Showing posts with label போர்ட்டரிக்கோ பயணம். Show all posts
Showing posts with label போர்ட்டரிக்கோ பயணம். Show all posts

Monday, January 13, 2014

போர்ட்டரிக்கோ பயணம், பகுதி 11: துரத்திய இக்வானாவும் கடத்திய மாம்பழமும்.!!!!!!!!!!!!




 இரவு நேரத்தில் பலர் வருவார்களாம். ஆனால் முக்கிய பிஸினெஸ் அக்டோபர் முதல் ஜனவரி வரை இருக்குமாம். அப்போது குருஸ் கப்பல்கள் பல வருமாம். ஒவ்வொரு கப்பலிலுமிருந்து ஏராளமானவர் கரைக்கு வரும்போது வியாபாரம் களைகட்டுமாம். ஆமாம், ஆனால் இப்போது எதற்கு இவ்வளவு மது என்று கேட்டபோது "ஓ உங்களுக்குத் தெரியாதா, நாளையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை வரை கலிநரி திருவிழா (culinary festival) இங்கே நடக்கவிருக்கிறது. 
SoFo Culinary Festival
இங்குள்ள எல்லா ரெஸ்டாரண்டுகளும் வெளியே டேபிள்சேர் போட்டு, எங்களுடைய பெஸ்ட் உணவு வகைகளைப் பரிமாறுவோம்," என்றான். "இந்த நான்கு நாட்களில் சுமார் ஒரு மில்லியன் மக்கள் இங்கு வருவார்கள். நீங்களும் கண்டிப்பாய் வாருங்கள்" என்றான். “எது உங்கள் பெஸ்ட்” என்று கேட்டபோது, “சிக்கன் வகைகள் மற்றும் தோசை வகைகள்”, என்று சொன்னான். “என்னது தோசையா ஐயா ஆளை விடு என்று   நினைத்துக்கொண்டு, இல்லையப்பா நாளைக்கு காலை எங்களுக்கு ஃபிளைட்”. என்றேன். "என்ன ரமேஷ் பிள்ளையைக் காணோம்" என்று கேட்டேன். “அதோ மதுபானங்களை தூக்கிக்கொண்டு போறாரே  அவர்தான், பேச வேண்டுமா?”, என்றான். “இல்லையப்பா வேண்டாம்”, என்று பில்லுக்கு பணம் கட்டிவிட்டு வெளியே வந்தேன். அவரிடம் பாராட்டி சொல்வதற்கு என்ன இருக்கு. அங்குள்ள சதுக்கத்தில் கிடைத்த பழ சாலட்டைச் சாப்பிட்டு வயிறை நிரப்பிக்கொண்டு, கோட்டைக்கு பொடி நடையாய் கிளம்பினேன்.

