Monday, April 15, 2019

மீன் கதை !!!!


Image result for ஜிலேபி கெண்டை
வேர்களைத்தேடி பகுதி 39
இதற்கு முந்திய பகுதியைப்படிக்க  இங்கே சொடுக்கவும். 
            எங்கள் ஊரான தேவதானப்பட்டியில் அப்போதெல்லாம் கோழிக்கடை இருக்காது. விவசாயம் சார்ந்த ஊரானதால் பல வீடுகளிலும் கோழி வளர்ப்பார்கள்.  வான் கோழியும் வளர்ப்பார்கள். எனவே தேவைப்பட்டால் சேவலையோ விடைக்கோழியையோ அறுத்து சமைத்து விடுவார்கள். எனவே தனியாக கோழிக்கறிக்கடை இருக்காது. நாட்டுக் கோழிகளை வளர்ப்பவர்களிடமே வாங்கிக் கொள்ளலாம். எங்கம்மா  அவ்வளவாக சமைக்க மாட்டார்கள். ஏனென்றால் ஆயா என்று நாங்கள் அழைக்கும் எங்கள் அம்மாவின் அம்மா எங்களோடுதான் இருந்தார்கள். மிக அருமையாக சமைப்பார்கள். அறுசுவை உணவை அரை மணியில் சமைத்துவிடுவார்கள். சைவம் அசைவம் இரண்டும் சூப்பராக இருக்கும். ஆட்டுக்கறிக்குழப்பு வைத்தால் கைமணக்க, வாய் மணக்க மிக அருமையாக இருக்கும். அவருக்கு மசாலா அரைத்துத் தருவது மட்டும்தான் என் அம்மாவின் வேலை. ஆட்டுக்கல் அம்மிக்கல் இரண்டும் இருக்கும், மசாலா தேங்காய் ஆகியவற்றை அம்மிக்கல்லிலும், ஆட்டுரலில் இட்லி தோசைக்கு மாவு மற்றும் தேங்காய் பொட்டுக்கடலை சட்னியும் அரைத்துக் கொடுப்பது அம்மாவின் வேலை. கோழிக்கறி வேண்டுமென்றால் பக்கத்து ஊர்களான பெரியகுளம் அல்லது வத்தலகுண்டு போய் எங்கப்பா வாங்கிவருவார்.
Image result for அயிரை மீன்
அயிரை மீன்
          ஆயா இருக்கும்வரை சுவையான உணவுக்குப் பஞ்சமில்லை.  அதன்பிறகு முழுப்பொறுப்பும் என் அம்மாவின் மேல் விழுந்தது. ஆரம்பத்தில் சோறு குழைந்துவிடும், காரம் / உப்பு அதிகமாகிவிடும். மிகுந்த  நேரம் பிடிக்கும். இதனால் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் அடிக்கடி சண்டை வரும். ஆனால் படிப்படியாக முன்னேறி நன்றாக சமைக்கக் கற்றுக் கொண்டார். மட்டன் குழம்பு, குருமா, மட்டன் ஃபிரை, காரக் குழம்பு, மொச்சைக்குழம்பு, புளிக்குழம்பு, துவரம்பருப்பு, பாசிப்பருப்பு, சாம்பார் ஆகியவை கிட்டத்தட்ட எங்கள் ஆயாவின் கைப்பக்குவத்திற்கு இணையாக வந்துவிட்டது. ஆனால் சில சமையல் அம்மாவுக்கு வரவேயில்லை.  பலகாரங்கள் செய்வது, பிரியாணி செய்வது, கோழி வெட்டுவது இதெல்லாம் அவர்களுக்கு கடைசிவரை வரவேயில்லை.
          இன்னொன்று எங்கம்மா செய்வது மீன்குழம்பு, இது எப்பவும் இருக்காது எப்போதாவது விடுமுறை தினங்களில் செய்வார்கள். எங்கள் ஊரில் மீன்கடை என்று இல்லை. ஆனால் தெருக்களில் விற்றுக்கொண்டு வருவார்கள். அருகில் எந்தக் கடலும் இல்லாததால் ஆறு, குளம், கிணறு ஆகிய மீன்கள் மட்டும்தான் வரும். விரால் மீன், கெண்டை, கெளுத்தி, குரவை, ஜிலேபி கெண்டை, அயிரை ஆகியவைதான் வரும். இதில் எங்கம்மா அடிக்கடி செய்வது ஜிலேபிக்கண்டை மீன். இன்னொரு வகை மீன் குரவை. விரால் எப்போதாவது தான் கிடைக்கும்.
          இந்த ஜிலேபிக்கெண்டை மீன் செய்கிற நாளும் அதன்பின் ஒருவாரம் மீன் கவிச்சி வீடுமுழுதும் நிறைந்து எரிச்சலைத்தரும். அதனாலேயே எனக்கு மிகுந்த ஐயரவு ஏற்பட்டது. (ஐயரவு என்பதற்கும் ஐயர் என்பதற்கும் எந்த சம்பந்தமும் நேரடியாக இல்லையென்பது என்பதை  தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். )
Image result for விரால் மீன்
விரால்
          ஒரு சமயம் முதுகலை படிக்கும் சமயம் என்னுடைய வீட்டிற்கு என் வகுப்பு நண்பர்கள் வந்து ஒரு நான்கு நாள் தங்கியிருந்தனர். அவர்களை வைகை அணை, மஞ்சளாறு அணை,  காமாட்சியம்மன் கோவில், கும்பக்கரை ஆகிய இடங்களுக்கு அழைத்துச் சென்றேன். கோடை விடுமுறை என்பதால் அம்மாவும் வீட்டில் தான் இருந்தார்கள். நான் கேட்காமலேயே அவர்களும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அசைவ வகை செய்து அசத்தினார்கள். ஒரு நாள் மட்டன் குழம்பு, மறுநாள் சிக்கன், இன்னொரு நாள் சாம்பார், மட்டன் ஃபிரை, கடைசி நாளில் மீன்குழம்பு செய்திருந்தார்கள். அந்த மீன் வழக்கமாகச் செய்யும் மீன் இல்லை. ஏதோ ஒன்றை தெருவில் விற்பவன்  தலையில் கட்டிவிட்டான் என்று நினைக்கிறேன். ஆனால் சுவை நன்றாகத்தான் இருந்தது. வளவளவென்ற தோலுடன் குறுகலாக உருண்டையாக இருந்தது. பக்கத்தில் உட்கார்ந்திருந்த கிண்டல் பிடித்த சேலம் ரவி, "டேய் உங்கம்மா மீன் வாங்கறதுக்குப் பதிலா பாம்பு வாங்கிச் சமைச்சிருங்காங்கடா.ஆனால் அதுவும் நல்லாத்தான் இருக்கு" என்று காதில் சொன்னான். ஏற்கனவே நாற்றமுடைத்த மீனை பிடிக்காமல் இருந்த மனதை இந்த பாம்பு உவமை பலமாகத்தாக்கியதால் அன்றிலிருந்து மீன் சாப்பிடுவதை நிறுத்திவிட்டேன். அதன்பின் தொடர்ந்து ஹாஸ்டலிலும் தனியாகத்தங்கியும் இருந்ததால் மீனைத் தொடவில்லை. ஆனால் என் மனைவி ஒரு மீன் பிரியை, ஒவ்வொரு தடவை மீன் செய்யும்போதும் குற்ற உணர்ச்சியால் என்னைச்சாப்பிட வற்புறுத்துவாள். மதியம் கொடுத்தால் இரவு சாப்பிடுகிறேன் என்றும் இரவு கொடுத்தால், இரவில் வேண்டாம் என்றும் சொல்லித் தப்பித்துவிடுவேன்.
          ஆனால் மீன் உணவு மிகவும் நல்லது. ஆட்டுக்கறி, கோழிக்கறி, பன்றிக்கறி, மாட்டுக்கறி, ஆகியவற்றில் கோழிக்கறி என்பது மற்றவற்றைவிட நல்லது என்கிறார்கள். குறிப்பாக சர்க்கரை வியாதி, இரத்த அழுத்தம், இதய நோய் உள்ளவர்கள் ரெட்மீட் என்று சொல்லப்படுகிற ஆட்டுக்கறி,பன்றிக்கறி, மாட்டுக்கறியை ஆகியவற்றை நிறுத்த வேண்டும் என்று சொல்கிறார்கள். ஆனால் கோழிக்கறி இதில் சேராது. இவையெல்லாவற்றையும் விட மீன் உணவு நமது நாட்டிலேயே மேற்கு வங்காளம் ஆகிய பகுதிகளில் சைவ உணவாக கருதப்படுவதோடு பிராமணர்களும் சகஜமாகச் சாப்பிடுகிறார்கள். அங்குள்ள ஐயர்களுக்கு எந்த ஐயரவும் இல்லை. அதோடு மற்ற அசைவ உணவுகளை விட மீன் விலை குறைவு என்பதால் நடுத்தர மற்றும் அதற்கும் கீழ்வருமான உள்ளவர்கள் மீன் அதிகம் சாப்பிடுவதால் உடல்நிலை திடமாக ஆரோக்யமானவர்களாக இருக்கிறார்கள்.
          என் அமெரிக்கன் கல்லூரி வகுப்புத்தோழன் ராஜசேகர் மதுரை சாரதா மெஸ்ஸின் கிளையை சென்னையில் ஆரம்பித்து நடத்தி வருகிறான். மதுரை சாரதா மெஸ்ஸின் இரண்டு சிறப்பம்சங்கள் என்னவென்றால் மண்பானை சமையல், மற்றும் அயிரைமீன் குழம்பு, இதற்காக தினமும் மதுரையில் இருந்து அயிரை மீன் வருவதோடு விரால் மீனை அவனே வளர்க்கிறான். நான் சென்னையில் இருந்தபோது சாரதா மெஸ்ஸீக்கு அடிக்கடி  செல்வேன். முதல் காரணம் அங்கு கிடைக்கும் சீரக சம்பா பிரியாணி, பரோட்டா மற்றும் மட்டன் சுக்கா வருவல் எனக்கு மிகவும் பிடிக்கும். அதுதவிர 2வது காரணம் உடனே காசு கொடுக்கத்தேவையில்லை. அங்கு அயிரை மீன் குழம்பு சாப்பிடுவதற்காகவே  MLA-க்கள் பலர் வருவார்கள் என்றாலும் நான் ஒரு நாள் கூட அயிரை மீனை  அங்கு சாப்பிட்டதில்லை. ஆனால் மீன் வகைகளில் நெய்மீன் கருவாடும், நெத்திலிக்கருவாடும் எனக்கு இன்னும் பிடிக்கிறது. எந்தவித தயக்கமின்றி சாப்பிடுகிறேன்.
          போனமாதம் டாக்டரிடம் சோதனை செய்யப்போயிருந்த போது, எல்லாம் முடிந்து ரிசல்ட்டைப் பார்த்த டாக்டர்,
“உங்களுக்கு புரதச் சத்து கம்மியாக இருப்பதால் பால் சாப்பிட வேண்டும்”,
 “ஐயோ பால் சாப்பிடமாட்டேன்டாக்டர்”,
“அதோடு மீன் எண்ணெய் சத்து குறைவதாக இருப்பதால் மீன் சாப்பிடவேண்டும்”, “அய்யயோ மீனும் சாப்பிடமாட்டேன்”.
என்னய்யா உன்னோட தொல்லையாகப்போச்சு  என்று நினைத்தமாதிரி அவர்கள் முகம் சொல்லியது .கொஞ்சம் யோசித்துவிட்டு ஒருநாளைக்கு மூன்று வேளையும் ஒமேகா மாத்திரை 1000MG சாப்பிடச் சொல்லிவிட்டார்கள்.
தொடரும்

