Monday, July 29, 2013

ராக்கஃபெல்லர் மாளிகை Part 1 :பணக்காரர் வீட்டில் பரதேசி !!!!!!!!!!ஒரு மிகப்பெரிய தொழிலதிபரும் அவர் மகனும் ஒரு வியாபார கருத்தரங்கத்திற்கு, வந்திருக்கும்போது, அப்பா ஒரு சிறிய ஹோட்டலிலும், மகன் இருப்பதிலேயே பெரிய ஹோட்டலில் இருந்த லக்சரி சூட்டிலும் தங்கியிருந்தாராம். பத்திரிக்கைக்காரர்கள் அப்பாவிடம் இதனைப்பற்றி வினவிய போது, " என்னுடைய அப்பா அவ்வளவு வசதியானவர் இல்லை. ஆனால் அவனுடைய அப்பா பணக்காரர் அல்லவா?" என்று சொன்னாராம்.
அவர்தான்,இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற தொழிலதிபரும், கொடைவள்ளலும் உலகின் முதல் பணக்காரருமான ஜான் டி ராக்கஃபெல்லர். ராக்கஃபெல்லர் நிறுவனம் இன்றும் மிகப்பெரிய நிறுவனம் ஆகும். சப்வேயில் செல்லும் போது வரும் 47-50 தெரு ஸ்டாப்பின் பெயர் ராக்கஃபெல்லர் சென்ட்டர். இறங்கிப்பார்த்தால், விண்ணைத்தொடும் அந்தக்கட்டிடம் ஒன்று போதுமே அவர்கள் குழுமம் எவ்வளவு பெரியதென்று அறிய.

அவர் எவ்வாறு வாழ்ந்திருப்பார் என்று 
அறிந்து கொள்ள எனக்கு ஒரு ஆசை பிறந்தது. கூகுளில் தேடியபோது, upstate ல் உள்ள ஹட்சன் வேலியில் அவரது வீடு, இன்று ஒரு பிரைவேட் மியூசியம் ஆக, 'ஓபன் டு  பப்ளிக்' என்று அறிந்ததும் என் மனம் துள்ளிக்குதித்தது.
'மெமோரியல் டே' விடுமுறையும் வர (May 27,2013) எங்கேயாவது போகவேண்டுமென ஆசைப்பட்ட முழுக்குடும்பத்தையும் கன்வின்ஸ் செய்து, இரண்டு காரில் கிளம்பினோம். அதிகத்தூரமில்லை, காலையில் 9 மணிக்கு கிளம்பி பத்து மணிக்கெல்லாம் 'ஹட்சன் வேலி' டூரிஸ்ட் இன்ஃபர்மேஷன் சென்டருக்கு சென்றுவிட்டோம். எங்கள் வீட்டிலிருந்து, "வேன்விக் எக்ஸ்பிரஸ் வே" எடுத்து "ஒயிட்ஸ்டோன் பிரிட்ஜை" தாண்டி ஹட்ச்சின்சன் பார்க்வே எடுத்தால், அழகான ஹட்சன் வேலி வருகிறது. அதில் உள்ள "ஸ்லீப்பி ஹாலோ" என்ற கிராமத்திற்கு ஒரு ஹலோ சொல்லி, ஒரு ஆழமான இறக்கத்தில் இறங்கித்திரும்ப, "இன்ஃபர்மேஷன் சென்டர்" வந்தது. ஆன்லைனில் 10.45 டூருக்கு புக் செய்திருந்ததை உறுதி செய்துகொண்டு ரிலாக்ஸ் ஆனோம்.
அந்த சென்டருக்கு அருகில் வாத்துகளும்,நீர்க்கோழிகளும் நீந்தியும் மேய்ந்தும் ஆட்சி செலுத்திய ஒரு அழகிய குளம் இருந்தது. அதன் மேட்டுக்கரையில் பல பிக்னிக் மேஜைகள் இருந்தன. "உட்கார்ந்து சாப்பிடுவதற்கு சரியான "இடம்" என்றாள் என் மனைவி. அவள் கவலை அவளுக்கு.

தமிழ்ப்பாரம்பரியத்தை பாதுகாக்கும் பொருட்டு, அவள் அதிகாலையில் எழுந்து கணவரின் கால்களைத் தொட்டு வணங்கிவிட்டு- (ச்ச்சும்மா ஒரு கற்பனை) தக்காளி சாதம், தயிர் சாதம், உருளைக்கிழங்கு மசியல் மற்றும் பீஃப் சுக்கா வருவல் ஆகியவற்றைச் செய்து ஹாட் பேக்கில் அடைத்துக் கொண்டு வந்திருந்தாள்.நல்லவேளை இதையெல்லாம் பார்த்து வருத்தப்பட ராக்கஃபெல்லர் உயிரோடு இல்லை,.

அந்த "இன்பர்மேஷன் சென்டர்" தான் பக்கத்திலுள்ள பல சுற்றுலாத்தலங்களுக்கு டிக்கட் வாங்கும் ஒரே மையம். பிலிப்ஸ்பர்க் மேனர், டச் சர்ச், மாண்ட்கோமரி, யூனியன் சர்ச், லிண்ட் ஹர்ஸ்ட்  என்று பல சுற்றுலா இடங்கள் அங்கு இருந்தன. மூன்று நான்கு நாட்கள் தங்கினால், எல்லாவற்றையும் கவர் செய்யலாம். ஆனால் நாங்கள்தான் சுற்றுலா வரவில்லையே, இது வெறும் சிற்றுலாதானே.
ராக்கஃபெல்லர்  எஸ்டேட் டூருக்கு பெயர் "கைகட்" (Kyekuit). இது முற்றிலும் ஒரு கைடட் டூர். எஸ்டேட்டுக்கு வேறு தனியார் வாகனங்கள் வர அனுமதியில்லையாததால், இந்த சென்டரிலிருந்து எங்களை அழைத்துப்போக ஒரு மினிபஸ் வந்தது. அதோடு ஒரு கைடும் இருந்தார். நாங்கள் புக் பண்ணியது "கிளாஸிக் டூர்". இதுபோல ராக்கஃபெல்லர் எஸ்டேட்டுக்கு பலவித டூர்கள் இருக்கின்றன. ஒரு குறிப்பிட்ட நேரத்தில் புக் செய்யப்பட்ட பல சிறு குழுக்களை சரியான நேரத்தில் அழைத்துச் சென்று, நேர்த்தியாக நடத்துகிறார்கள்.

