Showing posts with label ஹார்வர்ட் தமிழ் இருக்கை. Show all posts
Showing posts with label ஹார்வர்ட் தமிழ் இருக்கை. Show all posts

Thursday, August 30, 2018

அசத்திய அந்தோணிதாசனும் சொதப்பிய கார்த்திக்கும் !!!!


FETNA -2018 பகுதி 5.
இதற்கு முந்திய பகுதியைப்படிக்க  இங்கே சொடுக்கவும்.
http://paradesiatnewyork.blogspot.com/2018/08/blog-post_23.html
அல்லது தெரிந்தவர்கள் என்பதால் அவர்கள் கவிதைகளை மட்டும் நான் உன்னிப்பாக கவனித்திருக்கலாம்.
ஹார்வர்டு தமிழ் இருக்கையின் வெற்றிவிழா நடந்தது. உலகத்தமிழர் ஒன்று சேர்ந்தால் என்னவெல்லாம் அதிசயங்கள் நடத்தலாம் என்பது இதன் மூலம் விளங்கியது. இந்தக்குழு இதோடு விடுவதாய்த் தெரியவில்லை.  உலகின் அனைத்து முக்கிய பல்கலைக்கழகங்களியும் தமிழ் இருக்கைகளை அமைத்துவிட்டுத்தான் ஓய்வார்கள் போலத்தெரிகிறது. இதோ அடுத்து இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜில் தமிழ் இருக்கை அமைக்க உழைக்கத் துவங்கிவிட்டனர். இதில் முக்கியமான பணியாற்றிய மருத்துவர் ஜானகிராமன் மற்றும் மருத்துவர் சுந்தரேசன் ஆகியோரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.    
சிறிய வயதிலேயே தன்னுடைய முதல் நாவலான காவல் கோட்டத்திற்கு சாகித்ய அக்காடெமியின் விருது பெற்ற சு.வெங்கடேசன் கீழடி அகழ்வாராய்ச்சியைக் குறித்தும் தொன்மையான தமிழர் வரலாறு எவ்வாறு புறக்கணிக்கப்படுகிறது மறைக்கப்படுகிறது என்பதை தெளிவாக விளக்கினார். வெளிநாடுகளில் தமிழ் இருக்கை அமைப்பதோடு வெளிநாடு வாழ் தமிழரின் கடமை முடிந்துவிடாது என்பதை உணர்த்தும் போக்கில் அந்த உரை அமைந்தது. தமிழகத்திலும் ஒரு கண் இருக்க வேண்டும்.  இந்த நாவலைப் படித்து நான் எழுதிய உரையைப் படிக்க இங்கே சுட்டவும். http://paradesiatnewyork.blogspot.com/2014/02/blog-post_19.html
இதற்கிடையில் பக்கத்தில் நடந்த இணை நிகழ்வில் திரு. மம்மது அவர்களின் இசை உரையும் நாடகம் பற்றிய பேராசிரியர் ஞானசம்பந்தனின் உரையும் கேட்டு மகிழ்ந்தேன். தமிழிசை மற்றும் கர்நாடக இசையில் பாண்டித்யம் பெற்ற மம்மது தன்னுடைய பேத்தி பாடல்களைப் பாட அதனின் ராக தாளங்களை விவரித்துப் பேசினார்.
இவரும் பேராசிரியர் மருதநாயகமும் ஃபெட்னா முடிந்த கையோடு நியூயார்க் வந்து நியூயார்க் தமிழ்ச்சங்கம் ஏற்பட்டு செய்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சொற்பொழிவு ஆற்றினார்கள். இது எங்களுடைய ஆலயமான இம்மானுவேல் லுத்தரன் திருச்சபையின் அரங்கில் நடந்தது.
