Thursday, August 28, 2014

பரதேசி பார்த்த பரதேசி (மறு பதிவு )

          பாலாவின் பரதேசி பல எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியதால், எப்படியாவது தியேட்டர் சென்று பார்த்துவிடுவது என முடிவு செய்தேன். தியேட்டர் போய்ப் பார்ப்பது அவ்வளவு கஷ்டமா? என்று கேட்பது காதில் விழுகிறது . ஆமங்க கொஞ்சம் கஷ்டம்தான். நியூயார்க்கில் தமிழ்ப்படம் தற்சமயம் எங்கும் இல்லை.எனவே ஒரு மணி நேரம்  டிரைவ் செய்து, பக்கத்தில் உள்ள நியூஜெர்சி மாநிலம் சென்றுதான் படம் பார்க்க முடியும்.சுமார் 60 மைல் , நன்றாக படிக்கவும் "மைல் ", கிலோ மீட்டர் அல்ல. சில வேளைகளில் ட்ராபிக்கில் மாட்டினால்  மூன்று மணி நேரம் கூட ஆகிவிடும் .


            பாலாவின் மீது எப்போதும் எனக்கு பாசம் உண்டு. காரணங்கள் இரண்டு

1) அம்மூர் மதுரைக்காரன் 2) எங்க “தி அமெரிக்கன் கல்லூரி” மாணவன். அமெரிக்கன் கல்லூரி கொடுத்த இயக்குநர் மகேந்திரனுக்குப்பின் பேசப்படுபவர்.பாலா இயக்கியதில் பிதாமகன் மற்றும் நான் கடவுள் என்ற இரு படங்கள் எனக்குப்பிடித்தவை.
   

            எதிர்பார்ப்புகளோடு போகாதே என்று மனம் சற்றே எச்சரித்தது. இப்படித்தான், இதற்கு முன்னால், "அவன் இவன்" வந்தபோது, எவன் இவன்? என்று பார்க்கப்போய், நடுவில் தூங்கி  எழுந்த சமயத்தில், அம்மண ஜமீந்தாரைப் பார்த்து அலறி, கண்கள் கோனி ஒரு வாரமா விஷால் மாதிரியே பார்த்துட்டு அலைஞ்சது ஞாபகம் வந்தது. 
ஆனாலும், இது "நம்ம பாலா" படம் என்று மனதைத் தேற்றிக் கொண்டு, பிளான் பண்னேன். அந்தச் சமயத்தில்தான், நண்பன் முத்துராமலிங்கம் (hellotamilcinema .com ) ஃபேஸ்புக் ஸ்டேடசில், "மனப்பிறழ்ச்சி உள்ளவர்கள்தான் இந்தப்படத்தைப் பார்க்கமுடியும்" என்று பயமுறுத்தியதைப்  படிக்கும் போது, எதுக்கும் என் மனைவியையும் அழைத்துச்செல்லலாம் என்று அழைத்தேன். அதோடு நியூஜெர்சி வரை போவதால் துணையாகவும் இருக்கும்.

     அவள் தியேட்டரில் படம் பார்ப்பது அரிது. எப்போதாவது ரஜினி படம் வந்தால் போவாள். அப்போதெல்லாம் சில தமிழ்ப்படங்கள் நியூயார்க்கிலேயே பார்க்கலாம். 

     அவள் சில தோழிகளோடு எந்திரன் சென்றதுதான் கடைசி. அன்று எனக்கு வேறுவேலை இருந்தது. கூட்டத்தில் சிக்க வேண்டாம் என்று நினைத்து ஒரு மூன்று நாட்கள் கழித்துச் சென்றேன். ஜாக்சன் ஹெய்ட்சில் உள்ள, அந்த புராதன தியேட்டர் தூண்கள் சூழ்ந்து, சிதிலமடைந்த அஜந்தா ஓவியங்களுடன் தொல்பொருளாக இருந்தது. ஒரு இலங்கைத்தமிழர் புதிதாக அதனை லீசில் எடுத்து ஒரு தெலுங்குப்படம் மற்றும் எந்திரனை ரிலீஸ் செய்திருந்தார்.டிக்கட் வாங்கும்போது படம் ஆறுமணிக்கென்று சொன்னார்கள். எனக்கு ஆரம்பத்தில் இருந்து வணக்கம் போடும் வரை பார்த்தால்தான் திருப்தி என்பதால் 5.30 மணிக்கு வந்து தனியாக அமர்ந்திருந்தேன். மேலே பார்த்தால் சில இடங்களில் காரையோ எதுவோ பெயர்ந்து இருந்தது, திகிலைக் கூட்டியது. சேஃப்டி ஹெல்மட் வேற தரவில்லை.

     6.30 ஆகியும் படம் போடாததால் வெளியே சென்று விசாரித்தால், படம் போட்டாச்சே, அதோ பக்கத்தில் இருக்கிற சின்ன தியேட்டர் என்றார்கள். சொல்லவேயில்லை என்று முறைத்துவிட்டு, அந்த சிறிய தியேட்டரில் நுழைந்தால் "காதல் அணுக்களை" எண்ணியபடி, ரஜினி தப்புத்தப்பாக கிடாரை தடவிக்கொண்டிருந்தார். நம்பினால் நம்புங்கள். அங்கே ஒருவரும் இல்லை,  ரஜினியும் உலக அழகியும் தவிர. 15 டாலரில் ஒரு பிரத்யேக காட்சி ரஜினிக்குக்கூட கிடைத்திருக்காது. ஆனால் ஒவ்வொரு குளோஸ் அப் காட்சி வரும்போதும் கொஞ்சம் பயமாக இருந்தது, குறிப்பாக ரஜினியின் குளோஸ் அப். பாதிக்கு மேல் ஒரு ஸ்பானிஸ் பையன் வந்து உட்கார்ந்தான். அவனும் சிறிது நேரத்தில் ஒன்றும் புரியாது அல்லது ரஜினியை சகிக்க முடியாமல் வெளியே போய்விட்டான். 
     டிவின் டவர்  உயர கனவுகளோடு தியேட்டர் ஆரம்பித்த, இலங்கைத்தமிழர் ஜீரோகிரவுண்ட்  ஆகி முதல் படமான எந்திரன்  ரிலீஸ்லெயே, நொந்திரன் ஆகி தியேட்டரை மூடிவிட்டதில், நியூயார்க்கில், இப்ப தமிழ்ப்படம் போட எந்த தியேட்டரும் இல்லை. மன்னிச்சுடுங்க எங்கயோ டிராக் மாறிட்டேன்.

