Showing posts with label ரஜினிகாந்த். Show all posts
Showing posts with label ரஜினிகாந்த். Show all posts

Thursday, March 1, 2018

ரஜினிகாந்தின் துள்ளல் பாடல் !


எழுபதுகளில் இளையராஜா பாடல் எண்: 38
ஆகாயம் மேலே பாதாளம் கீழே
இதற்கு முந்திய பகுதியைப்படிக்க  இங்கே சொடுக்கவும்.
http://paradesiatnewyork.blogspot.com/2018/01/blog-post_11.html#comment-form

Image result for நான் வாழவைப்பேன்
'         'நான் வாழவைப்பேன்' என்ற திரைப்படத்திற்காக இளையராஜா இசையமைத்து ஹிட்டான ஒரு பாடல் இது. 1979ல் இந்தப்படம் வெளியானது. பாடலைக் கேளுங்கள் மற்றவற்றை பிறகு பேசுவோம்.




நடிகர் திலகம் சிவாஜிகணேசன் கதா நாயகனாக நடித்த இந்தப் படத்தை நான் பார்த்த ஞாபகம் இருக்கிறது. படத்தின் நடுவில் ரஜினிகாந்த் வருவார். இந்தப் பாடல் மூலம் அவரது கதா பாத்திரம் அறிமுகப்படுத்தப்படும். புயல் மாதிரி ரஜினி வரும்போதே இவன் பெரிய ஆளாக வருவான் என்று தோன்றியதும் ஞாபகத்துக்கு வருகிறது. துள்ளலும் துடிப்புமாக ரஜினி வரும்போது மக்களின் கவனம் முழுவதுமாக ரஜினியிடம் சென்றதும் இயல்பாக நடந்தது.
Image result for Ilayaraja with Rajini

பாடல் ஒருவகை 'கிளப் பாடல்' எனலாம். இப்போது குத்துப்பாடல் ஒன்று அவசியம் எல்லாப் படத்திலும் இருப்பது போல அப்போது கிளப் பாடல் (CLUB DANCE SONG) இருக்கும். கிளப் டான்ஸ் பாடல்களுக்கெனவே ஆட்டக்கார நடிகைகள் இருந்தனர். இப்போது கதாநாயகிகளே  அந்த வேலையைச் செய்துவிடுவதால் ஆட்ட நடிகைகளுக்கான தேவைகள் இல்லாமல்  போனது.
ஒயின் ஷாப் பார் போன்ற ஒரு இடத்தில் இந்தப் பாடல் ஒரு ஆட்டமும் கூத்துமாக இருக்கும். அதற்கென இசையமைக்கப்பட்டிருக்கும் பாடல்களில் கிடார், டிரம்ஸ், டிரம்பெட் போன்ற இசைக்கருவிகள் அதிகமாக பயன்படுத்தப்பட்டிருக்கும். அதே மாதிரியான இந்த துள்ளலான கிளப் பாடலுக்குத் தேவையான எல்லாவற்றையும் இளையராஜா  பயன்படுத்திருப்பார்.  

பாடலின் வரிகள்:
ஆகாயம் மேலே பாதாளம் கீழே
ஆனந்த உலகம் நடுவினிலே

ஆகா நான் தான் மைக்கேல்
அடி நீதான் மை கேர்ள்


நில்லாமல் சுழலும் பூமி இது
எல்லாரும் நடிக்கும் மேடை இது
நில்லாமல் சுழலும் பூமி இது
எல்லாரும் நடிக்கும் மேடை இது
போட்டேன் நானும் வேஷங்களை
படித்தேன் வாழ்க்கைப் பாடங்களை
நடிப்பேன் உந்தன் மன்றத்திலே
இடம் பிடிப்பேன் உந்தன் நெஞ்சத்திலே
நாடகமா இன்னும் சாகசமா
இந்த ஊடல்கள் எனக்கு ஆகாதம்மா!


பொன்னாக மின்னும் நான் தொட்டது
உன் மீது எந்தன் கை பட்டது
இனிமேல் உன்னை யார் விட்டது
இளமை சுகங்கள் வேர்விட்டது
பெண்ணே எந்தன் எண்ணப்படி - அடி
கண்ணே என்னைக் கட்டிப்பிடி
பூங்கொடியே சிறுமாங்கனியே
உன் கண்களில் ஆயிரம் காதல் கதை


எல்லாமே புதுமை என் பாணியில்
சொல்லாமல் புரியும் என் பார்வையில்
திறமை இருந்தால் மாலையிடு
இல்லை என்றால் ஆளை விடு
ராணி என்றும் என்னோடுதான் இந்த
ராஜா உந்தன் பின்னோடுதான்
காவலில்லை ஒரு கேள்வியில்லை
இது ராத்திரி நேர ராஜாங்கமே

