Tuesday, April 30, 2019

என் அப்பாவின் பூரி டெக்னிக் !!!!


Image result for கடைகளில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் பூரி
Thank you Venkat
வேர்களைத்தேடி பகுதி 41
இதற்கு முந்திய பகுதியைப்படிக்க  இங்கே சொடுக்கவும். 
            சாப்பாட்டுக் கதைகளின் வரிசையில் அடுத்து எனக்கு ஞாபகம் வருவது ஆப்பக்கடைகள். ஆச்சி இட்டலிக்கடை போலவே ஒன்றிரண்டு ஆப்பக்கடைகளும் இருந்தன. இவை இருந்தவை என்னுடைய  வீட்டிலிருந்து வலதுபுறச்சந்தில் நுழைந்து வாணிகச்செட்டியார் (இங்குதான் எண்ணெய்ச் செக்காடும்) தெருவைக் கடந்து சென்றால் அந்தத் தெரு முழுவதும் உருது பேசும் முஸ்லீம்கள் வாழ்ந்து வந்தனர். சிலர் அவர்களை பட்டாணியர் என்பர். தேவதானப்பட்டியில் வாழும் தமிழ் முஸ்லீம்களை விட இவர்கள் எண்ணிக்கையில் குறைந்தவர்கள். இவர்கள் நிறத்தால் மேலும் வெளுத்தவர்கள். அங்கேதான் என் வகுப்புத் தோழனான சிராஜுதீன் வீடு இருந்தது. அவனைப் பார்க்க அங்கு போகும் போதெல்லாம் காலையிலும் மாலையிலும் தெருவிலிருக்கும் ஆப்பக்கடைகளை பார்ப்பேன். தெருவில் உட்கார்ந்து, தீமூட்டி தண்ணியாய் கரைத்த மாவில் ஆப்பம் சுடுவார்கள். களி மண்ணால் செய்த ஆப்பச்சட்டியைத்தான் பயன்படுத்தவார்கள் . சூடான சட்டியில் தண்ணியான ஆப்ப மாவை ஊற்றி சட்டியைக் துணி சுற்றிய கையில் பிடித்து மாவு சட்டியில் பரவும்படி மேலும் கீழும் அசைப்பார்கள். மாவு பரவியவுடன் அடுப்பில் வைத்து அதன் மேல் ஒரு மூடியை வைத்துவிடுவார்கள். சில நொடிகளில் வெந்துவிடும் ஆப்பத்தை ஒரு கூர்மையான ஸ்பூனை  வைத்து ஒரு ஓரமாக நோண்டினால் ஆப்பம் அப்படியே வந்துவிடும். இதில் ஆப்பத்தைத் திருப்பிப்போட மாட்டார்கள். வட்ட வடிவமாக சிறிது பொன்னிறமாக சுற்றிலும் மெலிதானதாகவும் நடுவில் கொஞ்சம் தடியாகவும் ஆயிரம் சிறு துளைகளைக் கொண்டதாகவும் இருக்கும். சற்றே  இனிப்பாக இருக்கும் ஆப்பத்திற்கு தேங்காய்ப்பால் சொதி அல்லது சட்னி தருவார்கள். எனக்கு அப்போதிருந்தே இனிப்பு ஆகாதென்பதால், ஆப்பம்  எனக்கு அவ்வளவு விருப்பமான உணவல்ல. சில சமயங்ககளில் என் அம்மா வாங்கிவரச் சொல்வார்கள்.
Related image

          மற்றொரு  சாப்பாட்டுக்கடை தேவிவிலாஸ் ஓட்டல். ஓட்டல் என்றால் சாப்பிடுமிடம் என்றுதான் ரொம்ப நாளாக நினைத்திருந்தேன். ஏனென்றால் தேவதானப்பட்டியில் சாப்பிடுமிடத்தை ஓட்டல் அல்லது கிளப் கடை என்று சொல்வார்கள். சென்னைக்கு வந்தபின்தான் ஓட்டல் என்றால் தங்குமிடம் எனவும் ரெஸ்ட்டாரண்ட் என்றால்தான் சாப்பாட்டுக்கடை என்று தெரியவந்தது. தேவதானப்பட்டிக்கு பிழைப்புக்காக வந்த இரு மலையாள நாயர் சகோதரர்கள் முதலில் டீக்கடை ஆரம்பித்து பின்னர் அதனையே சாப்பிடுமிடமாக விரிவு செய்தார்கள். பின்னர் தனித்தனி கடைகளை அருகருகில் அமைத்துக் கொண்டனர். அருகில் என்றால் ஒரு 10 அடி தள்ளி. அதில் ஒன்றின் பெயர்தான் தேவிவிலாஸ். சின்ன வயதிலிருந்து அங்கு  சென்று சாப்பிட வேண்டும் என்று எனக்கு ஆசை. எங்கப்பாவிடம் அதனைச் சொன்னேன். அவரும் ஒரு நாள் மாலையில் என்னைக் கூப்பிட்டுக் கொண்டு சென்றார். முன் கடைக்கு முன்னால் பெரிய கீற்றுக் கொட்டகை, கடந்து சென்றால் ஒரு மூலையில் டீ, காப்பி விற்கும் இடம். அதன் நேர் எதிரே உரிமையாளர் உட்காரும் கல்லா மேசை. அதனைத்தாண்டி உள்ளேபோனால் பழைய சதுர மார்பிள் மேசைகள் போட்டு சுற்றிலும் ஸ்டூல்கள் இருக்கும். அங்கே நடுநாயகமாக இருந்த கண்ணாடிக் கதவுகள் இருந்த அலமாரியில் பூரிகள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். அதனருகில் வடை, போண்டா, இனிப்புருண்டைகள் இருக்கும்.
             என் அப்பா உள்ளே நுழையும்போது நாயர் எழுந்து நின்று வரவேற்றார், அதோடு கடையில் இருந்த வேலை செய்பவர்கள் மட்டுமல்ல, சாப்பிட்டுக் கொண்டிருந்த பலரும் சற்றே எழுந்து என் அப்பாவை வரவேற்றனர். என் அப்பாவுக்கு எல்லோரும் கொடுத்த மரியாதை எனக்கு மிகவும் பெருமையாக இருந்தது. ஊர் முழுவதும் அப்பா மேல் ஒரு மரியாதை இருந்தது. சிறந்த ஆசிரியர் என்பதால் மட்டுமல்ல தன் ஆசிரியப்பணியை வெறும் கடமையாக எண்ணாது தன் மாணவர்களின் எதிர்காலத்தை மனதில் வைத்து சொல்லிக் கொடுப்பவர் என்பதால் அந்த மரியாதை.
       என் அப்பாவிடம், "எனக்கு பூரி வேண்டும்" என்றேன்.வேண்டாம் அதனை காலையில் சுட்டிருப்பார்கள், தோசை சாப்பிடலாம் என்று சொல்லி 2 ஸ்பெஷல் தோசை ஆர்டர் செய்தார். காரமான கெட்டிச்சட்னி, சாம்பார் சகிதம் தோசை நன்றாகவே இருந்தது.
Image result for Poori masala
Courtesy Swasthi
                    தோசை சுவையாக இருந்தாலும் என் கண் என்னவோ உருண்டையாக உப்பிய நிலையில் வைக்கப்பட்டிருந்த பூரி மேலேயே இருந்தது. ஏனென்றால் இட்டலி தோசை வீட்டில் கிடைக்கும். பூரி பொங்கல்தான் வெளியே கிடைக்கும் என்பதால். அதன்பின்னர் நான் ஒன்பது, பத்தாவது படிக்கும்போது தேர்வுகள் வரும் தினங்களில் என்னை ஊக்கப்படுத்துவதற்காக தினமும் 1 ரூபாய் அப்பா தருவார். அதனை எடுத்துக்கொண்டு தேவிவிலாஸ் சென்று பூரி கேட்டேன். என்னுடைய நீண்ட நாள் ஆசை அன்று நிறைவேறியது. உப்பிய பூரியில் நடுவில் ஓட்டை போட்டு உள்ளே சூடான பூரிக்கிழங்கை வைத்துக் கொடுத்தனர்.
          இதில் நான் அறிந்து கொண்டது என்னவென்றால் உருளைக்கிழங்கு விலை மலிவாக இருக்கும்போது மசாலாவில் கிழங்கு அதிகமாகவும், வெங்காயம் கம்மியாகவும் இருக்கும். வெங்காயம் விலை குறையும்போது வெங்காயம் அதிகமாகவும் கிழங்கு குறைவாக இருக்கும். வெங்காயம் அதிகமாகவும், கிழங்கு குறைவாக இருக்கும்போதும் என்னைப் பொறுத்தவரையில் சுவை கூடுதலாக இருக்கும்.
          எப்பொழுதும்  பூரி சாப்பிட்டதால் நான் போனால், "வா சேகர்" என்று வரவேற்று நான் சொல்லாமலேயே பூரி மசாலாவை கொண்டு வந்துவிடுவார்கள். ஒரு நாள் வழக்கத்திற்கு மாறாக பொங்கல் கேட்டேன் அதுவும் சுவையாகவே இருந்தது. சட்னியும் சாம்பாரையும் இணைத்து வடையுடன் சாப்பிட்டேன் வீட்டில் வந்து சொன்னபோது, அப்பா சொன்னார். "இனிமேல் பொங்கல் சாப்பிடாதே" என்று. ஏனென்று கேட்டதற்கு முந்தின நாள் சாதம் மிஞ்சிவிட்டால் அதில்தான் அடுத்தநாள் பொங்கலோ அல்லது லெமன் சாதம், புளி சாதம் என்று செய்துவிடுவார்கள். எனவே அதைச் சாப்பிடக் கூடாது" என்று சொன்னார். அதிலிருந்து பூரி மட்டும்தான் சாப்பிடுவேன். தேர்வுக்காலங்களில் மட்டும் என் அப்பாவிடமிருந்து கிடைக்கும் சலுகை என்பதால், தேர்வு சமயங்களில் வரும் பதட்டத்தை வெகுவாக நீக்கினேன். ஆஹா பூரி கிடைக்குமே என்ற எண்ணம்.
இப்பொழுது நினைத்துப் பார்க்கும்போது, அது என்னுடைய அப்பாவின் இன்னொரு டெக்னீக்காகத்தான் தெரிகிறது. அதனால் அவர் எதிர் பார்த்த  பலனும் கிடைத்தது என்றே நினைக்கிறேன். தேவிவிலாஸ் கடையின் பூரி மற்றும் மசாலாவின் சுவை என் நாவில் மட்டுமல்ல மனதிலும் நிலைத்து நிற்கிறது.
          அதற்கு அருகில் எங்கள் பேரூராட்சித் தலைவராக பலவருடம் இருந்த தி.மு.கவைச்  சேர்ந்த D.K.ராஜேந்திரன் அவர்கள் அலுவலகம்  இருக்கும். அதனருகில் இன்னொரு கடை இருந்தது. முஸ்லீம் நடத்திய அந்தக் கடையில் பரோட்டா நன்றாக இருக்கும். அதனைப்பற்றி அடுத்த பகுதியில் சொல்கிறேன்.
தொடரும்


