவில் பத்திரமாய் வைத்திருந்த தன் பிரத்யேக, பளபள எவரடி எவர்சில்வர் டார்ச் லைட்டை எடுத்து வந்து மேலே அடித்தார்.
          அங்கே பார்த்தால் ஒரு மாடப்புறா உட்கார்ந்து கொண்டு மரக்கதவில் தன் அலகால் கொத்திக் கொத்தி சத்தம் எழுப்பிக் கொண்டிருந்தது. அலகை சுத்தம் செய்து கொண்டிருந்தது என்று நினைக்கிறேன். அதன் கூட்டிலிருந்துதான் வைக்கோல், குப்பையெல்லாம் விழுந்தது என்று பின்னர் தெரிந்துகொண்டேன். (ஓஹோ .இந்த பட்சி சொன்னதுன்னுசொன்னியே அது இந்தப்பட்சிதானா)

          "என்னை முறைத்துப் பார்த்த என் அப்பா, “சரிசரி எல்லாம் படுங்க”, என்று சொல்லிவிட்டு உள்ளே போனார். முறைத்துப்பார்த்தாரா இல்லை கேவலமாக பார்த்தாரா என்று இருட்டில்  சரியாகத் தெரியவில்லை (ரொம்ப முக்கியம்)

        என்னுடைய வீரத்தைக்காட்ட முயன்று இப்படி விகாரமாகப் போச்சேன்னு மனம் குன்றிப்போச்சு. ராத்திரிபூரா தூங்காம, காலைல வெள்ளன எழுந்துரிச்சு, என் தம்பிகள்ட்ட, "யாருக்கும் சொல்லாதீங்க", என்று சொல்லிவைச்சேன். குளிச்சுட்டு தலைதுவட்டிக் கொண்டே வந்தபோது பேச்சுக்குரல் கேட்டது. தன் வீட்டில் காய்த்த முருங்கைக்காய்களை வாத்தியார் வீட்டுக்கு கொடுக்கும் நோக்கத்தில் வந்த மகேந்திரனிடம் என் அம்மா விலாவரியா நடந்ததை சொல்லிட்டிருந்தாங்க. நீங்களே சொல்லுங்க பின்ன எப்படி மகேந்திரன் என்னை மதிப்பான்?.
தொடரும் 



Tuesday, August 6, 2019

ஆட்டுக்குட்டி முட்டையிட்டு !!!!!!!!!!!!

ஆட்டுக்குட்டி முட்டையிட்டு !!!!!!!!!!!! (மீள் பதிவு )

எச்சரிக்கை: சைவ உணவு சாப்பிடுபவர்கள் இதைப் படிக்க வேண்டாம்.
  1. Goat
வேர்களைத்தேடி பகுதி 46
இதற்கு முந்திய பகுதியைப்படிக்க  இங்கே சொடுக்கவும்.