Image result for vaali with Ilayaraja


பாடலை எழுதியவர் கவிஞர் வாலி. இந்த மாதிரி பாடல்கள் எழுதுவது தமக்கு கை  வந்த கலை என்பதை நிரூபித்து இருக்கிறார்  ஆனால் குடிக்கும்போது தத்துவங்கள் வெளிப்படுமென்பதை பாடலில் அமைத்திருக்கிறார். முதலாவது சரணத்தில் “நில்லாமல் சுழலும் பூமி இது, எல்லோரும் நடிக்கும் மேடையிது, போட்டேன் நானும் வேஷங்களை, படித்தேன் வாழ்க்கைப் பாடங்களை” என்பவை அருமையான வரிகள். அதோடு 2-ஆவது சரணத்தில், “எல்லாமே புதுமை என் பாணியில் சொல்லாமல் புரியும் என் பார்வையில்”, என்பது ரஜினியைப் பற்றிய வாலியின் புரிதல் போலவே ஒலிக்கிறது.
பாடலின் குரல்:

Image result for ilayaraja with yesudas old picture

பாடலின் குரல் ஜேசுதாஸ் அவர்கள். இந்த மாதிரிப் பாடல்களுக்கு ஜேசுதாசின் குரல் பொருந்தும் என நிரூபித்தவர் இளையராஜா. சிவாஜியின் குரலிலிருந்து ரஜினிக்கு கொஞ்சம் வித்தியாசம் கொடுக்க வேண்டும் என நினைத்தும் இந்தப் பாடலைக் கொடுத்திருக்கலாம். ஆனால் ஜேசுதாஸ் இந்தப் பாடலை நன்றாகவே பாடியிருக்கிறார். அதோடு அவரின் குரலில் இயற்கையாக அமைந்திருக்கும் சோகம் இந்த மாதிரி தத்துவம் கலந்த பாடல்களுக்கு பொருத்தமாகவே இருக்கிறது.    
ஏனோ தெரிவியவில்லை குடிப்பதுபோல் , அல்லது குடித்துவிட்டுப் பாடுவது போல் அமைந்த பல பாடல்கள் சூப்பர் ஹிட்டாக அமைந்து விடுவது மக்களின் பொதுவான மனநிலையை குறிக்கவில்லை என்றே நம்புகிறேன். உதாரணத்திற்கு கீழே சில பாடல்களைக் கொடுக்கிறேன்.
1.   சொர்க்கம் மதுவிலே
2.   தண்ணித்  தொட்டி தேடிவந்த கன்னுக்குட்டி நான்
3.   வா மச்சான் வா வண்ணாரப் பேட்டை
4.    ஒய்  திஸ் கொலவெறி
இப்படி குடியை கொண்டாட்டமாக நினைத்து அதில் அழிந்து போய் வாழ்க்கையே திண்டாட்டமாக அமைந்த பல கதைகளை நேரில் பார்த்த அனுபவம் எனக்குண்டு. இப்படி பார்ட்டி கெட்டுகெதர் திருவிழா என்றால் குடிப்பது என்பது வழக்கமாகிவிட்டது. உண்மையான மகிழ்ச்சி இதுவல்ல என்பதை மக்கள் எப்போது தான் உணர்வார்களோ.
தொடரும்


Thursday, April 6, 2017

ரஜினிகாந்தும் மலேசியா வாசுதேவனும் !

எழுபதுகளில் இளையராஜா: பாடல் எண்: 33

ஆகாய கங்கை

Image result for "தர்மயுத்தம்"
Add caption

இதற்கு முந்திய பகுதியைப்படிக்க  இங்கே சொடுக்கவும்.
http://paradesiatnewyork.blogspot.com/2017/02/blog-post_16.html

ரஜினிகாந்த் நடித்து, எழுபதுகளில் வெளிவந்த "தர்மயுத்தம்" என்ற படத்திற்காக இளையராஜா இசையமைத்து வெளிவந்த சூப்பர் ஹிட் பாடல் இது. பாடலைக் கேட்போம்.


