Showing posts with label எம்ஜியார். Show all posts
Showing posts with label எம்ஜியார். Show all posts

Thursday, August 31, 2017

ஜெயலலிதாவின் சோக முடிவு !!!!!!!!!!!

Image result for மைசூரு முதல் போயஸ் கார்டன் வரை
படித்ததில் பிடித்தது
மைசூரு முதல் போயஸ் கார்டன் வரை
மு.நியாஸ் அகமது - விகடன் பிரசுரம்.

ஜெயலலிதா என்ற மாபெரும் ஆளுமை மறைந்தபின் அ.தி.மு.க பல அணிகளாக உடைந்து பிரிந்து, சரிந்து காணப்படுகிறது. இப்படி இருப்பதற்கும் அவரே காரணம்.
எம்ஜியார் என்ற ஒற்றை ஆளுமை, கருணாநிதி என்ற பெரும் சக்தியை எதிர்த்து வெளியே வந்து அதிமுக கட்சியை கட்டமைத்து பத்து ஆண்டுகளுக்கும் மேலாக அசைக்க முடியாத சக்தியாக இருந்தது எம்ஜியாரின் ரசிகர்கள் என்ற பெரும் தொண்டர் பலத்தால்தான். நெடுஞ்செழியன், ஆர் எம் வீரப்பன், பண்ருட்டி ராமச்சந்திரன், திருநாவுக்கரசர் போன்ற இரண்டாம் கட்ட தலைவர்கள் பலர் இருந்தாலும் கட்சியின் வாரிசு என்று ஒருவரை சுட்டிக் காட்டாமலேயே எம்ஜியார் மறைந்தார். அதே தவறைத்தான் ஜெயலலிதாவும் செய்திருக்கிறார். எம்ஜியாருக்குப்பின் கட்சியை கட்டுக்கோப்பாக கொண்டு செல்ல ஜெயலலிதா இருந்தார். ஆனால் அதிமுகவில் ஜெயலலிதா பொறுப்பேற்ற பின் முதலில் செய்தது எம்.ஜியார் காலத்து இரண்டாம் கட்டத் தலைவர்களை ஒழித்துக் கட்டியதுதான். அதே சமயத்தில் அடுத்த தலைவராக ஜெயலலிதா கைகாட்டும்  அளவுக்கு அதிமுகவில் யாரும் இல்லை என்பதும் உண்மை. இரண்டாம் கட்டம் மட்டுமில்லாமல் மூன்றாம் நான்காம் நிலைத்தலைவர்களும் இல்லை.
Image result for மைசூரு முதல் போயஸ் கார்டன் வரை
Jaya with his brother with their mother Sandhya
பெரியார், அண்ணாவின் திராவிட சமத்துவ கொள்கைகள் எம்ஜியார் இருக்கும்போது பெருமளவிற்கு பின்பற்றப்பட்டது கூட ஜெயலலிதா காலத்தில் முற்றிலுமாக கைவிடப்பட்டது. கொள்கைப்பிடிப்பு எதுவுமில்லாத சுயநலமிக்க ஒரு பெருங் கூட்டமாகவே அதிமுகவின் கூடாரம் காணப்பட்டது. தன் தனிப்பட்ட ஆளுமையின் மூலம் எம்ஜியாரின் தொண்டர்களையும்,  ஒரு பெண் என்பதால் தாய்மார்களையும் கவர்ந்த ஜெயலலிதா ஒரு தனிப்பெரும் சர்வாதிகாரியாக இருந்தார். ஆனால் மக்கள் அவர் மீது வைத்திருந்த பாசத்திற்கும் நேசத்திற்கும் ஜெயலலிதா மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. அவர் நினைத்திருந்தால் தமிழ்நாட்டை தன்னிகரற்ற நாடாக ஆகியிருக்க முடியும். எதுவும் செய்யாமல் பெரும்பாலும் வீட்டில் முடங்கி, சசிகலாவின் கூடாரத்திற்கு நாட்டையும் கட்சியினையும் தாரை வார்த்துக் கொடுத்து மாபெரும் அழிவைத் தேடிக்கொண்டார்.
Image result for மைசூரு முதல் போயஸ் கார்டன் வரை
Jaya in her young age
இருந்தாலும் அவர் இறந்தது கட்சி வித்தியாசம் இல்லாமல் எல்லோரையும் துக்கத்தில் ஆழ்த்தி விட்டது. தமிழ்நாடே கலங்கிப் போய் இலட்சக் கணக்கான மக்கள் தலை நகரில் குவிந்து தங்கள் இறுதி மரியாதையினைச் செலுத்தினர். அதன் பின்னும் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கின்றனர்.
இந்தத் தொடர் விகடனில் வெளிவந்த போது படிக்க ஆரம்பித்தேன். தொடர் முடிவதற்குள் அவரே மடிந்து போனது ஒரு அசம்பாவிதம். அவர் இறப்பைச் சுற்றி உள்ள மர்மம் இன்னும்விடுபடாத சூழ்நிலையிலும், அவருடைய கட்சியினர் பல துண்டுகளாய்ப் பிரிந்து ஒருவரை ஒருவர் குற்றம் சொல்லிக் கொண்டு இருக்கும் நிலையில், இந்தப் புத்தகம் ஜெயலலிதாவின் ஆரம்பத்தையும், வளர்ச்சியினையும், முடிவையும் தெரிவிக்கும் ஆவணமாக இருக்கிறது. தமிழக அரசியலில் நீண்ட காலம் கொடியுயர்த்தி இந்த ஆளுமை ஆரம்பத்தில் இருந்த நிலைமைக்கு முற்றிலும் மாறாக எப்படி எல்லாம் மாறிப்போனார்  என்பதை படித்துத் தெரிந்து கொள்ளலாம்.
Image result for மைசூரு முதல் போயஸ் கார்டன் வரை
Jaya with MGR
