Thursday, November 30, 2017

மேளம் கொட்ட நேரம் வரும்!!!!!


எழுபதுகளில் இளையராஜா: பாடல் எண்: 36

இதற்கு முந்திய பகுதியைப்படிக்க  இங்கே சொடுக்கவும்.
http://paradesiatnewyork.blogspot.com/2017/10/spb.html
Image result for 'லட்சுமி' 1979 மேளம் கொட்ட நேரம் வரும்!!!!!

1979ல் வெளிவந்த 'லட்சுமி' என்ற திரைப்படத்தில் இளையராஜா இசையமைத்து ஹிட்டான பாடல் இது.இதோ அந்தப்பாடல் லிங்க் 


பாடலின் பின்னணி:
          தன் திருமணத்தை எண்ணி கனவு காணும் கன்னிப்பெண் ஒருவள் பாடுவது போல அமைந்த துடிப்பான பாடல். கன்னி என்ற கான்செப்ட் இந்தக் காலத்தில் பதமிழந்து போனதால் நான் கன்னி என்று குறிப்பிவதை திருமணமாகாத பெண் என்று எடுத்துக் கொள்ளவும்.
இசையமைப்பு:

Related image

          இளையராஜாவுக்கு கைவந்த கலையான கிராமிய இசையை தன்னுடைய மேட்டில் அருமையாகக் கொண்டு வந்திருக்கிறார். பலவிதமான வெஸ்டர்ன் இசைக்கருவிகள் பயன் படுத்தப்பட்டிருந்தாலும் பாடல் அந்த கிராமிய மணத்திலிருந்து கொஞ்சம் கூட விலகாமல் ஒலிக்கிறது. முழுவதுமாக பெண் குரலில் ஒலிக்கும் சோலோ பாடலான இது ம்ம்ம் என ஹம்மிங்கில் ஆரம்பித்து ரரிரரிரா ரரிரரிரா என்ற தாலாட்டு போல ஒலிக்கும் ஹம்மிங்கில் முடிய, அதோடு புல்லாங்குழல் வயலின், செண்டை  மேளம் ஒழிக்க, “மேளம் கொட்ட நேரம் வரும்”, என்று பல்லவி ஆரம்பிக்கும் போது  தபேலா சேர்ந்து கொள்கிறது. முதல் பீஜிஎம்மில், கீ போர்டு , புல்லாங்குழல் , பெல்ஸ், பேஸ் கிட்டார் ஆகியவை கலந்து கட்டி தாளம் போட்டு அப்படியே மகிழ்ச்சி மூடில் தொடர "ஆல வட்டம் போடு தடி" என்று சரணம் ஒலிக்கிறது. 2-ஆவது பிஜிஎம்மில் வயலின் குழுமம் அப்படியே ஆரோகரித்து தலைமையேற்க அதோடு இணைந்து கீபோர்டும் தாளத்திற்கு கடசிங்காரியும் இணைந்து இடத்தையும் காதையும் நிரப்ப 2 ஆவது சரணம் "ஊருக்கெல்லாம் பாக்கு வச்சு" என்று ஆரம்பித்து இறுதியில் மீண்டும் ஹம்மிங் வந்து பாடல் நிறைவு பெறுகிறது.

பாடலின் வரிகள்:

மேளம் கொட்ட நேரம் வரும் பூங்கொடியே
மேளம் கொட்ட நேரம் வரும் பூங்கொடியே
அன்னமே சொர்ணமே அன்றுதான் இந்த ஊர்வலம்
மேளம் கொட்ட நேரம் வரும் பூங்கொடியே
மேளம் கொட்ட நேரம் வரும் பூங்கொடியே

ஆல வட்டம் போடுதடி நெல்லுப்பயிரு
ஆள வட்டம் போடுதடி கள்ளப்பருந்து
மாலையிட போறவன கண்ணில் கலந்து
மங்கை மனம் அலையுதடி மெல்லப்பறந்து
தங்கமே வைரமே இளங்கிளியே குயிலே மயிலே
இது உண்மையடி

மேளம் கொட்ட நேரம் வரும் பூங்கொடியே
மேளம் கொட்ட நேரம் வரும் பூங்கொடியே

ஊருக்கெல்லாம் பாக்கு வச்சு காத்திருப்பேன்
ஊரையெல்லாம் பாக்க வச்சு மணம் முடிப்பேன்
கூரச்சேல சரசரக்க அஞ்சி நடப்பேன்
கொண்டவனின் குணம் அறிந்து கொஞ்சிச் சிரிப்பேன்
அம்மம்மா செல்லம்மா இந்த மயக்கம் எனக்கும் பொறக்கும்
புது சுகமிருக்கும்

மேளம் கொட்ட நேரம் வரும் பூங்கொடியே
மேளம் கொட்ட நேரம் வரும் பூங்கொடியே
ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம் ம்

