Thursday, December 29, 2016

தமிழ்நாட்டில் கோழிச்சண்டையின் வயது ?


கல்வெட்டுகள் கூறும் கதைகள்நியூயார்க் தமிழ்ச்சங்கம் தீபாவளித்திருநாளில் ஒரு சிறப்பு நிகழ்வாக கல்வெட்டுகள் பற்றிய ஒரு சொற்பொழிவை ஏற்பாடு செய்திருந்திருந்தது. கலை நிகழ்ச்சிகள், இசை, நாடகம் ஆகியற்றுக்கு வரும் கூட்டம் இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு வராது என்று நினைத்த தலைவர் விஜயகுமார், ஒரு சிறிய அரங்கத்தில் இதனை ஒழுங்கு செய்திருந்தார். ஐம்பது பேர் மட்டுமே அமர முடியும் அந்த இடத்தில் ஒரு நாற்பது பேர் வந்திருந்தனர். அவர்களில் நானும் ஒருவன். அன்றைய தினம் தீபாவளி தினமாகவும் இருந்ததால் அவ்வளவு பேர் வந்ததே பெரிதுதான். 

தீபாவளி இனிப்புகள், சமோசா, காஃபி ஆகியவை இருந்தன. மதிய நேரத்தில் சாப்பாட்டுக்கு மேல் இதனையும் சாப்பிட்டுவிட்டு லேசான கிறக்கத்தில் உட்கார, கல்வெட்டுகள் சொல்வெட்டுகளில் வெளிப்பட்டு நிமிர்ந்து உட்கார வைத்தது.

தமிழ்நாடு தொல்லியல் துறையில் (அப்படி ஒரு துறை இருக்கிறதா என்ன?) முப்பது வருடங்களுக்கு மேல் பணியாற்றி ஓய்வு பெற்ற முனைவர் சு.ராஜகோபால் அவர்கள் தான் அந்த சொற்பொழிவாற்ற வந்த சிறப்பு விருந்தினர். நியூயார்க் தமிழ்ப் பள்ளியின் நிறுவனர், நண்பர் முனைவர் பாலா அவர்கள் அவரை அழைத்து வந்திருந்தார்.
Image result for DR.S.Rajagopal
DR.Rajagopal
தமிழ்நாடு தொல்லியல்துறையில் மாநில அளவில் மூன்று பேர்தான் வேலை செய்கிறார்களாம். இப்படி இருந்தால் நம் வரலாற்று அறிவும் பண்பாடும், தொல்பொருள் இடங்களும்  எப்படி பாதுகாக்கப்படும் என்று யோசித்துப் பார்த்தால் அதிர்ச்சியாய் இருந்தது. அதோடு இப்போது இருக்கும் அரசு அதற்கென எந்த முயற்சியும் எடுக்காததால் பல வரலாற்றுச் சின்னங்கள் அழிந்து கொண்டிருக்கின்றன.

முனைவர் ராஜகோபால் போன்றவர்கள் இதனை ஒரு வேலையாக  நினைத்துச் செய்யாமல், உண்மையான ஆர்வத்துடன் தொண்டாற்றி ஓய்வு பெற்றாலும் இன்னும் செல்லுமிடங்களிலெல்லாம் மக்களின் ஆர்வத்தை தூண்டி விடுகிறார். 25 நூல்களையும் எழுதியிருக்கிறார்.

இதில் இன்னொரு ஆச்சரியம் என்னவென்றால் சின்ன வயதில் இவருக்கு காது கோளாறு ஏற்பட்டு காது கேட்பதில்லை. ஆனால் பேச்சு ஓரளவுக்கு புரிந்து கொள்ளும் படியாகவே இருந்தது. பவர் பாய்ன்ட் மூலம் அவர் கொடுத்த தகவல்கள் மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது.

.நினைவுப்பரிசு 


இறுதியில் அவரிடம் கேள்விகளை நாங்கள் சிறுதாளில் எழுதிக் கேட்க அவர் அதற்கு பதிலளித்தார். அவர் சென்னையில் வாழ்கிறார், அவருடைய ஈமெயில் rajagopal57@gmail.com . அவர் தந்த தகவல்களை நானும் உங்களுடன் பகிர்கிறேன்.