1.   ஜெயாவின் பூர்வீகம் ஸ்ரீரங்கப்பட்டினத்திலிருந்து இடம்  பெயர்ந்து மைசூருக்கும், அவரின் தந்தை ஜெயராமன் இறந்த போது பெங்களூருக்கும் அதன் பின் சென்னைக்கும் வந்து குடியேறியது. இவர்களின் தாய்மொழி தமிழ் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.
2.   ஜெயாவின் தாத்தா மைசூர் மகாராஜாவின் அரண்மனையில் ஆலோசகராய் இருந்தவர்.
3.   ஜெயாவின் அம்மா சந்தியா, அவருடைய அப்பா ஜெயராமுக்கு இரண்டாம் மனைவி.
4.   ஜெயா சர்ச் பார்க்கில் தன் வகுப்பில் முதல் மாணவியாகத் திகழ்ந்தார். அதோடு நடனப் பயிற்சியும் பெற்றார்.
5.   அம்மா சந்தியா இரவும் பகலும் படப்பிடிப்பில் பிஸியாக இருந்ததால் அம்மாவின் பாசத்திற்கும் அரவணைப்பிற்கும் அதிகமாக ஏங்கினார்.
6.   அம்மா நடிகை என்பதால் பள்ளியில் பல கிண்டல்களுக்கும் பழிச்சொற்களுக்கும் ஆளாகினார். எனவே எப்பொழுதும் தனிமையையே நாடினார். நண்பர்கள் யாருமில்லை. கிடைத்த ஒரே தோழியிடம் துரோகம்தான் கிடைத்தது என்பதால் கசப்புணர்ச்சியுடனே வளர்ந்தார்.  ( தோழிஎன்றாலே  இவருக்கு துரோகம்தான் போலும் பாவம்)
7.   ஜெயாவின் நடன அரங்கேற்றத்திற்கும் தலைமை தங்கவந்த சிவாஜி கணேசன் பெரிய நடிகையாவாள் என்று ஆருடம் கூறியிருக்கிறார்.
8.   ஒருமுறை படப்பிடிப்பில் தாயோடு போயிருக்கும் போது எம்ஜியார் பார்த்து சிலாகித்தார்.
9.   ஜெயாவின் ஆசை ஒரு மருத்துவர் அல்லது டாக்டர் ஆக வேண்டும் என்பது. நடிகையாக இருக்கும் போது அளித்த ஒரு பேட்டியில் நடிகையாக ஆகியிருக்கவிட்டால் அரசியலுக்கு வந்திருப்பேன் என்கிறார், அதுபோலவே ஆனது.
10.                Y.G. பார்த்தசாரதி இயக்கிய ஒரு ஆங்கில நாடகத்தில் பிரெஞ்சு நாட்டுப் பெண்ணாக நடித்ததுதான் ஜெயாவின் முதல் நடிப்பு அனுபவம் இந்த நாடகத்தில் வில்லனாக நடித்தவர் சோ.அப்போதிருந்தே அவர்களுக்குள் நெருக்கம் ஆரம்பித்தது.
11.                ஜனாதிபதியாக இருந்த வி.வி.கிரியின் மகன், சங்கர் கிரி எடுத்த ஒரு ஆங்கில ஆவணப்படத்தில் நடித்ததுதான் முதல் திரை அனுபவம்.
12.                "இந்த உலகத்தின் கடினமான வேலை எனக்குப் பணிக்கப்பட்டாலும் நான் அதற்கு என்னைத் தயார் செய்து கொள்வேன்" என்பது ஜெயா ஒரு பேட்டியில் சொன்னது.
13.                கர்ணன் வெற்றிவிழாவில் ஜெயாவைப் பார்த்த BR பந்துலு "சின்னப கோம்பே" என்ற படத்தில் அவரை நடிக்க வைத்தார். மிகுந்த தயக்கத்திற்குப்பின் இப்படத்தில் நடித்தார். ஆனால் அதற்கு முன்னால் “நன்ன கர்த்தவ்யா” வெளிவந்தது.
14.                டைரக்டர் ஸ்ரீதர் வெண்ணிற ஆடையில் கொடுத்த வாய்ப்பின் மூலம் ஜெ திரையுலகில் ஒரு இடம் பிடித்தார். பிறகு ஸ்ரீதருக்கும் அவருக்கும் பிரச்சனை வந்தது.
15.                பள்ளிப்படிப்பு முடிந்து ஸ்டெல்லா மாரீஸில் சேர்ந்த போது ஆசிரியை "பொம்மை மாதிரி உடை உடுத்தினால் போதுமா?" என்று கேட்டதால் நடிப்பையும் படிப்பையும் ஒன்று சேர செய்யமுடியாதென்று எண்ணி படிப்பைக் கை கழுவினார்.
16.                23 வயதில் சந்தியா இறந்தபின் எம்ஜியாரின் கண்காணிப்பும் பாதுகாப்பும் கிடைத்தது.
17.                எம்ஜியாரின் தீவிர ரசிகையாக இருந்த ஜெயா, அவருக்கே நாயகியானதோடு அவருடைய கட்சியிலும் அடுத்த தலைமையைப் பிடித்தது ஆச்சரியம்தான். ஆனால் அவருடன் அவர் ஒத்துப்போக முடியவில்லை. அவருக்கு எதிராகக் திரைமறைவில் களமிறங்கினார்.
18.                நடிகையாக இருக்கும்போது ஊடகங்களோடு மிகுந்த நட்பில் இருந்தவர் பதவிக்கு வந்ததும் அவர்களைப் பகைத்து 2000 கேஸ்களைப் போட்டார்.
19.                மிகவும் தாராள மனப்பான்மை உள்ள அவர் பிற்காலத்தில் வெற்று  மரியாதை, காலில் விழுவதை ரசிப்பது என பிற்போக்காக நடக்க ஆரம்பித்தார்.
20.                அவருடைய மொழி ஆளுமை, தமிழ் தவிர, மலையாளம், கன்னடம், தெலுங்கு ஹிந்தி ஆங்கிலம் என வியக்க வைக்கும் ஒன்று.
21.                இந்திரா காந்தி அவருக்கு மிகவும் பிடித்த தலைவர்.
22.                இறுதியில் நட்புக்காக மானம் மரியாதை இழந்து சிறை சென்று அழிந்து போனது பெருந்துயரம்.

