Thursday, April 27, 2017

தமிழ் அரவாணியின் கதை !!!!!!

Image result for வெள்ளை மொழி - அரவாணியின்

வெள்ளை மொழி - அரவாணியின் கதை-ரேவதி
அடையாளம் வெளியீடு
படித்ததில் பிடித்தது
          நவம்பர் 2016ல் ஒரு குடும்ப திருமண நிகழ்வுக்காக சென்னை வந்து, அனுதினம் நடந்த குடும்ப சம்பிரதாயங்களில் மூச்சுத்திணறி அடித்துப்பிடித்து மதுரை வந்தேன். வழக்கம்போல் நண்பர் பேராசிரியர் பிரபாகர் வீட்டில் தங்கியிருந்த 3 நாட்களில் ஒரு நாள் சொர்க்கவாசல் எதிரில் உள்ள நற்றிணை புக் சென்டருக்கு அழைத்துச் சென்றார். அங்கே புத்தகங்களை மேய்ந்து கொண்டு இருக்கும்போது அடையாளம் பதிப்பகத்தின் மூலம் வெளியிடப்பட்ட இந்தப்புத்தகத்தை  அடையாளம் காட்ட அதனை உடனே வாங்கினேன்.
          நமது தமிழ்ச்சமூகம் பிறரின் வேதனையில் மகிழ்ச்சி காண்பதை எப்போது ஆரம்பித்தோம் என்று தெரியவில்லை. காது கேளாதவர்கள், கண் தெரியாதவர்கள், முடமானவர்களை கேலி செய்வது எவ்வளவு கேவலமானது, அதோடு அடுத்தவன் அடி வாங்குவதை ரசித்துச் சிரிப்பது இவையெல்லாம் பல திரைப்படங்களில் பார்த்துச் சிரித்து மகிழ்ந்திருக்கிறோம் என்பதை தற்போது நினைத்தால் வெட்கமாக இருக்கிறது. இரு அர்த்தங்கள் பேசுதல், கெட்ட வார்த்தைகளைச் சொல்ல வருவது போல் காண்பித்துப்பின் வேறு வார்த்தைகளைச் சொல்லுதல், ஆபாசமாக அர்த்தமுள்ள பாடல்கள், நடன அசைவுகள் என்று நம் மனத்தையே நாம் ஊனப்படுத்தியிருக்கிறோம்.
          "நொண்டிக்கு நூறு குசும்பு", "கட்டையை நம்புனாலும் குட்டையை நம்பக்கூடாது", “குருட்டுப்பூனை விட்டத்தில் பாய்ஞ்சது மாதிரி", "செவிடன் காதில் சங்கூதுவது போல்", "முடவன் கொம்புத் தேனுக்கு" ஆசைப்படுவது போல்”, போன்ற பல சொல்வழக்குகளைப் பார்க்கும் போது பல காலமாகவே ஊனத்தை கேலி செய்யும் சமூகமாகத்தான் நாம் இருந்திருக்கிறோம் என்பதை நினைத்துப் பார்த்தாலே கேவலமாக இருக்கிறது.
          அதுபோலவே அரவாணிகளையும் நாம் நடத்தி வருகிறோம். பரிதாபத்துக்கு  உரியவர்களாக பார்ப்பதைவிட்டுவிட்டு கேலிக்குரியவர்களாகவே சமூகத்திலும் திரைப்படங்களிலும் சித்தரித்திருக்கிறோம். காலங்காலமாக அவர்களுக்கு எந்த சமூக அந்தஸ்தோ, சலுகைகளோ கொடுக்காமல் ஒதுக்கியே வந்திருக்கிறோம். அந்த அநியாயங்களை இந்தப்புத்தகம் மூலம் மேலும் தெரிந்து கொண்டபோது நெஞ்சம் கனத்தது.
          அவர்கள் இப்படிப்பிறந்தது யார் குற்றம் என்ற ஆராய்ச்சியை விட்டுவிட்டு, அவர்களுக்கு சமூகத்தில் எந்த விதத்தில் அடிப்படை உரிமைகளைக் கொடுக்க முடியும் என்பதைப் பற்றி யோசிக்க வேண்டும்.
          இந்தப்புத்தகத்தில் துரைசாமியாகப் பிறந்து ரேவதியாக மாறிப்போன ஒரு அரவாணி தனது கதையை, குடும்பத்தில் கைவிடப்பட்டு, சமூகத்தால் ஒதுக்கப்பட்டு, டெல்லியிலும், மும்பாயிலும், பெங்களூரிலும் பட்ட கஷ்டங்களைச் சொல்வது ஒரு திரில்லரை மிஞ்சுவதாக இருக்கிறது.
          அன்றாட உணவுக்கே அல்லாடும் நிலையில் எப்படியெல்லாம், குடும்பம், சமூகம், காவல்துறை ஆகியோரால் துன்பம் அனுபவித்தார் என்பதை படிக்கும்போது நெஞ்சு பதை பதைக்கிறது
          அதோடு யாருக்குமே தெரியாத அரவாணிகளின் குடும்ப அமைப்பு, கட்டுப்பாடுகள், கூட்டுக் குடும்பம், மொழி வழக்குகள் போன்ற பல விடயங்களை இந்தப்புத்தகத்தில் எழுதியுள்ளத்தைப் படிக்கும் போது ஆச்சரியம் மேலிடுகிறது. அவற்றுள் சிலவற்றை இங்கு தருகிறேன்.