கேஸ்டில்லோ டி சான் கிறிஸ்டபல் (Castillo de San Cristobel)
     கடல்வழிப் பாதுகாப்புக்காக "டெல் மோரோ" கோட்டை இருந்தாலும், டச்சுப்படைகள் தரைவழித்தாக்குதல் நடத்தியதால், ஸ்பானிய அரசு கி.பி. 1783-ல் கட்டி முடிக்கப்பட்ட கோட்டைதான் இது. 27 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள இந்தக் கோட்டைதான்,  ஸ்பெயின் அரசால் “புது உலகத்தில்" கட்டப்பட்ட மிகப்பெரிய கோட்டையாகும். 
சேன் வான் நகரின் வழியை இந்தக் கோட்டையின் இருபெறும் வாயில்கள் காத்து நின்றன. பின்னர் 1897-ல் தான் போக்குவரத்து நெரிசலை குறைக்க கோட்டையின் ஒருபகுதி தகர்க்கப்பட்டது. இது "செரோ டி சான் கிறிஸ்டபல்" என்று அழைக்கப்படும் குன்றின் மேலுள்ள கோட்டை.
 ஆங்கில மற்றும் டச்சுப்படைகளை எதிர்த்து வென்றபின் ஸ்பெயின் அரசு இந்தக் குன்றின் பெயரை இப்படியாக மாற்றியதாம். கி.பி.1797-ல், பிரிட்டிஷ்  கப்பல் படையில் சர் ரால்ஃப் ஆபர்காம்பி தலைமையில் வந்த 13 ஆயிரம் போர் வீரர்கள் நடத்திய தரைவழித் தாக்குதலை கிட்ட நெருங்கவிடாமல் ஒரு மைல்  தொலைவிலேயே முறியடித்தது இந்தக் கோட்டைதான்.
       கி.பி.1824-ல் ",மரியா டி வாஸ் மெர்சிடிஸ் பர்புடோ (Maria  de las Mercedes Barbudo) என்ற உண்மையான புரட்சித்தலைவி போர்ட்டரிக்கோவின் விடுதலைக்காக ஆயுதப் போராட்டம் நடத்தினாராம்.
Mercedes of Orleans Queen of Spain.jpg
Maria  de las Mercedes Barbudo 
 மரியா, அப்போது வெனிசூலா அரசின் தலைவராக இருந்த சைமன் பொலிவார் (Simon Bolivar) உதவியுடன் நடத்திய தாக்குதலையும் இந்தக் கோட்டை முறியடித்தது. பின்னர் மரியா இங்கேயே சிறிது நாட்கள் சிறைவைக்கப்பட்டு, அதன் பின் கியூபாவுக்கு நாடுகடத்தப்பட்டாராம். அந்த டஞ்சனையும் பார்த்தேன்.
       அதன் பின்னர் ஏற்கனவே நான் எழுதியபடி கி.பி.1898- முதல் இது அமெரிக்க வசம் வந்தது. 1942-ல் நடந்த இரண்டாம் உலகப்போரில் அமெரிக்க ராணுவத்தளமாக இது விளங்கியபோது, பாதாள அறைகள் அமைக்கப்பட்டன. 1961 வரை அமெரிக்க ராணுவத்தின் ஒரு பிரிவு இங்கு தங்கியிருந்தது. அதன் பின் அமெரிக்க தேசிய பூங்கா அமைப்பிடம் (US National Park Service) ஒப்படைக்கப்பட்டு, இப்போது அவர்கள் பராமரிப்பில் மியூசியமாக விளங்குகிறது. கி.பி.1983-ல் இது "உலகப்பாரம்பரிய இடம்" (Word Heritage Site) ஆக அங்கீகரிக்கப்பட்டது.

       உள்ளே ஒவ்வொரு பகுதியும் நன்கு பராமரிக்கப்பட்டு இருந்தது. வழக்கம் போல் ஆவணப்படம் பெரிய திரையரங்கில் காணப்பட்டது.

 டெல் மோராவில் பார்த்த அதே படம் தான். ஆனால் பெரிய திரையில். எனவே அதனைத்தவிர்த்து வெளியே வந்தேன். மாடியில் திறந்த வெளியின் சுவரில் "இக்வானா" ஒன்று என்னை உற்று உற்றுப்பார்த்தது. பயந்துபோன நான் பார்வையைத் தவிர்த்து உள்ளே  சென்றேன். குறுகலாக இருந்த சுரங்கப்பாதையில் உள்ளே சென்றால், அங்கே போர்வீரர்கள் தங்குமிடங்கள், பயிற்சி செய்யும் இடம், தளவாடங்கள் வைக்குமிடம், வெடி மருந்துக்கூடம், அதிகாரிகள் தங்குமிடம் என ஒவ்வொன்றும் பெரிய அளவில் விசாலமாக இருந்தன. சிறிய குகைபோன்ற வாயிலில் உள்ளே சென்றால், ஜன்னல்கள் எதுவும் இல்லாத டஞ்சன் (Dungeon) என்று அழைக்கப்படும் சிறைக்கூடம் வந்தது. யாரெல்லாம் அங்கு இருந்தார்களோ, ஆனால் சுவரில் சில இடங்களில் சிறுசிறு கப்பல்கள் வரையப்பட்டிருந்தன. 
விடுதலை  நினைவோடு மீண்டும் தாய் நாட்டுக்கு எப்போது திரும்புவோம் என்று கனவு கண்ட கைதிகள் வரைந்திருப்பார்கள் என நினைத்தபோது மனதுக்கு கஷ்டமாக இருந்தது.
       திரும்பவும் வெளியே திறந்தவெளிக்கு வந்தபோது சிலபேர் ஏதோ ஒன்றை போட்டோ எடுத்துக் கொண்டிருந்தனர். என்னவாக இருக்கும் என்று எட்டிப்பார்த்தால் அந்தப் பெரிய இக்வானா சுவரின் பொந்திலிருந்து கீழிறங்கி வந்து அங்கே சட்டமாக உட்கார்ந்து அங்குமிங்கும் பார்த்த வண்ணம் இருந்தது.

