Showing posts with label சிரிப்பு வருது சிரிப்பு வருது .. Show all posts
Showing posts with label சிரிப்பு வருது சிரிப்பு வருது .. Show all posts

Thursday, September 5, 2019

நியூயார்க்கில் பூரான் !


Image result for பூரான்
இன்று காலையில் அதனைப் பார்த்துவிட்டேன். அதுவும் என் வீட்டில், அதுவும் என் படுக்கையறையில், அதுவும் படுக்கையறையில் உள்ள குளியலறையில்,
டேய் மேலே சொல்லு, அதுவும் அதுவும்னு சொல்லி கழுத்தறுக்கிற, இதுல ஃபிளாஷ்பேக் டெக்னிக் வேற நீயெல்லாம் எழுதோணும்  நாங்கெல்லாம்  படிக்கோணும்னு எங்க தலைவிதி”
 “என்னது இது கோயம்புத்தூரில் எனக்கு பெர்சனலா யாரையும் தெரியாதே. யாரெல்லாம் எங்கிருந்தெல்லாம் அட்டாக் பண்ணுவாய்ங்கன்னு தெரியலையே , சரி தொடருவோம்”
Image result for moth
Moth
நியூயார்க்கில் நாங்கள் வாழும் வாழ்க்கை, ஒன்று அதீத குளிர், 30,40ன்னு போகும் அதுக்கு முன்னால மைனஸ்னு போட மறந்துட்டேன். வெயில் காலத்தில் இந்த ஆண்டு 107, 108ன்னு போய் மண்டை காய்ஞ்சிறுச்சு .
எப்படா இந்த குளிர் முடியும்னு காத்திருந்து காத்திருந்து வெயில் வந்தவுடனே, அய்யய்யோ இதுக்கு குளிரே பரவாயில்லைன்னு  தோணுற மாதிரி இருக்கு. இதுல வெய்யில் காலம் வந்தவுடனே ஊர்ல இருக்குற எல்லா பூச்சிகளும், கொசுவும் படை யெடுத்து வந்துரும். பேர் தெரியாத பல பூச்சிகளும், ஊர்வன பறப்பனவும் இதுல அடக்கம். இத்தனைநாள் எங்கதான் இருந்துச்சுகளோ, வெயில் காலம்தானேன்னு ஒரு காத்தாட  ஜன்னலைத்திறக்க முடியாது, கதவைத்திறக்க முடியாது. எல்லாத்துலயும் கவனமா வலையடிச்சு  வச்சிட்டுத்தான் திறப்போம். அப்படியும் சில பூச்சிகளும், கொசுக்களும் உள்ளே வந்துறும், பழங்கள்ள கருப்பு நிறத்தில் சிறுசிறு பழக்கொசு வந்திரும் .பின்னாடி தோட்டம் வேற இருக்கிறதால சில புழுக்களும் பூச்சிகளும் இருக்கும்.
இதுல என் மகள்கள் இருக்காள்களே அய்யய்யோ சின்ன பூச்சியைப் பாத்தாக்கூட அழுது அமர்க்களப்  படுத்திடுவாள்க. இப்போ சமீபத்தில் நடந்ததைச் சொல்றேன்.
Image result for small fruit fly