பாடலின் சூழல்:
திருமணத்திற்கு ஆயத்தமாகும் காதலனும் காதலியும் களிப்புடன் பாடும் இளமை ததும்பும் பாடல் இது.
இசையமைப்பு:
இளையராஜாவின் மெருகேறிய காதல் ததும்பும் பாடல் இது. அந்தச் சமயத்தில், என் இந்தச் சமயத்தில் கூட எத்தனை தடவை கேட்டாலும் திகட்டாத மெட்டும் இசையமைப்பும் குளிர்விக்கின்றன.
கொஞ்சமும் எதிர்பாராத நேரத்தில் பெண் குரலின் ஹம்மிங்கோடும் காங்கோ டிரம்ஸ் கலவையோடும் ஒன்று சேர்ந்து சடுதியில் பாடல் ஆரம்பிக்கிறது. ஹம்மிங் முடிந்து ஒரு லீட் வந்து முடிய, ஆண்குரலில் ‘ஆகாய கங்கை’ என்று ஆரம்பிக்கிறது. ஆண்குரல் ஒலித்து முடிய பெண்குரல் அதற்குப்பதில் சொல்லி முடிய, சரணம் முடிய முதல் BGM ஆரம்பிக்கிறது. கீபோர்டு, புல்லாங்குழல், வயலின் கோரஸ் போன்ற இசைக் கலவை இசைத்து முடிய வயலின் சோலா உருகிமுடிக்க மீண்டும் ஆண் குரலில் "காதல் நெஞ்சில்" என்று சரணம் ஆரம்பிக்கிறது. இரண்டாவது BGM-ல் பெண்குரல் ஹம்மிங் ஒலித்து வயலின் சோலோ முடித்து 2-ஆவது சரணம் பெண்குரலில் ஆரம்பித்து ஆண்குரலில் முடிகிறது. டிரம்ஸ், காங்கோ, கீபோர்டு, பேஸ் கிட்டார், ரிதம் கிட்டார், வயலின்கள், வயலின் சோலோ, காங்கோ போன்ற பலவித இசைக்கருவிகள் பயன்படுத்தப்பட்ட அருமையான பாடலிது.  

பாடல் வரிகள்:

ஆகாய கங்கை
பூந்தேன் மலர் சூடி
பொன்மான் விழி தேடி
மேடை கட்டி மேளம் தட்டி
பாடுதே மங்களம் நாடுதே சங்கமம்

குங்குமத் தேரில் நான் தேடிய தேவன்
சீதா புகழ் ராமன்
தாளம் தொட்டு ராகம் தொட்டு
பாடுதே மங்களம் நாடுதே சங்கமம்


காதல் நெஞ்சில்..ஹேஏஏஎ
மேள தாளம்..ஹோஓஒ (2)
காலை வேளை பாடும் பூபாளம்
மன்னா இனி உன் தோளிலே
படரும் கொடி நானே
பருவப் பூ தானே
பூ மஞ்சம் உன் மேனி எந்நாளில் அரங்கேறுமோ

(குங்கும தேரில்)

தேவை யாவும் ஹேஏஏஏ
தீர்ந்த பின்னும் ஹோஓஒ (2)
பூவை நெஞ்சில் நாணம் போராடும்
ஊர்கூடியே உறவானதும்
தருவேன் பலநூறு
பருகக் கனிச்சாறு
தளிராடும் என் மேனி தாங்காது உன் மோகம்

(ஆகாய கங்கை)
Image result for MG Vallabhan
MG Vallabhan

பாடல் வரிகளை எழுதியவர் M.G. வல்லவன் அவர்கள். இளையராஜாவுக்கு சுமார் 200 பாடல்களை எழுதியிருந்தாலும் இவரை அவ்வளவாய் நமக்குத் தெரியாது. கரும்புவில் என்ற திரைப் படத்தில் வரும், 'மீன் கொடித்தேரில் மன்மத ராஜன்' மண் வாசனையில் வரும் "அரிசி குத்தும் அக்காமார்களே" பொண்ணு ஊருக்குப்புதுசு படத்தில் அமைந்த" சோலைக்குயிலே பாடும் மயிலே", மலர்களே மலர்களே படத்தில் உள்ள "இசைக்கவோ உன் கல்யாணிராகம்" போன்ற பல பாடல்களை எழுதியுள்ளார். மேலும் உதயகீதம், இதயக்கோயில் போன்ற சில படங்களுக்கு திரைக்கதை வசனம் இவரே. அது மட்டுமல்ல, பிலிமாலயா, பேசும்படம், பெண்மணி போன்ற பல பத்திரிகைகளுக்கு ஆசிரியராக இருந்திருக்கிறார். 2003ல் இறந்துபோனார். இந்தப் பாடலில் மெட்டுக்குத் தகுந்த கச்சிதமான வரிகளை எழுதியுள்ளார்.