பி.ஏ சிஸ்டத்தில் அறிவிப்பு வர, யாரும் சொல்லாமலேயே எல்லோரும் லைனில் நிற்க, டிக்கட் ஸ்டிக்கரை சட்டையில் ஒட்டியவர்களை சரிபார்த்து, அனுப்பினார் சுதேசி ரான். (உள்ளூர்க்காரர் என்பதால்)
அறிமுகப்படலம் முடித்து ராக்கஃபெல்லர் குடும்பத்தைப் பற்றி வரலாற்றுப்பாடம் எடுத்தார். “ஸ் அப்பாடா, இப்பவே கண்ணக்கட்டுதே”, என்றாள் மனைவி. பஸ் மலையில் ஏறத் துவங்கியது."உலகம் முழுவதும் சொத்துக்கள் இருக்கும் ராக்கஃபெல்லரின் எஸ்டேட்களில் ஹட்சன் வேலியில் உள்ளதுதான் பெரியது" என்றார் ரான். சுமார்  4000 ஏக்கராம். அம்மாடியோவ் என்று பெருமூச்சுவிட, "ஆனால் வீடு இருக்கும் பகுதி சிறியது தான்" என்று நிறுத்தி வெறும் 300 ஏக்கர்" என்றார். என்னது 300 ஏக்கர் சிறியதா, ஒரு ஆளுக்கு இது கொஞ்சம் ஓவர் என்று நினைத்தேன்.
சுற்றிலும் கோட்டைச்சுவர் போலிருக்க, ஒரு பெரிய அலங்கார இரும்பு நுழைவாயிலின் வழியாக பஸ் உள்ளே நுழைந்தது. எங்கு பார்த்தாலும், மரங்களும், புல்வெளிகளும், நீரூற்றுகளும் சூழ்நிலையை ரம்மியமாக்கின. சரேலென்ற ஒரு ஏற்றத்தில் பஸ் ஏறி நிற்க, கம்பீரமான வீடு தெரிந்தது. வீடா இது. மாபெரும் மாளிகை, ஏன்  அரண்மனை என்றும் சொல்லலாம். எப்படித்தான் பராமரிக்கிறார்களோ?
அவ்வளவு பெரிய வீட்டுக்கு, படிகள் நேராக, இல்லாமல் பக்கவாட்டில் இருந்தன. ஏனென்றால் கோச் வண்டிகள் வந்து நிற்க தோதாகவும், வீட்டிலிருந்து வருபவர்கள், வண்டிக்குள் நேராக நுழையும் வண்ணமாகவும் வாயில் அமைந்திருந்தது.ஏற்கனவே சொன்னதுபோல ராக்கஃபெல்லர் எளிமையான வாழ்வு வாழவே விரும்பினார். ஆனால் அவர் மகன் ராக்கஃபெல்லர் ஜூனியர்தான் மிகுந்த ஆடம்பரமாக வாழ்ந்திருக்கிறார்.


என்ன மக்கா , உள்ளே  போலாமா ?


Thursday, July 25, 2013

கவிஞர் வாலி :மெய்யென்று மேனியை யார் சொன்னது ?

     

தமிழக திரைப்பட இசைக்குடும்பத்திற்கு 
இப்போது கெட்ட காலம். மெல்லிசை மன்னர் ராமமூர்த்தி, மலேசியா வாசுதேவன், PB ஸ்ரீனிவாஸ், டி.எம்.செளந்தர்ராஜன் பின் இப்போது வாலி.

தமிழக திரைப்பட இசையில், இப்பொழுது 
நான்காவது சகாப்தம் அல்லது தலைமுறை நடந்து கொண்டிருக்கிறது என்று சொல்லலாம்.

முதல் தலைமுறை: சுப்பையா நாயுடு, கே.வி.மகாதேவன் போன்றோர்.
இரண்டாம் தலைமுறை: MS. விஸ்வநாதன், சங்கர் கணேஷ்
மூன்றாம் தலைமுறை : இளையராஜா, இளையராஜா மற்றும் இளையராஜா
நான்காம் தலைமுறை : AR. ரகுமான், ஹாரிஸ் ஜெயராஜ், யுவன்சங்கர் ராஜா.

இப்போது ஐந்தாம் தலைமுறை எட்டிப்பார்க்கும்போது, இரண்டாம் தலைமுறை துவங்கி, ஐந்தாம் தலைமுறை வரை இடைவிடாது பாடல் எழுதிய கவிஞர் வாலி மறைந்துவிட்டார். 

கடந்த காலத்தில் ஆரம்பித்து, நிகழ்காலம் வரை நீண்டு, இறுதி மூச்சு வரை எழுதிக்கொண்டிருந்த வாலி இப்போது இறந்த காலம்.
பாட்டுலகை கண்ணதாசன், முடிசூடா மன்னராக ஆளும்போது, உள்ளே நுழைந்து, கண்ணதாசனுக்கும், எம்ஜியாருக்கும் இருந்த மனஸ்தாபத்தினால், எம்ஜியாருக்கு எழுத ஆரம்பித்து, தமக்கென தனியிடம் பிடித்து, அந்த இடத்தை நேற்றுவரை தக்க வைப்பதென்பது ஒரு தனிப்பெரும் சாதனை என்பதில் சந்தேகமில்லை.

மேலே குறிப்பிட்ட 2ஆம், 3ஆம்  தலைமுறை இசையமைப்பாளர்கள் உயிரோடு இருந்தும், கடந்தகாலமாகிப்போன சமயத்தில், நிகழ்காலத்திலும் பிஸியாக இருந்த  ஒரே மூத்த கவிஞர் ,வாலி.
அதற்கு காரணங்கள் என நான் நினைப்பது :
1) வாலியிடம் சென்றால் ஒரு நல்ல பாட்டு உடனே கிடைக்கும் என்ற நம்பிக்கை.


2) நிகழ்காலத்தின் தேவைக்கென தம் எழுத்தை நவீனமாக்கிக் கொண்டதுடன், தயாரிப்பாளருக்கும், இயக்குநருக்கும் என்ன தேவையென்றாலும் தருவேன் என்ற  சர்வைவல் டெக்னிக்.

3) எல்லோரிடமும் முடிந்த அளவுக்கு ஒத்துப்போகும் குணம்.
4) வாலி எழுதினால் அந்தப்படம் நிச்சயம் வெற்றியடையும் என்ற திரைப்பட உலகின் சென்டிமென்ட்.
அவருடைய தனித்திறமைகள்:
1) கர்நாடக இசையை நன்கு அறிந்தவர் என்பதால், இவர் வரிகள் சந்தத்திற்கு பந்தமாகும்.
2) பல தலைமுறை பார்த்ததால் எழுத்தில் வந்த சரளத்தன்மை.
3) 15,000 பாடல்கள் எழுதிய ஒரே கவிஞர்.
4) எழுத்து, வசனம், நடிப்பு என்று சில முயற்சிகள் இருந்தாலும் பாட்டை  அவர் விடவில்லை. பாட்டும் அவரை விடவில்லை.
5) அபாரமான ஞாபக சக்தி.
6) என்றும் நன்றி மறவாத தன்மையும், பிறர் திறமைகளுக்கு மதிப்புக்கொடுக்கும் மனமும்.
7) எப்போதும் எதிலும் வெளிப்படையாக இருந்தது.
8) அண்ணா, கருணாநிதி, எம்ஜியார் என்று நெருங்கிய தொடர்பு இருந்தும் எப்போதும் தொட்டும் தொடாமலும் அரசியலுக்கு அப்பாற்பட்டே இருந்தது.
9) சக கவிஞர்களால் கடைசி வரை மதிக்கப்பட்டது. 


எனக்கு மிகவும் பிடித்த அவரின் பாடல்கள்:
          1) இதோ எந்தன் தெய்வம்
          2) மாலையில் யாரோ மனதோடு பேச
3) தொட்டால் பூ மலரும்
4) கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்
5) ராசி நல்ல ராசி.
6) எதற்கும் ஒரு காலம் உண்டு
7) காத்திருந்து காத்திருந்து -
8) கல்யாண மாலை
9) புதிய பூவிது பூத்தது.
10) ஆகாய வெண்ணிலாவே

எனக்குப் புரியாதவை:
1) இடத்தைத்தக்க வைக்கவோ, நிலைத்திருக்கவோ, தொடர்ந்து பணம் சம்பாதிக்கும் நிர்ப்பந்தத்திலோ, அவரின் தரத்திற்கு சில சமயங்களில் இறங்கி வந்தது.
2) வாலியா எழுதினார் என்று அதிர்ச்சியூட்டும் சில பாடல்களை எழுதியது.
3) கண்ணதாசனுக்கு அடுத்தபடியாக வரலாறு போற்றும் பெருங்கவிஞராக போற்றப்படும் வாய்ப்பை தவறவிட்டது.
எது எப்படியாயினும் தமிழக வெள்ளித்திரை சரித்திரத்தில்  வாலி நீங்கா இடம்பிடித்த ஒரு சகாப்தம் என்பதில் சந்தேகமில்லை.