Image result for அரவாணி ரேவதி

          இந்தப்புத்தகத்தை ரேவதி தன்னை அரவாணியாகப் பெற்றெடுத்த தன் தாய்க்கு சமர்பணம் செய்திருப்பதைப் பார்த்து மனது நெகிழ்ந்தது. எழுத்தாளர் பெருமாள் முருகன் முன்னுரை எழுதியிருக்கிறார்.
1.   பத்து வயதில் துரைசாமிக்கு Cross dressing என்று சொல்லக்கூடிய பெண்களின் உடையைப் போட்டுக் கொள்ள ஆசை வருகிறது.
2.   எதிர்த்த வீட்டில் குடியிருந்த கல்லூரி மாணவனைப் பார்க்கும் போது பாலுணர்வு எழுகிறது.
3.   ஊர்த் திருவிழாவில் குறத்தி வேஷம் போட்டு ஆடுவது மிகவும் பிடித்திருந்தது.
4.   பக்கத்து டவுனுக்குப் படிக்கப் போகும்போது அங்குள்ள சில அரவாணிகளின் நட்பு கிடைக்கிறது.
5.   அவர்கள் மூலம் பக்கத்து ஊரிலிருந்து சில அரவாணிகளின் கூட்டமைப்புக்குச் சென்று ஐக்யமானது.
6.   பெரியவர்களைப் பார்த்து செய்யும் மரியாதை "பாவ்படுத்தி" அவர்கள் கூறும் ஆசிர்வாதம் "ஜிய்யோ ஜிய்யோ" என்பது .
7.   குருவைத் தேர்ந்தெடுத்து, சேலா (மகள்) ஆகுதல், தத்தெடுத்தல் அவர்களின் ஜமாத் கூடுகை ஆகியவை அறிமுகமாகின்றன.
8.   பார்க்க நடிகை ரேவதி போல் இருந்ததால் ரேவதி என்ற பெயர் சூட்டப்பட்டு அதுவே இன்று வரை நிலைக்கிறது.
9.   நானி என்றால் மூத்தவர் ஆயா, காளா குரு என்றால் குருவின் சகோதரிகள், குருபாய்கள் என்றால் தன் சகோதரிகள், இவர்களுக்கென ஒரு வீடு. வீடு என்றால் ஒரு கூட்டம் அவர்களுக்கென தலைவர்களான நாயக் என்பவர்  போன்ற இவர்களின் சமூக அமைப்பு ஆச்சரியப்படுத்துகிறது.
10.                அரவாணிகள் இஜராக்கள் என்று மற்ற பகுதிகளில் அழைக்கப்படுகிறார்கள்.
11.                இவர்களுடைய சமூக அமைப்பில் ஜாதி மதம் என்பது கிடையாது.
12.                அரண்மனை அந்தப்புரங்களில் இவர்கள் காவலர்களாகவும் துணைகளாகவும் இருந்தது நமக்குத் தெரியும். ஏன் மொகலாயர்களின் தளபதியான மாலிக்காபூர் கூட அரவாணிதான்.
13.                டெல்லி வசீர்பூர், ஜெ.ஜெ.காலணி, இந்திராகாந்தி காலத்தில் அவர்கள் கட்டிக் கொடுத்த ரபீக் நகர் குடியிருப்புகள், பம்பாய், பெங்களூர் ஆகிய ஊர்களில் குழுக்குழுவாக இவர்கள் வாழ்கிறார்கள்.
14.                டெல்லியில் இவர்களை தெய்வமாகப் பார்த்து காலில் விழுந்து ஆசி வாங்குவார்களாம். இவர்கள் தலையில் கைவைத்து ஆசீர்வாதம் செய்தால் அந்த நாள் நல்ல நாளாக அமையும் என்பது ஒரு நம்பிக்கை.
15.                இவர்களின் தொழிலாக கடைகளில் சென்று ஆசிவழங்கி, காசு பெறுதல் (டோலிப்பதாய் என்று அழைக்கப்படுகிறது) கல்யாண மற்றும் குழந்தை பெற்ற வீடுகளில் டோல் அடித்துப்பாடி ஆசி வழங்கி காசு வசூலித்தல் மற்றும் பாலியல் தொழில் செய்தல் ஆகியவை.
16.                ரேவதிக்கு ரகசியமாக திண்டுக்கல்லில் ஆணுறுப்பை அகற்றும் சர்ஜரி நடந்துள்ளது. இதற்குப் பெயர் நிர்வாணமாகுதல்.  வெகுநாள் தன் குருவுக்கு சம்பாதித்துக் கொடுத்தால் அவர்களுக்குப் பரிசாக 'நிர்வாணம்' வழங்கப்படுகிறது.
17.                பெங்களூரில் இஸ்தான்புல் போல ஹமாம்கள் இருப்பதும் அதனை அரவாணிகள் நடத்துவதும் தெரிய வருகிறது.
18.                அரவாணிகளுக்கு பல குடும்பங்களில் சொத்துரிமை மறுக்கப்படுகிறது ரேவதியும் அதற்கு விதிவிலக்கல்ல.
19.                இவர்கள் தொழில் செய்யும் இடங்களில் ரவுடிகளின் தொல்லை இருக்கிறது. அதற்கு இணையாக போலிசின் தொல்லையும் அதிகம்.
20.                ரேவதி பெங்களூரில் உள்ள சங்கமா அமைப்பில் வேலை பார்த்துக் கொண்டு ஒரு சமூகப் போராளியாக மாறிப்போனது ஆறுதல் அளிக்கிறது.
மற்றவை புத்தகத்தைப் படித்து தெரிந்து கொள்ளுங்களேன்.

-முற்றும்

Monday, April 24, 2017

அனாதை யானைகள் விடுதியில் பரதேசி !!!!


இலங்கையில் பரதேசி -10
Image result for pinnawala elephant orphanage sri lanka

இதற்கு முந்திய பகுதியைப்படிக்க  இங்கே சொடுக்கவும்.
http://paradesiatnewyork.blogspot.com/2017/04/blog-post_18.html
“ யானைகளுக்கு அனாதை விடுதியா? என்னப்பா சொல்ற?”

          “ஆமாம் சார் வந்து பாருங்களேன்”.
“இங்கிருந்து எவ்வளவு தூரம்?”
          “ஒரு அரைமணி நேரம் தான் சார் சீக்கிரம் போய்விடலாம்”.
      அங்கு சென்று சேர்வதற்குள் அதனைப்பற்றிய சில தகவல்களைச் சொல்கிறேன். பின்னவாலா யானைகள் சரணாலயம் (Pinnawala Elephant Orphanage) என்பது இலங்கை அரசின் வனவிலங்கு பாதுகாப்பு அமைப்பின் மூலம் 1975ஆம் ஆண்டு  ஏற்படுத்தப்பட்டது (Department of wildlife conservation). இதன் நோக்கம் என்னவென்றால் குடும்பத்தை விட்டுப் பிரிந்தவை, வழிதவறி வந்தவை, குழிகளில் மாட்டிக் கொண்டவை, அடிபட்டுவிட்டதால் கைவிடப்பட்டவை ஆகிய யானைக்குட்டிகளுக்கு அடைக்கலம் கொடுத்து அவைகள் வாழவும், வளரவும், பெருகவும் இடமளித்துக் காப்பது மற்றும் அவைகள் தன்னிச்சையாக இருக்க இயற்கைச் சூழலை ஏற்படுத்திக் கொடுப்பது என்பது.


