Monday, December 23, 2019


போர்க் குதிரையின்  சாகசங்கள் !
 பார்த்ததில் பிடித்தது.
வார் ஹார்ஸ் -2011

Image result for war horse movie

            சமீபத்தில் நெட்ஃபிலிக்சில் பார்த்த அருமையான ஒரு படம் இது. என்னுடைய பதிவுகளைத் தொடர்ந்து படித்து வரும் நண்பர்களுக்கு என்னுடைய ரசனை பிடிபட்டிருக்கும். வரலாற்று சம்பந்தமான படங்கள், பீரியட் படங்கள், போர் பற்றிய படங்கள்/ ஸ்பை மற்றும் திரில்லர் படங்கள் ஆகியவை எனக்கு மிகவும் பிடித்தவை. எல்லாமே இதற்குள் அடங்கி விட்டது என்றே நினைக்காதீர்கள். இதனுள் அடங்காத எத்தனையோ உண்டு. ரொமான்ஸ், ஃபேண்டஸி, தற்காலிக டிராமா, ஹாரர், காமடி, குடும்ப சென்ட்டிமெண்ட் படங்கள் சுத்தமாக பிடிப்பதில்லை. அதனால் தான் தமிழ் படங்கள் பார்ப்பது நின்று போனது. எப்போதாவது கிரிட்டிக்கள் அக்கெளைம்ய்டு படங்கள் வந்தால் பார்ப்பது மட்டும் தான் தொடர்கிறது.
          மிருகங்களை வைத்து இராம நாராயணன் டைரக்ட் செய்து வெளிவந்த பல படங்களை சிறு வயதில் பார்த்து நொந்து நூலாகியிருக்கிறேன். ஆனால் வார் ஹார்ஸ் என்ற இந்தப் படம் அவற்றுள் மிக மாறுபட்டது. அதோடு இயக்கியது ஸ்டீபன் ஸ்பீல்பர்க் என்றால் பார்க்காமல் விடுவேனா? அதுவும் முதலாம் உலகப்போர் நடந்த சமயம் என்பது மேலும் ஆர்வத்தைத் தூண்டியது.
          வார் ஹார்ஸ் என்ற இந்தப்படம் 1982ல் மைக்கேல் மார்பர்கோ (Michael Morpurgo) என்பவர் இதே தலைப்பில் எழுதிய நாவலின் திரை வடிவம். டிரீம் வொர்க்ஸ் பிக்சர்ஸ் இந்த நாவலைப் படமாக்கும் உரிமையை டிசம்பர் 2009ல் வாங்கியபின்  மே 2010ல் இதனை ஸ்பீல்பெர்க் இயக்கப் போவதாக அறிவிக்கப்பட்டது. இவர் இரண்டாம் உலகப்போரின் பின்னனியில் நிறையப்படம் இயக்கியிருந்தாலும், முதலாம் உலகப் போரின் பின்னனியில் இயக்கிய முதற்படம்  இதுதான்.


          தேவான், இங்கிலாந்தில்  1912ல் பிறக்கும் இந்தக்குதிரை வளர்ந்து ஏலத்திற்கு வரும்போது டெட் நர்ரகாட்   என்ற விவசாயியும் அங்கே இருக்கிறார். தன்னுடைய நிலச் சொந்தக்காரரும் அங்கு வர ஏற்கனவே நல்ல உறவில் இல்லாத இருவருக்கும் போட்டி ஏறபட்டு அந்த விவசாயி அதிக விலை கொடுத்து அந்தக்  குதிரையை வாங்கி விட நேர்கிறது. மனைவியிடம் அதற்காக திட்டும் விழுகிறது. ஆனால் அவர்களுடைய ஒரே பையன் ஆல்பர்ட் அந்தக் குதிரையின் மேல் பிரியமாகி அதற்கு ஜோயி என்று பெயரிட்டு பராமரிக்கிறான். ஆனால் விவசாயத்தில்  நஷ்ட மடைந்த நர்ரகோட், போர் காலத்தில் குதிரையை விற்றுவிடுகிறார். ஆல்பர்ட் மனமுடைந்து போகிறான். அந்தக்குதிரை எங்கெல்லாம்  போய் போரிலிருந்து எப்படியெல்லாம் தப்பித்து மீண்டும் எந்த ஒரு சந்தர்ப்பத்தில் ஆல்பர்ட்டிடம் வந்து சேர்கிறது என்பது தான் கதை. மீதியை சின்னத்திரையில் காண்க.
          பீரியட் படம் அதுவும் வார் படம் என்பதால் ஏகப்பட்ட நடிகர்கள். லீட் கேரக்டரில் நடித்துள்ள அனைவரும் குறிப்பாக குதிரையும் அநாயசமாக நடித்திருக்கிறார்கள்.
66 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவு செய்து எடுக்கப்பட்ட இந்தப்படம் பாக்ஸ் ஆபீசில் 178 மில்லியன் கல்லாக் கட்டியது.
          146 நிமிடங்கள் ஓடும் இந்தப்படம் டச்ஸ்டோன் பிக்சர்ஸ், டிரீம் வொர்க்ஸ் பிக்சர்ஸ், ரிலையன்ஸ் என்டர் டெய்ன் மென்ட்,  ஆம்பிலின்   என்டர் டெய்ன்மென்ட், தி கென்னடி/ மார்ஷல் கம்பெனி ஆகியோர் தயாரிக்க, வால்ட் டிஸ்னி ஸ்டூடியோ மோஷன் பிக்சர்ஸ் டிஸ்ட்ரிபுயூட் செய்ய கிறிஸ்மஸ் தினமான டிசம்பர் 25,  2011-ல் ரிலீஸ் செய்யப்பட்டது.
          லீ ஹால் மற்றும் ரிச்சர்ட் கர்ட்டிஸ், திரைக்கதை எழுத ஸ்டீவன் ஸ்பீல்பர்க் இயக்கியிருக்கிறார். ஜனுஸ் காமின்ஸ்கி ஒளிப்பதிவு செய்து, மைக்கேல் கான் எடிட் செய்திருக்க ஜான் வில்லியம்ஸ் இசையமைத்திருக்கிறார்.
எமிலி வாட்சன், டேவிட் தூலிஸ், பீட்டர் முலன் ஆகியோர் சிறந்த நடிப்பை வெளிபடுத்தியிருக்கிறார்கள்.
           மூன்று மாதங்க்களுக்கு மேல் பயிற்சி கொடுக்கப்பட்டு 14 வெவ்வேறு குதிரைகளில் வெவ்வேறு பருவ வயதாக ஜோயி என்ற கேரக்டராக நடித்திருக்கின்றன. இது தவிர போரில் 280 குதிரைகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.
இந்தப் படத்தின் மேல் வெளிவந்த 218 விமர்சனங்களில் 76% இதனைப் பாராட்டித்தள்ளி விட்டன.
          ஸ்பீல்பெர்க் படமென்றாலே விருதுகளுக்குப் பஞ்சமிருக்குமா என்ன? அவற்றைக் கீழே குறிப்பிடுகிறேன்.
         ஆஸ்கார் உள்ளிட்ட பல விருதுகளுக்கு நாமினேட் செய்யப்பட்டது. ஆனால் வென்ற விருதுகளை மட்டும் குறிப்பிடுகிறேன்.
1)   2011 அமெரிக்கன் பிலிம் இன்ஸ்டியூட் அவார்ட்ஸ் – 2011ன்  சிறந்த படம்.
2)   2012 BMI பிலிம் 2டி அவார்ட்ஸ் – சிறந்த இசையமைப்பு சிறந்த ஒளிப்பதிவு.
3)   59வது மோனன் செளன்ட் எடிட்டர்ஸ் கோல்டன் ரீல் அவார்ட்ஸ் – சிறந்த ஒலிக்கோர்வை
          பீரியட் பிலிம், வார் பிலிம் போன்றவற்றில் ஆர்வமுள்ளவர்கள் இந்தப் படத்தைப் பார்த்து மகிழலாம்.