Image result for ஆலங்குடி சோமு
ஆலங்குடி சோமு


          கிராமிய மெட்டுக்கு ஒத்த அருமையான பாடல் வரிகளை எழுதியவர் கவிஞர்  ஆலங்குடி சோமு அவர்கள். இவர் பழைய காலத்து ஆள். எம்.எஸ்.வியிடம் அநேக சிறப்பான பாடல்களை எழுதியிருக்கிறார். "ஆண்டவன் உலகத்தின் முதலாளி", "தாயில்லாமல் நானில்லை", உள்ளத்தின் கதவுகள் கண்களடா”, போன்ற பல கருத்துள்ள தத்துவப்பாடல்களை இவர் எழுதியுள்ளார். இவர் எழுதிய "பொன் மகள் வந்தாள், பொருட்கோடி தந்தாள்" என்றபாடல் ஆல்டைம் ஃபேவரைட். தன் மனைவி இறந்த சமயம் எழுதிய "மலை சாய்ந்து போனால் சிலையாகலாம்" என்ற பாடல் சிறப்பான வரிகளைக் கொண்டது  .
          இந்தப்பாடலிலும் மெட்டில் ஒட்டும் உறுத்தாத வரிகளை கிராமியக் கண்ணோட்டத்தில் எழுதியிருக்கிறார். "ஆலவட்டம் போடுதடி நெல்லுப்பயிறு, ஆள வட்டம் போடுதடி கள்ளப்பருந்து" என்ற வரிகளிலும், "ஊருக்கெல்லாம் பாக்கு வச்சு காத்திருப்பேன், ஊரையெல்லாம் பாக்க வச்சு மணம் முடிப்பேன்" என்ற வரிகளிலும் கவிஞரின் எளிய கவிதை மனம் வெளிப்படுகிறது.

பாடலின் குரல்:
Image result for b s sasirekha
B.S SasiRekha
          முழுவதும் பெண் குரலில் வரும் சோலோ பாடலான இந்தப் பாடலைப் பாடியவர், B.S. சசிரேகா. இனிமையான குரலைக்  கொண்ட   சசிரேகா, இளையராஜாவுக்கு ஏராளமான பாடல்களைப் பாடினாலும் பெரும்பாலானவை  ஹிட் ஆகவில்லை. "வாழ்வே மாயமா? வெறுங்கனவா", “என் புருஷந்தான் எனக்கு மட்டும்தான், "செவ்வானமே பொன்மேகமே " போன்றவை விதிவிலக்குகள். A.R ரகுமானுக்குப் பாடிய, “மானூத்து மந்தையில”, பாடலும் ஹிட் ஆனது. மனோஜ்கியான், T. ராஜேந்திரர் போன்ற பல இசையமைப்பாளர்களுக்கு பாடியிருக்கிறார். இவரின் சிறப்பான தமிழ் உச்சரிப்பு போற்றத்தகுந்தது. ஆனால் மக்கள் இவரை மறந்துவிட்டார்கள் என்றே நினைக்கிறன் .
          இந்தப்  பாடலில் மறுபடியும் கிராமிய மணத்தை அப்படியே கொண்டு வந்திருக்கிறார் இளையராஜா.கேட்க இனிமையான இந்தப்பாடலின் மெட்டு, வரிகள், குரல் என்று எல்லாமே கச்சிதமாகப் பொருந்துகிறது. இளையராஜாவின் ஆரம்பக்கட்டமென்றாலும் பாடலின் பல இடங்களில் இளையராஜாவின் தனித்துவம் வெளிப்படுகிறது. மனதை வருடும் இந்தப் பாடலை எப்போது வேண்டுமானாலும் கேட்கலாம்
-தொடரும்.
 


Monday, November 27, 2017

கடல் ஆமைகள் கடத்தப்படுவது ஏன் !!!!!!!!

Image result for sea turtles

இலங்கையில் பரதேசி-28

இதற்கு முந்திய பகுதியைப்படிக்க  இங்கே சொடுக்கவும்.
http://paradesiatnewyork.blogspot.com/2017/11/blog-post_20.html

            100 மில்லியன் வருடங்களுக்கு முந்தியது ஆமை என்று சொன்னபோது வாயைப் பிளக்காதவர்களே இல்லை. மில்லியன் வேணாம்ப்பா கோடியில சொல்லு அப்பத்தான் எனக்குப்புரியும்னு சொல்றவங்களுக்கு இதோ கோடியில். ஒரு மில்லியன் என்பது பத்து லட்சம், பத்து மில்லியன் என்பது 10 கோடி ஆண்டுகள், அடேங்கப்பா இது கல்தோன்றி மண் தோன்றா காலத்தில் வாளோடு ( அல்லது வாலோடு என்றும் வைத்துக்கொள்ளலாம் ) முன் தோன்றிய தமிழ் இனத்திற்கும்  இது முந்திய இனம் போல் தெரிகிறதே . ஆமைகள் தற்போது மொத்தம் எட்டு வகைகள் மட்டுமே இருக்கின்றன. பல வகைகள் அழிந்துவிட்டன. ஆனால் ஆமைகள் வேட்டையாடப்படுவதால் இந்த 8 இனமும் அழியும் சூழ்நிலையில் இருக்கிறதாம். ஆமைகளை வேட்டையாடுகிறார்களா, எனக்குப் புதிராக இருந்தது.
          ஆமைகள்  தாங்கள் இனப்பெருக்கம் செய்வதற்காக ஆண்டிற்கு ஒரு முறை சில குறிப்பிட்ட இடங்களில் சேருமாம். இனப்பெருக்கம் முடிந்து, பெண் ஆமைகள் கடற்கரைக்கு வந்து முட்டையிடுமாம். ஆமைகள் முட்டையிடும் வயது 30 வயதுக்கு மேல் இவைகள் இரவில்தான் முட்டைகளையிடுமாம். ஆமைகள் கடற்கரைக்கு வந்து முட்டையிடுமாம். ஆமைகள் தாங்கள் எந்த கடற்கரையில் பிறந்தனவோ, அதே கடற்கரையில்தான் தன் முட்டைகளை இடும் என்று சொல்கிறார்கள்.  ஆச்சரியமாக  இருந்தது. ஒரு தடவையில் அவைகள் 120 முட்டைகள் வரை இடுமாம். நல்லவேளை மனிதர்களுக்கு இப்படி ஒரு இனப்பெருக்கம் இல்லை. இல்லையென்றால் ஒருவர் தலைமீது ஒருவர். நடக்குமளவுக்கு நெருக்கம் அதிகரித்துவிடும். இந்த முட்டைகள் டேபிள் டென்னிஸ் (பிங்பாங்)பந்துகளின் சைசில் வெள்ளைக் கலரில் இருக்குமாம்.
          தன்னிடமிருந்து உருவாகும் ஒருவித திரவத்தால் இந்த முட்டைகளை பெண் ஆமைகள் ஈரப்பதத்தில் வைத்திருக்குமாம். அப்படி வைத்துவிட்டு திரும்பவும் கடலுக்குத் திரும்பி விடுமாம். அதன்பின் முட்டைகளுடனோ அல்லது அவைகளின் குஞ்சுகளுடனோ அவைகளுக்குத் தொடர்பு இருக்காது.
Image result for sea turtle eggs hatching

