Thursday, October 19, 2017


பொடிதோசையும் முடிதோசையும் !!!!!!!!!!!!!

Related image

            "அத்தான், இன்னிக்கு ராத்திரிக்கு தோசை வேணுமா? சப்பாத்தி வேணுமா?”
"அத்தானா உண்மையிலேயே உன் மனைவி உன்னை அப்படிக்   கூப்பிடுவாங்களா ?" என்று நீங்கள் கேட்கும் குரல் காதில் விழுது. உண்மைதாங்க, அப்படித்தான் அவள் என்னைக் கூப்பிடுவாள். "அப்படின்னா உன் மனைவி உனக்கு சொந்தமா? என்று கேட்டால், "திருமணத்திற்குப் பிறகுதான் சொந்தமானாள்னு சொல்வேன். “அப்ப எப்படி அத்தான்னு கூப்பிடுறாங்க ?". சொல்றேன் சொல்றேன். கல்யாணமான புதுசுல நடந்த உரையாடலை இங்கே தர்றேன்.
          "ஏங்க நான் உங்களை எப்படிக் கூப்பிடுறது".
"ஏன் ஆல்ஃபின்னே கூப்பிடு இல்லை சேகர்னு கூப்பிடு". 
          “பேர் சொல்லிக் கூப்பிடக் கூடாதுன்னு எங்கம்மா சொன்னாங்க” (சத்தியமா நம்புங்க, இது 19ஆவது நூற்றாண்டில நடக்கல 90களில் நடந்தது)
          “உங்கம்மா உங்கப்பாவை எப்படிக்கூப்பிடுவாங்க?”  
          "அத்தான்னு கூப்பிடுவாங்க ஏன்னா அவங்க மாமன் மகன் அத்தை மகள்னு உறவு".
          “நானும் அப்படியே கூப்பிடட்டுமா?”
சரி அப்படியே கூப்பிடு”.
          ஆனால் அத்தான்னா என்னன்னு இன்னிக்கு வரைக்கும் அவளுக்குத் தெரியாது. அது ஒரு பேர் போல கூப்பிடுவா. அவள் அத்தான்னு என்னைக் கூப்பிடுவதைப் பார்த்து அவளைக் கேலி செய்யாத ஆட்களே இல்லை. சரி கிளைக்கதைக்கு போயிட்டேன், மெயின் கதைக்கு வருவோம்.
"அத்தான், இன்னிக்கு ராத்திரிக்கு தோசை வேணுமா? சப்பாத்தி வேணுமா?”
          “இது என்ன கேள்வி, தோசைதான் வேணும்”.
          இந்தக் கேள்வியை உங்கள்ட்ட கேட்டாலும் பெரும்பாலானோர் தோசைன்னுதான் பதில் சொல்வீங்கன்னு எனக்குத் தெரியும்.  நமக்குன்னு சில ஸ்டாண்டர்டு பதில் இருக்கில்லியா?
          இட்லியா தோசையா?ன்னா தோசை. சப்பாத்தியா பூரியா?ன்னா பூரி, மட்டன் பிரியாணியா சிக்கன் பிரியாணியா?ன்னு கேட்டா மட்டன் பிரியாணி. சட்னியா சாம்பாரான்னு கேட்டா மட்டும் ரெண்டும்னு சொல்வோம். வடையும் இருந்தா உத்தமம்னு நெனப்போமா இல்லியா?
          நாக்கு வளர்ந்த சமூகம் நம்ம தமிழ்ச்சமூகம். சுகர் வளர்த்த சமூகமும் நாம்தான்.
Image result for podi dosa images
Podi Dosai
           “தோசை வேணுமா சப்பாத்தி வேணுமா?”ன்னு கேட்டா, “இது என்ன கேள்வி தோசைதான் வேணும்”,னு சொன்னேன். “அப்படியே முடிஞ்சா, நீ மனசு வச்சா நீயே பக்குவமா அரைச்ச மிளகாய்ப் பொடியை தோசை வேகும்போதே அப்படியே மேலே தூவி முருகலா போட்டுரு”,ன்னு சொன்னேன்.
          “நாக்கு வக்கனையா கேட்குமே”, என்று முனகிலும், நான் சொன்னபடியே போட்டுக் கொண்டு வந்தாள்.  
          முதல் விள்ளவிலேயே நீளமாய் ஒரு முடி வந்தது. எனக்கு உடனே கோபம் வந்தாலும், அதை அடக்கிக் கொண்டே, “ரூத், பொடி தோசை கேட்டா முடி தோசை தர்றயே", ன்னேன். “எடுத்துப் போட்டுட்டு சாப்பிடு”,ங்கன்னாள்.
          முன்னெல்லாம் சாரி சொல்லிட்டு வேற தோசை கொடுப்பாள், பயப்படுவாள். இப்பதான் 25 வருஷம் ஆயிருச்சே எல்லாமே மாறிப்போச்சு. அதோடு முடி இருந்தா அன்பு அதிகம்னு ஒரு தடவை சொன்னாள். அட அன்புக்கு உயிரைக் கொடுப்பாங்கன்னு சொல்வாங்க. நீ அன்புக்காக  ______ கொடுக்கிறியேன்னு சொன்னதில் இருந்த அவள்  அப்படிச் சொல்வதை நிறுத்திட்டா.