1)    சிந்து வெளி அகழ்வாராய்ச்சி தான் இந்தியாவில் நடந்த முதல் ஆராய்ச்சி.
2)    எழுத்துக்கள் என்பதை ஓவியம் (sign), குறியீடு (symbol), எழுத்து (Script) என்று மூன்றாகப் பிரிக்கலாம்.
3)    பழங்கால ஓவியம் (sign) என்பது 2000 வருடங்கள் முதல் 5000 வருடங்கள் வரை பழமையானது, பொதுவாக குகைகளில் உள்ள பாறைகளில் இவை காணப்படுகின்றன (Rock Paintings). எழுத்துக்கும் குறியீடுகளுக்கும் முற்பட்ட வடிவம் தான் ஓவியம்.
4)    கொல்லிப் பாவை பற்றிய பாடல் குறுந்தொகை 89: 4-6ல் இடம்பெறுகிறது.
5)    தர்மபுரியில் உள்ள மல்லப் பாடியில் குதிரை வீரன் ஓவியம் கண்டுபிடிக்கப் பட்டது.
6)    செத்தவரை அடக்கம் செய்யப்பட்ட இடங்களில் இருக்கும் ஓவியங்கள் திருவண்ணாமலை, கீழ்வாலை, விழுப்புரத்தில் உள்ள செகநூற்பட்டி,  புதுக் கோட்டையில் உள்ள திருமயம், ஆகிய இடங்களில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.
7)    அடுத்து வருபவை குறியீடுகள். ஓவியத்துக்கு பிற்பட்ட ஆனால் எழுத்துக்கு முற்பட்ட வடிவம் இது. பொதுவாக ஈமச்சின்னங்களைக் குறிக்கத்தான் குறியீடுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
8)    சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள  கற்காலக் கருவிகள், சிந்து வெளியில் கண்டுபிடிக்கப்பட்ட அதே குறியீடுகள் ஆகியவை மயிலாடுதுறையில் உள்ள செம்பியன் என்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டது ஆச்சரியமளிக்கிறது. இதிலிருந்து அங்கிருந்து இங்கு தமிழர் இடம் பெயர்ந்திருக்கிறார்கள் என்பது உறுதியாகிறது.
9)    கொடுமணல் என்ற இடத்தில் உள்ள குறியீடுகள் 2000 ஆண்டு பழமை உடையவை. இவை சிந்துவெளிக்கும் முற்பட்ட காலத்தை உடையவை என்பதும் ஆச்சரியம்.  
10) அடுத்து வந்த எழுத்து வடிவத்தின் முதல் வெளிப்பாடு கல்வெட்டுகள்தான். தமிழக எழுத்துகள் தாமினி, பிராமி என்று வகைப் படுத்தப்பட்டுள்ளன.
11) தமிழி என்பதுதான் தாமினி என்று மருவியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
12) பிராமி கல்வெட்டுகள் சமணர் குகைகளில் ஏராளமாக காணப்படுகின்றன. மாமண்டூர், சித்தன்ன வாசல் குகைகளில் இவைகள் உள்ளன. யானை மலையில் ஈமச்சின்னங்களோடு கல்வெட்டுகளும் இருக்கின்றன.
13) சில கல்வெட்டுகளின் காலம் அரசாண்ட மன்னர்களின் காலத்தோடு பொருந்திப் போகின்றன. பாண்டியன் நெடுஞ்செழியன் 2300 ஆண்டு முன், அதியமான் 2100 ஆண்டுகள், பெருங்கடுங்கோ, இளங்கடுங்கோ 2000 ஆண்டுக்கு முன்.  கீழடி என்னுமிடத்தில் 2000 ஆண்டு பழமையான தமிழ் எழுத்துக்களோடு எகிப்து, தாய்லாந்து எழுத்துக்களும் உள்ளன என்பது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
14) பிராமிக்குப்பின் வந்த வட்டெழுத்து 800 ஆண்டுகள் பழமையானது. கிரந்த எழுத்துக்கள் என்பவை நாகரி, கன்னடம், தெலுங்கு, பாரசீகம், அரபி, ஐரோப்பிய லத்தீன் எழுத்துக்கள் ஆகியவற்றை உள்ளடக்கியது.
15) ஈரோட்டில் உள்ள அரச்சலூரில் 1700 ஆண்டுகளுக்கு முற்பட்ட  இசைக் கல்வெட்டுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
16) தமிழ்நாட்டில் கோழிச்சண்டையின் வயது 1500 வருடங்கள் என்று கல்வெட்டின் மூலம் தெரிகிறது. வீண் பொழுதுபோக்கில் நம் மறத்தமிழர் 1500 ஆண்டுகளாகவே ஈடுபட்டு வந்திருக்கின்றனர் .கோழித்தலைகள் தவிர இச்சண்டையில்  மனிதத்தலைகள் எத்தனை வீழ்ந்தனவோ ?.
17) 19ஆம் நூற்றாண்டில் வெள்ளையரான மெக்கின்சி என்பவர்தான் முதன் முதலில் சுவடிகளை சேகரித்தார். அவை சென்னை மற்றும் மைசூர் அருங்காட்சியகங்களில் உள்ளன.
18) ராஜராஜ சோழன் காலத்தில்தான் அதிகமாக கோவில்களில்  கற்றளிகள் அமைக்கப்பட்டன மற்றும் வீரமரணம் அடைந்தவர்களுக்கு நடுக்கற்கள் உருவாக்கப்பட்டன.
19) மதுரையில் உள்ள 24 பேரில் ஒருவரான சமண தீர்த்தங்கரரின் இடத்தில் வட்டெழுத்துக்கள் காணப்படுகின்றன.
20) தஞ்சை தரங்கம்பாடியில் ரகுநாத நாயக்கர் காலத்தில் வந்த கிறிஸ்தவ லுத்தரன் பாதிரிகள் தான் முதல் அச்சகத்தை உருவாக்கியுள்ளனர்.
 