 ஐயையோ என்னைத்தேடித்தான் வந்திருக்குமோ என கலவரப்பட்ட நான் வாயிலை நோக்கி ஓடினேன். மிகப்பெரிய சைசில் இருந்த அது எவ்வளவு காலம் அங்கு வாழ்கிறதோ தெரியவில்லை.

       ரூமுக்கு திரும்பிய என்னை, "என்ன ஒன்றுவிடாமல் பார்த்தாச்சா?" என்று கேட்டு புன்னகைத்தாள் என் பாரியாள். சூடான தக்காளி சாதம், சிப்சுடன் ரெடியாக இருந்தது. காலையில் ஃபிளைட் என்பதால் சீக்கிரமாய் தூங்கிவிட்டோம்.

       எழுந்து, பேக் செய்து, வாடகைக்காரை திரும்பக்கொடுத்துவிட்டு, அவர்களின் பிரத்யேக வேனில் பயணம் செய்து ஏர்போர்ட்டுக்குப் போனோம்.
       நான் எவ்வளவு சொல்லியும் கேளாமல் கொண்டுவந்திருந்த மாம்பழங்கள் கஸ்டம்சில் பறிபோயின. கஸ்டம்டா சாமி. “நீங்களே வைத்துக்கொள்ளுங்கள்” என்று அந்தப்பெண்மணியிடம் என் மனைவி சொன்னாள் பெருந்தன்மையுடன்.
       ஜெட்புளு டைரக்ட் ஃபிளைட் நியூயார்க், ஜான் கென்னடி விமானநிலையத்திற்கு மதியம் 3 மணிக்கு வந்து சேர, டாக்சி பிடித்து வீட்டிற்கு நாலுமணிக்கெல்லாம் வந்து சேர்ந்தோம்.
       அன்றிரவு கோதுமைத்தோசை சாப்பிடும்போது, ஒரு மாம்பழக்கீற்றை கொடுத்தாள் மனைவி. அது ஒரு துளி அமுதமாய் நாவில் சுரக்க, என் மனைவியை ஆச்சர்யத்துடன் பார்த்தேன். கண்ணடித்துச் சிரித்தாள். இவ்வளவு கெடுபிடிக்கிடையில் எப்படியோ ஒன்றிரண்டு மாம்பழங்களை கடத்தியிருக்கிறாள்.
முற்றியது.

நண்பர்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்........!!!!!!!
முக்கிய அறிவிப்பு
“ஓம்பாட்டுக்கு நாங்க பாக்க முடியாத ஊரைப்பத்தியே   எழுதுறியே.இங்க எங்கனாச்சும் தமிழ்நாட்டுல எதனா எழுதினா போய் பாப்பம்ல” என்ற நண்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்க , அடுத்த திங்கள் முதல் வருகிறது " காரைக்குடி பயணம்”.  ஆச்சிகளே   ரெடியா?



Monday, January 6, 2014

போர்ட்டரிக்கோ பயணம், பகுதி 10: புளிப்புத்தோசையும் சலித்த சட்னியும் !!!!!!!!!!!!