கருவோடு வந்தது, தெருவோடு போனது. 

மெய்யென்று மேனியை யார் சொன்னது ?

Monday, July 22, 2013

நியூயார்க்கில் பிச்சைக்காரர்கள் Part 4 : கொலையாளி ஆன மலையாளி


        என்ன அழகுராணிகளா? பிச்சை எடுக்கிறார்களா? என்று கேட்டால் எனக்கும் அதாங்க பாஸ் ஆச்சரியம். சிலபேர் நம்மூர் அரிதாரம் பூசிய சினிமா அழகிகளை மிஞ்சிவிடுவார்கள். பெரும்பாலும் விடலைப்பெண்கள், சப்வேயின் உள்ளே உள்ள வராந்தாக்களிலும், படிக்கட்டுகளின் ஓரத்திலும் இவர்களைப் பார்க்கலாம். சிலசமயம் குழந்தைகளை கையில் வைத்திருப்பார்கள் (யார் பெத்த குழந்தையோ, பாவம்). ஒரு சமயம் படிக்கட்டு இறங்கும் இடத்தில், பால் கொடுக்கும் ஒரு அழகிய பெண்ணைப் பார்த்தேன். இரண்டாம் தடவை அதே பெண்ணைக் குழந்தையுடன், அதே போசில் பார்க்கும்போது, அதே குழந்தையா? இல்லை வேறு குழந்தையா? என்று சந்தேகித்து உற்றுப் பார்க்கும்போது, நான் வேறு எதையோ பார்க்கிறேன் என்று தப்பாக நினைத்துவிட்டு, நன்றாக மூடி, என்னை ஒரு முறை முறைத்தாள். ஐயையோ விடும்மா தாயி என்று சடுதியாக நகர்ந்து மறைந்தேன். இவர்களுக்கு ஆங்கிலம் தெரியாதா  அல்லது நடிக்கிறார்களா என்று தெரியவில்லை. இவர்களுக்கு வேலை கிடைக்கவில்லை என்பதை ஒத்துக்கொள்ள மாட்டேன் .தம்மை தகுதிப்படுத்திக்கொள்ளவில்லை அல்லது இதிலேய நல்ல வசூல் கிடைக்கிறது என்றுதான்  நினைக்கக் தோன்றுகிறது. யோசித்துப்பார்த்தேன். நம்மூரில் மட்டும் இவர்களை ரோட்டில் பார்த்தால் என்ன நடக்கும் என்பதை நினைத்தால், சரி சரி நினைக்கவில்லை விடுங்கள்.

இசைக்கலைஞர்கள்:


     இவர்கள் தனியாகவோ அல்லது குழுவாகவோ செயல்படுவார்கள். தனிமையாக வந்து சிலர் பாடுவது சகிக்காது. காசு கொடுத்து அவர்களை விரைவாக நகர்த்த வேண்டிவரும். சில இன்ஸ்ட்ருமென்ட் வாசிப்பவர்களின் திறமை ஆச்சரியமூட்டும். குறிப்பாக ஹாலோ கிடாரில் ஒரு வெள்ளைக்காரன் விரல்களால் பிளக்கிங்  பண்ணுவது மிக அருமையாக இருக்கும். ஒரு கொரிய சிறுவன், கேசியோ கீபோர்டில் அநாயசமாக வாசிப்பான். ஒரு ஆப்பிரிக்க இன இளைஞன் டிரம்சில் தனி ஆவர்த்தனம் வாசிப்பான்.
  இன்னொரு ஆப்பிரிக்க முதியவர் சைலபோன் போன்ற எவர்சில்வர் பாத்திரத்தில்  கினிகினி நாதமூட்டி பாடல் இசைப்பார். சில ஆசியப் பெண்கள் பெயர் தெரியாத வாத்தியங்களை இசைப்பார்கள்.
      ஒரு இத்தாலிய முதியவர், கையில் கிடார், வாயில் மௌத் ஆர்கன், காலில் டேம்பரின் ஆகியவையுடன் ஒரு இசை ஃப்யூசன் நடத்திக்காண்பிப்பார். ஒரு வயலின் வாசிப்பவரும் இதையே செய்வார். இந்தியரைப்பார்த்தால் ஜனகனமன வாசிப்பார்.

       ஒரு ஆப்பிரிக்க பாடகர் குழு சப்வேயில், 
ஒவ்வொரு கேரேஜாக சென்று பாடும். சிறப்பு என்னவென்றால் முழுவதுமாக "அக்கபில்லா" என்று சொல்லப்படுகிற இசையின்றி பலவித பார்ட்ஸில் பாடுவது. அதன் செழுமை பல தேர்ச்சிபெற்ற கொயர்களை விட நன்றாகவே இருக்கும். ஒரு மெக்சிகோ 'மரியாச்சி' குழு பல கிடார்களுடன் வந்து அசத்தும்.இவர்கள் எல்லாருமே அனுமதிபெற்றவர்களல்ல. பணம் பெறுவதே குறிக்கோள்.

    சப்வே ஸ்டேசன் உள்ளே ஆனால் ரயிலைவிட்டு வெளியே வாசிக்கும் குழுக்கள் அனுமதிபெற வேண்டும். அதாவது வாசிப்பவர்களின்  குழுவின் பெயர் மற்றும் லைசென்ஸ் நம்பர் போட்ட பேனர் அவர்களது பின்னனியில் கட்டப்படும். ஒரு தேர்ந்த குழுவைப்போல், கிடார், டிரம்ஸ், கீபோர்டு போன்ற சகல வாத்தியங்களையும் வைத்து வாசிப்பார்கள். இந்தக்குழுக்கள் தாங்கள் வெளியிட்ட CD களையும் விற்பார்கள். அவர்களை வெளியே ஏதாவது நிகழ்ச்சிக்கு அழைத்தாலும் வருவார்கள்.இதிலே பலநாட்டைச் சேர்ந்த இசைக்கலைஞர்கள் வித விதமான கருவிகளை பயன்படுத்துவார்கள். குறிப்பாக சிவப்பிந்திய குழுக்களின் இசை மிகநேர்த்தியாக, அரிதாக இருக்கும். நம்ம மதுரைக்கார அண்ணாச்சி கராத்தே புகழ் "ஷிஹான் ஹுசைனி " இங்கு வரும் போது, இப்படித்தான் காசு சேர்த்ததாக  எழுதியிருந்தார் .

