Showing posts with label இஸ்தான்புல்லில் பரதேசி. Show all posts
Showing posts with label இஸ்தான்புல்லில் பரதேசி. Show all posts

Monday, September 15, 2014

கன்னி இளவரசியும் கற்கோட்டையும்!!!!!!!!!!

இஸ்தான்புல்லில் பரதேசி -18 
Maiden Tower
'மெய்டன் டவர்' என்பதன் பின்னனி வரலாறு என்று இங்கு பல கதைகள் உலவுகின்றன. இதில் துருக்கியில் பெரும்பாலும் நம்பப்படும் கதை என்னவென்றால்...
முன்னொரு காலத்தில் ஒரு பேரரசர் இருந்தாராம். அவருக்கு ஒரு அழகான மகள் இருந்தாளாம். அவருடைய அரசில் இருந்த ஜோதிடர், அவருடைய மகள் தனது 18-ஆவது வயதில் விஷப்பாம்பு கடித்து இறந்துவிடுவாள் என்று சொன்னாராம். அந்தப் பாம்பிடமிருந்து பாதுகாக்க பேரரசர், பாஸ்ஃபரஸ் மத்தியிலே ஒரு சிறு கோட்டையைக் கட்டி அவளது 18ஆவது வயது வரை பாதுகாக்க நினைத்தாராம்.
கிட்டத்தட்ட தனிமைச்சிறை போல் வைத்து தன்னைத்தவிர வேறு யாரையும் அங்கு சென்று இளவரசியைப்பார்க்க அவர் அனுமதிக்கவில்லை. இளவரசியின் 18-ஆவது பிறந்த நாளும் வந்தது. அன்று பேரரசர் அவளைக் கண்டு வாழ்த்துச் சொல்வதற்கு ஒரு கூடை நிறைய பழங்களை எடுத்துச் சென்றாராம். மகளைக் காப்பாற்றிவிட்டோம் என்று அவர் மகிழ்ச்சியில் திளைத்த போது, பழங்களிடையே  இருந்த ஒரு விஷக் குளவி இளவரசியியைக் கொட்டிவிட, ன் தந்தையின் கரங்களிலேயே அவள் உயிரை விட்டாளாம். எனவே இதற்கு  மெய்டன் டவர் என்று பெயர் வந்ததாம்.  

துருக்கியின் 10 லிரா கரன்சியின் பின்னால் இந்த மெய்டன் டவர் பொறிக்கப்பட்டுள்ளது.
படகு மெதுவாக நகர்ந்து சென்றபோது இடது புறத்தில் ஒரு பிரம்மாண்டமான கோட்டை ஒன்று வந்தது. உங்களுக்குத்தான் தெரியுமே கோட்டை கொத்தளங்களைப் பார்த்தால் என் தோள்கள்  தினவெடுக்குமே ("ஆமா தோள் எங்க இருக்கு வெறும் தோல்தான் இருக்குது ". யாரது யாரது இதை யார் இதைச் சொல்வது? ரொம்ப நாள் காணாப்போன மகேந்திரனாய் இருக்குமோ அல்லது என் மனைவியா? )

