Monday, August 29, 2016

சீனப்பேரரசியின் புஷ்பக விமானம் !!!!!!!!!!!!!!

சீனாவில் பரதேசி -20

Summer palace lake
இந்த சலவைக்கல் படகு, முதலில் மரத்தால் அமைக்கப்பட்டிருந்ததாம். 1755-ல் சிங்லாங் பேரரசர் (Qianlong Emperor) காலத்தில் ,  இந்த இடத்தில் கீழே பெரிய பெரிய கற்பலகைகளை போட்டு, அதன் மேல் உறுதியான மரத்தால் ஒரு அழகிய படகு அமைக்கப்பட்டது. சீனர்களின் கட்டடக்கலை பெரும்பாலும் மரத்தால் அமைக்கப்படுகிறது என்று ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். அதனால் எளிதில் தீயினால் எரிந்து போவதற்கு வாய்ப்பிருக்கிறது. விலக்கப்பட்ட நகரம் கூட இருமுறை எரிந்து போனது என்பது உங்களுக்குத் தெரியும்.

அதே போலவே 1860ல் நடந்த ஓப்பியம் போரில், ஆங்கில ஃபிரெஞ்சுப் படைகளினால் இந்த அமைப்பு முற்றிலுமாகத் தகர்ந்து போனது. அதன்பின் 1893ல் தான் பேரரசி சிக்சியால் இது மீண்டும் நிர்மானிக்கப்பட்டது. அந்தச் சமயத்தில் தான் இரு அடுக்குகளைக்  கொண்ட இந்த மாபெரும் படகு கொஞ்சம் ஐரோப்பியக் கட்டடக்கலையினையும் இணைத்து கட்டப்பட்டது.  

மேக நோயால் இறந்துபோன தன் மகனுக்குப்பதிலாக தன் உறவினனான குவாங்சு பேரரசை நியமித்தாலும்,பேரரசி சிக்ஸி  அதிகாரம்முழுவதையும் தன் கையில் மட்டுமே வைத்துக் கொண்டாள். ஒரு சமயத்தில் தன்னிச்சையாக செயல்படத்துணிந்த பேரரசரை அங்கே வீட்டுச் சிறை சாரி அரண்மனைச் சிறையில் அடைத்து வைத்ததையும் ஏற்கனவே சொன்னேன்.
Image result for marble boat in summer palace
Marble boat.

எனவே வலுவில்லாமல் இருந்த கப்பற்படையை மீட்டு உருவாக்க ஒதுக்கப்பட்ட பணத்தில் 22 மில்லியன் வெள்ளிக் காசுகளை எடுத்து  (1 மில்லியன் என்பது 10 லட்சம் என்று கணக்குப் பார்த்தால் இது 2 கோடியே 20 லட்சம் வெள்ளிக் காசுகள் ஆகும், அடேங்கப்பா) சம்மர் பேலஸை மராமத்து  செய்வதற்கு கட்டளையிட்டார். அதில் பெரும்பகுதி இந்த மார்பிள்  படகுக்குச் செலவழிக்கப் பட்டதாம்.   

எதற்கு இந்த ஆடம்பரம் என்றால் பேரரசி சிக்ஸியின் 60 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு இது அமைக்கப்பட்டதாம். பேரரசரின் ஆலோசகர்கள், தளபதிகள் குறிப்பாக கப்பற்படைத்தளபதிக்கு இது கொஞ்சம் கூட பிடிக்கவில்லை. ஆனால் வாயைத்திறந்தால் பதவி மட்டுமல்லாமல் தலையும் போய்விடும் என்பதால் மூச்சு விடவில்லை.
File:Marble Boat from stern, Summer Palace, Beijing.jpg
Add caption

இளவரசர் சுன் (chun) என்பவர்தான் கப்பற்படைக்கு பொறுப்பேற்று இருந்தவர். காலாட்படை மிகவும் வலுவாக இருந்தாலும் சீனாவுக்கு புதிது புதிதாக வந்த ஐரோப்பிய எதிரிகள் கடல் வழியாக வந்ததால் அவர்களை தடுப்பதற்கு வேண்டிய பலம் சீனாவிடம் இல்லை. ஓப்பியம் போர் போன்ற தாக்குதல்கள் கடல்வழிதான் நடந்தது.அதனால் தான் கப்பற்படையை வலுப்படுத்த இளவரசர் சுன் என்பவர் தலைமையில் குழு அமைக்கப்பட்டதோடு அதற்குத் தேவையான நிதியும் ஒதுக்கப்பட்டது.

ஆனால் இவருக்கு இந்தப்பதவி கொடுத்தவர் பேரரசி சிக்ஸி  ஆவார். அது மட்டுமல்லாமல் சிக்ஸியின் மகன் இறந்து போனதால் சுன்  அவர்களின்  மகனையே தத்தெடுத்து பேரரசராக தேர்ந்தெடுத்தவரும் சிக்ஸிதான் . அந்தப் பேரரசர்தான் குவாங்சு பேரரசர். அப்படியிருக்கும் போது பேரரசி சிக்ஸியின் 60-ஆவது பிறந்த நாளுக்கு கப்பற்படைக்கு ஒதுக்கிய பணத்தைச் செலவழித்தால் அதனை இளவரசர் சுன் எப்படித் தட்டிக்கேட்க முடியும் அல்லது பேரரசர்தான் எப்படித் தட்டிக்கேட்க முடியும்.

ஆனால் அன்று ஆடம்பரமாகப் பார்க்கப்பட்ட இது, இன்று  கலைப்படைப்பின் உச்சமாக மதிக்கப்பட்டு உலகமெங்கிலும் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளைப் பரவசத்தில் ஆழ்த்துகிறது. தாஜ்மஹால்  கூட அப்படித்தானே கட்டப்பட்டது.