         ஆப்பிரிக்கஇளைஞர்குழு,பாத்திரங்கள்,
டிரம்கள், பிளாஸ்டிக் வாளிகளை வைத்து இசையெழுப்பி அதகளம் பண்ணுவர். இவர்களெல்லாம் பிச்சைக்காரர்களா என்று கேட்டால் ஆம் என்றும் இல்லை என்றும் சொல்வேன்.
      வெறும் விளம்பரத்திற்காக மட்டும் வாசிப்பவர்களாகத்தெரியவில்லை, பார்த்து ரசிக்கும் மக்கள், மனமுவந்து டாலர் நோட்டையோ இல்லை சில்லறைகளையோ கொடுத்தாலும் நன்றி சொல்லி ஏற்றுக்கொள்வார்கள். பெரும்பாலான குழுக்களின் முன்னே பெட்டிகள் வைக்கப்பட்டு "டொனெஷன் அக்சப்டெட்" என்று எழுதியிருக்கும்.      எனவே இந்தப்பிச்சைக்காரர்களின் உலகம் தனி உலகம். அவர்களது வருமானம் எவ்வளவென்று கணக்கிட்டு சொல்ல முடியாது.
     இது தவிர பார்க்க நன்றாக இருக்கக்கூடிய சில வெள்ளைக்கார இளைஞர்களும் தெருவில் உட்கார்ந்து பிச்சையெடுப்பார்கள்.

 மிக ஆரோக்யமாகத்தெரியும் இவர்கள் வேலைக்குச் செல்லக் கூடாதா? என்றும் ஒரு வேளை டிரக் அடிக்டாக இருப்பார்களோ என்றும் தோன்றும். பார்த்தால் அப்படியும் தெரியவில்லை.

     சமீபத்தில் ஒரு தெருவில் உட்கார்ந்து பிச்சையெடுத்துக் கொண்டிருந்த இளைஞன், ஒருவன் ஒரு சிறிய போர்டு வைத்திருந்தான். ரேன் கண்ணாடி வாங்கவும், ஐஸ் காப்பி வாங்கவும் காசு வேண்டும் என்று எழுதியிருப்பதைப் பார்த்து அதிர்ந்தேன். ஆனால் அதன் கீழே சிறிய எழுத்தில் " ஜஸ்ட் கிட்டிங், நீட் மணி டு ஈட் " என்று எழுதியிருந்தது.

 ஒரு நாள் மாலை ஆபிஸ் முடிந்து, சப்வேயில் வந்து இறங்கி வீட்டிற்குச் செல்ல Q-40 பஸ்ஸுக்காக சட்பின் புல்வர்டில் காத்திருந்தபோது, ஒருவன் அருகில் வந்து 'மலையாளியோ? ' என்றான். கண்கள் சிவந்திருந்தது. ஏதோ போதை பானம் வாடை வீசியது. “இல்லை” என்றேன். அவன் விடவில்லை, “பின்ன எந்த ஊர்” என்றான். சென்னை என்றதும், “ஓ தமிழா, எனக்கு நிறைய தமிழ் நண்பர்கள் இருக்கிறார்கள்” என்று சொல்லி “அவசரமாக ஒரு பத்து டாலர் வேண்டும்” என்றான். வாலட்டை எடுத்து ஒரு டாலர் தரலாம் என்று பார்த்தால் 20 டாலர் நோட்டுகள் மட்டும் இருந்தன. குடித்தழிபவனுக்கு 20 டாலர் கொடுக்க மனம் வரவில்லை என்பதால், சில்லறை இல்லை என்றேன்.

 முறைத்துப்பார்த்த அவன் வாலட்டை என்னிடம் காண்பி என்றான். என்னுடைய எல்லா எச்சரிக்கை செல்களும் விழித்துக்கொள்ள உடல் பதறி, மறைத்தேன். அதற்குள் பஸ் வந்துவிட விரைந்து ஏறினேன். அவனும் பின்னால் ஏறி, கட்டணம் செலுத்தாமல் என்பின் உட்கார்ந்து கெட்ட வார்த்தைகளில் திட்ட ஆரம்பித்தான். எனக்கு அவமானமாகவும் ஆத்திரமாகவும், இருந்தது. என்னை கொன்று விடுவதாக வேறு சவால் விட்டுக்கொண்டிருந்தான். சகபயணிகள் வெறுமனே வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர். அடுத்த ஸ்டாப்பில் சட்டென்று இறங்கி ஒரு கடையில் சென்று மறைந்தேன். அவனும் இறங்கி என்னைத்தேடி காணாமல் திரும்பிப்போய்விட்டான். அவனை அவ்வப்போது, மிகுந்த போதையுடன் சட்பின் புலவர்டு அருகில் உள்ள வைன் ஷாப்பில் பார்ப்பேன். வேறு பாதையில் மறைந்து சென்றுவிடுவேன். அன்றொரு நாள் இரவு சப்வேயை விட்டு வெளிவரும்போது அதே இடத்தில் NYPD போலிஸ் கார் அருகில் நிற்க, ஆம்புலன்சில் ஏற்றிக் கொண்டிருந்த உடலைப்பார்த்து திடுக்கிட்டேன்.அந்த மலையாளிதான்.குடிப்பதற்கு பணமாக கேட்டவன் இப்போது பிணமாக .

முற்றியது Thursday, July 18, 2013

வங்காளிகள் நம்ம பங்காளிகளா?


போன வாரம் சாப்பிட அஞ்சப்பர் போயிருந்தேன்.அங்க புதுசா ஒரு பையனைப்பார்த்தேன்.ஆஹா இந்த ஸ்பானிஷ் ,பிலிப்பினோ ஆட்கள்  போய் ஒரு தமிழ்ப்பையன் கிடைச்சான் போலன்னு ஆர்வமா எந்த  ஊருன்னு கேட்டேன் ? அவன் புரியாமல் முழித்தான்.அப்புறம் சொல்றான் , அவன் பங்களாதேஷியாம்.
ஏய் ஏய் ஏய், உங்களுக்கு நாடு கொடுத்ததே நாங்கதான் என்று சொல்லத்தோன்றியது. இந்த பங்களாதேஷ் ஆளுங்க அலும்பு தாங்க முடியல பாஸ். இந்த 'லாட்டரி விசா' வந்தாலும் வந்துச்சு. அடிச்சுதுரா லக்கி பிரைஸ்னு, பாதி பங்களாதேஷ் ஆளுங்க அமெரிக்காவிற்கு அதிலும், நியூயார்க் நகரத்திற்கு வந்து குவிந்து விட்டனர். ஒரு அஞ்சே  வருஷத்தில், பல இந்திய, பாகிஸ்தான் ஏரியாக்களை தமதாக்கிக் கொண்டனர்.

ஞாபகமிருக்கிறதா, 1971 என்று நினைக்கின்றேன். முஜிபுர் ரகுமான் தலைமையில் முக்திவாஹினி புரட்சிப்படை, இந்திராகாந்தி தைரியமாய் அனுப்பிய இந்திய ராணுவத்தின் துணையோடு பாகிஸ்தானை முறியடித்து “பங்களாதேஷ்” என்று  தனி நாடாகியது. ஆனா அங்க  ஒண்ணும் சரியில்லை போல தெரியுது .

படிச்சவன் படிக்காதவன், குஞ்சு குளுவான், நண்டு சிண்டு, புளு பூச்சினு எல்லாம் இங்க வந்து குமிஞ்ச்சிருச்சுக. இந்த லாட்டரி விசாவை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன் மை லார்ட்.  முதல்ல எங்க ஏரியா ஜமைக்காவில் உள்ள ஹில்சைட்  அவென்யூவில் ஒவ்வொரு கடையா பிடிச்சாய்ங்க. இந்தியக்கடைகள் போய், பாகிஸ்தான் கடைகள் வந்த மாதிரி, இப்போ பாகிஸ்தான் கடையெல்லாம் போய், பூரா பங்களாதேஷ் கடைகள் ஆயிப்போச்சு. பாம்பே பஜார் இப்போ டாக்கா பஜார்னு ஆயிருச்சு.

