Showing posts with label வாஜ்பாய். Show all posts
Showing posts with label வாஜ்பாய். Show all posts

Thursday, September 27, 2018

போக்ரானில் நிரூபிக்கப்பட்ட இந்தியாவின் வலிமை !

Related image


பார்த்ததில் பிடித்தது
பர்மனு
“எனக்கும் இந்தநிகழ்வுகளுக்கும் எந்த சம்பந்தமுமில்லை. நான் பாயும்புலி பண்டாரக வன்னியன் படிக்கும்போது கலைஞர் இறந்துபோனார்”.
“அந்த பண்டாரத்துக்கும் கலைஞருக்கும் என்னடா சம்பந்தம்?”
“பண்டாரக வன்னியன் இலங்கையின் முல்லைத்தீவை ஆண்ட மன்னன். ஆங்கிலேயருக்கு எதிராக எழுந்த விடுதலைக்குரல்களில் அவனுடையதும் ஒன்று”
“சரி அதுக்கும் கலைஞருக்கும் என்ன சம்பந்தம் “
“அடேய் முட்டாள் மகேந்திரா, அது அவர் எழுதிய புத்தகம்”
“ஓ இப்ப புரியுதுரா”.
“அதே மாதிரி எனக்கும்  போக்ரானுக்கும் எந்த சம்பந்தமுமில்லை”
“என்னடே சொல்ற, உனக்கும் போக்ரானுக்கும் தொடர்பிருந்தது என்று யாரோ சொன்ன மாதிரி பேசுற?”
"அடேய் மகேந்திரா அதைச் சொல்லலடா"
“நெட்பிலிக்சில் 'பர்மனு' என்ற திரைப்படத்தைப்  பார்த்தேன். அதே நாளில் வாஜ்பாய் இறந்து போனார்”.
“என்னடா சொல்ற பர்மனு படத்தை வாஜ்பாயா டைரக்ட் செஞ்சார்”.
“அடேய் நீ திரும்பத்திரும்ப முட்டாள்னு நீரூபிச்சிக்கிட்டே இருக்கியே” .  
“ஆமடே முட்டாளோடு நண்பன் பின்ன வேறெப்படி இருக்கமுடியும்?அதுசரி சொல்றா இந்தப்படத்துக்கும் வாஜ் பாய்க்கும் என்ன சம்பந்தம்?
"பர்மனு என்ற படம் போக்ரான் அணுகுண்டு எப்படி நிகழ்த்தப்பட்டது என்பதை விளக்கும் படம்”.
Related image

