Showing posts with label சொற்பொழிவு. Show all posts
Showing posts with label சொற்பொழிவு. Show all posts

Monday, June 12, 2017

படவா கோபியுடன் பரதேசி !!!!!!!!!!!!

with Badava Gopi and his wife Haritha

        தமிழ்நாடு அறக்கட்டளை நடத்திய 'அன்னையர் தினம்' நிகழ்ச்சியில் (மே  6, 2017) வழக்கம்போல் பரதேசி ஆஜர். அதன் தலைவி பிரகஷிதா குப்தா அவர்களின் வேண்டுகோளுக்கிணங்கி விவாத மேடையிலும் பங்கு பெற்றேன். தொகுத்து வழங்கும் மாடரேட்டராய் இருந்தவர் பிரபல பலகுரல் மன்னன் 'படவா கோபி' அவர்கள். அவருக்கு மிமிக்ரி தானே தெரியும். கோபி என்று பெயர் வைத்தவர்களெல்லாம் விவாத மேடையை நடத்தமுடியுமா என்று நினைத்த என்னை படவாகோபி ஆச்சரியப்படுத்தினார். ( படவா, சொல்லவே இல்லை)  அவர் நடத்தியிருக்காவிட்டால் ரொம்ப போர் அடித்திருக்கும்.
          விவாதத்தின் தலைப்பு, “பிள்ளைகளின் எதிர்காலத்தைக் குறித்த விஷயங்களில் பெற்றோர் தலையிட வேண்டுமா கூடாதா??” என்பது. மூன்று குரூப்கள் பிரிக்கப்பட்டது ஒன்று தாத்தாக்கள், இரண்டாவது பெற்றோர்கள், மூன்றாவது பிள்ளைகள் என்று. அடுத்த வாட்டி தாத்தா குரூப்பில் வருவேனா என்னவோ ஆனா  இந்தத்  தடவை  பெற்றோர்கள் குழுவில் நான் பங்குபெற்று, கல்வி பற்றி ஆங்கிலத்தில் சுருக்கமாகப் பேசிய கருத்தின் தமிழாக்கம் இதோ.
          பெற்றோர்களாகிய நாங்கள் எங்கள் பிள்ளைகளை இறைவன் அளித்த சிறந்த பரிசாகத்தான் நினைக்கிறோம். எல்லாச் சமயங்களில் இல்லாவிட்டாலும் பெரும்பாலான சமயங்களில் அவ்வாறு நினைக்கிறோம்.பிற சமயங்களில் நாங்கள் எப்படி நினைக்கிறோம் என்பதை சொல்ல விரும்பவில்லை.( எல்லோரும் சீரியஸாய்   இருந்ததால் இந்த ஜோக் எடுபடவில்லை !!!!!!!! ). எங்கள் பிள்ளைகளுக்கு நாங்கள் அளிக்கும் சிறந்த பரிசாக கல்வியினைக் கருதுகிறோம்.
        எங்கள் பிள்ளைகள் நல்லபடியாக வளர்ந்து, வாழ்க்கையில் நன்றாக செட்டில் ஆக வேண்டும், என்பதுதான் எங்கள் ஆசை. இந்தப் பொறுப்புணர்ச்சி எங்களுக்கு கூடும்போது கொஞ்சம் பதற்றம் வருவது இயற்கைதான். அதனால்  இந்த முயற்சியில் சில தவறுகளைச் செய்து விடுகிறோம். எங்களுடைய பெற்றோர்கள் அணிந்த எங்களுக்குப் பிடிக்காத ,நாங்கள் வெறுத்த, அதே முகமூடியை  நாங்களும் எடுத்து மாட்டிக் கொள்கிறோம்.
          ஆனால் இங்கே சூழ்நிலை வேறு, காலகட்டம் வேறு, தேசம் வேறு, எங்கள் பிள்ளைகள் வேறுவிதமாக வளர்பவர்கள்.மேலும் இங்கு கல்வியும் வேறு அதன் செயல்முறையும் வேறு என்பதை மறந்துவிடுகிறோம்.
          எனவே நம்முடைய நிறைவேறாத கனவுகளையும், விருப்பங்களையும் பிள்ளைகள் மேல் திணிக்கிறோம். குறிப்பாக கல்வியில். ஆனால் இது எதிர்மறை விளைவைத்தான் உருவாக்கும்.
Image may contain: one or more people
Vivetha Medai
          அதே சமயத்தில் முழுவதாக அவர்களுடைய சொந்த விருப்பத்திற்கும் விட்டுவிடமுடியாது. அப்படி விட்டுவிட்டால் அவர்கள் மாறி மாறி சப்ஜெக்குகளை மாற்றி மாற்றி நம்முடைய சொத்தை அழித்துவிடுவார்கள். ஏனெனில் தங்களுக்கு என்ன கல்வி பிடிக்கும் என்பதைத் தெரிவு செய்ய அவர்களுக்கு நீண்ட காலம் பிடிக்கிறது. டிகிரி முடிக்கவும் நீண்ட காலம் ஆகிவிடுகிறது. டிரையல் மற்றும் எர்ரர் மெத்தடில் இது மிகவும் செலவு வாய்ந்தது.
          ஆனால் நாம் என்ன செய்கிறோம் ?. ஒரு புறம் கட்டாயப்படுத்துகிறோம். இல்லையென்றால் மிகவும் சுதந்திரம் கொடுத்துவிடுகிறோம். ரெண்டுமே தவறுதான். ரெண்டுமே எதிர்மறையாய்ப் போய்விட வாய்ப்பிருக்கிறது.  
          என்னுடைய ஆலோசனை என்னவென்றால், பெற்றோர்கள் பிள்ளைகளின் முடிவில் நம்முடைய ஆலோசனைகளைச் சொல்லவேண்டும்.
          ஒவ்வொரு படிப்புக்கும் என்னமாதிரி எதிர்காலம் அமையும் என்பதை முன்னரே சொல்லித்தர வேண்டும். ஏனென்றால் நல்ல ஒரு பாடப்பிரிவுதான் நல்ல எதிர்காலத்தைக் கொடுக்கும்.
          ஆனால் இந்த வேலையை நாம் சர்வாதிகார முறையில் அல்லாது அன்பான வழியில் மட்டுமே அதுவும் ஆலோசனையாக மட்டுமே அணுக வேண்டும்.
          அதோடு பிள்ளைகளுக்கும் ஒரு வேண்டுகோள். நீங்கள்தான் எங்களுக்கிருக்கும் மிகப்பெரிய சொத்து. எங்களுடைய வாழ்க்கை உங்களைச் சுற்றித்தான் வளைய வருகிறது. எங்களுடைய பிள்ளைகளின் எதிர்காலம் மட்டுமே எங்களின் ஒரே குறிக்கோள் அன்றி வேறு ஒன்றுமில்லை. எனவே பெற்றோர்களிடத்தில் கொஞ்சம் பொறுமையைக் கடைப்பிடியுங்கள் பிள்ளைகளே.      கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும்.