முற்றும்
நண்பர்கள் அனைவருக்கும் இனிய  கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்.
Tuesday, December 17, 2019

ராஜீவ் படுகொலை - சிவராசன் டாப் சீக்ரட்


ராஜீவ் படுகொலை - சிவராசன் டாப் சீக்ரட்
படித்ததில் பிடித்தது
சிறைவாசி இரா. பொ. இரவிச்சந்திரன்.
தொகுப்பாசிரியர்: பா. ஏகலைவன்.
ஜனவரி 2018 யாழ் பதிப்பகம் - சென்னை விலை: 500.00 ரூபாய்.

      உலகத்தில் நடந்த பல படுகொலைகளுக்கான உண்மைக் காரணங்களும், உண்மைக் குற்றவாளிகளும் இன்னும் மர்மமாகவே இருக்கின்றன. மகாத்மா காந்தியடிகள், ஜான். F. கென்னடி போன்ற சில கொலைகள் ஞாபகம் வந்தாலும், நம் மண்ணிலே நடந்த ராஜீவ் காந்தி படுகொலையை நினைத்து வருந்திய தமிழர்கள் என்னையும் சேர்த்து ஏராளமானவர். குற்றம் சாட்டப்பட்டு தண்டனை பெற்ற ஏழுபேர் கடந்த 28 ஆண்டுகளாக இன்னும் சிறைவாசம் அனுபவிக்கிறார்கள். அவர்களில் ஒருவரான தமிழகத்தைச் சேர்ந்த இரவிச்சந்திரன் எழுதிய புத்தகம்தான் இது.

பழ. நெடுமாறன் முன்னுரை எழுத, தொல் திருமாவளவன், நீதியரசர் து அரிபரந்தாமன், சீமான், திருச்சி வேலுச்சாமி, KS. ராதா கிருஷ்ணன், தியாகு,  புகழேந்தி, தங்கராஜ், சுப. உதய குமரான், தனியரசு, தமிமுன் அன்சாரி மற்றும் ஜி.தியாகராஜன் ஆகியோர் அணிந்துரை வழங்கியிருக்கிறார்கள். இவ்வளவு பேர் அணிந்துரை எழுதிய புத்தகம் எனக்குத் தெரிந்து இதுதான் முதல் முறை. இனி நான் படித்து, அயர்ந்து போன, ஆச்சரியப்பட்ட, திகிலடைந்த, சினமுற்ற, சந்தேகப்பட்ட, துயரமடைந்த விடயங்களை வழக்கம்போல் கீழ் வரும் புல்லட் பாயிண்ட்டுகளில் (அய்யய்யோ இங்கேயும் புல்லட்டா?) தருகிறேன்.