          கடற்கரை மணலில் சூரிய வெப்பத்தில் இருக்கும் இவைகள் சுமார் 60 நாட்கள் கழித்து தாமாகவே குஞ்சு பொரிந்து ஓட்டை உடைத்துக் கொண்டு வெளியே வந்து தாமாகவே கடலை நோக்கிச் சென்று கலந்து விடுமாம். பிறந்த ஆமைக்குஞ்சுகளின் அளவு வெறும் 5 சென்ட்டி  மீட்டர் தான்.
          ஆமைகளும் அவைகளின் முட்டைகளும் வேட்டையாடப் படுகின்றன அல்லது அழிகின்றன என்று சொன்னேனே அது எப்படி என்று பார்ப்போம்.
          ஆமை ஓடுகள் அல்லது அதன் முட்டை ஓடுகளால் அழகுப் பொருட்கள் மற்றும் ஆபரணங்கள் செய்யப்படுகின்றன. ஆமைகளின் முட்டைகளுக்கு நல்ல டிமாண்ட் இருக்கிறது. ஆமைகள் கறிக்காகவும் வேட்டையாடப்படுகின்றன. மீன் வலைகளில் மாட்டிக் கொண்டு இறந்து போகின்றன. மோட்டார் படகுகள் அதிவேகத்தில் செல்லும்போது ஆமைகள் அடிபட்டு இறந்துவிடுகின்றன.   மாசுபட்ட கடற்கரைகள், கடல் நீர், கடற்கரைகளில் இருக்கும் ஹோட்டல்கள், ரிசார்ட்டுகள் ஆகியவை ஆமைகளின் இனப்பெருக்கத்திற்குத் தடையாக இருக்கின்றன. பாலித்தீன் மற்றும் பிற கழிவுகள் கடலில் வீசப்படுவதாலும் அது ஆமைகளால் சாப்பிடப்பட்டு அழிவு ஏற்படுகிறது.
          ஆனால் இதனை எப்படித்தடுக்கலாம் என்பதற்கும்  உள்ள பல வழிகளை விளக்க ஆரம்பித்தார்.
          மக்களுக்கு விழிப்புணர்வு கொண்டு வந்து அழிந்து போய்க் கொண்டிருக்கும் இனத்தை மீட்டு அடுத்த தலைமுறைக்கு விட்டு வைக்கலாம்.
          ஆமைகள் இனப்பெருக்கம் நடக்கும் கடற்கரைப் பகுதிகள் பாதுகாக்கப்பட்டு செயற்கை விளக்குகள் அகற்றப்படவேண்டும். பவளப்பாறைகள் கடற்பாசிகள் போன்ற ஆமைக்கு உணவாக இருக்கும் இடங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.
          ஆமை உட்பட கடல்வாழ் உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் மீன் பிடித்தொழில் நடத்தப்படவேண்டும். கடல் மாசுபடுவதை முற்றிலும் தடுக்க வேண்டும். ஆமை ஓடுகளை வைத்து செய்யும் பொருட்களுக்குத்தடை செய்ய வேண்டும் .மக்கள் ஆமை முட்டைகள் மற்றும் ஆமை இறைச்சியைச் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
          "அதெல்லாம் சரி இதில் உங்களின் பங்கை எப்படிச் செய்கிறீர்கள்?" என்று கேட்டேன். அதற்குக் கிடைத்த பதிலைக் கீழே தருகிறேன்.


