Monday, September 29, 2014

இளையராஜாவின் மோகனத்தாலாட்டு !!!!!!!!!!!!!

எழுபதுகளில் இளையராஜா பாட்டு-2கண்ணன் ஒரு கைக்குழந்தை !!!

1976-ல் வெளியான பத்ரகாளி என்னும் படத்தில்  வெளிவந்த இளையராஜாவின் தேனாய் இனிக்கும் பாடல் "கண்ணன் ஒரு கைக்குழந்தை". பாடலை ஒரு தடவை கேட்டுவிடுவோம்.

இசைக்கோர்வை:
சலசலத்து ஓடும் தெள்ளிய நீரோடையில் நீர்க்குமிழிகள் எழுப்பும் இசைபோன்ற ஷைலஃபோன் / ஜலதரங்கம் இசை ஆரம்ப இசையாக (Prelude) காதோரம் கிச்சுக்கிச்சு மூட்டி ஒரு கிடார் கார்டோடு (Chord) நிறுத்த, "கண்ணன் ஒரு கைக்குழந்தை", என்று பி.சுசிலாவின் தேன் தடவிய குரலில் பாடல் ஆரம்பிக்கிறது. தபேலா வால்ட்ஸ் நடையில் இணைய ஆரம்பமே அமர்க்களமாக இருக்கிறது. முழுப் பல்லவியும் பாடி நிறுத்தி பல்லவி மீண்டும் ஒருமுறை பாடப்பட, “கண்கள் சிந்தும் பூங்கவிதை” -யின் முடிவில் த ராராராராரா  என்று வயலின்களின் கூட்டிசை ஒலிப்பது பாடலுக்கு ஒரு மேஜிக் மோமண்ட்  என்று சொல்லலாம். அதே ராகம் வரும் இன்னும் சில இடங்களில் அவ்வயலின் இசை மீண்டும் வருகிறது.
முதல் BGM-ல் புல்லாங்குழல் வர சிதார் / வீணை இணைந்து  பின் ரிதமுக்கு பாங்கோஸ் சேர்ந்து கொள்ள, திரும்பவும் வீணையுடன் முடிய "உன் மடியில்  நானுறங்க" என்று ஜேசுதாஸின் கந்தர்வக் குரல் கொஞ்சுகிறது. அந்தக் கொஞ்சலுக்கு பதில் சொல்லும்விதத்தில் அதே வரிகளில் சுசிலாவின் குரல் வருகிறது. இம்முறை இன்னும் கொஞ்சம் ஜோடனையுடன் வருகிறது. சரணம் முடிவில் ஒரு நான்கு தடவை வெவ்வேறு சுதியில் மணியிசை ஒலித்தவுடன், "ஏழ்பிறப்பும் இணைந்திருக்கும் சொந்தமிந்த சொந்தமம்மா" என்று ஆரம்பிக்க பின்னணி இசையாக வயலின்களும் புல்லாங்குழலும் செகண்ட்ஸில் ஒலிக்க (Seconds) பாட்டு அப்படியே நிறைந்து பரவுகிறது.  
இரண்டாவது BGM-ல் திரும்பவும் புல்லாங்குழல், வீணை மற்றும்  தபேலாவுடன் இணைந்து வந்து முடிய "மஞ்சள் கொண்டு நீராடி மைக்குழலில் பூச்சூடி" என்று தலைவி பாட "வஞ்சி  மகள் வரும்போது" என்று தலைவன் மெச்சுவது வந்து, பல்லவி திரும்பவர "ஆராரிரோ" என்று தலைவனும் தலைவியும் மாறி மாறித் தாலாட்ட முடிகிறது பாடல்.

குரல் : P.சுசிலா.

P.சுசிலாவின் சமீபத்திய நிகழ்ச்சிகளைப் பார்த்திருக்கிறேன். இத்தனை வருடங்கள் தமிழ் நாட்டை ஒட்டி தமிழ்ப் பாடல்களை பாடியும் தமிழ் இன்னும் அவருக்கு பேசவரவில்லை. ஆனால் பாடும்போது பல தமிழ்ப் பாடகர்களையும் மிஞ்சும் அளவுக்கு உச்சரிப்பு சுத்தமா வருகிறது. பெண் பாடகிகளில் உச்சரிப்பில் சுசிலாவை  மிஞ்ச யாருமில்லை. அதற்குமேல்  இருக்கிற குரலினிமை. ஒரு குடும்பப் பெண்ணுக்கு மிகவும் பாந்தமாக ஒலிக்கும் இனிய குரல். பிசிறு தட்டாத சலிக்காத குரல் இவரது தனித்தன்மை. அதோடு இலகுவாக விழும் சங்கதிகள், இனிய பிர்ஹாக்கள் மெய்சிலிர்க்க வைக்கிறது. தெலுங்கைத் தாய்மொழியாக கொண்டவர் தானே சுசிலா என்று நினைக்கும்போது இது மிகுந்த   ஆச்சரியத்தை தருகிறது

கே.ஜே.ஜேசுதாஸ்.