1)   பழ. நெடுமாறன் எழுதிய முன்னுரையில் குற்றம் சாட்டப்பட்ட 26 பேர்களில் 13 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். 13 பேர் இலங்கைத் தமிழர் என்ற சரிசமமான கணக்கிலேயே உள்நோக்கம் இருப்பதை சுட்டிக் காட்டுகிறார்.
2)   இரவிச்சந்திரன் தமிழகத்தில் அருப்புக் கோட்டையைச் சேர்ந்தவர். 10 ஆம் வகுப்பு படித்த பின் விடுதலைப்புலிகளின் போராட்டத்தில் ஆர்வம் கொண்டு இலங்கை சென்று இயக்கத்தில் சேர்ந்தவர்.
3)   அதன்பின் திரும்ப தமிழகம் வந்து "தமிழ் தேசிய மீட்பு முன்னணி" என்ற அரசியல் அமைப்பை உருவாக்கினார்.
4)   குற்றம் சுமத்தப்பட்ட 26 தமிழர்களும் அரசியல் சதுரங்கத்தில் பலியிடப்பட்ட வெட்டுக்காய்கள் என்று குறிப்பிடுகிறார்.
5)   நக்கீரன், ஜுவி, தராசு, நெற்றிக்கண், இந்தியா டுடே, சண்டே,
ஃபிரன்ட்லைன், வீக், இல்லஸ்ட்டிரேட் வீக்லி, ஆகியவை CBI விசாரணையைக் கேள்விக்குள்ளாக்கின. கேள்விகளை எழுப்பிய இராஜீந்தர் குமார் ஜெயின் என்ற பத்திரிக்கையாளர் கொல்லப்பட்டார்.
6)   கார்த்திகேயன் உண்மைகளை மறைத்து குற்றவாளிகளைத்தப்பவிட்டார்.
7)   சிவராசன் பொட்டம்மனுக்கு அனுப்பிய வயர்லஸ் செய்தி, சிவராசன், தணு மற்றும் சுபா தவிர வேறு யாருக்கும் தெரியாது.
8)   புலிகள் இயக்கத்தில் சேர விரும்பிய ரவிச்சந்திரன் மண்டபம் வந்து, இலங்கைத் தமிழன் சிவபாலனின் நட்பைப் பெற்று அவரின் உதவியுடன் PLOT அமைப்பின் படகில் ஏறி மன்னார் வளைகுடா செல்கிறார்.
9)   அங்கிருந்து பாவற்குளம், வவலியாவின் புறநகர் வழியாக யாழ்குடா சென்று சேர்கிறார்.
10)               அந்தச்சமயத்தில் பிளாட் இயக்கத்தில் 10000 பேரும் ஈரோஸ் மற்றும் TELO-ல் தலா 1000 பேரும் இருந்தனர்.
11)               எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் தங்களுடைய அதிரடி நடவடிக்கைகளால் புலிகள் இயக்கம் மக்களிடம் மரியாதையும் மதிப்பும் பெறத்துவங்கியிருந்தது.
12)               விடுதலைப்புலிகள் முகாம் சென்றடைந்தும் சுமார் 1 1/2 மாதம் வெறும் நேர்காணலே நீடித்தது. அதன் பின்னர் யாழ்குடாவில் ஆரம்பித்த பயிற்சியின் தலைவராக பாரதி மாஸ்டர் இருந்தார். அவர் கீழ் 200 பேர் பயிற்சி பெற்றனர்.
13)               பெரும் வெற்றிகளைக்குறித்து, இலங்கையையும் ஆண்ட, இராசேந்திர சோழரின் புலிச்சின்னம், விடுதலைப்புலிகளின் சின்னமானது. மேலும் புலி போன்று வேகம், விசை, பாய்ச்சல், உறுதி, உருமறைவு, இலக்கு மற்றும் மூர்க்கம், ஆகியவற்றுக்கு பயிற்சியளிக்கப்பட்டது.
14)               யாழ் குடா நாடு என்பது, வலிகாமம், தென்மராட்சிப் பிரதேசம் என்ற சாவகச்சேரி, வடமராட்சிப் பிரதேசம் சார்ந்த வல் வெட்டித்துறை பகுதியில் புலிகள் கேலோச்சினர் இதில் வல்வெட்டித்துரை பிரபாகரன் சொந்த ஊர்.
15)               ரவிச்சந்திரனின் முதல் சமரில் RPG ஒன்றை மீட்டு வந்ததை நினைவு கூறுகிறார்.
16)               1989ல் வந்த .பி.கே.எல்.எஃப்  ஆகஸ்ட் 2,3,4 வல்வெட்டித்துறையில் நடத்திய தாக்குதலில், 63பேர் கொல்லப்பட்டனர், 2000பேர் படுகாயம், 150 வீடுகள் எரிந்து போயின, பல பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டனர்.
17)               தான் பெற்ற புலிப்படைப் பயிற்சியை முழுவதுமாக விளக்குகிறார் ரவி. பொலிகண்டி என்ற கடற்கரை கிராமத்தில் இருந்த இரண்டாவது பட்டாலியன் தலைமைப்பயிற்சிக்கு பொறுப்பேற்றிருந்த செல்வராஜ் மாஸ்டர் தளபதி சூசை (கடற்படைத்தளபதி கர்னல் சூசை) பாரதி மாஸ்டர் ஆகியோரைப் பற்றிச் சொல்லுகிறார்.
18)               ஜ.பி.கே. எல். எஃப்  -ன் படுகொலைத் தாக்குதலுக்குப் பின், தாயகத்தின் ஆதரவைப் பெறுவதற்காக தமிழ்நாடு திரும்பி தனியாக அரசியல் இயக்கம் ஒன்றை ஆரம்பிக்க முயற்சி செய்கிறார்.