Thursday, April 11, 2019

உலகின் மூத்த நாகரிகம் வைகை நதி நாகரிகம் !!!


வைகை நதி நாகரிகம் 
கீழடி குறித்த பதிவுகள்
சு.வெங்கடேசன் / விகடன் பிரசுரம்.

வைகை நதி நாகரிகம்
கீழடியில் கண்டுபிடிக்கப்பட்ட வைகை நதி நாகரிகம், மதுரை மக்களை மட்டுமல்ல முழுவதுமான தமிழருக்கான ஏன் இந்தியருக்கான பெருமை. ஆனால் அதனை நிலைநாட்ட முடியாமல் தடுத்து வருகிறது மைய அரசு. தமிழ்நாட்டை ஒரு பொருட்டாகவே அவர்கள் கருதுவதில்லை. இத்தனைக்கும் இந்தியாவில் அதிகபட்ச வரிகள் செலுத்துவது தமிழ்நாடு. சமூகநீதி, வேலைவாய்ப்பு, தனிநபர் வருமானம் இவற்றில் வெகுவாக முன்னேறியிருக்கிறது. சமூகநீதியில் இந்தியாவுக்கே உதாரணமாகவும் செயல்பட்டு வருகிறது தமிழ்நாடு. நம்முடைய பாரம்பரியத்தையும்  நாகரிக வரலாற்றையும், தடுக்க நம்மனைவரும் ஒற்றுமையுடன் செயல்படுவது மிகவும் அவசியம்.
Related image
சு.வெங்கடேசன்
தொல்லியல் துறையில் கீழடியில் கண்டுபிடிக்கப்பட்ட முக்கிய சான்றுகள் வைகை நகை நாகரிகம் ஒரு நகர்ப்புற நாகரிகம் என்பதை தெளிவாக விளக்குகிறது. இதனை விரிவாக எழுதியுள்ள எழுத்தாளர் சு.வெங்கடேசன் குறுகிய காலத்தில் பலரால்  அறியப்பட்டிருக்கிறார் . இவர் எழுதிய இரண்டு நாவல்களான காவல் கோட்டம் மற்றும் வேள்பாரி ஆகியவை சாகித்ய அக்காடெமி விருதுகளைப் பெற்றிருக்கின்றன.
டல்லஸ் டெக்சஸ் நகரில் 2018 ஜூலையில் நடந்த ஃபெட்னா நிகழ்வில் வெங்கடேசன் கலந்து கொண்டு, கீழடி பற்றி ஆற்றிய உரை மகிழ்ச்சியையும் அதிர்ச்சியையும் ஒருங்கே கொடுத்தது. அதன் பின் நான் படித்த இந்தப் புத்தகம்  மேலும் தெளிவாக கீழடி ஆய்வு குறித்த தகவல்களைத் தெரிவிக்கிறது.  
சங்க கால நூலான பரிபாடலில் உள்ள ஒரு பாடலில் , ஒரு பெருமை மிகு மதுரை செய்யுளில் , உலக நகரங்களை ஒரு தராசின் ஒரு பகுதியிலும் மதுரையை மறு பகுதியிலும் வைத்தால் மதுரை தான் தாழ்ந்து வெற்றிபெறும் என்று பாடுவதை புத்தகத்தின் ஆரம்பத்தில் தெரிவித்து மதுரை நாகரீகம் பழமையானது மட்டுமல்ல அது நகர நாகரிகம் என்பதை ஆசிரியர் எடுத்துக் காட்டுகிறார்.
தமிழகத்தின் மூன்று பேரரசுகளான சோழர், சேரர், பாண்டியர் ஆகியவர்களில் பாண்டியனே மூத்தவன். பாண்டிய நாடே முதலில் உருவான நாடு. பாண்டியனின் வேப்பம்பூ மாலையைப்பற்றிக் குறிப்பிட்டு, மீனாட்சியைப் பற்றிச் சொல்கையில் மதுரை நாகரிகம் ஒரு பெண்வழிச் சமூகம் என்பதைச்  சொல்கிறார்.
இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டுகளில் தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் அதிலும் மதுரைக் கல்வெட்டுகள்தான் மிகவும் பழமையானது. எழுத்தும் எழுத்து சார்ந்த அடையாளமும் மதுரையில் நிறையவே உள்ளன.
சிலப்பதிகாரத்தில் பெண்கல்வி குறித்து கோவலனிடம் விளக்கும் பாடலில் சொல்லப்பட்டிருக்கிறது.
பாண்டியனின் பழைய தலைநகர் மணலூர் என்பதுதான் தற்போதைய கீழடியாக இருக்கக் கூடும் என்கிறார்.
வைகையின் கரையில் 256 முதல் 350 கிராமங்கள் இருக்கின்றன. இவற்றில் 293 கிராமங்கள் மிகவும் பழமையானது.
ரோமாபுரியை 2000 ஆண்டுகள் முன் ஆண்ட சீசர் அகஸ்டஸ் காலத்தில் மதுரைக்கு  இருந்த தொடர்பை சில அகழ்வாராய்ச்சியில் கிடைத்த சான்றுகள் நிரூபிக்கின்றன.
இதிலே இன்னொரு தகவல் என்னவென்றால் இறைமகன் இயேசு கிறிஸ்து பிறந்தது ரோமப் பேரரசர் சீசர் அகஸ்டஸ் காலத்தில்தான். அவர் தான் ஆண்ட இஸ்ரவேல் நாட்டில் சென்சஸ் எடுக்க உத்தரவிட்டார். அதோடு மக்கள் தொகை கணக்கெடுக்கும் படி எல்லோரும் அவரவர் ஊருக்குச் செல்லக் கட்டளை பிறந்தது. அப்படியாக அன்னை மரியாளும் ஜோசப்பும் இடம் பெயர்ந்து தங்கள் ஊரான பெத்லகேமுக்குச் சென்றார்கள். அப்பொழுது முழுக்கர்ப்பிணியாக இருந்த மேரிக்கு பிரசவ வலியெடுத்து பிள்ளையை ஒரு மாட்டுத் தொழுவத்தில் பெற்றெடுத்தார். இதன் காலகட்டம் 2019 ஆண்டுகளுக்கு முன் என்று கணக்கிட்டால், நம் மதுரை மன்னர்களின் ரோமானிய உறவுக்கும் அவ்வளவு காலம்தான் என்று விளங்குகிறது.
ஆனால் கீழடி ஆவணங்கள் அதற்கும் பழமையான நாகரிகம் என்றுசான்றுகள்  மூலம் வெளிப்படுத்துகிறது.
ரோமர் கால மதுவினை அந்தக்கால பாண்டியர் பயன்படுத்தியதன் ஆதாரம் மூலம் பாண்டியரின் வசதி வாய்ப்பினை அறிய முடிகிறது.
சிலப்பதிகாரத்தில் கோவலன் மதுரைக்கு வரும்போது, மதுரைக் கோட்டையில் யவன வீரர்கள் பணியாற்றியதைப் பற்றிக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் யவன வீரர்கள் மதுரையில் மட்டும்தான் இருந்திருக்கின்றனர்.
ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனுக்கு யவனப்பெண் ஒருவர் மனைவியாக இருந்ததும் அவளின் அந்தப்புரத்தில் யவனப்பெண் காவலர் இருந்ததும் யவனர் தங்கியிருக்கும் யவனச்சேரி மதுரையில் இருந்ததையும் வரலாறு தெரிவிக்கிறது.
ஏற்றுமதியில் அன்றைய காலக்கட்டங்களிலேயே  தமிழகம் சிறந்து விளங்கியிருக்கிறது. முத்து, மிளகு, பட்டு, கற்பூரம், நவரத்தினங்கள் ஆகியவை அவற்றுள் சில. 
ரோமானியர், பாண்டிய நாட்டு முத்துக்களின் மேல் மிகுந்த ஆசை வைத்திருந்தார்கள். ரோமானியப் பேரரசி கிளியோபாட்ரா முத்துக்களைக் கரைத்துக் குடித்தாள் என்று வரலாறு சொல்கிறது.
அழகன் குளம் கீழடியில், ரோம மதுக்குவளைகள், ரோமரின் காசு, மண்பாண்டங்கள் ஆகியவை கிடைத்துள்ளது பாண்டியருக்கு ரோமருக்கும் இடையே நடந்த வர்த்தகத்திற்குச் சான்றாக உள்ளது.
இந்தியாவில் கிடைத்த கல்வெட்டுகளில் 60% தமிழ்க் கல்வெட்டுகள் ஆகும். அவற்றுள் கிடைத்த 33 பிராமி கல்வெட்டுகளில் 22 மதுரையில் கிடைத்துள்ளன.
இவைகளை வைத்துப்பார்த்தால் வைகை நதி நாகரீகமென்பது உலகின் மூத்த நாகரிகம் என்பதும், அது நகர்ப்புற நாகரிகம் என்பதும், வைகை நதிக்கரை நாகரிகம் இன்னும் பல ஆய்வுகள் செய்யப்பட்ட வேண்டிய ஒன்று என்றும்  தெள்ளத் தெளிவாகிறது.
இதனை மறைக்க அழிக்க நினைக்கும் சதிகளை முறியடித்து  அதற்குத்தடையாக இருக்கும் உள்ளூர் வெளியூர் எதிரிகளைப் புறக்கணித்து, தமிழர் வரலாற்றை மேலும் வெளிக்கொணர  தமிழர் ஒன்றுபட்டு உழைத்தால் ஒழிய தமிழக பண்டைய வரலாறு மறைக்கப்படும், மறக்கப்படும்.
- முற்றும்.