Rumelian castle
உற்றுப் பார்க்கும் போது அங்கே உருவங்கள் சாரி சாரியாய்த் தெரிந்தன. திடுக்கிட்டு ஓஸிடம் கேட்டேன், "சுல்தானின் படைகள் இன்னுமா இங்கே இருக்குது ?". "இல்லை இல்லை கோட்டையைப் பார்க்க வந்த மக்கள்", என்று ஓஸ் தெளிவுபடுத்தினான். அதான பார்த்தேன் சுல்தான் கதை முடிஞ்சு 100 வருஷம் ஓடிப்போச்சே.
ருமேலியன் கோட்டை (Rumelian Castle)
சரியர் மாவட்டப்பகுதியான துருக்கியின் ஐரோப்பிய பகுதியில் இருக்கும் இந்தக் கோட்டையின் பெயர் "ருமேலி ஹிசரி" அல்லது 'ருமேலியன் கோட்டை". ஆட்டமன் சுல்தான் மெஹ்மது II -வால் 1451-1452ல் கட்டப்பட்டது இந்தக்கோட்டை. கட்டி முடிக்கப்பட்டு சுமார் 570 வருடங்கள் ஆகியும் கம்பீரமாய் நின்றது கோட்டை. 
Sultan Mehmed II
கான்ஸ்டான்டிநோபிளை பிடிக்கும் முன்னால், படைகளை நிறுத்துவதற்காகப் கட்டப்பட்ட கோட்டையாம் இது. அது தவிர பாஸ்ஃபரஸ் பகுதியில் கப்பல்கள் வருவதைக் கண்காணிக்கவும் பயன்படுத்தப்பட்டது. இதற்கு நேர் எதிரே அக்கறையில் இதைவிடப் பழமையான அனடோலியன் கோட்டை இருக்கிறது என்றான் ஓஸ். இங்கிருந்து பார்க்க முடியவில்லை. அனடோலியப் பகுதி தான் ஆட்டமன் படைகளால் ஆக்ரமிக்கப்பட்ட முதல் பகுதி. இந்த அனடோலியக் கோட்டை கட்டப்பட்டது 1394ல்

ஏற்கனவே சுல்தான் இரண்டாவது மெஹ்மதுவின் தந்தை, சுல்தான் இரண்டாவது முராது, கான்ஸ்டான்டிநோபிளை கைப்பற்ற  முனைந்த போது  பாஸ்ஃபரசில் இருந்த பைஜான்டிய கப்பற்படையை முறியடிக்க முடியவில்லை. எனவேதான் ஆட்சிக்கு வந்தவுடன், இந்த இடத்தில் இருந்த கன்னியாஸ்திரிகளின் மடத்தைக் கைப்பற்றி, அவர்களைத்துரத்திவிட்டு கட்டப்பட்டதுதான் இந்தக்கோட்டை.
அதற்கு முன்னால் இதே இடத்தில் ஒரு காலத்தில் ரோமர்களின் கோட்டை இருந்து அதன் பின்னர் ரோமப்பேரரசின் சிறையாக மாற்றப்பட்டதாம்.
சுல்தான் கோட்டை கட்ட ஆரம்பிக்கும்போதே, அவர்களின் படை வலிமையை அறிந்த பைஜான்டிய  ரோமப் பேரரசர் பதினோராவது கான்ஸ்டான்டைன் (1404-1453)  சமாதான தூதுவிட்டார். ஆனால் சுல்தான் அதை நிராகரித்துவிட்டார்.
Emperor Constantine X1 
கோட்டையில் உள்ள மூன்று முக்கிய டவர்களுக்கு அதனைக் கட்டும்போது மேற்பார்வை பார்த்த மூன்று படைத்தலைவர்களின் (பாஷா) பெயரே சூட்டப்பட்டது. சுல்தானும் நேரடியாக வந்து கட்டுவதைக் கண்காணித்தார். ஆயிரக்கணக்கான கட்டடக் கலைஞர்களின் உதவியால் ஏப்ரல் 15, 1452ல் கட்ட ஆரம்பிக்கப்பட்டு 31 ஆகஸ்ட் 1452ல் கட்டி முடிக்கப்பட்டது. மொத்தமே நான்கு மாதங்கள் 16 நாட்களில் கட்டி முடிக்கப்பட்ட இந்த பிரமாண்ட கோட்டை ஒரு இமாலய சாதனைதான்.
வேலை செய்பவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் மேலிருந்து பார்த்தால் அரபி மொழியில் முகமது நபியின் பெயர் வருவதுபோல் இது அமைக்கப் பட்டுள்ளது. ஆனால் அரபி மொழியில் எழுதும்போது சுல்தான் மெகமதுவின் பெயரும் அதே மாதிரிதான் தெரியும் என்பதால் சுல்தான் மறைமுகமாக தனது பெயரையே அப்படிப் பயன்படுத்திக் கொண்டதாகவும் சொல்லப்படுகிறது. ஒரே கல்லில் ரெண்டு மாங்காய். அதன் பின்னர் நடந்தது தான் தெரியுமே. கான்ஸ்டான்டி நோபிள் வீழ்ந்தது ஆட்டமன் பேரரசு எழுந்தது, வளர்ந்தது, நீண்ட நெடுங்காலம் நிலைத்தது. 
Bosphorus Bridge 
படகு நகர்ந்து சென்றதில் பெரிய மூன்று மேம் பாலங்கள் ஒன்றன்பின் ஒன்றாக வந்தன.
முதலாவது பாலம் 1973-ல் கட்டிமுடிக்கப்பட்டது. 'பாஸ்ஃபரஸ் பாலம்' என்றழைக்கப்படும் இது ஆசியப்பகுதியை ஐரோப்பியப் பகுதியோடு இணைக்கிறது. 1973ல் இதற்கான செலவு சுமார் 200 மில்லியன் டாலர். இதன் மொத்த நீளம் 3524 அடி.ஆறு பாதைகள் கொண்ட இந்தப் பாலத்தில் ஒரு நாளைக்கு மட்டும் சுமார் 2 லட்சம் வண்டிகள் கடக்கின்றனவாம். பழைய 1000 லிரா கரன்சியில் இந்தப் பாலம் அச்சடிக்கப்பட்டது.  
டிராஃபிக்கைச் சமாளிக்க இரண்டாவது பாலம் 1988ல் கட்டிமுடிக்கப்பட்டு ஃபடிஹ் சுல்தான் மெஹ்மது பாலம், எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. மூன்றாவது பாலம் இப்போது கட்டப்பட்டு வருகிறது.   
அதன்பின்னர் நான் ஏற்கனவே பார்த்த பெய்லர்பேயி அரண்மனை வந்தது. அப்படியே அழகான சூரிய அஸ்தமனத்தையும் பார்த்துவிட்டுத் திரும்பினோம்.
வழக்கம்போல என்னைக் கொண்டுவந்து ரூமில் விட்டுவிட்டனர். நன்கு தூங்கி எழுந்து அடுத்த நாள் காலையில் எழுந்து ரெடியாகி திரும்பவும் ஆட்டாதுருக் ஹவில்மணி விமான நிலையத்திற்கு வந்து அதேநாள் மாலை நியூயார்க் வந்து சேர்ந்தேன்.
இஸ்தான்புல் நினைவுகளும் சுல்தானின் ஆட்டமன் பேரரசு என்ற கனவுலகமும் என்றென்றும் மறக்க முடியாதவை.
-முற்றும்.

