Monday, January 29, 2018

என்னுடைய முதல் பள்ளியும் ஆசிரியர்களும் !!!
வேர்களைத் தேடிய பயணம்: பகுதி 3
இதற்கு முந்திய பகுதியைப்படிக்க  இங்கே சொடுக்கவும்.
http://paradesiatnewyork.blogspot.com/2018/01/blog-post_22.html
இந்து நடுநிலைப்பள்ளி  தற்போது 

                        காரை மெதுவாக ஒட்டிச் செல்லும்படி கூறினேன். முபாரக் அவர் தம்பி இஸ்மாயில் கடையைத் தாண்டி கார் சென்றது. அவர்கள் இருவரும் என்னுடன் படித்தவர்கள் . ஒருவரையும் அங்கு காணவில்லை. இரவு உணவு முடித்து சில நிமிடங்கள் என் அப்பா சென்று உட்காரும் கமால்  அவர்களின் ஜவுளிக்கடையில் அவர் இல்லை. கமால் கடையில் துணி எடுத்து முத்து  டெய்லர் தைத்த உடைகளைத்தான் நான் என் தம்பிகள் மற்றும் என் அப்பா ஆகியோர்  அணிவோம்.
          அடுத்து வந்த அப்பாஸ் கடை, அவர் தம்பி ரஹீம் கடைகளும் அடையாளம் தெரியவில்லை. இங்குதான் பல ஆண்டுகளாக பலசரக்கு வாங்குவோம். ரஹீம் சின்ன வயதிலேயே இறந்துவிட்டார். அவரது மகன் இப்ராகீம் இப்போது துபாயில் இருக்கிறார். அவ்வப்போது முகநூலில் வருவார். அடுத்து மூக்கையா மரக்கடை அவர் கடையில் வேலை பார்த்த மலையான் கொண்டு வந்து கொடுக்கும் மா இஞ்சி ஆகியவை ஞாபகத்துக்கு வந்தன. மூக்கையா நாடார் இறந்தபின் அவர் மகன் கண்ணதாசன் பொறுப்பேற்றார் .
          போஜராஜா ஜவுளிக்கடையைக் காணோம். சுரேஷ், ஆனந்த் என்ன செய்கிறார்கள் என்று தெரியவில்லை. NVS கடையும் இல்லை. அடுத்தமுறை இன்னும் அதிக நேரம் செலவழிக்க வேண்டும். அடுத்த வலதுபுறம் திரும்பச் சொன்னேன். மூலைச் செட்டியார் கடை, கண்ணாடித்தாத்தா கடை எல்லாம் ஒன்றுமேயில்லை. வலதுபுறம் RP சைக்கிள் கடை என்று பல கடைகளைக் காணோம். இடதுபுறம் TAS  கடையும் இல்லை. அதன்பின் இந்து நடுநிலைப்பள்ளி வந்தது. போடி ஜமீன்தாரின் அந்தக் கட்டடம் பராமரிப்பு இல்லாமல் பாழடைந்து கிடந்தது. ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை நான் படித்த இடம் பல பழைய நினைவுகளைக் கண்முன் நிறுத்தியது.
          என்னுடைய ஆசிரியர்களின் பெயர்கள் எனக்கு  நினைவு இருக்கிறதா என்று பார்ப்போம். கம்பீரமான எட்டாம் வகுப்பு வாத்தியார் என் அப்பா, ஏழாம் வகுப்பு ஆசிரியரும் என் தமிழாசிரியருமான புலவர் தேவகுரு,  ஆறாம் வகுப்பு ஜொஹரா டீச்சர், ஐந்தாம் வகுப்பு ரஹீம் வாத்தியார்,   நான்காம் வகுப்பு வீரசின்னன் வாத்தியார், மூன்றாம் வகுப்பு குட்டை வாத்தியார் ஜேம்ஸ், இரண்டாம் வகுப்பு முத்துலட்சுமி டீச்சர், என் ஒன்றாம் வகுப்பு  ஆசிரியர் என் அம்மா சுசிலா டீச்சர் ஆகியோர் வேலை பார்த்த இடம் . இவர்கள் தவிர தலைமை ஆசிரியர் ராமு வாத்தியார், சந்திரன் வாத்தியார், என் சித்தப்பா ஜீவா வாத்தியார் அம்மா பொண்ணு டீச்சர், கோவிந்தராஜன் வாத்தியார்,  கைத்தொழில் ராஜு வாத்தியார் என்று  எல்லோரும் சிறந்த ஆசிரியர்கள். ஆண் ஆசிரியர்களை வாத்தியார் என்றும் பெண் ஆசிரியைகளை டீச்சர் என்றும் கூப்பிடுவது எப்போது ஆரம்பித்தது என்று தெரியவில்லை ஆனால் இன்றும் தொடர்கிறது என்றுதான் நினைக்கிறன் . வாத்தியார் பிள்ளை அதுவும் அம்மா அப்பா இருவரும் வேலை பார்க்கும் பள்ளி என்பதால் என் மேல் எத்தனை கட்டுப்பாடுகள், எதிர்பார்ப்புகள் இருந்தன என்பதை நினைத்தால் மலைப்பாக இருந்தது.
          கட்டிடத்தின் இடதுபுறம் ஒரு சிறு மண்டபம் போல இருந்தது கிருஷ்ணன் கோவிலுக்கு அப்படி ஒரு இடம் இருக்கிறது என்று நினைக்கிறேன். கிருஷ்ண விக்கிரகம் பள்ளியின்   உள்ளேதான் இருக்கும்.ஒரு ட்ரம்மில் எண்ணெய் ஊற்றி அதில் போட்டு வைத்திருப்பார்கள் .கிருஷ்ண ஜெயந்தி விழா விமரிசையாக நடக்கும் போதுதான் அதனை வெளியே எடுப்பார்கள். அந்த விழாவைப்பற்றி அப்புறம்   சொல்கிறேன்.  பள்ளியின் உள்ளே நான் வளர்த்த முருங்கை, புங்கமரம் என்று ஒன்றும் இல்லை.  
          அதன் நேர் எதிரே உள்ள சின்னப்ப நாடார் தெருவில் நுழைந்தேன். இடதுபுறம் இருந்த பாப்பான் கிணறு தூர்ந்து போய்  இருந்தது. வலதுபுறம் இங்கே குப்பை போடக்கூடாது என்று எழுதப்பட்டிருந்த போர்டின் கீழே இருந்த பெரிய சாம்பல் நிற குப்பை மேடு அங்கில்லை. தெரு முழுதும் சிமிண்ட் போடப்பட்டிருந்தது மகிழ்ச்சியாக இருந்தது. சந்தானம் ஹெட்மாஸ்டர் இருந்த வீடு , டாக்டர் பரமசிவம் கிளினிக், நாங்கள் முதலில் குடியிருந்த வத்தலக்குண்டு ராவுத்தர் வீடு  இதிலெல்லாம்  யார் இருக்காங்க என்று தெரியவில்லை.
          அதுக்கு நேர் எதிரில் பவுனம்மா வீடு  இருந்தது. அது எனக்கு சொந்த வீடு போல, பவுனம்மா, அத்தா, நன்னா, நன்னி, சேட்டு மாமா, பஷீரா காளா, அப்பாஸ் மாமா, அக்கீம் என் நண்பன் அப்துல்லா ஆகிய பலபேர் இருந்து வளர்ந்த வீடு அது.
          உள்ளே நுழைந்தேன், என்ன ஆச்சரியம் பவுனம்மா வெளியே வந்ததோடு என்னை அடையாளமும் கண்டு கொண்டார். "சேகரு வாப்பா, அமெரிக்காவிலிருந்து எப்ப வந்த ?" என்றார்கள்.
தொடரும்>>>>>>>>
அழைக்கிறேன் :

