Friday, March 29, 2013

லிட்டில் இந்தியா -2 : யூதப்பெண்ணும் சாதப்போட்டியும்


       US ல் 12 மணி லஞ்ச் டைம் என்பதால், இந்த உணவகங்கள் அனைத்தும் பெரும்பாலும் நிரம்பி வழியும்.     பக்கத்தில் உள்ள கிரடிட் சுயிஸ் நிதி நிறுவனத்தில் நூற்றுக்கணக்கில் நம்மவர் இருக்கிறார்கள். நிறைய சுந்தர (?) தெலுங்கும் அடுத்தபடியாக ஆங்கிலத்தமிழும் அதிகமாக கேட்கும்.

இந்தியர், தங்களது வெள்ளைக்கார நண்பர்களையும் சில சமயம் அழைத்து வருவது உண்டு.     கார உணவு வகைகளைப்பார்த்து, முதலில் பயந்த அவர்கள் இப்போதெல்லாம் பழகிவிட்டனர் என்பது வரும் கூட்டத்தைப் பார்த்தே தெரிகிறது. ஆனாலும் லெக்கிங்டனில் எந்த உணவகத்திலும் ,அவ்வளவாக  காரம் இருக்காது.

     ஒரு வெள்ளைக்காரன் சொன்னான், “ உங்கள் தென்னிந்திய உணவு முதலில் சாப்பிடும்போது பிடிக்கவில்லை, ஆனால் சாப்பிட, சாப்பிட மிகவும் பிடித்துவிட்டதென்று. ஆனால் அடுத்த நாள் பாத்ரூம் போகும்போது தான்,?????????????? (சும்மா ஜிவ்வினு இருக்கும்ல)

     இங்கிலாந்தில், ஒரு வெள்ளைக்காரன் சொன்னதாக படித்தேன். "Indian  food  is like sex  on the  plate " என்று.
  
     சென்னை கார்டனில் நாங்கள் என்ன சாப்பிட்டோம் என்பதைச் சொல்லுமுன் மற்ற உணவகங்களில் எனக்குப் பிடித்தவற்றை சுருக்கமாக பட்டியலிடுகிறேன்.
சரவணபவன்
1) மீல்ஸ் தாலி
மதியம் சென்றால் பிஸினெஸ் லஞ்ச்  13 டாலர்கள்
இரவில் சென்றால் தாலி மீல்ஸ் 17 டாலர்கள் (தாலி அந்துவிடும்)
2) தோசை பல வகைகள் (9 முதல் 12 டாலர்கள்)
3) சப்பாத்தி (குருமாவுடன் இணைந்து வாயில் கரையும், நான் கியாரண்டி) 10 டாலர்கள்
அஞ்சப்பர்
1) பிஸினெஸ் மீல்ஸ் - சிக்கன் (மதியம் மட்டும்) - 13 டாலர்கள்
சாப்பாடு, சாம்பார், ரசம், கூட்டு, பொரியல், சிக்கன் குழம்பு மற்றும் சிலதுண்டு சிக்கன் வருவல்
2) கொத்துப்பரோட்டா - மட்டன் -16 டாலர்கள்.
3) மட்டன் சுக்கா  வறுவல் - 15 டாலர்கள்.
4) சிக்கன் - 65 - 10 டாலர்கள்.
5) கத்தரிக்காய் குழம்பு - 8 டாலர்கள்.
சிக்கன் - 65 சிறு குறிப்பு
     நம் சென்னையில் உள்ள புகாரி ஓட்டல் மெனுவில் 65ஆம்  நம்பரில் இருந்த சிக்கன் வருவல் தான் இப்போது சிக்கன் 65 என்று உலகப்புகழ் அடைந்துள்ளது.(ஆமாம் இந்த புகாரி இப்போது இருக்கிறதா?) இப்போது வட இந்திய, பாகிஸ்தானி, பங்களாதேஷ் கடைகளிலும் சிக்கன்-65 மிகவும் பிரபலம்.
     இப்போது சென்னை கார்டன் பஃபேயில் என்ன இருந்தது என்பதை கீழே கொடுக்கிறேன், வரிசைப்படி 