பின்குறிப்பு அல்லது முன்குறிப்பு
சு வெங்கடேசன் போன்றவர் நம் பாராளுமன்றத்திற்குப்  போவது நம் பாரம்பர்யப் பெருமைகளைக்  காக்க உதவும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை .மேலும் மதுரை மக்களுக்கு பல நன்மைகள் விளையும் என்பதால் இப்படிப்பட்ட ஒரு எழுத்தாளரை , சமூக பணியாளரை , எளிய மனிதரை , அவர் சார்ந்துள்ள இயக்கம் அல்லது கூட்டணி என்பதற்கும் மேலாக நினைத்து பாராளுமன்றம் அனுப்ப எல்லா முயற்சிகளையும் எடுக்க வேண்டுகிறேன் .

Monday, April 8, 2019

சாதிக்கலவரத்தின் மூலம் நடந்த நன்மை !!!!

Related image
Courtesy Google 

வேர்களைத்தேடி பகுதி 38
இதற்கு முந்திய பகுதியைப்படிக்க  இங்கே சொடுக்கவும். 
           
இருபக்க இளைஞர்களும் பலமாக மோதிக் கொண்டனர். இருபுறமும் கற்கள் பறக்க சிலம்பம் காற்றைக் கீற, ஆக்ரோஷமான போர் போர் போர். நல்லவேளை எனக்குத் தெரிந்து உயிர்ச்சேதம் இல்லை. ஆனால் நிறையப் பேருக்கு பலத்த காயம். இறுதியில் தேவர் படை மற்றவரை அடித்துத்துரத்த, அதற்கு மேல் தாக்குப்பிடிக்க முடியாமல் தெற்குத் தெரு மக்கள் தங்கள் தெருக்களுக்கு ஓடி மறைய இவர்கள் உள்ளே புக முயலவில்லை அங்கிருந்த மற்ற அப்பாவி மக்களும் அவரவர் வீடுகளுக்கு ஓடிவிட அம்மன் மட்டும் அனாதையானது.
          எனக்கும் பலத்த காயம் வெளியே தெரியாத உள்க்காயம். ஆங்காங்கே சிறுசிறு தடிப்புகள், நெல்லிக்காய்கள் முளைத்திருந்தன. நல்லவேளை கொய்யாப்பழம் காய்க்கவில்லை. ஆனால் இது நான் போரில் பட்ட காயங்கள் இல்லை வீட்டில் என்னுடைய அப்பா, சொல்லச் சொல்லக் கேட்காமல் வெளியே போனதால், அதுவும் கலவர சமயத்தில் போனதால் கொடுத்த  பிரம்பு அர்ச்சனைதான். எப்போதும் வந்து தடுக்கும் அம்மா அன்று மட்டும் "பயபுள்ளைக்கு நல்லா வேணும் நீசப்பய" என்று பல்லைக் கடித்துச் சொன்னது என் புண்ணில் சுண்ணாம்பு வைத்தது. "நீசப்பய" என்ற வார்த்தை வந்ததால் அம்மா மிகவும் கோபமாக இருக்கிறார்கள் எனத்தெரிந்தது. ஏனென்றால் அவர்கள் அதீத கோபப்பட்டால் மட்டும் பல்லைக்கடித்து நாக்கைதுருத்தி "நீசப்பய " என்ற வார்த்தையை பயன்படுத்துவார்கள். எப்போதாவது தலையில் குட்டுவதும், காதைத் திருகுவதும், தொடையைக் கிள்ளுவதும் நடக்கும்.
          மதுரையிலிருந்து ரிசர்வ் படை வந்து சேருவதற்குள் இங்கே எல்லாம் நடந்து முடிந்துவிட்டது. யூனிபார்ம் அணிந்த சட்டிப் போலிஸ் (LOL) ஊரின் முக்கிய வீதியில் அணிவகுப்பு  நடத்தினர்.