“ஓ அப்படியா அப்படித் தெளிவாச் சொல்லு. சரிசரி மேலே சொல்லு”.
1995 வரை சீனா 43 தடவை அணு ஆயுத சோதனை நடத்தி  முடித்திருக்க, இந்தியா 1974ல் ஒரே ஒரு முறை அதுவும் சமாதானத்தின் அடிப்படையில் சோதனை செய்வதாக வெடித்திருந்தது. அதனால் மேலை  நாடுகள் மற்றும் பாகிஸ்தான் சீனாவிடமிருந்து மிகுந்த அழுத்தம் கொடுக்கப்பட்டது. அந்தச் சமயத்தில் வாஜ்பாய் அரசு பதவியேற்றபின் இதனை எப்படியாவது சாதித்து விட வேண்டும் என்று திட்டமிட்டு முயற்சி செய்யும் போது இதே போக் ரானில் தோல்வியைச் சந்தித்தது. ஆனால் இரண்டாம் முறை முயன்று  அது முற்றிலும் வெற்றி பெற்றது. அந்த முயற்சியினை இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னர் திரைப்படமாக எடுத்திருக்கிறார்கள்.  
உலக நாடுகளுக்குத் தெரியக் கூடாது. ரகசியமாக நடத்தப்பட வேண்டும். உள்ளூரிலும் எதிர்க்கட்சி போன்ற யாருக்கும் தெரியக் கூடாது. ஏன் பாரதிய ஜனதா கட்சியின் உள்ளேயும் பலருக்குத் தெரியாத ஒரு பெரும் நிகழ்வு  இது.
முதல் முயற்சி தோல்வியில் முடிந்தாலும் உலக நாடுகளின் கண்கள் குறிப்பாக அமெரிக்காவின் ரேடார் கண்கள் இந்தியாவின் மேல் அதிலும் பொக்ரானின் மேல் கண்காணித்துக் கொண்டிருக்கும்போது அதன் கண்களில் மண்ணைத்தூவி விட்டு செய்யவேண்டிய வேலை இது.
Image result for Parmanu
இந்தியாவில் இருக்கும் வெளிநாட்டு உளவாளிகள், உள்ளூர் துரோகிகளுக்கு மறைத்து இதனைச்  செய்ய வேண்டும். ஏராளமான ஆட்களும், பொருட்களும் தளவாடங்களும் தேவை என்ற நிலையில் பொக்ரான் என்பது எத்தனை பெரிய சாதனை என்பதை இந்தப்படத்தின் மூலம் விளங்க வைத்திருக்கிறார்கள். இதனைப் போன்ற சாதனைகளை செய்வதற்கு மனஉறுதி கொண்ட வாஜ்பாயைப் போன்ற தலைவரும் நாட்டின் முன்னேற்றமே தலையானது என்று நினைத்துச் செயல்பட்ட அப்துல் கலாம் அவர்களின் முயற்சியும் போற்றத்தக்கவை. உலக அரங்கில் இந்திய நாட்டை தலை நிமிர்ந்து நிற்கச் செய்ததோடு யாருக்கும் நாங்கள் இளைத்தவர்களோ சளைத்தவர்களோ என்று நிரூபித்த நிகழ்வு இது. பார்த்து ரசியுங்கள்.
வரலாற்று நிகழ்வு என்றாலும் வாஜ்பாய்  போன்ற தலைவர்கள் தவிர  மற்ற எல்லாக் கதாபாத்திரங்களுக்கும் பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. ஏனென்று தெரியவில்லை. அப்துல் கலாம் முதற்கொண்டு பெரும் ஆளுமைகளை இதில் காண்பிக்க முயற்சி செய்யவில்லை.
Image result for abhishek sharma director
John Abraham with Abishek Sharma

இந்தப்படத்தை அபிஷேக் சர்மா அவர்கள் இயக்கியிருக்க, ஜி  ஸ்டூடியோஸ், ஜே.ஏ.எண்டர்டைன்மெண்ட் போன்ற பல கம்பெனிகள் இணைந்து தயாரித்துள்ளன. இயக்குனரோடு இணைந்து சைவான் குவாட்ரஸ் மற்றும்    சம்யுக்தா சாவ்லா ஷேக் என்பவர்கள் வசனம் எழுதியுள்ளனர். பாட்டுகளுக்கு இசையாக  சச்சின் ஜிகர், ஜீட் கங்குலி இசையமைக்க அருமையான பின்னணி இசையைக் கொடுத்தவர் சந்திப் செளட்பி
முக்கிய கதாபாத்திரத்தில் ஜான் ஆப்ரகாமும் டயனா பென்ட்டியும்  திறமையான நடிப்பைத் தந்திருக்கிறார்கள்.
Related image
Diana Penty
மே, 2018ல் வெளிவந்தது இந்தப்படம். 44 கோடி செலவில் தயாரிக்கப்பட்ட இந்தப்படம் 91.36 கோடி வரை சம்பாதித்தது.
இந்தப்படம் விருதுகள் வாங்குமா என்பதை பொறுத்துதான் பார்க்க வேண்டும்.
-      முற்றும்.
மகேந்திரன்: “அது சரிடா இனிமே நீ எந்தப் புத்தகத்தை படிப்பதாக இருந்தாலோ அல்லது எந்தப் படத்தையும் பார்ப்பதாக இருந்தாலோ கொஞ்சம் சொல்லிவிட்டுச் செய்.

Monday, August 20, 2018

வாஜ்பாய் நடத்திய கார்கில் யுத்தம் !!!!