அதன்பின் ராஜீவ் காந்தி கொலையின் சந்தேகத்தின் அடிப்படையில் ரவி கைது செய்யப்படுகிறார்.  பின்னர் விடுதலைப்புலிகளுக்கும் ராஜீவ் கொலைக்கும் எந்த சம்பந்தமுமில்லை என்பதற்கு பல வித ஆதாரங்களை அடுக்குகிறார்.
1)   பெல்ட் பாம் ஒரு இந்தியத்தயாரிப்பு.
2)   அமெரிக்காவுக்கும் நேரு குடும்பத்திற்கும் இருந்த பிரச்சனை, இதில் CIA உளவாளியாக சுப்ரமணிய சுவாமியின் செயல்பாடுகள்.
3)   1990 ஈராக் அமெரிக்கப்போரை, சீனா ரஷ்யாவோடு சேர்ந்து ராஜீவ் எதிர்த்ததால் அமெரிக்காவுக்கும், இஸ்ரேலுக்கும் வந்த கோபம்.
4)   அமெரிக்க போர்விமானங்கள் இந்தியாவில் எரிபொருள் நிரப்ப, அப்போதைய பிரதமர் சந்திரசேகர் அனுமதியளிக்க அதனை ராஜீவ் எதிர்த்து ஆட்சியைக் கவிழ்த்தது.
5)   1993ல் நாடாளுமன்றத்தில் SB  சவான். ராஜீவ் கொலையில்  உள்நாட்டு/வெளிநாட்டு சதி இருக்கிறது என்று சொன்னதோடு விடுதலைப்புலிகள் ஓர் அம்புதான் என்றும் CIA  மேல் சந்தேகம் இருப்பதாகவும் சொன்னது.
6)   பிரிட்டனில் இருந்த பஞ்சாப் காலிஸ்தான் தீவிரவாதத் தலைவர் ஜக்ஜித்சிங் செளகான், "ராஜீவ் காந்தியை ஒழித்தால் மட்டுமே காலிஸ்தான் பிரச்சனை தீரும். சந்திராசாமி அதற்கு நிதியுதவி செய்வார்" என்று சொன்னது.
7)   சந்திராசாமிக்கும்  சி.ஐ.எவுக்கும் இருந்த நெருங்கிய தொடர்பு, சிவராசனுக்கு இருந்த இன்டர்நேசனல் வங்கிக் கணக்கு.
8)   கார்த்திகேயன் மூடி மறைத்ததை ஜெயின் கமிஷன் கண்டித்தது.
9)   கொலைக்கு முன் TN சேஷன், திருச்சி வேலுச்சாமி ஆகியோர் எச்சரித்தது.
10)               சுப்பிரமணியசாமி, சந்திரசேகர், சந்திராசாமி, நரசிம்மராவ் போன்ற பார்ப்பனர் வட்டத்தின் கூட்டு.
11)               மத்திய உளவுத்துறை, ராஜீவ் உயிருக்கு ஆபத்து என்று சந்திரசேகர் அரசிடம் சொன்னது.
12)               1995ல் சோனியா உண்மையான சாதியாளர்களை நரசிம்மராவ் பிடிக்க மாட்டார் என்று சொல்லி, கொஞ்சம் கொஞ்சமாக அவரை ஓரங்கட்டியது.
13)               வர்மா கமிஷனில் இருந்த வக்கீல் கோபால் சுப்பிரமணியம் விலகுவது.
14)               சுப்பிரமணியசுவாமியின் 56 மணிநேர தலை மறைவு, ராஜீவ் காந்தி ஆவணங்கள் தொலைந்து போதல்.
15)               டி.ஐ.ஜி. ஸ்ரீகுமார், லண்டன், ஐரோப்பா என்ற சேகரித்த வெளிநாட்டு ஆவணங்கள் லண்டன் ஏர்போர்ட்டில் தொலைந்து போனது .
16)               ரா தலைவர் இது விடுதலைப்புலிகள் செய்ததல்ல என்று சொன்னது.
17)               நரசிம்மராவ், சுப்ரமணியசாமி , சந்திராசாமி, மரகதம் சந்திரசேகர், லதா, பிரியகுமார், வாழப்பாடி ராமமூர்த்தி, மார்கரெட் ஆல்வா, எம்.கே.நாராயணன் ஆகியோரை உள்ளடக்கிய கறுப்பு ரகசியங்கள்.
18)               ராஜீவ் விமானம் 6 மணிக்கு வந்து சேரவேண்டியது, 6 மணிக்குத்தான் விசாக பட்டிணத்தில் கிளம்பியது. தாமதத்தின் காரணம் என்ன? அந்தத்தாமதம் சிவராசனுக்கு எப்படி முன்னரே தெரிந்தது?
19)               மரகதம் சந்திரசேகரின் மகன் லலித் சந்திரசேகர் ஒரு சிங்களப் பெண்ணை மணந்தவர்.
20)               பாதுகாப்புக்குறைபாடுகளை விசாரித்த ஜெயின் கமிஷனுக்கு சிறப்பு புலனாய்வுக்குழு முழு ஒத்துழைப்பைத் தரவில்லை.
21)               1991 முதல் சி.பி.ஐ வர்மாகமிஷன்,ஜெயின்கமிஷன் என்று ஆயிரம் கோடிக்கு மேல் செலவாயிருக்கிறது.
22)               1987ல் ராஜீவ்வைத் தாக்கிக் கொல்ல முயன்ற விஜே முனி ரோகன டி சில்வா என்ற இலங்கை கடற்படை வீரர் மனநிலை சரியில்லாதவர் என்று 1989ல் பிரேமதாசாவால் விடுதலை செய்யப்படுகிறார். அனால் அடுத்த நடந்த தேர்தலில் தென்மண்டல சபை உறுப்பினராகத்  தேர்வு செய்யப்படுகிறார்.
ரவி இவ்வாறு எழுப்பும் சந்தேகங்களைப் படித்தால் தலை சுற்றுவதோடு, குழப்பம் மேலும் அதிகரிக்கிறது. எது எப்படியோ நீண்ட நாள் சிறைத்தண்டனை அனுபவித்துவிட்டு தங்களது தண்டனைக்காலத்திற்கு  மேல் சிறையில் வாடும் இந்த ஏழுபேரும் விடுதலை செய்யப்படுவதுதான் எந்த ஒரு மனிதாபிமானமுள்ள  தமிழரும் நினைப்பது.
முற்றும்