          ஊருக்குள் மூன்று தினங்களாக கடைகள் எதுவும் திறக்கப்படவில்லை. பள்ளிகள் மூடப்பட்டன. 144 தடையுத்தரவு போடப்பட்டது. என்னால் எங்கும் போகமுடியவில்லை. நூலகம் கூட போகமுடியாததால் தவித்துப் போனேன். அப்போது தொலைகாட்சி இல்லை, வெறும் ரேடியோ மட்டும்தான். தினத்தந்தியில் வந்திருந்த தேவதானப்பட்டி கலவரச் செய்தியை எங்கிருந்தோ அப்பா கொண்டு வந்து காண்பித்தார். அது எதிர்மறைச் செய்தி என்றாலும், "ஆஹா நம்மூர் பெயர் பேப்பரில் வந்திருச்சு" என முட்டாள்த் தனமாக மகிழ்ச்சியடைந்தது ஞாபகம் வருகிறது.
          மூன்று நாட்கள் எந்தவித சம்பவமும் இல்லாமல் கழிந்தது. தேவதானப்பட்டியின் காவல் நிலையத்தில், காவல் துறை உதவி ஆய்வாளர், பெரியகுளம் சரக காவல்துறை ஆய்வாளர்,  மாவட்ட உதவி ஆட்சியாளர் ஆகியோர் முன்னிலையில் சமாதானப் பேச்சுவார்த்தை  நடந்தது. ஐந்து நாட்கள் கழித்து ஊர் பழைய நிலைமைக்கு வர, ரிசர்வ் படை திரும்பிச் சென்றது. பள்ளிகளும் திறக்கப்பட்டன.
          ஆனால் அதே இரவில் சில மர்ம நபர்களால், தெற்குத் தெரு கொளுத்தப்பட்டது. சுமார் 300க்கு மேலான குடிசைகள் எரிந்து சாம்பலானது. அதிர்ஷ்ட வசமாக இப்போதும் உயிர் சேதம் எதுவும் நடக்கவில்லை. ரிசர்வ் படை மீண்டும் வந்திறங்கியது.
          இந்தச் சமயம் மதுரையிலிருந்து கலெக்டர் பெரியகுளம் MLA  ஆகியோரும் வந்து பார்த்தனர். அவர்கள் எடுத்த முயற்சியில் கருகிப்போன முந்நூறுக்கும் மேற்பட்ட வீடுகளுக்கு அரசாங்கமே ஓடு வேய்ந்து கொடுக்க திட்டமிடப்பட்டது.
          அதற்கப்புறம் நடந்தது தான் வேடிக்கை, இரவு நேரத்தில் திடீர் திடீரென்று தெற்குத்தெருவில் இருந்த மற்ற குடிசைகள் கொளுத்தப்பட்டு எரியும். புரளி என்ன வென்றால் ஓட்டுக் கூரை கிடைக்குமென்பதால் அவர்களே கொளுத்திக் கொள்வதாக பேசினார். அது உண்மையோ பொய்யோ எரிந்து போன 300 தான்பிறது எரிந்து போன 50ம் சேர்ந்து 350 வீடுகளுக்கு ஓடு வேயப்பட்டு தெற்குத் தெருவின் தோற்றம் மாறிப்போனது.
          வீடு எரிந்துபோனால் வாழ்க்கை ஸ்தம்பிததுவிடுமென நினைத்ததற்கு மாறாக அதிக நன்மை இந்த கலவரத்தால் விளைந்துவிட்டது வடக்குத் தெருக்காரர்களுக்கு கொஞ்சமும்  பிடிக்கவில்லை. ஆனால் என்ன செய்ய முடியும்.
          தெற்குத்தெரு மக்கள் பெரும்பாலும் கூலி வேலை செய்பவர்கள் அல்லது பண்ணை வேலை செய்பவர்கள். நாத்து நடுவது, களை பிடுங்குவது, மட்டுமல்லாமல் மற்ற நேரங்களில் புல்கட்டு விற்பது, விறகு வெட்டிக்கொண்டு வந்து விற்பது போன்ற வேலைகளைப் பெண்கள் செய்வார்கள். ஏர் உழுவது, மாடு ஆடு மேய்ப்பது, இரவுக்காவல் போன்ற பல வேலைகளை ஆண்கள் செய்வார்கள். கடுமையாக உழைத்துப் பிழைக்கும் சமூகம் இது. ஆனால் எனக்குத்தெரிந்து தீண்டாமையெல்லாம் எங்கள் ஊரில் இருந்ததில்லை. அந்தச் சமயம் என்று நான் சொல்வது 1970 முதல் 1980 வரை. அவர்கள் சாப்பாட்டுக்குக் கடைக்குச் செல்லலாம், டீக்கடைகளில் பொதுவான தம்ளர்களில் குடிக்கலாம். என்னுடைய தாத்தா செபஸ்டியான் அவர்கள் முயற்சியில் செல்வநாயகம், வீரச்சின்னன், குட்டை வாத்தியார் போன்ற பலர் ஆசிரியப் பயிற்சி பெற்று பள்ளிகளில் பணியாற்றினர்.
        அந்தக் காரணத்திற்காகத்தான் முத்தாளம்மன்  திருவிழா நடக்கும்போது மட்டும் மதுரை ரிசர்வ் படை வந்து குவிந்துவிடும். கலவரம் நடக்காமல் தடுப்பதற்காக. ஆனால் அதன் பின்னரும் முத்தாளம்மன் தெற்குத் தெருவின் உள்ளே எடுத்துச் செல்லப்பட்டதாக எனக்கு ஞாபகம் இல்லை. இப்போது எப்படியென்று தெரியவில்லை
                    1980களுக்குப் பின்னர் மறுபடியும் கலவரம் வந்து துப்பாக்கிச் சூடெல்லாம் நடந்தது என்று கேள்விப் பட்டேன். 1979 லேயே மேல்நிலைப்படிப்பு படிக்க, காந்திகிராமம், மதுரை பின்னர் வேலைக்கு சிவகாசி, கிருஷ்ணகிரி, சென்னை மற்றும் இப்போது நியூயார்க் என்று ஊரைவிட்டு வெகுதூரம் வந்துவிட்டேன். இருந்தாலும் ஊரின் நினைவுகள் என்னைவிட்டு என்றும் நீங்காது. 
          சாதி மதப்பாகுபாடுகள் ஏன் வந்தது எப்படி வந்தது, யாரால் வந்தது? என்று ஆராய்ச்சியை விட்டுவிட்டு இறைவனின் படைப்பில் எல்லோரும் சமம்தான் என்று எண்ணிவிட்டோமென்றால் உயர்வு மனப்பான்மையும் வராது, தாழ்வு மனப்பான்மையும் வராது.

தொடரும்.    
மன்னிக்கவும் :

மிகுந்த வேலைப்பளுவின் காரணமாக ஒரு இரண்டு வாரங்கள் தொகுதிப்பக்கம் .மன்னிக்க தேர்தல் நேரமென்பதால் வாய் குளறுகிறது ,வலைப்பக்கம் வரமுடியவில்லை .உங்கள் ஆதரவு இன்னும் இருக்கிறது என்றால் தொடர்ந்து எழுத முயல்கிறேன்,  நன்றி.

Thursday, March 14, 2019

பிலிப்பைன்சை ஆக்கிரமிக்க போட்டிபோட்ட ஸ்பெயினும் அமெரிக்காவும் !!!!!!


பார்த்ததில் பிடித்தது

1898 அவர் லாஸ்ட் மென் இன் தி பிலிப்பைன்ஸ் (1898 Our Last Men in the Philippines)         

                     
          பிலிப்பைன்ஸ் தேசம் நூறாண்டுகள் ஸ்பெயினிடம் அடிமைப்பட்டு இருந்தது. இங்கிலாந்துக்கு அடுத்த படியாக அதிக காலனிகளைக் கொண்டது ஸ்பெயின். அமெரிக்கா, கனடா தவிர பல வட அமெரிக்க தென் அமெரிக்க நாடுகளை ஸ்பெயின் பிடித்து வைத்து ஆண்டு கொண்டிருந்தது. அந்த ஸ்பானிய கலோனிய ஆட்சியை எதிர்த்து பிலிப்பைன்சின் புரட்சிப்படை 1896ல் தன் கலகத்தை ஆரம்பித்தது.  
          போர்ட்டரிக்கோவை ஆக்கிரமித்திருந்த ஸ்பானிய ஆட்சியை முறியடித்து அமெரிக்கா அதனைப் பிடித்துக் கொண்டது. எனவே ஸ்பானிய அமெரிக்க சண்டை ஆரம்பித்தது. பிலிப்பைன்சிலும் அமெரிக்கப்படை, ஸ்பானிய ஆதிக்கத்தை எதிர்க்க, பிலிப்பைன்சின் புரட்சிப் படை அமெரிக்கப் படையோடு கைகோர்த்தது. இந்தக் கூட்டு எதிர்ப்பை சமாளிக்க முடியாத ஸ்பெயின் 1897ல் சமாதான உடன்படிக்கையைச் செய்து கொண்டது. இதற்கு முன்னர் சண்டை உச்சக்கட்டத்தில் இருக்கும்போது புரட்சிப் படைக்கு ஆயுதங்கள் கடத்தப்படுவதைத் தடுக்க லூட்டினன்ட் யோசே மோட்டாவின் தலைமையில் 50 காசோடர்களை பேலர் என்ற இடத்திற்கு அனுப்பியது. இது நடந்தது செப்டம்பர் 1897ல்.
Add caption
          பேலர் என்ற இந்த இடம் லஜான் என்ற இடத்தின் கிழக்குக் கடற்கரையில் மணிலாவிலிருந்து சுமார் 225 கி.மீ தொலைவில் உள்ள கடற்கரை நகரம். இந்த நகரத்தை கடல்வழி அணுகுவதுதான் சுலபம். நிலவழி மிகவும் ஆபத்தான காடுகள் சூழ்ந்த பகுதி. 
          இந்த 50 பேர் கண்காணிப்புத் தளங்கள் அமைத்து அந்த வழியே யாரும் புகுந்துவிடாதபடி பாதுகாத்தார்கள். ஆனால் அக்டோபரில் அவர்களுடைய நிலைகள் புரட்சிப்படையால் தாக்கப்பட்டு அதில் லூட்டினன்ட் மோட்டா உட்பட ஏழுபேர் உயிரிழக்க, பலபேர் காயமுற்றனர்.
          பின் வாங்கிய மீதப்பேர்  பாலரில் இருந்த ஒரு கத்தோலிக்க ஆலயத்தில் நுழைந்து அதையே கோட்டைபோல் அமைத்துக் கொண்டனர். சுற்றிலும் குழி வெட்டி அரணமைத்து இரவும் பகலும் விழிப்புடன் காவல் காத்தனர். புரட்சிப் படை அவர்களை முற்றுகையிட்டது. இது ஜூலை 1  1898ல் ஆரம்பித்து ஜூன் 1899 வரை ஒரு வருடகாலம் நீடித்தது.
          ஸ்பானிய படை அமெரிக்கப்படையுடன் சமாதானம் செய்து கொண்டு தன் படைகளை பிலிப்பைன் நாட்டிலிருந்து விலக்கிக் கொண்டனர். புரட்சிப் படைகளுக்கு உதவி செய்ய வந்த அமெரிக்கப்படை பிலிப்பைன் நாட்டை ஆக்ரமித்துக் கொண்டது. அதனால் பிலிப்பைன் நாட்டுப் புரட்சிப் படைக்கும் அமெரிக்க ஆக்கிரமிப்பு படைகளுக்கும் சண்டை ஆரம்பித்தது.
          இது எதுவுமே தெரியாமல் வெளியுலகிலிருந்து முற்றிலுமாக வெட்டப்பட்ட நிலையில் பாலரில் உள்ளே ஸ்பானியர் இருந்தனர்.
          பலமுறை பல பேர் எடுத்துச் சொல்லியும், பத்திரிகைகளை அனுப்பியும், உள்ளே நோயால் உணவின்மையால் வாடி பலபேர் மடிந்தும் சரணடையாமல், எஞ்சிய ஸ்பானியப் படை உள்ளே தாக்குப் பிடித்தது. ஏனென்றால் உள்ளே பொறுப்பில் இருந்த மார்ட்டின் செரெசோ (Martin Cerezo) எதையும் நம்பத்தயாரில்லை.  ஒரு கட்டத்தில் உணவு சேமிப்பும் தீர்ந்துவிட ஆலய வளாகத்தில் பயிரிட்டுக்கிடைக்கும், பூசணிக்காய், இலை, ஆரஞ்சுகள், வாழைத்தண்டு, பெப்பர், தக்காளி ஆகியவற்றை உண்டு சமாளித்தனர். அதன்பின் அதுவும் முடிந்து போய் நீர் எருமைகளைக் கொன்று சாப்பிட்டனர். தோலை காலணி யாக்கிப் பயன்படுத்தினர். பின்னர், தெருநாய்கள், பூனைகள், ஊர்வன காக்கைகள் ஆகியவற்றையும் உண்ண ஆரம்பித்தனர்.
Martin Cerezo)
          கடைசியில் மார்ட்டினின் நெருங்கிய நண்பன் பத்திரிக்கையில் கொடுத்த  விளம்பரத்தைப் பார்த்துத்தான் சரணடைய ஒப்புக் கொண்டான். ஆலயத்தில் நுழைந்த போது 50 பேர் இருந்தனர். 11 மாத முற்றுகையில் 14 பேர் வியாதியால் இறந்தனர். 2 பேர் காயங்களால் இறந்தனர். நான்கு பேர் தப்பித்து ஓடிவிட்டனர். அதில் 2 பேர் பிடிக்கப்பட்டு எதிர் அணிக்கு உதவியதால் உள்ளேயே தூக்கிலிடப்பட்டார்கள். வெளியே வரும்போது 30 பேர் தன் இருந்தனர்.
          அப்போதிருந்த பிலிப்பைன் நாட்டின் முதல் ஜெனரல் எமிலியோ அகினல்டோ அவர்களை குற்றவாளிகளாகக் கருதாமல் நண்பர்களாக கருதவேண்டும் என்று சொன்னதால் அவர்கள் வெளியே வரும்போது மரியாதை செலுத்தப்பட்டது.
          மூன்று மாதம் கழித்து அவர்கள் பார்செலோனா வந்து சேர்ந்தபோது வெற்றி வீரர்களாக அவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் மார்ட்டின் இதனை புத்தகமாக வெளியிட்டார். அந்தப் புத்தகத்தின் அடிப்படையில் உருவான திரைப்படம்தான் இது. 2016 டிசம்பரில் வெளிவந்த இந்தத் திரைப்படத்தின் திரைக்கதையை எழுதியவர் அலெயாண்ரோ ஹெர்னன்டலே, இயக்கியவர் சால்வடோர் கேல்வோ. மார்டினாக லுயிஸ் டோசர் அற்புதமாக நடித்திருக்கிறார்.
பீரியட் சினிமாக்கள் மற்றும் வரலாற்றை ரசிப்பவர்களுக்கு இந்த ஸ்பானிய மொழித் திரைப்படம் பிடிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

