Monday, February 29, 2016

சீனாவில் முதல் ஏமாற்றம் !!!!!!!!!!!

சீனாவில் பரதேசி - பகுதி -2
Velupillai Prabhakaran.jpg
பிரபாகரன்
" பிரபாகரன்   உயிரோடுதான் இருக்கிறார் என்று  தமிழ்நாட்டில் வைகோ போன்ற சிலர் தொடர்ந்து சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.  நீங்கள் உள்ளுர்க்காரர் என்பதாலும் தமிழ் என்பதாலும், அங்கே என்ன சொல்கிறார்கள் என்று உங்களுக்குத் தெரியுமல்லவா?" ,என்றேன்.
மாந்தன் சொன்னார்,  "பிரபாகரன் வீரசொர்க்கம் அடைந்தார்", என்றுதான் நாங்கள்  நினைக்கிறோம். ஆனால் அந்த மாவீரருக்கு சாவு இருக்கிறதா என்ன ?.  பிரபாகரன் என்ற  லெஜண்டுக்கு சாவில்லை", என்றார். அவர் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை. ஆனாலும் இலங்கை போகும் திட்டம் இருந்ததால் நாமே நேரில் போய் பார்த்துக்கொள்ளலாம் என்று எண்ணிக்கொண்டேன் .
With Maanthan in Doha Airport

இப்படி மீதியான நேரம் சுவையாகவே கழிய, மறுபடியும் விமானம் ஏறி மதியம் 2 மணியளவில் பீஜிங் வந்து சேர்ந்தேன். அந்த நிமிடத்திலிருந்து பிரச்சனை  ஆரம்பித்தது வேறு என்ன பிரச்சனை, மொழிப்பிரச்சனைதான். விமான நிலைய அலுவலர்கள், போலீஸ்காரர்கள், ஏன் மிலிட்டரி ஆட்களுக்குக்  கூட ஆங்கிலம்  ஒரு அச்சரம் தெரியவில்லை. அவர்களுக்குத்தெரிந்த ஒரே ஆங்கில வார்த்தை  "நோ இங்கிலிஸ்"  என்பது தான். ஆனால்  அவர்களுடைய மிடுக்குக்கு மட்டும் பஞ்சமில்லை.
Beijing Airport

ஆட்டு மந்தை  போல் கூட்டத்தோடு  கூட்டமாக இமிக்ரேஷனில் நின்றேன்.ஏற்கனவே  பாஸ்போர்ட்டில் விசா அடித்திருந்த பக்கத்தை எடுத்து வைத்துக்கொண்டு, என் முறை  வரும்போது நீட்டினேன். நல்லவேளை எந்தக்கேள்வியோ  பதிலோ ஒன்றுமில்லை. ஒரு புன்னகை இல்லை, ஒரு வரவேற்பு இல்லை. இறுகிய முகத்துடனேயே  கொடுத்த பாஸ்போர்ட்டை எடுத்துக்கொண்டு வெளியேறினேன். என்ன நாடு இது ?. கம்யூனிச நாடு என்பதற்காக இப்படியா? ஒருவேளை எனக்கு வாய்த்த ஆள்தான் அப்படியா என்று சுற்றி முற்றிப்பார்த்தால், எல்லாக் கவுன்ட்டரிலும்  அதே கதைதான். ஒரு பேச்சு மூச்சு         காணோம். அங்கே  வழிகாட்டுவதற்கும் யாருமில்லாததால் நானும் கூட்டத்தோடு போனேன். கீழிறங்கி அங்கே இருந்த ஒரு டிரைனில் ஏறி பெட்டிகளை எடுக்கும் இடத்திற்கு வந்தேன். ஒரு டிராலியில் பெட்டிகளை அடுக்கி எடுத்து, டாக்ஸி, கேப், கார் ஹோட்டல் டிராப் என்று பலவிதத்தில் கேட்டுக் களைத்து நின்றபோது, 'இன்ஃபர்மேஷன் டெஸ்க்' என்று ஆங்கிலத்தில் எழுதியிருந்ததைப் பார்த்து அவசர அவசரமாக  அங்கு சென்றேன்.
Beijing Capital International Airport Terminal 3 is one of the world’s most environmentally sustainable airport terminal buildings.(c)PID
Beijing Airport - Aerial view