          ஆனாலும் சொன்னேன், “சீக்கிரமா கண்ணாடி போடணும் உனக்கு பாத்துச் செய்”,னு சொன்னேன்.
                    அன்று இரவு ஹீரோடாக்கீசில் தீபாவளி வெளியீடாக ஜோதிகா நடித்த "மகளிர் மட்டும்" படம் பார்த்தோம். அதில் ஒரு சீன் வந்தது. ஹாஸ்டலில் இருந்து ஒண்ணாகப் படித்த மூன்று தோழிகளை அவர்களில் ஒருவரின் மருமகளான ஜோதிகா ஒன்றிணைத்து ஒரு மூன்று நாள் ஒன்றாக இருக்க விடுவார். அதில் பானுப்பிரியாவின் அரசியல் கணவனின் மகன் தன் கூட்டாளிகள் மற்றும் ஆயுதங்களுடன் அவர்களை தேடும்போது, பார்டரில் இருக்கும் ராணுவத்தில் மாட்டிக் கொள்வான். பெண்கள் ராணுவப்பிரிவின் பொறுப்பில் வைத்திருப்பார்கள்.
          அப்போது அவனுக்கும் தோழர்களுக்கும் உணவு கொடுக்கும் போது  பானுப்பிரியாவின் மகன் உணவில் ஒரு முடி இருக்கும். இதுவே அவன் வீடாக  இருந்திருந்தால் இந்நேரம் தட்டுபறந்திருக்கும் என்பதையும் காண்பிப்பார்கள்.
          அப்போது உயர் பெண் ராணுவ அதிகாரி, அவனிடத்தில் வந்து, “நீ நினைப்பதையும் வீட்டில் செய்ததையும் என்னால் ஊகிக்க முடிகிறது. வீட்டில் பெண்கள் இருந்தால் இது சகஜம்தான். இனிமேல் உணவில் முடி இருந்தால் அதனை எடுத்துப்போட்டுவிட்டு சாப்பிடனும் என்ன?”, என்று சொல்லி உணவில் முடியைப் பார்க்கும்போது இது நினைவில் இருக்கட்டும் என்று சொல்லி தலையில் நறுக்கென்று ஒரு குட்டு வைப்பார்.    இதனை நாங்கள் இருவரும் பார்த்துக் கொண்டிருந்தோம். உடனே நான் என் மனைவியைப் பார்க்க அவள் என்னை முறைக்க,நான் உடனே என் கைகளால் தலையை மூடிக்கொள்ள அவள் அடக்க முடியாமல் சிரித்தாள்.
          நல்லவேளை குட்டு எதுவும் விழவில்லை. வீட்டில் உணவில் முடியிருந்தால் எடுத்துப் போட்டுவிட்டு சாப்பிட வேண்டியதுதான் வேறு வழியில்லை மக்களே.
-முற்றும்.
பின்குறிப்பு # 1:
நண்பர்களுக்கு தீபாவளி வாழ்த்துக்கள். வரும் சனிக்கிழமை நியூயார்க் தமிழ்ச்சங்கம் நடத்தும் தீபாவளி விழாவுக்கு செல்கிறேன் .நண்பர்கள் வந்தால் சந்திக்கலாம்.

 பின்குறிப்பு # 2 : நண்பர்களே நான் வரும் ரெண்டு வாரங்கள் ஜெர்மனி செல்ல விருப்பதால்   அக்டோபர் 23 முதல் நவம்பர் 03 வரை பதிவுகள் வராது .தயை கூர்ந்து பொறுத்துக்கொள்ளுங்கள் . ஜெர்மனியில் இருக்கும் நண்பர்கள் தொடர்பு கொள்ளுங்கள்.பெர்லினில் சந்திக்கலாம் .(alfred_rajsek@yahoo.com) .உங்கள் தொடர்ந்த ஆதரவுக்கும் அன்புக்கும் என்றென்றும்  கடமைபட்டிருக்கிறேன்.

Monday, October 16, 2017

தமிழகத்தின் மருமகன் முத்தையா முரளிதரன் எடுத்த 800 ஆவது விக்கெட்!!!!!

இலங்கையில் பரதேசி -26
இதற்கு முந்திய பகுதியைப்படிக்க  இங்கே சொடுக்கவும்.
http://paradesiatnewyork.blogspot.com/2017/10/blog-post_10.html

Image result for muttiah muralitharan
Muthiah Muralitharan 
காலே கோட்டையின் மேலிருந்து பார்க்கும்போது காலே கிரிக்கெட் மைதானம் தெரிந்தது. வெள்ளையுடை அணிந்து அங்கு இரு குழுக்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். அது சர்வதேச விளையாட்டாக இருந்தால் உடனே போயிருப்பேன். ஆனால் ஏதோ லோக்கல் டோர்னமென்ட்டாக இருக்கும்போல. விளையாடுபவர்களைத்தவிர்த்து காலரிகளில் அதிகப்பேர் காணப்படவில்லை. இருபுறமும்  இந்தியப்பெருங்கடல் சூழ மைதானமே மேலிருந்து பார்க்க ஒரு தீவு போலவே தெரிந்தது. அதனால் உலகத்திலுள்ள எல்லா கிரிக்கெட் மைதானங்களில் இதுவே அழகு மிகுந்தது என்று போற்றப்படுகிறது.
Galle Stadium from the Fort

