Monday, December 30, 2013

போர்ட்டரிக்கோ பயணம், பகுதி 9: குண்டு மாங்கா தோப்புக்குள்ளே!!!!!!!!!பரிசுத்த ஆவி வந்துவிட்டதோ, எனப் பயந்த போது, "அத்தான் இங்க பாருங்க", என்றாள். அட வேப்பமரம் அதைப் பார்த்துத்தான் ஓடியிருக்கிறாள். ஐயையோ இதுவேற ஆவியாக இருக்குமோ எனப்பயந்தேன். ஆனால் ஒன்றுமில்லை பல வருடங்களுக்கு பிறகு வேப்பமரத்தைப் பார்த்ததில் வந்த ஆவேசம்தான் அது. எட்டிப்பறிக்க குதித்து வேப்பங்கொழுந்தை கொண்டு வந்து என்னைச் சாப்பிடச் சொல்லி வற்புறுத்தினாள். சுகருக்கு நல்லதாம். அவள் குதித்ததைப் பார்த்துச் சிரித்த என் நகைச்சுவை கசப்புச்சுவை ஆனது.
சேன் வான் கத்தீட்ரல்

        மதிய நேரத்தில் ஆளரவம்  இன்றி கத்தீட்ரல் பேரமைதியாய் குளிர்ச்சியாய் இருந்தது.
         கி. பி.1520-ல் புலம் பெயர்ந்த ஸ்பானிய கத்தோலிக்க மக்களின் ஆத்மீகத் தேவைகளைப் பூர்த்தி செய்ய பல ஆலயங்கள் கட்டப்பட்டன. இந்த "சேன் வான் கத்தீட்ரல்", கி.பி.1522-ல் கட்டப்பட்டது.


 பின்னர் ஸ்பானிய கத்தோலிக்க மன்னரின் நிதியுதவியால், கட்டடமாக கட்டப்பட்டது. ஸ்பானிய காதிக் (Gothic) கட்டடக்கலைக்கு சான்றாக இன்றும் நிமிர்ந்து நிற்கிறது. 18 மற்றும் 19 ஆம்  நூற்றாண்டில் சான் வான் துறைமுகத்திற்கு வரும் எவரும் நேராக இந்தக் கத்தீட்ரல் வந்து வணங்கி சுகப்பயணம் வாய்த்தமைக்கு நன்றி சொல்லிவிட்டுச் செல்வது ஒரு பழக்கமாக இருந்தது.

 இங்குதான் போர்ட்டரிக்கோவின் முதல் கவர்னர் பான்சே டி லியான் அவர்களுடைய மார்பிள் கல்லறை இருக்கிறது.
கேப்பில்லா டெல் கிறிஸ்டோ (Capilla del Cristo)
        இறங்கும் வழியில் இந்தப்பழைய அழகிய சேப்பல் (Chapel - சிற்றாலயம்) இருந்தது. 

குன்றின் விளிம்பில் இருக்கும், இந்த சேப்பல் மிகவும் புராதனமானது. ஒரு ஸ்பானிய வீரன் தன் குதிரையில் வேகமாக ஏறி வரும்போது, வேகத்தை குறைக்க முடியாமல் இந்தக் குன்றிலிருந்து மறுபுறம் கீழே விழுந்து இறந்துபோனதாகச் சொல்கிறார்கள். இந்த சேப்பல் அவன் நினைவாக கட்டப்பட்டு இருக்கலாம் என்று சிலரும், மேலும் யாரும் இந்தக் குன்றின் மறுபுறம் விழுந்து விடக்கூடாது என்பதால் கட்டப்பட்டது என்று வேறு சிலரும் சொல்கிறார்கள்.
லா ரோகடிவ்வா (La Rogativa)