1) அப்பளம் (நான்காக வெட்டப்பட்டு பொறித்தது)
2) சிறிய வெங்காய ஊத்தப்பம் (அப்படைசர்) கேரட்டும் போட்டிருந்தனர்
3) வெஜிடபிள் புலாவ்
4) பாஸ்மதி வெள்ளை அரிசி
5) கதம்ப சாம்பார்
6) மட்டர் பன்னீர் கறி  (பட்டாணியும் , பன்னீரும்)
7) ஆலு கோபி (உருளைக்கிழங்கும் காலிபிளவரும்)
8) தால் கறி (பருப்புக்கறி)
9) சட்னி, கெச்சப், ஸ்வீட் / சோர்  சாஸ், ஊறுகாய்
10) ரைஸ் கீர்
11) காரட், வெள்ளரி, ஸ்பின்னாச், லாட்டுஸ் சாலட்.
ரசம் ஒன்றுதான் மிஸ்ஸிங்  4 டாலர், தனியாக வாங்கவேண்டும், சோடாவும் தனியாக வாங்கவேண்டும் - 2 டாலர்.
     இதுல ஒவ்வொரு ஸ்பூன் எடுத்துச் சாப்பிட்டவுடனே வயிறு நிறைந்துவிட்டது. அங்கே சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களின் அளவைப்பார்த்து பெருமைப்படுவதா? பொறாமைப்படுவதா? என்று தெரியாமல் விழித்தேன்.


     நம்ம என்ன பசிக்கா சாப்பிடுறோம், ருசிக்குத்தானே என்று என்னை நானே சமாதானப்படுத்திக் கொண்டேன்.

     எங்கேயும் இல்லாத அதிசயமாக, பஃபே ஐ "ஈட் இன்" தவிர "டேக் அவுட்"டும் தருகிறார்கள். அவர்கள் கொடுக்கும் குழிகுழியாய் இருக்கும் தெர்மாகூல் தட்டில் எவ்வளவு முடியுமோ நிரப்பிக்கொள்ளலாம். (ஆழம் கொஞ்சம் கம்மிதான்). அதே விலைதான். அடுத்த தடவை 2 வாங்கினால் 3 பேர் சாப்பிடலாம்  என்று  மனசை தேற்றிக்கொண்டேன்.

சென்னை கார்டனில் அன்று பாதிக்கு மேல் வெள்ளைக்காரர்கள்.
     எங்களுக்குப் பக்கத்து டேபிளில் ஒரு வெள்ளைப்பெண், கறுப்பு முடியுடன் (யூதப்பெண் என நினைக்கிறேன்) நமது உணவை வெளுத்துக்கட்டிக் கொண்டிருந்தது. வயிற்றில் உள்ள பிள்ளையாலோ அல்லது நம் மசாலா வகைகள் கொடுத்த தொல்லையாலோ முகம் அதீதமாக சிவந்திருந்தது. காதில் உள்ள புளூ டூத்தில் ஓயாமல் பேசிக்கொண்டும், இடது கையில் தன் ஐபாடை நோண்டிக் கொண்டும், வலது கையால் உணவை வாய்க்குள் தள்ளிக்கொண்டும் ஒரே நேரத்தில் எத்தனை காரியங்கள் செய்கிறார்கள்.
     வீட்டில்கூட, என் மகள் அப்படித்தான்  ஐபாட்டில் பாட்டுக்கேட்டுக் கொண்டும், டிஸ்னி சேனலில் டிவி பார்த்துக் கொண்டும், ஐபோனில் சேட் செய்து கொண்டும், தன்னுடைய ஹோம்வொர்க்கை செய்து கொண்டிருப்பாள். நான் வீராப்புடன் ,ஒருமுறை முயன்று பார்த்ததில் தீராத ஒற்றைத்தலைவலி வந்ததுதான் மிச்சம்.
     உற்றுக்கேட்டதில் அந்த யூதப்பெண் தான் சாப்பிடும் உணவைப்பற்றிய  கமென்ரியை யாரிடமோ சொல்லிக் கொண்டிருந்தாள்.