ஜூலை 4ஐக் கொண்டாட நியூயார்க்கோட தலைநகரம் ஆல்பனிக்குப் போயிருந்தோம். என்ன குழம்புதா , நியூயார்க் சிட்டி வேற ,நியூயார்க் ஸ்டேட் வேற .நியூயார்க் ஸ்டேட்லதான்  நியூயார்க் சிட்டி  இருக்கு. சில இடங்களுக்கு மட்டும்தான் ஊர் பேரும்  ஸ்டேட் பேரும் ஒரே மாதிரி இருக்கும்.உதாரணத்திற்கு  கலிஃபோர்னியா மாநிலத்தில்  கலிஃபோர்னியா  என்ற பெயரில் ஊர் கிடையாது .நியூயார்க் ஸ்டேட்டோட  தலை நகர்தான் ஆல்பனி .இப்ப புரியுதா மக்களே ? 
ஒரு 3 மணி நேரம் டிரைவ். ராத்திரி ஒரு 10.30 மணிக்குப் போய் சேர்ந்தோம். பொண்ணுங்க பெரியவங்க ஆயிட்டாங்கன்னு அவளுக இரண்டு பேருக்கும் தனிரூம். எனக்கும் என் மனைவிக்கும் தனிரூம். செக் இன் பண்ணும்போது தெரிஞ்சது, எதிர்பார்த்தது போலவே இதுவும் குஜராத்தைச் சேர்ந்த மோடிக்குச் சொந்தக்காரங்க நடத்துற ஓட்டல். அதாங்க பட்டேல் வகையறா. ஒரு விதத்தில் ஒரு இந்தியன் நடத்துற ஓட்டல்னு பெருமையா இருந்துச்சு. ரூமுக்குப்போனா சரியா மெய்ன்டெய்ன் பண்ணாம இருந்துச்சு.  பெருமையா நினைச்ச நெனப்பு உடனே அசிங்க நினைப்பா ஆயிப்போச்சு.
என் மனைவி வேற "ஏங்க இங்க மூட்டைப்பூச்சி இருக்குமா?" என்றாள். ஏற்கனவே கடுப்பில் இருந்த நான் "அதெல்லாம் இருக்காது" என்றேன் மேலும் கடுப்புடன், "இந்த பெட்ஷிட்டெல்லாம் துவைச்சதா?" இது ரெண்டாவது கேள்வி. பேசாம இருந்தேன். "இதுக்குத்தான் பெட்ஷீட்டை எடுத்துட்டு வரலாம்னு சொன்னேன்" என முணு முணுத்தாள் "காரில் தலைகாணி வச்சிருக்கேன். எடுத்துட்டு வாங்க" என்றாள். நானும் கீழே போய் எங்க தலையணைகளை எடுத்துட்டு வந்து கொடுத்தேன்.. மணியைப் பார்த்தால் 11.30 ஆயிருச்சு. இதுக்கு மேலே வேற ரூம் போய்த் தேட முடியுமா?
டேய்ஸ் இன் எல்லா இடத்திலயும் நல்லா இருக்குமே. இந்த நாதாரி குஜராத்திக நல்ல ஓட்டலை வாங்கி நாசம் பண்ணிட்டாங்களேன்னு நினைச்சு கோவம் கோவமா வந்துச்சு. ஆனாலும் வெளியே காட்டிக்கல. நேரா என் பொண்ணுங்க ரூமுக்குப் போய் கதவைத்தட்டிக் கேட்டேன். வேற ரூமுக்கு போயிரலாமான்னு. “பரவாயில்ல டாடி இது ஓக்கே தான்”னு சொன்னாங்க. திரும்ப என் ரூமுக்கு வந்து ஒரு குளியில போட்டுட்டு  வந்து படுத்தேன். பெட்ஷீட் மேல ஒரு மாத் இருந்தது. என் மனைவுக்குத் தெரியாம அதை நசுக்கித்தள்ளிவிட்டேன். என் மனைவி ராத்திரி பூராத் தூங்கல. அது எனக்கு எப்படித் தெரியும்னு கேக்கறீங்களா? ஏன்னா நானும் தூங்கல.   ஆனா இரண்டு பேருமே வெளியே காட்டிக்கல, இப்ப தெரியுதுங்களா ஏன் என் மனைவி எங்கேயுமே பயணம் வர்றதில்லன்னு. அவளுக்கு விடுதி பெட்ல படுக்கிறது, பாத்ரூம் போறதெல்லாம் வேற யாரோ ஒருவர் பயன்படுத்தியத யூஸ் பன்ற மாதிரி ஒரு அருவெறுப்பு. பிறகு எப்படி பயணம் போக முடியும். காலைல அவளுக்கு நல்ல ஜுரம். அவளை ரூமில் விட்டுட்டு நாங்க மூணு பெரும் குளிச்சி ரெடியாகி வெளியே கிளம்பினோம். அன்னைக்குத்தான் ஜூலை 4, சுதந்திர தினம். இரவு வாண வேடிக்கையெல்லாம் அமர்க்களமா இருக்கும். நான் வண்டியை ஓட்ட, என் சின்னப்பெண் வழக்கம்போல என் பக்கத்திலயும், பெரிய பெண் பின்னாலையும் உட்கார்ந்திருந்தாங்க. திடிர்னு பின்னாலிருந்த பெரிய பெண் அலற ,நான் திரும்பிப் பார்க்க கார் சிறிது தடுமாறியது. அலறல் அதிகமாக நான் அவசரமாக காரை ஓரங்கட்டி குதித்துப்பின்னால் சென்று காரை சடக்கென்று திறந்தேன். வெளியே பாய்ந்து வந்த பெரியவள் மேலேயும் கீழேயும் குதிக்க, நானும் என் சின்னப்பொண்ணும் என்ன என்ன ஆச்சுன்னு நெனைச்சு திகைச்சுப் போனோம். அதற்குள் பெரியவள் கண்களிலிருந்து கண்ணீர் தண்ணீராய் வடிய உதடுகள் துடித்து அழுதாள்.
வேற ஒண்ணுமில்லங்க, காரின் பின்புறத்தில் ஒரு சிறிய  மிகச்சிறிய வண்டு வந்துருச்சு, அதுக்குத்தான் இவ்வளவு ஆர்ப்பாட்டம். பின்புறத்தில் அந்த வண்டு மயங்கி இருந்தது. அதனை எடுத்து வெளியே விட்டபின் தான் அவளுடைய ஆர்ப்பாட்டம் அடங்குச்சு. இந்தக் கொடுமையை நான் எங்க போய்ச் சொல்ல. நல்லவேளை அவ காரை ஓட்டலை இல்லேன்னா நாங்க மூணுபேரும் ஆக்சிடெண்ட்ல பரலோகம் போயிருப்போம். அதுக்கப்புறம், பெரியவ அவ முடி, முதுகு எல்லாத்தையும் செக்கப் செய்யச்சொல்லி அப்புறம்தான் காரில் ஏறினாள்.
இதுல நான் வீட்டுக்குள்ள பூரானைப் பார்த்தேன்னு தெரிஞ்சது, இவ வீட்டைக் காலி பண்ணிட்டு போயிடுவா. பூரானை பத்தி கூகுள் பண்ணேன். அவை ரொம்பவும் சாதுவானவை நாம் தொந்தரவு செய்யாவிட்டால் பிரச்சனையே இல்லை. அப்படியே கடிச்சாலும் ஒரு 48 மணிநேரத்திற்கு சிவப்புத்தடிப்பு இருந்து அப்புறம் சரியாப்போயிரும் உயிருக்கு ஆபத்து கிடையாது . பூரான் வீட்டுத்தோட்டத்தில் இருந்தாலும் நல்லதுதான்.  பூச்சிகள், மாத்களை அது பிடிச்சுச் சாப்பிடும்னு போட்டிருந்துச்சு.
ஆனாலும் அதப்பாத்ததிலிருந்து எனக்கு உடம்புல ஏதோ ஊர்றமாதிரியே இருந்துச்சு, அதோட எனக்கு கொசு கடிச்சாலே பசு கடிச்சமாதிரி வீங்கிறும்.
பல்லு விளக்கின கையோடு, பாத்ரூமை லேசா திறந்துவச்சிட்டு, லைட்டை ஆஃப் செய்திட்டு கொட்ட கொட்ட முளிச்சிருந்தேன். நல்லவேளை வீட்டில எல்லாரும் ஏற்கனவே வேலைகளுக்குக் கிளம்பிப் போயிட்டாங்க. அரை மணி நேரத்துல ஒரு தடவை வெளியே வந்துச்சு, நான் ஓடிப்போய் அடிக்கறதுக்குள்ள ஓடிப்போய் பதுங்கிருச்சு. இங்கதான் உட்கார்ந்திருக்கேன். என்ன செய்யறதுன்னு தெரியல. எப்ப வெளியே வரும்னு தெரியல ஆஃபிசில் ஏகப்பட்ட வேலையிருக்கு . ஏதாவது யோசனை இருந்தா சொல்லுங்களேன்.
- முற்றும்.