பாடலின் குரல்கள்:


பாடலைப் பாடியவர்கள் மலேசியா வாசுதேவன், மர்றும் ஜானகி. SPB வராததால் "பதினாறு வயதினிலே படத்தில்" ஆட்டுக்குட்டி முட்டையிட்டு என்று பாட ஆரம்பித்து அது சூப்பர் ஹிட் ஆகிவிட எல்லோரும் அவரைத் திரும்பிப் பார்க்க வைத்தது. தர்மயுத்தம் படத்தில் ரஜினிக்குப் பாடிய இந்தப் பாடல் சூப்பர் ஹிட் ஆகியதோடு குரலும் ரஜினிக்குப் பொருத்தமாக இருந்ததால் ரஜினிக்கு நிறைய பாடல்களை மலேசியா பாடினார். SPB இளையராஜாவின் பழைய ஆர்க்கெஸ்ட்ராவில் TMS  திருச்சி லோகநாதன் குரலில் அருமையாக பாடுபவராம். “ஆனந்தத் தேன் காற்று தாலாட்டுதே”, “பூங்காற்று திரும்புமா” என்ற பாடல்கள் திருச்சி லோகநாதனையும் TMS-யையும் நினைவு படுத்தும்.
ஜானகி குரலில் சொல்லவே வேண்டாம். அவ்வளவு இளமை, காதல், சென்சுவாலிட்டியை எப்படித்தான் பாடலில் கொண்டுவருகிறாரோ. குறிப்பாக சரணத்தில் வரும் ஒரு சிறு சிரிப்பு, இருவரும் இந்தப் பாடலின் வெற்றிக்கு முக்கிய பங்காளர்கள் ஆவார்கள்.
இளையராஜாவின் மணிமகுடத்தில் மின்னும் இன்னுமொரு வைரம் இது.

தொடரும்

Thursday, August 4, 2016

நியூயார்க்கில் கபாலி !!!!!!!!!!

Add caption
கலைப்புலி தாணுவின் கனவுப்படம், அட்டக்கத்தி, மெட்ராஸ் போன்ற வித்தியாசமான படங்களைக் கொடுத்த பா.ரஞ்சித் இயக்கும் படம், விமானத்தில் கூட விளம்பரம், உலகமெங்கும் ஆயிரக்கணக்கான திரையரங்குகளில் வெளியீடு, மலேசியாவிலும், தாய்லாந்திலும் படப்பிடிப்பு, தாய்லாந்து  இளவரசியின் தனிக்கவனிப்பு, ரஜினியின் வெள்ளைத்தாடி, இது போன்ற எதிர்பார்ப்புகளை எகிற வைக்கிற செய்திகள், விளம்பரம், ஹைப். டீஸரே சாதனை படைத்தது.
விளம்பரம் தேவைதான். அதுவே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தும். கடலளவு எதிர்பார்ப்புடன் ஒருவன் படத்திற்குச சென்றால், மலையளவு அவனுக்குக் கிடைத்தாலும் திருப்தியிருக்காது. இது படத்துக்கு மட்டுமல்ல எல்லாவற்றிற்கும் பொருந்தும்.
என்னிடம் சமீபத்தில் பேசிய நண்பர்கள் இங்கேயும் சரி, இந்தியாவிலும் சரி கேட்ட முதல் கேள்வி "கபாலி பாத்தாச்சா?”, என்றுதான். இங்கே எல்லாப் படத்துக்கும் விரைவில் DVD வந்துவிடும் என்றாலும், ரஜினி படத்தை தியேட்டரில்தான் பார்க்க வேண்டும் என்பதை தார்மீகக் கடமையாக பலபேர் நினைத்தது எனக்கு உள்ளபடியே ஆச்சரியமளித்தது. ரஜினி படத்தை உண்மையிலேயே பார்க்க வேண்டும் என்று நினைப்பவர்கள் ,முதல் நாள் முதல் ஷோ என்றெல்லாம் ஆசைப்பட்டால் அது நடக்காது. ஏனென்றால் வெறும் கூச்சலும், குழப்பமும், விசில் சத்தமும் மட்டும்தான் மிஞ்சும்.


"ரஜினி படம் வருது, நாம் தியேட்டருக்குப் போய்ப் பார்க்க வேண்டும்.", இது என் மனைவி. பிரதி வெள்ளிக்கிழமை இரவு ஒரு தமிழ்ப்படம் பார்த்து விட வேண்டும் என்பது என் மனைவியின் எழுதப்படாத சட்டம். தமிழ்ப்படம் பார்ப்பதன் மூலம் தமிழ்நாட்டோடு  ஒரு தொடர்பில் இருப்பது போல் அவளுக்குத் தெரிகிறது. அந்த அளவுக்கு நம்ம நாட்டு நினைப்பு இருப்பது மகிழ்ச்சிதான். நானும் அவளுக்கு கம்பெனி கொடுக்கத் தயாராகி உட்காருவேன். ஆனால் பெரும்பாலான தமிழ்ப்படங்கள் பார்க்கும்போது, 10 நிமிடம் அல்லது மிஞ்சிப் போனால் 30 நிமிடங்களில், நான் அப்படியே தூங்கிச் சாய்ந்து விடுவேன். இந்த இயக்குநர்கள் பணத்தையும் வாய்ப்பையும் எப்படியெல்லாம் வீணடிக்கிறார்கள் என்று நினைத்து ஒரு புறம் ஆச்சர்யமும் மறுபுறம் அதிர்ச்சியாகவும் இருக்கும்.
 ரிலீஸ் ஆகி ஒரு வாரம் ஓடியபின் நண்பர் கவிஞர் சிவபாலன் அவர்கள் அனுப்பிய குறுஞ் செய்தியில் "Bargain Wednesday", கபாலி படம் ஆறு டாலர்கள் மட்டும் என்று வந்ததை என் மனைவிக்கு ஃபார்வேர்டு  செய்தேன்.


