Friday, February 19, 2016

நேரு இந்திராவுக்கு எழுதிய கடிதங்கள் !!!!!!!!!!!!

படித்ததில் பிடித்தது!
உலக சரித்திரம் ஜவஹர்லால் நேரு - அலைகள் வெளியீட்டகம்
உலக சரித்திரம்(பாகம்1,2) (GLIMPSES OF WORLD HISTORY)

உலக சரித்திரம் மட்டுமல்ல, உள்ளூர் சரித்திரமும் தெரியாத தலைவர்கள்(?) நாட்டை ஆண்டு கொண்டும்ஆளத்துடித்துக் கொண்டும் இருக்கும் போது, நம் இந்தியாவின் சிற்பி (Architect of Modern India) என்று அழைக்கப்படும் முதலாவது பாரதப் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு அவர்கள் எழுதிய இந்தப்புத்தகத்தைப் படிக்கும்போது உள்ளபடியே பெருமையாக இருந்தது.
அவர் மீது பல விமர்சனங்கள் இருந்தாலும், வல்லபாய் படேல், அம்பேத்கார் போன்ற உரிய தகுதியான நபர்களை அமைச்சரவையில் சேர்த்து  தற்போதைய இந்தியாவை உருவாக்குவதில் பெரும் பணியாற்றியவர் நேரு என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமில்லை.
Nehru with Gandhi
செல்வச் சீமானாகப் பிறந்தும், விடுதலைப் போராட்டத்தில் குதித்து பல வருடங்கள் சிறையில் கழிக்க நேரிட்டாலும் அவர் நமது நாட்டைப்பற்றிக் கண்ட கனவுகள் இந்தப் புத்தகத்தில் வெளிப்படுகின்றன. குறிப்பாக சோஷலிசம் ஜனநாயகம் ஆகியவற்றில் அவர் கொண்ட உறுதியான நம்பிக்கை, வெளிநாட்டு உறவில் அணி சேராக் கொள்கை,மதசார்பற்ற தன்மை என்பவை போன்ற அவர் காலத்தில் அமைக்கப்பட்ட கொள்கைத் தூண்கள் தாம், நம் நாட்டை இன்றுவரை காத்து வருகின்றன என்று சொல்லலாம். அதோடு மகாத்மா காந்தி பெரும் நம்பிக்கை வைத்துக் கொண்டு வந்ததும் இவரே. இறுதிவரை காந்தியின் கொள்கைகளைக் கடைப்பிடித்த உத்தம சீடன் என்றும் இவரைச் சொல்லலாம். உதாரணத்திற்கு ஒரே சமயத்தில் சுதந்திரம் பெற்ற பாகிஸ்தானோடு நம் நாட்டை ஒப்பிட்டுப்பாருங்கள். அப்போது புரியும் நம்முடைய அடித்தளம் முற்றிலும்  வேறு என்று .
பல நூற்றாண்டுகளாக அடிமைப்பட்டு இருந்த நாட்டை மீட்டு தனித்துவ நாடாக மாற்றுவது என்பது சாதாரண காரியம் இல்லை.
Nehru with Indira
நைனி சிறையில் இருக்கும்போது (1931-1934 வரை) தன்னுடைய ஒரே மகளான இந்திரா காந்திக்கு அவர் எழுதிய கடிதங்களின் தொகுப்புதான் இந்தப்புத்தகம். ஒவ்வொன்றும் 700, 750 பக்கங்கள் கொண்ட இருபெரும் தொகுப்புகள் இவை..
இதற்கு இணையான நூல் உலகத்தில் இதுவரை வரவில்லை என்று சொல்கிறார்கள்.
சிறைக்குள் இருந்து கொண்டு இவ்வளவு விவரங்களை  ஞாபகத்தில் வைத்து எப்படி எழுத முடிந்தது என்று நினைத்தால் ஆச்சரியமாக இருக்கிறது.
இந்திய, ஆசிய, அமெரிக்க ஐரோப்பிய வரலாறுகளை துல்லியமாக புட்டுப்புட்டு வைப்பதோடு அதன் சமூக, பொருளாதார சிக்கல்கள், வளர்ச்சி, கிளர்ச்சி, எழுச்சி ஆகியவற்றையும், அவர் வாழும் காலத்தில் உலக நிலைமை எப்படியெல்லாம் இருந்தது என்பதைப் பற்றியும் விருப்பு வெறுப்பின்றி எழுதியிருக்கிறார்.
