Friday, April 20, 2018

விளையாட்டு வீரன் பரதேசி !!!!!

manjalar dam க்கான பட முடிவு
Manjalar Dam

வேர்களைத்தேடி பகுதி -14
இதற்கு முந்திய பகுதியைப்படிக்க  இங்கே சொடுக்கவும்.
http://paradesiatnewyork.blogspot.com/2018/04/blog-post_12.html
உடல் வலி, மனதில் ரணம், பெண்களின் முன்னால் அவமானம் இவையெல்லாவற்றையும் அனுபவித்த எனக்கு நியாயமாய்ப் பார்த்தால் என் அப்பாவின் மீது கோபமும் வெறுப்பும் தோன்றியிருக்க வேண்டும். ஆனால் என்ன காரணமோ தெரியவில்லை. அவர் மீது நான் வைத்திருந்த பயங்கலந்த மரியாதை கூடியதே தவிர கொஞ்சங்கூட குறையவேயில்லை.
இந்தப் பாடப்பகுதியை படித்து ஒப்படைத்தபின்தான் நீ வீட்டுக்கு வரவேண்டும் என்று ஆணையிட்டு, ஒப்பிப்பதற்கு இருவரை அங்கே இருக்கச் சொல்லிவிட்டுப் போனார் என் தந்தை. படிப்பதோ ஒப்பிப்பதோ எனக்கு பெரிய வேலையில்லை. ஒரு அரை மணி நேரத்தில் முடித்துவிட்டு வீடு வந்து சேர்ந்தேன். இப்படி இந்து நடுநிலைப்பள்ளியில் நான் எங்கப்பாவிடம் படித்தபோது நொந்து நூலான கதைகள் நிறையவே இருக்கின்றன.
ஆனால் இந்தப்பாழாய்ப்போன  சாத்தானின் குழந்தையின் தலைமுடிதான் என்னைப் படிக்க விடாமல் செய்துவிட்டது என்று நம்பினேன். ஒரு வாரம் இந்தப்புறளி பரவி பரபரப்பாக இருந்தது. அதற்குப்புறம் யாரோ சொல்லி விளங்க வைத்தார்கள். புத்தகங்களில் படிக்கும் போது ஓரிரு முடிகள் விழுவது சகஜம்தான். அது சாத்தானின் முடியல்ல அவரவர் முடி என்பது. ஆனாலும் கொஞ்ச நாட்களுக்கு புத்தகத்தைத் திறந்தால் அதில் முடி ஏதாவது இருந்தால் கொஞ்சம் கலவரமாய் இருந்ததென்னமோ உண்மைதான்.
ஆனால் 8-ஆவது படிக்கும்போதும் அதற்கு முன்னதாகவும் பலமுறை கடுமையாக அடி வாங்கியிருக்கிறேன். பெரும்பாலும் அற்ப காரியங்களுக்காகத்தான் இருக்கும்.
எங்கப்பாவுக்கும் சில காலம் மதியச் சாப்பாடு முடிந்தபின் வெற்றிலை போடும் பழக்கம் இருந்தது. ஆனால் மாலை ஒருமுறை ஆலங்குச்சியில் பல் துலக்கி விடுவதால் பற்களில் கறை இருக்காது. வெள்ளை வெற்றிலையும் ரோஜா பாக்கும் போடுவார். இரண்டும் சேர்த்து ஐந்து பைசாதான் இருக்கும். ஆனால் புகையிலையோ சிகரெட்டோ அவர் எப்போதும் தொட்டதில்லை. விடுமுறை நாட்களில் மதிய உணவு முடித்து என்னை வெற்றிலைபாக்கு வாங்க வெளியே அனுப்புவார். நான் வீட்டைவிட்டு வெளியே போனால் அப்படியே விளையாட ஆரம்பித்து மறந்துவிடும் கெட்ட பழக்கம் இருந்தது அதுவும் நண்பர்கள் விளையாடுவதைப் பார்த்தால் நானும் ஜோதியில் கலந்து களித்து மறந்துவிடுவேன். என் அப்பா எனக்காக காத்திருந்து தூங்கிவிடுவார். அதன்பின் திடீரென எனக்கு ஞாபகம் வந்து வீட்டுக்கு வந்தால் அடி நிச்சயம் என்பதால் நானே என் உடம்பையும் மனதையும் திடப்படுத்திக் கொண்டு கிடைத்தவற்றை  பல்லைக்கடித்தபடி பெற்றுக்  கொண்டு ஜீரணித்து விடுவேன்.  என்னைப் பொறுத்தவரையில் எங்கள் வீட்டிலும் சரி வெளியே மற்றவர்களிடம் பேசியதிலும் அதிகபட்சம் அப்பாவிடம் அடி வாங்கியவன் நானாகத்தான் இருப்பேன் என நினைக்கிறேன். ஆனால் படிப்புக்காக அடி வாங்கியது அது ஒரு முறைதான். ஏனென்றால் நான் சுமாராகப் படிப்பவன். வாத்தியார் மகன் மக்கு என்று சொல்லும் அளவுக்கு கண்டிப்பாக இல்லை. அந்தக் கவலைதான் அவருக்கும் இருந்திருக்குமென நினைக்கிறேன்.