-முற்றும்.


Monday, March 11, 2019

திருவிழாவில் மூண்ட இனக்கலவரம் !!!!!வேர்களைத்தேடி பகுதி 37
இதற்கு முந்திய பகுதியைப்படிக்க  இங்கே சொடுக்கவும். 
http://paradesiatnewyork.blogspot.com/2019/03/blog-post.html#comment-form

Courtesy Google
          அன்றைய நாள் காற்றில் ஏதோ ஒரு பதட்டம் தென்பட்டது. சிலர் மூலைக்கு மூலை நின்று ஏதோ குசுகுசுவென்று பேசத் தொடங்கினார்கள். எனக்கு ஒன்றும் புரியவில்லை. என்னுடைய அம்மா "பேசமா வீட்டில இருடா" என்று சொன்னதையும் மீறி வெளியே போனேன். ஆண்டிற்கு ஒருமுறை வரும் முத்தாளம்மன் ஊர்வலத்தைப் பார்க்காமல் இருக்க முடியுமா?

Courtesy Google_Dinakaran
             ஒவ்வொரு தடவை முத்தாளம்மன் திருவிழா வரும் போதும்  மதுரையிலிருந்து ரிசர்வ் போலிஸ் படை தேவதானப்பட்டிக்கு வரும். அவர்கள் வந்தால் எங்களுக்குக் கொண்டாட்டம்தான். ஏனென்றால் அவர்கள் வந்து தங்குவது எங்கள் பள்ளியான இந்து நடுநிலைப்பள்ளியில் தான். அவர்கள் வந்து தங்கினால் பள்ளி நடக்காதென்பதால் தான் எங்களுக்குக் கொண்டாட்டம். அவர்களை ஏன் சட்டிப் போலீஸ் என்று சொல்வோமென்றால் அவர்கள் தலையில் இரும்புத் தொப்பி யொன்றை அணிந்திருப்பார்கள். அதனை கழற்றி தலைகீழாகப் பிடித்தால் சட்டி போலவே தெரியுமென்பதால்தான் இவர்களை சட்டிப் போலிஸ் என்று சொல்வோம். இவர்கள் இளைஞர்களாக மிடுக்குடன் இருப்பார்கள். யூனிபார்மில் கம்பீரமாய் இருக்கும் இவர்களைப் பார்த்தால் எங்களுக்கு பயம். எங்களுக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் பயம்தான். தெருவில் இறங்கி ஒரு கையில் பிரம்பால் செய்யப்பட்ட தடுப்பையும் மறுகையில் லத்தியையும்  பிடித்து இறங்கினால் எந்தப் பெரிய கூட்டத்தையும் விரைவில் கலைத்துவிடுவார்கள் அல்லது பயத்தால் தானாகக் கலைந்துவிடும்.
          திருவிழாவில் எந்த அசம்பாவிதமும் நடைபெறாமல் தடுப்பது அவர்களுடைய பொறுப்பு. இவர்கள் ஆண்டுதோறும் வர ஆரம்பித்தது, குறிப்பாக முத்தாளம்மன் திருவிழாவிற்கு மட்டும் வந்ததற்கு ஒரு காரணம் உண்டு அதனைப்பற்றிச் சொல்கிறேன்.