பின்னர் எல்லோரும் ஆவலோடு எதிர்பார்த்த இசை நிகழ்ச்சி ஆரம்பமானது. பாடகர் கார்த்திக், டிரம்ஸ் சிவமணி மற்றும் பாடகி சத்திஸ்ரீ கலந்து கொண்ட இசை நிகழ்ச்சி, பிரபலமான பேஸ் கிட்டார் வாசிக்கும் கீத் பீட்டர்ஸ் இதற்கு வாசித்தது ஆச்சரியம் அளித்தது.
திரும்பிப்பார்த்தால் அரங்கு முதன்முறையாக நிரம்பி வழிந்தது. எந்த இணை நிகழ்வும் இல்லாமல் இளைஞர், சிறியவர்கள் தவிர இதற்கென்றே வந்தவர்கள் போல ஏராளமானவர்கள் இருந்தார்கள்.
பாடகர் கார்த்திக்கின் எனர்ஜியை நான் நேரில் சிலமுறை பார்த்திருக்கிறேன். சில ஆண்டுகள் முன்பு சென்னை காமராஜர் அரங்கில் லஷ்மண் ஸ்ருதி அவர்கள் வழங்கிய "சென்னையில் திருவையாறு" என்ற நிகழ்ச்சியில் கார்த்திக் வழங்கிய கர்நாடக இசைநிகழ்ச்சி மிகச் சிறப்பாக இருந்தது. குறிப்பாக அவரது ஆலாபனை மிக நீண்டது. அதன்பின்பு நியுஜெர்சியில் நடந்த அவரது இசை நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு வெகுவாக ரசித்தேன். http://paradesiatnewyork.blogspot.com/2014/06/blog-post_12.html
ஆனால் இந்த முறை கார்த்திக்கின் இசை நிகழ்ச்சி என்னைக் கவரவில்லை. ஏனென்றால் பெரும்பாலும் சில வருடங்களுக்கு முன்னர் பாடிய அதே பாடல்களை அதே ஸ்டையில் பாடியதால் வெறுத்துவிட்டேன். அவர் பாடிய பாடல்கள் மட்டுமல்ல சில  பழைய பாடல்களும் அதே பாடல்கள் வந்தன. ஓகே கண்மணியில் வந்த சினாமிக்கா தவிர எல்லாம் பழையன. சக்திஸ்ரீ யாவது வேறு பாடல்கள் பாடுவாரென நினைத்தால் அவரும் அதே பாடல்களை பாடியதால் அயர்ந்துவிட்டேன்.
ஆனால் சிறப்பம்சமாக டிரம்ஸ் சிவமணி வந்து கிட்டத்தட்ட முக்கால் மணிநேரம் அவர் கொண்டு வந்திருந்த பல இசை கருவிகளை வாசித்து அசத்தி விட்டார். இத்தனை தோல் கருவிகளை எப்படிக்கொண்டு வந்தார் என்பது ஆச்சரியமாக இருந்தது. சிவமணியும் இல்லையென்றால் சுத்தப்போர்தான். ஆனால் கார்த்திக் சக்திஸ்ரீ இசை நிகழ்ச்சியை முதன்முறையாகப் பார்த்தவர்கள் மிகவும் ரசித்தனர் என்றுதான் சொல்ல வேண்டும்.
அதோடு அன்றைய நாள் நிகழ்ச்சிகள் நிறைவு பெற்றன.
அந்தோணிதாசன்
அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை ஜூலை 1, 2018 காலையில் ஃபெட்னா அமைப்பின் நிர்வாகக்குழு கூடியது. அதில்  அடுத்த தலைவராக வாஷிங்டன் DC பகுதியைச் சேர்ந்த சுந்தர் குப்புசாமி அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார். அனைத்துப் பதவிகளுக்கும் தேர்தலோ சண்டை சச்சரவோ இல்லாமல் தேர்வு செய்யப்பட்டது மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது.