அப்போதெல்லாம் எட்டாவதுக்கு அரசாங்க பரீட்சை. நல்ல மதிப்பெண்கள் எடுத்துத் தேறினேன். அதன்பின் 9-ஆம் வகுப்பிற்கு அரசு உயர்நிலைப்பள்ளி தேவதானப்பட்டிக்கு சென்றேன். திரு அரங்கசாமிதான் வகுப்பாசிரியர், தமிழுக்கு ராபர்ட், ஆசிரியர்களில் மிகவும் உயரமானவர். அறிவியலுக்கு முனியாண்டி ஆசிரியர், கணக்காசிரியர் பெயர் முருகேசன். ஊரின் ஒரு சிறு கரட்டுக் குன்றில் இருந்ததால் கரட்டுப் பள்ளிக்கூடம் என்று அழைக்கப்பட்டது. அங்கேதான் அதிகமான விளையாட்டில் ஈடுபட்டேன்.  அதுவரை பம்பரம், கோலிக்குண்டு, கிட்டிப்புள் என்று விளையாடிய நான், இப்போது கபடி, டென்னிகாய்ட், கோக்கோ போன்ற பல விளையாட்டுகளில் ஈடுபட்டேன். பள்ளியின் விளையாட்டு பீரியட்களில் மட்டுமல்லாது பள்ளி முடிந்தவுடனும் நிறைய நேரம் விளையாடுவோம். குறிப்பாக டென்னிகாய்ட்டில் அதிக ஆர்வம் ஏற்பட்டது. அதில் நல்ல திறமை வந்தது. அதனைப் பார்த்த என் அப்பாவும் எனக்கு நெட்டும் பந்தும் வாங்கிக் கொடுத்தார். அந்த டென்னிகாய்ட் எனக்குப் பல பரிசுகளை வாங்கிக் கொடுத்தது. தேவதானப் பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி டென்னிக்காய்ட் விளையாட்டுக்குப் பேர் போனது. மாவட்ட அளவில் பள்ளி நிறைய பரிசுகள் வாங்கியிருக்கிறது. டென்னிக்காய்ட் அமெரிக்கன் கல்லூரி மற்றும் சமூகப்பணிக் கல்லூரியிலும் எனக்குப் பல பரிசுகளைப் பெற்றுத் தந்தது.
தொடர்புடைய படம்
Tennicoit
படிப்பும் சுமாராக ஓடிக் கொண்டிருந்தது. என்னுடைய தமிழார்வத்தைப் பார்த்த திரு.ராபர்ட் அவர்கள் எனக்குப் பல கட்டுரைப் போட்டிகளில் கலந்து கொள்ள வாய்ப்பமைத்துக் கொடுத்தார். ஏனென்றால் கட்டுரைப் போட்டிகளில் பிச்சு உதறிவிடுவேன். பேச்சுப் போட்டிஎன்றாலே பிச்சு உதறி ஓடிவிடுவேன்.
மெதுவாக அந்தப்பள்ளியை நோக்கிக் கார் செல்ல, என் மனதில் பல இளமைக்கால எண்ணங்கள் வந்தபடி இருந்தன.
என் கூட விளையாடிய சந்திரன் ஆசிரியர் மகன் கண்ணன், சரோஜா டிச்சர் மகன் வெங்கடேஷ் ஆகியோர் டென்னிக்காய்ட் விளையாடுவதில் திறமையானவர்கள். அதுதவிர காந்தி, பிச்சை மணி ஆகியோரும் என்னோடு விளையாடுவார்கள். அவர்கள் எனக்கு ஒரு வயது சிறியவர்கள்.
manjalar canal க்கான பட முடிவு
மஞ்சளாறு வாய்க்கால்
 பள்ளியைச் சுற்றிலும் அகழி போல் வாய்க்கால் இருக்கும். மஞ்சளாறு அணையிலிருந்து தண்ணீர் பாசனத்திற்காக திறந்துவிடும்போது வாய்க்காலில் தண்ணீர் தளும்பத்தளும்ப ஓடும். அந்தச் சமயங்களில் எங்களுக்கு மிகுந்த கொண்டாட்டமாக இருக்கும். இறங்கிக் குளிப்பது விளையாடுவது என்று. இந்த அணை காமராஜர் காலத்தில் கட்டியது. கொடைக்கானல் ரோடில் ஏறியவுடன் கீழே தெரியுமே அதுதான் மஞ்சளாறு அணை.
இப்போது பார்த்தால் பராமரிப்பு இல்லாமல் தூர்ந்து போய் இருந்தது. கரட்டில் பலதடவை ஏறியிருக்கிறோம். ஒருமுறை மருத்துவப் பரிசோதனை செய்யவருகிறார்கள். அதுவும் கால்சட்டையைக் கழற்றி பார்க்கிறார்கள், அதுவும் எல்லார் முன்பும் என்று கேள்விப்பட்டு கரட்டில் ஏறி அங்கேயே நாள் முழுதும் பதுங்கிக் கிடந்தது ஞாபகம் வந்து சிரிப்பு மூட்டியது.
இங்கேயும் என் அப்பா வந்து அடித்தது ஞாபகம் வந்தது எதற்காக என்று அடுத்த பதிவில் சொல்கிறேன்.
தொடரும்.
முக்கிய அறிவிப்பு :
வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று ( ஏப்ரல் 22,2018 ) நியூயார்க் தமிழ்ச்சங்கம் நடத்தும் சித்திரை விழாவில் தமிழ் இலக்கிய  வினாடி வினவை ஜியோபெர்டி  பாணியில் அடியேன் நடத்துகிறேன், வாங்களேன் சந்திக்கலாம் .என்னுடைய பயணத்திட்டங்கள் :
ஏப்ரல் 23 –ஏப்ரல்-27 :  பேங்காக் , தாய்லாந்து.
ஏப்ரல் 28,29,மே 2,3,7,8 : சென்னை.
ஏப்ரல் 30 மே1& 2 : திருவனந்தபுரம்.
 மே4,5& 6,: மதுரை.
மே 4, 2018 11.00 AM Guest Lecture in Boys Town,Thirumangam, Madurai.
 அங்கே இருக்கும் நண்பர்கள்  தொடர்பு கொள்ள ஈமெயில் அனுப்பவும் .