முற்றும்

Thursday, January 26, 2017

எம்ஜியாரை மடக்கிய இயக்குனர் மகேந்திரன். !!!!!!

Image result for சினிமாவும் நானும் இயக்குநர் மகேந்திரன்
படித்ததில் பிடித்தது
சினிமாவும் நானும் - இயக்குநர் மகேந்திரன்: பகுதி 1
கற்பகம் புத்தகாலயம், சென்னை.
இயக்குநர் மகேந்திரன் எனக்கு மிகவும் நெருக்கமானவர். முதலிலேயே சொல்லிவிடுகிறேன், ஆனால் அவருக்கு நான் நெருக்கமானவன் அல்ல.
“என்னடா ஒரே குழப்பமா இருக்கு, எப்பவுமே நீ குழப்பவாதிங்கறத திரும்பவும் புரூவ் பண்ணிட்டடா”.
“வாடா மகேந்திரா என்ன ரொம்ப நாளா ஆளக்காணோம்?”.
“போடா இவனே, `உங் கூட பேசக்கூடாதுன்னு நெனைச்சேன்”.
“ஏண்டா நான் என்ன பண்ணேன் உன்னை ?”.
“போடா இவனே, இவ்வளவு தூரம் ஊருக்கு வந்திருக்கிற, அதுவும் 20 வருஷத்துக்கு அப்புறம், என்ட்ட சொல்லவேயில்லை, பார்க்கவும் வரல”.
“இல்லடா மகேந்திரா திடீர்னுதான் வந்தேன். உன்னைக் கேட்டேன்.  ஊர்ல இல்லன்னு சொல்லிட்டாய்ங்க”.
“ஊர்ல இல்லன்னுதானே சொன்னாய்ங்க, உலகத்தில இல்லைன்னு சொன்னாய்ங்களா?
“சரிடா மகேந்திரனை பத்தி எழுத்திட்டிருக்கேன் அப்புறம் உன்ட்ட பேசறேன்”.
“என்னடா என்னைப்பத்திக் கூட எழுதப்போறியா?”
“நீ இல்லடா இது இயக்குனர் மகேந்திரன் பத்தி”.
“அப்படியா சரிடா குடியரசு  தின வாழ்த்துக்கள், மனசு கேக்கல வாழ்த்தத்தான் வந்தேன்.
“ரொம்ப நன்றிடா, ஆனா  இப்ப நம்ம தமிழர் இருக்கிற மனநிலையில ஒருத்தரும் கொண்டாடுற மாதிரி  தெரியலை.”.
இப்ப உங்களுக்கு தெரிஞ்சிருக்கும். அடிக்கடி நம்ம பதிவு நடுவில வந்து தொந்தரவு பண்ற அந்த மகேந்திரன் வேற. நான் எழுத வந்தது , நம்ம எல்லோருக்கும் தெரிந்த இயக்குனர் மகேந்திரன் பத்தி. அவருக்கு நான் நெருக்கமானவன் இல்லையென்று சொன் னேன், ஆனால் எனக்கு அவர் நெருக்கமானவர் என்று ஏன் சொன்னேன் என்றால் அதற்குள்ள காரணங்களைக் கீழே கொடுக்கிறேன்.
எனக்கு தமிழில் மிகவும் பிடித்த படங்களில் சிலவற்றை இயக்கியவர் மகேந்திரன் அவர்கள். அவை, “முள்ளும் மலரும்”, “உதிரிப்பூக்கள்”, “நெஞ்சத்தைக் கிள்ளாதே” ஆகியவை.
அவரும் என்னைப் போலவே மதுரை அமெரிக்கன் கல்லூரி மாணவர்.
என்னைப்போலவே மதுரைக்காரர். இளையான்குடி அவர் சொந்த ஊர்.
புத்தகக் கண்காட்சியில் அவர் எழுதிய மேற்சொன்ன புத்தகத்தைப் பார்த்ததும் உடனே வாங்கினேன். அதில் நமக்கு தெரிந்த விஷயங்களை விட  தெரியாத அநேக தகவல்கள் இருந்தன. அதனை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவே இந்தப்பதிவு.
Related image