Thursday, April 25, 2019

துயரங்கள் முடிவதில்லை !!!!!!!!!!வருந்துகிறேன்
பல ஆண்டுகள் நீடித்த சண்டை முடிந்து இப்போதுதான்  இலங்கை மக்கள் மூச்சு விட ஆரம்பித்தனர் .மக்களின் வாழ்க்கையும் இயல்பு நிலைக்கு திரும்பும் சமயத்தில் இப்போது மீண்டும் ஒரு கொடூரம்  நடந்திருக்கிறது .அந்த மக்கள் என்ன பாவம் செய்தார்கள் ? .தீவிரவாதமும் , வன்முறையும் எந்தப்பிரச்சனைக்கும் தீர்வாகாது .இந்த மக்களுக்கு என்ன சொல்லி ஆறுதல் கூறுவது .ஆறுதல் சொல்வதற்கும் நமக்கு என்ன தகுதி இருக்கிறது ?இதனை வேடிக்கை பார்க்கும் இறைவனுக்கு இதனை  எப்படி புரிய வைப்பது ?

படித்ததில் பிடித்தது
கடவுச் சீட்டு
வி.ஜீவகுமாரன் நற்றிணை பதிப்பகம்.
Image result for கடவுச் சீட்டு  வி.ஜீவகுமாரன் நற்றிணை பதிப்பகம்.


            வி.ஜீவகுமாரன் என்ற இந்தப்புதினத்தின் எழுத்தாளர், டென்மார்க் வாழ் இலங்கைத்தமிழர். தன் சொந்த அனுபவத்தை எழுதியதைப்போல், புலம் பெயர்ந்து வாழ்பவர்களைப் பற்றியும் வீழ்பவர்களைப் பற்றியும் இந்தப்புத்தகத்தில் எழுதியிருக்கிறார். இது அவரது சொந்த அனுபவம் என்றே நம்பத் தோன்றுகிறது. சிங்காரம் விருதுபெற்ற இந்த நாவல் புலம் பெயர்ந்தவர்களைத் துரத்தும் அவலத்தை வெளிச்சம் போட்டுக் காண்பிக்கிறது.  
          இக்கரைக்கு அக்கரைப்பச்சை என்று நினைப்பது போலத்தான் என்னைப்போன்ற புலம் பெயர்ந்தவர்களுக்கு அமைகிறது. நான் இந்தியாவின் தமிழகத்திலிருந்து வந்திருப்பதால் வந்த நோக்கம், நல்ல வேலை, நல்ல சம்பளம், வசதியான வாழ்க்கை, பிள்ளைகளின் எதிர்காலம் என்று சொல்லலாம். என்னைப் போன்று வந்தவர் யாராயிருந்தாலும் இதனைத்தான் சொல்வார்கள். ஆனால் யோசித்துப்பார்த்தால் பெற்றதைக்காட்டிலும் இழந்ததுதான் அதிகம். உறவு, நட்பு, மொழி, கலாச்சாரம், அடையாளம் என்று இழந்துபோனது அதிகம்தான்.
          ஆனால் பெரும்பாலான இலங்கைத்தமிழர் புலம் பெயர்ந்தது மேற்சொன்ன காரணங்களுக்கில்லை. போரில் வீடிழந்து, உறவுகளை இழந்து, நிலம், உடமைகள், சொத்துக்களை இழந்து, உயிர் பிழைத்து வாழ ஓடி வந்தவர்கள். எங்கெல்லாம் அடைக்கலம் கிடைக்குமா அங்கெல்லாம் புலம்பெயர்ந்தார்கள். குறிப்பாக அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஃபிரான்ஸ், டென்மார்க், ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகளுக்கு அதிகமாக வந்தனர்.
          வேறு சில காரணங்களுக்காவும்  இயக்கத்திலிருந்து தப்பிப் பிழைக்கவும் புலம் பெயர்ந்தவர்களும் இருக்கிறார்கள்.
Related image

          அப்படி வந்த ஒரு குடும்பத்தின் கதைதான் கடவுச் சீட்டு. வழக்கம்போல் புல்லட் பாயிண்ட்டுகளில் என்னைக் கவர்ந்த, ஆச்சரியப்படுத்திய சங்கதிகளைப் பார்ப்போம். அதற்கு முன் கதைக்களத்தைப் பார்ப்போம்.
          வேறு வேறு சாதிகளையும் சமூக அந்தஸ்துகளையும் கொண்ட யாழ் பல்கலைக்கழக மாணவர்களான தமிழ் மற்றும் சுபா , குடும்பங்களைத் துறந்து திருமணம் செய்துகொண்டு ஏஜென்ட்டுகளின் உதவியோடு நாட்டைவிட்டுக்கிளம்புகிறார்கள். அவர்கள் ஜெர்மனி வழியாக டென்மார்க் அடைந்து படித்து முன்னேறி, பிள்ளைகள் பெற்று வாழும் வாழ்க்கையில் சில எதிர்பாராத திருப்பங்கள் நடந்து, அதனை அவர்கள் சமாளிக்க முடிந்ததா இல்லையா என்பதுதான் கதை. மீதிக்கதையை புத்தகம் வாங்கிப் படிக்க முயலுங்கள். நியூயார்க்கில் உள்ளவர்கள் என்னிடம் இரவல் வாங்கியும் படிக்கலாம்.
Image result for கடவுச் சீட்டு  வி.ஜீவகுமாரன் நற்றிணை பதிப்பகம்.