        ஃபோர்ட்டலிஸா கோட்டையின் பக்கவாட்டில் வலதுபுறம் இருந்த பழைய ஸ்பானிய துறைமுகத்தையும் அதன் கரையில் இறகுபோல் வருடிய சளக்புளக் சிற்றலைகளையும் ரசித்துக்கொண்டே, கீழிறங்கினோம், வழியில் இடதுபுறம் நின்ற ஆஜானுபாகு ஆலமரத்திற்கு டாட்டா சொல்லி, இறங்கும்போது அந்த இரும்புச்சிற்ப சிலைகளை மீண்டும் பார்த்தேன். ஏதோ கிறிஸ்தவ பாதிரியார் போலத்தெரிந்தது. வழியில் பலபேரை விசாரித்து அறிந்து கொண்ட செய்தி என்னவென்றால், கி.பி.1797ல் சேன்வான் நகரத்தை, ஆங்கிலேய கப்பற்படை முற்றுகையிட்டிருந்த போது, கோட்டையின் உள்ளே அத்தியாவசிய பொருட்கள் ஒன்றையும் அனுமதிக்கவில்லை. உள்ளே அனைவரும் பட்டினி. பொறுத்து பொறுத்துப்பார்த்த கவர்னர், பிஷப்பைக் கூப்பிட்டு, "கடவுள் நிகழ்த்தும் ஒரு அற்புதம்தான் நம்மைக்காக்கமுடியும் எனவே ஜெபத்தை ஆரம்பியுங்கள்" என்று வேண்டினார். எனவே அதே தின மாலையில் பிஷப் தன்னோடு சில போதகர்களையும், கன்னியாஸ்திரிகளையும் அழைத்துக்கொண்டு கையில் தீப்பந்தங்களை எடுத்துக்கொண்டு இறைவனை இறைஞ்சுவதற்காக கோட்டையின் விளிம்பிற்கு சென்றாராம். ஏற்கனவே முற்றுகையில் சோர்ந்து, களைத்து சுகவீனப்பட்டு, பலவீனப்பட்டிருந்த ஆங்கிலேயக் கப்பற்படை, மறுபடியும் பெரிய படையொன்று இரவுத்தாக்குதல் நடத்த வருகிறது என்று பின்வாங்கி போயே போயிந்தே. அதன் நினைவாக எழுப்பப்பட்டதுதான் இந்த நினைவுச்சின்னம். நல்லவேளை இதையும் தெரிந்து கொண்டேன்.
        கீழிறங்கி பார்க்கிங்கில் விட்ட காரை எடுத்துக்கொண்டு ரூம் திரும்பினோம். முழுநாளும் பார்க்கிங் செய்ய  வெறும் மூன்று டாலர் என்பது ஆச்சரியமூட்டியது. நியூயார்க்கில் 1/2 மணி நேரத்திற்கு 10 முதல் 12 டாலர் வாங்கி விடுவார்கள். களைத்துப்போன என் மனைவி படுக்கையில் தஞ்சம் புக, என் பிள்ளைகள் உடை மாற்றிக் கொண்டு, உற்சாகமாக பீச்சுக்குச் சென்றனர். நானும் மறுபடியும் காரை எடுத்துக்கொண்டு சில நினைவுப் பொருட்கள் வாங்கி வந்தேன். ரூம் திரும்பும்போது, சுடச்சுட பொன்னி சாதமும் பூண்டுக்குழம்பும், தொட்டுக்கொள்ள முறுக்கும் இருந்தது. கையால் பிசைந்து கைமணக்க வாய்மணக்க உண்டு முடித்து TV யை ஆன் செய்தேன். ஒரு குண்டுப்பெண்ணை ஓடவைத்து, ஆடவைத்து, பட்டினிபோட்டு ஆறுமாதத்தில் 240 பவுண்டு குறைந்து தடி இடையை கொடி இடையாக்கிய சாதனையை காண்பித்தனர். என் மனைவியை உற்றுப்பார்த்தேன், அவள் புரிந்து கொண்டு முறைத்ததில், வேணாம் சாமி என் கொடி  இடை, ஒடி இடையாகிவிட்டால் என்ன செய்வது என்று பயந்து, இழுத்து மூடி திரும்பிப்படுத்தேன். 
ஆகஸ்ட் 7, 2013 புதன் கிழமை
        காலையில் புத்துணர்ச்சியோடு எழுந்து ரெடியாகி "சேன் கிறிஸ்டபல் கோட்டை மற்றும் கேபிடோலியா பார்ப்பதாக இன்றைய திட்டம்", என்றேன். "மறுபடியும் கோட்டையா ஆளைவிடு சாமி" என்று மூவரும் கிட்டத்தட்ட கோரஸாகச் சொல்ல, அவர்களை "லா வெர்டே" என்ற அழகிய கடற்கரைக்கு அழைத்துச் சென்றேன். 

பார்க்கிங் செய்துவிட்டு இறங்குவதற்குள், என் மனைவி இறங்கி ஓடினாள். "ஐயையோ நீ கோட்டைக்கு வரவேண்டாம். அதற்காக, கடலில் குதித்துவிடாதே என்று கத்திக்கொண்டே" பின்னால் ஓடினேன்.
        ஆனால் அவள் ஓடியது ஒரு மாமரத்தை நோக்கி. இலைகளுக்கு நிகராக மாங்காய்கள் இளம்பச்சை நிறத்தில் ஏராளமாகத் தொங்கிக்கொண்டிருந்தன. இடம்பொருள் ஏவல் மறந்து, மகள்கள் கடிந்து கொண்டதையும் சட்டை செய்யாது, துள்ளிக்குதித்து இரண்டு மாங்காய்களை பறித்துவிட்டாள். அவ்வளவு துரித நடவடிக்கையிலும், இளம் பச்சையில் சிவப்போடிய பழுக்கத்துடிக்கும் காய்களை பறித்திருந்தாள். யார்வீட்டு மரமோ? என்ன நினைப்பார்களோ? என்று சிறிதும் கவலைப்படாமல், தன் படுதாவில் ஓரத்தில் துடைத்துவிட்டு ஒரு கடி கடித்தாள். எனக்கும் எச்சில் ஊற, கவனமாக அவள் கையில் இருந்த மற்றொரு காயை வாங்கிக்கடித்தேன். ஆஹா, திருட்டு மாங்காய் இத்தனை ருசியா, என்று நினைத்துக்கொண்டே இன்னொரு கடி கடிக்க காயை வாயில் கொண்டு செல்லும்போது அந்த வீட்டிலிருந்து  யாரோ வெளியில் வருவது போல் அரவம் கேட்க, சட்டென்று கையில் உள்ள காயை கீழெறிந்துவிட்டு, அவள் கையில் உள்ள காயையும் தட்டிவிட்டேன்.வீட்டின் கதவு மெதுவாய்  திறந்தது???????? 