இஸ்தான்புல்லில் என்னுடன் கடந்த 18 வாரங்களாக தொடர்ந்து பயணித்த வாசக நண்பர்களுக்கு என் உளமார்ந்த  நன்றிகள்.


அடுத்த திங்கள் கிழமை முதல் "எழுபதுகளில்  இளையராஜா" என்ற புதிய தொடர் ஆரம்பம்.

Monday, September 8, 2014

இஸ்தான்புல்லில் பரதேசி-17 துருக்கி மசாலாவும் யாளி வீடுகளும் !!!!!!!

Egyptian Spice Bazaar Istanbul Turkey
ஸ்பைஸ் பஜாரில் சில கடைகள், இஸ்தான்புல் நினைவுப் பொருட்கள் மற்றும் பரிசுப் பொருட்கள் விற்கும் கடைகளாக மாறிப்போனாலும், பல கடைகள் பாரம்பரியமாக மசாலாப் பொருட்கள் விற்கும் கடைகளாக இருந்தன. ஓஸ் குறிப்பிட்ட ஒரு கடைக்கு அழைத்துச் சென்றான். முன்னரே சொல்லியிருப்பான் போல, அல்லது தினமும் நடக்கும் போல. எங்களை வாசலில் நின்று வரவேற்று அழைத்துச்சென்று கடைகளில் உள்ள மசாலாக்களை அறிமுகப்படுத்தினார்கள். 