1.   ஜெர்மனியில் வந்திறங்கிய இலங்கை மக்களை வழிநடத்திய ஏஜென்ட், அங்கு விமானம் இறங்கியதும் தங்கள் கடவுச்சீட்டுகளை கிழித்துப்போடச் சொல்கிறான். இதுதான் புத்தகத்தின் தலைப்பு, கடவுச்சீட்டு என்பது பாஸ்போர்ட் என்பதன் தமிழாக்கம். ஒவ்வொருவராக கழிவறைக்குச் சென்று அப்படிச் செய்யும்போது அவர்களின் சொந்த அடையாளத்துக்கான சான்றை முற்றிலுமாக இழந்துவிடுகிறார்கள் என்று கதை ஆரம்பிக்கிறது.
2.   ஈழநாடு பத்திரிக்கை தேர்தலை எப்படி மாற்றியமைத்தது என்பது ஆச்சரியப்படவைக்கிறது.
3.   யாழ்ப்பாணம் பஸ்ஸ்டாண்டு, 97000 புத்தகங்கள் கொண்ட யாழ்ப்பாண நூலகம் அத்தனையும் சண்டையில் எரிந்து சாம்பலாகின்றன.  
4.   வீரகேசரி என்ற பத்திரிகை “யாழ்ப்பாணம் எரிகிறது” என்று தலைப்பிட்டு அதனை வெளியிடுகிறது.
5.   ஸ்கேண்டிநேவிய நாடுகள் என்று சொல்லப்படும், டென்மார்க், சுவீடன், நார்வே ஆகிய நாடுகள், அடைக்கலம் தேடி வரும் அகதிகளுக்கு அதிகப்பணமும் உதவியும் செய்கின்றன என்பதால் பல இலங்கைத் தமிழர்கள் இந்த நாடுகளை நோக்கிப் புறப்பட்டனர்.
6.    ஜெர்மனியின் அகதிமுகாமில் இருந்து இவர்கள் இரவில் தப்பித்து அகழியில் ஏறிக்கடந்து, வேலியினைத் தாண்டி வெளியேறுகிறார்கள். 
7.   அங்கிருந்து திருட்டு வழியாக டென்மார்க் செல்வதற்கு 10 பேர் கொண்ட இரு குழுவாகப் பிரிந்து, ஒரு குழு பன்றி வண்டியிலும், இன்னொரு குழு பெட்ரோல் டேங்கிலும் ஏற்றப்படுகின்றனர்.
8.   இதில் இலங்கைத்தமிழர் தவிர லெபனாவிலிருந்து வரும் அகதிகளும் அடங்குவர்.
9.   பன்றி வண்டியில் ஏற்றப்பட்டவர், வண்டியின் நடுவில் இருந்த ஒரு கூண்டில் குத்தவைத்து உட்கார வைக்கப்பட, சுற்றிலும் பன்றிகள் சூழ்ந்து அவர்களை மறைந்தன. கீழேயிருந்து பார்ப்பவர்களுக்கு பன்றிகள் மட்டுமே தெரியும். என்ன இது வேடிக்கை பாருங்கள். பன்றிகள் வெளியே சுதந்திரமாக இருக்க, மனிதர்கள் கூண்டுக்குள். ஆனால் அவற்றின் மூத்திரம் மற்றும் கழிவு நாற்றம் தாங்கமுடியாமல் உள்ளே இருந்த பெரும்பாலானோர் வாந்தியும் மயக்கமும் வந்து பெரிய அவஸ்த்தைக்குள்ளாகினராம்.
10.                பெட்ரோல் டாங்க் டிரக்கில் இருந்த மூன்று பெரிய டங்குகளில் ஒன்றில் பத்துக்கு மேற்பட்டோர் ஒரு ஏணி மூலமாக இறக்கப்பட்டு பின்னர் ஏணியை உருவி விட்டு மேற்பாகம் அடைக்கப்பட்டதாம். ஆனால் எப்படியோ மற்ற டேங்கர்களிலிருந்து தழும்பி உள்ளே வந்த பெட்ரோல் நெடியில் அடைக்கப்பட்டவர்கள் மூச்சுத்திணறி வெளியே எவ்வளவு சத்தம் போட்டும் தட்டியும் கேட்காமல் அவ்வளவு பேரும் இறந்துவிடுகின்றனர். என்ன ஒரு கொடுமை. இதற்கு பன்றிக்கூண்டே தேவலாம்.
11.                அகதிகளால் உள்ளே நுழையும் நபர்கள் கோபன் ஹேகனிலிருந்து 40 கி.மீ தொலைவிலுள்ள 'சான்கெலம்' என்னும் அகதி முகாமில் தங்க வைக்கப்பட்டு, ஒவ்வொரு வியாழனும், கைச்செலவுக்கு பாக்கெட் மணி, சிகரெட் பாக்கெட் மற்றும் ஒயிட் பியர் வழங்கப்படுமாம்.
12.                அதன்பின்னர் நகர்புறவீடு கொடுக்கப்பட்டு, டேனிஷ் மொழி பயில வேண்டுமாம்.
13.                இலங்கையிலிருந்து குடிபெயர்ந்தவர்கள் மத்தியிலும் சாதிப்பாகுபாடுகள் இருப்பது துக்கம் தருகிறது.
14.                அங்கேயும் இயக்கத்தினரின் மிரட்டல்கள், நன்கு படித்து முடித்தும் நிறத்துவேஷத்தால் வேலை கிடைக்காத நிலைமை எனப்பல தடங்கல்கள்.
15.                அதன் பின்னர் பிள்ளைகள் டீனேஜ் பருவத்தில்   சிக்கிக் கொண்டு மாறுபட்ட கலாச்சாரத்தில் அமிழ்ந்து போன கதையும் வருகிறது.
மீதத்தை நீங்களே படித்துக் கொள்ளுங்கள்.
இலங்கைத் தமிழர் பயன்படுத்தும் தமிழ் மற்றும் ஆங்கில வார்த்தைகளை தமிழில் எழுதுவது வேடிக்கையாக இருக்கிறது. கீழே சில உதாரணங்கள்.
டவுன் - ரவுண்
ஸ்டாண்ட் – ஸ்ராண்ட்
ஏஜென்ட் - ஏஜென்ற்
 கேம்ப்பஸ் - கம்ப்பஸ்
டியூலிப் - ரியூலிப்
டாய்லட் - ரொய்லற்
டாக்டர் - டாக்குத்தர்
ஆஃபிஸ் - ஒவ்விஸ்
லிஸ்ட் - லிஸ்ற்
பெட்ரோல் = பெற்றோல்
ஜெர்மனி - ஜேர்மனி
சிட்டிசன் - சிற்றிசன்
டிரவுசர் - ரவுசர்
ஆண்ட்டி - அன்றி
டேங்க் - ராங்க்
டீச்சர் - ரீச்சர்
டம்ளர் - ரம்ளர்
சிமெண்ட் - சீமெந்து

தமிழ் வார்த்தைகள்:
அண்ணன் - அண்ணை
பாட்டி - அம்மம்மா
சோதனை - சோதினை
துப்பாக்கி - துவக்கு
ஜன்னல் – யன்னல்

முற்றும்

Tuesday, April 23, 2019

பாட்டி இட்லி சுட்ட கதை !!!!!வேர்களைத்தேடி பகுதி 40
இதற்கு முந்திய பகுதியைப்படிக்க  இங்கே சொடுக்கவும். 
Related image