பயணம் தொடரும்>>>>.

நண்பர்கள் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
புதிய ஆண்டிலும் உங்கள் ஆதரவு தொடர வேண்டுகிறேன். 
இந்த புதிய ஆண்டான  2014-ல் கடவுள் உங்களை புதிய ஆசிர்வாதத்தால் நிரப்புவாராக.


Thursday, December 26, 2013

சூடுமில்ல சொரணையுமில்ல !!!!!!!!!!!!!சீ சீ, உனக்கு கொஞ்சம் கூட வெட்கமில்ல? மானங்கெட்டு அலையுற, நானும்தேன் இருக்கேன்னு டெய்லி வந்துர்ற, சூடுமில்ல   சொரனையுமில்ல.
கொஞ்சம்னாலும் ரோஷமிருந்தா, நீயெல்லாம் நாண்டுக்கிட்டு சாகனும், நீயெல்லாம் இருந்து என்ன பிரயோஜனம்?
முறைக்காத, ஒனக்குத்தான் ஒரு தில்லும் இல்லியே, எருமை மாட்டுல மழை பேஞ்ச மாறி, ஒன்னும் ஒறைக்கமாட்டேங்குது.
ஆமா நீயெல்லாம் எதுக்கு வெளியே வர்ற, என்னையும் பாரு என் அழகையும் பாருன்னு, பேசாம மறைஞ்சே இருக்க வேண்டியதுதானே.
இந்தியாவுல போய்ப்பாரு ஒன் அண்ணன் எவ்வளவு உணர்ச்சிகரமா இருக்கான்னு.
ஒன்ட்ட பேசி ஒரு பயனும் இல்ல, ஒனக்குத்தான் கொஞ்சம் கூட உணர்ச்சியில்லயே. எவ்வளவு ஏசுறேன், கொஞ்சம்னாச்சும் காதுல விழுதா பாரு. ஏதாவது மிச்சமீதி அறிவு இருந்தா இப்படி இருப்பியா?
"ஏலே சேகரு என்னலே இவ்வளவு கோபம்?" "
“இல்ல மகேந்திரா நானும் எவ்வளவு நேரத்துக்கு பொறுத்துப் பொறுத்து பாக்கிரது"
"சரி விட்றா பாவம். யார்றா அது அவ்வளவு மானங்கெட்ட ஜந்து?"
"மகேந்திரா, நீ சும்மாரு, உனக்கு ஒன்னும் தெரியாது ஊரில இருக்கிற உனக்கு இதப்பத்தி தெரியாது"
"சர்றா விடு ஏற்கனவே சர்க்கரை கூட இப்ப BP-யும் வந்துறப்போறது."
"டேய் ஒம்பாட்டுக்கு போ, ஆமாம் கடுப்பைக்கிளப்பாத"
"அப்படி யார்றா அது எனக்குக்கூட தெரியாம, என்னதான் நடந்துச்சு".
“எனக்கு வேகாளம் வருது, ஆத்தாத்துப் போச்சு”.
“ஏய் சரி இப்ப சொல்லப்போறியா இல்லயா”?
“இல்லடா இந்த சூரியந்தேன்”.
“என்ன சூரியனா? எந்த சூரியன், சூரியன்ற பேர்ல உனக்கு யாரும் ஃபிரெண்ட் இல்லயே”?
“டே, நீ வேற, வானத்துல வர்ற சூரியனச் சொல்றேன்”.
"எந்த சூரியன், இந்த காலையில உதிச்சு மாலையில  மறையுமே அந்த சூரியனா?".
“அந்த சூரியனே தான்”.
“ஏன்டா சூரியனுக்கு என்ன இப்ப? மானாவாரியாத் திட்டறே”.
“இல்லடா நானும் பாத்துக்கிட்டிருக்கேன், காலையிலே நேரத்துக்கு வந்துறுது. ஆனா ஒரு பிரயோஜனமில்லை”.
“சரி, மேல சொல்லு, ஒன்னும் புரியல”.

“தெனம் வந்து என்ன செய்ய, வட்டமாக கிரணங்களைப் போட்டு வந்தும், குளிர் போகமாட்டேங்குது. இந்தியாவுல இருக்கிற சூரியன்லாம் எவ்வளவு உக்கிரமா இருக்கு. பயகளை வெளியே விடாம அடிச்சு அடிச்சு துரத்துது, பாவம். அதும் உச்சி நேரத்துல வெளியே போனா மயக்கமே வந்துறும்ல. ஆறா வேர்த்துக் கொட்டிரும்ல அஞ்சு நிமிஷத்துல. ஆனா இங்கே ஒண்ணுமே நடக்க மாட்டேங்குது. சும்மா பேருக்கு சூரியன் வருது. ஒரு சூடு ஒரு உறைப்பு எதுவுமில்ல. சும்மா மந்து மந்துன்னு வந்துட்டு போயிருது. இதுல சாயந்திரம் வெக்கம் தாங்காம, சீக்கிரம் வேற மறைஞ்சு போயிருது. நாங்க ஏகப்பட்ட டிரஸ்களை போட்டுக்கிட்டு, ஸ்வெட்டர், அதுக்கு மேல கம்பளி கோட்டு, கையில உறை, காதுக்கு மூடி தலையில குல்லா, அப்படின்னு கோமாளி மாறி திரிய வேண்டியிருக்கு. நானும் எவ்வளவோ திட்டிப்பார்த்துட்டேன். ரோஷமே வரமாட்டேங்குது”.
“அட கிறுக்குப்பயலே, நீ சொல்றதக் கேட்டு எனக்கு ஒரு சொலவடை  ஞாபகத்துக்கு வருது”.
“சரி சொல்லிதொலை”.
“சூரியனைப்பார்த்து நாய் குலைக்குது”.