தமிழில் எழுதுவதிலும் சரி, பேசுவதிலும் சரி ஸ்பெல்லிங் மிஸ்டேக் விட்டால் எனக்கு கெட்டகோபம் வந்துவிடும். தமிழை தமில் என்றும் டமில் என்றும் பேசும் தமிழர்கள் தானே நம் நாட்டில் அதிகம். அதுவும் சில அரசியல் தலைவர்கள். அதிலும் பாடலில் அப்படிப்பாடிய எந்தப் பாடல்களையும் புறக்கணித்து விடுவேன். சில AR.ரகுமான் பாடிய பாடல்கள் உட்பட. அதனால்தான் ஜேசுதாஸ் பாடிய சில பாடல்கள் கடுப்பை உண்டாக்கும். ஆனால் அதையெல்லாம் மீறி இந்தாளின் குரலில் ஒரு வசீகரம் இருப்பதை ஒத்துக் கொண்டுதான் ஆகவேண்டும். அதிலும் இந்தப் பாடலில் எந்த ஒரு உச்சரிப்புக் குறையும் இல்லாமல் தெளிவாக கனிவைக் குழைத்து வருகிறது. பாட்டின் உச்சரிப்பு சில சமயம் இசையமைப்பாளர் மற்றும் பாடலாசிரியர்சொல்லிக் கொடுப்பதிலும் இருக்கிறது.

பாடல் வரிகள்:

கவிஞர்  வாலி எழுதிய ஆகச்சிறந்த கவிதைப் பாடல்களில்  இது மிகவும்  முக்கியமான ஒன்று. ஒரு பல்லவி இரண்டு அல்லது மூன்று சரணங்கள் என்ற திரைப்பாடலின் பொதுவான விதியை மீறி பல சரணங்கள் உள்ளுக்குள் பிணைந்து வருகிறது இந்தப்பாடலில். தலைவனை குழந்தையாக நினைத்து தலைவி பாடும் தாலாட்டு போல் அமைந்திருக்கிறது.குறிப்பாக இறைவன் கொடுத்த வரத்தால் மனைவி அமைந்துவிட்டால் சொர்க்கம் இங்கேயே கிட்டிவிடுமே. நான் பெரும் தவம் செய்தபடியால்  நீ எனக்கு  மனைவியாய் அமைந்தாய் , ஏழு பிறவிகளிலும் தொடந்து வரும் சொந்தம் இது .நான் உயிரோடு இருக்கும் வரை நீயே ஏன் தஞ்சம் என்கிறார் கவிஞர் . இந்த வரிகளைக் கவனியுங்கள்.
உன் மடியில் நானுறங்க
கண்ணிரண்டும் தான் மயங்க
என்ன தவம் செய்தேனோ
என்ன வென்று சொல்வேனோ.

ஏழ்பிறப்பும் இணைந்திருக்கும்
சொந்தமிந்த சொந்தமம்மா 
வாழ்விருக்கும் நாள் வரைக்கும்
தஞ்சம் உந்தன் நெஞ்சமம்மா.
அடுத்த பிறவியில் எனக்கு நம்பிக்கை இல்லையென்றாலும் , “ஏழ்பிறப்பும் இணைந்திருக்கும் சொந்தமிந்த சொந்தமம்மா”,  என்ற வரிகளை கேட்கும் போது மனதை பிசைகிறது.
மனைவியை தாயாக நினைத்ததற்கு ஒருபடி மேலே அம்மனாகவும் தன்னை பக்தனாகவும் உருவகித்து தலைவன் பாடும் வரியாக அமைகிறது கீழே உள்ளவரிகள். 

காயத்ரி மந்திரத்தை
உச்சரிக்கும் பக்தனம்மா
கேட்கும் வரம் கிடைக்கும்வரை
கண்ணுறக்கம் மறந்ததம்மா.

இத்திரைப்படத்தில் தலைவியின் பெயர் காயத்ரி. கவிஞரின் கற்பனை எப்படியெல்லாம் விரிந்திருக்கிறது பாருங்கள்.