நேரு பல வருடங்களை நைனி மத்திய சிறை, S.S. கிரிகோரியா கப்பல், பரில்லி மாவட்டை சிறை, டேராடூன் மாவட்டச் சிறை ஆகியவற்றில் கழித்திருக்கிறார். சில நேரத்தில் ஒரே சமயத்தில் தந்தை, (மோதிலால் நேரு) தனயன், மனைவி மூவரும் சிறைப்பட்டிருக்கின்றனர். பார்வையாளர்கள் நேரத்தில் யாரும் வராததைக்குறித்தும், கடிதங்கள் வராததைக் குறித்தும் ஏங்கியிருக்கிறார்.
நான் படித்த புத்தகங்களிலேயே வரலாற்றுச் செறிவு மிகுந்தது இது. உலக வரலாறை முற்றிலுமாக அறிந்து கொள்ள இப்புத்தகத்தின் மூலம் எனக்குக் கிடைத்தது சிறப்பான வாய்ப்பு.
அதே சமயத்தில் இதன் மொழிபெயர்ப்பைப் பற்றியும் சொல்ல வேண்டும். OV அளகேசன் அவர்கள் 1947ல் மொழிபெயர்த்திருக்கிறார். மூல நூலின் பொருளடக்கம் சிதையாமல் தன்னுடைய சொந்த முத்திரைகளையும், தமிழ் இலக்கியத்திலிருந்து கையாண்டு பதித்திருக்கிறார். இவரும் சாதாரண ஆளல்ல, மத்திய அரசாங்கத்தில் அமைச்சராய் இருந்தவர்.  
இப்பொழுது வழக்கம்போல் புத்தகத்தின் சாராம்சத்தை புல்லட் பாயிண்ட்டுகளில் தருகிறேன்.
.
பாகம்-1
1.    திராவிட நாகரிகம்தான், உலகின் மூத்த நாகரிகம் என்பதைத் தெளிவாக குறிப்பிடுகிறார்.
2.    கிரேக்க நாகரிகங்கள், மித்தாலஜி, ஹோமர், இலியட், ஒடிசி, ஹெலன் ஆஃப் டிராய் போன்ற பல காரியங்களை அலசுகிறார்.
3.    ஒரு மொழியை அதனைப் பேசும் மக்களிடமிருந்து ஒழிக்க முயல்வது விரும்பத்தக்கதல்ல என்றும் சொந்த மொழியின் மூலம்தான் மக்கள் வளர்ச்சியடைய முடியும் என்றும் அதில்தான் கல்வி கற்கப்பட வேண்டும் போன்ற உன்னத கருத்துகளை வெளிப்படுத்துகிறார்.
4.    ஆரியர்கள் தங்களைத்தவிர மற்றவர்கள் இழிந்தவர்கள் என்று கருதி இறுமாப்பும் வீண்பெருமையும் கொண்டதோடு மற்றவர்களோடு கலப்பதையும்  விரும்பவில்லை என்று சாடுகிறார்.
5.    உழைப்பின் பயனை உழைப்பவர்கள் பெறமுடியாவிட்டால் சுதந்திரத்தால் என்ன பயன் என்று கேட்கிறார்.
6.    மன்னர்களையும் பேரரசர்களையும் பற்றிச் சொல்வது மட்டும் சரித்திரமல்ல, தங்களுடைய செயலினால் பிறரைப் பாதித்தும் பிறருடைய செயல்களினால் தாம் பாதிக்கப்பட்டும் இருக்கிற சாதாரண மக்களின் வாழ்க்கையைக் குறிப்பதுதான் உண்மையான வரலாறு என்கிறார்.
7.    இந்தியா  ஆதிகாலத்திலிருந்து, ஆரியர், பார்சி, யூதர் முஸ்லிம் இன மக்களை எப்பொழுதும் வரவேற்று இடம் கொடுத்தது. மதத்துவேஷம் என்பது ஆதி இந்தியர்களுக்கு அறவே இல்லை. அடைக்கலம் தேடியும், வியாபார நோக்கிலும் வந்தவர்கள் ஆதரிக்கப்பட்டனர்.  படையெடுத்து வந்தவர்களை  மட்டும்தான் இந்தியர் எதிர்த்தனர். ஆனால் குறுக்குவழியில் வியாபார நோக்கில் வந்த ஆங்கிலேயர் நம் நாட்டைப் பிடித்துக் கொண்டது அநியாயத்திலும் அநியாயம்.
8.    மலாய், கம்போடியா, ஜாவா, சுமத்ரா, போர்னியா, பர்மா, தாய்லாந்து போன்ற கிழக்குத்தீவுகளில், இந்தியக் குடியேற்றங்கள் அமைந்தது, பல்லவர் கால தென்னிந்தியாவில் இருந்துதான்.
9.    இந்தோ சீனாவிலிருந்து குடியேற்றத்திற்கு காம்போஜம் என்று பெயர். இது காபூல் பள்ளத்தாக்கிலுள்ள ஒரு ஊரின் பெயர். இது தான் கம்போடியா என்று இப்போது அழைக்கப்படுகிறது.  
10. பக்தி இயக்கம் வளர்ந்த பின்னர்தான் போலிச் சாமியார்கள் அதிகரித்தனர்.