ஒவ்வொரு தளத்திலும் ஒரு பெரிய கண்ணாடி இருக்கிறது. இது ஏரியின் நீரைப் பிரதிபலிப்பதால் படகு நகர்வதுபோலவே தெரிகிறது. இருபுறமும் உள்ள துடுப்புச் சக்கரங்கள் ஏதோ உண்மைப்படகு போலவே தோற்றமளிக்கிறது. இந்தப்படகின் ஓரங்களில் உள்ள வெற்றுத் தூண்கள், மேல் மாடியிலோ கீழோ தேங்கும் நீரை வெளியேற்றும் வண்ணம் அமைக்கப்பட்டிருக்கின்றன .இந்த மழை நீர் வெளியேறுவதற்கு நான்கு டிராகன் தலைகள் அமைக்கப்பட்டு மழைநீர் அதிகமாகும் போது அது தூண்கள் வழியே கீழே வந்து டிராகன் தலைகளின் வாயிலிருந்து வெளிப்படுமாம். அப்போது பார்க்க அது ஒரு மாபெரும் புஷ்பக விமானம்போல் காட்சியளிக்குமென லீ சொன்னான். ஆனால் குளிர்காலத்தில் வந்த எனக்கு அதைப்பார்க்க வாய்ப்பில்லை என பெருமூச்சு விட்டேன். இந்தப் படகு அமைக்கப்பட்டதற்கு ஒரு சுவாரஸ்யமான கதை ஒன்றை லீ சொன்னான். 
 
Paradesi in front of Marble Boat.
பேரரசர் டைஜோங் (TAIZONG) ஆளும் போது ,அவர் கீழே இருந்த வெய் ஜெங்   (Wei zheng) என்ற மதிமந்திரி, பேரரசரிடம் ஒரு  கருத்தைச் சொல்லியிருக்கிறார். "படகை மிதக்க  வைக்கும் நீர், அந்தப் படகையே சில சமயங்களில் கவிழ்த்து விழுங்கி விடும்" என்று சொன்னாராம். அதன் அர்த்தம், "பேரரசரை உயர்த்தி வைக்கும் மக்களை நன்கு கவனிக்காவிடில், அந்த மக்களே பேரரசரை கவிழ்த்து விடுவார்கள்" என்பதாகும். இதனை மனதில் வைத்துக் கொண்டு தான் சிங்லாங் பேரரசர் ஒரு பெரிய படகை கல்லின் மேல் நிரந்தரமாக அமைத்து பேரரசையோ பேரரசரையோ யாரும் கவிழ்க்க முடியாது என்று சொல்லும் வகையில் நிறுவினாராம்.

கன்மிங் ஏரியின் ஒருபகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் இந்தப்படகு 36 மீட்டர் நீளமும் எட்டு மீட்டர் உயரமும் கொண்டது.

பேரரசி சிக்ஸி சில சமயங்களில் தன்னைப்  பார்க்க வருபவர்களை இங்கேயே சந்தித்தாராம். இரவு வேளையில் நிலாக்காலங்களில் இந்தப் படகில் அமர்ந்து பொழுதுபோக்குவது அவருக்கு மிகவும் பிடித்த ஒன்றாம்.

நீரும், நிலமும், கோவில்களும், அரண்மனைகளும் சூழ்ந்து அந்த இடம் தேவலோகம் போலக் காட்சியளித்தது. அங்கிருந்து பிரிந்து வருவதற்கு மனசே இல்லாவிட்டாலும் சீன அக்ரோபேட்டிக் ஷோவுக்கு நேரமாகிவிட்டது என்று  லீ சொன்னதால் அங்கிருந்து கிளம்பி வெளியே வந்தோம்.

உள்ளேயிருந்து வெளிவந்து மறுபடியும் சப்வே பயணம் செய்து பீஜிங்கின் மையப்பகுதிக்குச் சென்றோம். சீன அக்ரோபேடிக் ஷோ நடக்கும் பிரமாண்ட தியேட்டருக்கு அருகில் சென்றோம். தியேட்டரில் கூட்டத்தைக் காணோம். ஆனால் அதன் அருகில் உள்ள சிறுகடையின் முன் நீண்ட வரிசையில் மக்கள் நின்றனர். லீயைக் கேட்டேன் ,தியேட்டருக்கு டிக்கட் இங்குதான் வாங்க வேண்டுமா? என்று.

- தொடரும்

Thursday, August 25, 2016

இட்லி , தோசையை ஒதுக்காதீர்கள் !!!!!!!!!!!!!!!!

தமிழர் திருவிழா :Fetna - 6

Paradesi with Dr.Sivaraman

தமிழர் திருவிழாவின் இன்னொரு சிறப்பு விருந்தினர், Dr. சிவராமன்.  இவர் சித்த வைத்தியர் என்றாலும், மேடைப் பேச்சுகளில் சிறந்து விளங்குவதாலும், தொலைக்காட்சி மற்றும் பத்திரிகைகளில் அடிக்கடி தலைகாட்டுவதாலும், பெரும்பாலான தமிழருக்கு அறிமுகமானவர். முதல் நாளில் இவருடைய சொற்பொழிவு ஒன்று இருந்தது. தமிழரின் பாரம்பரிய உணவுகளான இட்லி, புட்டு, ஆப்பம் ஆகியவை உடலுக்கு எவ்வளவு நல்லது என்றும் அதைவிட்டுவிட்டு பிட்சா, பர்கர் என்று  மேற்கத்திய உணவு வகைகளை நாடுவது மிகவும் தவறு என்றார். அதோடு எந்த மாதிரி உணவுகளை, சிறுவயது முதல் சாப்பிட்டு வருகிறோமோ அதனை திடீரென்று மாற்றிவிட்டு, முற்றிலும் புதிதான உணவுகளைச் சாப்பிட ஆரம்பித்தால் ,நமது டைஜஸ்டிவ் சிஸ்டம் குழம்பிப் போய் சரியாக செரிமானம் ஆகாது என்றும் சொன்னார். திருமூலர் பாடல்களைச் சொல்லி தமிழர் எவ்வாறு சத்தான உணவுவகைகளை உண்டனர் என்றும் விளக்கினார். Dr. சிவராமன் தமிழில் நல்ல சொல்வளமும் பொருள் வளமும் கொண்டு பேசியது அனைவரையும் ஈர்த்தது.
Image result for Dr.Sivaraman in Fetna 2016
Add caption

அதுதவிர அவர் தலைமையில் கருத்துக்களம் ஒன்றும் நடந்தது.நல வாழ்விற்கு பெரிதும் உதவுவது உணவா மருந்தா?” என்பதுதான் தலைப்பு . கலந்து கொண்ட மக்கள் இருபிரிவாகப் பிரிந்து நாம் உண்ணும் உணவு வகைகளைப் பற்றி விவாதித்தனர். மிகவும் சிறப்பாக அமைந்த இது புதுமையான ஒன்றாகும்.

அதன் பின்னர் ஒரு சமயத்தில் அவரைச் சந்திக்க சந்தர்ப்பம் கிடைத்தது. அவரிடத்தில் என்னுடைய சில சந்தேகங்களைக் கேட்டேன்.
பரதேசி: நான் இட்லி தோசையை விட்டுவிட்டு இப்போது ‘ஓட் மீல்’  மட்டுமே சாப்பிடுகிறேன்.