                    என்னைப்போல வீதியின் இருபுறமும் மக்கள் பக்திப்பரவசத்துடன் அல்லது பயபக்தியுடன் நின்று கொண்டிருந்தனர். ஆரம்பத்தில் தேவதானப்பட்டி காவல் நிலையத்திலிருந்து பாவமாய் இரண்டு போலீஸ்காரர்கள் நடந்து வந்தனர். அவர்கள் பின்னால்  பல முக்குலத்து இளைஞர்கள் சிலம்பமாடிய படி வந்தனர். அவர்கள் பின்னால் இரண்டுபேர் உருமி மேளம் வாசிக்க, கையில் துண்டைப் பிடித்தபடி உருமால் கட்டிய தேவர்குல நடுத்தர வயதுள்ளவர் தேவராட்டம் ஆடியபடி வந்து கொண்டிருந்தனர். அவர்கள் பின்னால் நையாண்டி மேளம் நாதஸ்வரத்துடன் வாத்தியக்குழுவினர் பட்டையைக் கிளப்ப, கரகாட்டம், மயிலாட்டம், பொய்க்கால் குதிரை ஆடி வர, அதன்பின்னால் புலிவேஷக்காரர் நடனம் ஆடி வந்தனர். அவருக்குப்பின்னால் நான் ஏற்கனவே சொன்ன காளி அரக்கன் வேடமிட்டவர் ஆடியபடி வந்தனர். அவர்களின் பின்னால் தவில் நாதஸ்வரக்கலைஞர்கள் மங்கல இசை முழங்க, அவர்கள் பின்னால் ஊர் பெரிய தலைவர்கள் நடந்து வர முத்தாளம்மன் அலங்கார பூஷிதையாக, கம்பீரமுடன் எடுத்து வரப்பட்டார். அவர்களுக்கு பின்னால் முளைப்பாரி எடுப்பவர்கள், தீச்சட்டி சுமப்பவர்கள் என்று ஒரு பெருங்கூட்டம்  வந்தது. அதன் பின்னாலும் சிலம்பமாடுபவர்கள் இருந்தார்கள். நானும் கூட்டத்தோடு கூட்டமாக பின் தொடர்ந்தேன். வழக்கத்திற்கு மாறாக இன்று அதிகமானபேர் சிலம்பமாடியதோடு ஆடாது இருந்த பலரும் கையில் கம்புகளைப் பிடித்து வந்தனர். அதன் பின்னால் கடைசியில் ஒரு மாட்டு வண்டியும் வந்து கொண்டிருந்தது.
          நாயக்கர், பிள்ளைமார், செட்டியார், நாடார் ஆகியோர் மண்டகப்படி முடிந்து தேவர் குல மக்கள் அதிகமாக வசிக்கும் வடக்குத் தெருவிலும் முடிந்து, மஞ்சளாறு காமாட்சியம்மன் கோவில் சாலை வழியாக மெயின் ரோடு திரும்ப அங்கே தெற்குத் தெருவிலுள்ள தாழ்த்தப்பட்ட பறையர் இன மக்கள் கும்பிடுவதற்காக அங்கேயே சாலையில் சில நிமிடங்கள் தாமதிப்பார்கள். அவர்கள் கும்பிட்டு முடித்து திரும்பவும் மெயின் ரோடு வழியாக வந்து மூலைச் செட்டியார் கடையோரம் காந்தி மைதான ரோட்டில் திரும்பி நாட்டாண்மை வீட்டுக்கு அம்மன் வந்து சேரும். அதன்பின் பிறிதொரு நாளில் அம்மன் சிலையை எடுத்துக் கொண்டு போய் ஆற்றில் கரைத்துவிடுவார்கள். இதுதான் வழக்கமாக நடக்கும் திருவிழா. எத்தனை ஆண்டுகள் இப்படி நடக்கிறதென்றும் தெரியவில்லை. ஆனால் நான் பல வருடங்களாகப் பார்த்திருக்கிறேன். மண்சிலையென்றாலும் ஒரே மாதிரி அச்சில் வார்த்தமாதிரி இருக்கும். வரைந்த கண்களில் தோன்றும் ஒளி இன்னும் மனதில் தெரிகிறது. அந்தக் குயவர்கள் அவ்வளவு திறமைமிக்கவர்கள்.
          அந்த ஆண்டும் அம்மன் சிலை மெயின் ரோட்டில் திரும்பி வழக்கம்போல் தெற்குத்தெருவில் நுழையாமல் அங்கு போடப்பட்டிருந்த தற்காலிக கொட்டகையில் இறக்கி வைக்கப்பட்டது. அங்குதான் தெற்குத் தெரு பள்ளத்தில் இருக்கும் பறையர் குல மக்கள் வந்து வழிபடுவார்கள்.
          ஆனால் தெற்குத் தெருவில் இருந்து ஒரு இளைஞர் படை முன்னுக்கு வந்து நாட்டாண்மையிடம் அம்மன் தங்கள் தெருவுக்குள் வர வேண்டும் அங்கு ஒரு நாள் இருக்க வேண்டும் என்று கேட்டார்கள். வழக்கத்திற்கு மாறாக இருந்தாலும் அவர்கள் கோரிக்கையில் இருந்த நியாயத்தைப் புரிந்து கொண்ட நாட்டாண்மைக்காரர், முத்தாளம்மன் அனைவருக்கும் பொதுதான். ஆனால் அங்கு இரவு தாமதிக்க முடியாது. வேண்டுமென்றால் உள்ளே நுழைந்து உள்ளே இருக்கும் மண்டபத்தில் சில நிமிடங்கள் இருந்து செல்லலாம் எனத்தன் முடிவைச் சொன்னார். அதனைப் பலரும் ஒத்துக்கொள்ள சிலர் இரவு இருக்க வேண்டும் எனப்பிடிவாதம் பிடிக்க, அங்கிருந்த வடக்குத்தெரு தேவரின இளைஞருக்கும் பறையரின இளைஞர்களுக்கும் வாக்குவாதம் முற்றி ஒருவரை ஒருவர் திட்ட, சமாதானம் செய்ய முயன்ற நாட்டாண்மை மற்றும் பெரியவர்களின் பேச்சு எடுபடாமல் போக, தகராறு முற்றி கைகலப்பில் முடிந்தது.
          ஏற்கனவே இதனை எதிர்ப்பார்த்தது போல கையில் சிலம்பமுடன் வந்திருந்த இளைஞர்கள், பறையரின இளைஞர்களை செமத்தியாக அடிக்கத் தொடங்கினர். அதற்குள் தெற்குத் தெரு உள்ளேயிருந்து ஏராளமானவர் கையில் கம்புடன் வர பெரிய போர் மூண்டது. திடீரென்று மாட்டுவண்டியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வீச்சரிவாள்கள் கைகளுக்குத்தாவ அங்கே ஒரே ரத்தக்களரி. அங்கிருந்த மொத்தம் ஐந்து போலீசாரும் ஒன்னும் செய்யமுடியாமல் ஒதுங்கினர்.
          அதற்குமேல் தாக்குப்பிடிக்க முடியாத என் இதயம் தகிடுதத்த நடையில் துடிக்க ஆரம்பிக்க, இரத்தம் முகம் முழுவதும், ஏன் தலைமுழுவதும் பாய, கண்கள் எரிய, பின்னங்கால்கள் பிடரியில் பட ஒரே ஓட்டமாய் வீடு நோக்கி ஓடினேன்.
          தொடரும்

Monday, March 4, 2019

இந்த அம்மனுக்கு கோவிலும் இல்லை நிரந்தர சிலையும் இல்லை!!!!வேர்களைத்தேடி பகுதி 36
இதற்கு முந்திய பகுதியைப்படிக்க  இங்கே சொடுக்கவும். 
https://paradesiatnewyork.blogspot.com/2019/02/35-httpparadesiatnewyork.html
Courtesy : Google
            
      தேவதானப்பட்டியில் காமாட்சியம்மன் திருவிழாவிற்கு அடுத்தபடியாக வெகு விமரிசையாக நடப்பது முத்தாளம்மன் திருவிழா. காமாட்சியம்மன் கோவிலில் அம்மன் சிலை கிடையாது, வெறும் கதவுக்குத்தான் பூஜை என்று சொல்லியிருந்தேன். அதாவது காமாட்சியம்மனுக்கு கோவில் இருக்கிறது சிலையில்லை. ஆனால் முத்தளாம்மனுக்கு கோவிலும் இல்லை, நிரந்தர சிலையும் இல்லை.
          ஒவ்வொரு திருவிழாச் சமயமும் புல்லக்கா பட்டியில் உள்ள மண்பானை செய்யும் குலத்தவர் அம்மனின் சிலையை களிமண்ணில் செய்து வண்ணம் பூசி வனப்பாக்கி தேவதானப்பட்டியில் எங்கள் தெருவிலிருந்த நாட்டாமை வீட்டுக்குக் கொண்டு வருவார்கள். அதற்கு ஒரு மண்டலம் முன்னாலேயே பந்தக்கால் நட்டு, காப்புக்கட்டி விரதமிருப்பார்கள். ஏனென்றால் அம்மனுக்கு தோஷமோ கோபமோ ஏற்பட்டால் ஊருக்கு நல்லதல்ல என்பது அவர்களின் நம்பிக்கை.
Courtesy : Google
          நாட்டாமை வீட்டுக்கு வரும் சிலைக்கு கண்கள் மட்டும் இருக்காது. வீட்டுக்கு முன்னால் மக்கள் திரள் கூடியிருக்க பம்பை, உடுக்கை, தவில் நாதஸ்வரம் போன்றவை இடி முழக்கத்தை எழுப்ப, நாட்டாமை வீட்டிலுள்ள சாமி ரூமில் முத்தாளம்மனின் கண்கள் திறக்கப்படும். அதாவது வரையப்படும். அதுவரை மெல்லிய துணியால் மூடியிருந்த சிலையைத் திறந்து கண்கள் வரைவதை நான் ஜன்னல் வழியே எட்டிப்பார்த்திருக்கிறேன். கண்களை குயவர்கள் லாவகமாக வரைய அப்படியே சிலை உயிர் பெறும் போது அங்குள்ள பலபேருக்கு அருள் வந்துவிடும். வெளியிலிருக்கும் பலருக்கும் அருள் வரும். பார்ப்பதற்கு பயமாகவும் அதே சமயத்தில் வேடிக்கையாகவும் இருக்கும்.
          அதன்பின் முத்தத்தாளம்மனுக்கு பட்டுடுத்தி பொன் நகைகள் சூடி நாயக்கர் பரம்பரையில் வந்த நாட்டாமை குலத்தவர் வந்து கும்பிடும் வகையில் ஒரு நாள் அங்கு இருக்கும். கிராம அலுவலர் (VAO) வந்தவுடன் இந்தப்பதவிக்கு அதிகாரம் இல்லாமல் போனது. ஆனால் பெரிய நாட்டாமை இருக்கும் வரை அவருக்கு மதிப்பும் மரியாதையும் இருந்தது. எங்கள் தெருவிலேயே அவர்கள் வீடுதான் பெரிது.
          எங்கள் தெரு நாட்டாண்மைக்காரர் தெரு என்று முதலிலும் சின்னப்ப நாடார் தெரு என்று பின்னரும் அழைக்கப்பட்டது. ஊரிலேயே எங்கள் தெரு மிகவும் வித்தியாசமானது. ஏனென்றால் செட்டியார்கள், நாடார்கள், தேவர்கள், நாயுடுக்கள் முஸ்லீம்கள், பட்டானியர், பறையர், பிள்ளைமார்கள், அகமுடையர் என்று ஊரில் ஒவ்வொரு வருக்கும் ஒரு பகுதி இருந்தது. இவர்கள் பெரும்பாலும் குழுவாக வாழ்ந்தாலும் ஒருவருக்கொருவர் ஒற்றுமையுடனும் அன்புடனும் வாழ்ந்து வந்தனர்,  இரு குழுவினர் தவிர.  அதனைப்பற்றி அப்புறம் சொல்கிறேன். ஆனால் எங்கள் தெருவில், கிறித்தவர் (நாங்கள்தான் பாஸ்) முஸ்லீம், நாயக்கர், நாடார், முக்குலத்தவர், செட்டியார் என அனைத்து சமுதாயத்தவரும் ஒன்றிணைந்து வாழ்ந்தனர்.
தேவராட்டம்-Google
          நாட்டாமை என்றால் சினிமாவில் வருவது போல் கொண்டை முடிந்து, முறுக்கு மீசை வைத்த ஒருவர் உங்களுக்கு ஞாபகம் வந்தால் அது என் தவறல்ல உங்கள் தவறுமல்ல. அப்படியே நாம் பார்த்துப் பழக்கப்பட்டு விட்டோம். எங்கள் நாட்டாமை அப்படியல்ல, படித்தவர், நல்லகிராப் வெட்டி, மீசை மழித்து இருப்பார். வெள்ளை வேஷ்டி வெள்ளைக்கதரணிந்து  எப்போதும் சிரித்த முகத்துடன் சாந்தமாக இருப்பார். அவருக்கு மூன்று பிள்ளைகள். மூத்தவர் ராஜா அண்ணன். அடுத்து சாந்தி அக்கா மூன்றாவது வெங்கிடு எனப்படும் வெங்கடேசன் தம்பி. அவர்களெல்லாம் எங்கு எப்படி இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. சாந்தி அக்கா மிகவும் அழகாக ஒரு இளவரசி போல இருப்பார்கள். எங்கள் ஊரில் அப்போது வயதுக்கு வந்த பெண்கள், பள்ளி தவிர வேறெங்கும் போகும் வழக்கமில்லை என்பதால் நூலகத்தில் புத்தகங்கள் எடுத்துவர என்னைத்தான் அனுப்புவார்கள். நான் நூலகமும் நடத்தியதால் அவர்கள் வீட்டுக்கு அடிக்கடி செல்வேன். எல்லோரும் என்னுடன் அன்புடன் பழகுவார்கள். இதில் வெங்கிடு மிகவும் உற்சாகமுள்ள தம்பி. என்னைப் பார்த்துவிட்டால் மகிழ்ச்சியடைவான். மகிழ்ச்சியடைந்தால்  கிட்டவந்து இரு விரல்களால் கிள்ளி வைத்துவிடுவான். அது  செல்லக்கிள்ளு என்றாலும் சிலசமயம் வலிக்கும். மகிழ்ச்சியை வெளிப்படுத்த அவனுக்கு இப்படி ஒரு பழக்கம். சில சமயங்களில் நானும் அவனும் ஒன்றாக நூலகம் சென்று சாந்தியக்காவிற்காக புத்தகங்கள் எடுத்து வருவோம். 