அமெரிக்காவில் பல திரையரங்குகளில் இந்தமாதிரி சிஸ்டம் உண்டு. மற்ற நாட்களில் 15முதல் 20 டாலர்கள் வரை உள்ள கட்டணம், வாரத்தில் ஒரு நாள் 'பார்கெய்ன் டியூஸ்டே' அல்லது வெட்னஸ்டே என்று அனைத்து ஷோக்களும் ஆறு அல்லது ஏழு டாலர் மட்டும் இருக்கும்
ஆறு  டாலர் என்பது ரஜினி படத்திற்கு இந்தியாவில் டிக்கட் வாங்குவதை விடக் குறைவு என்பதும் ஊக்கம் கொடுக்க,நான், மனைவி இளைய மகள் மற்றும் இரு நண்பர்களின் குழந்தைகள் என ஆறு பேர் இரவு 10 மணி ஷோக்கு போனோம். போகும் வழியில் எதற்கும் ஃபோன் செய்து அட்வான்ஸ் புக்கிங் செய்துவிடுவோம் என்று அழைத்தபோது, “தேவையில்லை டிக்கட்டுகள் நிறைய உள்ளன, நேராக கவுன்ட்டரில் வாங்கிக் கொள்ளலாம்", என்கிறார்கள்.
நியூயார்க்கில் எனக்குத் தெரிந்து நான்கு தியேட்டர்களில் ரிலீஸ் செய்திருந்தார்கள். எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் இருந்த டக்ளஸ்டன் பார்க்வேயில் இருந்த,  மூவி வேர்ல்ட் தியேட்டர்தான் நாங்கள் போன இடம். இங்கு அதிகமாக ஹிந்திப் படங்களும், எப்போதாவது தமிழ், தெலுங்குப் படங்களும் வரும்.
My wife with kabali 

நாங்கள் தியேட்டருக்குள் நுழைந்தபோது அங்கே தெரிந்த முகங்கள் நிறைய இருந்தன. குறிப்பாக இலங்கைத் தமிழர் அமைப்பான முத்தமிழ் மன்றத் தலைவர் என்னுடைய நியூராலஜிஸ்ட் Dr. நந்தக்குமார் தன் குடும்பம் மற்றும் நண்பர்கள் புடை சூழ இருந்தார். பரவாயில்லை நிறையப் பேர்கள்  இருக்கிறார்கள் என நினைத்தபோது, "என்ன படம் முடிந்தபின் வருகிறீர்களா?”, என்றார் நந்தகுமார். அவர் கேட்டபோது தான் தெரிந்தது, அவர்கள் 6.30 மணிக்கு மாலைக் காட்சி முடித்து வெளியே வருகிறார்கள் என்று. " 10 மணிக்காட்சிக்கு வந்திருக்கிறோம்", என்றேன்.
ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக தங்கள் விமர்சனங்களை வைக்க, நான் நந்தக் குமாரிடம் கேட்டேன் "படம் எப்படியிருந்தது?” என்று. அவர் சிரித்துவிட்டு, "அதான் நீங்களே பார்க்கப் போகிறீர்களே", என்றார். அவரும் குழுவும் விடைபெற்றுச் செல்ல, தியேட்டர் வளாகம் காலியாகி வெறிச்சோடியது.
எனவே என் மனதில் கபாலியின் பிம்பங்கள் விமர்சனங்கள் அனைத்தையும் அழித்துவிட்டு உள்ளே சென்று உட்கார்ந்தேன். நாங்கள் தியேட்டருக்குள் நுழைந்தபோது மொத்தத் தியேட்டரிலும் நாங்கள் ஆறு பேர்தான் இருந்தோம். படம் ஆரம்பிக்கும் முன்னால் இன்னும் இரண்டு குடும்பங்கள் வந்து சேர்ந்தன.