          இது பின்னவாலா என்ற கிராமத்தில் அமைந்திருப்பதால் இந்தப் பெயர். இந்த ஊர் சபரகமுவா பிராவின்சில் இருக்கும் கெகாலே (Kegalle) என்ற நகரின் பக்கத்தில் இருக்கிறது.
          ஆரம்பத்தில் ஐந்து குட்டிகளுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த அமைப்பில் இப்போது நூற்றுக்கணக்கான யானைகள் இருக்கின்றன. இவைகள் இங்கேயே வாழ்ந்து குடும்பமைத்து இனப்பெருக்கமும் செய்கின்றன என்று சொன்னார்கள். மூன்று தலைமுறை யானைகள் இங்கு இருக்கின்றனவாம். இவைகளைப் பராமரிக்க ஐம்பதிற்கும் மேற்பட்ட யானைப் பாகர்கள் இருக்கின்றார்கள். கார் பின்னவாலாவை அடைந்துவிட்டது மற்ற விவரங்களை பிறகு சொல்கிறேன்.          அந்த இடம் ஜேஜே என்று ஒரே கூட்டமாக இருந்தது. வெளிநாட்டுக் காரர்கள் அதிகமாக தென்பட்டனர். அதுதவிர உள்நாடு மற்றும் இந்தியர்களும் இருந்தனர். நுழைவுவாயிலில் எங்கேயும் பார்த்திராத விதமாக மூன்று வகை கட்டணங்கள் இருந்தன. உள்ளூர்காரர்களுக்கு ஒன்றும், வெளிநாட்டவர்களுக்கு ஒன்றும் அதுதவிர சார்க் நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு தனிப்பட்ட கட்டணமும் வசூலிக்கப்பட்டது. வெளிநாட்டவர்களுக்கு உள்ளூர் கட்டணத்தை விட பலமடங்கு இருந்தது. இந்த வருமானம் இந்த இடத்தைப் பராமரிக்க செலவிடப்படுகிறதாம்.


          சாலையிலிருந்து சற்றே உயரமாக இருக்கும் இடத்தில் நுழைந்தேன். சுமார் 25 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இடத்தில் யானைகள் சுதந்திரமாக உலவி வருகின்றன. பகல் நேரத்தில் பெண் யானைகளும் அதன் குட்டிகளும் கூட்டமாக இருக்கின்றன. இரவு நேரத்தில் பெண் யானைகளை தனித்தனி ஸ்டால்களில் சங்கிலி போட்டுக் கட்டி வைத்திருப்பார்களாம். ஆண் யானைகளையும் வேறு ஒரு இடத்தில் பிணைத்து வைத்திருக்கிறார்கள். இங்கேயே பிறந்த குட்டிகள் தங்கள் தாயிடம் பால் குடிக்கின்றன. ஆனால் மற்ற பகுதிகளிலிருந்து கொண்டு வரப்படும் குட்டிகளுக்கு ஃபீடிங் பாட்டில் மூலம் பால் கொடுக்கிறார்கள். ஒரு நிமிடத்தில் உறிஞ்சிக் குடித்துவிடும் அழகைப் பார்த்து வியந்துவிட்டேன். 
Related image
Walking towards the River
          இவைகள் பகல் நேரத்தில் சுதந்திரமாக மேய்ந்தாலும் அங்கிருக்கும் புல் அவைகளுக்கு போதுமானதாக இருப்பதில்லையாம். அதனால் அவர்களுக்கு உணவு வெளியேயிருந்து கொண்டு வருகிறார்கள். அவைகள் சாப்பிடும் உணவைக் கேட்டால் அசந்து போவீர்கள். பலாப்பழங்கள், தேங்காய், பனை உணவு, புளி  மற்றும் புல் ஆகியவைகளைக் கொண்டுவந்து குவிக்கிறார்கள். ஒவ்வொரு வயது வந்த யானைக்கும் ஒரு நாளைக்கு 250 கிலோ உணவு கொடுக்கிறார்களாம். அது தவிர அரிசித் தவிடும் சோளமும் கொடுக்கிறார்கள்.
          யானைகள் ஒவ்வொன்றும் புஷ்டியாகவும் ஆரோக்கியமாகவும் இருந்தன. அவை பாட்டுக்கு மகிழ்ச்சியாக இருப்பதாகத்தான் தோன்றியது.
          ஒவ்வொரு யானைக்கும் பேர் வைத்து இருக்கிறார்கள். இங்கும் இனப்பெருக்கம் நடந்து பல குட்டியானைகள் பிறந்திருக்கின்றன. சில யானைகளை சில கோவில்களுக்கு அனுப்பியிருக்கிறார்கள். இங்கு விலைக்கு கூட கொடுக்கிறார்கள்.  எவ்வளவு என்று தெரியவில்லை.
          எனக்கும் ஒரு யானை வாங்க வேண்டும் போல் ஆசையாக இருந்தது. விமானத்தில் அழைத்துச் செல்ல முடியாது என்பதாலும், அமெரிக்காவில் வீட்டில் யானை வளர்க்க அனுமதியில்லை என்பதாலும் தான் வாங்கவில்லை மக்களே.
Image result for pinnawala elephant orphanage sri lanka