ராகம்:
இளையராஜாவால் வெறும் கிராமத்து இசைமட்டும் தான் கொடுக்க முடியும். பறையிசை, டப்பாங்குத்து, கூத்துப்பாட்டுகள் தான் முடியும். ஒன்றிரண்டு படங்களுக்கு மேல் தாங்காது  என்ற அனைத்து அனுமானங்களையும் துரத்தியடித்து, மோகனராகத்தில் அமைந்த அருமையான மெல்லிசைப் பாடல் அமைத்து அழியாப்புகழ் பெற்றார் இளையராஜா. அவர் மெட்டமைத்த மோகன ராகப் பாடல்களில் சில பாடல்களை கீழே தருகிறேன்.
1. நிலவு தூங்கும் நேரம், நினைவு தூங்கிடாது.
2. பூவில் வண்டு கூடும் 
3. ஒரு ராகம் பாடலோடு.  
பின்குறிப்பு : இளையராஜாவின் இந்த பாடலின் டியூன், முதன் முதலில் நடிகர் விஜயின் அம்மா  ஷோபா சந்திரசேகர் அவர்களின் நாடகத்திற்கு மெட்டுப்போட்டு  , கங்கை அமரனால் எழுதப்பட்ட , மூன்று தமிழ் காவியமும்  முருகனுக்கு கொட்டிலடி " என்ற அதே மெட்டில் போட்டதாக  இளையராஜா ஒரு இசை  நிகழ்ச்சியில்   சொல்வதை   நான் கேட்டிருக்கிறேன்.

இன்னும் வரும் >>>>>>>>>>>>>>>>>


Thursday, September 25, 2014

பிளேபாய்ஸ்சும் உசிலம்பட்டி பெண்குட்டியும் !!!!!!!!!!!

With Minisam and Vanaraj in front of Washburn Hall

"என்னடா காலங்காத்தால வந்திருக்கிற"
"வெள்ளிக்கிழமை சாயந்திரம் உசிலம்பட்டில கச்சேரி. நாலு மணிக்கெல்லாம் ரெடியா இரு", என்றான் குச்சி. குச்சி, டிரம்ஸ் வாசிப்பவன், எங்கள் குழுத்தலைவன், டிரம்ஸ் வாசிக்கிற குச்சி மாதிரியே ஒல்லியா இருக்கிறதால அவன் செல்லப் பெயர் குச்சி அவனுடைய உண்மையான பேர் மணி என்ற ஆனந்தராஜ். இப்படி கிட்டத்தட்ட எல்லோருக்கும் பேர் உண்டு.
"உசிலம்பட்டியா, என் பக்கத்து ஊருதான். டேய் ஒழுங்கா பிராக்டிஸ் பண்ணி ஒழுங்கா பாடுங்க, குறிப்பா, நேரத்துக்கு போகனும் டோய் இல்லேன்னா வெட்டிருவாய்ங்க”,என்றேன்.
இந்தப்பயலுக ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி, ஒருத்தனும் யார் சொல்றதையும் கேட்க மாட்டாய்ங்க. விளையாட்டுப்பயக, அதனால்தான் பேர் 'பிளேபாய்ஸ் இசைக்குழு" (Playboys Orchestra).  ப்ளே பாய்ஸ்னா தப்பா எடுத்துக்காதீங்க, ம்ஹீம் அந்தத் தைரியமெல்லாம் யாருக்கும் கிடையாது. தவிர எல்லோருமே பாய்ஸ்ங்கிறதால அந்தப்பேர்.
“அமெரிக்கன் காலேஜ் இசைக்குழு”, காலங்காலமாக புகழ் பெற்றது. ஒவ்வொரு வருடமும் டிகிரி முடித்து பையன்கள் போகும்போது, ஆடிட்டோரியத்தில் ஆடிஷன் வைத்து, பாடுவதற்கு, மற்றும் கருவிகள் வாசிப்பதற்கு ஆள் எடுப்பாங்க. ஒரே கூட்டமா இருக்கும். குறிப்பா கிடார் வாசிப்பதற்கும், பாடுவதற்கும் பலத்த போட்டி இருக்கும். அப்படி தேர்ந்தெடுக்கப்படும் இசைக்குழு, எங்கெங்கெல்லாம் இன்டர் காலேஜ் போட்டி நடக்குமோ அங்கெல்லாம் போய் பரிசு வாங்கிட்டு வந்துருவோம். அமெரிக்கன் கல்லூரி ஆர்கெஸ்ட்ரா வருதுன்னா, முதல் பரிசு அதுக்குத்தான்னு எல்லோருக்கும் தெரியும். இப்படி நாங்க ஃபேமஸ் ஆனதால, காலேஜ்ல எந்த விழா நடந்தாலும் எங்க கச்சேரி நடக்கும். பல ஊர்களிலிருந்து வந்து படிச்ச மாணவர்கள் எங்களை அவங்க ஊர் திருவிழாவுக்கு கச்சேரி வாசிக்க கூப்பிட்டாங்க. அப்படியே ரொம்ப பிரபலமாகி, ஒரு கட்டத்துல தமிழ் நாட்டுல பல பெரிய கச்சேரிகள் வாசிக்க ஆரம்பிச்சோம்.  
Babu, Muthramalingam,Mani,Mini Sam,Shaji Simon,Vanaraj,Prabahar -Playboys met after 25 years in Kodaikanal-May 2012
எல்லோருக்கும் இளவயது, மேடையில் நாங்கள் நின்றாலே அவ்வளவு ஜோரா இருக்கும். சின்னப் பையன்க மேடையில தப்பு விட்டாலும் பெரிசா எடுத்துக்க மாட்டங்க. ஆனா சும்மா சொல்லக்கூடாது, எல்லாரும் நல்லாவே வாசிப்போம். புளு ஜீன்ஸ் பேன்ட்டும், வெள்ளைச் சட்டையில் பிளேபாய்ஸ் என்று ஸ்டிக்கர் இருக்கும் அதான் எங்க யூனிபார்ம்.
ஆடிஷன் இல்லாம சேர்ந்த ஆள் நான் ஒருத்தன்தான். பின்ன ஆடிஷன்லா வெச்சா, என்னை எவன் எடுப்பான்? அப்படி என்ன இசைக்கருவின்னு கேட்கறீங்களா? நான்  வாசிச்சது டிரிப்பிள் காங்கோ. அப்படின்னா என்னன்னு படத்தைப் பார்த்து தெரிஞ்சிக்கங்க. 