Dr.சிவராமன்: “இட்லி தோசையை விட வேண்டியதில்லை, அளவாக உண்டால் அது போன்ற நல் உணவு  இல்லை”.  
"தொட்டுக் கொள்ள சட்னி நல்லதா சாம்பார் நல்லதா?"
“தேங்காய் சட்னியோ, தக்காளிச் சட்னியோ மிகவும் நல்லது. தேங்காயை ஒதுக்குவது தவறு. தேங்காயில் நல்ல குணங்கள் பல இருக்கின்றன."
“அரிசி சாதம் உடலுக்குக் கெடுதலா?”
“இல்லவே இல்லை, புழுங்கல் அரிசி அல்லது பார்பாய்ல்டு அல்லது பிரௌன் அல்லது மட்டை அரிசி சாப்பிடலாம். அளவை மட்டுமே பார்த்துக் கொள்ள வேண்டும்”.
“அரிசியை நிறுத்திவிட்டு கோதுமையை அதிகமாக உட் கொள்ளலாமா?”
“தேவையில்லை, அரிசியிலும் கோதுமையிலும் ஒரே அளவு மாவுச் சத்துதான் இருக்கிறது”.
“பின்னர் ஏன் மருத்துவர்கள் சர்க்கரை வியாதி உள்ளவர்களை கோதுமை சாப்பிடச் சொல்கிறார்கள் ?”.
“அதற்குக் காரணம் அரிசி என்றால் நாம் அதிகமாகவும், கோதுமைச் சப்பாத்தி அல்லது ரொட்டி என்றால் குறைவாகவும் சாப்பிடுவதால்தான். அதோடு உணவில் சிறு தானியங்களை அதிகமாகச் சேர்த்துக் கொள்ளலாம். அதில் குறைந்த மாவுச் சத்தும் அதிக புரதமும் இருக்கின்றன”.
“நமக்கு அரிசி தவிர மற்றவை எவையும் ஏன் பிடிப்பதில்லை ?”.
“அதற்குக் காரணம், ஒன்று நமக்கு பழக்கமில்லை, இன்னொன்று நாம் முயல்வதில்லை”.  
“இதிலிருந்து எப்படி வெளியே வரலாம்?”.
“ஒன்றை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும், அரிசியை நாம் விரும்புவது வெறும் சாதத்தால் அல்ல. அதில் ஊற்றிச் சாப்பிடும் சாம்பார், ரசம், புளிக்குழம்பு, வத்தல் குழம்பு மற்றும் அசைவ குழம்பு வகைகளால் தான். இதே குழம்பு வகைகளை, எந்த சிறு தானிய சோற்றில்  ஊற்றிச் சாப்பிட்டாலும் சுவையாகவே இருக்கும். எல்லாம் மைன்ட் செட்தான்”.
“எண்ணெய் வகைகளில் எதைச் சாப்பிடலாம் எதை தவிர்க்கலாம்”?
“தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய், நல்லெண்ணெய் ஆகிய எல்லா எண்ணெய் களும் அளவாகப் பயன்படுத்தினால் நல்லதுதான்”.
“எனக்குச் சர்க்கரை இருக்கிறது, என் அப்பா கொடுத்த பரிசு”.
“சர்க்கரை நோய் யாருக்கு இல்லை? கவலைப்பட வேண்டாம். நல்ல உடற்பயிற்சி, இயற்கை உணவுகள், பச்சைக்காய் கறிகள், அளவான மாவுச்சத்து, பேலன்ஸ்ட் டயட் ஆகியவற்றைக் கடைப் பிடித்தால் நூறு ஆண்டுகள் வாழலாம்”.

 “ஆங்கில மருந்துகளை எடுத்துக் கொள்ளலாமா?”
“சித்த மருந்துகள் பக்கவிளைவுகளை ஏற்படுத்துவதில்லை. ஆனால் ஆங்கில மருந்துகள் ஏற்படுத்தும். அதற்காக ஏற்கனவே எடுத்துக் கொண்டிருக்கும் ஆங்கில மருந்துகளை முற்றிலுமாக நிறுத்திவிடலாகாது. சித்த மருந்துகள் காலங்காலமாக நம் மக்களால் பயன்படுத்தப்பட்டு வந்தவை. அதனை எடுத்துக் கொள்ள ஆரம்பித்து, மெதுவாக உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படும்போது, ஆங்கில மருந்துகளை படிப்படியாக குறைத்துக் கொள்ளலாம்”.

“சித்த மருந்துகள் இயற்கைப் பொருட்களிலிருந்து செய்வதால் உடலோடு இணைந்து செயல்படும். ஒவ்வாமை ஏற்படாது. அதுவும் உணவு போல்தான். சித்த மருத்துவத்தில் உணவே மருந்து, மருந்தே உணவு. ஆங்கில மருந்துகள் உடனடியாக செயல்படும், அதனால் பக்கவிளைவுகள் அதிகம். சித்த மருந்துகள்  மெதுவாக செயல்படும், ஆனால் பெரும்பாலான நோய்களை முற்றிலுமாகக் குணப்படுத்தும். ஆங்கில மருந்துகள் உடலுக்கு சோர்வைக் கொடுத்து, உடலைப் பலவீனப்படுத்தும் ஆனால் சித்த மருந்துகளோ உடம்பை பலவீனப்படுத்தாது .ஆயிரம் ஆயிரம் காலமாக நம் சித்தர்கள் பயன்படுத்தி வந்த இந்த மருந்துகள் நன்மை மட்டுமே பயக்கும்”.
Dr.Sivaraman, NJ 2016 6

“இங்கே நீங்கள் ஒரு மருத்துவமனை ஆரம்பித்தால், நான் தான் உங்களின் முதல் பேஷன்ட்”.
"விரைவில் சில கிளைகள் ஆரம்பிக்கப்பட்டு, நான் அடிக்கடி வந்து செல்வது போல சில ஏற்பாடுகளை வாஷிங்டன் நண்பர்கள் சிலர் செய்கிறார்கள்"
அவ்வாறு சொன்னது ஆறுதலாக இருந்தது. நூறாண்டு காலம் , நோய் நொடியில்லாமல் வாழ விருப்பமா மக்களே ?

-  தமிழர் விழா பதிவுகள் தொடரும்.

Monday, August 22, 2016

சீனப்பேரரசியின் காம சூட்சுமங்கள் !!!!!!!!!!!