My wife and Daughter at Ila Verde Beach

        உள்ளிருந்து இரு கையிலும் டாபர்மேனையும், வாயில் சுருட்டுடனும் யாராவது வருவார்கள் என்று பார்த்தால், அப்படியொன்றுமில்லை. லேசாகச் சாத்தியிருந்த கதவை நெம்பிக் கொண்டு வந்தது "உஜாலாவுக்கு மாறிய" ஒரு பொமரேனியன். என் மனைவி என்னை முறைக்க, நான் கீழே இருந்த மாங்காயை முறைக்க, நான் வேறு வாங்கித்தருகிறேன் என்று சமாதானப்படுத்தி அவளை அழைத்துச் சென்றேன். இந்த டிராமாவைப் பார்த்த என் மகள்கள் இருவரும் சொல்லிவைத்தாற்போல்  ஒரே சமயத்தில்   தங்கள் தலையில் அடித்துக் கொண்டனர். பின்னர் சிறிது நடந்து சென்றால் "ஐலா வெர்டே" (Ila verde) பீச். காலை இளம் தென்றல், எழுந்து வரும் சூரியனின் கோபத்தைத் தணிக்க சாமரம் வீசியது. வெண்மைநிற லேஸ் வைத்து தைக்கப்பட்ட, இளநீல பாவாடை அணிந்து, அன்னநடை நடக்கும் விடலைப்பெண் போல அலைகள் அசைந்து விளையாட, சூப்பராய் இருந்தது.

 பீச்சில் அதிகக் கூட்டமில்லை. அங்கேயே இருந்துவிட மனம் கெஞ்சியது. ம்ஹீம், இன்னும் பார்க்க வேண்டிய மூன்று முக்கிய இடங்கள் அழைத்ததால், என் மனைவி மக்களை அங்கேயே விட்டுவிட்டு கிளம்பத் தீர்மானித்தேன்.


 "இங்கேயே இருந்துவிடுங்கள்" என் மனைவி சொன்னாள். "உப்புத்தண்ணியாய் இருக்கிறது இல்லாவிட்டால் இருந்து விடுவேன்" என்று சொல்ல அவள் முறைத்தாள். ஆனாலும் எடுத்த முடிவின் படி கிளம்பினேன்.

காசா அல்கேடியா (Casa Alcadia)

        முதல் ஸ்டாப் 'காசா அல்கேடியா' என்று அழைக்கப்பட்ட 'சிட்டி ஹால்'. நகர அரசாங்கம் இங்கிருந்துதான் இயங்குகிறது. கி.பி.1602-ல் கட்டப்பட்ட இந்த கட்டடம் ஸ்பெயினின் தலைநகரம் மேட்ரிட்டில் உள்ள சிட்டி ஹால் போல தோற்றமளிக்கும் வகையில் கி.பி.1840-ல் மாற்றியமைக்கப்பட்டதாம். அச்சு அசலாக அதன் மாதிரியாக இது விளங்குகிறதாம். மேட்ரிட் (Madrid) போனால் பார்க்க வேண்டும்.

எல் கேப்பிடோலியோ டி போர்ட்டரிக்கோ (El Capitolio de Puerto rico)

        அதே வரிசையில் கடலோரத்தில் இருந்த மிகப்பெரிய கட்டடம் இது. மற்ற கட்டடங்களை ஒப்பிட்டுப் பார்க்கும் போது, இது சற்றுப்புதியது. கி.பி.1920-ல் கட்டப்பட்டது.


 இதுதான் போர்ட்டரிக்கோவின் செனட்டர்கள், பிரதிநிதிகள் கூடும் சட்டசபை. அவர்களின் அலுவலகங்களும் இங்கேதான்  இருக்கின்றன.


உயர்ரக மார்பிளில் கட்டப்பட்ட இம்மாளிகை, ஓவியங்கள் மற்றும் சிற்பங்களால் நிரம்பியிருந்தது. 

குறிப்பாக கோள வடிவ விதானத்தில் வண்ணமயமான ஓவியங்கள் போர்ட்டரிக்கோவின்  வரலாறை எடுத்துரைத்தன.

 கீழே நடுவில் போர்ட்டரிக்கோவின் அரசியல் அமைப்பு (Constitution) சட்டமிடப்பட்டு வைக்கப்பட்டிருந்தன.

 போர்ட்டரிக்கோவின் பல முன்னாள் தலைவர்களின் மார்பளவு  சிற்பங்கள் அரங்கில் நிறைந்திருந்தன.