அங்கு உட்கார்ந்திருந்த ஒரு முதிய பெண், "இவன் எதுக்கு இங்க வரான் ?"  என்று நினைப்பது போலவே என்னைப் பார்த்து, வேண்டா வெறுப்பாக மறுபுறம் திரும்பியது. நானும் வம்படியாகப் போய், "என் ஹோட்டல் போக வாடகைக்கார் வேண்டும்" என்றேன். "நோ இங்கிலிஸ்" என்று சொன்னார். எனக்கு கெட்ட கோபம் வந்துவிட்டது. “why the hell then you are sitting here ?" என்று கத்தியபோது, உடனே என் மனம் சொன்னது" டேய் பைத்தியக்கார ஆஃல்பி, நீ இருப்பது கம்யூனிச நாடு கொஞ்சம் அடக்கிவாசி", என்று.  
அப்போது வாலண்டியர் என்று போட்டு ID கார்டு அணிந்த ஒருவன் என்னிடம் வந்தான். "யு நீட் எனி ஹெல்ப் ?".
வாடா சாமி உன்னைத்தான் தேடிட்டிருந்தேன் என்று சொல்லிவிட்டு, கைகுலுக்கிவிட்டு, “ஹோட்டலுக்குப் போக வேண்டும், கவர்ன்மென்ட் டாக்சி ஸ்டேன்ட் எங்கேயிருகிறது ?", என்றேன். அவனுக்கு கவர்ன்மென்ட்  என்ற வார்த்தையை எத்தனை முறை விளக்கியும் புரியவில்லை. அதன்பின்னர் உடைந்த ஆங்கிலத்தில் சொன்னான், "எங்கே போவதாய் இருந்தாலும் சீனமொழியில் எழுதி வைத்துக்கொள்", என்று.
Top 5 best airports in the world ?
என்னுடைய “ஃபீல் இன்” அட்ரஸை முதல்வேலையாக அவனிடம் கொடுத்து சீன மொழியில் எழுதிக் கொண்டேன். பின்னர் அவன் உதவியுடன், டாலர்களை சீன யுவான் - ஆக (yuan) மாற்றிக்கொண்டேன், ஒரு டாலருக்கு 6 யுவான். பின்னர் அவன் யாரிடமோ போனில் பேசிவிட்டு சொன்னான், “உங்கள் ஹோட்டலுக்கு போக 360 யுவான் ஆகும்”, என்று. அது ஏர்போர்ட்டிலிருந்து தூரமாம். நானும் சரியென்றதும் என்னுடைய பெட்டிகளில் ஒன்றைக் கைப்பற்றிக் கொண்டு விறுவிறு வென்று நடந்தான். அவன் பெட்டியோடு போய்விட்டால் என்ன செய்வது என்று அவனோடு ஓடினேன். ஏர்போர்ட்டிற்கு வெளியே வந்தோம். சரியான குளிர்காற்று முகத்தில் தாக்கியது. ஆஹா இதற்கு நியூயார்க்கே பரவாயில்லையே என்று நினைக்குமளவிற்கு குளிர். அதோடு காற்றில் ஒரு காரமான மணம். சுவாசிக்கும்போது மூக்கு சற்றே எரிந்த மாதிரி இருந்தது.
20 நிமிடங்கள் காத்திருந்தும் டாக்ஸி வராததால், எப்போது வரும் என்று அவனைக் கேட்டேன். இதோ வருகிறது இதோ வருகிறது என்று சொல்லி இன்னும் 10 நிமிடங்கள் ஓடிவிட, நான் குளிரில் கிட்டத்தட்ட விரைத்துவிட்டேன். பற்கள் தாளமிட, தாடைகள் உறைய, மூக்கு வேறு மிகவும் எரிந்தது. அதற்கு மேல் தாங்க முடியாமல், அவனிடம் சொன்னேன், "அடேயப்பா என்னால் தங்க முடியவில்லை, நான் மீண்டும் உள்ளே செல்கிறேன்" என்றேன். “320 கொடுங்கள் போதும்”, என்றான். அப்போதுதான் எனக்குச் சந்தேகம் தட்ட " உண்மையில் இவன் யார் ?", என்று நினைத்துவிட்டு, மடமடவென்று என் பொருட்களைக் கைப்பற்றி இழுத்துக்கொண்டே மீண்டும் உள்ளே நுழைந்தேன்.அங்கே ஒரு சீனப் போலிஸ்காரன் நின்றிருந்தான். நான் அவனை நோக்கிப் போவதைப் பார்த்த அந்த தன்னார்வலன் (volunteer) அப்படியே நழுவினான். அப்போதுதான் தெரிந்தது, அந்த தன்னார்வலன் நன்னார்வலன் அல்ல என்று. நல்லவேளை நஷ்டம் எதுவும் இல்லை என்று தேற்றிக்கொண்டு, அந்த போலிஸ்காரனிடம் சீனமொழியில் எழுதியிருந்த என் ஹோட்டல் அட்ரஸை காட்டி சைகையில் போகவேண்டும் என்று சொன்னேன். அவன் மறுபுறம் உள்ள எஸ்கலேட்டரைக் காட்டினான். அது கீழ்த்தளத்திற்கு அழைத்துச் சென்றது. அங்கே டாக்சி சர்வீசஸ் என்று எழுதியிருந்ததைப் பார்த்து நிம்மதிப் பெருமூச்சுடன், சென்று என் அட்ரஸைக் காட்டினேன். 260 யுவான் என்றார்கள். ஆஹா நல்வேளை கொஞ்ச நேரத்தில் நூறு  யுவானை இழந்திருப்பேன்.ரசீது கொடுத்துவிட்டு, அவர்களே கொண்டுவிட்டு டிரைவரிடம் அட்ரஸைக் காட்டி போகச் சொன்னார்கள்.
டிரைவரிடம் பல முறை பேச முயற்சி செய்தும், அவன் மூச்சுக்கூட  விடாததால் முற்றிலும் கைவிட்டு, மெளனத்தைக் கடைப்பிடித்தேன். 40 நிமிட பயணமும் மெளனமாகவே கழிந்தது. வெளியே பெரும் கட்டிடங்கள் தெரிந்தன. ஆனால் எல்லா இடமும் ஒரு சாம்பற்கலரில் இருந்தது. சந்துக்குள் இருந்த என் ஹோட்டலுக்குள் நுழைந்தேன். நுழைந்ததும் என் கண்ணில் பட்டது, ஏர்போர்ட் டிராப் 160 மட்டும் என்று. அட இங்கேயும்   100 யுவான் ஏமாந்து விட்டேனே என்று நொந்து போனேன் .பிறகு பரவாயில்லை 200 போக இருந்த இடத்தில் நூறுதானே போனது என்றெண்ணி மனதை தேற்றிக்கொண்டேன் .அதற்குள் உள்ளிருந்து ஒரு விடலைப் பெண் என்னை நோக்கி இரு கைகளையும் விரித்து   நீட்டிக்கொண்டு  ஓடிவந்தாள். ஃபீல் இன் என்றால், அய்யய்யோ ஒரு வேளை ஒரு மாதிரியான இடமோ  என்று பயந்து நின்றேன் .