                   நியூயார்க் தமிழ்ச்சங்கம் நடத்தும் பொங்கல் விழா வரும் சனிக்கிழமை ( Feb  3,2018) மாலை 2:30 மணி அளவில் நடக்க விருக்கிறது , பொங்கல் விருந்தும் உண்டு .
அடியேன் பங்கு கொள்ளும் "கவிதை பாடு குயிலே" என்ற   கவிதை அரங்கமும் இருக்கிறது .நண்பர்கள் அனைவரும் வந்து கலந்து கொள்ளும்படி அழைக்கிறேன். வாருங்கள் சந்திப்போம்.


Wednesday, January 24, 2018

நியூயார்க்கில் வாழும் எட்டாவது வள்ளல் !!!!!!!!!!!

Image result for bala swaminathan stony brook
Bala and Praba
           ஹார்வர்ட் தமிழ் இருக்கைக்கு நிதி திரட்டும் வண்ணமாக ஜனவரி ஏழாம் தேதி,  நியூயார்க்  , லாங் ஐலண்டில் உள்ள அக்பர் ரெஸ்டாரண்டில் நடைபெற்ற ஒரு மதிய உணவு நிகழ்ச்சியில்( Lunch Banquet) அடியேனும் மனைவியுடன் கலந்துகொண்டேன். தலைக்கு $250  என்ற போதிலும் நான் எதிர்பார்க்காத வண்ணம் நியூயார்க் வாழும் தமிழர்கள் பெருந்திரளாக குடும்பம் குடும்பமாக கலந்து கொண்டனர். 
Image result for bhuvana karunakaran
Bhuvana Karunakaran


இதற்கு பெரு முயற்சி எடுத்தவர்கள் நண்பர் பாலா சுவாமிநாதனும், புவனா கருணாகரன் அவர்களும். அவர்களோடு இணைந்து நியூயார்க் தமிழ்ச்சங்க தலைவர் அரங்கநாதன் , இலங்கைத்தமிழர் சங்கமான முத்தமிழ்  மன்றத்தின் தலைவர் மருத்துவர் நந்தகுமார் , தமிழ்நாடு பவுண்டேஷன் தலைவர் டாக்டர் குப்தா ஆகியோர் கொடுத்த ஆதரவுடன் சிறப்பாக நடந்து முடிந்தது .
தமிழ் இருக்கை