பாகம் -2
1.    பாரசீகம், ஈரான் பஹல்வி டைனாஸ்டி ஆகியவற்றை தெளிவாக விளக்குகிறார்..
2.    ஜெர்மன் கவிஞர்கள், கதே, ஷில்லர், ஹென்ரிக் ஹைன், தத்துவ சாஸ்திரிகள், இம்மானுவேல் கான்ட், ஹெகல், கார்ல் மார்க்ஸ், ஃபிரெஞ்சுக் கவிஞர்கள் விக்டர் ஹ்யூகோ, ஹொனரா பால்ஜக், இங்கிலாந்தின் கவிஞர்கள், கீட்ஸ், ஷெல்லி, பைரன் , வேர்ட்ஸ்வொர்த், கோல்ரிஜ் ஆகியோரைப்பற்றி அளாவளாவுகிறர்.
3.    முதலாம் உலகப்போருக்குப்பின் ரஷ்யாவில் ஜார் மன்னனின் வீழ்ச்சி, சோவியத்தின் பிறப்பு, லெனினின் ஆதிக்கம் ஆகியவற்றை தெளிவாகக் குறிப்பிடுகிறார்.
4.    பிரிட்டிஷ் காலத்தில், இந்தியாவின் கல்விச் செலவு தலைக்கு 9 பென்ஸ் ஆனால் பிரிட்டனில் 2பவுன் 15 ஷில்லிங் அதாவது 73 மடங்கு அதிகம்.
5.    தாதாபாய் நெளரோஜி அவர்களின் கணக்குப்படி, 1870-ல் ஒரு சராசரி இந்தியனின் ஆண்டு வருமானம் 20 ரூபாய், 1933ல் அது 67 ரூபாயிற்று அது 116 ரூபாய் அளவுக்குப் போனது. ஆனால் அப்போது பிரிட்டனில் அது 1000 ரூபாயாகவும், அமெரிக்காவில் 1925 ரூபாய் ஆகவும் இருந்தது.
6.    1927 டிசம்பரில் சென்னையில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில்தான்  தான் முதன் முதலில் முழுச் சுதந்திரம் கோரப்பட்டது.
சில ஆச்சரியமான தொலை நோக்குப்பார்வை :தீர்க்கதரிசனங்கள் (1933ல் சொன்னவை)
1.    அமெரிக்காவும் ரஷ்யாவும் உலக விவகாரங்களில் பெரும் பங்கு வகிக்கும்.
2.    முதலாளித்துவம் உண்மையான ஜனநாயகம் அல்ல.
3.    அமெரிக்கா (1933) தற்போது கஷ்டப்பட்டாலும், விரைவில் மீண்டு வரும்.
4.    பங்குச் சந்தையில் லண்டன் ஆதிக்கம் முடிந்து நியூயார்க் ஆதிக்கம் பெறும்.
5.    விரைவில் இன்னொரு மகாயுத்தம் வரலாம்.
6.    ஜப்பானின் சாம்ராஜ்ய ஆசைக்கு எதிரி அமெரிக்காதான்.
7.    இங்கிலாந்தின், குடியேற்ற நாடுகளின் மேலுள்ள ஆதிக்கம் குறைந்து வருகிறது.
8.    இங்கிலாந்து  கீழுக்குப் போக போக அமெரிக்கா மேலுக்கு வருவது தவிர்க்க முடியாது.
9.    எலியும் பூனையுமாய் இருந்த பிரான்சும் ரஷ்யாவும் ஹிட்லர் இருப்பதால் நகமும் சதையுமாய் மாறிவிடும்.
10. ஜெர்மனியில் நாஜிகளின் அடக்குமுறை ரொம்ப நாள் தங்காது.
11. இனிமேல் ஆயுதப்புரட்சி சாத்தியமில்லை. சமூக அரசியல் புரட்சி மட்டுமே சாத்தியம்.
12. அமெரிக்கா இதுவரை ஐரோப்பிய விவகாரங்களில் தலையிடவில்லை. தலையிட்டால் அதன் வலிமையை அனைவரும் அறிந்து கொள்வார்கள்.
உலக வரலாற்றில் ஆர்வமும் இந்திய வரலாற்றில் அக்கரையும் கொண்ட யாவரும் அவசியம் படிக்க வேண்டிய நூல் இது.

முற்றும்

10 comments:

 1. அருமையான புல்லட்கள்....நூலின் சாரம் தெறிக்கிறது...இந்தியாதான் எத்தனை அற்புதமான தலைவர்களை கொண்டிருந்திருக்கிறது...ஹிம்...

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி செல்வக்குமார்.

   Delete
 2. super ;ji tel serial ;tamil translate, DDPODHIGAI T.V nan-kanda 'bharatham' 18 cd relsed, ;by doordrshan dirctore shyambengal. main lead actore, om puri ,pallvi joshi,ella irani, super; pardesai don't miss u

  ReplyDelete
 3. அறிந்து கொள்ள வேண்டிய சிறப்பான நூல்... நன்றி...

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் நன்றி திண்டுக்கல் தனபாலன்.

   Delete
 4. நன்றி நண்பர் alfy.

  ReplyDelete
 5. தகவலுக்கு நன்றி. ஆங்கிலத்தில் அவரின் சில கடிதங்கள் தொகுப்பு படித்திருக்கிறேன். தமிழில் படித்ததில்லை.

  ReplyDelete
 6. ஜவஹர்லால் நேரு அவர்களை பற்றி அறியாமல் இந்திய அரசியல் பேசுவது வீண். மடமை.

  ReplyDelete