தொடரும்

Thursday, February 25, 2016

குற்றப்பரம்பரை !!!!!!!!!!!!


படித்ததில் பிடித்தது

                            குற்றப்பரம்பரை ,வேல ராமமூர்த்தி

                       வெளியீடு டிஸ்கவரி புக் பேலஸ் சென்னைடிஸ்கவரி புக் பேலஸின் கிளாசிக் நாவல் வரிசையில் வெளியிடப்பட்ட நாவல் இது.வேல ராமமூர்த்தி எழுதி நான் படிக்கும் இரண்டாவது புத்தகம் இது. நான் படித்த முதல் புத்தகம் பட்டத்துயானை. வேல ராமமூர்த்தி சேது பூமியைச் சேர்ந்தவர். எனவே அவருடைய கதைக்களம்  ராமநாதபுரத்தைச் சுற்றியே இருக்கின்றது. பட்டத்துயானை போலவே இதுவும் ஒரு வரலாற்று நாவல் என்று சொல்லலாம் (Period Novel) .
Vela Ramamoorthi
விகடன் ஆசிரியர் குழுமத்தில் பணியாற்றிய வேல ராமமூர்த்தி,  தற்போது பிரான்மலை ,மத யானைக்கூட்டம்  ,ரஜினி முருகன்,சேதுபதி போன்ற பல திரைப்படங்களிலும்  தலைகாட்டிவருகிறார். சாகித்ய அகாடமி பரிசு பெற்ற சு.வெங்கடேசன் அவர்கள் எழுதிய காவல் கோட்டம்   நாவலில், குற்றப் பரம்பரையினர்  பற்றி விரிவாக வரும். கன்னமிட்டுத்திருடுதல் இவர்களுக்கு கை வந்த கலை. அதனைப்பற்றி நான் எழுதிய  பதிவைக் காண இங்கே சுட்டவும். http://paradesiatnewyork.blogspot.com/2014/02/blog-post_19.html
ஆனால்  வீரர்களாகிய இவர்கள் மன்னர் படைகளில் பணியாற்றியவர்கள். தோற்கடிக்கப்பட்டதாலும், வருமானத்துக்கு வழி இல்லாததாலும் இவர்கள் வேறுவழியின்றி கொள்ளையடிப்பில்  ஈடுபட்டு     தம் பிழைப்பை   நடத்தி வந்தனர்.
கொம்பூதி என்ற ஊரில் அப்படி ஒரு குழுவாக செயல்பட்ட இவர்களைப்பற்றி அருமையான முறையில் எழுதப்பட்ட கற்பனை நாவல் இது. அதனைப்பற்றி சில குறிப்புகள்  கீழே.  
1.    கதை நடைபெறும் காலம், பிரிட்டிஷ், இந்தியாவை ஆளும் காலம்.
2.    கதை நடைபெறும் இடம் ராமநாதபுரத்தில் உள்ள கொம்பூதி, பெருநாழி மற்றும் பெரும்பச்சேரி  என்ற ஊர்கள்.
3.    கொம்பூதி ஒரு கள்ளர் கிராமம். வேறு இடத்திலிருந்து வேட்டையாடப்பட்டு, விரட்டப்பட்டு பல பேரை இழந்து, ஓடி வந்த இக்கூட்டம் பெரும்பச்சேரியைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட ஒரு சிறுவன் (வையத்துரை) உதவி செய்ய, முள்ளுக்காட்டுக்கு உள்ளே  உள்ள கொம்பூதி கிராமத்தில் குடியமர்கிறார்கள்.
4.    எனவே இவர்களுக்கும், பெரும்பச்சேரி தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் ஒரு நல்ல உறவு ஏற்படுகிறது.
5.    நாவலின் நடுவில் போகிறபோக்கில் பெருநாழி பெயர் வந்த கதை, காளத்தி  அம்மன் கதை போன்ற கிளைக்கதைகளை சொல்லி கதையை நகர்த்துகிறார்.
6.    கள்ளர்களின் எளிமையான வாழ்க்கை, இங்கு திறமையாக வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. கொள்ளையடித்து வாழ்ந்ததாலும், அது வசதிக்காக இன்றி வயிற்றுப்பசிக்காக மட்டுமே என்பது தெரிகிறது .
7.    அவர்களிடம் நகை அணியும் பழக்கமில்லை, எளிய உணவு உண்டனர். குதிரைவால் ரோமமும், குண்டுமணியும் கொண்ட தாலியை அணிந்தனர்.
8.    ஒரு குழுவாக இயங்கும் இவர்கள், தலைவனுக்கு கட்டுப்பட்டு வாழுபவர்கள்
9.    பெருநாழி கிராமத்தில் விவசாயம் முக்கிய தொழில்.அவர்களுடைய வயலில் கூலிவேலை பார்த்து பிழைப்பவர்கள் பெரும்பச்சேரி தாழ்த்தப்பட்டவர்கள்.
10. பெருநாழி கிராமத்திலும் ஊர் பொதுத் திண்ணைகளில் வெட்டி ஆட்கள், சீட்டு, தாயம், ஆடுபுலி ஆட்டம் ஆடிக்கொண்டும், தூங்கியும் பொழுதுபோக்குவது, இன்னும் கூட  நம் கிராமங்களில் தொடர்வது அவலம் தான்.
11. அன்றைய நிலைவில் இருந்த, தீண்டாமை, சாதி பாகுபாடு சுயநலம், உணர்ச்சி வசப்பட்டு வதந்திகளை நம்புவது ஆகிய சமூக அவலங்கள் இன்னும் தொடர்வது அரசியல்  வியாதிகளால்  தான்.
12. மூலக்கதையின் நடுவே ஒரு fantasy காதல்கதையும் வருவது சிறிது திணிக்கப்பட்டதாக தெரிகிறது.  ஹசார்தினார், நாகமுனி, வஜ்ராயினி , அவளுடைய  மான் ஆகியவை ஒரு fantasy அல்லது  magical realism   என்று அழைக்கப்பட்டாலும், எனக்கு என்னவோ அது மூலக்கதையின் நோக்கத்தை சிதைப்பதாகவே தெரிகிறது.
13. வில்லத்தனம் இல்லாத போலீஸ் அதிகாரி விக்டர்துரை, அதீத சுத்தத்தனம்  உள்ள அவர் மனைவி மேரி, பேராசைக்கார பச்சையப்பன், தலையாரி பொண்டாட்டி வீரசுத்தி, தைரியம் கொண்ட ராக்கு, வேயன்னாவின் அம்மாக் கிழவி கூழானி ஆகியோர் சிறந்த கதாபத்திரங்கள்.
14. சிறு வயதில் பிரிந்துபோகும் மகன் தந்தையைப்பற்றியும் அவர்கள் கூட்டத்தைப்பற்றியும்  அறிந்திருந்தும் ஏன் தொடர்பு கொள்ளவில்லை  என்பது என் கேள்வி.
15. வேயன்னாவும், குழுவும் தம் மகனோடு வந்த போலீஸ் கூட்டத்தை ஏன் எதிர்த்து நின்று, தங்கள் உண்மைநிலையை எடுத்துரைக்கவில்லை என்பது மற்றொரு கேள்வி.
ஆனால் வேல ராமமூர்த்தியின் கதை சொல்லும் முறை, உருவகங்கள் மிகவும் புதிதாக இருக்கின்றன.
கம்யூனிச சிந்தனை கொண்ட இவரின் ஆதங்கங்கள் ஆங்காங்கு  வெளிப்படுகின்றன. அவர் எழுத்து மூலம், கொலை கொள்ளைகள் அடிக்கும் கூட்டம் மற்றும் அதன் தலைவர் வேயன்னா ஆகியோர் மீது முதலிலிருந்தே ஒரு ஈர்ப்பை உண்டாக்கி விடுகிறார்.
மொத்தத்தில் இவர் ஒரு கவனிக்கப்படக் கூடிய எழுத்தாளர். இன்னும் அதிக உயரங்களைத்தொட பரதேசியின் வாழ்த்துக்கள்.Monday, February 22, 2016