"தம்பி சேகப்பாபோடா சீக்கிரம் போய் மட்டன் வாங்கிட்டு வந்துரு"என்றார் அப்பா ஒரு சனிக்கிழமை காலை வேளையில். நான் ஆறாவது படிக்கும் சமயம் அது. கடைக்குத் தனியாகச் சென்று மட்டன் வாங்கும் அளவுக்கு என்னைப் பெரிய பையனாக மதிக்கிறார் என் அப்பா என்று சிறிது மகிழ்ச்சியாக இருந்தாலும்காலையில் எழுப்பி விடுகிறார்களே என்ற சிறிது எரிச்சலும் வந்தது.
கீழத்தெருவுக்கு போகும் வழியில் கறிக்கடைகள் இருந்தன. அதில் முதல்கடை ரஹீம் கடை. எப்போதும் என் அப்பா அங்குதான் வாங்குவார். தேவதானப்பட்டி முழுவதற்கும் அது ஒன்றுதான் கறிக்கடைகள் இருக்கும் இடம். ஒரு நாலைந்து கடைகள் தான் இருக்கும். அப்போதெல்லாம் கோழிக்கறி கடைகள் கிடையாது. வீட்டுக்கு வீடு கோழி வளர்க்கும் போதுயாரு கடையில் போய் வாங்குவார்கள். முழுக் கோழியை வாங்கி அதனை அடித்து என் அம்மாவுக்கு சமைக்கத் தெரியாது. எங்கள் வீட்டில் 'லெகான்கோழிக்கறி வாங்குவதென்றால்பக்கத்து டவுணான பெரியகுளத்திற்குத் தான் போக வேண்டும்.  எனவே எங்கள் வீட்டில் வாரமிருமுறை,  சமயங்களில் மூன்று முறை (புதன்,சனி,ஞாயிறு) எப்போதும் ஆட்டுக்கறிதான்.  
மாட்டுக்கறிமூச்அது தெற்குத் தெருவில்தான் விற்கும் என்பதாலோ அல்லது வேறு காரணங்களாலோஅதைச் சாப்பிட்டும் பழக்கமில்லை. அது இன்றுவரை தொடர்கிறது.
ஒரு மஞ்சள் பையையும் பணத்தையும் வாங்கிக் கொண்டு  கிளம்பும் போது, "சேகப்பா பார்த்து வெள்ளாடுதான் வாங்கனும், வாலை இழுத்துப்பார்"என்றார். சரிப்பா என்று சொல்லிவிட்டு வெளியே சென்றேன்.
என் அப்பாவும் அம்மாவும் பாசமாக கூப்பிடும் போது 'சேகப்பாஎன்பார்கள். ராஜசேகர் என்னும் என் பெயரை (மாறிப்போன என் பெயரின் கதையைப் படிக்க இங்கே சுட்டவும்http://paradesiatnewyork.blogspot.com/2013/05/blog-post_17.html ) சுருக்கமாக 'சேகர் என்பதோடு'அப்பன்என்று விகுதி சேர்வதுதான் 'சேகப்பன்'. கோவம் வந்தால் என் அப்பா 'படவா ராஸ்கல்'என்றும் என் அம்மா "நீசப்பய"என்றும் செல்லமாகவும் (?) கூப்பிடுவார்கள். அய்யய்யோ கதை டிராக்  மாறுது.
நான் ரஹீம் கடைக்குச் சென்றபோதுஅப்போது தான் 'அஜரத்வந்து பிஸ்மில்லா சொல்லி,ட்டை கழுத்தில் அறுத்துஒரு அலுமினியக் கோப்பையில் அதன் ரத்தத்தை பிடித்துக் கொண்டிருந்தனர். ரத்தப் பொரியல் இருமலுக்கு நல்லது என்று என் ஆயா எப்போதாவது செய்வார்கள். இட்லியில் தொட்டுச் சாப்பிடுவோம். அப்ப சாப்பிட்டதோடு   சரி . அதன் பிறகு சாப்பிடவே இல்லை.
        ஏற்கனவே அறுக்கப்பட்டு, தோலுரிக்கப்பட்டுதொங்கிக் கொண்டிருந்த சற்றே பெரிய சைஸ் ஆட்டில்ஒரு சிறுவன் கறுப்புக் கலர் வாலை வைத்து தைத்துக் கொண்டிருந்தான். இதைத்தான் சொல்லிஎங்கப்பா எச்சரித்திருந்தார்.
என்னைப்பார்த்துவிட்டு ரஹீம் பாய், "வாங்க தம்பிவாத்தியாரு இன்னிக்கு வரலியா என்றார்". "இல்லை பாய்அதான் நான் வந்திருக்கேன்ல," என்றேன். “ ஒரு அஞ்சு நிமிஷம் பொறு இதோ ஆயிருச்சு”, என்று சொல்லிஆட்டைத் தொங்க விட்டுகை முஷ்டியால் தோலை அப்படியே உரித்தெடுத்தார். ஆட்டை இரண்டாக வகுந்து, “சார் வீட்டுக்கு தொடைக்கறிதான் தரனும்”, என்று தனக்குள் சொல்லிக் கொண்டார்.  
  1. Sheep
“பாய், வெள்ளைதானே”என்றேன். வெள்ளை என்றால் வெள்ளாடு. "என்ன தம்பி உன் கண் முன்னாலதான வெட்டினேன்”, என்றார். தோலை உரித்தபின் வெள்ளாட்டுக்கும்செம்மறியாட்டுக்கும் என்ன வித்தியாசம் இருக்கப்போகிறது. ஆனால் சாப்பிடும் போது எனக்கு இன்னும் வித்தியாசம் தெரிந்துவிடும். வெள்ளாட்டைவிட செம்மறியாடு சற்றே விலை குறைவு.  பெரும்பாலானோர் வெள்ளாடுதான் கேட்பார்கள் என்பதால் தான்இந்த வாலை வெட்டி தைக்கும் வேலை.   
வெட்டிய கறியை வாங்கிக் கொண்டுவீடு திரும்பினேன் . எதற்காக வெள்ளாடுதான் (Goat)தான் சாப்பிடனும்னு சொல்றார்னு யோசித்துக் கொண்டே நின்ற போதுஅப்பா  தம்பிகளுக்கும் கோமனம் கட்டிவிட்டுமணப்பலகையில் உட்கார வைத்துநல்லெண்ணெயை தலையிலும் உடம்பிலும் நல்ல அரக்கப் பறக்க தேய்த்துவிட்டார். 'நல்லெண்ணெய்கண்ணில் வழிந்து எரிச்சலைக் கூட்டி 'கெட்டெண்ணெய்ஆனது. தலைக்குப் போடப்போகும் சீயக்காய் பொடியை (எங்கம்மா அரைத்தது) நினைத்தால் பகீரென்றது. கண்கள் விஜயகாந்த் போல ஆகிவிடும்.
ஒரு வழியாகக் குளித்து முடித்துபள்ளிக்குக் கிளம்பும் முன் (அப்போதெல்லாம் சனிக்கிழமையும் பள்ளி இருக்கும்) கொஞ்சம் தயக்கமாய் இருந்தாலும் என் அப்பாவிடம் கேட்டேன், "அப்பா எதுக்கு வெள்ளாடுதான் சாப்பிடனும் ? ", எனக்கேட்டபோதுஅருமையாக விளக்கினார் ஆசிரியர் அல்லவா.
"சேகர்வெள்ளாடு என்பது மிகவும் புத்திசாலியான மிருகம்காட்டில் எவ்வளவு தூரம் சென்றாலும்தனியாகவே வீடு வந்து சேர்ந்துடும். அதோடு எதை சாப்பிடனும் எதை சாப்பிடக் கூடாதுன்னு அதுக்கு நல்லாவே தெரியும். அதனால கண்டதைச் சாப்பிட்டு Sick  ஆவாது. ஆனா செம்மறியாடு (Sheep) அப்படியில்லை. அதுக்கு அவ்வளவு அறிவில்லை. தனியாப்போனா அவ்வளவுதான், காணாமப்போயிடும். தனியா வீட்டுக்கு வரவும் தெரியாது. அதுமட்டுமில்லைஎதை சாப்பிடனும் எதை சாப்பிடக்கூடாதுன்னும் தெரியாது. கண்டதைச் சாப்பிட்டுஉடம்பும்வயிறும் சரியில்லாமப்போய் செத்துப் போயிறும். Sheepக்குத் தான் Shepherd தேவை.  Goatherd ன்னு சொல்றதிலையே", என்று சொன்னார்.  ஐந்து அறிவுக்குள்ள இத்தனை வித்யாசம் இருக்கான்னு நினைச்சேன். அது சரி ஆறு அறிவுக்குள்ளும் எத்தனை வித்யாசம் பார்க்கிறோம் .
அடிக்கடி காணாப் போற நம்மள மாதிரி ஆட்கள்  இருக்கிறதாலதான், இயேசுநாதர் எப்பவும் ஒரு Lamb -ஐ துக்கி வச்சிருக்கார்னு நெனைக்கிறேன்.