Thursday, December 12, 2019

நான் தான் அவன், அவன்தான் நான்! சம்பவம் இரண்டு                              இதற்கு முந்தின பகுதியைப்படிக்க இங்கே சுட்டவும்  
                    https://paradesiatnewyork.blogspot.com/2019/12/blog-post.html
  
ஒரு ஞாயிறு மாலை வீட்டில் ஓய்வாக இருக்கும்போது, அப்போது மேலே குடியிருந்த என் மனைவியின் தம்பி தன் வீட்டுக்கு வரும் விருந்தினரை மரியாதை நிமித்தமாகவோ, அல்லது எங்கள் வீட்டில் சாப்பிடவோ அல்லது நான் சேகரித்து வைத்திருக்கும் கலைப் பொருட்களைப் பார்க்கவோ அழைத்து வருவதுண்டு.
          அன்றைய நாளில் வந்தவரிடம் நடந்த உரையாடலை கீழே தருகிறேன்.
பரதேசி : வாங்க உட்காருங்க
சென்னை : நன்றி சார்
பரதேசி : சென்னையில் என்ன செய்கிறீர்கள்?
சென்னை : லேடி ஆண்டாள் பள்ளியில் உடற்பயிற்சி ஆசிரியராக இருக்கிறேன் சார்.
பரதேசி : மகிழ்ச்சி, நியூயார்க்கிற்கு என்ன விஷயமாக வந்திருக்கிறீர்கள்.
சென்னை: எங்கள் மாணவரோடு கல்விச் சுற்றுலா வந்திருக்கிறோம். அவர்களெல்லாம் ஹோட்டலில் தங்கியிருக்கிறார்கள். நான் மட்டும் நண்பரைப் பார்க்க வந்தேன்.
மைத்துனர் : (என்னைக்காட்டி) இவர் தமிழ்ச்சங்கத்தில் பொறுப்பில் இருக்கிறார். நிறைய எழுதுவார், பட்டி மன்றம் பேசுவார் .
சென்னை: அப்படியா எனக்குக்கூட ஒரு எழுத்தாளரைத் தெரியும்?
பரதேசி : அவர் எங்கே இருக்கிறார்?
சென்னை : இங்குதான் நியூயார்க்கில் இருக்கிறார். நியூயார்க்கில் நடக்கும் சில நிகழ்வுகளை சுவையாக எழுதுவார்.
பரதேசி : அப்படியா? அவர் பெயர் என்ன?
சென்னை : இருங்கள் சட்டென ஞாபகம் வரமாட்டேங்குது.  சமீபத்தில் கூட ஆனந்த விகடனில் அவர் எழுதிய கட்டுரை வந்திருந்தது.
என்று சொல்லிவிட்டு தன கைத்தொலைபேசியில் தேடித்தேடி ஆனந்த விகடனில் வெளிவந்த என்னுடைய ஆர்ட்டிகளை எடுத்துக் காண்பித்தார்.
பரதேசி : அவரை உங்களுக்குத் தெரியுமா?
சென்னை: நெருங்கிய பழக்கமில்லை. ஆனால் ஓரளவுக்குத் தெரியும். அவருடைய பிளாக்கை நான் தொடர்ந்து படித்து வருகிறேன்.
பரதேசி : எனக்கும் அவரை ஓரளவுக்குத் தெரியும்.
சென்னை : அவர் பெயர் கூட, இருங்கள் பார்த்துச் சொல்கிறேன். ஆம் அவர் பெயர் பரதேசி.
          அப்போது என் மனைவி சமையலறையிலிருந்து வந்து, அந்தப் பரதேசி இவர்தான் என்று சொல்ல எல்லோரும் சிரித்தனர். சென்னைக்காரருக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.
முற்றும்.


  

Monday, December 9, 2019

நான் தான் அவன், அவன்தான் நான்! சம்பவம் - ஒன்று.