Thursday, August 1, 2019

பரதேசி ஒரு தெருப்பொறுக்கி


Image may contain: one or more people and outdoor
"சேகர் என் இரத்தம் கொதிக்குதுடா"
"அய்யய்யோ மகேந்திரா, என்னாச்சுடா, BP  செக் பண்ணியா?"
"டேய் கிண்டலா உனக்காகத்தான் என் மனசு கொதிக்குதுடா"
"ஏண்டா மகேந்திரா? எதுக்கு?"
"யார்றா சொன்னா உன்னை தெருப்பொறுக்கின்னு?, பரதேசின்னு சொன்னதையே என்னால தாங்க முடியல"
"பரதேசின்னு எனக்கு நானேதானடா பேர் வச்சேன் , நான்  பரதேசி தானடா,  சொந்த தேசம்விட்டு, வந்த தேசத்திலும் நொந்து, ஊர் ஊராகக்  சுத்தும் என்னை  பரதேசின்னு சொல்றதுதான் சரி"
"சரி, பரதேசிய விடு, தெருப்பொறுக்கின்னு சொல்றது?"
"ஆமாடா நான் தெருப்பொறுக்கிதான்"
"என்னடா உனக்கு பைத்தியம் பிடிச்சிருச்சா, பைத்தியக்கார ஆஸ்பத்திரியில வேலை கிடைச்சதுன்னு நீ சொல்லும்போதே நான் பயப்பட்டேன்"
"இல்லடா சுய நினைவோடதான் சொல்றேன்"
"யார்ரா உன்னை அப்படிக் கூப்பிட்டது"
'வேற யார் என் பார்யாள் தான்"
"அதுக்கு நீ ஒன்னும் எதிர்த்துக் கேக்கலயா"
"எதுக்குடா எதிர்க்கணும்?"
"என்னடா சொல்ற?”
"அவ  சொல்றது உண்மைதான அதனால சரிதான்னு ஒத்துக்கிட்டேன்.
அப்ப நீ நெசமாவே  தெருப்பொறுக்கிதானா ?"
"ஆமடா ஆமா"
"அய்யோ ஒரே குழப்பமா இருக்கே, டே சேகரு என்னடா அமெரிக்கா போய் இப்படி தெருப்பொறுக்கியா ஆயிட்டியே"
"இருடா விளக்கமா  சொல்றேன். கொஞ்சம் பொறுமையாக்கேளு"
"சீக்கிரம் சொல்றா, தூக்கம் வேற வருது"
          "நான் தெருவுல போகும்போது பல பொருட்கள் கிடைச்சிருக்கு. வாலட் கிடைச்சிருக்கு. அதப்பத்தி ஏற்கனவே என்னுடைய வலைப்பதிவில சொல்லிருக்கேன்"
"அதை என்னடா செஞ்ச"
          "அதை அவங்கவங்கட்ட  சேத்திட்டேன். சில சமயம் முக்கிய டாக்குமென்ட்ஸ் கிடைச்சிருக்கு . அதனையும் அவரவர்ட்ட கொடுத்திட்டேன். ஆனா சிறு சிறு பொருள் கிடைக்கும் அதை யாருக்குச் சொந்தம்னு தெரியாது. அதனால நானே வச்சுக்குவேன். இல்லைனா சர்ச்சுக்கு கொடுத்துருவேன்."
"வேற என்னென்ன கிடைச்சிருக்கு"
"பென்னி, நிக்கல், டைம், குவார்ட்டர், டாலர் பில் இப்படி நிறையக் கிடச்சிருக்கு"
          "அடேய் பரதேசி அங்கபோய் குவார்ட்டர் அடிச்சிப் பழகிட்டயா. அதுவும் தெருவில இருந்தா எடுத்துக் குடிக்கிற, நீ உண்மையிலயே தெருப்பொறுக்கிதாண்டா".
          "டேய் நான் குவார்ட்டர்ன்னு சொன்னது, அந்தக்குவார்ட்டர் இல்லடா, இங்க 25 பைசாவ குவார்ட்டர்னு சொல்லுவாங்க"
"அப்படி விளக்கமாச் சொல்லு,  அப்ப மத்ததத்தைப் பத்தியும் சொல்லு"
          "நிக்கல்னு (Nickel) சொன்னா அஞ்சு பைசா, டைம் (Dime) னு சொன்னா 10 பைசா, பென்னின்னு (Penny) சொன்னா ஒரு பைசா"
"சரி சில்லறையை விடு டாலர் நோட்டுக்கள் ஏதாவது கிடைச்சிருக்கா" 
"ஒரு டாலர் பில்லிருந்து 50 டாலர் பில் வரை கிடைச்சிருக்கு"
"அடேய் யாருக்கு வேணும் பில் டாலர் நோட்டைப்பத்திச் சொல்றா"
          "அடலூசு மகேந்திரா, டாலர் பில்னா டாலர் நோட்டுன்னு அர்த்தம். அத இங்க பில்னு (Bill) தான் சொல்வாய்ங்க"
"கைல நிக்காம செலவு ஆயிரதனால பில்னு சொல்றாய்ங்களோ"