 
     ஊத்தாப்பத்தில் ஆரம்பித்து ஒன்றையும் விடவில்லை. நிதானமாக உள்ளே தள்ளி அசைத்து, சுவைத்து, மென்று தின்று கொண்டிருந்தாள். அளவைப்பார்த்து ஆச்சரியப்பட்டேன்.
     திடீரென ஒரு சந்தேகம் வந்தது, அவருடைய உப்பிய வயிறு கர்ப்பத்தாலா அல்லது சர்ப்பம் போல் உண்ட சாப்பாட்டாலா?  என்று. ஒருவேளை கர்ப்பிணி இருவருக்கு சாப்பிடவேண்டும் என்பது இதுதானோ? ஒருவேளை இரட்டைப் பிள்ளையோ?
     சலீமும் நன்றாக சாப்பிடக் கூடியவர்தான். சமீப காலமாக மனைவியின் கட்டளைக்கிணங்க குடலிறுக்கம் செய்து, உடலிறக்கம் செய்ய  முயன்று கொண்டிருக்கிறார். அவரே அசந்து போனார் அன்று.
     நாங்கள் ஏறக்குறைய சாப்பிட்டு முடித்துவிட்டோம். யூதப்பெண் ருசித்த (Kheer) 'கீர்'ஐ பார்த்து நானும் சிறிதளவு எடுத்துக்கொண்டு வந்தேன் (கேட்கத்தான் மனைவியில்லையே).
     பில்லைக் கல்லாவில் கட்டச் சொன்னார்கள். ஆகா டிப்ஸ் மிச்சம் (சரியான அல்பம்டா நீ) என்று நினைத்தவாறு காசைக்கட்டிவிட்டு, மேலும் ஒரு புகைப்படம் எடுக்கத் திரும்பியபோது, யூதப்பெண் ஒரு புதிய பிளேட்டை எடுத்துக்கொண்டு ஊத்தப்பம் எடுப்பது தெரிந்தது. ஐயையோ மறுபடியும் முதல்லயிருந்தா?

Friday, March 22, 2013

ஆப்பிள் பிக்கிங்: நம்பினால் நம்புங்கள்


இலையுதிர் காலத்தில் , நியூயார்க் நகரின் வெளிப்புறத்தில் upstate என்று சொல்லப்படுகிற பகுதிகளில் உள்ள ஆப்பிள் தோட்டங்களில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு பெயர்தான் "ஆப்பிள் பிக்கிங்". மக்கள், பிக்னிக் போல திட்டமிட்டு, அங்கே உள்ள பலவகை ஆப்பிள் பழங்களை பறிக்கலாம், ருசி பார்க்கலாம், வயிறுபுடைக்க தின்னலாம், வெளியே எடுத்துச் செல்லும்போது மட்டும் எடை பார்த்து காசு வசூலிப்பார்கள். ஆப்பிள் எடையைத்தான் சொன்னேன். நல்லவேளை உடல் எடையையல்ல. ஆனால் நான் எழுதவந்தது அதைப்பற்றியல்ல.
     ஆப்பிள் என்றழைக்கப்படுகிற கம்பெனி தயாரிக்கும் சாதனங்களான, ஐபாட், ஐபேட் , ஐபோன் ஆகியவை குறிவைக்கப்பட்டு திருடப்படுகின்றன.  குறிப்பாக ஐபோன்கள், அதனைத்தான் இப்போது நியூயார்க்கில் செல்லமாக "ஆப்பிள் பிக்கிங்" என்று அழைக்கிறார்கள். 

     வேடிக்கை என்னவென்றால், ஒரே ஒரு கம்பெனியின் சாதனங்களால், நியூயார்க்கின் கிரைம் ரேட் கூடிவிட்டது என்று மேயர் புளூம்பர்க் கவலை தெரிவித்துள்ளார்.
     நியூயார்க் போலிஸ் டிபார்ட்மென்டின்  (NYPD) தகவல்படி ஆப்பிள் சாதனங்களின் திருட்டு மார்க்கெட் மட்டும், ஆண்டுக்கு 30 பில்லியன் டாலர்கள் ஆகும். போன வருடத்திற்கும் இந்த வருடத்திற்கும் 42% திருட்டு கூடியுள்ளது. AT&T கம்பெனியுடன் இணைந்து இதனை தடுக்க, NYPD தனிப்படை அமைத்துள்ளது.ஐபோனுக்காக, நியூயார்க்கில் வாழும் 26 வயது,கொரிய இமிக்ரண்ட்   சுட்டுக் கொல்லப்பட்டான்.
இதற்கு முக்கிய காரணம் அதன் விலைதான். ஐபோன்கள் AT&T -யில் சேர்ந்து 2 வருட கான்ட் ராக்டில் வாங்கினால் $200 முதல் $250 வரை போனுக்கு கொடுக்க வேண்டும். ஆனால் அதனுடைய முழுவிலை $800 முதல் $1000 வரை. எனவே அதற்கென்று வெளியே கள்ள மார்க்கெட் உருவானதில் ஆச்சரியமில்லை. 