பிரபாகர் உயிரோடு இருக்கிறாரா?

சீனாவில் பரதேசி பகுதி 1


இந்தத்தடவை குளிருக்குத் தப்பித்து இந்தியா போகும்போது எந்த வழி போகலாம்  யோசித்தபோது சட்டென சீனாவின் ஞாபகம் வந்தது.
நீண்ட நெடிய நாகரிகம், கலாச்சாரம், ஒரு காலத்தில் உலகத்தின் பாதியை ஆண்ட அரச வம்சங்கள் என மிகப்பெரிய வரலாற்றைக் கொண்டது சீனா. இந்தியாவைப் போல்  ஜனத்தொகையால் ஒரு காலத்தில் கஷ்டப்பட்டாலும், வெகுவிரைவில் முன்னேறி இன்றைக்கு அமெரிக்காவே அஞ்சும் அளவுக்கு மாபெரும் வல்லரசாக உருவெடுத்துள்ளது, ஒரு ஆச்சரிய வரலாறு.
உடனே என் ஏஜென்ட்டிடம் சீனாவின் வழியாகப் போகலாம் என்று முடிவு செய்து பீஜிங்குக்கு டிக்கட் புக் செய்யச்சொன்னேன்.  விசாவுக்கும் அப்ளை செய்து வாங்கிவிட்டு, பீஜிங் பற்றி அறிந்து கொள்ள கூகிள் செய்தேன். இரண்டு மாபெரும் அதிரிச்சிகள் காத்திருந்தன.  ஒன்று பீஜிங்கில் இப்போது கடுங்குளிர், மற்றொன்று காற்று கடுமையாக மாசடைந்து (Pollution) பலபேரை நோயாளியாக்கிவிட்டிருக்கிறது.
கொடுமைன்னு கோயிலுக்குப்போனா, அங்கு ரெண்டு கொடுமை ஆடிக்கிட்டு இருந்துச்சாம். இப்போ என்ன செய்வது என்று ஜானிக்குப்போன் செய்தேன். ஜானி என்றதும் ஜானி நீரோ போல வெள்ளைக்காரன் என்று நினைத்து விடவேண்டாம். அவர் பெயர் ஜானகிராமன், சுத்தத்தமிழன். இங்கு சுருக்கமாக ஜானி என்று அழைக்கிறார்கள். அது போல பல நல்ல தமிழ்ப் பெயர்கள் இங்கே சுருக்கப்பட்டிருக்கின்றன. உதாரணத்திற்கு என் நண்பர்கள் பெயர்கள் கீழே  தருகிறேன்.