“பரவாயில்லை மகேந்திரா நல்லா யோசிக்கிற"
          “50 டாலர் பில் வரை கிடைச்சுதா பரவாயில்லரா பரதேசி, பொறுக்கியே காலத்தை ஓட்டிரலாம் போல"
          "நீ சொல்றது உண்மைதாண்டா,  பொறுக்கியே காலத்தை ஓட்டுறவங்களும் இருக்காய்ங்க".
"என்னடா சொல்ற அங்கேயுமா?"
          "நிச்சயமா உதாரணத்திற்கு இங்கல்லாம் புதுப்பொருள் வாங்குனா பழைய பொருளை வெளியே வச்சுருவாய்ங்க, அது வேலை செய்ற  தரத்துல இருந்துச்சுனா, அது ஒரு ஸ்லிப் எழுதி வச்சிருவாய்ங்க. தேவைப்பட்டவங்க எடுத்துக் கொள்ளலாம்". சில பொருள்களை வெளியே வச்சுட்டு ஃப்ரீன்னு எழுதி வெளியே வச்சுருவாங்க".
          "அப்படியா என்ன மாதிரி பொருள் அப்படி வெளியே கிடைக்கும்?”
“ கட்டில், மெத்தை, கப்போர்டு, டிவி, மைக்ரோவேவ், மேசை, நாற்காலிகள், அலமாரி போன்ற பல பொருட்கள் கிடைக்கும். இதுல சில மெத்தை செய்யும் கம்பெனிகள் அவைகளை மட்டும் எடுத்துக் கொண்டு போய், உள்ளே இருக்கிறதை எடுத்து ரீசைக்கிளிங்  செய்து புது மெத்தை தைச்சு வித்துருவாய்ங்க. அது மட்டுமல்லாமல் இரும்பு காயலான் கடைக்காரங்க ஒரு டிரக்கில் நாலு தெரு சுத்துனா போதும் நிறைய கிடைச்சுரும். வீட்டுக்கழிவுகள் மற்றும் ரீசைக்கிளிங் தினங்களில் இப்படிப்பட்ட ட்ரக்குகளைப் பார்க்கலாம்.       
          “அது தவிர பிளாஸ்டிக் பாட்டில்கள், மற்ற பிளாஸ்டிக் கழிவுகள் வைக்கிற நாட்களில் பலபேர் தள்ளு வண்டிகளில் வந்து பிளாஸ்ட்டிக்  பாட்டில்களை மட்டும் பிரித்து எடுத்துட்டு போயிருவாங்க . ஏன்னா கடைகள்ள சில மெஷின்  வச்சிருப்பாங்க. அதுல போய் ஒவ்வொண்ணா போட்டா, ஒரு பாட்டிலுக்கு 5 சென்ட் கிடைக்கும். ஒரு வாரத்துல நூத்துக்கணக்கில் இவங்க சம்பாரிச்சுருவாங்க.
          "அப்படியா பரவாயில்லையே. ஆமா பரதேசி, டாலர் பணம் கிடந்தா கீழ எடுக்கிறது ஓக்கே. ஏண்டா ஒரு பைசா கிடைச்சாக்கூட  எடுக்கிற?"
          என்னடா அப்படி சர்வசாதாரணமா சொல்லிட்ட, 1982க்கு முன்ன அடிச்ச பென்னின்னா முழுசா காப்பர். அதோட மதிப்பு இப்ப 3 லிருந்து 4 பென்னி. தங்கம், வெள்ளிக்கு அப்புறம் காப்பர்தான் இப்ப விலை கூடிட்டிருக்கு. 1960-க்கு மேலே பென்னி கிடைச்சா அதோட விலை எகிறும். சில பென்னி ஆயிரம் டாலர் வரை போகும் தெரியுமா?
          "என்னடா சொல்ற இதுல இவ்வளவு விஷயம் இருக்கா" அப்படின்னா வொர்த் இல்லைனா தூக்கிப் போட்டிருவியா"
          “நோ நோ, அப்படிச் செய்ய மாட்டேன். ஏன்னா மோடி புண்ணியத்தில் நம்ம பொருளாதாரம் நல்லா இருக்கு”.
"என்னது பொருளாதாரம் நல்லா இருக்கா ? சொல்லவே இல்லை ,இங்க பெரிய பெரிய கோடீஸ்வரனெல்லாம்  தற்கொலை பண்ணிட்டு செத்துட்டு இருக்காய்ங்க உனக்குத்தெரியாதா ? "
          "அடே ரூபாய் மதிப்பு குறைய குறைய டாலர் மதிப்பு கூட்டிட்டுத்தான் இருக்கு, அதனால எங்க NRI  பொருளாதாரத்தைச் சொன்னேன்"
"ஓ அப்படி ஒரு ஆங்கிள் இருக்கா?
          அதனால கீழே பென்னி கிடைச்சாலும் அதோட இந்திய மதிப்பு 70 காசுடா, விடுவேனா? –
“ ஹலோ, ஹலோ எங்கடா போன? பயபுள்ள தூங்கிட்டான் போல இருக்கு”
முற்றும்