நமக்கெல்லாம் தெரிந்தது போல இங்கிலாந்தில் உருவான கிரிக்கெட் அவர்களால் அடிமைப்படுத்தப்பட்ட எல்லா நாடுகளுக்கும் எடுத்துச் செல்லப்பட்டது. இன்றைக்கு அந்த நாடுகளில் மட்டுமே கிரிக்கெட் விளையாடப்படுகிறது. ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, நியுஜிலாந்த், கனடா, மேற்கிந்தியத் தீவுகள், இலங்கை, பாக்கிஸ்தான், பங்களாதேஷ்(எந்த நாடாவது விட்டுப்போச்சா மக்களே?) மற்றும் நம் நாடான இந்தியா ஆகிய நாடுகளில் மட்டுமே இது விளையாடப்படுகிறது. அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் கிரிக்கெட்டைப்பற்றி யாருக்கும் தெரியாது.
Image result for muttiah muralitharan taking 800th wicket in Galle
When he took 800th wicket in Galle
 அதுமாதிரிதான் காலேவில் பிரிட்டிஸாரால் 1876ல் அமைக்கப்பட்ட குதிரைப் பந்தைய மைதானம்தான் பிற்காலத்தில் கிரிக்கெட் விளையாடப் பயன்படுத்தப்பட்டு அதன் பின்னர் 1927ல் கிரிக்கெட் ஸ்டேடியமாக முற்றிலுமாக மாற்றியமைக்கப்பட்டது.
இலங்கை கிரிக்கெட் கிளப்பும் காலே கிரிக்கெட் கிளப்பும் இதில் விளையாடி வருகின்றன. ஒரே சமயத்தில் மொத்தம் 35000 பேர் இதில் உட்கார்ந்து ஆட்டத்தை ரசிக்க முடியும்.
முதல் தரப்போட்டிகள் இங்கு 1984லிருந்து நடத்தப்படுகின்றன. ஆனாலும் உலக அளவிலான முதல் டெஸ்ட் போட்டி இங்கு 1998ல் இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையே நடைபெற்றது. இதில் இலங்கை இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. முதல் ஒருநாள் சர்வதேசப் போட்டி இங்கு 1998ல் இலங்கை இந்திய ஆணிகளுக்கிடையே நடந்தது. இது மழையினால் நின்று போனது.
சமீபத்தில் ஜூலை 17ல் இந்தியா இலங்கைக் கிடையில் நடந்த டெஸ்ட் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் வெற்றிபெற்றது உங்களுக்குத் தெரியும்.
கடைசியாக நடந்த போட்டி கடந்த ஜூலையில் ஜிம்பாப்வே  இலங்கைக் கிடையே நடந்த போட்டி.
இலங்கையில் உள்ள மொத்தம் 7 சர்வதேச அரங்குகளில் இதுவும் ஒன்றாக இருக்கிறது.
2004ல் வந்த சுனாமியால் இந்த அரங்கும் பெரும் சேதத்தைக் கண்டது. சுனாமியால் பாதிக்கப்பட்ட பலரும் இங்கு வந்து தற்காலிகமாக தங்கியிருந்தனர். மக்களுக்கு உதவுவதற்காக இங்கு ஒரு முகாம் அமைக்கப்பட்டு ஹெலிதளமொன்றும்  உருவாக்கப்பட்டதாம்.
பின்னர் போட்டிகள் நடைபெறமுடியாத நிலையில் 2006 மே மாதம் சீரமைப்புப் பணி ஆரம்பிக்கப்பட்டு டிசம்பர் 2007ல் மறுபடியும் திறக்கப்பட்டது. அப்போதிருந்த இலங்கையின் குடியரசுத் தலைவர் மகிந்தே ராஜபக் ஷே இதனைத் திறந்து வைத்தார். சுனாமிக்குப்பின் நடந்த  புதுப்பிக்கும் பணிக்கு 50 கோடிக்கு மேல் செலவானது. உலகளவில் அதற்கு நன்கொடை திரட்டப்பட்டது. ஆஸ்திரேலியாவின் ஷேன் வார்ன் மற்றும் இங்கிலாந்தின் ஐயன் போத்தம் ஆகியோர் குறிப்பிட்ட அளவில் கொடையளித்தனர்.

Image result for galle stadium
Add caption
புதிதாகக் கட்டப்பட்ட விஐபி பெவிலியனுக்கு மகிந்தா ராஜபக்சேவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதில் 500 பேரளவில் விஐபிகள் அமர முடியும். அதே நாளில் நடைபெற்ற இலங்கை இங்கிலாந்துக் கிடையே டெஸ்ட் மேட்ச் டிராவில் முடிந்தது.
2010ல் ஓய்வு பெற்ற இலங்கையின் தலைசிறந்த பந்து வீசுபவரான முத்தையா முரளிதரன் இங்குதான் தன் கடைசி மேட்சை விளையாடினார். 
அந்த மேட்ச் விளையாடும் போது ஒரு சுவாரஸ்ய நிகழ்ச்சி நடந்தது. முத்தையா முரளிதரன் ஏற்கனவே 792 விக்கெட்டுகள் எடுத்திருந்தார். அந்தக் கடைசி மேட்சில் எட்டு விக்கெட்டுகள் எடுத்தால் 800 விக்கெட்டுகள் எடுத்த வீரராக ஆக முடியும். எனவே அவர் மேல் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. அதனால் பிரஷ்ஷரும் கூடிக் கொண்டு இருந்தது. அந்த மேட்சில் தனது முதல் விக்கெட்டாக அதாவது 793-ஆவது விக்கெட்டாக அவர் வீழ்த்தியது சச்சின் டெண்டுல்கரை அடுத்து, முதல் இன்னிங்சிலேயே மடமடவென்று இன்னும் நாலு விக்கெட்டை எடுத்து 797 என்று வரும் போது ரசிகர்களின் ஆர்வமும் உற்சாகமும் கரைபுரண்டது. பரபரப்பான அந்த சூழ்நிலையில் நடந்த 2-ஆம் இன்னிங்சில் அடுத்த இரண்டு விக்கெட்டுகளை வேகமாக எடுத்து அவருடைய மொத்த எண்ணிக்கை 799-ஆனது. ஆனால் அந்த கடைசி விக்கெட்டான 800 ஐத் தொடுவதற்கு வெகு நேரமானது. ஆனாலும் 800 ஐத் தொட்டு நற்பெயரோடும் புகழோடும் அவர் ஓய்வு பெற்றார். அப்படி அவர் எடுத்த 800 ஆவது விக்கெட் பிரக்யான் ஓஜா.
Image result for Muttiah muralitharan family