இதற்கு முன்னால் எப்போது தியேட்டருக்குப் போய் தமிழ்ப்படம் பார்த்தேன்? என்று யோசித்துப் பார்த்த போது அது எந்திரன் என்று ஞாபகம் வந்தது எனக்கே ஆச்சரியமாக இருந்தது. எந்திரனை ஒற்றை  ஆளாகப் பார்த்ததும் ஞாபகத்துக்கு வந்தது. 
ரஜினி திரையில் தோன்றும் போது , என்னை அறியாமலேயே ஒரு அனிச்சைச் செயல் போல விசிலடிக்க என் கைகள் வாய்க்குப் போனது.அப்புறம்தான்  எனக்கு நினைவு வந்தது எனக்கு விசிலடிக்கத் தெரியாது என்று.

'கபாலி' முழுப்படத்தையும் தூங்காமல் பார்த்தேன். இப்படிச்சொல்லும்போதே படம் எனக்குப் பிடித்தது என்று புரிந்து கொண்டிருப்பீர்கள்.
படத்தைப்பற்றி என்னுடைய கருத்துக்களை கீழே தருகிறேன்.
இது ரஞ்சித் படமா அல்லது ரஜினிபடமா என்று கேட்டால் நான் சொல்வேன் இது ரஜினிபடம் தான் என்று. ஏனென்றால் கீழ்க்கண்ட ரஜினிபட அம்சங்கள் வழக்கம் போலவே இருந்தன.
1.   அதிரடி ஓசையுடன் ரஜினியின் அறிமுகம்
2.   ரஜினி வரும்போதெல்லாம் உரக்க ஒலிக்கும் BGM.
3.   கைதட்டல் கிடைப்பதற்காகவே ரஜினி வழக்கம்போல் பேசும் பஞ்ச் வசனங்கள் (நெருப்புடா, கபாலிடா, மகிழ்ச்சி )
4.   'உலகம் உனக்காக’ , ‘வீர துரந்திரா’ என்று ரஜினியைப் போற்றிப்பாடும் பாடல்கள்.
5.   ரஜினி சுடும்போது மட்டும் தவறாது இலக்கைத் தாக்கும் தோட்டாக்கள்.
6.   பல இடங்களில் லாஜிக் இல்லாத தருணங்கள்.
7.   ரஜினியின் எல்லாப் படத்திலும் வரும் ஸ்டைல் மேனரிசங்கள்.
8.   ரஜினியை பலம் மிகுந்த வஸ்தாதுவாக மட்டுமே காட்டும் சண்டைக் காட்சிகள். தனி ஆளாக ஒரு கூட்டத்தையே பதம் பார்த்தல்.
9.    ரஜினியைத் தவிர அங்கே நடிப்பதற்கோ ஸ்கேன் செய்வதற்கோ வாய்ப்பேயில்லை. (ராதிகா ஆப்தே ஒரு முறை விக்கிவிக்கி அழுது விட்டால் போதுமா?)
10.               படம் முழுதும் ஒவ்வொரு பிரேமிலும் வரும் ரஜினி.
11.               ரஜினியின் பிரமாண்டத்திற்கு ஈடு கொடுக்க முடியாத வில்லன்கள்.
12.               எதிரிகள் அனைவரும் குண்டடிபட்டு செத்துப் போதல். அதே சமயத்தில் குடும்பத்தில் செத்தவர்கள் மீண்டு வருதல்.
இதையெல்லாம் பார்த்துவிட்டும் இது ரஞ்சித் படம் என்று எப்படி சொல்லமுடியும். ரஞ்சித் முற்றிலுமாகத் தொலைந்து போனார் என்றுதான் நினைக்கிறேன். ரஜினி படத்தின் எல்லா இயக்குனர்களுக்கும் இது பொருந்தும்.
ஆறுதல் தருபவை:
1.   தொங்கிப் போன முகத்தில் விக்கைப்பொறுத்தி பேத்திகளுடன் காதல் டூயட ஆடாதது.
2.   'கபாலிடா' என்ற பன்ஞ் வசனத்தை ஒருமுறை மட்டுமே சொல்வது.
3.   சந்தோஷ் நாராயணனின் மெலடி பாடல்கள் (மாய நதி போன்றவை)
4.   அருமையான, அழகான, திறமையான ஒளிப்பதிவு.
5.   ஒரிஜினல் வெள்ளைத் தாடியுடன் அதிக நேரம் தோன்றுவது. (பின்னால் ஏன்தான் ஷேவ் செய்தார்களோ ?)
6.   பன்ச் வசனங்கள் போக மீதமுள்ள நல்ல உரையாடல்கள்.
7.   கார் ரேஸ்/ பைக் ரேஸ் மற்றும் வானத்தில் நிகழும் சாகசங்கள் இல்லாமை. 
தேவையில்லாதவை:
1.   கொஞ்சம் கூட பொருந்தாத விக்கில் வரும் இளமைக்கால ஃபிளாஸ்பேக் .
2.   சென்னை பாண்டிச்சேரி எபிசோட்.
3.   'உலகம் உன்னை' பாடலும் ரஜினி ஆடுவதும்.
லாஜிக் இல்லாத விஷயங்கள்.
அடப்போப்பா ரஜினி படத்துல போய் யாராவது லாஜிக் பாப்பாங்களா?
ரஞ்சித் ஓரிரு இடங்களில் திரைக்கதையை கிரிஸ்ப் ஆக்கி, ஒதுக்கி செதுக்கியிருந்தால் இன்னும் சிறப்பாக அமைந்திருக்கும். ஆனால் அவருக்கு எவ்வளவு பிரஷர் இருந்திருக்கும் எனவும் தெரிகிறது. ரஜினி படத்தில் காமடி நன்றாக இருக்கும். ஆனால் யோசித்துப் பார்த்தால் இந்தப் படத்தில் எந்த இடத்திலும் அது சாத்தியமில்லை.
மொத்தத்தில் இது லிங்காவை விட சிறப்பான படம். நன்றாகவே இருந்தது. பார்க்கவே முடியாது என்றளவுக்கு மோசமில்லை.
"ஆறிலிருந்து அறுபது வரை" இது ரஜினி நடித்த படம். ரஜினியின் வித்தியாச நடிப்பைப் பார்க்க விரும்புவர்கள் ஒருமுறை இந்தப் படத்தைப் பாருங்களேன். ஆனால் ஆறிலிருந்து அறுபது வயது வரை  முப்பது வருடத்திற்கு மேல் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்திருப்பது ரஜினி மேஜிக்.
ரஜினி நல்ல நடிகர்தான். ஆனால் அவர் தன்னை இழந்து, தயாரிப்பாளரின் நடிகர் ஆகி வெகுகாலம் ஆகிவிட்டது . ரசிகர்களின் எதிர்பார்ப்பு,  படங்களின் உலக வணிகம் என்று அவரின் நடிப்புத்திறமை அமிழ்ந்து போனது.
ரஜினி சமீபத்திய அமிதாப் படங்களைப் பார்த்து தானும் மாறிக்கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது. ரஜினி மேஜிக் இதற்கு மேல் தாங்காது.