 சிறப்பு  அழைப்பாளர்களாக ஹார்வர்ட் தமிழ் இருக்கையை முன்னெடுத்து அதனை ஒரு உலகத்தமிழர் இயக்கமாக மாற்றிய பெருமை கொண்ட மருத்துவர் சம்பந்தம் , மருத்துவர் ஜானகிராமன், ஹார்வர்ட் தமிழ் பேராசிரியர் ஜானதன் ரிப்ளி ஆகியோர் கலந்து கொண்டனர் .இந்த நிகழ்வு மூலமாக மொத்தம் ஒண்ணே கால் லட்சம் டாலர்கள் சேகரிக்கப்பட்டது .எங்களுடைய இம்மானுவேல் தமிழ் ஆலயம் சார்பாகவும் ஒரு தொகை வழங்கப்பட்டது.
தமிழ் இருக்கை

               ஆனால் அதிசயவண்ணமாக ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டது.அது என்னவென்றால் லாங் ஐலண்டில் இருக்கும் சிறப்பு வாய்ந்த பல்கலைக்கழகமான ஸ்டோனி ப்ரூக்கில் நண்பர் பாலா சுவாமிநாதன் தன் சொந்த செலவில் ஒரு தமிழ் இருக்கையை உருவாக்கி இருக்கிறார் என்பதே அந்தச்செய்தி. இவர் ஏற்கனவே ஹார்வர்ட் தமிழ் இருக்கைக்கு கொடுத்தைப்பற்றி உங்களிடம் சொல்லியிருக்கிறேன் . தன் கொடையால் அரசையும் மிஞ்சிவிட்ட நண்பர் பாலாவுக்கு , அரங்கநாதன் , புவனா முயற்சியில் ஜனவரி 14ஆம் தேதி பொங்கல் தின மாலையில் ஹெரிடேஜ் இந்தியா என்ற உணவகத்தில் ஒரு சர்ப்ரைஸ்  பார்ட்டி கொடுத்தோம் .அதிலும் நண்பர்கள் திரளாய் வந்து பாலாவை பாராட்டு மழையில் நனைய விட்டனர் .அந்தச்சமயத்தில் அடியேன் வாசித்த கவிதையை கீழே கொடுக்கிறேன்    
With Ranga and Bala

மூச்சுக்கொடுத்த ஆண்டவனுக்கும்
பேச்சுக் கொடுத்த  தமிழ் அன்னைக்கும்
வாய்ப்புக் கொடுத்த அவைக்கும்
வணக்கங்கள் பலப்பல

பொங்கல் திருநாளில்
உங்கள் உள்ளத்திலும் இல்லத்திலும்
மகிழ்ச்சி பொங்கட்டும்
பொங்கல் வாழ்த்துக்கள் !!!

அதன் காணொளியைக்காண இங்கே க்ளிக்கவும்
                                                 
                                                  Courtesy: Pastor Johnson Rethinasamy.

பாலாவுக்கு நன்றி சொல்லி
பாடவந்தேன் இந்த பரதேசி !

தட்ட வேண்டிய இடங்களில் தட்டுங்கள் - கைகளைத்தான்,
குட்ட வேண்டிய  இடங்களில் குட்டுங்கள் - மேசையைத்தான்.

சங்கம் வளர்த்த
தங்க மாமதுரையில்
அங்கம் வளர்த்தவன் நான்!
(ஆனால் அவ்வளவாக வளரவில்லை)

ஆனால் பாலாவோ அதே
சங்கம் வளர்த்த
தங்க மாமதுரையில்
அறிவை வளர்த்தவர்
அதுதான்  இப்போது
வளர்ந்து கிளர்ந்து உயர்ந்து
தமிழை வளர்க்கிறது!

தமிழ்ப்பணி செய்வதில்
பாலா ஒரு கெத்து வெட்டு!
ஆனால் இந்தப்
பரதேசி ஒரு வெத்துவேட்டு!

மதுரை மண்ணில் ஒருமுறை
வலம் வந்தாலே
செம்மண் புழுதியும் அப்பிக் கொள்ளும்
செம்மொழித் தமிழும் ஒட்டிக் கொள்ளும் 
- இதில் சிக்கிய ஒருவர்தான் ஜானத்தன் ரிப்ளி

எனில் அங்கேயே
பிறந்து தவழ்ந்து
எழுந்து இருந்து
வளர்ந்து உயர்ந்த
பாலாவை தமிழ் சும்மா விடுமா?

இந்த பாலா யார்?