1) நீலகண்டன் - Neel
2) சிற்றரசு - Chuck
3)ஷண்முகம் - Shan
4) சாமிக்கண்ணு - Sam
இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். என் பெயர் எப்படி மாறிப்போனது  என்பதைப் பற்றி  நான் ஏற்கனவே எழுதியுள்ளேன் .அதைப் படிக்க  இங்கே சுட்டவும். http://paradesiatnewyork.blogspot.com/2013/05/blog-post_17.html
 சரி அதைவிடுங்க. ஜானிக்குப் போன் செய்து, “என்ன ஜானி இப்ப சைனாவில் குளிர்காலம், சுற்றுலாவுக்கு உகந்த காலம் இல்லையென போட்டிருக்கே”, என்று சொன்னேன். "ஆல்ஃபி உங்களுக்குத் தெரியும்னு நினைச்சேன் தவிற அதனால் தான் உங்களுக்கு டீல் சல்லிசாக கிடைச்சுது”,ன்னார். 

“சரி இப்ப மாத்த முடியாதா? தாய்லாந்துக்குப் போடுங்க”
“ இல்லை ஆல்ஃபி, இப்ப கேன்சல் பண்ணா உங்களுக்கு நிறைய நஷ்டம் ஆயிரும்".
"சரி ஜானி, போய்ப் பார்க்கிறேன் மாத்த வேணாம்"னு சொல்லிட்டு துணிகள் பேக் செய்யும் போது, லெதர் ஜாக்கட், காதடைப்பான், ஸ்கார்ஃப் ஆகியவற்றை மறக்காமல் எடுத்து வைத்தேன். ரூமுக்குள்ளேயே இருக்க வேண்டியது வந்துவிடுமோ என்ற பயம் ஒரு பக்கம் இருந்தது.
எக்ஸ்பீடியா போய், ரூமுக்குத்தேடியதில், Feel Inn என்ற ஒரு சிறிய ஹோட்டலில் ஒரு இரவுக்கு 20 டாலருக்கு இடம் கிடைத்தது. அது பீஜிங் டவுன் டவுனில்( Downtown) இருப்பதோடு, நான் பார்க்க நினைத்த பெரும்பாலான இடங்கள் நடைதூரத்தில் இருந்தன. மற்றபடி நான் தனி ஆள் என்பதால் லக்ஸரி பார்ப்பதில்லை.
கேரல் ரவுண்ட்ஸ், சிறப்பு நிகழ்ச்சிகள், சிறப்பு ஆலய வழிபாடுகள் என்று டிசம்பர் மாதம் முழுவதும் பிஸியாக இருந்துவிட்டு எங்கள் பாஸ்டர் வீட்டில் டிசம்பர் 25 கிறிஸ்துமஸ் சிறப்பு விருந்து (Potluck) இருந்தது.  கிறிஸ்துமஸ் தினம் வழகத்திற்கு மாறாக 70 டிகிரி வரை போய் ஆச்சரியத்தை அளித்தது. அதோடு சீனாவில் எப்படி இருக்குமோ என்ற பயமும் எழுந்தது.
Qatar Airport
 அடுத்த நாளே கத்தார் ஏர்வேய்சில் டோகா அடைந்தேன். இரவு நேரத்தில் உள்ளூர் நேரம் 8 மணிக்கு டோகா போய்ச்சேர்ந்தது விமானம். சீனாவுக்கு கனெக்டிங் விமானம் அதிகாலை 1 மணிக்குத்தான். அது வரை விமானநிலையத்தை சுத்திப்பார்க்கலாம் என்று கிளம்பினேன். டோகா கத்தாரின் தலைநகர். விமானநிலையம் மிகவும் பெரியது. அரபு நாடுகளுக்கே உரிய அதிசயங்களுடன், அந்நாட்டின் செல்வ வளமும் விமான நிலையத்திலேயே தெரிந்தது.
Ferrari in Doha Airport 

பராக்குப் பார்த்துக் கொண்டே நடக்கும் போது அங்கே ஒரு ஃபெராரே ஸ்போர்ட்ஸ் மாடல் கார் ஒன்று கம்பீரமாய் நின்று கொண்டிருந்தது. அதனைப் பார்த்து அசந்துபோய் நின்று கொண்டிருக்கும்போது, ஒரு பெண் என்னை நோக்கி ஓடிவந்தாள். அப்போது ஒரு குழப்பம் வந்தது. அழகிய பெண் என்பதால் அந்த பெண்ணைப் பார்ப்பதா  அல்லது காரைப் பார்ப்பதா என்று. ஆனால் காரின் அழகு பெண்ணின் அழகையும் மிஞ்சியது. அவளுடன் ஆங்கிலத்தில் நடந்த உரையாடலை தமிழில் தருகிறேன்.