முத்தையா முரளிதரன் ஒரு தமிழன் என்பதோடு அவர் தமிழ் நாட்டு மருமகனும் ஆவார். அடையாறு மருத்துவமனையின் நிறுவனர்  டாக்டர் ராமமூர்த்தி  டாக்டர் நித்யா தம்பதிகளுக்குப் பிறந்த மகளான மதிமலர்   அவர்களை  திருமணம் செய்து கொண்டார்.
அதுபோல இந்த மைதானத்தில் பல சாதனைகள் நடத்தப்பட்டு இருக்கின்றன. பொதுவாக இந்த மைதானம் ஸ்பின் பவுலிங்கு ஏற்றதாக கருதப்படுகிறது. அதனால் தான் இங்கு மொத்தம் நடந்த 23 டெஸ்ட் மேட்ச்சுகளில் 12 போட்டிகளை இலங்கை வென்றிருக்கிறது. இலங்கையின் ஸ்பின் பவுலர்கள் உலகில் சிறந்தவர்கள் அல்லவா? ஆனால் இங்கு நடந்த 8 ஒரு நாள் போட்டிகளில் இலங்கை ஜெயித்தது 2-ல் தான். ஆறு டெஸ்ட் போட்டிகள் டிரா ஆகியிருக்கிறது.
காலே கிரிக்கெட் ஸ்டேடியம் பற்றி பல விவரங்களைப் படித்த மக்களே நேரில் போய்ப் பார்க்க வேண்டும் போலத் தோன்றுகிறதா? அடுத்த மேட்சுக்கு தயாராகுங்கள் போய் வரலாம்?
அடுத்து எங்கே என்று  அம்ரியிடம் கேட்டபோது கடலுக்குள்ளே போகலாம் என்றான். சுனாமி வந்தால் என்ன செய்வது? என்று யோசித்தேன்

- தொடரும்.

Image result for deepavali valthukkal in tamil

பின்குறிப்பு : நண்பர்களே நான் வரும் ரெண்டு வாரங்கள் ஜெர்மனி செல்ல விருப்பதால்   அக்டோபர் 23 முதல் நவம்பர் 03 வரை பதிவுகள் வராது .தயை கூர்ந்து பொறுத்துக்கொள்ளுங்கள் . ஜெர்மனியில் இருக்கும் நண்பர்கள் தொடர்பு கொள்ளுங்கள்.பெர்லினில் சந்திக்கலாம் .(alfred_rajsek@yahoo.com)

உங்கள் தொடர்ந்த ஆதரவுக்கும் அன்புக்கும் என்றென்றும்  கடமைபட்டிருக்கிறேன் .

Thursday, October 12, 2017

மஹாத்மா காந்தியை மறந்த போன இந்தியா !!!!!!!!!!!!!!!