என்ன மக்களே நான் சொன்னது சரிதானே ?

Thursday, January 28, 2016

பதிவர்களோடு பரதேசி !!!!!!!!!!!!!

Pudukkottai Meet

என்  எழுத்துக்குப் பெருமையா? என் எழுத்தின் வலிமையா? என் எழுத்துக்கு இத்தனை வரவேற்பா? என்று கேட்டு அதற்கு நானே 'ஆம் ஆம் ஆம்"  என்று சொன்னேன் என்றால்  என்னை விட முட்டாள் வேறு யாரும் இல்லை.
பின்னர் எதற்கு இத்தனை வரவேற்பு ?, இத்தனை அன்பு? இத்தனை கொண்டாட்டம்? என்று  எண்ணிப்பார்த்தால், அது தமிழின் மேல் உள்ள ஆர்வம், காதல், தோழமை என்றுதான் சொல்ல முடியும்.
விடுமுறைக்கு சீனா, இலங்கை மற்றும் இந்தியாவில் சில வாரங்கள் செலவிட நினைத்து, கிளம்பும் முன்பதாக இரு மாதங்களாக இருண்டு கிடக்கும் என் பிளாக்கில் அறிவித்தேன்.
ஜனவரி 8ஆம் தேசி மாலை சென்னை  வந்து சேர்ந்து ,எக்மோரில் உள்ள பாண்டியனில் அறையெடுத்தேன். வெளியே போய் மண்ணின் மத்தையும் புழுதியையும் சுவாசித்து சற்றே இருமலுடன் திரும்பி வந்து ஓய்வெடுத்தும் எடுக்காமலும் காலையில் எழுந்து ரெடியாகும் போது லித்தது அலைபேசி. அவர் செல்வா என்ற செல்வக்குமார் (நான் ஒன்று சொல்வேன்.....www.naanselva.blogspot.com )லிப்ட்டில் இறங்கியவாறே, "எங்கேயிருந்து பேசுகிறீர்கள் ?", என்று கேட்டேன்.  "இங்கேயிருந்து தான்", என்று என் முன்னால் வந்தார்.  
முன்பின் பேசியதில்லை, பழகியதில்லை. ஆனால் ரொம்ப நாள் பழகியது போல் ஒரு தோழமை. ஆஹா ஆரம்பமே  அமர்க்களமாக இருக்கிறதே என்று நினைத்தேன். அவருடன் காலைச்சிற்றுண்டி சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது, சில நிமிடங்களில் இன்னொரு ஃபோன், "நான்தான் கார்த்திக் பேசுகிறேன்", என்று. அவர் வேறு யாருமில்லை நம்ம ஸ்கூல் பையன் கார்த்திக்தான் (www.schoolpaiyan.com). மாலை சந்திப்பதாக முடிவெடுத்து நான் என் அலுவலகம் சென்றேன்.  துணைக்கு செல்வாவும் வந்தார்.

Karthik( School Paiyan), Selvakumar and myself

மாலையில் சொல்லிவைத்தது போல் கார்த்திக் வந்து சேர,  செல்வாவும் வந்துவிட, ரூமில் உட்கார்ந்து பலநாள் தோழர்கள் போல அளவளாவி மகிழ்ந்தோம். பார்ப்பதற்கும் ஸ்கூல் பையன் மாதிரி வெகு இளமையாக இருந்தார்.
செல்வா சொன்னார், "புதுக்கோட்டையில் நிறைய பதிவர்கள் உங்களைச் சந்திக்க ஆவலாய் இருக்கிறார்கள். நீங்கள் அவசியம் வரவேண்டும்" என்று. "என்னைச் சந்திக்கவா? நான் என்ன அவ்வளவு பெரிய ஆளா?”, வெட்கத்துடன் தப்பிக்கப்பார்த்தேன். அப்போது அலைபேசி ஒலித்தது. பேசியவர் கவிஞர் முத்து நிலவன். யார் முத்து நிலவனா, சிறந்த தமிழ் ஆசிரியரும், எழுத்தாளரும், பட்டிமன்ற பேச்சாளரும் பல இளைஞர்களின் ஆதர்ஷ வழிகாட்டியுமான முத்து நிலவன் ஐயாவா பேசுவது என்னால் நம்ப முடியவில்லை. அவரும் அதையே சொல்ல, ஐயாவின் வார்த்தைக்கு மறுப்புச் சொல்லாமல் வருவதாகச் சொன்னேன்.  
சாப்பிடப் போகலாம் என்று சொல்லி மூவரும் கிளம்பி வெளியே வந்தோம். அஞ்சப்பர், புகாரி, காரைக்குடி, பொன்னுசாமி  ஆகிய அருகிலிருந்த அசைவ உணவங்களில் காரைக்குடியை தேர்வு செய்து உள்ளே சென்றால் ஒருவரையும் காணோம். அதையும் மீறி ஆர்டர் செய்து சாப்பிட்டோம். சுமாராகவே இருந்தது. வெளியே வந்து பார்த்தால் அது பிரபலமான காரைக்குடி உணவகம் அல்ல. அய்யனார் காரைக்குடியாம். இனிமேல் ஒரு தடவைக்கு இரண்டு தடவை பேரைப் பார்த்துவிட்டுத்தான் செல்ல வேண்டும் என்று முடிவு செய்தேன்.
.
மதுரையில் இருந்த சில நாட்களில், இந்தத் தடவை பிறந்த மண்ணையும், பூர்வீக வீட்டையும்  பார்த்துவிட திண்டுக்கல் செல்ல முடிவு செய்தேன். ஜனவரி 12ஆம் தேதி சென்ட்ரல் எக்சைஸில் சூப்பிரண்டென்டன்ட் ஆக இருக்கும் நண்பன் சாம் தன் காரில் அழைத்துச் சென்றான்.
திண்டுக்கல் என்றதும் பிரபல பதிவர் திண்டுக்கல் தனபாலன் ஞாபகம் வர, தொடர்பு கொண்டேன். பூர்வீக வீட்டையும் மாமா அத்தை அவர்களையும் பார்த்துவிட்டு, திரும்ப வரும்போது, நாகல் நகரில் தனபாலனை சந்தித்து அப்படியே வேணு பிரியாணி உணவகம் சென்றோம். புகைப்படத்தில் பார்த்ததை விட நேரில் இன்னும் அழகாக இருந்தார். பிரியாணியும் தாழ்ச்சாவும்  அமிர்தமாக இருந்தது. அதன் பின்னர் அவர் வீட்டுக்குச் சென்று அவரது அருமை மனைவியையும் சந்தித்தோம். தனபாலனுக்கு இணையான சுவாரஸ்யமானவர் அவர் மனைவி. மிகவும் சரளமாகவும் சகஜமாகவும் பழகினார்.
With Dindugal Dhanapalan  and his wife

அவருடைய பரம்பரைத் தொழிலான புடவைகள் மொத்தவிலை வியாபாரத்தை மீண்டும் ஆரம்பித்திருக்கிறார். சிறப்பான சேலைகளில் ஒரு ஐந்தை வாங்கிக் கொண்டு கிளம்பினோம். தனபாலன் அவர்களின் வியாபாரம் சிறந்து விளங்க பரதேசியின் வாழ்த்துக்கள்.