வெள்ளைக்காரர்களுக்கு வேண்டுமென்றால் அது புதிதாக இருக்கலாம் ஆனால் எனக்கு அப்படியில்லை என்று  நினைத்தேன். ஆனால் மல்லிப்பொடி மிளகாய்ப் பொடி தவிர மற்றவை என்னவென்றே தெரியவில்லை. எல்லாக் கலரிலும் பொடிகள்  இருந்தன. சிலவற்றை முகர்ந்து பார்க்கக் கொடுத்தான். நல்ல மணம் கொண்டு இருந்தன.

அது தவிர சிறு சிறு துண்டுகளாக வெட்டப்பட்ட உலர்ந்த பழங்கள் இருந்தன. அதெல்லாம் தேநீர் வகைகள் என்று சொன்னார்கள். அதில் தெரிந்த தெரியாத பல வகைகள் தெரிந்தன. எனக்கு ஏற்கனவே அறிமுகமான ஆப்பிள் டி ஒரு கால் கிலோ வாங்கிக் கொண்டேன் ($10 டாலர்கள்). அதன் பின் இனிப்பு வகைகள் அறிமுகப்படுத்தப்பட்டு, சாப்பிடவும் சாம்பிள்கள் கொடுத்தனர். என் சர்க்கரை வியாதியை நொந்து கொண்டே ஜாக்கிரதையாக கையாண்டேன்.

குறிப்பாக 'டர்க்கி டிலைட்' என்று சொல்லப்பட்ட இனிப்பு வகைகள். விமானத்தில் கொடுத்ததாகச் சொன்னேனே, அதில் பல வகைகள் பல கலரில் இருந்தன. அது தவிர துருக்கியின் விசேஷமான இனிப்பு வகைகளான பாக்லவா என்ற ஒரு இனிப்பு ஒரு விள்ளலை எடுத்து சாப்பிட்டுப் பார்த்தால் அடிவயிறு தாண்டி உள்ளங்கால் வரை இனித்தது.
Turkish sweets
ஒவ்வொரு வகையிலும் சிறிய சிறிய பெட்டிகளை வாங்கிக் கொண்டேன். நியூயார்க் திரும்பினால் சிலருக்கு கொடுக்க வேண்டுமே.இறுதியில் ஒரு தேநீரும் கொடுத்தார்கள். சரியாகச் சாப்பிடாத லஞ்சுக்கு அது ஈடுகட்டியது.
அடுத்து பாஸ்ஃபரஸ் குருஸ் என்றான் ஓஸ், திரும்பவும் “பேஸிக்டஸ்” சென்று அங்கிருந்த படகில் ஏறினோம். இரண்டு அடுக்குகள் கொண்ட சுமார் 200 பேர் செல்லும் பெரிய படகு அது. அமெரிக்காவில் செல்வது போல் சேஃப்டி  அனொவ்ன்ஸ்மென்ட் ஒன்றும் இல்லை. படகு மெல்ல நகர்ந்தது.
பாஸ்ஃபரஸ் (Bosphorus) என்பது ஒரு strait. இது ஆசியப்பகுதியையும் ஐரோப்பியப் பகுதியையும் பிரிக்கும் ஒரு நீர்ப்பரப்பு. ஆளம் அவ்வளவு இருக்காது என்று நினைத்து ஓஸிடம் கேட்டால். இது குறைந்தது 43 அடி ஆழமும் அதிகபட்சம் 361அடி ஆழமும் உள்ள பகுதி என்றான். அய்யய்யோ, நம்ம அஞ்சரை அடி உடம்பு தவறி விழுந்தால் ஆறடி நிலம் கூட கிடைக்காம போய் ஜலசமாதிதான் என்று நினைத்து, ஓரத்தில் பிடித்த சீட்டை விட்டுக் கொடுத்தேன்.
இந்தக் கடல்வழிதான் ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் செல்கிறது. எனவே இந்தப்பகுதிக்கு உரிமை கொண்டாடி சில கடற்போர்கள் நடந்திருக்கின்றன. குறிப்பாக 1877-78ல் ரஷ்ய துருக்கிப் போர் (Russo-Turkish War) நடந்ததாம். அதன் பின்னர் 1915ல் நடந்த முதலாம் உலகப்போரில் நேசப்படைகள் இந்தவழிதான் நுழைந்தனவாம்.  