Image result for vajpai
Add caption
மறைந்த தலைவர் அடல்பிஹாரி வாஜ்பாய் அவர்களின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும்  வகையில் அவரைப்பற்றி சமீபத்தில் விகடனில் வந்த தமிழ்ப்பரபா எழுதிய கட்டுரையை இங்கே உங்களுக்காக தருகிறேன் .விகடனுக்கு நன்றி .
`நம்பிக்கைத் துரோகத்தைப் பொறுக்க முடியாது!" - கார்கிலில் பாகிஸ்தானை வாஜ்பாய் வீழ்த்திய கதை
வாஜ்பாய்க்கு விஷயம் தெரிவிக்கப்பட்டது. இது ஒரு துரோகம், அதிர்ச்சிதான்! ஆனால், அவர் அதிலேயே உறைந்து கவலைகொண்டிருக்கவில்லை. இந்தியாவின் முப்படைத் தளபதிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். பல்லாயிரக்கணக்கான ராணுவ வீரர்களும் அங்கே நம் நாட்டுக்காகப் போரிட வேண்டுமென கட்டளையிட்டார்.

றைந்த முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய், ஆட்சியில் இருந்தபோது, அவருக்கு ஏற்பட்ட மிகப்பெரிய ஏமாற்றம் அல்லது நம்பிக்கைத் துரோகம் என்றால் கார்கில் போரைச் சொல்லலாம். அந்தப் போருக்குக் காரணமாக இருந்த பாகிஸ்தானின் செயல்பாடு வாஜ்பாய்க்கு ஏமாற்றத்தைக் கொடுத்தது.
காரணம், தான் பிரதமராக இருந்தபோது இந்தியா - பாகிஸ்தான் இடையே நல்லுறவைப் பெரிதும் விரும்பியவர் வாஜ்பாய். விரும்பியதோடு நிற்காமல் அதை நடைமுறைப்படுத்த ஏராளமான நடவடிக்கைகளையும் அவர் மேற்கொண்டார். ஆனால், பாகிஸ்தான் ராணுவத்தினரின் எல்லை தாண்டிய ஊடுருவலும் தாக்குதல்களும் தொடர்ந்துகொண்டே இருந்தன. இதனால், இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் நீடித்த வண்ணமே இருந்தது. என்றாலும் வாஜ்பாய் மனம் தளரவில்லை. சகோதர நாடான பாகிஸ்தானுடன் இனியும் சண்டை தொடரக்கூடாது என்று கருதி, லாகூர் ஒப்பந்தம் ஒன்றைக் கொண்டு வந்தார். அதாவது, டெல்லியிலிருந்து லாகூருக்குப் பேருந்து சேவையைத் தொடங்கி வைத்தார் வாஜ்பாய். மற்ற தலைவர்களைப்போல கையசைத்துத் தொடங்கி வைத்ததோடு நிற்காமல், அந்தப் பேருந்தில் லாகூருக்கே சென்றார். அப்போதைய பாகிஸ்தான் அதிபருடன் கைகுலுக்கினார். 'தம்முடன் சண்டை செய்தாலும் சகோதரர் அன்றோ' என்னும் விதமாகப் பாகிஸ்தானுடன் நட்புறவு தொடர வேண்டும் என்ற உரையாற்றிவிட்டு நாடு திரும்பினார் அவர். ஆனால், அந்த நிகழ்வு நடந்த மூன்றே மாதங்களில் வாஜ்பாய்க்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.
Image result for vajpayee kargil war