பள்ளி கொண்ட பெருமாள் சுவாமி
பாருக்கே தெரியும் ஆனால்
பள்ளி கண்ட பெருமாள் சுவாமி
யாருக்குத் தெரியும்? அது நம்ம
பாலா சுவாமிதான்
அவர் பள்ளி கொண்டது திருப்பாற்கடலில்
இவர் பள்ளி கண்டது அட்லாண்டிக் கடலில் (ஸ்டோனி புரூக்  )

முதல் இடை கடைச்சங்கங்கள் தெரியும்
இப்போது அமைந்திருப்பது கடல்ச் சங்கம் இந்தக்
கடற்சங்கத்தை அமைத்த
எட்டாவது வள்ளல்
என் தோழன் பாலா

பாலா ஒரு சிங்கம்
வீறு கொண்டு நடக்கும் சிங்கமல்ல - ஆனால்
நடக்குமிடமெல்லாம் தமிழ் முத்திரை பதிக்கும்  சிங்கம்
மீசை முறுக்கி வீரம் காட்டும் சிங்கமல்ல, தமிழ் மேல்
ஆசை காட்டி விவேகம் வளர்க்கும் சிங்கம்
பெருமை பேசி கர்ஜிக்கும் சிங்க மல்ல
நாக்கை நாசூக்காகக் கடித்து தமிழ் நலன் பேசும் சிங்கம்

பாலா
புகழ் உனக்குப் பிடிக்காது. ஆனால்
புகழுக்கு உன்னை ரொம்பப்பிடிக்கும்.


இப்போது பிரபா பற்றி (பாலாவின் மனைவி)
பிரபாவின் கண்களில் எப்போதும்
ஒரு சிறு மின்னல் மறைந்திருக்கும்
அதில் ஒரு குறு நகை உறைந்திருக்கும்
அது யாரிடமிருந்து யாருக்கு வந்தது?
பாலவிடமிருந்து பிரபாவுக்கா? இல்லை
பிரபாவிடமிருந்து பாலாவுக்கா?

இவரைப் பார்க்கும்போது
அள்ளிக்கொடுக்கும் பாலாவுக்குச்
சொல்லிக் கொடுப்பவர் போலவே தெரிகிறது.

ஆம்
இவரைப் பார்த்தால்
தட்டிக் கேட்பவர் போலத் தெரியவில்லை
தட்டிக் கொடுப்பவர் போல்தான் தெரிகிறது.
பிரபா, இதுதான்
உன் தமிழ் மரபா?

மனைவி அமைவதெல்லாம்
இறைவன் கொடுத்த வரம் என்பர் -ஆனால்
பாலாவுக்குப் பிரபா
அன்னை கொடுத்த வரம்
தமிழ் அன்னை கொடுத்த வரம்!

தமிழ்ச்சங்கம் கண்டவன் பாண்டியன்
தமிழ்ப்பள்ளி கண்ட பாலாவும் பாண்டியன் தான், அதைப்
பாட்டில் சொன்ன பரதேசியும் பாண்டியன் தான்.

பொங்கலின் இனிப்பு போல
உன் வாழ்க்கை என்றும் இனிக்கட்டும்
தமிழின் சிறப்பு போல
உம் வாழ்க்கை என்றென்றும் சிறக்கட்டும்
தையும் பிறந்தது
புது வழிகளும் திறக்கட்டும்
தமிழ் இருக்கைகளும் அமையட்டும்.

ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும்
ஆதவன் மறைவதில்லை
ஆயிரம் மைல்கள் கடந்து வந்தாலும் நம்மில்
அன்னைத் தமிழ் குறைவதில்லை

தமிழால் இணைவோம்
தமிழாய் முனைவோம்
தமிழாய் வாழ்வோம்

வாழிய செந்தமிழ்
வாழ்க நற்றமிழர்
வாழிய பாரத  மணித்திரு நாடு
வாழிய புகுந்த அமெரிக்க நாடும்
நன்றி வணக்கம்

Monday, January 22, 2018

தாத்தாவின் கதை

வேர்களைத் தேடிய பயணம்: பகுதி 2
இதற்கு முந்திய பகுதியைப்படிக்க  இங்கே சொடுக்கவும்.
http://paradesiatnewyork.blogspot.com/2018/01/blog-post_15.html
           
In front of the School 
    ஆசிரியைகள்  கலவரப்பட்டு வர , எனக்கு கொஞ்சம் சிரிப்பு வந்தாலும் அவர்களை சங்கடப்படுத்தி விட்டோமே என்று வருத்தமாக  இருந்தது .என் அருகே வருவதற்கே தயங்கினார்கள் .அதன்பின் நான் கல்வி அதிகாரி இல்லை  என்று சொன்னபின்தான் அவர்களுக்கு நிதானம் வந்தது .நான் யார் என்பதை சொல்லி முடித்ததும் கொஞ்சம் என் மேல் மரியாதையும் வந்தது அவர்கள் முகத்தில் தெரிந்தது.அந்தளவுக்கு எங்களுக்குகெல்லாம் பெருமை சேர்த்த என் தாத்தாவின் கதையை கொஞ்சம் கேட்கலாமா?