இளையராஜாவின் பொற்காலமான 80 களில்  வந்த கிட்டத்தட்ட எல்லாப் பாடல்களிலும் இந்த இசைக்கருவி பயன்படுத்தப்பட்டிருக்கும். இதை வாசிப்பதால எல்லோரும் என்னை "முக்கொட்டு"ன்னு கூப்பிடுவாய்ங்க. இதை எங்க கத்துக்கிட்டேன்னு கேட்கறீங்களா? நான் எங்க கத்துக்கிட்டேன்?. எல்லாம் இந்த ப்ரபாவால  வந்தது. இந்தாளுக்கு பல  திறமைகள் இருப்பதால நாங்கள்லாம் இவரைப் பார்த்து ஆச்சரியப்படுவோம். காலேஜ் போட்டின்னு வந்தா, ஓவியப் போட்டி, ரங்கோலி, பாட்டுப் போட்டி, கவிதைப் போட்டின்னு எல்லாத்திலும் முதல் பரிசு. நல்லா மிமிக்கிரியும் பண்ணுவார். அந்த சமயத்தில இவரோட கதை ஒண்ணு ஆனந்த விகடன்ல வேற முதல் பரிசு வாங்கி பிரசுரம் ஆனதால எல்லோருக்கும் ஹீரோ ஆயிட்டார். பார்க்கறதுக்கும்  ஹீரோ மாதிரிதான் இருப்பார். எனக்கு ஒரு வருஷம் சீனியர். சமீபத்தில் வெளி வந்த சிநேகாவின் காதலர்கள்" என்ற திரைப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.  
Prabahar -Professor -Music Director
நான் முதலாண்டு படிக்கும்போது, காலேஜ் ஆர்கெஸ்ட்ராவுக்கு காங்கோ வாசிச்சது இவர்தான். விரல்களை நாசூக்காகவும் லாவகமாகவும் பிரயோகித்து "கிட்டக்கிடகிட கிட்டக்கிடகிட" என்று இளையராஜாவின் பாப்புலர் பீட்டை இவர் வாசிக்கும்போது பரவசமாய்ப் பார்த்தேன். இவர் நோகாமா வாசிச்சாலும் நல்லா இசை வருகிறதேன்னு ஒரு நாள் நான் வாசித்துப் பார்த்தேன். கொஞ்சம் எனக்கும் வந்தது. ஆனா கையெல்லாம் வீங்கிப்போச்சு. அப்புறம் சில நிகழ்ச்சிகளில்  ஓரிரு பாட்டுகளுக்கு எனக்கு வாசிக்கக் கொடுத்தார். அவர் நன்றாக பாடுவார். குறிப்பாக இளையராஜா குரல் அவருக்கு நன்றாக பொருந்தும். அச்சமயம் இளையராஜா நிறைய பாடல்கள் பாட ஆரம்பிக்க, ப்ரபா முற்றிலுமாக காங்கோவைக் கைவிட, அவர்களுக்கு வேறு வழியின்றி என்னைச் சேர்த்துக் கொண்டார்கள். ஒன்றும் பிரமாதமாக வாசிக்கத் தெரியாது. குச்சிமணி வந்து காங்கோவை செட்பண்ணி, நட்டை முறுக்கி, சுதி சேர்த்துக் கொடுத்து, பாடலின் பீட்டைச் சொல்லிக் கொடுப்பான். நான் அப்படியே வாசித்துவிடுவேன். எனக்கு கிடாரிஸ்ட் ஆகனும்னு தான் ஆசை. கொஞ்சம் கொஞ்சம் ரிதம் வாசிப்பேன். நான் மட்டும் காங்கோவில உட்காரல, பெரிய கிட்டாரிஸ்ட் அல்லது பாடகராக ஆயிருப்பேன். ம் என்ன சொல்றது எல்லாம் ப்ரபா செஞ்ச சதி.