Image result for gandhiji

            அக்டோபர் மாசம் பிறந்துருச்சு. கோடை முடிஞ்சு இலையுதிர் காலம் மெதுவாக ஆரம்பிச்சிருச்சு. மரங்களெல்லாம் உருமாறி நிறம்மாறி பழுப்பா இருக்கு. நடைபாதைகள் எங்கிலும் ஒரே இலை மயம்.
இந்த மாசத்தில இருந்து அதிக செலவு ஆரம்பிச்சுரும். என்னோட சின்னப் பெண்ணோட பிறந்த நாள் அக்டோபர் 9, என் பெரிய பொண்ணு நவம்பர் 11, என் பெரிய்ய்ய பொண்ணு அதான் பாஸ் என் மனைவி நவம்பர் 6  (ன்னு நினைக்கிறேன்) அப்புறம் இயேசு கிறிஸ்து பிறந்த நாள் வந்துரும்.
அக்டோபரில் ஜெர்மனி வேற போறோம். அதுக்கு வேற நெறைய செலவாகும். எப்பவும் தனியாகப் போற நான் இப்ப முழுக்குடும்பத்தோட போறேன். எவ்வளவு செலவாகும்னு ஒரு ஐடியா இல்ல.
அக்டோபரில் வேறு எதுனா லீவு வருதான்னு பார்த்தேன். அக்டோபர் 2 காந்தி பிறந்த நாள், அக்டோபர் 9 கொலம்பஸ் டே. ஆஹா 2 நாள் வருதே. ரெண்டும் திங்கள் கிழமை வர்றதால லாங் வீக்கெண்ட் கிடைக்கும் ஆஹா சூப்பர்.
பரதேசி: ஏலேய் HR அக்டோபர் 2 லீவுதானே?
HR: எதுக்கு? அன்னைக்கு என்ன விஷேசம்?
பரதேசி: அடப்பாவி அக்டோபர் 2 என்னன்னு தெரியாதா?
HR: தெரியலையேப்பா நீதான் சொல்லு.
பரதேசி: நம்ம தேசப்பிதா?
HR: எந்த தேசத்தை சொல்ற?
பரதேசி: எந்த தேசமா?
HR: ஆமா நாம பிறந்து வளர்ந்தது இந்தியா, இப்ப இருந்து பிழைக்கிறது அமெரிக்கா. இதுல எந்த தேசத்தை சொல்ற.
பரதேசி: அமெரிக்க குடிமகன் ஆனாலும், நம்ம தேசம் எப்பவும் இந்தியாதான். நம்ம மாநிலம் தமிழ்நாடு தான், நம்ம மொழி தமிழ்தான், நம்ம ஊரு மதுரைதான். அத மாத்த முடியாது.
HR: எங்க போய் வந்தாலும் இந்த மதுரையை விடமாட்டியே.சரி சரி மேல சொல்லு?
பரதேசி: நம்ம தேசப்பிதாவை சொன்னேன்?
HR: யாரு நரேந்திர மோடியா?
பரதேசி: என்னடா கிண்டலா? அதுக்கு முந்தி ?
HR: அப்ப வாஜ்பேய்?
பரதேசி: அடேய் இம்சை பண்ணாதடா பேயும் இல்லை பிசாசும் இல்லை.
HR: அப்ப சர்தார் வல்லபாய் படேல்?
பரதேசி: டேய் கொன்னுருவேன், மகாத்மா காந்திடா?
HR: ஓ அவரா? அவரத்தான் எல்லாரும் மறந்துட்டாங்களே? காந்தியைத் தெரியும் ஆனா ஜெயந்தியைத் தெரியாது.அதுக்கென்ன இப்ப?
பரதேசி: சீரியஸ்லி?! அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி தானே.
HR: சரி அதுக்கு என்ன இப்ப?
பரதேசி: அது பொது விடுமுறையல்லவா?
HR: ஆமா அதுக்கு?
பரதேசி: அப்ப லீவுதானே?
HR:  என்ன பரதேசி விளையாடுறியா, இது அமெரிக்கா. இங்க காந்தியும் கிடையாது பூந்தியும் கிடையாது, லீவும் கிடையாது?.
பரதேசி: அமெரிக்கால இருந்தாலும் நம்ம கம்பெனி இந்தியக் கம்பெனிதானே, நம்ம பாரதப் பிதாவுக்கென்னு ஒரு நாள் லீவு விடக்கூடாதா?
HR:  நாம இந்தியக்கம்பெனியா இருந்தாலும் அமெரிக்கால இருக்கிறோம். அதனால அக்டோபர் 2க்கு நமக்கு லீவு கிடையாது, போய் வேலையைப் பாரு.
பரதேசி: அது சரி, நம்ம நாட்டிலேயே அவரை மறந்துட்டாய்ங்க, அவரைக் கொன்ன கோட்சேவுக்கு சிலை வைக்கிறாய்ங்க, கொஞ்ச நாள்ள முழுசும் மறந்துருவாய்ங்க.
Related image
Christopher Columbus

மறுபடியும் அக்டோபர் 6 அன்று,கொலம்பஸ்  கொலம்பஸ்   விட்டாச்சு லீவு (  பாடிக்கொண்டே )
பரதேசி: வணக்கம் பா.  
HR: நீ வந்தாலே ஏதோ விவகாரமா இருக்குமே?
பரதேசி: அதெல்லாம் ஒண்ணுமில்லை. போனவாரம் நம்ம, அமெரிக்காவில் இருக்கிற கம்பெனி, அக்டோபர் 2 காந்தி ஜெயந்திக்கு லீவு கிடையாதுன்னு சொன்னில
HR:  ஆமாம்.
பரதேசி: அக்டோபர் 9 ஆம் தேதி வர்ற திங்கள் கிழமை லீவுதான?.
HR:  அன்னிக்கு என்ன விசேஷம்?
பரதேசி: என்னப்பா தெரியாத மாதிரி கேக்கற அன்னிக்கு கொலம்பஸ் டே.
HR:  அவர் யாரு?
பரதேசி: ஐயோடா சாமி, கொலம்பஸ்தான் அமெரிக்காவை கண்டுபிடிச்சவரு.
HR:  அப்ப ஜார்ஜ் வாஷிங்டன் இல்லையா?
பரதேசி: அவரு முதல் அதிபர்.
HR: சரி அதுக்கு என்ன?
பரதேசி: அதுக்கு அமெரிக்கா முழுதும் லீவு.
HR:  சரி அதுக்கு என்ன?
பரதேசி: நமக்கு லீவு இல்லையா?
HR:  அட எத்தனை வாட்டி சொல்றது நாம அமெரிக்காவில இருந்தாலும் நாம இந்தியக்கம்பெனி, கொலம்பஸுக்கும் நமக்கும் எந்த சம்பந்தமுமில்லை அதனால லீவு கிடையாது.
பரதேசி: ???????????????
-முற்றும்

பின்குறிப்பு: இதில் வேடிக்கை என்னன்னா பரதேசியும் நாந்தேன், HRம் நாந்தேன்.  

Tuesday, October 10, 2017

போர்த்துக்கீசியரை மிஞ்சிய டச்சுக்கார்களும் , அவர்களை முறியடித்த பிரிட்டிஷ்காரர்களும் !!!!


இலங்கையில் பரதேசி -25
இதற்கு முந்திய பகுதியைப்படிக்க  இங்கே சொடுக்கவும்.
http://paradesiatnewyork.blogspot.com/2017/10/blog-post.html


Clock Tower


காலே துறைமுகத்திற்கு போர்த்துக்கீசியர் வந்தது 1505ல் லோரென்க்கோ டி அல்மெய்டா (Lourenco de Almeida) இந்தக்குழுவை வழிநடத்தி வந்தான். அப்போது அரசனாக இருந்த தர்மபராக்கிரம பாகு (1484-1514) அவர்களை வரவேற்று மகிழ்ந்து நெருக்கமானான். ஆனால் போர்த்துக்கீசியர் வருவதற்கு முன்பே 'இபின் ' பட்டுட்டா (Ibn Batuta) என்ற பயணி இங்கு வந்து சென்றிருக்கிறார் . உள்ளே இருக்கும் பழைய கத்தோலிக்க சிற்றாலயம் (Franciscan chapel) 1541ல் கட்டப்பட்டது.