ஆம், பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்தியப் பகுதியான கார்கிலுக்குள் ஊடுருவினர். எலும்பை நொறுக்கும் அளவிலான குளிர் அதிகம் உள்ள சமயங்களில் இருநாட்டின் ராணுவத்தினரும் மலை உச்சியில் உள்ள ராணுவ முகாம்களில் இருந்து கீழே இறங்கி சமவெளிக்குத் திரும்புவது வாடிக்கை. அதுபோலத்தான், இந்தியப் பாதுகாப்புப் படையினரும் திரும்பினர். ஆனால், பாகிஸ்தான் ராணுவத்தினரோ, அவர்கள் பகுதிக்குத் திரும்புவதுபோல பாவனைச் செய்துவிட்டு, கீழே இறங்காமல் பதுங்கிக்கொண்டனர். தங்கள் நாட்டு வீரர்களைக் கூடுதலாக அங்கே வரவழைத்தது. கார்கில் பகுதியை ஆக்கிரமிக்க வேண்டுமென்கிற நீண்டகாலத் திட்டத்தை, இந்திய எல்லையில் ஆளில்லா நேரம் பார்த்து நிறைவேற்ற எத்தனித்தனர். இந்திய எல்லைக்குள் பதுங்கிப் பதுங்கி, ஊடுருவத் தொடங்கினார்கள். நம்முடைய எல்லையில் சொற்ப இந்திய வீரர்களை, பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் பிடித்து வைத்தனர். அவர்களைக் கொடுமை செய்து பின்னர் கொன்றனர். இன்னொருபுறம் நம்முடைய எல்லைப் பகுதிகள் ஒவ்வொன்றாகப் பாகிஸ்தான் படையினரால் கைப்பற்றப்பட்டன.
அப்போது பிரதமராக இருந்த வாஜ்பாய்க்கு இந்த விஷயம் தெரிவிக்கப்பட்டது. பாகிஸ்தானின் இந்தச் செயல் மிகப்பெரிய துரோகம், அதிர்ச்சி ஏற்படுத்தக்கூடியதுதான். ஆனால், அவர் அதிலேயே உறைந்து கவலைகொண்டிருக்கவில்லை. இந்தியாவின் முப்படைத் தளபதிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். பல்லாயிரக்கணக்கான ராணுவ வீரர்களையும் கார்கில் மலைப்பகுதிக்கு அனுப்பி நம் நாட்டுக்காகப் போரில் ஈடுபட வேண்டுமென கட்டளையிட்டார். கார்கில் போரில் இந்தியா வெற்றிபெற்றே ஆக வேண்டும் என்று உத்தரவிட்டதுடன், இந்திய ராணுவத்தினருக்குத் தேவையான எல்லா ஏற்பாடுகளையும் அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் உடன் கலந்தாலோசித்து துரிதமாகச் செய்து கொடுத்தார். 
கார்கில் போர் என்பது சமவெளிப் பகுதியில் நடைபெற்ற சாதாரணப் போர் அல்ல. கடுங்குளிரில், பனிச் சிகரங்களிலும் மலை முகடுகளிலும் நடைபெற்ற மிகக் கடுமையான ஒரு போர். இந்திய வீரர்கள் பல யுக்திகளைப் பயன்படுத்தி போர் புரிந்தனர். பாகிஸ்தானில் அப்போது உள்நாட்டுக் குழப்பம் நிலவிய சூழலில், அப்போதைய பிரதமர் நவாஸ் ஷெரிப்புக்கும் அதிபர் பர்வேஸ் முஷாரஃப்புக்கும் இடையே கார்கில் போர் தொடர்பாகக் கருத்து மோதல் உருவானது. ஆனால், இந்தியாவைப் பொறுத்தவரை ஒட்டுமொத்த மக்களும் அனைத்து அரசியல் கட்சிகளும் பிரதமராக இருந்த வாஜ்பாயின் நடவடிக்கைகளுக்கு முழு ஆதரவு அளித்து, நாட்டின் ஒற்றுமையை நிலைநாட்டினர். எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரிடமும் நம் பக்கம் இருக்கும் நியாயத்தைப் புரிய வைத்தார்.