 மிக நீண்ட ஹில்சைட் அவென்யூவில் 140வது தெருவிலிருந்து, 200-வது தெருவரை இப்போ முச்சூடும் பங்களாதேஷ் கடைகள்தான். ரெஸ்டாரண்ட், பலசரக்கு, ஜவுளி, ஃபார்மசி, ஃபர்னிச்சர் எல்லாமே அவிங்கதான். அதே மாதிரி ஜாக்சன் ஹைட்சும், இந்திய நகைக்கடைகள் தவிர 90 சதவீதம் பங்களாதேஷ் கடைகளா மாறிப்போச்சு.

 ஆட்டைக்கடிச்சு மாட்டைக்கடிச்சு இப்போ, மேன்ஹாட்டனில் என் அலுவலகம் இருக்கும் 'பிராட்வேயில்' ஒரு 20 கடை அவங்க கடை ஆயிப்போச்சு. பனியன், ஜட்டி, ஹோசியரி, ஃபர்பியூம்ஸ், வாட்ச்சஸ் என்று, இது எப்பூடின்னு  கேட்டா, அவங்க அசோசியேஷன் ஒன்னு இருக்காம். ஜமாத் மாதிரி, அதுல மெம்பர் ஆயிட்டா ஒரு லட்சம் டாலர் வரை குறைஞ்ச வட்டியில பணம் கொடுத்து உதவுவாங்க. இவுங்களுக்கு படிப்பும் அதிகம் இல்லாதனால எல்லாரும் பிஸினஸ்ல இறங்கிர்ராய்ங்க. அதோடு கடையில எல்லாம் அவங்க மொழில போர்டு வச்சிராய்ங்க. அநியாயம் .

இந்த சம்பளத்திற்கு வேலை செய்து சாகறது தமிழன் ஒருத்தன் மட்டும்தான் அதுலயும் ஒரு டாலர் மத்தவனுக்கு ஈயமாட்டான். தமிழ்ச்சங்கங்கள் எல்லாம் நஷ்டத்துலதான் நடத்துறாங்க.
இதுல எனக்கு என்ன இவ்வளவு ஆத்திரம்னு  கேக்கறீங்களா? இவய்ங்க என்னை இந்த ஏரியாவுல எங்கே பார்த்தாலும் பங்களாதேஷியா ? என்று கேட்டு உயிரை எடுக்கிறாய்ங்க, ஏன்னா கிட்டத்தட்ட  நம்மள மாதிரியே அவய்ங்க இருக்கிறாய்ங்க. ரொம்ப உயரம் கிடையாது, பிரவுன் நிறம்,  மீசைன்னு நம்ம செளத் இண்டியன் மாதிரியே இருக்காய்ங்க.
இதுக்கு ஒரு கதை கேள்விப்பட்டேன். உண்மையான்னு தெரியல. அந்தக் காலத்தில சோழ அரசன் படையெடுத்துப்போய், இந்தப்பகுதிகளை வென்று, தன் மகனான இளவரசனை இந்தப் பகுதிக்கு அரசனாக்கி, அவனுக்குப் பாதுகாப்பாக தன்னுடைய படைகள் ஒரு லட்சம் பேரை அங்கு விட்டுவிட்டு வந்தாராம். அவர்கள் அங்கேயே கல்யாணம் முடித்து பலுகிப் பெருகி கலந்துவிட்டனர். இதுதான் வங்காளிகளும் நம்ம பங்காளிகள் ஆன கதை.
தினமும் ஒரு நாலு பேராவது என்னை வங்காளியா  என்று கேட்டுக் கடுப்பு ஏத்துகிறார்கள்.இல்லைடா இல்லைடான்னு மூஞ்சியிலேயே குத்தத்தோணுது. இதுல கேட்கிறவன் எல்லாம் ஆம்பிளைங்களை மட்டும்தான். பங்களாதேஷ் பெண்கள் பார்த்தால், மரியாதை கலந்த ஒரு புன்சிரிப்போடு, விலகி வழிவிடுகிறார்கள். அவங்க கேட்டாலாவது ஆமாம்னு சொல்லலாம் . நான் என்னத்தை சொல்ல. நேத்து சப்வேயில் ஒருத்தன், இல்லைன்னாலும் நம்பாமல் வங்காள மொழியில் பேசி உயிரை எடுத்தான். இப்பதான் வந்திருப்பான்  போல. இன்னொரு வங்காளி என்னைப்பார்த்ததும் எழுந்து உட்கார இடம் கொடுத்தான். நானும் வசதியாக உட்கார்ந்து, சிப்ஸ் பாக்கெட்டையும் வேணும்னே தமிழ் புத்தகத்தையும் எடுத்து வைத்தவுடன் கலவரமாய்ப் பார்த்து முறைத்தான். போடா என்று இன்னும் வசதியாக பின் நகர்ந்து உட்கார்ந்தேன். 

 இந்தக் கடுப்போடு வீடு வந்து சேர்ந்து, என்னை எப்படி மாற்றினால் இவய்ங்க பங்களாதேஷி  என்று கூப்பிடமாட்டார்கள் என்று எண்ணியபடி படுத்ததில், மீசை எடுத்த மாதிரியும் என்மனைவி அதைப்பிடிக்காமல் டைவர்ஸ் செய்த மாதிரியும் கனவு வந்தது. அதிர்ந்து எழுந்து பார்க்கையில் என் மனைவி பக்கத்தில்தான் படுத்திருந்தாள். அவளுக்கு என்னை விட்டால் வேற வழியில்ல. எனக்கும் அவளை விட்டால் வேற வழியில்லன்னு ஒரு பெருமூச்சு விட்டுட்டு  எழுந்து, என் தோட்ட ஊஞ்சலில் உட்கார்ந்து பல் விளக்கிக் கொண்டிருந்தேன்.

பக்கத்தில் கொஞ்சம்நாள் காலியாக இருந்த வீட்டுக்கு யூஹாலில் (U-Hal) சாமான்கள் வந்து இறங்கிக் கொண்டிருந்தன. ஆஹா புது நெய்பர் என்று எண்ணி, பல் விளக்கிக் கொண்டே, என் வீட்டு கேட்டருகில் நின்று வேடிக்கை பார்த்தேன். அப்போது வீட்டினுள்ளிருந்த நல்ல தென்னிந்திய உருவம் வெளியே வந்தது. ஆஹா தமிழோ அல்லது தெலுங்கோ என்று பார்த்தபோது, அந்த ஆள்  புன்சிரித்து, “அஸ்ஸலாம் அலைக்கும், பெங்காலியா  ?”  என்று கேட்டான். எனக்கு வந்த ஆத்திரத்தில் திட்டுவதற்கு வாய் திறக்க ,வாய் குழறி பேஸ்ட் நுரை மொத்தமும் சட்டையில் கொட்டியது.

Monday, July 15, 2013

நியூயார்க்கில் பிச்சைக்காரர்கள் Part 3 : “பிச்சைப்பாத்திரம் ஏந்தி வந்தேன்"

Jackson Heights
          நியூயார்க்  உலகத்தின் உன்னத நகரம். பொருளாதார உலகின் தலைநகரம். பல சிறப்புகள் உண்டு. ஆனாலும் இங்கே  பலவித பிச்சைக்காரர்கள் இருக்கிறார்கள் என்பது அதிர்ச்சியூட்டும் உண்மை.