அறிவிப்பு .
வரும் 
சனிக்கிழமை ஆகஸ்ட் 3ஆம் தேதி நியூ ஜெர்சியில் நடக்கும் கலைஞரின் முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலியில் அடியேன் கலந்து கொண்டு கவிதையொன்று வாசிக்கிறேன் ..அருகில் வசிக்கும் நண்பர்கள் உங்களுக்கு விருப்பமிருந்தால் கலந்து கொள்ளலாம். 


Image may contain: 1 person
Add caption

Thursday, December 17, 2015

சென்னையில் வெள்ளம் : வாட்ஸ் அப்பில் ரசித்தவை !!!!!!!!!!!!!!


Velacheri

தமிழகத்திற்கு காவிரியில் இருந்த நீர் திறக்க முடியாது - கர்நாடகா பதில் மனு தாக்கல்.
வேளச்சேரியில நிக்கிற தண்ணிய வச்சு வேல்டுக்கே சப்ளை பண்ணுவோம், போவியா !!!



மழைத் தண்ணி ரொம்ப தேங்கி இருப்பதால நான் ஆபிசுக்கு வர முடியாது, லீவு வேணும்.
பாஸ்:- உன்னோட பயோடேட்டால உன் ஹாபி ஸ்விம்மிங்னு  போட்டிருந்தேல்ல, ஆபிஸ் வந்து சேரு சீக்கிரமா.



ஜெயலலிதா மைன்ட் வாய்ஸ்:- தண்ணில சம்பாதிச்ச பணம் தண்ணியிலேயே போயிரும் போல இருக்கு.

மக்கள் மைன்ட் வாய்ஸ்:- இன்னிக்காவது பனியன் ஜட்டி காயுமா?



வாடிக்கையாளர் : என்னப்பா இது ரெண்டு இட்லி , ஒரு வடை கொண்டு வர ரெண்டு மணி நேரமா?
சர்வர் : இட்லியும் வடையும் ரெடியா இருக்கு , அம்மா பட ஸ்டிக்கர் வரத்தான் நேரமாகுது.


வருணன் : நான் இது வரை 350 சென்டிமீட்டர் மழை பெஞ்சிருக்கேன்
ரமணன் :இல்லை 340 தான்
வருணன் :பொய் சொல்ற , பெஞ்ச எனக்குத்தெரியாதா ?
ரமணன் :அளந்த நான் பொய் சொல்றேனா ? 340 சென்டிமீட்டர் தான்.
வருணன் : மறுபடியும் சொல்ற , சரி எல்லாத்தையும் அழி, நான் முதல்ல இருந்து பெய்யுறேன்.
 ரமணன் : ????????????????










  முற்றும் 



Monday, February 16, 2015

கெஜ்ரிவாலிடம் மோடி வித்தை - ஒரு கற்பனை உரையாடல்.

               Arvind Kejriwal and Narendra Modi. Agencies.

மோடி: ஹலோ கெஜ்ரிவாலா?.
கெஜ்ரிவால்: (இருமிக் கொண்டே) யெஸ், திஸ் இஸ் கெஜ்ரிவால், யார் பேசறது?.
மோடி: நான் PM பேசறேன்.

கெஜ்ரிவால்: போஸ்ட் மாஸ்டரா, அது ஸ்டேட் கவர்ன்மென்ட்ல வராதே.
மோடி: நான் மோடி பேசுறேன்
கெஜ்ரிவால்: என்ன பேடியா? (கிரண் பேடியா இருக்குமோ? என்ன இது குரலும் ஆம்பளை மாதிரி ஆயிருச்சு)
மோடி: (சத்தமாக) இல்லை, நான் மோடி பேசுறேன். ரெண்டு காதையும் மப்ளர் போட்டு கட்டிட்டா எப்படிக் கேட்கும் ?
கெஜ்ரிவால்: எந்த மோடி? சீக்கிரம் சொல்லுங்க (மூக்கை உறிஞ்சுகிறார்)
மோடி: யோவ் கெஜ்ரிவால், நான் நரேந்திர மோடி, பிரைம் மினிஸ்டர் பேசுகிறேன்.
கெஜ்ரிவால்: ஓ நீங்களா சொல்லுங்க, எங்க அரசாங்கம் எல்லோருக்கும் பொதுவானது. உங்க கோரிக்கையை ஒரு மனுவா எழுதி அனுப்புங்க.
மோடி: (எரிச்சலுடன்) யோவ் தேர்தல் வெற்றிக்கு வாழ்த்துச் சொல்லத்தான் கூப்பிட்டேன்.
கெஜ்ரிவால்: நன்றி நன்றி. சரி அப்புறம் உங்களை சந்திக்கிறேன். வச்சிரவா (தொண்டையைச் செருமுகிறார்)