தமிழ்ச்சங்க நிர்வாகிகளுடன் அடியேன் 

சரியான பண ஒதுக்கீடு இல்லாமல் மூடப்பட்ட அகழ்வாராய்ச்சிகள் ஏராளம் என்று வருத்தத்துடன் சொன்னார். ராஜகோபால் இதில் அரசுக்கோ அரசியல்வாதிகளுக்கோ  எந்த அக்கறையும் இல்லை என்பதற்கு சமீபத்தில் மூடப்பட்ட கீழடி ஆய்வு ஒரு மோசமான உதாரணம்.

சரியான விழிப்புணர்வு இல்லாத பொதுமக்களும் வரலாற்றுச் சின்னங்களான கல்வெட்டுகளில் தங்கள் பெயர்களையும் கிறுக்கி கெடுத்து விடுகின்றனர்.


வரலாற்றை போற்றிப் பாதுகாக்கும் நிலை இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் எப்போதுதான் உருவாகுமோ?
Image result for புத்தாண்டு வாழ்த்துக்கள் 2017நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய ஆங்கிலப்புத்தாண்டு வாழ்த்துக்கள் .
தொடர்ந்து ஆதரவு தரும் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி .
என் பதிவுகளை 56 நாடுகளில் வசிக்கும் தமிழர் படிக்கிறார்கள் என்னும்போது உள்ளபடியே உவகை கொள்கிறேன் .

அடுத்த ஆண்டு சந்திக்கலாம் .

Tuesday, December 27, 2016

தமிழில் புரட்சி செய்த இத்தாலிக்காரர் !!!!!!!!!!!!!!!!


  (நியூயார்க்  தமிழ்ச்சங்கத்தின் தீபாவளி மலரில் வெளி வந்த அடியேனின்   கட்டுரை )

Image result for veeramamunivar photos
Veeramamunivar 

     1968 –ம் ஆண்டு ஜனவரி முதல் வாரத்தில், உலகத் தமிழ் மாநாடு சிறப்பாக நடந்தேறும் சமயம். முதலமைச்சர் அறிஞர் அண்ணாதுரை அவர்கள் தமிழ் மொழிக்காக தொண்டாற்றிய பெருமகனார்களின் சிலைகளை அழகிய மெரீனா கடற்கரையில் நிறுவ முடிவு செய்தார். ஐயன் திருவள்ளுவர், ஔவையார், கம்பர். பாரதியார், பாரதிதாசன் ஆகிய பெருந்தமிழ் அறிஞர்களோடு “வீரமாமுனிவர்” என்பவர் சிலையும் நிறுவப்பட்டது. இவை வரலாற்று ஆவணங்களாக இன்றும் திகழ்ந்து வருகின்றன.
Image result for Veeramamunivar statue in chennai
Add caption
வீரமாமுனிவர் இத்தாலியில் பிறந்தவர் என்று கேள்விப்பட்டதும், ஒரு வெள்ளைக்கார ஐரோப்பியர் அப்படியென்ன தமிழுக்கு பெரிதாக தொண்டாற்றி விட்டார்? என்று நினைத்து அவரைப்பற்றி அறிய முனைந்தபோது உள்ளபடியே ஆச்சர்யப்படுத்தும் தகவல்கள் ஏராளமாகக் கிடைத்தன. அவற்றுள் சிலவற்றை இங்கு தொகுத்துத் தருகிறேன்.
முதலில் வெள்ளைக்காரருக்கு எப்படி “வீரமாமுனிவர்” என்ற பெயர் வந்தது என்ற சுவாரஸ்ய தகவலைப் பார்ப்போம்.