“எலே மகேந்திரா  அங்க வந்தேன், நீ அவ்வளவுதான்”.

ஒரு அறிவிப்பு 
நண்பர்களே "இன்டியா டாக்ஸ்"  டிவி நிகழ்ச்சியில்  அடியேன் பங்கு கொள்கிறேன்.நேரம் இருந்தால் பார்த்து மகிழவும்.

  

Tuesday, December 24, 2013

இயேசுவே அன்பு மயம்- பாடல்

கிறிஸ்துமஸ்  வாழ்த்துக்கள்
இந்த நல்ல நாளில், அடியேன் எழுதி இசையமைத்த பாடலை இங்கே கொடுக்கிறேன். கேட்டு மகிழுங்கள்.  

http://www.youtube.com/watch?v=ceMP1atsGec
ராகம் : இந்தோளம்
பாடியவர் : விஜய் யேசுதாஸ்.
இசை கோர்ப்பு : ஜான் கருணாகரன்
குறுந்தட்டு : இயேசுவே நண்பன்
யு டியுப் அமைப்பு : T.H. ராஜபாஸ்கரன்

பல்லவி
இயேசுவே அன்பு மயம்
கிறிஸ்து  இயேசுவே அன்பு மயம்
இயேசுவின் அரசினிலே எங்குமே மகிழ்ச்சி மயம்
சரணங்கள்
1)
ஈசாயின்  அடிமரத்தில்  துளிர்த்ததன்பு
தாவீதின்  பரம்பரையில்  உதித்ததன்பு
பெத்தலைக்கொட்டடியில்  பிறந்ததன்பு
இத்தரை  மாந்தர்தம்மை  மீட்டதன்பு !

2)
கன்னிமரி  வயிற்றினிலே கருவானது 
கருணையின் மறு உருவாய் உருவானது   
இஸ்ரவேலை மீட்டெடுத்த  இனிய  அன்பு  
இம்மானுவேலவராய் இசைந்த அன்பு !


Monday, December 23, 2013

போர்ட்டரிக்கோ பயணம், பகுதி 8: தந்திரமும் மந்திரமும்!!!!!!!!

Sir. Ralph Abercromby

மீண்டும் ஆங்கிலேயர்
        ஒரு முறை தோற்றாலே ஆங்கிலேயர் விடமாட்டார்கள். இதில் இருமுறை முயன்றும் முடியாமல் போனதால், மூன்றாம் முறை பெரும்படையுடன் வந்தனர். ஃபிரெஞ்சு புரட்சி நடைபெற்ற சமயம், சந்தில் சிந்துபாட, கி.பி.1797-ல் சர் ரால்ஃப் அபர்கிரம்பி (Sir. Ralph Abercromby) தலைமையில் வந்தது படை. முதலில் டிரினிடாடை (Trinidad) வென்றுவிட்டு உற்சாகத்துடன் சேன் வானை முற்றுகையிட்ட ஆங்கிலப்படை, நாட்கள் செல்லச் செல்ல, சேன் வானைப் பிடிப்பது அவ்வளவு எளிதான விஷயமல்ல என்று தெரிந்து கொண்டார்கள். பொறுமையை இழந்த அபர்கிரம்பி ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றார்.
        அதன்பின் கி.பி.1815-ல் ஸ்பெயின் அரசரால் வெளியிடப்பட்ட அரசாணையின்படி (Royal Decree of  Graces) புலம் பெயர்ந்து வாழ விருப்பும் மக்களுக்காக போர்ட்டரிக்கோ திறந்து விடப்பட்டது. ஜனத்தொகையும் பெருகியது. ஆனாலும் தீவு ஸ்பெயின் அரசின் நேரடிக் கண்காணிப்பில், அரசரால் நியமிக்கப்படும் ஆளுநர்களால் தொடர்ந்து ஆளப்பட்டது.