மோடி: இரு, இருப்பா வச்சிராத. உன்ட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசனும்.
கெஜ்ரிவால்: சொல்லுங்க சாப், நிறைய வேலையிருக்கு.
மோடி: எப்படிய்யா, இது எப்படி நடந்தது ?
கெஜ்ரிவால்: இது என்னுடைய வெற்றியல்ல, ஜனநாயகத்தின் வெற்றி.
மோடி: உங்க வெற்றியைப் பாராட்டி பரிசுகள் அனுப்பியிருக்கிறேன் கிடைச்சுதா?
கெஜ்ரிவால்: என்ன பரிசு?
மோடி: ரெண்டு ஸ்வெட்டர், ரெண்டு மப்ளர், ரெண்டு மங்க்கி கேப்
கெஜ்ரிவால்: அது நீங்கதானா ரொம்ப நன்றி

மோடி: யோவ் கெஜ்ரி, ஒபாமாட்ட சொல்லி உனக்கு அமெரிக்காவுல ஸ்பெஷல் ட்ரிட்மென்ட்  கொடுக்கச் சொல்றேன், என்ட்ட வந்துடு.
கெஜ்ரிவால்: எதுக்கு தும்மலுக்கும் இருமலுக்குமா? அது என்னோட ட்ரேட் மார்க் ஆயிப்போச்சு. அது இல்லாட்டி மக்கள் என்னை கெஜ்ரிவால்னு ஒத்துக்க மாட்டாங்க.
மோடி: சரி அதைவிடு, உனக்கு மத்திய அரசாங்கத்தில் நல்ல பதவி தருகிறேன். உங்க கட்சியை BJP-யில் இணைத்துவிடு.
கெஜ்ரிவால்: என்ன பதவி?
மோடி: மனித வள மேம்பாட்டு இணை அமைச்சர்?
கெஜ்ரிவால்: அதுக்கு படிச்சவங்களை போட மாட்டீங்களே, அது  வெறும்  கிளாமர்  போஸ்ட்  ஆச்சே நோ.
மோடி: காமர்ஸ் மந்திரி?
கெஜ்ரிவால்: அதுக்குத்தான் புரூஸ்லி சாரி, ஜெட்லி இருக்காரே?
மோடி: உள்துறை மந்திரி?
கெஜ்ரிவால்: அது பா.ஜ.க, சங் பரிவார் உள்துறையை கவனிக்கவே சரியா  இருக்கும்.
மோடி: வெளிவிவகார மந்திரி?
கெஜ்ரிவால்: அதுக்குத்தான் நீங்க இருக்கீங்களே ?
மோடி: கவர்னர்?
கெஜ்ரிவால்: நோ, எனக்கென்ன அவ்வளவு வயசா ஆயிருச்சு ?
மோடி: அப்ப ஜனாதிபதி?
கெஜ்ரிவால்: மெளன விரதம் இருந்து எனக்குப் பழக்கமில்லை.( மீண்டும் இருமுகிறார்.)
மோடி: (ஆமாமா நீ இருந்தாலும் உன் தொண்டை இருக்காது). அப்ப என்னதான் பதவி வேணும் ?
கெஜ்ரிவால்: பிரதம மந்திரி பதவி வேணும், தர முடியுமா?
மோடி: (ஜெர்க் ஆகிறார் என்ன இது அடிமடியிலேயே கைவைக்கிறான்.)
கெஜ்ரி: உங்க பார்ட்டி எம் எல் ஏ மூன்று பேரும் என் கட்சியில சேர கெஞ்சுறாங்க. அப்படிப் பார்த்தா டெல்லியிலே  நூறு சதவீதம் என் கட்சிதான்.
மோடி: வேணா என் காவிப்படையை நீ தாங்க மாட்ட.
கெஜ்ரிவால்: காவிப்படையோ, ஆவிப்படையோ ஏன் மூவிப்படையோ கூட என்னை ஒண்ணும் செய்ய முடியாது. நான் அமித்ஷாவுக்கே அல்வா கொடுத்தவன்.
மோடி: சரி சரி ஒபாமா அடுத்த லைனில் வாராரு. நீ எனக்கு 5 நிமிஷத்தில் திரும்ப போன் பண்ணு, நான் உனக்கு பிரதமர் பதவியைத் தாறேன். - டோல் ஃப்ரீ நம்பர் 1-800-266-2020.
 மோடி போன் பக்கத்தில் உட்கார கெஜ்ரி அந்த நம்பரை டயல் செய்ய, மிஸ்டு காலாக போகிறது.
Embedded image permalink

மோடி: ஹலோ யாரு அமித்ஷாவா, உடனே பிரஸ் மீட்டைக் கூப்பிட்டு, கெஜ்ரி மிஸ்டு கால் கொடுத்து BJP-யில் சேர்ந்ததாக சொல்லிருங்க. யார்ட்ட!!!!!!!!