ஜனவரி 13ஆம் தேதி காலை அமெரிக்கன் கல்லூரியின் MSW -விலும் அழகர்கோவில் அருகில் இருக்கும் MBA மாணவர்களுக்கும் என்னுடைய கெஸ்ட் லெக்சரை முடித்துக் கொண்டு, நண்பர் பேராசிரியர் பிரபாகர் அவர்கள் துணைக்கு வர அவருடைய காரிலேயே புதுக்கோட்டை சென்றோம்.
போகும் வழியில், மறுமுறை வரும் போது ஓவியம் முற்றிலுமாக மறைந்துவிட்டால் என்ன செய்வது என்ற பயத்தில், சித்தன்ன வாசலையும் அதின் சிதிலமடைந்த ஓவியத்தையும் மீண்டுமொருமுறை பார்த்துவிட்டு மாலை 5.30 மணியளவில் புதுக்கோட்டை சென்றோம். .
அங்கே கவிஞர் முத்துநிலவன் அவர்கள் தலைமையில்  ஆர்வத்துடன் அநேகர் குடியிருந்தனர். அன்பர்கள் வந்தவண்ணம் இருக்க, எனக்கு பதட்டம் கூடிக் கொண்டே இருந்தது.
எனக்கு முன்னால் பேசிய தமிழ்ப்பேராசிரியர் நண்பர் பிரபாகரும், தமிழ் எப்படி வளர்கிறது என்றும் அது என்றும் அழியாது என்றும் சொல்லி விளக்கினார்.
"ஒரு பேச்சாளன் என்று என்னைச் சொல்ல முடியாது, ஒரு எழுத்தளான் என்றும் என்னைப்பற்றி சொல்லமுடியாது.  நான் யார் என்று கேட்டால், பஞ்சம் பிழைக்க பிறதேசம் போன பரதேசி எனக்கெதற்கு இத்தனை பெரிய வரவேற்பு", என்று என் பேச்சை ஆரம்பித்தேன்.  
with Muthu Nilavan and Prabahar

அங்கு பல தமிழாசிரியர்கள், கவிஞர்கள், பதிவர்கள் மென்பொருள் பொறியாளர்கள் கூடியிருந்தனர். மறக்க முடியாத ஒரு மாலைப் பொழுதாக அது அமைந்தது.

இதனை ஏற்பாடு செய்த கவிஞர் முத்துநிலவன் ஐயா, மற்றும் செல்வா அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். வந்திருந்த அனைவருக்கும் மீண்டும் என் வணக்கங்கள். 

Friday, October 30, 2015

வாழ்வின் மகிழ்ச்சிக்கு பெரிதும் உறுதுணையாக இருப்பது சுற்றமா?நட்பா ? பகுதி 2

Add caption

கடந்த  அக்டோபர் 24 மாலை 6 மணியளவில் நியூயார்க்கில் இலங்கைத்தமிழர் நடத்திய  ‘ஆனந்தம்’ நிகழ்ச்சியில் அடியேன் நடுவராகப்பங்கு பெற்ற பட்டிமன்றம் சிறப்பாக   நடந்து முடிந்தது .அதில் அடியேன் சொன்ன தீர்ப்பு இது.
இருபுறத்தாரும் பேசியதை கேட்டுக் கொண்டிருக்கும் வரையில் கொண்டாட்டமாக இருந்தது. ஆனால் இப்போது தீர்ப்புச் சொல்ல நிற்கும் போது தான் திண்டாட்டமாக இருக்கிறது. என்ன செய்வது ஆரம்பம்னு ஒண்ணு இருந்தா முடிவுன்னு ஒண்ணு இருந்து தானே ஆகும்.  
            Man is a social animal   என்று சொல்வார்கள்.  உற்றார்  உறவினர் சுற்றம் நட்பு இவையெல்லாம்  வாழ்க்கையில் அவசியங்கள் தான். கூடி வாழ்ந்ததால் கோடி நன்மைன்னு பெரியவங்க சொல்லியிருக்காங்க.
ஆனால் நம்ம  அனுபவம் அப்படியா இருக்கு? நம்ம சுற்றத்தார் அப்படியா நடந்துக் கிட்டாங்க. நாம அவங்களுக்கு உதவி செய்றவரை எல்லாம் நல்லாத்தான் போயிட்டிருந்துச்சி. ஆனால்  நமக்கு கஷ்டம் வந்து நாம உதவின்னு நிக்கும் போது சுற்றம் முழுசும் காணாமப்போயிருச்சி. அட  பண உதவி வேணாம் , ஆறுதலா இரண்டு வார்த்தை? அதான் கண்ணுக்கு  எட்டின வரைக்கும் காணாமப்போயிட்டாங்களே.
நம்ம வீட்ல ஒரு நல்லது பொல்லாததுக்கு  கூப்பிட்டா நாம நெனைக்கிறது. “இவங்களை கூப்பிட்டுத்தான் ஆகனும், ஆனா வராட்டி நல்லதுன்னு நெனைச்சிருக்கீங்களா. ஏன்னா குறை சொல்றது சுற்றம்தான், கோபிக்கிறது சுற்றம்தான், பிரச்சனை பண்றது அவங்கதான். Invitationல பேரு இல்லை, நேர்ல வந்து கூப்பிடல, பந்தியில கவனிக்கல, வாங்கன்னு கூப்பிடல இப்படி எத்தனை பிரச்சினை பண்ணுவாங்க. ஆனா நட்பு, “டேய் நேரில வரமுடியல இன்விடேஷனும் அனுப்ப முடியல, கண்டிப்பா வந்துரு”. வந்து சொல்லாமயே எடுத்துப்போட்டு வேலை செய்றது நட்புதான்.
நாம வசதியாக இருக்கும்போது, நம்ம சுற்றம் சொல்வாங்க அவங்க எங்களுக்கு நெருங்கிய சொந்தம்னு, நாம கஷ்டத்துல இருக்கும்போது அவங்க தூரத்து உறவு ஆயிருவாங்க. 
குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லைன்னு ஒரு பழமொழி இருக்கு. இதுக்கு அர்த்தம், தப்புக்கண்டுபிடிச்சுக் கொண்டேயிருந்தா சுற்றமாக யாரையும் சேர்க்க முடியாதுன்னு. ஆனா நான் நினைக்கிறேன் அதோட அர்த்தம் ஒரே ஒரு நல்ல சுற்றத்தைக் கூட பாக்க முடியாதுன்னு.
பழைய கால புராணத்தில பாத்தோம்னா:
மகாபாரதக் கதையில,
துரியோதனன் கெட்டவன்தான். சகோதரத்துரோகம் செய்தவன்தான்.  ஆனா நட்புக்கு எப்பவுமே துரோகம் செஞ்சதில்லை. அதனாலதான் கர்ணன் அவனுடைய உற்றம் சுற்றத்தை விட்டுவிட்டு தன் நட்புக்காக உயிரைக் கொடுத்தான்.  ராமாயணக் கதையில, ராமனை அவனுடைய உறவும் சுற்றமும் கைவிட, அவனுக்கு நட்பாக இருந்த குகனும் சுக்ரீவனும் தான் உதவுறாங்க.
இயேசுநாதர் கூட தன்னை உண்மையாய் பின்பற்றவங்களை , நண்பர்கள் என்றுதான் அழைத்தார். 
நம்ம நெருங்கிய நட்பைத்தான், நாம சொந்தமாக நினைச்சு மாப்ளை மச்சின்னு கூப்பிடுறோம். சொல்லும்போது  ஞாபகம் வருது காலேஜ்ல படிக்கும்போது என் நண்பன் ஒருவன் என்னை மாப்ள மாப்ளன்னு கூப்பிடுவான். ஒரு நாள் சொன்னான், டேய் Alfy உன்னை நான் மாப்ளேன்னு கூப்பிட்டு பேசும் போது எவ்வளவு நெருக்கமா இருக்கு. நீயும் அதே மாதிரி இருக்க, நம்ம ராகவனை மாப்ளன்னு கூப்பிட்டதுக்கு அப்படிக் கூப்பிடாதன்னு சண்டை போடுறான் ஏன்னே தெரியலன்னான். மாப்பிள்ளை அது ஒண்ணுமில்ல, எனக்கு தங்கச்சி எதுவுமில்ல, அவனுக்கு ஒரு அழகான தங்கச்சி இருக்கு அதனாலதான்.  
ஒரு நல்ல அப்பாவை பிள்ளைக எப்படி சொல்வாங்க எங்கப்பா எனக்கு ஒரு friend மாதிரிடா, என் அம்மா எனக்கு ஒரு நல்ல தோழி மாதிரி, உண்மையான நெருக்கமான உறவைக்குறிக்க நட்பு என்றுதான் சொல்றோம்.
Add caption