அமெரிக்க ஆக்ரமிப்பு  (Spanish - American War)

        சுமார் நூறு வருடங்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லாமல், கோட்டைப் பாதுகாவலர் சற்றே ஓய்ந்திருக்கும் சமயத்தில் வந்தது அமெரிக்க கப்பற்படை. கி.பி.1896-ல் மே 8 ஆம் தேதி, யு எஸ் எஸ் டெட்ராய்ட் (USS  Detroit) யுஎஸ்எஸ் நியூயார்க், யுஎஸ் எஸ் ஆம்ஃபிடிரைட் (USS Amphitrite), யுஎஸ்எஸ் டெரர் (USS Terror), யுஎஸ்எஸ் மாண்ட்கோமரி (USS Mantgomery) யுஎஸ் எஸ் யேல் (USS  Yale) ஆகிய பல அமெரிக்கக் கப்பல்கள்,
Admiral William T.Samson

 அட்மிரல் வில்லியம் T. சாம்சன் (Admiral William T.Samson) அவர்கள் தலைமையில் சேன் வான் வளைகுடாவுக்கு வந்தன. அப்போது அங்கு வந்த ஸ்பானிய வாணிபக் கப்பலான "ரீட்டா"வை, யு.எஸ்எஸ் யேல் கைப்பற்றிக் கொண்டது. மே மாதம் 10-ம் தேதி கோட்டையை நெருங்கிய யு.எஸ்.எஸ் யேலை நோக்கி பீரங்கித்தாக்குதல் நடத்த ஆணையிட்டார் ,
Captain Angel Rivero Mendez
கேப்டன் ஏஞ்சல் ரிவரோ மெண்டெஸ் (Captain Angel Rivero Mendez) அவர்தான் சான் கிறிஸ்டோபல் கோட்டையின் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டவர். அதற்காக ஸ்பானிய அரசு அவருக்கு "குருஸ் டி லா ஆர்டர்  டி மெரிட்டோ மிலிட்டரி" (The cross of the Order of the Military Merit) என்ற பட்டத்தைக் கொடுத்து கெளரவித்தது. கொஞ்சம் அவசரப்பட்டிருப்பாங்க போல இருக்கு. எதிரியோட பலம் தெரியாம விளையாடலாமா?
        ஆனால் போர்ட்டரிக்கோ மக்கள் ரிவரோவை திட்டி சபித்தனர். ஏனென்றால் அதன்பின் அமெரிக்க கப்பல்கள் தமது சக்தி வாய்ந்த குண்டுகள் மூலம் தீவைத் தாக்கி பெருத்த அழிவை ஏற்படுத்தினர். கடைசியில் ரிவரோ தலைகுனிந்து வணங்கி கோட்டையின் சாவிகளை அமெரிக்க கேப்டன் ஹென்ரியிடம் ஒப்படைத்தார்.
General Nelson A.Miles
 அதே ஆண்டு ஜூலை மாதம், தீவின் மறுபக்கம் வோனிகா என்ற இடத்தில் 3300 படை வீரர்களுடன்  கரையிறங்கிய அமெரிக்க ஜெனரல் நெல்சன் ஏ .மைல்ஸ் (General Nelson A.Miles) எதிர்ப்புகளை முறியடித்து பல இடங்களை கைப்பற்றினார். 1898, ஆகஸ்ட் 13-ல் அமெரிக்க அதிபர் வில்லியம் மெக்கின்லி (President William Mckinley) யும், ஸ்பானிஸ் அரசு சார்பாக, ஃபிரெஞ்ச் தூதர் யூல்ஸ் கேம்போன் (Jules Camber) அவர்களும் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். பின்னர் கையெழுத்தான "பாரிஸ் ஒப்பந்தம்" படி ஸ்பானிஸ் அரசர் போர்ட்டரிக்கோ தீவை அமெரிக்காவுக்கு முழுமையாக விட்டுக்கொடுத்தார்.
        அதன்பின் நடந்த முதலாம் மற்றும் இரண்டாம் உலகப்போரில் அமெரிக்காவின் முக்கிய தளமாக "போர்ட்டரிக்கோ" குறிப்பாக சேன் வான் விளங்கியது. போர்ட்டரிக்கோ மக்கள் அமெரிக்கப்படையில் சேர்ந்து அமெரிக்காவுக்காக போரிட்டனர். அன்றிலிருந்து இன்று வரை போர்ட்டரிக்கோ, அமெரிக்க பகுதியாக (Territory) விளங்கி வருகிறது. 
        கோட்டையின் பலபகுதிகளை சுற்றிப்பார்த்தேன். மேற்பகுதியில் இருந்த கலங்கரை விளக்கம், பீரங்கிகள், படை வீரர்கள் தங்கிய இடம், அவர்களின் தளவாடங்கள், டஞ்சன் என்று அழைக்கப்பட்ட சிறைப் பகுதிகள், பேட்டரி என்று சொல்லப்படும் வெடிமருந்துக்கிடங்குகள். ஆகியவற்றைப் பார்த்து முடித்தேன். வந்து பார்த்தால் என் மனைவி பிள்ளைகளைக் காணவில்லை.
        அப்புறம் தேடினால், குறும்படம் காண்பிக்கும் ஏசி அறையில் பலர் படத்தை உன்னிப்பாக பார்த்துக் கொண்டிருக்க இவர்கள் மூவரும் "ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து" தூங்கிக்கொண்டிருந்தனர். அவர்களை எழுப்பி, வாங்க சாப்பிடப் போகலாம் என்றேன். உடனே கிளம்பி  வெளியே வந்தோம். டிராலி ஒன்று கிளம்பும் நிலையில் இருக்க, ஓடிப்போய் ஏறி, கீழே வந்தோம்.