நான்காவது நாளில் முக்கிய நிகழ்வாக பிரபல நாட்டுப்புறப்பாடகர்கள் ஆக்காட்டி ஆறுமுகம் மற்றும் அந்தோணிதாசன் அளித்த இசை நிகழ்ச்சி பட்டையைக் கிளப்பியது. நாதஸ்வரம் இல்லாமல் சீவாளி போன்ற ஒன்றை வாயில் வாசித்தது சோபிக்கவில்லை. நாதஸ்வரமும் இருந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். ரசிகர்களின் விருப்பத்திற்கிணங்க அந்தோணிதாசன் பாடி மிகப்பிரபலமடைந்த சொடக்கு மேலே சொடக்கு போடுது என்ற பாடலையும் பாடினார். ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ் அதிகாரி கலியமூர்த்தி  அவர்களின் உரை மிகச்சிறப்பாக இருந்தது.

Image result for kaliyamoorthy ips
கலியமூர்த்தி 
இன்னொரு அதிரவைத்த நிகழ்ச்சி நர்த்தகி நடராஜ் அவர்களின் பரதநாட்டியம். வெகு சிறப்பாக இருந்தது. அவர் நாட்டியத்திற்கு வந்த கதை நெகிழ வைக்கும் கதை.
Related image
நர்த்தகி நடராஜ்
அடுத்து மாலையில் சிறப்பு நிகழ்ச்சியாக முருக பூபதியின்மணல் மகுடி நாடக நிலம்” வழங்கிய பூழிப்பாவை நடைபெற்றது. தெரு நாடகம் (Street Theater) அடிப்படையில் 80 களில் நான் நிஜ நாடக இயங்கங்களில் பெரிதும் கலந்து கொண்டு இருக்கிறேன். இப்போது அது மிகச்சிறப்பான வடிவத்தில் உயர்ந்திருப்பது கண்டு மகிழ்ச்சியடைந்தேன். அதனைப்பற்றி இன்னும் தெளிவாக அடுத்த பகுதியில் சொல்லுகிறேன்.
தொடரும்

Wednesday, January 24, 2018

நியூயார்க்கில் வாழும் எட்டாவது வள்ளல் !!!!!!!!!!!

Image result for bala swaminathan stony brook
Bala and Praba
           ஹார்வர்ட் தமிழ் இருக்கைக்கு நிதி திரட்டும் வண்ணமாக ஜனவரி ஏழாம் தேதி,  நியூயார்க்  , லாங் ஐலண்டில் உள்ள அக்பர் ரெஸ்டாரண்டில் நடைபெற்ற ஒரு மதிய உணவு நிகழ்ச்சியில்( Lunch Banquet) அடியேனும் மனைவியுடன் கலந்துகொண்டேன். தலைக்கு $250  என்ற போதிலும் நான் எதிர்பார்க்காத வண்ணம் நியூயார்க் வாழும் தமிழர்கள் பெருந்திரளாக குடும்பம் குடும்பமாக கலந்து கொண்டனர். 
Image result for bhuvana karunakaran
Bhuvana Karunakaran


இதற்கு பெரு முயற்சி எடுத்தவர்கள் நண்பர் பாலா சுவாமிநாதனும், புவனா கருணாகரன் அவர்களும். அவர்களோடு இணைந்து நியூயார்க் தமிழ்ச்சங்க தலைவர் அரங்கநாதன் , இலங்கைத்தமிழர் சங்கமான முத்தமிழ்  மன்றத்தின் தலைவர் மருத்துவர் நந்தகுமார் , தமிழ்நாடு பவுண்டேஷன் தலைவர் டாக்டர் குப்தா ஆகியோர் கொடுத்த ஆதரவுடன் சிறப்பாக நடந்து முடிந்தது .
தமிழ் இருக்கை


 சிறப்பு  அழைப்பாளர்களாக ஹார்வர்ட் தமிழ் இருக்கையை முன்னெடுத்து அதனை ஒரு உலகத்தமிழர் இயக்கமாக மாற்றிய பெருமை கொண்ட மருத்துவர் சம்பந்தம் , மருத்துவர் ஜானகிராமன், ஹார்வர்ட் தமிழ் பேராசிரியர் ஜானதன் ரிப்ளி ஆகியோர் கலந்து கொண்டனர் .இந்த நிகழ்வு மூலமாக மொத்தம் ஒண்ணே கால் லட்சம் டாலர்கள் சேகரிக்கப்பட்டது .எங்களுடைய இம்மானுவேல் தமிழ் ஆலயம் சார்பாகவும் ஒரு தொகை வழங்கப்பட்டது.
தமிழ் இருக்கை