"செபா நீ என் கூட வந்து விடு" என்று சந்தியாகுப் போதகர் சொன்னதைக் கேட்டு திடுக்கிட்டார் செபஸ்டியன். செபஸ்டியனுக்கு வாலிப வயது பள்ளியிறுதியை பசுமலையில் முடித்து அங்கேயே ஆசிரியப்பயிற்சியையும் அப்போதுதான் முடித்திருந்தார்.  திருமணம் ஆயிருந்தது. ஆனால் சந்தியாகுப் போதகர் கூப்பிடும்போது தட்ட முடியுமா?  பசுமலையில் இருந்த அமெரிக்கன் கல்லூரியில் தான் பார்த்த கணக்குப் பேராசிரியர் என்ற பதவியை விட்டுவிட்டு இறைப் பணியும் சமூகப்பணியும் செய்வதற்கு இடம்மாறி வத்தலக்குண்டு சென்றவர் அவர். வத்தலக்குண்டில் இருந்த திருச்சபைக்கு ஆயராக அருட்பொழிவு பெற்றதோடு தான் அன்போடும் எதிர்பார்ப்பில்லாமலும் செய்த அனேக மக்கள் பணியால் பொதுமக்களின் மரியாதையையும் ஒருங்கே பெற்றிருந்தார். எனவே வத்தலக்குண்டு நகர்மன்றத்தலைவராக ஒருமித்த கருத்துடன் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். மிகுந்த செல்வாக்குடன் விளங்கிய அவர் நல்ல கவிஞரும் கூட. அவர் எழுதிய கீர்த்தனைப் பாடல்கள் தமிழ் பேசும் திருச்சபைகளில் பாடப்பட்டு மிகுந்த கீர்த்தியினைப் பெற்றவர். எல்லாவற்றுக்கும் மேலாக செபஸ்டியனின் சொந்த தாய் மாமா. பெற்ற பிள்ளைகளை விட தன் தத்துப் பிள்ளை போன்ற செபஸ்டியனினிடம் மிகுந்த அன்பு வைத்திருந்தார் சந்தியாகு போதகர் .