          "எங்களுடைய முக்கிய நோக்கம் இந்த ஆமை இனத்தை முடிந்த வரையில் பாதுகாத்து  அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வதுதான். அதற்கு நாங்கள் ஆமை முட்டைகளை எடுத்து பாதுகாப்புடன் எங்களிடத்தில்  இருக்கும் இன்குபேட்டர்களைப் பயன்படுத்தி குஞ்சு பொரிக்கிறோம். அதன்பின் அவற்றை மிக கவனத்துடன் கடலில் கொண்டு போய்ச் சேர்க்கிறோம். அது தவிர உடல்நலம் பாதிக்கப்பட்ட ஏராளமான ஆமைகள், மீனவர்களின் வலைகளினால் சேதப்படுத்தப்பட்டவைகள் ஆகியவற்றை எடுத்துக் கொண்டுவந்து, பராமரித்து சுகப்படுத்தி மீண்டும் கடலில் கொண்டு போய் விடுகிறோம்”.
          “அது தவிர வெவ்வேறு ஆமை இனங்களை கொண்டு வந்து வளர்த்து நான்கு அல்லது 5 வருடங்கள் கழித்து கடலில் கொண்டுபோய் விடுகிறோம். இதன் மூலம் பல ஆமை இனங்களும் காப்பாற்றப்படும். அது தவிர அந்த இனங்களை  இங்கே பொதுமக்கள் பார்ப்பதற்காக வைத்திருக்கிறோம். உங்களைப் போல பல மக்களும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் வந்து பார்த்து எங்களை ஆதரிக்கிறார்கள். இது முழுக்க முழுக்க வருகை தருபவர்கள் நன்கொடையால்தான் நடக்கிறது தவிர பலர் நினைப்பது போல் அரசாங்க உதவி என்று ஒன்றுமில்லை”.
          “ஆமை முட்டைகளை மீனவர்களிடமிருந்தும் கடற்கரையின் அருகில் வாழும் மக்களிடமிருந்து நாங்கள் விலை கொடுத்து வாங்கித்தான் குஞ்சு பொரிக்கிறோம். மொத்தம் 4000 முட்டைகள் இதில் வைத்திருக்கிறோம். அவற்றுள் சுமார் 3000 வரை குஞ்சு பொரிக்கும். இது ஒரு மாதக் கணக்கு. ஒரு சில நாட்களில் இவற்றை கடலில் விட்டுவிடுவோம். நாங்கள் விலை கொடுத்து வாங்குவதால் பலர் முட்டைகளை சாப்பிடுவதை நிறுத்தி எங்களிடம் விற்றுவிடுகிறார்கள். அதனால் பல ஆமைகள்  எங்களால் காப்பாற்றப்படுகின்றன என்கிறார். சமீபத்தில் மட்டும் லட்சக் கணக்கான ஆமைகள் காப்பாற்றப்பட்டிருக்கிறதாகச் சொன்னார்கள்.
            நாமும் நட்சத்திர ஆமைகள் கடத்தப்படுவதைப்பற்றி செய்திகளில் அடிக்கடி பார்த்திருப்போம் .ஆமை வகைகளிலேயே மிக அழகானவை என அறியப்படுவது நட்சத்திர ஆமைகள்.உணவு, மருந்து தயாரிப்புக்காக கடத்தப்படும் இந்த ஆமைகள், வீட்டில் செல்லப் பிராணிகளாகவும் வளர்க்கப்படுகின்றன. சர்வதேச சந்தையில் இவை நல்ல விலை போவதால், இந்தியாவில் இவற்றின் கடத்தல் வணிகம் அதிகரித்துள்ளது.


                    அம்மாடி இந்த ஆமைகள் வரலாற்றில் இவ்வளவு இருக்கிறதா என்றபடி தொட்டிகளில் உள்ள ஆமைகளைப் பார்த்தேன்.  எல்லாம் நல்ல ஆரோக்யத்துடன் இருந்தன. இந்த இல்லம் கடற்கரை  ஓரத்தில் இருக்கிறது. பின்னால் வங்காள விரிகுடா ஆர்ப்பரித்து எழுந்து கொண்டிருந்தது. ஆமைகளுக்காக இவர்கள் தங்கள் வாழ்க்கையை குடும்பமாக அர்ப்பணித்து வாழ்வது ஆச்சரியத்திலும் ஆச்சரியமாக இருந்தது. வாருங்கள் கடலுக்குள் பயணித்து அதன் மற்ற ஆச்சரியங்களைப் பார்ப்போம்.

தொடரும்

Wednesday, November 22, 2017

மருதநாயகம் நல்லவனா? கெட்டவனா ?

Image result for சுதந்திர வேங்கை - பூலித்தேவன்

                         
படித்ததில் பிடித்தது
சுதந்திர வேங்கை - பூலித்தேவன் வீரவரலாறு.
கெளதம நீலாம்பரன் - ஸ்ரீ செண்பகா பதிப்பகம் - சென்னை

சென்னையில் புனித ஜார்ஜ் கோட்டையைக் கட்டி நிரந்தரமாய் (?) உட்கார்ந்து கொண்டனர் வெள்ளைக்காரர்கள். கல்கத்தாதான் அவர்களின் முதல் தலைநகர். தென்பகுதியில் ஆதிக்கம் செய்ய சென்னை அவர்களுக்கு வசதியாய் இருந்தது.
Image result for நவாப் மாபூஸ்கான்