முளைப்பாரி-Google
          முத்தாளம்மன் அதன்பிறகு நாட்டாமை வீட்டிலிருந்து மேளதாளத்துடன் கிளம்பி பிள்ளைமார் மண்டகப்படிக்காக காந்தி மைதானத்தில் இருக்கும் பிள்ளையார் கோவிலில் எழுந்தருளியிருக்கும். பிள்ளைமார் சமூகத்தை சேர்ந்த மக்கள் அம்மனுக்கு பால்குடம் எடுத்து, முளைப்பாரி சுமந்து ஒரு நாள் விழாவாகக் கொண்டாடுவார்கள். பிற சமூகத்தினரில் சிலரும் அங்கு வந்து வழிபடுவார்கள். பிறகு முத்தாளம்மன் அங்கிருந்து கிளம்பி நாடார் பேட்டைக்குச் சென்று அங்குள்ள காளியம்மன் கோவிலில் இருந்துவிட்டு அங்கிருந்து நகர்ந்து வடக்குத்தெருவில் உள்ள தேவர் சமூகத்திற்கு நகர்ந்து அருள் பாலிக்கச் செல்லும். அங்கு ஒரு நாள் பகல் மற்றும் இரவு முழுவதும் இருந்து, அடுத்தநாள் அங்கிருந்து கிளம்பும். அங்கிருந்து காமாட்சியம்மன், மஞ்சளாறு அணை பிரிவு வழியாக மெயின்ரோட்டுக்கு வரும். அப்போது தேவர் குல இளஞ்சிங்கங்கள் அம்மனுக்கு முன் தேவராட்டம் ஆடி வருவார்கள். உருமி இசைக் கேற்ப அசைந்தாடுவது மிக அருமையாக இருக்கும். அதோடு காளி அரக்கன் வேடம் போட்டு ஆடுவார்கள். காளிவேடம் போடுபவர் கறுப்புக் கண்ணாடி அணிந்திருப்பார். ஏனென்று தெரியவில்லை. அதோடு ரத்தச்சிவப்பான ஒரு தோல் நாக்கை வாயில் கடித்திருப்பார். காளியின் ரத்தம் தோய்ந்த நாக்குப்போல் அது தொங்கும். அட்டையில் செய்த பல கைகள் முதுகில் இணைக்கப்பட்டிருக்கும். கையில் ஒரு சூலாயுதம் இருக்கும். தலையில் சவுரி முடி இணைக்கப்பட்டு தோளில் புரளும். சரிகையால் ஆன சட்டை பாவாடை அணிந்து, காலில் சலங்கையணிந்திருப்பார். அவரின் இடுப்புப் பகுதியில் கயிறு இணைக்கப்பட்டு அதனை பின்னால் ஒருவர் பிடித்துக் கொண்டு கட்டுப்படுத்திக் கொண்டிருப்பார். இல்லையென்றால் சூலாயுதத்தால் அரக்கனைக் குத்திவிடுவார் போலத் தெரியும். அவர் முன்னால் அரக்கன் வேடமிட்ட ஒருவர் மீசை முறுக்கி, கூந்தல் பரப்பி சரிகைச் சட்டையும், சரிகை டிரவுசரும் அணிந்து காலில் சலங்கையும், கையில் ஒரு பட்டாக் கத்தியும் வைத்துக் கொண்டு காளிக்குப் போக்குக்காட்டிக் கொண்டிருப்பார். ஆனால் அவருக்கு எந்தக்கட்டுப்பாடும் இருக்காது. என்னடா இது கடவுளுக்கு வந்த சோதனை? காளியைக் கட்டுப்படுத்த பின்னால் ஒருவர், அரக்கனைக் கட்டுப்படுத்த ஒருவருமில்லையே என்று நினைத்திருக்கிறேன். காளியின் ஆவேசம் பெரிதாக இருக்கும். அரக்கனை இதோ சூலம் குத்தப்போகிறது போல மிக அருகில் நெருங்கியவுடன் பின்னால் இருப்பவர் ஒரு இழு இழுத்து காளியைக் கட்டுப்படுத்துவார்.
          மதுரையிலுருந்து சட்டிப்போலிஸ் என்று நாங்கள் அழைக்கும் ரிசர்வ் படையினர் ஏராளமாக வனத்திருப்பார்கள். பெருங்கலவரம் ஒன்றை எதிர்பார்த்தார்கள். அதனைப்பற்றி அடுத்த பகுதியில் சொல்கிறேன்.
தொடரும்

Thursday, February 28, 2019

மறைக்கப்பட்ட இந்தியா !!!! படித்ததில் பிடித்தது

 மறைக்கப்பட்ட இந்தியா,எஸ் ராமகிருஷ்ணன் விகடன் பிரசுரம்.

          எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் ஒரு தேர்ந்த எழுத்தாளர், நல்ல பேச்சாளர். அவருடைய எழுத்து, படிக்கும் வாசகர்களுக்கு வெறும் பொழுதுபோக்குத்தரும் எழுத்தல்ல. மாறாக அறிவுக்களஞ்சியங்களை அள்ளித்தருபவை. அதற்காக அவர் செய்யும் உழைப்பு அபாரம். நூறு நூல்களைப் படிக்கும் அளவுக்கான விஷயங்கள் அவருடைய ஒரு புத்தகத்தில் இருக்கும். ஏனென்றால் அத்தனை புத்தகங்களையும் அவர் படித்து அதன் சாராம்சத்தை நமக்குத்  தருவார். அப்படி எழுதப்பட்ட ஒரு புத்தகம்தான், "மறைக்கப்பட்ட இந்தியா". நமது நாட்டைப்பற்றியும் அதன் வரலாற்றில் மறைந்துபோன , மறைக்கப்பட்ட விஷயங்களை மட்டுமே ஆராய்ச்சி செய்தால் கூட நமக்கு இந்த ஒரு ஜென்மம் போதாது.