A.Sebastian 

"செபா உனக்கு ஒரு உன்னதமான வேலை காத்திருக்கிறது சீக்கிரம் வந்துவிடு”, என்று கூறிச்சென்றார். அவருடைய வார்த்தையை யாரும் தட்டமுடியாது  என்பதால் தன் பெற்றார் உற்றாரைப் பிரிந்து மனைவியுடன் வத்தலக்குண்டு வந்து சேர்ந்தார் செபஸ்டியன். மதுரை விட்டு வர நேர்ந்தாலும் வத்தலக்குண்டும் நல்ல நகர்தான் என்று எண்ணி வந்தவர்க்கு அங்கே அதிர்ச்சி காத்திருந்தது. ஆசிரியர் வேலை வத்தலக்குண்டில் அல்ல, அதனருகில் இருந்த தேவதானப்பட்டி என்ற ஊரில். மனதைத் தேற்றிக்கொண்ட செபஸ்டியன், "எந்தப் பள்ளியில்?" என்று கேட்டதற்கு “அங்கு நீதான் உருவாக்க வேண்டும்”, என்று அதிர்ச்சியினை மேலும் கூட்டினார்.
ஆனாலும் எந்த மறுமொழியும் சொல்லாது மனைவியுடன் தேவதானப்பட்டி வந்து சேர்ந்தார் செபஸ்டியன். ஊரில் ஒரு இந்து ஆரம்பப்பள்ளி இருந்தது ஆனால் அது பரமசிவம் அய்யர் என்ற உயர்  ஜாதி அய்யர் ஒருவரால் ஆரம்பிக்கப்பட்டு சாதி பிள்ளைமார்களால் ஆதரிக்கப்பட்டு இருந்தது. அந்த சிறிய அழகான ஊர் சாதியினால் பிளவுபட்டு இருந்தது. வடக்குத்தெருப் பக்கம் தேவர்கள், நடுவில் பிள்ளைமார்கள்,  நாடார்கள் மேலும் மேட்டுத்தெருவில் தாழ்த்தப்பட்ட அரிசன மக்கள் வசித்து வந்தனர். அவர்கள் பெரும்பாலும் கூலிவேலை செய்யும் பண்ணைக்காரர்கள்.
ஊரில் நன்கு வரவேற்கப்பட்ட செபஸ்டியன் அவர்களை ஒவ்வொரு சாதியினரும் தங்கள் பகுதியில் பள்ளியினை ஆரம்பிக்க வேண்டினர். ஆனால் செபஸ்டியன் தேர்ந்தெடுத்த இடம், தெற்குத்தெருவுக்கு எதிரே  மெயின் ரோட்டுக்கு மறுபுறம். ஏனென்றால் அவர்களுடைய வாழ்க்கை முறையினைப் பார்த்து அதிர்ந்து போனவர், மற்றவர் எப்படியும் முன்னேறி விடுவார்கள் தாம் முன்னேற்ற வேண்டியது இவர்களைத்தான் என்று நினைத்துக் கொண்டார்.
ஊர் மக்கள் அதற்கு பலத்த எதிர்ப்புத் தெரிவித்ததோடு மற்ற எந்த ஜாதியினரும் அங்கு வரமாட்டோம் என்று தெரிவித்தார்கள். எந்த உதவியினையும் செய்ய முடியாதென்றும் கையை விரித்தார்கள்.
ஆனால் தனியாக நின்று, தன் நண்பரும் புரவலருமான கொடைக்கானல் ஜெயராஜ் நாடாரின் உதவியோடு ஒரு சிறு இடத்தை வாங்கி ஒரு ஓட்டுப் போட்ட இடத்தில் பள்ளியினை ஆரம்பித்தார். அதற்குப் பின்னால் ஒரு சிறு குடிசையினைப் போட்டு தங்கள் புதுக் குடித்தனத்தையும் அங்கே ஆரம்பித்தார்.
முதலில் ஊர் மக்கள் அவரை வெறுத்தாலும் பின்னர் அவரைத் தேடி வர ஆரம்பித்தனர். ஏனென்றால் அவருடைய ஆங்கில அறிவுக்கு இணையான ஒருவர் அந்த பதினெட்டுப் பட்டியில் ஒருவர் கூட இல்லை. பொதுமக்களுக்கு எந்தப் பிரச்சனை வந்தாலும் தீர்த்து வைப்பதில் வல்லவராக இருந்தார். போலீஸ் வரை போனாலும் வெள்ளைக்கார போலீஸ்காரர்களிடம் பேசி சரி செய்தார். கலெக்டர் போன்ற வெள்ளைக்கார துரைமார்களிடத்தில் சரிசமமாக உட்கார்ந்து சரளமாகப் பேசி ஊருக்குத் தேவையான பல காரியங்களை செய்து கொடுத்தார். 
அந்தப்பகுதிக்கு வரும் வெள்ளைக்காரர்கள் எல்லாக் காரியத்துக்கும் அவரையே கூப்பிட்டு  அனுப்பினார்கள். உயரமான செபஸ்டியன் அவர்களுக்கு கிட்டத்தட்ட இணையான நிறத்தில் எப்போதும் சூட் அணிந்து கம்பீரமாக காட்சியளிப்பார். எனவே ஊர் விவகாரங்களில் பலமுறை அவரையே கேட்டு முடிவு செய்தனர். ஊர்க்காரர்கள் ‘பெரிய வாத்தியார்’, என்று அவரைக் கொண்டாடினர்.
ஆனால் பள்ளி ஆரம்பிக்கப் பட்டும் தெற்குத் தெருவிலிருந்து யாரும் பள்ளிக் கூடத்திற்கு வரவில்லை. அதனைப்பார்த்து எந்தத் தயக்கமும் இல்லாமல் தெற்குத் தெருவில் நுழைந்து அங்குள்ள ஏழை மக்களிடம் மிகவும் சகஜமாக பழகி, படிப்பின் முக்கியத்துவத்தை எடுத்துச் சொல்லி பிள்ளைகளை அவரே சென்று அனுதினமும் அழைத்து வந்தார். கொஞ்சம் கொஞ்சமாக பள்ளிக்குப் பிள்ளைகள் வர ஆரம்பித்தனர். அங்கு படித்தவர்கள் மட்டுமல்ல பிற பள்ளிக் கூடத்தில் படித்தவர்களும் மேற்படிப்புக்கு அவரிடம் வந்த போது பலரையும் பசுமலையில் உள்ள உயர் நிலைப்பள்ளியில் சேர்த்துவிட்டார். அவர்களில் பலபேருக்கு ஆசிரியப் பயிற்சியும் கொடுக்க வைத்து பல ஆசிரியர்களை உருவாக்கினார். அதுமட்டுமில்லாமல் ஆசிரியப் பணியே சிறந்த பணியென்று எண்ணி தனக்குப் பிறந்த ஐந்து பெண்கள், மூன்று ஆண்கள் என எட்டுப் பேரையும் ஆசிரியப் பணிக்கெனவே அர்ப்பணித்ததோடு அவர்களில் கடைசிப்  பெண்ணைத்தவிர எல்லோருக்கும் ஆசிரியர்களையே திருமணமும் செய்து கொடுத்தார். அத்தோடு பெண்பிள்ளைகளைத்தவிர, தன்னுடைய மூன்று ஆண் மகன்களும் தேவதானப்பட்டியிலேயே இறுதிவரை பணியாற்ற வேண்டும் என்ற உத்தரவாதத்தையும் வாங்கிக் கொண்டார். ஊரில் உள்ள மக்கள் புரிந்து கொள்ளவும் , இலகுவாக கூப்பிடவும் ஏதுவாக தம் பிள்ளைகளுக்கு ஆங்கிலப்பெயர்களை தவிர்த்து   ஜெபவதி, ரூபவதி, லீலாவதி , இந்திரா , ஜெயராஜ் , தியாகராஜன் , ஜீவராஜ் என்ற பெயர்களைச்  சூடினார் . தான் கட்டிய  பள்ளியையையும் சி எஸ் ஐ நிறுவனத்திற்கு கொடுத்துவிட்டார் .
ஜெயராஜ் நாடாரின் நட்பினை மெச்சும் விதத்தில் தன் மூத்த மகனுக்கு ஜெயராஜ் என்றும் பெயர் சூட்டி மகிழ்ந்தார். அந்த எளிய மனிதரின்  காலடியில் நிலங்களையும், பணத்தையும் கொட்டுவதற்கு பலர் வந்த போதும் மறுத்து தன் இறுதிகாலம் வரையும் வாடகை வீட்டில் இருந்து மறைந்தார் . தன்னுடைய இறுதிச் செலவுக்குக் கூட மாதா மாதம் என் வீட்டிற்கு வந்து என் அப்பாவிடம் பணம் கொடுத்து வைத்தார். அத்தகைய மகானின் பேரன் என்று சொல்லிக்கொள்வதில் எனக்கும் பெருமைதான் .
தாத்தா நினைவாக பேரர்கள் யாருக்கும் அந்தப்பெயர் வைக்கப்படாவிட்டாலும் என் கடைசித்தம்பி  ராஜபாஸ்கரன் அவனுடைய மூத்த மகனுக்கு செபஸ்டியன் என்ற பெயரை சூட்டியிருக்கிறான் .அவனை நான் ஒவ்வொருமுறை செபா என்று கூப்பிடும்போதும் தாத்தா நினைவு வந்து போகும் .
 இப்போது பள்ளி முழுவதிலும் பிள்ளைகள் நிரம்பி இருந்ததை பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது. இதற்கு முன் இருந்த பள்ளி இந்து நடுநிலைப்பள்ளி ஒன்றுதான். அதற்குப் பின், கள்ளர் துவக்கப்பள்ளி, அரசு உயர்நிலைப்பள்ளி ஆகியவை ஒவ்வொன்றாக  வந்தன.ஆசிரியர்களிடம் விடை பெற்று காரில் ஏறி அப்படியே மெதுவாக ஓட்டச்சொன்னேன். தேவதானப்பட்டி மெயின் ரோட்டில் கார் சென்றது  .
தொடரும்