"கத்தாருக்கு உங்களை வரவேற்கிறேன்."
"வந்தனம்"
“இந்தக் காரைப் பிடித்திருக்கிறதா?”
“என்ன கேள்வி இது, கண்டிப்பாய்”.
“இது உங்களுக்கு வேண்டுமா?”
“ஆஹா ஃபெராரே கார் கிடைத்தால் யாராவது வேண்டாம் என்று சொல்வார்களா என்ன விலை இருக்கும் ?”.
“$200,000 விலையுள்ள இந்தக் கார் உங்களுக்கு முற்றிலும் இலவசம்”.
“இலவசமா?” (கட்டுப்படுத்த முடியாமல் கத்திவிட்டேன்)
இது என்ன கனவா அல்லது நனவா? ஆயிரத்தோரு அரபு இரவுகளில் முதல் இரவா? 
“ஆம் முற்றிலும் இலவசம் தவிர எங்கள் செலவில் நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் அனுப்பி வைப்போம்”.
“அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் ஒரு டிக்கட் வாங்க வேண்டும். அந்தக் குலுக்கலில் உங்கள் பெயர் விழுந்தால் கார் உங்களுக்கே”.
“டிக்கட் எவ்வளவு?”
“$350 டாலர்கள்”.
“அம்மா ஆளைவிடு, நான் அவ்வளவு பணக்காரனல்ல”, என்று சொல்லிவிட்டு ,புது மாதிரி லாட்டரி போல இருக்கிறது என்று நினைத்துக் கொண்டு நகர்ந்தேன்.

மீதி நேரத்தை என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருக்கும்போது ஒரு நபரைச் சந்தித்தேன். அவர் இலங்கையிலிருந்து ஆஸ்திரேலியாவுக்குச் சென்று கொண்டிருக்கும் மாணவர். பெயர் மான்தன் என்றார்.
ஒருவேளை சிங்களராக இருக்குமோ என்று எண்ணி ஆங்கிலத்திலேயே உரையாடினேன். என் கையில் உள்ள தமிழ்ப் புத்தகத்தைப் பார்த்துவிட்ட மான்தன் "தமிழோ நானும் தமிழ் என்றார்?" தமிழரின் விடுதலைபோராட்டம், படுகொலைகள் ஆகிய பலவற்றைப் பேசிவிட்டு ஆமாம் பிரபாகர் உயிரோடு இருக்கிறாரா? என்று கேட்டேன்.

- தொடரும்.

Friday, February 19, 2016

நேரு இந்திராவுக்கு எழுதிய கடிதங்கள் !!!!!!!!!!!!

படித்ததில் பிடித்தது!
உலக சரித்திரம் ஜவஹர்லால் நேரு - அலைகள் வெளியீட்டகம்
உலக சரித்திரம்(பாகம்1,2) (GLIMPSES OF WORLD HISTORY)