சீனாவில் பரதேசி-19

Empress Cixi

பேரரசிகள், பேரரசருடன் எவ்வளவு நெருக்கமாக இருக்க முடியுமோ அந்த அளவுக்கு முயல்வார்களாம். ஏனென்றால் பல மனைவிகள் மற்றும் ஏராளமான வைப்பாட்டிகள்  இருப்பதால், பேரரசர் ஒவ்வொரு நாளும் புதிசு  புதுசாகவும் தினுசு தினுசாகவும் தான் தேர்ந்தெடுப்பார்கள். அதோடு ஒவ்வொரு மூன்று வருடத்திற்கு ஒரு முறை புதிதுபுதிதாக வைப்பாட்டிகள் வந்து குவிவார்கள். மிகப்பெரிய நாடான சீன தேசம் முழுவதிலிருந்தும், கவர்னர்கள், ராணுவ அதிகாரிகள் அனைவரும், தங்கள் மகள்கள் அரண்மனையில் வாழ்க்கைப்பட விரும்பி, சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் காணிக்கையாக அனுப்பி வைப்பார்கள். அதுமட்டுமல்ல அவர்களுக்கு குழந்தை பிறந்தால் அவர்களின் மதிப்பும் செல்வாக்கும் உயரும்.  

எனவே விலக்கப்பட்ட நகரில் பேரரசரின் மனைவி மற்றும் வைப்பாட்டிகள் தவிர, அவரின் தந்தை, தாத்தா போன்றோரின் மனைவி, வைப்பாட்டிகளும் ஏராளமாக வாழ்ந்து வந்தனர்.

Empress Cixi with her Eunochs

இந்த ஒவ்வொரு மனைவிகளுக்கும் ஒரு அடையாள வில்லை இருக்கும். அரண்மனையின் தலைமை அரவான் அதனை ஒரு தங்கத் தட்டில் போட்டு பேரரசரிடம் எடுத்துச்செல்ல பேரரசர் அதில் ஒன்றை தேர்ந்தெடுப்பார் . தேர்ந்தெடுத்தவுடன் அந்தப் பேரரசியை அவரின் தோழிகள் நீராட்டி நறுமணத் தைலங்கள் பூசி முடித்து ரெடியானவுடன், அப்படியே நிர்வாணமாக கம்பளத்தில் சுற்றி வைக்க, அரவான்கள் வந்து அவரைத்தோளில் சுமந்து உள்ளே போய் பேரரசரின் படுக்கையில் உருட்டி விட்டு வந்துவிடுவார்கள்.

பேரரசரின் மூடைப் பொறுத்து கூடுவார் அல்லது மறுபுறம் திரும்பி குரட்டைவிட்டுத் தூங்குவார். பேரரசர்களுக்கு சுவாரஸ்யம் இல்லாமல் போவது இது அடுத்த வாரிசுக்காக ,ஆண்பிள்ளை பெறுவதற்காக நடக்கும் சடங்கு போல நடப்பதால் தான். ஆனால் பேரரசிகளுக்கு இது மிகவும் முக்கியம். ஏனென்றால் தப்பித்தவறி  இவர்கள் கர்ப்பமுற்று அதுவும் ஆண்பிள்ளையைப் பெற்றுவிட்டால் அவர்களுக்கு கூடுதல் மதிப்பும் மரியாதையும் வருவதோடு தன் மகன்  பேரரசராக அமர்ந்தால் அம்மாவின் ஆட்சியும் சேர்ந்தே நடக்கும்.

ஆனால் அதற்குள் எத்தனை பாடுகள். முதலில் பேரரசர்களின்  அம்மாவின் தயவு வேண்டும். இரண்டாவது, தலைமை அரவானின் தயவு வேண்டும். பேரரசர் தேர்ந்தெடுத்தாலும் அவர் கூட வேண்டும். கூடினாலும் கர்ப்பமாக வேண்டும். கர்ப்பம் தரித்தாலும் குழந்தை வளராதபடி மற்ற அரசிகள் செய்யும் பலவித சூழ்ச்சிகளிலிருந்து தப்பிக்க வேண்டும். அப்படியே பிறந்தாலும் அது ஆண்பிள்ளையாக இருக்க வேண்டும். பிறந்த குழந்தை பல்வேறு சூழ்ச்சிகள் மத்தியில் நலமாக வளர்ந்து, பல சகோதரர்களுடன் போட்டியிட்டு பேரரசர் ஆக வேண்டும். அரச வாழ்க்கை என்பது உண்மையிலேயே கஷ்டம்தான்.

இதில் இந்த வைப்பாட்டிகளின் நிலைமை இதைவிட மோசம். வருடம் ஒருமுறை, இல்லை இல்லை வாழ்க்கையில் ஒருமுறை கூட கூடுவதற்கு சந்தர்ப்பம் கிடைக்குமா? என்பது சந்தேகம்தான். தங்களின் இச்சைகளை ஓரினச் சேர்க்கை மூலம் மட்டுமே நிறைவேற்றிக் கொள்ள முடியும். ஏனென்றால் பரந்து விரிந்த ஆயிரக்கணக்காணோர் தங்கியிருக்கும் விலக்கப்பட்ட நகரில் ஆண் என்பது பேரரசர் ஒருவர் மட்டுமே. மற்றவர்கள் அனைவரும் பெண்கள் அல்லது அலிகள் மட்டும்தான். இயற்கையாகவோ அல்லது செயற்கையாகவோ விதை நீக்கம் செய்யப்பட்டவர்கள் மட்டுமே உள்ளே தங்க முடியும்.  அரண்மனையின் உள்ளே பாதுகாப்புக்கு உள்ள அனைவரும் அலிகள்தான். ஆண்மைதான்  நீக்கப்பட்டிருக்கிறதே தவிர திடமானவர்கள்.

Full length color image of Hsien-Feng Emperor aka. Xianfeng Emperor, by George Stuart.
Emperor Xianfeng
பேரரசி சிக்சி தம் கணவரான  சியான் ஃபெங் பேரரசருடன் ( Xianfeng) திருமணம் நடந்த பின் மிகுந்த திறமையுடன் திட்டமிட்டாள். யாருக்கும் தெரியாமல் மாறுவேடமிட்டு தன் நம்பிக்கைக்குகந்த அலியுடன் வெளியே சென்று அங்கிருந்த விலை மாதர் இல்லம் சென்று கூடல் முறைகளையும், ஆண்களுக்கு அதீத இன்பம் கொடுக்கும் இரகசியங்களையும் கற்றுத் திரும்பினாள். அதன்பின் லஞ்சம் கொடுத்து தலைமை அலியுடன் ஒரு டீல் பேசி, தான் பேரரசரின் படுக்கையறைக்கு செல்லும்படி ஏற்பாடு செய்தாள். ஒரே ஒரு முறை வாய்ப்பு கிடைத்ததும் படுக்கையில் கற்றுக்கொண்ட வித்தைகளைக் காண்பிக்க, அசந்துபோன பேரரசர் தினமும் அவளையே கேட்டார்.