Thursday, January 18, 2018

ஊனமற்றவர்களை வைத்து நடக்கும் பிசினஸ் !!!!

படித்ததில் பிடித்தது

ஏழாம் உலகம் - ஜெயமோகன் - கிழக்கு பதிப்பகம்

Related image

            இந்து மத நம்பிக்கையில் மொத்தம் ஏழு உலகங்கள் இருக்கிறதாம். நமக்கு நன்கு தெரிந்த (?) சொர்க்கம், நரகம் தவிர இன்னும் பல உலகங்கள் இருக்கின்றனவாம். ஆனால் இந்தப் புதினத்திற்கு "ஏழாம் உலகம்" என்று பெயர் வைத்தது, நாம் இருக்கும் இந்த உலகத்திலேயே நமக்குத் தெரியாத பல உலகங்கள் இருக்கின்றன என்று நமக்குத் தெரியப்படுத்துவதற்காகத்தான். ஜெயமோகன், அப்படிப்பட்ட நாம் பார்க்காத, அதிகம் தெரியாத ஒரு உலகத்தை நம் கண்முன்னால் கொண்டுவரும்போது அது ஆச்சரியத்தை மட்டுமல்ல அதிர்ச்சியையும் அளிக்கிறது.

Image result for naan kadavul

          "நான் கடவுள்" என்ற பாலாவின் திரைப்படத்திற்கு ஜெயமோகன் வசனம் எழுதினார் என்பது பலருக்கு தெரிந்திருக்கும். ஆனால் அந்தப் படத்திற்கு மூலக்கதை இந்தப் புத்தகம்தான் என்பது எனக்குப் புதிய செய்தி.
          கதை முழுதும் நடக்கும் உரையாடல்கள் மலையாளமும் தமிழும் கலந்த நாகர்கோவில் பாஷையில் வருகிறது. பல இடங்களில் அர்த்தம் புரியாது என்பதாலேயே பின் இணைப்பாக அந்த வார்த்தைகளுக்கு தமிழ் அர்த்தத்தைத் தந்திருக்கிறார்.
          இனி நாவலின் சாராம்சங்களை வழக்கம் போல் புல்லட் பாயிண்டில் பார்ப்போம்.
Related image
Jeyamohan