போர் தொடர்ந்துகொண்டிருந்தது..!
போர் நடைபெற்றுக்கொண்டிருந்த உக்கிரமான சூழலில் இருநாடுகளுக்கும் இடையே நடக்கும் போரை நிறுத்தி, அமைதி ஏற்பட வேண்டுமென பல சர்வதேச அமைப்புகள் முன் வந்தன. ஆனால், பிரதமராக இருந்த வாஜ்பாய் பின்வாங்கவில்லை. போர்  தொடங்கப்பட்டதற்கான காரணம் யார்? இப்போது போரை நிறுத்தினால் இந்தியாவுக்கு ஏற்படும் பின்விளைவுகள் என்னென்ன போன்றவற்றை உலக நாடுகளின் தலைவர்களிடம்  விளக்கினார். அப்போதைய அமெரிக்க அதிபர் பில் கிளின்டனுக்கு இந்தியா சார்பில், போர் குறித்து கடிதம் எழுதினார். போரை தொடங்கியதற்கான தார்மிகக் கோபத்தை வாஜ்பாய் தனக்கே உரிய சொல்நயத்துடன் அந்தக் கடிதத்தில் வெளிப்படுத்தி இருந்தார். 
இந்தியாவில் எழக்கூடிய உள்நாட்டு அரசியல் குழப்பங்கள், வெளிநாட்டு சந்தர்ப்பவாதங்கள், நெருக்குதல்கள் என எல்லாவிதமான எதிர்ப்புகளையும் தாங்கும் ஒற்றை அரணாகப் பாகிஸ்தான் முன்பு நின்றார் வாஜ்பாய். 'நாம் ஏன் போர் தொடுத்தோம்' என்பதற்கான நியாயத்தை உலக நாடுகளிடம் வாஜ்பாய் தெரிவித்த செய்திகள் முக்கியமானவை. அதைத் தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு மற்ற நாடுகள் அழுத்தம் கொடுத்தன. படையைத் திரும்பப் பெறச் சொல்லி நவாஸ் ஷெரீஃப்பிடம் வலியுறுத்தின. மே 3-ல் ஆரம்பித்து ஜூலை 27 வரை இரண்டு மாத காலம் கார்கில் போர் நடைபெற்றது. பிரதமரின் ஊக்கம், தாய் நாட்டின் மீதிருந்த பற்று, போருக்கான நியாயம் என அனைத்தும் இந்திய ராணுவ வீரர்களை உந்தித்தள்ள ஒருவித வெறியுடன் இந்திய வீரர்கள் திறம்பட செயலாற்றினர். பாகிஸ்தான் வீரர்களை ஒட்டுமொத்தமாக நம் மண்ணிலிருந்து வெளியேற்றி வெற்றிவாகை சூடினார்கள். இந்திய நிலங்கள் நம் கட்டுப்பாட்டில் முழுமையாக வந்தன. ராணுவ வீரர்கள், கண்ணீர் மல்க, நம் தேசியக்கொடியைக் கார்கில் எல்லையில் நாட்டி மரியாதை செலுத்தினார்கள். 
கார்கில் போரில் வெற்றி பெற்ற அந்தத் தருணத்தை வாஜ்பாய்க்கு கிடைத்த வெற்றியாக இல்லாமல், ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் கிடைத்த வெற்றியாக நாடே கொண்டாடியது. இந்த வெற்றிக்கு அச்சாரமாக விளங்கியவர் வாஜ்பாய். அன்பும் பண்பும் பாசமும் எப்போதும் வலியுறுத்துகிற கலாசாரமும் கொண்ட நாடுதான் இந்தியா. அதே சமயம் துரோகத்தால் தாய்நாட்டை அபகரிக்க முயல்வோரை  வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும் கோழைத்தனம் கொண்ட நாடு அல்ல என்கிற செய்தியை வாஜ்பாய் மூலம் உலகத்துக்குச் சொன்னது இந்தியா. கார்கில் ஊடுருவலின்போது, இக்கட்டான அந்தச் சூழலில் துணிந்து ஒரு முடிவு எடுத்து, போர் தொடுத்ததுடன், அதில் வெற்றியும் கண்டு நம் நாட்டுக்குப் பெருமை சேர்த்த ஒரு மாபெரும் தலைவரைத்தான் இன்று நாம் இழந்து இருக்கிறோம். அந்த அடிப்படையில் கார்கில் நாயகன் வாஜ்பாய், காலத்துக்கும் நிலைத்திருப்பார் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. 

தமிழ்ப்பிரபா