     நானும் என் மனைவியும் எங்கள் காரில் கிளம்பி, நியூஜெர்சி மாநிலத்தில் உள்ள எடிசன் என்ற பகுதிக்கு வந்தோம். இந்தியர்கள் அதிகமாக வாழும் அந்தப் பகுதியில் இருந்தது, "பிக் சினிமா" என்ற தியேட்டர் காம்ப்ளக்ஸ். நம்மூர் ரிலையன்ஸ் கம்பெனி இதுபோன்ற செயின் தியேட்டர் காம்ளக்ஸ் -ஐ பல இடங்களில் நடத்துகின்றனர். பிக் சினிமா , ஓக் ட்ரீ ரோடில் இருந்தது .அங்கேதான் நிறைய நகைக்கடைகள் இருப்பது நல்ல வேளை நியாபகம் வர , குறுக்கு வழியில் நுழைந்து , நகைக்கடைகளை தவிர்த்து விட்டு போய்ச்சேர்ந்தேன். தப்பிச்சேன்டா சாமி.

        ஒரே கூட்டமாய் இருந்தது. ஆஹா பரதேசிக்கு நல்ல கூட்டம்னு நினைத்தேன். எந்தப் படம் என்றாலும் டிக்கெட் வாங்க  ஒரே லைன். அப்புறம்தான் தெரிந்தது, அது தெலுங்குலு  படம்லு  பார்க்கலு வந்த கூட்டம்லு.

     டிக்கட் வாங்கி உள்ளே சென்றால் அது "பிக் சினிமா" இல்லை "ஸ்மால் சினிமா" என்று தெரிந்தது, நீளமாக குகை போல இருந்தது. மதுரை மினிப்பிரியா ஞாபகம் வந்தது. ஆனால் அது சூப்பரா, இருக்கும். தட்டையாக இருந்ததால், முன்னால் உட்கார்ந்தவர்களின் தலை மறைத்தது. அதுவும் என் முன்னால் அமர்ந்தவரின் கழுத்து, அதீத நீளமாய், கால்வாசி திரையை மறைத்தது. முன்பிறவியில் ஒட்டகமோ என்னவோ?

     படம் ஆரம்பித்தவுடன் கலரைப்பார்த்துவிட்டு என்னைத் திரும்பிப்பார்த்த என் மனைவி "புதுப்படம்தானே" என்றாள். "புதுப்படம்தான் ஆனால் பழைய படம்", என்றேன். முறைத்துப் பார்த்ததில், அவள் விழிகள் ரெண்டும் இருட்டிலும் பயமுறுத்தியது "புதுப்படம்தான் ஆனால் பழைய கதை, பீரியட் பிலிம்". என்றேன்.

     சூலூர் கிராமம் சுத்தமாகவே இருந்தது. நானும் கிராமத்தான் தான். ஆனால் என்னவோ தெரியல, என்னால அவங்களோட ஒட்ட முடியல. கால்வாசி படம் முடியும்போது, " ஆமா எங்க ஹீரோ? என்றாள் என் மனைவி, "இவந்தான் வட்டுறுப்பி, பேர் ஓட்டுப்பொறுக்கி" என்று காண்பித்த போது, "இவனா, அப்ப ஹீரோயின்", காண்பித்தேன். கலவரமடைந்தாள் என் காதல் மனைவி. டென்சன் ஆகாதிங்க பாஸ், ஒரு ரைமிங்க்கு சொன்னேன். ஒரே மனைவிதான் எனக்கு.

     என் மனைவி எழுந்தாள், என்ன என்று கேட்டதற்கு, ஒன்றுமில்லை, ஏதாவது சாப்பிட வாங்கிட்டு வர்றேன்னு சொன்னா. சரின்னு அனுப்ப, சமூசா வாங்கி வந்தாள். சில நொடிகளில் திரும்ப எழுந்தாள். என்ன என்றதற்கு, "சனியன் சமூசாவும் நல்லாயில்ல", என்று எழுந்து குப்பையில் போட்டு வந்தாள்.  என் மனைவி மட்டுமல்ல, அங்கு பலபேர் ரெஸ்ட்லஸ் ஆகி, வெளியே போவதும் உள்ளே வருவதுமாக இருந்தனர். சிலர் திரும்பி வரவேயில்லை .

     “வா வீட்டுக்குப் போகலாம்” என்றவளை, நான் தான் கொஞ்சம் கெஞ்சி, கூத்தாடி உட்கார வைத்தேன். உங்களுக்குத் தெரியும்ல, எனக்கு எளகின மனசு. ஏதாவது சோகக்காட்சிகள் வந்தா அழுதுருவேன்.  ஆனால் என்னவோ தெரியல, சோகத்தை பிழியும் எந்தக் காட்சி வந்தாலும் அது எரிச்சலைத்தான் கூட்டியது.

     பாட்டு ஒவ்வொன்னும் நல்லா  இருந்துச்சு, ஆனா தனியாக கேட்டபோது. படத்தோடு ஒன்னுகூட ஒட்டல. அட இந்த, பேக்ரவுண்டு மியூசிக்கும் சுத்தமா ஒட்டவேயில்லை என்னாச்சு பாலாவுக்கு?. அந்த பரிசுத்தம் கேரக்டர், வெள்ளைக்கார மனைவியோட குத்தாட்டம் எல்லாம் ரொம்பவே ஓவர். வாழ்க்கையை வாழ்றதுக்கு ஒரு நம்பிக்கை ஒளின்றது படத்துல சுத்தமா இல்லை. 
     இன்னொரு விஷயம் எந்த இடத்திலும் எதார்த்தமே இல்லை. கொடூர ராட்சத உலகத்தில வாழவே வேண்டாம் செத்தொழின்னு சொல்லுறது படம். அடக்கொடுமையே.