        பெர்கின் (Perkin) என்பவரால் உருவாக்கப்பட்ட டிசைனிலிருந்து பெரும்பாலும் கட்டப்பட்டாலும், முக்கிய நடுப்பகுதி, நியூயார்க் கொலம்பியப் பல்கலைக்கழகத்தின் "லோ மெமோரியல் நூலகத்தின் (Low Memorial Library)  அமைப்பில் கட்டப்பட்டது. 

போர்ட்டரிக்கோவின் மிக முக்கிய கட்டடமாகிய இது 1977-ல் யு.எஸ். நேஷனல் ரிஜிஸ்டர் ஆஃப் ஹிஸ்டாரிக் பிளேசில், (U.S. National Register of Historic Places) சேர்க்கப்பட்டது.

        அதற்குள் சாப்பாட்டு  நேரம் வர வயிறு கூப்பாடு போட்டது. தற்செயலாக வந்த ஓசி ஷட்டிலில்  ஏறி மீண்டும் குன்றுப்பகுதிக்கு வந்தேன். அங்கேதான் "தந்த்ரா" இருப்பது நினைவு வர அங்கு சென்றேன். ஏதோ தமிழன் நடத்தும் கடைக்கு நம்மால் செய்யும் உதவி. மறுபடியும் அங்கே ஒருவரையும் காணோம்.  தொண  தொண பெண்ணையும் அன்று காணோம் அடச்சே. சிறிது நேரம் சென்று ஒரு மொட்டை வந்தான். "வெளியே இருக்கும் ஹாட் வெதருக்கு ஏற்ப இதமான ஒரு மார்ட்டினி சாப்பிடுகிறீர்களா" என்று கேட்டான். “புதன்கிழமை நான் லிக்கர் சாப்பிடுவதில்லை”, என்று சொல்லி மெனுவை ஆராய்ந்தேன். எதை ஆர்டர் பண்ணாலும், சுடவைத்த பழையதுதான் கிடைக்கும் என்று நினைத்துக்கொண்டு, சேஃபாக  ஒரு தோசை கேட்டேன். மாவு பழசானாலும் தோசை புதுசாத்தானே ஊத்தனும். இப்ப என்ன செய்வீக? இப்ப என்ன செய்வீக? .அதோடு 5 டாலர்தான் போட்டிருந்தான். "தொட்டுக்கொள்ள என்ன வேண்டுமென" கேட்டான். இதெல்லாம் ஒரு கேள்வி என்று நினைத்துக்கொண்டு, “அதான் சாம்பார் சட்னி", என்று சொன்னேன்.. "மூன்றுவகை சட்னி இருக்கிறது எது வேண்டும்? என்றான். பார்ரா பரவாயில்லையே, “மூன்றையும் கொண்டுவா" என்றேன்.

        தோசை விரைவாகவே வந்தது. ஆனால் அது பார்ப்பதற்கு தோசைக்கும் ஊத்தாப்பத்துக்கும் நடுவில் இருந்தது. சுடவைத்த சாம்பாரும் வந்தது. மூன்று சட்னிகள் சற்று சில்லென்று இருந்தன. தக்காளி சட்னி, புதினா சட்னி மற்றும் தேங்காய் சட்னி. தேங்காய் சட்னியும் புதினா சட்னியும் ஒரே கலரில் இருந்ததல்லாமல் ஒரே சுவையுடனும் சற்றே சலித்துப்போய் இருந்தது. தோசையும் புளிப்பாய்.  எந்த  வருடத்து மாவு என்று தெரியவில்லை. சாம்பார் மட்டும் கூட்டு போல் கெட்டியாய் இருந்ததால் அதனை முழுவதுமாக சாப்பிட்டுவிட்டு, பில் கேட்டேன். பில்லைப்பார்த்தவுடன் திகைப்புடன் சேர்ந்த கோபம் வந்தது. தோசை என்னவோ ஐந்து டாலர் தான், ஆனால் சட்னி ஒவ்வொன்றும் 3.50 டாலர் மற்றும் சாம்பார் பத்து டாலர், ஆக மொத்தம் டயட் கோக்கோடு 18% கிராஜுட்டி அப்புறம் சேல்ஸ் டாக்ஸ்  சேர்த்து (25.50 +  4.75 = $ 30.25 கிட்டத்தட்ட 35 டாலர் ஆயிப்போச்சு. என்ன அநியாயம் தோசைக்கும் சட்னிக்கும் தனியாக நியூயார்க்  சரவணபவன் உட்பட எங்கேயுமே இதுவரை நான் காசு கொடுத்ததில்லை. ஒரு வரண்டு போன புளிப்புத்தோசைக்கு 35 டாலரா? மறுபடியும் சொ.செ.சூ. கொடுமைடா சாமி என்று டிப்சைத்தவிர்த்து அவசரமாக வெளியே வர எழுந்தேன்  .