பதினெட்டாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், கிறித்தவக் கொள்கைகளைப் பரப்புவதற்காக கோவா (Goa) வழியாக மதுரை வந்தார் “கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி”. இத்தாலிய நாட்டு கத்தோலிக்கப் பாதிரியரான இவர், மதுரை வந்து சேர்ந்தது கி பி 1711-ல். தேமதுரத் தமிழோசை காதில் விழுந்தவுடனே, அதனால் பெரிதும் ஈர்க்கப்பட்டு, பல ஊர்களுக்குச் சென்று தமிழ் கற்க ஆரம்பித்தார். தமிழை முழுவதும் கற்றது சுப்பிரதீபக் கவிராயர் என்பவரிடம்தான். இலக்கணம், இலக்கியம், அகராதி என்று தமிழை ஆழமாகக் கற்றுத் தேர்ந்தார். தமிழில் இலக்கியச் சொற்பொழிவு நடத்தும் அளவுக்கு தமிழைக் கற்றுக்கொண்டார். தம் பெயர் தமிழில் இருக்க வேண்டுமென்று நினைத்து தம் இயற்பெயரை சிறிதே மொழிபெயர்த்து, அதனை “தைரிய நாத சாமி” என்று அழைத்தார். பின்னர் அதுவும் வடமொழி என்று அறிந்து “வீரமாமுனிவர்” என்று சுத்தமான தமிழில் மாற்றிக்கொண்டார். இதிலிருந்தே தமிழ் மீது அவருக்கிருந்த ஈர்ப்பை உணர்ந்துகொள்ளலாம். மதுரையில் இருந்த தமிழ்ச் சங்க அறிஞர்கள் ‘தேம்பாவணி’ யைப் பாராட்டி இந்தப் பட்டம் கொடுத்தனர்  என்றும் சிலர் சொல்கிறார்கள்.

அது தவிர இன்னும் பல பெயர்களால் அவர் அழைக்கப்பட்டார். இவருக்கு தெருட்குரு (தெருள் குரு) என்ற பட்டப் பெயர் இருந்தது. தெருள் என்றால் சீரிய அறிவு என்று பொருள். சுவடிகளைத் தேடி அலைந்ததால், “சுவடி தேடிய சாமி” என்றும், ஆற்காடு நவாப் சந்தா சாகிப் வழங்கிய ‘இஸ்மத் சந்நியாசி’ (தூய முனிவர்) என்ற பட்டம், பூக்கள் மேல் கொண்ட ஈடுபாட்டால் “மலர்களின் தந்தை” என்ற பெயர்  மற்றும் வீர ஆரிய வேதியன்’, ‘திருமதுரைச் செந்தமிழ் தேசிகர்போன்ற பெயர்களாலும் அறியப்பட்டார்.  
இவர் தமிழில் செய்த புரட்சிகளைச் சொல்லிவிட்டு இறுதியாக அவர் எழுதிய புத்தகங்களுடன் முடிக்கிறேன்.
Image result for chanda sahib
Chanda Sahib

அவர் காலத்தில் உயிரெழுத்துக்களான அ, எ, என்ற எழுத்துக்களின் நெடிலை எழுத, அதனுடன் என்ற எழுத்தைப் பயன்படுத்தினராம். எனவே நெடிலில், அர, எர, என்று எழுதியுள்ளனர். அவற்றில் மாற்றம் செய்து அ என்பதின் நெடிலை ஆ என்று எழுதலாம் என்றும், என்பதின் நெடிலை எ வின் மீது சுழி அமைத்து, பிறகு ஏ என்று கொண்டுவந்தவர் இவரே. அதுபோல ஒ வின் நெடிலை ஓ என்று அமைத்தவரும் அவரே.