'நாடோடி மன்னன்' படத்தின் வெற்றி விழாக்  கொண்டாட்டத்திற்காக மதுரை வந்திருந்தார் புரட்சி நடிகர் எம்ஜியார். அப்போது காரைக்குடி அழகப்பா கல்லூரி மாணவர்கள் தங்கள் இலக்கிய வட்டத்தில் அவரை பேச அழைத்தார்கள். எம்ஜியாருக்கு காரைக்குடி திட்டம் எதுவுமில்லை என்றாலும் இளம் மாணவர்களின் வேண்டுகோளை ஏற்று அழகப்பா கல்லூரிக்கு வர ஒத்துக்க கொண்டார். ஆனால் பேச மட்டும் சொல்லிவிடாதீர்கள் என்றும் நிபந்தனை விதித்தார். மேடையில் எம்ஜியார் வீற்றிருக்க, மூன்று மாணவர்கள் வெவ்வேறு தலைப்புகளில் பேசுவதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முதலிரண்டு மாணவர்கள் நடுக்கத்துடன் பேச ஆரம்பித்து, மாணவர்கள் கூச்சலிட்டதால் ஆரம்பத்திலேயே அகன்று விட மூன்றாவதாக வந்த மாணவன் தான் நம் மகேந்திரன். பயம் கொஞ்சம் இருந்தாலும் தற்கால தமிழ் சினிமா பற்றி விமர்சித்து, டூயட் பாடுவது,மரத்தைச் சுற்றி ஓடி வந்து செயற்கையாக பாடுவது போன்றவற்றை சாடி ஒரு நீண்ட சொற்பொழிவாற்ற, கூடி இருந்த மாணவர்கள், ஆசிரியர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் அமைதியாக கேட்டு அசந்து போயினர். அதுவும் எம்ஜியாரை வைத்துக் கொண்டு அப்படி பேசியதற்கு அசாத்திய துணிவு வேண்டும்தான். ஆனால் கோபப்படுவதற்குப் பதில் வாழ்த்துச் சொல்லி எதிர்காலத்தில் சிறந்த விமர்சராக வருவாய் என்று எழுதி கையெழுத்துப் போட்டுக் கொடுத்து விட்டுச் சென்றுவிட்டார் எம்ஜியார்.
Image result for எம்ஜியார்

பட்டப்படிப்பு முடித்தபின் தஞ்சாவூரில் உள்ள அத்தை உதவி செய்கிறேன் என்று கூறியதினிமித்தம் சட்டம் பயில சென்னை வந்தார். ஆனால் சில மாதங்களிலேயே அத்தையின் உதவி நின்றுபோனதால் சட்டக் கல்லூரிப் படிப்பை தொடர முடியாத நிலை. ஊருக்குத்திரும்புவதற்கு ஆயத்தப்படுகையில் திமுக பத்திரிகைகளுள் ஒன்றான 'இன முழக்கம்' என்ற பத்திரிகையில் வேலை கிடைத்தது. வேலை என்னவென்றால் அவருக்கு மிகவும் பிடித்த சினிமா விமர்சனம். அது கொஞ்ச நாள் போய்க் கொண்டிருக்கும்போது அங்கு வந்த எம்ஜியார் அவரைப் பார்த்து அடையாளம் தெரிந்து கொண்டு அவருக்கு வேறு வேலை தருவதாக அழைத்துச்சென்று தன்னுடைய T நகர் வீட்டிலேயே மாடியில் தங்க வைத்தார். எம்ஜியாருக்கு கல்கி  எழுதிய பொன்னியின் செல்வன் கதையை சினிமாவாக எடுக்க வேண்டும் என்ற ஆசை. அதற்காகத்தான் மகேந்திரனை அழைத்துச் சென்றவர், பொன்னியின் செல்வன் நாவலைக் கையில் கொடுத்து, அதனை திரைக்கதை வசனமாக எழுதப்பணித்தார். அந்த வேலையை மூன்று மாதத்திற்குள் முடித்துக் கொடுத்தார் மகேந்திரன்.
Related image

பொன்னியின் செல்வனை படமாக எடுக்க எத்தனைபேர்தான்  ஆசைப்பட்டனரோ. ஆனால் இதுவரை ஒருவருக்கும் அந்த வாய்ப்பு கிட்டவில்லை. மகேந்திரன் எழுதிய திரைக்கதை வசனமும் யாரிடம் இருக்கிறதென்று தெரியவில்லை.
அப்போது சாப்பாட்டுக்கு கூட இல்லாது மகேந்திரன் கஷ்டப்படுவதை அறிந்த எம்ஜியார் தன்னிடம் அதனைப்பற்றி சொல்லாததை கடிந்து கொண்டு முழுதாக ஆயிரம் ரூபாயை எடுத்துக் கொடுத்தாராம். அது அந்தக் காலத்தில் பெரிய தொகை என்பதில் சந்தேகமில்லை.
அதன்பின் துக்ளக் பத்திரிக்கையில் வேலை கிடைக்க அங்கும் சினிமா விமர்சனம் எழுதும் வேலைதான். எம்ஜியார் உதவி செய்தவர், தன்னை பாராட்டியவர் என்று எதையும் நினைக்காமல் அவருடைய படத்தை கடுமையாக விமரிசனம் செய்து எழுதினார் மகேந்திரன். விமர்சனத்துக்கு  பதிலாக அல்லது எதிர்வினையாக அந்தப்படத்தில் நடித்த நடிகர் அல்லது இயக்குநரிடம் அவர்கள் கேட்டு அதற்கு அடுத்த வாரம் வெளியிடுவது அப்போது துக்ளக்கின் பழக்கம். அது போல எம்ஜியாரை அணுகியபோது ஏற்கனவே விமர்சனத்தை படித்திருந்த அவர் பெரிதும் கோபப்பட்டு பதில் கொடுக்க மறுத்து திருப்பி அனுப்பிவிட்டாராம். ஆனால் மகேந்திரன் அதற்கெல்லாம் பெரிதாகக் கவலைப் படவில்லை.
இவ்வாறு இருமுறை எம்ஜியாருக்கு எதிராக மகேந்திரன்  நடந்து கொண்டாலும் எம்ஜியார் அதையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாது, “முள்ளும் மலரும்” வெற்றிக்கு பாராட்டியதோடு “உதிரிப்பூக்கள்” வெள்ளி விழாவிலும் கலந்து கொண்டு பாராட்டியிருக்கிறார்.
தற்செயலாக எழுத்தாளர் மற்றும் டைரக்டராக ஆனது முதற்கொண்டு மகேந்திரன் வாழ்வில் பல நிகழ்வுகள் நடந்ததை விவரிக்கும் மகேந்திரன் திரைத்துறைக்கு தான் வர காரணமானவர் எம்ஜியார் என்று சொல்லி இப்புத்தகத்தையும் அவருக்கே சமர்ப்பித்திருக்கிறார்.
தொடரும்