மதுரையில் ராணி மங்கம்மாவிற்குப்பின் நிலையான ஆட்சி இல்லை. விஜயரங்க சொக்கநாதர் ஏதோ சில காரணங்களுக்காக தலைநகர் மதுரையை விட்டுவிட்டு திருச்சிக்கோட்டைக்குச் சென்றார். அவர் இறந்த பின் ஆட்சிக்கு வந்த ராணி மங்கம்மாவிடம் பொய்ச்சத்தியம் செய்து சந்தா சாகிப் பெண்டாள முயன்றான். ராணி மங்கம்மாள் தற்கொலை செய்துகொள்ள மதுரை ராஜ்ஜியம் ஆற்காட்டு நவாபான சந்தாசாகிப்பிடம் சென்றது.
அதன்பின் சிறிது காலம் சென்று முகமது அலி ஆற்காடு நவாபாக பட்டம் சூட்டிக் கொண்டு, மதுரை  ராஜ்ஜியத்தில் வரி வசூலிக்கும் பணியை தன் அண்ணன் மாபூஸ் கானிடம் ஒப்படைத்தான்.
 நவாப்  முகமது அலி
மாபூஸ் கானிடம் படைத்தளபதியாக இருந்தவன்தான் கான்சாகிப் கம்மந்தான் என்று அழைக்கப்பட்ட மருதநாயகம் என்ற முகமது யூசுப்.  பாண்டிச் சேரியைச் சேர்ந்த இவன் பிரெஞ்சுப் படையில் பயிற்சி பெற்று, அங்கு ஏதோ பிரச்சனையில் வெளியே வந்து ஆற்காடு நவாபிடம் தஞ்சமடைந்தான். மதுரை ராஜ்ஜியத்தில் இருந்த பாளையக்காரர்கள் பலர் வரிகொடுக்காமல் புரட்சி செய்ய, இந்த தலைவலியை எப்படி சரிசெய்வது என்று நவாப் தவித்துக் கொண்டிருக்கும்போது தான், கொஞ்சம் கொஞ்சமாக உள்ளே வந்த ஆங்கிலேயர் வரிவசூலை தாம் செய்து கொடுப்பதாக நவாபிடம் சொல்ல, நவாப்பும் ஒப்புக் கொண்டார்.
நவாபின் படையோடு ஆங்கிலேயர் படையும் இணைந்து கொள்ள அந்தப்படைக்கு தலைவனாக ஆங்கிலேயரின் செல்லப்பிள்ளையாக வந்தவன்தான் மருதநாயகம். இந்தக் கூட்டுப்படை பாளையக்காரர்களின் கோட்டைகளை துவம்சம் செய்ய பலபேர் வரிகொடுக்க ஒப்புக் கொண்டார்கள். அதையும் மீறிய சில பாளையக்காரர்கள் நெற்கட்டுச் சேவலின் மன்னனாக இருந்த பூலித்தேவனிடம் அடைக்கலம் புகுந்து அவனை தலைவனாக ஏற்றுக்கொண்டனர். மதுரைப் பாளையங்களில் பெரிய பாளையமான நெற்கட்டாஞ்செவலின் தன்னிகரற்ற  தலைவனாக பூலித்தேவன் மாபெரும் வீரனாய், தன்மானத்தமிழனாய் உருவெடுத்து ஆற்காடு நவாப் ஆங்கிலேய கூட்டுப் படைகளை எதிர்த்து பலமுறை நடந்த போர்களில் தன் கோட்டையைக் காத்துக் கொண்டான்.
Image result for maruthanayagam
Maruthanayagam
இதற்கிடையில் ஆங்கிலேயப் படைகளின் தலைவனான மருதநாயகத்திற்கும் ஆற்காடு படைகளின் தலைமைப் பொறுப்பில் இருந்த ஆற்காடு நவாப் முகமது அலியின் அண்ணன் மாபூஸ்கானுக்கும் அடிக்கடி பிரச்சனைகள் வந்தது. மருதநாயகம் ஆங்கிலேயரிடம் புகார் செய்ய ஆங்கிலேயர் மாபூஸ்கானைக் கூப்பிட்டு கண்டித்தனர். ஏற்கனவே தோல்வியால் வாடி இருந்த மாபூஸ்கான் நொந்து நூலாகி பூலித்தேவனிடம் தஞ்சமடைய, பகையை மறந்து பூலித்தேவன்  அவனை நண்பனாக ஏற்றுக் கொண்டதோடு தன் கோட்டையின் உள்ளே மாபூஸ்கான் தொழ ஒரு சிறு மசூதியையும் கட்டிக்கொடுத்தான்.
ஒரு முறை பேச்சு வார்த்தைக்குக் கூப்பிட்ட மருதநாயகம் தான் மதுரையில் இருப்பதால் தன்னாட்சி செலுத்தி சுதந்திர நாடாக பிரகடனம் செய்யவிருப்பதாகவும் அதற்கு பூலித்தேவன் ஆதரவளிக்க வேண்டும் எனக் கேட்டான். அப்படி அளித்தால் தென் பகுதியை சுதந்திரமாக ஆளும் உரிமையை அவனுக்குக் கொடுப்பதாகவும்  வாக்களித்தான். அடிக்கடி விசுவாசத்தை ஏன் மதத்தையே மாற்றிக்கொள்ளும் மருதநாயகத்திடம் நம்பிக்கையில்லாத பூலித்தேவன் அதற்கு மறுப்புத் தெரிவிக்கிறான். பின்னர் அவனிடமிருந்து தப்பியோடி தன் கோட்டைக்குள் புக, மருதநாயகம் பெரும் படையுடன் வந்து நெற்கட்டாஞ் செவல் கோட்டையைத் தகர்த்து எறிகிறான். பூலித்தேவன் தப்பித்து ஓடி திருச்சி கோட்டையில் உள்ள மாபூஸ்கானிடம் தஞ்சம் புக, நவாப் முகமது அலியும் ஆதரவளிக்க ரகசியமாய் சிலகாலம் தங்கியிருக்கிறான்.
இதற்கிடையில் மதுரையை ஆக்கிரமித்து சுல்தானானாகும் மருதநாயகத்தை ஆங்கிலப்படையினர் மிகுந்த முயற்சியுடன் தாக்கி முறியடித்து அவனைப்பிடித்து தூக்கிலிடுகின்றனர்.
அதன்பின் தன நாட்டிற்குத்திரும்பும் பூலித்தேவனை நண்பனே ஆங்கிலேயரிடம் காட்டிக்கொடுக்க, போகும் வழியில் இருந்த கோவிலில் சாமிகும்பிட உள்ளே நுழையும் பூலித்தேவன்  அப்படியே மறைந்து போகிறான். வெளியேற வேறு எந்த வழியும் இல்லாத அந்தக் கோவிலில் நுழைந்த பூலித்தேவன்  அப்படியே அங்கிருந்த இறைவனிடம் ஒன்றி மறைந்துபோனான்  என்று அந்தப்பகுதி மக்கள் நம்புகிறார்கள்.