Image result for confused man cartoon free


இதுபோல ஒருமுறை நடந்தாலே அது ஆச்சரியம்தான். ஆனால் இருமுறை இதுபோல நடந்ததை நினைத்தால் எனக்கே நம்ப முடியவில்லை. அந்த இரண்டு சம்பவங்களையும் சொல்கிறேன், நீங்களே சொல்லுங்கள்.
சம்பவம் - ஒன்று.
          2000 ஆம் ஆண்டு சென்னையிலிருந்து நியூயார்க் வந்த புதுசு. கிறித்தவத் தமிழ்க் கோவில் செல்ல ஆரம்பித்த சமயம். அந்தக்கோவிலின் உறுப்பினர் வீட்டில் பிறந்த நாள் விருந்துக்காக என்னை அழைத்திருந்தார்கள். அங்கே அவர்களுக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் சென்னையிலிருந்து வந்திருந்தார்.
          சென்னையில் நன் இருந்த போது குட்வில்  மனிதவள மேம்பாட்டு (Goodwill HRD Consultants  Pvt  Ltd) என்ற நிறுவனத்தை நிறுவி நடத்திவந்தேன். அதன் மூலம் கிடைத்த வாய்ப்பில்தான் நியூயார்க் வந்திருந்தேன். என்னை அந்த சென்னை நண்பருக்கு அறிமுகம் செய்தார்கள். அப்போது நடந்த உரையாடலை இங்கு தருகிறேன்.
பரதேசி : வெல்கம் டு நியூயார்க்
சென்னைக்காரர் : தேங்க்யூ, நீங்க இங்க என்ன பண்ணுறீங்க?
பரதேசி : ஒரு ஐ.டி. கம்பெனியில் இருக்கிறேன்.
சென்னை: எல்லாரும் பெரும்பாலும்  ஐடி தானே இங்க, எப்ப வந்தீங்க
பரதேசி: நான் வந்து ஒரு ஆறு மாசம் ஆச்சு
சென்னை : அப்படியா இங்க எப்படிப் போகுது?
பரதேசி : பரவாயில்லை.
சென்னை: உங்கள் குடும்பம் எங்கு இருக்கிறாங்க?
பரதேசி : ஊரில்தான் இருக்கிறாங்க, ஹெச் 1 B விசா கிடைச்சதும், அவங்களை வரவழைக்கணும்.
  சென்னை: மேரீட் பேச்சிலர்ன்னு சொல்லுங்க.
பரதேசி : ஹாஹா அப்படியும் வைத்துக் கொள்ளலாம்.
சென்னை: இந்தியாவில எந்த ஊர்?
பரதேசி : சொந்த ஊர் மதுரைப்பக்கம், ஆனா சென்னையில செட்டிலாகி கொஞ்ச ஆண்டுகள் ஆயிருச்சு.
சென்னை : சென்னையில் எங்க?
பரதேசி : மணப்பாக்கம், போரூர் போகும் வழியில் ராமாபுரம் எதிரில் இருக்கு.
சென்னை: சென்னையில் என்ன பண்ணீங்க?
பரதேசி: ஹெச் ஆர்  தான் சில கம்பெனிகள்ல இருந்தேன்.
சென்னை: ஓ ஹெச் ஆரா உங்களுக்கு சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள குட்வில் தெரியுமா?
பரதேசி: தெரியும்
சென்னை: குட்வில் ஹெச் ஆர்.டி கன்சல்ட்டன்டஸ்?
பரதேசி : நன்றாகத் தெரியும்.
சென்னை : அதன் சி. இ.ஒ. எனக்கு நெருங்கிய நண்பர்.
பரதேசி : அப்படியா?
சென்னை: அவர் சென்னையில் பெரிய ஆள்
பரதேசி : அப்படியா?
சென்னை : பல கம்பெனிகளுக்கு டிரைனிங், ஹெச் ஆர் மற்றும் ரெக்ரூட்மென்ட் செய் கிறார்கள்.
பரதேசி : ம்ம்
சென்னை : என் குளோஸ் ஃபிரெண்டுதான்,  உங்களுக்கு ஏதாவது வேண்டுமென்றால் சொல்லுங்கள், அவரிடம்  சொல்கிறேன்.
பரதேசி : அவரை நேரில் பாத்திருக்கீங்களா?
சென்னை: என்ன அப்படிச் சொல்லீட்டிங்க, எனக்கு அவரை நல்லாவே தெரியும்.
பரதேசி : அவர் பெயர்.
சென்னை : அவர் பெயர் ஆல்ஃபிரட் ராஜசேகரன். பக்கத்தில் இருந்த எல்லோரும் சிரிக்க நான் சொன்னேன். அந்த ஆல்ஃபிரட் ராஜசேகரன் தான் நான்.
- சென்னைக்காரருக்கு என்ன சொல்வதென்றே தெரியாமல் திகைத்துப்போனார்.

அந்த இரண்டாவது சம்பவத்தை அடுத்த முறை சொல்கிறேன் .

தொடரும்

Monday, November 25, 2019

எடப்பாடியுடன் பரதேசி !!!!!நியூயார்க் தமிழ்ச்சங்கத் தலைவர்களுடன் எடப்பாடி 
கடந்த நவம்பர் 10 ஆம் தேதி நியூயார்க் தமிழ்ச்சங்கம் நடத்திய தீபாவளி விழாவில் வெளியாடப்பட்ட மலரில் வெளிவந்த என்னுடைய பதிவு .