        அப்போது மதுபானங்கள் பெட்டிபெட்டியாய் வந்து இறங்கின. ஆட்கள் யாரும் வருவது போல் இல்லை. மதுபானங்கள் இவ்வளவு தேவையா? என்று நினைத்துக் கொண்டு அந்த கோவாவைச் சேர்ந்த மொட்டையிடம் வினவினேன்.

அடுத்த வாரத்தில் முடியும் ( அப்பாடா !!!!!!!!!!)


        

Monday, December 30, 2013

போர்ட்டரிக்கோ பயணம், பகுதி 9: குண்டு மாங்கா தோப்புக்குள்ளே!!!!!!!!!



பரிசுத்த ஆவி வந்துவிட்டதோ, எனப் பயந்த போது, "அத்தான் இங்க பாருங்க", என்றாள். அட வேப்பமரம் அதைப் பார்த்துத்தான் ஓடியிருக்கிறாள். ஐயையோ இதுவேற ஆவியாக இருக்குமோ எனப்பயந்தேன். ஆனால் ஒன்றுமில்லை பல வருடங்களுக்கு பிறகு வேப்பமரத்தைப் பார்த்ததில் வந்த ஆவேசம்தான் அது. எட்டிப்பறிக்க குதித்து வேப்பங்கொழுந்தை கொண்டு வந்து என்னைச் சாப்பிடச் சொல்லி வற்புறுத்தினாள். சுகருக்கு நல்லதாம். அவள் குதித்ததைப் பார்த்துச் சிரித்த என் நகைச்சுவை கசப்புச்சுவை ஆனது.
சேன் வான் கத்தீட்ரல்

        மதிய நேரத்தில் ஆளரவம்  இன்றி கத்தீட்ரல் பேரமைதியாய் குளிர்ச்சியாய் இருந்தது.
         கி. பி.1520-ல் புலம் பெயர்ந்த ஸ்பானிய கத்தோலிக்க மக்களின் ஆத்மீகத் தேவைகளைப் பூர்த்தி செய்ய பல ஆலயங்கள் கட்டப்பட்டன. இந்த "சேன் வான் கத்தீட்ரல்", கி.பி.1522-ல் கட்டப்பட்டது.


 பின்னர் ஸ்பானிய கத்தோலிக்க மன்னரின் நிதியுதவியால், கட்டடமாக கட்டப்பட்டது. ஸ்பானிய காதிக் (Gothic) கட்டடக்கலைக்கு சான்றாக இன்றும் நிமிர்ந்து நிற்கிறது. 18 மற்றும் 19 ஆம்  நூற்றாண்டில் சான் வான் துறைமுகத்திற்கு வரும் எவரும் நேராக இந்தக் கத்தீட்ரல் வந்து வணங்கி சுகப்பயணம் வாய்த்தமைக்கு நன்றி சொல்லிவிட்டுச் செல்வது ஒரு பழக்கமாக இருந்தது.

 இங்குதான் போர்ட்டரிக்கோவின் முதல் கவர்னர் பான்சே டி லியான் அவர்களுடைய மார்பிள் கல்லறை இருக்கிறது.
கேப்பில்லா டெல் கிறிஸ்டோ (Capilla del Cristo)
        இறங்கும் வழியில் இந்தப்பழைய அழகிய சேப்பல் (Chapel - சிற்றாலயம்) இருந்தது. 