பரிசுப் பொருட்களையும் நட்பையும் பெரிதாக மதித்து நம் அரசர்கள் செய்த தவறு, அவர்கள் தங்கள் பாதுகாப்புக்காக கோட்டை கட்டிக்கொள்ள வேண்டும் என்று கேட்டபோது வணிகர்களுக்கு கோட்டை எதுக்கு? என்று கேள்வி கேட்காமல் அனுமதித்தது. இது முதல் தவறு. இதுவே அவர்களை ஆட்சி பீடத்தில் இருந்து அகற்றி அந்நியரின் ஆக்கிரமிப்பை உருவாக்கியது. இதுதான் கல்கத்தா, கோவா, சென்னை, கொழும்பு, தரங்கம்பாடி, காலே ஆகிய இடங்களில் ஏற்பட்டது.  
Image result for lourenço de almeida
Lourenco De Almeida
இங்கு கால் பதித்து இருந்து,  பலமடைந்து, அதன்பின் நாடுபிடிக்கும் ஆசை வந்து கொழும்புவிற்கு தங்கள் தலைமையகத்தை மாற்றிக் கொண்டனர். இது சில காலம் சிறைவளாகமாக இருந்தது. போர்த்துக்கீசியரை எதிரிப்பவர்களை அழைத்து வந்து விதை நீக்கம் செய்யுமளவிற்கு அவர்கள் அக்கிரம ஆட்சி நடத்தினர்.

ஆனால் சித்தவாக ராஜ்ஜியத்தின் மன்னன் ராஜசிங்கா (1581-93) போர்த்துக்கீசியரை கொழும்பிலிருந்து விரட்டியடிக்க, திரும்பவும் காலே கோட்டைக்குள் வந்து புகுந்து கொண்டனர்.
இதில் ஆச்சர்யம் என்னவென்றால் முதலில் அவர்கள் கட்டிய கோட்டை பனைமரப்பலகைகளையும் களிமண்ணையும் பயன்படுத்தி கட்டப்பட்டது. அதன்பின் வருமானமும் கொள்ளையும் கூடக்கூட மூன்றடுக்கில் இப்போதுள்ள கோட்டையைக் கட்டி முடித்துள்ளனர். முக்கியமாக துறைமுகப் பாதுகாப்பாகவும் இது விளங்கியது. இந்தக் கோட்டைக்கு அவர்கள் வைத்த பெயர் சான்ட்டா குருஸ் (santa cruz) ).இந்தப்பெயரைக் கேட்டதும் ஏதாவது பொறி தட்டுகிறதா? ஒரு க்ளூ தருகிறேன். ஒரு விமான நிலையத்தின் பழைய பெயர். கண்டுபிடிப்பவர் பின்னுட்டத்தில் தெரிவிக்கவும்.
        வல்லவனுக்கு வல்லவன் வையகத்துள் வருவான் என்ற கூற்றுப்படி டச்சுக் காரர்களின் வருகை அமைந்தது. அவர்கள் வந்தவுடன் முதலில் பெரிய எதிரியாகத் தோன்றிய போர்த்துக்கீசியரை முறியடிக்க நினைத்தனர். எனவே பெரிய எதிரியைத் தோற்கடிக்க சிறிய எதிரியான உள்ளூர் அரசன் இரண்டாம் ராஜசின்ஹாவுடன் கைகோர்த்து காலே கோட்டையை முற்றுகையிட்டனர். கிபி.1640ல் கோஸ்டர் என்பவனின் தலைமையில் 2500பேர் கொண்ட  படையுடன் சென்று போர்த்துக் கீசியரை முறியடித்து கோட்டையைக் கைப்பற்றிக் கொண்டனர். பின்னர் உள்ளூர் வாழ் மக்களின் உதவியோடு கோட்டையை முற்றிலும் மாற்றியமைத்து பலப்படுத்தினர். போர்த்துக்கீசியர் கட்டிய மண் கோட்டை மாறி இப்போது கற்கோட்டையாக பலம் மிகுந்த கோட்டையாக உருமாறியது. அதன்பின் போர்த்துக் கீசியர் தலையெடுக்க முடியவில்லை. 18ஆவது நூற்ராண்டில் இது மறுபடியும் மாற்றியமைக்கப்படும்போது 14 கொத்தளங்கள் அமைக்கப்பட்டு 130 ஏக்கராக பவளப்பாறைகள் கொண்டு அமைக்கப்பட்டது.
Image result for Rajasimha 2
Rajasinha II
போர்த்துக்கீசியர் கத்தோலிக்கர் என்பதால் கத்தோலிக்க ஆலயத்தைக் கட்டினர்.  ஆனால் டச்சுக் காரர்கள் பிராட்டஸ்டண்ட் என்பதால் உள்ளே அவர்களுக்கு ஒரு ஆலயத்தைக் கட்டினர். ஒவ்வொன்றும் சிறிதாக இருந்தாலும் மிக அழகாக இருந்தன. அது தவிர சிறு வீதிகள் அமைக்கப்பட்டு படை வீரர்கள் தங்கினர். நிர்வாக அலுவலகங்கள் கட்டப்பட்டன. இருப்பதிலேயே உயர்ந்த கட்டடம் கோட்டையின் கமாண்டரின் மாளிகை.
மாற்றம் என்பது மட்டும்தான்  மாறாதது என்பதால் அடுத்த வந்த பிரித்தானியர், காலே ஒரு பலம் வாய்ந்த கோட்டை என்பதால் கொழும்புவைப் பிடித்த மறுவாரம் காலே கோட்டையையும் பிடித்துக் கொண்டனர். இது நடந்தது 1796ல். அதன்பின் இலங்கைத்தீவு 1948ல் சுதந்திரம் அடையும் வரை இக்கோட்டை பிரித்தானியர் கைவசம்தான் இருந்தது. ஆனால் அவர்கள் கொழும்புவை தலைநகராக ஆக்கிக் கொண்டதால் காலேவின் முக்கியத்துவம் அதன்பின் குறைந்து போனது.