Thursday, April 12, 2018

சாத்தானின் குழந்தை !!!!!!!!!!!Image result for baby Satan

வேர்களைத்தேடி பகுதி -13
இதற்கு முந்திய பகுதியைப்படிக்க  இங்கே சொடுக்கவும்.
http://paradesiatnewyork.blogspot.com/2018/04/blog-post.html
            சாத்தானின் குழந்தை பிறந்திருக்கிறது. அதுவும் முடியில்லாமல் பிறந்திருக்கிறது. அதற்கு என்ன அடையாளம்? என்ன சான்று? என்று கேட்டால், அந்தக்குழந்தையின் தலை  முடி உலகத்தில் இருக்கிற எல்லாப் புத்தகங்களிலும் ஏதாவது ஒரு பக்கத்தில் இருக்கிறதாம் என்று எவனோ புரளியைக் கிளப்ப எனக்கு பெரிய திகிலாய் இருந்தது. காலை 4.30 மணிக்கு என் ஆயா (அம்மாவின் தாய்) படிப்பதற்காக எழுப்பிவிட என்னுடைய படிப்பறையில் முகம்கழுவி வாய் கொப்பளித்து உட்கார்ந்தேன். புத்தகத்தை விரித்ததும் எனக்கு சாத்தானின் குழந்தை ஞாபகம் வந்தது. 5 மணியாகி இருக்கும், என் அம்மா பத்துப்பாத்திரங்களை (பத்துக்கு மேல்  இருக்கும் ஹி ஹி)எடுத்துப்போட்டு முற்றத்தில் துலக்கும் சத்தம் மெலிதாகக் கேட்டது. என் அப்பா ரேடியோ அறையிலிருந்த  கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்தார். என் தம்பிகள் இருவரும் முன் ஹாலில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர். என் ஆயா வீட்டின் கடைசியில் இருந்த சமையலறையில் தோ பண்ணிக் கொண்டிருந்தார். என் படிப்பறை, ஹாலுக்கும்  ரேடியோ அறைக்கும் நடுவில் இருந்தது. அதன் ஒரு ஓரத்தில் ஆண்டு முழுவதுக்குமாக வாங்கின நெல் மூட்டைகள் (ஐ ஆர் 20) அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். அதைப் பார்த்தால் ஏதோ விவசாய வீடு மாதிரி இருக்கும்.
Image result for Rice bags in a room