Add caption
        “தந்த்ரா”  உணவகத்திற்கு வந்து சேர்ந்தோம். மணி மதியம் 2.00 உள்ளே ஒருவரும் இல்லை. ஹலோ ஹலோ என இருமுறை கூவியபின், ஒரு போர்ட்டரிக்கோ பெண்ணொருத்தி அதீத புன்னகையுடன் வரவேற்றாள். அவள் குரலில் இருந்த ஆச்சரியத்தில் அவள் அங்கு யாரையும் எதிர்பார்க்கவில்லை போலும். ஐயையோ இந்திய உணவு என்று மறுபடியும் மாட்டிக்கொள்வோமோ என்று தயக்கமாக இருந்தது. சரி வந்தது வந்துவிட்டோம், செஃப் ரமேஷ் பிள்ளைக்கே வெளிச்சம் என்று நினைத்துக் கொண்டு மெனுவை மேய்ந்தோம். மெனுவைப் பார்த்து முடிவு செய்யமுடியாமல் அந்தப் பெண் தொண தொணத்துக் கொண்டிருந்தாள். ஒருவழியாக ஆர்டர் செய்து, சீக்கிரமாக கொண்டுவரச் சொன்னேன். அப்போதைக்கு சமோசாவை முதலில் கொண்டு வரச்சொன்னேன். போய் ஒரு 5 நிமிடத்தில் எல்லாவற்றையும் கொண்டு வந்து விட்டாள். “என்ன ஆச்சரியம்? என்ன ஒரு தந்த்ரா? என்ன ஒரு மந்த்ரா ?” என்று, என் மனைவி கேட்டாள். ஏனென்றால் அவள்தான் உலகத்திலேயே மிகவேகமாக சமையலை முடிப்பவள் என்று நினைத்துக் கொண்டிருந்தாள். இதுதான் இவர்கள் “தந்த்ரா”வா என்று நினைத்து சிரித்தபடி "ஃபிரிட்ஜிலிருந்து எடுத்து சூடுபண்ண எவ்வளவு நேரம் ஆகப்போகிறது", என்று மனைவியிடம் சொன்னேன். "ஐயையோ எல்லாமே பழசா" என்றாள். "பேசாம கடவுளுக்கு நன்றி சொல்லி சாப்பிடு " என்றேன்.

        "பசி வந்தால் பழசும் மறக்கும்" என மடமடவென்று சாப்பிட்டு முடித்தோம். கூட்டு போலிருந்த சாம்பார், சூடு பண்ணியதால் விறைத்துக் கொண்ட அரிசி, சிக்கன் ஃபிரை என்று பாதகமில்லை. “ரமேஷ் பிள்ளை எந்த ஊர்?”, என்று அந்த வெயிட்டரஸிடம் கேட்டேன். ஏதோ நேடு என்று வருமென்றாள். "தமிழ் நாடா?" என்று கேட்டபோது கண்களை விரித்து ஆமென்றாள். அட தமிழன்தானா, அவர் இருக்கிறரா? என்று கேட்டேன். வெளியே போயிருக்கிறார் என்றாள். ஆமாமாம் சூடு பண்ணிக் கொடுப்பதற்கு செஃப் எதற்கு என்று நினைத்துக் கொண்டேன்.
        பக்கத்தில் பார் பலநிற, வடிவங்களில் திரவங்கள் நிரம்ப யாருக்கோ காத்துக் கொண்டிருந்தது. வெயிட்ரஸ், பார்டென்டர் மற்றும் கிச்சன் எங்கு எல்லாமே இவள்தான் போலிருக்கிறது. உண்டு முடித்து வெளியே வந்து சில தப்படிகள் நடந்திருப்போம். அவள் வெளியே வந்து கூவிஅழைத்தாள். சமோசோ ரெடியாகிவிட்டதாம். அப்படைசர் என்றால், நம்மூரில் முதலில் கொடுப்பார்கள் என்றுதானே அர்த்தம். கைகளில் வாங்கிக் கொண்டு கிளம்பினோம்.
        பிள்ளைகள் பீச்சுக்கு போக வேண்டும் என்று சொல்ல, "பக்கத்தில் உள்ள கதீட்ரல் மற்றும் பார்த்துவிட்டுப் போகலாம்" என்றேன்.பக்கத்தில் போனவுடன், என் மனைவி ஒரே ஓட்டமாய் தெரு அதிர ஓடினாள். 

பயணம் தொடரும்
  

நண்பர்கள் அனைவருக்கும் என்னுடைய இனிய கிறிஸ்துமஸ் நல் வாழ்த்துக்கள்.பெத்தலையின்  பாலன், இறைமகன் இயேசு உங்கள் அனைவரையும் காத்து வழி நடத்துவாராக.
  