உலக சரித்திரம் மட்டுமல்ல, உள்ளூர் சரித்திரமும் தெரியாத தலைவர்கள்(?) நாட்டை ஆண்டு கொண்டும்ஆளத்துடித்துக் கொண்டும் இருக்கும் போது, நம் இந்தியாவின் சிற்பி (Architect of Modern India) என்று அழைக்கப்படும் முதலாவது பாரதப் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு அவர்கள் எழுதிய இந்தப்புத்தகத்தைப் படிக்கும்போது உள்ளபடியே பெருமையாக இருந்தது.
அவர் மீது பல விமர்சனங்கள் இருந்தாலும், வல்லபாய் படேல், அம்பேத்கார் போன்ற உரிய தகுதியான நபர்களை அமைச்சரவையில் சேர்த்து  தற்போதைய இந்தியாவை உருவாக்குவதில் பெரும் பணியாற்றியவர் நேரு என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமில்லை.
Nehru with Gandhi
செல்வச் சீமானாகப் பிறந்தும், விடுதலைப் போராட்டத்தில் குதித்து பல வருடங்கள் சிறையில் கழிக்க நேரிட்டாலும் அவர் நமது நாட்டைப்பற்றிக் கண்ட கனவுகள் இந்தப் புத்தகத்தில் வெளிப்படுகின்றன. குறிப்பாக சோஷலிசம் ஜனநாயகம் ஆகியவற்றில் அவர் கொண்ட உறுதியான நம்பிக்கை, வெளிநாட்டு உறவில் அணி சேராக் கொள்கை,மதசார்பற்ற தன்மை என்பவை போன்ற அவர் காலத்தில் அமைக்கப்பட்ட கொள்கைத் தூண்கள் தாம், நம் நாட்டை இன்றுவரை காத்து வருகின்றன என்று சொல்லலாம். அதோடு மகாத்மா காந்தி பெரும் நம்பிக்கை வைத்துக் கொண்டு வந்ததும் இவரே. இறுதிவரை காந்தியின் கொள்கைகளைக் கடைப்பிடித்த உத்தம சீடன் என்றும் இவரைச் சொல்லலாம். உதாரணத்திற்கு ஒரே சமயத்தில் சுதந்திரம் பெற்ற பாகிஸ்தானோடு நம் நாட்டை ஒப்பிட்டுப்பாருங்கள். அப்போது புரியும் நம்முடைய அடித்தளம் முற்றிலும்  வேறு என்று .
பல நூற்றாண்டுகளாக அடிமைப்பட்டு இருந்த நாட்டை மீட்டு தனித்துவ நாடாக மாற்றுவது என்பது சாதாரண காரியம் இல்லை.
Nehru with Indira
நைனி சிறையில் இருக்கும்போது (1931-1934 வரை) தன்னுடைய ஒரே மகளான இந்திரா காந்திக்கு அவர் எழுதிய கடிதங்களின் தொகுப்புதான் இந்தப்புத்தகம். ஒவ்வொன்றும் 700, 750 பக்கங்கள் கொண்ட இருபெரும் தொகுப்புகள் இவை..
இதற்கு இணையான நூல் உலகத்தில் இதுவரை வரவில்லை என்று சொல்கிறார்கள்.
சிறைக்குள் இருந்து கொண்டு இவ்வளவு விவரங்களை  ஞாபகத்தில் வைத்து எப்படி எழுத முடிந்தது என்று நினைத்தால் ஆச்சரியமாக இருக்கிறது.
இந்திய, ஆசிய, அமெரிக்க ஐரோப்பிய வரலாறுகளை துல்லியமாக புட்டுப்புட்டு வைப்பதோடு அதன் சமூக, பொருளாதார சிக்கல்கள், வளர்ச்சி, கிளர்ச்சி, எழுச்சி ஆகியவற்றையும், அவர் வாழும் காலத்தில் உலக நிலைமை எப்படியெல்லாம் இருந்தது என்பதைப் பற்றியும் விருப்பு வெறுப்பின்றி எழுதியிருக்கிறார்.
நேரு பல வருடங்களை நைனி மத்திய சிறை, S.S. கிரிகோரியா கப்பல், பரில்லி மாவட்டை சிறை, டேராடூன் மாவட்டச் சிறை ஆகியவற்றில் கழித்திருக்கிறார். சில நேரத்தில் ஒரே சமயத்தில் தந்தை, (மோதிலால் நேரு) தனயன், மனைவி மூவரும் சிறைப்பட்டிருக்கின்றனர். பார்வையாளர்கள் நேரத்தில் யாரும் வராததைக்குறித்தும், கடிதங்கள் வராததைக் குறித்தும் ஏங்கியிருக்கிறார்.
நான் படித்த புத்தகங்களிலேயே வரலாற்றுச் செறிவு மிகுந்தது இது. உலக வரலாறை முற்றிலுமாக அறிந்து கொள்ள இப்புத்தகத்தின் மூலம் எனக்குக் கிடைத்தது சிறப்பான வாய்ப்பு.
அதே சமயத்தில் இதன் மொழிபெயர்ப்பைப் பற்றியும் சொல்ல வேண்டும். OV அளகேசன் அவர்கள் 1947ல் மொழிபெயர்த்திருக்கிறார். மூல நூலின் பொருளடக்கம் சிதையாமல் தன்னுடைய சொந்த முத்திரைகளையும், தமிழ் இலக்கியத்திலிருந்து கையாண்டு பதித்திருக்கிறார். இவரும் சாதாரண ஆளல்ல, மத்திய அரசாங்கத்தில் அமைச்சராய் இருந்தவர்.  
இப்பொழுது வழக்கம்போல் புத்தகத்தின் சாராம்சத்தை புல்லட் பாயிண்ட்டுகளில் தருகிறேன்.
.
பாகம்-1
1.    திராவிட நாகரிகம்தான், உலகின் மூத்த நாகரிகம் என்பதைத் தெளிவாக குறிப்பிடுகிறார்.
2.    கிரேக்க நாகரிகங்கள், மித்தாலஜி, ஹோமர், இலியட், ஒடிசி, ஹெலன் ஆஃப் டிராய் போன்ற பல காரியங்களை அலசுகிறார்.
3.    ஒரு மொழியை அதனைப் பேசும் மக்களிடமிருந்து ஒழிக்க முயல்வது விரும்பத்தக்கதல்ல என்றும் சொந்த மொழியின் மூலம்தான் மக்கள் வளர்ச்சியடைய முடியும் என்றும் அதில்தான் கல்வி கற்கப்பட வேண்டும் போன்ற உன்னத கருத்துகளை வெளிப்படுத்துகிறார்.
4.    ஆரியர்கள் தங்களைத்தவிர மற்றவர்கள் இழிந்தவர்கள் என்று கருதி இறுமாப்பும் வீண்பெருமையும் கொண்டதோடு மற்றவர்களோடு கலப்பதையும்  விரும்பவில்லை என்று சாடுகிறார்.
5.    உழைப்பின் பயனை உழைப்பவர்கள் பெறமுடியாவிட்டால் சுதந்திரத்தால் என்ன பயன் என்று கேட்கிறார்.
6.    மன்னர்களையும் பேரரசர்களையும் பற்றிச் சொல்வது மட்டும் சரித்திரமல்ல, தங்களுடைய செயலினால் பிறரைப் பாதித்தும் பிறருடைய செயல்களினால் தாம் பாதிக்கப்பட்டும் இருக்கிற சாதாரண மக்களின் வாழ்க்கையைக் குறிப்பதுதான் உண்மையான வரலாறு என்கிறார்.
7.    இந்தியா  ஆதிகாலத்திலிருந்து, ஆரியர், பார்சி, யூதர் முஸ்லிம் இன மக்களை எப்பொழுதும் வரவேற்று இடம் கொடுத்தது. மதத்துவேஷம் என்பது ஆதி இந்தியர்களுக்கு அறவே இல்லை. அடைக்கலம் தேடியும், வியாபார நோக்கிலும் வந்தவர்கள் ஆதரிக்கப்பட்டனர்.  படையெடுத்து வந்தவர்களை  மட்டும்தான் இந்தியர் எதிர்த்தனர். ஆனால் குறுக்குவழியில் வியாபார நோக்கில் வந்த ஆங்கிலேயர் நம் நாட்டைப் பிடித்துக் கொண்டது அநியாயத்திலும் அநியாயம்.
8.    மலாய், கம்போடியா, ஜாவா, சுமத்ரா, போர்னியா, பர்மா, தாய்லாந்து போன்ற கிழக்குத்தீவுகளில், இந்தியக் குடியேற்றங்கள் அமைந்தது, பல்லவர் கால தென்னிந்தியாவில் இருந்துதான்.
9.    இந்தோ சீனாவிலிருந்து குடியேற்றத்திற்கு காம்போஜம் என்று பெயர். இது காபூல் பள்ளத்தாக்கிலுள்ள ஒரு ஊரின் பெயர். இது தான் கம்போடியா என்று இப்போது அழைக்கப்படுகிறது.  
10. பக்தி இயக்கம் வளர்ந்த பின்னர்தான் போலிச் சாமியார்கள் அதிகரித்தனர்.