          எல்லோரும் பக்கத்து அறைகளில் இருந்தாலும், எனக்கு திகில் குறையவில்லை. முதலில் எனக்குப் பிடிக்காத அறிவியல் புத்தகத்தை எடுத்து ஒவ்வொரு பக்கமாக புரட்டிப் பார்த்தேன். கால்வாசிப் புத்தகத்தை புரட்டின பின், ஒரு பக்கத்தில் முடி ஒன்று சுருண்டு கிடந்தது. நீளமானதாய் இல்லை மிகவும் சிறிய அளவில் இருந்தது. இது நிச்சயமாய் சாத்தானின் குழந்தையின் முடிதான் என்று தீர்மானமாகத் தெரிந்தது. அந்தப் புத்தகத்தை அப்படியே எடுத்துக் கொண்டு பூனைபோல் நடந்து என் அம்மாவிடம் சென்றேன். என் அப்பா தூங்கும்போது யாராவது சத்தம் போட்டால் அவருக்கு மிகுந்த கோபம் வந்துவிடும். அதனால்தான் என் அம்மாவும் முடிந்த அளவுக்கு சத்தம் செய்யாமல் பாத்திரங்களை துலக்கிக் கொண்டு இருந்தார். நேரத்துக்குள் துலக்கி முடித்து முன்வாசலில் நீர் தெளித்து கோலம் போட்டு திரும்பவும் வந்து என் ஆயாவுக்கு சமையலில் உதவி செய்வார். காலை இட்லி தோசைக்கு ஆட்டு உரலில் சட்னி அரைக்க வேண்டும். மதிய சாம்பார், குழம்பு போன்றவற்றிக்கு  அம்மியில் மசாலா அரைக்க வேண்டும். காலையில் அவர்கள் இருவரும் மிகுந்த பிஸி.
          அப்பா எழுந்து கொல்லைக்கு வெளியே போய் காலைக் கடன் முடித்து திரும்ப வந்து ஆலங்குச்சியில் பல்துலக்கி பின்னர் எங்கள் மூவரையும் குளிப்பாட்டி விட்டு, ஆடை உடுத்தி பின்னர் அவர் குளித்து ரெடியாகி அனைவரும் பள்ளிக்குச் சென்றுவிடுவோம். சரியாக ஏழு மணிக்கு ரேடியோ சிலோன் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுஸ்தாபனம் ஒலிக்க ஆரம்பித்தால் 8 மணிக்கு சாப்பிட உட்காரும்வரை ஒலிக்கும். KS.ராஜா, BS. அப்துல் ஹமீத் ஆகியோர் குரலில் அற்புதத் தகவல்களோடு பாடல்கள் ஒலிக்கும். நடுவில் ஏழரை மணிக்கு திருச்சி வானொலியில் டெல்லியிலிருந்து தமிழ்ச் செய்திகள் மட்டும் கேட்டுவிட்டு மறுபடியும் மாற்றிவிடுவார்.
          மறுபடியும் டிராக் மாறிவிட்டேன். புத்தகத்தை  எடுத்துக் கொண்டு அம்மாவின் காதில் கிசுகிசுக்க, பள்ளிக்குக் கிளம்பும் அவசரத்தில் அதனை கேட்க அவர்களுக்குப் பொறுமை இல்லை. எனவே அப்புறம் மாலை பேசலாம் என்று சொல்லிவிட்டார்கள்.