முற்றும்

Monday, April 7, 2014

சாலமன் பாப்பையா பட்டிமன்றத்தில் அடியேன் !!!!!!!!! . பகுதி 2


தற்சமயம் சன் டிவியில் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கும், பேராசிரியர் சாலமன் பாப்பையா தலைமையில் நியூஜெர்சி  தமிழ்ச்சங்கம் நடத்திய கல்யாணமாலை பட்டிமன்றத்தில் அடியேன் கலந்து கொண்டு “குடும்ப வாழ்வு  சுவைப்பது அமெரிக்காவில்தான்”, என்ற தலைப்பில் பேசிய முழு உரையின் இரண்டாவது பகுதியை இங்கு தருகிறேன்.
                                                   
                                                பகுதி 2

நான் மசக்கை வாந்தி என்று நினைத்தேன்.ஆனால்  நான் போட்டது சர்க்கரையில்ல, உப்பு.
பாடல்:
என் சமையலறையில் இருந்தது உப்பா சர்க்கரையா?
என் சமையலறையில் இருந்தது மிளகா சீரகமா?

ஒன்னும் தெரியாது ஐயா,
இதுல, து.பருப்பு, உ.பருப்பு, பா.பருப்பு என்று ஒரு வித்தியாசமும்  எனக்கு தெரியாது. வேற வேற இனிஷியல் இருக்கிறதால இந்த  பருப்புகளுக்கு வேற வேற அப்பான்னு நெனச்சேன்.ஆனால் இங்கே மனைவிக்கு சமையில் அறையில் உதவி செய்கிறேன். கடைக்குப்போய் காய் கறிகள் வாங்குகிறேன்.வெண்டைக்காயை ஒடித்துப்பார்க்க   வேண்டும் , கத்திரிக்காயை அமுக்கிப்பர்க்கவேண்டும் என்று எல்லாம் கற்றுக்கொண்டேன் ஐயா.  


ஐயா ஆண்களில் இரண்டு வகை.
ஒன்று மனைவிக்கு அடிமையாய் இருப்பார்கள்.ரொம்பப் பேர் இருப்பாங்க போல கைதட்டு   பலமா இருக்கு .
இல்லை மனைவியை அடிமைப்படுத்தி இருப்பார்கள். ரெண்டுமே தவறுதான்.
இதுல நீங்க எந்த வகைன்னு தெரியலை?
இதுல நான் ரெண்டாவது வகை. மனைவியை அடிமையாக நினைக்கும் ஆண் ஆதிக்க சமுதாயத்தின் மொத்த பிரதிநிதியாய் இருந்தேன். இங்கே வந்தபின்தான் அது தவறு என்று தெரிந்தது. ஏனென்றால் இங்கேதான் எந்த அழுத்தமும் இல்லாமல் அவளிடம் நெருங்கிப்பழக முடிந்தது.
இப்போது வண்டியின் சமமான இரு க்கரங்கள் போல் ஒருபுறம் என் மனைவியும் மறுபுறம் நானும் இருக்கிறோம். குடும்ப வண்டி சீராகப் பயணிக்கிறது.
பாடல்:
நான் என்றால் அது அவளும் நானும்
அவள் என்றால் அது நானும் அவளும்.

குடும்ப வாழ்வு அதனால் இங்குதான் சுவைக்கிறது ஐயா.

ஏப்ரல் மாதம் இருக்குமென நினைக்கிறேன். திடீரென்று ஒருநாள் மதியம் என் Friend டிடம் இருந்து phone வந்தது. பயந்தேவிட்டேன். ஏனென்றால் அது இந்தியாவில் நள்ளிரவுக்கு மேல். என்னடான்னு கேட்டா, application வாங்குவதற்கு லைனில் நிற்பதாகச் சொன்னான். “யாருக்குடா admission, மெடிக்கலா இஞ்சினியரிங்கா?”  என்று கேட்டதற்கு சொன்னான், “ டேய் விளையாடாதே, என் கடைசி மகளுக்கு LKG admission னுக்குத்தான் நிற்கிறேன் என்றான்.
“எந்த இடத்தில  நிக்கற?”
“St. Thomas Mount”
“St. Thomas Mount - ல் எந்த ஸ்கூல்?”
“டேய்  ஸ்கூல் இருக்கிறது T- நகரில், லைன்தான் இங்குவரை  இருக்குது”
“அடப்பாவி லைன் அவ்வளவு   நீளமா?”
        “அட நீ வேற , இதே ஸ்கூல்க்கு  என் மச்சான் ஸ்ரீ பெரும்புதூர் கிட்ட நிற்கிறான்”“டேய் டேய் , நான் ஏற்கனவே தமிழ்நாடு கவர்னர் ரெக்கமெண்டேஷன் வாங்கியாச்சு . நீதான் அமெரிக்காவில் இருக்கியே , கொஞ்சம் ஒபாமாவிடம்   ஒரு ரெக்கமெண்டேஷன் வாங்கி அனுப்புரியா”, என்று அப்பாவியாய் கேட்டான்
இந்தியாவில் ஒரு நல்லபள்ளியில் இடம் வாங்க, எவ்வளவு கஷ்டம் என்பது உங்களுக்கெல்லாம் தெரியும். இங்கு  என் பிள்ளைகள் படித்தது public School தான். என் பிள்ளைகள் 2001-ல் வரும்போது பள்ளிக்கு அழைத்துச் சென்றேன். பத்து நிமிஷத்தில்   முடிந்தது அட்மிஷன்.