1)   உடல் ஊனமுற்றவர்கள் மற்றும் குறைப் பிறவிகளை வைத்துக்கொண்டு சிலர் வியாபாரம் செய்கிறார்கள். அவர்களை உறுப்படிகள் என்று அழைக்கிறார்கள்.
2)   பல இடங்களில் நடக்கும் திருவிழாக்களுக்கு அவர்களை அழைத்துச் சென்று, பிச்சையெடுக்க வைத்து அதன் கலெக்சன் மூலம் லாபம் சம்பாதிக்கிறார்கள்.
3)   இதில் ஈடுபட்டிருக்கும் ஈனப்பிறவிகள் அவர்கள் உறுப்படிகளை அடிக்கடி வாங்கி விற்கும் வேலையிலும் ஈடுபடுகிறார்கள்.
4)   ஒவ்வொரு உறுப்படியின் விலை பத்தாயிரத்திலிருந்து பல லட்சம் வரை  பேரம் பேசப்படுகிறது.
5)   அதுமட்டுமல்ல இவர்களுக்கு கீழே இருக்கும் குறைப் பிறவிகளுக்குள் உடலுறவை உண்டாக்கி மேலும் குறைக் குழந்தைகளை உருவாக்கும் கொடுமையும் நடக்கிறது.
6)   பழநியில் நடக்கும் தைப்பூச விழாவிற்கு கர்நாடகா மற்றும் நாக்பூர் போன்ற தூர இடத்திலிருந்தும் இப்படிப்பட்டவர்களை கொண்டு வந்து இறக்குகிறார்கள்.
7)   அது மட்டுமல்லாமல், திருவிழா சமயத்தில் கள்ளச் சாராயம், கஞ்சா விலைமாதர் சப்ளையும்  வெகுவாக நடக்கிறது. அதோடு திருடர்களும் வந்து கூடுகிறார்கள்.
8)   இந்த பிஸினெஸ்  செய்யும் முதலாளிகளை மிரட்டியும் உருட்டியும் போலீஸ்காரர்களும் தங்கள் பங்குகளை வாங்கிக்  கொள்கிறார்கள்.
9)   அதைவிடக் கேவலம் அந்தக்குறை உருப்படிகள் பெண்களைத் தூக்கிக் கொண்டு போய் போலீஸ்காரர்கள் உடலுறவு செய்வதும் நடக்கிறது என்பதை நினைத்தால் வாந்தி வருகிறது. இரண்டு காலும் இல்லாதவர்கள் அல்லது கையிரண்டும் இல்லாதவர்கள் ஆகியோர்களும் இதிலிருந்து தப்ப முடிவதில்லை.
10)               அதற்கும் மேல் ஆஸ்பத்திரியில் யாருக்காவது இதயமோ கிட்னியோ தேவைப்பட்டால் இந்த ஊனமுற்றவர்கள் முதலாளிகளால் விற்கப்படுகிறார்கள்.
11)               சமூக சேவை மற்றும் கம்யூனிஸ்ட்டுகள் பேரில் அல்லது தன்னார்வ இயக்கங்களின் பேரிலும் இந்தச் சுரண்டல் நடப்பதை நினைத்தால் நெஞ்சு கொதிக்கிறது.
12)               அவர்கள் மத்தியிலும் குழு, குடும்பம், அன்பு பரிவு, வாழ ஆசை என்பதையும் பல இடங்களில் ஆசிரியர் எடுத்துக்காட்டியுள்ளார்.
13)               அதோடு பிச்சையெடுக்கும் பிச்சைக் காரர்கள் வருவோர், போவோரை, பரிதாபமாக பிச்சையோடு அணுகுவதும் ஆனால் அவர்கள் பின்னால் பழித்துப் பேசுவதும் நடக்கிறது.
14)               இதைவிடக் கொடுமை என்னவென்றால் சிலர் சிறுபிள்ளைகளைப் பிடித்து முகத்தில் ஆஸிட் ஊற்றி சிதைத்து அடையாளத்தை மாற்றி இந்த மாதிரி முதலாளிகளிடம் விற்றுவிடுவது நடக்கிறது.
15)               இந்த முதலாளிகள் தங்கள் பொறுப்பில் இருக்கும் ஊனமுற்றவர்ளை வெறும் பொருட்கள் போல நடத்துவதும் தன் சொந்தக் குடும்பத்தின் மீதுமட்டும் பாசம் வைப்பதும் பெரிய முரண்.
16)               மனம் பிறழ்ந்த பிச்சைக்காரர்களை சாமியார் ஆக்கி பிழைப்பு நடத்துவதும் நடக்கிறது.
17)               இதுதவிர மனித மனங்களின் பலவித வக்கிரங்களையும் ஜெயமோகன்  எழுதியதைப் படித்தபோது மனம் பேதலித்துப் போனது.

Related image

ஜெயமோகன் அந்தப் பகுதியைச் சேர்ந்ததால் அவருக்கு அந்த மொழி தங்கு  தடையின்றி வருகிறது. படிக்கும்போதும் ஆச்சரியப்படுத்தும் ஜெயமோகன், எந்த  மதத்தயக்கமுமின்றி  உண்மைகளைப் புட்டுப்புட்டு வைக்கிறார். ஒரு புறம் முன்னேறிக் கொண்டிருக்குகிறோம். பொருளாதார வளர்ச்சியடைந்தியிருக்கிறோம். வல்லரசாகும் பாதையில் துரித நடை நடக்கிறோம் என்று சொல்லும்போது, நம் நாட்டில் இன்னும் இந்த மாதிரி அவலங்கள் நடப்பதை நினைத்தால் நெஞ்சு பொறுக்குதில்லையே.