     இந்த செய்திகளைப்படித்த நான், நல்லவேளை என்னிடம் ஐபோன் இல்லை, நான் கவலைப்படத்தேவையில்லை என்று நினைத்த கணத்தில், என் பெண்கள் இருவருக்கும் ஐபோன் வாங்கிக்கொடுத்தது ஞாபகம் வந்து பகீரென்றது.
     வீட்டுக்கு போனவுடன், இதனைப்பற்றி அவர்களிடம் சொல்லி எச்சரிக்கவேண்டும் என நினைத்துக் கொண்டேன்.
     அன்று மாலை வீடுதிரும்பி, வழக்கம்போல் ஓய்ந்து உட்கார்ந்து டிவியை மேய்ந்து கொண்டு இருந்தேன். என் மனைவி சமையலறையில் காய்ந்து  கொண்டு இருந்தாள்.
     எங்கே பிள்ளைகளை இன்னும் காணோம் என்ற என் கேள்விக்கு பதில் கிடைக்கவில்லையாதலால், பாவம், நாளை முதல் என் மனைவிக்கு சமையலில் உதவி செய்ய வேண்டும் என்று உறுதிபூண்டேன். ரொம்ப நல்லவன் என்று நினைக்க வேண்டாம். இப்படி உறுதிபூணுவது நாலாயிரத்து எண்ணூற்றி,  சாரிங்க பாஸ் எண்ணிக்கை மறந்துருச்சு.
     அந்த சமயத்தில், கதவு படபடவென்று தட்டப்பட, நான் என் மனைவியை கூப்பிட நினைத்து, வசவை நினைத்து கைவிட்டு, எழுந்து ஓடிதிறந்தால், என் மூத்த மகள் அழுதுகொண்டே வேகமாக உள்ளே ஓடிவந்தாள். "என்னாச்சு அனிஷா"? என்று கேட்டதற்கும் பதில் வரவில்லை. கற்பனைப் பேய்கள் சிறகு விரிக்க பதை பதைத்து விட்டேன்.
     சமையலை அந்தரத்தில் விட்டுவிட்டு, என் மனைவி, அனிஷாவின் ரூமுக்கு விரைந்தாள். நானும் உள்ளேபோக நினைக்குமுன் கதவு அடைக்கப்பட்டது. சிறிது நேரம் திகைப்போடு நின்றுவிட்டு, என் இருக்கைக்கு திரும்பினேன். என்ன ஆச்சோ என்று மனசு அடித்துக் கொண்டது.