          மீன் கதையை எழுதிக் கொண்டிருக்கும்போதே தேவதானப்பட்டியில் வெளியே சாப்பிட்ட சில தருணங்கள் ஞாபகம் வந்தது. முதலாவதாக ஆச்சி இட்லிக்கடை. பாட்டி வடை சுட்டதுபோல் இது பாட்டி இட்லி சுட்ட கதை.
          எங்கள் வீட்டில் பெரும்பாலும் உணவு வெளியில் சாப்பிடுவதில்லை. ஆனால் எப்போதாவது அம்மாவுக்கு உடம்பு சரியில்லை, இல்லை மாவாட்டுவதற்கு நேரமில்லை என்றால் என்னை ஆச்சி இட்லிக்கடைக்கு அனுப்புவார்கள். கடை என்றால் பெரிய கடையில்லை. அவருடைய ஒரு அறை வீட்டின் வெளியே போடப்பட்ட சிறு கீற்றுக் கொட்டகை. ஆச்சி தனியாகத்தான் வாழ்ந்து வந்தார். அவருடைய உறவினர்கள் பற்றிப் பெரிதாகத்  தெரியவில்லை. இந்து நடுநிலைப்பள்ளியின் அருகேயுள்ள தெருவிலிருந்து கோட்டையன் கோவில்   அல்லது கொண்டைத்தாத்தா கோவிலுக்குச் செல்லும் வழியில் இடது புற மூலையில் இருந்தது ஆச்சி கடை. இங்கே காலையில் இட்லி மட்டும்  கிடைக்கும். எத்தனை மணிக்கு கடை திறப்பார் என்று தெரியாது. ஆனால் நான் ஒரு ஏழு அல்லது ஏழரை மணிக்குச் செல்லும்போது அங்கே வியாபாரம் விறுவிறுப்புடன் நடந்து கொண்டிருக்கும். அங்கே பலபேர் இட்லிக்காக  காத்துக் கொண்டிருப்பார்கள்.
          ஆச்சி ஒல்லியாக உயரமாக இருப்பார். வளர்த்த காதில் ஒன்ருமிருக்காது. தும்பைப்பூ போன்ற வெள்ளைச்சேலை அணிந்திருப்பார். ரவிக்கை கிடையாது.  சின்ன இடமாக இருந்தாலும் சாணி மெழுகி சுத்தமாக இருக்கும். கரி அடுப்பில் ஒரு அலுமினிய இட்லிப் பாத்திரம் அதனருகில் சிறு மரமனையில் ஆச்சி உட்கார்ந்திருப்பார். சுருங்கிய நெற்றியில் தோன்றும் முத்துமுத்தான வியர்வையை அவ்வப்போது சேலைத்தலைப்பால் துடைத்துக் கொள்வார். வாயில் ஒரு பல் கூட இல்லை. ஆனால் பேச்சில் குழறல் இருக்காது. இட்லிச்சட்டியைத்திறந்து   ஆவி பறக்க தட்டுகளை கீழே வைத்து இலேசாக நீர் தெளித்து வெறுங்கையிலேயே இட்லிகளை  எடுத்துவிடுவார். அதனால்தானோ அவரின் இரு கைகளும் வெள்ளையாக இருக்கும். கைகள் அல்லது கால்கள் அதிகமாக நீரில் புழங்கினால் சேத்துப்புண் என்று வெள்ளையாக வரும். ஆச்சிக்கு இருந்தது அதுவில்லை  என நினைக்கிறேன் நம்புகிறேன்.
          இட்லிகள் தும்பைப்பூ போல் வெள்ளைவெளேரென்று சரியான அளவில் மல்லிகைப்பூப்போல மெதுவாக இருக்கும். அப்போது 1970களில்  ஆரம்பத்தில் ஒரு இட்லி ஐந்து பைசா என்று நினைக்கிறன். ஆச்சி கடையில் மெதுவான இட்லி மட்டுமல்ல சட்னியும் விசேஷம் தான் இரண்டு வகையான சட்னி இருக்கும். தேங்காய் பொட்டுக்கடலை போட்டு அரைத்த சட்னியும், காரச்சட்டினியும் இருக்கும். தேங்காய்சட்னி  மிகவும் தண்ணியாக இருக்கும். ஆனால் இட்லியில் தோய்த்துச் சாப்பிட்டால் சுவை அள்ளும். காரச்சட்னி சிறிது கொத்சு போல இருக்கும். காரம் மூளைக்கு ஏறும். ஆச்சி கடையில் நான் பார்த்து . இட்டலிகள் சட்டியிலிருந்து எடுக்கப்பட்டு பாத்திரத்திற்குப் போனதேயில்லை. நேராக வாங்குபவர்களிடம் போய்விடும். அங்கேயே ஓரமாக உட்கார்ந்து சாப்பிடுவதற்கு மட்டும் ஒரு சிறு வாழை இலையின் அடியில் ஒரு தினப்பத்திரிகை வைத்து கையில் கொடுப்பார்கள். அதே இரண்டு வகை சட்னிதான். இட்லியும் அளவும் தரமும் சட்னிகளின் சுவையும் என்றும் ஒரே மாதிரி இருக்கும் கைப்பக்குவம். வாங்க வருபவர்கள் கையில் இட்டலிக்கும் சட்னிக்கும் பாத்திரம் கொண்டுவர வேண்டும். அப்போது பிளாஸ்ட்டிக்கெல்லாம் கிடையாது. எப்போதும் அடுத்து எனக்கு என்று மக்கள் காத்துக்கொண்டிருப்பார்கள். ஆனால் ஆச்சி முதலில் வந்தவர்களுக்கு முன்னுரிமை கொடுப்பதோடு யாருக்கும் எந்த சலுகையும் காட்ட மாட்டார். அதையும் அன்பாகவே செய்வார். அங்கேயே சாப்பிடுபவர்களுக்கும் அதே வரிசைதான்.
          அந்த வயதிலும் உழைத்துச் சாப்பிட்ட அவர் ஒரு உண்மையான தொழிலாளி. தொழிலாளி என்று சொல்வதைவிட அவரை ஒரு போராளி என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும்.
          எப்போதும் ஒரே மெனுதான், ஒரே இட்டலிப் பாத்திரம்தான், 9 மணிக்குள் மொத்தமாக தீர்ந்து விடும் . ஆச்சிக்கு பெரியதாகச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்ததில்லை. ஒரு நேரம் மட்டும்தான். அவரை வாழ்வை நடத்துவதற்கு அது போதுமானதாக இருந்திருக்கும். மற்ற நேரத்தில் என்ன செய்வார் என்று யோசித்திருக்கிறேன்.
          ஒரு நாள் கடைவீதியில் பார்த்துக் கேட்டுவிட்டேன். அதனை அவருடைய வார்த்தைகளில் சொல்கிறேன். "சேகர் நல்லா  இருக்கியா? பாத்து ரொம்ப நாளாச்சு, டீச்சரும் வாத்தியாரும் நல்லா இருக்காங்களா என்ன கேட்ட? மத்த நேரத்தை எப்படி செலவழிக்கிறேன்னா? காலைல நாலு மணிக்கெல்லாம் எந்திருச்சு குளிச்சு ரெடியாகி பாத்திரங்களை துலக்கி, மாவை நல்லா கரைச்சு வச்சிருவேன். தேங்காய் துருவி, சட்னிகளைச் செஞ்சுட்டு அடுப்பு பத்தவச்சு இட்லிச்சட்னியை வைக்கிறதுக்குள்ள ஆளுக  வந்திருவாக. ஆறு மணியிலிருந்து 8.30- 9 மணிக்கெல்லாம் மாவு முழுதும் தீர்ந்திரும் சில வேளையில் 8 மணிக்கெல்லாம் தீர்ந்திரும். ஆனாலும் நிதம் அதே அளவுதான்”.
          " ஏன் ஆச்சி கொஞ்சம் அளவைக் கூட்டலாம்ல, தினமும் குறைஞ்சது 10 பேராவது ஏமாந்து போறாங்கள்ள, ".
“இல்ல சேகரு அளவைக் கூட்டிட்டா, இட்லியோட தரம் குறைஞ்சு போகுமோன்னு பயம். அதனாலதான் எனக்குத்தெரிஞ்ச அளவிலயே நான் செய்யுறேன். அப்புறம்  என்ன செய்வேன்னு கேட்டல்ல பண்ட பாத்திரங்களை விளக்கி வைப்பேன். அதுக்குள்ள பத்துக்கு மேலாயிரும். அப்புறம் கடைக்குபோய் அடுத்த நாளுக்கு தேவையான அரிசி, உளுந்து, உப்பு, மிளகாய், தேங்காய், புளின்னு எல்லா மளிகை சாமானும் வாங்கிட்டு வருவேன். அதுக்குள்ளே மத்தியானம் ஆயிரும். அப்புறம் சோறுபொங்கி சாப்பிட்டிட்டு சித்த நேரம் படுப்பேன். நாலு மணிக்கெல்லாம் எழுந்து மாவாட்டி வைத்துவிட்டு எல்லா பாத்திரங்களையும் ரெடி பண்ணி வைத்துவிட்டு இரவு உணவை உண்டுவிட்டு சீக்கிரமாக எட்டு மணிக்கெல்லாம் படுத்துவிடுவேன்”.
Image result for காது வளர்த்த ஆயா
Courtesy : Google
          " ஏன் ஆச்சி தினமும் அரிசி உளுந்து வாங்கனும். ஒரு மாசத்துக்கு வாங்கிப்போட வேண்டியதுதானே. நாடார் கடையில அக்கவுண்ட் வச்சுட்டா மாசாமாசம் மொத்தமா கொடுத்திரலாம்ல"
          “நாடார் கடையில கேட்டுப்பார்த்தேன். அதெல்லாம் மாசச்சம்பளம் வாங்குற கவர்ன்மென்ட் உத்தியோகஸ்தர்களுக்கு மட்டும் தான் தருவாகலாம். அதோட எதுக்கு கடனை வாங்கனும்.  கடனைக் கட்டாம பொசுக்குன்னு போயிட்டேன்னா, அந்தக்கடனை யார் கட்டறது?.”
          ஆச்சி நல்லாத்தான் யோசிக்குதுன்னு நெனைச்சேன். அதற்கப்புறம் +1 +2 படிக்கறதுக்கு காந்திகிராமம் போயிட்டேன். பொங்கல் லீவுக்கு ஊருக்கு வரும்போது, எங்கம்மாவுக்கு அன்னைக்கு இன்ஸ்பெக்ஷன் இருக்குன்னு சொல்லி சீக்கிரம் போகனும்னு சொன்னாங்க.
நான் சொன்னேன் "பரவாயில்லம்மா, நான் ஆச்சி கடையில இட்லி  வாங்கிட்டுவரேன்”னு சொன்னேன்.