கோட்டையின் மேலே ஏறி கம்பீரமாக  ராஜநடை (ராஜ சேகர் நடை என்பதன் சுருக்கம்தான் தப்பா எடுத்துக்காதீங்க மக்களே) போட்டு வலம் வந்தேன். ஒரு புறம் காலே நகர் புதிதும் பழையதுமான கட்டடங்களாய்த் தெரிந்தது, இன்னொருபுறம் ஆர்ப்பரிக்கும் கடலலை கோட்டைச் சுவர்களை முட்டி மோதிக் கொண்டிருந்தது. வெளியில் தான் கதிர்களை உக்கிரமாக பாய்ச்ச முயல கடற்கரைக் காற்று அக்கதிர்களை அமைத்து அணைத்து  அணைத்துத் தழுவி சாந்தப்படுத்த முயன்று ஓரளவு வெற்றியும் அடைந்திருந்தது.

 கடல் இருவண்ணங்களாய் ஜொலித்தது. கடற்கரைப் பகுதியில் இளநீலமும் உள்ளே கொஞ்சம் தள்ளி மேக நீலமாக கண்ணைப் பறித்தது. இப்படி ஒரு தெளிந்த வண்ணத்தை நான் ஹவாயில்தான் பார்த்திருக்கிறேன். கோட்டையின் மறுபுறம் நடந்த போது நடுவில் என் எதிரே கலங்கரை விளக்கம் என்று தமிழில் சொல்லப்படும் ஒரு பழைய லைட்ஹவுஸ்  இருந்தது. சுமார் 60 அடி உயரமுள்ள இது மிகவும் பழையது அல்ல. 1938ல் தான்  கட்டப்பட்டதாம். அங்கு மராமத்துப் பணி  நடந்து கொண்டிருந்ததால் உள்ளே சென்று பார்க்க அனுமதியில்லை. அதன் மறுபுறம் அரசு அலுவலகங்கள் இன்னும் இயங்கிக் கொண்டு இருக்கின்றன.  ஞாயிற்றுக்கிழமை ஆதலால் எல்லாம் பூட்டப்பட்டு இருந்தன.

மறுபுறம் 1883ல் விக்டோரியா மகாராணிக்கு மரியாதை  செலுத்தும் ஒரு உயரமான க்ளாக் டவர் இருந்தது. மூர் இன மக்கள் நிறைய இருப்பதால் கோட்டையின் உள்ளே பழைய பள்ளிவாசல், கிறிஸ்தவ ஆலயங்கள் இருந்தன. காலே நகரில் பெரும்பாலும் டச்சுக் காலத்தில் வைத்த தெருப்பெயர்களே இன்றும் இருக்கிறது. தமிழகத்திலிருந்து இடம்பெயர்ந்த ஏராளமான மீனவர்கள் இங்கு வசிக்கின்றனர். இவர்கள் இருக்கும் தெருவுக்கு பரவர் தெரு என்று பெயரிடப் பட்டிருக்கிறது.
இன்னொரு புறம் பார்த்தபோது கிரிக்கெட் ஸ்டேடியம் தெரிந்து உற்சாகமானேன். இதுதான் சமீபத்தில் இந்திய இலங்கை ஆட்டம் நடந்த ஸ்டேடியம், உங்கள் அனைவருக்கும் அறிமுகமான அந்த காலே ஸ்டேடியத்தைப்பற்றி சில தகவல்களை அடுத்த வாரம் சொல்கிறேன்.

-தொடரும்

Thursday, October 5, 2017

சிவாஜிக்குப் பாடிய SPB

Image result for கவரிமான்

பூப்போலே உன் புன்னகையில்
எழுபதுகளில் இளையராஜா பாடல் எண்: 35
இதற்கு முந்திய பகுதியைப்படிக்க  இங்கே சொடுக்கவும்.
http://paradesiatnewyork.blogspot.com/2017/05/sp.html

            1979ல் வெளிவந்த கவரிமான் என்ற படத்திற்காக இளையராஜா இசையமைத்த பாடல் இது. சிவாஜியின் சிம்மக் குரலுக்கு  TM செளந்திரராஜனைத்தவிர வேறு யாரும் சரியாக மேட்ச் ஆகமாட்டார்கள் என நினைத்த காலம் அது. இளையராஜாவும் பல பாடல்களில் அதனையே பின்பற்றினார். "அந்தப்புரத்தில் ஒரு மகாராணி", "தேன் மல்லிப்பூவே" ஆகிய பாடல்கள்  அதற்கு சாட்சி. ஆனால் கவரிமான் படத்தில் SPB  பாடிய இந்தப் பாடல் சிவாஜிக்கு மிகவும் பொருத்தமாகவே இருந்தது. அதற்காக இதற்கு முன்னால் சிவாஜிக்கு SPB பாடியதேயில்லை என்று சொல்லிவிடமுடியாது. MS விஸ்வநாதன் இசையில் கூட SPB குரலை சிவாஜிக்குப் பயன்படுத்தியிருக்கிறார். திரிசூலம் படத்தில் 'காதல் ராணி', கெளரவம் படத்தில் "யமுனா நதி இங்கே" போன்ற பல பாடல்கள் இருக்கின்றன. யேசுதாசும் கூடப்பாடியிருக்கிறார் .ஆனால் பெரும்பாலும் சிவாஜியின் இளைய வேடத்திற்காக இருக்கும். ‘பூப்போலே’ என்ற அந்தப்பாடலை முதலில் கேட்டுவிடுங்கள்.