Image result for குடியரசு தின  நாள்


நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய குடியரசு தின  நாள் நல்  வாழ்த்துக்கள் .இந்தியாவுக்குள் நமக்கு இருக்கும் உரிமைகளை போராடிப்பெறும் நிலைமைதான் இப்போதும் இருக்கிறதென்றாலும், போராடுவதற்கு நாம் நமது அரசியல் வியாதிகளை நம்பாமல் நம் இளைஞர்களை நம்புவோம் . அவர்கள் முன்னெடுக்கும் எல்லா போராட்டங்களுக்கும் உலகத்தமிழரின் ஆதரவு என்றும் உள்ளது என்பதை  தெரிவித்துக்கொள்கிறேன் . நாம் இந்தியர் , என்பதும் நாம் தமிழர் என்பதும் ஒன்றுக்கொன்று இணைந்தவை என்பதை நினைவில்கொள்வோம் .


Thursday, December 22, 2016

கருணாநிதியின் கடைசிக் கடமைகள் !!!!!!!!!!!!!

Related image


தந்தை பெரியாரிடம் பிறந்து, அறிஞர் அண்ணாவிடம் வளர்ந்து கலைஞர் கருணாநிதி மூலம் தொடர்ந்தது திராவிட பாரம்பர்யம். மக்கள் எழுச்சிக்கு வித்திட்டு, அவர்களின் பேராதரவுடன் அமைந்த மத சார்பற்ற உன்னத நிலைதான் தமிழ்நாட்டை ஒரு அமைதிப் பூங்காவாக இன்று வரை காத்து வருகிறது என்பதில் சந்தேகமில்லை.

அதன்பின் சில மதக்கட்சிகள் ஆங்காங்கே எழுந்தாலும் அவை மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெறவில்லை. சுதந்திரம் பெற்றுத் தந்த காங்கிரஸ் பேரியக்கத்தையே இந்த திராவிட சக்தி வேரோடு சாய்த்தது. பாரதிய ஜனதாக்கட்சி போன்ற மதவாத கட்சிகள் தமிழகத்தில் காலூன்ற முடியாத காரணமும் இன்னும் மக்கள் மனத்தில் அந்த சக்தி படிந்திருப்பதால்தான். ஏனென்றால் இந்துக்கள், முஸ்லீம்கள்,   கிறித்துவர்கள் என்று அனைவரும் இன்றுவரை ஆதரிப்பதால் தான்.

என்பதுகளிலும் தொண்ணூறுகளிலும் வீரியத்துடன் எழுந்த பா.ம.க போன்ற சாதிக் கட்சிகளும் மக்களை பிளவுபடுத்தி அதில் ஆதாயம் காண விளைந்தாலும் அதுவும் மக்களின் ஒற்றுமையை அசைக்கவில்லை.

அண்ணா காலத்திலும் கலைஞர் காலத்திலும் ஈவிகே சம்பத், கண்ணதாசன் ஆகியோரால் உருவெடுத்த சிறு சிறு சலப்புகள் அதனை அசைக்க முடியவில்லை.
Image result for Karunanidhi with Annadurai
Karunanidhi with Annadurai

அண்ணாவுக்குப்பின், மதியழகன், அன்பழகன், நாஞ்சில் மனோகரன்  ஆகியோரும் கருணாநிதியின் தலைமையை நிதர்சனம் அறிந்து ஏற்றுக் கொண்டு, வழிவிட்டனர். அப்போது கருணாநிதியை எம்ஜியார் பலமாக ஆதரித்ததும் ஒரு காரணம்.

திமுக இயக்கம் கருணாநிதி எம்ஜியாருக்கு இடையே எழுந்த தனிப்பட்ட கருத்து வேறுபாடுகளால் இரண்டாகப் பிரிந்தது. அண்ணா ஆரம்பித்த திமுகவை தங்கள் உயிரென மதித்தவர்களான பாரம்பர்ய திமுகக்காரர்கள் திமுகவில் தங்க, எம்ஜியார் தனது மாபெரும் ரசிகர் பட்டாளத்துடன் பிரிந்து அதிமுக வை ஆரம்பித்தார். முகராசி, பணராசி, ஏழைப் பங்காளன், சினிமா கவர்ச்சி ஆகியவை கைகொடுக்க கிராமப்புற தாய்மார்களின் ஒட்டு மொத்த ஆதரவும் அதிமுக பக்கம் சாய்ந்து திமுகவை வீழ்த்தும் அளவுக்கு ஒரு மாபெரும் சக்தியாக உருவெடுத்தது.
.
கருணாநிதியும் எம்ஜியாரும் இருவேறு அரசியல் திசைகளில் பிரிந்து நின்றாலும், பெரியார் அண்ணா ஆகியோரின் கொள்கைகளைத் தொடர்ந்து பின்பற்றி வந்தனர்.