               ஆனால் அதிசயவண்ணமாக ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டது.அது என்னவென்றால் லாங் ஐலண்டில் இருக்கும் சிறப்பு வாய்ந்த பல்கலைக்கழகமான ஸ்டோனி ப்ரூக்கில் நண்பர் பாலா சுவாமிநாதன் தன் சொந்த செலவில் ஒரு தமிழ் இருக்கையை உருவாக்கி இருக்கிறார் என்பதே அந்தச்செய்தி. இவர் ஏற்கனவே ஹார்வர்ட் தமிழ் இருக்கைக்கு கொடுத்தைப்பற்றி உங்களிடம் சொல்லியிருக்கிறேன் . தன் கொடையால் அரசையும் மிஞ்சிவிட்ட நண்பர் பாலாவுக்கு , அரங்கநாதன் , புவனா முயற்சியில் ஜனவரி 14ஆம் தேதி பொங்கல் தின மாலையில் ஹெரிடேஜ் இந்தியா என்ற உணவகத்தில் ஒரு சர்ப்ரைஸ்  பார்ட்டி கொடுத்தோம் .அதிலும் நண்பர்கள் திரளாய் வந்து பாலாவை பாராட்டு மழையில் நனைய விட்டனர் .அந்தச்சமயத்தில் அடியேன் வாசித்த கவிதையை கீழே கொடுக்கிறேன்    
With Ranga and Bala

மூச்சுக்கொடுத்த ஆண்டவனுக்கும்
பேச்சுக் கொடுத்த  தமிழ் அன்னைக்கும்
வாய்ப்புக் கொடுத்த அவைக்கும்
வணக்கங்கள் பலப்பல

பொங்கல் திருநாளில்
உங்கள் உள்ளத்திலும் இல்லத்திலும்
மகிழ்ச்சி பொங்கட்டும்
பொங்கல் வாழ்த்துக்கள் !!!

அதன் காணொளியைக்காண இங்கே க்ளிக்கவும்




                                                 
                                                  Courtesy: Pastor Johnson Rethinasamy.

பாலாவுக்கு நன்றி சொல்லி
பாடவந்தேன் இந்த பரதேசி !

தட்ட வேண்டிய இடங்களில் தட்டுங்கள் - கைகளைத்தான்,
குட்ட வேண்டிய  இடங்களில் குட்டுங்கள் - மேசையைத்தான்.

சங்கம் வளர்த்த
தங்க மாமதுரையில்
அங்கம் வளர்த்தவன் நான்!
(ஆனால் அவ்வளவாக வளரவில்லை)

ஆனால் பாலாவோ அதே
சங்கம் வளர்த்த
தங்க மாமதுரையில்
அறிவை வளர்த்தவர்
அதுதான்  இப்போது
வளர்ந்து கிளர்ந்து உயர்ந்து
தமிழை வளர்க்கிறது!

தமிழ்ப்பணி செய்வதில்
பாலா ஒரு கெத்து வெட்டு!
ஆனால் இந்தப்
பரதேசி ஒரு வெத்துவேட்டு!

மதுரை மண்ணில் ஒருமுறை
வலம் வந்தாலே
செம்மண் புழுதியும் அப்பிக் கொள்ளும்
செம்மொழித் தமிழும் ஒட்டிக் கொள்ளும் 
- இதில் சிக்கிய ஒருவர்தான் ஜானத்தன் ரிப்ளி

எனில் அங்கேயே
பிறந்து தவழ்ந்து
எழுந்து இருந்து
வளர்ந்து உயர்ந்த
பாலாவை தமிழ் சும்மா விடுமா?

இந்த பாலா யார்?