அதுபோலவே, உயிர்மெய் எழுத்துக்களில் நெடிலைக் குறிக்க கொம்புக்கு மேலே சுழி அமைத்தவரும் இவரே. உதாரணமாக தேன்-ஐக் குறிக்கவும், தென் பகுதியைக் குறிக்கவும் ‘தென்’ என்றே இருந்தது. அதனைத் தேன் என்று மேலே சுழியமைத்து வேறுபடுத்தியதும் இவரே.

இப்போது யோசித்துப்பார்த்தால், எவ்வளவு குழப்பமான ஒரு எழுத்து முறையிலிருந்து எழுத்துக்களைச் சீரமைத்து வெள்ளைக்காரர் ஒருவர் வித்தியாசம் காட்டியிருக்கிறார் என்று நினைக்கும்போது ஆச்சர்யமாய் இருக்கிறது.

அதோடு வெறும் செய்யுள் முறை மட்டுமே தமிழில் வழங்கி வந்ததை மாற்றி முதன்முதலில் நிறைய உரைநடைகளை அறிமுகப்படுத்தியதும் இவரே.
நம் நாட்டுக்கு வந்தது முதல், உடை, உணவு என்று எல்லா நடைமுறைகளிலும் நம்முடைய தமிழ்ப் பாரம்பரியத்தையே பின்பற்றி வாழ்ந்தார். தான் துறவறம் கொண்ட முனிவர் என்பதைத் தெரிவிக்கும் விதத்தில் காவி உடையை மட்டுமே அணிந்தாராம். இவர் சைவ உணவை மட்டுமே அதுவும் ஒருவேளை மட்டுமே உண்டார் என்றும் சொல்கிறார்கள்.
இவர் எழுதிய 23 நூல்களில், “தேம்பாவணி” தலையாயது. தேம்பாவணி என்னும் காப்பியம் இயேசு கிறிஸ்துவின் வரலாற்றைச் சொல்லும் ஒரு இலக்கிய நூல், இது மூன்று காண்டங்களில், முப்பத்தாறு படலங்களை அடக்கி, மொத்தம் 3615 விருத்தப் பாக்களை 90 சந்த வகைகளுடன் பாடப்பெற்றது.

தமிழர் அல்லாத ஒருவர் இயற்றிய ஒரே தமிழ்க் காப்பியம் “தேம்பாவணி” மட்டுமே ஆகும். இந்தக் காவியத்தில் ‘ஜோசப்’ என்ற பெயரை வளன் என்று மாற்றியதோடு, அனைத்து வரலாற்று நாயகர்களுக்கும் தமிழ்ப் பெயரே சூட்டியுள்ளார்.

அதனைத்தவிர தொன்னூல் விளக்கம், வேத விளக்கம், வேதியர் ஒழுக்கம், ஞானக் கண்ணாடி, செந்தமிழ் இலக்கணம், வாமன் கதை, திருக்காவல் ஊர்க் கலம்பகம், கித்தேரி அம்மன் அம்மானை, பரமார்த்த குருவின் கதை என்று பல நூல்களை எழுதியுள்ளார்.

இதில் ‘பரமார்த்த குருவின் கதை’ என்பது, “ஜீன் டி பான்டைன்” (Jean de Fantaine) என்ற பிரெஞ்சு எழுத்தாளர் எழுதிய கதையின் தமிழாக்கம் ஆகும் என்றாலும் தமிழில் வந்த முதல் நகைச்சுவை எழுது இதுவே ஆகும்.  

அதோடு தமிழில், பேச்சுத் தமிழும், எழுத்துத் தமிழும் முற்றிலும் வேறுபட்டு இருப்பதால், பேச்சுத் தமிழை விவரித்து, “கொடுந்தமிழ் இலக்கணம்” ஒன்றையும் எழுதியுள்ளார்.

1000 சொற்கள் கொண்ட தமிழ்-இலத்தீன் அகராதியும், 4000 தமிழ்ச் சொற்கள் கொண்ட தமிழ்-போர்த்துக்கீசிய அகராதியையும் அமைத்து முதன் முதலில் தமிழகராதி அமைத்தவர் என்ற பெருமையும் பெற்றிருக்கிறார்.  