Image result for Karunanidhi with Annadurai

எம்ஜியாருக்குப்பின் தவிர்க்க முடியாத சக்தியாக ஜெயலலிதா உருவெடுத்த போது திராவிடக் கொள்கைகள் காற்றில் பறந்தன. கொள்கைகள் இல்லாத தனிமனித துதியும் ஆராதனையும் அதிகமாகி  ஜனநாயகத்தையும் குழிதோண்டி பறித்தன. ஆனாலும் மிகப்பெரிய ஆளுமையாக, கட்டுக் கோப்புடன் கட்சியை இதுநாள் வரை கட்டிக்காத்த ஜெயலலிதாவின் மன உறுதி பாராட்டப்பட வேண்டிய ஒன்று.
Image result for MGR with Jayalalitha

இப்போது ஜெயலலிதாவும் மறைந்துவிட , எதிர்பார்த்த வண்ணமாகவே சசிகலா அடுத்த தலைவியாக உருவெடுக்கிறார். எம்ஜியார் மற்றும் ஜெயலலிதா  ஆகியோரை  தொண்டர்களும் மக்களும் அறிந்த அளவுக்கு சசிகலாவை , அவரின் குணநலன்கள், திறமை ஆகியவற்றை யாரும் முழுமையாக அறிய மாட்டார்கள். அறிந்த அளவுக்கு அவர்மேல் எதிர்மறையான காரியங்கள்தான் அதிகம் உள்ளன. தனிப்பட்ட மக்கள் செல்வாக்கு இல்லாத அதிமுகவின் அடுத்த கட்ட தலைகள் வேறு வழியின்றி சசிகலாவின் பின்னால் அணிவகுத்துள்ளார்கள். எந்தக் கொள்கைப் பிடிப்பும், இலட்சியங்களும் இல்லாத ஒரு சந்தர்ப்பவாத சுயநலக் குழுவாக இது உருவெடுத்துள்ளது.  இது தமிழகத்தின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல.

Related image

இதற்கிடையில் தனக்குக் கிடைத்த மாபெரும் மக்கள் ஆதரவை தக்க வைக்க முடியாமல், ஊழல், குடும்பச் சிக்கல்களுக்குள் அமிழ்ந்து போன திமுக இயக்கம், எம்ஜியார், ஜெயலலிதா ஆகிய இருவரையும் சமாளிக்க முடியாமல் பலவீனப்பட்டுப் போனது. ஆனாலும் பாரம்பர்ய திமுகக்காரர்கள் என்ன நடந்தாலும் உறுதியாக கலைஞர் பக்கம் நிற்க, திமுகவின் அடுத்த தலைமுறையின் தலைவராக மு.க.ஸ்டாலின் உருவெடுத்துள்ளார். கருணாநிதியின் மகன் என்ற ஒரே தகுதியில் கட்சியில் நுழைந்தாலும், கருணாநிதியைப் போல் இலக்கிய அறிவோ, பேச்சுத்திறனோ ஆளுமைத்திறனோ இல்லையென்றாலும் தன் உழைப்பினால் இந்த இடத்தை இவ்வளவு நாள் தக்க வைத்துக் கொண்டிருக்கிறார். கருணாநிதிக்குப்பின் திமுகவை கட்டிக்காக்க இவரால் மட்டுமே முடியும் என்று கட்சிக்காரர்கள் மட்டுமல்ல பொதுமக்களும் இவரை ஏற்றுக் கொண்டுவிட்டனர். இன்றைய சூழ்நிலையில் திமுக அடுத்த தேர்தலில் வெற்றி பெற்றால்  முதலைமச்சராக பதவியேற்க மக்களின் ஏகோபித்த ஆதரவு  கருணாநிதியை விட மு.க.ஸ்டாலினுக்கே அதிகம்.
இந்தச் சூழ்நிலையில் கருணாநிதி என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.

1.     தன் காலம் முடிந்துவிட்டது என்பதை அவர் மனமார ஏற்றுக் கொள்ள வேண்டும்.
2.    தான் தலைவராக இருக்கும் போதே, அடுத்த தலைவர் பொதுக்குழுவில் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். இதனால் பல குழப்பங்கள் தவிர்க்கப்படும்.
3.    மு.க.ஸ்டாலினைத் தவிர திமுகவுக்கு வேறு வழியில்லை என்பதை நன்கு உணர வேண்டும்.
4.    தனக்குப்பின் நடக்கும் குடும்பச் சண்டைகள் திமுகவை பலவீனப்படுத்தும் என்பதால் இப்பொழுதே அதனை தீர்த்துவிட வேண்டும்.
5.    முக.அழகிரிக்கு தற்சமயம் கட்சிப் பதவி கொடுத்தால் அது குழப்பத்தைத்தான் அதிகரிக்கும். அரசியல் பக்குவம், திறமை, தகுதி 
6.    மற்றும் அனுபவம் எதுவுமே இல்லாத முக அழகிரியால் திமுகவுக்கு நன்மையைவிட தீமையே அதிகம் நடக்கும். அதற்குப்பதிலாக அவரைச் சமாதானப்படுத்த அவருடைய மகனுக்கு கட்சியில் பொறுப்பு அளிக்கலாம்.
7.    கனிமொழி மற்றும் ராசாத்தி அம்மாளிடம், மு..ஸ்டாலின் தான் தலைவர் என்பதை அடித்துச் சொல்லி, கனிமொழியை ஸ்டாலினுடன்  ஒத்துப்போகச் செய்ய வேண்டும். கனிமொழி வழக்கம் போல் டெல்லியில் செயல்பட ஸ்டாலினிடம் உறுதியைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.
8.    இந்தச் சூழ்நிலையில் ஒரு தந்தையாக இல்லாமல் கட்சிதலைவராக கருணாநிதி முடிவெடுக்க வேண்டும் என்றே கட்சி தொண்டர்கள் விரும்புவார்கள்.
9.    தான் தலைவராக தொடர்ந்து இருந்து கொண்டாலும் ஸ்டாலினுக்கு முழுப்பொறுப்பு கொடுத்து அவரை வழி நடத்தலாம்.
10.  தந்தை மகனுக்குள் சண்டை போன்ற பத்திரிக்கைச் செய்திகளுக்கு சீக்கிரம் முற்றுப்புள்ளி வைக்க இது உதவும்.
11.   வாரிசுகளையோ அடுத்த கட்ட தலைவர்களையோ அறிவிக்காமல் எம்ஜியார் இருந்தபோதும், ஜெயலலிதா இறந்த போதும் எழுந்துள்ள சிக்கல்களைப் பார்த்தாவது கருணாநிதி விழித்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் அதைக்காட்டிலும் பெரிய பிரச்சனைகள் இங்கு ஏற்பட்டு கட்சி மேலும் இரண்டாக மூன்றாக உடைந்தால் அண்ணாவின் திமுக கண் முன்னாலேயே அழிந்துவிடும் அபாயம் இருக்கிறது.