ஹோம்லெஸ்

  அமெரிக்கா பணக்கார நாடாயினும், முதலாளித்துவ நாடு என்பது நம் அனைவர்க்கும் தெரியும், இங்குள்ளவருக்கு மூன்று கொள்கைகள் உண்டு (1) பணம், (2) பணம், (3) பணம்.  
       இந்தியாவிலிருக்கும் போதே, கிரடிட் கார்டினால் கஷ்டப்பட்டதால், இங்கே கிரெடிட் கார்டு வேண்டாம் என்று கொள்கை முடிவு எடுத்து ,பெருமையுடன் அலைந்து கொண்டிருந்தேன் . ஒரு நாள் வந்த புதுதில் , பெஸ்ட் பையில் (Best Buy),  டிவி, இன்ஸ்டால்மென்டில் வாங்கலாம் என்று சென்றிருந்தேன். (ஏலே சேகரு அங்கேயும் போய் இந்த இன்ஸ்டால்மென்டை விடலியாலே). முதல் கேள்வி, கிரடிட் கார்டு இருக்கிறதா? என்று. என்னான்னு கேட்டா, “No Credit is Bad Credit” என்கிறார்கள். எனக்கு தூக்கிவாரிப்போட்டது. நம்மூரில கடனில்லாட்டி நல்ல புள்ளன்னுல சொல்லுவாக. ஆனா இங்கே கிரடிட் ஹிஸ்டரி இல்லாட்டா, இன்ஸ்டால்மென்ட்ல பொருள் வாங்க முடியாது, கார் வாங்கமுடியாது, வீடு வாசல் வாங்க முடியாது என்று தெரிந்து அதிர்ச்சியடைந்தேன். அப்புறம் என்னதேன் செய்யுறதுன்னு கேட்டா, கடனும் வாங்கனும், கரெக்டாவும் கட்டனும்கிராய்ங்க. அட மொள்ளைமாறிகளாஎன்று நினைத்துக்கொண்டு, அப்புறம் பாஸ்டனில் 
உள்ள என்  நண்பன் ஜூடைக் கூப்பிட்டு அவனுடைய Best Buy கார்டில் டி.வி வாங்கினேன்.

இந்த மாதிரி, கடன் வாங்கி, கடன் வாங்கி, ரொம்ப சேர்ந்து போய் , அப்புறம் சோர்ந்து போய், அதுக்கப்புறம் வேலையும்  போய், பில்லை கட்ட முடியாம எல்லாத்தையும் இழந்து தெருவுக்கு வந்தவர்கள்தான் இந்த ஹோம்லெஸ் என்று அழைக்கப்படுகிறதில் முக்கால்வாசி பேர். அதனாலேயே, மனம் பிறழ்ந்து பைத்தியமாகிப் போனோர் இதில் அதிகம். குடும்பத்தாலும் கைவிடப்பட்ட இவர்கள் வேறெங்கு செல்வது, சப்வேயில்தான் தஞ்சம். வெயில் காலத்தில் வெளியே அலையும் இவர்கள், குளிர்காலத்தில் வேறெங்கும் போக முடியாது, குளிக்க முடியாது. சாப்பாட்டுக்கு மட்டும் பஞ்சமில்லை.

இங்குதான் ஒரு டாலர் இருந்தால் போதுமே, ஒரு பேகல் (Bagel) டோஸ்ட் வித் பட்டர், ஒரு பெரிய பிரட்சில் (Pretzel), ஒரு சூடான நாய் (அதாங்க Hot Dog), இதில் எதுவாங்கினாலும் 1 டாலர்தான். ஒன்னு சாப்பிட்டா போதும் இரண்டு வேளைக்கு ஒண்ணும் தேவையில்லை. மெக்டானால்ட்ஸ் போன்ற பல அமெரிக்க உணவகங்களில் டாலர் மெனு இருக்கிறது.
    அதனால் இந்தப்பிச்சைக்காரர்கள் நம்மூர் போல் எலும்பும் தோலுமாக இருக்கமாட்டாய்ங்க. ஒவ்வொருவரும் நல்ல பெரிய சைசில் தொப்பையும் குப்பையுமாக இருப்பார்கள். ஆமாங்க இவங்க சொத்து வெறும் குப்பைதேன். கண்ட கருமாந்திரங்களை எல்லாம் சேர்த்து சேர்த்து மலைபோல் வைத்திருப்பார்கள். சிறு சிறு பைகளில் ஏராளமாய் குவித்து வைத்திருப்பார்கள்.
34th Street, Midtown.

உங்களுக்கு இந்நேரம் ஒரு கேள்வி வந்திருக்கும், காலைக்கடன்களுக்கு என்ன செய்வார்கள் என்று? 
அதேன் உங்களுக்குத் தெரியுமே, இங்கே கழுபுபவர்கள் இல்லை. துடைப்பவர்கள்தான். துண்டு பேப்பர் போதுமே, பக்கத்தில் உள்ள குப்பைத் தொட்டிகள்தான் பாவம். அந்தக் குப்பைகளை அள்ளும் ஊழியர்கள் அதைவிடப் பாவம்.

அரசாங்கம் இவர்களை அழைத்துக்கொண்டு போய், குளிக்கவைத்து, உடுத்தி பராமரித்தாலும், எப்படியாவது திரும்பவும் தப்பி வெளியே வந்துவிடுவார்களாம். என்னத்தைச் சொல்றது.
இவர்களை ஒளிந்து ஒளிந்து   படம் எடுத்ததில் என் அல்லு என்னிடத்திலில்லை. எனவே படங்கள் சரியில்லைன்னு சொல்லாதீங்க.

ஹோம்லெஸ் சங்கத்தினர்:
"காட் பிளஸ்" என்று சொல்லிக்கொண்டு, வீடிழந்தோர் சங்கம் என்று சொல்லிக்கொள்வார்கள். எங்களிடத்தில் பழங்களும் பண்டங்களும் இருக்கிறது. பசியாயிருக்கும் யாரும் வாங்கிக்கொள்ளலாம் என்பார்கள். பையில் உள்ளே என்ன இருக்கிறது என நான் பார்த்ததேயில்லை, யாரு வாங்கப்போகிறார்கள்? சங்கத்திற்காக வசூல் என்பார்கள். எனக்குத்தெரிந்து அவர்கள் பைக்குள் அல்லது வயிற்றுக்குள் அவை போய்விடும்.

ஊனமுற்றவர்:
சப்வே மற்றும் டிராஃபிக் சிக்னல்களில் இவர்களைப் பார்க்கலாம். இருகால் அல்லது ஒரு கால் அல்லது கை இழந்தவர்கள், கண் இல்லாதவர்கள் பிச்சை எடுக்கும்  இவர்களில் சிலர் பழைய ராணுவத்தின் (Veterans) என்று சொல்வதை நம்புவதா இல்லையா என்று தெரியாது. இவர்கள் நல்ல மனநிலையில் இருப்பவர்கள். இவர்கள் காலையில் ஆரம்பித்து மாலைக்குள் சில சமயங்களில் நூறு டாலருக்கு மேல் சம்பாதித்து விடுவார்கள்.


கழைக்கூத்தாடிகள்:


இவர்களில் படிக்கின்ற அல்லது ஸ்கூல் டிராப் அவுட்டுகளைப் பார்க்கிறேன். நான்கைந்து பேர் வந்து, டேப்ரிகார்டரை போட்டுவிட்டு, பிரேக் டான்ஸ் அல்லது சில சாகச நிகழ்ச்சிகளை செய்து காண்பிப்பர். சப்வேயின் குறுகிய இடத்தில் அவர்கள் வெகு வேகமாக சர்க்கஸ் வேலை செய்யும்போது நம்மேல் விழுந்துவிடுவார்களோ  எனப்பயமாக இருக்கும்.