          அதோடு யானைகளை வாங்கியவர்கள் அதனைச் சரியாக பராமரிக்கவில்லை என்று கம்பிளைன்ட் வந்ததால் பறிமுதல் செய்யப்பட்டு மீண்டும் பின்னவாலாவுக்கு கொண்டு வரப்பட்டன.
          இங்கே இருக்கும் யானைகளில் ஒன்று, நடந்த சண்டையில் கன்னி வெடியில் கால் வைத்து முன்னங்காலில் பாதியை இழந்துவிட்டதாகச் சொன்னார்கள். நான் அந்த யானையைப் பார்க்க முடியவில்லை.
          சிறிது நேரத்தில் யானைகளை அணிவகுத்தனர். ஆஹா ஏதோ ஊர்வலம் போலிருக்கு என்று நினைத்து அவர்களைப் பின் தொடந்தேன். கிட்டத்தட்ட 30 யானைகள் தங்கள் குட்டிகளுடன் வெளியே கிளம்பின. காப்பகத்தின் எதிர்ப்புறம் இருந்த தெருவில் இறங்கி நடக்க ஆரம்பிக்க நானும் பின்னால் நடந்தேன்.
          கொஞ்ச தூரம் அந்தச் சரிவில் நடந்து நடந்து போனால், எதிரே பள்ளமான இடத்தில் அழகிய ஒரு ஆறு ஓடிக் கொண்டிருந்தது. ஆறு முழுவதும் நீர் நிரம்பி ஓடவில்லை என்றாலும் ஒரு சில இடங்களில் தண்ணீர் நன்றாகவே ஓடிக் கொண்டிருந்தது. அந்த ஆறின் பெயர் மகா ஓயா. தண்ணீர் ஓயாது ஓடுவதால்  இந்தப் பெயரோ என்று தெரிவில்லை.
          தண்ணீரைக் கண்டதும் யானைகள் விரைவாக நடந்து உள்ளே இறங்கி கும்மாளம் போட ஆரம்பித்தன. தண்ணீரை பிறயானைகளின் மேல் தெளிப்பதும், தன்மேல்  தெளித்துக் கொள்வதும், குட்டிகளின் மேல் தெளித்து  தடவுவதும் ஜோராக இருந்தது. அது ஒரு கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.
          எனக்கும் கீழே இறங்கி தண்ணீரில் விளையாட வேண்டும் போல் இருந்தது. நேரம் போவதே தெரியவில்லை. யானை, குழந்தை, கடலலை மற்றும் அருவி இவற்றையெல்லாம் எவ்வளவு நேரம் பார்த்தாலும் சலிக்காது என்று சொல்வார்கள்.

          மேலே ஒரு மேடையிலிருந்து நான் பார்த்துக் கொண்டிருந்தேன். பக்கத்தில் ஒரு வெள்ளைக் கார தம்பதியினர் இருந்தனர். அந்தச் சமயத்தில் கீழேயிருந்து ஒரு யானை ஆற்றின் கரையின் சுவரின் மேல் ஏறி என்னை நோக்கி வர ஆரம்பித்தது.

-தொடரும்.

Thursday, April 20, 2017

வெள்ளைக்காரன் பொய் சொல்லமாட்டான் !!!அந்த தந்தச் சிலையைப் பார்த்ததும் என் மனம் துள்ளிக்குதித்தது. “எவ்வளவு?”, என்று கேட்டேன். 200 டாலர் என்றார் அந்த வெள்ளைக்காரர். ‘ஆன்டிக்’ (Antique) என்று சொல்லப்படும் புராதன பொருட்கள் சேகரிப்பது என்னுடைய பொழுதுபோக்கு என்பது உங்களில் சிலருக்குத் தெரிந்திருக்கலாம். இதில் பழைய காலத்து நாணயங்கள், பல நாட்டு கரன்சி தாள்கள், அழகிய போர்சலின்    உருவங்கள்  என்பவையும் அடங்கும். போன ஞாயிறன்று ஆலயம் முடிந்தபின்பு மெல்வில், லாங் ஐலண்டில் நடந்த ஒரு நாணயக்காட்சிக்குச் சென்றிருந்தேன் (Coin Show). மெல்வில்லில் உள்ள பிங்கோ ஹாலில் நடக்கும்.வீட்டிலிருந்து கிளம்பும்போது மணி 12 என்பதால் சாப்பிடவில்லை. மனைவி கொடுத்து அனுப்பிய சிறு வாழைப்பழங்களையும் பெர்சிமன் பழங்களையும் ஒவ்வொன்றாக சாப்பிட்டுக் கொண்டே என்னுடைய வோல்க்ஸ் வேகன் வேனில் சென்றேன்.

Image result for melville coin show new york
என் வீட்டிலிருந்து சுமார் 1/2 மணி நேரம் டிரைவ். டிராஃபிக் அதிகமில்லை. எக்ஸ்பிரஸ் வேயைத் தொட்டபின் பிளேயரைத் தட்டியதில் “அரபிக்கடலோரம் கண்ட அழகை"  விவரித்துப்பாடினார் A.R. ரகுமான். நேர்த்தியான சாலையில் பழச்சுவையோடு இசைச்சுவையும் சேர்ந்து கொண்டு உற்சாகமாய் இருந்தது. அந்த ஷோ மதியம் 1 1/2 மணி வரைக்கும்தான். அதனால் தான்  ஆலயம் முடித்து அவசர அவசரமாக செல்ல வேண்டியிருந்தது. இதன் காரணத்தாலேயே நான் பலகாலமாக அங்கு போகவில்லை .அதனால் கொஞ்சம் வேகத்தை அதிகப்படுத்தினேன்.
காய்ன் ஷோவில் பங்கு கொள்பவர் பலரும் யூதர்கள் என்பதால் ஞாயிற்றுக்கிழமைகளில் (இரண்டாவது மற்றும் நான்காவது) இந்த ஷோ நடக்கிறது. காலை 8 மணிமுதல் மதியம் 2 மணிவரை ஆனால் அதிகப்பேர் இல்லாவிட்டால் 1 1/2 மணிக்கெல்லாம் பெட்டியைக் கட்டிவிடுவார்கள். பொதுவாக பழைய புதிய தங்க, வெள்ளி நாணயங்கள், பல நாட்டு பணத்தாள்கள், அபூர்வ பழைய புதிய ஸ்டாம்புகள், ஒரு சில புராதன பொருட்கள் மற்றும் காயின் சப்ளை என்று சொல்லக்கூடிய ஆல்பங்கள்,  ஃபோல்டர்கள், நாணயங்களைப் பாதுகாக்க உதவும் வில்லைகள், பிளாஸ்டிக் குப்பிகள் என பல பொருட்களும் கிடைக்கும். இளவயது மக்கள் மிகவும் கொஞ்சப்பேர் வருவார்கள் என்னைபோல (?) ஆனால் அதிகம் வருவது நடுத்தர மற்றும் முதியவர்கள் தான். ஏனென்றால் இது அதிகச் செலவுள்ள  ஹாபி (Expensive Hobby).
நான் உள்ளே நுழைந்த போது 12 1/2 ஆகிவிட்டது. அங்கே அதிகம் பேர் இல்லை. எனக்குத் தேவையான எழுதி வைத்திருந்த லிஸ்ட்டை பார்த்தேன். அமெரிக்க நாட்டின் நேஷனல் பார்க் குவாட்டர்கள், ஒரு டாலர் அமெரிக்க அதிபர்களின் நாணயங்கள், அரை டாலர் மற்றும் விட்டுப்போன ஜெஃபர்சன் நிக்கல் ஆகியவற்றில் புதிதாக 2016-2017க்கான வெளியீடுகள் தான் எனக்குத் தேவைப்பட்டன.  
Image result for melville coin show new york