இதில் எதுவும் சீக்கிரம் நடக்கவில்லையென்றால் , திராவிட இயக்கத்திற்கு அண்ணா, எம்ஜியார் சமாதி  அருகிலேயே இடம் பார்த்து விடவேண்டியதுதான் .

Image result for christmas tamil

Monday, December 19, 2016

எம்ஜியாரை வீழ்த்திய கலைவாணர் !!!!!!!!!


படித்ததில் பிடித்தது:- நான் ஏன் பிறந்தேன் பகுதி 3

இதற்கு முந்திய பகுதியைப்படிக்க  இங்கே சொடுக்கவும்.

http://paradesiatnewyork.blogspot.com/2016/11/blog-post.html


[34.jpg]

கலைவாணர் என்று மரியாதையுடன் அழைக்கப்பட்ட என்.எஸ் கிருஷ்ணன் அவர்களிடம் மிகுந்த மரியாதையும் நட்பும் வைத்திருந்தார் எம்ஜியார் என்பது புத்தகத்தின் பல பகுதிகளில் வெளிப்படுகிறது. எம்ஜியார், அவருடன் தன் மூத்த சகோதரன் போல் பழகினார். ஆனால் அவர் மீது நெருக்கமான
 நட்பு கொள்ளும்முன் அவரை வெறுத்து அவரோடு சண்டை  போட்ட அனுபவத்தையும் எம்ஜியார் விளக்குகிறார்.

கலைவாணர் ஒரு இடத்தில் இருந்தால் அந்த இடத்தில் கிண்டலும் கேலியுமாக கலகலப்புக்குப் பஞ்சம் இருக்காதாம். எனவே அவரைச் சுற்றி எப்பொழுதும் பலர் இருப்பர். ஒரு சமயம்  படப்பிடிப்பு சமயத்தில் வழக்கம் போல் அந்த இடத்தை தன் நகைச்சுவை உணர்வால் சிரிப்பை வரவழைத்துக் கொண்டு இருந்தார். அந்த சமயம் எம்ஜியார் குஸ்திப் பயிற்சி செய்துகொண்டிருக்க அதனைப் பார்த்தும் கலைவாணர் ஏதோ கிண்டல் செய்ய எல்லோரும் கொல்லென்று சிரித்துவிட்டனர்.

அதனைப் பார்த்து அவமானமும் கோபமும் அடைந்த எம்ஜியார் கலைவாணரைப் பார்த்து "என்னை கேலி செய்கிறீர்களே என்னுடன் குஸ்திக்கு வரமுடியுமா? என்று கேட்க, அங்கிருந்த அனைவரும் திடுக்கிட்டு விட்டனர்.

உடற்பயிற்சியாலும், குத்துச் சண்டை, குஸ்தி, கத்திச் சண்டை,குதிரையேற்றம்  ஆகிய பலவித கலைகளில் நன்கு பயிற்சி பெற்ற இளைஞரான எம்ஜியார், ஒல்லியான தேகத்துடன் ஒடிசலா இருந்த என் எஸ் கே வை சண்டைக்கு கூப்பிட்டது கூட இருந்தவர்களைக் கோபப்படுத்தியது.

Image result for MGR and NS Krishnan

கலைவாணராவது எம்ஜியாரை எதிர்கொள்வதாவது என்று நினைத்து, கூட இருந்தவர்கள் சமாதானப்படுத்த முயன்றனர். ஆனால் யாரும் எதிர்பாராமல் கலைவாணர் அந்த சவாலை ஏற்றுக் கொள்கிறார். ஆச்சரியப்பட்ட அனைவரும் கலைவாணர் நிச்சயம் தோற்றுவிடுவார். படாத இடத்தில் அடி பட்டுவிட்டால் என்ன செய்வது என்று பதறி அவரைத் தடுக்க முயன்றனர். 

ஆனால் கலைவாணர் அதை எதையும் பொருட்படுத்தாது, குஸ்தி மைதானத்துக்கு நகர்ந்தார். அதனைப் பார்த்த எம்ஜியார் "என்னையா கேலி செய்தாய், உனக்கு நல்ல பாடம்கற்றுக் கொடுப்பேன்" என்று மனதில் நினைத்துக்கொண்டு கோதாவில் இறங்கினார்.

கலைவாணரின் ஒல்லி உருவம் மெதுவாக எந்தப் பதட்டமும் இல்லாமல் மைதானத்தில் இறங்கி, எம்ஜியார் சற்றும் எதிர்பார்க்காதபடி பாய்ந்து எம்ஜியாரின் இரு தொடைகளையும் பிடித்து வாரி விட தன் பேலன்ஸை இழந்த எம்ஜியார் அப்படியே மைதானத்தில் விழுந்தார். கலைவாணர் சிரித்துக் கொண்டே எம்ஜியாருக்குக் கைகொடுத்து தூக்கிவிட்டார்.

கூட இருந்தவர்களுக்கு என்ன நடந்ததென்று புரிந்து கொள்ள கொஞ்சம் நேரமானது.