இந்த பூலித்தேவனின் வரலாற்றை மையமாக வைத்து எழுதப்பட்ட வரலாற்று நவீனம்தான்   இந்தப்புத்தகம். தனக்கே உரிய தனிப்பாணியில் கெளதம நீலாம்பரன் இதனை எழுதியுள்ளார்.
இதில் என்னை ஆச்சரியமூட்டும் சில விடயங்களை கீழே தருகிறேன்.
1)   பூலித்தேவனின் தாத்தா காத்தப்பராசன் , மதுரை மன்னன் வரகுண பாண்டியனின், வேண்டுகோளுக்கிணங்க மக்களை அச்சத்தில் ஆழ்த்திய 16 அடி வேங்கையை கொன்றதால், பாளையத்தை சுதந்திரமாகக் கொடுத்து மகளையும் கொடுக்கிறார். எனவே அதன் வழியில் வருவதால் பாண்டிய பரம்பரையின் எஞ்சிய மன்னனாகிறான் பூலித்தேவன்.
2)   பூலித்தேவனும் அதே போல் வேங்கையை அடக்க, மதுரையை ஆளும் பொறுப்பு விஜயரங்க சொக்கநாதர் (ராணி மங்கம்மாவின் கணவன்) நாயக்க மன்னரிடமிருந்து கிடைத்தும் மறுத்து தன்னிடத்திற்கே திருப்புகிறான்.
3)   சாகேப் என்ற மரியாதை வார்த்தைத்தான் சாப்பு என்று திரிந்து விட்டது.
4)   வரி கட்ட மறுத்ததால் அந்தக் கோட்டையின் பெயர் நெற்கட்டாஞ் சேவல் என்றானது.
5)   தென்பாண்டிய அரசர்களுள் 'பூழியர் கோன்'என்ற பட்டப்பெயர் இருந்தது. அதுதான் பூலித்தேவன் என்று திறந்துவிட்டது.
6)   சேர்ந்து வாழும் இடம் என்பதால் சேரி என்ற பெயர் வந்தது. உதாரணம்: பாண்டிச்சேரி, புதுச்சேரி, வேளச்சேரி, Etc.,
7)   ஆங்கிலேயர் வரிவசூல் உரிமையை மாபூஸ்கானிடமிருந்து பிடுங்கி தீத்தாரப்ப முதலி மற்றும் அழகப்ப முதலிக்கு வழங்கினர். இதனை ஜெனரல் லாரன்ஸ் துரையிடம் ஏற்பாடு செய்தது மருதநாயகம்.
8)   பூலியின் படைத்தளபதிகள் கொல்லங் கொண்டான் பாளை வாண்டையத் தேவர், தலைவன் கோட்டை ஈஸ்வரத்தேவன், வடகரை குமார சின்னனைஞ்சாத்தேவர் ஆகியோர்.
9)   பூலித்தேவனை மன்னனாக ஏற்றுக் கொண்ட பாளையங்கள், சேத்தூர், ஊத்துமலை, சுரண்டை, ஊர்க்காடு, சிங்கம்பட்டி, நடுவக்குறிச்சி ஆகியவை.
10)               பாளையங்கோட்டையில் மருதநாயகத்தை எதிர்த்து இறந்து போன பூலித்தேவனின் படைவீரர்கள், வல்லயம் நெடுஞ்சித்தேவன் வளரி வீரநாதத் தேவன், வளைதடி ஞானசக்தித்  தேவன், வேல் குத்தித்தேவன், வாள் கோட்டைத்தேவன் ஆகியோர். ஆனால் இவர்கள் பீரங்கி வாயில் வைத்து கொல்லப்படுவதற்கு முன் மருதநாயகம் படையில் பெருத்த சேதத்தை ஏற்படுத்தினராம்.
11)               பூலித்தேவன் வரலாற்றுக் கதையோடு காத்தவராயன், பட்டவராயன், மதுரைவீரன், பொம்மக்கா திம்மக்கா, நாஞ்சில் குறவன், ஆகியோர்களின் கதையோடு அலெக்சாண்டார் படையெடுப்பு பற்றியும் ஆசிரியர் விளக்கமாக எழுதியுள்ளார்.
12)               எல்லாக் கோட்டைகளும் விழுந்தபின் பூலித்தேவனின் கோட்டைகளான, குலசேகரன் கோட்டை, வாசுதேவ நல்லூர், மற்றும் நெற்கட்டான் சேவல் ஆகிய கோட்டைகளும் தரைமட்ட மாக்கப்பட்டன.  
13)               நெற்கட்டான்சேவலின் மற்றொரு  பெயர் ஆவுடையார் பாளையம்.
14)               மாலிக்காபூர் படையெடுப்பின் பின் மதுரையில் இஸ்லாமிய ஆட்சி தொடர்ந்ததைப்பற்றி எழுதுகிறார். முகமதுபின் துக்ளக்கின் தளபதி, உலூக்கான், கியாஸ் உதின் தம்கானி, அலாவுதீன் சிக்கந்தா, ஆகியோர் மதுரையின் சுல்தான்கள் ஆக பதவி வகித்தனர்.
15)               மிகமுக்கியமாக மருதநாயகம் என்ற முகமது யூசூப்பைப் பற்றி எதிர்மறைவான விஷயங்களே இந்தப் புத்தகத்தில் இடம் பெற்றிருக்கின்றன. ஆங்கிலப் படைகளுக்கு தலைமை தாங்கி அவன் செய்த அட்டகாசங்களும் கொலைகளும் எண்ணிலடங்காதவை என்பதைத் தெரிந்து கொள்ளும் போது அவன் மீது இருந்த ஹீரோ இமேஜ் என்னை விட்டு விலகியது.
16)               முக்கிய தலைவர்களான, திருவாங்கூர் சமஸ்தானம், சிவகங்கை, ராமநாதபுரம் சேதுபதி, தஞ்சை மராட்டியர், புதுக்கோட்டை தொண்டைமான், மற்றும் தெற்குப்பகுதி பாளையங்கள் ஆகியவையை பூலித்தேவன் தலைமையில் ஒன்றுபட்டு எதிர்த்திருந்தால்  ஆங்கிலேயர் ஆதிக்கம் வெகுவாகக் கட்டுப் படுத்தப்பட்டிருக்கலாம். ஒன்றுபடாமல் அதன்பின் தனித்தனியாக எதிர்த்து அழிந்துபட்டனர் என்பது வேதனைக்குரிய விஷயம்.