"நான் சொல்றத இந்த வீட்டுல யாரு கேட்கிறா" என்று தன் யூசுவல் டயலாக்கை சொன்னபடி என் மனைவி சமையலறைக்கு திரும்ப, அவளிடம் சென்று என்னாச்சு என்று கேட்டேன்.
     அனிஷா வீட்டுக்கு வர பஸ்ஸில் வந்து கொண்டிருக்கும்போது, ஐபோனில் சேட்  செய்துகொண்டே வந்திருக்கிறாள். சட்பின் புலவர்டில், லிபர்ட்டி அவென்யு தாண்டியதும், பஸ்,ஸ்டாப்பில் நின்றபோது, ஒரு கறுப்பினப் பையன், மன்னிக்கவும் ஆப்பிரிக்க அமெரிக்க பையன் ,ஐபோனை  பறித்துக்கொண்டு கீழிறங்கி  ஓடியிருக்கிறான். இவளும் இறங்கி அவனை துரத்திக்கொண்டு சென்று, 2 தெரு தாண்டி, அவனைக் காணாமல் அழுதுகொண்டே திரும்பியிருக்கிறாள். ஐபோன் காணாமல் போனது ஒரு பக்கம், மறுபக்கம் நான் திட்டுவேனே என்ற பயமும் சேர்ந்துகொள்ள அழுதுகொண்டு இருந்தாள். நல்லவேளை வேறொன்றும் இல்லை. நான் அவளிடம் சென்று, போனால் போகிறது, வேறு வாங்கித்தருகிறேன் என்று சொல்லி, அவனைப்பின் தொடர்ந்து ஓடியது பெரிய முட்டாள்தனம். இனிமேல் அப்படிச் செய்யாதே என்றேன்.
     உடனே என் சின்னப்பெண் அபிஷாவுக்கு ஒரு டெக்ஸ்ட் மெசேஜ் அனுப்பினேன். எங்கேயிருக்கிறாய் என்று கேட்டு. பதில் வரவில்லை. ஆனால் ஒரு 20 நிமிடத்தில் வீடுவந்து சேர்ந்தாள்.
     நல்லபடியாகத்தான் உள்ளே வந்து 'ஹாய்', என்றாள். "ஏன்  டெக்ஸ்டுக்கு  பதில் அனுப்பவில்லை என்றுகேட்டு, எங்கே ஐபோன்" என்று கேட்டேன். அவள்   திருப்பி "அதைத்தான் நானும் கேட்கிறேன்" எங்கே என் ஐபோன் யாராவது எடுத்தீர்களா?" என்று கேட்டாள்.

Friday, March 8, 2013

லிட்டில் இந்தியா - 1: ’கருவாட்டுக்குழம்பு படு அலட்சியமா யாரு வச்சது?’