Thursday, December 19, 2013

காதல் கசக்குதையா !!!!!!!!!!!!!!!!!!!! பகுதி 2


யாரு குரல் இது உரல்ல இடிச்சாப்லனு திரும்பிப்பார்த்தா, ராஜிதான் கூப்பிட்டா. முக்குலத்தில பொண்ணு  குரல் கூட கடுமையாத்தேன் இருக்குமோ? என்று நெனச்சிக்கிட்டே,  “என்னா ராஜி?”, என்றேன். அவ பேரைச் சொல்லி கூப்பிட்டபோது கடுக்கு மிட்டாயை விட இனிச்சுச்சு. "சேகர், இந்தக் கணக்கு வரமாட்டேங்குது கொஞ்சம் சொல்லித்தரியா ?" என்று கேட்டாள். ஆகா என் மேதாவித்தனத்தை காட்டுறதுக்கு இதவிட நல்ல சந்தர்ப்பம், கெடைக்காதுன்னு நெனச்சு கிட்டப்போனேன். பார்த்தா, கையெல்லாம் கடுக்கு மிட்டாய் கசிந்து பரவி, இழிப்பிக்கொண்டிருந்துச்சு. “ஐயே என்னாது இது" என்று அவள் கேட்டதும் நான் வெக்கத்தோடு, “கையைக்கழுவிட்டு வந்துறேன்”னு ஓடிப்போய் விரசா கழுவிட்டு ஓடிவந்தேன். வந்து பார்த்தா, "அறிஞர் அண்ணா" அணித்தலைவன், அந்த செவத்த  பன்னி  ராகவன் சொல்லிக் கொடுத்துட்டிருந்தான். நல்ல சான்ஸ விட்டது எனக்கு ரொம்ப வெறுப்பாயிருச்சு. "சேகர், ராகவன் நல்லா சொல்லித்தந்துட்டான்"னு  வேற எரியற கொள்ளில எண்ணெயை ஊத்துனா ராஜி. இந்த ராகவன் வேற செவசெவன்னு என்னவிட ரொம்பவே அழகா இருந்தான். எனக்கு மனசே விட்டுப்போச்சு. அன்னைக்குதான் முத தடவை, ஏன் நான் எங்கப்பா மாறி செவப்பா பிறக்காம கறுப்பா பிறந்தேன்னு நெனச்சு ரொம்ப வருத்தப்பட்டேன்.
 ராஜலச்சுமி ராஜசேகர்னு பெயர்ப் பொருத்தம் கூட நல்லாத்தானே இருந்துச்சுன்னு நெனைச்சு ரொம்ப கவலையாப் போச்சு. தூக்கமும் போச்சு . என்னடா ஒடம்பு சரியில்லையான்னு எங்கம்மா தொட்டு தொட்டு பார்த்தாங்க.
அப்பத்தான் வைகை அணைக்கு இன்பச்சுற்றுலா போக முடிவெடுத்து, அணித்தலைவர்களெல்லாம் கூடிப்பேசச் சொன்னார் தேவரு. என்னவோ தெரியல, நான் சொன்ன எல்லாத்துக்கும் ராஜி கரெக்ட் கரெக்ட்டுன்னு சொன்னா. அவ மனசுலயும் நான் இருந்தேன்போலன்னு நெனச்சு, ஒரே குதூகலமாயிருந்துச்சு. அன்னைக்குத்தான் அவள ரொம்பக்கிட்டத்துல பார்த்தேன். அவ ஒதடு ரெண்டும் சேமியா ஐஸ் சாப்பிடாமயே செவந்து கெடந்துச்சு.
வைகை அணையில வச்சு எப்படியாச்சும் என் மனசுல இருக்கிறதை சொல்லிடனும்னு நெனைச்சேன். எங்கப்பாவை நெனச்சாலும் பகீர் பகீர்னு பயம் வந்துச்சு. வைகை அணைக்கு எங்கப்பாதான் வரமாட்டாரேன்னு நினைச்சு மனசைத் தேத்திக்கிட்டேன்.
இதுக்கிடையில 10 அணித்தலைவரும் ஒன்னு சேர்ந்து வகுப்புத்தலைவனை தேர்ந்தெடுக்கச் சொல்லி தேவரு சொன்னார். ராகவன் என்னை எதுத்து நின்னான். அவன்  நாலு ஓட்டு வாங்கித் தோத்துப்போக, நான் ஆறு ஓட்டு வாங்கி வகுப்புத் தலைவன் ஆனது பெருமையா இருந்துச்சு. யார் ஓட்டு போட்டாலும் ராஜி ஓட்டு விழுந்துச்சான்னு தெரிய ஆசையா இருந்துச்சு. வேற யார்ட்டையும் கேட்க ரொம்ப தயக்கமா இருந்துச்சு. அதையும் வைகை அணையில வச்சு கேட்கனும்னு நெனைச்சேன்.