தென்பாண்டிய சீமைகளில் வீரத்திருமகனாக விளங்கிய பூலித்தேவன்  பற்றிய இந்தப்புதினம் படிப்பவர்களுக்கு பரவசமூட்டும்  என்பதில் சந்தேகமில்லை. 
முற்றும்
Happy Thanksgiving WishesMonday, November 20, 2017

கடல் ஆமையும் காதல் அழகியும் !!!!!!!!

இலங்கையில் பரதேசி-27


இதற்கு முந்திய பகுதியைப்படிக்க  இங்கே சொடுக்கவும்.
http://paradesiatnewyork.blogspot.com/2017/10/800.html

"சார் சுனாமி வரும்னு பயந்துக்கிட்டேயிருந்தா, மீனவர் வாழ்க்கைக்கு என்ன செய்வது? "
"நீ சொல்வது சரிதான், விமான விபத்துகளுக்குப் பயந்து கொண்டு இருந்தால் நான் ஒரு இடத்திற்கும் போயிருக்க முடியாது".
"ஆமாம் சார், அல்லா எப்ப கூப்பிடுறானோ அப்ப போக வேண்டியது தானே".
கொஞ்சம் பொறுமையாய்க்  கூப்பிடச் சொல்லுப்பா, அல்லாவை, நான் ஊர்போய்ச் சேர்ந்திடுகிறேன்".
சரிவிடுங்க சார், உங்களுக்கு எப்போதும் கிண்டல்தான். சுனாமின்னு சொன்னதும் ஞாபகத்துக்கு வருது, ஒரு இடத்திற்கு உங்களைக் கூப்பிட்டுப் போகிறேன்.
Related image

போகிற வழியில் கூட்டம் கூட்டமாக வெள்ளைக்காரர்களைப் பார்த்தோம். கண்டியை விட  காலேயில் அதிகமான வெள்ளைக் காரர்களைப் பார்த்தேன். குடும்பம் குடும்பமாக கையில் சர்ஃபிங்  பலகையை வைத்துக் கொண்டு ஆண்கள் ஷார்ட்ஸ்களிலும்  பெண்கள் நீச்சல் உடையிலும் இருந்தார்கள். தெருவில் நடந்து திரிந்து கொண்டு இருந்தார்கள். அம்ரியிடம் கேட்டபோது சொன்னான், இவர்கள் இங்கு வந்து மாதக்கணக்காக தங்கி விடுவார்களாம். குறிப்பாக ஐரோப்பாவில் குளிர் சமய மாதங்களான  டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி காலத்தில் இங்கு வந்து மூன்றிலிருந்து ஆறு மாதங்கள் இங்கு தங்கி விடுவார்களாம். அவர்களுக்கென்று இங்கு விடுதிகளும் நிறைய உண்டாம். அவர்களின் பெரும்பாலான பொழுதுபோக்கு கடற்கரையில் சன்பாத் எடுப்பது, கடலில் நீந்துவது,ஸ்னார்க்லிங்,சர்ஃபிங்க் போன்றவைதான். “பீச்சில் இவர்களை நிறையப் பார்க்கலாம் சார்”, என்றான். உங்கள் கற்பனைகளை கொஞ்சம் நிறுத்தி விட்டு அம்ரியை பின் தொடர்வோம்.

அம்ரி, கூப்பிட்டுப் போன இடம் கொஞ்சம் வித்தியாசமான இடம் அனாதை யானைகளின் ஆசிரமத்தைப் பார்த்தோமே, நினைவிருக்கிறதா, இது அது போலவே ஒரு ஆசிரமம்தான். ஆனால் இது யானைகளுக்கு அல்ல, ஆமைகளுக்கு, என்ன ஆச்சரியமாக இருக்கிறதா? வாருங்கள் உள்ளே போவோம்.


இதனை நடத்துபவரின் குடும்பத்தில் அப்பா அம்மா ஆகியோர் சுனாமியால் இறந்துவிட அந்தப் பொறுப்பை ஏற்று இப்போது  மகன் இதனை நடத்துகிறார். இது முற்றிலும் பார்க்க வருபவர்களின் நன்கொடையால் நடத்தப்படும் ஒரு தனியார் இடம். உள்ளே பல தொட்டிகளில் உள்ள நீரில் பல விதவிதமான ஆமைகள் இருந்தன. சிறிய குஞ்சுகளிலிருந்து மிகப் பெரிய சைஸ் வரை இருந்தன. அதோடு ஆமைகள் என்றாலும் வேறுவேறு ஜாதிகள் இருந்தன. ஒவ்வொரு தொட்டியிலும் அவை பிறந்த தேதிகள் வயது ஆகியவை எழுதப்பட்டிருந்தன. ஒவ்வொரு தொட்டியாக போய்ப் பார்த்தேன். நான் உள்ளே போகும்போது அங்கே ஒருவருமில்லை. ஆனால் சிறிது நேரத்தில் ஒரு வெள்ளைக் காரக்குழு உள்ளே நுழைந்தது.