          “என்னடா உனக்குத் தெரியாதா, ஆச்சி செத்துப்போச்சு. இட்லி வியாபாரம்லாம் முடிச்சுட்டு சாமான் வாங்கிவச்சுட்டு படுத்த கிழவி எந்திரிக்கவேயில்லை. மகராசி நல்ல சாவுதான்னு” அம்மா சொன்னாங்க. செருப்பை மாட்டிக் கொண்டு உடனே அந்த இடத்துக்குப்போனேன், குடிசையின் வாசல்ல பூட்டுத் தொங்கி அந்தத் தெருவே வெறிச்சுனு இருந்துச்சு.
தொடரும்

Thursday, April 18, 2019

கிழக்கு வங்காளத்தில் நடந்த கிளர்ச்சி !!!!!!!!!பார்த்ததில் பிடித்தது.
சிட்டகாங்
Image result for Chittagong movie

ஆங்கிலேயரின் ஆதிக்கத்தை எதிர்த்து இந்திய நாடெங்கிலும் பலவிதமான கிளர்ச்சிகள் நடந்தன. அவற்றுள் சில அமைப்பு சார்ந்தவை பல தன்னிச்சையாக எழுந்த கிளர்ச்சிகள். அப்படி நடந்த பல போராட்டங்கள் பலருக்கும் தெரியாது. குறிப்பாக தென்னிந்தியாவின் வாஞ்சி நாதனையும், திருப்பூர் குமரனையும் வட இந்தியர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதுபோல் சிட்டகாங் என்னுமிடத்தில் நடந்த மாபெரும் எதிர்ப்பு நிகழ்ச்சிதான் இந்த திரைப்படம். நெட் பிலிக்சில் இருப்பதால் எனக்குப் பார்க்க கிடைத்தது. அந்த சிட்டகாங் எனும் ஊர் இப்போது பங்களாதேசத்தில் இருக்கிறது.
2012ல் வெளிவந்த திரைப்படத்தைப் பற்றி நான் இதற்கு முன் கேள்விப்படவில்லை. படத்தின் நிகழ்வைப் பற்றியும் எனக்கு முன்னால் தெரியாது.
இது 1930ல் கிழக்கு வங்காளத்தில் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக நடந்த கிளர்ச்சி அல்லது போர் என்று கூட சொல்லலாம்.
Image result for Surya sen of Chittagong

ஒரு பள்ளிக் கூட ஆசிரியரான சூரியா சென் என்பவரின் தலைமையில் 50 பள்ளி மாணவர்கள் ஏற்படுத்திய கிளர்ச்சி இது. சிட்டகாங் நகரின் ஒரு இரவில் இவர்கள் போய் ஆங்கிலேயரின் ஆயுதக் கிடங்கைக் கைப்பற்றி அதிலிருந்து துப்பாக்கிகளைப் பறிமுதல் செய்து ஒரு சிறு ராணுவம் போல் செயல்படுகிறார்கள். கைப்பற்றியதோடு அங்கே இந்திய தேசியக் கொடியை ஏற்றி விடுதலையைக் கொண்டாடுகிறார்கள். ஆனாலும் அவர்கள் எதிர்பார்த்த மெஷின் துப்பாக்கிகள் ஆயுதக் கிடங்கில் இல்லை. அடுத்த நாளே கல்கத்தாவிலிருந்து பெரும் படை வந்தது. எனவே இவர்கள் தப்பியோடி காட்டுக்குச் சென்று அரணமைத்தார்கள்.
உயரமான இடத்தில் இருந்ததால் முன்னேறி வந்த முதலாவது படைப் பிரிவை அவர்கள் துவம்சம் செய்ய முடிந்தது. ஆனால் அடுத்தடுத்த படைகள் வரவர தாக்குப்பிடிக்க முடியாமல் அவர்கள் தங்கள் மாணவர் படையைக் கலைத்துவிட்டுப் பிரிந்து சென்று தலைமறைவாகினர். ஆனால் 14 வயதான ஜின்கு என்பவன் பிடிபடுகிறான். ஆனால் எவ்வளவு கொடுமைப் படுத்தப்பட்டாலும் அவன் மற்றவர்களை காட்டிக் கொடுக்க மறுக்கிறான். இறுதியில் பிடிபட்ட சிலரோடு அந்தமான் சிறையில் அடைக்கப்படுகிறான்.
Related image
Add caption
23 வயதில் வெளியே வந்தாலும் திரும்பவும் புரட்சியில் ஈடுபடுகிறான். மாணவர்களின் எழுச்சி அவர்களை வழி நடத்திய ஆசிரியர் ஆகியோர் இணைந்து செய்த இந்தப் புரட்சி ஆங்கிலேயரை அச்சப்பட வைத்தது. இப்படி பல அடிகள் அங்குமிங்கும் எங்கும் பட்டதால்தான் இறுதியில் சுதந்திரம் தர சம்மதித்தார்கள். எந்த இடத்திலும் செயற்கைத்தன்மை தெரியாமல் எடுக்கப்பட்ட இந்தப் படத்தை எழுதி, இயக்கி, தயாரித்தவர் பேடபிரட்டா பெயன் (Bedabrata Pain) என்பவர். இவரோடு கூட இருந்து கதையை எழுதியவர் ஷோனாலி போஸ். சூரியா சென்னாக மிகைபடுத்தாத நடிப்பை வெளிப்படுத்தியவர் மனோஜ் பாஜ்பயி.
Image result for manoj bajpai
Manoj Bajpayee 
2012ல் வெளிவந்த இந்தப்படம் ஒரே சமயத்தில் ஹிந்தி, ஆங்கிலம் மற்றும் பெங்காலி மொழியில் எடுக்கப்பட்டது. ஒரு பீரியட் படத்திற்குத் தேவையான இசையை அமைத்தவர்கள் சங்கர் ஈஷன் லாய். இதில் சங்கர் என்பவர் நமக்கெல்லாம் நன்கு தெரிந்தவரான சங்கர் மகாதேவன்தான்.
அருமையான ஒளிப்பதிவைக் கொடுத்தவர் எரிக் ஜிம்மர் மேன் என்பவர்.
உலகத்திலேயே மிகச்சிறிய வயதில் புரட்சி செய்த ஜின்கு (14 வயது) வாக நடித்த பையன் சுபோத் ராய் என்பவன்.
திரையிடப்பட்டு நன்கு வரவேற்கப்பட்ட இந்தப்படம் பல திரைப்பட விருதுகளை அள்ளியது. அறுபதாவது தேசிய திரைப்பட விழாவில் கீழ்க்கண்ட விருதுகளைப் பெற்றது.
சிறந்த அறிமுக இயக்குனருக்கான இந்திராகாந்தி விருது பேடபிரட்டா பெயினுக்குக் கிடைத்தது. மேலும் சிறந்த பின்னணிப் பாடகருக்கான விருது சங்கர் மகாதேவனுக்கும், சிறந்த பாடலாசிரியர் விருது பிரசூன் ஜோசிக்கும் கிடைத்தது.
ரூபாய் 45 மில்லியன் செலவில் எடுக்கப்பட்ட இந்தப்படம் நல்ல வெற்றியைப் பெற்றது.
இந்தியச் சுதந்திரப் போராட்ட வரலாறை அறிய ஆவலுள்ளவர்கள் அவசியம் பார்க்க வேண்டிய திரைப்படம் இது.   
முற்றும்