இன்னிக்கும் எனக்கு ஏதாவது மனக்கஷ்டம்னா, என் நண்பர்கள் யாராவது ஒருவனுக்கு போனைப் போடுவேன். என்னடா மாப்ள எப்படி இருக்கன்னு கேட்பான் ஒண்ணுமில்லடா மச்சி, சும்மாதான் கூப்பிட்டேன். அட பரவாயில்லை சொல்லு உன் குரலே சரியில்லைடா.
- இந்த ரெண்டு வார்த்தை போடா வாடான்னு பேசிட்டு துயரத்தை இறக்கிவிட்டுட்டா மனசு கலகலன்னு ஆயிரும். ரெண்டு பழைய கதையை பேசி வாய்விட்டு சிரிச்சிட்டா, எல்லாத் துயரமும் மறந்துபோயிரும்ல.

கடைசியா ஒரு மூணு விஷயத்தை சொல்லி முடிக்கிறேன்.
1.    சுற்றம் எப்பொழுதும் நம்மிடம் எதிர்பார்க்கிறது, ஆனா நட்பு எப்பொழுதும் எதிலும் எதையும் நம்மிடம் எதிர்பார்ப்பதில்லை.
2.    சுற்றம் என்பது சூழ்நிலைக்கேற்ப மாறுவார்கள். ஆனா நட்பு என்னைக்கும் மாறாதது.
3.    சுற்றத்திடம் எதையும் பகிர்ந்து கொள்ள முடியாது, நட்பிடம் எதையும் தைரியமாக பகிர்ந்துகொள்ளலாம்.
எனவே வாழ்வின் மகிழ்ச்சிக்கு பெரிதும் உறுதுணையாக இருப்பது என்றும் வாடாத நட்பூவே என் தீர்ப்பூ என்று சொல்லி வாய்ப்புக் கொடுத்த நல்ல உள்ளங்களுக்கு நன்றி சொல்லி அமைகிறேன், நன்றி வணக்கம்.


முற்றும்.

Tuesday, October 27, 2015

வாழ்வின் மகிழ்ச்சிக்கு பெரிதும் உறுதுணையாக இருப்பது சுற்றமா ?நட்பா ?


         கடந்த  அக்டோபர் 24 மாலை 6 மணியளவில் நியூயார்க்கில் இலங்கைத்தமிழர் நடத்திய  ‘ஆனந்தம்’ நிகழ்ச்சியில் அடியேன் நடுவராகப்பங்கு பெற்ற பட்டிமன்றம். சிறப்பாக   நடந்து முடிந்தது .அதில் அடியேன் பேசிய முன்னுரை இது.

மூச்சுக் கொடுத்த இறைவனுக்கும், தமிழ்ப்
பேச்சுக் கொடுத்த என் அன்னைக்கும்
வாய்ப்புக் கொடுத்த சபைக்கும் என்
வணக்கங்கள் பலப்பல

A

ஆனந்தம் விழாக்குழுவினர் குறிப்பாக கவிஞர் சிவபாலன் அவர்களுக்கும் என் நன்றிகள்.இங்கு கூடியிருக்கும், அனைத்து உறவுகளுக்கும் நட்புகளுக்கும் என் வணக்கம். ஆனந்தம் நிகழ்ச்சியின் மூலமாக உங்களை மீண்டும் சந்திப்பதில் ஆனந்தம்.