Add caption

உள்ளே வந்த ஒரு இளம் தம்பதிகளில் அந்தப் பெண்ணுக்கு ஒரு விபரீத ஆசை வந்தது, ஒரு ஆமைக்குஞ்சை எடுத்துக் கொஞ்ச வேண்டும் என்று. அவளுடைய ஆசையை தன் காதலன் அல்லது கணவனிடம் சொல்ல அவன் அதை ஒரு வழியாக ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துச் சொல்ல, நான் என்ன பைத்தியக் காரத்தனம் இது என்று நினைத்த போது சற்றும் எதிர்பாராத ஒரு விஷயம் நடந்தது. அந்த இடத்தை நடத்துபவரின் மகள் வந்து ஒரு ஆமையை அப்படியே நீர் சொட்டச்சொட்ட தொட்டியிலிருந்து எடுத்து அவளுடைய கைகளில் கொடுக்க அவள் பரவசமானாள். அவள் கையில் இருக்கும்போது, ஆமையும் அழகாகத்தான் இருந்தது. அவளால் ஆமைக்கு அழகா, இல்லை ஆமையால் அவளுக்கு அழகா என்று தெரியவில்லை.“ஏலேய் சேகர் ஒரு பழைய கவிஞன் கொஞ்சம்  எட்டிப்பார்த்து போலத் தெரிகிறதே?”.
“வந்துட்டாண்டா இம்சை அரசன் மகேந்திரவர்மன். ஏண்டா இந்த வரியைப் பாத்தா கவிதை மாதிரியா தெரியுது? சும்மா இரேண்டா. கவிதையெல்லாம் எழுதி 25 வருடம் ஆச்சுடா?”
“ஓ உனக்கு கல்யாணம் ஆகி சமீபத்தில் 25 வருஷம் ஆச்சே அதைச் சொல்றயா? அப்ப இந்த கவிதை கத்திரிக்காய் எல்லாம் கல்யாணத்துக்கு முன்னாலதான் வரும்னு சொல்றியா?”
அடே சாமி ஆள விடுறா நான் அப்படில்லாம் எதுவும் சொல்லலை”
“ பின்ன நீ சொன்னதுக்கு என்னடா அர்த்தம்?”
ஒரு அர்த்தமுமல்ல நேரமாச்சு நீ போய்த்தூங்குடா”
 மகேந்திரன் சொல்றது உண்மைதானோ? ஏன் என்னுடைய கவிதைகள் நின்னு போச்சு?. நான் கவிதை பழகாமல் விட்டு விட்டேனோ?. இப்படி நம்ம திறமைகளைப் பயன்படுத்தாமல் விட்டுவிட்டால் அது அப்படியே மறைந்துவிடும் தான். ஆனால் அதற்கேற்ப சந்தர்ப்பம் சூழ்நிலை அமையாவிட்டால் கவிதை எங்கே வரப்போகிறது?. இந்த எழுத்து உரைநடையாவது வருகிறது என்று சந்தோஷப்பட வேண்டியதுதான். என்ன மக்களே என்னுடைய பழைய கவிதைகளை வாசிக்க விரும்புபவர்கள் பின்நூட்டத்தில் தெரிவித்தால் அவ்வப்போது ஒவ்வொன்றாகப் பதிவிடுகிறேன்.
இந்த மகேந்திரன் வந்து டிராக்கை மாத்திட்டான். கொஞ்சம் இருங்க செல்போனை சைலன்ட் மோடில் போட்டுவிடுகிறேன். ஓகே மறுபடியும் காலேக்கு திரும்புவோம்.
நான் அதனை ஆச்சரியத்துடன் பார்க்க, "உங்களுக்கும் கையில் தரட்டுமா?”, என்று கேட்டாள். “இல்லை வேண்டாம்”, என்று அவசரமாக மறுத்துவிட்டேன்.


அதன்பின் அந்த ஆமைக்காப்பகப்  பெண்ணிடம் கேட்டேன், “எதற்காக இப்படி தொட்டியில் வைத்திருக்கிறீர்கள்? அவை சுதந்திரமாக இருப்பது தான் அவைகளுக்குப்  பிடிக்குமல்லவா?. கடல்ல போற ஆமையை எதற்கு இப்படி எடுத்து வந்து வைத்திருக்கிறீர்கள்?” என்று கேட்டேன். அப்போது அந்தப் பெண்ணின் அப்பா வந்து விளக்க ஆரம்பித்தார்.
அதற்குள் இன்னும் சில வெள்ளைக்காரர்கள் வர யூரோவோ டாலரோ கிடைக்குமென்று அவர்களிடம் சென்றார். எனக்கு கொஞ்சம் கோவம் வந்தது. நானும் நியூயார்க்கிலிருந்து வருகிறேன். நானும் டாலர் தருவேன் என்று கத்த வேண்டும் போல இருந்தது. ஒருவேளை சிங்கள தமிழ் பிரச்சனையாக இருக்குமோ?. நான் தமிழில் அம்ரியிடம் பேசியதை அவர்கள் கேட்டார்கள். அந்தக் குடும்பம் ஒரு சிங்களக்குடும்பம்.


என்னுடைய கற்பனைச் சந்தேகங்கள் எங்கெங்கோ செல்ல அதனைக் கட்டுப்படுத்திக் கொண்டு அந்த வெள்ளைக்காரர்களுக்கு எடுத்துச் சொல்லுமிடத்திற்கு நானும் போய் வாய் பார்க்க ஆரம்பித்தேன்.


“ஆமைகளின் பூர்வீகம் எத்தனை ஆண்டுகள் என்று யாராவது யூகிக்க முடியுமா?” என்று கேட்டார் பெண்ணின் அப்பா.
சிலர் அப்போது ஆயிரம்/ பத்தாயிரம் என்று சொன்னார்கள். அவர் சொன்னார், “ஆமைகள் மிகவும் பழைமை வாய்ந்தது சுமார் 100 மில்லியன் வருடங்களாக இவைகள் பூமியில் இருக்கின்றன. டைனோசர்ஸ் வாழ்ந்த சமயத்தில் இவைகளும் வாழ்ந்து வந்தன”. என்று சொன்னார். ஆமைக் கதை சுவாரஸ்யமாக இருந்தது. மீதியை அடுத்த வாரம் சொல்கிறேன்.
- தொடரும்.