ஆனால் ஆட்டமன் பேரரசின் கட்டுப்பாட்டில் இருந்த 16 லிருந்து 18ஆம் நூற்றாண்டு வரை,  ரஷ்யக் கப்பல்கள் கறுப்புக் கடல் வரை இந்த வழியாக வர தடையும் இருந்தது. படகு நகர ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே இடது புறம் ஒரு பிரம்மாண்டமான கட்டடம் வந்தது. இதுதான் "டால்மபாஷே அரண்மனை” என்றான். அப்ப நான் பார்த்தது வேறயா என்று குழம்பிய போதுதான் இது பக்கவாட்டுத்தோற்றம் என உணர்ந்தேன். முன்புறத்தை விட பக்கவாட்டுத்தோற்றம் மிகச் சிறப்பாகவும் கம்பீரமாகவும் இருந்தது.
அதன்பின் கரையோரத்தில்  நிறைய வீடுகள் தெரிந்தன. ஓஸ் சொன்னான், இவைகளின் பெயர் “யாளி" என்று. மொத்தம் 620 வீடுகள் இருக்கின்றன என்றும்   சொன்னான். அந்த வீடுகள் ஒவ்வொன்றும் வெவ்வேறு வண்ணங்களில் வெவ்வேறு வடிவங்கள் அமைப்பில் இருந்ததைப் பார்த்தேன். அது தவிர ஆட்டமன் பேரரசின் 11 அரண்மனைகளும் அங்கே இருக்கின்றன. மற்றும் இஸ்தான்புல்லின் பல முக்கிய கட்டடங்களும், பள்ளிவாசல்களும் தெரிந்தன. 
அப்போது பாஸ்ஃபரஸின் நடுவில் ஒரு சிறிய மணல் திட்டு வந்தது. அதனுள்ளே கலங்கரை விளக்கம் போல தெரிந்த ஒரு சிறிய டவர் இருந்தது. அது என்ன என்று ஓஸிடம் கேட்டேன். “பொறு சொல்கிறேன், அவசரப்படாதே”, என்று புன்சிரித்துவிட்டு சொல்ல ஆரம்பித்தான்.
அதன் பெயர் 'மெய்டன் டவர்' (The Maiden Tower) அதனை 'லியாண்டர் டவர்' (Leander's Tower) என்றும் அழைக்கிறார்கள். இது மிகப்பழையதாம்.

ஏதென்ஸ் நாட்டின் படைத்தளபதி தன்னுடைய கப்பற்படையின் வெற்றிக்குப் பின்னர், கறுப்புக் கடல் வழியாக வரும் பிறநாட்டு வணிகக் கப்பல்களுக்கு சுங்க வரி வசூலிக்கும் விதத்தில் இந்த இடத்தில் இந்த டவரைக்  கட்டினாராம்.  அதன் பின்னர் பைஜான்டிய பேரரசர் அலெக்ஸியஸ் காம்னேனஸ் 1110ல் இங்கே ஒரு மரக்கோபுரத்தை அமைத்து அதைச் சுற்றிலும் ஒரு கற்சுவரை எழுப்பினார். இதிலிருந்து ஐரோப்பிய பகுதியிலிருந்து மற்றொரு டவரை இணைத்து ஒரு பெரிய இரும்புச் சங்கிலி கட்டப்பட்டது. 1509ல் பூகம்பத்தால் ஒருமுறையும் 1721ல் நெருப்பினால் ஒருமுறையும் அழிந்து போன இந்த டவர் அதன் பின்னர் கலங்கரை விளக்கமாக மாற்றப்பட்டது.
இப்போது இது ஒரு உணவகமாக மாற்றப்பட்டு மக்கள் படகு வழியாக இங்கு வந்து செல்கின்றனர்.
“ஆனால் இதனை எதற்கு மெய்டன் டவர் என்று அழைக்கிறார்கள்?”, என்று கேட்டதற்கு ஒரு கதை ஒன்று சொன்னான். அந்தக் கதையை அடுத்த வாரம் சொல்கிறேன்.
- தொடரும்.