ஸ்டான்டர்ட் வேன் வந்து சேர மணி ஆறாயிருச்சி. "என்னடா குச்சி லேட்டாயிருச்சு", என்றேன். "திருவிழாக் காலம்கிறதால வேன் கிடைக்கலடா" என்றான். வாஸ்பர்னில் தங்கியிருந்த நானும் ப்ரபாவும் ரெடியா இருந்தோம். ஜேசுதாஸ் குரல் ஷாஜி சைமன் கொஞ்சம் லேட்டா வந்தான். அங்கிருந்து வேலஸ் ஹால் போய் எஸ்பிபி குரல் வனராஜையும், பேஸ்கிட்டார் ஜேம்சையும் கூப்பிட்டுக்கொண்டு கிளம்பினோம். St.மேரீஸ் சர்ச் பக்கத்தில் லீட் கிடார் Y.ஜேம்ஸ் ஏறிக்கொண்டான். கீ போர்டு ரவியும் அங்குதான் இருந்தான். புல்லாங்குழல் டிரம்பட், தபேலா வாசிக்க வெளியிலிருந்து ஆட்களை குச்சி அரேஞ்ச் பண்ணிருந்தான். அப்புறம் மேலவாசல்ல டிஎம்ஸ் குரல் கிடதா (பட்டப்பெயர்தான், தாக்கிட தரிகிட கிடதான்னு சுரம் பாடுவதால கிடதா. அவர் பேர் செல்வராஜ்). ஜானகி குரல் ஹரிநாத் பாபு (ஆமா பையன்தான் லேசா குரலை மாத்தி தேன் மாதிரி பாடுவான். பேபின்னு செல்லமா கூப்பிடுவோம், பார்க்கவும் ஒடிசலா சிவப்பா அழகா இருப்பான்.)
Baby yenra Harinath 
அப்பதான் குச்சிமணி சொன்னான், "டேய் உசிலம்பட்டிக்கு பெண் பாடகி கண்டிப்பா வேணும்னு சொன்னாங்க, நாம வஹிதா வைக் கூப்பிடுவோம்" .
"மணி, நேரமாயிருச்சுடா, உசிலம்பட்டிரா", என்றேன். இதற்கிடையில் நியூலிங்கம் சவுண்ட் சர்வீசையையும் ஏத்திக் கொண்டு வஹிதா வீட்டுக்குப் போனா, அதுக்கு காய்ச்சல் வரமுடியாதுன்னு சொல்லிருச்சு.
ஒரு வழியா 11 மணிக்குத்தான் போய்ச்சேர்ந்தோம். எனக்கு கைகாலெல்லாம் நடுக்கம், வந்தது லேட், 9 மணிக்கு வரச்சொன்னா 11 மணிக்குப்போனதோடு பெண் பாடகியும் இல்ல. உசிலம்பட்டியில் பாட ஒரு பெண்குட்டி இல்லையேன்னு ஒரே கலவரமாப்போச்சு. பெண் குரலில் பாட எங்க பேபி இருந்தாலும் மேடையில ஒரு கிளாமருக்கு ஒரு பெண் அவசியம் வேணும் . கேட்டா என்ன சொல்றதுன்னு பயந்து கிட்டே இருந்தோம் .ஒரு வழியா  கருவிகளையும் மைக்குகளையும் செட் பண்ணிட்டு, பிரபா வந்து நன்றி சொல்லி ஆரம்பிக்க, வனா மேடைக்கு வந்தார். ஆர்கனில் லேசாக சோக கீதம் வாசிக்க, வனா சொன்னார். "எங்கள் குழுவின் பாடகிக்கு ஆக்சிடென்ட் ஆகி, ஆஸ்பத்திரியில் கவலைக்கிடமாக இருப்பதைப் போய் பார்த்துவிட்டு, வாக்கு மாறக்கூடாது என்று இங்கு வந்திருக்கிறோம். லேட்டாயிருச்சு மன்னித்துவிடுங்கள்,"என்றாரே பார்க்கலாம் ஒரே பொய்யில் ரெண்டு பிராபளத்தையும், சால்வ் செய்துட்டார். அப்புறமென்ன 'நாதமெனும் கோவிலிலே" என்று  பேபி பாட கச்சேரி களை கட்ட ஆரம்பிச்சது. உசிலம்பட்டிக்காரங்க வாயைத்திறக்கவேயில்லை.
இப்படி “பிளேபாய்ஸ்” செஞ்ச அட்டகாச  அக்கிரமங்களை  அப்பப்ப சொல்றேன். மீண்டும் விரைவில் சந்திக்கலாம் .