பட்டிமன்றத் தலைப்பு - வாழ்வின் மகிழ்ச்சிக்கு பெரிதும் உறுதுணையாய் இருப்பது சுற்றமா? இல்லை நட்பா?.
நம்மூரில் திருமணத்திற்கு கொடுக்கும் பத்திரிகையில், ஒரு வரி இருக்கும். எனக்கு ரொம்பப்பிடித்த வரி அது. “சுற்றமும் நட்பும் சூழ வந்திருந்து வாழ்த்தியருள வேண்டுகிறோம். தங்கள் நல்வரவை விரும்பும் இருவீட்டார்”,  என்று போட்டிருப்பார்கள். அதுவும் முஸ்லீம் வீட்டு பாய் கல்யாணம்னா, நம்ம நட்பூஸ்  கூப்பிடாமயே கூட வந்துருவாங்க. ஓசி பிரியாணி கிடைக்கும்ல.
ஒரு திருமணம் அல்லது எந்த ஒரு மங்கள நிகழ்வும் மகிழ்ச்சியாக நடைபெற வேண்டுமென்றால், ஒரு புறம் சுற்றம் இருக்க வேண்டும் மறுபுறம் நட்பு இருக்க வேண்டும். இந்த இரண்டும் சூழ்ந்திருந்தால் மகிழ்ச்சிதான். யோசித்துப் பாருங்க உங்க கல்யாணம் அப்படித்தானே நடந்தது.
ஆனா இந்த ஊர்ல அப்படியா நடக்குது, நாலு பேருக்கு நன்றி, அந்த நாலுபேருக்கு நன்றி. கல்யாணம்னாலும் அந்த நாலு பேர்தான் கருமாதினாலும் நாலுபேர்தான்.
என்னனு கேட்டா “பட்ஜெட் கழுதைன்னு”, சொல்றான் என் நண்பன். என்ன கழுதையான்னு கேட்டேன் ?. ஆமாடா பட்ஜெட் இடிக்குது, பட்ஜெட் கடிக்குது, பட்ஜெட் உதைக்குதுனு சொல்றான். நல்லவேளை பட்ஜெட் பொண்டாட்டி மாதிரின்னு சொல்லல ஏன்னா அதுக்கும் நல்லாவே பொருந்தும்.


ஒரு நீண்ட கால நண்பனுக்கு போன் செய்தேன். அவன் சொன்னான், “மன்னிச்சுக்கடா உனக்கு உள்ளத்தில் இடம் இருக்கு. ஆனா என் இல்லத்துல இடமில்லை”.என்னாச்சு”,னு கேட்டேன். “மனைவி வந்தாச்சு, சுற்றமும் நட்பும், நொந்தாச்சு”,னு சொன்னான். அது சரிதான் மனைவி வந்ததும் முதல்ல கட்பண்றது அதத்தானே. “என்னடா Arranged Marriageல தான் இந்தப்பிரச்சனை. நீ காதல் கல்யாணம்தானே. அவள் உன் தோழிதானேன்னு”, சொன்னேன். “ ஆமாடா  அதையேன் கேட்கிற , கல்யாணத்துக்கு முன் தோழிதான் .ஆனா இப்ப காளி ஆயிட்டா”ன்னு சொன்னான். அதோடு காதல் கல்யானம்னாலே தோல்விதானேனு சொன்னான் .அதாவது காதல் பண்ணிட்டு கல்யாணம்  நடக்கலை னாலும் தோல்வி, நடந்தாலும் தோல்விதாணு சொன்னான். எனக்கு அதைப்பத்தி அவ்வளவா தெரியாது.நான் அர்ரெஞ்சிடு மேரேஜ்.
நம்மூர்ல ஒரு நம்பிக்கை உண்டு, காக்கா கத்துனா உறவுக்காரங்க வருவாங்கன்னு, ஒரு பையன் அவங்கப்பாவை  கேட்டானாம், “ஏப்பா காக்கா கத்துனா உறவுக் காரங்க நிசமா வருவாங்களா”,ன்னுஅப்பா சொன்னாரு, “ஆமடா காக்கா கத்துனா உறவுக்காரங்க நிச்சயமா வருவாங்க”. “அப்படியாப்பா அப்புறம் எப்ப போவாங்கப்பா?” “அதுவா உங்க அம்மா கத்துனா போயிருவாங்க”.
தூர இருந்த சேர உறவுன்னு சொல்வாங்க அது உறவுக்கு மட்டுமல்ல நட்புக்கும் பொருந்தும்னு சொல்றாங்க.
இப்படி உறவும் நட்பும் இப்ப பிரச்சினையா இருக்கு.
ஆனா நம்ம தலைப்பு, வாழ்வின் மகிழ்ச்சிக்கு பெரிதும் உறுதுணையாக இருப்பது சுற்றமா? நட்பா? வாங்க உங்களோடு சேர்ந்து நானும் கேட்க ஆவலாயிருக்கிறேன்.
தீர்ப்போட திரும்பி வருவேன், வணக்கம்.


தீர்ப்பு அடுத்த வெள்ளிக்கிழமை  வெளி வரும்

Thursday, August 6, 2015

ஷேவிங் செய்த திருவள்ளுவர் !!!!!!!!!!!!!!!

கடந்த வாரம் ஜூலை 25&26 தேதிகளில் மேரிலாண்டில் நடைபெற்ற 7ஆம் உலகத்தமிழ் ஒற்றுமை மாநாட்டில்  நடந்த பட்டிமன்றத்தில் அடியேன் கலந்து கொண்டு பேசிய பேச்சை கீழே கொடுத்துள்ளேன்
பட்டிமன்ற பேச்சாளர்கள் மற்றும்  தமிழ் அறிஞர்களோடு 

தலைப்பு:தமிழ் இலக்கியங்கள் காட்டும் பண்பாடு இன்றைய வழிகாட்டுவதில் சமூகத்திற்கு - நடுநிலையே.
நடுவர் : பேராசிரியர் முனைவர் உலகநாயகி, தமிழ் துறைத்தலைவர் , ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி, சென்னை
நடுவர் பேராசிரியர் உலக நாயகி உள்ளிட்ட அவைக்கு என் பணிவான வணக்கம்.
என்னுடைய ஒரு பக்கம், இலக்கியங்களால் சமூகம் வளர்ச்சியடைந்திருக்கிறது என்ற மாயக்கனவில் மகிழ்ந்திருக்கும் மக்கள். இன்னொரு பக்கம் இலக்கியங்களை குற்றம் கூறியே பேர் வாங்கிவிடலாம் என்ற நக்கீர நினைப்பில் நனைந்து கொண்டிருக்கும் மக்கள்.
நான் இலக்கியங்களை குறை கூற வரவில்லை.
நான் பேச வந்திருப்பது இலக்கியங்கள் அப்படியே தான் இருக்கின்றன சிறப்பாகவே இருக்கின்றன. அதனால் சமூகத்திற்கு வளர்ச்சியும் இல்லை தளர்ச்சியும் இல்லை. ஏன்னா அத பயன்படுத்தினாத்தானே ?.
1981ஆம் ஆண்டு, அப்போதுதான் +2 முடித்திருக்கிறேன். நான் வாங்கின மார்க்குக்கு எனக்கு பிளாட் ஃபார்ம் சீட்டு கூட கிடைக்காது. ஆனால் என்னுடைய அப்பா எப்படியோ யாரைப்பார்த்தோ எனக்கு மதுரை அமெரிக்கன் கல்லூரியில் BSc  சிறப்புக்கணிதம் வாங்கிவிட்டார். இந்தக் கணக்கோடு எனக்கு எப்போதும் பிணக்கு. இந்த சூத்திரம்னு சொன்னாவே எனக்கு வந்துரும், கொஞ்சம் பொறுமை, தப்பா எடுக்காதீங்க ஆத்திரம். எனக்கோ தமிழ் பயில ஆசை கன்னித்தமிழ் மேல் காதல் அதுவும் ஒருதலைக்காதல். அந்த ஆசையோடு கணிதத்திலிருந்து கன்னித்தமிழுக்கு மாறிவிடலாம் என்று நான் சென்று பார்த்து அப்போதைய தமிழ்த்துறை தலைவர் பேராசிரியர் சாலமன் பாப்பையா.