 பெரும்பாலும் இளைஞர்கள். இவர்களுக்கு நல்ல வருமானம். சம்மரில் முக்கிய முச்சந்திகளிலும் இவர்களைப் பார்க்கலாம்.
இது தவிர  சில அழகுராணிகளும் பிச்சை எடுக்கிறார்கள்.


அதைப்பற்றி  அடுத்த வாரம் சொல்கிறேன்.

Thursday, July 11, 2013

அப்துல் கலாமின் "திருப்புமுனைகள்" ,வெளியீடு - கண்ணதாசன் பதிப்பகம்.

 

முதலில் புத்தகத்தயாரிப்பைப்பற்றி சொல்ல வேண்டும். மிகவும் நேர்த்தியாக அச்சிடப்பட்டு, கலர்ப்படங்களுடனும் அதிக எடை இல்லாமலும் இருந்தது. மொழி பெயர்ப்பும் நன்றாகவே இருந்தது.
ஆனால் 'அக்னி சிறகுகளில்' இருந்த விறுவிறுப்பும் சுவாரஸ்யமும், சாதனைகளும் இதில் இல்லை. ஏனென்றால் குடியரசுத் தலைவர் ஆனபின் சாதனைகளை விட சமாளிப்புகள் தான் அதிகம் தென்படுகின்றன.
ஆனாலும் அப்துல்கலாம் ஒரு நேர்சிந்தனையுள்ள, நாட்டின் முன்னேற்றத்தையே தன் வாழ்நாள் கனவாகக்கொண்ட  ஒரு அற்புதத்தலைவர் என்பதில் சந்தேகமில்லை. தான் கனவு கண்டதுடன், இந்திய மக்கள் அனைவரும் அதே கனவைக் காண வேண்டும் என முயற்றி செய்து கொண்டிருப்பவர், கலாம்.
இந்தியாவின் தென்கோடிப்பகுதியில் ஒரு எளிய குடும்பத்தில் பிறந்து நாட்டின் உயர்ந்த (?) பதவியினைப் பெறும் அளவுக்கு உயர்ந்த இவரின் வாழ்க்கை நிச்சயமாக, இளைஞர்களுக்கு ஊக்க சக்தியை அளிக்க வல்லது.
தான்  குடியரசுத்தலைவர் ஆன சூழ்நிலைகளையும், அதன்பின் நாட்டு வளர்ச்சிக்கென அவர் எடுத்த பலவித முயற்சிகளையும் இந்த நூலில் எழுதியுள்ளார்.
வாழ்க்கையின் பெரும்பகுதியை ஏவுகணைத்தொழில் நுட்பம், அணு ஆராய்ச்சி என்று கழித்துவிட்டபின்,  எஞ்சியுள்ள அவர் வாழ்க்கையில், நாட்டின் ஆக்க சக்திகளுக்கு ஊக்கம் தரும்  முயற்சியில் ஈடுபட்டிருந்தாலும், நாம் அவரை இன்னும் நல்லவிதமாக பயன்படுத்தியிருக்கலாம் என்றே தோன்றுகிறது. நம்ம அரசியல்வியாதிகள் விட்டுவிடுவார்களா என்ன? பிரதமர் போன்ற பதவிகளுக்கு இவரைப் போன்றவர் வந்தால் அல்லவா நாடு உருப்படும்.
சில வருடங்களுக்கு முன், அப்துல்கலாம் அமெரிக்கப்பயணம் செய்தபோது நியூயார்க்கில் உள்ள இந்திய தூதரகமும், நியூயார்க் / நியூஜெர்சி வாழ் இந்திய அமைப்புகளும் இணைந்து, அவருடைய சொற்பொழிவை ஏற்பாடு செய்திருந்தனர். நியூயார்க்கில் நான் வாழும் குயின்ஸ் பகுதியில் உள்ள "கணேஷ் ஆலய”  வளாகத்தில் உள்ள அழகிய அரங்கத்தில் நடந்த இந்த நிகழ்வுக்கு, நானும் அழைக்கப்பட்டிருந்தேன். உள்ளே சென்றபோது அரங்கு, நிரம்பி வழிந்தது. சற்று நேரத்தில் NYPD  போலிஸ் பாதுகாப்புடன், அளவான புன்சிரிப்புடன், சற்றே தலை தாழ்ந்த சிறிய உருவம் உள்ளே நுழைந்தபோது, அனைவரும் தன்னிச்சையாக எழுந்து நின்று கையொலி எழுப்பி வரவேற்றனர். அமெரிக்க மற்றும் இந்திய தேசிய கீதங்கள் பாடப்பட்டன.கலாம் அவர்கள் தன் லேப்டாப் உதவியுடன், இந்திய நாட்டின் முன்னேற்றம் மற்றும் அதற்கு வெளிநாட்டு வாழ் இந்தியர் எப்படி பங்களிக்கலாம்? என்று அருமையாக தன்னுடைய திக் ஆக்சென்ட்டில் ஆங்கிலத்தில் உரையாற்றினார்.
சபையைக் கட்டிப் போட்டது அவர் பேச்சு மட்டுமல்லாது, அதன் பின்னர் நடந்த கேள்வி பதிலும்தான். சிக்கலான கேள்விகளுக்கு சாதுர்யமான பதில்களை கொடுத்து, அன்று அங்கிருந்த எல்லார் மனதிலும் இடம்பிடித்தார்.
ஆனால் எல்லோரையும் எல்லா நேரத்திலும், எல்லாக்காரியங்களிலும் திருப்திப் படுத்த  முடியாது என அவருக்கென்ன தெரியாதா என்ன ?.
குடியரசுத்தலைவர் அப்துல் கலாமின் சாதனைகள் :
1.    இந்தியா முழுவதிலும் உள்ள எண்ணற்ற இளம் மாணவர்களை சந்தித்து ஊக்கப்படுத்தியது.
2.    ஜனாதிபதி மாளிகையை கனிணி மயமாக்கி ஆவணங்களை 'டிஜிட்டல்' வகைப்படுத்தியது.
3.    காணொலிக் காட்சி (Video Conferencing) மூலம் மாநாடுகள் நடத்தியது.
4.    வெளிநாட்டு பயணங்களை நம் நாட்டின் முன்னேற்றத்திற்கு பயன்படுத்தியது.
5.    நாட்டின் மூலை முடுக்குகளையெல்லாம் பயணம் செய்து பார்வையிட்டது.
6.    340 ஏக்கர் பரப்பளவுள்ள தோட்டத்தை பராமரித்ததோடு, அதில் புதிதாக Tactical Garden (for the blind), மியூசிக்கல் கார்டன், ஆகியவற்றை புதிதாக அமைத்தது.
7.    நாடெங்கிலும் பரவலாகப் பயணம் செய்த ஒரே ஜனாதிபதி. (முதல் 10 மாதத்திலேயே, 21 மாநிலங்களில் பயணம் சென்றார்.)
அதிகம் கண்டு கொள்ளாமல் விடப்பட்ட அவரது நல்ல யோசனைகள்:
1.    விஷன் 2020
2.    நீதிமன்றங்களில் வழக்குகளை விரைவுபடுத்தும் வழிவகைகள். (E -Judiciary Initiative)
3.    PURA (Providing Urban Amenities in Rural Areas).
4.    ராஷ்டிரபதி பவன் ,பிரதம மந்திரி, பிற அமைச்சர்கள் மற்றும் மாநில ஆளுநர்களின் அலுவலகங்களை நெட்வொர்க்கில் இணைத்து  டிஜிட்டல் முறையில் கையெழுத்துப்பரிமாற்றம் செய்தல்.
5.    ஸ்திரமான ஆட்சிக்கு இருகட்சி ஆட்சி முறை.
6.    எரிசக்தி தன்னிறைவு பெற “ பயோடீசல் திட்டம்” மற்றும்  “சூரியசக்தி” திட்டங்கள்.
7.    பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு Code of Conduct அமைத்தல்.
சர்ச்சைக்குரிய முடிவுகள்:
1.    மாஸ்கோவில் சுற்றுப்பயணம் செய்து கொண்டிருக்கும்போது, மன்மோகன் சிங்கின் வேண்டுகோளுக்கிணங்க, ஒரு தடவை கூட கூடாத பீகார் சட்டமன்றத்தை கலைத்து (மே, 2005) உச்ச நீதிமன்றத்தின் கண்டனத்துக்கு ஆளானது.
2.    ஆதாயம் தரும் பதவிகளுக்கான சட்டமுன் வரைவை முதலில் திருப்பி அனுப்பினாலும், பின்னர் பாராளுமன்ற தீர்மானத்திற்குப்பின் ஒப்புதல் அளித்தது (ஜெயா பச்சன் மற்றும் சோனியா காந்தி அத்தகைய பதவிகளில் இருந்தனர்).
3.    பதவிக்குப்பின்னர், இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் மற்றும் கூடங்குளம் அணு உலை ஆகியவற்றுக்கு ஆதரவுக்கரம் நீட்டியது.
2004 - தேர்தலுக்குப்பின் பெரும்பான்மையை நிரூபித்தபின், காங்கிரஸ் கட்சியின் சார்பாக, சோனியா காந்தியை பல எதிர்ப்புகளின் மத்தியிலும் பிரதமராக்க தயாராய் இருந்தது. ஆனால் சோனியா, மன்மோகன்சிங்கை வழிமொழிந்தது, கலாமுக்கே ஆச்சரியம். சோனியா காந்தி உரிமை கோரியிருந்தால், அரசியல் சாசனப்படி, அவரை அனுமதிப்பதைவிட கலாமுக்கு வேறு வழி இருக்கவில்லை.