இப்போதைக்கு முற்றும், ஆனா தொடரும் .

Monday, September 22, 2014

இளையராஜாவின் பறை இசை !!!!!!!!!!!!!!!!

எழுபதுகளில் இளையராஜா பாட்டு-1 மச்சானைப் பாத்தீங்களாஇளையராஜா என்றதும் 80-களில் அவர் இசையமைத்த அற்புதமான பாடல்கள் நினைவுக்குவரும். ஆனால் அவர் ஆரம்பக் கட்டத்தில் எழுபதுகளில் இசையமைத்த சில பாடல்கள் இதுவும் இளையராஜாவின் பாடல்கள்தானா என்று ஆச்சரியப்படுத்தும். அத்தகைய பாடல்களை மீண்டும் நினைவுபடுத்தும் முயற்சியே இது.
"அன்னக்கிளி" இளையராஜா இசையமைத்த முதல் படமென்பதும் அதன் பாடல்கள் எல்லோருக்கும் நன்கு தெரியும்என்றாலும் ஆரம்பத்திலிருந்து வரலாம் என்பதால் இந்தப் படத்தில் ஒரு பாடலை மட்டும் எடுத்துக் கொள்ளலாம். 1976ல் வெளிவந்து பட்டி தொட்டிகளை கலக்கிய "மச்சானைப் பாத்தீங்களா" என்ற பாடல் திரையிசையை முற்றிலுமாக மாற்றி ஒரு புதிய அத்தியாயத்தைத் துவங்கிய பாடல் அல்லவா?பாட்டை ஒரு தடவை கேட்டு விடுவோம்.

கே.வி.மகாதேவனுக்குப்பிறகு, ஜி.கே.வெங்கடேஷ், குமார், வேதாஆகிய பல சமகால இசையமைப்பாளர்களையெல்லாம் பின்னுக்குத்தள்ளி, மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், ராஜாவாக  கோலோச்சி வந்த சமயம். அதன்பின் வந்த ஒரு சிலரும் அந்த பசுமை மலையின் ஒரு மரமாகவோ இல்லை கிளையாகவோ மட்டுமே பரிணமிக்க முடிந்தது.
 ஆனால் இதே பட்டறையில் பயின்றாலும், கிராமிய சூழ்நிலையில் வளர்ந்ததால் ஒரு நல்ல கறைபடாத தனித்திறமையுடன், தெளிந்த நீரோடையாய் கிளம்பி, காட்டாறாய் கரைபுரண்டு வந்த இசை வெள்ளமாய் வந்தவர் இன்னொரு ராஜா. அவர்தான் இளையராஜா.
திரைப்பட ரசிகர்களை கிராமத்திற்கு அழைத்துச் சென்றவர் பாரதிராஜா என்றால் கிராமத்தின் தெம்மாங்கை நகரத்திற்கு எடுத்து வந்தவர் இளையராஜா. அந்த தனித்துவம் தான் 1000 படங்களுக்கு  இசையமைத்து உலக சாதனை புரிய வைத்தது.
கீழே உள்ள லின்க்கில் பாடலை ஒரு தடவை கேட்போம்.
"லாலி லாலிலலோ", என்று ஆரம்பிக்கும் பாடல், "ஏ மச்சானை ஏ மச்சானை" என்று தலைவி தலைவனைத் தேடும் ஏக்கமும் தாபமும் வழிந்தோட துவங்குகிறது. தலைவியின் கூவும் குரலின் இடையில் குயில் கூவுவதை உருவகப்படுத்தும் புல்லாங்குழலும் கூவுகிறது. அதன் பின்னர் சடுதியாக கிடார் ஸ்ட்ரம்மிங் துள்ளி வர "மச்சானை பாத்தீங்களா?" என்ற அழுத்தமான கேள்வியுடன் பாடலின் பல்லவி ஆரம்பிக்க இசையின் ஆரோகண அவரோகனங்கள் அலை அலையாய் உதிக்கிறது.    
ஒரு சிறிய புல்லாங்குழல் ஆலாபனையுடன் முதல் BGM வர "வெள்ளிச்சரம் புன்னகையில்" என்று சரணம் ஆரம்பிக்க பல இசைக் கருவிகள் இணைகின்றன. குறிப்பாக தபேலோ ஒரு உருட்டலுடன் வேக நடையில் இணைய, கேட்பவரை தாளம் போட வைக்கிறது.
சரணத்தின் பின்பகுதி, "ஊர்கோல மேகங்களே" என்று பல்லவியின் அதே ராகத்தில் வர, எதிர்பாராத திருப்பமாக உருமியும் தவிலும் பட்டையைக்கிளப்ப துள்ளியெழுகிறது பாடல். சரணத்தின் ஆரம்பத்தில் தாளம் போடவைத்த பாடல், சரணத்தின் பின்பகுதியில் கொஞ்சம் அசந்தால் எழுந்து ஆடத்தூண்டுகிறது.
இரண்டாவது BGM-ல் ஆச்சரியமாக மோர்சிங்கும் சாரங்கியும் காதை வருட இரண்டாவது சரணம் "பச்சைப்புள்ளை போல்" என்று ஆரம்பிக்கிறது. அட தபேலோவின் நடை குதிரையின் மெதுநடையாய் வர, ராகமோ முதல் சரணத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டு ஒலிக்கிறது. பின்னர் மறுபாதியில் "கஸ்தூரிக் கலைமான்களே"வில் திரும்பவும் உறுமியும் தவிலும் சேர்ந்துகொள்ள மீண்டும் துடிப்பும் கொண்டாட்டமும் திரும்புகிறது. 2ஆவது சரணத்தில் வேறு ட்யூன்/ ராகம் இருப்பது MSV சில பாடல்களில் பயன்படுத்தியிருந்தாலும், இது முற்றிலும் வேறு விதமாக இனிமையாக ஒலிக்கின்றது.
2-ஆவது சரணத்தோடு பல பாடல்கள் முடியுமென்பதால், ஐயோ பாட்டு முடியப்போகிறதோ என்ற ஏக்கத்தில் நம்மையும் நனைக்கும்போது மூன்றாவது BGM-ஆக ஷெனாய்/கிளாரினெட் எழுகிறது. இந்த ஷெனாய் இளையராஜாவின் பல்லாயிரம் பாடல்களின் டிரேட் மார்க்காக அமைகிறது. குறிப்பாக ரெண்டாவது BGM -ம்மாக வரும்.
பின்னர் இரண்டாவது சரணத்தின் அதே ராகத்தில், நடையில் மூன்றாவது சரணம் வருகிறது "கல்யாணம் பேசி கண்டாங்கிச்சேலை".
தலைவி, தலைவனைக் காணாத ஏக்கத்தில் பாடுவதோடு, ஆனால் விரைவில் அவனைப் பார்க்கப் போகிறோம், திருமணம் நடக்கவிருக்கிறது என்ற கனவுக் கொண்டாட்டத்தையும் இணைத்து நம்மை ஜிவ்வென்று உயர்த்துகிறது பாடல்.
இசைக்கருவிகள்:
எதிர்பாராத இடங்களில் எதிர்பாரா இசைக்கருவிகள் பயன்படுத்தப் படுகின்றன. குறிப்பாக சாவு இசை என்று ஒதுக்கப்பட்ட பறை இசையும் உறுமியும் திரையிசைக்கு அந்தக் கால கட்டத்தில் முற்றிலும் புதிது. விமர்சனங்களும் இதனை நோக்கியே வந்தன. ஆனால் இவையிரண்டும் நம் தமிழகத்தின் பாரம்பரிய இசைக்கருவிகள் அல்லவா? காட்டாற்று வெள்ளத்துக்கு யாராவது அணைபோட முடியுமா என்ன? எந்த இடத்திலும் தொய்வில்லாமல் "டைட்" என்று சொல்வார்கள், அப்படிப்பட்ட இசைக்கோர்ப்பு இந்தப் பாடலின் இசை.