அதுமட்டுமல்லாமல் நல்ல படிப்பும் அறிவும் இருந்ததால், பேரரசருக்கு அந்தரங்க ஆலோசகராகவும், தோழியாகவும் மாறிப்போனாள். தனக்கு எதிராக நடந்த அத்தனை சூழ்ச்சிகளையும் முறியடித்து பிள்ளைகள் பெற்றுக் கொண்டாள். முதல் குழந்தை எவ்வளவோ ஜாக்கிரதையாக இருந்தும் இறந்துவிட, இரண்டாவது குழந்தையை மிகவும் கவனமாக வளர்த்து அடுத்த பேரரசராக முடிசூட்டும் வரை அவள் ஓயவில்லை. சிறுவயதில் பேரரசராக  பட்டமேற்கொண்டாலும், அன்னையையே ஆட்சி செய்யவிட்டு எதிலும் அக்கறை இல்லாமல் நடந்து கொண்ட  டோங்சி  பேரரசர் (Tongzhi Emperor) மனைவிகள் வைப்பாட்டிகளுடன் சம்பிரதாய கூடுதலை வெறுத்து தெரியாமல் நண்பனுடன் அடிக்கடி வெளியே போய் பரத்தையருடன் கூடியதால் மேக நோய் தாக்கி சிறுவயதில் இறந்து போனான்.
Tongzhi Emperor
இடிந்து போன பேரரசி சிக்ஸிசுதாரித்துக் கொண்டு தன் உறவினரான குவாங்க்சுவை பேரரசராக்கிவிட்டு  வழக்கம் போல் தொடர்ந்து ஆட்சி செலுத்தினாள் .

அவளைப்பற்றி நான் படித்த புத்தகத்தின் மதிப்புரையை இங்கே சொடுக்கிப் படிக்கலாம். http://paradesiatnewyork.blogspot.com/2013/05/blog-post_1.html
Guangxu, Emperor 
அப்படி நடந்த ஆட்சியானது, பல பேரரசர்களின் ஆட்சியை விட சிறப்பாகவே இருந்தது என வரலாறு சொல்லுகிறது. பேரரசிக்கு அதீத அதிகாரங்கள் இருந்தன. உள்ளேயும் வெளியேயும் வந்த ஏராளமான பிரச்சனைகளை திறமையுடன் சமாளித்தாள். அப்படி அவள்  காலத்தில் அவளுடைய பிறந்த நாள் பரிசாகக் கட்டப் பட்ட முற்றிலும் சலவைக் கல்லால் அமைந்த பெரிய படகு அல்லது கப்பல் போன்ற அமைப்புதான் என்முன்னே பளபளவென்று ஜொலித்தது. கப்பற்படையைப் பெருக்க ஒதுக்கப்பட்ட பணத்தில் பெரும்பாலும் இந்த மார்பிள் படகுக்கு செலவழிக்கப்பட்டது என்று குற்றச்சாட்டும் உண்டு.

இந்த மார்பிள் படகைப்பற்றி பல தகவல்களை லீ சொன்னான். ஒவ்வொன்றும் ஆச்சரியமூட்டும் வரலாற்றுத் தகவல்கள். அதை அடுத்த வாரம் சொல்கிறேனே.


- தொடரும்.

Thursday, August 18, 2016

நியூ ஜெர்சி தமிழர் திருவிழாவில் பறை ஆட்டம் !!!!!!!!!


FETNA-5


நான் நிறைய தமிழ்ச் சங்க நிகழ்வுகளுக்கும், கொண்டாட்டங்களுக்கும் போயிருக்கிறேன். ஆனால் Fetna -வின் விழாவில் தமிழ் உணர்வு அதிகமாகக் காணப்பட்டது போல் தெரிந்தது.  எந்தத் தமிழ் விழாவும் ஒரு மாலை நேரத்தில் ஆரம்பித்து 2 அல்லது 3 மணிநேரத்துக்கு மேல் போகாமல், மிஞ்சிப் போனால் ஒரு இரவு உணவுடன் முடிந்துவிடும். ஆனால் ஃபெட்னா நிகழ்வு, நான்கு நாட்கள் நடந்து அங்கேயே தங்கியிருந்து தமிழமுதம் பருகியதால் ஒருவேளை எனக்கு அப்படித்தோன்றியதோ என்னவோ?.
ஃபெட்னா விழாவில் கலந்து கொண்ட ஒவ்வொரு தமிழ்ச்சங்கமும் குறைந்தபட்சம் ஒரு கலை நிகழ்ச்சியைக்கொடுத்தனர். அவை நடனங்கள், நாட்டிய நாடகங்கள் இசை, மேடை நாடகங்கள் போன்றவற்றை உள்ளடக்கி இருந்தன.

குறிப்பாக தமிழ் விழாக்களில், நடன நிகழ்ச்சிகளில், பரத நாட்டியம் தான் பிரதானமாக இருக்கும். அல்லது சினிமாப் பாடல்களுக்குஆடும் நிகழ்ச்சிகள் நடக்கும்.
ஆனால் நான் பார்த்து அதிசயத்த ஒரு நிகழ்வு என்ன வென்றால், இவ்விழாவில் தமிழரின் பாரம்பரிய நடனங்களான, மயிலாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரை ஆகியவை பிரதான இடம் பிடித்தன.
குறிப்பாக வாஷிங்டன் தமிழ்ச்சங்கம் நடத்திய சிறப்பு நிகழ்ச்சியில்,  வில்லுப்பாட்டு, காவடி, புலியாட்டம், மொளப்பாரி, கும்மியாட்டம், கரகாட்டம், பொம்மலாட்டம், குறவன் குறத்தி என்று முற்றிலும் தமிழரின் பாரம்பரிய நடனங்களைக் கொடுத்து அசத்தினர்.
அதே போல் டெலவர் தமிழ்ச்சங்கமும் அதற்கு அடுத்த நாள் ஜீலை 3ஆம் தேதி, கரகாட்டம், ஒயிலாட்டம், புலிவேஷம், மயிலாட்டம் ஆகியவற்றை ஆடி மகிழ்வித்தனர்.