அமெரிக்க ஈகிள் தங்க நாணயங்கள் கிடைத்தால் ஒன்றிரண்டு வாங்கலாம் என்று எண்ணமிருந்தது. எனக்குத் தெரிந்த பலர் என்னைப் பார்த்துக் கையசைத்து "லாங் டைம் நோ சி" என்றார்கள். "ஐ ஆம் ஸ்லோயிங் டவுன் ஆன் காயின்ஸ்" என்று சொல்லி கைகுலுக்கிவிட்டு, தங்க நாணயங்களை எப்போதும் விற்கும் மைக்கை நோக்கி நகர்ந்தேன்.  அப்போதுதான் என் கண்ணில் பட்டது அந்தச் சிற்பம். சிறிய அழகிய வடிவத்தில் ஒரு சீனன் குரங்கோடு இருந்த அந்த செதுக்கப்பட்ட சிற்பம் ஒரு சிறிய மரத்துண்டில் ஒட்ட வைக்கப்பட்டிருந்தது. அதனை விற்றுக் கொண்டிருந்த வெள்ளைக் காரனை நான் ஓரிரு முறை பார்த்திருக்கிறேன். ஆனால் எதையும் வாங்கியதில்லை. என்னை வரவேற்ற அவனிடத்தில் ஒரு புன்னகையை உதிரித்துவிட்டு, “அந்த தந்தச் சிலையைப் பார்க்கலாமா?”, என்றேன். ஆஃப்கோர்ஸ்  என்று சொல்லிவிட்டு அந்தக் கண்ணாடிப் பெட்டியைத் திறந்து ஜாக்கிரதையாக அதனை எடுத்து என் கையில் கொடுத்தான். மிக அழகாக நுணுக்கமான  வேலைப்பாடுகளோடு அமைந்திருந்தது அந்தச்சிற்பம். அதிலேயே விலை 199.00 டாலர்கள் என்று போடப்பட்ட ஒரு விலைக்குறிப்பு தொங்கியது.             "பிடித்திருக்கிறதா ?"
"பிடித்திருக்கிறது ஆனால் விலை அதிகம் என்னால் அவ்வளவு கொடுக்கமுடியாது"
“சரி எவ்வளவு கொடுப்பாய்?”
“நீயே சொல்லு”,
“175 கொடுத்தால் போதும்”
“ பரவாயில்லை எனக்கு வேண்டாம்”, நகர்ந்தேன்.
“150 என்றால் கொடுத்துவிடுவேன், நான் கிளம்பும் நேரம்”.
“100 என்றால் வாங்கிக் கொள்கிறேன்”.
“100க்கு விற்றால் நான் மகிழ்ச்சியடையமாட்டேன்”.
“100க்கு மேல் கொடுத்தால் நான் மகிழ்ச்சியடைய மாட்டேன்”
“ சரி கொடு”,, என்றதும் என் கைப்பையில் வைத்திருந்த சிறு பவுச்சில் இருந்து 2 நோட்டுகளை எடுத்துக் கொடுத்தேன் அதை வாங்கிக் கொண்டு அவன் “என்ஜாய்”, என்று சொல்லி சிற்பத்தைக் கையில் கொடுத்தான். நன்றி சொல்லி வாங்கி நகர்ந்துவிட்டு மற்ற ஸ்டால்களை மேய்ந்தேன். ஒரு சிறு வெள்ளி பார் பிடித்ததால் விலை பேசி 20 டாலருக்கு  வாங்கி திரும்பவும் பவுச்சை திறந்தபோதுதான் கவனித்தேன். அதில் இருந்தவை முழுதும் 100 டாலர் பில்கள். சடக்கென நினைவு வந்தது, அடடே அவனிடம் 2 நோட்டு அதாவது 200 டாலர்கள் கொடுத்துவிட்டேனோ என்று நினைத்துப் பார்த்தால் அவன் ஸ்டாலில் இல்லை. அரங்கு முழுதும் தேடி அவனைக் கண்டுபிடித்து, தனியாக அழைத்துக் கேட்டேன்.
“நான் தவறுதலாக உன்னிடம் 200 கொடுத்துவிட்டேன். எனவே நூறைத் திருப்பிக் கொடு” ,என்றேன். இல்லை நீ ஒரு நோட்டுத்தான் கொடுத்தாய் என்று தன் பாக்கெட்டில் கொத்தாக இருந்த பணத்தில் இருந்த ஒரே ஒரு புதிய நூறு தாளைக் காண்பித்தான். குழம்பிப்போன நான் பரவாயில்லை என்று சொல்லி காருக்குச் சென்றேன். மொத்தப் பணத்தையும் எண்ணிப் பார்த்துவிட்டு நான் கொடுத்தது 200 தான் என்பதையும் கண்டுபிடித்துவிட்டு  மீண்டும் அவனிடம் சென்றேன்.
"இதோபார் நான் நன்கு கணக்குப் பார்த்துவிட்டேன். உன்னிடம் நான் கொடுத்தது 2 நூறு ரூபாய் நோட்டு"
“இல்லை இல்லவே இல்லை ஒன்றுதான் கொடுத்தாய்”.
“இதோபார் அது வங்கியில் எடுத்த புத்தம்புதிய நோட்டுகள், அதன் எண் வரிசை எனக்குத் தெரியும். நமக்குள் முடித்துக் கொண்டால் நல்லது இல்லாவிடில் நான் இந்த நடத்துனரிடம் புகார் கொடுத்து உன்னை உண்டு இல்லை எனப் பண்ணிவிடுவேன். நான் அந்த நூறை விடுவதாக இல்லை”, என்றேன்.
என்னையே சிறிது நேரம் பார்த்துவிட்டு, “உண்மைதான் நீ இரண்டு நோட்டு கொடுத்தாய். என்னை மன்னித்துவிடு, நான் பணக்கஷ்டத்தில் இருக்கிறேன். யாரிடமும் சொல்லாதே”, என்று தழுதழுத்தான். யார்ட்ட என்னை ஏமாத்தமுடியாது என்று ஒரு பெருமிதம் வந்தது.வெள்ளைக்காரன் பொய் சொல்லமாட்டான் என்று யார் சொன்னது. ஒரு நிமிடம் அதனை அவனிடமே கொடுத்துவிடலாம் எனத் தோன்றினாலும் தவறுக்கு துணைபோகக் கூடாதென்று , “நமக்குள் இருக்கட்டும்" என்று சொல்லி வாங்கிக் கொண்டு ஹிக்ஸ்வில்லில் சரவணபவனில் சாப்பிட்டுவிட்டு வீடு வந்து சேர்ந்தேன்.
என் மனைவியிடம் இதைச் சொன்னபோது அவள் என்னைத்தான் சத்தம்போட்டாள். “நீ சரியாகப் பார்க்காமல் கொடுத்துவிட்டு அவனை அழ  வைத்திருக்கிறாய். நீ அந்தப் பணத்தை அவனிடமே கொடுத்துவிடு. நூறு டாலரில் என்னவாகிப் போய்விடப்போகிறது”, என்றாள். நானும் திகைத்துவிட்டேன். ஆனால் நான் வாங்கி வந்தது ஐவரி இல்லை வெறும் பிளாஸ்டிக். 1 டாலர் கூடப் பெறாது என்பதை வரும் வழியில் தெரிந்து கொண்டேன் என்பதை என் மனைவியிடம் சொல்லவில்லை. ப்ளீஸ் நீங்களும் சொல்லிறாதீங்க.  