குன்றின் விளிம்பில் இருக்கும், இந்த சேப்பல் மிகவும் புராதனமானது. ஒரு ஸ்பானிய வீரன் தன் குதிரையில் வேகமாக ஏறி வரும்போது, வேகத்தை குறைக்க முடியாமல் இந்தக் குன்றிலிருந்து மறுபுறம் கீழே விழுந்து இறந்துபோனதாகச் சொல்கிறார்கள். இந்த சேப்பல் அவன் நினைவாக கட்டப்பட்டு இருக்கலாம் என்று சிலரும், மேலும் யாரும் இந்தக் குன்றின் மறுபுறம் விழுந்து விடக்கூடாது என்பதால் கட்டப்பட்டது என்று வேறு சிலரும் சொல்கிறார்கள்.
லா ரோகடிவ்வா (La Rogativa)

        ஃபோர்ட்டலிஸா கோட்டையின் பக்கவாட்டில் வலதுபுறம் இருந்த பழைய ஸ்பானிய துறைமுகத்தையும் அதன் கரையில் இறகுபோல் வருடிய சளக்புளக் சிற்றலைகளையும் ரசித்துக்கொண்டே, கீழிறங்கினோம், வழியில் இடதுபுறம் நின்ற ஆஜானுபாகு ஆலமரத்திற்கு டாட்டா சொல்லி, இறங்கும்போது அந்த இரும்புச்சிற்ப சிலைகளை மீண்டும் பார்த்தேன். ஏதோ கிறிஸ்தவ பாதிரியார் போலத்தெரிந்தது. வழியில் பலபேரை விசாரித்து அறிந்து கொண்ட செய்தி என்னவென்றால், கி.பி.1797ல் சேன்வான் நகரத்தை, ஆங்கிலேய கப்பற்படை முற்றுகையிட்டிருந்த போது, கோட்டையின் உள்ளே அத்தியாவசிய பொருட்கள் ஒன்றையும் அனுமதிக்கவில்லை. உள்ளே அனைவரும் பட்டினி. பொறுத்து பொறுத்துப்பார்த்த கவர்னர், பிஷப்பைக் கூப்பிட்டு, "கடவுள் நிகழ்த்தும் ஒரு அற்புதம்தான் நம்மைக்காக்கமுடியும் எனவே ஜெபத்தை ஆரம்பியுங்கள்" என்று வேண்டினார். எனவே அதே தின மாலையில் பிஷப் தன்னோடு சில போதகர்களையும், கன்னியாஸ்திரிகளையும் அழைத்துக்கொண்டு கையில் தீப்பந்தங்களை எடுத்துக்கொண்டு இறைவனை இறைஞ்சுவதற்காக கோட்டையின் விளிம்பிற்கு சென்றாராம். ஏற்கனவே முற்றுகையில் சோர்ந்து, களைத்து சுகவீனப்பட்டு, பலவீனப்பட்டிருந்த ஆங்கிலேயக் கப்பற்படை, மறுபடியும் பெரிய படையொன்று இரவுத்தாக்குதல் நடத்த வருகிறது என்று பின்வாங்கி போயே போயிந்தே. அதன் நினைவாக எழுப்பப்பட்டதுதான் இந்த நினைவுச்சின்னம். நல்லவேளை இதையும் தெரிந்து கொண்டேன்.
        கீழிறங்கி பார்க்கிங்கில் விட்ட காரை எடுத்துக்கொண்டு ரூம் திரும்பினோம். முழுநாளும் பார்க்கிங் செய்ய  வெறும் மூன்று டாலர் என்பது ஆச்சரியமூட்டியது. நியூயார்க்கில் 1/2 மணி நேரத்திற்கு 10 முதல் 12 டாலர் வாங்கி விடுவார்கள். களைத்துப்போன என் மனைவி படுக்கையில் தஞ்சம் புக, என் பிள்ளைகள் உடை மாற்றிக் கொண்டு, உற்சாகமாக பீச்சுக்குச் சென்றனர். நானும் மறுபடியும் காரை எடுத்துக்கொண்டு சில நினைவுப் பொருட்கள் வாங்கி வந்தேன். ரூம் திரும்பும்போது, சுடச்சுட பொன்னி சாதமும் பூண்டுக்குழம்பும், தொட்டுக்கொள்ள முறுக்கும் இருந்தது. கையால் பிசைந்து கைமணக்க வாய்மணக்க உண்டு முடித்து TV யை ஆன் செய்தேன். ஒரு குண்டுப்பெண்ணை ஓடவைத்து, ஆடவைத்து, பட்டினிபோட்டு ஆறுமாதத்தில் 240 பவுண்டு குறைந்து தடி இடையை கொடி இடையாக்கிய சாதனையை காண்பித்தனர். என் மனைவியை உற்றுப்பார்த்தேன், அவள் புரிந்து கொண்டு முறைத்ததில், வேணாம் சாமி என் கொடி  இடை, ஒடி இடையாகிவிட்டால் என்ன செய்வது என்று பயந்து, இழுத்து மூடி திரும்பிப்படுத்தேன். 
ஆகஸ்ட் 7, 2013 புதன் கிழமை
        காலையில் புத்துணர்ச்சியோடு எழுந்து ரெடியாகி "சேன் கிறிஸ்டபல் கோட்டை மற்றும் கேபிடோலியா பார்ப்பதாக இன்றைய திட்டம்", என்றேன். "மறுபடியும் கோட்டையா ஆளைவிடு சாமி" என்று மூவரும் கிட்டத்தட்ட கோரஸாகச் சொல்ல, அவர்களை "லா வெர்டே" என்ற அழகிய கடற்கரைக்கு அழைத்துச் சென்றேன். 