இவைகள் தவிர, திருக்குறள், தேவாரம், திருப்புகழ், நன்னூல், ஆத்திசூடி, ஆகிய பல தமிழ் நூல்களை ஐரோப்பிய மொழிகளில் மொழிபெயர்த்திருக்கிறார். இவற்றுள் திருக்குறளில் அறத்துப்பாலையும் பொருட்பாலையும் மட்டுமே மொழிபெயர்த்து தாம் சம்சாரம் துறந்த நல்ல முனிவர் என்பதையும் நிரூபித்திருக்கிறார் என்பது கூடுதல் செய்தி. முனிவர் அவர்கள், 1747-ஆம் ஆண்டு பெப்ரவரியில் தமது அறுபத்தேழாம் வயதில் கேரளக்கரையில் காலமானார்.  ஆனால்  தமிழ் உள்ளவரை, தமிழுக்குத் தகைசால் தொண்டு புரிந்த வீரமாமுனிவரும் வாழ்வார் என்பதில் சந்தேகமில்லை.

செம்மொழியாம் நம் தமிழ் மொழி, தொன்மைக் காலத்திலிருந்து இந்தக் காலம்வரை பிறநாட்டவரை என்றும் கவரும் கன்னித் தமிழ்தான் என்பது நமக்கெல்லாம் பெருமைதானே.

கார்த்திரள் மறையாக் கடலிலுண் மூழ்காக்
கடையிலா தொளிர் பரஞ் சுடரே
நீர்த்திரள் சுருட்டி மாறலை யின்றி
நிலைபெறுஞ் செல்வ நற் கடலே
போர்த்திறள் பொருதக் கதுவிடா வரனே
பூவனந் தாங்கிய பொறையே
சூர்த்திறள் பயக்கு நோய்த்திறள் துடைத்துத்
துகடுடைத் துயிர் தரு மமுதே!

-      தேம்பாவணி

Thursday, December 22, 2016

கருணாநிதியின் கடைசிக் கடமைகள் !!!!!!!!!!!!!

Related image


தந்தை பெரியாரிடம் பிறந்து, அறிஞர் அண்ணாவிடம் வளர்ந்து கலைஞர் கருணாநிதி மூலம் தொடர்ந்தது திராவிட பாரம்பர்யம். மக்கள் எழுச்சிக்கு வித்திட்டு, அவர்களின் பேராதரவுடன் அமைந்த மத சார்பற்ற உன்னத நிலைதான் தமிழ்நாட்டை ஒரு அமைதிப் பூங்காவாக இன்று வரை காத்து வருகிறது என்பதில் சந்தேகமில்லை.

அதன்பின் சில மதக்கட்சிகள் ஆங்காங்கே எழுந்தாலும் அவை மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெறவில்லை. சுதந்திரம் பெற்றுத் தந்த காங்கிரஸ் பேரியக்கத்தையே இந்த திராவிட சக்தி வேரோடு சாய்த்தது. பாரதிய ஜனதாக்கட்சி போன்ற மதவாத கட்சிகள் தமிழகத்தில் காலூன்ற முடியாத காரணமும் இன்னும் மக்கள் மனத்தில் அந்த சக்தி படிந்திருப்பதால்தான். ஏனென்றால் இந்துக்கள், முஸ்லீம்கள்,   கிறித்துவர்கள் என்று அனைவரும் இன்றுவரை ஆதரிப்பதால் தான்.

என்பதுகளிலும் தொண்ணூறுகளிலும் வீரியத்துடன் எழுந்த பா.ம.க போன்ற சாதிக் கட்சிகளும் மக்களை பிளவுபடுத்தி அதில் ஆதாயம் காண விளைந்தாலும் அதுவும் மக்களின் ஒற்றுமையை அசைக்கவில்லை.

அண்ணா காலத்திலும் கலைஞர் காலத்திலும் ஈவிகே சம்பத், கண்ணதாசன் ஆகியோரால் உருவெடுத்த சிறு சிறு சலப்புகள் அதனை அசைக்க முடியவில்லை.
Image result for Karunanidhi with Annadurai
Karunanidhi with Annadurai

அண்ணாவுக்குப்பின், மதியழகன், அன்பழகன், நாஞ்சில் மனோகரன்  ஆகியோரும் கருணாநிதியின் தலைமையை நிதர்சனம் அறிந்து ஏற்றுக் கொண்டு, வழிவிட்டனர். அப்போது கருணாநிதியை எம்ஜியார் பலமாக ஆதரித்ததும் ஒரு காரணம்.