முற்றும்


Tuesday, April 18, 2017

குதிரைப்படைக்கும் கழுதைப்படைக்கும் சண்டை !

இலங்கையில் பரதேசி -9
இதற்கு முந்திய பகுதியைப்படிக்க  இங்கே சொடுக்கவும்.
http://paradesiatnewyork.blogspot.com/2017/04/blog-post.html


            " சரவணபவன் இங்க இருக்கா?"
          "சார் சரவணபவன்னா சரவணபவன் இல்லை, சரவணபவன் மாதிரி. ஆனா ரெண்டும் ஒண்ணுதான் "
          "என்ன அம்ரி குளப்புற ?"
          "வந்து பாருங்களேன்"
           சில நிமிட நேர டிரைவில் வந்தது ஒரு ரெஸ்டாரண்ட், பேர் ஷண்முகாஸ் .
“ரெண்டும் ஒண்ணுதான்னு சொன்னே?”
“ஆமா சார்  சரவணன் யாரு?”
“முருகன்”
“ஷண்முகன் ?”
“அதுவும் முருகன்தான்”
“அத்தைதான் சொன்னேன்”
“அம்ரி, இதெல்லாம் உனக்கு தெரியுமா ஆச்சரியம்தான் “
“உங்களுக்கும் தெரியுதே”
“எனக்கு இதுவும் தெரியும் இதுக்கு மேலையும் தெரியும்” 
அம்ரி சொன்னது உண்மைதான் பேரைத்தவிர மற்ற எல்லாமே சரவணபவன் தான். சுவை உட்பட .
          சீனா போய் இலங்கை வந்து இறங்கியதால், இட்லி தோசை சாப்பிட்டு வெகுகாலம் ஆகியிருந்தது. நாக்கில் ஜலம் ஊற இட்லி வடை காம்போ ஒரு பிளேய்ன் தோசை என்று நிறுத்தி நிதானமாகச்  சாப்பிட்டேன். மூன்று வித சட்னியுடன் சாம்பாரில் தோய்த்து ஒவ்வொரு கவளமாக உள்ளே இறங்க இறங்க அமிர்தமாக இருந்தது. அனுதினமும் சாப்பிடுபவர்களுக்கு ஒன்னுமே தெரியாது. ஒரு வாரம் பத்து நாள் கழித்துச் சாப்பிட்டுப் பாருங்கள் அப்புறம் தெரியும், நம்ம ஊரின் பண்டங்களின் சுவை.
Related image
Ghee Roast
          அம்ரியின் காதில் மெதுவாக கேட்டேன்.
          “இந்தக்கடை வைத்திருப்பவர்கள் நாடார்தானே”
          “எப்படி சார் கரெக்டாக கண்டுபிடித்தீர்கள்”.
          பலவருடங்களுக்கு முன்பே குடிபெயர்ந்த குடும்பம்தான் இதனை ஆரம்பித்து நடத்தி வருகிறார்கள். பெரிய பங்களா போன்ற இடத்தில் ரூம் ரூமாக இருந்தது. பெரும்பாலும் நம்மூர் தமிழர்கள்தான் வேலை பார்த்து வந்தனர்.
          “அம்ரி, முடியும்போதெல்லாம் இங்கு வந்துவிட வேண்டியதுதான்”.
 அம்ரியும் மகிழ்ச்சியுடன் தலைமாட்டினான்.
          உண்டு முடித்து ஒரு நாற்பது நிமிட பயணத்தில் ஓட்டல் வந்து சேர்ந்தோம். படுக்கையில் சாய்ந்தேன்.
          மாபெரும் போருக்கு ஆயத்தமாகி, ஒருபுறம் குதிரைப்படை நிற்க மறுபுறம் சிங்களக் காடையினர் கழுதைகளில் வீற்றிருந்தனர். குதிரைப் படையின் தலைவன் அப்படியே பிரபாகரன் மாதிரியே இருந்தது. ஒருவேளை பிரபாகரன்தான் என்று நினைக்கிறேன்.
          குதிரைப்படை வாயு வேகத்தில் புகுந்து, கழுதைப்படையை முறியடித்து அரைமணி நேரத்திற்குள் போர் முடிந்து போனது. கொழும்புக் கோட்டையில் பிரபாகரன் பேரரசனாக முடிசூட்டிக் கொள்ள கிட்டத்தட்ட 600-700 வருடம் கழித்து தமிழருடைய ஆட்சி மலர்ந்தது. அமைச்சர்கள் பலர் பதவியேற்றுக் கொள்ள பிரதம மந்திரி ஒவ்வொரு மந்திரியையும் பேரரசருக்கு அறிமுகம் செய்து வைத்தார். அந்தப் பிரதம மந்திரியை எங்கேயோ பார்த்த மாதிரி இருந்தது.  உற்று உற்று பார்த்தால் அது என்னை மாதிரியே தெரிந்தது. இல்லை அது நான்தான். ஆஹா தமிழீழத்திற்கு நான் பிரதம மந்திரி இது என்ன குழப்பம்?
          "சார் சார்"
யாரது பதவியேற்கும் விழாவில் இடையூறு செய்வது.
“சார் நான்தான் அம்ரி மணி எட்டாகிவிட்டது”.
படக்கென்று எழுந்தேன், ஆஹா கனவு. தமிழரின் விடுதலை இப்படிக் கனவாகி விட்டதே என்று ஒரு பெருமூச்சு விட்டு விட்டு எழுந்து ரெடியாகி வெளியே வந்தேன்.
          பளிச்சென்று வெயில் அடிக்க அது ஒரு அழகிய தினம் .
“அம்ரி ஷண்முகாஸ்போகலாமா காலை உணவுக்கு?”
          “சார் அது இங்கிருந்து தூரம். அதோடு நாம வேறுவழியில் போகிறோம்”, என்றான்.
          "அப்படியா போகிற வழியில் இட்லி தோசை கிடைக்குமா?"
          “சார் அங்கெல்லாம் கிடைக்காது. இலங்கை உணவுதான் கிடைக்கும்”.
           “சரிவா எங்காவது சாப்பிட்டுவிட்டுப் போவோம்”.
          கார் கிளம்பிச் செல்ல கொழும்பை விட்டு வெளியே வந்து கிராமப்புறத்திற்கு வந்தோம். போகிற வழியில் ஒரு உணவகத்தில் நிறுத்தினான் அம்ரி.
          "சார் இங்கே புஃபே இருக்கும்.
          "காலங்காத்தால புஃபே யா , வேறு எங்காவது கொஞ்சம் லைட்டாய் சாப்பிடலாம் அம்ரி"  
          “பெரும்பாலான கடைகளில் இப்படித்தான் இருக்கும் சார்”
“சரி வா போகலாம்”, என்று உள்ளே நுழைந்தோம்.