“ஐயா ரொம்ப மகிழ்ச்சி, போய்க் கொஞ்சம் பாடத்திட்டத்தைப் பார்த்துவிட்டு  முடிவெடுங்கள் என்று சொன்னார். அங்கே போய்ப் பார்த்த பாடத்திட்டங்களில் நன்னூல் சூத்திரம் என்று ஒன்று இருந்தது. எனக்குதான் சூத்திரம் என்றால் ஆத்திரம். ஆம் அதேதான் வந்ததால் சொல்லாமல் கொள்ளாமல் வெளியே வந்துவிட்டேன். அப்புறம் தான் தெரிந்தது இலக்கியம் முழுவதும் ஒரே கணக்கு, நாலடியார், குறுந்தொகை, எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினொன் கீழ்க்கணக்கு.
அப்போது தமிழ் இலக்கிய மாணவர் ஒருவர் என்பின்னால் ஓடி வந்தார். “என்ன கணிதத்திலிருந்து தமிழ் படிக்க வருகிறீர்களா?”, என்றார். ஆம் என்ற போது என்னை ஒரு பைத்தியக்காரனைப் பார்ப்பது போல் பார்த்துவிட்டு, "நண்பா இங்கே இலக்கியம் படிக்கும் முக்கால்வாசிப்பேர் இலக்கிய ஆர்வத்தால் வரவில்லை பாதிப்பேர் வேறு எதுவும் கிடைக்காமல் வந்திருக்கிறார்கள். மீதிப்பேர் ஆங்கிலம் வராததால் இங்கு வந்திருக்கிறார்கள். ஒரு வேளை நீங்கள் இங்கு மாறி வந்தால், எனக்கு அந்தக் கணக்கு சீட்டை வாங்கிக் கொடுங்கள்”, என்றார். அவர் போட்ட கணக்கு முற்றிலுமாக வேறகணக்கு. அது ஆனது தப்புக் கணக்கு.

இப்படி விருப்பமில்லாமல் தமிழ் இலக்கியம் படிக்க வருபவர்களால் தமிழ் எப்படி வளரும்? இவர்களே தமிழ் ஆசிரியர்களாகவும் ஆகிவிடுவதால் எப்படிவரும் இலக்கிய வளர்ச்சி, சமூக வளர்ச்சி? தமிழை தமிழ் என்று உச்சரிப்பவர்கள் எத்தனைபேர்? தாய்மொழி என்ன என்று கேட்டால் பாதிபேர் டேமில்  னு சொல்றாங்க. மீதிபேர் தமில்னு சொல்றாங்க.  பின்  தமிழ் தெரியுமா? என்றால் குஞ்சம் குஞ்சம்  தெரியும்னு சொல்றாங்க. அமெரிக்காவில் உள்ள தமிழர்களைச் சொல்லவில்லை, நம்ம தமிழ் நாட்டில் இருப்பவர்களைத்தான் சொல்கிறேன். பின்ன என்னதான் படிச்ச என்று கேட்டால் French, இந்தி, ஜெர்மனி என்று சொல்றாங்க. கேட்டா தமிழ் எடுத்தா Fail  ஆயிருவோம், மதிப்பெண் கிடைக்காதுன்னு சொல்றாங்க.
சென்னையில் காலை உணவு சாப்பிட்டாச்சானு கேட்டா இன்னாபா தமில்ல பேசு ஓ நாஷ்டாவை அல்லாம் துன்னாச்சுனு சொல்றாங்க.
தமிழ் இலக்கியம் எப்படி வளரும் ?.
“ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி”னு ஒரு பழமொழி.
நாலு என்றால் நாலடியார், இரண்டு என்றால் திருக்குறள். என்னுடைய பள்ளித் தமிழாசிரியர் இந்த இரண்டு அடி திருக்குறள் வரலைன்னா 2 அடி  போடுவார், இந்த நாலடியார் வாயில் வரலைன்னா நாலு அடிபோடுவார்.  எனவே கொஞ்சமாவது இவற்றைக் கற்றுக் கொண்டோம். இப்ப ஆசிரியர் நாலடி  போட்டால், நாலு சுவத்துக்குள்ள வச்சி பூட்டி ஒரு நாலு கம்பி எண்ணற நிலைமை வந்துரும். தமிழ் மேல் பற்றும் இல்லை பயமும் இல்லை.
காப்பியம் படிப்பானான்னு கேட்டா ஏதோ ஓப்பியம் அடித்த மாதிரி பார்க்கிறாய்ங்க. அதனால் இலக்கியம் பத்ரமாகத்தான் இருக்கிறது.
என் கூடப்படிச்ச ஒரு பயபுள்ள கேக்கிறான்  "ஏண்டா திருக்குறள்ள அறத்துப்பால், பொருட்பால் மட்டும் சொல்லித் தர்றாங்களே இந்த காமத்துப் பால் ஏன் சொல்லித்தர மாட்டேங்கிறாங்கன்னு கேக்கிறான்?" - எப்படி அய்யா இலக்கியம் வளரும்?
அப்புறம் எப்படி இலக்கியத்தால் சமூகம் வளரும்.
இன்னொருத்தன் சொல்றான், எனக்கு காப்பியத்துல விருப்பம் இல்லன்னு. ஏண்டான்னு கேட்டா, இப்ப பாரு சிலப்பதிகாரம் படிச்சவங்களைப் பாரு, கண்ணகியோடு கற்பைப் பாராட்டாம கோவலனையே ஃபாலோ பண்றாங்கன்னு சொன்னான். “கோவலனை follow  பண்றாங்களா எப்படிரான்னு:, கேட்டா, கண்ணுக்கு அழகாக கண்ணகி இருந்தாலும் ஒரு மாதவியை தேடி வச்சிக்கிறாங்களேன்னு சொல்றான்.அட ஆமா அவன் சொல்றது உண்மைதானே.
இன்னும் பெரும்பாலோர்க்கு இலக்கியம் கவிதைன்னா சினிமாப் பாட்டோடு நின்னுபோயிருது. அதனாலதான் பாடலாசிரியர்கள் கவிஞர்களைவிட ஃபேமஸ் ஆயிராங்க.
தமிழ் இனி மெல்லச் சாகிறாப்ல தெரியல, சீக்கிரம் செத்துருமோன்னு பயமா இருக்கு.
இலக்கிய காலத்திலிருந்து இன்னக்கி வரைக்கும் இரண்டே இரண்டு விஷயங்கள்தான் தொடர்ந்து வருது. ஒண்ணு சோமபானம். அதுக்குப் பெயர் இப்போ டாஸ்மார்க் 2-ஆவது காமபானம் இது முன்னோக்கிச் செல்லும் சமூகமாகத் தெரியவில்லை. பிற்போக்கு எண்ணங்களால் பின்னோக்கிச் செல்லும் சமூகமாகத்தான் தெரிகிறது.
இரண்டு மலையாளிகள் சந்தித்தால் மலையாளம் பேசுகிறான். இரண்டு தெலுங்கர்கள் சந்தித்தால் தெலுங்கு பேசுகிறான். ஆனால் தமிழன் மட்டும் தமிழ் பேசுவதில்லை. கேட்டால் படித்தவர்கள் தமிழ் பேசமாட்டார்களாம். என்ன கொடுமை இது சரவணா?
சமீபத்தில் இந்தியாவுக்குப் போயிருக்கும்போது என் நண்பன் குழந்தை, திருக்குறள் படித்துக் கொண்டிருக்கிறது. பாராட்டிவிட்டு இதனை எழுதியவர் யார் என்று கேட்டேன். ஓ தெரியுமே திருவள்ளுவர்தானே என்று சொல்லியதோடு அவரை டிவியில் பார்த்திருக்கிறேன். ஆனா இப்ப அவர் தாடி மீசையெல்லாம் shaving செய்துவிட்டார்னு சொல்லுச்சு, அந்த Shaving செஞ்ச திருவள்ளுவர் வேறயாருமில்ல நம்ம சாலமன் பாப்பையாதான்.