பள்ளி கொண்ட பெருமாள் சுவாமி
பாருக்கே தெரியும் ஆனால்
பள்ளி கண்ட பெருமாள் சுவாமி
யாருக்குத் தெரியும்? அது நம்ம
பாலா சுவாமிதான்
அவர் பள்ளி கொண்டது திருப்பாற்கடலில்
இவர் பள்ளி கண்டது அட்லாண்டிக் கடலில் (ஸ்டோனி புரூக்  )

முதல் இடை கடைச்சங்கங்கள் தெரியும்
இப்போது அமைந்திருப்பது கடல்ச் சங்கம் இந்தக்
கடற்சங்கத்தை அமைத்த
எட்டாவது வள்ளல்
என் தோழன் பாலா

பாலா ஒரு சிங்கம்
வீறு கொண்டு நடக்கும் சிங்கமல்ல - ஆனால்
நடக்குமிடமெல்லாம் தமிழ் முத்திரை பதிக்கும்  சிங்கம்
மீசை முறுக்கி வீரம் காட்டும் சிங்கமல்ல, தமிழ் மேல்
ஆசை காட்டி விவேகம் வளர்க்கும் சிங்கம்
பெருமை பேசி கர்ஜிக்கும் சிங்க மல்ல
நாக்கை நாசூக்காகக் கடித்து தமிழ் நலன் பேசும் சிங்கம்

பாலா
புகழ் உனக்குப் பிடிக்காது. ஆனால்
புகழுக்கு உன்னை ரொம்பப்பிடிக்கும்.


இப்போது பிரபா பற்றி (பாலாவின் மனைவி)
பிரபாவின் கண்களில் எப்போதும்
ஒரு சிறு மின்னல் மறைந்திருக்கும்
அதில் ஒரு குறு நகை உறைந்திருக்கும்
அது யாரிடமிருந்து யாருக்கு வந்தது?
பாலவிடமிருந்து பிரபாவுக்கா? இல்லை
பிரபாவிடமிருந்து பாலாவுக்கா?

இவரைப் பார்க்கும்போது
அள்ளிக்கொடுக்கும் பாலாவுக்குச்
சொல்லிக் கொடுப்பவர் போலவே தெரிகிறது.

ஆம்
இவரைப் பார்த்தால்
தட்டிக் கேட்பவர் போலத் தெரியவில்லை
தட்டிக் கொடுப்பவர் போல்தான் தெரிகிறது.
பிரபா, இதுதான்
உன் தமிழ் மரபா?

மனைவி அமைவதெல்லாம்
இறைவன் கொடுத்த வரம் என்பர் -ஆனால்
பாலாவுக்குப் பிரபா
அன்னை கொடுத்த வரம்
தமிழ் அன்னை கொடுத்த வரம்!

தமிழ்ச்சங்கம் கண்டவன் பாண்டியன்
தமிழ்ப்பள்ளி கண்ட பாலாவும் பாண்டியன் தான், அதைப்
பாட்டில் சொன்ன பரதேசியும் பாண்டியன் தான்.

பொங்கலின் இனிப்பு போல
உன் வாழ்க்கை என்றும் இனிக்கட்டும்
தமிழின் சிறப்பு போல
உம் வாழ்க்கை என்றென்றும் சிறக்கட்டும்
தையும் பிறந்தது
புது வழிகளும் திறக்கட்டும்
தமிழ் இருக்கைகளும் அமையட்டும்.

ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும்
ஆதவன் மறைவதில்லை
ஆயிரம் மைல்கள் கடந்து வந்தாலும் நம்மில்
அன்னைத் தமிழ் குறைவதில்லை

தமிழால் இணைவோம்
தமிழாய் முனைவோம்
தமிழாய் வாழ்வோம்

வாழிய செந்தமிழ்
வாழ்க நற்றமிழர்
வாழிய பாரத  மணித்திரு நாடு
வாழிய புகுந்த அமெரிக்க நாடும்
நன்றி வணக்கம்