 பாவம்யா என் பிள்ளைகள் இந்தியாவிலிருக்கும் போது தூங்கவேயில்லை.ஏனென்றால் –
காலையில் tuition,
மாலையிலும் tuition,
இரவிலே confusion.
எப்படி தூக்கம் வரும்.
அவர்களோடு சேர்ந்து நாங்களுமல்லவா படிக்க வேண்டியதிருந்தது. இங்கே அவர்கள் தாங்களாகவே படிக்கிறார்கள். வீட்டிற்கு வந்தால் relax  ஆக இருக்கிறார்கள். Home Work -ஐ பள்ளியிலேயே முடித்து வருகிறார்கள். Exam என்றாலும் படிப்பதேயில்லை. ஏன் படிக்கவில்லை என்று  கேட்டால் ?சும்மா வளவளன்னு பேசாதே Report Card -பாரு என்கிறார்கள். பார்த்தால்  96-98 % Average. 5-ஆவது படிக்கும்போதே - நல்ல student என்று பெயரெடுத்து Scholar’s Academy   என்ற ஸ்பெஷல் ஸ்கூலுக்கு Select ஆகி- அரசாங்க செலவில் படித்து, National Scholar’s Society யில் Member ஆக செலக்ட் ஆகி தூள் கிளப்பினாள்   என் பெண்.
எங்கள் பிள்ளைகள் எங்கள் உதவி எதுவுமில்லாமல் படிக்கிறார்கள். எனவே குடும்ப வாழ்வு சுவையாகவே இருக்கிறது அமெரிக்காவில்.

ஐயா நான் கூட இந்தியாவிலிருக்கும் போது சரியா தூங்கினதில்லை. ஏன்னா, எல்லா சீரியலையும் பார்த்துவிட்டு வரும் என் மனைவி - கனவிலே ஒரே அரட்டை. சித்தி என்ன ஆவாளோ - சித்தப்பாவுக்கு என்ன ஆகுமோ. ஒரு வழியா இந்த அரட்டை முடிந்தவுடன், குறட்டை ஆரம்பிச்சுரும். பிறகு எங்க நான் தூங்குகிறது. ஆனா இங்க அந்தப்பிரச்சனை அதிகம் இல்லை.

 கடைசியாக உறவுகளை கைவிட்டுவிட்டோம் என்று சொல்கிறார்கள்.
அப்படியல்ல, அங்கே நாங்கள் சம்பாதித்து எங்களுக்கே பத்தாமல் - தாய் தந்தை மற்றும் உறவினர்களிடம் நாங்கள் எதிர்பார்த்து வாழ்ந்தோம். எங்களால் அவர்களுக்கு எந்தப் பயனுமில்லை. எங்களைப் பார்த்தால் உறவினர்கள் ஓடி ஒதுங்கினார்கள்.  
-னால் இங்கு வந்த போது அவர்களுக்கும் உதவி செய்யும்படியாக நாங்கள் உயர்ந்திருக்கிறோம். எங்கள் மதிப்பு உயர்ந்திருக்கிறது. பெற்றோர்களை விமானத்தில் அழைத்து வந்து நயாகராவையும், வெள்ளை மாளிகையையும் சுற்றிக்காண்பிக்கிறோம். உறவுகளை நாங்கள் விட்டுவிடவில்லை. ஐயா, குடும்ப வாழ்வும் உறவும் அமெரிக்காவில் நன்றாகவே இருக்கிறது.

ஒரு ஆதாரத்தோடு முடிக்கிறேன்.
நாட்டை மறந்துவிட்டோம், துறந்துவிட்டோம் என்ற குற்றச்சாட்டு எங்கள் மேல் இருக்கிறது. ஆனால் உலகத்திலேயே தாய்நாட்டுக்கு பணம் அனுப்புவதில் இந்தியர்தான் முதலிடம் வகிக்கிறோம்  என்று உலக வங்கி சொல்கிறது.
2013-ல் இதுவரை 71 மில்லியன் டாலர், அதாவது இந்திய மதிப்பில் 4 லட்சத்து 40 ஆயிரம் கோடி அனுப்பியிருக்கிறோம்.
நாங்கள் எங்கள் குடும்பத்தோடு மகிழ்ச்சியோடு வாழ்ந்து, ஊரில் உள்ள எங்கள் உறவுகளுக்கு உதவி செய்வது மட்டுமல்ல, எங்கள் தாய் நாட்டுக்கும் அந்நியச் செலாவணி ஈட்டிக் கொடுக்கிறோம்.
எனவே குடும்பவாழ்வு சுவைப்பது அமெரிக்காவில் தான் என்பதை மனசாட்சியுள்ள எல்லா அமெரிக்க வாழ் இந்தியரும் தமிழரும் ஒத்துக் கொள்வார்கள் என்று கூறி, வாய்ப்பளித்த நியூஜெர்சி தமிழ்ச்சங்க நண்பர்களுக்கு நன்றி கூறி விடைபெறுகிறேன், நன்றி வணக்கம்.