Monday, April 15, 2019

மீன் கதை !!!!


Image result for ஜிலேபி கெண்டை
வேர்களைத்தேடி பகுதி 39
இதற்கு முந்திய பகுதியைப்படிக்க  இங்கே சொடுக்கவும். 
            எங்கள் ஊரான தேவதானப்பட்டியில் அப்போதெல்லாம் கோழிக்கடை இருக்காது. விவசாயம் சார்ந்த ஊரானதால் பல வீடுகளிலும் கோழி வளர்ப்பார்கள்.  வான் கோழியும் வளர்ப்பார்கள். எனவே தேவைப்பட்டால் சேவலையோ விடைக்கோழியையோ அறுத்து சமைத்து விடுவார்கள். எனவே தனியாக கோழிக்கறிக்கடை இருக்காது. நாட்டுக் கோழிகளை வளர்ப்பவர்களிடமே வாங்கிக் கொள்ளலாம். எங்கம்மா  அவ்வளவாக சமைக்க மாட்டார்கள். ஏனென்றால் ஆயா என்று நாங்கள் அழைக்கும் எங்கள் அம்மாவின் அம்மா எங்களோடுதான் இருந்தார்கள். மிக அருமையாக சமைப்பார்கள். அறுசுவை உணவை அரை மணியில் சமைத்துவிடுவார்கள். சைவம் அசைவம் இரண்டும் சூப்பராக இருக்கும். ஆட்டுக்கறிக்குழப்பு வைத்தால் கைமணக்க, வாய் மணக்க மிக அருமையாக இருக்கும். அவருக்கு மசாலா அரைத்துத் தருவது மட்டும்தான் என் அம்மாவின் வேலை. ஆட்டுக்கல் அம்மிக்கல் இரண்டும் இருக்கும், மசாலா தேங்காய் ஆகியவற்றை அம்மிக்கல்லிலும், ஆட்டுரலில் இட்லி தோசைக்கு மாவு மற்றும் தேங்காய் பொட்டுக்கடலை சட்னியும் அரைத்துக் கொடுப்பது அம்மாவின் வேலை. கோழிக்கறி வேண்டுமென்றால் பக்கத்து ஊர்களான பெரியகுளம் அல்லது வத்தலகுண்டு போய் எங்கப்பா வாங்கிவருவார்.
Image result for அயிரை மீன்
அயிரை மீன்
          ஆயா இருக்கும்வரை சுவையான உணவுக்குப் பஞ்சமில்லை.  அதன்பிறகு முழுப்பொறுப்பும் என் அம்மாவின் மேல் விழுந்தது. ஆரம்பத்தில் சோறு குழைந்துவிடும், காரம் / உப்பு அதிகமாகிவிடும். மிகுந்த  நேரம் பிடிக்கும். இதனால் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் அடிக்கடி சண்டை வரும். ஆனால் படிப்படியாக முன்னேறி நன்றாக சமைக்கக் கற்றுக் கொண்டார். மட்டன் குழம்பு, குருமா, மட்டன் ஃபிரை, காரக் குழம்பு, மொச்சைக்குழம்பு, புளிக்குழம்பு, துவரம்பருப்பு, பாசிப்பருப்பு, சாம்பார் ஆகியவை கிட்டத்தட்ட எங்கள் ஆயாவின் கைப்பக்குவத்திற்கு இணையாக வந்துவிட்டது. ஆனால் சில சமையல் அம்மாவுக்கு வரவேயில்லை.  பலகாரங்கள் செய்வது, பிரியாணி செய்வது, கோழி வெட்டுவது இதெல்லாம் அவர்களுக்கு கடைசிவரை வரவேயில்லை.
          இன்னொன்று எங்கம்மா செய்வது மீன்குழம்பு, இது எப்பவும் இருக்காது எப்போதாவது விடுமுறை தினங்களில் செய்வார்கள். எங்கள் ஊரில் மீன்கடை என்று இல்லை. ஆனால் தெருக்களில் விற்றுக்கொண்டு வருவார்கள். அருகில் எந்தக் கடலும் இல்லாததால் ஆறு, குளம், கிணறு ஆகிய மீன்கள் மட்டும்தான் வரும். விரால் மீன், கெண்டை, கெளுத்தி, குரவை, ஜிலேபி கெண்டை, அயிரை ஆகியவைதான் வரும். இதில் எங்கம்மா அடிக்கடி செய்வது ஜிலேபிக்கண்டை மீன். இன்னொரு வகை மீன் குரவை. விரால் எப்போதாவது தான் கிடைக்கும்.
          இந்த ஜிலேபிக்கெண்டை மீன் செய்கிற நாளும் அதன்பின் ஒருவாரம் மீன் கவிச்சி வீடுமுழுதும் நிறைந்து எரிச்சலைத்தரும். அதனாலேயே எனக்கு மிகுந்த ஐயரவு ஏற்பட்டது. (ஐயரவு என்பதற்கும் ஐயர் என்பதற்கும் எந்த சம்பந்தமும் நேரடியாக இல்லையென்பது என்பதை  தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். )
Image result for விரால் மீன்
விரால்