அதில் எம்ஜியார் பாடம் கற்றுக் கொண்டார். பார்வைக்கு பலமில்லாதவர்கள், எளியவர்கள் என்று ஏளனமாக நினைத்தால் நிச்சயம் தோல்விதான். அதோடு யாரையும் எளியவர் என்று நினைத்து எள்ளி நடையாடினால் முடிவு இப்படித்தான் இருக்கும்.

இதில் எம்ஜியார் விழுந்து தோற்றது எனக்கு ஆச்சரியமில்லை. ஆனால் அதனை தன் வாழ்க்கை சரிதத்தில் கொஞ்சம் கூட வெட்கப்படாமலும், மறைக்க வேண்டும் என்று எண்ணாமலும் அப்படியே எழுதியதுதான் ஆச்சரியம். எம்ஜியார் மறைந்தும் இன்னும் கூட ஆச்சரியப்படுத்துகிறவர்தான்.

அதன் பின்னர் கலைவாணர் எம்ஜியாருக்கு மிகவும் நெருக்கமானவர் ஆகிவிடுகிறார். பல நேரங்களில் அவருடைய ஆலோசனைகள் எம்ஜியாருக்கு உதவுகிறது.

அதுமட்டுமல்லாமல் கதர் உடுத்தி காந்திய வழியில் காங்கிரஸ் பேரியக்கத்திலிருந்த எம்ஜியாரை திசை திருப்பி திராவிட இயக்கத்தில் ஈடுபாட்டை ஏற்படுத்தியவரும் கலைவாணர்தான்.
Image result for MGR and NS Krishnan


 சுயமரியாதை இயக்கத்தை அறிமுகப்படுத்தியதோடு விடுதலை பத்திரிக்கையை படிக்கக் கொடுத்து பின் பெரியார், அறிஞர் அண்ணா ஆகியோரை அறிமுகப்படுத்தியவரும் அவரே.

இனி எம்ஜியாரின் சொந்த வரிகளில் கலைவாணரைப்பற்றி :

சக்கரம் வைத்த காலணிகளைக் கட்டிக்கொண்டு மாணவர்கள் சறுக்கி விளையாடுகின்றார்களே, இதை 'நவீன விக்கிரமாதித்தன்படத்தில் சக்கரக் காலணியைக் காலில் அணிந்து செய்து காட்டியவர் கலைவாணர் அவர்கள். எத்தனை முறை கீழே விழுந்திருப்பார்! முழங்காலில்தான் எத்தனை காயங்கள்?

கொட்டாங்கச்சி வீணையில் வாசிக்க வேண்டிய வேடமா? உடனே அதைப் பழகுவார்; புல்லாங்குழல் வாசிக்க வேண்டுமா, அவரால் ஒரு பாட்டாவது சரியாக வாசிக்க முடியும். ஆர்மோனியம் வாசிப்பார்; தபேலா, மிருதங்கம் வாசிப்பார். கஞ்சிரா? தெரியும். மோர்சிங்? அதையும் வாசிப்பார். வீண் பழி ஏற்று, சிறைச்சாலைக்குச் சென்று, வெளியே வரும்போது, கச்சேரி செய்யும் அளவிற்குச் சாதகம் செய்து, சங்கீத ஞானம் பெற்றிருந்தார் கலைவாணர் அவர்கள்.

குஸ்தியா? தெரியும். சடுகுடு விளையாட்டா? தெரியும். சிலம்பமா? தெரியும். நடனமா? தெரியும். கதை எழுத வேண்டுமா? எழுதுவார். உரையாடல்? அவருடைய பாத்திரங்கள் பெரும்பாலானவற்றுக்கு அவர்தான் உரையாடல், கதை எல்லாம்.

கவிஞர்கள் இவரை அச்சுறுத்த முடியாது. கொஞ்சம் தாமதமானால் போதும்... இலக்கண விதிகள் வழுவாமல் இவரே அழகான கவிதை புனைவார். இவருடைய பாடல்களெல்லாம் இவரே பாடியதுதான். இயக்குநர் இல்லாவிட்டாலும் கவலையில்லை. இவரே இயக்குநராகி வேலையை முடித்துவிடுவார்.

அறிவுப் பெரியவர்கள் யாராயினும் சரி; அவர் எந்த அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்று கவனிக்க மாட்டார். இவருடைய மரியாதை அவர்களுக்குத்தான் முதலில் கிடைக்கும்! தமிழ் மீது இவருக்கு இருந்த பக்தி (ஆமாம், பக்தியேதான்!) அளவிற்கடங்காதது!''

கலைவாணர் தன் தனித்திறமையால் புகழ்பெற்று இருந்தாலும் எல்லோரிடத்திலும் அன்பும் கனிவும் கொண்டும் விளங்கினார். அப்படிப்பட்டவர்கள் தான் நீண்ட நாட்கள் வாழ்வதில்லையே.

பின் குறிப்பு : இந்தியா போய் வந்து, உடனே இஸ்ரவேல் நாட்டிற்கு புனிதப்பயணம் முடித்து வந்ததால் பதிவுகளுக்கு நீண்ட இடை வெளி ஆகிப்போனது .இதோ உங்களை மீண்டும் சந்திக்க வந்து விட்டேன்.நீங்கள் மிஸ் பன்னீர்களோ என்னவோ, நான் உங்களை மிகவும் மிஸ் பண்ணேன். மிஸ் பண்ணேன் என்பது என் மிஸ்ஸஸ் மேல் சத்தியம் .அதற்குள் நாட்டிலும்  வீட்டிலும் நிறைய நல்லதும் கெட்டதும் நடந்து விட்டன . தொடர்ந்து பேசலாம் .நன்றி .