     என் மனைவி பொறுத்து பொறுத்துப் பார்த்து தள்ளுங்கன்னு சொல்லிட்டு வெளியே போயிட்டா. நல்லவேளை கார் சாவி என்டயிருந்துசு. படம் முடிஞ்சி, வெளியே வந்த தமிழ் மூஞ்ச்சிகள் எல்லாம் நீளமாகி பாக்கச் சகிக்கல. சோகத்தில இல்லை ,வெறுப்பில.ஒரு நல்ல வீக்கென்ட் தொலைந்துபோன வெறுப்பு.

     வெளியே என் மனைவி ஐஸ்கீரீம் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். சூடான மூடை குளிரவைக்கிறாள் என்று நினைத்தேன். ஆனாலும் என்னைப் பார்த்து முறைத்தாள். 
 56 மார்க் போட்ட ஆனந்தவிகடன் மேல் ஆத்திர ஆத்திரமாய் வந்தது. சாரு நிவேதிதா(http://charuonline.com/blog/?p=258),முத்துராமலிங்கம் http://hellotamilcinema.com/index.php?option=com_content&view=article&id=1611:bala-paradesi-review-hot-review&catid=79:space&Itemid=422) மற்றும் முருகவேள் (http://charuonline.com/blog/?p=271) எழுதிய விமர்சனங்கள் முற்றிலும் சரி. முருகவேள் தான் , மூல நாவலான "ரெட் டி" ஐ தமிழில் மொழி பெயர்த்தவர். இவ்வளவு கொடூர  சோகத்துல எனக்கு ரொம்பப்பிடித்த எழுத்தாளர் நாஞ்சில் நாடனும் காணாப்போயிட்டார்.

     என்னத்தைச் சொல்றது, என் மனைவி வழக்கத்துக்குமாறா பின்னாடி உட்கார்ந்து தூங்கிப்போக, வெரஜோனா  பாலத்தில் டிராஃபிக்ல மாட்டி, வீடு வந்து சேரும்போது, நடுராத்திரி தாண்டிருச்சு. நியாயமாரேன்னு எழுப்பினா , ஆமா வெளக்குமாரேன்னு சொல்லிட்டு உள்ளே போயிட்டா என் பாரியாள் .

     மூடை மாத்த சிரிப்பு டிவியைப் போட்டாலும், ஒன்னும் முடியாமல் அவஸ்தையாகி, அப்புறம் எப்ப தூங்கினேன்னு எனக்கே தெரியல.

     பரதேசி படத்தாலே நடந்த ஒரே நல்லவிஷயம் ஒரு நாலு நாள், என் மனைவி என்ட்ட பேசல நியாயமாரே.

Monday, August 25, 2014

இஸ்தான்புல்லில் பரதேசி 15 - ஜெர்மனியின் செந்தேன் மலரே !!!!!!!


ஏப்ரல் 27 திங்கள்கிழமை
காலையில் எழுந்து வழக்கம்போல் பிரேக் ஃபாஸ்ட் முடித்து வெளியே வந்து உட்கார்ந்தேன். எட்டு மணியளவில் டூர்கம்பெனி டிரைவர் வந்து பிக்கப் செய்தார்.  வழியில் ஒரு ஜெர்மன் குழுவை ஏற்றிக் கொண்டு சென்றோம். ஆங்கிலம் தெரியவில்லை.  ஏழுபேருடன் ஒரே ஒரு நீலக்கண் தேவதை. நீ.தே வைப் பார்த்து 'ஹாய்' என்று சொல்லிவிட்டு அவர்கள் எல்லோரையும் பார்த்து மையமாக 'ஹாய்' என்றேன். 'ஹாய்' என்று பதில் சொன்னது இருக்கிறதிலேயே வயதான ஒரு பாட்டி.(பரதேசிக்கு இதெல்லாம் தேவையா ?) அதன்பின் அவர்களுக்குள் ஜெர்மன் மொழியில் என்னைப் பார்த்து கதைத்தனர். எங்கிருந்து வருகிறாய்? என்று என்னை ஓட்டை இங்கிலிஸில் கேட்டது அந்த வயதான பாட்டியின் கணவனாக இருக்க வாய்ப்பிருக்கும் தாத்தா. "நியூயார்க் என்றதும், நீ.தே வுக்கு புருவங்கள் உயர்ந்தன. "சொந்த நாடு இந்தியா இப்போது வாழ்வது நியூயார்க்கில்" என்றதும் புருவங்கள் தாழ்ந்தன.
அதன்பின் அவர்களிடமிருந்து கேள்வியுமில்லை பதிலுமில்லை.சிட்டுவேஷன் பாட்டாக "ஜெர்மனியின் செந்தேன் மலரே" பாடலை முணுமுணுத்தேன்.
"ஐயாம் யுர் கைட்" என்று அறிமுகப்படுத்தினான் ஒரு குள்ளப் பையன். பெயர் ஓஸ் (OZ) என்றான். சனியன்று வந்தவன் உர்ஸ், இப்போது வந்திருப்பவன் ஓஸ். என்ன பெயர்களோ உஸ் தஸ் புஸ்ஸீன்னு. உர்ஸ் போல உம்மென்று இல்லாமல்  ஓஸ் கொஞ்சம் சிரித்தமுகம். ஆனால் இந்தத் தடவை குடையைக் காணோம்.   
முதல் ஸ்டாப் கேம்லிகா ஹில் (Camlica Hill) வண்டி சுமார் ஒரு மணி நேரம் சென்றபிறகு பாண்டி பஜார் வந்தது. ஆமாம் அச்சு அசலாய் பாண்டி பஜார் போலவே இருமருங்கிலும் கடைகள் இருந்தது. இது இஸ்தான்புல்லில் ஐரோப்பியப் பகுதி என்றான் ஓஸ். கடந்து சென்று மலையேறினோம்.