இலக்கியங்களை நாம் உயர்ந்த இடத்தில் வைத்திருக்கிறோம். அதனால் அவை நமக்கு எட்டுவதில்லை. இலக்கியங்களை பத்திரமான இடத்தில் வைத்துப் பூட்டி விட்டு சாவிகளைத் தொலைத்து விட்டோம். அதனை படிக்கவோ, அனுபவிக்கவோ நமக்கு ஆற்றலும் இல்லை, ஆர்வமும் இல்லை. எனவே தற்கால இலக்கியங்களால் நம் தமிழ்ச் சமூகத்திற்கு வளர்ச்சி எதுவுமில்லை என்று கூறி எனக்கு வாய்ப்பளித்த நல்ல உள்ளங்களுக்கு நன்றி சொல்லி அமர்கிறேன் நன்றி வணக்கம்.
முற்றும் 

Monday, January 26, 2015

நல்லது செய்திட பொய் சொல்லலாம் - சரியே - தவறே. பகுதி 2 முடிவுரை !!!!!!!!!







எல்லாரும் பேசி முடிச்சுட்டாங்க. நல்லாத்தான் பேசினாங்க. ஆனா இதுல யார் பொய் பேசினா யார் உண்மை பேசினான்னு தெரியல. தலை கிறுகிறுத்துப்போச்சு. எனக்கு இருக்கிற சின்ன மூளைக்கு எவ்வளவுதான் தாங்குறது.

காயமே இது பொய்யடா, வெறும் காற்றடைத்த பையடான்னு சொன்னது சரியாத்தான் இருக்கு. காயம் என்றால் உடல். இந்த உடம்பை மெய்னுகூட சொல்வாங்க. ஆனா உடம்பு என்ன நிரந்தரமா? இதுவும் மெய்யில்ல பொய்தான்.

கவிஞர் வாலி ஒரு பாடலில் சொல்லியிருப்பார்.

“திருவோடு வந்தது தெருவோடு போனது, மெய்யென்று மேனியை யார் சொன்னது”- வாழ்வே மாயம்.

“கவிதைக்குப் பொய் அழகு”, என்று சொல்வாங்க ஆனாலும் நம்ம கவிதைகளும் பாடல்களும் ரொம்ப ஓவர். ஒரு பாடல் ஞாபகம் வருது. வைரமுத்து எழுதினது.

“அந்திமழை பொழிகிறது ஒவ்வொரு துளியிலும் உன்முகம் தெரிகிறது”

ஒவ்வொரு துளியிலும் முகமா. ஐயையோ ஆயிரக்கணக்கான முகமா. ஒரு முகத்தையே இங்க தாங்ங்ங்ங்க முடியல.

“இந்திரன் தோட்டத்து முந்திரியே, மன்மத நாட்டுக்கு மந்திரியே” 

இந்திரன் தோட்டத்துக்கு யார்போனது? ரம்பை, ஊர்வசி, மேனகை ஒருத்தரையும் யாரும் பார்த்தது கிடையாது.என்ன செய்றது இத மாதிரி எதைச் சொன்னாலும் பொம்பளைங்க நம்பிராங்க.

அரசியலை எடுங்க கோடிக்கணக்கான பணத்தைச் செலவழித்து பதவியைப் பிடிப்பாங்க எதுக்குன்னு கேட்டா மக்களுக்குச் சேவை செய்யனுமாம். என்ன கதை விடுறீங்க. எத்தனை பொய்.

“உங்கள் பொன்னான ஓட்டுகளைப் போடும்படி உங்கள் பொற்பாதங்களை தொட்டுக் கேட்கிறோம்”னு, அநியாயத்துக்குப்  பொய் சொல்வாங்க. அதையும் நம்பி மக்கள் ஓட்டு போட்டுறாங்க. எலக்சனுக்கு செலவழிக்கிற பணத்தை உங்கள் ருக்கு செலவு செய்யுங்கள். உங்களுக்கு கோயில் கட்டி கும்பிடுவார்கள். ஒரு விசயத்தில மட்டும் எல்லாக்கட்சிகளுக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு. இந்தக் கட்சி அந்தக் கட்சின்னு இல்ல, எல்லாக்கட்சிகளிலும் தலைவர் முதல் MLA MP வரை -50 சதவீதத்திற்கு மேல் குற்றப் பின்னணி உள்ளவர்கள்தான். நாடு எப்படி முன்னேறும்?

ஆனால் வாய்மையே வெல்லும். எப்பொழுதும் பொய்சொல்லக் கூடாதுன்னு வரதராஜனும் வான்மதியும் சொல்லியிருக்கிறார்கள்.

“வாய்மை எனப்படுவது யாதெனில் யாதொன்றும்

தீமை இலாத சொலல்”, என்று வள்ளுவர் சொல்லியிருக்கிறார்

இந்திய அரசின் சின்னம் / முத்திரையில் “சத்தியமேவ ஜயதே”, என்ற உபநிஷத் வாசகம் இருக்கிறது. அதன் மொழிபெயர்ப்புதான், தமிழ்நாடு அரசு சின்னத்தில் இருக்கும் "வாய்மையே வெல்லும்" என்பது.