ன்னைப் பொறுத்தவரைமனைவி அமைவதெல்லாம்ஐ விட உணவு அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்என்பேன். சமைக்காமல் இருப்பதற்கு எதுடா சாக்கு? என்று யோசிக்கும் மனைவிகளுக்கு மத்தியில், எங்க வூட்டுக்காரம்மா மட்டும் விதிவிலக்கா என்ன? நேற்று அவளுக்கு ஓவர்டைம். வீட்டுக்கு லேட்டாக வந்ததால் சமைக்கவில்லை.
எப்போதாவது அபூர்வமாக நல்லவளாக மாறும் என் மூத்த வாரிசு அனீஷா, மீதமிருந்த மாவில் தோசை ஊற்றி, குட்டி மம்மியாக மாறி, அனைவருக்கும் பரிமாறி, பாத்திரங்களைக் கவிழ்த்துவைத்தாள்.
பொதுவாக நாங்கள் இரவில் சமைக்கிற உணவை, கொஞ்சம் எடுத்து வைத்து அதையே மறுநாள் மதியத்துக்கும் எடுத்துச் செல்வது வழக்கம். அளவுக்கு மீறினால் அனிஷாவும் நஞ்சுஎன்ற எண்ணத்தில், அவளது தோசையை அலுவலகத்துக்கும் எடுத்துச்செல்லும் எண்ணத்தைக் கைவிட்டுவிட்டு,மதியச்சாப்பாடு எடுத்துச்செல்லாமல் அலுவலகம் சென்றேன்.
’பேக்கிரவுண்டுல சாப்பாடு,... ஃபோர் கிரவுன்டுல நான் பசியோடு
உடன் வேலைபார்க்கும் சலீமும் அன்று மதிய உணவு எடுத்து வராததால் இருவரும் வெளியே சென்று சாப்பிடுவதென்று முடிவெடுத்தோம். அகோரப்பசி கலந்த சிலபல ஆலோசனைகளுக்குப் பிறகு, லெக்சிங்டனில்  உள்ள சென்னை கார்டனுக்கு செல்வதென்று ஒருவயிறாக முடிவெடுத்தோம்.
பொதுவாக என் ஆபிஸில் உள்ள பேண்ட்ரியில், இந்தியர் அனைவரும் சம பந்தியர்களாக மாறி பாட்லக் முறையில் எங்கள் உணவைப் பகிர்ந்துகொள்வது வழக்கம்.
வடநாட்டான் காட்டானாக மாறி, நம் அரிசிச் சோறுக்கு அலைய, நாங்கள் அவர்களது சப்பாத்திக்கு சப்புக்கொட்டுவோம். என் வீட்டு இட்லியும், மட்டன் கறியும்[baby goat] பேண்ட்ரியில் பெரும் பிரபலம். மும்பையைச் சேர்ந்த மார்வாடிப்பையன் கொண்டு வரும் மினி சைஸ் சப்பாத்தி வாயில் வைத்தாலே கரைந்துவிடும். அவன் கொண்டு வரும் பாவ்பாஜிக்கு நான் ஆயுள் சந்தா கட்டாத அடிமை. அதுபோல் நான் வேறெங்கும்  சாப்பிட்டதில்லை.
பேண்ட்ரிக்கு கருவாட்டுக் குழம்பு கொண்டுவரக்கூடாது என்பது எழுதப்படாத சட்டம். ஒரு முறை அமீன் கொண்டுவந்த கருவாட்டுக் குழம்பை மைக்ரோ-ஓவனில் சூடு பண்ணும்போது கிளம்பிய நாற்றத்தால், ஜெயின் ஒருவன் வகைதொகையில்லாமல் வாந்தியெடுத்து, ஒருவார லீவு போட்டு வாயை சுத்தப்படுத்திக்கொண்டிருக்க, மற்றவர்களும் நாற்றத் தாக்குதலால் துடித்துப்போனார்கள். கருவாடு என்ற பெயரைக் கேட்டவுடன் லேசாக பூனையின் தோற்றத்துக்கு மாறிப்போகும் நானே கூட, அந்த நாற்றத்தால் நடுங்கிவிட்டேன் எனும்போது மற்றவர்களைப் பற்றி கேட்கவாவேண்டும்? [ இந்த சமயத்துல ராஜா குரல்ல ‘ கருவாட்டுக்குழம்பு கனகச்சிதமா யாரு வச்சது?’ பாட்டு ஏன் ஞாபகத்துக்கு வருதுன்னு தெரியலையே?]
கருவாட்டுக்கு ‘144’ வந்த கதை இதுதான்.
இதுபோலவே இங்கே இன்னும் சில  ’அன்பானவிதிமுறைகளும் உண்டு. நாம் கொண்டு வரும் உணவை மற்றவர்கள் எடுக்கும் முன் நாம் கைவைக்க முடியாது. சப்பாத்தி, வடை, இட்லி போன்றவற்றைக் கொண்டு வருபவர்கள் குறைந்தபட்சம் ஆளுக்கு ஒன்று கிடைக்கும்படியாவது கொண்டுவரவேண்டும். விவகாரமான விவகாரங்கள் எதுகுறித்தும் கண்டிப்பாக விவாதிக்கக்கூடாது.
பிறந்தநாள்,  Labor approvel, I140 approvel, Greencard approvel,Citizen ஆதல் போன்ற விஷேச நிகழ்வுகளுக்கு கண்டிப்பாக தனிப்பட்ட முறையில் எல்லோருக்கும் பார்ட்டி தரவேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட பார்ட்டிகள் ஒரே நாளில் அமைந்தால் செலவை ஷேர் பண்ணிக்கொள்ளலாம்.
எங்கள் பிரசிடண்ட் முகம்மது சதக், ஊரில் இருக்கும்போது சில சமயங்களில் மட்டும் பார்ட்டிகளில் கலந்துகொள்வார். அவர் பெரும்பாலும் மதியத்தில் சூப் அல்லது சூஷியை சாப்ஸ்டிக்கில் சாப்பிடுவார். சூஷி- ஒரு வகை பச்சை மீன். அவரைத்தவிர யாரும் அந்த பச்சை மீனின் வலையில் விழுவதில்லை.
விவரம் தெரியாத பாகிஸ்தானி சல்மான் ஒருமுறை, குட் ஃப்ரைடேக்கு பார்ட்டி கேட்க, அசைவப்பிரியர்களே அஞ்சி நடுங்கும் அளவுக்கு, அய்யங்கார் தோழி ஒருத்தி,சிக்கன்,மட்டன், பீஃப்,போர்க் என்று சகல ஜீவராசிகளையும் குழப்பி அடித்து குசலம் விசாரித்தபோது பேண்ட்ரி அன்பர்கள் அத்தனைபேரும் ஆவி ஒடுங்கி நின்றது ஒரு தனிக்கதை.