பார்க்கிங் செய்துவிட்டு இறங்குவதற்குள், என் மனைவி இறங்கி ஓடினாள். "ஐயையோ நீ கோட்டைக்கு வரவேண்டாம். அதற்காக, கடலில் குதித்துவிடாதே என்று கத்திக்கொண்டே" பின்னால் ஓடினேன்.
        ஆனால் அவள் ஓடியது ஒரு மாமரத்தை நோக்கி. இலைகளுக்கு நிகராக மாங்காய்கள் இளம்பச்சை நிறத்தில் ஏராளமாகத் தொங்கிக்கொண்டிருந்தன. இடம்பொருள் ஏவல் மறந்து, மகள்கள் கடிந்து கொண்டதையும் சட்டை செய்யாது, துள்ளிக்குதித்து இரண்டு மாங்காய்களை பறித்துவிட்டாள். அவ்வளவு துரித நடவடிக்கையிலும், இளம் பச்சையில் சிவப்போடிய பழுக்கத்துடிக்கும் காய்களை பறித்திருந்தாள். யார்வீட்டு மரமோ? என்ன நினைப்பார்களோ? என்று சிறிதும் கவலைப்படாமல், தன் படுதாவில் ஓரத்தில் துடைத்துவிட்டு ஒரு கடி கடித்தாள். எனக்கும் எச்சில் ஊற, கவனமாக அவள் கையில் இருந்த மற்றொரு காயை வாங்கிக்கடித்தேன். ஆஹா, திருட்டு மாங்காய் இத்தனை ருசியா, என்று நினைத்துக்கொண்டே இன்னொரு கடி கடிக்க காயை வாயில் கொண்டு செல்லும்போது அந்த வீட்டிலிருந்து  யாரோ வெளியில் வருவது போல் அரவம் கேட்க, சட்டென்று கையில் உள்ள காயை கீழெறிந்துவிட்டு, அவள் கையில் உள்ள காயையும் தட்டிவிட்டேன்.வீட்டின் கதவு மெதுவாய்  திறந்தது???????? 

பயணம் தொடரும்>>>>.

நண்பர்கள் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
புதிய ஆண்டிலும் உங்கள் ஆதரவு தொடர வேண்டுகிறேன். 
இந்த புதிய ஆண்டான  2014-ல் கடவுள் உங்களை புதிய ஆசிர்வாதத்தால் நிரப்புவாராக.