முற்றும்.  

Wednesday, April 6, 2016

ரஜினிகாந்தின் துள்ளல் பாடல் !!!!!!!!!!!


எழுபதுகளில் இளையராஜா பாடல் எண் 30 
நதியோரம் நாணல் ஒன்று.

ரஜினிகாந்த் நடித்த, “அன்னை ஓர் ஆலயம்”, என்ற படத்தில் வரும், ,இளையராஜா இசையமைத்து வெளி வந்த சூப்பர் ஹிட் பாடல் இது. பாடலைக் கேளுங்கள்.

பாடலின் சூழல்:
இயற்கைச் சூழ்நிலையில் காதலனும் காதலியும் ஆடிப்பாடி மகிழும் நேரம் பாடும் பாடலிது.
இசையமைப்பு:
Ilayaraja Rajini

ரஜினிகாந்துக்கு ஆரம்ப கட்டங்களில் சிறப்பாக அமைந்த துள்ளல் பாடல் இது. இளையராஜாவின் மெட்டமைப்பும் இசைக்கருவிகளைக் கையாளும் விதமும் அருமை. வேகமான ஆடற்பாடல் என்றாலும் இதிலுள்ள மெலடி மிகவும் இனிமையானது. எந்த முன் இசையும் இல்லாமல், முன் அறிவிப்போ, பீடிகையோ இல்லாமல் பெண்குரலில் "நதியோரம்" என பாடல் ஆரம்பிக்க, அதன் பின்னர் தபேலா மற்றும் மற்ற கருவிகள் சேர்ந்து கொள்கின்றன. வீணைக்குழுமம், புல்லாங்குழல் மற்றும் கிடார் ஏற்ற இடங்களில் பயன்படுத்தப்பட்டு பாடலை முழுமையாக்குகின்றன.
பாடல் வரிகள்:
நதியோரம் நாணல் ஒன்று நாணம் கொண்டு
நாட்டியம் ஆடுது மெல்ல - நான்
அந்த ஆனந்தம் என் சொல்ல

நதியோரம் நீயும் ஒரு நாணல் என்று
நூலிடை என்னிடம் சொல்ல - நான்
அந்த ஆனந்தம் என் சொல்ல
( நதியோரம் )
வெண்ணிற மேகம் வான்தொட்டிலை விட்டு
ஓடுவதென்ன மலையை மூடுவதென்ன
முகில்தானோ துகில்தானோ
சந்தனக் காடிருக்கு தேன் சிந்திட கூடிருக்கு
தேன் வேண்டுமா நான் வேண்டுமா
நீ எனைக் கைகளில் அள்ள - நான்
அந்த ஆனந்தம் என் சொல்ல
( நதியோரம் )