நான் எதிர்பாராத ஒன்று அன்று நடந்தது. 2019 செப்டம்பர் 3 ஆம் தேதி தமிழக முதல்வர் நியூயார்க் வருகிறார். அதற்கான ஏற்பாடுகளைக் கவனிக்கும்படி ஃபெட்னா அமைப்பை தமிழக அரசு அணுக (Fetna - Federation of Tamil Sangams of North America)
 ஃபெட்னா அமைப்பு உள்ளூர் அமைப்பான நியூயார்க் தமிழ்ச் சங்கத்தை தொடர்பு கொண்டது.
ஃபெட்னா அமைப்பின் பொருளாளாளராகப் பதவி வகிக்கும் விஜயகுமார் இதற்கான முதல் ஈமெயில் அனுப்பினார். இவர் நியூயார்க்காரர், நியூயார்க் தமிழ்ச்சங்கத்தின் முன்னாள் தலைவர் இந்நாள் ஆலோசகர். அதன்பின் நியூயார்க் குயின்சில் உள்ள ராஜதானி உணவகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடந்த போதும் அடியேனும் கலந்து கொண்டேன்.
எடப்பாடியின் நியூயார்க் வருகை இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டது. ஒன்று செப்டம்பர் 3 ஆம் தேதி  மதியம் 2 மணிக்கு நடைபெற்ற தொழில் முதலீட்டாளர் கூட்டம். அதன்பின் மாலை ஏழு மணிக்கு நடந்த அமெரிக்க வாழ் தமிழர் கூட்டம். அழைப்புப் பெற்றவர் மட்டுமே இரண்டு நிகழ்வுகளிலும் கலந்துகொள்ள முடியும். இதில் இரண்டுக்குமே எனக்கு அழைப்பு வந்தது. நடைபெற்ற இடம் நியூயார்க்கின் மேன்ஹாட்டன் பகுதியின் பரபரப்பு மிகுந்த டைம் ஸ்கொயர் சதுக்கத்திலிருந்த நியூயார்க் மேரியட்  மார்கிஸ் என்ற சொகுசு ஓட்டலின் 9ஆவது மாடி. 
அன்றைய தினம் விஜயகுமார் தொடர்பு கொண்டு, “கொஞ்சம் சீக்கிரம் வரமுடியமா? சிறிது உதவி தேவைப்படுகிறது” என்றார். என்னுடைய அலுவலகம் இருந்த பகுதிக்கு மிகவும் அருகில்தான் டைம்ஸ் கொயர் என்பதால் 1 மணிக்கெல்லாம் அங்கு சென்று சேர்ந்தேன். அப்பொழுதே மக்கள் வரத்தொடங்கிவிட்டனர். அமெரிக்காவில் நியூயார்க் மற்றும் சான்ஃபிரான்சிஸ்கோ  என்ற இரண்டு ஊர்களுக்கு மட்டுமே   முதல்வர் வந்ததால், அட்லான்ட்டா, டெக்சஸ் , வாஷிங்டன்  டி.சி. நியுஜெர்சி, வர்ஜினியா, கனடிக்கட் என்று பல மாநிலங்களிலிருந்து வந்திருந்தனர் .
வரவேற்புப் பகுதியில் நியூயார்க் தமிழ்ச்சங்கத் தலைவர் அரங்கநாதன் என்ற ரங்காவும் துணைப் பொருளாளர் குமார ராஜாவும் ஏற்கனவே அழைப்புப் பெற்று, ஏற்றுக்கொண்டு ரிஜிஸ்டர் செய்தவர்களை பட்டியலில் சரிபார்த்து பேட்ஜ் ஸ்டிக்கர்களை வழங்கிக் கொண்டிருந்தனர். விஜயகுமார் அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தார். என்னைப் பார்த்தவுடன் மகிழ்ந்து என்னை அழைத்துக் கொண்டு போய் ஒருவரை அறிமுகப்படுத்தினார். அவர் பெயர் நீரஜ் மீத்தல். அவர் பெயரும் தோற்றமும் வட இந்தியராகத் தெரிந்தாலும் தமிழில் பேசினார். சிறிது உடைந்த தமிழ் என்றாலும் நன்றாகவே பேசினார். அவர் தமிழ்நாடு இண்டஸ்ட்ரியல் & எக்ஸ்போர்ட் புரமோஷன் பீரோ கைடன்ஸ் என்ற அமைப்பின் MD  IAS அதிகாரி .
Image may contain: 25 people, including Ranganathan Purushothaman, Vijay Vijayakumar, Kathirvel Kumararaja and Alfred Thiagarajan, people smiling, people standing
With IAS officers
அவர் என்னிடம்  "இதோ பாருங்கள் , உள்ளே குறைந்த அளவே இருக்கைகள் உள்ளன. செக்யூரிட்டி இஸ்யூ வேற இருக்கு. பேட்ஜ் இல்லாத யாரையும் உள்ளே விடாதீர்கள். அதோடு இப்போது யாரையும் உள்ளே அனுமதிக்க வேண்டாம். 1.30 மணிக்கு மேல் விடுங்கள்", என்று சொல்லிவிட்டு மேலும் உள்ளே உள்ள சீட்டிங் அரேஞ்மென்ட்ஸ்களை விளக்கிவிட்டுச் சென்றார். என்னடாது பரதேசிக்கு வந்த சோதனை. சி.எம். மீட்டிங்குக்கு ஒரு என்ட்ரி கிடைத்தது என்று வந்தால் இங்கு கிடைத்தது என்டரி இல்லை சென்ரி என்று நினைத்து சிரிப்பும் கடுப்பும் ஒன்றாக வந்தது. இதனை நான் செய்ய முடியுமா? என்று யோசிக்கவும் முடியாமல் சிறிது நேரத்திலேயே கூட்டம் அலைமோதியது.