பசுமையான சிகரத்தின் மேல் வேன் ஏறியது. சுற்றிலும் பசுமைக் கம்பளம் மூடிய மலை முகடுகள் இருந்தன. இருண்ட மேகங்கள் முகடுகளை தொட்டுக் கொண்டு இருந்தன. லேசாக சாரல் அடித்தது. அருகில் நீ.தே வேறு. இலேசாக கவிதை பாட மனசு துடித்தது.
          திரண்ட மேகங்கள்
          இருண்ட முகடுகள்,
          மிரண்ட நீல விழிகள் அதைப் பார்த்து
          உருண்ட என் கண்கள்,
         வரண்ட பூமியில் வளமான சாரல் ...

அந்த விபரீத ஆசையை அடக்கும் வகையில் சாரல் தூரலாகி , தூரல் பெரிய மழையாக மாறி கொட்டோ கொட்டென்று பெய்ய ஆரம்பித்தது.  
ஓரங்கட்டிய வேனிலிருந்து இறங்கச் சொன்ன போது, ஜெர்மன் குழு ஆளாளுக்கு ஒரு குடையை விரித்து இறங்கினர். நீ.தே மட்டும் குடையைத் தவிர்த்து நனைந்து கொண்டே போனது. ஓஸிடம் உன் குடை எங்கே? என்றேன். "கொண்டு வரவில்லை", என்றான். சும்மாவே குடை எடுத்து வரும் இந்த கைடுகள் இன்னிக்கு பார்த்து எடுத்துவரவில்லை, சொல்லிவிட்டு இறங்கி ஓடினான். வேறு வழியின்றி நானும் இறங்கி ஓடி தொப்பலாக நனைந்து கோழி போல் சிலிர்த்துக் கொண்டு கட்டிடத்தின் உள்ளே நுழைந்தேன். அது ஒரு ரெஸ்டாரண்ட். ஏற்கனவே அடங்காத என் முடி இப்போது முள்ளம்பன்றி போல் குத்திட்டு நின்றது. ஆனா எதிரில் நீ.தே. நீர்த்தாரைகள் வழிய தகத்தக என்று மின்னியது.
ஜெர்மன் குழு தனியாக அமர்ந்து அரட்டையை ஆரம்பிக்க நான் "தனியே தன்னந்தனியே" உட்கார்ந்தேன். ஒரு சிறிய ஸ்டூலின் மேல் மாபெரிய தாம்பாளத்தட்டு இருந்தது. அதன் பின்னால் இருந்த கெளச்சில் உட்கார்ந்தேன்.   
My Guide OZ

என்னைத் தனியாகப் பார்த்த ஓஸ் என்னருகில் வந்து உட்கார்ந்தான். ஓஸும் ஒண்ணும் வேண்டாம் எனச் சொல்லிவிட, இரண்டு ஆப்பிள் டீ ஆர்டர் செய்தேன். நனைந்த உடலுக்கு ஆப்பிள் டீ இதமாக இருந்தது.
"இந்தக் குன்றைப்பற்றி கொஞ்சம் சொல்லு",என்றேன் ஓஸிடம்.
இஸ்தான்புல்லில் இரண்டு கேம்லிக்கா குன்றுகள் இருப்பதாகவும், இதுதான் அவற்றுள் பெரியது எனவே இது "பிக் கேம்லிக்கா ஹில்", என்று அழைக்கப்படுகிறது என்றான். இந்தப் பகுதியின் பெயர் "உஸ்குடர்" (USKUDAR) என்றான். இது கடல் மட்டத்திலிருந்து சுமார் 270 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இதிலே 18 ரேடியோ மற்றும் தொலைக்காட்சி டவர்கள் உள்ளன. சுற்றிலும் மரங்கள் சூழ்ந்த இந்தப்பகுதி இஸ்தான்புல்லின் முக்கிய பிக்னிக் ஸ்பாட்  என்றும் சொன்னான். இதன் அழகைப்பார்க்க உலகம் முழுவதிலுமிருந்த நிறைய டூரிஸ்ட் வருவதாகச் சொல்லி, "உங்களைப் போல" என்று புன்னகைத்தான். இந்த மலையைப் பற்றி நிறைய கவிதைகளும் பாட்டுகளும் இருப்பதாகவும் சொன்னான். அந்த ரெஸ்டாரண்ட் அரசாங்கமே நடத்துகிறது என்றான்.
ஆனால் அதன் அழகை முற்றிலும் பார்க்க முடியாதபடி மழை சோவென்று கொட்டியது. ஆனால் அதுவும் ஒரு அழகுதான்.
மழை நிற்கிற மாதிரி தெரியவில்லை. ஜெர்மன் குழு பிரேக்ஃபாஸ்ட்டை முடித்துவிட்டு ஏப்பம்விட்டு எழுந்தனர். சரி கிளம்பிவிடலாம் என்று ஓஸ் சொல்லி மறுபடியும் நனைந்து கொண்டே வேனுக்குத்திரும்பினோம்.
அடுத்து எங்கே? என்று கேட்டேன். டிரைவரிடம் கேட்டுவிட்டு, மழை நிற்காமல் பெய்வதால் அரண்மனைக்கு போய்விடலாம் என்றான் ஓஸ்.
என்னாது மறுபடியும் முதல்லே இருந்தா? என்ற கேள்வியுடன் "டொப்கப்பியும் பாத்தாச்சு டால்மபாசேவும் பாத்தாச்சு" என்றேன். இல்லை இல்லை. இது "பெய்லர்பேயி அரண்மனை" (Beylerbeyi Palace) என்றான். இது யாரோட அரண்மனை என்று கேட்டதற்கு, அவன் தொண்டையைச் செருமி சொன்ன தகவல்களை இங்கு தருகிறேன்.
பெய்லர்பேயி அரண்மனை:

பெய்லர்பேயி என்றால் அரசருக்கு அரசன் என்று அர்த்தமாம். சுல்தான் அப்துல் அஜிஸ் (1830-1876) அவர்களால் கட்ட உத்தரவிடப்பட்ட இந்த அரண்மனை 1861ல்  ஆரம்பித்து 1865-ல் கட்டி முடிக்கப்பட்டது. 
Sulthan Abdul Aziz
சுல்தானின் அரச குடும்பத்திற்கு இது கோடை வாசஸ்தலமாக விளங்கியதாம். 1869ல் சூயஸ் கால்வாயைத் திறக்க வந்த பிரெஞ்சுப் பேரரசி யூஜினி இந்த அரண்மனைக்கு விஜயம் செய்தாராம். பேரரசியின் அழகில் மற்றவர் சொக்கி நிற்க, அவர் அரண்மனையின் அழகில் சொக்கினாராம். 
Beylerbeyi Palace / Beylerbeyi - Istanbul photo beylerbeyi108.jpg
குறிப்பாக தான் தங்கியிருந்த அறையின் ஜன்னல் வேலைப்பாட்டில் மயங்கி, பாரிசில் இருக்கும்  தன்னுடைய டியூலெரஸ் (Tuileries Palace) அரண்மனையின் ஒரு ஜன்னலை அதே மாதிரி வடிவமைக்க உத்தரவிட்டாராம். இவர்தான் சுல்தானின் அம்மாவிடம் அறை வாங்கியவர் என ஏற்கனவே சொன்னது ஞாபகம் இருக்குமென நினைக்கிறேன். வின்ட்சன் ட்யூக் மற்றும் டச்சஸ் அவர்களும் இங்கு வந்தனராம்.

பதவி நீக்கம் செய்யப்பட்ட சுல்தான் அப்துல் ஹமீது II 1912லிருந்து அவர் இறந்து போன வருடமான 1918 வரை இங்குதான் சிறைவைக்கப்பட்டிருந்தார்.
அரண்மனைக்கு முன்னர் இருபுறமும் குளிக்கும் பகுதிகள் இருந்தன. பெண்களுக்கும் ஆண்களுக்கும் தனித்தனியாக.உள்ளே நுழைந்தால் முன் ஹாலே நீருற்றுடனும், சிறிய நீச்சல் குளத்தோடும் இருந்து பிரமிப்பூட்டியது.
Beylerbeyi Palace / Beylerbeyi - Istanbul
ஆட்டமன் பேரரசின் எல்லா அரண்மனைகளிலும் உள்ளே ஆங்காங்கே சிறிய நீர்த்தடத்தில் தண்ணீர்  ஓடுவது போல் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. அதற்கு இரண்டு காரணம் ஒன்று தண்ணீர் ஓடுவதால் அந்த இடம் குளிர்ச்சியாக இருக்கும். இரண்டாவது சலசலத்து ஓடும் சத்தம் காதுக்கு இனிமையாக இருக்கும்.
எகிப்து நாட்டின் கோரைப்புற்களால் செய்யப்பட்ட பாய்கள் தரைமுழுதும் விரிக்கப்பட்டு அதற்கு மேல் கார்ப்பெட்டுகள் போடப்பட்டனவாம்.
இங்கும் ஏராளமான கிறிஸ்டல் சர விளக்குகள் தொங்கின.
மற்ற பகுதிகள் நாம் ஏற்கனவே பார்த்த மாதிரி இருந்தாலும் பெருமூச்சு வருவதை தடுக்கமுடியவில்லை. சுல்தான்களைப் பற்றி யோசித்துக் கொண்டே வந்து வேனில் ஏறி உட்கார்ந்தபோது நீ.தே அதாங்க பாஸ் ,நீலக்கண் தேவதை மிதந்து வந்து என் அருகில் வந்து உட்கார்ந்தது.


தொடரும் >>>>>>>>>>>>>

Thursday, August 21, 2014

இந்திராகாந்தி ஒரு திருநம்பியா ?