Image result for Ilayaraja with sivaji
Sivaji with Ilayaraja
இசையமைப்பு:
           தாய் அல்லது தந்தை தங்கள் பிள்ளைகளுக்குப் பாடும் பாடல்கள்  பொதுவாக சென்டிமெண்டலாக  கொஞ்சம் ஸ்லோவாக  தழுதழுக்க இருக்கும். ஆனால் இந்தப்பாடல் வேகப்பாடலாக இருக்கிறது. ஆரம்பத்திலேயே தபேலா இசையுடன் வேகமெடுக்கும் பாடல் கடைசி வரை வேகத்துடன் இருந்து முடிகிறது. அதற்குத்தகுந்தாற்போல் பல இசைக்கருவிகளை இணைத்து இசையமைத்திருக்கிறார் இளையராஜா. வழக்கம்போல் புல்லாங்குழலும் கிடாரும் இருக்கிறது. வயலின் குழுமம் மிஸ்ஸிங். இந்தப்பாடலை முழுவதுமாக வரும் தபேலாப் பாடல் என்று சொல்லலாம். துள்ளல் இசைக்கும் மகிழ்ச்சி மூடுக்கும்  இந்த மெட்டு பெரிதும் துணையாக இருக்கிறது.

பாடல்வரிகள்:


பொன் உலகினை கண்டேனம்மா

பூ போலே உன் புன்னகையில்
பொன் உலகினை கண்டேனம்மா
என் கண்ணே கண்ணின் மணியே
என் உயிரே உயிரின் ஒளி நீயே

(
பூ போலே

பூங்காற்றிலே சிறு பூங்கொடி போல்
நீ நடப்பது நாட்டியமே

மூங்கிலிலே வரும் சங்கீதம் போல்
நீ சிரிப்பது காவியமே
அன்புக்கு நூறு ஆசைக்கு நூறு
முத்துக்கள் சூட்டி நான் காணுவேன்
வா மகளே எனை பார் மகளே
என் உயிரின் ஒளி நீயே

(
பூ போலே )

அம்மாவென்று வரும் கன்றுக் குட்டி
அது தாய்மையை கொண்டாடுது

குக்கூ என்று வரும் சின்னக் குயில்
தன் குழந்தைக்கு சோறூட்டுது
நெஞ்சோடு பாசம் வந்தாடும் போது
கண்ணோடு நேசம் ஆறாகுமே
நீயின்றி என்றும் நானில்லையே
என் உயிரின் ஒளி நீயேRelated image

          பாடலை எழுதியவர் எழுபதுகளில் இளையராஜாவின் ஆஸ்தான பாடலாசிரியராகத் திகழ்ந்த பஞ்சு அருணாச்சலம் அவர்கள். இவருக்குப்பாடல்கள் கொடுத்தது இளையராஜாவின் நன்றிக்கடனாகவும் இருக்கலாம். ஆனால் வழக்கம்போல்  இல்லாமல் நல்ல வரிகளைக் கொடுத்திருக்கிறார் பஞ்சு. அவருடைய பிள்ளைகளையும் நினைத்து எழுதியிருக்கலாம். முதல் சரணத்தில் வரும், "பூங்காற்றிலே சிறு பூங்கொடி போல் நீ நடப்பது நாட்டியமே, மூங்கிலிலே வரும் சங்கீதம்  போல் நீ சிரிப்பது காவியமே" என்பவை நல்ல வரிகள். ஆனாலும் புதிய சிந்தனை அல்ல. இரண்டாவது சரணத்தில் "நெஞ்சோடு பாசம் வந்தாடும் போது கண்ணோடு நேசம் ஆறாகுமே", என்று ஆனந்தக் கண்ணீரைக் குறித்துச் சொல்லும்போது மனத்தைத் தொடுகிறார் பஞ்சு. மெட்டுக்கு ஈடு கொடுக்கும்  வரிகள் என்று முழுப்பாடலையும் சொல்லலாம்.
பாடலின் குரல்:
Image result for ilayaraja with SPB

          கவனித்துப் பார்த்தீர்கள் என்றால் இந்தப்பாடலில்  SPB -ன் குரல் சற்றே வித்தியாசமாக ஒலிப்பதைப் பார்ப்பீர்கள். இது, இளையராஜா, ஸ்கேல் என்று சொல்லப்படும் சுருதியில் செய்த மாற்றமாக இருக்கலாம். அல்லது சிவாஜிக்காக SPB சற்றே மாற்றிப்பாடியதாக எடுத்துக் கொள்ளலாம். எது எப்படியென்றாலும் பாடல் அருமையாக ஒலிக்கிறது. அவரவர் பிள்ளைகளை நினைத்துக் கொண்டு பாடினால் பாடலின் சுவை இன்னும் கூடும் என்பதில் சந்தேகமில்லை.
இளையராஜாவின் ஆரம்ப கட்ட இசையில் ஒலிக்கும் நல்ல பாடல் இது. மறுபடியும் ஒருமுறை கேட்டுப்பாருங்களேன். 

தொடரும்