"பேட்ஜ் இருக்குதா? கேன் ஐ  சி யுவர் பேட்ஜ்? பிளீஸ் புட் யுவர் பேட்ஜ் அப், சாரி வித்தவுட் பேட்ஜ், யு கேன்னாட் கோ இன், பிளீஸ் கோ டு தி ரிஜிஸ்ட்ரேஷன் டு கெட் யுவர் பேட்ஜ், மன்னிக்க பேட்ஜ் அவசியம் , இப்போது உள்ளே போகமுடியாது"
இதெல்லாம் அடுத்த ஒரு மணிநேரம் நான் சொன்ன டயலாக்குகள்.
"என்னுடைய நண்பர் உள்ளே இருக்கிறார். இன்விடேஷன் வந்தது. ஆனால் என் பெயர் அங்கு இல்லை. நான் அந்த IAS அதிகாரிக்கு வேண்டியவன். நான் வெளியூரிலிருந்து வருகிறேன். உள்ளே விடுங்கள். எனக்கு பேட்ஜ் தேவையில்லை, நீங்கள் தமிழ்நாடு கவர்ன்மெண்டா ?”.
மேலே சொன்னவை நான் கேட்டவை.
சிறிது சிறிதாக என் மவுசு கூடியது. தடுத்து நிறுத்துவது எனக்கு மிகவும் சங்கடமாக இருந்தது.
இதில் சிலர் எனக்குத் தெரிந்தவர்கள், சிலர் என்னைத் தெரிந்தவர்கள். அவ்வப்போது மித்தல் வந்து, “உள்ளே உள்ள இருக்கைகளை விட இருமடங்கு வெளியே வந்திருக்கிறார்கள். பார்த்துக்கொள்”, என்று வேறு சொல்லிவிட்டார்.
அடுத்த சில நிமிடங்களில் ஒருவர் சூட்டில் வந்தார். அங்கு வந்த பெரும்பாலும் அப்படித்தான் வந்திருந்தார்.
"எக்ஸ்யூஸ் மி, பேட்ஜ் பிளீஸ்"
"ஐ ஆம் தி சீஃப் செக்ரட்டரி ஆஃப் தமிழ்நாடு"
"சாரி, சரி உள்ளே போங்கள்.",
அவர்தான் ஷண்முகம் ஐ.ஏ.எஸ்  அதற்கடுத்து ஒரு பெண் வந்தார். எந்தவிதத்திலும் ஐ.ஏ.எஸ் அதிகாரி போலத்தெரியவில்லை. அதோடு பலபேர் என்னைச் சுற்றிலும் நின்று கொண்டிருக்கும் போது ஒரு பெண்ணை மட்டும் உள்ளே விட்டால் என் மதிப்பு என்னாவது?
"கேன் ஐ சி யுவர் பேட்ஜ்"
"ஐ ஆம் தி செக்ரட்டரி டு தி சி.எம்"
பிறகுதான் தெரிந்தது அவர்கள்தான் ஜெயஸ்ரீ முரளிதரன் ஐ.ஏ.எஸ் முதல்வரின் தனி செயலாளர்.
இப்படி நான் தடுத்து நிறுத்தியவர்களில் கீழே உள்ள சிலரும் அடங்குவர்.
Dr. சந்தோஷ் பாபு, ஐ.ஏ.எஸ் -பிரின்சிபல் செக்ரட்டரி,
திரு. முருகானந்தம் ஐ.ஏ.எஸ் பிரின்சிபல் செக்ரட்டரி, இண்டஸ்ட்ரீஸ் டிபாட்.
கடைசியாக நான் தடுத்தது நிறுத்தியது கான்சுலர் ஜெனரல் ஆஃப் நியூயார்க்.
சில வெள்ளைக்காரர்களையும் கூட மித்தல் வந்து சொன்னதாதால்  தான் உள்ளே விட்டேன். இவர்களையெல்லாம் எனக்கு முன்னப்பின்ன பார்த்ததில்லை. நானென்ன செய்வது.
அதற்கப்புறம், தொழிற்துறை மந்திரி, MC சம்பத், பால் வளத்துறை மந்திரி, ராஜேந்திர பாலாஜி, வருவாய்த்துறை மந்திரி, R.B.உதயகுமார் ஆகியோர் வந்தனர். அவர்கள் உள்ளே வரவில்லை. மூவருமே சூட்டில் இருந்தனர். அதன்பிறகு, இவர்கள் போய், முதல்வர் எடப்பாடியைக் கூப்பிட்டு வந்தனர். மந்திரிகளும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளும் புடை சூழ வணக்கம் போட்ட கையை எடுக்காமல் எடப்பாடி வந்தார்.
அவசரமாக விஜய்குமாரைக் கூப்பிட்டு , “அதோ அங்கு வருபவர் எவருக்கும் உள்ளே இடமில்லை”, என்று சொன்னேன். அவர் சிறிது முறைத்துவிட்டுப்பின்னர் படக்கென்று சிரித்துவிட்டுச் சொன்னார், "ஆல்ஃபி நீ செஞ்சாலும் செய்வ" என்று. வந்த அவர்கள் எனக்கும் ஒரு வணக்கத்தை வைத்துவிட்டு உள்ளே நுழைய, நானும் சேர்ந்து நுழைந்தேன் . விழா இனிதே நடந்து முடிந்து இரவு விருந்தும் அளிக்கப்பட்டது . கொஞ்சம்  இருங்க என் பால்ய நண்பன் ஊரிலிருந்து  கூப்பிடுகிறான்.
என்ன மகேந்திரா என்ன கேட்கிற?
என்னது 2700 கோடிக்கு கையெழுத்திட்ட ஒப்பந்தங்கள் உண்மையா இல்லையாவா?
ஏம்பா சும்மா இருக்க மாட்டியா?
முற்றும்
பின்குறிப்பு : ஐரோப்பா  மற்றும் இந்தியா போய்  வந்ததிலிருந்து எழுதுவதற்கும் பதிவிடுவதற்கும் ஒரு சோர்வு .நண்பர்கள் தொடர்ந்து கேட்டுக்கொண்டதால் திரும்பவும் ஆரம்பிக்கிறேன்.பார்க்கலாம் எவ்வளவு தூரம் போகும் என்று.