          ஒரு சமயம் முதுகலை படிக்கும் சமயம் என்னுடைய வீட்டிற்கு என் வகுப்பு நண்பர்கள் வந்து ஒரு நான்கு நாள் தங்கியிருந்தனர். அவர்களை வைகை அணை, மஞ்சளாறு அணை,  காமாட்சியம்மன் கோவில், கும்பக்கரை ஆகிய இடங்களுக்கு அழைத்துச் சென்றேன். கோடை விடுமுறை என்பதால் அம்மாவும் வீட்டில் தான் இருந்தார்கள். நான் கேட்காமலேயே அவர்களும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அசைவ வகை செய்து அசத்தினார்கள். ஒரு நாள் மட்டன் குழம்பு, மறுநாள் சிக்கன், இன்னொரு நாள் சாம்பார், மட்டன் ஃபிரை, கடைசி நாளில் மீன்குழம்பு செய்திருந்தார்கள். அந்த மீன் வழக்கமாகச் செய்யும் மீன் இல்லை. ஏதோ ஒன்றை தெருவில் விற்பவன்  தலையில் கட்டிவிட்டான் என்று நினைக்கிறேன். ஆனால் சுவை நன்றாகத்தான் இருந்தது. வளவளவென்ற தோலுடன் குறுகலாக உருண்டையாக இருந்தது. பக்கத்தில் உட்கார்ந்திருந்த கிண்டல் பிடித்த சேலம் ரவி, "டேய் உங்கம்மா மீன் வாங்கறதுக்குப் பதிலா பாம்பு வாங்கிச் சமைச்சிருங்காங்கடா.ஆனால் அதுவும் நல்லாத்தான் இருக்கு" என்று காதில் சொன்னான். ஏற்கனவே நாற்றமுடைத்த மீனை பிடிக்காமல் இருந்த மனதை இந்த பாம்பு உவமை பலமாகத்தாக்கியதால் அன்றிலிருந்து மீன் சாப்பிடுவதை நிறுத்திவிட்டேன். அதன்பின் தொடர்ந்து ஹாஸ்டலிலும் தனியாகத்தங்கியும் இருந்ததால் மீனைத் தொடவில்லை. ஆனால் என் மனைவி ஒரு மீன் பிரியை, ஒவ்வொரு தடவை மீன் செய்யும்போதும் குற்ற உணர்ச்சியால் என்னைச்சாப்பிட வற்புறுத்துவாள். மதியம் கொடுத்தால் இரவு சாப்பிடுகிறேன் என்றும் இரவு கொடுத்தால், இரவில் வேண்டாம் என்றும் சொல்லித் தப்பித்துவிடுவேன்.
          ஆனால் மீன் உணவு மிகவும் நல்லது. ஆட்டுக்கறி, கோழிக்கறி, பன்றிக்கறி, மாட்டுக்கறி, ஆகியவற்றில் கோழிக்கறி என்பது மற்றவற்றைவிட நல்லது என்கிறார்கள். குறிப்பாக சர்க்கரை வியாதி, இரத்த அழுத்தம், இதய நோய் உள்ளவர்கள் ரெட்மீட் என்று சொல்லப்படுகிற ஆட்டுக்கறி,பன்றிக்கறி, மாட்டுக்கறியை ஆகியவற்றை நிறுத்த வேண்டும் என்று சொல்கிறார்கள். ஆனால் கோழிக்கறி இதில் சேராது. இவையெல்லாவற்றையும் விட மீன் உணவு நமது நாட்டிலேயே மேற்கு வங்காளம் ஆகிய பகுதிகளில் சைவ உணவாக கருதப்படுவதோடு பிராமணர்களும் சகஜமாகச் சாப்பிடுகிறார்கள். அங்குள்ள ஐயர்களுக்கு எந்த ஐயரவும் இல்லை. அதோடு மற்ற அசைவ உணவுகளை விட மீன் விலை குறைவு என்பதால் நடுத்தர மற்றும் அதற்கும் கீழ்வருமான உள்ளவர்கள் மீன் அதிகம் சாப்பிடுவதால் உடல்நிலை திடமாக ஆரோக்யமானவர்களாக இருக்கிறார்கள்.
          என் அமெரிக்கன் கல்லூரி வகுப்புத்தோழன் ராஜசேகர் மதுரை சாரதா மெஸ்ஸின் கிளையை சென்னையில் ஆரம்பித்து நடத்தி வருகிறான். மதுரை சாரதா மெஸ்ஸின் இரண்டு சிறப்பம்சங்கள் என்னவென்றால் மண்பானை சமையல், மற்றும் அயிரைமீன் குழம்பு, இதற்காக தினமும் மதுரையில் இருந்து அயிரை மீன் வருவதோடு விரால் மீனை அவனே வளர்க்கிறான். நான் சென்னையில் இருந்தபோது சாரதா மெஸ்ஸீக்கு அடிக்கடி  செல்வேன். முதல் காரணம் அங்கு கிடைக்கும் சீரக சம்பா பிரியாணி, பரோட்டா மற்றும் மட்டன் சுக்கா வருவல் எனக்கு மிகவும் பிடிக்கும். அதுதவிர 2வது காரணம் உடனே காசு கொடுக்கத்தேவையில்லை. அங்கு அயிரை மீன் குழம்பு சாப்பிடுவதற்காகவே  MLA-க்கள் பலர் வருவார்கள் என்றாலும் நான் ஒரு நாள் கூட அயிரை மீனை  அங்கு சாப்பிட்டதில்லை. ஆனால் மீன் வகைகளில் நெய்மீன் கருவாடும், நெத்திலிக்கருவாடும் எனக்கு இன்னும் பிடிக்கிறது. எந்தவித தயக்கமின்றி சாப்பிடுகிறேன்.
          போனமாதம் டாக்டரிடம் சோதனை செய்யப்போயிருந்த போது, எல்லாம் முடிந்து ரிசல்ட்டைப் பார்த்த டாக்டர்,
“உங்களுக்கு புரதச் சத்து கம்மியாக இருப்பதால் பால் சாப்பிட வேண்டும்”,
 “ஐயோ பால் சாப்பிடமாட்டேன்டாக்டர்”,
“அதோடு மீன் எண்ணெய் சத்து குறைவதாக இருப்பதால் மீன் சாப்பிடவேண்டும்”, “அய்யயோ மீனும் சாப்பிடமாட்டேன்”.
என்னய்யா உன்னோட தொல்லையாகப்போச்சு  என்று நினைத்தமாதிரி அவர்கள் முகம் சொல்லியது .கொஞ்சம் யோசித்துவிட்டு ஒருநாளைக்கு மூன்று வேளையும் ஒமேகா மாத்திரை 1000MG சாப்பிடச் சொல்லிவிட்டார்கள்.
தொடரும்