பாடல்வரிகள்:
Panchu Arunachalam
மச்சான பாத்தீங்களா
                         விருத்தம்
 லாலிலாலி லாலோ லாலிலாலி லாலி லாலி
என் மச்சான மச்சான
                         பல்லவி
 மச்சான பாத்தீங்களா மலை வாழை தோப்புக்குள்ளே
மச்சான பாத்தீங்களா மலை வாழை தோப்புக்குள்ளே
குயிலக்கா கொஞ்சம் நீ பார்த்து சொல்லு
வந்தார காணலியே அவர் வந்தார காணலியே
                       சரணம் - 1
 வெள்ளி சரம் புன்னகையில் அல்லி வச்சேன் காணலியே
நான் அல்லி வச்சேன் காணலியே
ஊர்கோல மேகங்களே நீங்க ஒரு நாழி நில்லுங்களேன்
மயிலாடும் காட்டில் தனியாக
அவரை பார்த்தாதான் சொல்லுங்களேன்
என் ஏக்கத்தை சொல்லுங்களேன்
மச்சான பாத்தீங்களா மலை வாழை தோப்புக்குள்ளே
                        சரணம் - 2
 பச்ச புள்ள போல் அவர்பாத்து நிக்க
இச்ச கொடியாட்டம் நான் பாத்து சொக்க
பச்ச புள்ள போல் அவர்பாத்து நிக்க
இச்ச கொடியாட்டம் நான் பாத்து சொக்க
அச்சாரம் கண்டு முத்தாரம் சூட்ட
கொத்தோடு என்ன நெஞ்சோடு அல்ல
கஸ்தூரி கலை மான்களே
அவர கண்டாக்க சொல்லுங்களேன்
ரோஜாக்கள் ஆடும் தோட்டதில் அவர பாத்தாக்கா சொல்லுங்களேன்
என் ஏக்கத்தை சொல்லுங்களேன்
மச்சான பாத்தீங்களா மலை வாழை தோப்புக்குள்ளே