இதைத்தவிர கனக்டிக்கட் தமிழ்ச் சங்கம் தமிழரின் பாரம்பரிய இசைக்கருவியான, பறை ஆட்டம் ஆடி அதிசயிக்க வைத்தனர். அதன் தலைவர் பறை என்பது ஒரு தாழ்த்தப்பட்டவர் பயன்படுத்தும் சாவு இசைக்கருவி இல் லை, அது தமிழரின் பாரம்பரிய கொண்டாட்ட இசைக்கருவி என்று சொல்லி, பறைமேல் பலர் கொண்டிருந்த தப்பான எண்ணத்தை மாற்றினார். அதோடு ஆண்களோடு பெண்களும் இணைந்து பறை வாசித்தது அதிசயிக்க வைத்ததோடு சிறுபிள்ளைகளும் வாசித்தனர்.

நியுஜெர்சி தமிழ்ச்சங்கம் 'பஞ்ச பூதங்கள்'  என்ற தலைப்பில் நடத்திய நாட்டியத்தில் பஞ்சபூதங்களின் பெயரில் வரும் சினிமாப் பாடல்களுக்கு ஆடி அசத்தினர், காற்றே என் வாசல் வந்தாய், நீ வரும்போது, தீ தித்திக்குதே, கலகவென மேகம் ஆகிய பாடல்களைக் உட் கொண்டதாய் அது அமைந்தது.
NJ தமிழ்ச்சங்கம் ஆடிய “திருமந்திரம்’ நடனமும் நன்றாகஇருந்தது. விசா பிரச்சனையால் வரமுடியாது போன "கங்கை கொண்ட சோழன்" நாட்டியக்குழுவுக்குப் பதிலாக, ராஜராஜ சோழனின் நாட்டிய நாடகம் நடந்தது .மகனின் வரலாறு இல்லாவிட்டாலும் அப்பாவின் வரலாறு அதை விடப்பெரிதுதானே. ராஜராஜ சோழனின் ராஜபவனி கலையரங்கத்தின் முற்பகுதியிலிருந்து பார்வையாளர்கள் வழியாக நடந்து மேடைக்குப் போனது எதிர்பாராதது. அதேபோல ஜீலை 3ல் நடந்த "சீதா சுயம்வரம்" நாட்டிய நாடகமும் சிறப்பாக இருந்தது. குறிப்பாக நாட்டிய உறுப்பினர்களே தேர் போல உருமாறி ராம பவனி வந்தது மிகவும் தத்ரூபமாக இருந்தது.  
டாக்டர் பாலா சுவாமி நாதன் நடத்தும் ‘நியூயார்க் தமிழ்ப்பள்ளி’ சார்பாக நடந்த ஸ்கிட்டில் சிறுபிள்ளைகள் தமிழில் பேசி தமிழ்ப்பள்ளியை மேடையில் கொண்டுவந்த தனர். அது எவ்வளவு சிரமம் என்பது இங்கு வளரும் பிள்ளைகளின் தந்தையாகிய எனக்கு நன்கு தெரியும்.
அதேபோல் நியூயார்க் தமிழ்ச்சங்கம் வழங்கிய கண்ணகி நாடகம், சில நாட்டியங்களை உள்ளடக்கி நடந்தது. சிறந்த நாட்டியக்கலைஞர் ஸ்ரீதர் தயாரித்த இந்த நாடகத்தில் பல புதுமையான டெக்னாலஜியைப் பயன்படுத்தியிருந்தனர். மேடை அமைப்பு, சிம்மாசனம் மற்றும் அரசவை ஆகிய சிறப்பாக இருந்தன. அதனை வடிவமைத்தவர் எனது நண்பர் சக் (chuck) என்றழைக்கப்படும் சிற்றரசு. குறிப்பாக மேடை சீன் மாற்றுவது போல் பின்புறம் இருந்த வீடியோ ஸ்கிரீனில், தெரு மற்றும் அரசவையைக் கொண்டு வந்தது மிகச் சிறப்பாக இருந்தது. இறுதியில் கண்ணகி மதுரையை எரிக்கும் நிகழ்வில், பின்புற வீடியோவில் தீ எரிய, மேடையில் இரத்தச்சிவப்பான சேலைகளை அங்கும் இங்கும் அசைக்க, அது தீ பற்றிக்கொண்டு எரிவது போலவே தெரிந்தது. குறுக்கும் நெருக்கும் மக்கள் பரிதவிப்புடன் ஓடியது மதுரையின் அந்தக்காலத்துக்கே கொண்டுபோனது.  சொந்த ஊரான மதுரை   எரிந்ததை பார்க்கையில் என்னை அறியாமலேயே கண்களில் நீர் திரண்டது .
 மேடையில் ஒரு கிராம மணம் திகழ தமிழரின் திருமணம் எப்படி நடக்கும் என்பதையும் நிகழ்த்திக் காண்பித்தார்கள்.
ஆலபனி தமிழ்ச் சங்கம் நடத்திய சாலைவிதிகள் பற்றிய மைமிங் நிகழ்ச்சியும் சூப்பராக இருந்தது.  
G Balachander IAS
சிறப்பு அமைப்பாளராக வந்த G. பாலச்சந்திரன் IAS, பாரதிதாசன் 'பாவலனா, தமிழ்க்காவலனா' என்ற தலைப்பில்  நல்ல ஒரு சொற்பொழிவாற்றினார். ஒரு IAS அதிகாரி தமிழ் ஆர்வலராக மட்டுமல்லாமல் தமிழ் இலக்கியங்ககளை  ஆழமாக அறிந்திருக்கிறார் என்பது மகிழ்ச்சியைக் கொடுத்தது.

Mayuranathan 
தமிழ் விக்கிப்பீடியாவை ஆரம்பித்து, 85000 கட்டுரைகள் வரை தொகுத்த இலங்கைத்தமிழ் உணர்வாளர் மயூரநாதன், தேடித்தேடி தமிழ் நூல்களைப் பதிப்பிக்கும் தஞ்சாவூர் தமிழ்மண் பதிப்பகத்தின் நிறுவனர் இளவழகன் ஆகியோர் கெளரவிக்கப்பட்டனர். மயூரநாதன், “இந்தியாவில் இந்திக்குப்பின்னர் பேசப்படும் இரண்டாவது பெரிய மொழியான தமிழ், உலகின் 18-ஆவது பெரிய மொழியாகவும் இருக்கிறது”, என்ற தகவலைச் சொன்னார். இவர் கனடாவில் இருக்கும் தமிழ் இலக்கியத்தோட்டம் வழங்கிய "இயல்விருதை" சமீபத்தில் பெற்றிருக்கிறார்.