          நான் மறுபடியும் என் படிப்பறைக்குப் போய் கணக்குப்புத்தகத்தை எடுத்து ஒவ்வொரு பக்கமாய்ப் புரட்ட, ஆரம்பத்திலேயே ஒரு சிறு முடி இருந்தது. எனக்குப் பகீரென்றது, அதன்பின் நேரமாகிவிட பள்ளிக்குப் போய் விட்டேன். மற்றப்  புத்தகங்களை  சோதித்துவிட்டு நண்பர்களிடம் சொல்லலாம் என்று முடிவு செய்ததால் ஒருவருக்கும் சொல்லவில்லை.
          அன்றைய நாளில் என் அப்பாவின் அறிவியல் வகுப்பில் வினாடிவினா இருந்தது (quiz) இரவும் பகலும் சாத்தானின் முடியைத் தேடித் கொண்டிருந்ததால் நான் அதனை மறந்தே போய்விட்டேன். ஏற்கனவே அறிவியலுக்கும் எனக்கும் ஆகாது. கடுமையாகப் படித்துத்தான் நல்ல மார்க்குகளை வாங்குவேன். எங்கப்பாவுக்கு ஒரு அவமானம் ஆகிவிடக் கூடாதென்றுதான் அதுவும் .
     முதல் ரவுண்டில் பதில் சொல்லாவிட்டால் நின்று கொண்டு இருக்க வேண்டும். இரண்டாவது ரவுண்டில் பதில் சொன்னால் உட்கார்ந்து விடலாம். ஆனால் பதில் சொல்லாவிட்டால் பெஞ்சின் மீது ஏறி நிற்க வேண்டும். மூன்று ரவுண்டிலும்  நான் பதில் சொல்லாததால் பெஞ்சின் மீது ஏறி நிற்க வெட்கம் பிடிங்கித்தின்றது. முகம் வெளுத்து வேர்த்து வியர்த்துவிட்டது.    ஏற்கனவே சொன்னார்கள் சாத்தானின் குழந்தை பிறந்து உலகில் பல துன்பங்கள் வரப்போகிறதென்று. அதுல எனக்கு வந்ததுதான் முதல் துன்பம் என்று நினைத்தேன்.
Image result for punishment of standing on the bench in a classroom

         கடைசியில் மூன்றாம் ரவுண்ட் முடிவில், எப்போதும் மிகுந்த முயற்சியெடுத்து வகுப்பில் முதல் ஒன்றிரண்டு இடங்களில் வரும் நான் பெஞ்சில் ஏறி நின்றது அங்கிருந்த என் நண்பர்களுக்கு அதிர்ச்சி. என் பெண் தோழிகளுக்கு ஆச்சர்யம்.சில பேருக்கு மகிழ்ச்சியாகக் கூட இருந்திருக்கலாம். ஆனால் என் அப்பாவைப் பார்த்தால் அவர் முகத்தில் ஈயாடவில்லை. என்னோடு சேர்ந்து கம்பெனிக்கு இன்னும் மூன்று பேர் அவரவர் இடங்களில் பெஞ்சில் நின்று கொண்டிருந்தார்கள். நான் நின்ற இடம் என் அப்பாவின் டேபிளுக்கு நேர் எதிரே. அவருடைய முகம் கோபத்தில் நன்றாக சிவந்திருந்தது எனக்கு மேலும் திகிலையூட்டியது. மற்றவர்களைக் கூப்பிட்ட என் அப்பா பிரம்பால் உள்ளங்கையில் ஒரு அடி  அடித்து உட்காரச் சொல்லிவிட்டு தொடர்ந்து பாடம் நடத்த ஆரம்பித்தார். நானோ  தொடர்ந்து பெஞ்சில்நின்று கொண்டிருக்க , கால் முட்டியில் வேறு அரிப்பெடுத்து உடனே சொரிய வேண்டும் என்ற நிலை.