அடுத்த வாரத்தில் இஸ்தான்புல் பயணக்கட்டுரை முடியும்.

விரைவில் எதிர்பாருங்கள் "எழுபதுகளில்  இளையராஜா" என்ற புதிய தொடர் .

Tuesday, September 2, 2014

தங்கப்பெண்ணும் தங்கக் கொம்பும் !!!!!!!!!!

இஸ்தான்புல்லில் பரதேசி - பகுதி 16. 

ஒரு பையன் (?) பக்கத்தில் உட்காரும் கூச்சம் கொஞ்சம் கூட இல்லாமல் இருந்தாள் நீ.தே.எனக்குத்தான் கூச்சமாக இருந்தது. புருவங்களை உயர்த்தி புன்னகை புரிந்ததற்கு பதில் புன்னகை கூட சரியாக வரவில்லை எனக்கு. இந்த நேரம் பார்த்து ஜெர்மன் வரலாறு ஒன்றும்  ஞாபகம் வரவில்லை. இங்கிலாந்து வரலாறு என்றால் இன்றைய நாள் முழுதும் பேசுவேன். ஹிட்லர் பற்றிப் பேசினால் அது நெகடிவ்வாகப் போய்விடும். ஆ ஞாபகம் வந்துவிட்டது. மெக்ஸிகோவை ஆண்ட ஆஸ்திரியாவைச் சேர்ந்த  பேரரசர் மேக்சிமிலியன் ஜெர்மனியின் அரச வம்சத்தில்தானே பெண் எடுத்திருந்தார். அதைப்பற்றிப் பேசலாமா? இல்லை கிழக்கு மேற்கு ஜெர்மன் பிரிவு அல்லது இணைப்பு. இடிந்து விழுந்த ஜெர்மன் சுவர் ஆகியவை பற்றிப் பேசலாமா? என்று நினைத்தபோது ஒரு சத்தம் கேட்டது, "ஏலே சேகரு ஏண்டா இப்படி மொக்கைத்தனமா யோசிக்கிற வேறெதாவது பேசு", என்று. வேற யாரு என் மனசு தான்.
"நிகழ்கால வரலாறு ஒன்றும் எனக்குத் தெரியாதே"
“ஏண்டா இப்படி வரலாறு வரலாறுன்னு அலையுற, வேறேதுமே உனக்குப் பேசத்தெரியாதா?".
சரி இஸ்தான்புல்லைப்பற்றியே பேசுவோமே என்று நினைத்துக் கொண்டே, "ஹாய்' என்றேன். அவளும் “ஹாய்” என்றாள். அதற்குள் ஜெர்மன் மொழியில் ஒருவர் பேசத்துவங்க, அப்போதுதான் கவனித்தேன். ஒரு நடுத்தர வயதானவர் புதிதாக வந்திருக்கிறார். அப்புறம்தான் ஓஸ் சொன்னான், அவர் ஜெர்மன் தெரிந்த கைடு, கேம்லிக்காவில் வந்துதான் ஜாயின் பண்ணார் என. அப்போதுதான் எனக்கு விளங்கியது, அவருக்கு இடம்விட்டுத்தான் நீ.தே என் பக்கத்தில் உட்கார்ந்தாள் என. அவர் தொணத்தொனவென்று பேசி முடிப்பதற்குள் அடுத்த ஸ்டாப் வந்துவிட்டது.
ஒரு மணி நேரத்தில் 'ஹாய்' என்பதைத்தவிர ஒன்றும் பேசவில்லையே என வருத்தத்துடன் கீழிறங்கினேன். இதுதான் "தங்கக்கொம்பு" என்றான் ஓஸ். தங்கப்பெண் இறங்கிவிட்டதால்  , தங்கக்கொம்பாவது பார்ப்போம் என நினைத்துக்கொண்டேன்.