தேயிலைத் தோட்டம் நீ தேவதையாட்டம்
துள்ளுவதென்ன நெஞ்சை அள்ளுவதென்ன
பனி தூங்கும் பசும்புல்லே
மின்னுது உன்னாட்டம்
நல்ல முத்திரைப் பொன்னாட்டம்
கார்காலத்தில் ஊர்கோலத்தில்
காதலன் காதலி செல்ல - நான்
அந்த ஆனந்தம் என் சொல்ல
( நதியோரம் )
Add caption
பாடல் வரிகளை எழுதியவர் கவியரசர் கண்ணதாசன் அவர்கள். இயற்கை சூழல் வேண்டும் என்று இயக்குநர் சொன்னதாலோ என்னவோ, முழுவதுமாக காதலன் காதலி வர்ணணையை விட, இயற்கை வர்ணணையே அதிகமாகவே இருக்கிறது. பெண்ணை நாணல் என்று வர்ணிப்பதை நான் எங்கும் கேள்விப் பட்டதில்லை. பல்லவியில்
"நதியோரம் நாணல் ஒன்று நாணம் கொண்டு நாட்டியம் ஆடுது மெல்ல" - என்று காதலி தன்னை "நாணம் கொண்ட நாணல்" என்று சொல்ல, அதற்கு காதலன், "ஆம் ஆம் நீ நாணல் தான், ஏனென்றால் உன் நூலிடை என்னிடம் அப்படித்தான் சொல்கிறது", என்று ஒத்துக்கொள்கிறான். அதே போல் கண்ணதாசனின் ஒவ்வொரு வரிகளிலும் கவித்துவம் சொட்டுகிறது. முதல் சரணம், “வான் தொட்டிலை விட்டு வெளிவந்த வெண்மேகம், மலையை மூட, முகில் தானோ துகில்தானோ? என்று கேட்கிறார். இதில் வெளிப்படையான அர்த்தம் தவிர வேறு அர்த்தம் ஒலிக்கிறதா என்ற ஆராய்ச்சிக்கு நான் போக விரும்பவில்லை. அடுத்த வரிகளில், “சந்தனக் காட்டில் தேன் கூடு இருக்கிறது, ஆனால் தேன் வேண்டுமா? இல்லை நான் வேண்டுமா?”, என்று காதலி கேட்பது ரசமான காரியம்.
இரண்டாவது பல்லவியில், “பனி தூங்கும் பசும்புல் உன்னைப் போல நல்ல முத்திரைப் பொன்னாட்டம் மின்னுகிறது”, என்று சொல்லி இயற்கையோடு இணைத்து காதலியை வர்ணிக்கிறார். கண்ணதாசனிடம் காதல் எப்போதும் நிரம்பி வழிந்தது என்பதை இந்தப் பாடல் மீண்டும் ஊர்ஜிதப் படுத்துகிறது.
குரல்கள்:

பாடலைப் பாடியவர்கள் SPB மற்றும் சுசிலா. இளையாராஜா SPB  நட்பு  என்பது  எப்போதும் இணைபிரியா நட்பு. வெறும் நட்புக்காக மட்டுமல்ல, அவரின் திறமைக்காகவும், குரல் வளத்திற்காகவும் குரல் பொருத்தத்திற்காகவும் இளையராஜா அதிக பாடல்களை SPB-க்குக் கொடுத்தார். அவ்வப்போது சுசிலாவும் பாடியுள்ளார்கள். கூர்ந்து கவனித்தீர்கள் என்றால், சுசிலாவின் பழைய பாடல்களில் ஒலிக்கும் குரலல்ல இது. இளையராஜாவிடம் சுசிலா பாடிய எல்லாப் பாடல்களையும் கேட்டால் இது புரியும். ராஜாவின் பாடல்களில் சுசிலாவின் குரல் அவரின் பழைய பாடல்களை விட மிக இளமையாக ஒலிக்கிறது. இது இளையராஜாவின் முயற்சியா, சுசிலாவின் திறமையா இல்லை மாறுபட்ட ஸ்ருதியா  என்று தெரியவில்லை.
கேவி மகாதேவன், சங்கர் கணேஷ் என்று பயன்படுத்திய தேவர் இந்தப்படத்தில் இளையராஜாவைப் போட்டது, அந்தக் கால கட்டத்தில் இளையராஜா தவிர்க்கமுடியாத சக்தியாக எழுந்ததைக் காண்பிக்கிறது.

மீண்டும் அடுத்த பாடலில் சந்திக்கலாம்.