அதோடு கவிஞர் அறிவுமதி இயற்றிய தமிழில் பாடக்கூடிய பிறந்த நாள் வாழ்த்துப் பாடல் அறிமுகப்படுத்தப் பட்டது. நல்லஇசையுடன் கூடிய இந்தப் பாடல் எளிமையான வரிகளுடன் அமைந்து எல்லோரும் பாடக்கூடிய வகையில் அமைக்கப்பட்டிருந்தது.
அடுத்த வாரம், சிறப்பு நிகழ்வுகளான கவியரங்கம், கருத்துக்களம், குறள் தேனி, உலகத்தமிழர் விழிப்புணர்வு அமர்வு, ஆகியவற்றைப்பற்றிச் சொல்லுகிறேன். அதோடு அரிசி சாப்பிடலாம் என்ற நல்ல செய்தியைப் பற்றிய  Dr.சிவராமனின் கருத்துக்களையும் சொல்கிறேன்.

- தமிழர் விழா பதிவுகள் தொடரும்.   

Monday, August 15, 2016

நியூயார்க்கில் உதயமாகும் ஒரு நடனத்தாரகை !!!!!!!!

Daphne Loyd

நியூயார்க்கில் வாழும் தமிழர்களுக்கு நன்கு அறிமுகமானவர் திரு.பிரேம் லாயிட். நியூயார்க்கில் ஃபிளஷிங் பகுதியில் உள்ள கணபதி ஆலயத்துக்கு வரும் அனைத்து மக்களும் சுவாமி தரிசனம் முடித்து, ‘கனக தரிசனம்’ செய்யப்போகுமிடம் பிரின்ஸ் நகைமாளிகை. இதன் உரிமையாளர்தான் பிரேம் லாயிட்.

இலங்கை நாட்டிலிருந்து புலம்பெயர்ந்து, முதலில் தனிப்பட்ட முறைகளில் விடுகளுக்குச் சென்று நகை வியாபாரம் ஆரம்பித்து, அதன்பின் ஹில்சைட்  அவென்யூவில் இருந்த,  ஹெல்தி லைஃப் என்ற இலங்கைக் கடையின் பேஸ்மென்ட்டில் சிறியதாக ஆரம்பித்து, பின்னர் இப்போது  கணபதி கோயிலுக்கு அருகில் நிரந்தரமாகக்  கடை வைத்து வியாபாரம் செய்கிறார். இதுதவிர வேறுபல கடைகளையும் வைத்திருக்கிறார்.

இவர் ஒரு தமிழர் என்பதால் எல்லாத் தமிழ் நிகழ்வுகளுக்கும் தாராளமாக நன்கொடை கொடுத்து ஸ்பான்சர் செய்வார். இவருடைய தங்கக்கடைக்கு என் மனைவி நிரந்தர வாடிக்கையாளர்.

        பிரேமுக்கு 2 மகள்கள். 2 மகள்கள் வைத்திருக்கும் ஒபாமா, ரஜினிகாந்த், கமல் போன்ற பிரபலங்கள் வரிசையில் பிரேமையம் சேர்க்கலாம். 2 மகள்கள் வைத்திருந்தும், பிரபலமோ இல்லை கரபலமோ இல்லாத ஒருவன் நான் மட்டும்தான் என நினைக்கிறேன்.

Prem''s wife, Daphne, Alishya, Prem Loyd

பிரேமின் இரண்டு மகள்களும் மிகவும் திறமை வாய்ந்தவர்கள், படிப்பில் மட்டுமல்ல, நடனம். இசையென்று மிகுந்த திறமைபெற்றவர்.அதில் மூத்த புதல்வியான ‘டாஃப்னி லாயிட்’ ன் பரதநாட்டிய அரங்கேற்றம் கடந்த சனிக்கிழமை ஆகஸ்ட் மாதம் 7 ஆம் தேதி இனிதே நடந்தேறியது.

சிறப்பு அழைப்பாளராகத் தெரிவு செய்யப் படாவிட்டாலும் என் மனைவியின் புண்ணியத்தில் பொது அழைப்பாளராகக் கலந்து கொண்டேன். கணபதி கோயிலின் அழகான கலையரங்கத்தில் இந்த நாட்டிய அரங்கேற்றம் நடந்தேறியது. நாங்கள் செல்லும்போதே அரங்கம் நிரம்பி வழிந்தது. பிரேமும் அவர் மனைவியும் எங்களை வரவேற்று இன்னொருவரிடம் ஒப்படைக்க, அவர் எங்களை அழைத்துச் சென்று முன்வரிசையில் அமர வைத்தார். நானும் பெருமிதத்துடன் திரும்பிப் பார்த்து “நானும் விஐபி தான் நானும் விஐபி” தான் என்று சொல்லிக் கொண்டேன். இருந்தாலும் வேறு விஐபி வந்தால் என்னை எழுப்பி விட்டுவிடுவார்களோ என்ற பயம் ஒரு ஓரத்தில் இருந்தது.

ஒரு கத்துக்குட்டி மாணவி என்ன பெரிதாக ஆடிவிடப்போகிறாள்? என்று நினைத்துப்போன எனக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. அற்புதமான நடனத்தை வெளிப்படுத்தினாள் டாஃப்னி.
Alishya

பிரேம் தம்பதிகளின் வரவேற்பு முடிந்தவுடன் புஷ்பாஞ்சலியுடன்  நடனம் ஆரம்பித்தது. நடன அரங்கேற்றத்தின் முதல் ஆட்டமான இதில், ஆடுபவர், கடவுளுக்கும் குருவுக்கும், இசைக்குழுவுக்கும் மற்றும் வந்திருக்கும் விருந்தினருக்கும், பூக்கள் தூவி  மரியாதை செய்வார். நாட்டை ராகத்தில் ஆதிதாளத்தில் அமைந்த இந்த இசையில் எழுந்த டாஃப்னியின்  நடனத்திலேயே தெரிந்துவிட்டது, இது வெறும் அரங்கேற்றமல்ல இது அருமையான ஒரு நடன நிகழ்ச்சியின் ஆரம்பம் என்று.