          இலங்கை உணவு அங்கே வரிசையாக சூடேற்றிய ட்ரேய்களில் நிரம்பியிருந்தது. அவர்களின் ஒரு வகை பிரட், கைக்குத்தலரிசி போன்ற சாதம், மஞ்சள் நிற லெமன் சாதம், மாட்டுக் கறிக்குழம்பு, மீன்குழம்பு அதுதவிர சாலட்களும், பழ வகைகளும் இருந்தன.
Add caption

          அதனைப் பார்த்தவுடனே எனது வயிறு நிரம்பிப்போக, மிகவும் லைட்டாக பிரட், சாலட் சிறிது பழங்கள் சாப்பிட்டு எழுந்தேன். அம்ரி ஒரு வெட்டு வெட்டினான். அவனது புஜபல பராக்கிரமத்திற்கு அப்போதுதான் காரணம் புரிந்தது.
Front of the Restaurent

          நானெல்லாம் அவைகளைப் பார்த்து ரசிக்கத்தான் முடியும். நமக்கு ஒரு கவளம் கூட சாப்பிட்டாலும் புஜத்திற்கு எங்கே போகிறது, தொப்பையை அல்லவா பெருக்குகிறது? இந்தச் சின்ன உடம்பிற்கு தொப்பை துறுத்திக் கொண்டிருந்தால் நன்றாகவே இருக்கிறது. ஒரு தடவை வயிரைத் தடவிப் பார்த்துவிட்டு எழுந்துவிட்டேன்.
          “என்ன சார் எழுந்திட்டீங்க” .
          “அம்ரி நீ நிதானமாக சாப்பிட்டுவிட்டு கிளம்பினால் போதும் அதுவரை இங்கே வெளியே நிற்கிறேன்”.
          சாலை குறுகிய சாலையென்றாலும் நல்ல திடமான சாலைகளாக இருந்தன. நம்மூர் நாட்டுப் புறத்திற்குள் நுழைந்த மாதிரிதான் இருந்தது. ஆனால் எங்கும் பசுமையாக வளமையாக இருந்தது. காலையில் லேசாக சில்லென்று இருந்தது மிகவும் உற்சாக மூட்டக்கூடியதாக இருந்தது. பலவித வாகனங்கள் போய்க் கொண்டு இருந்தன. சிறிது நேரத்திற்குள்ளாகவே பல வாகனங்கள் அங்கு வர, அந்த உணவகம் நிரம்பி வழிந்தது. காலை உணவை இப்படிச் சாப்பிடுவார்கள் என நான் நினைக்கவேயில்லை.
          அம்ரி ஒரு ஏப்பத்துடன் வெளியே வந்தான். 'அம்ரி தூங்கிடாதே" என்றேன்.
          “பயப்படாதீங்க சார் பகலில் எனக்குத் தூங்கும் பழக்கமில்லை”.
          கார் நகர்ந்தது "முதல் ஸ்டாப் எங்கேயென்றேன். போற வழியில் ஒரு மிருகக் காட்சி சாலை இருக்கிறது. பார்த்துவிட்டுப் போவோம் என்றான்.
          ஒரு மணி நேர டிரைவ் விற்குப்பின் ஒரு சிறிய மிருகக்காட்சி சாலை வந்தது உள்ளே நுழைந்தோம். அங்கே மிருகங்களை விட குடும்பங்கள் மற்றும் காதல் ஜோடிகளைத் தான் அதிகம் பார்த்தேன். பத்து நிமிடங்களில் வெளியே வந்து வா போகலாம் என்றேன்.
          “என்ன சார் அதுக்குள்ளே வந்திட்டீங்க?”
          “அம்ரி இதற்குள் பார்ப்பதற்கு ஒன்றுமில்லை. அதோட பழைய நியாபகம்லாம் வருது இங்க வேணாம்பா . அடுத்த இடம் எங்கே போகிறோம் ?”என்றேன்.
          “அடுத்த இடம் அனாதை யானைகளின் விடுதி”
“ யானைகளுக்கு அனாதை விடுதியா? என்னப்பா சொல்ற?”
-தொடரும்.Thursday, April 13, 2017

இடைத்தேர்தலில் பணம் கொடுப்பது எப்படி ?