எஸ் ராமகிருஷ்ணன்
          இந்தப் புத்தகம் கட்டுரைகளாக விகடனில் வந்தபோது, எப்படியும் முழுப் புத்தகமாய் வரும்போது படித்துக் கொள்ளலாம் என்று விட்டுவிட்டதை மறக்காமல் விகடன் அலுவலகம் சென்று  வாங்கிய பல புத்தகங்களில் இதுவும் ஒன்று.
          இந்தப்புத்தகத்தை நீங்கள் வாங்கிப்படிக்க வேண்டும் என்ற விதத்தில் இதில் படித்த சில விஷயங்களை இப்பகுதியில் கோடிட்டுக் காட்ட விழைகிறேன்.
1.   நீண்ட மீசையுடன் பார்த்த யுவான் சுவாங்கின் மீசையில்லாத படத்தைப் பார்த்தேன். சீனாவில் இருந்து வந்த அவர் நாலாந்தா பல்கலைக் கழகத்தில் போதித்து குப்தர் காலத்தில் 100 கிராமங்களை பரிசாகப் பெற்றிருக்கிறார்.
2.   ரபீந்திரநாத் தாகூர் 1911ல் எழுதிய நமது தேசிய கீதம் அவர் எழுதிய முழுப் பாடலில் ஒரு பத்தி மட்டும்தான். அதோடு பங்களாதேஷின் தேசீய கீதத்தையும் அவர்தான் எழுதியிருக்கிறார். (அமர் ஷோனார் பாங்க்ளா). 1919ல் மார்கரட் கசின் (யாரோட கசின்னு கேட்காதீங்க பாஸ்) போட்ட மெட்டுதான் இன்னும் பாடப்படும் மெட்டு நேதாஜியின் INA-வில் பாடப்பட்டது. இதற்கு தன் பேன்டு (Band) மூலம் இசையமைத்து தங்கப்பதக்கம் பெற்றார் கேப்டன் ராம்சிங்.
3.   ஆனால் 1947ல் சுதந்திரம் வாங்கிய இரவில் பாடப்பட்டது, மகாகவி இக்பால் எழுதிய, "சாரே ஜஹான் கி அச்சா" என்ற பாடல் மற்றும் பக்கிம் சட்டர்ஜி இயற்றிய "வந்தே மாதரம்" பாடல்தான்.
4.   தேசியக் கொடி பிறந்த கதையினையும் அதற்கு முன்னால் பயன்படுத்தப்பட்ட பல்வேறு கொடிகளைப் பற்றியும் சுவைபட விளக்குகிறார்.
5.   டெல்லியின் கிராண்ட் டிரங்க் ரோடு முதன்முதலில் சந்திரகுப்த மெளரியர் காலத்தில் உருவாக்கப்பட்டு இன்றுவரை பயன்பாட்டில் இருக்கிறது. இந்த விவரங்கள் கிரேக்க தூதுவர் ‘மெகஸ்தனிஸ்’ எழுதிய ‘இண்டிகா’ என்ற நூலில் காணப்படுகிறது. அதே போல தமிழகத்தில் நீண்ட நெடிய ராஜபாதை அமைத்தவர் ராணி மங்கம்மாவாம். அதன் வழியில் பயணிகள் தங்கிச் செல்ல பல சத்திரங்களையும் அமைத்திருக்கிறார்.
6.   அழிந்துபோன டாக்கா மஸ்லின் பற்றி பல தகவல்களைச் சொல்லுகிறார். முழு ஆடையும் மோதிரத்திற்குள் நுழையும் அளவுக்கு மென்மையாக இருக்குமாம். அதுமட்டுமல்ல பத்து முழம் சேலை ஒரு தீப்பெட்டிக்குள் அடங்கி விடுமாம். நம்முடைய துணிகள்  ஆயிரம் ஆண்டுகள் முன்னமே வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. அதுபோலவே ஆரணி மஸ்லின் என்று ஆந்திராவின் மசூலிப்பட்டணத்தில் உருவாக்கப்பட்டதாம். மசூலிப் பட்டினத்தில் உருவானதால் தான் அதன் பெயர் மஸ்லின் என்று ஆனதாம். பிரிட்டிஷ் ஆட்சியில் இதற்கெல்லாம் முடிவு கட்டப்பட்டது.
7.   ராஜாராம் மோகன்ராய் தோற்றுவித்த பிரம்ம சமாஜத்தின் முக்கிய கொள்கைகளாக, மூடநம்பிக்கை ஒழிப்பு, ஒன்றே குலம், பெண்கல்வி, விதவை மறுமணம், பால்ய விவாகம் ஒழித்தல், சம வேலைவாய்ப்பு, சம ஊதியம் மற்றும் தேசிய உணர்வை ஊட்டுதல் என பல முற்போக்கு சிந்தனைகள் இருந்திருக்கின்றன. அது இன்னும் வளர்ந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். இன்னும் நியூயார்க்கில் கூட பிரம்ம சமாஜம் இருக்கிறது. அவர்களின் கொள்கைகள் இன்னும் அப்படியே இருக்கின்றனவா என்று தெரியவில்லை.
8.   1942ல் வெள்ளையனே வெளியேறு மற்றும் த்துழையாமை இயக்கத்தை காந்தி துவங்கியபோது, காந்தி, கஸ்தூரிபாய், நேரு ஆகியோர் கைது செய்யப்பட்டனர். தமிழ்நாட்டில் காமராஜர், கக்கன், ம.பொ.சி ஆகியோர் கைது செய்யப்பட்டு உணவில் சிறுநீரைக் கலந்து கொடுத்தனர் என்பதை வாசிக்கும் போது உள்ளம் கொதித்தது.
9.   ஜொராஷ்ட்டிரிய மதத்தை ஃபாலோ செய்யும் பார்சிகள்  எப்படி ஈரானிலிருந்து இந்தியா வந்து செட்டில் ஆனார்கள் என்பதை பல தகவல்களோடு விளக்குகிறார். பார்சிகளில் முக்கிய பிரமுகர்களைப் பற்றித் தெரிந்து ஆச்சரியப்பட்டேன். தாதாபாய் நெளரோஜி, ஹோமிபாபா, ஜூபின் மேத்தா, பில்ட் மார்ஷல் சாம் மானெக்சா,  டாட்டா மற்றும் கோத்ரெஜ்  ஆகியோர் அவர்களுள் சிலர். இப்பொழுது தெரிகிறது பார்சிகள் எப்படி முன்னேறியுள்ளனர் என்று.
10.                நேதாஜி வீரர்களில் 25 பேருக்கு ஜப்பானில் பயிற்சி அளிக்கப்பட்டது புதுச்செய்தி. நேதாஜியின் மறைவு இன்றுவரை புதிராகவே இருக்கிறது.
11.                தாகூர் தன் சொந்த செலவில் ஆரம்பித்த  சாந்திநிகேதன் இப்போது விஸ்வபாரதி பல்கலைக்கழகமாக விரிவடைந்திருக்கிறது. அமர்த்திபா சென், சத்யஜித்ரே, இந்திராகாந்தி ஆகியோர் அதில் படித்து வெளியே வந்த பிரபலங்களில் சிலர்.
12.                இண்டிகோ என்று சொல்லப்படும் நீலவண்ணம் உருவாக்க அந்தக்காலத்தில் பதினாறு லட்சம் ஏக்கரில் அவுரித்தோட்டம் அமைத்து வெள்ளையர்கள் கொள்ளை லாபம் சம்பாதித்தனர். அதில் வேலை செய்த விவசாயிகளை கொத்தடிமைகள் போல நடத்தினர். அதுமட்டுமல்லாமல் ஆறுலட்சம் ஏக்கரில் அபினிச்செடிகள் பயிரிட்டு உலக முழுதும் ஏற்றுமதி செய்தார்கள். குறிப்பாக அதனால் சைனாவில் நடந்த ஓப்பியம் போர் உங்களுக்கு நினைவிருக்கும் இதனை எதிர்த்துப் போராடி பெற்ற வெற்றியே காந்திக்குக் கிடைத்த முதல் வெற்றி.
13.                யுவான் சுவாங், பாஹியான் போல பல ரஷ்ய யாத்திரிகர்களும் இந்தியாவுக்கு வந்தது புதுச் செய்தி.
14.                பிரிட்டிஷ் காலத்தில் மணமகன்களைத் தேடி, கப்பல் நிறைய பெண்கள் வந்து இந்தியாவில் இறங்கினார்களாம்.பிரிட்டிஷ் அரசே அவர்களுக்கு வருடத்திற்கு 30 பவுண்டு கொடுத்ததாம், பெரும்பாலானோர் தங்கள் ஜோடிகளைத் தேர்ந்தெடுத்துவிட, மற்றவர் இங்கிலாந்துக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.
15.                கற்கால கல் ஆயுதங்கள் சென்னை அருகில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. அவர்களின் வயது 5 லட்சம் ஆண்டுகள். கல்தோன்றா மண் தோன்றாக் காலத்தில் பிறந்தது தமிழினம் என்பது சரிதான்.
       ஆச்சரியப்படுமளவுக்கு நமக்குத் தெரியாத பல விஷயங்களை அலசி ஆராய்ந்து சுருக்கமாக இந்நூலில் வடித்துள்ளார்.தவிர நாம் படிக்க வேண்டிய பல புத்தகங்களை நமக்கு பரிந்துரையும் செய்திருக்கிறார். அதுதான் சொன்னேனே. அதையெல்லாம் படிக்க ஒரு ஆயுள் போதவே போதாது. ஆனால்குறைந்த பட்சம் இந்தப் புத்தகத்தையாவது  படிக்கலாம்.
முற்றும்