திமுக இயக்கம் கருணாநிதி எம்ஜியாருக்கு இடையே எழுந்த தனிப்பட்ட கருத்து வேறுபாடுகளால் இரண்டாகப் பிரிந்தது. அண்ணா ஆரம்பித்த திமுகவை தங்கள் உயிரென மதித்தவர்களான பாரம்பர்ய திமுகக்காரர்கள் திமுகவில் தங்க, எம்ஜியார் தனது மாபெரும் ரசிகர் பட்டாளத்துடன் பிரிந்து அதிமுக வை ஆரம்பித்தார். முகராசி, பணராசி, ஏழைப் பங்காளன், சினிமா கவர்ச்சி ஆகியவை கைகொடுக்க கிராமப்புற தாய்மார்களின் ஒட்டு மொத்த ஆதரவும் அதிமுக பக்கம் சாய்ந்து திமுகவை வீழ்த்தும் அளவுக்கு ஒரு மாபெரும் சக்தியாக உருவெடுத்தது.
.
கருணாநிதியும் எம்ஜியாரும் இருவேறு அரசியல் திசைகளில் பிரிந்து நின்றாலும், பெரியார் அண்ணா ஆகியோரின் கொள்கைகளைத் தொடர்ந்து பின்பற்றி வந்தனர்.

Image result for Karunanidhi with Annadurai

எம்ஜியாருக்குப்பின் தவிர்க்க முடியாத சக்தியாக ஜெயலலிதா உருவெடுத்த போது திராவிடக் கொள்கைகள் காற்றில் பறந்தன. கொள்கைகள் இல்லாத தனிமனித துதியும் ஆராதனையும் அதிகமாகி  ஜனநாயகத்தையும் குழிதோண்டி பறித்தன. ஆனாலும் மிகப்பெரிய ஆளுமையாக, கட்டுக் கோப்புடன் கட்சியை இதுநாள் வரை கட்டிக்காத்த ஜெயலலிதாவின் மன உறுதி பாராட்டப்பட வேண்டிய ஒன்று.
Image result for MGR with Jayalalitha

இப்போது ஜெயலலிதாவும் மறைந்துவிட , எதிர்பார்த்த வண்ணமாகவே சசிகலா அடுத்த தலைவியாக உருவெடுக்கிறார். எம்ஜியார் மற்றும் ஜெயலலிதா  ஆகியோரை  தொண்டர்களும் மக்களும் அறிந்த அளவுக்கு சசிகலாவை , அவரின் குணநலன்கள், திறமை ஆகியவற்றை யாரும் முழுமையாக அறிய மாட்டார்கள். அறிந்த அளவுக்கு அவர்மேல் எதிர்மறையான காரியங்கள்தான் அதிகம் உள்ளன. தனிப்பட்ட மக்கள் செல்வாக்கு இல்லாத அதிமுகவின் அடுத்த கட்ட தலைகள் வேறு வழியின்றி சசிகலாவின் பின்னால் அணிவகுத்துள்ளார்கள். எந்தக் கொள்கைப் பிடிப்பும், இலட்சியங்களும் இல்லாத ஒரு சந்தர்ப்பவாத சுயநலக் குழுவாக இது உருவெடுத்துள்ளது.  இது தமிழகத்தின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல.

Related image

இதற்கிடையில் தனக்குக் கிடைத்த மாபெரும் மக்கள் ஆதரவை தக்க வைக்க முடியாமல், ஊழல், குடும்பச் சிக்கல்களுக்குள் அமிழ்ந்து போன திமுக இயக்கம், எம்ஜியார், ஜெயலலிதா ஆகிய இருவரையும் சமாளிக்க முடியாமல் பலவீனப்பட்டுப் போனது. ஆனாலும் பாரம்பர்ய திமுகக்காரர்கள் என்ன நடந்தாலும் உறுதியாக கலைஞர் பக்கம் நிற்க, திமுகவின் அடுத்த தலைமுறையின் தலைவராக மு.க.ஸ்டாலின் உருவெடுத்துள்ளார். கருணாநிதியின் மகன் என்ற ஒரே தகுதியில் கட்சியில் நுழைந்தாலும், கருணாநிதியைப் போல் இலக்கிய அறிவோ, பேச்சுத்திறனோ ஆளுமைத்திறனோ இல்லையென்றாலும் தன் உழைப்பினால் இந்த இடத்தை இவ்வளவு நாள் தக்க வைத்துக் கொண்டிருக்கிறார். கருணாநிதிக்குப்பின் திமுகவை கட்டிக்காக்க இவரால் மட்டுமே முடியும் என்று கட்சிக்காரர்கள் மட்டுமல்ல பொதுமக்களும் இவரை ஏற்றுக் கொண்டுவிட்டனர். இன்றைய சூழ்நிலையில் திமுக அடுத்த தேர்தலில் வெற்றி பெற்றால்  முதலைமச்சராக பதவியேற்க மக்களின் ஏகோபித்த ஆதரவு  கருணாநிதியை விட மு.க.ஸ்டாலினுக்கே அதிகம்.
இந்தச் சூழ்நிலையில் கருணாநிதி என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.