அதற்குப்பின்பதாக  வந்த ரூபக தாள ‘அலரிப்பி’ல் ஒரு தேர்ந்த நடன மங்கையைக் காணமுடிந்தது. அதன்பின் வந்தது  கல்யாணி ராகத்தில் 'ஜதிஸ்வரம்'.  இந்த நடனத்தில் தாளத்துடனும்  ஜதியுடனும்  இணைந்த கால்கள் ஒரு சேர ஒலித்தது அற்புதமாக இருந்தது. குறிப்பாக இதில் வந்த ஒவ்வொரு நடன நிலைகளும் கோயில் சிலைகளை ஞாபகப்படுத்தின.

அடுத்து வந்த 'ப்தம்' பகுதியில், பல அபிநயங்களுடன் ,  கண்ணனின் பல்வேறு லீலைகளை எடுத்துக் காட்டின ராக மாலிகையில் அமைந்த இந்த நடனம், ஒரு மோனோ ஆக்ட் என்று சொல்லலாம்.

அதன் பின் வந்த ‘வர்ணம்’ இந்த நிகழ்வின் உச்சக்கட்டம் ஆகும். பலவித பாவங்களை வெளிப்படுத்தின இந்த நடனம் தியாகராஜர் இயற்றிய பஞ்சரத்ன கீர்த்தனை ஒன்றின் வழியாக வந்தது. ஆரபி ராகத்தில் ஆதிதாளத்தில் வந்த இந்த நடனம் பாகவதத்தின் ஒரு பகுதியின் நாடகத்தைக் கண்முன் நிகழ்த்தியது. கிருஷ்ணன், குருஷேத்ர யுத்தம் நடந்த சமயத்தில்  சண்டையிடத்தயங்கிய அர்ச்சுனனுக்கு, தன் விஸ்வரூபத்தை வெளிப்படுத்தி சண்டையிடத் தூண்டிய சம்பவம் வெகு தத்ரூபமாக நடன நிகழ்வாக வெளிப்பட்டது.  

இடைவேளைக்குப்பின் வந்த ‘சிவஸ்துதி’ தில்லை அம்பலத்தை நேரில் கொண்டு வந்தது. அதன்பின் எதிர்பார்க்காத விதத்தில் ஜீன்ஸ் திரைப்படத்தின் நித்திய ஸ்ரீ பாடிய "கண்ணோடு காண்பதெல்லாம்" பாட்டுக்கு டாஃப்னியுடன் இணைந்து அவள் தங்கை அலிஷ்யா வந்து நடனமாடினாள். அக்காவுடன் இணைந்து அழகாக ஆடிய அலிஷ்யா  நானும் அரங்கேற்றத்துக்கு தயார் என சொல்வது போல் இருந்தது.

சலங்கை ஒலி படத்தில் SP. ஷைலஜா ஆடிய ‘ஓம் நமசிவயா’  என்ற பாடலுக்கு டாஃப்னி ஆடி அசத்தியது அதன்பின் வந்தது. மகிஷாசுரமர்த்தினியை சித்தரித்த ‘தில்லானா’வில் புகைப்பட போஸ்கள் பல வந்தன. பின்னர் மங்களம் பாடி  முடிக்க அரங்கேற்றம் இனிதே முடிந்தது.  
Sadhana Paranchi
         தாளம், ஜதி, இசை, பாவம், அபிநயங்கள் நிருத்தம், நிருத்தியம், முக உணர்ச்சிகள் என்று நவரசங்களையும் தன் நடனத்தில் வெளிப்படுத்திய டாப்ஃனி  தன் சிறந்த திறமையை அநாயசமாக எந்த டென்சனும் இல்லாது வெளிப்படுத்தியது  ஆச்சரியமூட்டியது. அதிலும் அவளின் குரு  சாதனா பரஞ்சி அவர்கள் கடைசி சமயத்தில் இந்தியாவில் இறந்து போன தன் தாயின் ஈமச்சடங்கிற்காக சென்றுவிட, குரு இல்லாமலேயே எந்தவித பிரச்சனையும் இல்லாமல் அரங்கேற்றம் அமைந்தது இன்னொரு ஆச்சரியம்.குரு இல்லாத குறையை "சாதனாலயா நடனப்பள்ளியின் துணை ஆசிரியர் பிரியா மாதவன் நீக்கி வைத்து நட்டு வாங்கமும்  செய்தார்.

Orchestra


நடனத்திலும் இசையிலும் மிகவும் அனுபவம் வாய்ந்த ‘சாவித்ரி ராமானந்த் ’ பாடல்களைப் பாட, சந்தியா ஆனந்த் வயலினையும், முரளி பாலச்சந்தர் மிருதங்கமும்  மிச் கீரின்பெர்க் புல்லாங்குழலும் இசைத்தனர். பக்க வாத்தியக் காரர்கள் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் அல்லர். குறிப்பாக வெள்ளைக்கார, மிச் கீரின்பெர்க் கர்நாடக ராகங்களை புல்லாங்குழலில் வாசித்தது ஒரு அதிசயக் காட்சிதான்.
Ahmed Sabarullakhan 

          சிறப்பு விருந்தினர்களாக Dr.M.N. கிருஷ்ணன், கனடாவின் நடன ஆசிரியர், ஜனனி குமார், ஐக்கிய நாடுகளின் இலங்கைத் தூதுவர் அகமது சபருல்லாகான் ஆகியோர் சிறப்பிக்க, இலங்கை ஒலிபரப்பு கூட்டு ஸ்தாபனத்தின் முன்னாள் அறிவிப்பாளர் V.N.மதியழகன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். தாமிரா குமார் அதனையே ஆங்கிலத்தில் சொன்னார்.


        நிகழ்ச்சி நிரல், வரவேற்பரை அமைப்பு, விருந்தினர் கையெழுத்திடும் புத்தகம், மேடை அலங்காரம், உணவு உபசரிப்பு, சாப்பாடு மேஜை அலங்கரிப்பு என்று ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து செய்திருந்தார்கள். டாலர்கள் தண்ணீராய் செலவழிந்திருக்கும்.

அனைவருக்கும் மிகச்சிறந்த அறுசுவை உணவு வழங்கப்பட்டது. கண்ணுக்கு விருந்து முடிந்து, வயிற்றுக்கும் விருந்து முடித்து வெளியே வந்தால் வந்த பெண்களுக்கு வெள்ளிக்காசு நினைவுப் பரிசாக வழங்கப்பட்டது.

ஒரு திருமணத்தை விட அதி சிறப்பாக அரங்கேற்றம் நடைபெற்று முடிந்தது. டாப்ஃனி மேலும் வளர உயர வாழ்த்துக்கள்.

முற்றும்

Add caption