பாகம் -2
1.    பாரசீகம், ஈரான் பஹல்வி டைனாஸ்டி ஆகியவற்றை தெளிவாக விளக்குகிறார்..
2.    ஜெர்மன் கவிஞர்கள், கதே, ஷில்லர், ஹென்ரிக் ஹைன், தத்துவ சாஸ்திரிகள், இம்மானுவேல் கான்ட், ஹெகல், கார்ல் மார்க்ஸ், ஃபிரெஞ்சுக் கவிஞர்கள் விக்டர் ஹ்யூகோ, ஹொனரா பால்ஜக், இங்கிலாந்தின் கவிஞர்கள், கீட்ஸ், ஷெல்லி, பைரன் , வேர்ட்ஸ்வொர்த், கோல்ரிஜ் ஆகியோரைப்பற்றி அளாவளாவுகிறர்.
3.    முதலாம் உலகப்போருக்குப்பின் ரஷ்யாவில் ஜார் மன்னனின் வீழ்ச்சி, சோவியத்தின் பிறப்பு, லெனினின் ஆதிக்கம் ஆகியவற்றை தெளிவாகக் குறிப்பிடுகிறார்.
4.    பிரிட்டிஷ் காலத்தில், இந்தியாவின் கல்விச் செலவு தலைக்கு 9 பென்ஸ் ஆனால் பிரிட்டனில் 2பவுன் 15 ஷில்லிங் அதாவது 73 மடங்கு அதிகம்.
5.    தாதாபாய் நெளரோஜி அவர்களின் கணக்குப்படி, 1870-ல் ஒரு சராசரி இந்தியனின் ஆண்டு வருமானம் 20 ரூபாய், 1933ல் அது 67 ரூபாயிற்று அது 116 ரூபாய் அளவுக்குப் போனது. ஆனால் அப்போது பிரிட்டனில் அது 1000 ரூபாயாகவும், அமெரிக்காவில் 1925 ரூபாய் ஆகவும் இருந்தது.
6.    1927 டிசம்பரில் சென்னையில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில்தான்  தான் முதன் முதலில் முழுச் சுதந்திரம் கோரப்பட்டது.
சில ஆச்சரியமான தொலை நோக்குப்பார்வை :தீர்க்கதரிசனங்கள் (1933ல் சொன்னவை)
1.    அமெரிக்காவும் ரஷ்யாவும் உலக விவகாரங்களில் பெரும் பங்கு வகிக்கும்.
2.    முதலாளித்துவம் உண்மையான ஜனநாயகம் அல்ல.
3.    அமெரிக்கா (1933) தற்போது கஷ்டப்பட்டாலும், விரைவில் மீண்டு வரும்.
4.    பங்குச் சந்தையில் லண்டன் ஆதிக்கம் முடிந்து நியூயார்க் ஆதிக்கம் பெறும்.
5.    விரைவில் இன்னொரு மகாயுத்தம் வரலாம்.
6.    ஜப்பானின் சாம்ராஜ்ய ஆசைக்கு எதிரி அமெரிக்காதான்.
7.    இங்கிலாந்தின், குடியேற்ற நாடுகளின் மேலுள்ள ஆதிக்கம் குறைந்து வருகிறது.
8.    இங்கிலாந்து  கீழுக்குப் போக போக அமெரிக்கா மேலுக்கு வருவது தவிர்க்க முடியாது.
9.    எலியும் பூனையுமாய் இருந்த பிரான்சும் ரஷ்யாவும் ஹிட்லர் இருப்பதால் நகமும் சதையுமாய் மாறிவிடும்.
10. ஜெர்மனியில் நாஜிகளின் அடக்குமுறை ரொம்ப நாள் தங்காது.
11. இனிமேல் ஆயுதப்புரட்சி சாத்தியமில்லை. சமூக அரசியல் புரட்சி மட்டுமே சாத்தியம்.
12. அமெரிக்கா இதுவரை ஐரோப்பிய விவகாரங்களில் தலையிடவில்லை. தலையிட்டால் அதன் வலிமையை அனைவரும் அறிந்து கொள்வார்கள்.
உலக வரலாற்றில் ஆர்வமும் இந்திய வரலாற்றில் அக்கரையும் கொண்ட யாவரும் அவசியம் படிக்க வேண்டிய நூல் இது.

முற்றும்