ஆர்.கே. நகர் தொகுதி


          ஆர்கே நகர் கலவரம் சாரி நிலவரம், கட்சிகளை அதிர்ச்சியிலும் மக்களை மகிழ்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது. இதையொட்டி கட்சி சேராத அமைப்பான மக்கள் முன்னேற்ற கலகம் என்ற மமக      ( சரியாகத்தான் வாசிக்கிறீர்கள் அது எழுத்துப்பிழையல்ல ) தேர்தல் ஆணையத்திற்கு சில தீர்மானங்களை நிறைவேற்றி அனுப்பியிருக்கிறார்கள். அதன் நகலை சென்னை உயர்நிதிமன்றத்திற்கும், தேர்தல் ஆணையத்திற்கும், உச்ச நீதிமன்றத்திற்கும், பிரதமருக்கும், கலைஞர், சசிகலா மற்றும் ஒரு சிறப்பு நகலை ஜெ சமாதிக்கும் அனுப்பி வைத்துள்ளனர். அதன் முக்கிய ஷரத்துகளை கீழே பார்க்கலாம்.
1.   ஆர்.கே. நகர் இடைத் தேர்தலை கடைசி நிமிடத்தில் நிறுத்தி வைத்ததற்கு நன்றி தெரிவிக்கிறோம். இதில் ஒரே வருத்தம் என்னவென்றால் இன்னொரு நாள் தள்ளி நிறுத்தியிருந்தால் '' அணியினரும் கொஞ்சம் '' வை  இறக்கி இருப்பார்கள்.
2.   இடைத் தேர்தலை நிறுத்தி வைப்பதை ஒரு நாள் முன்னர் மட்டுமே  அறிவிக்க வேண்டும். அப்போதுதான் பணப்பட்டுவாடா கொடுத்து முடிக்க வாய்ப்பிருக்கிறது.
3.   இடைத் தேர்தலை நிறுத்தி வைக்கும் முன் எல்லாக் கட்சியினரும் பணப்பட்டுவாடா செய்துவிட்டனரா என்று உறுதி  செய்து கொள்ள வேண்டும்.
4.   இடைத் தேர்தலை குறைந்த பட்சம் மூன்று முறையாவது நிறுத்த வேண்டும். அப்போதுதான் ஒரு ஆண்டிற்கான  வருமானத்தை கல்லா கட்டலாம்.
5.   ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு தொகுதியாக நடத்தினால் அடுத்த தொகுதிக் காரர்களும் வந்து பலன் பெறுவார்கள்.
6.   இடைத் தேர்தல் பணத்தை பொருளாக அன்றி பணமாக மட்டுமே கொடுக்க வலியுறுத்துகிறோம்.
7.   இடைத் தேர்தலில் பணம் கொடுக்க முடியாத கட்சிகளை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்.
8.   இடைத்தேர்தலில் கட்சிகள் எவ்வளவு கொடுக்க வேண்டும் என்பதை மமக மட்டுமே தீர்மானிக்கும். அதன்படி ஆளுங்கட்சி 1 லட்ச ரூபாயும், எதிர்க்கட்சி 75 ஆயிரமும் மற்ற உதிரிக்கட்சிகள் குறைந்த பட்சம் 50 ஆயிரமும் கொடுக்க வலியுறுத்துகிறோம்.
9.   பணம் கொடுக்கும் போது இட ஒதுக்கீடு முறை கொண்டு வருவதையும், வருமான அடிப்படையில்  கொடுக்க முனைவதையும் நிறுத்துமாறு எச்சரிக்கை விடுக்கிறோம்.
10.                அதோடு இடைத் தேர்தலை ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு ஆண்டிற்கு முன்னால் அறிவித்து, தொகுதியில் கட்சிகளை நலப்பணிகள் செய்யுமாறு ஊக்குவிக்க வேண்டும்.
11.                அறிவிப்புக்கு பின் நலப்பணிகள் செய்யக் கூடாது எனும் சட்டத்தை வாபஸ் பெறவேண்டும்.  ஏனென்றால் ஜெயித்த பின் அவர்கள் அந்தப்பக்கமே வரப்போவதில்லை.
12.                பணம் கொடுப்பதற்காக  வீட்டில் உள்ள நபர்களை கணக்கிடும்போது வயிற்றில் உள்ள பிள்ளைகளையும் கணக்கில் சேர்க்கும்படி அறிவுறுத்த வேண்டும்.
13.                பணம் கொடுப்பதோடு ஒரு வருடத்திற்கான சட்டை துணி மணிகள், பலசரக்கு ஆகியவற்றை இலவசமாக கொடுக்க வேண்டும்.
14.                வேட்பாளர்கள் தங்கள் தங்கள் தொகுதியில் தங்கியிருந்து தாங்கள் அடிக்கும் கொள்ளையில் மன்னிக்கவும் தங்கள் வருமானத்தில் மாதா மாதம் குடும்பங்களுக்கு பங்கு தர வேண்டும்.
15.                இடைத் தேர்தலில் போட்டி போடாமல் புறக்கணித்த கட்சிகளை அவர்களுடைய கஞ்சத்தனம் மற்றும் சுயநலப் போக்கைக் கண்டித்து வன்மையாகக் கண்டிப்பதோடு தகுதி நீக்கம் செய்ய வேண்டுகிறோம்.
16.                அதோடு இந்த மாதிரி   இடைத் தேர்தலை நாடு முழுதும் நடத்தினால் அதன் பலன் எல்லோருக்கும் பகிர்ந்து கிடைக்கும் என கூறிக்கொள்கிறோம்.
17.                இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு கிடைக்கும் பணத்திற்கும் வருமான வரி கட்ட வேண்டும் என நினைக்கும் மோடி அரசை வன்மையாக கண்டிக்கிறோம்.
18.                இடைத் தேர்தலில் பணம் கொடுப்பதை நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்த முடிவுசெய்யும் மோடி அரசை நாங்கள் கண்டிக்கிறோம்.
19.                இடைத் தேர்தலில் பணம் கொடுப்பது என்பது டி மானிட்டை சேஷனை விட அதிகம் பலன் கொடுக்கும் என்பதை அரசு புரிந்து கொள்ள வேண்டும். இதன் மூலம் சமத்துவ நிலை உருவாகும்.
20.                இனிமேல் பொதுத் தேர்தலை முற்றிலும் தடைசெய்து தமிழ்நாடு முழுவதும் இடைத் தேர்தலாய் மட்டுமே நடத்துமாறு வேண்டுகிறோம். நாங்களும் எந்த வேலையும் செய்யாது  பிழைத்துக் கொள்வோம்.வாழ்க ஜனநாயகம்
மன்னிக்க பணநாயகம்
முற்றும், இல்லை அவலம் தொடரும்.

நண்பர்கள் அனைவருக்கும் தமிழ்ப்  புத்தாண்டு மற்றும் ஈஸ்டர் தின வாழ்த்துக்கள் .