தங்கக் கொம்பு (Golden Horn)
Golden Horn 

“கோல்டன் ஹார்ன்” என்பது இயற்கையில் அமைந்த ஒரு துறைமுகம். பாஸ் ஃபரஸையும் மர்மரா கடலையும் இணைக்கும் இடம் ஒரு தீபகற்பம்  போல வளைந்து இருக்கிறது. இந்த இடம் ஒரு கொம்பு போன்ற உருவத்தில் இருப்பதால், இந்தப்பெயர் வந்திருக்கிறது. இந்த இடம் பழைய இஸ்தான்புல்லின் வரலாற்று இடத்திலிருந்து இஸ்தான்புல்லின் மற்ற நகர்ப்புற பகுதிகளை இணைக்கிறது. இந்த கடல் வழிப்பாதையின் இணைப்புதான், ஆயிரம் வருடங்களுக்கு மேலாக, கிரேக்க, ரோம பைஜான்டியம் மற்றும் ஆட்டமன் பேரரசுகளின் வணிகக் கப்பல்களை பாதுகாத்ததாம்.
இந்த இடத்தில்தான் அலிபேகாய் (Alibeykoy) மற்றும் (Kagithane) காகிதானே என்னும் இரு ஆறுகள் கடலில் இணைகின்றன. கோல்டன் ஹார்ன், ஏழரை கிலோமீட்டர் நீளமும் 750மீட்டர் அகலமும் 35 மீட்டர் ஆழமும் கொண்டது. தற்போது இதில் நான்கு பாலங்கள் இருக்கின்றன. அவை ஹேலிக் பாலம், பழைய லாடா பாலம், அத்தாதுர்க் பாலம் மற்றும் புதிய கலாடா பாலம்.
சமீபத்தில் கட்டப்பட்ட ஐந்தாவது பாலம் மெட்ரோவை  இணைக்கிறது.
ஏற்கனவே சொன்னபடி ஆயிரம் வருடங்களாக இருக்கும் இந்த துறைமுகம் பைஜான்டிய பேரரசின் கடற்படையின் தலைமையிடமாக விளங்கியது. பிற நாடுகளின் கடற்படை தாக்காமலிருக்க இதன் கரைப் பகுதிகளில் சுவர் எழுப்பப்பட்டது. வேறெந்த அந்நியக் கப்பல்கள் இப்பகுதியில் நுழைந்து விடாமலிருக்க, பழைய கலாடா பாலத்திற்கும், கான்ஸ்டான்டி நோபில் நகரத்திற்கும் இணைப்பாக ஒரு பெரிய சங்கிலி கட்டப்பட்டது. கி.பி.1204-ல்  நான்காவது சிலுவைப்போர் நடக்கும்போது லத்தீன் படையால் இந்த கலாடா பாலம் அழிக்கப்பட்டது. ஆனால் 1348ல் ஜெனோசே காலத்தில் இது மீண்டும் கட்டப்பட்டு "கிறிஸ்துவின் கோபுரம்" (Tower of Christ) என்று பெயரிடப்பட்டது. மேலும் பலதடவை இந்த இடத்தில் சண்டை நடந்ததாம்.
கி.பி.1453ல் சுல்தான் மெஹ்மது II இந்த இடத்தைப் பிடித்தபிறகு அங்கு வாழ்ந்து   இடம் பெயர்ந்த கிரேக்கர்களை மறுகுடியேற்றம் செய்தார். பாலட் என்ற பகுதியில் பைஜான்டியம் காலத்திலிருந்து யூதர் வாழ்ந்து வந்தனர். சுல்தானின் ஆக்ரமிப்புக்குப் பின்னர் பெரும்பாலானோர் இடம் பெயர்ந்தனர். ஆனால் ஸ்பெயினிலிருந்து யூதர்கள் வெளியேற்றப்பட்டபோது, சுல்தான் பேயஜிட் II அவர்களுக்கு மீண்டும் அடைக்கலம் கொடுத்து இதே பகுதியில் குடியேற்றம் செய்தார்.
இப்போது இருபுறமும் பூங்காக்கள் அமைக்கப்பட்டு இருக்கிறது. இஸ்தான்புல்லின் சேம்பர் ஆஃப் காமர்ஸ் இங்கு இருக்கிறது. அதோடு பழைய கால முஸ்லிம், யூத மற்றும் கிறிஸ்தவ கல்லறைகளும் இங்கு இருக்கின்றன.