1.     தன் காலம் முடிந்துவிட்டது என்பதை அவர் மனமார ஏற்றுக் கொள்ள வேண்டும்.
2.    தான் தலைவராக இருக்கும் போதே, அடுத்த தலைவர் பொதுக்குழுவில் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். இதனால் பல குழப்பங்கள் தவிர்க்கப்படும்.
3.    மு.க.ஸ்டாலினைத் தவிர திமுகவுக்கு வேறு வழியில்லை என்பதை நன்கு உணர வேண்டும்.
4.    தனக்குப்பின் நடக்கும் குடும்பச் சண்டைகள் திமுகவை பலவீனப்படுத்தும் என்பதால் இப்பொழுதே அதனை தீர்த்துவிட வேண்டும்.
5.    முக.அழகிரிக்கு தற்சமயம் கட்சிப் பதவி கொடுத்தால் அது குழப்பத்தைத்தான் அதிகரிக்கும். அரசியல் பக்குவம், திறமை, தகுதி 
6.    மற்றும் அனுபவம் எதுவுமே இல்லாத முக அழகிரியால் திமுகவுக்கு நன்மையைவிட தீமையே அதிகம் நடக்கும். அதற்குப்பதிலாக அவரைச் சமாதானப்படுத்த அவருடைய மகனுக்கு கட்சியில் பொறுப்பு அளிக்கலாம்.
7.    கனிமொழி மற்றும் ராசாத்தி அம்மாளிடம், மு..ஸ்டாலின் தான் தலைவர் என்பதை அடித்துச் சொல்லி, கனிமொழியை ஸ்டாலினுடன்  ஒத்துப்போகச் செய்ய வேண்டும். கனிமொழி வழக்கம் போல் டெல்லியில் செயல்பட ஸ்டாலினிடம் உறுதியைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.
8.    இந்தச் சூழ்நிலையில் ஒரு தந்தையாக இல்லாமல் கட்சிதலைவராக கருணாநிதி முடிவெடுக்க வேண்டும் என்றே கட்சி தொண்டர்கள் விரும்புவார்கள்.
9.    தான் தலைவராக தொடர்ந்து இருந்து கொண்டாலும் ஸ்டாலினுக்கு முழுப்பொறுப்பு கொடுத்து அவரை வழி நடத்தலாம்.
10.  தந்தை மகனுக்குள் சண்டை போன்ற பத்திரிக்கைச் செய்திகளுக்கு சீக்கிரம் முற்றுப்புள்ளி வைக்க இது உதவும்.
11.   வாரிசுகளையோ அடுத்த கட்ட தலைவர்களையோ அறிவிக்காமல் எம்ஜியார் இருந்தபோதும், ஜெயலலிதா இறந்த போதும் எழுந்துள்ள சிக்கல்களைப் பார்த்தாவது கருணாநிதி விழித்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் அதைக்காட்டிலும் பெரிய பிரச்சனைகள் இங்கு ஏற்பட்டு கட்சி மேலும் இரண்டாக மூன்றாக உடைந்தால் அண்ணாவின் திமுக கண் முன்னாலேயே அழிந்துவிடும் அபாயம் இருக்கிறது.

இதில் எதுவும் சீக்கிரம் நடக்கவில்லையென்றால் , திராவிட இயக்கத்திற்கு அண்ணா, எம்ஜியார் சமாதி  அருகிலேயே இடம் பார்த்து விடவேண்டியதுதான் .

Image result for christmas tamil