                       சரணம் - 3
 கல்யாணம் பேசி கண்டாங்கி சேல
தந்தாக்க என்ன மாட்டேன்னு சொல்வேன்
கல்யாணம் பேசி கண்டாங்கி சேல
தந்தாக்க என்ன மாட்டேன்னு சொல்வேன்
புது மஞ்சள் பூசி பொன் மேடை இட்டு
மன்னாதி மன்னன் மாப்பிள்ளை ஆக
மாப்பிள்ளை ஆக மாப்பிள்ளை ஆக
தல வாழ எல போடுங்க ஊர
விருந்துக்கு வர சொல்லுங்க
தல வாழ எல போடுங்க ஊர
விருந்துக்கு வர சொல்லுங்க
பூ போட்டு மஞ்சம் ஆடட்டும் கொஞ்சம்
மனசாற வாழ்த்துங்களேன் எங்க
குலம் வாழ வாழ்த்துங்களேன்
மனசாற வாழ்த்துங்களேன் எங்க
குலம் வாழ வாழ்த்துங்களேன் 


இந்தப்பாடலின் முதல் வரி "மச்சானைப் பாத்தீங்களா மதியான நேரத்தில" என்ற கிராமியப் பாடலின் முதல்வரியாய் இருந்தாலும் முழுப் பாடலை எழுதியவர் பஞ்சு அருணாசலம் அவர்கள். 'நாழி' என்ற ஒரு வார்த்தையைத்தவிர கிராமத்து மெட்டுக்கு ஏற்ற நல்ல வரிகளை எளிமையான உருவகங்களோடு கொடுத்திருக்கிறார். குறிப்பாக "பச்சைப்புள்ளை போல் அவர் பாத்து நிற்க, இச்சைக் கிளியாட்டம் நான் பார்த்து சொக்க" என்ற வரிகள். வெள்ளிச் சரம், கண்டாங்கிச் சேலை, புது மஞ்சள் பூசி, தலைவாழை இலை போன்ற கிராமிய எளிய வார்த்தைகள் இயல்பாக வருவது பாட்டுக்கு மண்மணமூட்டுகின்றன. இப்படத்தை தயாரித்தவரும் இவரே. இளையராஜாவை உலகுக்கு அறிமுகப்படுத்தியவரும் இவரே.  இவர் கண்ணதாசனின் உதவியாளராய் இருந்தவர் எனபது உங்களில் சில பேருக்கு தெரிந்திருக்கலாம் .
குரல்:
S Janaki
 “சிங்காரவேலனே தேவா”, என்ற பாடல்மூலம் மெகா என்ட்ரி கொடுத்து பல குறிப்பிட்ட பாடல்களை பாடியிருந்தாலும் நீண்ட நெடிய இடைவேளைக்குப் பின் S.ஜானகி அவர்களுக்கு சிறப்பான மறு இன்னிங்ஸ் கொடுத்தது இந்தப்பாடல்தான். அது மட்டுமல்லாமல் புகழின் உச்சிக்கு செல்லவும், விருதுகள் பல பெறவும் 25 வருடங்களுக்கு அசையா முதல் இடம் பெற்றதும் இந்தப் பாடல் மூலம்தான்.
கள்ளங்கபடமில்லாத கன்னிப் பெண்ணின் ஒரு இன்னசன்ட் குரல். அழுத்தமான தெளிவான உச்சரிப்பு. ஏக்கம், தாபம் கனவு கொஞ்சல் , கெஞ்சல் மற்றும் கொண்டாட்டத்தை மாற்றி மாற்றி வெளிப்படுத்தும் லாவகம். வரிகளுக்கு உயிர் சேர்த்து இசைக்கு இனிமை சேர்க்கும்  பாவம். மனதை வருடும் தேவதைக்குரல். சந்தத்தோடு சந்தம் சேர்க்கும் பொடிச் சங்கதிகளின் சங்கமம்.  ஜானகிக்கு இணை ஜானகிதான்.
இசை, வரிகள், குரல், சூழல் என ஒன்றோடு ஒன்று பிண்ணிப்பிணைந்த எந்த பாசாங்குமில்லாத இந்தப்பாடல் இன்றும் பாட்டுப்போட்டிகளில் தென்னகமெங்கும் பாடப்படும் ஒரு பாடல். 

இளையராஜா என்னும் புது இசையை வெளிப்படுத்திய இந்தப்பாடல்தான் சாதாரண கருப்பு வெள்ளைப்படமான "அன்னக்கிளியை" 196 நாள் ஓடவைத்து சாதனை படைத்தது.\

இப்ப பாட்டைத்திரும்ப ஒரு தடவை கேட்டுப்பாருங்களேன்.

அடுத்த வாரம் - "கண்ணன் ஒரு கைக்குழந்தை".