அந்தக் காலத்தில் குருகுலத்துக்குப் படிக்கப்போகும் மாணவனுக்கு குரு சொல்லித்தரும் முதல் பாடம் "சத்யம் வத". அதன் அர்த்தம் உண்மையே பேசு.

என்ன நடந்தாலும் உண்மையே பேசும்போது முதலில் சில தீமைகள் நடந்தாலும், இறுதியில் நன்மையே நடக்கும் என்பதை அரிச்சந்திர மகாராஜாவின் கதையில் படித்திருக்கிறோம். அந்த நாடகத்தைப் பார்த்த மகாத்மா காந்தியடிகளும் இறுதிவரை பொய் சொல்லாமல் வாழ்ந்தார்.

ஆனால் “பொய்மையும் வாய்மை உடைத்து”,ன்னு வள்ளுவர் சொன்னதைக் குறிப்பிட்டு விசுவும் சுபாவும் பல கருத்துக்களை சொல்லியிருக்கிறார்கள்.

அதுமட்டுமல்ல ஆதிசங்கரர் தான் எழுதிய “பிரஸ்னோத்ரரத்ன மாலிகா”வில் "தர்மத்தைக் காக்க பொய் சொல்லலாம்”, என்று சொல்லியிருக்கிறார்.  பிரஸ்ன என்றால் கேள்வி, உத்தர என்றால் பதில். இந்த துதியில் ஏறத்தாழ 200 கேள்வி பதில்கள் உள்ளன. அதில் பாடல் 46-47ல் இது வருகிறது.

கிரேக்க நாட்டு அறிஞர் பிளாட்டோவும் இதையே சொல்லுகிறார். நன்மைக்காக பொய் சொல்வதை அவர் Noble lie  என்று சொல்லுகிறார். கிரேக்க அறிஞர் சாக்ரட்டீசின் சீடர் பிளாட்டோ,பிளாட்டோவின் சீடர் அரிஸ்டாட்டில், அரிஸ்டாட்டிலின் சீடர் அலெக்சாண்டர். அலெக்சாண்டர் இந்தியாவுக்குப் படை எடுத்து வந்ததன் முதல் காரணம், இந்தியாவிலுள்ள ரிஷிகளை எப்படியாவது தன் நாட்டுக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்பதுதான். நான் சொல்லல, சுவாமி விவேகானந்தர் அவருடைய புத்தகத்தில் சொல்லியிருக்கிறார்.

 இன்னொரு உதாரணம் சொல்லி முடிக்கிறேன். மகாபாரதத்தில் குருஷேத்திர யுத்தம் நடக்கிறது. கெளரவர்கள் பாண்டவர்களை விட ஏழு மடங்கு அதிக படைகளை வைத்துள்ளனர். அதோடு பல காரணங்களுக்காக மாபெரும் வீரர்களான, பிதாமகர் பீஷ்மர், கர்ணன், துரோனாச்சாரியர் இப்படி பலரும் அவர்கள் பக்கம். கிருஷ்ணன் இந்த முழு யுத்தத்தையும் சூழ்ச்சியால் தான் வெல்கிறார்.

தர்மயுத்தம் வெல்ல வேண்டும். தர்மனோ பொய் சொல்ல மாட்டான். அதனால் கிருஷ்ணன், துரோனாச்சாரியாரின் மகனான அஸ்வத்தாமா என்ற அதே பெயரில் ஒரு யானையை உருவாக்கிக் கொல்லச் சொல்கிறார். பீமன் அதைக் கொன்றவுடன் "அஸ்வத்தாமாவுக்கு சாவு" என்று கூச்சல் இடுகிறான். அதனைக்கேட்ட துரோணர் அது உண்மையா என்று தெரிந்துகொள்ள தர்மனிடம் வருகிறார். அவன் சொல்கிறான் "அஸ்வத்தாமா ஹத: நரோவா குஞ்சரோவா", என்று. "அஸ்வத்தாமா சாவு யானையோ மனிதனோ”,என்று அர்த்தம். யானையோ மனிதனோ என்று தர்மன் சொல்வது கேட்காத படி பாண்டவ சேனை பெரிய டமார துந்துபி ஒலிகளை ஒலிக்கச் செய்கிறது. எனவே துரோணர் காதில், “அஸ்வத்தாமா சாவு”, என்பது மட்டும் விழ, அவர் நொந்து போய் ஆயுதங்களை தூக்கி எறிந்துவிட்டு தியானத்தில் அமர, திருஷ்டத்யும்னன் அவரைக் கொல்கிறான். இதன் மூலம் தர்மம் வெல்ல பொய் சொல்லலாம் என்று   சொல்லுகிறார்கள்.

நம்ம தலைப்பு, "நல்லது செய்திட பொய் சொல்லலாம்" என்பது. இதில் யாருக்கு நன்மை என்ற கேள்வி எழுகிறது ?. அது சுயநலமா இல்லை பொது நலமா?.

பொய்ல ரெண்டு கலர் இருக்கு. பச்சைபாய் / வெள்ளைப் பொய்.சுயநலத்திற்கு. பொய் சொன்னா அது பச்சைப்பொய். பொது நலத்திற்கு பொய் சொன்னா அது வெள்ளைப்பொய்.இதுல யாரு என்ன கலர் பொய் அதிகமா சொல்றீங்கன்னு அவங்கவுங்களுக்குத்தான்  தெரியும் .

- முடிவாக என்னுடைய தீர்ப்பு என்ன வென்றால், பொதுவாக, தன்னலம் கருதாது, சமூக நலன் ஒன்றையே மனதில் வைத்து, யாருக்கும் தீமையே விளையாது என்றால் "பொய் சொல்லலாம்". இது ஒரு நல்ல மனிதனுக்கு அடையாளம்.

ஆனால் எந்தச் சூழ்நிலையிலும் பொய்யே சொல்லாமல் உண்மையே எப்போதும் சொல்லி நன்மை விளைவிப்பவர், அரிச்சந்திரன் போல, காந்திஜி போல, மகாத்மா ஆகலாம் என்று சொல்லி வாய்ப்புக் கொடுத்த நல்ல உள்ளங்களுக்கு நன்றி சொல்லி முடிக்கிறேன்.எங்கள் வாழ்வு வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு.

பின்குறிப்பு:

என்னுடன் இணைந்து பேசிய பேச்சாளர்கள் வரதராஜன் ,விசு,வான்மதி மற்றும் சுபா ஆகியோருக்கு என் நன்றிகள்.

எனக்கும் என் குழுவுக்கும் வாய்ப்பு கொடுத்த ஆனந்தம் நிர்வாகக் குழுவுக்கும் குறிப்பாக நண்பர் கவிஞர் சிவபாலன் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

.