Thursday, April 11, 2019

உலகின் மூத்த நாகரிகம் வைகை நதி நாகரிகம் !!!


வைகை நதி நாகரிகம் 
கீழடி குறித்த பதிவுகள்
சு.வெங்கடேசன் / விகடன் பிரசுரம்.

வைகை நதி நாகரிகம்
கீழடியில் கண்டுபிடிக்கப்பட்ட வைகை நதி நாகரிகம், மதுரை மக்களை மட்டுமல்ல முழுவதுமான தமிழருக்கான ஏன் இந்தியருக்கான பெருமை. ஆனால் அதனை நிலைநாட்ட முடியாமல் தடுத்து வருகிறது மைய அரசு. தமிழ்நாட்டை ஒரு பொருட்டாகவே அவர்கள் கருதுவதில்லை. இத்தனைக்கும் இந்தியாவில் அதிகபட்ச வரிகள் செலுத்துவது தமிழ்நாடு. சமூகநீதி, வேலைவாய்ப்பு, தனிநபர் வருமானம் இவற்றில் வெகுவாக முன்னேறியிருக்கிறது. சமூகநீதியில் இந்தியாவுக்கே உதாரணமாகவும் செயல்பட்டு வருகிறது தமிழ்நாடு. நம்முடைய பாரம்பரியத்தையும்  நாகரிக வரலாற்றையும், தடுக்க நம்மனைவரும் ஒற்றுமையுடன் செயல்படுவது மிகவும் அவசியம்.
Related image
சு.வெங்கடேசன்
தொல்லியல் துறையில் கீழடியில் கண்டுபிடிக்கப்பட்ட முக்கிய சான்றுகள் வைகை நகை நாகரிகம் ஒரு நகர்ப்புற நாகரிகம் என்பதை தெளிவாக விளக்குகிறது. இதனை விரிவாக எழுதியுள்ள எழுத்தாளர் சு.வெங்கடேசன் குறுகிய காலத்தில் பலரால்  அறியப்பட்டிருக்கிறார் . இவர் எழுதிய இரண்டு நாவல்களான காவல் கோட்டம் மற்றும் வேள்பாரி ஆகியவை சாகித்ய அக்காடெமி விருதுகளைப் பெற்றிருக்கின்றன.
டல்லஸ் டெக்சஸ் நகரில் 2018 ஜூலையில் நடந்த ஃபெட்னா நிகழ்வில் வெங்கடேசன் கலந்து கொண்டு, கீழடி பற்றி ஆற்றிய உரை மகிழ்ச்சியையும் அதிர்ச்சியையும் ஒருங்கே கொடுத்தது. அதன் பின் நான் படித்த இந்தப் புத்தகம்  மேலும் தெளிவாக கீழடி ஆய்வு குறித்த தகவல்களைத் தெரிவிக்கிறது.  
சங்க கால நூலான பரிபாடலில் உள்ள ஒரு பாடலில் , ஒரு பெருமை மிகு மதுரை செய்யுளில் , உலக நகரங்களை ஒரு தராசின் ஒரு பகுதியிலும் மதுரையை மறு பகுதியிலும் வைத்தால் மதுரை தான் தாழ்ந்து வெற்றிபெறும் என்று பாடுவதை புத்தகத்தின் ஆரம்பத்தில் தெரிவித்து மதுரை நாகரீகம் பழமையானது மட்டுமல்ல அது நகர நாகரிகம் என்பதை ஆசிரியர் எடுத்துக் காட்டுகிறார்.
தமிழகத்தின் மூன்று பேரரசுகளான சோழர், சேரர், பாண்டியர் ஆகியவர்களில் பாண்டியனே மூத்தவன். பாண்டிய நாடே முதலில் உருவான நாடு. பாண்டியனின் வேப்பம்பூ மாலையைப்பற்றிக் குறிப்பிட்டு, மீனாட்சியைப் பற்றிச் சொல்கையில் மதுரை நாகரிகம் ஒரு பெண்வழிச் சமூகம் என்பதைச்  சொல்கிறார்.
இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டுகளில் தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் அதிலும் மதுரைக் கல்வெட்டுகள்தான் மிகவும் பழமையானது. எழுத்தும் எழுத்து சார்ந்த அடையாளமும் மதுரையில் நிறையவே உள்ளன.
சிலப்பதிகாரத்தில் பெண்கல்வி குறித்து கோவலனிடம் விளக்கும் பாடலில் சொல்லப்பட்டிருக்கிறது.
பாண்டியனின் பழைய தலைநகர் மணலூர் என்பதுதான் தற்போதைய கீழடியாக இருக்கக் கூடும் என்கிறார்.
வைகையின் கரையில் 256 முதல் 350 கிராமங்கள் இருக்கின்றன. இவற்றில் 293 கிராமங்கள் மிகவும் பழமையானது.
ரோமாபுரியை 2000 ஆண்டுகள் முன் ஆண்ட சீசர் அகஸ்டஸ் காலத்தில் மதுரைக்கு  இருந்த தொடர்பை சில அகழ்வாராய்ச்சியில் கிடைத்த சான்றுகள் நிரூபிக்கின்றன.
இதிலே இன்னொரு தகவல் என்னவென்றால் இறைமகன் இயேசு கிறிஸ்து பிறந்தது ரோமப் பேரரசர் சீசர் அகஸ்டஸ் காலத்தில்தான். அவர் தான் ஆண்ட இஸ்ரவேல் நாட்டில் சென்சஸ் எடுக்க உத்தரவிட்டார். அதோடு மக்கள் தொகை கணக்கெடுக்கும் படி எல்லோரும் அவரவர் ஊருக்குச் செல்லக் கட்டளை பிறந்தது. அப்படியாக அன்னை மரியாளும் ஜோசப்பும் இடம் பெயர்ந்து தங்கள் ஊரான பெத்லகேமுக்குச் சென்றார்கள். அப்பொழுது முழுக்கர்ப்பிணியாக இருந்த மேரிக்கு பிரசவ வலியெடுத்து பிள்ளையை ஒரு மாட்டுத் தொழுவத்தில் பெற்றெடுத்தார். இதன் காலகட்டம் 2019 ஆண்டுகளுக்கு முன் என்று கணக்கிட்டால், நம் மதுரை மன்னர்களின் ரோமானிய உறவுக்கும் அவ்வளவு காலம்தான் என்று விளங்குகிறது.
ஆனால் கீழடி ஆவணங்கள் அதற்கும் பழமையான நாகரிகம் என்றுசான்றுகள்  மூலம் வெளிப்படுத்துகிறது.
ரோமர் கால மதுவினை அந்தக்கால பாண்டியர் பயன்படுத்தியதன் ஆதாரம் மூலம் பாண்டியரின் வசதி வாய்ப்பினை அறிய முடிகிறது.
சிலப்பதிகாரத்தில் கோவலன் மதுரைக்கு வரும்போது, மதுரைக் கோட்டையில் யவன வீரர்கள் பணியாற்றியதைப் பற்றிக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் யவன வீரர்கள் மதுரையில் மட்டும்தான் இருந்திருக்கின்றனர்.
ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனுக்கு யவனப்பெண் ஒருவர் மனைவியாக இருந்ததும் அவளின் அந்தப்புரத்தில் யவனப்பெண் காவலர் இருந்ததும் யவனர் தங்கியிருக்கும் யவனச்சேரி மதுரையில் இருந்ததையும் வரலாறு தெரிவிக்கிறது.
ஏற்றுமதியில் அன்றைய காலக்கட்டங்களிலேயே  தமிழகம் சிறந்து விளங்கியிருக்கிறது. முத்து, மிளகு, பட்டு, கற்பூரம், நவரத்தினங்கள் ஆகியவை அவற்றுள் சில. 
ரோமானியர், பாண்டிய நாட்டு முத்துக்களின் மேல் மிகுந்த ஆசை வைத்திருந்தார்கள். ரோமானியப் பேரரசி கிளியோபாட்ரா முத்துக்களைக் கரைத்துக் குடித்தாள் என்று வரலாறு சொல்கிறது.
அழகன் குளம் கீழடியில், ரோம மதுக்குவளைகள், ரோமரின் காசு, மண்பாண்டங்கள் ஆகியவை கிடைத்துள்ளது பாண்டியருக்கு ரோமருக்கும் இடையே நடந்த வர்த்தகத்திற்குச் சான்றாக உள்ளது.
இந்தியாவில் கிடைத்த கல்வெட்டுகளில் 60% தமிழ்க் கல்வெட்டுகள் ஆகும். அவற்றுள் கிடைத்த 33 பிராமி கல்வெட்டுகளில் 22 மதுரையில் கிடைத்துள்ளன.
இவைகளை வைத்துப்பார்த்தால் வைகை நதி நாகரீகமென்பது உலகின் மூத்த நாகரிகம் என்பதும், அது நகர்ப்புற நாகரிகம் என்பதும், வைகை நதிக்கரை நாகரிகம் இன்னும் பல ஆய்வுகள் செய்யப்பட்ட வேண்டிய ஒன்று என்றும்  தெள்ளத் தெளிவாகிறது.
இதனை மறைக்க அழிக்க நினைக்கும் சதிகளை முறியடித்து  அதற்குத்தடையாக இருக்கும் உள்ளூர் வெளியூர் எதிரிகளைப் புறக்கணித்து, தமிழர் வரலாற்றை மேலும் வெளிக்கொணர  தமிழர் ஒன்றுபட்டு உழைத்தால் ஒழிய தமிழக பண்டைய வரலாறு மறைக்கப்படும், மறக்கப்படும்.
- முற்றும்.


பின்குறிப்பு அல்லது முன்குறிப்பு
சு வெங்கடேசன் போன்றவர் நம் பாராளுமன்றத்திற்குப்  போவது நம் பாரம்பர்யப் பெருமைகளைக்  காக்க உதவும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை .மேலும் மதுரை மக்களுக்கு பல நன்மைகள் விளையும் என்பதால் இப்படிப்பட்ட ஒரு எழுத்தாளரை , சமூக பணியாளரை , எளிய மனிதரை , அவர் சார்ந்துள்ள இயக்கம் அல்லது கூட்டணி என்பதற்கும் மேலாக நினைத்து பாராளுமன்றம் அனுப்ப எல்லா முயற்சிகளையும் எடுக்க வேண்டுகிறேன் .