A,S Thiagarajan 

          ஒரு வழியாக வகுப்பு முடிய என்னை இறங்கச் சொன்னார் என் அப்பா. அதன் பின்னர் நடந்த கொடுமையை இன்றைக்கு நினைத்தாலும் குலை நடுங்குகிறது. அரைக்கால் சட்டை போட்டிருந்த என்ன கையைப் பிடித்துக் கொண்டு பின் புறம் தொடைகளிலும் கால்களிலும் மூங்கில் பிரம்பால் விளாசி விட்டார்.
          வகுப்பில் அவரை சார் என்றுதான் கூப்பிடவேண்டும் என்று சொல்லியிருந்ததால் “வேண்டாம் சார் விட்டுருங்க, ஒழுங்கா படிப்பேன் சார்”, என்று கதறி அழ அப்பா சொன்னார், “ஒழுங்கா படிப்பேன் அப்பான்னு சொல்றா”,  என்று சொல்லியடித்த போதுதான் என்னை அடித்தது என் வகுப்பு ஆசிரியர் அல்ல, என் முன்னேற்றத்தை நினைத்துப் பயந்த என் அப்பா என்பது. என்னுடைய தற்போதைய முன்னேற்றத்தை   பார்த்து மகிழ அப்பா உயிருடன் இல்லையென்பதை நினைத்தால் என் நெஞ்சு  கனக்கிறது

          சாத்தானின் குழந்தையால் இன்னும் என்னவெல்லாம் துன்பம் வந்தது என்பதை அடுத்த வாரம் பார்ப்போம்.
-தொடரும்.
முக்கிய அறிவிப்பு :
வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று ( ஏப்ரல் 22,2018 ) நியூயார்க் தமிழ்ச்சங்கம் நடத்தும் சித்திரை விழாவில் அடியேன் கலந்துகொள்கிறேன் , வாங்களேன் சந்திக்கலாம் .


Thursday, April 5, 2018

பரதேசி சாப்பிட்ட கிழவி வெல்லம் !!!


வேர்களைத்தேடி பகுதி: 12

இதற்கு முந்திய பகுதியைப்படிக்க  இங்கே சொடுக்கவும்.
http://paradesiatnewyork.blogspot.com/2018/03/blog-post_27.html

            நண்பர்கள் தோட்டம் மட்டுமல்ல, யார் தோட்டத்துக்குப் போனாலும் பெரும்பாலும் என்னை அவர்களுக்குத் தெரியும். அப்படியே தெரியாவிட்டாலும் எங்கப்பா பேரைச் சொன்னால் போதும்.
          ஒரு நாள் நண்பன் சீனிவாசன் தோட்டத்துக்குச் சென்றிருந்தேன். நான் போகும் போது வயலுக்கு நீர் பாய்ச்சிக் கொண்டிருந்தார்கள். ரெண்டு மாட்டு வண்டிகள் பூட்டி ஏற்றம் இறைக்க, தண்ணீர் சிறு வாய்க்கால்கள் மூலம் வரப்புகளினூடே பாய்ந்து கொண்டிருந்தது. அப்போது ஒரு புறம் தக்காளி பயிரிட்டிருந்தார்கள். சிவப்பும் பச்சையுமாக தக்காளிகள் காய்த்துத் தொங்கின. என்னை கூப்பிட்டுப் போய் நன்கு செடியில் பழுத்த  அழகிய சிவப்பு நிறத்தக்காளி  ஒன்றைப் பறித்து தண்ணீர் பாய்ந்து கொண்டிருந்த சிறு வாய்க்காலில் கழுவி விட்டு மேலே காம்புப் பகுதியில் ஓட்டை போட்டான். கல் உப்புக்களை ஒவ்வொன்றாக திணித்து, "அப்படியே சாப்பிடு சேகர்", என்றான். வாய் கொள்ளாத அளவுக்கு பெரிய சைஸில் இருந்த தக்காளிப் பழத்தை அப்படியே கடித்த போது அதன் சாறு என் மேலெல்லாம் ஆகிவிட்டது. ஆனால் அதன் இனிப்பும், புளிப்பும், உப்பும் சேர்ந்து ஆஹா என்ன சுவை. அதன் மறுபுறம் நாட்டுக் கத்திரிக்காய்கள் விளைந்திருந்தன.
                    பிறகு கிளம்பும் போது, "டீச்சர்ட்ட  கொடுப்பா" என்று சொல்லி ஒரு துணிப்பை நிறைய கத்தரிக்காய்களை பறித்து அவங்கப்பா என்னிடம் கொடுத்தார்.
Image result for கத்தரிக்காய்த் தோட்டம்