File:Baloukli cemetery, Istanbul Turkey.JPG

அதை முடித்துவிட்டு மீண்டும் வேனில் ஏறினோம். இந்தச் சமயத்திலாவது எப்படியாவது நீ. தே விடம் பேசிவிட வேண்டும் என நினைத்தேன். வேகமாக உள்ளே போய் ஏற என் பின்னால் வந்த ஓஸ் என்னருகே அமர்ந்தான். நானும் ஒண்ணும் சொல்ல முடியவில்லை. இப்போது ஓஸ் எனக்கு மட்டுமே கைட் என்பதால் என் பக்கத்தில் வந்து உட்கார நீ.தே முன்புறம் சென்று புறமுதுகு காட்டி உட்கார்ந்து விட்டாள்.ஆனால் இப்போது எனக்கென்று தனிப்பட்ட ஒரு கைட் இருக்கிறான் என நினைத்து மனதைத் தேற்றிக் கொண்டேன்.
மதிய உணவை முடித்துவிட்டு வேனுக்கு வர நீ. தே உள்பட்ட ஜெர்மன் குழுவைக் காணவில்லை. சொல்லிக் கொள்ளாமலே போய்விட்டார்கள் என வருத்தமாய் இருந்தது.
Spice bazaar Bulding
ஆனால் புதிதாக வயதான ஒரு தம்பதியினர் வந்தனர், இங்கிலாந்திலிருந்து. யாருக்கு வேணும்.
மதியம் முதல் ஸ்டாப்பாக நாங்கள் சென்றது எகிப்திய மார்க்கெட் என்று அழைக்கப்படும் “ஸ்பைஸ் பஜார்”. ஃபதிஹ் மாவட்டத்தில் இருக்கும் இந்த மார்க்கெட் இஸ்தான்புல்லின் இரண்டாவது பெரிய ஷாப்பிங் காம்ப்ளக்ஸ். முதலாவது பெரிய கிராண்ட் பஜாரைப்பற்றி நாம் ஏற்கனவே பார்த்துவிட்டோம்.
இதன் பக்கத்தில் உள்ள "நியூமாஸ்க்"கின் பெயரோடு இணைத்து முதலில் இது "நியூ பஜார்" என்றழைக்கப்பட்டது. ஆட்டமன் அரசின் ஒரு அங்கமாக இருந்த எகிப்திலிருந்து வந்த வருமானத்திலிருந்து கட்டப்பட்டதால் பின்னர் இது எகிப்திய "பஜார்" என்றும் அழைக்கப்பட்டது.
IV Mehmet.jpg
சுல்தான் மெஹ்மது IV 
சுல்தான் மெஹ்மது IV வின் தாயார் வாலிட் சுல்தான் சுல்தானா டர்ஹான் ஹேடிஸ் அவர்களின் ஆணைப்படி 1660-ல் ஆரம்பித்து 1665-ல் கட்டி முடிக்கப்பட்டது இந்த  பஜார். அதிக கடைகளில் மசாலா சாமான்கள் விற்கப்படுவதால் ஸ்பைஸ் பஜார் என்றழைக்கப்படும் இதில் இப்போது மொத்தம் 85 கடைகள் இருக்கின்றன. மசாலா மணம் மூக்கைத்துளைக்கிறது  வாருங்கள் உள்ளே போய்ப்பார்க்கலாம்.

 தொடரும் >>>>>>>>>>>>>>>


விரைவில் எதிர்பாருங்கள் "எழுபதுகளில்  இளையராஜா" என்ற புதிய தொடர் .