 “அதோடு செம்மறியாடு அடிக்கடி செத்துப் போயிரதால சிலசமயம் கறிக்கடைக் காரர்கள் அதை யாருக்கும் தெரியாமல் விற்பதுமுண்டுஅது நோயால் செத்திருக்கும் என்பதால்  பிரச்சனை வரும்"என்றும் சொன்னார்.  
ஓ இதில இவ்வளவு பிரச்சனை இருக்கா என்று நினைத்துக் கொண்டு அன்றிலிருந்து இன்று வரை வெள்ளாட்டுக்கறிதான் சாப்பிடுவது. ஆனால் மட்டன் (Mutton) என்பது  பொதுவான பெயர்.செம்மறி ஆட்டோட இளம் குட்டிக்கு Lamb என்று பெயர். Goat ஓட இளம் குட்டிக்கு Baby Goat -ன்னு  பேர் . அதிலும் பெண் ஆட்டைவிட ஆண் ஆடுதான் நல்லா இருக்கும் - கெடாக்குட்டினு சொல்வாங்க. மாட்டோட இளம் குட்டிக்கு veal என்று பெயர். ஆனால் வீலென்று கத்திக் கொண்டு நான் விலகி விடுவேன்...
ஆமா எனக்கு ஒரு சந்தேகம் செம்மறியாடு தான் வெள்ளையாக இருக்கும். வெள்ளாடு  பெரும்பாலும் கறுப்பாகத்தான் இருக்கும். கறுப்பாக இருக்கும் ஆடை எதுக்கு வெள்ளாடுன்னு சொல்றாங்கன்னு புரியலயேதலையே  சுத்துது.

தொடரும்