          எங்கம்மாவிடம் படித்த பிள்ளைகள்  போட்டி போட்டுக் கொண்டு, தக்காளி, கத்தரிக்காய், முருங்கை, வெண்டை, போன்றவற்றை கொண்டு வந்து தருவார்கள். வேர்க்கடலை சீசனில் சிலசமயம் ஒரு மூட்டை கூட சேர்ந்துவிடும். வேர்க்கடலைகள் மூணு கொட்டைகள் நான்கு கொட்டைகள் கொண்டதாக நல்ல திறமாக இருக்கும். மாம்பழங்களும் ஏராளமாக சேர்ந்துவிடும். வேண்டாம் என்றாலோ போதும் என்றாலோகூட விடமாட்டர்கள் .சண்டை போட்டுக்கொண்டு ஒருவரை முந்தி ஒருவர் கொண்டு வந்து தருவார்கள் .சில சமயங்களில் வேர்க்கடலை நிறைய சேர்ந்து போய் திண்டுக்கல்லில் உள்ள மாமா வீட்டுக்கு அனுப்பியுள்ளோம். 
          என்னவாயிற்று என்று தெரியவில்லை இப்போதெல்லாம் சூம்பிப்போன வேர்க்கடலைகள் தான் கிடைக்கின்றன. அளவும் மிகவும் சுருங்கிப்போய் இருக்கின்றன.
Image result for நுங்கு
நொங்கு
          அதே போல தென்னந்தோப்புக்கும் போவேன்.  இளநீரும் வழுக்கையும் சாப்பிட்டால் நாள் பூராவும் பசிக்காது. பனைமரத்தில் கிடைக்கும் நொங்குக்காய்களை அப்படியே மேலே சீவி விட்டு கையால் நோண்டி நோண்டிச் சாப்பிடுவோம். பனம்பழமும் நார் இருந்தாலும் சுவையாக இருக்கும்.
கரும்புத் தோட்டத்திற்குச் சென்றால், அவர்கள் நல்ல திறமான கரும்பை அப்படியே வெட்டி சோகை நீக்கித்தருவார்கள். வாயெல்லாம் புண்ணாகும் அளவுக்கு சாப்பிடுவோம். கரும்பு தின்றால் உடனே தண்ணீர் குடிக்கக் கூடாது. வாய் வெந்துவிடும்.
Image result for கரும்பு ஆலை
Courtesy Dinamalar.com
          கரும்புகளில் பலவகை உண்டு. பீச்சிக் கரும்பு இது கருப்பாக இருக்கும். சந்தையில் விற்பதற்காக மட்டும்தான் இது பயிரிடப்படும். குறிப்பாக பொங்கல் சமயத்தில் நிறையக் கிடைக்கும். இரண்டாவது ராமர் கரும்பு. இலேசான வெளிர் நிறத்தில் இருக்கும் கடித்துச் சாப்பிடுவதற்கு மிகவும் எளிதாக இருக்கும். சுவை பீச்சிக்கரும்பை விட வித்தியாசமாக இருக்கும். மூன்றாவது வகை ஆலைக்கரும்பு அல்லது கம்பெனிக்கரும்பு என்று சொல்வார்கள். இது கடித்துச் சாப்பிடக் கஷ்டமாயிருக்கும். ஆனால் சுவை மற்ற இரண்டையும் மிஞ்சி விடும்.
Image result for கரும்பு