நண்பர்களே உள்ளே போவதற்குள் ஒரு முன்னறிவிப்பு. இது நமது முன்னாள் பாரதப் பிரதமர் இந்திராகாந்தி அவர்களைப்பற்றிய பதிவு அல்ல.
ஆம், அவள் பெயரும் இந்திராகாந்திதான். நான் ஏழாவது படிக்கும் போது எட்டாம் வகுப்பில் என்னுடைய அப்பாவிடம் படித்த பெண்.  இந்திராகாந்தியிடம் ஒரு தனித்தன்மை இருந்ததை என்னால் கொஞ்சம் லேட்டாகத்தான் உணர முடிந்தது. நல்ல சிவப்பாக உயரமாக இருப்பாள். அவளுடைய நடை உடை பாவனைகளில் சற்றே வித்தியாசம் இருந்தது. நன்கு எண்ணெய் தேய்த்து வாரியிருந்தாலும் அடங்காத செம்பட்டை முடி. கைகளிலும் கால்களிலும் அதே தங்க முடிகள். உதட்டின் மேலே அரும்பும் பூனை முடிகள்.அவளுடைய தலைமைக்குணத்தைக் கவனித்த என் அப்பா அவளை "இந்திராகாந்தி அணிக்கு" தலைவியாக்கியதோடு, வகுப்பு முழுவதற்கும் தலைவியாக்கினார். அது நடுநிலைப்பள்ளி என்பதால் எட்டாம் வகுப்புத்தலைவி என்றால் பள்ளி முழுவதற்கும் தலைவிதான்.
வகுப்புப் பெண்கள் மட்டுமல்லாமல், பள்ளியில் படிக்கும் எல்லாப் பெண்களும் அவர்களுக்கு ஏதாவது பிரச்சனை, பையன்களால் தொல்லை என்றால் இந்திராகாந்தியிடம்தான் சொல்வார்கள். இந்திராகாந்தி வந்து சிவந்த முகத்துடன் கையை முறுக்கினால், பணியாத பையன்களே இல்லை. அவளுக்கு அதீத பலம். பல சமயங்களில் பையன்களுக்கும் உதவுவாள்.  
எல்லா ஆண்களிடம் சிறிதளவு பெண்மையும், எல்லாப் பெண்களிடமும் சிறிதளவு ஆண்மைத்தனமும் இருக்கும் என்பதை படித்திருக்கிறேன். ஆனால் இந்திராகாந்தியிடம் சற்றே இல்லை, ரொம்பவே ஆண்மைத்தனம் இருந்ததை நான் உணர்ந்து கொண்டேன். ஆனால் யாரிடமும் சொல்லவில்லை.
ஆனால் பள்ளி முழுதும் ஒரு புரளி உண்டு, அவள் இன்னும் வயசுக்கு வரவில்லை என்று. அதைப்பற்றி அப்போது எனக்கு ஒன்றும்  தெரியாதலால் அது எனக்குப் பெரிதாகத் தெரியவில்லை.
என் வகுப்புக்கு அடிக்கடி வந்து என்னிடம் பேசிக் கொண்டிருப்பாள். அவள் ஒவ்வொரு தடவையும் சொல்வது "சேகர் எவனாவது உனக்கு பிரச்சனை பண்ணா சொல்லு, மென்னியைத் திருகிர்றேன்", என்று. "சரிக்கா", என்பேன். என் நண்பர்கள் எல்லாம் சொன்னார்கள், “டேய் இந்திராகாந்தி ஏன்டா ஒன்ட்ட வந்து பேசுது, வேண்டாம்டா அது ரொம்ப மோசம்டா", என்றார்கள். என்னடா மோசம்னு கேட்டா ஒன்னும் சொல்லமாட்டாய்ங்க, சொல்லவும் தெரியாது. எனக்கே சில நேரங்களில் அவளைப் பார்க்க பயமாயிருக்கும். அவளுக்கு கோபம் வரும்போது மூக்கு விடைத்து, முகம் சிவந்து நாக்கைத் துருத்தினால் ஆம்பளை மாறியே தெரியும்.
அர்த்த நாரி 
என் வகுப்பில் காமுத்தாய் என்ற பெண் உண்டு. மாநிறமாக, நல்ல களையாய் அம்சமாய் இருப்பாள். என் தெருவில்தான் அவளும் குடியிருந்தாள். இந்திராகாந்தி காமுத்தாயைப் பற்றி அடிக்கடி என்னிடம் விசாரித்தது எனக்கு முதலில் வித்தியாசமாய்த் தெரியவில்லை. சிலசமயம் நான் சொல்வேன், "என்ட்ட ஏன்  கேக்கிற, நீயே கேட்டுக்க வேண்டியதுதானே?", என்று. ஒரு, முறை முறைத்துவிட்டுப் போய்விடுவாள்.
அப்புறம் நான் எட்டாவது போக, அவள் 9ஆவதற்கு தேவதானப்பட்டி அரசினர் உயர்நிலைப்பள்ளிக்கு போனாள். சில சமயங்களில் எதற்காவது எங்கள் பள்ளிக்கு வருவாள். ஒரு தடவை ஞாயிற்றுக்கிழமை  மதியம் என் வீட்டுக்கு வந்தாள். கொஞ்ச நேரம் பேசிட்டு, காமுத்தாயை பார்க்கணும்னு சொன்னா. நான் எதுக்குன்னு கேட்டேன். அந்தக் கேள்வியை அவள் எதிர்பார்க்கல. கொஞ்சம் தடுமாறிட்டு, இல்ல சும்மாத்தான் என்றாள்.
எனக்கு அந்த வயசில ஒண்ணும் புரியல. வகுப்பில எத்தனையோ பேர் இருந்தாலும், இவள் காமுத்தாயை வந்து பார்ப்பதும், அவளைப்பற்றி விசாரிப்பதும், வீடுவரை வருவதும் ஒரே புதிராக இருந்தது. எங்க வீட்டுக்கு அப்படி பலமுறை வந்தாள். வந்த போதெல்லாம் அவளுடைய அண்ணன் இல்ல, அவங்கப்பாவோட சட்டையைப் போட்டுக்கிட்டு வருவாள். ரொம்ப வித்தியாசமா இருக்கும்.
அப்புறம் நான் 8-ஆவது பாஸ் பண்ணி நானும் அரசினர் உயர்நிலைப்பள்ளியில் 9-ஆவது போய்ச் சேர்ந்தேன். அப்ப இந்திராகாந்திட்ட பழைய புத்தகம் வாங்க அவள் வீட்டுக்குப் போனேன். இந்திராகாந்தி அப்ப வேஷ்டி கட்டி அவங்க அண்ணன் சட்டையைப் போட்டிருந்தா. அவங்கம்மா என்ட்ட சொன்னங்க, "பாருப்பா இவ சொல்றதைக் கேட்க மாட்டேங்குரா, வீட்டில எப்பவும் அவங்க அண்ணன் சட்டை, பேண்ட் இல்ல வேஷ்டி தான் கட்டுறா. அவளுக்கும் வாங்கித்தர சொல்றா நீயாவது கொஞ்சம்  சொல்லு", என்றார்கள்.
9-ஆவது வகுப்புல காமுத்தாயும் என்கூட வந்து சேர்ந்தாள். அதனால இன்டர்வல்ல இந்திராகாந்தி என் வகுப்புக்கு வந்திருவா. காமுத்தாய்ட்ட ரொம்ப நெருக்கமா உட்கார்ந்து, கையைப்பிடிச்சுக்கிட்டு கதை பேசுவா. அவளுக்கு ஏதாவது திண்பண்டம் வாங்கிட்டு வருவா. ஒரு தடவை காமுத்தாயை, முத்தலீப் ஏதோ கிண்டல் பண்ணிட்டான்னு தெரிஞ்சி, ஆம்பளை மாதிரி அவனோட மல்லுக்கட்டினா. முத்தலீப் நெஞ்சுமேல ஏறி உட்கார்ந்து அவனை குத்து குத்துன்னு குத்திட்டா. அப்புறம் அது HM வரைக்கு போயிருச்சு.
ஒருநாள் காமுத்தாய்ட்ட கேட்டேன், "என்னா இந்திராகாந்தி உன்ட்ட மட்டும் இவ்வளவு பாசமா, அதுக்கு மேல வெறியா இருக்காளே".
காமுத்தாய் சொன்னா, "நானும் முதல்ல நட்புன்னு நெனைச்சேன். இவ வரவர ரொம்ப ஓவரா பண்றா, எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல”.
ஒரு தடவை இன்டர்வல்ல நான் வரும்போது, இந்திராகாந்தி காமுத்தாய் கன்னத்துல முத்தம் கொடுக்கிறத பாத்துட்டேன். அதுக்குள்ள விஷயம் அரசல் புரசலா வெளியே தெரிந்து எல்லோரும் பேச ஆரம்பிச்சுட்டாங்க.
ஒரு நாள் காலைல காமுத்தாய் வகுப்புல அழுதுட்டு இருந்தா, என்னன்னு கேட்டேன். அவ ஒண்ணுமே சொல்லல. முத்தலீப் தான், என்னைக் கூப்பிட்டுப்போய் காமிச்சான். பள்ளிக்கூடத்தின் பின்புறச் செவுத்துல, ரெண்டு பொண்ணு படம் போட்டு காமுத்தாய் இந்திராகாந்தி காதல்னு போட்டிருந்துச்சு. எனக்கு இந்த முத்தலீப் பய மேலதான் சந்தேகம். சீச்சீ அப்படியெல்லாம் இருக்காதுன்னு நெனைச்சேன். ஒரு பொண்ணும் பொண்ணும்... எப்படி காதல் பண்ண முடியும் ?.
அப்புறம் காமுத்தாய் வகுப்புக்கு வரல. அவளுக்கு கல்யாணம்னு சொன்னாங்க. அவ கல்யாணத்துக்கு நாங்க நிறையப்பேர் போயிருந்தோம். இந்திராகாந்தி வரவேயில்லை. என்னடாது இவ்வளவு நெருங்கிய சிநேகிதி வரலேன்னு நினைச்சேன்.
அடுத்த நாள் பள்ளிக்கு போனா பள்ளிக் கூடம் லீவுன்னு சொன்னாங்க. முத்தலிப் தான் ஓடி வந்து சொன்னான், இந்திராகாந்தி தற்கொலை பண்ணிக்கிச்சாம்.