இன்பச்சுற்றுலா நாளும் வந்துச்சு. என்ட்ட இருந்த ஒரே ஒரு பேண்டையும், செவப்புக்கலர் முழுக்கை சட்டையையும் போடலாம்னு எடுத்தா, அப்பத்தான் ஞாபகம் வந்துச்சு, ஐயையோ யூனிபார்ம்ல போடனும்னு. எனவே வழக்கம் போல் வெள்ளைச் சட்டையையும், காக்கி டவுசரையும் போட்டுக்கிட்டு வெளியே வந்தேன். எங்கப்பா செலவுக்கு வழக்கத்துக்கு மாறாக ஒரு ரூபாய் கொடுத்தார். எங்கம்மா ஒரு எட்டனாவை உள்ளங்கையில் வைத்து அழுத்தினாங்க. பள்ளிக்குச் சென்றேன். பஸ் இன்னும் வரல. பசங்களை வழியனுப்ப நெறைய அம்மா அப்பா வந்திருந்தார்கள். "சூதானம்" என்ற வார்த்தை அடிக்கடி கேட்டது. என்னைப்பார்த்ததும், "சேகரு புள்ளையைப் பார்த்துக்கப்பா" என்றனர் பலர். ஆட்டும் ஆட்டும்னு தலையாட்டினேன்.
கடுக்கு மிட்டாய் வாங்க குருசாமி நாடார் கடைக்கு போனால், அன்னிக்கு லீவுனால புது மிட்டாய் எதுவும் போடலன்னு குருசாமி நாடார் பொண்டாட்டி சொல்லுச்சு. “லதாவை பார்த்துக்க சேகர்”னு சொல்லி, ரெண்டு தேன் மிட்டாயை ஓசியா கொடுத்துச்சு. அதெல்லாம் வேணாம்னு வாய் சொல்ல, கை அதனை வாங்கி வாயில் போட்டது.
  "ரஹீம்" பஸ்ஸீம் பெரியகுளத்திலிருந்து வந்து சேர்ந்தது. வண்டி போட்ட தடதடத்த சத்தம் எட்டூருக்கு கேக்கும் போல இருந்துச்சு. பசங்க ஜன்னலோரம் எடம்பிடிக்க ஒரே கூச்சல் போட்டுக்கிட்டு ஏறினாய்ங்க. ராஜியைத்தேடி கண்கள் அலைபாஞ்சது. பஸ் கிளம்ப நேரமாகி, நான் தேவரு வாத்தியார்ட்ட, "சார் இன்னும் முத்துப்பாண்டி வரலே”ன்னு சொன்னேன். ராஜி வரலன்னு சொல்ல தயக்கமாக இருந்துச்சு. தேவரு வாத்தியார், "அவுக வரமாட்டாக, நாம போலாம்", என்றதும் என் உற்சாகம் எல்லாம் வடிகஞ்சி, வழிஞ்சாப்போல் அப்படி வடிஞ்சி போச்சி.
ரஹீம் வண்டி தடதடத்து ஓடும்போதும் சரளைக்கல் பாதையில் தூக்கி தூக்கிப்போடும் போதும், நம்ம பசங்க பலபேர் வாந்தி எடுத்தாய்ங்க. கருமம் காலங்காத்தால என்னத்தை தின்னாய்ங்களோ,பஸ்பூரா  ஒரே நாத்தம் தாங்க முடியல. ஒருவழியா வைகையும் போய்ச் சேர்ந்தாலும் எனக்கு எதையுமே பார்க்க பிடிக்கல.
“எலே சேகர் என்னடா ஒரு மாதிரி இருக்க,”ன்னு சிராஜ் சும்மா நோண்டி நோண்டி கேக்கும் போது எனக்கு அழுகை அழுகையா வந்துச்சு. யாரிட்டயும் பேசாமல் தனியாவே இருந்தேன். வரும்போது ஊரே இருண்டு கிடந்துச்சு. கடையெல்லாம் சாத்திக்கிடந்துச்சு. என்ன அதுக்குள்ள சாத்திட்டாய்ங்கன்னு யோசனையாய் இருந்துச்சு.
வீடு வந்து சேரும்போது, எங்கப்பாவும், எங்கம்மாவும் குசுகுசுன்னு பேசினதிலிருந்து, நான் தெரிஞ்சிக்கிட்டது என்னன்னா, மாயத்தேவரை யாரோ கொலை செஞ்ச்சிட்டாங்களாம். ஊரே ஒரே கலவரமாப்போச்சு. ஐயோ பாவம் ராஜி, அவளைப் பாத்து நெஞ்சில   சாச்சு ஆறுதல் சொல்லனும்போல இருந்துச்சு. எங்கப்பாட்ட கேட்கவும் பயமா இருந்துச்சு.
மறுநாளும் கடையெல்லாம், லேட்டாத்தேன் தெறந்தாய்ங்க. அதுக்குள்ள நாங்க சர்ச்சுக்கு போய்ட்டு வந்தோம். எங்கப்பாவும் எங்கயும் வெளியே போகாததினால நானும் வெளியே போகமுடியல. திங்கக்கிழமை, கொடியேத்தம் முடிஞ்சும் அவ வரல. அப்புறம் விசாரிச்சதில, பாதுகாப்புக்காக, அவளை தேவாரம் அனுப்பிச்சட்டதாக சொன்னாக. ராஜியை அதற்கப்புறம் நான் பார்க்கவேயில்லை. ஆனா  அவ  மின்னும்  கண்களும், விடைக்கும் மூக்கும், ஜொலிக்கும்   மூக்குத்தியும், துடிக்கும்  உதடுகளும் என்றும்  என்  ஞாபகத்தில்.யாராவது  பாத்தா  சொல்றீகளா?
@@@@@@@@@@@@@@@.
கையில் இருந்த கடுக்கு மிட்டாய் ஞாபகம் வர , இன்னொன்றை எடுத்து வாயில் போட்டேன். ஏனோ இந்த முறை அது இனிக்கவில்லை.

முற்றியது.