          இந்த வகை கரும்பு, வயல்களில் அறுவடை சமயத்தில் அவர்களே சொந்த ஆலைகள் அமைத்து வெல்லம் செய்வார்கள். எனக்கு சிறப்பு அழைப்பு வரும். ஒரு நாள் முழுதும் அங்கே செலவிடுவேன். கரும்பை ஜூஸ்  பிழிவார்கள். நுரை ததும்ப ஒரு எலுமிச்சம்பழம் பிழிந்து சாப்பிட்டால் தேவாமிர்தமாக இருக்கும். அந்தச் சாறைப் பிழிந்து பிரமாண்டமான கொப்பரைகளில் ஊற்றி  துடுப்புகள் போன்ற பெரிய கழிகளில் கிண்டிக் கொண்டே இருப்பார்கள். 
Related image
ஆலைக்கரும்பு
      பதமாக பாகுபோல வரும்போது எடுத்து கொஞ்சம் சாப்பிடக் கொடுப்பார்கள். அது ஜவ்வுமிட்டாய் போல இருக்கும். நாங்கள் அதை கிழவி வெல்லம் என்று சொல்லுவோம். அது அற்புதமாக இருக்கும். மிகவும் மெலிதாக   கொழ கொழவென்று இருப்பதால் அதனை கிழவி வெல்லம் என்று சொல்லுகிறார்கள் என்று நினைக்கிறன் .அல்லது பல் இல்லாக் கிழவிகள் சாப்பிட ஏதுவாக இருப்பதால் அதனை அப்படி சொல்லுகிறார்களோ என்று தெரியவில்லை .ஆனால் எங்களுக்கும் அது சுவையாகவே இருக்கும் .  பின்னர் அதை அப்படியே பெரிய மரப் பெட்டிகளில் ஊற்றி, சூடாக இருக்கும் போதே லாவகமாகப் பிடித்து வெல்லம் செய்வார்கள். அதனை மண்டை வெல்லம் என்று சொல்லுவோம். அதனையே அச்சில் ஊற்றி சிறிது சிறிதாகவும் செய்வார்கள். அதுதான் அச்சு வெல்லம்.
Image result for கரும்பு ஆலை
அச்சு வெல்லம்
          ஐந்தாவது படிக்கும் போதிலிருந்து புளியவிதை சேகரித்தல், ஒற்றையா ரெட்டையா போன்ற பலவிளையாட்டுகளை புளிய விதை வைத்து விளையாடுவோம், பல்லாங்குழியும் அவற்றில் ஒன்று.  அப்புறம் தீப்பெட்டிப் படங்களை வைத்து மங்காத்தா விளையாடுவோம். சிலேட்டுக் குச்சிகளை வைத்து விளையாடுவோம். மயிலிறகுகளை வைத்து புத்தகங்களில் வைத்து குட்டிபோடுகிறதா என்று பார்ப்போம்.
          ஆசிரியர்களின் கட்டளைக்கிணங்க, ஊமத்தங்காய்களைப் பறித்துக் கொண்டு வந்து அடுப்புக்கரி சேர்த்து அரைத்து வகுப்பறையின் போர்டில் பூச, காய்ந்தவுடன் அடுத்த நாள் ஆசிரியர் சாக்பீஸ் கொண்டு எழுதும்போது பளிச்சென்று தெரியும்.

          எட்டாவது படிக்கும்போது ஸ்டாம்புகள் சேகரித்து ஆல்பம் தயாரித்து பரிசுகள் பெற்றேன். அந்தப் பழக்கம் தான் இப்போது விரிவடைந்து, உலகக் காசுகள் கரன்சிகள், ஆன்டிக் கலெக்சனாக என்னிடம் பெருகியுள்ளது.
          அந்தச் சமயத்தில் தான் சாத்தானின் குழந்தை முடியில்லாமல் பிறந்ததாக ஒரு பெரிய புரளி எழுந்தது.
-தொடரும்.