Monday, July 8, 2013

நியூயார்க்கில் பிச்சைக்காரர்கள் Part 2 : அலைகள் ஓய்வதில்லை


      தலைப்பைப் பார்த்ததும் நான் என்னைப்பற்றியே எழுதப்போகிறேனோ என்று கெக்கலி கொட்டி சிரிக்கும் நண்பர்கள் போன்ற எதிரிகளுக்கும், எதிரிகள் போன்ற நண்பர்களுக்கும் தெரியப்படுத்துவது என்னவென்றால், இது என்னைப்பற்றியதல்ல (டேய் நீயே ஒரு பரதேசி, நீ பிச்சைக்காரர்களைப் பற்றி எழுதுவது தேவையா?)
         சரி கதைக்கு வருவோம் .அது பெண் என்று தெரிந்து மேலும் அதிர்ந்தேன். அப்போது என் வாக்மேனில் ," உன் சுவாசக் காற்று வரும்பாதை பார்த்து உயிர் தாங்கி நானிருப்பேன் "என்று  அபத்தமாய் ஒலித்ததும் கடுப்பாகி  அதை ஆஃப் செய்தேன் . அந்த சமயத்தில்தான் அந்த உருவம் என்னை நோக்கி நகர்ந்தது . நான் கேரஜின் மறு ஒரத்திற்கு சென்று ஒண்டியபோது , நாற்றம்  தாங்கமுடியாமல் , காலையில் சாப்பிட்டது ஓங்கரித்து கலர் கலராய் வெளியே வந்தது.
        அதை பார்த்ததாலோ என்னவோ,அந்த உருவம் மீண்டும் உட்கார்ந்து விட்டது. (நாற்றத்தை நாற்றத்தால் வென்ற நாயகன்னு ஒரு பட்டம் கொடுத்திரலாமா சேகர் ? மகேந்திரா  வேணாம் சொல்லிட்டேன் ஆமா) .எழுந்து உட்கார்ந்ததில் மீண்டும் அலை அலையாய், வேறென்ன நாற்ற அலைகள்தான் வந்து நாட்டியமாடின. இதிலே இப்ப என்னோட வாந்தி நாத்தம் வேற சேர்ந்திரிச்சு. இயேசு நாதர் சொன்ன “நல்ல சமாரியன்” கதை ஞாபகம் வந்தது. ஐயையோ ஆளவிடுசாமி. அதற்குள், அடுத்த ஸ்டாப் வர, தெறித்து ஓடி இறங்கி, இருமி வாயைத்திறந்து ஆசுவாசப்படுத்த முயல்கையில், என்னைப்போல் இன்னும் ரெண்டு அப்பாவிகள், நான் தடுக்குமுன் ஏற, தானியங்கி கதவுகள் மூடப்பட்டு வண்டி நகர ஆரம்பித்தது. ஐயோ பாவமே என்று நினைத்து மரபெஞ்சில் உட்கார்ந்தேன்.
அந்தப்பெஞ்சில் உட்கார்ந்திருந்த இருவர், நான் உட்கார்ந்ததும் சட்டென எழுந்து நகர்ந்தனர். ஏன் என்று யோசித்து, என்னை நானே பார்க்கையில் தான் தெரிந்தது. ஐயையையையையே என்மேலும் அந்த நாற்றம் ஒட்டிக் கொண்டிருந்தது.
        அதன் பின்னர் ஆபீஸ் போவதை  கைவிட்டு நடந்தே வீட்டுக்குச் சென்று, அந்த உடைகளை ஜாக்கிரதையாய்க் கழற்றி மூட்டை கட்டி வைத்துவிட்டு, ஒரு மணி நேரம் குளித்து துவட்டி துடைத்த பின்னரும், நாசியினடியில் அந்த ஓசி நாத்தம் மறையவில்லை. ம்க்கும்  ம்க்கும்  என்று அந்த நாள் முழுதும் மூக்கைச் செருமிக் கொண்டு மேலும் ரெண்டு தடவை வாந்தி வேறு எடுத்ததால் ஒன்றும் சாப்பிடவில்லை. சட்டென்று, அந்த துணி மூட்டையை ஒரு குச்சியில் எடுத்து வீட்டுக்கு வெளியே தூரம் சென்று அங்கிருந்த குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு வந்தபிறகுதான் கொஞ்சம் நிம்மதியாயிருந்தது.
         நியூயார்க்கைப் பற்றிய என்னுடைய பல கனவுகளிலும், எதிர்பார்ப்புகளிலிருந்தும் மேலும் ஒன்று கடுமையாக தாக்கப்பட்டு அழிக்கப்பட்டது.
        அதற்கப்புறம் கேரேஜ் காலியாக இருந்தால் ஒன்று A/c வேலை செய்யவில்லை மற்றொன்று நாத்தம் புடிச்ச ஹோம்லெஸ் ஒன்று அங்கே எழுந்தருளியிருக்கும் என்று தெரியுமாதலால், சீபோ என்று விட்டுவிடுவேன்.
       இவர்கள் யார்? ஏன் இப்படி தெருவில் அலைகிறார்கள்? அரசாங்கம் கவனிப்பதில்லையா? தன்னார்வ நிறுவனங்கள் இல்லையா? என்று பல கேள்விகள் என்  உள்ளத்தில் அலைபாய, இவற்றிற்கு விடைகண்டுபிடிக்க முனைந்ததில், சில திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்தன.