முற்றும்  Monday, August 18, 2014

இஸ்தான்புல்லில் பரதேசி: பகுதி 14 :கடைசி சுல்தான் !!!!!!!!!


ரொம்ப நேரம் உற்றுப்பார்த்தால் ஆவி ஏதாவது வந்து விடுமோ என்று பயந்து ஆட்ட துர்க் முஸ்தபா கமால் அவர்கள் தங்கியிருந்த ரூமை விட்டு நகர்ந்தேன். மேலும் பல அறைகள் இருந்தன. உப்பரிகை மேலே செல்லும் போது கைட் சொன்னான். இந்த இடைவெளிகள் மூலம்தான் கீழே நடக்கிற பொது நிகழ்ச்சிகளை அரண்மனைப் பெண்கள் கண்டு களிப்பார்கள் என்று. உயரத்தில் ஸ்டெயின் கிளாஸ்களில் உருவாக்கப்பட்ட ஜன்னல்கள் இருந்தன. மேலிருந்து அவர்கள் கீழே நிகழ்ச்சிகள் நடைபெறுவதைப் பார்க்கலாம். அதே சமயத்தில் கீழிருந்து அவர்கள் யாரையும் எவரும் பார்க்க முடியாது.  
அந்தப்புறத்தைப் பார்த்து முடித்து வெளியே வந்தேன். அரண்மனை வளாகத்தில் சுல்தான் காலத்தில் பல அலுவலகங்கள் இருந்தனவாம். வலதுபுற ஓரத்தில் ஒரு கட்டடத்தில் சுல்தான்கள் பயன்படுத்திய பலவிதமான பெரிய சிறிய கடிகாரங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. ஆதி காலத்திலிருந்து அவர்கள் பயன்படுத்திய சுவர்க்கடிகாரங்கள், தரைக்கடிகாரங்கள், மேஜை மீது வைத்துக்கொள்ளும் வகைகள் என நூற்றுக்கணக்கில் இருந்து ஆச்சரியமூட்டின. 
அந்தப்பகுதியைவிட்டு வெளியே வந்தால் இருபுறமும் நர்சரிப்பூங்காக்கள் இருந்தன. அதனைத்தாண்டி வந்தால் வலதுபுற மூலையில் ஒரு சிறிய மிருகக்காட்சி சாலை இருந்தது. அவற்றில் சில அரிய பறவைகள், பஞ்சவர்ணக்கிளி, மயில்கள் ஆகியவை இருந்தன. அதிலும் வெள்ளை மயில் ஒன்று மிக அழகாக தோகை விரித்து நின்று கொண்டிருந்தது .வெளியே கோழிகள் தம் குஞ்சுகளுடன் மேய்ந்து திரிந்தன. மறுபுறத்தில் ஆடுகள், மான்கள் போன்ற சில மிருகங்கள் இருந்தன.
அதன் அருகிலேயே பாஸ்பரஸ் இருந்தது. பெரும் படகுகள் போவதும் வருவதுமாக இருந்தன. டூரிஸ்ட் மக்கள் அதிகமாக காணப்பட்டனர். ஆண்டுதோறும் இங்கு வரும் டூரிஸ்ட்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறதாம்.