லெக்சிங்டன் அவென்யூவுக்கு எங்கள் அலுவலகத்திலிருந்து சப்-வே வழியாக இரண்டு ரயில்கள் மாறிப்போனால் 20 நிமிடங்கள் ஆகும்.விரைவாக  நடந்துபோனால் ஒரு ஐந்து நிமிடம் குறைவுதான் . எனவே குளிராய் இருந்தாலும் நடந்தே போவது என்று முடிவு செய்து,குளிரில் நடங்க ஆரம்பித்தோம்.
என் அலுவலகம் இருப்பது மிட்-டவுன் பிராட்வேயில் 30க்கும் 31க்கும் நடுவில் இருக்கும் தெருவில். இங்கே நுழைந்ததும், Haiti-யில் இருப்பது போல் ஒரு ஃபீலிங் இருக்கும். அந்நாட்டைச் சேர்ந்த பலர்சல்லிசான விலைகளில் கிடைக்கக்கூடிய ஆப்ரிக்க அழகு சாதனங்களைக் கொண்டு இங்கே கடைகளை விரித்துவிட்டனர். வாடகை இன்னும் குறைச்சல் என்பதால் ஏழாவது மாடியை வளைத்துப்போட்டுவிட்டார் சதக். இல்லாவிட்டால் மேன்ஹாட்டனில் வாடகை என்பது கனவிலும் நினைத்துப் பார்க்கமுடியாத ஒன்று.
குறுக்கே புகுந்துத ஃபேமஸ் ஐந்தாம் அவென்யூ,மாடிசன் அவென்யூ, பார்க் அவென்யூ ஆகியவற்றைத் தாண்டி,லெக்சிங்டனின்லிட்டில் இந்தியாவந்தடைந்தோம்.
சமீபத்தில் துவங்கப்பட்டஅஞ்சப்பர் ஹோட்டல்செம ஹாட் ஹிட் என்பது ஒருபுறமிருக்க, ஆச்சரியமான ஒரு விஷயம், இந்தப்பகுதியில் பல ஆண்டுகளாகவே தென்னக உணவகங்கள் தான் சக்கைப்போடு போடுகின்றன. ‘பொங்கல் ரெஸ்டாரெண்ட்’,’உடுப்பி பவன்’,’மெட்ராஸ் மஹால்சென்னை கார்டன்’, ‘சரவண பவன்என்று இந்த ஏரியா முழுக்க நம்ம ஊரு அண்ணாச்சிகளின் ஆட்சியே. ஆலமரம்,அதன் அடிவாரத்தில் அடிவாங்கிய சொம்பு, அங்கே கட்டப்பஞ்சாயத்து நடைபெறாத ஒரே குறைதான்.
ரெஸ்டாரென்ட்  பேரும், அங்கே பரிமாறப்படும் உணவு வகைகளும் தான் நம்ம ஊரு என்றாலும், சும்மாக்காச்சுக்கும் பணியில் அமர்த்தப்பட்டிருக்கும் நம்ம ஊர் ஆட்கள்  ஒன்றிரண்டு பேரைத்தவிர, அங்கே வேலை பார்ப்பது பெரும்பாலும் ரஷ்யர்களும், ஸ்பானியர்களும்.
https://mail.google.com/mail/u/0/images/cleardot.gif
நம்ம இட்லியையும்,தோசைகளையும், வெண்பொங்கல்,சாம்பார்களை அவர்கள் வாயால்,செம்மொழியாம் தமிழ்மொழியில் உச்சரித்து சர்வீஸ் செய்வார்களே, அதைக் கேட்க காது கோடி வேண்டும்.

அவிங்க கையால வாங்கிச் சாப்பிடனும் போல லைட்டா பசிக்குமே?’ உங்க பேரை கவுண்டர்ல எழுதி வச்சிட்டு, ப்ளீஸ் கொஞ்சம் வெயிட் பண்ணுங்க பாஸ்,,,.