இஸ்தான்புல் பெருநகர்
Istanbul City
 முதலில் பைஜாண்டின் மற்றும் கான்ஸ்டான்டிநோபில் என்று அழைக்கப்பட்ட இந்த ஊர்தான் இப்போது இஸ்தான்புல் என்று அழைக்கப்படுகிறது.ஐரோப்பாவின் கலாச்சாரத்தலைநகர் என்று அழைக்கப்படும் இஸ்தான்புல் உலகிலேயே புகழ் பெற்ற இடங்களில் ஐந்தாவது இடம் வகிக்கிறது. கீழே கொடுக்கப்பட்டிருக்கும் நான்கு பேரரசுகளுக்குத் தலைநகராய் விளங்கிய ஊர் இது.  
·         ரோமப்பேரரசு (330-395)
·         பைஜாண்டின் பேரரசு (395-1204: 1261-1453)
·         இலத்தீன் பேரரசு (1204-1261)
·         ஆட்டமன் பேரரசு (1453-1922)
துருக்கி நாட்டிலேயே மிகப்பெரிய நகரமாக விளங்கும், இம்மாநகரில் மொத்தம் 15 மில்லியன் மக்கள் வசிக்கின்றனர். அதற்கு இணையான அளவு டூரிட்ஸ்களும் ஒவ்வொரு வருடமும் வந்து செல்கின்றனர். 2012ல் மட்டும் 11.6 மில்லியன் மக்கள் இங்கு வந்து சென்றிருக்கின்றனர்.   
ஆட்டமன் பேரரசு பலநாடுகளை அடக்கியதாக இருந்ததால், பல நாட்டிலிருந்தும் மக்கள் வந்து இங்கு குடியேறினார்கள்.  ஒரேவிதமான மக்களைப் பார்க்கமுடியவில்லை. நியூயார்க் போல விதவிதமான மக்கள் இங்கு வாழ்கிறார்கள். இனத்தால் நிறத்தால் மதத்தால் இவர்கள் வேறுபட்டிருந்தாலும் மொழியால் ஒன்றுபட்டு இருக்கிறார்கள்.
முஸ்லீம்கள் அதிகபட்சமாக வாழ்ந்தாலும், கிறிஸ்தவர்களும், யூதர்களும் நிறைய இருக்கிறார்கள். எந்தவிதப்பாகுபாடும் வேறுபாடும் இல்லாமல் ஒற்றுமையாக இருக்கிறார்கள்.  
கடைசி சுல்தான்
Mehmed VI
லாஸ்ட் எம்பரர் மாதிரி மெஹ்மது VI என்பவர் லாஸ்ட் சுல்தான். இவரைப்பற்றி கொஞ்சம் தெரிந்து கொண்டு இந்த நாளை முடித்துவிடலாம் என நினைக்கிறேன். மெஹ்மது வாஹித்தீன் VI  என்பவர் ஆட்டமன் பேரரசின் 36ஆவது மற்றும் கடைசி சுல்தான் ஆவார். டால்மபாசே அரண்மனையில் இவர் பிறந்தது 1861ல். இவர் மெஹ்மது V -ன் தம்பி, பட்டத்து இளவரசனான யூசுஃப் இஜட்டின் எஃபன்டி தற்கொலை செய்து  கொண்டபின், ஒஸ்மான் தலைமுறையின் மூத்த உறுப்பினர் என்ற முறையில் ஒஸ்மான் வாளைப் பெற்றுக் கொண்டு 36ஆவது பாதுஷாவாக 1918ல் முடிசூட்டப்பட்டார். சுல்தான் அப்துல் மசீது I அவர்களின் இளைய புத்திரர் இவர்.
பாவம் இவர் பதவிக்கு வந்ததில் இருந்து பெரும் குழப்பம். இதற்கிடையில் முதலாம் உலகப்போர் வேறு வந்தது.
முதலாவது உலகப்போர் ஆட்டமன் பேரரசுக்கு மரண அடியாக அமைந்தது. பிரிட்டன் தலைமையில் இருந்த நேசநாடுகள், பாக்தாத், டமஸ்கஸ், ஜெருசலேம் ஆகிய பகுதிகளை பிடித்துக் கொண்டு தங்களுக்குள் பங்கிட்டுக் கொண்டனர். ஏப்ரல் 1920ல் நடந்த சேன் ரெமோ ஒப்பந்தத்தின்படி ஃப்ரான்ஸ் சிரியாவை எடுத்துக் கொண்டது. பிரிட்டன் பாலஸ்தீனா மற்றும் மெசபடோமியாவை  எடுத்துக்கொண்டது.
மெஹ்மதுவுக்கு வேறு ஒன்றும் வழி இல்லாததால் தன்னுடைய பிரதிநிதிகளை அனுப்பி மேலும் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதால் அனடோலியா மற்றும் இஜ்மிரையும் இழந்தார்கள்.
அப்போதுதான் கொதித்தெழுந்த முஸ்தபா கமால் ஏப்ரல் 1920ல் துருக்கியை குடியரசாக பிரகடனம் செய்து சுல்தான் மெஹ்மதுவை பதவியைவிட்டு நீக்கினார். அதோடு நவம்பர் 1922ல் ஆட்டமன் சுல்தான்களின் அரசவையை முற்றிலுமாக ஒழித்துக்கட்டினார். 
Departure of Mehmed VI, the last Ottoman sultan.
அதே மாதத்தில் சுல்தானும் அவரது குடும்பமும் நாடுகடத்தப்பட்டார்கள். மலாயா என்ற பிரிட்டிஷ் போர்க்கப்பல் நவம்பர் 17ஆம் தேதி அவரை ஏற்றிக்கொண்டு மால்டா சென்றது. அதன்பின்னர் இவர் இத்தாலிய ரிவிபேராவில் வாழ்ந்தார்.
British Ship Malaya 


நொந்த நிலையிலேயே வாழ்ந்த அவர் மே 1926ல் தன்னுடைய 65ஆவது வயதில் இத்தாலியில் உள்ள சென்ரெமா என்ற இடத்தில் இறந்தார். அவருடைய உடல் தமஸ்கஸில் உள்ள சுல்தான் சுலைமானின் தர்ஹாலில் அடக்கம் செய்யப்பட்டது. அதோடு அறநூறு வருடங்கள் பல நாடுகளை உள்ளடக்கி ஆண்ட ஆட்டமன் பேரரசு மறைந்தது. அதனை யோசித்துக்கொண்டே ரூமுக்கு சென்று படுத்தேன்.  

தொடரும்